துயரமான பசுமாடு
அ-வுக்கு ஒரு கனவு மீண்டும் மீண்டும் வந்தது. கிட்டத்தட்ட எல்லா நாளும் அக்கனவைக் கண்டான். ஆனால் விடிகாலையில் நல்லவரோ வேறு ஆசிரியர்களோ எழுப்பி அவன் கண்ட கனவு ஞாபகம் இருக்கிறதா எனக் கேட்டால், உடனேயே இல்லை என்றுதான் மறுப்பான். அதற்கு அர்த்தம் அக்கனவு பயமுறுத்துவதாலோ தர்மசங்கடப்படுத்துவதாலோ அல்ல. அந்த முட்டாள்தனமான கனவில் அவன் புல்மேவிய குன்றின் உச்சியில் ஓவியச் சட்டகத்தின் முன்னால் நின்றுகொண்டு மேய்ச்சல் நிலக்காட்சியின் நீர்வண்ண ஓவியத்தை வரைந்துகொண்டிருந்தான். கனவில் வரும் நிலக்காட்சி அபாரமானது. அ சிறுவயதிலேயே அவ்வளாகத்துக்குள் வந்துவிட்டதால், புல்மேவிய குன்று அவன் கற்பனையில் துளிர்த்ததாகவோ ஏதாவது ஓவியத்தில் பார்த்ததாகவோ அவனது வகுப்புகளில் பார்த்த குறும்படங்களில் இருந்தோ அவன் மனதில் நுழைந்திருக்கவேண்டும். ஆனால் கனவை முழுதும் உவப்பான ஒன்றாக மாற்றாமல் இருக்க திருஷ்டி பொம்மையைப் போல மனிதக் கண்கள் கொண்ட ஒரு பெரிய பசுமாடு அவனது ஓவியச் சட்டகத்தின் அருகில் நின்றவாறு எப்போதும் புல்மேய்ந்துகொண்டு இருந்தது. அவனுக்கு கோபமூட்டும் ஏதோ ஒன்று அந்தப் பசுமாட்டிடம் இருந்தது. அதன் வாயிலிருந்து ஒழுகிக்கொண்டிருக்கும் எச்சில், சோகமான பார்வை, அதன் பின்புறத்தில் புள்ளிகள் போல இல்லாமல் உலக வரைபடம் போலத் தோன்றும் கரும்புள்ளிகள் ஆகியவற்றில் ஏதோவொன்றால் அப்படித் தோன்றக்கூடும். அ-வுக்கு கனவு வரும்போதெல்லாம் ஒரேவித உணர்வுகள்தான் தோன்றும். அமைதி எரிச்சலாகவும், எரிச்சல் கோபமாகவும், கோபம் பிரியமாகவும் மாறும். அவன் ஒருமுறைகூட பசுமாட்டைத் தொட்டது இல்லை. தொட வேண்டுமென்று ஒவ்வொருமுறையும் ஆசையிருந்தது உண்மை. கல்லையோ வேறு ஏதாவது ஆயுதத்தையோ அவன் தேடிக்கொண்டிருந்தது போல ஞாபகம் வந்தது. மாட்டைக் கொல்லவேண்டும் என அவனுக்குத் தோன்றினாலும் கடைசியில் அதன்மீது பச்சாதாபம் கொள்வான். கனவில் வரைந்துகொண்டிருந்த ஓவியத்தை அவனால் ஒருபோதும் முடிக்க முடிந்ததில்லை. தூங்கிய சிறிது நேரத்திலேயே மூச்சிரைக்க வியர்த்துப்போய் விழித்தெழுபவன் மீண்டும் உறங்க நீண்டநேரம் அல்லாடுவான்.
அவன் கனவைப்பற்றி யாருக்கும் சொன்னதில்லை. இவ்வுலகில் ஒரு விசயமாவது அவனுக்காகவே இருக்கவேண்டுமென எண்ணினான். எப்போதும் அவனைச் சுற்றியிருக்கும் கூரிய கண்கள் கொண்ட பயிற்சியாளர்களிடமிருந்தும், அவ்வளாகத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் கண்காணிக்கும் கேமராக்களிடமிருந்தும் ஒரு அனாதையால் இரகசியமாக ஒன்றை வைத்துக்கொள்வது அவ்வளவு சுலபமில்லை. புல்வெளியும் அதில் மேய்ந்து திரியும் சோகமான பசுமாடும்தான் அ-வால் பாதுகாக்க முடிந்த இரகசியம். அதற்கு இன்னொரு காரணம், நல்லவரை அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்காது. அந்த விநோதமான கனவை மறைத்துவைப்பதுதான், அவருக்கு எதிராக அவனால் செய்யமுடிந்த சின்னஞ்சிறிய, ஆனால் கறாரான, கலகச்செயல்.
நல்லவர்
உலகில் இருக்கும் அத்தனைபேரிலும் தனக்கு அதீதமாக உதவிசெய்த ஒருவரை அ ஏன் அவ்வளவு வெறுத்தான்? பெற்றோரால் கைவிடப்பட்ட அவனையும் அவனைப்போன்ற அனாதைகளையும் தன் வாழ்நாள் முழுதையும் அர்ப்பணித்து காப்பாற்றும் ஒருவருக்கு மோசமாக ஏதாவது நடக்கவேண்டுமென அ ஏன் விரும்புகிறான்? அதற்கான பதில் சுலபமானது. மற்றொருவனை நம்பியே வாழ்வதைவிட மோசமான ஒரு விசயம், நீ அவனை நம்பித்தான் வாழ்கிறாய் என அவனால் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்படுவது. அப்படிதான் நல்லவர் ஒருவனை அவமானப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் ஆட்கொள்ளவும் செய்கிறார். அவர் பேசும் ஒவ்வொரு சொல்லும் அவரது ஒவ்வொரு செய்கையும் உனது விதி அவர் கையில்தான் இருப்பதாகவும், இல்லையெனில் அ-வைப் போன்றவர்கள் எப்போதோ இறந்துபோயிருப்பார்கள் எனவும் தெளிவாக உணர்த்தும்.
