அபத்தமானவனின் கனவு – ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி

0 comment

1

நான் அபத்தமானவன். இப்போது என்னைப் பைத்தியம் என்றும் அவர்கள் அழைத்து வருகிறார்கள். முன்பிருந்ததைப் போலவே அவர்கள் கண்களுக்கு நான் தெரிந்துகொண்டிருந்தால் பதவி உயர்வின்மை என்றாகிவிடுகிறது அல்லவா? என்னைப் பற்றிப் பேசிக் கேலிசெய்து சிரிக்கையிலும்கூட, எல்லோரும் என்னை அன்புக்குரியவனாக வைத்திருக்கிறார்கள்! சொல்லப்போனால் என்னை நகைப்புப் பொருளாக்கும் போதுதான் என் மீது அதீத அன்பு காட்டுகிறார்கள். என்னாலும் அவர்களோடு சேர்ந்து சிரித்துக்கொள்ள முடிகிறது. அதற்கு என்னை நானே கேலிசெய்து கொள்வதாகப் பொருளில்லை. இப்போதெல்லாம் அது குறித்து நான் ஆத்திரம் அடைவதில்லை. உண்மையான துயரம் யாதெனில் அவர்கள் சத்தியத்தை அறியாதவர்கள். நான் அதை அறிந்தவன். ஐயகோ! சத்தியத்தை அறிந்த ஒற்றை மனிதனாக இருப்பது எத்துனை கடினமானது! ஆனால் அவர்கள் அதையெல்லாம் புரிந்துகொள்ளப் போவதில்லை, நிச்சயம் புரிந்துகொள்ளப் போவதில்லை. 

எல்லோருக்கும் நான் அபத்தமானவனாகத் தோன்றுவது பற்றி முன்னொரு காலத்தில் கடுமையாக வருந்தினேன். தோன்றுவது பற்றிகூட அல்ல, அப்படி இருப்பது பற்றி. நான் எப்போதும் அபத்தமானவனாகவே இருந்திருக்கிறேன், ஒருவேளை பிறந்த கணம் முதலே! அநேகமாக என் ஏழு வயதில் நான் ஒரு அபத்தமானவன் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. பிறகு நான் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தபோது எவ்வளவுக்கு எவ்வளவு கற்றேனோ அவ்வளவுக்கு அவ்வளவு என் அபத்தங்களை இன்னும் தெளிவாகப் புரிந்துகொண்டேன். இவ்வாறு நான் கல்லூரியில் படித்த அத்தனை அறிவியல் பாடங்களும், நான் அவற்றில் ஆழ்ந்து செல்லச் செல்ல, எனது அபத்தத்தைச் சுட்டிக்காட்டி நிரூபணம் செய்பவையாகவே இருந்தன. பாடங்களைப் போலவே வாழ்க்கையும் இருந்தது. ஆண்டுகள் செல்லச் செல்ல என் அபத்தம் பற்றிய தன்னறிதல் எல்லாத் திசைகளிலும் வளர்ந்து வலுப்பெற்றது. எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரித்தனர். ஆனால் இந்த உலகிலேயே என் அபத்தத்தை என்னைவிடத் தெளிவாகப் புரிந்துகொண்ட வேறொருவர் எவரும் இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அந்த எண்ணம் எனக்கு ஆத்திரமூட்டியது. ஆனால் அதற்கும் அடியேனே காரணம்.

இந்த இரகசியத்தை யாரிடமும் நான் இதுவரை சொன்னதில்லை என்பதில் நான் பெருமிதம் கொண்டிருந்தேன். காலப்போக்கில் இந்தப் பெருமித உணர்வு வளர்ந்து பெருகியது. யாரிடமேனும் நான் எத்தனை அபத்தமானவன் என்பதைச் சொல்கிறேன் எனில் அன்று மாலையே என் மூளை வெடித்துச் சிதறிவிடக்கூடும் என்று நம்பியிருந்தேன். ஐயகோ! என் பள்ளிக் காலங்களில் சக மாணவர்களிடம் இந்த இரகசியத்தைச் சொல்லிவிடப் போகிறேன் என்று நினைத்து எப்படியெல்லாம் தவித்திருக்கிறேன்! வளர்ந்து ஆளான பிறகு ஏதோ ஒரு அறியமுடியாத காரணத்தினால் நான் பக்குவமடைந்தேன். எனினும் ஒவ்வொரு ஆண்டும் என் அபத்த குணம் பற்றிய அறிவு கூடியபடியே இருந்தது. நான் இப்போதும் அறியமுடியாதது என்று சொல்வதற்குக் காரணம் இன்றுவரை அது ஏன் என்று என்னால் சொல்ல முடியவில்லை என்பதே. என் ஆன்மாவில் வளர்ந்துவந்த கொடூரமான துயர் அதற்கு அடிப்படையாக இருந்திருக்கலாம். வேறெதையும்விட இந்தக் கவலையே அத்தனை விளைவுகளுக்கும் ஆதாரமாக இருந்திருக்கும். மெல்ல ‘இந்த உலகம் எக்கேடு கெட்டால் என்ன?’ என்ற கவலையற்ற மனநிலை ஒருவிதமான உறுதிப்பாட்டை அடைந்தது. வெகுகாலமாக இந்த அறிகுறிகள் என்னிடம் இருந்தபோதும் முற்றான மெய்மையறிவு சென்ற ஆண்டு ஏற்பட்டது. சடுதியில் இந்த உலகின் இருப்போ அதன் இன்மையோ இரண்டும் ஒன்றுதான் என்று உணரத் தொடங்கினேன். என் இருப்பின் வழியாக, எதுவுமே இங்கு இருக்கவில்லை என்பதை உணரத் தொடங்கினேன். இறந்த காலத்தில் பல விசயங்கள் இருந்ததாக தொடக்கத்தில் கற்பிதம் செய்தேன். பிறகு இறந்த காலத்தில் எதுவுமே இருந்திருக்கவில்லை என்று ஊகிக்க முடிந்தது. ஏதோவொரு அறிய முடியாத நிமித்தத்தால் இறந்த காலத்தில் ஏதோ இருந்ததாக மாயை தோன்றுகிறது, அவ்வளவுதான். சிறிது சிறிதாக வருங்காலத்திலும் ஒன்றுமிருக்கப் போவதில்லை என்பதையும் ஊகித்தேன். அதன் பிறகே மக்கள் மீது சினம்கொள்வதைத் துறந்துவிட்டேன். ஏறத்தாழ அவர்களை அவதானிப்பதையும் நிறுத்தினேன். 

சிந்தனையில் இலயித்திருப்பதில் எந்தப் பொருளும் இல்லை. நான் சிந்திக்க என்ன இருக்கிறது? இந்தக் காலகட்டத்தில் அநேகமாக சிந்திப்பதையே கைவிட்டிருந்தேன். எனக்கு எதுவும் பொருட்டில்லை. குறைந்தபட்சம் என் பிரச்சினைகளுக்கேனும் தீர்வு கண்டாயிற்று! அந்தோ! அவற்றில் ஒன்றைச் சரிசெய்ததும் எத்தனை பிரச்சினைகள் புதிதாய் முளைத்தன! நான் எதிலும் அக்கறை செலுத்தாமல் இருக்கத் தொடங்கியதும் எல்லாப் பிரச்சினைகளும் மறைந்தன. 

நான் சத்தியத்தைக் கண்டடைந்த பின்னரே அது நடந்தது. நான் சென்ற நவம்பரில், துல்லியமாகச் சொல்லப் போனால், நவம்பர் மூன்றாம் தேதி வாய்மையை அறிந்தேன். அதிலிருந்த அத்தனை கணங்களையும் நினைவில் வைத்திருக்கிறேன். அதுவொரு இருள் மாலை. மாலைகளிலேயே வன்னிருட்டு கொண்ட மாலைகளுள் ஒன்று எனலாம். பதினோரு மணியளவில் வீட்டிற்குச் செல்லும்போது இதைவிடச் செறிந்த இருள் இருக்க முடியாது என்று நான் எண்ணியது நினைவில் இருக்கிறது. மனத்தில் மட்டுமின்றி சரீரத்திலும் அந்த நினைவிருக்கிறது. நாள் முழுவதும் மழை பொழிந்தது. நளிர்ந்த, இருண்ட, அச்சுறுத்தும் மழை. அத்தோடு மானுடத்தின் மீது நான் கொண்ட துவேஷமும் இணைந்திருந்தது. பத்திலிருந்து பதினோரு மணிவரை மழை நின்றிருந்தது. ஈரக்காற்று வீசியது. அது மழையைவிட நளிர்ந்தும் ஈரமாகவும் இருந்தது. வீதியின் ஒவ்வொரு கல்லிலிருந்தும், சந்துகளில் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரையிலும், எங்கிருந்தும் புகைபோல ஏதோ எழுந்தது. சட்டென அங்கிருந்த தெரு விளக்குகள் அனைத்தையும் அமர்த்திவிட்டால் உற்சாகமின்மை சற்றே குறையும் என்று என்னுள் ஓர் எண்ணம் முகிழ்த்தது. ஆனால் ஒளியோ மிளிர்ந்து இதயத்தைப் பாரமாக்கித் துயருறுத்தியது. அன்றிரவு உணவென்று எதையும் நான் உண்டிருக்கவில்லை. ஒரு பொறியியளாளருடனும் இரண்டு நண்பர்களுடனும் மாலையைக் கழித்திருந்தேன். மெளனித்திருந்தேன். அவர்களைச் சலிப்பூட்டினேன் என்றே தோன்றியது. என்னைத் தூண்டும் விதமாக எதையோ பேசியவர்கள் திடீரென கிளர்வுற்றனர். அவர்கள் உண்மையில் எதையும் அக்கறையுடன் பேசவில்லை என்பதை என்னால் அறிய முடிந்தது. ஆர்வமுற்றதைப் போல் பாவனை மட்டுமே செய்தனர். அப்போது உடனடியாக நான் அவர்களிடம் ’நண்பர்களே’ என்றழைத்து ‘நீர் எதையுமே மனப்பூர்வமாகப் பேசவில்லை’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள் புண்படவில்லை. மாறாக என்னைப் பார்த்துச் சிரித்தனர். காரணம், அவர்களது செயல் எனக்குப் பொருட்டல்ல என்பதால் நான் கடிந்துகொள்ளும் தொனியின்றி சாதாரணமாக அதைச் சொன்னேன் என்பதுதான். அது அவர்களுக்குப் புரியவில்லை, கேளிக்கையாக எடுத்துக்கொண்டனர். 

வாயு விளக்குகளைப் பற்றிச் சிந்தித்தபடி நிமிர்ந்து வானைப் பார்த்தேன். கும்மிருட்டு. ஆயினும் அளவிடவியலாத கருப்பு ஒட்டுகளின் இடையே திட்டுத்திட்டான மேகங்களைப் பிரித்தறிய முடிந்தது. அந்தக் காரிருள் துண்டங்களில் ஒன்றில் ஒரு விண்மீன் விழியைக் கண்டேன். அதைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். ஏனெனில் அந்த விண்மீன் எனக்கு ஒரு யோசனையைத் தந்தது. அன்றிரவே தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்பே தற்கொலை செய்ய உறுதிபூண்டு, கையோடு ஒரு அற்புதமான கைத்துப்பாக்கியை வாங்கி, அன்றே அதில் தோட்டாக்களைப் பொருத்தினேன். ஆனால் இரண்டு மாதங்கள் கடந்தும் இன்று அது என் மேசை இழுப்பறையில் பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. அலட்சியமற்ற ஒரு பூரணமான நொடிக்காகக் காத்திருந்து காத்திருந்து அலட்சியம் கொண்டேன் – காரணம் அறியேன். அவ்விதமாக ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வந்து அன்றைய தினமே என்னை நான் சுட்டுக்கொள்வேன் என்ற சிந்தனையுடன் அலைவேன். பூரண நொடிக்காகவே காத்திருந்தேன். இப்போது இந்த விண்மீன் எனக்கான சிந்தனையை உறுதியாகத் தந்தது. இன்றிரவு நிச்சயமாக அது நிகழும் என்று மனத்தை நிலைநிறுத்தினேன். அந்த விண்மீன் ஏன் எனக்கு அந்த எண்ணத்தைத் தந்தது? தெரியாது. 

