எழுதும் கலை – எட்கர் கீரத்

by செங்கதிர்
0 comment

மாயா எழுதிய முதல் கதையில் மனிதர்கள் குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக உடலை செங்குத்தாகப் பிளந்து இரண்டாக்கிக்கொண்டார்கள். அந்த உலகில், எந்த ஒரு மனிதனும் எத்தருணத்திலும் ஓருயிரை ஈருயிராக்கிக் கொள்ளலாம். அப்படியாகும் இரு உயிர்களும் வயதில் பாதிப்பாதியாகிவிடும். சில மனிதர்கள் இளம் வயதிலேயே இதை உபயோகித்துக்கொண்டார்கள். உதாரணமாக, பதினெட்டு வயது இளைஞன் பிளந்து ஒன்பது வயதுமிக்க இரண்டு சிறுவர்களாக மாறிக்கொள்ளலாம். சில மனிதர்கள் வாழ்க்கையில் எதையாவது சாதிப்பதற்காக மத்திம காலம் வரை காத்துக்கொண்டிருப்பார்கள். மாயாவின் கதைநாயகி பிளவுற விரும்பாதவள். எண்பது வயதை எட்டியிருந்த அவள், முடிவற்ற சமூக அழுத்தத்தையும் மீறி, பிளவுகொள்ளாமல் இருக்க முடிவெடுத்தாள். கதையின் முடிவில் அவள் இறந்துவிடுவாள்.

முடிவைத் தவிர்த்துவிட்டால், அது ஒரு நல்ல கதைதான். முடிவு ஏதோ ஒரு வகையில் மனதைத் துக்கப்படுத்துவதாக அவியட்டுக்குத் தோன்றியது. கதை துக்கப்படுத்துவதாகவும் முன்முடிவுடன் இருப்பது மாதிரியும் தோன்றியது. ஆனால் மாயா சேர்ந்திருந்த எழுத்துப் பட்டறையின் பொறுப்பாளன், கதை முடிவின் சாதாரணத்தனம் மனதைத் தொந்தரவு செய்வதாகவோ, அல்லது அதுபோல மடத்தனமான எதையோ சொல்லியிருந்தான். மிகவும் பிரபலமான அந்த எழுத்தாளனை அவியட் அதற்கு முன்பு கேள்விப்பட்டதுகூட இல்லை. அந்த எழுத்தாளனின் பாராட்டு மாயாவை  குதூகலப்படுத்தியிருக்கிறது என்பது அவியட்டுக்குத் தெரிந்தது. அதைப் பற்றி பேசும்போது மாயா மிகவும் உற்சாகமாக இருந்தாள். மற்றவர்கள் விவிலியத்தின் பக்கங்களை வாசிப்பதைப் போல, மாயா தன்னிடம் எழுத்தாளன் பாராட்டி எழுதியதை வாசித்தாள். முடிவை மாற்றி எழுத வேண்டும் என யோசனை சொல்ல நினைத்த அவியட் பின்வாங்கினான். இது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது எனவும், தான் இதைப் பற்றி அதிகம் தெரிந்தவன் இல்லை எனவும் அவியட் சொன்னான்.

