நைனா அரிவாளை எடுத்துக்கொண்டு தன்னை வெட்ட வருவதாக அவன் கனவு கண்டான். நைனா நரம்பு வெளிறிய தன் மெலிந்த கரங்களால் அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார். தோட்டப்பக்கம் உலுத்துக் காய்ந்து பட்டுப்போன மரத்தில் அவன் தலையை மோத பொலபொலவென்று கொட்டி அவன் மேலே விழுந்து சிதறியது. தன் கழுத்துக்கு மேலே ஓங்கிய அரிவாளை நினைத்து அவன் பீதி அடைந்தான். நைனாவின் பிடியிலிருந்து திமிற முடியாமல் போகவே அம்மா… என்று கத்த முயன்றான். அப்படி அலறினோமா இல்லையா என்ற தெளிவு இல்லாமலேயே அவன் திடுக்கிட்டு விழித்தான்.

அம்மா பக்கத்தில் கிடந்தாள். மங்கலாகத் தெரியும் மென்மையும் வெதுவெதுப்புமான அவள் சரீரம் அவனுக்குக் கொஞ்சம் ஆறுதல் அளித்தது. அவன் கலவரமடைந்த கண்களால் அறையை வெறித்து நோக்கினான். கம்மிய ராந்தலின் ஒளியைச் சுற்றி எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. 

நைனா ஏழெட்டு மாதங்களுக்கு முன்பாக ஒருநாள் நெஞ்சு வலியால் செத்துப் போனார். ஆனாலும் அவர் இந்த இருளில் எங்கோ ஒளிந்திருந்து தன்னை வேவு பார்ப்பதாக அவன் கருதினான். எழுந்து விளக்கைப் பெருசாக்கிப் பார்த்துவிடலாம். ஆனாலும் அவர் அங்கே இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் பேசாமலிருந்தான். படுக்கையிலிருந்து எழுந்திருக்கக்கூடத் துணிவு அற்றவனாய் மூச்சையிறுக்கி, கண்கள் மட்டும் கொட்டக் கொட்ட விழித்திருந்தான். முன் கோபமும் சிடுசிடுப்பும் கொண்ட தந்தையோடு வாழ்ந்த நாட்களிலே மனம் கனத்து அந்த நினைவுகளில் கரைந்தான்.

கருத்துத் தெரிந்த நைனா எப்போது முதன்முதலாய் அப்படிக் காட்சி தந்தார் என்பதை நினைத்துப் பார்க்க முயன்று தோல்வி கண்டான். குழந்தைப் பருவத்து நினைவுகள் எங்கெங்கோ அலைந்து தேய்ந்து மங்கியது போல் அவனுக்குத் தெளிவில்லாமல் குழம்பின. யார் மார்பில் பால் குடித்தோம்… யார் தன்னைத் தூக்கி வளர்த்தார்கள் என்பதுகூட அவனுக்கு ஞாபகம் வரவில்லை. நைனா என்று எப்போது அவரை முதல்முதலாகக் கூப்பிட்டோம் என்பதுகூட சரியாக நினைவில் இல்லை. ஆனாலும் முதல் தோற்றத்திலேயே நைனா பயங்கரமாய் இருந்தார்.

அப்போது மூணு வயதோ நாலு வயதோ, சரியாகத் தெரியவில்லை. ஆனால் அப்போது நைனா சாகவில்லை. அவன் மட்டும் அம்மணமாகக் கிடந்தான். அம்மா பக்கத்தில் கிடந்தான். அடிக்கடி படுக்கையிலேயே சிறுநீர் கழித்தான். அம்மா புடவையைத் தொப்பையாய் நனைய வைத்தான். இரவு முழுதும் அவள் அரவணைப்பிலேயே, அவள் மேல் காலைத் தூக்கிப்போட்டுக் கிடந்தான். அம்மாவை யாரோ தொட்டு எழுப்பினார்கள். அசக்கி உருட்டினார்கள். அவன் கரத்தை எடுத்து அப்பால் போட்டுவிட்டு ‘திரும்பிப் படுமே!’ என்று கட்டளையிட்டது கேட்கிறது. அம்மா அவனை விட்டு நழுவினாள். ஒருக்களித்துப் படுத்து அந்த வாட்டமாய் நகர்ந்தாள். அவன் அவளை விடாமல் இறுக்கிக்கொண்டு அடம் பண்ணினான். அழுது காலை உதைத்து அட்டகாசம் செய்தான்.

