மதூரி கதிர்வேல்பிள்ளை

1 comment

[1]

“ஓயா பஹின தான மெதன” என்றார் ஓட்டுனர்.

டாக்ஸி குலுங்கி நின்றபோது மதூரி தூக்கத்திலிருந்து விழித்தாள். இடப்பக்கக் கழுத்து வலித்தது. பயணம் முழுவதும் அவளை அறியாமல் துயில்கொண்டிருந்தாள். உதட்டைக் கர்சீப்பால் அழுத்தித் துடைத்து, சரிந்திருந்த ஆடைகளைச் சீர்செய்தாள். இரண்டு சூட்கேஸை சில்லுகள் தரையில் உருள இழுத்துக்கொண்டு லிப்டுக்குள் நுழையும்போது அருகேயிருந்த கடலின் இரைச்சல் அள்ளிவந்து காதில் அறைந்தது. சின்ன வயதிலிருந்து கேட்ட அந்த இரைச்சல் அவளை வருடித் தழுவி, கடலைப் பார்க்கவேண்டும் என்ற உவகைக்குள் தள்ளியது. 

அந்த நான்கு மாடிக் குடியிருப்பில் அவளுக்குச் சொந்தமான தனி பிளாட் மூன்றாவது அடுக்கில் இருந்தது. அப்பா, அவளின் அம்மா இறந்தபோது எழுதிவைத்தது. விடுமுறைக்கு வரும்போதெல்லாம் இங்கே தனியே தங்குவது வழமை. கடந்த இரண்டு வருடங்களாக நாதனுடன் தங்குவது வழமையாகியிருந்தது.

நாதன் மூன்று நாட்களுக்கு முன்னரே வந்து பிளாட்டை ஒழுங்குபடுத்தியிருந்தான். குளிர்சாதனப் பெட்டிக்குள் தேவையான பொருட்களை வாங்கி அடுக்கி, மின்னிணைப்பைக் கொடுத்திருந்தான். குஷன் இருக்கையில் அமர்ந்து குதிக்கால் செருப்பின் நாடாக்களை நீக்கி விட்டெறிந்தாள். குளிரூட்டியைத் திறந்து குளிர்ந்த நீர்க்குடுவையை எடுத்துப் பருகியபோது உடல் குளிர்ந்து சென்று தேகத்தை இலகுவாக்கியது. மலேஷியாவிலிருந்து கட்டுநாயகா விமான நிலையத்திற்கு வந்துசேர்ந்த போது, நாதன் வர முடியாது என்று வாட்ஸப்புக்கு ஒலிச்செய்தி அனுப்பியிருந்தமை மதூரிக்குக் கடும் எரிச்சலைக் கொடுத்திருந்தது.

அலைபேசியை எடுத்து தொடுதிரையை ஒளிர்வித்துப் பார்த்தாள். தனது பத்து வயது மகனின் புகைப்படம் திரை வால்பேப்பராக இருந்தது. வாட்ஸப் செயலியை அழுத்தி, மீண்டும் நாதனின் ஒலிச்செய்தியை ஒலிக்க விட்டாள். “சொறி மது.. நீர்கொழும்புக்கு பத்துமணிக்கு நான் போக வேண்டி இருக்கு, வேலை விஷயமாக போகணும்… நீ ஏர்போர்ட்டிலிருந்து டாக்ஸி பிடித்து வந்திடு… நான் உன்னை தெஹிவளையில் வந்து பார்க்கிறேன்.” நாதனின் அடர்த்தியான குரல் தெளிவாக ஒலித்தது. எந்தவித ஏற்ற இறக்கமில்லாத குரல். பதிலுக்கு எந்தப் பதில் செய்தியும் அனுப்பாமல் மௌனமாக இருந்தாள். தான் செய்தியைக் கேட்டுவிட்டேன் என்பது தெரிந்திருக்கும், பதில் வழங்காமை நாதனுக்குத் தொந்தரவைக் கொடுக்கும் என்று எதிர்பார்த்தாள். ஆனால், அவன் அதற்கு மேல் எதையும் கேட்கவில்லை. அது அவளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.

ஃபேஸ்புக் செயலியைத் திறந்து இறுதியாக இட்டிருந்த நிலைத்தகவலைப் பார்த்தாள். இருநூற்றி எண்பத்தியிரண்டு விருப்பக் குறியீடுகள் வந்திருந்தன. யார் புதிதாக விரும்பியிருக்கிறார்கள் என்று பொறுமையாகப் பார்த்தாள். சில பின்னூட்டங்களுக்கு ஸ்டிக்கர் எமோஜிகளைப் பதிலாகக் கொடுத்தாள். முன்னர் இட்டிருந்த தன்னுடைய ஃசெல்பி புகைப்படத்திற்கு வந்திருந்த தொள்ளாயிரம் விருப்பக்குறியீடுகளை மீண்டும் ஆசையுடன் பார்த்தாள். பழைய பாடசாலை நண்பிகள் உட்பட பல பெண்களும், ஆண்களும் பின்னூட்டங்கள் அளித்திருந்தார்கள். எல்லோரும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அவளது தேகத்தை வார்த்தைக்கு வார்த்தை பாராட்டி வியந்திருந்தார்கள். சில நண்பிகள் சாதுவாகப் பொறாமைப்பட்டிருந்ததைக் கண்டு கிளர்ச்சியடைந்தாள். ஒவ்வொருமுறை மீளப் படிக்கும்போதும் அந்தரங்கமாக அதனை  இரசித்தாள். மதூரி தனது உடலை மெலிதாகப் பேண தினமும் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்ப்பதில்லை. வாரத்துக்கு நான்கு நாட்கள் காலையில் கோலம்பூரிலுள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்வாள். காலையில் தவறவிட்டால் மாலையில் செல்வாள்.

மதூரி தனது முப்பத்தி ஏழாவது வயதில் நாதனைக் கொழும்பில் சந்தித்த போது, அவளுக்கு எட்டு வயதில் மகன் இருப்பதை நம்ப அவனுக்குக் கடினமாகவே இருந்தது. நாதன் மீது எந்தவிதமான அபிப்பிராயமும் இருக்கவில்லை. மிக நேர்த்தியாக உடைதரித்து கலைந்த தலையுடன் அவன் தென்பட்டான்.

[2]

கொழும்பில் சட்டத்தரணியாகவிருந்த கதிர்வேல் பிள்ளையின் ஒரே மகளான மதூரி, அதே மாவட்டத்திலுள்ள கொழும்பு பல்கலைக்கழகத்திற்குத் தேர்வாகியபோது வெளியூருக்குச் சென்று தங்கும் தேவை இருக்கவில்லை. பிளாட்டின் யன்னலைத் திறந்தால் தூரத்தில் கடல், அந்தியில் பரந்த வானம் சிவந்து வசியமாகத் தெரியும். 

பல்கலைக்கழகப் பகிடிவதையின் போது, முதன் முதலில் சுரேனைச் சந்திக்க நேர்ந்தது. சுரேன் சிரேஷ்ட பிரிவில் படித்துக்கொண்டிருந்தான். சுருள் சுருளான அவனது கேசம் காதுமடல்களைத் தாண்டி கீழே வழியும். மரங்களுக்குக் கீழே நண்பர்களுடன் சிகரெட்டை உதட்டில் பொருத்தி வளையம் வளையமாகப் புகைவிடுவான். காற்றுக்கு கலையும் முடியைச் சிலுப்பியவாறு சிகரெட் பிடிக்கும் விதம் கவர்ச்சியாக இருந்தது. ஆரம்பத்தில் முரட்டு சுபாவம் கொண்டவன் போலவே அவனது செய்கைகள் மதூரிக்கு இருந்தன. அவனைக் கண்டு பல மாணவிகள் தங்களுக்குள் பயந்தார்கள் என்பது என்னவோ உண்மைதான். பகிடிவதையின் போது, அவனது செய்கைகள் அடாவடியாக இருந்தன. பல ஆண் மாணவர்களைக் கடுமையாக வேலை வாங்கினான். கன்னங்களில் சடார் சடாரென்று அறைந்தான். பெண் மாணவிகளை மாலை நேரங்களில் பூங்காவுக்கு அழைத்து பாடச் சொல்வது, நடனமிடச் சொல்வது என்று குழுவாகவே சிரேஷ்ட பீட மாணவர்கள் இயங்கினார்கள். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என்று ஒவ்வொரு இனத்தவரையும் அவர்களது இனத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பீட மாணவர்களே பகிடிவதை செய்வது எழுதப்படாத விதியாக இருந்தது.

