அகம் சுட்டும் முகம் (பகுதி 10): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

by எம்.கே.மணி
0 comment

நண்பன் ஒருவன் இருந்தான். பெரிய துணிச்சலோ சாகசங்களோ அறியாத ஒருத்தன்தான். பிழைத்துக்கொண்டு சென்று பணத்தில் முழ்கிக் காணாமல் போனவன். நான் சொல்கிற நேரத்தில் டிரைவராக இருந்தான். ஒரு நாள் நள்ளிரவில் எங்களைச் சந்திக்க வந்தான். காரில் ஒரு இளம்பெண் இருந்தாள். ஒளிந்து இருந்தவளின் முகம் பார்த்தோம். போஷாக்கு பார்ட்டி. திக்கு தெரியாமல் ஏர்போர்ட்டில் நின்று முழித்துக்கொண்டிருந்ததாகவும் நைசாகப் பேசி தள்ளிக்கொண்டு வந்துவிட்டதாகவும் பெருமையாகச் சொன்னான். இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்? கேங்க் ரேப் செய்துவிட்டு மர்டர் பண்ணப் போகிறோமா? அவனுக்குத் தெரியவில்லை. அவனைக் கண்டபடி வசைபாடிவிட்டு, அவள் சொன்ன பெரியமேட்டுக்கு அழைத்துச் சென்றோம். அவளுக்கு அங்கே யாருமில்லை. மூக்கில் இழுக்கிற பவுடர் இங்கேதான் கிடைக்குமாம் என்றாள். அதை வாங்கி வரச்சொன்னாள். பெரியமேடு போலீஸ் ஸ்டேஷனில் அவளை  ஒப்படைத்துவிட்டுத் திரும்பினோம். ஒரு சாதாரண கரப்பான் பூச்சியான நண்பனால் ஓர் இரவில் இதைச் செய்ய முடிகிறது என்றால், எல்லாம் வல்ல வஸ்தாதுகள் வண்டி போட்டுக்கொண்டு சுற்றும் இந்த நகரங்களின் இரவுகள் எத்தகையவை? போக்கிடமில்லாத ஒரு அபலைப் பெண் தெருவிற்கு வரும்போது என்ன நடக்கிறது என்பதை இந்தப் படம் பேசுகிறது.

‘கதைக்குப் பின்னில்‘ (1987) என்பது படத்தின் பெயர். “கதைக்குப் பின்னால்” என்கிற பொருள் வரும்.

டென்னிஸ் ஜோசப் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். காம்பாக்டில் இருந்து விலகாமல், ஒருபோதும் அத்துமீறி ஷோ பண்ணிவிடாமல் படத்தின் அடர்த்தியைக் காப்பாற்றிவந்த ஒளிப்பதிவைச் செய்தவர் வேணு. இயக்குநரிடம் மட்டுமல்லாமல் படத்தின் பொறுப்பு இவர்களிடமும் இருந்ததை அறிந்துகொள்ளலாம். மூர்த்தி சிறுசு, கீர்த்தி பெருசு என்னும்படியான சினிமா.

எனக்கு மிகவும் பிடித்த ஒரு இடத்தில் இருந்து கதை தொடங்குகிறது. மம்மூட்டி இன்னும் ஒரு வாரத்தில் ஒரு நாடக ஸ்க்ரிப்டை எழுதி முடித்தாக வேண்டும். நிர்பந்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு வரி வந்து விழமாட்டேன் என்கிறது. மனைவி, குழந்தை போன்ற டொமஸ்டிக் நச்சரிப்புகளுக்கு நடுவே அது நடக்கவில்லையா? அவர் குழுவினர் ஏற்பாடு செய்த ஒரு வீட்டில் தங்கி கதையை எடுத்து நகர்த்த முயல்கிறார். குடித்து, புகைத்து, கடைசியாக ஒரு பெண்ணுடன் இருந்து பார்க்கவும் தயாராகிறார். அப்படி வந்த பெண் வேசி அல்ல. போக்கிடமற்ற அவளைக் காப்பாற்றியாக வேண்டும். அவளைக் கொல்ல வருகிறவர்களிடம் இருந்து.

அவளது கதைதான் இனிமேல் தவிர்க்க முடியாத ஒரு நாடகமாகப் போகிறது. மம்மூட்டி அதில் ஒரு கதாபாத்திரமாக மாறுகிறார்.

மிகவும் தாமதித்து அவள் சொல்கிற கதை ஒரு பிளாஷ்பேக்.

