கதவைத் திறந்ததும் புழுங்கலான வாடையுடன் காற்று வெளியேறியது. சிக்குப்பிடித்த எண்ணெயும் கெட்டுப்போன உணவுப் பண்டமும் அழுக்கும் சேர்ந்த நாற்றம். சோர்வுடன் கண்களை மூடியபடி தலையை அப்படியே சுவரில் சாய்த்து நின்றான். யாருமற்ற வீட்டின் நிச்சலனமும் வெறுமையும் எதிரில் இருளென நின்றிருந்தது. மூலையிலிருந்த ஸ்விட்சை எட்டிப் போட்டான். வெளிச்சம் பரவிய நொடியில் தரையில் கரப்பான்கள் வெருண்டோடின. அங்கும் இங்குமாய்ப் பதுங்க இடம் தேடி விரைந்தன. எச்சரிக்கையுடன் கால்வைத்து உள்ளறைக்கு வந்து விளக்கைப் போட்டான். கூடவே மின்விசிறியையும். சுழலத் தொடங்கிய மின்விசிறியைப் பார்த்ததும் உடலைச் சொடுக்குவதுபோல அந்த எண்ணம் தாக்கிற்று. ஒருகணம்தான். உடல் பரபரத்தது. அதுதான், அதுவேதான் என்று அந்தச் சிறுபொறியை ஊதிப் பெருக்கும் ஆவல் கிளர்ந்தது. தலையை உலுக்கிக்கொண்டு ஜன்னலைத் திறந்தான். உடைகளைக் களைந்து சோபாவின் மேல் போட்டான். தரையில் கிடந்த வேட்டியை எடுத்து உதறியபோது மின்விசிறியை மறுபடியும் தலைதூக்கிப் பார்த்தான். இப்போது அது இன்னும் தீவிரமடைந்தது.

மின்விசிறியை அணைத்தான். வேகம் குறைந்து மெதுவே சுழன்று நிற்கும் வரையிலும் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றான். புழுக்கம் கூடியது. ஜன்னலுக்கு வெளியே மையிருட்டு. சுவருக்கு அப்பால் காற்றில் அசையும் கிளைகளின் மேல் தெருவிளக்கின் ஒளி மங்கலாய்த் தென்பட்டது. 

வேட்டியை நீளவாக்கில் பிடித்து அளவு பார்த்தான். இரு முனைகளையும் பிடித்தபடி வேட்டியை இழுத்துப் பார்த்தான். சரியாக இருக்கும் என்றொரு குரல். ஒரு முனையைத் தூக்கி மின்விசிறி மேல் வீசினான். ஒரு விசிறியில் பட்டு சரிந்தது. கைகள் நடுங்கின. முகத்திலும் முதுகிலும் வியர்வை. இப்படி தூக்கிப் போட்டால் சரிவராது. எதையேனும் இழுத்துப் போடவேண்டும். அதன் மேல் நிற்க வேண்டும். பிறகு பதற்றப்படாமல் சுருக்கிட்டு கழுத்தை நுழைக்கவேண்டும். அதன் பிறகு கால்களுக்கு கீழிருக்கும் நாற்காலியையோ மேசையையோ தள்ளிவிடவேண்டும். இதுதான் சரியான முறை. சரியோ தவறோ எல்லோரும் இப்படித்தான் செய்கிறார்கள். 

சட்டென்று வேட்டியை உதறி எறிந்தான். சோபாவுக்குப் பின்னால் விழுந்தது. ஆணியில் தொங்கிய இன்னொரு வேட்டியை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டு உள்ளறையிலிருந்து வேகமாய் நடந்து பின்கதவைத் திறந்தான். திரும்பிப் பார்க்காமலே விரைந்தவன் துவைகல்லின் மேல் உட்கார்ந்ததும் அறையைப் பார்த்தான். வெப்பத்தைத் தேக்கியிருந்த கல் சுட்டது. இன்னும் அந்த எண்ணம் வீட்டுக்குள் இருக்கக்கூடும் என்ற பயம். விரல்களில் இன்னும் நடுக்கம் தணியவில்லை. இத்தனை நாட்களும் அவனை அச்சுறுத்தாத இந்தத் தனிமையும் வெறுமையும் ஏன் இப்படியொரு யோசனையைக் கொடுத்தன என்று அவனுக்கு விளங்கவில்லை. 