மதூரியை சுரேன் அழைத்து பாடச் சொன்னபோது, சிரேஷ்ட மாணவர்கள் எல்லோரும் அவன் முதுகுக்குப் பின்னே சிரித்தார்கள். மைதானத்தில் வட்ட வடிவில் அனைத்து தமிழ் மாணவர்களும் அமர்ந்திருந்தார்கள். கூப்பிடும் ஒவ்வொருவரும் அவர்கள் செய்யச் சொல்வதை கேள்வி கேட்காமல் செய்யவேண்டும். தன்னை அவன் அழைத்தபோது ஏன் ஆண்கள் சிரிக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க இயலவில்லை. கூட்டத்திற்கு முன்னால் பாடுவது கொஞ்சம் வெட்கமாகவே இருந்தது. ஆனாலும் தன்னம்பிக்கையுடன் “ஒரு நாள் ஒருகனவு அதை நான் மறக்கவும் முடியாது…” என்ற பாடலைப் பாடினாள். 

“ஏய் இங்க வா..” 

மதூரி குரல் கேட்ட திக்கைப் பார்த்தாள். மோகன் அவளது பாதத்தைச் சுட்டி, “இது என்ன?” என்றான். அவள் குதிகால் செருப்பு அணிந்திருந்ததை அவர்கள் கவனித்திருந்தார்கள். முதலாம் வருடப் புதிய மாணவர்கள், பகிடிவதை முடியும் வரை, இடுப்புப்பட்டி அணியக்கூடாது, மணிக்கூடு கட்டக்கூடாது, செருப்பு பாட்டா சிலிப்பர் அணிய வேண்டும். தலைமயிர் இத்தனை இஞ்சுக்கு மேல வளர்க்கக்கூடாது என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இறுக்கமாக இருந்தன. பெண்கள் சப்பாத்து, குதிகால் செருப்பு அணியக்கூடாது, இரட்டைச் சடை கட்டவேண்டும், நகப்பூச்சு, உதட்டுச்சாயம் பூசக்கூடாது என்று கட்டுப்பாடுகள் இருந்தன. தவிர பெண்கள் ஜீன்ஸ் அணிவதே முற்றாகத் தடைசெய்யப்பட்டிருந்தது.

“ஹீல்சை கழற்று, தலையில் வை.”

மதூரியின் கண்கள் பனித்தன. தலையைக் குனிந்தவாறு மௌனமாக நின்றாள். தன் உயரம் குறித்து மதூரிக்குத் தாழ்வு மனப்பான்மை ஆரம்பம் தொட்டே இருந்தது. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது தனக்கு உயரம் போதாது என்று எண்ணினாள். குதிகால் செருப்பை அணிவதன் மூலம் அதனைக் கடந்தாள்.

சுரேன் எழுந்து, “நீங்க போங்க,” என்றான்.

எல்லோரும் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். “அவ எனக்குத் தெரிச்ச பெட்டை” என்று சக நண்பர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தது அவளின் செவியில் விழுந்தபோது குதிகால் செருப்பு மண்ணில் புதைய நடந்தவாறு இருந்தாள். 

இவ்வாறுதான் அவர்களுக்கு இடையே அறிமுகம் நேரிடையாக உருவாகி பரஸ்பர காதலாக நீண்டது.

[3]

சுரேனிடம் சிவப்பு நிற யமகா பைக் இருந்தது. பல்கலைக்கழகத்திற்கு அதிலே வந்துபோவான். பலர் அவனைப் பணக்காரப் பொடியன் என்று நினைத்திருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், அத்தனை வசதியான குடும்பப் பின்புலத்திலிருந்து வந்தவன் இல்லை. அவனது அப்பா யாழ்ப்பாணத்தில் ஆசிரியராக இருந்தார்.

வெள்ளவத்தையில் வாடகைக்கு அறையெடுத்து நண்பர்களுடன் தங்கவந்த பின்னர், உயர்தர மாணவர்களுக்கு நுண்கணிதம் படிப்பிக்க ஆரம்பித்தான். கையில் போதிய அளவு பணம் புரள ஆரம்பித்தது. அதை வைத்து இரண்டாம் தரமாக விற்பனைக்கு வந்த யமகா பைக்கை வாங்கினான். அதனை முறுக்கிக்கொண்டு பல்கலைக்கழகம் வந்துபோவது அவனுக்குப் பிடித்தமான செயலாகியது.

மதூரியும் சுரேனும் காதலிக்க ஆரம்பித்த பின்னர், இருவருமாக அந்தப் பைக்கில் சுற்றித் திரிந்தார்கள். பம்பலப்பிட்டி எம்சிக்குச் செல்வது, சவோய் திரையரங்குக்குப் படம் பார்க்கச் செல்வது என்று விடுமுறைகள் கொண்டாட்டமாகச் செல்ல ஆரம்பித்தன. இருவரும் ஒருவரையொருவர் துளி மிச்சமின்றி முற்றாக அறிந்திருந்தனர்.

முதன் முதலாக விகார மகாதேவி பூங்காவுக்குச் சென்றபோது, வழமையைவிட அதிகமான வெட்கம் கலந்த பயம் வந்தாலும் மதூரி அதனை விரும்பவே செய்தாள். பென்னம்பெரிய வாகை மரங்களுக்குக் கீழே காதலர்கள் இறுக அணைத்தவாறு இருந்தார்கள். பூங்காவுக்குள் சீருடை தரித்த மாநகரக் காவலாளிகளும் இருந்தார்கள். காதலர்கள் எல்லை மீறும்போது விசிலடித்து எச்சரிக்கை கொடுத்தார்கள். ஒப்பிட்டுப் பார்த்த அளவில் சிங்கள மொழி பேசும் காதலர்களே எங்கும் தென்பட்டார்கள். தான் அணிந்துவந்த பஞ்சாபி உடை தன்னைத் தனித்துக் காட்டுவதாக நினைத்துக்கொண்டாள் மதூரி.

இரண்டாம் வருடத்திலிருந்து மதூரி தன் உடை அலங்காரத்தை மாற்றிக்கொண்டாள். பொட்டு வைக்காமல் கேசத்தை விரித்துவிட்டு டீஷேர்ட் ஜீன்ஸ் அணிந்தாள். சுரேனுடன் பைக்கில் இருபக்கமும் ஒவ்வொரு காலைப் போட்டு அமர்ந்து சுதந்திரமாகப் பயணிக்க ஆரம்பித்தாள். 

அவளது காதல் கதை தமிழ் மாணவிகளிடம் புகழ்பெற்ற கதையாக மாறியது. அவள் தன் வீட்டில் சொல்லாமலேயே அவளின் வீட்டுக்குக் கதை பரவியது. பல்கலைக்கழகத்தில் அவளைச் சுற்றி சிங்கள மாணவிகள் அதிகம் இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டாள்.