நான் வெறுமனே வெளியை வெறித்திருந்த போது ஒரு சிறுமி என் முழங்கையைப் பிடித்தாள். தெரு வெறிச்சோடி இருந்தது. கண்ணில் ஒருவரும் தென்படவில்லை. ஒரு வண்டிக்காரன் மட்டும் தொலைவில் தன் வண்டியில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். அந்த எட்டு வயதுச் சிறுமி தலையில் கைக்குட்டையைத் தரித்திருந்தாள். ஒரு கந்தல் துணியை மட்டும் அணிந்திருந்தாள். அது மழையில் தொப்பென நனைந்திருந்தது. ஆனால் நான் அவளது ஈரமான உடைந்த காலணிகளை உற்று அவதானித்தேன். அதை இப்போதும் என்னால் நினைவில் மீட்டெடுக்க முடியும். அவை என் விழிகளை ஈர்த்தன. அவள் வெடுக்கென என் கையை இழுத்து அழைத்தாள். அவள் கதறி அழவில்லை என்றபோதும் குளிரால் நடுக்குற்று, குழறிய மொழியில் உடைந்த சில சொற்களைச் சொல்லித் தேம்பினாள். அவள் எதையோ அஞ்சினாள். தொடர்ந்து ‘அம்மா, அம்மா!’ என்று தேம்பினாள். நான் அவளை நோக்கித் திரும்பினேன். ஒரு வார்த்தையும் பேசாமல் நடந்தேன். அவள் என்னை இழுத்துக்கொண்டு ஓடப்பார்த்தாள். அவள் குரலில் அச்சமும் விரக்தியும் கூடிய தொனி இருந்தது. எனக்குக் குழந்தைகளின் அந்த ஒலியை நன்கு தெரியும். அவள் தெளிவுற வார்த்தை பேசவில்லை என்றபோதும் அவளது அன்னை இறக்கும் தறுவாயில் இருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டேன். குறைந்தது அதற்கு நிகரான ஏதோவொரு கொடுமை அவளுக்கு நிகழ்ந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து யாரையேனும் உதவிக்கு அழைக்க ஓடி வந்திருக்கிறாள். நான் அவளோடு செல்லவில்லை, மாறாக அவளைத் துரத்த வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. முதலில் போலீஸிடம் தெரிவிக்குமாறு அவளிடம் சொன்னேன். கைகளை இறுகக் கோர்த்து, மூச்சிரைக்க என் பின்னால் அழுதபடி ஓடி வந்தாள். அவள் என்னை விடுவதாக இல்லை. அப்போது என் காலை நிலத்தில் ஓங்கி மிதித்து அவளைப் பார்த்துக் கத்தினேன். ‘ஐயா! ஐயா!’ என்று கெஞ்சியவள், திடீரென்று என்னை விட்டுவிட்டு சாலையின் குறுக்கே கண்மூடித்தனமாக ஓடினாள். அங்கே இருந்த வேறொரு பாதசாரியை நோக்கி ஓடியிருக்கிறாள் என்பது தெரிந்தது. 

ஐந்தாவது மாடியை அடைந்தேன். என் அறையின் அருகே வேறு சிலரும் தங்கியிருந்தனர். எனது சிறிய அறை எனது வறிய நிலையைக் காட்டுவதாக இருந்தது. அரைவட்ட வடிவத்தில் தட்டியடித்த சாளரம் உண்டு. அமெரிக்கத் தோலினால் மூடப்பட்டிருந்த சோஃபா இருந்தது. ஒரு நூலைத் தாங்கிய மேசை இருந்தது. இரண்டு நாற்காலிகளும் ஒரு பழமையான கைதாங்கி பொருந்திய நாற்காலியும் இருந்தது. பழமையானது, ஆனால் நல்ல வடிவில் இருந்தது. நான் கீழே அமர்ந்தேன். மெழுகுவர்த்தியை ஏற்றி சிந்தனையில் ஆழ்ந்தேன். அடுத்த அறையில் பிரிவுச் சுவரின் வழியே பார்த்தபோது கூச்சலும் கேளிக்கையும் நடந்துகொண்டிருந்தது. கடந்த மூன்று நாட்களாகவே இந்தக் களியாட்டம் நடக்கிறது. பணி ஓய்வுபெற்ற படைத்தளபதி அங்கு வசித்துவந்தார். அவரைப் பார்க்க அரை டஜன் பார்வையாளர்கள் வந்திருந்தனர். வோட்கா அருந்திக்கொண்டே பழைய சீட்டுக்கட்டுகளைக் கொண்டு ஸ்டோஸ் ஆடினர். முந்தைய இரவு ஒரு கைகலப்பு. நெடுநேரமாக இருவரிடையே மயிர்பற்றிச் சண்டை நடந்தது. விடுதி முதலாளி புகாரளிக்க விரும்பினாள், எனினும் அவள் தளபதி மீது பயங்கர பீதிகொண்டிருந்தாள். எங்கள் தளத்தில் இன்னும் ஒரேயொரு நபர் இருந்தார். படைப்பிரிவைச் சார்ந்த மெலிந்த பெண்மணி. தன் மூன்று சிறிய பிள்ளைகளுடன் பீட்டர்ஸ்பர்கைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தவளுக்கு இங்கு தங்கியது முதலேயே உடல் நலம் குன்றியது. அவளும் அவள் பிள்ளைகளும் தளபதி மீது கடும் அச்சம் கொண்டிருந்தனர். நடுங்கிக் கிடந்தனர். இரவில் குறுக்கே நடந்தபடி இருப்பார்கள். பிள்ளைகளில் இளையவளுக்குப் பயத்தால் வலிப்பு வந்தது. 

எனக்குத் தெரிந்தே இந்தத் தளபதி நெவ்ஸ்கி நெடுவீதியில் மக்களை நிறுத்திப் பிச்சை எடுத்ததுண்டு. அரசாங்கம் இனி அவரைச் சேவைக்கு எடுக்கப்போவதில்லை. ஆனால் சொல்வதற்கே விசித்திரமாக இருக்கிறது (அதனால்தான் சொல்கிறேன்). இந்த மாதம் முழுவதும் தளபதி இங்கிருந்தும் அவரது குணத்தால் எனக்கு எந்தவிதத் தொந்தரவையும் தரவில்லை. நான் தொடக்கம் முதலே அவருடன் இணக்கத்தைத் தவிர்த்துவந்தேன். அவரும் என் மீது தொடக்கம் முதலே சலிப்பில் இருந்தார். தடுப்புக்கு அந்தப் பக்கத்திலிருந்து எத்தனை பேர் எத்தனை ஒலியுடன் கத்திக் கொண்டாடினாலும் அது என் செவிகளில் விழுவதே இல்லை. அவர்களை முற்றிலும் மறந்த மோன நிலையில் இரவெல்லாம் அமர்ந்திருக்க என்னால் முடியும். பொழுது விடியும்வரை விழித்திருப்பேன். இது போல சென்ற ஆண்டு முழுவதும் கழிந்தது. என் கைதாங்கி பொருத்தப்பட்ட நாற்காலியில் இரவெல்லாம் அமர்ந்து ஒன்றும் செய்யாமல் இருப்பேன். நான் பகலில் மட்டுமே வாசிப்பேன். இரவில் வெறுமனே அமர்வேன். சிந்திப்பதுகூட இல்லை. என் மனத்தில் யோசனைகள் தோன்றி அலைந்து தானாக உதிர்ந்துவிடும். அதன் போக்கிற்கு அனுமதிப்பேன். ஒவ்வொரு இரவும் ஒரு முழு மெழுகுவர்த்தி எரிந்து அணையும். மேசை முன் அமர்ந்து கைத்துப்பாக்கியை எடுத்து எனக்கு முன்பு வைப்பேன். அதை வைக்கும் போது என்னை நானே வினவிக்கொள்வேன்- ‘இதுதானா?’ முற்றான தெளிவுடன் விடையளித்துக்கொள்வேன்- ‘ஆம். இதேதான்.’ நான் என்னைச் சுட்டுக்கொள்ளப் போகிறேன். அந்த இரவு என்னைச் சுட்டுக்கொள்ளப் போவது உறுதி என்பதை அறிந்திருந்தேன். ஆனால் இப்படியே எத்தனை நேரம் மேசைக்கு முன் அமர்ந்திருக்க வேண்டும் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. சந்தேகமே இல்லை, அந்தச் சிறுமி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் என்னை நான் சுட்டுக்கொண்டிருப்பேன். 

2

இதைக் கவனியுங்கள். எனக்கு எதுவுமே பொருட்டல்ல என்றாலும் என்னால் வலி போன்றவற்றை உணர முடியும். யாரேனும் என்னை அடித்தால் அது என்னைக் காயப்படுத்தும். அதே போலத்தான் தார்மீக ரீதியாகவும். ஏதேனும் துயரச் சம்பவம் நிகழ்ந்தால், முன்பு நான் அனைத்தையும் பொருட்படுத்திய வாழ்வின் போது உணர்ந்ததைப் போலவே பரிதாபம் கொள்கிறேன். நான் ஒரு குழந்தைக்குக் கட்டாயம் உதவி செய்திருக்க வேண்டும். பிறகேன் நான் அந்தச் சிறுமிக்கு உதவுவதைத் தவிர்த்தேன்? அப்போது எனக்கு மிக முக்கியமான சிந்தனை தோன்றி இருந்ததால்! அவள் என்னை இழுத்து அழைத்த போது என் முன் தீர்க்க முடியாத ஒரு வினா எழுந்தாடியது. வினா என்னவோ வீணான ஒன்றுதான் எனினும் நான் சினமுற்றிருந்தேன். அன்றிரவு நான் என் கதையை முடித்திருந்தால் ‘வாழ்வில் எதையுமே முற்றாகப் பொருட்படுத்தாதவனாக நான் இருந்திருக்கலாம்’ என்ற எண்ணத்தின் எதிரொலியால் நான் சினந்தும் குழம்பியும் சோர்வுற்றும் இருந்தேன். ஏன் ஒரே சமயத்தில் எனக்கு எதுவும் பொருட்டில்லை என்ற மனோநிலையும் அந்தச் சிறுமியைப் பற்றிய பரிதாபமும் முகிழ்க்கிறது? அவள் நிலையை நினைத்து நான் வருந்தியது நினைவிருக்கிறது. இதயத்தினருகே விசித்திரமான வலி ஏற்படும் அளவிற்கு மிக அதிகமாக வருந்தியிருக்கிறேன். அது என் நிலைக்குப் பொருத்தமற்றதாக இருந்தது. அந்தக் கணத்தில் என் மனநிலை எப்படி துடிப்புடன் இருந்தது என்பதைத் துல்லியமாக என்னால் வர்ணிக்க முடியவில்லை. ஆனால் அந்த உணர்வு நான் வசிப்பிடத்திற்குச் சென்று மேசை முன் அமர்ந்தது வரை தொடர்ந்து வந்திருந்தது. நான் வெகு காலமாக அடையாத எரிச்சலுணர்வை அது மீண்டும் கொண்டுவந்து சேர்த்திருந்தது. ஒரு மனக்குரல் மோதி இன்னொன்றை எழுப்பியது. நான் ஏதுமற்றதாக மாறாமல் மனிதனாக இருக்கும்வரை உயிர்ப்புடன் துன்புற்றுத்தான் ஆகவேண்டும். என் செயல்களால் நானே சினமுறுவதும் அவமானமுறுவதும் தொடர்கிறது. இருந்துவிட்டுப் போகிறது. ஆனால் இன்னும் இரண்டே மணி நேரத்திற்குள் நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் எனும்போது இந்தச் சிறுமி எனக்கு யார்? இந்த உலகில் நான் கொள்ளும் சுய நாணத்திற்கு என்ன பொருள்?

