முன்னுரை
தஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களில் சில கூறுகள் திரும்பத் திரும்பக் கையாளப்பட்டிருப்பதை கவனம் மிக்க ஒரு வாசகரால் மிக எளிதாக அடையாளம் கண்டுவிட முடியும். நாவல்களின் மையக் கருத்துகளிலும் பேசுபொருள்களிலும் இந்தப் பண்பு இருப்பது உண்மையாகினும் நான் சொல்ல வருவது அவற்றைப் பற்றியல்ல. அமைதிப்படுத்தவியலாத இருண்மை சார்ந்த நுணுக்கமான விவரணைகள் அதைவிட அதிகமாக இடம்பெற்றிருக்கின்றன. தாங்கவொண்ணாத் துயரம் நிறைந்த ஒரே வகைக் கதைகளையே (பத்திரிக்கைச் செய்திகளில் வரும் வழக்குகள் உள்ளிட்ட வரலாற்று நிகழ்வுகள்) அவர் பல்வேறு படைப்புகளில் திரும்பத் திரும்பப் பயன்படுத்தியிருக்கிறார்.
அசடன் நாவலில் போகிறபோக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும், இரண்டு பெண்களைக் கொடூரமாகக் கொல்லும் ஒரு மனிதனைப் பற்றிய கதைதான் குற்றமும் தண்டனையும் நாவலின் மையக் கருத்தாக இருக்கிறது. குற்றமும் தண்டனையும் புத்தகத்தில் ஒரு அத்தியாயம் முழுக்க விவரிக்கப்படும், வயது முதிர்ந்த குதிரை ஒன்றின் மீது நிகழ்த்தப்படும் மனிதாபிமானற்ற சித்திரவதை பற்றிய குறிப்பொன்று அசடன் நாவலிலும் வருகிறது. தஸ்தாயேவ்ஸ்கியின் நாவலில் இருக்கும் பலகுரல் தன்மையினால் அவை பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஒரே நேரத்தில் பேசினாலும், துயரம் என்னும் கருவினை அவர் தொடர்ச்சியாக ஆராய முற்பட்டிருக்கிறார். துயரத்தினை நியாயப்படுத்த முயன்ற இரண்டு சிந்தனாமுறைகளுக்கு எதிராக அவரது கதாபாத்திரங்கள் பேசி வந்திருப்பதைச் சரியான ஆய்வின் மூலம் நம்மால் கண்டுணர முடியும். அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
ஆச்சாரக் கிறித்துவம், கனவு சோஷலிசம் ஆகிய இரண்டு முக்கியமான தத்துவங்களை தஸ்தாயேவ்ஸ்கி மிக நெருக்கமாக அறிந்திருந்தார். துயரம் குறித்து அவை இரண்டும் தமக்கேயுரிய நெறிப்படுத்தப்பட்ட புரிதலையும் நியாயப்படுத்தலையும் கொண்டிருந்தன. தத்தம் தீர்வையும் வழங்கின. தஸ்தாயேவ்ஸ்கி தனது புனைவுகளில் மேற்கொள்ளும் ஆய்வானது, அவரது தனிப்பட்ட கருத்து எவற்றுடனும் முழுமையாக ஒத்துப்போனதா என்கிற ஐயத்தையே வாசிப்பவரது மனதில் ஏற்படுத்தும். கிறித்துவக் கோட்பாட்டுடனே அவர் நெருங்கிய சார்பு கொண்டிருந்தார் என்பது உறுதி. சோஷலிச தத்துவத்தின் கொள்கைகள், நம்பிக்கைகளுக்கு எதிராக அவரது கதாபாத்திரங்கள் உரக்கவும் உறுதியாகவும் பேசுவதை நம்மால் காண முடியும். என்றாலும் ரஷ்ய பழமைவாத கிறித்துவத்தை அவர் முழுதாக ஏற்றுக்கொள்ளவுமில்லை. கிறித்துவம் வழிமொழிந்த மனித நேயச் சிந்தனைகள்- அவற்றைச் சமூகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அவர் தனது நாவல்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். ஆனால் பழமைவாத, ஆச்சாரக் கருத்துகளுக்கு முரணாக, துயரம் என்பது புரிந்துகொள்ள முடியாதது எனவும் அதன் மூலம் ஏற்படும் இழப்புகள் ஒருபோதும் ஈடுசெய்ய இயலாதவை என்றும் அவர் அழுத்தமாய் வெளிப்படுத்தினார்.
