நிழல் இலா ஒளி (பகுதி 2)

by பாதசாரி
0 comment

இருந்துகொண்டே இல்லாமல் இருப்பதில்தான் ஓர் அமைதி.

*

அலைகளின் பெருத்த ஓசைக்கு கடல் காரணமில்லை, ஊளையிடும் காற்றுதான் காரணம்.

*

நாம் அதிகமும் செல்லம் கொஞ்சுவது பிள்ளைகளோடோ, பேரன் பேத்திகளோடோ அல்ல. காதலன், காதலியோடுதானா எனில் அதுவுமல்ல. பின்னே? பழக்கத்தோடுதான்.

*

மரண பயம் நீங்கினாலே மரணத்தைக் கடந்ததாகும்.

*

உடலினுள் உயிர், தான் கடைந்த போதில் திரண்ட அமுதம் தலைக்கேறும். விடத்தையோ நாவில் தேக்கும் மாசுறு மனம்.

*

என் அறிவுக்கு உணவு என் மனக்கனிகளே!

*

அஞ்சுகிறேன், அதனால் இருக்கிறேன்?

*

காலத்தின் சீருடை அணிந்த இந்த எண்ணங்களின் அணிவகுப்பு. அது உடலிலிருந்து புறப்பட்டு எங்கோ போய்த்தொலையட்டும், விடு.

*

மனதைக் குறித்த புகாரை மொழியிடம் முறையிட்டு என்ன பயன்? மனதின் சுவாசமே மொழிதானே!

*

நல்லவனாகப் பேரெடுக்க நாலுபேர் முன்னிலை தேவை. நல்லவனாக இருக்க நானொருவனே போதும்.

*

தேடுதேடுதேடுவெனத் தேடியும் திருப்தியுறாது அகந்தை நிறை தரித்திரச் சிந்தை.

*

மரங்களின் நிழலில் எம் மனிதனும் விடைத்து நடப்பதில்லை, பணிந்தே நடக்கிறான். பேரியற்கையே, உன் கருணையினின்று நொடியும் அகலாது தாள்பணிந்து நடக்கிறேன்.

*

நல்ல உள்ளம் என்பது எதையும் வெல்லும் எண்ணம் இல்லாதது. அதற்கு வெல்லவும் ஞாலத்தில் எதுவுமில்லை.

*

நாய் குரைக்கும் போதெல்லாம், அது கோபத்தில் குரைக்கிறது என்றே எடுத்துக்கொள்பவன் எதைத்தான் புரிந்துகொண்டான் இவ்வுலகில்?

*

கனியக் கனியத் திரள்வது அர்த்தம்.

*

காரியத்தைவிட காரணம்தான் மிகுந்த மனப் பதற்றத்தைக் கூட்டுவது. காரணத்திற்கெல்லாம் அடிபணிந்து விடுமா இந்த மூடுபனி மனம்? எக்காரணம் கொண்டும் இனி எதற்கும் காரணத்தைத் தேடி, அமைதியை இழக்கக்கூடாது. காரணம் எதுவும் வாழ்வுக்கு அர்த்தம் வழங்கிவிடாது. எல்லாக் காரணமும் மனிதன் புரிந்துகொள்ளச் சுலபமானவையும் அல்ல.

*

உடல் உறங்கி எழும்.
புறம் உண்டு அகம் கழிக்கும்.
ஊறவைத்துக் கசக்கிப் பிழியப்பட்டு
உதறிக் கொடியில் உலரும் துணிகள்.
அவ்வளவுதான்
உன் பொருள் வாழ்வு.

*

பிறர் மீது வெறுப்பின் கசப்பை உமிழ உமிழ,
தன்மீதும் வெறுப்பின் கசப்பு தனக்குள் சேகரமாகித்
தானே விழுங்க வேண்டியிருக்கிறது.

*

ஆசை மோகத்தின் அந்தித் துளி வற்றினும்,
அதை அடைதலின் அகந்தை ஊற்று ஏங்கியே நிற்கும்!

*

விசிறிக் கை ஓய்ந்தேன்.
ஓயாமல் காலம் வீசிக்கொண்டிருக்கிறது.

*

காலம் என்பது நம் தலைக்கு மேல் மர்மமாய்த் தொங்கியபடி நம்மை மிரட்டிக்கொண்டிருப்பது!
இடம் என்பதோ நம் பாதம் பணிய மண் முத்தமிடுவது!
நினைவுக்குள் காலத்தை இழுத்து வந்துவிடலாம்.
நினைவுக்குள் நம் இடம் அது கொள்ளுமோ!
வாழிடம் நீங்குவதே மனித வாதையின் உச்சம்.

*

போதுமே என்னுள் இம்மூன்றுமே:
சூரியன், மலர், தேனீ.