காந்தியெனும் இதழாளர்

by த. கண்ணன்
3 comments

காந்தி என்ற அகிம்சாவாதியை, தலைவரை, பொருளியற் சிந்தனையாளரை, புரட்சியாளரை, கல்வியாளரைப் பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. அவரது பல்வேறு பரிமாணங்களில் அதிகம் பேசப்படாத ஒன்று அவரது இதழியல் பணி. அவரது நீண்ட இதழியல் வாழ்வின் சில தருணங்களை இக்கட்டுரையில் காணலாம். பொதுவாழ்வில் காந்தி நுழைந்ததே பத்திரிக்கை மூலமாகத்தான் எனலாம். தென்னாப்பிரிக்க வாழ்க்கையில் நிற வேற்றுமையின் காரணமான ஒடுக்குமுறையே அவரைப் பொதுவாழ்வில் ஈடுபடச் செய்தது என்பது பொதுவான புரிதல். உண்மையில் சைவ உணவுப் பழக்கமே அவரை முதலில் இதழாளராக்கியது. அவர் சேர்ந்திருந்த லண்டன் சைவ உணவுக் கழகம் நடத்திய The Vegetarian என்ற இதழில்தான் காந்தி முதன்முதலாக எழுதத் தொடங்கினார். உணவு, இந்திய வாழ்க்கை முறை, சடங்குகள், விழாக்கள் என்று பல்வேறு கூறுகளைத் தொட்டு 11 வாரங்கள் எழுதினார். 

காந்தியின் முதல் கட்டுரை வெஜிடேரியன் இதழில் ‘இந்தியச் சைவ உணவுக்காரர்கள்’ என்ற தலைப்பில் பிப்ரவரி 2, 1891ல் வெளிவந்தது. இக்கட்டுரையில் பிரித்தானியர்கள் நம்புவதுபோல் இந்தியர்கள் அனைவரும் சைவ உணவு மட்டும் உண்பவர்கள் அல்லர் என்று எழுதினார். இந்துக்கள், முஸ்லீம்கள், பார்சிகள் என்று முப்பெரும் மதங்கள் இருப்பதாகவும், இந்துக்களில் நான்கு வர்ணங்கள் இருப்பதாகவும் கூறி, ‘இவர்களில் கோட்பாட்டளவில் பிராமணர்களும், வைசியர்களும் மட்டுமே தூய சைவ உணவுக்காரர்கள். ஆனால், நடைமுறையில், மற்றவர்களும் சைவ உணவே அதிகம் உண்கிறார்கள். சிலர் தம்முடைய ஆர்வத்தால், பிறர் வேறு வழியில்லாததால். பின்னவர்கள் ஊன் உண்ண விரும்பினாலும், வாங்கும் வசதியற்று இருக்கிறார்கள். இக்கூற்றை இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் ஒருநாளைக்கு 1 பைசா வருமானத்தில் வாழ்கிறார்கள் என்ற தகவலின் மூலம் உறுதிசெய்யலாம்,’ என்ற காந்தி, தனது முதல் கட்டுரையிலேயே உப்பு வரி பற்றிப் பேசுகிறார். ‘இவர்கள் ரொட்டியும் உப்பும் மட்டும் உண்கிறார்கள். உப்பு மிக அதிகமாக வரி விதிக்கப்படும் பண்டம்.’

லண்டன் சைவ உணவுக் கழக உறுப்பினர்களுடன் காந்தி, 1890

மேலும் இந்தியச் சைவ உணவுக்காரர்கள் மீன், முட்டை போன்றவற்றை உண்பதில்லை என்கிறார். ஆனால், லண்டனிலுள்ள ‘சைவ உணவுத் தீவிரவாதிகள் செய்வது போல பாலையும் வெண்ணெயையும் ஒதுக்குவதில்லை,’ என்கிறார். பசுவிலிருந்து பால் கறப்பது தீங்கானதன்று என்று கருதும் இந்தியர்கள், பசுவைப் புனிதமானதாகவும் வழிபாட்டுக்குரியதாகவும் கருதுகிறார்கள் என்றும், பசுக்கொலைக்கு எதிராக இந்தியாவில் ஓர் இயக்கம் வளர்ந்து வருவதாகவும் எழுதுகிறார். 

காந்தி தனது முதல் கட்டுரையில் தொட்ட கருக்களான சைவ உணவு, உப்பு வரி, பால், பசுக்கொலை ஆகியவை குறித்து இறுதிவரை மிக அதிகமாக எழுதினார். 

அவர் தொடர்ந்து எழுதிய பத்திகளில் இந்தியர்கள் பலவீனமானவர்களாக இருப்பதற்கு சைவ உணவு மட்டும் காரணமல்ல, அவர்களுக்குக் குழந்தைத் திருமணம் செய்விப்பது ஒரு முக்கிய காரணம் என்றார். பல வசதியானவர்கள் பல பெண்களோடு உறவு கொள்வதும் ஒரு காரணம் என்றார். அதே வேளையில் உடலுழைப்பு செலுத்தி இயற்கையோடு இயைந்து வாழ்ந்து, சைவ உணவுண்ணும் ஆட்டிடையர்கள் அசைவ உணவு உண்பவர்களுக்குச் சமமான வலுவுடன் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். பிரித்தானிய ஆட்சியின் விளைவாக இந்தியர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார்கள் என்றும், ஏழைகளே மிக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கூறினார். இவை எல்லாமே அவர் வரும் காலங்களில் தொடர்ந்து பேசவிருந்த பிரச்சினைகள். 

இக்கட்டுரைகளில் காந்தியின் தெளிவான சிந்தனையும், மொழியின் மீதான ஆளுமையும், சரியான சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமும் வெளிப்படுகின்றன. காந்தியின் எழுத்துத்திறன் பலராலும் குறைவாக மதிப்பிடப்படுகிறது. அவருடைய எழுத்தில் அதிக அலங்காரம் இல்லாவிட்டாலும் சொல்ல வந்ததை அழகாகவும் அழுத்தமாகவும் அவரால் எப்போதும் சொல்ல முடிந்தது. மொழிவழக்குகளை மிகப் பொருத்தமாகவும் நேர்த்தியாகவும் அவரால் பயன்படுத்த முடிந்தது. தரவுகளையும் கருத்துகளையும் சரியான விகிதத்தில் கலக்க முடிந்தது. மறுக்கக் கடினமான தருக்கத்தை எப்போதும் முன்வைத்தார். அதே சமயம் உணர்வுகளையும் தீண்டும் வண்ணம் எழுதினார். 