ஒரு அளவிற்கு மேலே சேருகிற பணம், ஒரு தேக்கத்தைக் கொண்டுவரும். அயர்ச்சியை, ஆயாசத்தை, அலட்சியத்தைக் கொண்டுவரும். கண்ணிமை அடையாமல் சர்வசதா நேரமும் விழிப்புடன் இருந்த வாழ்வின் துடிதுடிப்பு, ஈஸிசேர் போட்டு சாய்ந்து ஹாயாக சாய்ந்து, நெட்டு முறித்துக்கொள்ளும். பணம் பணத்தை உண்டாக்கிக்கொண்டிருக்க வேண்டும் என்பதல்லவா நியதி ? ஒரு இடைவெளியைத் திளைத்துக்கொண்டிருப்பதில் நேர்கிற சரிவில், எவ்வளவோ பெரிய சாம்ராஜ்ஜியங்கள் சரிந்திருக்கின்றன. குடும்பங்கள் நிர்மூலமாகியிருக்கின்றன. அப்படி விழுந்து சிதறிப்போன குடும்பத்தில் இருந்து தெருவிற்கு வந்தவள்தான் இப்படத்தின் நாயகி. பெயர் வனிதா நாயர். வனிதா ஒரு கவிதாயாயினியாக நின்று நிலைப்பதற்கு சூழ்நிலைகள் மறுக்கின்றன. ஓடுகிறாள். யாருக்கு உடன்படாமல் ஓடினாளோ, ஓடி முடித்து பெருமூச்சு விட்டுக்கொண்ட இடம் அவர்களுடையதாக இருக்கிறது.

சொல்லப்போனால் அவர்கள்தான் எல்லா இடங்களையும் நிறைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய லீலைகளைச் செய்யாமல் இருக்க முடியுமா? பணமும், அதிகாரமும், செல்வாக்கும் இருக்கும்போது அதை எப்பாடு பட்டேனும் நிரூபித்தவாறு இருக்க வேண்டும். 

ஒரு சமூக வஸ்தாது, அவனைக் குத்திப்போட்டு ஓடி வந்துதான் அவள் அந்த எழுத்தாளனைச் சரணடைந்திருக்கிறாள். அந்த எழுத்தாளன்தான் என்ன செய்துவிட முடியும்?

குத்துப்பட்டவன் சாகவில்லை என்பதற்கு சந்தோஷப்படுவதற்குள் அவள் அடுத்தத் தாக்குதலை மேற்கொள்ள வேண்டி வருகிறது. இம்முறை குறி தவறவில்லை. நிகழ்ந்தது ஒரு கொலைதான். அவள் இப்போது கொலைகாரிதான்.

பாவம் எழுத்தாளன். நீதி வெற்றிபெற்று அவள் சட்டத்தின் பிடியில் இருந்து வெளியேறி வருவதாக எழுதி, கைதட்டிக்கொள்கிறான். யதார்த்தம், பச்சையான வேறு ஒன்றாக நம்மை நோக்கிப் பல்லிளிக்கிறது.

ஒரு வகையில் இந்தப் படம், பல்வேறு கோணங்களில் வழக்கமாக வருகிற படங்களைப் போலத்தான். ஆனால் ஜார்ஜ் எப்போதும் மேற்கொள்ளுகிற உள்மடிப்புகளில் அத்தனை எள்ளல்களும் இருந்தன. அந்தக் கோணல் சிரிப்பில் பல்வேறு பரிகாசங்கள் துலங்கிவரும். உதாரணமாக, வனிதாவின் காதலனுக்கு நேர்ந்தது என்னவாக இருக்கும் என்பதைச் சொல்லாமல் தாவிச் செல்லுகிறது படம். யாரோ ஒருவனுக்கு அடங்கிப்போகிற வயிற்றுப் பிழைப்பு மனிதர்களைச் செலுத்தும் காரியம் நமக்குத் தெரியும் என்றால், அவனுக்கு நேர்ந்ததில் ஒரு மர்மமும் இல்லை.