‘இது வேற சனியன்! எப்பப் பாத்தாலும் ராமாயணம் வச்சிக்னு…’ நைனா விளக்கைப் பெருசாக்கி எழுந்து உட்கார்ந்துகொண்டு முறைத்தார். டொங்கு விழுந்த கண்கள் பூனையினுடையதைப் போலத் தெரிகிறது. விழித்துப் பார்க்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டான். அம்மா திரும்பிப் படுத்து அணைத்து அவன் முதுகைத் தட்டித் தூங்கப் பண்ணினாள். அவன் காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டே நிம்மதியாகத் தூங்கும்போது நைனா மறுபடியும் சீண்டினார்.  

‘சும்மா இருங்க. கொழந்த அழுவான். தூங்கட்டும்…’

நைனாவைப் பற்றி எப்போது நினைத்தாலும் முதல் ஞாபகமாக அவனுக்கு இதுவே வந்தது. அவர் எப்போதாவது அவனைத் தூக்கிக் கொஞ்சியிருக்கிறாரா… கையைப் பிடித்து அழைத்துச் சென்று கடைத்தெருவில் எதையாவது வாங்கிக் கொடுத்திருக்கிறாரா என்பது எதுவும் அவன் ஞாபகத்தில் இல்லை. யோசித்து யோசித்துப் பார்த்தாலும் அப்படி எதுவும் நினைவுக்கு வரவில்லை.

நைனா அவனைப் பள்ளிக்கூடம் இழுத்துச் சென்று சேர்த்தது மட்டும் நேற்றுதான் நடந்தது போல் இருக்கிறது. அம்மா இடுப்பிலிருந்து அவன் இறங்காமல் கத்தினான். கைகளை ஆட்டிப் போக மாட்டேன் என்றான். அம்மா கொஞ்சம் சமாதானம் செய்து பார்க்கிறாள்.

‘அழுவறான்… வுடுங்க இருக்கட்டும்.. இன்னொரு நாளைக்கி கொண்ணும்போய் வுட்டுக்கலாம்.’

நைனா சீறினார். ‘இதுக்கு என்னா சொகக் கேடு! கழுதைக்கி ஆவற மாதிரி ஆவுது வயிசு’ என்றார். ‘இத்தாட்டம் புள்ளெங்கெல்லாம் ரெண்டாவது படிக்கல…’

‘என்னா பண்றது… அவன் ஒட்டாரம் புடிக்கிறானே…’

‘இப்படி வுடு இப்பிடி’ நைனா வெடுக்கென்று அவனை அம்மாவிடமிருந்து பறித்தார். நிஜார் பட்டைகளைப் பிடித்துத் தூக்கி, சுருட்டி ஆட்டுக்குட்டி மாதிரி தோளில் போட்டுக்கொண்டார். அவன் அம்மா… அம்மா… என்று கத்தினான். அவர் பிடியிலிருந்து திமிற முயன்று களைத்துப் போகவே, கூக்குரலாய்ச் சத்தம் போட்டான். தெரு பூராவும் கேட்கும்படி கத்தினான். அம்மா வந்து வாங்கிக்கொள்ள மாட்டாளா என்று நினைத்தான். அம்மா பேசாமல் நின்றாள்.

தெருமுனையில் அவள் உருவம் மறைந்த பிறகு நைனா சடாரென்று அவனைத் தெரு முற்றத்து வாசலில் இறக்கி  இழுத்துப் போட்டு வாங்கினார். முதுகிலும் கன்னத்திலும் அறையாய் அறைந்து ‘வாய மூடு! சத்தம் போட்டியோ… கொன்னுடுவேன்…’ என்றார். ‘எந்நேரமும் ங்கோத்தாள்திலியே பூந்துக்னுருக்கலாம்னு பாக்கறியா…’

புழுதியில் காலைப் பரப்பி அமர்ந்தவாக்கில் தலையை நிமிர்த்தியவன் அவர் கண்களைப் பார்த்து மிரண்டுபோய் அழுகையை நிறுத்தினான். சின்னக் கைகளால் வாயைப் பொத்தி பொங்கிவரும் அழுகையை உள்ளேயே விழுங்கினான். விம்மி விம்மித் தேம்பினான். நைனா ஒரு பழைய புஸ்தகத்தைப் போல அவனைத் தூசு தட்டி இழுத்துக்கொண்டு போனார்.