https://4.bp.blogspot.com/-myIPhQJuSg4/V4CVxOILcSI/AAAAAAAALEg/FF8g9LUbDGYUt7NET-HBDhc9KfWKANtagCLcB/s1600/%25D0%25A1%25D0%25BE%25D0%25BD%2B%25D1%2581%25D0%25BC%25D0%25B5%25D1%2588%25D0%25BD%25D0%25BE%25D0%25B3%25D0%25BE%2B%25D1%2587%25D0%25B5%25D0%25BB%25D0%25BE%25D0%25B2%25D0%25B5%25D0%25BA%25D0%25B0%2B1992.jpg

நான் இன்மைக்குள் செல்லப்போகிறேன், முற்றான இன்மை. அதன்பின் உடனடியாக நான் முழுமையான இருப்பின்மைக்குச் செல்லவிருக்கிறேன், எல்லாமே எனக்கு இல்லாமல் போய்விடும் என்ற பிரக்ஞையெல்லாம் இந்தக் குழந்தை மீதான என் பரிதாப உணர்வையும் வெறுக்கத்தக்க என் செயலுக்கான என் நாணத்தையும் கிஞ்சிற்றும் பாதிக்குமா? மகிழ்வற்ற குழந்தையைப் பார்த்து நான் தரையை மிதித்துக் கத்தியிருக்கிறேன், கருணையை வழங்காதது மட்டுமின்றி மனிதத்தன்மையே இன்றி வெறுக்கத்தக்க வகையிலும் நடந்துகொண்டிருக்கிறேன். ஏன் அவ்வாறு நடந்துகொண்டேன்? இரண்டு மணி நேரத்தில் நான் இல்லாமல் போகவிருக்கிறேன் என்பதால்தானோ? அதனால்தான் அவளிடம் சினந்தேன் என்று நீங்கள் நம்புகிறீர்களா? இப்போது அதை நான் முற்றிலும் ஒப்புக்கொண்டுவிட்டேன். சடுதியில் என் வாழ்வும் உலகமும் எனக்கு ஆழ்ந்த பொருள் உள்ளதாக இப்போது மாறிவிட்டன. எனக்காக என்றே இந்த உலகம் பிறந்திருப்பதாக நான் சொன்னாலும் சொல்வேன். ஒருவேளை நான் சுட்டுக்கொண்டால் இந்த உலகம் தன் இருப்பை நிறுத்திக்கொள்ளும் – குறைந்தபட்சம் எனக்காகவேனும். நான் சென்ற பிறகு, எனது நினைவுகள் அழிந்த பிறகு, இந்த ஞாலமே இல்லாமலாகி – என்னுடைய மன இணைப்பே இந்தப் புவி என்பது போல – வெற்று மாயை என்றாகிவிடும் – இந்த உலகின் அத்தனை மக்களும் மாக்களும் நானன்றி வேறில்லை – என்ற பொருளில் நான் இதைச் சொல்லவில்லை. நான் என் மனவோடையைப் பின்பற்றிச் சென்றபோது பல புதிய வினாக்களாகச் சந்தித்தேன். ஒன்றன்பின் ஒன்றாக எல்லாத் திசைகளில் இருந்தும் அவை பெருக்கெடுத்தன. உதாரணமாக, ஒரு விசித்திரமான சிந்தனை உண்டானது. ஒருவேளை இதற்கு முன்பு நான் நிலவிலோ வெள்ளியிலோ வாழ்ந்து அங்கிருக்கையில் மிகவும் அருவருக்கத்தக்க கீழ்செயலைச் செய்து கொடுங்கனவில் மட்டுமே உணரக்கூடிய அவமானத்தையும் மடமையையும் பலனாகப் பெற்று, அதன்பின் புவிக்குத் தள்ளப்பட்டிருந்ததாக கற்பனை செய்தேன். அங்கு நிகழ்ந்தவற்றின் நினைவுகள் என்னுள் எஞ்சியிருக்க நான் ஒருபோதும் எந்தச் சூழலிலும் அங்கு மீண்டும் திரும்பிச் செல்லக்கூடாது என்று எண்ணிக்கொண்டேன். அதன்பின் புவியில் நின்று வான்மதியைக் காண்கையில் – நான் அந்த நிகழ்வுகளைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டுமா இல்லையா? என் செயல்களுக்காக நான் வெட்கித் தலைகுனிய வேண்டுமா, தேவையில்லையா?

என் முன் வீற்றிருக்கும் கைத்துப்பாக்கியின் முன்பு இவையெல்லாம் பொருளற்ற மேலோட்டமான வினாக்கள். என் ஒவ்வொரு நாடி நரம்புக்கும் அது நிகழப்போகிறது என்று தீர்க்கமாகத் தெரிந்திருக்கும் போதும் இந்த வினாக்கள் என்னைக் கிளர்வுறச் செய்து ஆத்திரப்பட வைக்கின்றன. இப்போது மரணத்திற்கு முன் ஒரு சீர்மையை, அமைதியை நான் ஏற்படுத்தியாக வேண்டும். இந்த வினாக்களால் என் துப்பாக்கியைத் தள்ளி வைத்திருப்பதைப் பார்த்தால் அந்தச் சிறுமி எனக்காகக் காத்திருக்கிறாள் என்று பொருளாகிறது. இதற்கிடையே தளபதியின் அறையில் ஆரவாரம் குன்றத் தொடங்கியது. அவர்கள் விளையாட்டை முடித்தனர். உறங்கத் தயராகினர். தங்கள் சண்டை சச்சரவுகளைச் சிரித்தும் தளர்வான முணுமுணுப்புமாக முடித்தபடி இருந்தனர். ஒரு புள்ளியில் என் நாற்காலியில் அமர்ந்து மேசையில் தலைசாய்த்து உறங்கிவிட்டேன். இப்படியொரு நிகழ்வு ஒருபோதும் எனக்கு நேர்ந்ததில்லை. மெய்மறந்து விழுந்து உறங்கியிருக்கிறேன். 

நாம் அனைவரும் அறிந்தபடி கனவுகள் விநோதமானவை. சில நேரங்களில் மலைப்பூட்டும் தெளிவுடன் அவை இருப்பதுண்டு. ஆபரணங்களின் வேலைப்பாடுகளைப் போன்ற நுண்ணிய விசயங்கள்கூட துலக்கத்துடன் இருக்கும். சில நேரங்களில் கவனத்திற்கே சிக்காமல் விசும்பையும் காலத்தையும் கேலிசெய்யும் வண்ணம் தாவிக்கொண்டிருக்கும். கனவுகள் காரணங்களினால் தூண்டப்படுபவை அல்ல, மாறாக இச்சையினால். அவை நிகழ்த்தப்படுவது மூளையினால் அல்ல, இதயத்தினால். இருந்தபோதும் என் பகுத்தறிவு கனவிற்குள்ளேயும் அடிவைத்து சிடுக்கான தந்திரங்களைச் செய்துவிட்டுச் செல்கிறது. அதில்தான் முற்றிலும் அறியவொண்ணா சம்பவங்கள் எத்தனை நிகழ்கின்றன! உதாரணமாக என் அண்ணன் ஐந்தாண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சில பொழுதுகளில் நான் அவரைக் கனவில் காண்பதுண்டு. அவர் என் விசயங்களில் தலையிடுவதும் நாங்கள் இருவரும் ஆர்வத்துடன் வேலை செய்வதும் என்றிருக்க, அப்போதே என் கனவு முழுவதும் என் அண்ணன் இறந்ததையும் அவரைப் புதைத்ததையும் சேர்த்தே நான் அறிந்திருக்கிறேன். இறந்தவர் இப்போது என்னருகில் நின்று வேலைசெய்வது பற்றி நான் எப்படி வியக்காமல் இருக்கிறேன்? என் பகுத்தறிவு அதை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறதா? 

போதும். நான் என் கனவைப் பற்றிச் சொல்லத் தொடங்குகிறேன். நான் கனவைக் கனவுகண்டேன். நவம்பர் மூன்றாம் தேதி கண்ட கனவு. பலரும் என்னை அது வெறும் கனவு என்று சொல்லி கேலி செய்வதுண்டு. ஆனால் கனவு எனக்குச் சத்தியத்தை வழங்கியது எனும்போது அது கனவா நிஜமா என்ற கேள்விக்கெல்லாம் முக்கியத்துவம் இருக்கிறதா? ஒரேயொரு முறை ஒருவன் வாய்மையை கண்டுகொண்டால் போதும், அதுதான் சத்தியம். அதைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது என்பதை உறக்கத்திலும் விழிப்பிலும் ஒன்று போல நித்தியமாய் உணர்ந்தபடி இருப்பான். அது கனவாகவே இருக்கட்டுமே! தற்கொலையில் முடித்துக்கொள்ள விரும்பிய உள்ளீடற்ற வாழ்வை எத்தனை மடங்கு பெருக்கி கற்பனையில் நீங்கள் விளங்கிக்கொள்கிறீர்கள். என் கனவு, என் கனவு – அற்புதம்! அது எனக்கு வேறொரு புதிய, பிரம்மாண்டமான, ஆற்றல்மிக்க வாழ்வைச் சுட்டியது!

கேளுங்கள்.

3

நான் மெய்மறந்து தூங்கி விழுந்ததைக் குறிப்பிட்டிருந்தேன். இன்னும் அந்த விசயத்திலேயே மனம் அலைவுற்றிருந்தது. திடீரென்று நான் கனவு கண்டேன். அதில் கைத்துப்பாக்கியை எடுத்து நேராக என் இதயத்தைக் குறி வைத்தேன். என் இதயத்தை, தலையை அல்ல. இதற்கு முன்பு நான் திண்ணமாக தலையில்- இடதுபக்க நெற்றியில் குறிவைத்துச் சுடவே நினைத்திருந்தேன். என் மார்பிற்குக் குறிவைத்த பின் ஓரிரு நொடிகள் பொறுத்திருந்தேன். எதிர்பாராத விதமாக என் மெழுகுவர்த்தி, என் மேசை, சுற்றியிருந்த சுவர் அனைத்தும் என் முன்பாகவே அசைந்து மேலெழுந்தாடத் தொடங்கின. விசையை அழுத்துவதற்கு அவசரமாக முயன்றேன். 

https://www.cinelounge.org/imgfull/161121.jpg

கனவுகளில் உயரத்தில் இருந்து விழுவது, கத்தியால் குத்தப்படுவது போன்றவை சில நேரங்களில் நடந்தாலும் ஒரு போதும் அசல் வலியை நாம் உணர்வதில்லை. ஆனால் ஒருவேளை நிஜமாகவே மஞ்சத்தின் தூண்களில் முட்டிக்கொண்டால் வலி உண்டாகி உறக்கத்தில் இருந்து எழ நேரும். என் கனவிலும் அதுவே சாராம்சம். எனக்கு எந்த வலியும் ஏற்படவில்லை, ஆயினும் நான் சுட்டதும் என்னுள் அனைத்தும் நிலைகுலைந்து ஒளிகுன்றியது. என்னைச் சுற்றிலும் பீதியூட்டும் வன்னிருட்டு நிரம்பியது. நான் குருடனானேன், உணர்விழந்தேன். மல்லாந்து கைகால்களை நீட்டி தரையில் படுத்திருந்தேன். என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. ஒரு சிறு அசைவைக்கூட ஏற்படுத்த முடியவில்லை. என்னைச் சுற்றிலும் மக்கள் நடந்தபடியும் கத்திப் பேசியபடியும் வந்தனர். கேப்டன் இரைச்சல் எழுப்பினார். வீட்டுக்கார அம்மா கூக்குரலிட்டாள். அடுத்து ஒரு சடுதி இடைவெளி. நான் மூடிய சவப்பெட்டியில் எடுத்துச் செல்லப்படுகிறேன். சவப்பெட்டி எப்படிக் குலுங்கியது என்பதை உணர்ந்த போதுதான் முதன்முதலில் நான் இறந்துவிட்டேன்- சந்தேகத்திற்கு இடமின்றி பூரணமாக இறந்துவிட்டேன்- என்று அறிந்தேன். என்னால் பார்க்கவோ அசையவோ முடியவில்லை. ஆயினும் அனைத்தையும் உணரவும் அதை மனத்தில் சிந்திக்கவும் முடிந்தது. ஆனால் விரைவிலேயே, நாம் வழக்கமாக கனவுகளில் அது தன்னளவில் கொண்ட உண்மைகளை வாதிடாமல் ஏற்போமே, அதைப் போலவே நான் என் நிலையை ஏற்றுக்கொண்டு பொருந்திப் போனேன். 