அந்த எண்ணத்தை விரட்ட விரும்பியவனாய் தலையை உயர்த்தி வானைப் பார்த்தான். எண்ணற்ற நட்சத்திரங்கள். காணுந்தோறும் முளைத்தெழுந்து மின்னியது. ஒவ்வொரு விண்மீனும் கண்ணீர் துளிபோல் பளபளத்தது. அதன் நீர்மையை அவனால் உணரமுடிந்தது. உதடுகள் துடிக்க விசும்பினான். வானம் கைநீட்டி தலைதடவியது போல நிலையிழந்தான். அழுதான். வழியும் கண்ணீரைத் துடைக்க வேண்டாதவனாய் வானைப் பார்த்தபடியே அழுதான். யாரும் அருகிருந்து எதுவும் சொல்லாததே ஆறுதலாய் இருந்தது. அதே நேரத்தில் யாருமில்லை என்பது துக்கமாயும் இருந்தது. 

துக்கம் கரைந்ததா அல்லது அந்த அச்சம் கலைந்ததா தெரியவில்லை. அழுகை மெல்ல வடிந்து ஓய்ந்தது. படபடப்பு அடங்கி மனம் இலேசாகியிருந்தது. ஏன் இந்த அழுகை என்று அவனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. என்னென்னவோ நடந்திருக்கிறது. எதற்கும் கலங்கியதில்லை. அழுததும் இல்லை. இன்றென்ன இப்படி?

போதும் இந்தப் போராட்டம், முடித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் எப்படி வந்தது? அதுதான் முடிவென்றால் எப்போதோ அதை எடுத்திருக்கலாம். 

ஒருநாள் சுருக்கமாய் ஒரு குறுஞ்செய்தியை மட்டும் அனுப்பிவிட்டு அவனை விட்டு அவள் போனபோதே அதைச் செய்திருக்கலாம். என்ன காரணம் என்பதை அவள் சொல்லவேயில்லை. தொடக்கத்திலிருந்தே ஒட்டாமல் இருந்தமைக்கான காரணத்தை அவனால் பிரித்தறியவே முடியவில்லை. அவள் ஒட்டவில்லையா? இவன் அனுமதிக்கவில்லையா? எப்போதும் போல விலகி நின்றுவிட்டானா? அதுவே அவளுக்கு வசதியாகப் போய்விட்டதா? ஒன்றுமே புரியவில்லை. இதெல்லாவற்றையும்விட அவளுக்கு வேறு ஏதோ தேவைப்பட்டிருக்கிறது. இவனால் தரமுடியாத ஒன்று. அவனுக்கும் அப்படி ஏதும் தேவைகள் இருந்ததா? ஒரு பெண்ணால் மட்டுமே இட்டு நிரப்பக்கூடிய வெற்றிடம் அவனிடமும் இருந்ததா? அவனுக்கே தெரியாதபோது அவளிடம் எப்படிச் சொல்லியிருக்க முடியும்?

போதும் என்று தீர்மானித்ததும் போய்விட்டாள். எஞ்சியிருக்கும் சிற்சில ஞாபகங்கள் எப்போதேனும் எட்டிப் பார்க்கும்போது அவள் முகத்தைத் துலக்கிப் பார்த்திட விழைவான். ஆனால் அது கலைந்த நீர்வண்ண ஓவியம் போலத்தான் நினைவில் அசைகிறது. அவள் போன கையோடு வீட்டிலிருந்த திருமண ஆல்பத்தையும் வீடியோவையும் எரித்துவிட்டான். எங்கே என்று தேடிப் போகவும் இல்லை. யாரும் வந்து விசாரிக்கவும் இல்லை. 

புறக்கணிப்பின் காரணிகளை அறியாத துக்கம் அவனை வெகுநாட்கள் வாட்டியிருந்தது. அப்போது இப்படியொரு முடிவை எடுத்திருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் இப்போது கடந்த நிலையில் இந்த எண்ணம் எப்படி எழுந்தது?

வீட்டுக்குள் போகவே பயந்தவன்போல இருளை வெறித்தபடியே உட்கார்ந்திருந்தான். வெம்மை குறைந்து இரவு இதமாகியிருந்தது. வானில் நட்சத்திரங்களின் ஒளி. காற்றில் அசையும் தென்னை ஓலைகளின் சரசரப்பு. கொடியில் அசையும் துணிகளைப் பார்த்தபடியே கண்களை மூடினான். அவளுடன் சேர்ந்து எல்லாமே போய்விட்டது. எந்த வீட்டுக்கும் இயல்பாகப் போக முடியவில்லை. எப்போதேனும் ஒருமுறை திருப்பூரிலிருக்கும் தம்பி வீட்டுக்குப் போக நேர்ந்தபோதும்கூட இறுக்கம் கூடிய அந்தச் சூழலை அவனால் வெகுநேரம் தாங்க முடிந்ததில்லை. தம்பியின் மனைவி கண்ணில்படாமலே நழுவியிருப்பாள். அம்மா எங்கோ வெறித்தபடியே அவன் விடைபெறுவதற்காகவே காத்திருப்பாள். அறிந்தநாள் முதல் அவள் அப்படித்தான். அவளுக்கு எல்லாமே சின்னவன்தான். இந்த வீட்டுக்கு அவள் வந்துபோன நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இவனைக் கண்டதுமே அவளது முகமும் கண்களும் உடலும் ஏன் அப்படி சுருங்கிக்கொள்கிறது என்பது புரியவேயில்லை. அம்மாதானே, இருக்கட்டும் என்று சமாதானம் எழுகிற அதேநேரத்தில் ‘அம்மாதானே?’ என்ற கேள்வியும் வலியுடன் முளைக்கும். 