பிரித்தானிய அறிஞர் எட்வர்ட் தாம்ஸன், ‘அவரது மனதின் மீது அவருக்கிருந்த முழுமையான கட்டுப்பாட்டின் விளைவாகவே அவருக்கு ஆங்கில மொழி வழக்கின் மீது ஒப்பிலாக் கட்டுப்பாடு வந்தது எனலாம். வெளிநாட்டவர்களுக்கு நம் மொழியில் இருந்த மிகக் கடினமான விஷயம் முன்னிடைச்சொல் (preposition). காந்தியைவிட அவற்றில் அதிகத் தேர்ச்சி பெற்றிருந்த இந்தியரை நான் சந்தித்ததில்லை. […] காந்தி எனது எழுத்தை மேலோட்டமாகப் பார்ப்பார். பார்த்து ஏதேனும் முன்னிடைச்சொல்லை நுட்பமாக மாற்றுவார் – (உங்களுக்கு ஆங்கிலம் உள்ளத்தின் அடிவேரிலிருந்து தெரியாமலிருந்தால்) நீங்கள் இது ஏதோ அற்பமான மாற்றம் என்று எண்ணக்கூடும். ஆனால் அது தன் வேலையைச் செய்தது. ஒருவேளை ஏதேனும் ஓர் இடைவெளியை விட்டுவைக்கலாம் (அரசியல்வாதிகளுக்கு ஓட்டைகள் பிடிக்கும் என்ற ஐயம் எனக்குண்டு). எப்படியோ, அது என்னுடைய அர்த்தத்தை காந்தியின் அர்த்தமாக மாற்றிவிடும். எங்கள் கண்கள் சந்தித்துக்கொண்டு நாங்கள் புன்னகைத்துக்கொள்ளும் போது, என்ன நடந்தது என்பதை அவை எங்கள் இருவருக்குமே காட்டிவிடும்,’ என்று எழுதியுள்ளார். 

வெஜிடேரியன் இதழுக்கு காந்தி கொடுத்த ஒரு நேர்காணலில் – அது கிட்டத்தட்ட கட்டுரை வடிவில் இருப்பதால் எழுத்துப்பூர்வமாகவே நடந்திருக்க வேண்டும், இங்கிலாந்து வர முடிவுசெய்ததற்கு தனது பேராவல்தான் காரணம் என்று கூறி, தனது சாதித் தலைவர்களோடு விவாதித்து, மறுத்து, தடைகளை மீறி, இங்கிலாந்து வந்ததைப் பற்றி எழுதுகிறார். தன் அன்னையிடமும் மனைவியிடமும் விடைபெற்ற நிகழ்ச்சியை நாடகத்தன்மையுடன் விவரிக்கிறார். இது பின்னர் அவ்வளவாக வெளிப்படாத காதல்வயப்பட்ட இளம் காந்தியையும் நமக்குக் காட்டுகிறது. 

“உறக்கத்திலும், விழிப்பிலும், அருந்தும்போதும், உண்ணும்போதும், நடக்கும்போதும், ஓடும்போதும், படிக்கும்போதும், இங்கிலாந்தே என் கனவுகளிலும் சிந்தனையிலும் இருந்தது. விடைபெறப்போகும் அந்த முக்கியமான நாளைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு இருந்தேன். இறுதியில் அந்த நாளும் வந்தது. ஒரு புறம், என் தாய் கண்ணீர் நிரம்பிய விழிகளைத் தன் கைகளால் மறைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் விசும்பும் ஒலி தெளிவாகக் கேட்டது. மறுபுறம், என் நண்பர்கள் ஐம்பது பேருக்கு மத்தியில் நான் இருந்தேன். “நான் அழுதால், என்னைப் பலவீனமானவன் என்று நினைத்துவிடுவார்கள். என்னை இங்கிலாந்துக்குச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள்,” என்று எனக்கு நானே பேசிக்கொண்டேன். அதனால் என் இதயமே நொறுங்கிக்கொண்டிருந்த போதும், நான் அழவில்லை. இறுதியில், என் மனைவியிடம் விடைபெறும் தருணம் வந்தது. நண்பர்கள் இருக்கும்போது அவளோடு பேசுவதென்பது வழக்கத்துக்கு மாறானது. எனவே அவளைப் பார்க்க நான் வேறு அறைக்குச் சென்றேன். அவள் வெகுநேரம் முன்பே தேம்பி அழத் தொடங்கியிருந்தாள். அவள் முன்னே சென்று ஊமைச் சிலை போலச் சற்று நேரம் நின்றிருந்தேன். அவளை முத்தமிட்டேன். அவள், ‘போகாதே’ என்றாள். அதற்குப் பின் நடந்தததை நான் விவரிக்க வேண்டியதில்லை.”

காந்தி தென்னாப்பிரிக்கா சென்ற சில நாட்களிலேயே அவருக்கு இதழியல் உலகில் ஓர் எதிர்பாராத நுழைவு ஏற்பட்டது. நீதிமன்றத்தில் தன் தலைப்பாகையை அவர் எடுக்காமலிருந்தார். அதை விமர்சித்து, நட்டால் அட்வெர்டைசர் இதழ், ‘வேண்டாத விருந்தாளி’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அன்று நடந்த நிகழ்ச்சியை விளக்கும் விதமாக காந்தி அவ்விதழின் ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதம் வெளியிடப்பட்டது. ‘ஐரோப்பியர்கள் மரியாதை நிமித்தம் தம் தொப்பிகளைக் கழட்டுவது போலவே, இந்தியர்கள் (மரியாதை நிமித்தம்) தம் தலைப்பாகைகளை அணிந்தவண்ணம் இருப்பார்கள். தலைப்பாகை இல்லாமல் ஒருவர் முன்வருவது அவரை அவமதிப்பதாகும்,’ என்று விளக்கினார். தலைப்பாகையைக் கழற்றுவது தனக்கு அவமானமல்ல, எதிரிலிருப்பவருக்கே அவமானம் என்ற புதுமையான வாதத்தை முன்வைத்தார். 