எழுத்தாளன் என்கிற மம்மூட்டி கதாபாத்திரம். அவன் தூயனில்லை. அவனுக்குப் பெண்களின் மீது அசட்டைகள் உள்ளன. உலகப் பொதுவான வழக்கங்களைக் கையாள்வதில், வேசியை நடத்துகிற, மனைவியை நடத்துகிற சுபாவங்களை இயக்குநர் காட்சிப்படுத்துகிறார். அவன் நமக்கு உறுத்தலாக இருப்பதில் இருந்து அவனையும் அவர் தப்பிக்க விடுவதில்லை என்பது அவர் செய்கிற சினிமாவின் வெற்றி என்று நினைக்கிறேன். அதைப் போலவே படத்தின் இறுதி மிகவும் சுருக்கமானது. நீதிக்கு எவ்வளவு அபத்தமான தோல்வி  நேருகிறது என்பதைக் குறித்தது அது. அதை ஜார்ஜால் மட்டுமே இவ்வளவு நேர்த்தியாகச்சொல்ல முடியும். பல படங்களிலும் அவர் பார்வையாளர்களைக் குறுக வைத்து தியேட்டரை விட்டு வெளியேற்றுவார்.

இதிலும் அதுவே நடந்திருக்கிறது.

நாடக எழுத்தாளனாக நடித்த மம்மூட்டியைப் பற்றி விவரிக்க ஏதுமில்லை. தோதுபட்டிருந்தால் இதைக் காட்டிலும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ அவரால் அதை மேலும் நிறைவுசெய்திருக்க முடியும். எனவே அவரை நன்றாக நடித்தார் என்று குறிப்பிட முந்தினால், நாம் ஆர்வக்கோளாறு என்று பொருள்.

இக்கதையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருந்தது. அவள் ஒரு வேங்கைப்புலி அல்ல. ஆழ்ந்து நோக்கினால் திடமற்று வளர்ந்த நோஞ்சான் மனம். அதற்கு எல்லாவற்றையும் கண்டு அஞ்ச மட்டுமே தெரியும்.

வனிதாவாக வந்த தேவி லலிதா அபூர்வமாகச் சில படங்களில் வந்திருந்து மறைந்துபோன ஒரு நடிகை. ஒரு ஸ்டாருக்கு வேண்டிய சில பல மினுங்கல்கள் இல்லாமல் போனவர். அவர் சீக்கிரம் காணாமல் போனதில் வியப்பில்லை. தமிழில் அவர் நடித்த பல படங்களில் நிலாப் பெண்ணே என்கிற படம், மிகவும் சிறிய கதாபாத்திரம், அதில் அவர் முழுவதுமாக ஒளிர்ந்து மறைந்து போனது நினைவில் இருக்கிறது. இப்படத்தில் அவர் அப்படிப் பொருந்திப் போயிருந்தார். ஜார்ஜ் மீது பெரிய பாராட்டுணர்வு உண்டாயிற்று. திலகனும் நெடுமுடி வேணுவும் ஜெகதியும் சோமனும் பல்வேறு சிந்தனைகளை உண்டாக்கக் காரணமாக இருந்தார்கள். 

வெகுஜனப் படங்களில் வருகிற தட்டையான திரைக்கதைகளில், ஒரு நேர்க்கோட்டில் தாங்கள் எடுத்துக்கொண்ட கதையைச் சொல்லிக்கொண்டு போவார்கள். அவர்களுக்கு அதற்கே நேரம் இருக்காது. கதைக்குச் சற்றுத் தள்ளி தூரமாக இருந்துவிடுகிற மற்றவர்களைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இருக்காது. சொல்ல வந்தாலுமேகூட அவைகள் நமக்கு எதையும் குறிப்புணர்த்திச் செல்லுவதில்லை. வணிக நோக்கங்கள் அவ்வளவு கறாரானவை. நல்லவேளையாக நான்கு பேரைப் பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இம்மாதிரிப் படங்கள் சில சித்திரங்களை அளிக்கின்றன. ஹோட்டலில் பராக்காக அமர்ந்து இருப்பவர்களின் முன்னால் உயிரைக் கொடுத்துப் பாடி கொஞ்சம் கைதட்டல்கள் பெற்று சந்தோஷமாக நாயகி அங்கிருந்து போனதும் அங்கே ஆட வருவதற்கு கேபரே டான்சர்கள் இருப்பது சொல்லப்பட்டாலும், அவர்களை வெளிப்படுத்திய முறையில் மனித பிழைப்பின், அல்லது வயிற்றுப்பாட்டின் அவலங்கள் முந்தி நின்று தெரிகின்றன. திரைக்கதையில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடம் கதையைச் சுட்டுவதும்தான். அதை மீறின படைப்பின் ஆசைகள் இருக்கின்றன. அவர்களைப் பற்றி நாம் இதுவரை அறியாத கோணங்களை அறியச்செய்கிற நோக்கங்கள் இருக்கின்றன. ஒரு நல்ல படம் எத்தனை எத்தனை துளிகளால் பெருவெள்ளமாக உருவெடுக்க முடியும் என்பதை அறிய முடியும். கே.ஜி.ஜார்ஜ் எப்போதும் மனிதர்களைப் பற்றிச் சொல்ல விரும்புபவராக இருந்ததில் அவர்கள் மீது அவருக்கு இருந்த பரிவைச் சொல்ல வேண்டும். ஆனால் அவரை வெறுக்கிறவர்கள் அதிகம்.

