மனித வாழ்வில் இசையின் பங்கு அளப்பரியது. நிஜத்துக்கும் கனவுக்கும் இடையிலான உப கண்ணிகளை நிரப்பித் தருவதில் இசைக்கு முக்கிய இடமுண்டு. மனிதன் தன் கனவைத் திரும்பத் திரும்பத் தொடர்புறுவதற்கான சாதனமாக இசை மீதான பற்றுதல் விளங்குகிறது. இசையைத் தன் கனவுகளின் அடுத்தடுத்த சித்திரங்களாக எண்ணிக்கொள்வது இரசனையின் விளைவாகக் கிடைக்கிற நல்லீடு. நிலம், காலம், சூழல், கதை மாந்தரின் தன்மை, வாழ்க்கை அனுபவம், கதை பாடலோடு பொருந்தி நிற்கிற புள்ளியிலிருந்து பாடல் நிறைவடைகிற புள்ளி வரையிலான கதா நகர்வு, ஒவ்வொரு பாடலுக்கு முன்னும் பின்னுமாய்த் திரைக்கதையில் ஏற்படவல்ல விள்ளல்கள் என்று பலவித உபகூற்றுக்களை உள்ளடக்கிப் புனையப்பட வேண்டியதே பாடல் என்பதாகிறது. இசையோடு ஒலிக்கும் கவிதை பாடல் என்பதாகிறது. உள்ளும் புறமுமாய் இசை ஆளுமை செலுத்துவதற்கான இடமளிப்போடு புனையப்படுவது பாடலின் அடிப்படை. பாடலுக்கான குரல்கள் தவிர உப குரல்கள், தொடக்க இசை, மைய இசை, சரணங்களுக்கு இடையிலான இணைப்பிசை, சரண முற்று எனப் பலவித இசைக்கோர்வைகளின் கூட்டு இழைதல் பாடலுக்கான இசையளிப்பாக நேர்கின்றன. மெட்டுக்குப் பாடல் புனைவது ஒருவித முறை என்றால் எழுதப்பட்ட பாடல்களுக்கு இசையளிப்பது இன்னுமொரு வழிமுறையாகிறது. பெரும்பாலும் திரைப்பா இசையானது மெட்டுக்குப் பாட்டளிப்பதாகவே மையங்கொண்டுவருகிறது.
தமிழ்த் திரையிசை ஒவ்வொரு தசாப்தத்திலும் பெரும் மாற்றங்களைச் சந்தித்த வண்ணமே தொடர்ந்துகொண்டிருக்கிறது. முதன்முதலில் மௌனப் படக் காலத்தைத் தாண்டிப் பேசும் படமான போது பாடல்களுக்கு நடுவே சிற்சில வசனங்களோடு படங்கள் உருவாகின. நின்றால், நடந்தால், தும்மினால், இருமினால் எல்லாம் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. சுமாராக 1940ஆம் ஆண்டிலிருந்து 1975 வரையிலான முப்பத்தி ஐந்து வருடங்களுக்குள் பாட்டே இல்லாத அந்த நாள் என்றவொரு படமும் வந்தது வரலாற்றின் ஒரு துளி என்றால் சராசரியாக ஒவ்வொரு படத்திலுமே எட்டுப் பாடல்கள் வரை இருப்பது சாதாரணம் என்று கருதப்பட்டதும் நிகழ்ந்தது. பாடல்கள் அனுபல்லவி, பல்லவி, மூன்று சரணங்கள் வரை நீண்டது மெல்லக் கட்டுக்குள் வந்தது 1980ஆம் ஆண்டு வாக்கில்தான். சரியாகச் சொல்வதானால் எழுபதுகளின் மத்தியில்தான் தமிழ்த் திரைப்படங்களில் பாடல்களின் எண்ணிக்கையும் ஐந்து அல்லது நான்கு எனவும் பல படங்களில் மூன்று இரண்டு பாடல்களாகவும் இடம்கொள்ளத் தொடங்கியது. அந்த நேரத்தில் இசைக்க வந்த புதிய இசைஞராக இளையராஜா பாடலின் போக்கு, உருவம், உள்ளடக்கம், வழங்கிய விதம், இசைக்கருவிகளின் பயன்பாடு, குரல்களின் இருத்தல், நீக்கம் ஆகியவற்றை எல்லாம் தனதேயான மாற்றங்களைச் செய்துபார்த்தாற் போலவே பாடல் வரிகளிலும் பல வித்தியாசங்களை, பரீட்சார்த்தங்களைச் செய்து பார்க்கவும் முனைந்தார்.
எளிமை, கவித்துவம் என்ற இருப்புப் பாதையின் மீது பயணிக்கிற இரயிலாகவே தன் பாடல்கள் இருக்க வேண்டும் என்பதில் பெரும் பிடிவாதம் கொண்டிருந்தார் இளையராஜா. பாடல் உருவாக்கத்தில் ஒவ்வொரு வரியும் பாடற்படுகையில் கடைக்கோடி இரசிகனைச் சென்றடைய வேண்டியதன் அவசியத்தை முழுமுதல் காரணியாகவே கருத்திற் கொண்டார் இளையராஜா. என் கணக்குப்படி இளையராஜா இசையமைத்திருக்கும் ஆயிரத்து ஐம்பது படங்களில் தமிழ்ப் படங்கள் மட்டும் என எடுத்துக்கொண்டால் சுமார் 700 படங்கள் வரக்கூடும். சராசரியாக ஒரு படத்துக்கு 4 பாடல்கள் என்று வைத்துக்கொண்டாலும் 2800 பாடல்கள் வரை இருக்கக்கூடும். அதில் அதிகப் பாடல்களை எழுதிய கவிஞர் யார்..? ராஜா இசையில் பாட்டெழுதிய அரசியல்வாதிகள், ஆளுமைகள் யார் யார்? இளையராஜா இசையமைப்பில் மொத்தம் எத்தனை பேர் பாட்டெழுதி இருக்கிறார்கள்..? அதிக காலம் இளையராஜாவோடு இயங்க வாய்த்த கவிஞர் யார்..?
இளையராஜா தன் இசையில் தானே 100 பாடல்கள் வரை எழுதியுள்ளார். அவரையும் சேர்த்து இளையராஜாவின் இசையில் பாடல் எழுதிய கவிஞர்களின் எண்ணிக்கை 90 இருக்கலாம்.
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படுகிற எண்ணிக்கை யாவும் வெளிவந்த தமிழ்ப் படங்களிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் தொகை மட்டுமே. பூஜை மற்றும் பாடல் பதிவு, பாடல் பதிவு மற்றும் பகுதி படமாக்கல், முழுப் படப்பிடிப்பு முடிந்து வெளிவராத படங்கள், டப்பிங் படங்கள் என எல்லாவற்றையும் சேர்க்கையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவே செய்யும்.
இளையராஜா கவிஞர், பாடகர் என யாரோடும் முழுவதுமான தொழிற்பிணைப்பில் இருந்திடவில்லை. தன் முதற்படம் தொட்டே பாடுவதற்கும் எழுதுவதற்கும் அந்தந்தக் காலகட்டத்தில் பேரோடு விளங்குகிற எல்லோருடனும் இணைந்து பணியாற்றுகிற சந்தர்ப்பங்களை மாற்றி மாற்றி உருவாக்கிய வண்ணமே தன் சமீபத்திய படமான சைக்கோ வரை பின்பற்றி வந்திருப்பவர் இளையராஜா. அவரது இசையமைப்பில் வாலி(91), கங்கை அமரன் (31), பஞ்சு அருணாச்சலம் (20), வைரமுத்து (16), கண்ணதாசன்(11), பழநிபாரதி (8), ஆர்.வி.உதயகுமார் (7), புலமைப்பித்தன் (6), கஸ்தூரி ராஜா (5) ஆகியோர் படங்களில் எல்லாப் பாடல்களையும் எழுதுகிற வாய்ப்பு கிடைக்கப் பெற்றனர். மு.மேத்தா, நா.முத்துக்குமார் ஆகிய இருவரும் இரண்டு படங்களில் எல்லாப் பாடல்களையும் எழுதியுள்ளனர். அகத்தியன், பா.விஜய், சினேகன், ஜீவன், பிறைசூடன், எம்ஜி.வல்லபன், புரட்சிதாசன், காமகோடியன், நா.காமராசன், அறிவுமதி ஆகிய 10 பேரும் தலா ஒரு படத்தில் எல்லாப் பாடல்களையும் எழுதினர். மேற்சொன்ன 21 பேர்களும் சேர்த்து மொத்தம் 193 படங்களில் அனைத்துப் பாடல்களையும் புனைந்துள்ளனர்.
ஆண்டாள், பாரதியார், பாரதிதாசன், ராமலிங்க அடிகளார், சிவகாமசுந்தரி, கோபாலகிருஷ்ண பாரதியார், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர், தியாகராஜ சுவாமிகள், பாவலர் வரதராஜன் போன்ற கடந்த காலத்தின் பாடல்கள் திரைப்படங்களில் இடம்பெறுவது வழக்கம். அந்த வரிசையில் அவற்றுக்கு ராஜாவும் இசையளித்திருக்கிறார். அரசியல், கலை- இலக்கியவாதிகளின் திரைப்படப் பங்கேற்புகளில் மு.கருணாநிதி, ஜெயகாந்தன், வலம்புரி ஜான், கா.காளிமுத்து, பாடகி எஸ்.ஜானகி (கண்ணா நீ எங்கே – ருசி கண்ட பூனை) போன்ற ஆளுமைகள் இளையராஜா இசையில் பாட்டெழுதியிருக்கிறார்கள்.