போலவே, உளவியல் ரீதியாக துயருறும் மனிதர்களின் நிலையை நோக்கியும் அவர் கவனத்தை ஈர்த்தார். அவரது பல கதாபாத்திரங்கள் மதம் சார்ந்த கருத்துகளால் துயருறுபவர்களாக இருந்தனர். தங்களுக்கு நேரும் துயரங்களைத் தீர்க்க முடியாத இவர்கள், அதுசார்ந்து, தங்களை இரக்கமின்றி சித்திரவதை செய்யும் புதிய நம்பிக்கைகளை ஸ்வீகரித்துக் கொள்கின்றனர். பழமைவாத கிறித்துவமோ கற்பனாவாத சோஷலிஸமோ இதுசார்ந்த பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வினை முன்மொழியவே இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது.
துயரம் குறித்து தஸ்தாயேவ்ஸ்கி கொண்டிருந்திருக்கக்கூடிய நம்பிக்கை பற்றி அவரது நாவல்கள் மூலம் இந்த ஆய்வு கண்டறிய முயல்கிறது. ஏதோ ஒரு கதாபாத்திரத்தின் நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு அதுதான் தஸ்தாயேவ்ஸ்கியின் நிலைப்பாடும் என நம்மால் ஒரு முடிவிற்கு வரமுடியாதுதான். பலகுரல் தன்மையுடைய அவரது நாவல்கள் பல்வேறு சமூக, அரசியல், ஆன்மீகப் பிரச்சினைகள் குறித்து வெவ்வேறு பார்வைகளை தங்களது கதாபாத்திரங்கள் மூலம் முன்வைக்கின்றன. ஒரு பிரச்சினையின் வெவ்வேறு கோணங்கள் குறித்து அவர் ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார் என்பது அவரது கதாபாத்திரங்கள் மேற்கொள்ளும் தீவீரமான வாதங்கள் மூலம் நமக்குப் புலனாகிறது. என்றாலும், சில கதாபாத்திரங்களின் கருத்துகள் அழுத்தமாக வெளிப்படவே செய்கின்றன. அவற்றையே ஒரு வாசகர் தஸ்தாயேவ்ஸ்கியின் சொந்தக் கருத்துகளோடு அதிகம் உடன்படுபவையாக அடையாளம் காண முடியும்.
அழகு மிகுந்த ஆச்சாரமான கிறித்துவ அடையாளத்தின் மீதான காதலுக்கும், ரஷ்யக் கீழ்வகுப்பினருக்கு இழைக்கப்பட்ட அநீதி மீதான அதிருப்திக்கும் இடையே தன் வாழ்நாள் முழுவதும் அவர் அலைபாய்ந்துகொண்டே இருந்தார் என்கிற விஷயம் மிகத்தெளிவு.
இந்த இரண்டு நம்பிக்கைகளின் கலவையாக, இவ்வுலக வாழ்வின் துயரங்களிலிருந்து விடுபட அவர் கிறித்துவத்தின் அன்பினைப் பரிந்துரைத்தார். இறப்பிற்குப் பிறகான வாழ்வில் அளிக்கப்படவிருக்கும் இழப்பீடு குறித்து அவர் வெளிப்படையாக ஆதரவோ மறுப்போ தெரிவிக்கவில்லை. தன் வாழ்வின் இறுதியில், “நம்பிக்கையினை அடைவதற்கு நம்பிக்கையின்மை எனும் உலையினைக் கடக்க வேண்டி இருந்ததாகப்”1 பிரகடனம் செய்கிறார். ஆனால் துயரத்தைப் பொறுத்தவரை அந்த ‘நம்பிக்கை’யானது அவரது தனிப்பட்ட சில கொள்கைகளை உள்ளடக்கியிருந்தது. அக்கொள்கைகள் ஆச்சாரமான கோட்பாடுகளையோ தெளிவாக வரையறுக்கப்பட்ட கருத்தியல்களையோ அப்படியே பிரதிபலிக்கவில்லை.