வளாகத்தில் வசிக்கும் அனாதைகள் வெவ்வேறு மொழிகள் பேசினார்கள். அதனால் அவர்கள் தங்களுக்குள் மிகக்குறைவாகவே தொடர்பு வைத்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்குள் பிறப்பிடம் சார்ந்து ஆதாரமான ஒரு பொதுத்தன்மை இருந்தது. பிறந்த குழந்தைகளுக்கு நோய் உள்ளதென்று தெரியவந்தவுடனே அவர்கள் எல்லோரும் அவர்களது பெற்றோர்களால் பிரசவ அறையிலேயே அனாதையாகக் கைவிடப்பட்டார்கள். நீண்ட லத்தீன் பெயரைக் கொண்டிருந்தது அந்த மரபுநோய். இந்த நோயுள்ள குழந்தைகள் சாதாரண மக்களைவிட பத்துமடங்கு வேகமாக வளர்ந்ததால் அந்த நோயை ‘மூப்புநோய்’ என அழைத்தார்கள். அந்த நோய் மற்ற சாதாரண மக்களைவிட வேகமாக வளரவும், இன்னும் வேகமாக கற்றுக்கொள்ளவும் செய்தது. அதனால், தனது இரண்டாவது வயதிலேயே அ உயர்பள்ளியின் தரத்துக்கான கணக்கு, வரலாறு, இயற்பியல் பாடங்களைக் கரைத்துக் குடித்திருந்தான். செவ்வியல் இசைத்துணுக்குகளை ஞாபகம் வைத்திருந்தான். மிக அழகாக ஓவியங்களையும் படங்களையும் வரையத் தெரிந்திருந்தான். நல்லவரின் கூற்றில் சொன்னால் அவற்றை உலகின் எந்த ஓவியக்கூடத்திலும், அருங்காட்சியகத்திலும் காட்சிப்படுத்தலாம்.
ஆனால், மற்ற நோய்களைப் போலவே இவற்றின் குறைகளின் முன்னால் நிறைகள் நீர்த்துப்போயின. அவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோய், பக்கவாதம், இருதய நோய் போன்ற மூப்புநோய்களால் பத்து வயதைக்கூட தாண்டமாட்டார்கள் என அனாதைகளுக்குத் தெரிந்திருந்தது. அவர்களின் உயிர்க்கடிகாரம் மரண வேகத்தில் சுழன்று, துடிதுடித்து இருதயம் நைந்துபோய் நின்றுவிடும் என அவர்கள் அறிந்திருந்தார்கள். பயிற்சியாளர்கள் பல வருடங்களாகவே தூங்குவற்கு முன்பு தேவதைக் கதைகளைச் சொல்லும் அதே மரத்துப்போன குரலில் அவர்களது மழலைப் பருவத்தின் சோகக் கதைகளை மீண்டும் மீண்டும் சொல்ல அனாதைகள் கேட்டார்கள். பிறந்த தருணத்திலேயே குரூர மரணம் அவர்களை நோக்கிப் பாய்ந்துவருகிறது என்பது அவர்களுடைய அம்மாக்களுக்குத் தெரிந்திருந்தது. எனவே அவர்களைக் கைகழுவ தீர்மானித்தார்கள். பால் பாக்கெட்டைப் போல அத்தனை விரைவில் முடியப்போகும் காலக்கெடுவைக் கொண்ட குழந்தைகளிடம் பெற்றோர்கள் என்னவிதமான பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்?
விடுமுறை நாளின் உணவுவேளையில் சற்று மது அருந்தியபின் நல்லவர் தான் பிரசவ மருத்துவராகப் பணியாற்றி ஆரம்ப காலத்தில் மூப்புநோய் பீடித்த தன் குழந்தையை அனாதையாக்கிவிட்ட ஒரு தாயைப் பார்த்ததையும் அந்தக் குழந்தையைத் தத்தெடுத்ததையும் வேறெந்தக் குழந்தையும் கற்பதற்கு பல வருடங்கள் எடுத்துக்கொள்ளும் எல்லாப் பாடங்களையும் மூன்றே வருடங்களில் அந்தக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுத்ததையும் அனாதைகளிடம் விவரிக்க விரும்புவார். அதைச் சொல்லும் தருணங்களில் உணர்ச்சி வசப்படுவார். நல்லவர் அப்படிச் சொல்லும்போது, கணமாற்றத்தைப் பிம்பமாக்கும் புகைப்படத்தில் செடியொன்று வளர்ந்து, குருத்திட்டு, செடியாகி, பூ மலர்ந்து, உதிர்ந்து வீழ்வதைப்போல, குழந்தை அபாரமான வேகத்தில் தன் கண்முன்னே வளர்வதை ஒரு நிமிடத்திற்குள் விளக்குவார். அப்படிப் பேசும்போது நோயின் பெரும் சவாலை அத்தனை அனாதைக் குழந்தைகளும் தன்னந்தனியாக எதிர்கொள்வதற்கு எப்படி உதவுவது என்பது பற்றி திட்டமிட்டுக்கொண்டிருந்ததாக அவர் சொல்லுவார். நல்லவர் சுவிட்சர்லாந்து நாட்டில் உருவாக்கிய நிறுவனத்தில் நோய்வாய்ப்பட்ட அறிவார்ந்த புறக்கணிக்கப்பட்ட அத்தனை குழந்தைகளையும் சுவீகரித்து, அவர்கள் அனைவரும் வெகு சீக்கிரமாக வெளியுலகத்துக்குச் சென்று, அச்சுறுத்தும் வகையில் மிகக் குறைந்த நாட்களையே கொண்ட வாழ்க்கையை யாரையும் சாராமல் வாழத் தகுந்த வகையிலான, பிரத்யேகமான பாடத்திட்டத்தை ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக உருவாக்கினார். அக்கதையை அவர் ஒவ்வொருமுறை சொல்லி முடிக்கும்போதும் கண்களில் நீர் ததும்ப நிற்பார். அத்தனை அனாதைக் குழந்தைகளும் இருக்கையிலிருந்து எழுந்துநின்று கைத்தட்டி ஆரவாரம் செய்வார்கள். அ-வும் எழுந்துநின்று கைத்தட்டுவான். ஆனால், அவன் வாயிலிருந்து எந்தச் சப்தமும் வராது.
