எழுத்தாளர் சிமாமந்த ங்கோஸி அடிச்சே மீதான சர்ச்சை

by எஸ்.கயல்
0 comment

நைஜீரிய நாவலாசிரியர் சிமாமந்த ங்கோஸி அடிச்சே (Chimamanda Ngozi Adichie), இணையத்தில் வெளியிட்ட கட்டுரையில் தன் மாணவர் ஒருவரின் மீதான தனிப்பட்ட பகையைப் பொதுவெளியில் பகிர்ந்ததால் சர்ச்சை எழுந்திருக்கிறது. சிமாமந்த ங்கோஸி அடிச்சே கடந்த பத்து வருடங்களுக்கு மேலாகத் தான் நடத்தும் படைப்பாற்றல் பயிலரங்குகள் மூலமாகப் பல ஆப்பிரிக்க எழுத்தாளர்களுக்குப் பயிற்சியாளராகவும் நெறிப்படுத்துபவராகவும் இருக்கிறார். 

நைஜீரியாவில் உள்ள லாகோ, அவ்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்தப் பயிலரங்குகளில் இருநூறுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டனர். “Stay with me” எனும் தன் முதல் நாவலுக்காக பைலே விருதுக்குப் (Baileys Prize) பரிந்துரைக்கப்பட்ட அயோபமி அடபயோ, (Ayobami Adebayo) இலக்கியத்திற்காக வழங்கப்படும் எடிசலட் விருதை (Etisalat Prize) வென்ற முதல் நைஜீரிய எழுத்தாளரான ஜௌவர் ஹைல் (Jowhor Ile) போன்ற வளரும் நட்சத்திரங்களும் இதில் பங்கேற்றனர். 

சிமாமந்த நாகொசி அடிச்சே 

ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது மாணவர்கள் மட்டுமே கொண்ட, ஒருவருக்கொருவர் நெருங்கிப் பழகும் வாய்ப்புடைய பயிலரங்கு அது. தங்கள் படைப்புலகை வரையறுக்கக்கூடிய புதிய நூல் எழுதுவதற்கான ஒப்பந்தங்கள், விருதுகள், கலைஞர்களுக்கு அளிக்கப்படும் உறைவிடங்கள் ஆகியவற்றுக்கு வழிகாட்டுவதாகவும் சில பட்டதாரிகளுக்கு அது இருந்தது.

“குறுகிய கால அளவே அவை நடக்கும் என்றாலும்கூட, அந்தச் சில நாட்களுக்கு நாங்கள் அங்கு ஒரு குடும்பமாக இருப்போம்” என்று இந்த நிகழ்ச்சிகள் குறித்து அடிச்சே முன்பு கூறியிருக்கிறார். ஆனால் அடிச்சேக்கும் அவருடைய மிக முக்கியமான மாணவர்களில் ஒருவரான எழுத்தாளர் அக்வேகி எமிசிக்கும் (Akwaeke Emezi) இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இப்போது பொதுவெளிக்கு வந்துள்ளது.

கடந்த செவ்வாய் (14 ஜூன், 2021) அன்று அடிச்சே தன் வலைத்தளத்தில் வெளியிட்ட மிக நீளமான கட்டுரையில் 2017ஆம் ஆண்டு தான் அளித்த நேர்காணல் ஒன்றுக்குப் பிறகு தன் முன்னாள் மாணவி தன்னைப் பொதுவெளியில் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த நேர்காணலில், “பெண்களும் மூன்றாம் பாலினத்தவர்களும் சந்திக்கும் பிரச்சினைகள் ஒரே விதமானவை எனப் பேசப்படுவது சரியில்லை என்று நான் கருதுகிறேன்” என்று அடிச்சே குறிப்பிட்டிருந்தார். “இளம் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர், சமூக ஊடகங்களைத் தகவல் பரிமாறவும் புரிதலைக் கோரும் இடமாகவும் பயன்படுத்தாமல் கருத்தியல் மோதல்களைப் பேரொலியுடன் நிகழ்த்தும் இடமாக எப்படிப் பயன்படுத்துகின்றனர்” என்று அடிச்சே தன் தனிப்பட்ட பகையை முன்னிறுத்தி எச்சரிக்கை விடுத்தார்.