இப்போது நான் பூமிக்கடியில் புதைக்கப்படுகிறேன். அனைவரும் அகன்றதும் தனிமையில் விடப்படுகிறேன். முற்றான தனிமை. நான் அசையவில்லை. இதற்கு முன் புதைக்கப்படுவது பற்றிய கற்பனைகளில் நான் பொருத்திக்கொண்ட உணர்வு சவக்குழியில் இருக்கும் ஈரப்பதமும் குளிரும்தான். ஆதலால் இப்போது நான் கடுங்குளிரை உணர்கிறேன். அதிலும் குறிப்பாக என் கால்விரல் முனைகளில். வேறெதையும் நான் உணரவில்லை. 

நான் உறைந்திருக்கிறேன். சொல்ல விசித்திரமாக இருக்கிறது, நான் எதையுமே எதிர்பார்க்கவில்லை. இறந்தவனுக்கு எதிர்பார்க்க ஒன்றுமில்லை என்ற உண்மையை தர்க்கத்திற்கு இடம் தராமல் ஏற்றிருந்தேன். ஈரமாகச் சூழ்ந்திருந்தது. எத்தனை காலம் கடந்தது என்று தெரியவில்லை. ஒரு மணி நேரமா, சில நாட்களா, பல நாட்களா எனத் தெரியவில்லை. ஆனால் எங்கிருந்தோ ஒரு துளி நீர், மூடியிருந்த என் இடது விழியில் விழுந்தது. அது சவப்பெட்டியின் கிடுக்கியின் வழியே வழிந்து விழுந்திருக்கிறது. ஒரு நிமிடத்திற்குப் பின் இரண்டாவது சொட்டும் இன்னொரு நிமிடம் கழித்து மூன்றாவது சொட்டும் விழுந்தது. இப்படியே நிமிடத்திற்கு ஒரு சொட்டாக சீரான இடைவெளிகளில் விழுந்தன. சடுதியில் என் இதயத்தில் கோபமும் சரீரத்தில் வலியும் உண்டானது. “அதோ என் காயம்” என்று நினைத்தேன். “அதோ என் தோட்டா…” என் மூடிய இமையின் மீது ஒன்றன்பின் ஒன்றாக நீர்த்துளிகள் நிமிடத்திற்கொருமுறை விழுந்தபடியே இருந்தன. அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதும் சக்தியை வெறும் குரலால் மட்டும் அழைக்காமல் ஒட்டுமொத்தமாக என் இருப்பினாலேயே கத்தி அழைத்தேன்- ”நீ யாராகவேனும் இருக்கலாம். நீ இருப்பது உண்மையானால், இங்கு நிகழ்வதைவிட அறிவுப்பூர்வமானது ஏதேனும் இருப்பது உண்மையானால், இங்கு வந்து இதை அனுபவித்துப் பார். ஆனால் தொடர் இருப்பின் மீதான அபத்தத்தினாலும் வெறுப்பினாலும் நான் செய்த மூடத்தனமான தற்கொலையைச் சாக்காக வைத்து தன்னைத்தானே பழிவாங்கும் பொருட்டு நீ இதைச் செய்கிறாய் என்றால் உனக்கு ஒன்றைச் சொல்கிறேன் கேள். உணர்வுகளின் ஊமையாகி நான் கொண்டிருக்கும் எரிச்சலுக்கு எந்தச் சித்திரவதையும் ஈடன்று. இந்தத் தற்பலி இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும்!”     

எனது விண்ணப்பத்தை அறிவித்துவிட்டுச் சாந்தமானேன். ஒரு முழு நிமிடத்திற்குச் சூழ்ந்திருந்த கனத்த மெளனத்தை அடுத்த துளி விழுந்து உடைத்தது. அசைக்க முடியாத தெளிவுடன் விரைவில் எல்லாம் மாறிவிடும் என்று நன்கு அறிந்திருந்தேன். எதிர்பாராத கணத்தில் என் சவமஞ்சம் இரண்டாகப் பிளந்தது. யாரேனும் அதைத் தோண்டினார்களா திறந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் என்னை ஒரு இருளாற்றல் பற்றிச் செல்ல, நாங்கள் இருவரும் விசும்பில் இருந்தோம். மீண்டும் எனக்குப் பார்வை கிடைத்தது. அதை இரவின் உச்சம் எனக் குறிப்பிடலாம். ஒருபோதும் இத்தகைய இருளைப் பார்க்கவே முடியாது. புவியிலிருந்து வெகு தொலைவில் பறந்தோம். என்னை அழைத்துச் செல்லும் துணைவனை நான் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. பெருமிதத்தோடு காத்திருந்தேன். நான் அஞ்சவில்லை என்று எனக்கே உறுதியளித்தேன். அப்படி அஞ்சவில்லை என்ற சிந்தனையைப் பற்றியபடி நான் திகிலும் பரவசமும் உற்றிருந்தேன். எவ்வளவு நேரம் நாங்கள் பறந்தோம் என்று அறியேன், என்னால் கற்பனை செய்யவும் முடியவில்லை. கனவுகளில் எப்போதும் விசும்பையும் காலத்தையும் தாவிச் செல்வோமே, இருப்பு, சிந்தனை ஆகியவற்றின் விதிகளை மீறிச் செல்வோமே, அதேபோல இருந்தது. இதயம் ஏங்கும் புள்ளிகளில் மட்டும் நின்று உணர்வோம் அல்லவா? இந்த இருளின் இடையில் ஒரு விண்மீனைப் பார்த்தேன். “அது சிரியஸ் விண்மீன்களா?” எனக்கு கேள்வி கேட்க எண்ணமில்லை என்றபோதும் தன்னிச்சையாகக் கேட்டுவிட்டேன். 

“இல்லை, நீ இல்லத்திற்கு வருகையில் மேகங்களிடையே காணப்பட்ட விண்மீன்தான் அது” என்று என்னை அழைத்துச் சென்ற துணைவன் தெரிவித்தான். 

அவனுக்கு மானுடன் போல முகமிருந்தது. வித்தியாசமான அந்த முகத்தை நான் விரும்பவில்லை, உண்மையில் அவன் மீது கடும் எரிச்சலடைந்தேன். முற்றான இருப்பின்மையை எதிர்பார்த்தே என் மார்பில் தோட்டாவைச் செலுத்தினேன். ஆனால் இங்கோ உயிரோடு இருக்கிற ஒரு மனித ஜந்துவின் கையில் சிக்கியிருக்கிறேன். “மரணத்தைத் தாண்டியும் இன்னும் வாழ்க்கை இருக்கிறது.” ஒருவன் கனவில் கொள்ளும் அற்பத்தனம் மாறாமல் சிந்தித்தேன். ஆனால் அதன் ஆழாழங்களில் என் இதயம் அப்படியே இருந்தது. “ஒருவேளை நான் மீண்டும் ஈடு இணையற்ற சக்தியின் கட்டுப்பாட்டின் கீழ் வாழ நேர்ந்தால், நான் தாழ்த்தப்படவோ முறியடிக்கப்படவோ மாட்டேன்” என்று கருதினேன்.

“நான் உன்னை அஞ்சுகிறேன் என்பதை நீ அறிவாய், அதனால் என்னை வெறுக்கவும் செய்கிறாய் அல்லவா?” அந்தக் கேள்வி என் இதயத்தைக் கூரிய ஊசியால் துளைத்ததையடுத்து கட்டுப்படுத்த முடியாமல் துணை வந்தவனிடம் அதைக் கேட்டேன். அவன் எனக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. கூடவே அவன் என்னை வெறுக்கவும் இல்லை என்று அறிந்தேன். ஆனால் என் மீது இரக்கமே இல்லாமல் சிரித்தான். அந்தப் பயணம் என்னை மட்டுமே சார்ந்ததாக இருந்தது. என் நெஞ்சத்தில் அச்சம் மென்மேலும் வளர்ந்தது. என் மெளனத் துணைவனிடமிருந்து ஒலியற்ற ஏதோவொன்று என்னுள் நுழைந்து ஊடுருவி வலியூட்டியது. அறிந்திராத இருண்ட வனாந்திரங்களில் பறந்தோம். எனக்கு ஏற்கனவே அறிமுகமாயிருந்த விண்மீன் திரள்களின் காட்சியைத் தொலைத்து விட்டிருந்தேன். இந்த விண்ணுலகில் இருந்துவரும் விண்மீன்களின் ஒளியானது நம் புவியைப் பல ஆயிரம், இலட்சம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் வந்து தீண்டுகிறது என்பதை நான் அறிவேன். நாங்கள் அநேகமாக அந்த ஒளி உருவாகும் இடங்களில் எல்லாம் பறக்கிறோம் என்றே கருதுகிறேன். என் இதயத்தை வெகுவாகத் தொந்தரவு செய்துவந்த கொடூரமான வேதனையை எதிர்பார்த்தேன். மறுகணமே என்னை ஆழங்களுக்குள் அழைத்துச் செல்லும் ஒரு பழக்கப்பட்ட உணர்வு உண்டானது. நம் சூரியனைத் தரிசித்தேன்! ஆனால் மறுகணமே புரிந்துவிட்டது. நம் புவிக்கு ஒளியூட்டும் நமது சூரியன் இதுவல்ல! சூரியனிலிருந்து நாம் முடிவிலாத் தொலைவில் இருக்கிறோம் என்றாலும் ஏதோவொரு உள்ளுணர்வு இது துல்லியமாக நமது சூரியனைப் போலவே இருக்கிறது என்பதை உணர்த்தியது. அதன் இரட்டைச் சகோதரன். இனிய, மர்மமான பரவசம் என் நெஞ்சில் ஊறியது. அவ்வொளியின் அன்பார்ந்த சக்தி இதயத்தின் சுவர்களில் மோதி எதிரொலித்து என்னை எழுப்பியது. சவக்குழியில் வீழ்ந்த பிறகு முதன்முறையாக மீண்டும் என் முந்தைய வாழ்வின் உணர்வு என்னுள் கொப்பளித்தது. 

”அது எம் சூரியனைப் போலவே கச்சிதமான வடிவில் இருக்கிறது, எனில், எங்கே எம் பூமி?” என்று கத்தினேன்.

மரகதத்தின் மிளிர்வைப் போல் தொலைவில் ஒளிர்ந்த ஒரு விண்மீனை எனக்குத் துணை வந்தவன் சுட்டினான். அதை நோக்கித்தான் நாங்கள் பறந்தோம்.