திரைப்பட இயக்குநர்களில் கங்கை அமரன், பஞ்சு அருணாச்சலம், எம்ஜி.வல்லபன், கண்மணி சுப்பு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், மதுக்கூர் கண்ணன், ஆர்வி.உதயகுமார், கஸ்தூரி ராஜா, ஜீவன், திருமாவளவன், மிஷ்கின், கலைவாணன், அகத்தியன், பாரதி கண்ணன், புரட்சிதாசன் (நான் சொன்னதே சட்டம்), எஸ்.என்.ரவி, மணிவண்ணன் (மடை திறந்து- நிழல்கள் திரைப்படப் பாடலின் பல்லவி மட்டும்), கமல்ஹாசன் (உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது ஒன்னுமில்லை – விருமாண்டி) ஆகியோர் ராஜா இசையில் பாடல்களை எழுதியுள்ளனர்.
தொழில்முறைப் பாடலாசிரியர்களில் மேற்சொல்லப்பட்டவர்களைத் தவிர ஆலங்குடி சோமு, உளுந்தூர்பேட்டை ஷண்முகம், அவினாசிமணி, கே.என்.சிங்காரம், நா.காமராசன், பூவை செங்குட்டுவன், சி.என்.முத்து, சிற்பி பாலசுப்ரமணியம், திருப்பத்தூரான், இளந்தேவன், முத்துவேந்தன்(கல்லுக்குள் ஈரம் படத்தில் இடம்பெற்ற கூத்து), இளையபாரதி, சின்னக்கோனார், சிதம்பரநாதன், இதயச்சந்திரன், குருவிக்கரம்பை சண்முகம், பொன்னடியான், மணிமுடி, பரிணாமன், அறிவுமதி, பழநிபாரதி, பா.விஜய், நா.முத்துக்குமார், சினேகன், முத்துவிஜயன், தாமரை, வாசன், பொன்னியின் செல்வன், முத்துக்கூத்தன், ரவிபாரதி, பொன்னருவி, காதல்மதி, விசாலி கண்ணதாசன், விவேக், கபிலன், ஏகாதசி, ஃப்ரான்ஸிஸ் கிருபா, மோகன்ராஜன், யுகபாரதி, முத்தமிழ், தென்மொழியான், சண்முகம் முத்துராஜ், தணிகைச் செல்வன் (புதிய அடிமைகள்), கருணாநிதி, விஜி மேன்யூவல் (மூடுபனி ஆங்கிலப் பாடல்), ஹரி (டிஸ்கோ சவுண்ட்- தர்மயுத்தம்), சொற்கோ போன்றவர்கள் ராஜா இசையில் பாட்டெழுதியவர்களாவர்.
கண்ணதாசன்
கண்ணதாசன் 50களில் சினிமாவுக்குள் வந்தவர். பன்முகத் திறன்கொண்ட பேருரு. தமிழ்ப் பாடல் சரித்திரத்தில் கண்ணதாசனின் வருகை மிக முக்கியமானது. முப்பதாண்டு காலம் தமிழ்த் திரைப்பா உலகத்தின் மாபெரும் ஆளுமையாக விளங்கியவர். 1976 முதல் அவர் காலமான 1981 ஆம் ஆண்டு வரை சுமார் ஐந்தாண்டு காலம் இளையராஜாவுடன் சேர்ந்து பணியாற்ற வாய்த்தது. கண்ணதாசன் மறைவுறும் வரை ராஜாவின் இசையில் 51 படங்களில் 120 பாடல்களுக்குக் குறையாமல் எழுதியிருக்கிறார். மொத்தம் 11 படங்களில் எல்லாப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருக்கிறார்.
“செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா” என்ற பாடல் கண்ணதாசன் ராஜா இசையில் எழுதிய சிறந்த பாடல்களில் ஒன்று. கிழக்கே போகும் ரயில் படத்தில் “கோயில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ” காற்றை வென்றொலித்த கானமது. தியாகம் படத்தில் “நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி”– இன்றும் ஒலிக்கும் நற்பூம்பாடல். சிகப்பு ரோஜாக்களில் “இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது” என்பதை மறக்கவா முடியும்? 16 வயதினிலேவுக்காக அவர் எழுதிய “செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா” பட்டிதொட்டியெல்லாம் அளவின்றி அதிர்ந்த பாடல். “இளமை எனும் பூங்காற்று” அந்தக் காலத்தின் வசந்தமொத்தம். பட்டாக்கத்தி பைரவனில் “எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்” பாலு குரலில் ராஜா இசையில் கண்ணதாசன் எழுத்தில் வரைந்த நல்லதொரு ஸோலோ பேழை.
உதிரிப்பூக்களுக்காக அவர் எழுத்தில் பூத்தது “அழகிய கண்ணே உறவுகள் நீயே”. நேர்பார்வைக்கு எளிய வரிகளைப் போலத் தோற்றமளித்தாலும் கண்ணதாசனின் ஆகச்சிறந்த ஆழ்தமிழ்ப் பாடல்களில் இதுவொன்று. “ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு” தர்மயுத்தத்தின் அழகான பாடல். நிறம் மாறாத பூக்களில் “ஆயிரம் மலர்களே மலருங்கள்”, “இரு பறவைகள் மலை முழுவதும்” ஆகியவை காதலர் வழிபாட்டுக் கானங்களே. “ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்யவா” இளமைக் கோலம் படத்தில் ஜேசுதாஸ் பாடிய அழகான இளையராஜா பாடல். “மழை வருவது மயிலுக்குத் தெரியும்” ரிஷிமூலத்திற்காக கவியரசு ராஜா இசையில் வடித்த எழுத்தோவியம். குருவுக்காக அவர் உருக்கொடுத்த “பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா” வான் தொட்ட கானமீன். “சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி” மீண்டும் கோகிலாவுக்காக கவியரசர் உயிர் தொட்டெழுதிய உன்னதக் கவிதை. நெற்றிக்கண் படத்தில் “ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்” பாடல் ஒலிக்காத இடமே இல்லை எனத் தகும். கடல்மீன்களில் “தாலாட்டுதே வானம்” என்றெழுதித் தாலாட்டினார் தாசன். அதற்கு இசையலைகளால் உயிரூட்டினார் ராஜன். டிக் டிக் டிக் படத்தில் “நேற்று இந்த நேரம்” என்ற பாடல் அந்தக் காலகட்டத்தின் நளினமிகு நவீனம்.
அவர் காலமான பிறகும் ராஜா இசையில் அவர் எழுதிச் சென்ற பாடல்கள் அமரர் கண்ணதாசன் என்ற பேர் தாங்கி ஒலித்தன. கடைசியாக கண்ணதாசன் எழுதிய பாடல் “கண்ணே கலைமானே” என்கிற மூன்றாம் பிறை பாடல். அது இளையராஜா இசையில் அமைந்தது தற்செயல்தான். அது போலவே அமரர் கண்ணதாசன் என்று இளையராஜா இசையமைப்பில் அவர் பெயர் இடம்பெற்ற கடைசிப் பாடல் உன்னை நான் சந்தித்தேன் படத்தில் இடம்பெற்ற “தேவன் தந்த வீணை” என்ற பாடல். அதன் பூர்த்தியில் கண்ணதாசன் எழுதிச்சென்ற சரண வரிகள் எதிர்பாராமையின் வல்லமையை, யதார்த்தத்தின் வன்மையை எடுத்தோதும் வரிகளாகக் காண்பவரை அயர்த்துகின்றன.
வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே
வண்ணங்கள் நான் எண்ணும் எண்ணங்கள்
எங்கிருந்தோ இங்கு வந்தேன்
இசையினிலே எனை மறந்தேன்
இறைவன் சபையில் கலைஞன் நான்
கண்ணதாசன் இறைவன் சபையின் கவிஞன். கவிராஜன். ஒப்பாரில்லாத் தமிழ்ப்பா பல எழுதிய பாடல் மேதை.
பஞ்சு அருணாச்சலம்
கண்ணதாசனிடம் பாடல்களைப் படியெடுக்கும் உதவியாளராக பணிப்பேறு கொண்டவர் பஞ்சு. இவரது தயாரிப்பில் உருவான படம் அன்னக்கிளி. தேவராஜ் மோகன் இரட்டையர் இயக்கிய இந்தப் படத்தில்தான் இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். ராஜாவுக்குப் பாடல் எழுதிய முதல் கவிஞர் என்ற பெருமையை இதன் மூலம் அடைந்தவர் பஞ்சு. இளையராஜா இசையில் புதுப்பாட்டு, கலிகாலம், தம்பி பொண்டாட்டி, மணமகளே வா ஆகிய 4 படங்களை இயக்கியுள்ளார் பஞ்சு அருணாச்சலம். 1977 ஆம் ஆண்டு ‘அவர் எனக்கே சொந்தம்’ படம் தொடங்கி 2007 ஆம் ஆண்டு மாயக்கண்ணாடி வரை பஞ்சு தயாரித்த 26 படங்களில் 23 படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. மிகுதி 3 படங்களை அவரது புதல்வர்கள் யுவன், கார்த்திக் ஆகிய இருவரும் இசையமைத்தார்கள்.
துணை இருப்பாள் மீனாட்சி, அன்னக்கிளி, உறவாடும் நெஞ்சம், ஆளுக்கொரு ஆசை, கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி, காயத்ரி, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, காற்றினிலே வரும் கீதம், இது எப்படி இருக்கு, வட்டத்துக்குள் சதுரம், ப்ரியா, கவரிமான், கல்யாணராமன், வெற்றிக்கு ஒருவன், நதியைத் தேடி வந்த கடல், ஆறிலிருந்து அறுபது வரை, முரட்டுக்காளை, குவா குவா வாத்துகள், தம்பிக்கு எந்த ஊரு என 20 திரைப்படங்களில் எல்லாப் பாடல்களையும் பஞ்சு எழுதினார்.
கண்ணியமான பாடல்கள் பலவற்றை இயற்றியவர் பஞ்சு. சவாலான சூழல்களுக்கு இனிமையான பாடல்களைப் புனைந்தளிக்கிற வல்லமை அவரிடம் இருந்தது. கயிற்றின் மீது நடந்து பழகிய கலைஞனின் இலாவகமும் அனாயாசமும் மிகுந்த நடையோடு பல பாடல்களைப் புனைந்தவர் பஞ்சு. அவற்றில் சிலவற்றை இங்கே நோக்கலாம்.