அனாதைகள் வெளியுலகில் கால்வைக்க, வாழ்திறன் பரீட்சையில் தேறவேண்டுமென நல்லவர் திட்டம் வைத்திருந்தார். மாதத்தில் ஒருதரம் வைக்கப்பட்ட அப்பரீட்சை ஒவ்வொரு அனாதைக்கும் அவர்களுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்தது. தகுந்த மதிப்பெண் பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்குச் செல்வார்கள். நல்லவர் நேர்முகத்தேர்வில் கடினமான கேள்விகளைக் கேட்பதாகவும், சிலநேரங்களில் மாணவர்களைத் தாக்கியும், அவமானப்படுத்தியும், ஏன் அடிப்பதாகவும் புரளிகள் பேசப்பட்டன. அவையனைத்தையும் உங்களால் தாக்குப்பிடிக்க முடிந்தால், அடையாள அட்டை, உங்கள் திறமைகளை விவரிக்கும் சிபாரிசுக் கடிதம், ஓராயிரம் சிவிஷ் பிராங்க் பணம், பக்கத்து ரயில்நிலையத்திற்கான பயணச்சீட்டு ஆகியவற்றுடன் நிறுவனத்திலிருந்து வெளியேற முடியும்.
நாடியா
அ வேறு எதையும்விட அவ்வளாகத்திலிருந்து வெளியேறவே விரும்பினான். ஒரு பெண்ணை முத்தமிடுவதைவிடவும், தேவதைகளால் இசைக்கப்படும் தெய்வீக இசையைக் கேட்பதைவிடவும், ஆகச்சிறந்த ஓவியமொன்றை வரைவதைவிடவும், அ அந்தப் பரீட்சையில் தேர்வாகி, நேர்முகத்தேர்விலும் வெற்றி பெறவே பெரிதும் ஆசைப்பட்டான். மிச்சமிருக்கும் குறுகிய வாழ்க்கையை நீலவானின் கீழ் புல்மேவிய குன்றின்மீது சாமானிய மக்களின் நடுவே வாழ ஆசைப்பட்டான். எவ்வளவு நாள்தான் வேகமாக மூப்பெய்தும் குழந்தைகளின் இடையே, அவர்களது பயிற்சியாளர்களுடன் மட்டும் வாழ்ந்திருப்பது?
அ மாதாந்திர வாழ்திறன் பரீட்சையில் பத்தொன்பது தரம் தோற்றுப்போனான். அந்தக் கட்டத்தில், அவனைவிட வயதில் சிறிய, அறிவில் சாதாரணமான, அவனைவிட குறைந்த முனைப்பு கொண்ட நிறைய அனாதைகள் வளாகத்தில் இருந்து வெளியே சென்றார்கள். ஏப்ரலில் நடக்கும் பரீட்சையில் தேறிவிடுவேன் என ந-விடம் உறுதி அளித்திருந்தான். ந-வும் ஓவியம் பயின்றதால் அ தினமும் அவளைப் பார்க்க முடிந்தது. ஆனால் அ-வின் தாய்மொழி ஜெர்மனாகவும் ந-வின் தாய்மொழி பிரெஞ்சாகவும் இருந்ததால் அவர்களுக்கிடையேயான உரையாடல் அளவானதாகவே இருந்தது. காகிதத்தால் செய்த ஒரு வண்ணமிடப்பட்ட கடல்பறவையையோ, உணவறையின் மலர்க்கூடையில் இருந்து திருடப்பட்ட நிஜ மலரையோ, உயரமான முள்வேலியைத் தாண்டி உயரமாகப் பறக்கும், ந- வைப் போலவே இருந்த பறவையின் கோட்டோவியத்தையோ அ தினமும் ந-வுக்குப் பரிசாகக் கொடுப்பதை இது தடுக்கவில்லை.
ந அவனுக்கு இட்ட பெயரான ‘ஆண்டோயின்’ என்றே அவனை அழைப்பேன் எனப் பிடிவாதம் பிடிக்க, அவன் எப்போதோ கருப்பு வெள்ளைப்படம் ஒன்றில் பார்த்த துறுதுறுப்பான, சோகமான ருமேனிய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையின் பெயரான நாடியா என்றே அவளை அழைத்தான். நிறுவனத்தின் விதிமுறைப்படி அங்கிருந்து வெளியேறும்போதுதான் அனாதைகளுக்கு முழுப் பெயரும், அதற்கு ஆதாரமான சான்றிதழ்களும் வழங்கபட்டன. அதுவரை அவர்களைப் பெயர் சொல்லியோ செல்லப் பெயரைச் சொல்லியோ அழைப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. அவர்கள் வந்துசேர்ந்த முதல்நாளில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சுட்டெழுத்தைக்கொண்டே அழைக்கப்பட்டார்கள். அவனும் நாடியாவும் வளாகத்தைவிட்டு வெளியே செல்லும்போது முற்றிலும் புதிய பெயர்கள் வழங்கப்படும் என்பதையும் உலகம் மொத்தமும் அவர்களை அந்தப் பெயர் சொல்லியே அழைக்கும் என்பதையும் அ அறிந்திருந்தான். ஆனால், அவனைப் பொறுத்தவரை அவள் எப்போதுமே நாடியாதான்.
இரகசிய கொடைவள்ளல்
அ-வுக்கும் நாடியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் எளிமையானது. அதை ஒப்பந்தம் என்பதைவிட மனவிருப்பம் என்றுதான் சொல்லவேண்டும். தங்களால் இயன்றதனைத்தையும் செய்து அவர்கள் பரீட்சையிலும் நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்றுவிடுவதென்றும், வெளியுலகுக்குச் சென்ற பின்னர் மீதிவாழ்க்கையை இருவரும் ஒன்றாகவே வாழ்வதெனவும் அவர்கள் ஒருவருக்கொருவர் உறுதி கூறிக்கொண்டார்கள்.