துயரம் பற்றி பின்வருவது போன்ற கண்ணோட்டத்தை முன்மொழிகிறார்கள் தஸ்தாயேவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள். அதாவது, ‘மனிதர்களுக்கிடையேயான நிலையான சுயநலமற்ற அன்பின் மூலமும்’, ‘எல்லோரையும் நேசிக்கிற தன்முனைப்பற்ற பூரண நியாயவானாக மாறுவதற்கான இடைவிடாத (அப்படி ஒரு பூரணத்துவம் இப்புவியில் சாத்தியமில்லை என்கிற புரிதலுடன்கூடிய) முயற்சியின் வாயிலாகவும்’, ‘இப்புவியிலோ மரணத்திற்குப் பிறகான பரலோக வாழ்விலோ ஈடுசெய்ய இயலாத துயரங்களும்கூட (உளவியல் – ஆன்மீக ரீதியான) இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்வதன் மூலமும்’ நாம் துயரத்தை எதிர்கொள்ள முடியும் என்பதே அது.
அவருடைய கதைகள் பெரும்பாலான சமயங்களில் நம்மைக் கடும் மனச்சோர்வுக்கு உள்ளாக்குபவையாக இருந்தாலும் அவை நம்மை மேம்படுத்துபவையாகவும் இருக்கின்றன.
துயரத்தை வாழ்வின் ஒரு பகுதியென ஒப்புக்கொள்ளும் அவரது மனப்பாங்கு முடிவற்ற ஒரு பயணமென வாழ்வைத் தொடர வேண்டியதன் அவசியத்தையும், துயரம் குறித்த கேள்விகளுக்கான பதிலைக் கண்டறியும் தேடல் பதிலைவிட முக்கியம் எனவும் உணர்த்துகிறது.
துயரம் பற்றிய கேள்விகளை விவாதத்திற்குள்ளாக்கி அவற்றிற்கு முழுமையாக பதிலளிக்காமல் விடுவதன் மூலம், துயரம் பற்றிய ஒற்றை உண்மையினை அவர் உலகிற்கு வெளிக்காட்டினார்- அதாவது துயரம் என்பது ஒரு புதிர்.
தஸ்தாயேவ்ஸ்கியும் ரஷ்ய ஆச்சாரத்தால் துயருறுபவரும்: ஒரு சிக்கலான உறவு
“தஸ்தாயேவ்ஸ்கியைப் பொறுத்தவரை, கிறித்துவம் புவியினோடும் மனிதர்களோடும் தொடர்புடையது. தஸ்தாயேவ்ஸ்கிக்கு, தெய்வம் பற்றிய கேள்வி மனித மனத்தினதும், மனிதன் பற்றிய கேள்வி தெய்வத்தன்மையினதுமாகும். “2
துயரம் பற்றிய புரிதல், நியாயப்படுத்தல்களில் தஸ்தாயேவ்ஸ்கி மீது தாக்கம் செலுத்திய எண்ணற்ற காரணிகளில் அவரது கிறித்துவ வளர்ப்பு முக்கியப் பங்கு வகித்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தஸ்தாயேவ்ஸ்கி ஆச்சாரமான ரஷ்யத் தேவாலயத்தின் வழியில் வளர்க்கப்பட்டார். அவரது பெற்றோர், குறிப்பாக அன்னை, அதிகம் பக்தியுடையவராக இருந்தார். பழைய, புதிய ஏற்பாடுகளிலிருந்து3 கதை சொல்வதன் வாயிலாக அவர்தான் இவருக்கு வாசிக்கவும் எழுதவும் கற்பித்தார். புனிதர்கள்- அவர்கள் கடந்துவந்த அளவிட முடியாத சோதனைகள் அவரது கதைகளில் விரவியிருக்கின்றன. “இயேசு கிறிஸ்துவை அடிப்படையாகக்கொண்டு, புனிதர்களின் வாழ்வில் நிகழ்ந்த அழகுணர்ச்சி, பற்று, துயரம், பணிவு, தியாகம் குறித்த நிகழ்வுகள் எவ்வாறு அவரது இளம்பருவத்தில் கற்பனையைத் தூண்டிவிட்டன”4 என்பது குறித்து விவரித்திருக்கிறார். தீமையை வெற்றிகொள்ளும் இந்த பைபிள் இதிகாசங்கள் அவரைக் கவர்ந்த போதும், நிஜ வாழ்வில் மனிதர்கள் தினசரி எதிர்கொள்ளும், தீரவே தீராதது போலத் தோற்றமளிக்கும், துயரங்களால் கடும் அவதிக்குள்ளானார்.