ஆசை நூறுவகை, பேசக்கூடாது (அடுத்த வாரிசு), சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் (மைக்கேல் மதன காமராஜன்), பொன்னான மேனி (மீண்டும் கோகிலா), பொண்ணு ஊருக்குப் புதுசு படத்தில் சாமக்கோழி ஏ கூவுதம்மா, ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது (பூட்டாத பூட்டுகள்), பருவமே புதிய பாடல் பாடு (நெஞ்சத்தைக் கிள்ளாதே), ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில் (மண் வாசனை), ஜெர்மனியின் செந்தேன் மலரே (உல்லாசப் பறவைகள்), குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள் (எங்க முதலாளி), பூப்போலே உன் புன்னகையில் (கவரிமான்), ஒரு வானவில் போலே (காற்றினிலே வரும் கீதம்), மேகம் கருக்குது மழை வரப்பாக்குது (ஆனந்த ராகம்), முத்தமிழ்க் கவியே வருக (தர்மத்தின் தலைவன்), சந்தைக்கி வந்த கிளி (தர்மதுரை), மாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மதுரை), கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனசை (என் ஜீவன் பாடுது), பட்டு வண்ணச் சேலைக்காரி (எங்கேயோ கேட்ட குரல்), ஒரே முறை உன் தரிசனம் (என் ஜீவன் பாடுது), எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல (சின்னக் கண்ணம்மா), பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா (பாண்டியன்) , நாரினில் பூ தொடுத்து மாலையாக்கினேன் (இரண்டில் ஒன்று), கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட (வீரா), எம்மனச பறிகொடுத்து (உள்ளம் கவர்ந்த கள்வன்), காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே (உள்ளம் கவர்ந்த கள்வன்) போன்ற பாடல்களைப் பஞ்சு எழுதியுள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான பாடல்களை எழுதியவர்களது பேரேட்டில் பஞ்சு அருணாச்சலத்தின் பேர் இடம்பெறாமற் போனாலும் தமிழ்த் திரையுலகில் பன்முக ஆளுமையாக வலம் வந்தவராக பல அர்த்தபூர்வ பாடல்களைத் தந்தவராக, எல்லாவற்றுக்கும் மேலாக, இளையராஜாவை அறிமுகம் செய்த தயாரிப்பாளர் மற்றும் அவருக்கு முதல் பாடலை எழுதியவர் என்பவை உட்பட பல பெருமிதங்களைத் தனதே கொண்டவர் பஞ்சு. உறவுக்காகக் கண் கலங்கிக் காத்திருக்கும் உணர்வு குழைந்த கதாபாத்திரத்தின் கருணை மனுக்களுக்கு ஒப்பான கேவுதலை, வேண்டுதலை அவர் எடுத்தெழுதிய பாடல்கள் வேறு யாராலும் அடைய முடியாத வானெல்லைகளாக இன்றும் தனிப்பவை. பாடலாசிரியர்களின் சரித்திரத்தில் பஞ்சுவின் பெயரைப் பொன்னுளி கொண்டு பொறித்திடச் செய்பவை. அவற்றில் ஒரு உதாரணப் பாடலின் சுட்டியை இங்கே தர விழைகிறேன். “பூ போலே உன் புன்னகையில்” என்ற பாடல். கவரிமான் படத்தில் இடம்பெற்றது.
பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்
நீ நடப்பது நாட்டியமே
மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு முத்துகள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே எனைப் பார் மகளேஎன் உயிரின் ஒளி நீயே
பூப்போலே உன் புன்னகையில்பொன் உலகினைக் கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியேஎன் உயிரே உயிரின் ஒளி நீயே
புதிர்மை பொங்கும் இசை. இளையராஜா தன் முதல் சில ஆண்டுகளில் இசைத்த மாபெரிய அன்பின் பாடல் இது. இதன் இடையிசைச் சரடுகள் காவிய-நிகர்-இழைதல்கள். எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய விதம் அபாரம் என்றால் தகும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பரிமளிப்பைப் பற்றித் தனியே சிலாகிக்கத் தேவையே இல்லை. அந்த அளவுக்குக் காட்சியைத் தனதாக்கிக்கொண்டார். இத்தனை வல்லமைகளுக்கு நடுவே தன் எழுத்தின் குரலாக, அதன் இசையாகt, அவற்றின் முகமாகவே இந்தப் பாடலை மாற்றிய மேதமை பஞ்சு அருணாச்சலத்தினுடையது. இளையராஜாவுடன் தன் கம்பீரத் தமிழ்கொண்டு கூட்டாய் இயங்கியவர் பஞ்சு அருணாச்சலம்.
வாலி
இளையராஜாவின் இசையில் கவிஞர் வாலி அதிகபட்சமாக 313 படங்களில் 1047 பாடல்கள் வரை எழுதியிருக்கக்கூடும். ராஜா இசையில் அதிகப் பாடல்களை எழுதிய கவிஞராக எண்ணிக்கையில் வாலிதான் முதலிடத்தில் இருக்கிறார். மேலும் ராஜா இசையமைத்த 650 தமிழ்ப் படங்களில் 91 படங்களில் எல்லாப் பாடல்களையும் வாலி மட்டுமே எழுதியுள்ளார். இதைத் தவிர ப்ரியா ஓ ப்ரியா, இதயத்தைத் திருடாதே, உதயம், அன்புச்சின்னம், இந்திரன் சந்திரன், மெட்ராஸ் டு கோவா போன்ற டப்பிங் படங்களையும் சேர்த்தால் நூறு படங்களுக்கு வாலி ஒருவரே பாட்டெழுதியிருப்பதை அறிய முடிகிறது.
வாலியின் பாடல்கள் காலத்தோடு கரைந்துவிட்ட கானங்கள். திரைத்தேவை எதை நிர்ப்பந்திக்கிறதோ அதனை அப்படியே அவ்வண்ணமே எழுதிய கவிஞர் வாலி. அவர் கவித்துவம் மிகுந்த சொற்கூட்டுக்களை எழுப்பி நிலை நிறுத்துகிற பாடல்களை அதிகம் புனைந்தார் எனச் சொல்வதற்கில்லை. எதுகையும் மோனையும் எழில் கொஞ்சுகிற பாடல்களைப் படைத்தவர் வாலி. நாயகத்துவம் மிளிரும் பாடல்களில் தொடங்கி சினிமாவின் சகல சூழல்களுக்கும் மறுப்பேதும் இன்றிப் பாடல் புனைந்தார். இளையராஜாவோடு நெடுங்காலம் இணைந்து பணியாற்றிய பாடலாசிரியர் வாலிதான். திரையிசைக் காலத்தோடு இயைந்து அடைந்த மாற்றங்களை எல்லாம் உள்வாங்கியவண்ணம் தேவைக்கேற்ப பாடல்களைத் தருவதில் வாலி அளவுக்கு இன்னொருவரைச் சொல்வது கடினம். காதலை, நட்பை, துரோகத்தை, வலியை, அன்பை, கண்ணீரை என்று வாழ்வின் பல்வேறு தருணங்களில் வாலி எடுத்தெழுதிய பாடல்கள் காலத்தின் புக் மார்க் எனப்படுகிற சரிகையிழைகளாகவே விளங்குகின்றன. அவர் பாடல்களைப் பற்றியபடி நம்மால் காலத்தின் சன்னல்களை அல்ல அதன் தோரணவாயில்களைத் திறந்துகொண்டு உள்ளே நுழையவும் கரையவும் இயலும்.
வாலி என்றால் ஜாலி என்று சொல்லத்தக்க அளவில் பல பாடல்களைப் படைத்தாலும் இன்னொரு புறம் “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்றும் “நானாக நானில்லை தாயே” என்றும் உறைய வைத்தார். “உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே” என்று உயிர் பற்றி உலுக்கினார். “ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ” என்று நெக்குருகச் செய்தார். “அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும் கொட்டி வச்சிக் குப்பையாக வந்த உடம்பு” என்று எடுத்தெறிந்தார். “சின்னப்புறா ஒன்று எண்ணக் கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது” என்ற பாடல் பாலுவின் குரலில் ராஜ இசையில் காற்றை வருடும் சோகத் தென்றல். “அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே” என்ற கிளிப்பேச்சுக் கேட்கவா படப்பாடல் உளியின் நுனியாய்க் கோடு கிழித்து ஞாபகம் திறக்கும் பாட்டு. “நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு” என்ற எஜமான் படப்பாடல் சோகக் கனிகள் நூறு பிழிந்து சாறு வழிந்து நிறைந்த வாதையின் பாடல். சிட்டுக்குருவியில் “உன்ன நம்பி நெத்தியிலே” என்ற பாடல் மனத்தை இரண்டாய்ப் பெருக்கி நாலாய் வகுக்கும் கண்ணீர்க் கணிதம். “நான் யாரு எனக்கேதும் தெரியலையே” என்ற சின்னஜமீன் பாடல் வாலி எழுதி ராஜா பாடிய உலராமலர் இதழ். “குயிலப் புடிச்சி கூண்டிலடச்சி கூவச்சொல்லுகிற உலகம்” என்ற சின்ன தம்பியின் கண்மழை காலம் தாண்டிய கானமாலை. “காவியம் பாடவா தென்றலே” இதயத்தைத் திருடிய பாடல். நீங்கள் கேட்டவை படத்தில் “பிள்ளைநிலா இரண்டும் வெள்ளைநிலா” பாடல் மென் சோகமும் கண் ததும்புதலுமாய்ப் பெருக்கெடுக்கும் பாமழை. என்றும் அன்புடன் படத்தில் “துள்ளித் திரிந்ததொரு காலம்” என்ற பாடல் பேசா மனமொன்றைப் பேசவைத்தாற் போன்ற நற்கானம்.