எழுத்தாளன் அல்லது படைப்பாளி மனிதர்களுக்குச் சொறிந்து கொடுப்பவன் அல்ல என்று அறிந்திருக்கிறோம். இனிப்புக் கதைகள் சொல்லி அவனை இளித்துக்கொண்டிருக்க வைப்பது ஒரு தினுசான சிறுமை அல்லவா? மனிதம் பேசி, உறவின் மகாத்மியங்கள் பேசி, கடைசியில் அத்தனை கடைக்கோடிகளுக்கும் ஈவிரக்கமின்றி முன்னேறிச் செல்லுகிற அநீதிகளுக்கு யாராலும் முட்டுக்கொடுக்க முடியும் என்கிற ஸ்திதி எப்படி நிலைத்துவிடுகிறது என்றால், அது மனிதன் தன்னை அறியாத குறைதான். அது யாரோ வானத்தில் இருந்து குதித்து நிகழ்த்திவிட்டுச் சென்றுவிடுவதாகக் கற்பனை செய்கிற சௌகரியம் அதில் கிடைத்துவிடுகிறது. என்றோ முட்டிக்கொண்டு நிற்கிற நிலைக்கண்ணாடிகளைப் போர்வை கொண்டு மூடிவிடுவதும் நடக்கும். நீயும் நானும் அவனும் அவர்களும் தன்னை ஒருபோதும் அறியாது நீதிக்குத் துதிக்கிறவர்களாக இருப்பதில் அநீதிகள் நுழைய இடுக்குச் சந்துகளை உருவாக்குகிறோம். தன்னைப் பார்த்துக்கொள்ளுவது என்பது கலையின் முதல் பாடம். அந்த வழிமுறையை வெறுப்பு என்றும் துவேஷம் என்றும் ஆபாசம் என்றும் மிட்டாய் வியாபாரிகள் சொல்லவே செய்வார்கள். தன் மீது வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களை எல்லாம் மீறி, கே.ஜி.ஜார்ஜ் மேலே தெளிந்து வருவார்.

காலமும் பார்வைகளும் மாறக்கூடும். இதை நான் ஆத்மார்த்தமாக நம்புகிறேன்.

அவருடைய படங்கள் பிரச்சாரம் அல்ல. ஆயின் அதில் வலுவான பெண் பாத்திரங்கள் மூலம் அவர்களுக்காக எப்போதும் ஒரு நேர்மையான சிபாரிசைச் செய்வார். யவனிகா படத்தில் தபலா ஐயப்பனைச் சாய்த்த ரோகிணியை மறந்திருக்க மாட்டோம். ஒருவிதத்தில் வனிதா அவள்தான். சொந்த நரகத்தை ரோகிணி முறியடித்தது ஒரு வழியில் என்றால் வனிதா தனக்குள் குதறிய முள்ளைப் பிடுங்கி எறிகிறாள். அதுவொரு சமூக நடவடிக்கையாகக்கூட முடிகிறது.

ஆனால் ஆண்களாக இருக்கிற அத்தனைக் கதாபாத்திரங்களும் சந்தேகம் கொள்ளும்படிதான் திரிகிறார்கள். யாரையும் முழுமையாக நம்ப முடியாது. கே.ஜி.ஜார்ஜ் இதுவரை உருவாக்கிய பாத்திரங்களில் எல்லாம் நாம் யாராக இருக்கிறோம் என்று கதைக்குப் பின்னால் இருந்து பார்த்துக்கொள்ள முடியும்.

*

முந்தைய பகுதிகள்:

  1. ஸ்வப்னாடனம்
  2. உள்கடல்
  3. மேள
  4. கோலங்கள்
  5. யவனிகா
  6. லேகயுடே மரணம், ஒரு பிளாஷ்பேக்
  7. ஆதாமிண்டே வாரியெல்லு
  8. பஞ்சவடிப் பாலம்
  9. இரைகள்