தெய்வத்தின் இருப்பு குறித்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கும் விதமாக மிக அப்பட்டமாக நிகழ்கிற துயரங்கள் தஸ்தாயேவ்ஸ்கிக்கு மிகவும் வேதனையைத் தந்தன. இவான் கரமசோவின் வெகு சில வரிகளை வாசித்தாலே கதாசிரியரின் இத்துயரைக் குறித்து நாம் புரிந்துகொண்டுவிட முடியும். துயரம் என்பது வெறுமனே விளக்கங்கள் மூலம் கடந்துவிடக்கூடிய அரூபம் இல்லை. அது கண்ணுக்கு முன்னே நிற்கிற ஒரு தீமையாக இருந்தது, அதைப் புரிந்துகொள்ள அவர் போராட வேண்டியிருந்தது. செய்தித்தாள்களிலும் வரலாற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ள நிஜ குற்றங்களை அவர் தனது எழுத்துகளில் பயன்படுத்தியிருப்பதற்கு நிறைய எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.
நிஜமான வலியினை விவரிப்பதற்காக அவர் பயன்படுத்திய கூர்மையும் அழுத்தமும் வெளிப்படையும் மிக்க மொழியானது பல சமயங்களில் வாசிக்கவே சிரமமாய் இருக்கக்கூடிய அதிர்ச்சியூட்டக்கூடிய யதார்த்தமான சித்தரிப்புகளை உருவாக்கியது. துயரம் குறித்த தீவிரமான விசாரணையை நம்மால் அதில் காண முடியும். தாமஸ் ஏ. இண்டினோப்ளஸ் குறிப்பிடுவதைப் போல, “துயரத்திற்கும் தெய்வத்திற்கும் இடையேயுள்ள பிரிக்க முடியாத உறவினைப் பற்றியும், துயருறுபவர் சொர்க்கத்தினையே நோக்கியிருக்க அங்கே தெய்வம் எப்போதும் செயலற்று அமர்ந்திருப்பது பற்றியும்”5 அவை நமக்கு நினைவூட்டியபடியே இருக்கின்றன.
அவரது கதாபாத்திரங்களின் துயரங்கள், வாதங்கள் மூலம், தஸ்தாயேவ்ஸ்கி தீமையை உருவகப்படுத்தும் விதம் குறித்து ஆராய முற்படும் ஒருவர், தீமையின் தோற்றம்- இருப்புக்கான நியாயப்படுத்தல் பற்றிய மரபார்ந்த சிந்தனைகள் குறித்தும் ஆராய்தல் அவசியமாகிறது. தேவாலயங்கள் மனிதத் துயரங்களை எதிர்கொண்ட விதத்திலிருந்து மாறுபட்டதாய் இருந்தது தஸ்தாயேவ்ஸ்கி அவற்றை அணுகிய விதம். ஆச்சாரக் கருத்தியல்கள் தீமையை விளக்கவும் அதிலிருந்து நிரந்தரமாக விடுபட்டு உயரம் செல்வதைப் பரிந்துரைக்கவும் முயலும்போது, நிரந்தரத் தீர்வு எதையும் வழங்காமல் தஸ்தாயேவ்ஸ்கி அதனை ஆராய முற்பட்டார். சக மனிதன் மீது அன்பு செலுத்துவதும் அவனைப் போலவே துயரை அனுபவிப்பதுமே