காதல் பாடல்களுக்கு வாலி அளித்த சொற்செல்வம் அளப்பரியது.
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு படத்தில் “ஒரு காதல் தேவதை ஒரு கன்னி மாதுளை” இன்றும் நன்றாய் மனத்தில் விரியும் மதுமலர் கானம். சிட்டுக்குருவியில் “என் கண்மணி உன் காதலி” அன்றைய காலத்தின் புத்திசைப்பாடல். வானொலிக் காற்று வழி நானிலம் ஆண்ட கானம். “ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ” அரங்கேற்ற வேளைக்காக ராஜாவும் வாலியும் இணைந்த சூப்பர் ஹிட். “தூங்காத விழிகள் ரெண்டு”– அக்னி நட்சத்திரம் படத்தில் இடம்பெற்ற அமிர்தவர்ஷிணி. “சுந்தரி கண்ணால் ஒரு சேதி” தளபதியில் இடம்பெற்ற காதல் சரிதம். “குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டு கேட்குதா” என்ற மெல்லத் திறந்தது கதவு பாடல் மனங்களைத் திருடிவருடிய காதல்நதி.
ஜாலியான பாடல்கள் பலவற்றை வடித்தார் வாலி. “கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருக்கு” ஒரு உதாரணம். நிழல்கள் படத்தில் இடம்பெற்ற “மடைதிறந்து தாவும் நதியலை நான்” பாடல் இன்றும் இளையராஜாவின் முதல்தரப் பாடல்களில் ஒன்றெனவே கேட்கப்பட்டு வருகிறது. “ஆகாயம் மேலே பாதாளம் கீழே ஆனந்த உலகம் நடுவினிலே” ரஜினிகாந்தப் பாடல். இன்னொன்று காலம் தாண்டி ஒலிக்கிற “ராக்கம்மா கையைத் தட்டு” எனும் தளபதி கானம். “அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி” என்ற பாடல் நீங்கள் கேட்டவை படத்துக்காக வாலி எழுதி ராஜா வழங்கிய ஐஸ்க்ரீம் தூறல்.
மக்களை மகிழ்விக்கிற பெருங்கலை சினிமா. சமூகத்தின் மேல் இசையை மழையாக்கிப் பெரும்பொழிவை நிகழ்த்துவது சினிமாவின் கொடை. பாடலென்பது மனங்களைக் கழுகிற மகாவேலை. அதன் சரித்திரத்தில் மறுக்க முடியாத பெயர்களில் ஒன்று வாலி. இளையராஜாவும் வாலியும் சேர்ந்திசைத்த பாடல்கள் காலம் உள்ளளவு நிலைத்து ஒலிக்கவல்லவை. பாலுமகேந்திரா செலுலாய்ட் சிற்பங்களைத் தன் படங்களாக்கித் தந்தவர். இளையராஜாவோடு உணர்வுப்பூர்வமாகக் கலந்து பணியாற்றிய இயக்குநர்களில் முதன்மையான இடம் அவருக்கு உண்டு. அவரோடு ராஜா பணியாற்றிய படங்கள் பலவற்றில் உருக்கொண்ட வாலியின் பாடல்கள் உன்னதமானவை. அவற்றில் ஒற்றைப் பதமாக மறுபடியும் என்ற படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலால் எடுத்தாண்ட “நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்” என்ற பாடல். மயக்கும் சாய்வுடைய இசையும் மென் சோகமும் தீராத நம்பிக்கையும் பெருங்கொண்ட புதிரின் ஒவ்வொரு சுளையாகத் திறந்துகொண்டே நகர்ந்திடக்கூடிய இசைவலமும் கொண்டதிந்தப் பாடல். எளிமையும் வல்லமையும் கொண்ட தோகைக் காற்றின் வருடலாய் இந்தப் பாடல் வாலியின் பேர் சொல்லும் காலகால கானம்.
மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத்தாண்டி வளர்ந்ததைக்கண்டுநகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே
அடுத்த சரணமும் முதலதை விஞ்சியபடி ஒலிக்கக்கூடியதே.
கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானதுவிழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லைவிளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்
இளையராஜாவின் இசையில் வாலி பன்னெடுங்காலம் (35 வருடங்களுக்கு மேல், 1000 பாடல்களுக்கு மேல்) பாடலியற்றினார். தனக்கு வழங்கப்பட்ட எந்தச் சூழலுக்கும் பாடல் எழுதுகிற வல்லமை அவருக்கிருந்தது. இந்த வகையில் கண்ணதாசனுக்கு (6 வருடங்கள், 120 பாடல்கள்) அடுத்தாற் போல் வாலியைத்தான் குறிப்பிட முடியும். தேவர் மகன் படத்திற்காக இளையராஜா இசையமைப்பில் வாலி எழுதி கமல்ஹாசன், எஸ்.ஜானகி இருவரும் பாடிய சூப்பர்ஹிட் பாடல் “இஞ்சி இடுப்பழகி மஞ்சச் செவப்பழகி” என்ற பாடல். யூகிக்கவே முடியாத அபாரமான வரிகளைக்கொண்டு அந்தப் பாடலைப் புனைந்தார் வாலி. அதன் ஒரு வரியை அல்ல, சொல்லைக்கூடத் திருத்தவோ மாற்றவோ வேறோன்று யோசிக்கவோ முடியாது என்று இசையறிஞர் ஒருவர் வாலியைப் பற்றிச் சிலாகித்துப் பேசுகையில் சொன்னது நினைவிலாடுகிறது.
அதுதான் வாலி.
கங்கை அமரன்
இளையராஜாவின் இளைய சகோதரரான கங்கை அமரன் தமிழ் சினிமாவில் இயக்கம், தயாரிப்பு, இசையமைப்பு எனப் பன்முகம் கொண்டவராகப் பரிணமித்தவர் என்றாலும் அவர் ஒரு பாடலாசிரியர் என்பதிலிருந்தே அவரது கலாமுகவரியைத் தொடங்க முடியும். பஞ்சு அருணாச்சலத்தைப் போலவே கண்ணதாசனிடம் எழுத்து உதவியாளராகப் பணியாற்றியவர் கங்கை அமரன். இசையறிவும் எழுத்தார்வமும் ஒருங்கே இணைந்து காணப்பட்டவர். அதன் மூலமாகத் தமிழ்த் திரையிசையில் மறக்க முடியாத பல பாடல்களை எழுதிய பெருமை கொண்டவராக கங்கை அமரன் விளங்குகிறார். எல்லாச் சூழலுக்கும் பாடலெழுதுவது கடினம். அதனை எளிதாகச் செய்தவர் அமரன். கிராமத்துச் சொல்லாடல்களை வடிக்கிறாற் போலவே உலர்ந்த மேம்போக்கான நகரவாசத் தமிழையும் எடுத்தெழுதுகிற வல்லமை அவரிடமிருந்தது. பாடலாசிரியர்களில் கங்கை அமரன் ஒரு இன்ஸ்டண்ட் இண்டெலிஜெண்ட். சட்டென்று ஒரு முழுப்பாடலையும் புனைகிற ஆற்றல் அவரிடம் மிளிர்ந்தது. இளையராஜாவின் இசையில் 20 வருடங்களுக்கும் மேலாக 253 படங்களில் 570 பாடல்கள் வரை கங்கை அமரன் எழுதியிருக்க முடியும். மொத்தம் 31 படங்களில் எல்லாப் பாடல்களையும் எழுதுகிற வாய்ப்பை கங்கை அமரனுக்கு வழங்கினார் ராஜா. கங்கை அமரன் இயக்கிய மொத்தப் படங்கள் 19. அவற்றில் இரண்டு படங்களுக்கு மட்டும் அவரே இசையமைத்தார். மற்ற 17க்கும் இளையராஜாதான் இசை. ராஜாவுடன் சேர்ந்து சங்கர்லால், ஹலோ யார் பேசுறது, கண்ணைத் தொறக்கணும் சாமி போன்ற படங்களுக்கு இணைந்து இசையமைத்தார் கங்கை அமரன். பூஜைக்கேத்த பூவிது நேத்துத் தானே பூத்தது, சோலைப் புஷ்பங்களே, தெற்குத் தெரு மச்சானே போன்ற அழியாப் பாடல்கள் பலவற்றை இளையராஜா இசையில் பாடிய பெருமிதமும் அவருக்கு உண்டு.
“செந்தூரப் பூவே செந்தூரப் பூவே” பாடல் பதினாறு வயதினிலே படத்தில் இடம்பெற்றது. சோகச் சாய்வுடன் கூடிய தனியாவர்த்தனப் பாடலான இதனை கண்ணதாசன்தான் எழுதினார் என்று கண்மூடி நம்பிய பலரும் கங்கை அமரன் என்று அறிந்து வியந்ததாகச் சொல்வதுண்டு. அகல் விளக்கு படத்தில் “ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே” என்ற பாடலின் பல்லவி ஒவ்வொரு சொல்லுமே முற்றுச் சொற்கள். இசையும் வரியும் இணைந்து செய்த மாயம் அந்தப் பாடல். “சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் சிறு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்” என்று எழுதி அசரடித்தார் அமரன். இன்று போய் நாளை வா படத்தில் “மதனமோகன ரூப சுந்தரி” என்ற பாடல் ஒலிக்காத நாள் இல்லை அப்போது. “என் இனிய பொன் நிலாவே” என்று மூடுபனியில் அமர் எழுதிய பாடல் தனிமையின் பரவசம். அந்தப் பாடலின் ஒளிர்நிறை அம்சம் அதில் தழுவிவருடித் தாலாட்டும் கிடார் இசைத் தோரணம். அதனை வாசித்தவரும் அமர்தான். பன்னீர்ப் புஷ்பங்கள் படத்தில் அமர் எழுதிய எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட் வகையின. இடையில் சில வருடங்கள் ராஜா இசையில் பாடலெழுதுகிற வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு எண்பதுகளின் பிற்பகுதி வருடங்களில் மீண்டும் ராஜா பல பாடல்களை அமரனுக்கு அளித்தார். கரகாட்டக்காரன், சின்ன தம்பி போன்ற விண் தொட்ட பல படங்களில் அமரின் பேனா எழுதிய வரிகள் தோரணம் செய்ததும் மறுக்கவியலாது.