மாயா எழுத்துப் பயிலரங்குக்குப் போகவேண்டும் என்ற யோசனை அவளது அம்மாவுடையது. தனது தோழியின் மகள் போய்வந்ததாகவும், அவளுக்குப் பிடித்துப் போனதாகவும் மாயாவின் அம்மா சொன்னாள். மாயா வீட்டைவிட்டு வெளியில் சென்று, தன்னைத்தானே சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டால் அவளுக்கு நல்லது என அவியட்டும் நினைத்தான். அலுவலக வேலைகளில் அவன் எப்போதும் மூழ்கிவிட இயலும். ஆனால் கருக்கலைவு உண்டான பின்னர், அவள் வாசற்படியைக்கூட தாண்டியது இல்லை. அவன் வீட்டிற்கு வந்துசேரும் பொழுதெல்லாம், நேர்க்குத்தாக இருக்கையில் வெறுமனே உட்கார்ந்துகொண்டிருப்பவளையே பார்க்க நேர்ந்தது. வாசிப்பதையும் தொலைக்காட்சி பார்ப்பதையும் நிறுத்தியிருந்தாள். இவ்வளவு ஏன், அவள் அழுதுகூட பார்த்தது இல்லை. பயிலரங்கில் சேர மாயா தயங்கியபோது, அவளை எப்படி சம்மதிக்க வைக்கவேண்டும் என அவியட்டிற்குத் தெரிந்திருந்தது. “ஒரு தரம் போய்ப் பார், முயற்சி செய், குழந்தைகள் பகலைக் கழிக்கப் போய் வருவதைப் போல போய்வா” என்றான். சொன்ன பிறகுதான் அவனுக்குத் தோன்றியது, இரண்டு மாதங்களாக அவள் அனுபவித்த வேதனைக்குப் பிறகு குழந்தையின் உதாரணத்தைச் சொன்னது தடித்தனமான செயல். ஆனால் உண்மையில் பயிலரங்கில் சேருவது தனக்கு உகந்த காரியமாக இருக்கும் என்று மாயா புன்னகையுடன் சொன்னாள்.

அவள் எழுதிய இரண்டாவது கதை மனிதர்களால் நேசிப்பவர்களை மட்டுமே பார்க்க முடிகிற உலகைப் பற்றியது. கதைசொல்லி தனது மனைவியை மிகவும் நேசிக்கும் ஒருவன். ஒரு நாள் வரவேற்பறையில் மனைவி அவன்மீது மோதிவிட, அவன் கையில் வைத்திருந்த கண்ணாடி கீழே உடைந்து நொறுங்கியது. சிலநாட்கள் கழித்து, இருக்கையில் உட்கார்ந்தபடியே அவன் கண்ணசந்துவிட, அவள் அவன்மீதே உட்கார்ந்துவிட்டாள். இரண்டு முறையும் அவள் காரணம் சொல்லித் தப்பித்துக்கொண்டாள். அவள் மனதில் ஏதோ ஓடிக்கொண்டிருந்ததாகவும், கவனிக்காமலேயே இருக்கையில் அமர்ந்துவிட்டதாகவும் சொன்னாள். ஆனால் அவள் இப்போதெல்லாம் தன்னைக் காதலிப்பதில்லை எனக் கணவன் சந்தேகம் கொள்ளத் தொடங்கினான். தனது அனுமானத்தைச் சோதித்துக்கொள்ள, அவன் அதிரடியான ஒரு முடிவெடுத்தான். தனது மீசையின் இடதுபாகத்தை மழித்துக்கொண்டான். தனது பாதி மீசையுடன் கையில் பூங்கொத்து ஏந்தியவாறு அவன் வீடு திரும்பினான். பூக்களுக்காக நன்றி சொன்ன மனைவி, புன்னகைத்தாள். முத்தமிட அவள் முயன்றபோது, காற்றைத் துழாவிக்கொண்டிருந்ததை அவன் உணர்ந்துகொண்டான். பாதி மீசை என்று மாயா அந்தக் கதைக்குத் தலைப்பிட்டாள். அந்தக் கதையை அவள் சத்தமாக வாசித்தபோது, பயிலரங்கில் சிலர் அழுததாகச் சொன்னாள். “அற்புதம்” என்று சொன்ன அவியட் அவளது நெற்றியில் முத்தமிட்டான். அன்றிரவு முட்டாள்தனமான சிறிய விசயத்திற்காக அவர்கள் சண்டையிட்டுக்கொண்டார்கள். அவள் ஒரு  தகவலைச் சொல்லவோ, எதையோ செய்யவோ மறந்துவிட்டதற்காக அவன் அவளைப் பார்த்துக் கத்தினான். தவறு அவனுடையதுதான். எனவே, கடைசியில் அவன் மன்னிப்பு கேட்டுக்கொண்டான். “அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம்” என்றபடியே திடீரென கோபத்துடன் கத்தியதை சமாளிக்கும் வகையில் அவள் காலைப் பிடித்துவிட்டான். “என்னை மன்னிப்பாயா?” என்று கேட்டான். அவள் அவனை மன்னித்துவிட்டாள்.