நிறுவனத்தின் பொருளாதாரம் முழுக்க நன்கொடையை நம்பியே உள்ளது. ஒவ்வொரு அனாதைக்கும் பிரத்யேகமான, இரகசிய கொடைவள்ளல் ஒருவர் இருந்தார். அந்தக் கொடைவள்ளல்தான் அனாதைக் குழந்தையின் அடையாள எழுத்தையும், வருங்காலப் பெயரையும், பாடத்திட்டத்தையும், நிறுவனத்தை விட்டு வெளியே ரயிலில் செல்லும்போது போய் சேரும் கடைசி இடம் என எல்லாவற்றையும் தீர்மானிப்பார். நாடியா பிரெஞ்சிலும், அ ஜெர்மனியிலும் பேசுபவர்கள் என்பதால் அந்த மொழிகளைப் பேசுவதற்கு வாய்ப்புள்ள சுவிட்சர்லாந்தின் வேறுவேறு நகரங்களுக்குத்தான் பயணச்சீட்டு எடுக்கப்படும் என அவர்கள் ஊகித்ததால் இருவரும் ஒரு திட்டத்தை வகுத்தனர். ரயில் நிலையத்திற்கு முதலில் போய்ச் சேருபவர் அந்நிலையத்தின் வடக்குகோடி பெஞ்சில் போய்ச் சேரவேண்டிய நகரத்தின் பெயரை எழுதிவைப்பது, அந்த நகரத்துக்குப் போய்ச்சேர்ந்த பிறகு இருவரும் மீண்டும் ஒன்றுசேரும்வரை ஒவ்வொரு நாளும் விடிகாலை ஏழு மணிக்கு மத்திய ரயில் நிலையத்தின் முக்கிய வாசலில் இன்னொருவருக்காகக் காத்துக்கொண்டிருப்பது என முடிவு செய்தனர். அதற்கெல்லாம் முன்னதாக அவர்கள் இருவரும் தேர்வில் வெற்றி பெறவேண்டும். நாடியாவின் கொடையாளி அவளை மருத்துவராக ஆக்க ஆசைப்பட்டதை அவளுக்கு முடிவான பாடத்திட்டத்திலிருந்தே புரிந்துகொள்ள முடிந்தது. கடந்த பரீட்சையின்போது உடல் அமைப்பியல் பாடத்தில் தோற்றுப்போய்விட்டாள். ஆனால் இம்முறை தேர்வுக்காக கடினமாக உழைக்கப்போவதாக அவள் அ-விடம் வாக்குறுதி அளித்தாள்.
அ-வின் கொடைவள்ளல் அவனை என்னவாக ஆக்கவிரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. கலை வகுப்புகளுடன், அ-வின் பாடத்திட்டம் சமூகத்தைப் பற்றியும், உரையாடும் திறன் பற்றியும் இருந்தது. அவன் வாக்குவாதம் செய்யவும், கூரிய தர்க்கத்துடன்கூடிய கட்டுரைகளை எழுதவும் பயிற்சி பெற்றான். அ-வின் கொடைவள்ளல் அவனைத் தனது துறையில் தலைசிறந்த ஓவியனாக்க விரும்புகிறாரா? வக்கீல்? கட்டுரையாளரா, விமர்சகரா? இருக்கலாம். எதுவாக இருப்பினும் ஆடம்பரமான வாழ்க்கைக்கேற்ப அடர்ந்த நீளமான தாடியை அ வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றே அவர் விரும்பினார் என அவனுக்குத் தோன்றியது. ஏனெனில், மற்ற அனாதைகளுக்கு கிடைப்பதைப் போல சவரப்பொருட்கள் அவனுக்குக் கிடைத்ததில்லை. ஒருமுறை அதைப்பற்றி அவன் நல்லவரிடம் பேசியபோது, ‘தேவையற்ற விசயங்களில் நேரத்தை விரயம் செய்யாமல்’ வரவிருக்கும் பரீட்சையில் கவனம் செலுத்துமாறு கறாரான குரலில் சொல்லிவிட்டார். கொடைவள்ளல் தான் தாடி வைத்திருப்பதால் அ-வையும் தாடி வளர்க்க வேண்டுமென எதிர்பார்த்தார் என அ தன்னளவில் நம்பினான். ஒருமுறை நல்லவர் வெண்தாடி வைத்திருந்த ஒரு முதியவரிடம் பேசிக்கொண்டிருந்ததை அ உடற்பயிற்சிக் கூடத்தின் கதவு வழியே பார்த்தான். உடற்பயிற்சிக் கூடத்தைச் சுற்றி அ ஓடிக்கொண்டிருக்க நல்லவர் அவனைச் சுட்டிக்காட்டி பேசுவதையும் அதை முதியவர் தலையசைத்தவாறு கவனமாகக் கேட்டுக்கொண்டிருப்பதையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அனாதைச் சிறுவனின் கல்வியில் அவ்வளவு பணத்தைச் செலவுசெய்ய அந்த முதியவரை உந்தியது எது? கருணையா, தயவா? வாழ்க்கையில் செய்த தவறுகளுக்காக பிராயச்சித்தம் தேடுகிறாரா? அபாரமான தனது திறமைகளை கூர்தீட்டி மனித குலத்தை மேன்மையடையச் செய்யும் ஒரு குழந்தை மேதைக்கு உதவிடாமல், மரபுரீதியாக பாதிப்படைந்த ஒரு குழந்தைக்கு உதவ வேண்டும் என அவர் ஏன் தீர்மானித்தார்? ஆரோக்கியமாகவும் பணக்காரனாகவும் இருந்திருந்தால் இதுபோல நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்திருப்பேனா என அ யோசித்துப் பார்த்தான். ஒருவேளை இன்னொரு மாற்று பிரபஞ்சத்தில், நல்லவர் அருகில் நின்றபடி அ ஒரு குழந்தையைக் காண்பித்து, அது நாடியாகவாகக்கூட இருக்கலாம், அவளுடைய வளர்ச்சி, அவளது பொழுதுபோக்குகள், பரீட்சையில் தேர்ச்சிபெறுவதற்கான வாய்ப்புகள், அவளைச் சூழ்ந்திருக்கும் பாதுகாப்பற்ற உலகத்தில் தன் மீதி வாழ்க்கையைக் கழிப்பது ஆகியவற்றைப் பற்றி விளக்கிக்கொண்டிருக்கலாம்.
ஏப்ரல் மாதத் தேர்வு
எழுத்துத் தேர்வுக்காக நான்கு மணி நேரமே ஒதுக்கப்பட்டிருந்தது. முன்பு நடந்த தேர்வுகளை அ கடைசி நிமிடத்தில்தான் எழுதி முடித்தான். இரண்டு முறை எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாமல் விடைத்தாள்களை ஒப்படைக்க நேர்ந்தது. ஆனால் இம்முறை இருபத்தி ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகவே எழுதி முடித்துவிட்டு பேனாவைக் கீழே வைத்துவிட்டான். விடைத்தாளை ஒப்படைக்கிறாயா என மேற்பார்வையாளர் கேட்டபோது அவன் மறுத்துவிட்டான். நிறைய விசயங்கள் இந்த பரீட்சையை நம்பி இருக்கின்றன. அவன் பதில்களை மீண்டும் நிதானமாக படித்து, சில மேற்கோள் குறிகளைத் திருத்தி, தெளிவாக எழுதவில்லை எனத் தோன்றிய வார்த்தைகளைத் திரும்பவும் எழுதினான். நேரம் முடிந்தபோது, மிகச்சிறந்த பரீட்சையை தான் எழுதியிருப்பதாக அவனுக்குத் தெரிந்திருந்தது. அதை உறுதிசெய்யும் விதத்தில் ஏப்ரல் மாதத் தேர்வை எழுதிய ஏழு அனாதைகளில் அவனும் நாடியாவும் மட்டும் நேர்முகத் தேர்வுக்காகத் தகுதிபெற்றார்கள்.