“என்னுள்ளில் எங்கோ ஏங்கும் உள்ளம்” எனத் தொடங்கும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் பாடல் பெண்குரல் தனிப்பாடல்களின் பேரேட்டில் தனித்தவோர் உன்னதமாக நிலைத்திருக்கிற பொன்நிகர் பாடல். வாணி ஜெயராம் பாடிய இந்தப் பாடல் இரவுகளைத் திறந்தும் பூட்டியும் மாறி மாறித் தத்தளிக்கச் செய்கிற மனோபாவமொன்றைத் தயாரித்துத் தருகிற இலாகிரிப் பண்டமாகவே நிரந்தரித்திருக்கிறது என்றால் நிசம்.
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
எனத் தொடங்கும் போதே உயரங்களைத் தாண்டித் தகர்த்தெறியும் ஆகாயவலமாய்த் தொடங்குகிறது.
இதன் சரணங்கள் இரண்டுமே பேரழகு மொழிப் புதையல்கள்.
என் மன கங்கையில் சங்கமிக்க-சங்கமிக்க பங்கு வைக்க
பொங்கிடும் பூம்புனலில்-பொங்கிடும்அன்பென்னும் பூம்புனலின் போதையிலே
மனம் பொங்கி நிற்க
தங்கி நிற்க காலம் இன்றே சேராதோ
இத்தனை அணுக்கத்தை நுட்பமாக எழுத்தில் வார்த்தவர் அமரன். அதை இசைவழி கோர்த்தவர் இளையராஜா. அடுத்த சரணத்தில்
மஞ்சளைப் பூசிய மேகங்களே மேகங்களே மோகங்களே
மல்லிகை மாலைகளேமல்லிகை முல்லையின் மாலைகளே
மார்கழி மாதத்து காலைகளே சோலைகளேஎன்றும் என்னைக் கூடாயோ
“ஆசையைக் காத்துல தூதுவிட்டு” ஆரவாரமாகட்டும், “ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது” என்ற பாடலாகட்டும் “வாடாத ரோசாப்பூ” என்ற கானமாகட்டும் ராஜாவும் அமரனும் இணைந்து உருக்கொடுத்த பல பாடல்கள் மக்களை மகிழ்வித்தவை. பெருமயக்க காலத்தை அலங்கரித்த இலாகிரி கானங்கள். இளையராஜா இசையில் வாலிக்கு அடுத்து நிறைய பாடல்களை எழுதிய கவிஞர் என்பதைத் தாண்டி வணிகத் தேவைக்கென உருவாக்கப்பட்ட பாடல்களுக்கு மத்தியில் தூரத்தில் ஒளிரும் நட்சத்திரம் போல “உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை இங்கு முடியலாம் முடிவிலும் ஒன்று தொடங்கலாம், இனியெல்லாம் சுகமே” என்று எழுதுகிற மொழிவல்லமை கொண்டவராகவும் நினைவுகூரப்படுகிற ஒருவர்தான் கங்கை அமரன். ராஜா வீட்டுப் பாடல் கன்று அமரன்.
வைரமுத்து
பாரதிராஜா இயக்கி இளையராஜா இசையமைத்த நிழல்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானார் வைரமுத்து. எண்பதுகளில் தமிழ்த் திரைப்பாடலின் நகர்திசை மாற்றங்களில் முக்கியமான விளைதலாக இரண்டு சரணங்களுடன் பெரும்பாலும் முற்றுகிற பாடலின் அமைப்பைச் சொல்ல முடியும். அந்த நேரத்தில் ஏற்கனவே எழுதிக்கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் தன் தனித்துவமிக்கப் பாடல் வரிகளால் தனியே ஒளிரத்தொடங்கியவர் வைரமுத்து. ஸ்ரீதரின் நினைவெல்லாம் நித்யா, நிழல் தேடும் நெஞ்சங்கள், கவிதாலயா தயாரித்த புதுக்கவிதை, பாரதிராஜாவின் காதல் ஓவியம், ரவிசங்கர் இயக்கத்தில் ஈரவிழிக் காவியங்கள், பேராசிரியர் பிரகாசத்தின் ஆயிரம் நிலவே வா, ராஜசேகர் இயக்கத்தில் மலையூர் மம்பட்டியான், மேஜர் சுந்தரராஜன் உருவாக்கிய இன்று நீ நாளை நான் என வைரமுத்துவைத் தன் பல படங்களில் தொடர்ந்து பாடல்களை எழுதச் செய்தார் இளையராஜா. கவித்துவம் மிகுந்த வரிகள், தனியே ஒளிர்ந்த சொல்முறை, புத்தம் புதிய சிந்தனை, காதலின் பாடல்களுக்குள் பலவித சேதி சொல்லக்கூடிய கவி முனைப்பு ஆகியவை வைரமுத்தின் பாடல்களில் இயல்பாக அமைந்தன.
இளையராஜா இசையில் வைரமுத்து மொத்தம் 130 படங்கள் வரை பணியாற்றியிருக்க முடியும். அவற்றில் 300 பாடல்கள் வரை அவர் எழுதியிருக்கக்கூடும். மொத்தம் 16 படங்களில் எல்லாப் பாடல்களையும் வைரமுத்து எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. எண்பதுகளின் பேரொளிப் பாடல் கூட்டு இளையராஜா வைரமுத்து இருவர் இணை.
இளமைக் காலங்கள், கொக்கரக்கோ, மண் வாசனை, ஒரு ஓடை நதியாகிறது, எனக்குள் ஒருவன், கைராசிக்காரன், புன்னகை மன்னன், சிந்துபைரவி, நல்லவனுக்கு நல்லவன், நீங்கள் கேட்டவை, பூவிலங்கு, உன்னை நான் சந்தித்தேன், வாழ்க்கை, உயர்ந்த உள்ளம், உன் கண்ணில் நீர் வழிந்தால், பூவே பூச்சூடவா, தென்றலே என்னைத் தொடு, பிள்ளை நிலா, ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, ஜப்பானில் கல்யாணராமன், அந்த ஒரு நிமிடம், ராஜபார்வை, கீதாஞ்சலி, விக்ரம், உனக்காகவே வாழ்கிறேன், தாய்க்கு ஒரு தாலாட்டு, நட்பு போன்ற படங்களில் வைரமுத்து பாடல்கள் முழுவதையுமோ அல்லது பெருவாரிப் படல்களையோ எழுத முடிந்தது. பேசப்பட்ட எண்பதுகளின் பாடல்கள் பலவற்றை வைரமுத்து எழுதினார். நேரடித் தமிழ்ப் படங்கள் போலவே தெலுங்கில் இருந்து தமிழ்ப்படுத்தப்பட்ட சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சலங்கையில் ஒரு சங்கீதம், மர்ம மனிதன், காதல் ஓய்வதில்லை, பாடும் பறவைகள் போன்ற படங்களிலும் காலத்தால் மறக்கடிக்க முடியாத பல பாடல்கள் இடம்பெற்றன.
பாடலின் துவக்க வரிக்கு பெரும்பாலும் மெனக்கெடுவது பாடல் உருவாக்கத்தின் இயல்பு. பாடலின் ஆரம்பம் என்பது பாடலுக்கான வரவழைப்பு. பன்னீர் தெளித்து பூ கொடுத்து வரவழைப்பதைப் போலவே சட்டென்று கன்னம் கிள்ளி தோள் பற்றி இழுத்து பாடலுக்குள் நுழைப்பதும் நடந்தேறும். “என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்” என்று ஒரு ஆவேசப் பாடல் தொடங்கும். “அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே” என்று ஒரு அணுக்கப் பாடல் நீவும். “சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்” என்று அடுத்தது அட்டகாசம் புரியும். “தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ” என்று ஏகாந்தத்தில் எதிர்வாதிடும். “அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது” என்று காதல் பேசும். இதெல்லாம் பாடலின் அமைப்பு. அப்படித்தான் பாடல் என்றால் முதல் வரி முகவரி பகிரும் முத்தான வரியாக இருக்கும். ஆனால் வைரமுத்து எழுதிய பாடல்களில் கவனம் திருப்பும் இன்னும் ஒரு அல்லது சில அல்லது பல அபாரமான வரிகள் அமைந்தது தற்செயலல்ல. “மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டித் தேரு” என்று எழுதும்போது அயர்த்திவிடுகிறதல்லவா? “மீதியை நான் உரைப்பதும் நீ இரசிப்பதும் பண்பாடு இல்லை” என்றெழுதுவது சுலபமா என்ன..?
எண்பதுகளின் காலகட்டம் ஸ்டீரியோஃபோனிக் இசையும் பிரிந்தொலிக்கும் ஆடியோ சிஸ்டங்களின் பேரொலிப் பரவலும் முந்தைய காலத்தில் சாத்தியமற்ற வேறொரு துல்லியத்துடனான பாடல் கேட்பு அனுபவத்தைச் சாத்தியம் செய்துகொடுத்தன. ரேடியோ என்பதைத் தாண்டியும் பாடல்கள் கேட்பதற்கான சந்தர்ப்பங்கள் பெரிதாய் வளர்ந்ததும் அப்போதுதான். அந்தக் காலத்தின் ராஜபாட்டையில் இளையராஜா முதலிடத்தில் நடைபோட்டார். அவர் உருக்கொடுத்த பாடல்கள் காற்றை ஆண்டன. வைரமுத்தும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய பாடல்கள் தமிழ் சினிமாவின் ஜரிகைக் கனாக்கள். இன்றும் வென்றொலிக்கும் சந்தோஷக் கூட்டொன்றின் சங்கீத சாட்சியங்கள். “பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்” என்று குழைகையில், “பாடி வா தென்றலே” என்று உருகுகையில், “சிரிச்சா கொல்லிமலைக் குயிலு” என்று மந்திரம் பகிர்கையில், “ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்” எனத் தூறுகையில், “வாலிபமே வா வா” என்று உற்சாகம் பொங்குகையில், “தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்” என்று ஆரவாரம் செய்கையில், “நான் பாடும் மௌன ராகம்” என்று வீழ்கையில் எல்லாம் ரசிகன் ராஜாவின் இசையாலும் வைரமுத்தின் வரிகளாலும் கிறங்கிக் கண் கசிந்தான். ஆறாண்டு காலம் இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல்களில் பெரும்பாலானவை ஹிட் பாடல்களே. காதலின் புத்தம் புதுத்தன்மை குன்றாத பல பாடல்களை, எண்பதுகளின் இறவா கானங்களை, இளையராஜா இசையமைப்பில் வைரமுத்து எழுத்தில் திளைத்து இரசிக்கிற பெருங்கூட்டம் இன்றும் உண்டு. ஒரு உதாரணப் பாடலை இங்கே நோக்கலாம்.