காந்தி தொடர்ந்து செய்தித்தாள்களைப் படித்து வந்தார். பள்ளிப்பருவத்தில் இந்தியாவில் இருந்தவரை அவர் செய்தித்தாள்களைப் படித்ததே இல்லையெனினும், இங்கிலாந்தில் இருந்தபோது Daily Telegraph, Daily News, Pall Mall Gazette ஆகிய மூன்று நாளிதழ்களைத் தினமும் படிப்பார். தென்னாப்பிரிக்காவிலும் பல்வேறு செய்தித்தாள்களைப் படித்து, அவற்றில் இந்தியர்களின் நிலை குறித்தும் உரிமைகள் குறித்தும் தொடர்ந்து எழுதினார். எதிலெல்லாம் இந்தியர்களைப் பற்றித் தவறான செய்திகள் வந்துள்ளனவோ அவற்றுக்கெல்லாம் மறுப்புகள் எழுதினார். வழக்கு முடிந்த பின்னரும் தென்னாப்பிரிக்காவில் தங்க நேர்ந்ததே அவர் விடைபெறும் தினத்தன்று ஒரு செய்தியைப் படித்து, அது குறித்து நண்பர்களை எச்சரித்ததால்தான். 

1896ல் இந்தியா வந்தபோது தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நிலையை விளக்கும் ஒரு ‘பச்சை அறிக்கையை’  (Green Pamphlet) அச்சடித்தார். இந்தியாவில் இந்தியர்களுக்குக் கிடைக்கும் உரிமைகளுக்கும் தென்னாப்பிரிக்காவில் கிடைக்கும் உரிமைகளுக்கும் இருந்த வேறுபாடுகளை வெளிப்படுத்தினார். பூனே, பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய நகரங்களில் அவர் உரையாற்றிய போது அந்தப் பச்சை அறிக்கையை எல்லாருக்கும் கொடுத்தார். பல செய்தி நிறுவனங்களுக்கும் வழங்கினார். அவரது உரைகளும் பதிப்பிக்கப்பட்டன. அவற்றின் ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடினார். கட்டுரைகள் எழுதினார். கடிதங்கள் எழுதினார். பம்பாயில் Times of India, Bombay Gazette, சென்னையில் The Hindu, Madras Standard, கல்கத்தாவில் The Statesman, The Englishman, Amrit Bazaar Patrika, Bangabasi, அலகாபாத்தில் The Pioneer ஆகிய இதழ்கள் அவரது எழுத்துகளைப் பதிப்பித்தன. மதராஸ் ஸ்டாண்டர்ட், இங்கிலிஷ்மேன் போன்ற இதழ்களில் ஆசிரியர்கள் காந்தி விரும்பியதைத் தமது இதழ்களில் எழுதலாம் என்று அவருக்கு முழுச் சுதந்திரம் வழங்கினர். 

தென்னாப்பிரிக்கா திரும்பியபோது இந்திய இதழ்களில் வெளிவந்திருந்த அவரது எழுத்துகள் தென்னாப்பிரிக்க இதழ்களில் திரித்து வெளியிடப்பட்டதால், அவர் வந்த கப்பல் துறைமுகத்திலேயே இருபத்து மூன்று நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டு, கரைக்கு வந்ததும் கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர், நட்டால் அட்வெர்டைஸர் இதழுக்கு அளித்த நேர்காணல் மூலமாகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். “இரண்டாண்டுகளுக்கு முன் நான் நட்டால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு திறந்த மடல் எழுதினேன். அதிலிருந்த கருத்துகளைச் சொல்லுக்குச் சொல் எனது பச்சை அறிக்கையில் அப்படியே பிரதி எடுத்திருந்தேன். இந்தியர்கள் இங்கு நடத்தப்படும் விதம் பற்றி அதில் எழுதியிருந்தேன். இங்கு அக்கடிதம் பதிப்பிக்கப்பட்ட போது யாரும் காலனியவாதிகள் மீது கறுப்புச் சாயம் பூசுவதாகக் கூறவில்லையே? அதையே இந்தியாவில் வெளியிடும் போதுதான் இப்படிச் சொல்கிறார்கள். இது எப்படி காலனியர்களின் குணத்தின்மீது கருஞ்சாயம் பூசுவதாகும் என்று எனக்குப் புரியவில்லை. அப்போது எல்லா இதழ்களும் நான் நடுநிலையாகப் பேசியுள்ளேன் என்று கூறி, நான் சொன்ன எதையும் மறுக்கவில்லை,’ என்று மிகத் திறமையாக வாதம் செய்தார். “நான் இந்திய அரசாங்கத்தையோ, இந்தியப் பொதுமக்களையோ, பிரித்தானிய அரசையோ காலனியர்களின் மனச்சாய்வுகளுக்கு எதிராக அணுகவில்லை. இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவில் மிகவும் வெறுக்கப்பட்ட ஜந்துக்களாக இருக்கிறார்கள் என்றும் அங்கு அவர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் கூறினேன். ஆனால், அரசாங்கத்திடம் இவற்றுக்கான தீர்வுகளை நாங்கள் கோரவில்லை. இந்தியர்கள் மீது சுமத்தப்படும் சட்டரீதியான சுமைகளுக்கே தீர்வுகள் கோருகிறோம். மனச்சாய்வுகள் காரணமாக இயற்றப்படும் சட்டங்களை எதிர்க்கிறோம். அவற்றிலிருந்து விடுபடத் தீர்வுகள் கேட்கிறோம்,” என்றார். ஒரு தேர்ந்த அரசியல்வாதியும், வழக்குரைஞரும், பத்திரிக்கையாளரும் ஒன்றிணைந்து அறம் சார்ந்த பார்வையைச் சட்டத்தோடு பிணைத்து முன்வைப்பதை இங்கு காணலாம்.  