பயிலரங்கின் பயிற்சியாளர் ஒரு புதினத்தையும், சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருந்தார். இரண்டுமே பெரிதாக விற்பனையாகவில்லை என்றாலும், சில நல்ல மதிப்புரைகளைப் பெற்றிருந்தது. இல்லை, அப்படிப் பெற்றதாக அவியட்டின் அலுவலகத்திற்கு அருகே இருந்த புத்தகக் கடையின் விற்பனைப் பெண் சொன்னாள். புதினம் 624 பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம். சிறுகதைத் தொகுப்பை அவியட் வாங்கினான். அதை தனது அலுவலக மேசைமீது வைத்துக்கொண்டு, பகலுணவு இடைவேளைகளில் படிக்க முயன்றான். தொகுப்பின் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு வெளிநாடுகளில் நடப்பதாக எழுதப்பட்டிருந்தது. அது ஒரு சித்துவேலை மாதிரி. புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்புபடி எழுத்தாளன் க்யூபா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் சுற்றுலா வழிகாட்டியாக பல வருடங்கள் வேலை பார்த்ததாகவும், அதுவே அவனைப் பாதித்ததாகவும் எழுதப்பட்டிருந்தது. அவனது ஒரு சிறிய கருப்பு வெள்ளைப்படமும் இருந்தது. அப்புகைப்படத்தில், தான் இப்படியொரு நபராக இருப்பதன் அதிருஷ்டத்தை உணர்ந்த வறட்டுப் புன்னகையுடன் இருந்தான். பயிலரங்கு முடிந்தவுடன் அவளது கதைகளை தனது பதிப்பாசிரியருக்கு அனுப்பிவைப்பதாக எழுத்தாளன் சொன்னதாக மாயா அவியட்டிடம் சொன்னாள். அவள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கக் கூடாது என்றாலும், சமீபகாலங்களில் பதிப்பாசிரியர்கள் புதிய குரல்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

அவளது மூன்றாவது கதை விளையாட்டுத்தனமாகத் துவங்கியது. அக்கதை பூனையைப் பெற்றெடுக்கும் ஒரு பெண்ணைப் பற்றியது. கதையின் நாயகனான கணவன் பூனைக்குத் தந்தை தானல்ல என நினைக்கிறான். அவர்களது படுக்கையறையின் ஜன்னலுக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் பெரும் குப்பைத் தொட்டியின் மூடிமேல் படுத்திருக்கும் கொழுத்த ஆண்பூனை அவன் குப்பையைக் கொட்ட கீழே போகும் ஒவ்வொரு முறையும் அவனை அனுதாபமாகப் பார்த்தது. கடைசியில் கணவனுக்கும் பூனைக்கும் இடையே கடும்சண்டை  நிகழ்ந்தது. கணவன் பூனையின்மீது கல்லை எறிந்தான். பூனையும் பதிலுக்கு கடிக்கவும் கீறவும் செய்தது. காயம்பட்ட கணவனும், அவனது மனைவியும் அவள் பாலூட்டி வளர்த்த பூனைக்குட்டியும் அவனுக்கு வெறிநாய் ஊசி போடுவதற்காக மருத்துவமனைக்குப் போனார்கள். அவமானத்தையும் வலியையும்  தாங்கிக்கொண்டிருந்தவன், அங்கே காத்திருந்தபோது அழாதிருக்க முயன்றான். அவனது வலியைப் புரிந்துகொண்ட பூனைக்குட்டி, தாயின் அணைப்பிலிருந்து மீண்டு அவனிடம் போய், அவனது முகத்தைப் பாசத்துடன் நக்கியவாறு, மியாவ் என்று குளறியது. பொங்கும் உணர்ச்சியுடன் அம்மா கேட்டாள், “என்ன சொல்கிறது தெரிகிறதா?” அவன் சொன்னான், “அப்பா”. அந்தத் தருணத்தில் கணவனால் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அவியட்டும் கண்ணீர் சிந்தாமல் இருக்க முயன்றான். தான் மீண்டும் கர்ப்பமாகும் முன்னரே இந்தக் கதையை எழுதத் தொடங்கிவிட்டதாக மாயா சொன்னாள். “வினோதமாக இல்லை? இதுவரை எனது மூளைக்குத் தெரியாத ஒன்று, எனது ஆழ்மனதுக்கு எப்படித் தெரிந்திருக்கிறது?” என்று கேட்டாள்.