”இந்தப் பிரபஞ்சத்தில் இத்தகைய பிரதிகள் சாத்தியமா? இது இயற்கை அனுமதித்த விதியின் கீழ் சாத்தியமா? ஒருவேளை அங்கு புவி இருக்குமாயின், அது அப்படியே நம் புவியைப் போன்றே இருக்குமாயின்… அப்படியே ஏழ்மையும், துக்கமும், விலைமதிப்பற்ற அன்பும் இருந்தால் தன் நன்றிகெட்ட பிள்ளைகளைக் காக்கும் பூமித்தாயின் மீது நாம் கொண்ட அதே மாசிலா அன்பிற்கு இவளும் உரியவளாகி விடுகிறாளா?” முந்தைய பழகிய புவியின் மீது வைத்திருந்த அன்பின் எச்சத்தைக் கட்டுப்படுத்த முடியாத பரவசத்தால் ஆட்கொள்ளப்பட்டு கத்தினேன். என் மனத்தில் நான் புறக்கணித்த ஏழைக் குழந்தையின் தோற்றம் மின்னிச் சென்றது. 

எனக்குத் துணை வந்தவன், “அதை முழுவதும் நீ பார்க்கக் கடவது” என்று சொன்னபோது அவன் குரலில் துயரக்குறிப்பு இருந்தது.

நாங்கள் விரைவாக அந்தக் கோளை நெருங்கினோம். அது என் விழிகளின் முன் வளர்ந்தது. அப்போதே எனக்குச் சமுத்திரங்களையும், ஐரோப்பாவின் புறத்தோற்றத்தையும் பிரித்தறிய முடிந்தது. அக்கணமே என் இதயத்தில் எழுந்த அழுக்காற்றைப் பெரிதாய் உணர முடிந்தது.

”எப்படி இந்தப் பிரதி இருக்க முடியும்? எதற்காக? என் குருதிக்கறை படிந்த, நன்றியின்மையால் என் இதயத்தில் தோட்டாவைச் செலுத்தி முடித்துக்கொண்ட என் முந்தைய வாழ்வு இருந்த, நான் விட்டுவந்த புவியை – அதை மட்டுமே என்னால் மனப்பூர்வமாக நேசிக்க முடியும். என் பூமித்தாயிடம் ஒருபோதும் என் தீரா அன்பைச் செலுத்த குறைவைத்ததில்லை. சொல்லப்போனால் என் உலகைப் பிரிந்த அன்றுதான் முன்பைவிட அதை அளவுக்கதிகமாக நேசித்தேன். இந்தப் புதிய புவியில் துயரம் உள்ளதா? நம் புவியில் அன்பையே துயரத்தின் வழியாகவும் துயரத்தின் துணையோடும்தான் அனுபவிக்க முடியும். வேறெந்த வழியிலும் அன்புசெய்ய முடியாது. வேறெந்த வகையான அன்பும் இல்லை. எனக்கு அன்பு செய்வதற்கு வருத்தம் வேண்டும். நான் விட்டுவந்த பூமியை உடனே உப்புக்கண்ணீருடன் சேர்த்து முத்தமிட வேண்டும் என்று தவிக்கிறேன், தாகிக்கிறேன். வேறெங்கும் நான் வாழ விரும்பவில்லை, அத்தகைய வாழ்வை ஏற்கவும் மாட்டேன். 

https://factstore.ru/wp-content/uploads/2017/09/42335-002.jpg

எனக்குத் துணை வந்தவன் ஏற்கனவே என்னை விட்டுவிட்டு அகன்றிருந்தான். வெயில் பொங்கும் பகல் சுவணத்தைப் போல பொன்னொளி வீச எப்படி இந்த மறுபுவியில் நான் வந்துசேர்ந்தேன் என்பதை அமைதியாக அவதானித்திருந்தேன். நம் புவிக்கோளத்தில் கிரேக்கத் தீவுக்கூட்டங்களாக இருந்த இடத்தில் நான் நின்றுகொண்டிருந்தேன் என்று நம்புகிறேன் அல்லது அந்தத் தீவுக்கூட்டங்களை நோக்கியவாறிருந்த நிலத்தின் கடற்கரையில். நம்முடையதில் எப்படி இருந்ததோ அப்படியே துல்லியமாக இங்கும் இருக்கிறது. ஆனால் ஒரு விழாக்கோலத்தின் மிளிர்வு எல்லா இடத்திலும் கூடுதலாக இருக்கிறது. மாபெரும் புனிதமான வெற்றியை அடைந்துவிட்டதைப் போல எல்லா இடங்களிலும் ஒளிர்வு இருக்கிறது. நிலத்தை வருடும் ஆழி, மரகதப் பச்சையில் நீர் தெளித்து கரையை மென்மையாகத் தீண்டுகிறது. தன்னுணர்வுடன் கூடிய அன்பைப் பறைசாற்றுகிறது. நெடுநெடுவென வளர்ந்த மரங்கள் தன் வளர்ச்சியின் பெருமையைச் சொல்கின்றன. அதன் எண்ணற்ற இலைகள் என்னை வாழ்த்தும் போது அவை காற்றில் அசைந்து காதலின் பதங்களை உச்சரிக்கின்றன என்றே புரிந்துகொண்டேன். பிரகாசமான, நறுமணமிக்க மலர்களோடு புல்வெளி ஒளிவீசியது. காற்றில் கூட்டங்களாகப் பறந்த பறவைகள் அச்சமின்றி என் தோள்களிலும் கரங்களிலும் அமர்ந்து மகிழ்வுடன் தமது வசீகரிக்கும் இறக்கைகளால் படபடத்தன. கடைசியாக இந்த இன்னிலத்தின் மக்களைக் கண்டேன். அவர்கள் தாமாகவே என்னை நோக்கிவந்து சுற்றி நின்று முத்தமீந்தனர். ஆதவனின் குழந்தைகளும் அந்தந்த ஆதவன்களின் குழந்தைகளும் – என்னே கவின் மிக்கவர்கள் அவர்கள்! மானுடர்களைக் கொண்டிருக்கும் நம் புவியில் அத்துணை எழிலை நான் கண்டதேயில்லை. ஒருவேளை நம் குழந்தைகளின் முதல் அகவைகளில் மட்டுமே இந்த எழிலின் சிறு கீற்றைக் காண முடியும்.

இந்த மக்களின் விழிகள் தெள்ளிய பிரகாசத்துடன் மிளிர்ந்தன. அவர்களது முகங்கள் ஞானத்தின் ஒளிக்கீற்றுகளால் நிறைந்திருந்தன. அவற்றில் முற்றான புரிதலில் எழும் தீர்க்க மெளனம் இருந்தபோதும் அவை துள்ளலுடன் இருந்தன. சொல்லிலும் குரலிலும் மதலை கொஞ்சும் உவகை. ஆம்! முதல் கணத்திலிருந்தே, முதல் பார்வையில் இருந்தே அனைத்தையும் புரிந்துகொண்டேன்! வீழ்ச்சியடைந்தவர்களால் ஒளிகுன்றாத புவி இது. இங்கு வாழ்பவர்கள் பாவம் புரியாதவர்கள். மானுடர்களின் ஆதிக்கதைகள் அனைத்திலும் வழங்கிவருவதைப் போல அவர்கள் சுவணத்திலேயே வாழ்ந்தனர். நம் மூதன்னையும் முதுதந்தையும் தம் முதற்பாவத்திற்கு முன்பே இருந்ததைப் போல வாழ்ந்தனர். நமக்கும் அவர்களுக்கும் இருந்த ஒரேயொரு வேறுபாடு புவியே சுவணமாக இருந்ததுதான். இந்த மக்கள் மகிழ்வில் திளைத்து, சிரித்து, என்னைச் சூழ்ந்து நின்று வருடினர். தம் இல்லத்திற்கு என்னை அழைத்துச் சென்றனர். ஒவ்வொருவரும் என்னை அச்சத்திலிருந்து மீட்டு ஆறுதல்படுத்த முனைந்தனர். அவர்கள் என்னை ஒரு கேள்வியும் கேட்கவில்லை என்றபோதும் கேட்காமலேயே அனைத்தையும் அறிந்துவைத்திருக்கும் நிலையில் இருந்தனர் என்பதை நான் பார்த்தமட்டில் கற்பிதம் செய்தேன். என் முகத்தில் இருந்த துயரக்களையை விரைவாக விரட்டியடித்து சாந்தத்தை வரவழைக்க அவர்கள் விரும்பினர். 

4

உங்களுக்கு ஒன்று தெரியுமா? அது வெறும் கனவுதான் என்றபோதும், அந்தக் களங்கமற்ற மக்களின் அன்புணர்வு என்னோடு நிரந்தரமாக நிலைத்துவிட்டது. அங்கிருந்து எப்போதும் அந்த அன்பு வழிந்து என்னை நோக்கி வருவதாகவே உணர்கிறேன். நான் அவர்களைப் பார்த்துவிட்டேன். அவர்களை அறிந்து அவர்கள் இருப்பை நம்பிவிட்டேன். நான் அவர்களை நேசித்துவிட்டேன். அவர்களுக்காக வருந்தித் துயருற்றேன். இன்னும் பல விசயங்களில் நான் அவர்களைப் புரிந்துகொள்ளவே இல்லை என்பதை விரைவாகப் புரிந்துகொண்டேன். இன்றைய உலகின் ரஷ்யக் குடிமகனாகவும் இழிவான பீட்டர்ஸ்பர்க்வாசியாகவும் அவர்கள் பெற்றிருக்கும் அறிவின் அளவு விவரிக்க முடியாததாக எனக்குத் தோன்றியது. நம் அறிவியலைப் போல அவர்களிடம் ஏதுமில்லை. ஆனால் விரைவிலேயே அவர்களது அறிவு, நம் உலகில் பெறும் அறிவின் வழிகளில் அல்லாமல் உள்ளுணர்வுகளின் வரிசையால் வளர்ந்து பெருகியிருக்கிறது என்பது எனக்கு உறைத்தது. அவர்களது நோக்கங்களும் அவ்வாறே நம்மிடையில் இருந்து மிகவும் வேறுபட்டிருந்தன. அவர்களுக்கு எதன் மீதும் அவா இல்லை என்பதால் சமாதானத்தில் இருந்தனர். வாழ்வைப் பற்றிய அறிவை நாம் விரும்பும் வழியில் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. ஏனெனில் அவர்களது வாழ்க்கை பூரணமடைந்திருந்தது. ஆனால் அவர்களது ஞானம் நம்மைவிட ஆழமானதும் உயர்ந்ததுமாய் இருக்கிறது. நம் அறிவியல், ‘வாழ்க்கை என்றால் என்ன?’ என்ற கேள்வியைப் பின்தொடர்ந்து அதன் வழியே பிறருக்கு வாழ்வைக் கற்பிக்க விரும்புகிறது. ஆனால் அவர்கள் அறிவியலின் துணை இன்றியே வாழத் தெரிந்தவர்கள்.