அலுவலகத்தில் அவன் இப்படித் தனியாய் இருப்பது பலருக்கும் தெரியும். ஆனால் யாரையும் அவன் நெருங்கவிட்டதில்லை. யாரிடமும் நெருங்கவுமில்லை. ஒருவிதமான கிராக் என்ற பெயரும் தனியாகக் கிடப்பவன் என்பதும் அவனைச் சுற்றி ஒரு வேலியை எழுப்பியிருந்தது. ‘சரியா சாப்பிடுறதுமில்லை. வேற பழக்கமும் கெடையாது. வாங்கற சம்பளத்தையெல்லாம் என்ன பண்ணுதோ தெரியலே’ என்ற குரல்கள் அவ்வப்போது ஒலிக்கும். அவன் பொருட்படுத்தியதில்லை. 

அவனுக்கும் அது தெரியவில்லை. பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது? எதுவும் செய்யவேண்டும் என்ற எண்ணமும் இல்லை. 

மணமான ஆரம்ப நாட்களில் இரவுகளில் அனத்திய உடலும் வெம்மையான பொழுதுகளின் அவஸ்தையும் அவனுக்குப் பிடித்திருந்ததுதான். பெரிய கற்பனைகள் இல்லையென்றாலும் இரகசியமான அதன் வசீகரம் அவனை ஆட்கொண்டிருந்தது. ஆனால், சட்டென்று உடைபட்டுவிட்ட சோப்பு நுரையைப் போல சில நாட்களில் அவளது விலகலை அவனால் உணரமுடிந்தது. அது என்னவென்று புரிவதற்கு முன்பே அவள் விடைபெற்றுப் போய்விட்டாள். 

அவள் இல்லையென்றதும் மனம் அகங்காரத்துடன் முறுக்கிக்கொள்ளலாம். ஆனால், சில இரவுகளில் அவளிடம் கண்டடைந்த வேட்கையை உடல் அத்தனை சுலபத்தில் மறந்துவிடுமா? இன்னொருத்தியைக் கண்டடைந்து சேர்த்துக்கொள்ளும் துணிச்சல் வரவில்லை. வேறு வழிகளில் தணிக்கும் உத்திகளை யோசித்து குறிப்பிட்ட இடங்களில் தயங்கி நின்ற தருணங்களில் ஏற்பட்ட பதற்றத்தையும் பயத்தையும் கடந்து அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. அப்போதெல்லாம் கூரிய அவள் கண்கள் நினைவில் அழுந்தும். கலைந்த கூந்தலுடன் சற்றே சரிந்து படுத்திருப்பவளின் முகத்திலும் பார்வையிலும் பீறிடும் அந்தக் கேலியும் கேள்வியும் துளைத்துப் பாயும். வாய்விட்டு கேட்கவில்லைதான், ஆனால் கேட்காமலே வலித்தது. 

உடல் களைத்திருந்தது. மெல்ல எழுந்து தயக்கத்துடன் நடந்தான். 

விவசாயக் கல்லூரியின் வடக்குப் பக்கமுள்ள இந்த நுழைவாயில் பகலில் மட்டும் திறந்திருக்கும். இப்போது குறுக்குக் கம்பம் போடப்பட்டிருந்தது. காவல் கூண்டுக்குள் கைபேசியில் ஆழ்ந்திருந்தார் இரவுக் காவலர். கொசுவர்த்திப் புகை வளைந்து மேலேறிக் கலைந்தது. காலடிச் சத்தம் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தார். அடையாளம் தெரிந்ததும் முகத்தில் சிரிப்பு. தலையாட்டிவிட்டு மீண்டும் கைபேசித் திரையைப் பார்க்கத் தொடங்கினார். முன்னிரவில் அவ்வப்போது இந்தப் பாதையில் நடப்பதுண்டு. சிவப்புக் கட்டடங்கள் ஒளியேந்தி நிற்க மரங்களில் அடைந்திருக்கும் பறவைகளின் கெச்சட்டம் அடங்கியிருந்தது. பரபரப்பில்லாத பாதை. வாகனங்களின் ஒலியோ ஒளியோ தொந்தரவு செய்யாது. இருபுறமும் அடர்ந்த மரங்கள். நடுவில் அங்கங்கே ஆராய்ச்சிக் கூடங்கள். வகுப்பறைகள். மாலை வேளைகளில் பட்டாம்பூச்சிகளைப் போல சைக்கிள்களில் உலவும் மாணவிகளைப் பார்க்க முடியும். அவர்களைக் கண்டால் என்னவோ ஒரு தினுசான உற்சாகம் அவனைத் தொற்றிக்கொள்ளும். சற்று நேரந்தான். அதுவே கண்ணீர் வரவழைக்கும். உடலை நடுங்கடிக்கும். நெஞ்சு வலிக்கும். வாய்விட்டு அழ வேண்டும் போலொரு அவஸ்தை. அதனாலேயே அந்த நேரத்துக்கு அங்கே வருவதை அவன் தவிர்ப்பான். இப்போது அவர்கள் கூடடைந்திருப்பார்கள். சன்னமான மணியொலியும் சிரிப்புமாய் வண்ண உடைகளுடன் அவர்கள் கடந்துபோக இப்போது வாய்ப்பில்லை. 