பசங்கள் நிறைந்த பள்ளிக்கூடத்தை அவன் மிரட்சியோடு பார்த்தான். தலை தூக்கித் தூக்கிப் போட தேம்பல் இன்னும் அடங்கவில்லை. பள்ளிக்கூடத்தில் இறக்கிவிட்ட நைனா வாத்தியாரிடம் போனார்.

‘பத்தரமா பாத்துக்கோங்க. நடுவுல எழுந்து கிழுந்து அவம் பாட்டுனு ஓடியாந்துடப் போறான். திருட்டுக்கொட்டு அது…’

அவன் பக்கம் திரும்பினார்.

‘ஜாக்கரத… மணியடிக்கறத்துக்கு மின்ன வூட்டுக்கு கீட்டுக்கு ஓடியாந்த… கால ஒடிச்சிப் போட்டுருவேன் ஒடிச்சி…’

அவன் அழப் பயந்து ஒன்றும் புரியாமல் நின்றான். நைனா போன பிறகு அழுதான். வாத்தியார் வந்து ஏதேதோ சொல்லி சமாதானம் செய்தார். ‘அழாத. இப்ப மணி அடிச்சிடுவாங்க…’, ‘அழாத இப்ப வூட்டுக்குப் போயிடலாம்…’ அவன் கோவென்று கதறி அழுதான். பிறகு அவர் கோலை எடுத்துக்கொண்டு கிட்டே நெருங்கினார். கொம்பை மேஜையில் தட்டும்போது அவன் மருண்டான். அவர் மற்ற பசங்களை அடிப்பதைப் பார்த்ததும் கால் நிஜாரில் ஒன்னுக்குப் பெய்துவிட்டான்.

பள்ளிக்கூடத்துக்கு கொஞ்சம்கூட அவன் பழக்கப்படவில்லை. ஆனாலும் அவன் தினம் பள்ளிக்கூடம் போனான். தனியாகவே உட்கார்ந்து கிடந்தான். யாரோடும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான். எப்போது வீட்டுக்கு மணி அடிக்கும் என்ற நினைப்பிலேயே அவன் பாடங்களைப் படித்தான். வீட்டுக்கு வந்ததும் அம்மா என்று ஓடி அவளைக் கட்டிக்கொண்டான். அவள் ஆதுரத்துடனும் கனிவுடனும் தூக்கி முத்தமிட்டாள். இடுப்பில் ஏற்றிக்கொண்டு தலையை வருடிக் கொடுத்தாள். எப்போதாவது நைனா பார்க்கிற பார்வை தாங்காமல் அவன் அம்மாவை இறுக்கிக் கட்டி கண்களை மூடிக்கொண்டான். வெகுநேரம் கழித்து நைனா போய்விட்டாரா என்று கண்களை விழித்துப் பார்க்கும்போது, அம்மா சிரித்து கன்னத்தைக் கிள்ளினாள்.

ஸ்கூல் விட்டு வருகிற சமயங்களில் சில நாள் அவன் நடைவாயிலுக்கு அப்பால் அறையினுள்ளே நைனாவின் கருத்த கால்களைக் கண்டான். அது அம்மாவின் மெதுமெதுப்பான வாயில் புடவையைப் பின்னியிருப்பதைப் பார்த்து அவன் கலவரமடைந்தான். அழுகை வந்து தேம்பத் தொடங்கினான்.

‘ப்ச்சங்… கொழந்த வந்துட்டுருக்கறான் வுடுங்க…’

‘இது வேற இது எழவு! இதுக்குள்ளாங் காட்டியுமா பள்ளிக்கூடம் வுட்டுட்டாங்க…’

நைனாவை அப்பால் புரட்டிவிட்டு அம்மா எழுந்துவந்து அவன் தோளைத் தழுவி கன்னத்தில் முத்தினாள். ‘பள்ளிக்கூடத்துல பாடமெல்லாம் நல்லாப் படிச்சியா… வாத்தியார் இன்னிக்கு என்னா கண்ணு சொல்லிக் குடுத்தாரு?’

அவன் அம்மாவை ஆராய்ந்தான். அம்மா புஸ்தகப் பையை வாங்கி ஆணியில் மாட்டினாள். அவனைத் தூக்கிக்கொண்டு தோட்டத்துப் பக்கம் வந்தபோது உள்ளேயிருந்து நைனா சிடுசிடுத்தார்.