அது எனக்குப் புரிகிறது. ஆயினும் அவர்களது அறிவை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் தம் மரங்களை என்னிடம் காண்பித்தனர். அவர்கள் தம் விழிகளை எத்தனை அன்புடன் அவற்றை உவந்து பார்த்தனர், அதிலிருக்கும் செறிந்த அன்பை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. தன்னைப் போன்ற மனிதப் படைப்போடு அவர்கள் உரையாடுவதைப் போலிருந்தது. அவற்றோடு அவர்கள் உரையாடினர் என்று நான் சொல்வது அநேகமாகப் பிழையாக இருக்காது என்றே கருதுகிறேன். ஆம், அவர்கள் தமக்கெனத் தனி மொழியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அம்மொழி அவர்களது மரங்களுக்கும் புரிகிறது. அவர்கள் இயற்கையை அப்படித்தான் பார்க்கிறார்கள். அவர்களோடு இணக்கமாக வாழும் பிறவிகளாக விலங்குகளைக் காண்கின்றனர். அவை அவர்களைத் தாக்கும் பிறவிகளன்று. மாறாக, அவர்களை நேசிக்கும் பிறவிகள், அவர்களது அன்பால் கட்டுண்ட பிறவிகள். அவர்கள் விண்மீன்களைச் சுட்டி அவற்றைப் பற்றி ஏதோ குறிப்பிட்டனர்.

https://artmoskovia.ru/wp-content/uploads/2016/02/1160656.jpg

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆயினும் அவர்கள் மனரீதியாக மட்டுமின்றி வேறொரு இயற்பியல் தொடர்புமுறையிலும் விண்மீன்களோடு உரையாடும் திறன்பெற்றவர்கள் என்று புரிந்துகொண்டேன். இந்த மாந்தர்கள் எனக்குப் புரியவைப்பதற்குப் பெரிதாக முயலவில்லை. என் புரிதலின்மையோடு சேர்த்தே என்னை விரும்பினர். அவர்கள் ஒருபோதும் என்னைப் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று அறிந்திருந்ததால் அவர்களிடம் அதிகம் நம் புவியைப் பற்றி நான் பேசவில்லை. அவர்கள் தம்மைத் தாமே வழிபட்டபடி அமைதியாக வாழ்ந்த ஞாலத்தின் நிலத்தை அவர்கள் முன்னிலையில் முத்தமீந்தேன். என் பரவசத்தால் தாக்குறாதவர்களாய் தம்மையும் வழிபட எனக்கு அனுமதியளித்தனர். அவர்கள் தம்மையே அதீதமாய் காமுறுபவர்கள். சில சமயங்களில் கண்ணீர் ததும்ப அவர்களது பாதங்களில் வீழ்ந்து முத்தமிட்டால்கூட அவர்கள் கோபமுறவில்லை. உவகையுடன் தன்னுணர்வு மிக்க அன்பை எனக்குப் பதிலளித்தனர். என்னைப் போன்ற கேலிக்குரிய ஜென்மத்தை எப்படி அவர்களால் ஒருபோதும் புண்படுத்தாமல் இருக்க முடிகிறது என்பதை அவ்வப்போது வியந்தேன். அதைவிட ஒருபோதும் என்னுள் அழுக்காறையும் வயிற்றெரிச்சலையும் எழுப்பாமல் அவர்களால் எப்படி இயல்பாக இருக்க முடிகிறது? அவர்களை வியக்க வைக்க வேண்டுமென்றோ அவர்களுக்கு நன்மை தரும் என்றோ ஒருமுறைகூட என் சொந்தப் பெருமையை வெளிக்காட்டுவதற்கான இச்சை என்னுள் எழவில்லை. எழுந்திருந்தால், நான் அறிந்ததை எல்லாம் பேசி இருந்தால், நான் எத்தனை பெருமிதம் பேசும் பொய்யன் என்று வெளிப்பட்டிருக்கக்கூடும். என்னைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. 

அவர்கள் குதலைகளைப் போல விளையாட்டுத்தனமாகவும் மகிழ்ந்தும் இருந்தனர். அவர்களுடைய அழகிய வனங்களிலும் பொழில்களிலும் சுற்றி அலைந்தனர். அழகிய பாடல்களைப் பாடினர். அவர்கள் உணவு எளியவை – கனிகள், காட்டு நறவம், அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் தரும் பால். உணவுக்கும் உடுக்கைக்கும் அவர்கள் செய்த வேலைகள் சுருக்கமானவையாகவும் அதிக உடலுழைப்பைக் கோராதவையாகவும் இருந்தன. அவர்கள் சிறுபிள்ளைகளை நேசித்து உடனிருந்தனர். அவர்கள் குதலைகளைத் தங்கள் உவகையைப் பகிர்ந்துகொள்ள வந்த புதிய பிறப்புகளாகப் பார்த்தனர். சண்டை, சச்சரவு, அழுக்காறு போன்றவை அங்கில்லை, அவர்களுக்கு அச்சொற்களின் பொருள் என்னவென்றே தெரியவில்லை. அங்கிருக்கும் குதலைகள் அனைவருடைய குதலைகள், அவர்கள் அனைவரும் ஒற்றைக் குடும்பத்தினர். அங்கு மரணம் இருந்த போதும் நோய் அநேகமாக இல்லை என்றே சொல்லலாம். முதியவர்கள் அமைதியான முறையில் உறக்கம்போலும் சாக்காடு என மரணித்தனர். அத்தருணத்தில் சுற்றி நின்று பிரியா விடையளிக்கும் உறவினர்களைப் பார்த்து பிரகாசமாய்ப் புன்னகைத்து ஆசி வழங்கினர்.

அந்தத் தருணங்களில் ஒருபோதும் துயரத்தையோ கண்ணீரையோ காண முடியாது. வெறும் அன்பு மட்டுமே இருக்கும். அந்த அன்பு பரவசமிக்கது என்றபோதும் சாந்தப் பரவசமிக்கதாக இருப்பது மிகப் பொருத்தமாகவும் கூர்ந்து நோக்கத்தக்கதாகவும் இருக்கும். இறப்பிற்குப் பின் உலகத் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடாமல், இன்னும் எதோவொரு வழியில், இறந்த பின்னும் தொடர்பில் இருப்பர் என்று நாம் நினைக்கலாம். ஆனால், இறவாமை பற்றி நான் கேள்வி எழுப்பியபோது அது பற்றிய கேள்விகளைத் தொடுப்பது தம் வேலை அல்ல என்ற தெளிவுடன் அவர்கள் இருந்தனர். அங்கு கோயில்கள் ஏதுமில்லை, ஆயினும் அவர்கள் முழுதான வாழ்வையும் பிரபஞ்சத்துடன் நித்திய ஓர்மை கொண்ட உணர்வையும் கொண்டிருந்தனர். அவர்களிடம் மதம் இல்லை. ஆனால் அவர்களுக்கு உலகியல் இன்பங்களின் அளவும் அதற்குள் கட்டடங்காத முழுமையுடன் குறிப்பிட்ட புள்ளியில் தாமும் இணைவோம் என்ற புரிதலும் இருந்தது. அந்த முழுமையுறும் தருணத்தை அவர்கள் மகிழ்ச்சி பொங்க, பதற்றமின்றி, பேராசையின்றி எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அதுபற்றிய சுவையின் அறிமுகத்தை ஏற்கனவே அவர்கள் நெஞ்சம் அறிந்திருந்ததால் தங்களுக்குள் அதுகுறித்து உரையாடவும் செய்தனர். 

மாலையில் உறங்கச் செல்லும் முன் குழுக்களாக இசைவழிய பாடுவதை அவர்கள் விரும்பினர். அன்று முடிந்த நாள் அவர்களுக்குத் தந்த படுதலை, அந்நாளின் சிறப்பை அப்பாடல்களின் வழியே வெளிப்படுத்தி அந்நாளில் இருந்து வெளியேறினர். இயற்கையின், கடலின், வனங்களின் சிறப்பையெல்லாம் பாடினர். ஒருவர் பிறரைப் பற்றி பாடல்கள் இயற்றி குழந்தைகளைப் போல போற்றிக்கொண்டனர். அவை மிக எளிய பாடல்களாக இருந்தபோதும் அவர்களின் இதயத்தில் இருந்து முளைத்து மறு இதயத்திற்குப் பரவின. பாடல்களில் மட்டுமின்றி வாழ்க்கை முழுவதும் ஒருவரையொருவர் போற்றிப் பாராட்டிக்கொள்வதைவிட முக்கியமாக வேறெதையும் அவர்கள் செய்யவில்லை. அது ஒருவரையொருவர் நேசித்தபடியே ஒட்டுமொத்தமாகத் தழுவிக்கொள்ளும் பிரபஞ்ச உணர்வு. 

அவர்களின் சில பாடல்கள் பக்தி ரசம் பொங்குவதாகவும் ஆனந்தக் கூத்தாடுவதாகவும் இருந்தன. அவை எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை. வார்த்தைகள் புரிந்தபோதும் அது கொண்டிருக்கும் ஆழ்பொருளின் முக்கியத்துவத்தை முற்றிலும் என்னால் உய்த்தறிய முடியவில்லை. என் அறிவின் பிடிக்கு எட்டாமலேயே இருந்தது என்றாலும் என் நெஞ்சம் அதை மென்மேலும் இரசித்து உள்ளீர்த்துக்கொண்டது. இது பற்றிய முன்னிமித்தம் எனக்கு நெடுங்காலத்திற்கு முன் ஏற்கனவே தோன்றியது என்று அடிக்கடி அவர்களிடம் சொன்னேன். நம் புவியில் ஆழ்ந்த துயரத்தின் வடிவில் அடைய முடியாத துக்கத்தை முன்வைத்து அது வந்தது. என் நெஞ்சின் கனவுகளிலும் மனத்தின் தரிசனங்களிலும் அது பற்றிய முன்னறிவு இருந்தது. என் புவி வாழ்வில் சூரிய மறைவை ஒருபோதும் கண்ணீர் இன்றி என்னால் காண முடிந்ததில்லை. ஆழமான வேதனையுடனேயே என் சகவாசிகள் மீதான வெறுப்பை என்னால் முழுதுணர முடிந்தது. ஏன் அவர்களை நேசிக்காமல் என்னால் வெறுமனே வெறுக்க முடியவில்லை? ஏன் என்னால் அவர்களை மன்னிக்காமல் இருக்க முடியவில்லை? அவர்களுக்கான என் நேசத்தில் ஏங்கித் தவிக்கும் சோகம் நிழலாடுகிறது. என்னைக் கவனித்த அவர்களுக்கு நான் சொல்வதை முழுவதும் கிரகித்துக்கொள்ள முடியவில்லை என்று புரிந்தது. இருந்தாலும் அவர்களிடம் அதைச் சொன்னதற்கு நான் வருந்தவில்லை. நான் விட்டுவந்தவர்களிடம் நான் கொண்டிருந்த முரணான வெறுப்பின் செறிவை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றே நினைத்தேன். தம் இனிப்பான விழிகளில் அன்பின் அமுதம் ததும்ப அவர்கள் என்னைப் பார்த்தனர். அவர்கள் இருக்கும்போது என் இதயமும் அவர்களைப் போன்றே மாசற்றதாகிறது. வாழ்வின் பூரணம் என்னை பிரமிக்க வைத்தது. அவர்களை மெளனமாய் வழிபட்டேன். 

https://factstore.ru/wp-content/uploads/2017/09/Son_smeshnogo_cheloveka-11.jpg

அந்தோ! அனைவரும் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். நான் சொல்வதைப் போன்ற விவரணைகளுடன் ஒருவரால் கனவு காண இயலாது என்று அடித்துச் சொல்கின்றனர். நான் உறக்கத்தின்போது, நெஞ்சில் எழுந்த ஏதோவொரு உணர்வை மயக்கநிலையில் பெருக்கிக்கொண்டதாகவும் உறங்கி எழுந்தபின் அதன் மீது நிறைய விவரணைகளை நானே சேர்த்துக்கொண்டதாகவும் சொல்கின்றனர். அவை அனைத்துமே உண்மைதான் என்று நான் சொன்னபோது, கடவுளே, எத்தனை சத்தமாக அவர்கள் சிரித்தனர். எத்தகைய களிப்பு உருவாக நான் காரணமாகி இருக்கிறேன்! ஆம், என் கனவின் உணர்வால் ஆட்கொள்ளப்பட்டேன் என்பது உண்மையே! கடுமையாகக் காயப்பட்ட என் இதயத்தில் அதைத்தான் நிரப்பிவைத்துள்ளேன். ஆனால் என் கனவில் வந்த வடிவங்களும் காட்சிகளும் என் கனவின் போதே நான் தெளிவாகக் கண்டவைதான். அதில் அத்தனை இலயமும் நம்மை மயக்கும் யதார்த்தமும் இருந்தது. நான் விழித்தெழுந்த பின் சுயமாக அவர்கள் மொழியை உருவாக்கச் சாத்தியமே இல்லை. அது நிச்சயம் என் கனவோடு மங்கலாகி இருக்கும். நானாக விவரணைகளை ஏற்றிச் சொல்வதற்கு வாய்ப்பில்லை. வேகவேகமாக அதைக் கட்டுமானம் செய்யும் ஆர்வத்தில் அதன் உண்மையைக் குழப்பி ஓர்மையைச் சிதைத்திருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால் இவையனைத்தும் உண்மை என்று என்னால் எப்படி நம்ப முடியும்?