சுரேனின் சுருண்ட கேசத்தைக் கோதி முத்தமிட்டு, புற்தரையில் அமர்ந்தவாறு இரகசியமான குரலில் பேசப் பேசி நாட்களைக் கரைத்தாள். சிகரெட் புகைமணம் முத்தமிடவும் நெருங்கிவரவும் கசக்கிறது என்பது அவளின் புகாராக இருந்தது. அவளின் வேண்டுகோளுக்கு இணங்கி புகைபிடிப்பதை நிறுத்திக்கொண்டான். அவர்களுக்கு இடையே பெரியளவில் சண்டைகள் சச்சரவுகள் என்றுவந்தவை மிகக் குறைவாகவே இருந்தன.

[4]

பல்கலைக்கழகத்தை நிறைவு செய்யும்போது சுரேனுக்கு மென்பொறியியல் துறையில் வேலை கிடைத்தது. இரு வீட்டாரும் படித்த பிள்ளைகள், பிரச்சினை இல்லை என்று தங்களுக்குள் புன்முறுவல் கொண்டு திருமணம் செய்துவைக்க உத்தேசித்தார்கள்.

“கொஞ்ச காலம் போகட்டும்” என்றாள் மதூரி.

“எவ்வளவு காலம்?” என்று அலுத்துக்கொண்டார் அம்மா. 

மதூரியின் அம்மாவுக்கு இரத்தப் புற்றுநோய் இருந்தது. தான் இறக்கும் முன்னர் மகளுக்குத் திருமணம் செய்துபார்க்க வேண்டும் என்பதில் நிரம்ப விருப்பத்துடன் இருந்தார்.

புத்தாண்டு மறுநாள், மதூரியின் அப்பாவின் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. அவர் எழுந்து ஆடையை அணிந்துகொண்டு அவசரமாக காரை எடுக்க ஓடினார்.

“எங்கே போறியல்?” என்று துணைவியார் கேட்டபோது, ஒரு கணம் பெருமூச்சை விட்டு அதன் வழியே உடலை இலகுவாக்கி மீண்டுவந்து, “சுரேனை பொலிஸ் பிடிச்சு வெள்ளவத்தை ஸ்டேஷனில் வைத்திருக்காம். அவங்க வீட்டிருந்து அழைத்துக் கதைத்தார்கள். ஒருக்கா போயிட்டு வருகிறேன்” என்றார்.

“ஏனாம் என்னாச்சாம்?” என்று அவர் துணைவியார் பதறியபோதும் பதிலேதும் சொல்லாமல் லிப்டுக்குள் சென்று மறைந்தார். 

சுரேனை மதூரியின் அப்பா வீட்டுக்கு அழைத்து வந்தபோது, சுரேனின் முகம் சிவந்திருந்து. கண்களில் நீர்ப்படலம் ஊறியிருந்தது. கோல்பேஸ் கடற்கரையில் நண்பர்களுடன் உலாத்தச் சென்றிருந்த போது, பொலிஸார் அவர்களைக் கைதுசெய்திருந்தார்கள். ஏன், எதற்கு என்று எந்த விபரங்களும் சொல்லாமல் அழைத்துச்சென்று ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்றார்களாம். மதூரியின் அப்பாவிடம் “சந்தேகத்துக்குரிய நடமாட்டம்,” என்று சொல்லி அனுப்பினார்கள்.

“மலேஷியா போகப் போகிறேன்,” என்று ஒரு மாதத்துக்குள்ளேயே சுரேன் வந்து சொன்னபோது யாரும் ஆச்சரியப்படவில்லை. “எனக்கு அங்கே வேலை கிடைத்திருக்கு, இதைவிட இரண்டு மடங்கு சம்பளம்” என்றான்.

[5]

மதூரி இறுதிப்பரீட்சை எழுதும் முன்னரே அவர்களுக்கு விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. சுரேன் மலேஷியாவுக்குச் சென்ற இரண்டாவது வாரத்திலேயே வேலையில் மூழ்க ஆரம்பித்தான். மூன்று மாதங்களுக்குப் பின்னர் மதூரியும் அங்கு சென்று சேர்ந்தாள். மலேஷியா எதிர்பார்த்த அளவுக்குப் பிரம்மாண்டமாக அவளுக்கு இருக்கவில்லை. நீளமான கொள்ளுப்பிட்டி போலவே தோன்றியது. சுரேனின் பரிந்துரையில் நேர்காணல் இல்லாமலேயே இன்னொரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துகொண்டாள். 

ஸ்கைப்பில் அப்பா அம்மாவுடன் மதூரி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்று கதைத்துக்கொண்டே இருந்தாள். சுரேன் வாரத்துக்கு ஒருமுறை மட்டும்தான் தன் அம்மாவுடன் கதைப்பான்.

அவன் அம்மாவுடன் நீண்ட நேரம் தொலைபேசியில் கதைத்தான் என்றால், அன்று படுக்கையில் நிச்சயம் இதைச் சொல்வான் என்று மதூரிக்கு தெரியும்.

“மது, நாங்கள் சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.”

மதூரி அலுத்துக்கொள்வாள். ஒவ்வொருமுறையும் அவள் அப்படி அசட்டையான உடல்மொழியால் புறக்கணித்து கடந்து செல்வது, அவனைப் புண்படுத்த ஆரம்பித்தது. அவர்கள் தேவைப்பட்ட பொழுது கலவிகொண்டார்கள். இருவருக்கும் ஒவ்வொருவரின் உடலும் நன்கு பரிச்சயமாகியிருந்தது. எப்போதும் பாதுகாப்பில் மதூரி பலமடங்கு கெட்டிக்காரியாக இருந்தாள். எப்படியும் விரைவில் கர்ப்பம் தரிப்பாள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போவதே சுரேனுக்கு வாடிக்கையாகியது.

விடுமுறைக்கு இலங்கைக்குப் போவோம் என்று ஒவ்வொரு முறை கேட்கும்போதும், சுரேன் அதனைப் புறக்கணித்தான். சிங்கப்பூர் போகலாம், தாய்லாந்து போகலாம் என்று சொன்னானே தவிர, இலங்கை என்ற பெயரை எடுத்தாலே தவிர்க்க ஆரம்பித்தான்.

ஒருமுறை உலுக்கிக் கேட்க, “அங்க வேசமக்கள் கடற்கரையில்கூட நிம்மதியாக நடக்கவிட மாட்டார்கள்,” என்று உரக்கக் கத்தினான். பின்னர் உடைந்து அழ ஆரம்பித்தான். மதூரி அவனைத் தழுவி ஆறுதல்படுத்தினாள். அவளுக்கு அன்று பொலிஸ் நிலையத்தில் நடந்தது தெரியும். அவன் அப்படி நொறுங்கி தன் பலவீனத்தைக் காட்டியதில்லை. பல்கலைக்கழக காலத்திலிருந்து இறுக்கமானவனாகவே அவனை அறிந்திருந்த சுபாவத்திலிருந்து அது விலகிய பக்கமாக இருந்தது. நம்மீது ஒருவர் சாய்ந்து அழுகிறார் என்றால் நமக்கு எல்லா உரிமையையும் அவர் அளித்திருக்கிறார் என்றுதானே அர்த்தம்? மதூரிக்குக் குரூரமான நிறைவு ஏற்பட்டது. அவனது சுருள் கேசத்தை வருடிக்கொடுத்தாள். கேசத்தின் அடர்த்தி வேகமாகக் குறைந்திருப்பதை உணர்ந்தாள். சில நாட்களுக்குப் பின்னர் அந்த நிறைவு கசப்பாக மாறியது. கசந்து கசந்து ஒவ்வாமையை உருவாக்கியது. 

அவள் கருவுற்றபோது, “எல்லாம் அமைஞ்சு வந்திருக்கு, எனக்குப் பதவியுயர்வும் சேர்ந்து வந்திருக்கு,” என்று ஒரு பியர் டின்னை உடைத்து சந்தோஷமாகப் பருகினான். அவனுக்கு இடுப்புச்சதை பெருத்து, பெரிய தொப்பை டீஷேர்டை பிதுக்கித் தெரிவதைப் பார்த்தவாறு இருந்தாள்.