காந்தியின் இன்னொரு பழக்கம் திறந்த மடல்கள் எழுதுவது. உதாரணமாக, நட்டால் காலனியச் செயலர், ‘கப்பலலிருந்து காந்தி கலவரமான சூழலில் கரையிறங்கியது தவறான அறிவுரையைக் கேட்டுத்தான் என்று ஒப்புக்கொண்டதாகக் கூறினார்,’ என்று நட்டால் மெர்குரி இதழ் செய்தி வெளியிட்டபோது, அக்கூற்றை மறுத்து விளக்கம் கேட்டு அவருக்குக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தையும் நட்டால் மெர்குரியில் வெளியிட்டார். “எனக்கு வழங்கப்பட்ட அறிவுரை சிறப்பானதுதான் என்றே கருதினேன். இப்போதும் கருதுகிறேன். எந்த அடிப்படையில் தாங்கள் அவ்வாறு சொல்கிறீர்கள் என்பதைத் தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன்,” என்று அக்கடிதத்தில் எழுதினார். 

தென்னாப்பிரிக்க இந்தியர்களின் பிரச்சினைகளைப் பேசியதோடு அல்லாமல், இந்தியாவில் பஞ்சம் நேர்ந்தபோது, இந்திய மக்களுக்காக நிதி திரட்டவும் நட்டால் அட்வெர்டைசர் இதழில் கோரிக்கை வைத்தார். கல்கத்தா பஞ்ச நிவாரண கமிட்டி நிதி கேட்டு கோரிக்கை அனுப்பியதைத் தொடர்ந்து, பஞ்சத்தின் தீவிரம் குறித்து கட்டுரை எழுதினார். முதல்முறையாக இந்தியாவுக்காக பிரித்தானிய காலனிகளில் நிதி கேட்டுக் கோரிக்கை வந்திருப்பதாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டார். 

காந்தியின் கையெழுத்து

தாதாபாய் நௌரோஜி லண்டனில் ‘இந்தியா’ இதழை நடத்திவந்தார். காந்தி அவ்விதழுக்குத் தென்னாப்பிரிக்க நிருபராகச் செயல்பட்டிருக்கிறார். 1896ல், அரசாங்கத்துக்கு இந்திய மக்களை வேறு இடங்களுக்குப் பெயர்க்கும் உரிமை இருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததைக் கண்டித்து எழுதினார். 

டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கும் எழுதிவந்தார். ஆங்கிலேய-போயர் போரில் மருத்துவப் பணி செய்யச் சென்றபோது நேர்ந்த அனுபவங்களை எழுதி அனுப்பினார். ‘இந்தியப் படுக்கைத் தூக்கிளுக்கு வாரத்துக்கு 20 சில்லிங்களும், பிரத்தானியப் படுக்கைத்தூக்கிகளுக்கு 35 சில்லிங்களும்’ தரப்பட்டதாகக் கூறுகிறார். புகார் கூறுகின்ற தொனி இல்லாதபோதும், போர்க்களத்தில்கூட இருந்த ஏற்றத்தாழ்வை, போகிற போக்கில் மெலிதாகக் கோடிட்டுச் செல்கிறார். “கூடாரங்கள் அமைக்கப்படும் முன்னர் (படைவீரர்களுக்கு மட்டுமே கூடாரங்கள், படுக்கைத் தூக்கிகள் வெட்டவெளியில், பல சமயங்களில் போர்வைகூட இல்லாமல், உறங்க வேண்டும்), மருத்துவ அதிகாரி அடிபட்டவர்கள் 50 பேரை சீவெலி ரயில்நிலையம் தூக்கிச்செல்ல வேண்டும் என்றார்,” என்று இன்னொரு இடத்தில் கூறுகிறார். இந்திய மக்கள் வெளியிலிருந்தும் இப்போருக்கு அளித்த ஆதரவைப் பற்றியும் பெருமையாக எழுதுகிறார். “பழங்கள் விற்று, தன் தினசரி வாழ்வைக் கடத்திய ஓர் இந்தியப் பெண், படைவீரர்கள் டர்பன் வந்தபோது தனது கூடையில் இருந்த அத்தனை பழங்களையும் டாமியின் வண்டியில் கொட்டிக் காலி செய்து, அன்றைய தினத்துக்கு அவ்வளவுதான் தரமுடியும் என்று சொன்னதாகக் கேள்விப்பட்டோம். அந்தக் கருணைமிக்கப் பெண் அன்றைய தினத்துக்கான உணவை எங்கிருந்து பெற்றாள் என்பதை யாரும் சொல்லவில்லை,” என்றும் பதிவுசெய்கிறார். இதே போரின்போது தென்னாப்பிரிக்காவிலிருந்து இன்னொரு வருங்காலத் தலைவரும் செய்திகள் அனுப்பிக்கொண்டிருந்தார். அவர் வின்ஸ்டன் சர்ச்சில். 

ஜூன் 4, 1903 முதல் இந்தியன் ஒப்பீனியன் இதழ் தொடங்கப்பட்டது. முதல் இதழே ஆங்கிலம், இந்தி, தமிழ், குஜராத்தி ஆகிய மொழிகளில் வெளிவந்தது. காந்தியின் முதல் தலையங்கம் பெயரிடப்படாமல் வெளிவந்தது. அதன் முதல் பத்தி தமிழில் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டிருந்தது:

“நம் ஆவசியகம்

இந்தியர்களுக்கு ஒரு பத்திரிக்கை இருக்க வேண்டியது மகா ஆவசியகம். ஆதலின், இந்தியன் ஒப்பீனியன் வெளிவர நியாங் கூறவேண்டியதில்லை. இத்தென்னாப்பிரிக்கா ராஜ தந்திரங்களில் இந்திய ஜனசமூகமும் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அங்கமாகும். அதன் கருத்தை வெளியிடவும், விசேஷமாய் அதற்காக வேண்டிய விஷயங்களையே எடுத்துப் பேசவும் தக்கதோர் பத்திரிக்கை இங்கில்லை. ஆதலின் ‘இந்தியன் ஒப்பீனியன்’ எல்லாம்வல்ல கடவுள் அருளால் நடைபெற்று, அக்குறை தீர்க்கும் என்றே முற்றும் நம்புகிறோம்.