“ஒரு ஜீவன் அழைத்தது” என்று தொடங்கும் கீதாஞ்சலி படப்பாடல், இளையராஜா இசைத்து தன் குரலில் பாடிய பாடல்களில் இன்றும் காற்றை ஆளும் தாக நேரத் தேன் மழை.
முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய்
முள்ளை உள்ளே வைத்தாய்
என்னைக் கேளாமல் கன்னம் வைத்தாய்
நெஞ்சில் கன்னம் வைத்தாய்
நீயில்லை என்றால் என் வானில் என்றும்
பகலென்று ஒன்று கிடையாது
அன்பே நம் வாழ்வில் பிரிவென்பதில்லை
ஆகாயம் ரெண்டாய் உடையாது
இன்று காதல் பிறந்த நாள்
என் வாழ்வில் சிறந்த நாள்
மணமாலை சூடும் நாள் பார்க்கவே
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இளையராஜா வைரமுத்து இணை அளவுக்குக் காதல் பாடல்களை நெய்தவர்கள் இல்லை என்று வழக்காடித் தீர்ப்பெழுதுகிற எண்பதுகளின் இசை இரசிகர்கள் பெருமதம் ஒன்றின் உப-மதம் ஒன்றாகவே தொடர்ந்து நிகழ்ந்து தொடர்கிறது.
பிறைசூடன்
இளையராஜாவின் சொந்தப் படமான ராஜாதி ராஜாவில் “மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா” என்ற பாடலை பிறைசூடன் எழுதினார். அந்தப் பாடல் பெரும் வரவேற்பை அடைந்தது. ராஜா கைய வச்சா படத்தில் “காதலுக்கு ராஜா சிரிக்கும் ரோஜா” சிறந்ததோர் டூயட். மாப்பிள்ளை படத்தில் “வேறு வேலை உனக்கு இல்லையே என்னைக் கொஞ்சம் காதலி” என்ற பாடல் அவருக்கு சபாஷ் சொல்லச் செய்த சூப்பர்ஹிட் பாடல். பணக்காரன் படத்துக்காக அவர் எழுதிய “நூறுவருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்” என்ற பாடல் இமயம் தாண்டி விண்ணளந்த பாடல். “தென்றல்தான் திங்கள்தான் நாளும் சிந்தும்” என்ற பாடல் கேளடி கண்மணியில் பேர் சொல்லிய பாட்டு. ஈரமான ரோஜாவே படத்தில் “இடம்கொண்ட கலகலக்கும் மணியோசை சலசலக்கும்” என்ற பாட்டும் ஆகப்பிரபலம்தான். கோபுர வாசலிலே படத்தில் “காதல் கவிதைகள் படித்திடும் நேரம்”, “கேளடி என் பாவையே” ஆகிய பாடல்கள் பிறைசூடனுக்கான நற்பெயரை ஏற்படுத்திக் கொடுத்தன. இதயம் படத்தில் “இதயமே இதயமே”, தங்க மனசுக்காரனில் “மணிக்குயில் இசைக்குதடி”, கேப்டன் பிரபாகரனில் “ஆட்டமா தேரோட்டமா” என அடுத்தடுத்து ராஜாவின் இசைக்கூட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை எழுதுகிற வாய்ப்பு பிறைசூடனுக்குக் கிட்டியது.
உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் படத்தில் பிறைசூடன் எழுதிய “என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி” பாடல் அந்த வருடத்தின் காற்றை ஆட்சி செய்த கானமாருதம். ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் இளையராஜா இசைத்த செம்பருத்தி படத்தில் 4 பாடல்களை எழுதி தன் தமிழ்ப் பிறை சூட்டினார் பிறைசூடன். எல்லாவற்றுக்கும் மகுடமாக என் ராசாவின் மனசிலே படத்தில் இளையராஜா சொந்தக் குரலில் பாடிய “சோலைப் பசுங்கிளியே என் தாயி சோலையம்மா” பாடல் வானதிர் சோக கானமாய் நிலைகொண்டது. இளையராஜா இசையில் 1989 முதல் 1994 வரை தொடர்ந்து பாடலுக்காக இணைந்த பிறைசூடன் அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ராமராஜ்யம் படத்தின் வசனம் மற்றும் பாடல்களை எழுதியதன் மூலம் மீண்டும் இணைந்தார். இளையராஜா இசையில் 60 பாடல்கள் வரை பிறைசூடன் எழுதியிருக்கக்கூடும்.
முத்துலிங்கம்
“மாஞ்சோலைக்கிளி தானோ மான்தானோ வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ” என்ற பாடல் கிழக்கே ரயிலாய்ப் போன பாடல். காற்றைச் சுருட்டித் தன் கைவிரல்களொன்றில் மோதிரமாய்ப் போட்டுக்கொண்ட பாடல். அதை எழுதியவர் முத்துலிங்கம். மணிப்பூர் மாமியாருக்காக மலேசியா குழைந்தெடுத்த குரல் ஐஸ்க்ரீம் ஒன்று உண்டு. “ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே” என்பதது. அதனை வடித்தவர் முத்துலிங்கம். இளையராஜா இசையில் 80 பாடல்கள் வரை எழுதியிருக்கிறார் முத்துலிங்கம். அவற்றில் பெரும்பாலானவை பிரபலமானவை. மக்களின் பெருவிருப்பம் கொண்டு ஒலித்தவை.
முத்துலிங்கம் பாடலுக்குண்டான இலட்சணம் மிகாமல் இலக்கணம் கெடாமல் பாடல் புனைவதில் வல்லவர். அவரால் கடினமான சூழல்களுக்கு யாராலும் தொடவியலாத சொற்செட்டுகளைத் தொட்டெடுத்து வந்து பாடல்களைப் புனைய முடிந்தது. அவரொரு பாடல் ஸ்பெஷலிஸ்ட். இளையராஜா இசையில் அவர் எழுதிய அனேகப் பாடல்கள் பிரபலமடைந்த பேரொலிப் பாடல்களே.
காதலுக்குக் கண்கள் இல்லே மானே (நாடோடிப் பாட்டுக்காரன்), பாடவந்ததோர் கானம் (இளமைக் காலங்கள்) பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள (காக்கிச் சட்டை), தேவன் கோயில் தீபமொன்று (நான் பாடும் பாடல்), கூட்டத்திலே கோயில் புறா யாரை இங்கு தேடுதம்மா (இதயக் கோயில்), மணியோசை கேட்டு எழுந்து, ராகதீபம் ஏற்றும் நேரம் புயல்மழையோ (பயணங்கள் முடிவதில்லை), பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் (தூறல் நின்னு போச்சு), இதயம் போகுதே (புதிய வார்ப்புகள்), சங்கீத மேகம் (உதயகீதம்), சின்னஞ்சிறு கிளியே சித்திரப் பூவிழியே (முந்தானை முடிச்சு), ஹே ஐ லவ் யூ (உன்னை நான் சந்தித்தேன்), இதழில் கதை எழுதும் நேரமிது (உன்னால் முடியும் தம்பி), செம்பருத்தியில் சலக்கு சலக்கு சேலை, முதல் வசந்தத்தில் மானாடக் கொடி மீனாடும் மற்றும் ஆறும் அது ஆழமில்ல இரண்டுமே சூப்பர் ஹிட் வகையறா. ஈரமான ரோஜாவேக்காக முத்துலிங்கம் எழுதிய “வண்ணப் பூங்காவனம்” ஒரு ஜாலி லாலி. உதிரிப்பூக்களில் “நான் பாட வருவாய் தமிழே” அவரெழுதிய மற்றொன்று.
தங்க மகனில் “வா வா பக்கம் வா”, தாவணிக் கனவுகளுக்காக இளையராஜா இசையில் “வானம் நிறம் மாறும் இளமாலை சுபவேளை” பாடலைப் புனைந்தார் முத்து. “தாலாட்டுக் கேட்க நானும்” என்று நந்தலாலா வரை தொடர்கிற பாட்டுக் கூட்டு முத்துலிங்கத்துடனானது. ஓ எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா (உனக்காகவே வாழ்கிறேன்), மலையோரம் மாங்குருவி (எங்க தம்பி), காதல் பரிசு படத்தில் “காதல் மகராணி கவிதைப் பூ விரித்தாள்”, சித்திரச்சிட்டுகள் சிவந்த மொட்டுகள் (என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு), ஏ மரிக்கொழுந்து (புதுநெல்லு புதுநாத்து) ஒரு கிளியின் தனிமையிலே (பூவிழி வாசலிலே), ஆலமர வேரு எங்க பெரியமருது பேரு (பெரியமருது), முத்து முத்து மேடை போட்டு (பெரியவீட்டுப் பண்ணைக்காரன்), ஆசை இதயம் (கண்மணி) போன்ற பாடல்களையும் முத்துலிங்கம் எழுதியுள்ளார்.