மதூரியின் அம்மா புற்றுநோயால் அவதிப்பட்டு நாட்டில் இறந்தபோது, “மது நீ மட்டும் போயிட்டு வாயேன்,” என்றான். அவன் உதட்டில் மிகப் பரிதாபகரமான கெஞ்சுதல் புன்னகையாக இருந்தது. ஆழமாக அதனை வெறுத்தாலும், மறுபேச்சு சொல்லாமல் தனியே அம்மாவின் இறுதிக்கிரியைக்குப் புறப்பட்டுச் சென்றாள். இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் மலேஷியாவுக்கு வந்தபோது பிறிதொருத்தியாகவே சுரேனுக்குத் தென்பட்டாள்.

சரியாக இரண்டரை மாதங்களில் தன்னுடைய வேலையிலிருந்து மதூரி விலகிக்கொண்டாள்.

“எனக்குப் பிடிக்கல, நான் கொழும்புக்கே போகப் போறேன்.”

“ஏன்?”

“ஏன்னா எனக்கு இங்கேயிருக்கப் பிடிக்கல.”

மதூரி இப்படி குரல் உயர்த்தி எத்தனையோ தடவை சண்டையிட்டு இருக்கிறாள். ஆனால், தன்னிச்சையாக எந்த முடிவுகளும் சுரேனுடன் கலந்து பேசாமல் எடுத்ததில்லை.

“எதற்கு வேலையை விட்டனீர்?”

“உம்மட பரிந்துரையில் எந்த வேலையும் எனக்கு வேண்டாம்.”

சுரேனுக்கு எதுவோ இடறுவது புரிந்தது. பிள்ளைத்தாச்சிப் பெண்ணுடன் எதற்குச் சண்டை பிடிக்க வேண்டும் என்று ஒருகணம் யோசித்தான்.

“யாரும் ஏதும் சொன்னார்களா?”

அவள் எதுவும் பேசிக்கொள்ளாமல் தன்னுடைய அறைக்குச் சென்று கதவை அடித்துச் சாத்திக்கொண்டாள்.

சுரேன் மாதத்தில் பாதி நாட்கள் மலேசியாவிலும், மிகுதி நாட்கள் சிங்கப்பூரிலும் அலுவலக வேலையாகப் பயணித்துக்கொண்டிருந்தான். அவனது அம்மா மலேஷியாவுக்கு வந்துசேர்ந்தார். மாமிக்குப் பிளாட்டில் தனியறை கொடுக்கப்பட்டதற்கு மதூரியால் எதிர்ப்பு காட்ட இயலவில்லை. பேரப்பிள்ளையைக் கொஞ்சவேண்டும் என்ற உவகையில் மாமி, மதூரியைக் கவனிக்க ஆரம்பித்தார். அவை தனது சுதந்திரத்தில் குறுக்கிடுவதாக இருந்தாலும், பெரிய அளவில் எதிர்ப்புகள் காட்ட இயலவில்லை. சிசேரியன் முறையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

[6]

நித்திலன் பிறந்த பின்னர் மூன்று வருடங்கள் வேகமாகக் கடந்து சென்றன. வார விடுமுறைகளில் தவறாமல் வீட்டிலிருப்பது போல சுரேன் பார்த்துக்கொண்டான். மகனை நர்சரியில் சேர்த்த பின்னர், மதூரிக்கு நிறைய நேரம் ஓய்வாகக் கிடைத்தது. ஃபேஸ்புக் பிரபலமாகிக்கொண்டிருந்த காலகட்டம். அவள் அதில் தன்னை இணைத்துக்கொண்ட போது பழைய பாடசாலை, பல்கலைக்கழக நண்பர்கள் என்று பலருடனும் தொடர்புகளைத் திரும்பவும் உருவாக்க இயன்றது. வீட்டிலிருக்கும்போது அவளைச் சுற்றி உருவாகிய சலிப்பை, நண்பர்களின் அரட்டையின் ஊடாகக் கடந்து வந்தாள். பெரும்பாலான பல்கலைக்கழக நண்பிகள் எல்லோரும் வேலையில் இருந்தார்கள். “ஹேய் மது, நீ என்ன பண்ற?” என்று கேட்கும்போது, பதிலுக்கு என்ன சொல்வது என்று சோர்வடைந்தாள். வேலையைத் தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறேன், பையன் பிறந்திருக்கிறான் என்று சொன்னபோது நண்பிகள் நகைத்தார்கள். தங்களுக்கும் இதுபோல்தான், வேலைக்குப் போகிறோமே என்றார்கள். 

அவளுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இருக்கவில்லை. தேவையான பணம் இருந்துகொண்டேயிருந்தது. உள்ளத்தின் அடியில் தனிமை வளர்ந்து சென்றது. தன்னந்தனியே இருக்கும்போதும் தனிமை இருந்தது, சுரேனுடன், நித்திலனுடன் இருக்கும்போதும் தனிமை இருந்தது. நண்பர்களுடன் அரட்டையில் இருக்கும்போதும் தனிமை இருந்தது. ஈசல் புற்றாக தனிமை வளர்ந்து அவளை மூடிக்கொண்டது. உடைத்து வெளியேறுவது கடினமாக இருந்தாலும், தனிமையைத் தன்னிரக்கமாக மாற்றி, அதற்குள் தன்னைக் கரைத்துக்கொள்ள ஆரம்பித்தாள். தன்னிரக்கத்துக்குள் மூழ்க மூழ்க இன்பமயமாக இருந்தது. வேலைக்குச் செல்வதனால் மீண்டுவிடலாமா என்று யோசித்தாள். அதில் அவளுக்குச் சோர்வே இருந்தது. 

பழைய புகைப்படங்களை ஸ்கான் செய்து, தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிடத் தொடங்கிய போது, பழைய நண்பர்களிடம் இருந்து  நிறைய பின்னூட்டங்கள் வர ஆரம்பித்தன. தன் பல்கலைக்கழக நினைவுகளுக்குள் மூழ்கினாள். மெலிந்த நீளமான உடல். இடைவரை நீண்டிருந்த கேசம் என்பவற்றைப் பார்க்கும்போது தன்னுடைய தற்போதைய தோற்றம் குறித்து விசனம் எழுந்து குதறியது. 

பென்னம்பெரிய நிலைக்கண்ணாடி முன் நின்று ஆடிவிம்பத்தைப் பார்த்தாள். சற்றுப் பருத்த வயிறும், சதைபோட்ட இடையுமாகத் தெரிந்தது. ஆடைகளைக் களைந்துவிட்டு நிர்வாணமாக உடலை நோக்கினாள். தொடைகள் பருத்து அகலமாகி, கன்னங்கள் புஷ்டியாகிப் பருத்திருந்தன. மார்புகள் அகலமாகித் தொய்ந்து முலைக்காம்புகள் கருவளையமாகிப் பொலிவிழந்து தென்பட்டன. வயிற்றில் சிசேரியன் தழும்புகள் படர்ந்திருந்தன. தன் தேகம் குறித்து கழிவிரக்கம் அடைந்தாள். இந்தத் திருமண வாழ்க்கை தன்னிலிருந்து தன்னை முற்றாகக் களீபரம் செய்துவிட்டதாக வருந்தினாள்.

எண்ணங்களில் இருந்து வெற்று எண்ணங்களை உருவாக்கி, பொருளின்மையை உருவாக்கி, நேரத்தைக் கடத்தி, தன்னைக் கரைத்து வெகு தொலைவுக்கு அர்த்தமில்லாமல் சென்றுகொண்டிருந்தாள். நித்திலன் “மம்மி, மம்மி” என்று அவளிடம் தாவினாலும், அவளது அகம் கொந்தளித்தவாறு இருந்தது.