இத்தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களெல்லாம் இராஜ பக்தி நிறைந்தவர்களும், இராஜ சக்ரவர்த்தியின் பிரஜைகளுமாக இருந்தாலும், தகாத அநீதியான பல சட்டங்கள் நம்மவர்களை வருத்துகின்றன. அவைகளைப் பற்றி பலர் போராடியும் வருகிறார்கள். இன்னும் ஒழிந்தபாடில்லை. இவற்றிற்குக் காரணம்:-

(1) இந்தியர்களும் தாங்களும் சமத்துவமான பிரிட்டிஷ் பிரஜைகளென்ற உண்மையை எண்ணிப்பாராத குடியேற்ற நாட்டவரின் தப்பெண்ணம்.

[…]

சரியான விஷயங்களைச் செய்யவேண்டும் என்கிற நம் அவா காலக்கிரமத்தில்தான் பூர்த்தியாகும். ஆயினும் நாம் உதவியின்றி அதிகம் செய்ய முடியாதாகையால் நம் தேசத்தாருடைய … உதவியை நம்பியிருக்கிறோம். மாட்சிமை பொருந்திய ஏழாம் எட்வர்ட் மகாராஜாவை ‘இராஜசக்ரவர்த்தி’யென மங்களம் பாடுகிற பெரிய ஆங்கிலேய சாக்சன் ஜாதியாரிடத்தும் நாம் இவ்வுதவிக்கெதிர் பார்க்கலாமா? பலாஷ்டிகமான ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த பலவேறு பிரிவினர்க்குள்ளும் ஒற்றுமையும், நன்மதிப்பும் விருத்தியாக வேண்டுமென்ற ஒரே நோக்கம் தவிர வேறொன்றும் நம் உத்தேசத்திலில்லை என்போம்.”

இதற்குப் பிறகு இந்தியன் ஒப்பீனியன் ஓர் இயக்கத்தை உருவாக்கவும், வழிநடத்தவும் காந்தி பயன்படுத்திய வாகனமாயிற்று. அதுவே ஓர் இயக்கமாயிற்று என்றும் கூறலாம். “இந்தியன் ஒப்பீனியனின் குறிக்கோள் எட்வர்ட் மன்னரின் இந்தியப் பிரஜைகளையும் ஐரோப்பியப் பிரஜைகளையும் நெருங்கச் செய்வதும், பொதுமக்களின் கருத்தை வளர்த்தெடுப்பதும், தவறான புரிதல்களை நீக்குவதும், இந்தியர்களுக்கு அவர்களது குறைகளைச் சுட்டிக்காட்டுவதும், உரிமைகளைப் பெறப் போராடும்போது கடமைகளின் வழியைக் காண்பிப்பதும் ஆகும்.” நகரத்தில் அச்சாகிக்கொண்டிருந்த இதழை ஃபினிக்ஸ் பண்ணைக்கு மாற்றினார். பல சிரமங்களுக்கிடையில் அச்சிட்டு வெளியிட்டார். மதன்ஜித், மன்சுக்லால் ஹிராலால் நாசர், ஆல்பர்ட் வெஸ்ட், ஹெர்பெர்ட் கிட்சின், ஹென்றி போலக், மகன்லால் போன்ற பலரும், ஃபினிக்ஸ் பண்ணைக்கு குடிபெயர்ந்த பிறரும் இந்த இதழை வெளிக்கொணர்வதில் பங்காற்றினர். காந்தி தனது வருமானத்தில் பெரும்பகுதியை இவ்விதழ் நடத்துவதற்குப் பயன்படுத்தினார். 1906 பிப்ரவரியில் இந்தியன் ஒப்பீனியனின் தமிழ், இந்தி ஆகிய இரண்டு பதிப்புகளும் நடத்த இயலாமல் நிறுத்தப்பட்டன. ஆங்கிலத்திலும் குஜராத்தியிலும் தொடந்து வெளிவந்தன.

காந்தி சத்தியாகிரகம் பற்றிய கருத்துகளை இதில்தான் எழுதி வளர்த்தெடுத்தார். சத்தியாகிரகம் என்ற பெயரையே பத்திரிக்கையில் அறிவித்த போட்டியின் மூலமாகத்தான் தேர்ந்தெடுத்தார். தன் ஆசிரமங்களில் செய்த சோதனைகள் குறித்து எழுதினார். இந்தியர்கள் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளைக் குறித்து எழுதினார். டால்ஸ்டாய், ரஸ்கின், தோரோ போன்ற உலகச் சிந்தனையாளர்களை அறிமுகப்படுத்தினார். வாசிங்க்டன், லிங்கன், நைட்டிங்கேல், மாஜினி போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதினார். வாசகர் கேள்விகளுக்குப் பதில் எழுதினார். 

காந்தியின் முக்கியமான புத்தகங்கள் எல்லாம் அவரது பத்திரிக்கைகளில் தொடர்களாக வெளிவந்தவையே. ஜான் ரஸ்கினின் Unto the Last நூலை சர்வோதயா என்ற பெயரில் குஜராத்தியில் மறுஆக்கம் செய்தார். பின்னர் இந்திய சுயராச்சியம் நூலும் இந்தியன் ஒப்பீனியனில் வெளிவந்தது. 

இந்தியா திரும்பிய பின்னர் வெவ்வேறு காலகட்டங்களில் அவர் நவஜீவன் (இந்தி), யங் இந்தியா (ஆங்கிலம்), ஹரிஜன் (ஆங்கிலம்), ஹரிஜன் சேவக் (ஹிந்தி), ஹரிஜன் பந்து (குஜராத்தி) ஆகிய இதழ்களை நடத்தினார். நவஜீவனும் யங் இந்தியாவும் 1919ல் தொடங்கப்பட்டு 1931-32ல் வட்டமேசை மாநாட்டுக்குப்பின் காந்தி சிறைக்குச் சென்றபோது நிறுத்தப்பட்டன. பிறகு 1933ம் ஆண்டு ஹரிஜன் இதழ் மூன்று மொழிகளில் தொடங்கப்பட்டது. 1946ல், ஹரிஜன் இதழைத் தமிழில் தொடங்கி நடத்த சின்ன அண்ணாமலைக்கு அனுமதியளித்தார். 