‘புள்ளையாடா இது சனியன்… ராவுலியும் வுடாம பகல்லியும் வுடாம…’

நைனாவுக்கு விருப்பமில்லாவிட்டாலும்கூட தினம் அவன் அம்மா பக்கத்திலேயே படுத்தான். அம்மா படுக்க வைத்துக்கொண்டாள். இரவு முழுவதும் அம்மாவை அணைத்துக்கொண்டு உறங்கினான். எப்போதாவது விழித்துக்கொள்ளும்போது கைக்கெட்டும் தூரத்தில் அவள் இல்லாவிட்டால் அவன் அழுதான். மாரிக் காலத்தின் குளிர் மிகுந்த இரவில் ஒருநாள் அவன் அதிகமாக அழுதான். அம்மா நடையிலிருந்து வந்தாள். விளக்கைத் தூண்டிப் பெரிதாக்கி அவனை ஆதரவோடு அணைத்துக்கொண்டாள்.

‘அப்பவே சொன்னேனே கேட்டீங்களா… புள்ள என்னுமோ கெனா கண்டுட்டுகிறான். அதான் அலண்டு அழறான்…’

‘மயிருப் புள்ள… நீயும் உம் புள்ளையும்…’

அவன் பயத்தால் அம்மாவைக் கட்டிக்கொண்டான். தூங்க விருப்பமின்றி தூங்காமல் அவள் கழுத்தைச் சுற்றிக்கொண்டான்.

நைனா பொறுமையிழந்து எழுந்து வந்தார். அவனை இழுத்துப்போட்டுத் தாறுமாறாக அறைந்து ‘தூங்குடா… தூங்கு…’ என்றார். ‘இனிமே நடுவுல முழிக்கமாட்டியே…’ அவன் உடம்பு நடுங்கி அழுதான்.

அம்மா நடுவில் புகுந்து, ‘இது என்னா வேல இது! மனுஷனா நீங்க… வுடுங்க…’ என்று அவனைப் பிடுங்கினாள்.

நைனா அவளை வயிற்றில் எட்டி உதைத்தார். ‘உன் வேலல்லாம் எனக்கு தெரியாதுன்னு நெனச்சிக்னுகிறியாடி…’

பொழுது விடிவதற்கு முன்பே நைனா அவனை எழுப்பிவிட்டார். படுக்கையிலிருந்தபடியே கர்ஜித்தார். ‘இன்னும் என்னடா தூக்கம். கெடா மாட்டுக்கு ஆவற மாதிரி வயிசு ஆவல. எழுந்து சாமானல்லாம் வாறிம்போயி தோட்டத்துல போடு…’

‘என்னா நீங்க சின்னக் கொழந்தகிட்ட போயி ஷரத்து பண்ணிக்னு… வுடுங்க…’

‘படுமே பேசாத! உன்னாலதான் அவன் கெட்டுப் போறான்… ஆரம்பத்துலியே கண்டிச்சி வளத்தாதான் எதுவும்…’

நைனா அவள் தோளைப் பிடித்து அழுத்திப் பக்கத்தில் கிடத்திக்கொண்டார். அவன் ஒவ்வொரு முறை அடுப்படிக்குச் சாமானை எடுக்க உள்ளே வரும்போதும் அம்மா வதைபடுவதை ஓரக்கண்ணால் பார்த்தான். நைனா பெருமூச்சு விடுவதை எரிச்சலோடு கேட்டான். சிறிது நேரத்துக்குப் பிறகு அம்மா விடுவித்துக்கொண்டு சலிப்படைந்த முகத்துடன் எழுந்து வெளியே வந்தாள். கொல்லைக்குப் போகும் நைனாவைப் பார்த்து அருவருப்போடு முகத்தைச் சுழித்துக்கொண்டாள். அவன் சந்தோஷமடைந்தான். திருப்தியோடு சாமான் துலக்க உட்கார்ந்த அம்மாவின் பக்கத்தில் போய் உரசிக்கொண்டு நின்றான்.