சடசடவென சிறகுகளை அடித்தபடி தரைநோக்கி வந்த பறவையைக் கண்டதும் நின்றான். கிளை மீது சிறு சண்டையா? அதே வேகத்தில் மேலேகி இருளில் மறைந்தது. அந்தச் சிறகின் படபடப்பும் ஓசையும் இன்னும் காற்றில் எஞ்சி நிற்பதுபோல அப்படியே பார்த்துக்கொண்டு நின்றான். இன்னொரு முறை அது தரை நோக்கி வருமோ என்று தலைதூக்கிப் பார்த்தான். 

இருளில் ஓசையின்றி நின்றது மரம். என்ன பறவை அது? இதுதான் தன் கூடென எப்படி அடையாளம் வைத்திருக்கிறது? நான் என் கூட்டை நோக்கிச் செல்வதுபோல அதுவும் வந்து சேர்ந்திருக்கிறது.

என் கூடு. இரவில் எங்கும் திரியாமல் அலையாமல் ஓரிடத்தில் தங்க வேண்டும். கிடக்கவேண்டும். வேறென்ன? பாதுகாப்பா? உறவுகளா? ஏதேனுமொரு பிடிப்பிருந்தால் அதை வீடென்று சொல்லலாம். எதுவுமில்லாத ஒன்றை வீடென்று எப்படிச் சொல்ல?

திரும்பி நடக்கத் தொடங்கினான். 

இப்படியொரு அமைதியான சூழலில் அந்த வீடு அமைந்திருப்பதும் ஒரு ஆறுதல்தான். இப்போதும் காவலரின் பார்வை கைபேசியிலிருந்து விலகியிருக்கவில்லை.  

இடதுபுறமாய் ஒதுங்கி நிற்கும் வீட்டின் பின்பக்கமாய் நடந்தான். முன்பக்கக் கதவை அவன் திறப்பதேயில்லை. உள்ளே வருவதற்கும் வெளியில் செல்வதற்கும் சமையல் அறைக் கதவுதான். வீட்டின் இன்னொரு போர்ஷனில் ஓய்வுபெற்ற பேராசிரியர் வசிக்கிறார். சமயங்களில் கதவைத் தட்டி எதையாவது கேட்பார். ஆரம்ப நாட்களில் நிறைய கேள்விகள். தனியாக இருப்பது எல்லா விதமான சந்தேகங்களையும் கிளப்புமல்லவா? ஆனால் இப்போது அவருக்கும் பழகிவிட்டது. எப்போதேனும் நேராகப் பார்க்க நேரும்போது ஒரு புன்னகையோ சிறு உரையாடலோ வாய்க்கும். அவ்வளவுதான். சரியான தேதியில் கணக்கில் வாடகை வரவாகிவிடுவதால் வெளியூரில் இருக்கும் வீட்டுக்காரருக்கு வேறெதைப் பற்றியும் கவலையில்லை. 

துவைக்கும் கல்லோரமாய்ச் சரசரவென எதுவோ ஓடி மறைந்தது. ஒருகணம் நின்றான். கழிவறை அருகே ஈரம் இன்னும் உலரவில்லை. கொடியில் அசைந்திருந்தன துணிகள். கதவைத் திறந்தவுடன் குறுக்கும் நெடுக்குமாய் ஓடின கரப்பான் பூச்சிகள். கவனமாக கால்களை வைத்து உள்ளறைக்குப் போனான். கிழக்கில் மட்டும் சிறிய ஜன்னல். கதவைத் திறந்தவுடன் அடைபட்ட காற்றின் வாடை விலகியோட செய்தித்தாட்களும் துணிகளும் தாறுமாறாய் கிடந்த பழைய சோபாவில் அப்படியே சரிந்தான். காதோரத்தில் கொசுக்கள் ரீங்கரித்தன. தொண்டை வறண்டிருந்தது. தாகம். நிமிர்ந்து பார்த்தான்.