இளையராஜா இசையில் விருமாண்டி படத்தில் இடம்பெற்ற “மாடவிளக்கே” என்று தொடங்கும் பாடல். அதிலொரு வரி இப்படி வரும். “ஆறாக நீ ஓட உதவாக்கரை நானு” என்று. தமிழில் அவர் தொட்டுத் திரும்பிய தூரம் அனாயாசம்.
நா.காமராசன்
எண்ணிக்கை அளவில் குறைவான பாடல்களையே எழுதியிருந்தாலும் கவித்துவம் மிகுந்த சந்தச் சந்தர்ப்பங்களை நா.காமராசனுக்கு வழங்கினார் இளையராஜா. “வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா” என்ற பாடல் எண்பதுகளில் காதலிக்காத பலருடைய மனங்களிலும் காதல் மகரந்தத் துகள்களைத் தூவிச்சென்ற ஆசைகானம். கை கொடுக்கும் கை படத்தில் மகேந்திரன் இயக்கத்தில் பார்க்கப் பார்க்கக் கண் கொள்ளாப் பேரழகுப் பாடலொன்று உண்டு. அது “கண்ணுக்குள்ளே யாரோ” எனத் தொடங்குவது. இளையராஜாவின் இசையில் காமராசன் எழுதிய அற்புதம் அந்தப் பாடல். பெண்குரல்கள் இணைந்து பாடிய பாடல்களில் ஆகச்சிறந்த வரிசையில் இடம்பெறக் கூடியது அந்தப் பாட்டு. எங்க ஊரு காவல்காரன் படத்தில் இடம்பெற்ற “அரும்பாகி மொட்டாகிப் பூவாகி” பாட்டை எத்தனை முறை கேட்டாலும் மறத்தல் இயலாது. நல்லவனுக்கு நல்லவன் படத்தில் நா.கா எழுதிய “சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது” என்ற அன்பின் பாடல் இன்றும் தந்தையரின் கானமாகக் கண்களைக் குளம்பாக்கிக் குழைய வைக்கிற பேரமுது. மானே தேனே கட்டிப்புடி (உதயகீதம்), பாடும் வானம்பாடி நான் (நான் பாடும் பாடல்), ஓ மானே மானே மானே (வெள்ளை ரோஜா), வெளக்கு வச்ச நேரத்திலே (முந்தானை முடிச்சு), வெண்ணிலா ஓடுது (நாளை உனது நாள்), அடுக்கு மல்லிகை (தங்கமகன்), முத்துமணிச் சுடரே வா (அன்புள்ள ரஜினிகாந்த்), கண்ணன் வந்து பாடுகின்றான் (ரெட்டை வால் குருவி), மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ (பெரிய வீட்டுப் பண்ணைக்காரன்), என்னருகே நீ இருந்தால் படத்தில் நிலவே நீ வரவேண்டும், ஒரு தேவதை வந்தது (நான் சொன்னதே சட்டம்), சிங்காரச் செல்வங்களே (மருதுபாண்டி) போன்ற பல பாடல்களை இளையராஜா இசையில் எழுதியவர் நா.காமராசன்.
புலமைப்பித்தன்
இளையராஜா இசையில் 145 பாடல்கள் வரை எழுதியுள்ளவர் புலவர் புலமைப்பித்தன். ராஜா இசையில் தீபம் உட்பட 6 படங்களில் அவரே அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். தமிழ்ச்செருக்கு கொண்ட ஆளுமைப் புலவர். பெருங்காலம் திரையிசை உலகத்தில் இயங்கி வந்தாலும் பெரிய எண்ணிக்கையிலான பாடல்களைப் புனைந்திடவில்லை. இந்த முரணுக்குப் பின்னால் இருக்கக்கூடிய காரணம் அவரது ஆளுமையின் இயல்பு என்றே கொள்ள முடியும். இளையராஜா இசையில் தொடக்க காலம் முதல் தொண்ணூறுகளின் இறுதி வரையிலான இருபத்து ஐந்து ஆண்டுகளில் இருவரும் இணைந்த பல்வேறு பாடல்கள் பெரும் பிரபலம் அடைந்தவையே. புலவர் தான் எழுதிய பாடல்களை காற்று உதிர்த்தெடுத்த மலர்களைப் போல் கடந்துவிடுவாரே ஒழிய அவை தன் மலர்கள் என்று திரும்பக் கவர்ந்து நோக்கியவர் இல்லை. தன் பாடல்களைக் குறித்த எந்தப் பெருமிதமோ இடம் கோருதலோ எதுவுமே இல்லாதவர் புலவர். உச்ச நடிகர்களான எம்ஜி.ஆர், சிவாஜி, பின்வந்த காலத்தின் பெரு நாயகர்களான ரஜினி, கமல் அதன் பின்னரும் மோகன் தொடங்கி ராமராஜன், ராஜ்கிரண் எனப் பலருக்கும் பாட்டெழுதியவர் புலவர்.
தேவமல்லிகைப் பூவே பூவே (நடிகன்), அடுக்கு மல்லி எடுத்து வந்து (ஆவாரம் பூ), பூவிழி வாசலில் யாரடி வந்தது (தீபம்), அந்தப்புரத்தில் ஒரு மகராணி (தீபம்), அதோ மேக ஊர்வலம் (ஈரமான ரோஜாவே), கண்மணியே பேசு (காக்கிச் சட்டை), தாழம்பூவே வாசம் வீசு (கை கொடுக்கும் கை), விழியிலே மணி விழியில் மௌன மொழி (நூறாவது நாள்), உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ பச்சைக்கிளி (ரோசாப்பூ ரவிக்கைக்காரி), கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன (மனிதனின் மறுபக்கம்), உணர்ந்தேன் நான் புடிக்கும் மாப்பிள்ளை தான் (முந்தானை முடிச்சு), ஓ வசந்த ராஜா (நீங்கள் கேட்டவை), சைலன்ஸ் காதல் செய்யும் நேரம் இது (பணக்காரன்), புஞ்சை உண்டு நஞ்சை உண்டு (உன்னால் முடியும் தம்பி), சாமிகிட்ட சொல்லி வச்சு (ஆவாரம் பூ), வீணைக்கு வீணை குஞ்சு (எல்லாமே என் ராசாதான்), அடி வான்மதி என் பார்வதி (சிவா), இரு விழியின் வழியே நீயா வந்து போனது (சிவா), ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ (தங்கமகன்), அந்தி மழை மேகம் (நாயகன்), நான் சிரித்தால் தீபாவளி (நாயகன்), நீ ஒரு காதல் சங்கீதம் (நாயகன்), சங்கத்தில் பாடாத கவிதை (ஆட்டோ ராஜா), எந்தன் உயிரின் நிழலே (மிஸ்டர் பாரத்), மானே மரகதமே (எங்க தம்பி), ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம் (காசி), புறாக்களே புறாக்களே (காதல் பரிசு), வெள்ளை மனம் உள்ள மச்சான் (சின்ன வீடு), தென்றல் நீ தென்றல் நீ (தந்துவிட்டேன் என்னை), இரு கண்கள் போதாது (தர்மா), இது மானோடு மயிலாடும் காடு (எங்க தம்பி), உடல் தழுவத் தழுவ (கண்மணி), என் தேவ தேவியே (கண்மணி), முத்தம்மா முத்து முத்து (தந்துவிட்டேன் என்னை), வெட்டுக்கிளி வெட்டி வந்த (பிரியங்கா), ஊரடங்கும் சாமத்திலே (புதுப்பட்டி பொன்னுத்தாயி), ஆராரோ பாட்டு பாட (பொண்டாட்டி தேவை), மழை வருது மழை வருது குடை கொண்டுவா (ராஜா கைய வச்சா), கல்யாணத் தேன் நிலா (மௌனம் சம்மதம்) எனப் பல பாடல்கள் இளையராஜா இசையில் புலவரின் பேர் சொல்லி நாளும் காற்றை நிறைக்கிற அமுதத் துளிகள்.
மு.மேத்தா
மு.மேத்தா எழுத்துலகில் மிகுந்த புகழைப் பெற்ற கவிஞர். இவரது “கண்ணீர்ப்பூக்கள் ஊர்வலம்” போன்ற நூல்கள் அடைந்த பிரபலம் மகத்தானது. இளையராஜா இசையில் மு.மேத்தா எழுதிய பல பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. அதிக எண்ணிக்கையிலான பாடல்களை மேத்தா எழுதவில்லை. மெட்டுக்குப் பாட்டெழுதுவதில் அவருடைய மனம் நாட்டம் கொண்டிருக்குமேயானால் ராஜா உட்பட பலரது இசையில் பலநூறு பாடல்களை அவரால் எழுதியிருக்க முடியும்.
பாடல் மகேந்திரா என்றே அழைக்கும் வண்ணம் அழகான பல பாட்டுகளை வடித்தெடுத்த சிற்பி பாலுமகேந்திரா. அவருக்கும் இளையராஜாவுக்கும் இடையிலான பந்தம் திரை தாண்டி உயிர்தொட்ட உன்னதம். அவருக்காக இவர் இசைத்தளித்த பல அற்புதமான பாடல்கள் காற்றலையைக் கட்டியாளும் ராஜ சங்கீத இரசவாதங்கள். அவற்றில் தலையாய பாடல் ரெட்டை வால் குருவி படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையில் கே.ஜே.ஏசுதாஸ் பாடிய தனியாவர்த்தனம் “ராஜ ராஜ சோழன் நான்.”