நைனா அடிக்கடி அவனை ஒரு சகலனைப் போலப் பார்த்தார். குரோதத்தோடு பார்த்தார். அம்மா செய்கிற வேலையெல்லாம் அவளுக்கு விருப்பமில்லாவிட்டாலும்கூட அவனைச் செய்யச் சொன்னார். விடுமுறை நாட்களில்கூட வீடு தங்கவிடாமல் வெளியே போய் விளையாடச் சொன்னார். பக்கத்து வீட்டு சீனுவோடு இணை சேர்த்து அனுப்பினார். இரவில் அவன் வீட்டுத் திண்ணையில் அவனோடே படுக்கச் சொன்னார். ராச்சாப்பாட்டுக்குப் பிறகு பாயைத் தூக்கிக் கையில் கொடுத்து, காலையில் இருட்டோடு எழுந்துவந்து தெரு வாசலுக்குச் சாணி தெளிக்கச் சொன்னார். ‘இது என்னா இது! இந்தமாரி கூடம் எங்கனா புள்ள வளப்பாங்களா…’ என்று அம்மா அழுதபோது ‘சும்மா இருடி! ஒனக்குத் தெரியாது. ஒரேடியா செல்லங் குடுக்கக்கூடாது’ என்றார்.

சீனுவை அவனுக்குக் கொஞ்சம் பிடித்திருந்தது. அவனும் யாரோடும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து கிடந்தான். சீனுவின் அத்தையும் அவன் அம்மாவைப் போலவே அவனோடு பழகினாள். அடிக்கடி முத்தம் கொடுத்தாள். கன்னத்தைத் தட்டிச் சிரித்தாள். தலையை மடியில் அழுத்தி வருடினாள்.

புழுக்கம் மிகுந்த கோடை நாட்களிலே இரண்டு திண்ணைகளுக்கும் நடுவேயுள்ள ரேழியில் அவன் சீனுவின் பக்கத்தில் படுத்துக் கிடந்தான். இரண்டு வருஷத்துக்கு முன் கட்டிக்கொடுத்து வாழாமல் வந்து இருக்கும் அத்தை திண்ணை மேல் படுத்திருப்பாள். நிலவொளி வீசும் நடுஇரவில் அவன் உறக்கம் பிடிக்காமல் விழித்துக்கொண்டான். பக்கத்தில் அயர்ந்து தூங்கும் சீனுவைப் பார்க்க அவன் நிம்மதியடைந்தான். உட்பக்கம் தாழிட்ட தெருக்கதவும் பரந்தவெளி முற்றமும் சாம்பல் ஒளி படர்ந்த சிமெண்ட் போட்ட சின்னத் திண்ணையும் அவனுக்கு இதமூட்டின. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கலங்கிய விழிகளால் சுற்றுமுற்றும் நோக்கினான்.

அத்தை நித்திரையில் ஆழ்ந்து கிடந்தாள். கைகள் இரண்டையும் உயரே தூக்கிப்போட்டு மல்லாந்து கிடந்தாள். முட்டிக்கு மேலே வழித்துவிட்ட மாதிரி சுருட்டிக் கிடக்கும் புடவையையும் வளையல் அணிந்த சிவந்த கரங்களையும் மிருதுவான வயிறையும் பார்த்தான். உள்ளே திரட்சியால் தானாகவே அவிழ்த்துக்கொண்டு கிடக்கும் ரவிக்கையைப் பார்த்தான். வெண்மையான பாடி முடிச்சு தெரிந்தது. அவன் தொண்டையை மிணறு கூட்டி விழுங்கினான். சத்தம் காட்டாமல் திண்ணையில் ஏறிப்படுத்து அத்தையை அணைத்துக்கொண்டான். எப்போதாவது அத்தை விழித்தாள். அவன் காலை அவளாக இழுத்து மேலே போட்டு இறுக்கி அணைத்துக்கொண்டாள். பாடி முடிச்சுகளை அவிழ்த்து வெறும் நெஞ்சில் அவன் முகத்தை அழுத்தித் தலையைக் கோதினாள். கழுத்தைத் தடவிக் கொடுத்தாள். மல்லாக்க மேலே தூக்கிப் போட்டுக்கொண்டாள். குளுமையான அந்த இரவின் நிசப்தத்தில் அவனுக்கு மட்டும் கேட்கிற தொனியில் இதமாக முத்தினாள். வாடைக்காற்றுக்கு கதகதப்பாக, புடவைத் தலைப்பால் அவனையும் மூடிப் போர்த்துக்கொண்டாள்.