நல்லவருடனான நேர்முகத் தேர்வை முடித்துவிட்டு அவள் வருவதை அவன் பார்த்தான். அவளது பிரத்யேக பயிற்சியாளர் அவளுடனே இருந்ததால் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லையெனினும் அவளது பிரகாசமான முகம் எல்லாவற்றையும் சொல்லியது. இப்பொழுது அ செய்யவேண்டியதெல்லாம் நல்லவருடனான நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுவதுதான். அதன் பிறகு இருவரும் இந்த வளாகத்தைவிட்டு வெளியே வந்துவிடலாம். அவர்களில் யார் முதலில் ரயில்நிலையத்தைச் சென்றடைவார்கள்? அவனோ அல்லது அவளோ போய்ச்சேரும் இடத்தை அவர்களில் யார் ஒருவர் பெஞ்சில் கீறி எழுதுவார்கள்? ஆனால் அங்கே ஒரு பெஞ்சு இருக்குமா? அ திடீரென பெரும் பதற்றம் அடைந்தான். அந்த வளாகத்தை விட்டு வெளியேறுவது மட்டுமல்ல அவனது கனவு, வெளியே சென்று நாடியாவுடன் சேர்ந்து வாழ்வதும்தான். அவர்களது திட்டத்தில் சிறிய பிசகு ஏதாவது நேர்ந்து ஒருவர் மற்றவரை தவறவிட்டுவிட நேர்ந்தால் என்னவாகும்? என்னதான் என்றாலும், இருவருக்குமே மற்றவரின் புதிய பெயரைத் தெரிந்திருக்காது. அவர்கள் இருவரில் ஒருவர் தங்களது வருங்கால நகரைவிட்டு கிளம்ப நேர்ந்தால் இருவரும் மீண்டும் சந்திக்கவே முடியாமல் போகும்.
“எதைப்பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறாய்?” நல்லவர் வினவினார்.
“எனது வாழ்க்கையைப் பற்றி. வருங்காலம் எனக்காக வெளியே காத்திருக்கிறது” என்று முணுமுணுத்த அ தன்மையுடன் தொடர்ந்தான். “இந்தச் சந்தர்ப்பத்தை எனக்கு ஏற்படுத்தியமைக்கு நான் இந்த நிறுவனத்திற்காகவும், குறிப்பாக உங்களுக்காகவும் ஏராளமாய் கடன்பட்டிருக்கிறேன்.”
“இங்கே எல்லா வேலைகளையும் நீ முடித்துவிட்டது போலவும் ரயில் ஜன்னலின் வழியாக என்னை நோக்கி வெள்ளைக் கைக்குட்டையை அசைப்பதுபோலவும் அல்லவா பேசுகிறாய்?” முகத்தை அசிங்கமான புன்னகையாக கோணியபடி நல்லவர் கேட்டார். “பத்தொன்பது முறை பரீட்சையில் தோற்றுப்போன நீ இப்படிச் சொல்வது சற்று திமிரானது என்று உனக்குத் தெரியவில்லையா?”
“இந்த முறை நான் தேறிவிடுவேன். எனக்கு உறுதியாகத் தெரியும்”. அ குளறினான்.
“நீ உறுதியாகத்தான் இருக்கிறாய். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நான்தான் அந்தளவுக்கு இல்லை” – நல்லவர் இடைமறித்தார்.
“இந்த முறை எல்லா விடைகளுமே சரியானவை” அ உறுதியாகச் சொன்னான்.
“ஓ…” ஊக்குவிப்பதுபோல நல்லவர் சொன்னார்- “நானும் அதைச் சந்தேகப்படவில்லை. விடைத்தாள்களில் எழுதப்படும் சரியான பதில்களை மட்டும் அடிப்படையாக வைத்து பரீட்சைகள் தீர்மானிக்கப்படுவதில்லை. சரியான பதில்களுக்குப் பின்னால் எழுதுபவனின் நோக்கமும் ஆளுமையும் மறைந்திருக்கின்றன. அவற்றைப் பொறுத்தமட்டில் நீ இன்னும் ஏராளமாய் செய்யவேண்டியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.”
அ அதிர்ந்துபோய் நின்றிருந்தான். கொதித்திருந்த தன் மூளையைக் குடைந்து நல்லவரின் மனத்தை மாற்றக்கூடிய, மறுத்துப் பேச முடியாத காரணமொன்றைத் தேடினான். ஆனால் அவன் வாயிலிருந்து “நான் உன்னை வெறுக்கிறேன்” என்ற வார்த்தைகள் வெளிவந்தன.
“பரவாயில்லை”, நல்லவர் தலையாட்டிவிட்டு தொலைபேசி பொத்தானை அழுத்தி அ-வின் பிரத்யேக பயிற்சியாளரை அழைத்து அவனை மீண்டும் அ-வின் அறைக்கே அழைத்துச் செல்லப் பணித்தார். “நீ என்னை வெறுப்பது நல்லதுதான். அது உனது வளர்ச்சியின் பகுதிதான். அன்பு செலுத்துமளவுக்கு நான் பெரிதாக எதுவும் செய்யவில்லை.”
“நான் உன்னை வெறுக்கிறேன்” அ திரும்பவும் பேசும்போது தன் மனத்தில் பொங்கும் கோபத்தை உணர்ந்தான். “நல்ல மனிதர் என்று உன்னை நீயே நினைத்திருக்கலாம். ஆனால், உண்மையில் நீ திமிர்பிடித்தவன். கெட்டவன். ஒவ்வொரு இரவும் நான் தூங்கப்போகும்போது, காலையில் எழுந்திருக்கும்போது நீ இறந்துகிடப்பாய் எனக் கண்களை மூடிக்கொண்டு எனக்குள்ளாக கற்பனை செய்துகொள்வேன்.”