தூசி படிந்த குட்டை மேசையின் மேல் கண்ணாடி பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர். உற்றுப் பார்த்தான். சிறு புழுக்கள் நெளிவதுபோலத் தெரிந்தது. உடல் தன்னிச்சையாக உலுக்கியது. அப்படியே மெதுவே அதை எடுத்துச்சென்று சமையலறைக் கழுவுதொட்டியில் கொட்டினான். பாத்திரத்தை ஓரமாய் கவிழ்த்துவிட்டு மேடையைப் பார்த்தான். எண்ணெய்ச் சட்டியில் காய்ந்த பூரிக்கிழங்கு. பிசைந்து உருட்டிய மாவு காய்ந்து ஓரமாய்க் கிடந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு பூரிக்கு ஆசைப்பட்டு பதமில்லாமல் அது எண்ணெயில் கருகி கடிக்க முடியாமல் போய்விட்டது. கிழங்கிலும் உப்பு கூடிப்போய் வீணானது. 

சமைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதேனும் தலைகாட்டும். அந்தச் சில வேளைகளிலும் நளபாகம் இப்படித் திரிந்துபோய் அடுத்த சில மாதங்களுக்கு அடுப்பைப் பற்றவைக்கும் எண்ணத்தையே துரத்திவிடும். 

தூங்குவதற்குப் பயம். மறுபடியும் அந்த எண்ணம் தலைதூக்குமோ என்ற எண்ணம் வந்ததும் எழுந்தான். சமையலறைக்குள் வந்தவன் குழாயைத் திருப்பினான். தண்ணீர் சீற்றத்துடன் கொட்டியது. மேடையிலும் அலமாரியிலும் கிடந்த பாத்திரங்களை எடுத்துப் போட்டான். ஒவ்வொன்றையும் நிதானமாகத் தேய்த்தான். மிகுந்த ஈடுபாட்டுடன் கவனத்துடன் சோப்பைப் போட்டு நுரைக்க நுரைக்கத் தேய்த்தான். விம் பாரின் மணம் உற்சாகம் தந்தது. கழுவுதொட்டியில் நுரை பொங்கியது. ஒவ்வொரு பாத்திரமாய் நீரில் அலசிக் கழுவினான். கையோடு மேடையைத் துடைத்து ஒவ்வொன்றையும் கவனமாக கவிழ்த்து வைத்தான். 

பழந்துணியை நனைத்து அடுப்பைத் துடைத்தான். கலைந்து கிடந்த அலமாரியில் டப்பாக்களை வரிசையாக அடுக்கினான். பல நாட்கள் பயன்படுத்தாத மஞ்சள், சீரகம், மிளகு, பொட்டுக்கடலை, வெந்தயம் என்று ஒவ்வொன்றையும் முகர்ந்து பார்த்தான். சமையல் பொருட்களின் மணம் உற்சாகத்தைத் தந்தது. இரண்டாவது தட்டில் பாத்திரத்தில் ஊறிக் கிடந்தது வெல்லக்கட்டி. சுற்றிலும் எறும்புகள். பாத்திரத்தை எடுத்து அப்படியே தொட்டியில் போட்டான். எறும்புகள் வரிசை கலைந்து விலகி நகர்ந்தன. அந்த வரிசை சுவரோரமாய் நகர்ந்து கீழிறங்கியது. 

துணியை சோப்புத் தண்ணீரில் நனைத்து தரையைத் துடைத்தான். மண்டியிட்டுக் குனிந்து துடைக்கும்போது வியர்த்தது. அந்த வலியும் வியர்வையும் அந்த நேரத்தில் அவனை நிதானப்படுத்தியிருந்தது. தூங்கக்கூடாது. இரவில் உடல் சோர்ந்து படுத்தால் அந்த எண்ணம் வந்துவிடுமோ என்ற பயத்தை விரட்டுபவனாய் தரையைத் துடைத்தான். 

சமையலறையில் வேலை முடிந்தபோது ஓரமாய் நின்று நிதானமாகப் பார்த்தான். சுத்தமாக இருந்த அந்த இடத்தைப் பார்த்தபோது நான் எதற்கு சாகவேண்டும் என்ற குரல் உள்ளுக்குள் உரக்க ஒலித்தது. பின்கதவைச் சாத்தியபோது உடல் களைத்திருந்தது. பதற்றம் அடங்கி நிதானம் கூடியிருந்தது.