பிறகு பல இரவுகள் சீனுவோடு மட்டும் தனியாகப் படுத்துக் கிடந்தபோது அவன் எழுந்து உட்கார்ந்து கிருஷ்ண பட்சத்து நிலவொளியை நேரம் போவது தெரியாமல் வெறித்து நோக்கினான். வேதனையோடு யாருக்கும் கேட்காத தொனியில் அழுதான். ஊரிலிருந்து வந்த நரைத்த தலையுடைய ஆசாமி ஒருத்தர் அத்தையை அழைத்துக்கொண்டு போய்விட்டார். அத்தை சந்தோஷமாகவே போனாள்.

அவன் தினம் கண்ணீர் வடித்தான். முழங்கை முழுக்க வழியும்வரை கண்ணைக் கசக்கிக் கசக்கி அழுதான். நடுவில் அக்கா வந்துபோன போது கொஞ்சம் ஆறுதல் அடைந்தான். அக்கா அத்தையைவிடக் கொஞ்சம் பெருத்துப் போயிருந்தாள். மாமா கொண்டுவந்து விட்டுவிட்டுப் போய்விட்டார். இரவு நேரங்களில் அவன் அக்காவோடு படுத்தான். நைனாவும் அம்மாவும் அறைக்குள் போய் சந்தடி அடங்கிய பிறகு அக்கா மேல் காலைத் தூக்கிப்போட்டான். அக்கா சிரித்தாள். ‘பாத்துடா… வயித்துல பாப்பா இருக்கு… கலக்கிடப் போற…’ அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டான். முகத்தோடு முகத்தைத் தேய்த்து ‘அக்கா…’ என்றான். ‘நீ ஊருக்குப் போவாத. இங்கியே இருந்துடு…’

மாமா ஊரிலிருந்து வந்தபோது அவன் சோர்ந்து போனான். அக்கா எப்பொழுதும் மாமாவுடனேயே இருந்தாள் அல்லது அக்கா இருக்குமிடமெல்லாம் மாமா இருந்தார். மாமாவைக் காண அவனுக்குக் கசப்பு எழுந்தது. அகன்று விரிந்த கண்களால் வெறுப்போடு நோக்கினான். எப்போதாவது சமையலறையிலோ கூடத்திலோ தனியாக இருக்கும் அம்மாவைக்கூட மாமா கிண்டல் செய்தார். அவன் முகத்தைச் சுழித்து அம்மாவைப் பிரியாமலிருந்தான். மாமா வருகிறார் என்பது தெரிந்தால் முன்னெச்சரிக்கையாக அம்மாவோடு ஒண்டிக்கொண்டான்.

‘நல்ல்ல்..ல பையன்! உங்கள வுடமாட்டான் போலருக்தே…!’

‘நீங்க இல்லன்னா அக்காகிட்ட ஒண்டிக்னு கெடப்பான்.’

அம்மா சொல்வதைக் கேட்டு அவன் திருப்தியில்லாமல் குமைந்தான். அம்மா வேறு ஏதாவது சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். மாமாவை நைனாவைப் போல் பார்த்தான்.

உச்சி சாய்ந்தபின் ஒரு முன்மாலைப் பொழுதில் அவன் தனியாகக் கிடந்தான். நைனா வழக்கமாகப் படுக்கும் அறையின் ஒருக்களித்த கதவு வழியே பின்னிய கால்களைக் கண்டு மனசில் இனங்காண முடியாத சுமையோடு அவன் அப்பால் நகர்ந்தான். தோட்டத்துக் கொட்டகையில் போட்ட கட்டிலில் பாதி வயிறு தெரியப் படுத்திருக்கும் அக்காவையும், பக்கத்தில் அவளைத் தழுவி அமர்ந்திருக்கும் மாமாவையும் அவன் ஜன்னல் வழியே கண்டான். மாமா அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டினார். குனிந்து அவள் உதடுகளைக் கடித்தார். மழுமழுப்பான பெரிய வயிறை இதமாக வருடினார். வியர்வை ஈரம் கசியும் அக்குள்களில் விரல்களைக் கொடுத்து கிச்சுகிச்சு மூட்டினார். அக்கா குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். தாள முடியாமல் தத்தளித்தாள். நெளிந்து திளைத்தாள்.

திடீரென்று காலடி ஓசை கேட்டு அவன் திரும்பினான். தண்ணீர் குடிக்க வந்த நைனா அவன் ஒளிந்தவாறு பார்ப்பதைக் கண்டுவிட்டார். அவனை இழுத்துப்போட்டு வெளுத்து வாங்கினார். அவன் பதில் ஏதும் சொல்வதற்குள்ளாகவே சரமாரியாக அறைந்து சுவரில் தள்ளி மோதினார்.