உடற்பயிற்சிக் கூடத்தில் இணைந்த முதல்வாரம் மட்டுமே, தேகம் முழுவதும் வலியாக இருந்தது. கையை அசைக்கவும், நித்திலனைத் தூக்கவும் கடினப்பட்டாள். தொடர்ந்து செல்ல அவளால் எல்லாவற்றையும் இலகுவாகச் செய்ய இயன்றது. சீன வம்சாவளிப் பெண்கள் பலர் அங்கே தினமும் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடன் சிநேகிதமும் படர்ந்தது. மலாய் வார்த்தைகள் கொஞ்சம் கற்றுக்கொண்டாள். தனிப்பட்ட பயிற்சியாளரை அமர்த்திக்கொண்டாள். தனக்குரிய உணவுத் திட்டத்தை நிபுணரின் உதவியுடன் உருவாக்கினாள். தினமும் அங்கே சென்று, சுற்றியிருக்கும் ஆடிகள் முன்னே எதிரொலிக்கும் தனது விம்பத்தைப் பார்த்தவாறு இருந்தாள். அவள் உடல் ஒளிர்ந்துகொண்டிருந்தது.

[7]

தனது சமீபத்திய புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிந்தபோது, நிஜமாகவே நண்பர்கள் வாயடைத்துப் போனார்கள். வருகின்ற பின்னூட்டங்கள் அவளைச் சொக்கிப்போட்டன. முகம் தெரியாத பலரிடமிருந்து நட்பு அழைப்புகள் வர ஆரம்பித்தன. ஆரம்பத்தில் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் தவிர்த்தாலும், காலப்போக்கில் அவர்களையும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தாள். இலங்கையில் இருந்து வரும் நட்பு அழைப்புகள் ஒருபக்கம் குமிந்தாலும், தமிழ்நாட்டிலிருந்து ஏக்கப்பட்ட நட்பு அழைப்புகள் படையெடுத்தன.

சுவாரஸ்யமாக சில வரிகளில் எழுதப்படும் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு வரும் லைக் எண்ணிக்கைகள் ஆச்சரியத்தைக் கொடுத்தன. அவ்வாறான பதிவுகளை எழுத வேண்டும் என்று சிலவற்றை எழுதிப் பார்த்தாள். மொழியின் போதாமைகள் திகைக்க வைத்தன. மீண்டும் மீண்டும் எழுதிப் பார்த்தாள். சிந்திக்கும் சிந்தனையைக் குழப்பமில்லாமல் தெளிவாக எழுதுவதே சவாலாக இருந்தது. இளம் வயதில் வாசித்த நூல்களை நினைவுபடுத்திப் பார்த்தாள். தமிழ் வாசிப்பைக் கூட்டுவதே ஒரே வழியாக இருந்தது. மொழியைப் பயின்றாலும், எதை எழுதுவது என்பது அடுத்த பிரச்சினையாக உருவெடுத்தது. அவள் தேடித்தேடி அதற்கான கண்டுபிடிப்புகளைச் செய்து, நாட்டு அரசியலை ஆராய்ந்து எழுதுவதைவிட கேலி செய்வது இலகுவாக இருந்தது. அனைத்தையும் கேலி செய்யக் கற்றுக்கொண்டாள். தமிழ்த்தேசியம் பேசினாள், இடைக்கிடையில் புலி எதிர்ப்பும் எழுதினாள். அவளுக்கான நட்பு வட்டம் விரிந்து செல்ல ஆரம்பித்தது. எதை எழுதினாலும் விருப்பக் குறியீடுகள் இட கூட்டம் சேர்ந்தது. தினமும் குறுஞ்செய்திகள் மெசெஞ்சரில் வர ஆரம்பித்தன. இதுவரை அறிந்திராத பலருடன் செய்திகள் வழியே உரையாட ஆரம்பித்தாள். பல ஆண்கள், அவளது அழகை வர்ணித்தார்கள். தொலைபேசி இலக்கத்தைக் கேட்டார்கள். 

ஆண்கள் உரையாடிய இரண்டாவது நாளிலேயே, தங்களது சொந்தப் பிரச்சினைகளை ஒளிவுமறைவின்றிச் சொல்ல ஆரம்பித்தார்கள். மற்றவர்களின் கதைகளைத் தெரிந்துகொள்வது அளவற்ற போதையைக் கொடுத்தது. மெல்ல அவர்களைத் தூண்டிவிட்டு, அவர்கள் தன்முன்னே உடைந்து பேசுவதை உள்ளூரப் புன்னகையுடன் கேட்க ஆரம்பித்தாள். கண்ணீர் சிந்தும் ஆண்கள், அறியாத பெண் முன்னே தனது அத்தனை பாவனைகளையும் கழற்றிவைத்துவிட்டு அழும் ஆண்களைப் பார்க்கப் பார்க்க உவகை எழுந்தது.

தங்கள் மனைவிகளைப் பற்றி புகார் சொன்னார்கள். அவர்களது அதீத சந்தேகம் பற்றி விசனம் கொண்டார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது போல பேசிப்பேசி மேலும் அந்தரங்கங்களை அறிந்துகொள்வது நல்லதொரு பொழுதுபோக்காகியது. பெயர்களைக் குறிப்பிடாமல் அவற்றை வைத்து பல்வேறு நிலைத்தகவல்களை ஃபேஸ்புக்கில் எழுதினாள். வெகு சீக்கிரமே அவளது பதிவுகளுக்கு இருநூறு விருப்பக் குறியீடுகளுக்கு குறையாமல் வந்தன. வாரம் ஒவ்வொரு முறையும் தன்னுடைய புதிய புகைப்படங்களைப் பதிவேற்றத் தவறுவதில்லை. முடியலங்காரங்களை மாற்றி, அழகியல் நிபுணரை அமர்த்தி மேலும் உடல் வனப்பைத் தக்கவைக்க பல உத்திகளைக் கடைபிடித்தாள். தளர்ந்திருந்த தன் மார்புகளை எடுப்பாகக் காட்ட பேட் வைத்துக்கொண்டாள். புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. தன் தனிமையை மெய்நிகர் வெளியில் கரைத்துச் சென்றவாறு இருந்தாள்.

சுரேன், நித்திலனோடு செலவிடும் நேரம் அளவுக்குக்கூட மதூரியுடன் இருப்பதில்லை. ஃபேஸ்புக் வெளியில் அவளது புகைப்படங்கள் பிரபல்யம் பெற்றுவருவதை அவன் அறிவான். பல புகைப்படங்கள் அவனுக்கு ஒவ்வாமையை அளித்தன. மார்பு விளிம்புகள் மேலாடைகளுக்கு மேலே தெரிவது போல அவள் வேண்டுமென்றே புகைப்படங்கள் எடுத்துப் பகிர்வதாக எண்ணி கடும் எரிச்சல் அடைந்தான். 

“எதுக்கு இப்போது இத்தனை புகைப்படங்கள்?”

“என் படங்கள், நான் என் ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்கிறேன். அதில என்ன சிக்கல்?” மடிக்கணினியிலிருந்து கண்ணை எடுக்காமல் மதூரி கேட்டாள்.

“இவங்கள் எல்லாம் யார்?”

“யார்?”

“இப்படி கமண்டு போடுகிறார்கள்.”

“பிரண்ட்ஸ்”

“பிரண்ட்ஸா? அவங்க இப்படித்தான் நைஸ் கிளிவேஜ் என்று கமண்டு பண்ணுவாங்களா?”