நடு அறைக்குப் போய் இதேபோல எல்லாவற்றையும் அடுக்கலாமா என்று யோசித்தான். சமையலறையைவிட கொஞ்சம் பெரியது. மூலையில் ஒரு பீரோ. சுவரையொட்டி சோபா. கழற்றிப்போடும் துணிகள், அழுக்குத் தலையணைகள், போர்வைகள், பெல்ட், தோள்பை என்று எல்லாமே சோபாவின் மீதுதான். ஜன்னலுக்கு கீழே கோத்ரெஜ் மேசை. மனோரமா இயர்புக், தியானமும் அதன் பலன்களும், பொன்னியின் செல்வன் என்று கலவையாய் சில புத்தகங்கள். விகடன், துக்ளக் என்று வாராந்தரிகள். மத்தியில் ஒரு சிறிய பிளாஸ்டிக் பெட்டி. மாத்திரைகள், ரூபாய்த் தாள்கள், சில்லறைக் காசுகள், சில்லறைக்கு மாற்றாய் வந்த சாக்லெட்டுகள் என்று அதற்குள் சகலமும் கிடக்கும். எல்லாவற்றின் மேலும் தூசுப் படலம். தரையில் அங்கங்கே சுருண்டு கிடக்கும் பணத்தாள்கள். பத்து ரூபாயிலிருந்து ஐநூறு ரூபாய் வரையும் அங்கங்கே எறிந்து கிடக்கும். மேசைக்கு கீழேயிருக்கும் பிளாஸ்டிக் வாளியில் காய்ந்து கருகிய பழத்தோல்கள், பழைய ரேசர், கசக்கி எறிந்த காகிதங்கள். மல்லாந்து கிடக்கும் கரப்பான்களும் அவ்வப்போது இருக்கும். நாற்காலி மீது சட்டைகளும் பனியன்களும். 

எட்டிப் பார்த்தான். மின்விசிறி அசையாமல் நின்றது. அப்படியே நின்றான். சோபாவுக்குப் பின்னால் சுருண்டிருக்கிறது வேட்டி. மின்விசிறி மெல்லச் சுழல்வது போலிருக்க குனிந்து வேட்டியை எடுக்க எண்ணினான். எப்போதும்போல அம்மாவின் பருத்திப் புடவையைக் கீழே போட்டு படுத்துக்கொள்ளலாம். ஆனால் தூங்க முடியாது. அந்த எண்ணம் மீண்டும் தலையெடுத்துவிடுமோ என்ற அச்சம். மெதுவாகப் புடவையை எடுத்தான். அறையின் விளக்கை அணைத்துவிட்டு முன்னறைக்கு வந்தான். 

அதிகமும் புழங்காத அறை. இருப்பதிலேயே சிறியது. நீளமான பெஞ்சின்மீது அடுக்கடுக்காய் செய்தித்தாட்கள். ஆங்கிலத்தில் ஒன்றும் தமிழில் ஒன்றுமாய் தினமும் வந்து வாசலில் விழும். அடுத்த வீட்டுக்காரர் எடுத்துப் படித்துவிட்டு பொறுப்பாய் மடித்து வைத்துவிடுவார். பல நாட்களில் அவற்றை அவன் பிரித்துக்கூடப் பார்த்தது கிடையாது. 

அலமாரியில் கொசுவர்த்தியைத் தேடி எடுத்தான். கலைந்து கிடந்த தடித்தப் புத்தகங்களுக்கு நடுவேயிருந்து தீப்பெட்டியை எடுத்துக்கொண்டான். பெஞ்சுக்கு அடியில் கொசுவர்த்தியைப் பற்றவைத்துவிட்டு முன்கதவைத் திறந்தான். இரண்டு போர்ஷன்களுக்குமாய் நீளமான வாசல். ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்குக் கீழே காரும் ஒரு ஸ்கூட்டியும் நின்றன. போர்த்திய உறையுடன் அவனுடன் ஹீரோ ஹோண்டா. பேராசிரியரும் அவர் மனைவியும் மாலை நேரங்களில் இந்தத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார்கள். டிரான்சிஸ்டரில் பழைய பாடல்கள் ஒலித்திருக்கும்.

கதவை வெறுமனே சாத்தினான். புடவையை எடுத்துத் தரையில் போட்டான். வெயில் நாட்களில் தரையில் போட்டுத் தூங்குவது வெகுநாள் பழக்கம். அம்மாவுக்கும் அவனுக்குமிடையில் எஞ்சியிருப்பது இது ஒன்றுதான். இப்போது இரவிலும் அதுவேதான் படுக்கை. தயக்கத்துடன் ஸ்விட்சை அழுத்தியதும் மின்விசிறி மெல்ல சுழலத் தொடங்கியது. அப்படியே பார்த்துக்கொண்டிருந்த போது அந்த ஒரு கணத்தைக் கடக்காமல் போயிருந்தால் இப்போது என்ன ஆகியிருக்கும்? எல்லாமே அமைந்துபோய் கழுத்தை நுழைத்து நாற்காலியை உதைத்துத் தொங்கியிருந்தால் இந்நேரம் இல்லாமல் போயிருப்பேன். 