‘பொறுக்கி ராஸ்கல்… மொளைச்சி மூணு எல வுடல… அதுக்குள்ள… ம்மாந் தூரத்துக்கு ஆயிட்டியா நீ…’

சத்தம் கேட்டு அம்மா எழுந்து ஓடி வந்தாள். கதறி அழும் அவனை அணைத்துக்கொண்டு நைனாவை முறைத்தாள்.

‘வுடுறி அவன… பெருசா ஊருல ஒலகத்துல இல்லாத புள்ளையப் பெத்துட்ட…’

அக்காவும் மாமாவும்கூட சத்தம் கேட்டு எழுந்து ஓடி வந்தார்கள். யார் தடுத்தும் நைனா விடவில்லை. சவரம் செய்யப்படாத கன்னம் ஒட்டிப்போன அந்த முகத்தில் பழுக்கச் சிவந்த கண்கள் கனன்றுகொண்டிருந்தன. எலும்புகள் துருத்திய கூம்பிய தோள்களும், சரிந்து தொங்கும் மெலிந்த கரிய கைகளும் ஆத்திரம் தீராமல் நடுங்கிக்கொண்டிருந்தன. ஜன்னல் வழியே காறி உமிழ்ந்துவிட்டு அவர் அப்பால் நகர்ந்தார்.

அம்மா நெஞ்சோடு அணைத்து ஆறுதல் சொன்னாள். அக்கா தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள். வெகுநேரம் விம்மிய பிறகு ஓய்ந்தான். அதிர்ச்சியில் அன்றிரவே அவன் ஜூரத்திலே விழுந்தான். கொடூரமான நைனாவின் முகத்தை அவன் கடைசி முறையாகப் பார்த்தது அப்போதுதான். அதற்குப் பிறகு அவன் நைனாவைப் பார்க்கவில்லை. இரவும் பகலும் அந்த முகம் அவனை பயமுறுத்திக்கொண்டேயிருந்தது. அடர்ந்த இருளிலே சிவந்த விழிகள் தெரிந்தன. மொட்டையான கரங்கள் மட்டும் கூரிய நகங்களுடன் அவன் கழுத்தை நோக்கி நெருங்கின. ‘இல்ல நைனா… இல்ல நைனா… இனிமே பாக்கமாட்டேன்… என்ன வுட்டுடு நைனா…’ அவன் ஜன்னியில் பிதற்றத் தொடங்கினான். 

அக்கா பிரசவித்த போதும், மூன்றாம் மாசம் சொல்லிக்கொண்டு அவள் ஊருக்குப் புறப்பட்டபோதும் அவன் போர்வைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான். எதையும் உணர முடியாத நிலையில் கண்ணை மூடி முடங்கிக் கிடந்தான். அவன் குணமடைந்து எழுந்தபோது அவனுக்குக் கிலியூட்டிய நைனா இல்லாமலே இடையில் விடைபெற்றுப் போய்விட்டிருந்தார்.

அந்த இரவு அவனுக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது. சுவருக்கு அப்பால் அழுகையும் விம்மலும் வெடித்தன. யார் யார் குரலோ கேட்டது. அம்மா இங்குமங்குமாகக் கிடந்தாள். அனேகமாகப் பெரும்பாலும் அவன் பக்கத்திலேயே இருந்து  தலையைக் கோதிக்கொண்டு கண்ணீர் விட்டாள். 

அந்தச் சந்தடியெல்லாம் அடங்கி ஓய்ந்தது. அம்மாவின் முகத்தில் தெளிவு ஏற்பட்டது. அம்மா நிம்மதியாகக் கிடந்தாள். அவனுக்கு மட்டும் நைனா சாகவில்லை. எங்கேயோ போயிருக்கிறார். திடுதிப்பென்று எங்கிருந்தாவது வருவார். இழுத்துப் போட்டு வாங்குவார் என்று தோன்றியது. பயத்தோடு அம்மாவைப் பார்த்தான். பயத்தோடு தொட்டான். மிரட்சியோடு சுற்றுமுற்றும் நோக்குவான். அம்மா கன்னத்தில் தட்டிச் சிரித்து ‘என்னடா!’ என்பாள். இழுத்து மடியில் அழுத்திக்கொண்டு தலையைத் தடவுவாள்.