அது நான் சொன்னதைவிட நூறு மடங்கு பிரகாசமானதாகவும் மகிழ்வானதாகவும் இருந்தது. நான் கனவில் கண்டதால் அது உண்மையானதாகவும் இருந்தாக வேண்டும். ஒரு இரகசியம் சொல்கிறேன். அது கனவாக இல்லாமலேயே இருந்திருக்கலாம்! கனவில் கற்பனையாகக் காண முடியாத ஒன்றான பயங்கரமான உண்மை, அச்சமூட்டக்கூடிய ஒன்றானது நிகழ்ந்தும் இருக்கலாம். என் இதயத்தில் அது ஊற்றெடுத்திருந்தாலும் அதற்குப் பிறகு நிகழ்ந்த அனைத்தையும் நிகழ்த்திக்காட்டும் அளவிற்கு எனக்குத் திறனேது? நான் ஒருவன் மட்டும் இத்தகைய கனவை உருவாக்குவது எப்படிச் சாத்தியமாகும்? என்னுடைய பலவீனமான மனமும் அற்ப இதயமும் அத்தகைய வாய்மையை நோக்கி எழுந்துவிட்டதா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இதுவரை நான் மறைத்து வைத்திருந்தேன், இப்போது உண்மையைச் சொல்லிவிடுகிறேன். உண்மை என்னவென்றால்… அது முழுவதையுமே நான் சிதைத்துவிட்டேன்!

5

ஆம், சகலத்தையும் சிதைப்பதில்தான் அது முடிந்தது! அது எப்படி நடந்தது என்பதை அறியேன், எனினும் அது தெளிவாக நினைவிருக்கிறது. அக்கனவு ஆயிரம் ஆண்டுகளை ஒரேயடியாகத் தழுவி எனக்குள் ஒரு முழுமையை விதைத்துச் சென்றது. அவர்களது பாவத்திற்கும் வீழ்ச்சிக்கும் நானே காரணம். கீழ்மையான கிருமியைப் போல, பேரரசுகளைத் தொற்றிய பிளேக் போல, என் வருகைக்கு முன் இன்பகரமாகவும் பாவமறியாமலும் இருந்த இந்தப் பூமியை நாசமாக்கியதைப் போலவே அவர்கள் பூமியையும் சிதைத்தேன். அவர்கள் பொய் சொல்லக் கற்றனர். பொய் பேசுவதில் மிக ஆர்வம் காட்டி போலித்தனத்தில் இருந்த கவர்ச்சியைக் கண்டறிந்தனர். ஆரம்பத்தில் இவையாவும் அப்பாவித்தனமாகத்தான் தொடங்கியது. ஆனால் கேலியும், வசையும், காமமும், அந்தப் போலியான கிருமியுடன் இணைந்துகொள்ள அவர்களது இதயத்தில் அது புற்றாகி அவர்களை மகிழ்வித்தது. விரைவில் அந்த மகிழ்வுணர்வு வளர்ந்தது. அதுவே அழுக்காறாக வடிவெடுத்தது. மெல்ல வன்மமாகவும் உருமாறியது. எனக்குச் சரிவரத் தெரியவில்லை.

விரைவிலேயே முதல் குருதி சிந்தியது. அவர்கள் கொந்தளித்து, அஞ்சி, பிரிந்து, பல குழுக்களாயினர். அவர்கள் சங்கங்களை அமைத்தனர், அவை ஒன்றுக்கொன்று எதிரானவையாக இருந்தன. அவற்றைத் தொடர்ந்து நிந்தனைகளும் குற்றம்சாட்டுதலும் உண்டாகின. அவமானத்தை அறிந்தனர். அது கற்புநிலையை உருவாக்கியது. பெருமித உணர்வு முகிழ்த்தது. எல்லா இனங்களும் தத்தம் கொடிகளைப் பறக்கவிட்டன. அவர்கள் விலங்குகளைத் துன்புறுத்தவே அவை அங்கிருந்து நீங்கி வனங்களுக்குள் மறைந்தன. அவர்களிடம் வெறுப்பை உமிழ்ந்தன. பிரிவுக்கும் தனிமைக்கும் தனித்தன்மைக்கும் தான் – பிறர் என்ற உணர்வுக்கும் உழன்றனர். வெவ்வேறு மொழிகளைப் பேசத் தொடங்கினர். அவர்களுக்குத் துன்பம் பழகியது, அவர்கள் துன்பத்தை நேசித்தனர். வருந்துவதைக் காமுற்றனர். வாய்மை வருத்தங்களின் மார்க்கத்திலேயே அடையக்கூடியது என்று உரைத்தனர். அறிவியல் தோன்றியது. பொல்லாதவர்களானதும் சகோதரத்துவம், மனிதாபிமானம் என்ற கருத்துகளை உருவாக்கி விவாதித்தனர். குற்றவாளிகளானதும் நீதியைக் கண்டறிந்து, அதற்கான சட்டங்களை ஏற்படுத்தி, அதை அனைவரும் பின்பற்றுகிறார்களா என்று கண்காணிக்கத் தொடங்கினர். கூடவே கில்லட்டின் கருவியைச் செய்தனர்.

எதை இழந்தோம் என்பது அவர்களுக்கு அறவே நினைவிலில்லை. ஒரு காலத்தில் அவர்கள் மாசற்றும் மகிழ்ச்சியில் திளைத்தும் இருந்ததை நம்ப மறுத்தனர். அவர்கள் தம் கடந்தகாலத்தில் இருந்ததாகச் சொல்லப்பட்ட மகிழ்ச்சியைப் பார்த்துச் சிரித்து அது வெற்றுக் கனவு என்று கூறினர். அதன் வடிவத்தையும் தடயத்தையும் தெளிவாகக் கற்பனை செய்யும் திறனைக்கூட அவர்கள் இழந்திருந்தனர். விசித்திரமாக, அந்த உண்மையை எல்லாம் புராணங்களாக மாற்றி அதையே இலட்சியமாகக் கொண்டு வாழ்வதாகச் சித்தரித்துக்கொண்டனர். சிறு பிள்ளைகளைப் போல் உருவ பொம்மைகளைச் செய்து, கோயில் கட்டி வணங்கத் தொடங்கினர். தன் இச்சைகளையும் கருத்துகளையும், நிச்சயம் அடைய முடியாது என்ற தீர்க்கத்துடனும் அடைய வேண்டும் என்ற தாகத்துடனும் அவர்களது வழிபாடுகள் இருந்தன. தலைதாழ்த்தி வணங்கி, பக்திப் பெருக்கில் கண்ணீர் சிந்தினர்! அவர்களிடம் யாரேனும் பேராற்றல் தோன்றி, தாம் இழந்திருந்த தீதிலா மகிழ்விற்குத் திரும்பிச் செல்ல வழியுண்டு என்றும், அப்பழைய இனிமைக்குத் திரும்ப விருப்பம் இருக்கிறதா என்று கேட்டாலும், அனுப்பத் தயாராக இருந்தாலும் அவர்கள் அதை நிச்சயமாக மறுத்திருப்பார்கள். 

https://preview.redd.it/2dqn84ir6tz21.png?width=789&format=png&auto=webp&s=3042c15e568dec0d50ce4d8c02714116eb053830
இக்கதையை எழுதுவதற்கு தஸ்தாயேவ்ஸ்கிக்கு தூண்டுதலாக இருந்த ஓவியம்.

அவர்கள் என்னிடம் சொன்னது- “நாங்கள் தலைக்கணமிக்கவராக, பொல்லாங்கு கொண்டவராக, நீதியற்றவராக இருக்கலாம். அதை அறிந்து அழவும் செய்வோம். வருந்துவோம். எங்களுக்கு நாங்களே தண்டனை அளிப்போம். கருணை மிக்க அந்த அறியவொண்ணாத தேவன் வழங்கும் தீர்ப்பைவிட கொடிய தண்டனைகளை அளித்து எங்களை நாங்களே சித்திரவதை செய்துகொள்வோம். ஆனால் எங்களிடம் அறிவியல் இருக்கிறது. அதன் வழியே அறிவுப்பூர்வமாக நாங்கள் வாய்மையைக் கண்டடைவோம். அறிவே உணர்வைவிடச் சிறந்தது. வாழ்வைவிட வாழ்வைப் பற்றிய தன்னுணர்வே முக்கியமானது. அறிவியல் எங்களுக்கு ஞானத்தைத் தரும், ஞானம் சட்டவிதிகளை அடையாளம் காட்டும். அந்தச் சட்டதிட்டங்களைப் பற்றிய அறிதலின் மகிழ்ச்சியே, மகிழ்ச்சியைக் காட்டிலும் மேலானது.” 

இதைத்தான் அவர்கள் சொன்னார்கள். அதற்குப்பின் தன்னையே பிறரைவிட அதிகம் நேசிக்கத் தொடங்கினர். தன்னலமே வளர்ந்தது. அவர்களுக்கு வேறு வழியில்லை. பிறரிடம் எந்தெந்தப் பண்புகளை ஒடுக்கி அழித்தெடுக்க விழைகிறார்களோ அவற்றையே தன்னுடைய பெருமைமிக்க பண்புகளாகக் காண தொடங்கினர். அடிமைத்தனம் உருவானது. தானாக முன்வரும் அடிமைகள் உருவாகினர். தன்னிலும் மெலியாரிடம் தனக்கான அதிகாரத்தை உறுதிசெய்யும் நிபந்தனையின் பேரில், மெலியார் வலியாரிடம் தம்மை அர்ப்பணித்தனர். பிறகு பூசாரிகள் மக்களிடம் வந்து, அழுது, அவர்களது ஆணவத்தையும் ஒற்றுமையின்மையையும் அதர்மம் பற்றிய வெட்கமின்மையையும் சுட்டிக்காட்டினர். அவர்களுக்குச் சிரிப்போ கற்களோ பரிசாகக் கிட்டியது. கோயில் வாயில்களில் புனிதர்களின் குருதி சிந்தியது. அதன்பின் இத்தகைய தன்னலமிக்க சமூகத்தில் இருந்தபடியே ஒற்றுமையாக இருப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தித் தருவதற்கான மனிதர்கள் வந்தனர். இந்த யோசனையின் அடிப்படையில் இயல்பு திரும்பியது. ஒரே காலகட்டத்தின் அனைத்து போட்டியாளர்களும் அறிவியல் மீது தீவிர நம்பிக்கை வைத்தனர். பகுத்தறிவும் தற்பாதுகாப்புணர்வும் மனிதர்களை ஒற்றுமையாக இருக்க வைத்து ஒரு அறிவார்ந்த சமூகத்தை உண்டாக்கும் என்று கண்டுபிடித்தனர். அதேசமயம் விசயங்களைத் துரிதப்படுத்துவதன் பொருட்டு “ஞானமிக்கவர்கள்” தன் வெற்றியைத் தடைபோட்டு விடக்கூடாது என்பதற்காக “ஞானமற்றவர்களை” பல்வேறு வழிகளில் ஒடுக்குவதற்கு கடுமையாக முயன்றனர்.