அந்தக் காட்சி அவனை எழுப்பி உட்காரச் செய்தது. 

யாரும் வந்து பார்க்காமல் அப்படியே தொங்கியிருந்து உடல் அழுகி நாற்றமெடுக்கும் போதுதானே உள்ளே வருவார்கள். கண்கள் பிதுங்கி நாக்கு வெளியில் நீண்டு அகோரமாய்த் தொங்கிக்கொண்டிருக்கக்கூடும். 

அந்த எண்ணத்தை விரட்டுபவனாய் தலையை உலுக்கினான். உடல் வியர்த்திருந்தது. என்ன இது? இந்த இரவு சீக்கிரம் விடிந்தால் தேவலை. சாவின் வாடையுடன் சுற்றிச் சுற்றி வருகிறதே. 

விளக்கைப் போடாமல் சமையலறைக்குச் சென்றவன் தண்ணீரைக் குடித்தான். செல்போனை எடுத்து மணி பார்த்தான். விடிகாலை நான்கு மணியைக் கடந்திருந்தது. சற்றே மனம் சமாதானமடைந்தது. இன்னும் கொஞ்ச நேரந்தான். விடிந்துவிடும். அதன் பிறகு அந்த எண்ணம் தலைதூக்காது. முன்னறைக்கு வந்தவன் கண்களை மூடித் தரையில் உட்கார்ந்தான். ஒன்று இரண்டு என எண்ணத் தொடங்கினான். கண்ணுக்குள் இருள் சுழன்று நிறங்கள் தெறித்தன. காற்றில் படபடக்கும் செய்தித்தாட்கள். நாசியை அடைக்கும் கொசுவர்த்தியின் நெடி. குழாயிலிருந்து நீர் சொட்டுகிறது. இரவுக் காவலரின் விசில் சத்தம். கல்லூரி வளாகத்திலிருக்கும் மரங்களிலிருந்து பறவைகள் எழுந்துகொள்ளும். பால்காரர்களின் வாகனங்கள் விரையும். பேராசிரியர் ஐந்தரை மணிக்கு எழுந்து வாக்கிங் போவார். திண்ணையின் மேல் பால் பாக்கெட்டுகளை வைத்துவிட்டு செய்தித்தாள் படிப்பார். இதோ இன்னும் கொஞ்சநேரந்தான். இந்த இரவைக் கடத்திவிட்டால் இன்னுமொரு நாள் வாழ்ந்திடுவேன் நாளை இந்த எண்ணம் உள்ளே வராமல் பார்த்துக்கொள்ளலாம். அந்த வேட்டியை எடுத்து எறியவேண்டும். அங்கே படுத்துக் கொள்ளக்கூடாது. இந்த அறைபோதும். 

கண்கள் காந்தின. கழுத்து வியர்வை காற்றில் அடங்கியபோது உடல் சரிந்தது. ஜன்னல் வழியே வெளிச்சம் தெரிகிறது. விடியலின் சத்தங்கள் காதில் விழத் தொடங்கிவிட்டன. இனி பயமில்லை. அப்படியே படுத்தான். கால்களை மடக்கிக்கொண்டு சுருண்டுகொண்ட போது அத்தனை சுகம். ஒவ்வொரு தசையிலிருந்தும் விடுபடுகிறது வலி. தூக்கம் உடலைப் போர்த்திக்கொள்கிறது. சாவின் அழைப்புக்கு இனி இடம் கொடுக்காது. ஒரு கணம் தோன்றி மறைந்த பித்துதான். 

யாரோ துணி துவைக்கிறார்கள். இப்போதுகூட இப்படி கல்லில் துணியை அடித்துத் துவைக்கிறார்களா என்ன? நுரைத்துப் பொங்கி வழியும் சோப்புக் குமிழிகளில் தென்படும் வானவில் நிறங்களைக் கண்டு குதூகலிக்கும் சிறுவர்கள் எங்கே போனார்கள்? ‘விப்ஜியார்’ வண்ணங்களைப் பாடங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு வானவில்லை காட்ட முடியாத நாட்கள். கல்லூரி வளாகத்திலிருந்து மணியொலிக்கிறது. எழுந்துகொள்ள மனமில்லாமல் அப்படியே படுத்திருந்தான். 