“மிகவும் சரி” என்றார் நல்லவர். “நான் உனக்குக் கொடுக்கும் தண்டனைகள், என்மீது உன்னுள் பொங்கும் வெறுப்பு எல்லாம் உன்னை இன்னும் பெரிய செயலுக்காகத் தயார்செய்யும் வழிமுறைகளின் ஒரு பகுதிதான். நீ என்மீது பாசம் காட்டுவதோ நன்றியுணர்ச்சியுடன் இருப்பதோ வழிமுறையின் பகுதி அல்ல.”
தப்பித்தல்
நல்லவரை அ-விடமிருந்து மீட்பதற்கு நான்கு பாதுகாப்பு வீரர்கள் தேவைப்பட்டார்கள். அந்தச் சிறிய வன்முறைச் சம்பவத்திலிருந்து அடிபட்ட கண்கள், முன்நெற்றியில் பெரிய காயம், இடது கையில் உடைந்த இரு விரலெழும்புகளுடன் அ மீண்டு வந்தான். அது மட்டுமல்ல. பாதுகாப்புக் காவலர் ஒருவரின் அடையாள அட்டையைக் கொண்டுவந்தான்.. சண்டையிடும்போது அட்டையை அவனிடமிருந்து பறித்து ஒளித்துவைத்திருந்தான்.
அன்றிரவு தூங்குவதுபோல நடித்த அ அதிகாலை ஒரு மணிக்கு ஓசையின்றி படுக்கையை விட்டு எழுந்தான். திருடியெடுத்த அடையாள அட்டையை வைத்துக்கொண்டு அனாதைகள் தங்கியிருக்கும் பகுதியைவிட்டுத் தப்பித்துவிடலாம் என்று அவன் அறிவான். அந்தப் பகுதிக்கு மேற்கில் இருப்பது விருந்தினர் இல்லம். அங்கே செல்ல அனாதைகளுக்கு அனுமதி இல்லை. அதற்கு அப்பால் வெளியேறுவதற்கான வாயில் இருக்கிறது. அந்த வாயிலின் வழியே அ ஒருமுறைகூட சென்றது இல்லை. ஆனால் பாதுகாப்புக் காவலரின் அடையாள அட்டை அவனுக்காக அந்தக் கதவைத் திறந்துவிடுமென நம்பினான். கதவு திறக்காவிட்டால் அதன்மீது ஏறிக் குதிப்பான். அதற்கு அடியில் குழி பறிப்பான் அல்லது கதவினிடையே எப்படியும் நுழைந்துவிடுவான். அங்கிருந்து தப்பிக்க அவன் எதையும் செய்யத் தயாராக இருந்தான்.
விருந்தினர் இல்லத்துக்கு இட்டுச்செல்லும் நடைவழியின் ஊடே சென்ற அ, அடையாள அட்டையைப் பயன்படுத்தி பிரம்மாண்டமான இரும்புக்கதவைத் திறந்தான். தாங்கள் படிக்க வைக்கும் அனாதைகளின் வளர்ச்சி நிலவரம் குறித்து அறிய அவ்வப்போது வருகை புரியும் இரகசிய கொடைவள்ளல்கள் இந்தப் பகுதியில்தான் தங்குவார்கள். பெரிய உணவறைகளும், தொங்கும் சரவிளக்குகளும் கொண்ட ஆடம்பரமான விடுதியாகவே அந்தப் பகுதியை அவன் கற்பனை செய்திருந்தான். ஆனால் இப்போது அது மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதன் பிரதான நடைவழி ஒரு அலுவலகக் கட்டிடத்தின் நடைவழி போலத் தோற்றமளித்தது. அதிலிருந்த கதவுகள் ஒவ்வொன்றும் நாடக மேடை போல இருந்த அறைகளுக்கு இட்டுச்சென்றன. ஒன்று இராணுவத்தினரின் பதுங்கு குழி போலவும் இன்னொன்று ஆரம்பப் பள்ளியின் வகுப்பறை போலவும் இருக்க மூன்றாவது அறை உயர்தர நீச்சல்குளத்துடன் இருந்தது. அதன் மத்தியில் நிர்வாணமாகப் பிணம் ஒன்று மிதந்துகொண்டிருந்தது.
இராணுவத்தினரின் பதுங்கு குழிபோல அமைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து எடுத்த பழைய கைவிளக்கை உபயோகித்து தனது பாதையில் வெளிச்சத்தைப் பரப்பி நடந்த அ, பிணத்தின் முகத்தில் வெளிச்சத்தைக் குவித்தான். சதையும் இரத்தமும் கொண்ட பிண்டமாக தென்பட்ட அதனை உடடினயாக அடையாளம் கண்டுகொண்டான். தண்ணீருக்குள் குதித்து நாடியாவின் நிர்வாணப் பிணத்தை அணைத்துக்கொண்டான். அவன் அதிர்ச்சியடைந்தான். உடைந்துபோனான். முழுவதுமாக நொறுங்கிப்போனான்.
இங்கிருந்து தப்பிச் செல்வதால், வேறெதையும்விட, வெளியில் இதைவிட நல்ல வாழ்க்கை அவனுக்கு அமையும். ஆனால் இப்போது, திடீரென்று ஒரே நொடியில் அந்த ஆசை அவிந்துபோனது. நாடியா தன் அருகில் இல்லாமல் போனபின், அவனுக்கு எதிலும் இனி விருப்பம் இல்லாமல் போனது. யாரோ கழிப்பறையை உபயோகிக்கும் சப்தத்தை கேட்ட அ, தலையை நிமிர்த்தினான். ஒல்லியான, உயரம் குறைந்த, செம்பட்டைத் தலை ஆள் ஒருவன் குளியல் உடையில் ஆண்களின் உடைமாற்றும் அறையிலிருந்து வெளியில் வந்தான். அவன் அ-வைப் பார்த்தவுடன் பிரெஞ்சில் கத்தத் தொடங்கிய சில நொடிகளுக்குள் அந்த அறை பாதுகாப்பு வீரர்களால் சூழப்பட்டது. செம்முடியன் கரகரத்தகுரலில் அ-வையும் பிணத்தையும் காட்டி ஏதோ சொன்னான். காவலர்கள் தண்ணீரில் குதித்து அ-வைப் பிணத்திடமிருந்து பிரிக்க முயன்றார்கள். ஆனால் அ நாடியாவிடமிருந்து தனது பிடியைத் தளர்த்தவில்லை. கடைசியாக அவனுக்கு குளோரின் நெடியும் இரத்தத்தின் வாடையும் கனத்த இருட்டுமே ஞாபகத்தில் இருந்தது.