இவை அனைத்துமே மக்களோடு தொடர்ந்து உரையாடுவதற்கான ஊடகமாக காந்திக்கு அமைந்தன. பல மொழிகளில் தனது எழுத்துகளைக் கொண்டுவந்து மக்களைச் சென்றடைய வேண்டும் என்று கருதினார். ஹரிஜன் சேவக் இதழை தேவநாகிரி, உருது ஆகிய இரண்டு எழுத்துருக்களில் கொண்டுவந்தார். 

குஜராத்திகளுக்கு அடுத்தபடியாக காந்திக்கு மிக நெருக்கமான உறவு அமைந்தது தமிழர்களோடுதான். தென்னாப்பிரிக்கப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு கணிசமானது. காந்தி தமிழ் குறித்தும், தமிழர்கள் குறித்தும் பல கட்டுரைகளையும் குறிப்புகளையும் எழுதியுள்ளார். 1905ம் ஆண்டு, இலங்கையிலிருந்து வந்த ஒரு வேண்டுகோளுக்கிணங்கி, லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஒரு விருப்பப் பாடமாக வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை காந்தி வழிமொழிந்தார். “தமிழ் ஒரு மகத்தான திராவிட மொழி. பரந்ததோர் இலக்கியத்தைக் கொண்டுள்ளது. அது இந்தியாவின் இத்தாலிய மொழியாகக் கருதப்படுகிறது. லண்டன் பல்கலைக்கழகத்தில் விருப்பப் பாடமாக வைப்பதற்கு எல்லா வகையிலும் தகுதியான மொழி” என்று எழுதினார். 

காந்தி தமிழ் கற்றுக்கொள்வதற்காக ஜி.யு.போப் எழுதிய கையேட்டினைப் பயன்படுத்தினார் (First Lessons in Tamil: A Handbook of the Ordinary Dialect of the Tamil Language). ஜி.யு.போப் மார்ச், 1908ல் மறைந்தபோது, “சென்னை மக்கள் மதிப்பும் மரியாதையும் செலுத்த வேண்டியர்களில் டாக்டர்.போப்பைவிடத் தகுதியான ஆங்கிலேயர்கள் எவரும் இல்லை. அவரது உதாரணம் சென்னை மக்களை ஆராய்ச்சிப் பாதையில் வழிநடத்தி, அண்மைக் காலத்தில் புதைந்துபோன அவர்களது பெரும் வரலாறைக் குறித்து உலகம் அறியவும், இலக்கியம், மொழியியல், மெய்யியல், இறையியல் ஆகியவற்றின் பொக்கிசங்களை வெளிச்சத்திற்குக் கொணரவும், மக்கள் தங்கள் எதிர்கால வளர்ச்சிப் பாதையைப் பற்றிய ஓர் அறிகுறியைப் பெறவும் மிளிரும் ஒளியாக உள்ளது,” என்று எழுதி அஞ்சலி செலுத்தினார்.

1935ல், ஹரிஜன் இதழில் திருக்குறள் பற்றித் ‘தமிழ் மறை’ என்ற தலைப்பில் ஒரு சிறு கட்டுரையை காந்தி எழுதியுள்ளார். 

“திருவள்ளுவர் ஒரு தமிழ்த் துறவி. அவரை ஒரு ஹரிஜன நெசவாளர் என்கின்றன தொன்மங்கள். கி.பி. முதலாம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்ததாகக் கூறுகிறார்கள். புகழ்மிக்க திருக்குறளை அவர் அளித்துள்ளார் – திருக்குறள் புனித முதுமொழிகளைக் கொண்டது. தமிழர்களால் தமிழ்மறை என்று அறியப்படுகிறது. எம்.ஏரியலால், ‘மனிதச் சிந்தனையின் வெளிப்பாட்டில் மிக உயர்ந்த, தூய்மையானவற்றில் ஒன்று,’ என்று போற்றப்பட்டது. இதில் 1330 முதுமொழிகள் உள்ளன. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஹரிஜன மற்றும் பிற சேவைகளுக்காகச் சர்மாதேவி (சேரன்மாதேவி) ஆசிரமத்தை நிறுவிய, அமரர் வ.வே.சு.ஐயர் அண்மையில் ஒரு மொழிபெயர்ப்பைச் செய்திருந்தார். சர்மாதேவி ஆசிரமத்தையும், இந்த மொழிபெயர்ப்பையும் நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு மறைந்துவிட்டார். சர்மாதேவி இப்போது ஹிரிஜன் சேவா சமிதியின் வசம் உள்ளது. இந்த மொழிபெயர்ப்பின் இரண்டாம் பதிப்பில் 1000 பிரதிகள் மீதமுள்ளன. இந்த நூலின் விலை ரூ.5 ஆக இருந்தது. இப்போது ரூ.2/8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் எழுதியுள்ள ஒரு விரிவான முன்னுரையை இந்நூல் கொண்டுள்ளது. இதிலிருந்து வரும் வருமானம் ஹரிஜன சேவைக்காகப் பயன்படுத்தப்படும். வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்ட, இரண்டு குறள்களை நேர்ந்தவாக்கில் தேர்ந்தெடுத்து இங்கு தருகிறேன்.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. [327]

இதனை ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய வரிகளோடு ஒப்புநோக்குவோம்:

‘சுதந்திரமாய் இப்பள்ளத்தாக்கில் உலவும் எந்த மந்தைக்கும்

மரணத்தை நான் விதிப்பதில்லை;

என்னைக் கண்டு இரங்கும் பேராற்றலால் கற்பிக்கப்பட்ட நான்,

அவற்றைக் கண்டிரங்கவும் கற்றுக்கொண்டேன்.’

அடுத்த தேர்வு:

உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. [339] 

இதனை வேர்ட்ஸ்வொர்த்தின் வரிகளோடு ஒப்புநோக்கலாம்:

‘மரணம் என்பது உறக்கமும் மறதியும் அன்றி வேறில்லை.’