“சமூக வலைத்தளங்களில் உலவும் பலர் மூச்சுத் திணறடிக்கும் போலி பக்தி உடையவர்கள். ஆனால் இரக்கமற்றவர்கள். கருணை குறித்த தங்கள் எண்ணங்களை ட்விட்டரில் ஆரவாரத்துடன் மழை போல் பொழியும் இவர்கள் உண்மையில் கருணையுடன் நடந்துகொள்ள இயலாதவர்கள். இத்தகையவர்களின் ஊடக வாழ்க்கை உணர்வு வறட்சி மீதான குறிப்பிட்ட வகை ஆய்வுக்கு உதவும். நட்பும், அதன் எதிர்பார்ப்புகளான விசுவாசம், கருணை, ஆதரவு ஆகிய யாவும் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. இலக்கியத்தை- மனிதத்தின் குழப்பமான கதைகளை நேசிப்பதாக உரிமை கோரும் இவர்களும்கூட, எது நடப்பில் உள்ள கருத்தியலோ அதன் மீதே பித்துப் பிடித்தது போல் நாட்டம் கொள்கிறார்கள்” என்று அதில் எழுதியிருந்தார்.

எமிசியையோ அல்லது தன் மாணவர்கள் யாருடைய பெயரையோ அடிச்சே இதில் குறிப்பிடாத போதும் எமிசி இன்ஸ்டாகிராமில் இதற்கு விரைவிலேயே பதில் சொன்னார். தன்னுடைய அனுமதியைக் கேட்காமல் தங்களுக்கிடையேயான மின்னஞ்சல்களை வெளியிட்டதாகவும், “மூன்றாம் பாலினத்தவர் மீது நைஜீரிய மக்களின் பெரும் வெறுப்பைத் தூண்டி, அதற்குத் தன்னை இலக்காக்கும் முறையில்” அந்தக் கட்டுரை வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் எமிசி அதில் கூறியிருந்தார். மூன்றாம் பாலினத்தவரைக் குறிப்பிடும்போது பாலின பேதம் காட்டாது ‘அவர்கள் / அவர்களை’ என்று பெயர்ச்சொல்லாக அடையாளம் காட்டி எழுதிய எமிசி, தன் அடுத்த பதிவில், ‘Americanah’, ‘Half of a yellow Sun’ ஆகிய நூல்களின் நாவலாசிரியரை மூன்றாம் பாலினத்தவருக்கு ஆதரவாகப் போராடுபவராக முன்னிறுத்தியமைக்காக பத்திரிகைத் துறையை விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு முந்தைய வாரம் டியர் செந்துரன் (Dear Senthuran) எனும் தன் நினைவுக் குறிப்புகளை வெளியிட்ட எமிசி, “அடிச்சேயின் ஊடக சாம்ராஜ்யம் பத்திரிகைத் துறை மூலமாகவே உருவானது. இத்துறையைச் சார்ந்த நீங்கள் அவருடைய கருத்துகள், மற்ற‌ எழுத்தாளர்களுக்கும் மூன்றாம் பாலினத்தவருக்கும் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து எதுவுமே குறிப்பிடாமல், அவருடைய படைப்புகளுக்குத் தொடர்ந்து மேடை அமைத்துத் தந்து புகழ்கிறீர்கள்” என்று எழுதினார். விளம்பரப் பிரியராக இருந்தும் அடிச்சே இதைப் பற்றி எந்தக் கருத்தும் கூறவில்லை. எமிசியிடம் இது குறித்துக் கேட்கப்பட்டபோது அவர் அதற்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

சமகால ஆப்பிரிக்க இலக்கியத்தை சர்வதேச வாசகத் தளத்துக்கு விரிவுபடுத்திய படைப்புகளைத் தந்த புகழ்பெற்ற நைஜீரிய எழுத்தாளர்களுக்கு இடையேயான இந்த மோதல், ட்விட்டரும் இன்னும்  சில சமூக ஊடகங்களும் நேர்மையான கருத்துப் பரிமாற்றங்களுக்கான தளமாக இல்லாமல் போய் நச்சுத்தன்மை கொண்டதாக, மற்றவர்களின் கவன ஈர்ப்புக்கும் மெய்நிகர் சமிக்ஞைகளுக்குமான இடமாக மாறக்கூடிய நிலையில் உள்ளனவோ என்கிற பெரும் விவாதமொன்றை நடத்த வேண்டிய அவசியத்தை எதிரொலிக்கிறது.