கோபமும் பலன்களும்
நாற்காலியில் கட்டப்பட்ட நிலையில் அ கண்விழித்தான். விருந்தினருக்கான பகுதியில் அவன் பார்த்த, கைவிளக்கைக் கண்டெடுத்த, பதுங்கு குழிபோன்ற முதல் அறையில்தான் அவன் இருந்தான். அருகில் நல்லவர் நின்றிருந்தார்.
“ந-வை யாரோ கொன்றுவிட்டார்கள்.”அவன் குரல் உடைந்திருந்தது.
“எனக்குத் தெரியும்” நல்லவர் தலையசைத்தார்.
“அந்த செம்முடியன், குள்ளனாகத்தான் இருக்கவேண்டும்”, அ முனகினான்.
“இருக்கட்டும். அவள் அவனுக்குச் சொந்தமானவள்தான்”, நல்லவர் சொன்னார்.
“அது சரியில்லை. அவள் கொலை செய்யப்பட்டிருக்கிறாள். நீங்கள் போலீஸைக் கூப்பிடுங்கள்” – அ கதறினான்.
“கொலை செய்யப்பட வேண்டுமெனில் முதலில் நீ ஒரு மனிதனாக இருக்கவேண்டும். ந ஒரு மனித உயிரே அல்ல” என்று நல்லவர் அறிவுறுத்தும் தொனியில் சொன்னார்.
“நீங்கள் இதுபோல எப்படிச் சொல்லமுடியும்? ந ஒரு அற்புதமான நபர். அருமையான பெண்.”
“ந ஒரு குளோன். அவள் நடாலியா லூரேயின் குளோன். அவளது கணவன் கேட்டுக்கொண்டபடி உருவாக்கப்பட்டவள். நீ பார்த்த குள்ள மனிதன்தான் அந்த பிலிப்.” அ ஏதோ பேச நினைத்து வாயைத் திறந்தான். ஆனால் சப்தம் வெளியேவர மறுத்தது. அறை திடீரென சுற்றியது. இருக்கையில் கட்டப்படாமல் இருந்திருந்தால் அவன் கண்டிப்பாக கீழே விழுந்திருப்பான்.
“நீ வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை”. அவன் தோள்மீது கைவைத்து நல்லவர் சொன்னார். “உண்மையான நடாலியா லூரே இன்னும் உயிரோடுதான் இருக்கிறாள். வியாபார நிமித்தமாக ஸ்விட்சர்லாந்துக்குப் போயிருக்கும் தனது கணவன் பிலிப்புக்காகத் தவிப்புடன் காத்துக்கொண்டிருக்கிறாள். இப்போது பிலிப் அவளது குளோன்மீது தனது கோபம் முழுவதையும் காட்டிவிட்டபடியால் முன்பைவிடச் சாந்தமான, மேலும் அன்பான கணவனை அவள் வரவேற்பாள். அவன் வீடுபோய்ச் சேரும்போது நடாலியாவின் நல்ல குணங்களை அவன் தெளிவாக உணருவான் என நான் நம்புகிறேன். அவ்வாறான நல்ல பண்புகளில் சில அவளிடம் இருந்ததை நீயும் நானும் நன்கறிவோம்”.
“ஆனால், அவளை அவன் கொன்றுவிட்டான்” அ தடுமாறினான்.
“இல்லை. அவன் ஒரு குளோனைத்தான் அழித்தான்” நல்லவர் திருத்தினார்.
“அவள் ஒரு பெண்…” அ மீண்டும் வலியுறுத்தினான்.
“அவள் ஒரு பெண்ணைப்போல இருந்தாள்…” நல்லவர் அவனை மீண்டும் திருத்தினார். “நீ எப்படி ஒரு ஆணைப்போல இருக்கிறாயோ அதுபோல.”
“நான் ஒரு மனிதன். முதுமை நோயுடன் பிறந்த நான் அனாதையாகக் கைவிடப்பட்டேன்…” அ கூச்சலிட்டான்.
ஆனால் நல்லவரின் கண்களில் தெரிந்த வெறுப்பு நிறைந்த பார்வை அவனது வாக்கியத்தை முடிக்காமல் செய்தது. “நானும் ஒரு குளோன்தானா?” கண்ணீருடன் கேட்டான். “என்னை வெறுக்கும் எனக்கு நெருக்கமான ஒருவர் கேட்டுக்கொண்டபடி உருவாக்கப்பட்டேனா?”
“இல்லை”, புன்னகையுடன் நல்லவர் சொன்னார். “உன்னைப் பொறுத்தவரை விசயம் இன்னும் சிக்கலானது.”
“சிக்கலானதா?” அ தடுமாறினான். நல்லவர் தனது சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய கைக்கண்ணாடியை எடுத்து அ-வின் முகத்திற்கு முன்னால் காட்டினார்.
கருப்புக் கண்களையும் இடது புருவத்துக்குக் கீழே உறைந்த இரத்தத்தையும் மூக்குக்குக் கீழே சதுரமான, சிறிய மீசையை மட்டும் விட்டு அடர்ந்த தாடி முழுக்க சிரைக்கப்பட்டிருந்ததையும் தலைமுடி ஓரமாகவும் அசிங்கமாகவும் வாரப்பட்டிருப்பதையும் அ பார்க்கமுடிந்தது. இப்போது கண்ணாடியில் பார்த்துக்கொண்டு இருந்த அ, அவன் பழுப்பு இராணுவ உடை அணிந்திருப்பதை முதன்முறையாக கவனித்தான். “அ, எனது செல்லமே, உன் பெயர் அடோல்ப்” என்றார் நல்லவர். “உனது முதலாளி எந்நேரமும் இங்கே வரக்கூடும்.”
எழுத்திலாப் பலகை
தாடியுடன் இருந்த முதியவர் அ-வைத் துளைப்பது போலப் பார்த்தார். “திரு.கிளீய்ன், நீங்கள் அவன் அருகில் செல்லலாம்” என்றார் நல்லவர். “அவன் கட்டப்பட்டிருக்கிறான். அவனால் உங்களை ஒன்றும் செய்யமுடியாது”.