காந்தி பாரதியைப் பற்றியும் ஒரு குறிப்பு எழுதியுள்ளார். 1928ல் மதராஸ் மாகாணத்தில் பாரதியின் சுதேசிய கீதங்கள் தடைசெய்யப்பட்டபோது இதை எழுதியுள்ளார். பர்மா அரசு இதைத் தடைசெய்ததைத் தொடர்ந்து தமிழக அரசும் தடைசெய்திருக்கிறது. இதனால், அமைச்சர்களையும் அதிகாரிகளையும் காந்தி கடுமையாகச் சாடியிருக்கிறார்.

தறிகெட்டோடும் நீதி (யங் இந்தியா, 13-12-1928)

இந்த இதழின் பிறிதோர் இடத்தில் மறைந்த தமிழ்க் கவிஞர் பாரதியின் தமிழ்ப் பாடல்கள் சிலவற்றின் மொழிபெயர்ப்பை முதல் தவணையாகத் தந்துள்ளேன். அண்மையில், மதராஸ் அரசாங்கம் பர்மா அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி – இல்லை, ஆணைகளின்படி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும், பாரதியின் பாடல்களைப் பறிமுதல் செய்தன. பர்மா அரசாங்கம், தனது முறையின்போது, இதை எந்த நீதிமன்ற ஆணையின்படியும் செய்யவில்லை. நிர்வாக அறிவிப்பின்மூலம் செய்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், கடந்த 30 ஆண்டுகளாகப் பரவலாகப் படிக்கப்பட்டுள்ள இப்புகழ்பெற்ற தமிழ்க்கவியின் நூல்களை இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் பறிமுதல் செய்யலாம். சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள ஆவணச் சான்றுகளின்படி, மதராஸ் கல்வித்துறை இந்த நூல்களைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப் பரிசீலித்து வந்ததாகத் தெரிகிறது. மாகாண அரசாங்கங்களுக்கு இத்தகைய பரந்த நிர்வாக அதிகாரம் இருப்பது எனக்குத் தெரியவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். இத்தகைய காலத்தில்தான் நாம் வாழ்கிறோம், பயில்கிறோம். இது கல்வித்துறை அமைச்சரின் அதிகாரத்துக்குட்பட்ட செயல் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால் நாளுக்கு நாள் ஒன்று தெளிவாகிறது – இந்த அமைச்சக அலுவலகங்களும் சட்டமன்றங்களைப் போலவே வெறும் கேலிக்கூத்துதாம். அமைச்சர்கள் என்போர் இந்திய குடிமைப்பணி (ICS) அதிகாரிகளின் விருப்பத்தைப் பதிவுசெய்யும் குமாஸ்தாக்கள்தாம்.

எனவே பரிதாபத்துக்குரிய கல்வித்துறை அமைச்சரால் இப்பிரபலமான புத்தகங்களைப் பறிமுதல் செய்வதைத் தடுக்க எதுவும் செய்ய முடியவில்லை. அவை பறிமுதல் செய்யப்பட்டபோது, அவருக்கு அதுகுறித்த தகவல்கூடத் தெரிந்திராமல் இருந்திருக்கலாம். தெரிந்திருந்தாலும் எதில் கையோப்பமிடுகிறார் என்பதைக் குறித்து அவருக்குச் சொல்லப்பட்டிருக்க மாட்டாது. ஆனால் சில நாட்களில் இப்பறிமுதல் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. பாரதியின் மனைவியின் சார்பாக பாரதியின் நூல்களைப் பதிப்பித்தவரும், இந்தி பிரச்சாரக் கேந்திராலயத்தைச் சேர்ந்தவருமான பண்டிட் ஹரிஹர சர்மா, இப்பறிமுதலைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. எனவே இதைப் பொது விவாதத்துக்கு உட்படுத்தினார். பிறகு இயல்பாகவே சட்டமன்றத்திலும் இது விவாதிக்கப்பட்டு, இப்பறிமுதல் கண்டிக்கப்பட்டது. பண்டிட் ஹரிஹர சர்மா உயர்நீதிமன்றத்திலும் இந்தச் சட்டத்துக்குப் புறம்பான பறிமுதலைத் திரும்பப் பெறுமாறு வழக்கு தொடர்ந்தார். பிறகு இப்பறிமுதல் ஆணை திரும்பப் பெறப்படும் என்றும், புத்தகங்கள் திரும்பக் கொடுக்கப்படும் என்றும், மதராஸ் அரசாங்கம் பாரதியின் மனைவிக்கு இழப்பீடு வழங்கும் என்றும் ஏற்பட்ட ஓர் உடன்பாட்டால், இவ்வழக்கு கைவிடப்பட்டுள்ளது. ஆனாலும் தவறு தவறுதான். பண்டிட் ஹரிஹர சர்மாவின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என்றும், புத்தகங்களை திரும்பத் தருவதன் மூலம் தவறு நிவர்த்திக்கப்படும் என்றும் நம்புவோமாக. மதராஸ் அரசாங்கம் என்னதான் இழப்பீடு கொடுத்தாலும், தவறிழைக்கப்பட்ட உணர்வு நீடிக்கும். பர்மா அரசாங்கத்தின் ஆணைக்கு அடிமைத்தனமாகக் கீழ்ப்படிந்த மதராஸ் அரசங்கத்தின் செயலால் பொதுமக்கள் மனதில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையும் நீடிக்கும்.

இத்தடையைக் கண்டித்து, யங் இந்தியா இதழில், காந்தி இதில் குறிப்பிட்டபடி ராஜாஜியின் மொழிபெயர்ப்பில் பாரதியின் சில கவிதைகளை வெளியிட்டார். ராஜாஜி எழுதிய ஒரு அறிமுகக் கட்டுரையையும் வெளியிட்டிருக்கிறார். நான்கு இதழ்களில் 17 கவிதைகள் வெளிவந்தன.

காந்தி இக்குறிப்பில் பாரதியின் நண்பரும் பதிப்பாளருமான ஹரிஹர சர்மாவின் முயற்சிகள் பற்றியும் பேசுகிறார். ஹரிஹர சர்மா வாஞ்சிநாதன் போன்றவர்களோடு ஆயுதம் தாங்கிய புரட்சிகர இயக்கங்களில் இருந்துவிட்டு வெளியேறி காந்தியத் தொண்டராகி, அவரது கோச்ரப் ஆசிரம் தொடங்கப்பட்ட காலத்திலேயே அங்கே குடும்பத்தோடு தங்கியிருந்தார்.