அவள் பார்வையால் அவனின் கண்களை ஊடுருவி, “ஸீ… இதுல பாதிப்பேரை எனக்கு யாரென்றே தெரியாது. யார் யார் என்ன என்ன கமண்டு போடுறாங்க என்றெல்லாம் நான் வாசிப்பதுகூட இல்லை. அவனுக்குச் சொல்லணும் என்று தோன்றதை சொல்றான். இங்க முக்காவாசி ஆண்கள் பெண்களைப் பண்டமாகத்தானே பாக்கிறீங்க,” அவள் இதழ்களில் ஓர் இளக்காரம் புன்னகையாக வெளிப்பட்டது.

“நீ அப்படிப் பார்க்கணும் என்றுதானே இந்த மாதிரி போட்டோ போடுறாய்.”

அவனின் கேள்வியால் சீண்டப்பட்டு புண்பட்டது அவள் கண்களிலே தெரிந்தது. அது அவனை மேலும் தூண்டியது.

“என் உடலை நான் எக்ஸ்போஸ் பண்ணிக்கிறேன். என்னை விரும்பிய வகையில் முன்வைக்கிறேன். அதை எப்படி மற்றவங்க பார்க்கிறாங்க என்பது, அவங்க பார்வையைப் பொறுத்தது.”

“ஆனா, இந்த மாதிரி பார்க்கணும் என்ற விருப்பம்தானே உள்ளுக்குள் இருக்கு… அப்பத்தானே லைக்ஸ் வரும்.” கூரான கத்திகளை உரசித் தீட்டி கனலை உருவாக்குவது போல வார்த்தைகள் உரசிச்சென்றன.

“மேல் ஈகோ என்பது இப்படித்தான் யோசிக்க வைக்கும், பிகாஸ் நீயும் ஒரு ஆணாதிக்கப் பன்றி.”

இது பற்றி கதைக்க ஆரம்பித்தாலே அவளுடன் தேவையற்ற சண்டைகள் உருவாகி நிம்மதியைக் குலைத்தது. வேலையை முடித்த பின்னர், பியர் அருந்திக்கொண்டு நெட்பிளிக்ஸில் சீரிஸ் பார்த்தான். அவன் தலைமுடிகள் உதிர்ந்து, முன்பக்கம் ஏறக்குறைய வழுக்கையாகியிருந்தது. 

[8]

நித்திலன், சுரேனின் அம்மாவுடனே பெரும்பாலான நேரத்தைச் செலவழித்தான். மூன்று மாதம் இலங்கைக்குச் சென்று வருவதாக மதூரி புறப்பட்ட போது, சுரேன் எதிர்ப்பு எதையும் காட்டவில்லை. உள்ளூர அதை விரும்பவும் செய்தான். அவன் முழு நேரமும் மென்பொறியியல் சார்ந்தே சிந்தித்தான். குடும்பம் இருப்பதை மறந்தவனாக இருந்தாலும், நித்திலனை அந்தியில் தினமும் காரில் அழைத்துச்சென்று நகரப் பூங்காவில் சர்கீஸ் விளையாடினான். அதுவொன்றே அவனுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது.

அம்மா இறந்த பின்னர், அப்பா யாழ்ப்பாணம் சென்று வசிக்க ஆரம்பித்தார். தெஹிவளை பிளாட் பாவனையின்றி இருந்தது. மதூரி பிளாட்டுக்கு தனியே வந்துசேர்ந்தாள். பழைய பாடசாலை நண்பிகளை ஒன்றுதிரட்டி வாட்ஸப் குழுவை ஆரம்பித்தாள். பல நண்பிகளை தேடிப்போய்ச் சந்தித்தாள். எல்லோரும் திருமணமாகி பிள்ளைகளுடன் இருந்தார்கள். இளமையின் அடையாளங்கள் புதைந்துகொண்டிருந்தன. அவர்களின் உலகத்தில் அவர்கள் நிறைவாகவே இருந்தார்கள். அழைக்கும் நேரத்தில் எல்லாம் மதூரியை வந்து சந்திக்க இயலவில்லை. ஆரம்பத்திலிருந்த ஆர்வத்தைப் போகப்போக காண முடியவில்லை.

கொஞ்ச நாட்கள் செல்ல சலிப்பு உடலெங்கும் தொற்றிக்கொண்டது. சலிப்பு பொருளின்மையைக் கொடுத்தது. ஏதாவது செய்யவேண்டும் என்று மனம் தவித்து எரிய, எப்படி கடந்து செல்வது என்பது புலப்படாமலே இருந்தது. வங்கியில் தேவையான பணம் இருந்தது. சுரேன் மாதம் தவறாமல் பணம் அனுப்பியதால் பொருளாதாரம் ஒரு சிக்கலாகவே இருக்கவில்லை. இரண்டு வாரங்கள் ஃபேஸ்புக்கிலிருந்து முற்றிலும் வெளியேறிப் பார்த்தாள். கண்டிக்கும், நுவெரெலியாவுக்கும் பயணம் செய்தாள். தனியே செல்வது கடும் அலுப்பைக் கொடுத்தது. தன்னுடைய வாழ்க்கை அர்த்தமில்லாமல் அழிகிறதா என்ற அச்சம் பிசைந்தது.

வெள்ளவத்தை தமிழ்ச் சங்க நூலகத்தில் சேர்ந்து புத்தகங்களை இரவலாகப் பெற ஆரம்பித்தாள். எந்தப் புத்தகத்தை எடுத்தாலும், மனம் ஒன்றி வாசிக்க இயலவில்லை. வெற்று எண்ணங்களில் மூழ்கி எழுந்து வெகு தொலைவு மிதந்து சென்றாள். ‘என்ன யோசித்தேன்?’ என்று நினைவுகூர்ந்தால் வெறும் புகையாக அவை கரைந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டாள்.

இலங்கை, மலேஷியா என்று தேவைப்பட்ட நேரமெல்லாம் இடத்தை மாற்றிக்கொண்டிருந்தாலும், அதிகப்படியான நாட்களைக் கொழும்பிலே செலவிட்டாள். நான்கு வருடங்கள் இதேபோல சென்றது. நித்திலனை நினைக்கும்போதெல்லாம் குற்றவுணர்வு படர்ந்தது. அதனை மட்டும் நீக்கவே இயலவில்லை. சுரேனின் அம்மாவிடம் நித்திலன் வளர்வது ஆறுதலாக இருந்தது. இன்னுமொரு பக்கம் அது பென்னம்பெரிய விடுதலை. “மகனை விட்டுட்டு எப்படியடி உன்னால ப்ரீயா சுத்த முடிகிறது?” என்று நண்பிகள் கேட்கும்போது, அவர்களின் உள்நோக்கப் புண்படுத்தல்கள் கடுமையாகத் தொந்தரவு கொடுத்தன.

நித்திலன் என்னைப் பற்றி என்ன நினைப்பான் என்று தனக்குள்ளே கேள்விகள் தொடுத்து விரித்துக்கொண்டாள். அவன் தனக்குச் சொல்ல விரும்பிய பதில்களைக் கற்பனையில் தீட்டி வளர்த்தாள்.