அக்வேகி எமிசி

அடிச்சே, “நற்குணங்களுடன் இருப்பது பெரிய விஷயம் இல்லை. நற்குணங்களுடன் இருப்பது போல் தோற்றமளிப்பதுதான் முக்கியம். நாம் மனிதப் பிறவிகளாக இருந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது. நாம் இப்போது தேவதைகளாகிவிட்டோம். தன்னுடைய உருவத்தைப் பெரிதாகக் காட்டிக்கொள்வதற்காக மற்ற அனைவரையும் இடித்துப் புறந்தள்ளும் தேவதைகள். கடவுள் நம்மைக் காக்கட்டும். இது ஆபாசமாக இருக்கிறது” என்று எழுதியிருந்தார். அடிச்சே இதைப் பதிவிட்ட சிறிது நேரத்தில் சமூக ஊடகம் வெடித்துக் கிளம்பியது. பல்லாயிரக்கணக்கான மறுமொழிகளுடன் பல மணி நேரங்களுக்கு அவருடைய பெயர் ட்விட்டரில் பரபரப்புடன் அதிகம் பேசப்பட்ட தலைப்பாக இருந்தது. பாலினம் குறித்த அவருடைய கருத்துகளை சிலர் வெட்டிக் கூறுபோடுவது போல விமர்சித்தனர். மற்ற சிலர் சமூக ஊடகங்களைச் சிலர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொண்டனர்.

அடிச்சேயின் கருத்துகளோடு, அவருடைய அந்தக் கருத்தை விமர்சித்தவர்களின் கருத்துகளும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையே என்று சிலர் வாதிட்டனர். “நண்பர்கள் என தான் நினைத்திருந்த நபர்கள் தன்னைப் பயன்படுத்திக்கொண்டதற்காக, ஆழமான வேதனைக்குத் தன்னை உட்படுத்தியதற்காக, அவர்கள் மீது கடுமையான கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தும் உரிமை சிமாமந்தவுக்கு இருக்கிறது. 

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான உஜு அண்யா, “கருணையுடன் நடந்துகொள்வதாகப் பாவனை காட்டியபடி தங்களைக் குறிபார்க்கும் அவருடைய கீழ்மையான அரசியலுக்கு எதிராகக் கடுங்கோபம் கொள்ளவும் போராடவும் மூன்றாம் பாலினத்தவருக்கும் உரிமை இருக்கிறது” என்று ட்விட்டரில் பதிவிட்டார். துவக்கத்தில் அடிச்சேக்கும் எமிசிக்கும் இடையேயான உறவு ஒருவர் மீது மற்றவர் கொண்டிருந்த பரஸ்பர மதிப்பினால் உருவானதாகவே தோற்றம் காட்டியது. எமிசி எழுதிய சில கதைகளில் திருத்தம் செய்தும், பிரசுரித்தும், மிகச் சிறப்பாக உள்ளதாக முன்னுரை எழுதியும் எமிசிக்கு உதவி புரிந்ததாக அடிச்சே தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். “இந்த எழுத்தாளருக்கு நான் மிக உதவிகரமாக இருந்தேன். நான் அவ்வாறு இருந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. யாரும் என்னை உதவிசெய்யச் சொல்லிக் கேட்கவில்லை. பல்வேறு வகையான ஆப்பிரிக்கக் கதைகள் நமக்குத் தேவை என்பதாலேயே நான் அந்த எழுத்தாளருக்கு உதவினேன்” என்று அதச்சி அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