காந்தியை மிகவும் பாதித்த இரண்டு தமிழர்கள் வள்ளியம்மையும் நாகப்பனும் என்று சொல்லலாம். அவர்கள் இருவரும் தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்தில் சிறைக்குச் சென்று மரணத்தைத் தழுவியவர்கள். இவர்களைப் பற்றி காந்தி தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்தார்.

இந்தியாவின் புனித மகள் ஒருத்தியை இழந்துவிட்டதற்காக வருந்துகிறோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் தனது கடமையை உணர்ந்து ஆற்றிய காரிகை அவள். மாதர்களுக்கு அணிகலங்களான துன்பத்தைச் சகிக்கும் மனோபாவம், தன்மானம், நல்லொழுக்கம் ஆகியவற்றுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவள். அவளுடைய உதாரணம் இந்தியச் சமுதாயத்தில் வீணாய்ப் போகாது என நம்புகிறேன் – இந்தியன் ஒப்பினியன், தமிழ்நாட்டில் காந்தி, ப.38.

‘நாகப்பா, தாய்நாட்டுக்காக உன் உயிரை நீ ஈந்தபோது நீயும் ஓர் இளைஞன்தானே? உன் குடும்பத்திற்கு அருளப்பெற்ற ஓர் ஆசீர்வாதமாகவே உன் தியாகத்தை நான் கருதுகிறேன். நீ இறந்துவிட்டாய் என்றாலும் சிரஞ்சீவியே. ஆகவே என் மகன் சிறை சென்றதற்காக நான் ஏன் திடங்குலைய வேண்டும்’

என்று நாகப்பனைத் தன் மகனுக்கு ஈடாக வைத்து எழுதுகிறார். 

காந்தியின் எழுத்து சில சமயங்களில் பெரிய சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது. உதாரணமாக, 1946ல் காந்தி தமிழ்நாடு வந்திருந்தபோது ராஜாஜிக்கு எதிராக ஒரு சிறுகும்பல் (clique) செயல்படுவதாகவும் மக்கள் ராஜாஜியோடு இருப்பதாகவும் கூறினார். அது காமராஜரை நோக்கிக் கூறப்பட்டதாகக் கருதி, அவர் தமிழ்நாடு பாராளுமன்றக் குழுவிலிருந்து பதவி விலகுவதாக அறிவித்தார். சிறுகும்பல் என்பதை வசைச்சொல்லாகப் பயன்படுத்தவில்லை என்று காந்தி விளக்கமளித்து எழுதினார். ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தியதாலேயே இந்தக் குழப்பம் என்றார். ‘ராஜாஜி விவகாரத்திலோ ராஜாஜி பற்றிய எனது கருத்திலோ தவறிருப்பதாகக் கருதினால் யாரும் என்னைப் பின்தொடர வேண்டாம். எனக்கு எந்த அதிகாரமும் இல்லை,’ என்றார். அவரது அச்சொற்பயன்பாட்டுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பதாகச் சிலர் அறிவித்தபோதும், அச்சொல்லைப் பின்வாங்க மறுத்துவிட்டார். ‘உண்ணாவிரதத்தை ஓர் ஆயுதமாக்கியவன் என்கிற முறையில் இப்படியான காரணங்களுக்காக உண்ணாநோன்பைப் பயன்படுத்துவதை நான் கண்டிக்கிறேன். உலகமே எதிர்த்து நின்றாலும் ஒருவர் தன் நேர்மையான கருத்தை மாற்றிக்கொள்ளக்கூடாது. எனவே இந்த உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்துகிறேன்,’ என்றார்.  

இப்படியாக காந்தி தன் பத்திரிக்கைகளில எண்ணற்ற மனிதர்களைப் பற்றியும் நிகழ்ச்சிகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அவருடைய எழுத்திலும் சொல்லிலும் எப்போதும் அவருணர்ந்த உண்மை மிளிர்ந்துகொண்டே இருக்கும். உண்மைக்கான தேடலுக்கு அவரது இதழ்கள் அவருக்குப் பெரிதும் துணைசெய்தன. காந்தி அளவுக்கு வாழ்வின் அத்தனை புள்ளிகளையும் தொட்டும் இணைத்தும் எழுதிய தலைவர்களையோ சிந்தனையாளர்களையோ காண்பதரிது. அரசியலும் ஆன்மீகமும், மருத்துவமும் கல்வியும், பொருளாதாரமும் வணிகமும், உழவும் தொழிலும், பெண்களும் குழந்தைகளும், போரும் அகிம்சையும், அறமும் அறமீறல்களும், சாதியும் தீண்டாமையும் அவரது எழுத்துகளில் இடம்பெற்றன. உலகச் செய்திகளும் உள்ளூர் செய்திகளும் அலசப்பெற்றன. அவருடைய எழுத்துகள் மக்களோடு நடந்த ஒரு நீண்ட உரையாடலாகவே அமைந்தன. 

*

(2019ம் ஆண்டு காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில் சாகித்திய அகாதெமி நடத்திய காந்தி 150 விழாவில் ஆற்றிய உரையின் விரிவுபடுத்தப்பட்ட கட்டுரை வடிவம்)

3 comments

கா.ஜெயராமன் (K.Jayaraman) April 27, 2021 - 2:03 pm

கண்ணன் அவர்களின் கட்டுரையை வாசித்தேன் என்பதைவிட காந்தியின் மூச்சுக்காற்றை சுவாசித்தேன் என்பதே பொறுத்தமாகும். வாழ்த்துகள்… ஜெ.

காந்தியெனும் இதழாளர் | உரக்கச் சொல்வேன் June 27, 2021 - 8:18 am

[…] விரிவுபடுத்தப்பட்ட கட்டுரை வடிவம். தமிழினி மின்னிதழிலும் சர்வோதயம் மலர்கிறது இதழிலும் […]

மு.முருகேசன் March 15, 2022 - 3:11 pm

அருமை
ஆழம்
இனிமை

Comments are closed.