<<என் செல்லம் நித்திலனுடனான வாழ்கையில், அவனை விட்டுவிட்டு எத்தனையோ வெளிநாட்டுப் பயணங்கள் சென்றிருக்கிறேன். அவன் “ஐ மிஸ் யூ” என்றுதான் சொல்வானே தவிர, ”ஐ ஹேட் யூ” என்று ஒருபோதும் சொன்னதில்லை. அவன் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும் ஒருவனாகவே இருக்கிறான். அதுதான் சரியான இயல்பு என்று அறிந்துகொள்ளவே எனக்குத் தாமதமாகியது. ஒவ்வொரு பயணத்தின்போதும் நாங்கள் அடையும் பிரிவு எங்களுக்கு இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. எங்கள் அன்பு இன்னும் வலிமையடைகிறது. குழந்தைகளைப் பிரிந்து செல்வதால் நாம் எதையும் இழப்பதில்லை. மாறாக புரிதல் அதிகரிக்கவே செய்கிறது. பிரிவால் அன்பு, நெருக்கம் குறையும் என்று சொல்வதெலாம் உண்மைக்குப் புறம்பானவை. நாம் ஏன் விலகி இருக்கிறோம் என்பதன் தெளிவை குழந்தைகளுக்கு உணரச்செய்யாமல் இருக்கும்போது அப்படி நிகழச் சந்தர்ப்பம் அமையலாமே தவிர மற்றபடி அவற்றைப் புறம்தள்ளுவதே சிறந்தது. “யூ கோ மம்மி என்ஜோ யுவர் டிரிப்” என்று  நித்திலன் சொல்லும்போது ஒரு தாயாக நான் அடையும் மகிழ்ச்சி என்பது பெருமிதத்திற்கு உரியது>>

என்று எழுதினாள். நிறைய பாராட்டுகளும் எக்கச்சக்கமான விருப்பக் குறியீடுகளும் அந்த ஃபேஸ்புக் பதிவுக்கு வந்தன. அது அவளை இனிமையாக உணரச்செய்து, உடலும் மனமும் இலகுவாகியது.

[9]

நாதன் அவளை மெசெஞ்சர் வழியாகத் தொடர்புகொண்டபோது, அவள் கடற்கரையில் வெறுங்காலுடன் கையில் குதிகால் செருப்பைப் பிடித்தவாறு மென்மணலில் நடந்தவாறு இருந்தாள். நேத்திரா தொலைக்காட்சியில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள இயலுமா என்பதை ஆங்கிலத்தில் ஐந்து வரிகளில் தன்னை அறிமுகப்படுத்தி எழுதியிருந்தான். அவனது ஃபேஸ்புக் பக்கம் சென்று பார்த்தாள். அவன் நிகழ்ச்சித் தயாரிப்பளராக அங்கே வேலை பார்த்துக்கொண்டிருப்பதாகக் காட்டியது. அவளை ஆச்சரியப்படுத்தியது, எப்படி தான் இலங்கையில் இருக்கிறேன் என்பதைச் சரியாகக் கண்டுபிடித்தான் என்பது. இருவருக்கும் இடையில் அரட்டை நீண்டது. எது பேசினாலும் நாதன் இரண்டு வரியில் பதில் அளித்தான். அதற்கு மேல் அலட்டிக்கொள்ளவில்லை. அவனது புரோபைல் புகைப்படங்கள் ஒவ்வொன்றாகப் பார்த்தாள். கலைந்த அடர்த்தியான கேசத்துடன், சவரம் செய்யப்படாத தாடியுடன் அலட்சியமாக இருந்தான். அந்த அலட்சியம் வெகுவாக அவளை ஈர்த்தது. தன்னுடைய அலைபேசி இலக்கத்தை வழங்கிவிட்டு அழைக்கச் சொன்னாள். உடனே அந்த அழைப்பு வரும் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமாகியது. அவன் இரண்டு நாட்களின் பின்னரே அழைத்து, ஸ்டூடியோவுக்கு வரச்சொல்லிக் கேட்டான்.

பதுரமுல்லையில் இருந்த அலுவகத்துக்குச் சென்றபோது, முதன்முதலாக நாதனைப் பார்த்தாள். நாதன் அத்தனை சீக்கிரம் அறிந்துகொள்ள இயலாதவனாக இருந்தான். அவனது தனிப்பட்ட விடயங்கள் எதையும் அறிந்துகொள்ள இயலவில்லை. மாலைநேர விருந்தினர் சந்திப்பு என்ற நிகழ்வில் அவளை வைத்து அந்த நிகழ்ச்சியை நடத்தினான். அதனை எத்தனை நபர்கள் பார்த்தார்களோ தெரியாது, ஆனால் அது பற்றி முகநூலில் எழுதி விருப்பக் குறியீடுகளை பெறுவது இன்பத்தைக் கொடுத்தது.

அதன் பின்னர் நாதனின் தொடர்புகள் விட்டுப்போனாலும், அவளாகவே தொடர்பை ஏற்படுத்தி சந்திக்க விருப்பம் கேட்டாள். அவன் ஒவ்வொரு முறையும் அலட்சியப்படுத்தினான். அந்த அலட்சியம் கடும் சினத்தைக் கொடுத்தாலும், வெல்ல முடியாத அவனை நினைத்து கிளர்ச்சியுறச் செய்தது. எப்போதும் அவனை நினைப்பதே அவனது புறக்கணிப்பின் வெற்றியாக அமைந்தது.

நாதன் ஒரு வேலையில் நிலையாக இருப்பதில்லை. அவனின் இயல்பே மாறிக்கொண்டே இருப்பது. நிலையான துணை அவனுக்கு இல்லை. இதெல்லாம் மதூரியை வசியம் செய்யப் போதுமானதாக இருந்தன. அவனைத் தேநீர் சந்திப்புக்கு அழைப்பது, வெள்ளவத்தை கடற்கரையில் மணலில் கால்புதைய நடக்க அழைப்பது எல்லாம் இலகுவாக நடந்தேறின. அவன் ஈ-சிகரெட் புகைப்பவனாக இருந்தான். வெவ்வேறு பிளேவர்கள் நிரம்பிய திரவங்களை நிரப்பிப் புகைத்தான். அதன் வாசம் இனிய நறுமணத்தைக் கொடுத்தது.

“நேத்திரா தொலைக்காட்சியில் வேலையை விட்டுவிட்டேன். வேலை சரியாக அலுப்படிக்கிறது” என்றான். கொஞ்சநாள் பங்குச்சந்தையைக் கவனிக்கப் போவதாகச் சொன்னான். அவனை அறிந்துகொள்ள வேண்டும் என்று கடுமையாக ஆர்வம்கொண்டாலும், பென்னம்பெரிய திரை தடுத்தே வைத்திருந்தது. அதனை முட்டி மோதித் திறக்க இயலாமல் திகைத்து நின்றாள். ஆணை அறிய அறிய ஏதோவொன்று குறைந்து செல்கிறது. அதற்கான இடம் கொடுக்காமல் நிற்பவனையே மனம் விரும்பி நாடுகிறது. அவர்களுக்கான தொடர்பு அப்படித்தான் வளர ஆரம்பித்தது.

[10]

மதூரி சுரேனிடம் விவாகரத்து கேட்ட போது, அவன் சொன்னான், “நீ நாதனை திருமணம் செய்யப் போகிறாய் என்றால், விவாகரத்து தருகிறேன். சந்தோஷமாக பண்ணிக்கொள். இல்லையென்றால் நான் தரமாட்டேன்.”

நாதன் “திருமணம் வேண்டாம் லிவிங் டுகெதர் சரிப்படும்,” என்றான். அவனை எத்தனை தடவை கேட்டும் அவன் பிடிவாதமாகத் திருமணத்திற்கு மறுத்தான். “எனக்கு அது செட்டாகாது…” என்ற ஒற்றை வரியில் நிறுத்திக்கொண்டான்.

மதூரி நாதனுடன் சுற்றித் திரிவதை அவளது நண்பிகள் தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக்கொண்டார்கள். மதூரி அதற்கெல்லாம் சோர்வடையவில்லை. ‘மதூரி சுரேந்திரன்’ என்றிருந்த ஃபேஸ்புக் பெயரை ‘மதூரி கதிர்வேல்பிள்ளை’ என்று மாற்றிக்கொண்டாள். தானும் நாதனும் நிற்கும் செல்பி புகைப்படத்தை தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவேற்றினாள். பின்னர் அது பொதுவான செய்தியாகியது. நாளடைவில் அவர்கள் இருவரையும் தம்பதிகளாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை நண்பர்கள் வட்டத்தில் இயல்பாகியது. அதுவரை மதூரி காத்திருக்கவும் இல்லை. நாதனை சட்டப்பூர்வமான கணவனாக ஆக்கிக்கொள்ள முடிந்தவரை முயன்றாள். நாதனின் தனிப்பட்ட நண்பர்களைத் தேடிச்சென்று அவர்களுடன் தனது நட்பினை விஸ்தரித்து, அவரை திருமணம் செய்யச் சொல்லுங்களேன் என்று வற்புறுத்தச் சொன்னாள்.