கதவருகே என்ன சத்தம் அது? இலேசாகத் தட்டுகிறார்களா? கண்களைத் திறந்தான். ஜன்னல் வழிய அபாரமான வெளிச்சம். கதவைச் சுரண்டுவது போலிருக்கிறது. சன்னமான கொலுசொலி. யாரிது? தலையைத் திருப்பிக்கொண்டு அப்படியே படுத்து கதவையே உற்றுப் பார்த்தான். மறுபடி அந்த சத்தம். அப்படியே நகர்ந்து கதவருகே வந்தான். அதே நேரத்தில் கதவு மெதுவாகத் திறந்துகொள்ள தரையில் விழுந்தது வெளிச்சம். சின்னஞ்சிறு உருவமொன்று எட்டிப் பார்த்தது. மனம் படபடத்தது. கண்களைத் தேய்த்துக்கொண்டு வெளிச்சத்தை மறைத்து நின்ற அந்த உருவத்தைப் பார்த்தான். புதுவிதமான ஒரு மணம். இன்னும் கதவு விரியத் திறந்தபோது அந்த உருவம் கையை ஆட்டியது. 

சின்னஞ்சிறு குழந்தை. அப்போதுதான் நடக்கப் பழகியதுபோல கதவைப் பிடித்துக்கொண்டு காலை எட்டி வைக்க முயன்றது. கண்கள் அவனையே உற்றுப் பார்த்தன. 

அவன் சப்பணமிட்டு உட்கார்ந்தான். கலைந்த தலைமுடியின் முன்பக்கமாய் சிறிய மஞ்சள் கிளிப். தோள்களில் முடிச்சிட்ட இளநீல உடை. காலில் கொலுசு. கதவைப் பற்றியபடியே நகர்ந்து சுவரோரமாய் நின்றதும் அவனைப் பார்த்து சிரித்தது.

கண்களில் கரகரவென கண்ணீர் சுரந்தது. ஒருநொடி இரவின் அந்தக் கணம் நினைவில் மின்ன குழந்தையைப் பார்த்து வா என்பதுபோல தலையை ஆட்டினான். “தத்தா… தத்தா” என்றபடியே சுவரைப் பிடித்தபடியே எட்டு வைத்து வந்தது. உதடுகளைச் சுற்றி பாலேடு போல வெள்ளையாய் பிசுபிசுப்பு. யாரோ ஊட்டியிருக்கிறார்கள். யாருடைய குழந்தை இது? 

மண்டியிட்டு அவனருகில் வந்த குழந்தை அவன் கைகளைப் பற்றி மேலே எழுந்தது. நெருக்கத்தில் அதன் முகம். சிரித்தபடியே கையை எடுத்து தாடி அடர்ந்த தாடையைத் தொட்டது. விரல்கள் மெல்ல நகர்ந்து உதடுகளைத் தீண்டியபோது அடிவயிறு குழைந்து உள்ளங்கால்கள் சில்லிட்டன. குழந்தையின் வாசனையை உள்ளிழுத்தவனின் கன்னங்களில் வழிந்த கண்ணீரை மென்மையான அந்த விரல்கள் தொட்டன. மூக்கை உறிஞ்சியபடியே அதன் கைகளைப் பற்றினான். 

“என்னம்மா…?” குரல் நடுங்கியது. 

முகம் பார்த்துச் சிரித்த குழந்தையின் கைகளைச் சேர்த்து மெதுவாக அசைத்தான். ‘கலுக்’ என்று மறுபடியும் ஒரு சிரிப்பு. உதடுகளைத் துடைத்துபோது அது தலையைத் திருப்பிக்கொண்டது.

“செரி… செரி… வேணாம்” என்று சொல்லிவிட்டு வெளியில் பார்த்தான். 

தோளைப் பற்றி எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். குழந்தை மறுபடி அவன் முகத்தைத் தொட்டுச் சிரித்தது.

அதே நேரத்தில் பேராசிரியர் வீட்டுக்குள்ளிருந்து நைட்டியுடன் அவள் வெளியே வந்தாள். “குட்டிம்மா எங்க போனே?”

அவன் கையில் குழந்தையைப் பார்த்ததும் திடுக்கிட்டவள் உடனடியாகச் சிரித்தாள். ஒன்றும் பேசாமல் அவன் குழந்தையை நீட்டினான். கையிலிருந்த கிண்ணத்தைத் திண்ணையில் வைத்துவிட்டு வாங்கிக்கொண்டாள். 

“அடடே… பேத்தி உங்க வீட்டுக்கு வந்துருச்சா?” பேராசிரியர் வீட்டுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தார்.  

இருவரும் உள்ளே நகர்ந்தபோது குழந்தை அவனைப் பார்த்துச் சிரித்தது. சில நொடிகள் அதை சுமந்திருந்த கைகளை முகர்ந்துப் பார்த்தான். இன்னும் மிச்சமிருந்தது அந்த வாசனை.

கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தவன் வெகுநேரம் அழுதுகொண்டேயிருந்தான்.