“அவன் நிஜமாக அவனைப் போலவே இருக்கிறான் என்பதை நான் ஒத்துக்கொண்டாக வேண்டும்” என்று தடுமாறும் குரலில் முணுமுணுத்தார் முதியவர்.
“இவன் அவனைப் போல இல்லை. இவன் அவனேதான். நூறு சதவீதம் அடோல்ப் ஹிட்லர். உடல் மட்டுமல்ல. மனமும்கூட. அதே அறிவு. அதே பொறுமை. அதே திறமை. நான் உங்களுக்கு ஒன்றைக் காட்டியாக வேண்டும்”. நல்லவர் தனது தோல்பையிலிருந்து ஒரு சிறிய கணிப்பொறியை எடுத்து முதியவர் முன்னால் வைத்தார். அ-வால் திரையைப் பார்க்க முடியவில்லை. ஆனால் கணிப்பொறியிலிருந்து ஒலிக்கும் தன்னுடைய குரலைக் கேட்க முடிந்தது. நல்லவரைப் பார்த்து அவன் அவரை வெறுப்பதாகவும், அவர் இறந்துபோக வேண்டும் என அவன் விரும்புவதாகவும் கத்துவதை அவனால் கேட்க முடிந்தது.
“பார்த்தீர்களா?” நல்லவர் பெருமிதத்துடன் சொன்னார். “அவனது கை அசைவுகளைப் பார்த்தீர்களா? இப்போது இதைப் பாருங்கள்”. ஒருபோதும் சொல்லாத விசயங்களை, ஒருவருக்கும் முன்னால் மண்டியிடாத வலிமையான ஜெர்மனியைப் பற்றிய அந்த உரையை, தனது குரல் சொல்வதை அ திடீரென கேட்டான். நல்லவர் படத்தை நிறுத்தினார். அவர் முதியவரிடம் சொன்னார். “பாருங்கள். அவர்கள் அச்சு அசல் ஒரே மாதிரி இருக்கிறார்கள். நாங்கள் அவனது மனதை, அந்த எழுத்திலாப் பலகையை எடுத்து எல்லாவற்றையும் இட்டு நிரப்பியுள்ளோம். நாங்கள் அவன் சுவாசித்த முதல் கணத்தில் இருந்து இந்த நாளுக்கென தயார்செய்து வருகிறோம்.”
நல்லவர் தனது பையிலிருந்து துப்பாக்கியையும் கத்தியையும் எடுத்து இரண்டையும் முதியவரிடம் கொடுத்தார். “நீங்கள் எதை விரும்புவீர்கள் என எனக்குத் தெரியாது” தோள்களைக் குலுக்கியபடி சொன்னார். “அவனை நீங்கள் என்ன வேண்டுமானலும் செய்யலாம். நான் வெளியே காத்திருக்கிறேன், உங்கள் அனுமதியோடு.”
இறுதித் தீர்வு
முதியவர் துப்பாக்கியை அ-வின் நெற்றிப்பொட்டில் குறிவைத்தார். “இந்தக் கணத்திற்காக நான் வாழ்நாள் முழுதும் காத்திருந்தேன்” என்றார். “எனது பெற்றோர்களையும், சகோதரனையும் இழந்துவிட்ட நான் வதைமுகாமில் இருக்கும்போதே பிழைத்திருக்கவும், என் குடும்பத்தைக் கொலை செய்தவனைப் பழிவாங்கவும் சபதம் எடுத்துக்கொண்டேன்.”
“சுடு” அ அவசரப்படுத்தினான். “காரியத்தை முடித்துவிடு. உயிரோடு இருக்க என்னிடம் ஒரு காரணமும் இல்லை.”
“இது இப்படி முடியக்கூடாது”. முதியவர் கோபமாகச் சொன்னார் “நீ கதறி அழ வேண்டும். உயிருக்காக மன்றாடவேண்டும்.”
“இலட்சக்கணக்கான மக்களின் சாவுக்குப் பொறுப்பானவன் எனக் கருதப்படுபவன் நான். ஒரு உயிரைக்கூட துன்புறுத்தாத பரிசோதனைக்கூடத்தில் உருவாக்கப்பட்ட குளோன் அல்ல” – குரூரத்துடன் புன்னகைத்தான் அ. “என்னை மன்னிக்கவும். சம்பவங்கள் நடந்துமுடிந்து எண்பது வருடங்கள் கழித்து பழிவாங்க நினைக்கும் நீ சில சமரசங்களைச் செய்தாக வேண்டும்.”
முதியவரின் கைகள் நடுங்கத் தொடங்கின. “நீ ஹிட்லர்” அவர் கத்தினார். “நீ ஒரு குரூரமான சாத்தான். இப்போதுகூட, இந்தக் கடைசி நொடிகளிலும் சூழ்ச்சி செய்ய முயல்கிறாய்.”
“நான் ஆண்டாயின்” அ முணுமுணுத்தபடியே கண்களை மூடிக்கொண்டான். புல்மேவிய குன்றின்மீது தானும் நாடியாவும் நிற்பதாகவும் பொருத்தமான ஓவியச் சட்டகத்தின் முன்னால் நின்றுகொண்டு குருதியைப் போன்ற சூரிய அஸ்மனத்தை வரைந்துகொண்டிருப்பதாகவும் கற்பனை செய்துகொண்டான். துப்பாக்கியின் விசையை அழுத்தும் உலோக ஓசை எங்கோ தூரத்தில் கேட்டது.
*
ஆங்கில மூலம்: Tabula Rasa by Etgar Keret, a short story from the collection “Fly Already”, Riverhead books, September 2019 Edition.
2 comments
என்ன ஒரு அற்புதமான கதை!! புனைவு இலக்கியம், அறிவியல் புனைவு, மெல்லிய காதல், எதிர்பாரத திருப்பம் என அத்தனையும் உள்அடக்கிய சிறுகதை…
எழுத்தில்லாப்பலகை, ஆழமான நுண்ணிய இழையாய் வழிமுழுவதும் வாசகனை ஓயவிடாமல் தொடர்ந்து பயணிக்கிறதுகதையும் மொழி பெயர்ப்பும்மிகவும் அற்புதம்
Comments are closed.