2017ஆம் ஆண்டு அடிச்சே தந்த நேர்காணலுக்குப் பிறகு நட்பில் விலகல் துவங்கியது. அடிச்சேயின் கருத்துகள் மூன்றாம் பாலினத்தவரின் வாழ்க்கைக்கும் உரிமைகளுக்கும் ஆபத்து விளைவிப்பதாக சமூக ஊடகங்கள் வழியே எமிசியை எதிர்வினையாற்ற வைத்தது. பிறகு எமிசியின் முதல் நாவலான ஃபிரஷ்வாட்டரின் பிரதி அடிச்சேக்குக் கிடைத்தபோது அதில் எமிசியின் வாழ்க்கைக் குறிப்பில் தன் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தைப் படித்து வியப்படைந்த அடிச்சே அதனை நீக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஹாரி பாட்டர் கதாசிரியரான ஜே.கே.ரௌலிங்க் எழுதிய “செக்ஸ் அண்ட் ஜெண்டர்” கட்டுரை சென்ற வருடம் வெளியானது. அடிச்சே அதற்கு ஆதரவு தெரிவித்த பிறகு இந்த மோதல் வலுவடைந்தது. ஹாரி பாட்டரின் கட்டுரையை “முற்றிலும் ஏற்புடையது” என அடிச்சே குறிப்பிடவும், அடிச்சேயை விமர்சனம் செய்தவர்கள் அவரது இந்தக் குறிப்பை மூன்றாம் பாலினத்தவரின் மீதான வெறுப்பு எனத் தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக்கொண்டனர். “இந்த விஷயங்களை அவர் கூறியபோதும், பிறகு அதனை இரு மடங்காக அதிகரிக்கும் வகையில், அவர் மீது விமர்சனங்கள் வைத்த என்னைப் போன்றவர்களைக் கிண்டல் செய்தபோதும், (அவர் அந்த எதிர்வினையை “மூன்றாம் பாலினத்தவரின் கூச்சல்’ என்று அழைத்தார்) நான் மிகுந்த துயரமும் ஏமாற்றமும் அடைந்தேன்” என்று தன் முன்னாள் ஆசிரியர் குறித்து எமிசி ஒரு நீண்ட திரியை ட்விட்டரில் பதிவிட்டார்.

இன்ஸ்டாகிராமில் எமிசியின் குற்றச்சாட்டு

தன் தனிப்பட்ட பகை குறித்து முதல்முறையாக இக்கட்டுரை வழியே பொதுவெளியில் பேசிய அடிச்சே, ஒழுக்கம், நற்குணங்கள் ஆகியவற்றைச் சமூகக் கலாச்சாரப் பிரச்சினைகளாகவும், தன்னிச்சையான தாக்குதல்களாகவும் உருமாற்றி, மாறுபட்ட கருத்துடையவர்கள் மீதான தன்னுடைய தாக்குதலை அதில் கட்டமைத்தார். அத்துடன் மாறுபட்ட கருத்துகள் கொண்டவர்களின் இத்தகைய நிலைப்பாடுகள் தடங்கலற்ற விவாதங்கள், கலந்துரையாடல்களின் மீது ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை அவர் அதில் விளக்கியிருந்தார்.

“சிந்தனை செய்யவும், கற்றுக்கொள்ளவும், வளர்ச்சி அடையவும் தங்களுக்குத் தரப்படும் வாய்ப்புகளை தாங்களே மறுத்து விலகும் அளவுக்கு, சமூக ஊடகங்களில் இருக்கும் ஒரு தலைமுறையைச் சேர்ந்த இளம் பருவத்தினர், அங்கு நிலவும் தவறான கருத்துகளால் பெரும் அச்சத்தில் உள்ளனர்” என்று எமிசி அதில் குறிப்பிட்டிருந்தார்.

*

ஆசிரியர் குறிப்பு: நைஜீரிய எழுத்தாளரான சிமாமந்த நாகொசி அடிச்சே, சமகால ஆப்பிரிக்க எழுத்தாளர்களில் முக்கிய இடம் வகிக்கிறார். பர்பில் ஹைபிஸ்கஸ் (2003), ஹாஃப் ஆஃப் எ எல்லோ சன் (2006), தி திங் அரௌண்ட் யுவர் நெக் (2009), அமெரிக்கானா (2013), வீ ஷுட் ஆல் பி ஃபெமினிஸ்ட்ஸ் (2014) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். 2008ஆம் ஆண்டுக்கான மகார்த்தஸ் ஜீனியஸ் கிராண்ட் இவருக்கு வழங்கப்பட்டது. இண்டர்நேஷனல் நொநினோ விருதினை 2009ஆம் ஆண்டு பெற்றார்.

*

ஆங்கில மூலம்: Chimamanda Ngozi Adichie Sparks Controversy in Online Essay, Alexandra Alter, Published on June 16, 2021.