அவன் கலவரத்தோடு விழிகளை உருட்டி நோக்கினான். அம்மா ஸ்தூல சரீரம்தானா என்று அந்த மங்கிய ஒளியிலே தொட்டுப் பார்த்து திடம் செய்துகொண்டான். சுருங்கிக் கிடந்த அரைக்கால் டிரவுசரை சரி செய்துகொண்டு தயக்கத்துடன் கையை விளக்குக்காக நீட்டினான். கண்களை மூடி மூச்சை இறுக்கிய நிலையிலேயே திகில் நிறைந்த எண்ணங்களோடு விளக்கைப் பெருசாக்கினான். சிறிது நேரம் அமைதியைக் கிரகித்த பிறகு மெல்ல கண்களைத் திறந்தான். தலையைத் திருப்பாமல் ஓரக் கண்களால், அறையைத் துழாவினான். நிம்மதி ஏற்பட்ட பிறகு அவன் எழுந்து உட்கார்ந்தான். ‘நைனா மெய்யாலும்தான் செத்துப்போய் விட்டார். இனிமே வரமாட்டார்’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

அம்மா தலையணைக்கு மேலே கையை மடித்து வைத்து உடம்பைச் சுருட்டிப் படுத்துக் கிடந்தாள். சிவந்த கணுக்கால்களும் வெண்மையான பாதங்களும் விளக்கொளியில் பளபளத்தன. வெறும் கழுத்து மஞ்சளாய் மின்னியது. தளர்ந்து கனிந்த மார்புகள் பாயில் சரிந்திருந்தன. ரவிக்கைக்குக் கீழே மடிப்பு மடிப்பான வயிறு தெரிந்தது. கொசுவம் அவிழ்ந்து மடியில் கிடந்தது. அவன் சுதந்திரமாகப் பார்த்தான். பிறகு ஆசையோடு குனிந்து அவளது சிவந்த கன்னங்களிலே முத்தமிட்டான். மார்புத் துணியை விலக்கி நெஞ்சிலே முகம் புதைத்தான். இடுப்பை வளைத்து காலைத் தூக்கி மேலே போட்டான். அம்மா இலேசாய் முனகிப் புரண்டாள். பிறகு இழுத்து நெருக்கி அணைத்துக்கொண்டாள். அப்போது அவனுக்கு ஆதரவும் இதமும் தோன்றியது. நைனா நிச்சயமாக இனி வரவேமாட்டார் என்று சொல்லிக்கொண்டான்.

மறுநாள் உச்சி வேளையில் நாலாவது வீட்டு ருக்கு வந்தபோது அவன் அம்மா மடியில் உட்கார்ந்திருந்தான்.

‘இன்னும் என்னாத நீ! சின்னப்புள்ள மாரி மடில குந்த வச்சிக்னு.. பால் குடிக்கிற கொழந்தையாட்டம்…’

‘சின்னப் புள்ளதான… என்னா ஆவுது அவனுக்கு? வர்ற சித்தரையோட பத்து முடியப் போவுது…’

‘ஆமாம் போ… நீயும் ஒம் புள்ளையும்… ஆருன்னா பாத்தா சிரிக்கப் போறாங்க… இத்தாட்டம் புள்ளைங்க அங்கங்கே எங்கனா போய் வெளையாடல…’

அவன் ருக்குவை கல் எடுத்து அடிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ருக்கு கொஞ்ச நேரம் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போன பிறகு அம்மாவை இன்னும் நெருங்கிக் கட்டிக்கொண்டான். கழுத்தைக் கட்டியிருக்கும் கரங்களை அவிழ்த்து அம்மா சொன்னாள்.

‘தோப்புல சீனு எல்லாம் வெளையாடறாங்களாமே! நீ போய் வெளையாடல…’

அவன் ‘ம்…ஹூம்…’ என்றான்.

‘போய் வெளையாடிட்டு வாமா… கண்ணு இல்ல… ஐஸ் வாங்க காசி தர்றேன்…’

‘ஐஸ் வேணாம்.’

‘பாரு எல்லாம் என்னா சொல்றாங்க… போய் கொஞ்ச நேரம் வெளையாடிட்டு வாப்பா… கண்ணு இல்ல…’

அம்மா மகனை விலக்கி எழுந்திருக்க முயன்றாள். அவன் விடுவதாயில்லை. பிடியை மேலும் இறுக்கி நெருக்கி அணைத்துக்கொண்டிருந்தான்.