ஆனால் தற்பாதுகாப்புணர்வு விரைவாகக் குன்றியது. கர்வமும் அறிவும் கொண்ட சிலர் எழுந்துவந்து செய் அல்லது செத்து மடி என்று முழங்கினர். அனைத்தையும் அடைவதற்காக குற்றங்களைச் செய்வதற்கும் தோல்வியுற்றால் தற்கொலை செய்துகொள்ளவும் அவர்கள் தயங்கவில்லை. இருப்பின்மையையும் தன்னழிவையும் முன்னெடுக்கும் குறுங்குழுக்கள் மதங்களாக உருவாகி அழிவின் நித்திய சமாதானத்தைப் பரப்பின. இறுதியில் பொருளற்ற அவர்களது நொய்மையின் சான்றாக தம் முகங்களில் துயரக்களையை ஏந்தினர். பின்னர் துக்கமே அழகு என்று வாதிட்டு  துக்கத்தின் வாயிலாகவே எவரும் சத்தியத்தைக் கைக்கொள்ள முடியும் என்றனர். அவர்கள் தம் துயரைப் பாடல்களில் வைத்து சிலாகித்தனர். அவர்களோடு கைகோர்த்து, அவர்களிடையே நான் நடந்தேன். அவர்களோடு அழுதேன். அவர்கள் முகத்தில் துயரத்தின் கீற்று கிஞ்சிற்றும் இல்லாமல் தீதற்றிருந்த நாட்களைவிட இப்போது அதிகமாக அவர்களை நேசித்தேன். சுவணமாக இருந்ததைவிட இப்போது அதிகமாகத் தூய்மைக்கேடு செய்யப்பட்ட அவர்களது புவியை விரும்பினேன். துயரம் வந்துவிட்டதால் மாசும் வந்துவிட்டது. அந்தோ! நான் துன்பத்தையும் இடுக்கணையும் எப்போதும் விரும்புகிறவன். ஆனால் அது எனக்கானதாக இருப்பதை மட்டும்.

இப்போதோ அவர்களுக்காக அழுது பரிதாபப்பட்டேன். நம்பிக்கையின்மையில் என்னை நானே சபித்தபடி, வெறுத்தபடி, வைதுகொண்டு அவர்களை நோக்கி கரங்களை நீட்டினேன். இது அத்தனையுமே என் செயல், நானே இதற்கு மூலகர்த்தா என்றேன். நானே அவர்களுக்குப் போலித்தனத்தையும், அழிவையும், குற்றங்களையும் கொண்டுவந்தவன். அவர்கள் என்னைச் சிலுவையில் ஏற்றவேண்டும் என்று நாடிச்சென்றேன். சிலுவை செய்யக் கற்றுத் தந்தேன். தற்கொலை செய்யச் சக்தி இல்லை, ஆனால் அவர்கள் கரங்களில் சித்திரவதையை அனுபவிக்க விரும்பினேன். துன்பத்திற்காக ஏங்கினேன். இந்த வேதனைகளில் என் கடைசிச் சொட்டு உதிரம் வரை நனைந்து சுகிக்க வேண்டுமென நினைத்தேன். ஆனால் அவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்து, மடையனைப் போலப் பார்த்தார்கள். அவர்கள் தமக்கானவற்றை அடைந்துவிட்டதாகவும் என்னை வேறொன்றும் செய்யப் போவதில்லை என்றும் என்னிடம் விளக்கினர். இறுதியாக நான் ஆபத்தானவன் என்றும் பைத்தியக்கார விடுதியில் தனியறையில் அடைக்கப்பட வேண்டியவன் என்றும் சொன்னார்கள். என் இதயத்தில் மணியோசை எழுந்ததைப் போல அவர்களது சொற்கள் வலியுடன் எதிரொலித்தது. நான் அங்கேயே இறப்பதைப் போல உணர்ந்தேன். பின்னர்…. விழித்தெழுந்தேன். 

காலை. இன்னும் பகல் ஆகவில்லை. ஆறு மணி இருக்கலாம். அதே கைதாங்கி நாற்காலியில் விழித்தேன். என் மெழுகுவர்த்தி எரிந்தணைந்திருந்தது. கேப்டனின் அறையில் அனைவரும் உறக்கத்தில் இருந்தனர். எங்கும் நிச்சலனம் நிறைந்திருந்தது. எங்கள் வசிப்பிடத்தில் அது அரியது. பெரிய திகைப்புடன் எழுந்தேன். இதைப் போன்றதொரு அனுபவம் இதற்கு முன் எனக்கு நிகழ்ந்ததில்லை. இத்தனை துல்லியத்துடன் ஒருபோதும் கனவு வந்ததில்லை. என் கைதாங்கி நாற்காலியில் அமர்ந்தவாறே நான் உறங்கியதுமில்லை. எழுந்து முழுமையாகத் தன்னுணர்வு அடைந்ததும் என் முன் கைத்துப்பாக்கி குண்டேற்றப்பட்டு இருப்பதைக் கண்டேன். உடனேயே அதைத் தூர வைத்தேன். இப்போது ஒன்றுதான் இருந்தது. வாழ்வு! வாழ்வு! கைகளை உயர்த்தி அந்த நித்திய வாய்மையை உச்சரித்தேன். வார்த்தைகளால் அல்ல, கண்ணீரால்! பரவசம், அளவிட முடியாத பரவசம் என் ஆன்மாவில் பெருக்கெடுத்தது. ஆம், நல்வாழ்வின் நீர்ப்பெருக்கு! அந்த நொடியில், அந்த இன்ப அலைகளை வாழ்க்கை முழுவதும் நிரப்பிக்கொள்ளப் போவதாகத் தீர்மானம் செய்தேன். அதை எங்கும் பரப்பிட விழைந்தேன். எதைப் பற்றி? வாய்மையைப் பற்றி. அதை நான் கண்டடைந்தேன். என் விழிகளால் அதன் சிறப்பை அறிந்தேன். 

https://images-na.ssl-images-amazon.com/images/I/51xtJrJ-hFL._SX331_BO1,204,203,200_.jpg

அப்போதிலிருந்து நான் பிரசங்கம் செய்கிறேன்! மற்றவர்களைவிட என்னைப் பார்த்துச் சிரித்தவர்களை மிக அதிகமாக நேசிக்கிறேன். ஏனென்று தெரியவில்லை. அதற்கு விளக்கமும் இல்லை. அதனால் அப்படியே இருக்கட்டும். நான் தெளிவற்ற குழப்பமான ஆள் என்று சொல்கிறார்கள். இப்போது நான் தெளிவற்ற குழப்பமான ஆள் எனில் இனிவரும் காலங்களில் என்னாவேன்? அது ஒருவகையில் உண்மையும்கூட. நான் தெளிவற்ற குழப்பமான ஆள்தான். காலம் செல்லச் செல்ல இன்னும் அதிக குழப்பவாதியாகவும் கூடும். நிறைய அபத்தங்களைச் செய்வதற்கு முன்பாக நான் எப்படிப் பிரசங்கம் செய்வது, எத்தகைய சொற்களைத் தேர்வுசெய்வது என்றெல்லாம் முடிவுசெய்ய வேண்டிய கடுமையான பணி முன்னிற்கிறது. அது தெள்ளிய காட்சியாக இருக்கிறது, எனினும் பிழைகள் செய்யாதவர் எவர்தான் உளர்? துறவி முதல் திருடன் கடையாக அனைவரும் ஒரே நோக்கத்தைத்தான் வைத்து முன்னேறுகின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

என்னுள் புதிதாக முளைத்திருப்பது ஒன்றுதான். நான் தவறான பாதையில் நெடுந்தூரம் செல்ல மாட்டேன். சத்தியத்தைக் கண்ணுற்றதால், அதிகாரத்தின் சுமை இல்லாமலேயே மக்களால் இன்புற்று வாழச் சாத்தியமுண்டு என்பதை அறிந்ததால் சொல்கிறேன். மானுடத்தின் இயல்புகளில் ஒன்று தீமை என்பதை நான் ஏற்க மாட்டேன். அவர்கள் சிரிப்பதுகூட என் நம்பிக்கையைப் பார்த்துதானே அன்றி என்னைப் பார்த்து அல்ல. அதை எப்படி நம்பித் தொடர்வது? நான் சத்தியத்தைக் கண்ணுற்றதால். நான் மூளையைப் பயன்படுத்தி அதைக் கண்டுபிடிக்கவில்லை, அதை நேரடியாகவே கண்ணுற்றேன். அதன் உயிர்த்துடிப்பான படிமம் என் ஆன்மாவில் நித்தியமாய் நிறைந்திருக்கிறது. அத்தகைய பூரணத்துவத்தைக் கண்டபின் மக்களால் அதை அடைய முடியாது என்று நினைப்பது அவநம்பிக்கையின் உச்சம். எப்படி நான் பிழைசெய்ய முடியும்? சில இடறல்கள் நிகழலாம். ஆனால் தோற்பது சாத்தியமல்ல. இரண்டாவதாக, ஒரு எளிய மொழியைப் பேசி, அதன் வழியே சரியான பாதையை மக்களுக்குக் காட்டலாம். என்னுள் புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் மிளிர்கிறது, இப்படியே ஆயிரமாண்டுகள்கூட இருக்க முடியும் என்று தோன்றுகிறது! முதலில் அவர்களை நான் கெடுத்ததை மறைக்கத்தான் முயன்றேன். ஆனால் அதுவொரு தவறு, என் முதல் தவறு! சத்தியம் என் செவியில் ‘நான் பொய் சொல்கிறேன்’ என்று உச்சரித்து என்னை நேர்வழிப்படுத்தியது. எப்படி சொர்க்கத்தை இங்கு நிர்மானிப்பது? தெரியாது, ஏனெனில் அதை வார்த்தைகளின் போதாமை கொண்டு எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியாது.

என் கனவிற்குப் பிறகு சொற்கள் மீதான என் ஆளுமையை இழந்துவிட்டேன். எல்லா நற்சொற்களும் முக்கியமானவை. என்னால் முழுமையாகச் சொல்ல முடியாது என்றபோதும் நான் பார்த்தவற்றைத் தொடர்ந்து பேசியவாறு இருப்பேன். ஓயமாட்டேன். அது ஒரு கனவு! அவர்கள் அதை மயக்கம், மூளைக் குழப்பம், பிரமை என்றெல்லாம் சொல்கிறார்கள். அதற்கெல்லாம் பொருளில்லை. அவர்கள் ஆணவத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். கனவு! கனவென்பது என்ன? நம் வாழ்வு மட்டும் கனவில்லையா என்ன? நான் அப்படிச் சொல்வேன். ஒருவேளை இந்தச் சுவணம் ஒருபோதும் வெற்றிபெறாமல் போனாலும் நான் தொடர்ந்து பிரசங்கிப்பேன். இருந்தபோதும் எத்துணை எளிமையானது இது- ஒரு நாளில், ஒரு மணி நேரத்தில் அனைத்தையும் சரியான முறையில் ஒருக்கிட முடியும்! முதன்மையான விசயம் தன்னைப் போல பிறரையும் நேசிப்பதுதான். அதுவே சிறப்பு. அதுவே எல்லாம். வேறேதும் தேவையில்லை! அது போதும். அனைத்தையும் எப்படிச் சரிசெய்வது என்பது விளங்கிவிடும். இந்த உண்மை மிகப் பழமையானது. ஏற்கனவே கோடான கோடி முறை மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுவிட்டது. ஆனால் வாழ்வின் பகுதியாக இன்னும் மாறவில்லை! வாழ்வைப் பற்றிய தன்னுணர்வே வாழ்வைவிட முக்கியமானது. மகிழ்ச்சியின் விதிகளை அடையாளம் காட்டும் அறிவே மகிழ்ச்சியைக் காட்டிலும் மேலானது என்பதற்கு எதிராகத்தான் ஒருவர் போராட வேண்டும். நான் போராடுவேன். யாரும் அதைப் பெற விரும்பினால் போதும். உடனடியாகவே தனக்குள் அனைத்தையும் ஒருக்கிவிட இயலும். 

அதன்பின் அந்தச் சிறுமியைத் தேடிக் கண்டுபிடித்தேன்.  இனி தொடர்ந்து செயலாற்ற வேண்டும்! 

*

ஆங்கில மூலம்: The Dream of a Ridiculous Man by Fyodor Dostoevsky, Waking Lion Press, 2008 Edition. இக்கதை குறும்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பில் அதனைக் காணலாம்.