அவளைப் பயிலரங்கில் இருந்து அழைத்துச்செல்ல வேண்டியிருந்த அவியட், அடுத்த செவ்வாய்க்கிழமையன்று அரைமணி முன்பே போய்ச் சேர்ந்தான். கார் நிறுத்தும் இடத்தில் வாகனத்தை விட்டுவிட்டு, அவளை அழைத்துவரச் சென்றான். பயிலறையில் அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்ட மாயா, எழுத்தாளரிடம் அவனை அறிமுகப்படுத்துவதில் உறுதியாக இருந்தாள். எழுத்தாளனின் உடலில் இருந்து வாசனை திரவத்தின் நெடியடித்தது. அவியட்டின் கைகளை சோம்பேறித்தனமாகப் பற்றியபடி அவன் சொன்னான், “மாயா ஒருவனை கணவனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்பதால் அவன் ஒரு சிறப்பான மனிதனாகத்தான் இருக்கவேண்டும்”.

மூன்று வாரங்கள் கழித்து எழுத்துப் பயிலரங்கின் ஆரம்பக்கட்ட வகுப்பில் அவியட் சேர்ந்துகொண்டான். அவன் அதைப்பற்றி மாயாவிடம் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை. மேலும் கவனத்துடன் இருக்க விரும்பி, வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தால், தான் முக்கியமான வேலையில் இருப்பதாகவும், அவனைத் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் தனது செயலாளருக்குச் சொல்லி வைத்திருந்தான். பயிலரங்கின் மற்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் வயதான பெண்கள். அவனை அவர்கள் இளக்காரமாகப் பார்த்தார்கள். அவர்களது வகுப்பிற்கு வந்த ஒல்லியான இளம் பெண் பயிற்சியாளர் தன் தலையைச் சுற்றி அலங்காரத் துணியைப் போர்த்தியிருந்தாள். பயில வந்திருந்த பெண்கள், அப்பெண் ஆக்கிரமிக்கப்பட்ட குடியிருப்பில் வாழ்வதாகவும், அவளுக்குப் புற்றுநோய் பீடித்திருப்பதாகவும் கிசுகிசுத்துக்கொண்டார்கள். அவள் அவர்கள் அனைவரையும் மனதில் தோன்றியதை எழுதிப் பழகும்படி கேட்டுக்கொண்டாள். “மனதில் வருவதை அப்படியே எழுதுங்கள். யோசிக்காதீர்கள், எழுதிக்கொண்டே இருங்கள்”. அவியட் யோசிப்பதை நிறுத்த முயன்றான். அது கடினமான செயலாக இருந்தது. வயதான பெண்கள் வெறித்தனமாக எழுதிக்கொண்டிருந்தார்கள். ஆசிரியர் எந்த நிமிடமும் எழுதுவதை நிறுத்தச் சொல்லிவிடுவார் என்பது போல அவசரமாக பரீட்சை எழுதித் தீர்க்கும் மாணவர்களாகி அவர்கள் எழுதிக்கொண்டிருந்தார்கள். அவனும் சில நிமிடங்கள் கழித்து எழுதத் தொடங்கினான்.