“சுரேனை காதலித்துத்தானே கல்யாணம் பண்ணினாய், அப்புறம் ஏன் பிடிக்காமல் போச்சு?” நாதன் ஈ-சிகரெட்டை உறிஞ்சி புகையை வெளியேற்றினான். சுருள் சுருளாக அவனைச் சுற்றி புகைபடர்ந்து காற்றில் கலந்து கரைந்தது. புளூபெரி வாசம் அறையெங்கும் நிறைந்திருந்து.

இந்தக் கேள்விக்கு எத்தனை தடவை பதில் அளித்தும், மீண்டும் மதூரி திருமணப் பேச்சை எடுக்கும்போதெல்லாம் நாதன் அவளிடம் இதையே கேட்டான். உண்மையில் அவளுக்கே சரியான பதில் தெரியாமல் இருந்தது. ஒவ்வொருமுறை பதில் சொல்லும்போதும், அதற்கான விடை இதுவாக இருக்குமா என்று எண்ணிப் பார்ப்பாள். நாதனின் உதட்டிலிருந்து மெல்லிய புன்னகை வெடிக்கும். அது அத்தனையையும் கசப்பாக மாற்றும். எப்படியும் வெல்ல முடியாதவனாக, பணிய வைக்க இயலாதவனாக இருக்கிறானே, எங்கேயாவது ஒரு துளி இடைவெளி தென்படுகிறதா தெண்டித் திறக்க என்று ஏங்கினாலும், அதுவே அவன் மீது மையல்கொண்டு பித்துப்பிடிக்கச் செய்தது.

[11]

நீர்கொழும்பில் இறால் வளர்ப்பு வியாபாரம் செய்வது தொடர்பான ஆராய்ச்சியில் நாதன் மும்முரமாக ஈடுபட ஆரம்பித்தான். சில காலம் இதில் ஈடுபட்டுவிட்டு விலகிவிடுவான் என்று மதூரிக்குத் தெரிந்திருந்தாலும், அவனுடன் சேர்ந்து ஈடுபடுவது பிடித்தமானதாக இருந்தது.

மலேஷியாவிலிருந்து வீடுவந்த பின்னர் அடைந்த வெறுமை அசந்து தூங்க வைத்தது. கண்விழித்த போது, அலைபேசியில் மின்னஞ்சல் வந்திருந்தது. வங்கிக்கணக்குக்கு சுரேன் பணம் அனுப்பியிருந்ததற்கான உறுதிச்செய்தி. ஒருகணம் எங்கிருந்தோ எரிச்சல் கிளர்ந்து நரம்புகளை எரியச்செய்தது. இங்கே நாதனை சந்திக்க வருவது சுரேனுக்கு நன்றாகவே தெரியும். அதைப்பற்றி அதிகமாகக் கேட்டதில்லை. எரிந்து விழுந்து சண்டை போட்டதுமில்லை. பிடித்திருந்தால் போ என்பதாகக் காட்டிக்கொள்வது துன்புறுத்தியது. எந்த விதத்திலும் தண்டிக்காமல் காட்டிக்கொள்வதும் நடிப்பா? மாதந்தோறும் அனுப்பும் பணத்தை நிறுத்தியிருக்கலாம். ஒன்றுமே செய்யாமல் அமைதியாக இருப்பது வாட்டியது. இதையே பென்னம்பெரிய தண்டனையாக கொடுக்க விரும்புகிறானா? அத்தனை நல்லவனா நீ என்று துவண்டாள்.

அந்தியில் கடற்கரையில் நடந்துவிட்டு, பஷன்பக் ஆடையகத்துக்குச் சென்றாள். எதை வாங்குவது என்று தெரியாமல், அனைத்து ஆடைகளையும் நோட்டம்விட்டு, இறுதியில் இரண்டு ஷேர்ட் வாங்கினாள். வீட்டுக்கு எடுத்துவந்து அலமாரியில் வைத்தாள். இதில் எது நாதனுக்குப் பிடிக்கும் என்று யோசித்தாள். பிடிக்காவிட்டாலும் அவனது அகத்திலிருந்து அறிந்துகொள்வது கடினம். ஒரு தலையசைப்புடன் “நைஸ்” என்று வாங்கி வைத்துக்கொள்வான். அவனை முற்றாக ஊடுருவ இயலவில்லை என்பது அந்தரப்படச் செய்தது. ஆணிடம் அறியாமல் சிலதை விட்டுவைத்திருப்பது பெண்களைப் பொறுத்தவரை பெரிய தோல்விதான். அறியாமைதான் சுவாரஸ்யத்தைத் தருகிறதா என்று எண்ணி வியந்தாள். கடுமையான உளச்சோர்வு சுழன்று அவளைப் பீடித்தது.

கடற்கரைக்குச் சென்றாள். அந்தியாகிக்கொண்டிருந்தது. வானம் சிவந்து ஒழுகி கடலின் முடிவின் வளைவில் கரைந்திருந்தது. கொக்குகள் வழுக்கியவாறு வானத்தில் மிதந்து சென்றன. கடலின் அலையை உற்றுப் பார்ப்பது, மனதைப் பார்ப்பது போலத்தான். அவளிடமிருந்த வெறுமை போலவே கடலும் வெறுமையாக இருந்தது. அதன் கொந்தளிப்பு இலயிக்கச் செய்தது. கரையில் எக்கச்சக்கமான கூச்சல். மக்கள் நடந்தவாறும், குழந்தைகளுடன் விளையாடியவாறும் இருந்தனர். இரண்டு நாய்க்குட்டிகள், தாய் நாயின் பின்னால் உருளையாக உற்சாகமாக ஓடிக்கொண்டிருந்தன. அவற்றின் வால்கள் குதூகலத்துடன் அசைந்தன. மதூரியின் கண்கள் அவற்றை அவளை அறியாமல் பின்தொடர்ந்து சென்றன. கடற்கரையிலிருக்கும் பொலுத்தின் பைகளை ஆர்வத்துடன் விரட்டிச்சென்று, அதற்குள் எதையோ தேடியெடுத்து குட்டிகளுக்கு தாய் நாய் கொடுத்தது. ஆர்வத்துடன் அவற்றை அவை நக்கின. மதூரியின் மனதில் சட்டென்று உவகை எழுந்தது. மெல்ல அவற்றின் பின்னே சென்று பார்க்க பாதங்களை முன் நகர்த்திச் சென்றாள். அலைகளுக்குள் அவை மறைந்து செல்வது போலத் தோன்றின. எங்கேயோ அவற்றைத் தவறவிட்டுவிட்டாள். கரையெங்கும் தேடி விட்டு, புற்தரையில் ஏறும்போது தாய் நாயைக் கண்டாள். அது தரையில் சரிந்து படுத்திருக்க, இரண்டு குட்டிகளும் முலைக்காம்பைச் சப்பிக்கொண்டிருந்தன. காது மடல்களைத் தாழ்த்தி வாலை ஆட்ட தாய் நாய் முற்பட்டது. அப்படியே தரையில் முழங்கால் புதைய அமர்ந்து அதன் தலையை வருடிக்கொடுத்தாள். தாய் நாயின் கண்கள் அவளின் கண்களைப் பரிவோடு சந்தித்தன. 

1 comment

Kasturi G October 16, 2021 - 9:36 pm

A snap shot on current generation of young women
/ Men investing their life and future in Face Book pages.
Nicely written.
Thanks

Comments are closed.