ஒரு மனிதன் இன்னொருவருக்குத் தரக்கூடிய மிக உயர்ந்த பரிசாக இருக்க முடியும் என்பதும், அவ்வாறு செய்வதன் வாயிலாக சக மனிதனின் துயரத்தைக் குறைக்கவும் இந்தப் புவி வாழ்வின் யதார்த்தம் நிகழ்த்தும் வன்முறையிலிருந்து அவனுக்குத் தற்காலிக விடுதலை வழங்க முடியும் எனவும் அவர் நம்பினார். ஆனால் துயருறுவோர் இறுதியில் அடைய வாய்ப்புள்ள மீட்சி குறித்த சந்தேகத்தை அவர் தனது கதாபாத்திரங்கள் வழியாக வெளிப்படுத்தியபடியே இருந்தார். தன்னை ஒரு ஆச்சாரமான பக்திமிக்க கிறித்துவனாக நிறுவுவதற்கு தஸ்தாயேவ்ஸ்கி முயன்றாலும், மனிதனின் துயரத்தையும் இழப்பையும் ஈடுசெய்யும் எந்த வாய்ப்பும் எவ்வுலகத்திலும் இருப்பதாக அவர் நம்பவில்லை என்பது அவரது எழுத்துகளில் வெளிப்பட்டபடியே இருந்தது. தனது கேள்விகளை விடையற்றவையாய் எஞ்ச வைப்பதன் மூலம், துயரம் என்பது ஒருபோதும் சரிசெய்யப்பட முடியாத ஒரு புதிர் என்னும் கருத்தை அவர் வலியுறுத்தினார்.
அதற்குப் பதிலாக, இப்புவி வாழ்வின் லௌகீக உலகின் அன்பினை துயரம் போக்கும் அருமருந்தாக அவர் பரிந்துரைக்கிறார்.
தஸ்தாயேவ்ஸ்கி வளர்ந்த ரஷ்ய ஆச்சார தேவாலயமானது தீமையின் தோற்றம் மற்றும் பெருக்கத்திற்குக் காரணமாய் பல்வேறு சக்திகள் இருப்பதாய் நம்புகிறது. மனிதன் மற்றும் கலக தேவதைகளின் வீழ்ச்சியையே அது தீமையின் தோற்றத்திற்கான முதல் காரணமாகக் கூறுகிறது. தேவதைகளின் வீழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிடும்போது The Orthodox Way-ல் பிஷப் கல்லிஸ்டாஸ் வேர் “ஆச்சாரக் கிறித்துவத்தைப் பொறுத்தவரை தேவதைகளின் வீழ்ச்சியானது எழில்மிக்க தேவதைக் கதை அல்ல. மாறாக அது ஒரு ஆன்மீக உண்மை” 6 எனக் குறிப்பிடுகிறார். கடவுளுக்கும் தேவதைகளுக்கும் இடையிலான போர் குறித்து மதப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது கொஞ்சம்தான் எனினும் தீமையின் இருப்பு குறித்து நிறுவுவதற்கு அது போதுமானதாக இருக்கிறது. மனிதர்கள் பிற மனிதர்களுக்கு இழைக்கக்கூடிய துயரம் பற்றி அது நியாயப்படுத்தவில்லை. ஆனால் தேவதைகளின் வீழ்ச்சியானது புவியில் தீமை தோன்றுவதற்கான சூழல் உருவாகக் காரணமாக அமைந்தது என்கிற கருத்தை முன்வைக்கிறது.