அவன் எழுதிய கதையில் வரும் மீன் சமுத்திரத்தில் சந்தோசமாகத் திளைத்துக்கொண்டிருந்த போது, திடீரென ஒரு குரூரமான சூனியக்காரியால் மனிதனாக மாற்றப்பட்டது. இந்த உருமாற்றத்தை தாங்கிக்கொள்ள இயலாத மீன், குரூரமான சூனியக்காரியைத் தேடி தன்னை மீண்டும் மீனாக மாற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்ள முடிவுசெய்தது. மிகவும் விவேகமும் விபரமுமான மீனாக இருந்ததால் சூனியக்காரியைத் தேடிக்கொண்டிருக்கும்போதே அவன் திருமணம் செய்துகொண்டான். ஒரு நிறுவனத்தையும் ஆரம்பித்து தூரக்கிழக்கு நாடுகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்யத் தொடங்கினான். ஏழு சமுத்திரங்களிலும் நீந்திய அனுபவத்தினால் பெற்ற அபார அறிவினால் நிறுவனம் தாக்குப்பிடிக்கவும், மக்களின் முதலீட்டைப் பெறும் நிலையையும் அடைந்தது. இதற்கு நடுவே, தனது பலவருட சூனியத்தினால் வெறுத்துப்போயிருந்த குரூரமான சூனியக்காரி, தான் சீரழித்த எல்லா மனிதர்களையும் உயிர்களையும் பார்த்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, அவர்களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றவேண்டுமென முடிவுசெய்தாள். ஒருகட்டத்தில், அவள் மனிதனாக மாறிய மீனையும் சந்திக்கப் போனாள். மீனின் செயலாளர், தனது எஜமானன் தைவானைச் சேர்ந்த பங்குதாரர்களுடன் இணையவழிக் கூட்டத்தில் இருப்பதாகவும், அது முடியும்வரை காத்திருக்கும்படியும் சொன்னாள். தனது வாழ்க்கையின் அந்தக் கட்டத்தில் பாதி உலகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மீனுக்கு, தான் ஒரு மீனாகப் பிறந்ததாக ஞாபகம்கூட இல்லை. பலமணி நேரம் காத்திருந்த சூனியக்காரி கூட்டம் முடிய நீண்ட நேரமாகும் எனத் தெரிந்துகொண்டதால், தனது துடைப்பத்தின் மீதேறிப் பறந்து போய்விட்டாள். மேலும் மேலும் வணிகத்தில் முன்னேறிக்கொண்டே இருந்த மீன், வருடங்கள் கழித்து வயதான ஒரு நாளில் தான் வாங்கிய பல அடுக்கு கடலோர மாளிகைக் கட்டடங்களில் ஒன்றின் சாளரம் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த போது சமுத்திரத்தைக் கண்டது. தான் மீனாகப் பிறந்ததை திடீரென நினைத்துக்கொண்டது. உலகம் முழுதும் பங்குச் சந்தைகளில் வணிகம் செய்யும் பல தொழில் நிறுவனங்களுக்கு சொந்தக்காரனாகவும் பெரும் பணக்காரனாகவும் இருந்தாலும் தான் மீன்தான் என்பதை உணர்ந்துகொண்டது. பல வருடங்களாக சமுத்திரத்தின் உவர்ப்பைச் சுவைக்காது வாழும் ஒரு மீன்.

அவியட் பேனாவைக் கீழே வைப்பதைப் பார்த்த பயிற்சியாளர், அவனைக் கேள்வியால் துளைத்தாள். “எனது கதையில் முடிவு இல்லை” என மன்னிப்பு கேட்கும் தொனியில், இன்னும் எழுதிக்கொண்டிருக்கும் வயதான பெண்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக தனது குரலைத் தாழ்த்தி அவன் முணுமுணுத்தான்.

*

ஆங்கில மூலம்: Creative Writing by Etgar Keret