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே
பொன் மேனி கேளாய் ராணி
கற்பூர பொம்மை ஒன்று (கேளடி கண்மணி), பெண்மானே சங்கீதம் பாடி வா (நான் சிகப்பு மனிதன்), வீட்டில் ரோஜா பூ பூத்ததோ (இதயக் கோயில்), பாடு நிலாவே தேன் கவிதை (உதயகீதம்), வா வா வா கண்ணா வா (வேலைக்காரன்), என் மன வானில் சிறகை விரிக்கும் (காசி), நிக்கட்டுமா போகட்டுமா (பெரிய வீட்டுப் பண்ணைக்காரன்), மயில் போல பொண்ணு ஒன்னு (பாரதி), எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது (இசை பாடும் தென்றல்), மனதில் ஒரே ஒரு பூ பூத்தது (என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்), நான் காணும் உலகங்கள் (காசி), ஒரு உறவு அழைக்குது (கிருஷ்ணன் வந்தான்) ஆகியவை அவர் எழுதிய பாடல்களுள் சில.
தென்றல் வரும் தெரு என்கிற படத்தை இளையராஜா இசையில் தயாரித்தார் மு மேத்தா. ஒரு ஊர்ல, வேலைக்காரன், கிடா பூசாரி மகுடி போன்ற படங்களில் மேத்தா எல்லாப் பாடல்களையும் எழுதினார். தேகம் சிறகடிக்கும் (நானே ராஜா நானே மந்திரி), மலரே மலரே உல்லாசம் (உன் கண்ணில் நீர் வழிந்தால்), ஷாக் அடிக்கும் பூவே (தொடரும்), ஆனந்தம் பொங்கிட பொங்கிட (சிறைப்பறவை) போன்ற பாடல்களை இசைஞானி இசையில் மு.மேத்தா எழுதினார்.
பழநிபாரதி
தொண்ணூறுகளில் எழுதவந்த பழநிபாரதி நெடிய காலம் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்த அனுபவம் மிகுந்தவர். கவிதை பல எழுதிய கவிஞர். இளையராஜாவின் இசையில் இதுவரை இவர் 50 படங்களில் 120 பாடல்கள் வரை எழுதியிருக்கக்கூடும். காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, ஃப்ரெண்ட்ஸ், உன் சமையலறையில் உட்பட 8 படங்களில் முழுப் பாடல்களையும் எழுதியுள்ளார். “என்னைத் தாலாட்ட வருவாளா” தமிழ்த் திரைப்பா சரித்திரத்தில் நாளையும் எந்நாளும் ஒலிக்கப் போகும் அழியாச் சுடரொளி. எளிமையும் சொல்ல வந்ததை உறுதிபடச் சொல்வதும் பழநிபாரதியின் பலங்கள். மெட்டுக்குள் தன்னை அழகாக அமர்த்திக்கொள்வதில் சமர்த்துப் பாடல்களை எழுதுகிற வசியம் வசப்பட்டவர் பழநிபாரதி. “என்ன சொல்லிப் பாடுவதோ” என்ற என் மன வானில் பாடல் இவர் பேர் சொல்லும். “புண்ணியம் தேடி காசிக்குப் போவார் இன்று நம் நாட்டினிலே” அதிகம் ஒலித்த மற்றொன்று. பிதாமகன் படத்தில் “இளங்காத்து வீசுதே” என்ற பாடல் இளையராஜா இசையில் இந்த நூற்றாண்டின் சிறந்த ஏகாந்தப் பாமாலைகளில் ஒன்று.
“தோள் மேல தோள் மேல பூமாலை பூமாலை” என்ற பூமணி படப்பாடலின் சரணமொன்று இப்படி முடியும்.
பெண்: நான் இருந்தேன் வானிலே மேகமாய்
ஏன் விழுந்தேன் பூமியில் வேகமாய்ஆண்: வீழ்ந்ததும் நல்லதே தாகமாய் உள்ளதே
அறிவுமதி
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிவுமதி ஒரு கவிஞர். தங்கத் தமிழ், மழைப் பேச்சு, நட்புக் காலம் என இவரது எழுத்துகள் மிகுந்த கவனம் பெற்றவை. அதிக எண்ணிக்கையில் எழுதாத போதிலும் ஆழமான பாடல்களை உருக்கொடுத்தவர் அறிவுமதி. சிறைச்சாலை படத்தின் அனைத்துப் பாடல்களையும் அறிவுமதி எழுதினார். முத்தமிழே முத்தமிழே (ராமன் அப்துல்லா), மாலை என் வேதனை கூட்டுதடி (சேது), எங்கே செல்லும் இந்தப் பாதை (சேது), தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் (தேவதை), கண்மணிக்கு வாழ்த்துப் பாடும் (அண்ணன்) போன்ற பாடல்கள் ராஜாவின் இசையில் அறிவுமதி எழுதிப் பெருவலம் வந்த பாடல்கள். சிறைச்சாலை படத்துக்காக “இது தாய் பிறந்த தேசம்” பாடலில் அறிவுமதி எழுதிய கீழ்க்காணும் வரிகள் திரைத்தமிழ் என்பதைத் தாண்டிய திருத்தமிழாக விளங்குவது அதன் சிறப்பு. தமிழைத் தன் உயிரிலிருந்து எழுத வல்லவர் அறிவுமதி.
வீரத்தை குண்டுகள் துளைக்காது
வீரனை சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது
இழந்த உயிர்களோ கணக்கில்லை
இருமிச் சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று
வாசன்
கிழக்கும் மேற்கும் படத்தில் இளையராஜா தன் குரலில் பாடிய “என்னோட உலகம் வேறு உன்னோட உலகம் வேறு” பாடலை எழுதியவர் வாசன். மிக அந்தரங்கமான குரலில் இந்தப் பாடலைப் பாடினார் இளையராஜா. பல்லவிக்குள் செல்வதற்கு முன்பாக இடம்பெறுகிற முன் குரல் அத்தனை வசீகரிக்கும். பாடலின் இணைப்பிசையாகட்டும், தொடர்பிசைச் சரளிகளாகட்டும் அத்தனை பாந்தமாகத் தென்றலாய்த் தூறும். அந்தப் பாடலை
மனம் கந்தல் துணியடியோ…
கண்ணீர் உதிர் காலம்
இது காதல் கலி காலம்
என முடிப்பார். நிலவே முகம் காட்டு படத்தில் “தென்றலைக் கண்டுகொள்ள மானே” போன்ற குறிப்பிடத் தகுந்த பாடல்களை அவர் இசையில் எழுதினார். இளம் வயதிலேயே திடீரென்று மரணம் எய்தினார். வாசன் புகழைக் காலமெல்லாம் பெருங்குரலில் மொழிந்தபடி இளையராஜாவால் மட்டுமே செய்ய முடிந்த சாகசமாய் இந்தப் பாடல் காற்றில் நிலைக்கிறது.
நா.முத்துக்குமார்
தேசிய விருது பெற்ற முத்துக்குமாரும் வாசன் போலவே இளம் வயதில் மரித்த இன்னொரு கவிஞர். “சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக” என்பது உட்பட இளையராஜா இசையமைத்த நீதானே என் பொன் வசந்தம், தோனி ஆகிய படங்களில் எல்லாப் பாடல்களையுமே எழுதினார் நா.முத்துக்குமார். பிதாமகன், அது ஒரு கனாக்காலம், நந்தலாலா, மேகா, நாடி துடிக்குதடி போன்ற படங்களில் ராஜா இசையில் பாட்டுகள் எழுதினார். “எனக்குப் பிடித்த பாடல்” என்ற ஜூலி கணபதி படப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஷ்ரேயா கோஷல் பாடிய தமிழ்ப் பாடல்களில் தலைசிறந்த பாடல். இதையே மதுபாலகிருஷ்ணன் தன் மிளகுத் தமிழ்க்குரலால் வருடியிருப்பார்.
எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியைஎனது மனதும் அறியுமே
என்னைப் பிடித்த நிலவுஅது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையிலே
காதல் பூக்கள் உதிருமா
கபிலன்
இளையராஜா இசையில் மிகச்சமீபத்தில் வெளியான படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கத்தில் இதில் இடம்பெற்ற
உன்ன நெனச்சு நெனச்சு
உருகிப் போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
யாரோ அவளோஎனைத் தீண்டும் காற்றின் விரலோ
யாரோ அவளோதாலாட்டும் தாயின் குரலோ
என்ற பாடல் இளையராஜா இசையில் கபிலன் எழுதியது. உலகமே முடங்கித் தவித்த நுண்கிருமிப் பெருந்தொற்று நோய்மைக் காலத்தில் அதிகம் கேட்கப்பட்ட தமிழ்ப் பாடல்களில் ஒன்றாக கோடிக்கணக்கானவர்களால் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கிற இந்தக் கணத்தின் பாடலாக இதனைச் சொல்ல முடிகிறது.
பாடல் புனைவதைத் தொழிலாய், கலையாய், தத்தம் வாழ்வின் உன்னதமாய்க் கொண்டு வலம்வருகிற எந்தவொரு கவிஞருக்கும் இளையராஜா இசையில் ஒரு பாடலையாவது எழுதிவிட வேண்டும் என்கிற ஆவல் இருப்பதென்பது ஒரு பெருங்கனவுக்கு நிகரானது. பாடல் என்பது இசையுடன் குரலும் வரிகளும் வந்து தோய்கிற சேர்மானச் சாலை. இன்றியமையாத ஒன்றின் உட்பிரிவுகளாகவே புனைவையும் குரலையும் இசைகொண்டு எடுத்தாள்கிறது பாடலெனும் பெருங்கலை. நாற்பத்து ஏழு வருடங்களாகத் தமிழ்த்திரை இசையின் தகர்க்க முடியாத முகமாக விளங்கி வருகிற ஒரு பெயர் இளையராஜா. அவருடன் இணைந்து புனைந்த ராஜாவின் கவிஞர்கள் ஒவ்வொருவருக்குமான பெருவலப் பாதைகளாகவே அத்தகைய பாடல்கள் விளங்குகின்றன.
-தொடரும்.
*
முந்தைய பகுதிகள்:
1. இளையராஜாவின் முதல் ஐந்து ஆண்டுகள்
3. வழித்தடங்களும் வரைபடங்களும்
4. மண்ணில் விரிஞ்ஞ நிலா – இளையராஜாவின் மலையாளப் படங்கள்