“மனிதர்கள் தாங்களே உருவாக்கிக் கொள்கிற தீமைகளைத் தாண்டி, தீமையாய் உருமாறக்கூடிய வெகுபலம் வாய்ந்த சக்திகளும் பிரபஞ்சத்தில் இருக்கின்றன. இவை அமானுடமானவையாய் இருந்தாலும் தனி நபர் சார்ந்தவையாய் இருக்கின்றன. அத்தகைய அசுர சக்திகளின் இருப்பு என்பது கற்பனையோ புராணமோ அல்ல. அவை நேரடியாக மனிதனால் அனுபவிக்கப்படுபவை. இரண்டாவதாக, மனிதன் தோன்றிய காலத்திற்கு முன்னரே உலகில் குழப்பங்களும் கீழ்மைகளும் வன்முறையும் இருந்திருப்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வதற்கு இந்தத் தேவதைகளின் வீழ்ச்சி உதவுகிறது. மூன்றாவதாக, தேவதைகள் செய்த புரட்சியானது தீமைகள் எங்கோ மேலிருந்தோ கீழிருந்தோ பருப்பொருட்களிலிருந்தோ உருவாவதில்லை, அவை ஆன்மாவிலிருந்து உருவாகின்றன என்பதை உணர்த்துகிறது. தீமை என்பது… தீமை என்று தனியாக ஒரு பொருளோ உயிரோ இல்லை. அது இயல்பில் நற்குணம் கொண்ட ஒன்றின் தவறான வெளிப்பாடே ஆகும்.” 7
புரட்சித் தேவதைகளின் வீழ்ச்சி குறித்த இந்த ஆய்விலேயே விவாதிப்பதற்குப் பல பிரச்சினைகள் உள்ளன. மனிதன் பிறந்த இந்த உலகமானது அதற்கும் முன்பே கறைபட்டிருந்தது என்பது அதில் முதலாவது. ஒழுங்கின்மையும் கொடூரமும் இயற்கையின் ஒரு பகுதியாக இருந்ததுதான் எண்ணற்ற அநியாயங்களுக்குக் காரணமாய் ஆகியிருக்கிறது – பலவீனமாக்குகிற ஊனங்களுடன் பிறக்கிற குழந்தைகள், புவிக்கோளத்தினுள் இடம்பெயர்ந்து ஒட்டுமொத்த நகரத்தையும் அழிக்கும் டெக்டானிக் தட்டுகள், முழுதேசத்தையும் அழித்துவிடக்கூடிய கோரமான நோய்கள். இயற்கை சேதாரம் விளைவிக்கிறது என்பதை உலகம் சந்தேகத்திற்கிடமின்றி அறியும். தஸ்தாயேவ்ஸ்கியேகூட, உயிருக்கே ஆபத்து விளைவித்துவிடக்கூடிய நரம்பு நோயான வலிப்பினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது பல கதாபாத்திரங்கள் இதுபோல இயற்கையால் வஞ்சிக்கப்பட்டவர்கள்தான். அசடனில் வரும் மிஸ்கின் தஸ்தாயேவ்ஸ்கியைப் போலவே ஒரு வலிப்பு நோயாளி. அசடனின் இப்போலிட்டும், குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் காத்தரீனா இவனோவாவும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள். தீய ஆவிகள் நாவலில் வரும் மர்யா டிமோஃபெயெவ்னா உடல் ஊனமுற்றவள்.8 வீழ்ச்சியுற்ற தேவதைகள் பற்றிய கோட்பாட்டினோடு இந்த ஊனங்களை அவர் தொடர்புபடுத்துவாரா எனத் தெரியாது. அவர் தனது நாவல்களில் எங்கேயும் இதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. இந்தக் கதாபாத்திரங்கள் அனைத்தையுமே மிகுந்த கருணையுடன் படைத்திருந்தாலும் இவ்வுலகின் துயரங்களை அனுபவிக்கிற இக்கதாபாத்திரங்களை அவர் முதன்மைப்படுத்தவில்லை. மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர் நிகழ்த்திக்கொள்கிற அக்கிரமங்கள் மேலேயே அவர் அதிகம் கவனம் செலுத்தினார்.
மேலே சொன்னபடி, தீமை என்று தனியாக எதுவும் இல்லை. நன்மை இன்மைதான் தீமை என்கிற நம்பிக்கையை ஆச்சாரக் கிறித்துவம் பராமரித்து வருகிறது. உலகம் இயல்பாகவே நற்பண்பினாலானது. எனினும் தீமை வெளிப்படும் சாத்தியத்தை உண்டாக்கும் வெற்றிடங்களும் அங்கே இருக்கத்தான் செய்கின்றன. இந்தத் தீமை அல்லது பாவமானது நாம் குறிப்பிடும் தன்மையிலோ வடிவிலோ இல்லை. ஆனால் தஸ்தாயேவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள் அனுபவிக்கிற துயரமானது இதற்கு நேரெதிராக வாதிடுகின்றன. ஒரு சிறுமி தனது பெற்றோரால் துன்புறுத்தப்படுவது குறித்து கரமசோவ் சகோதரர்களில் இவான் கரமசோவ் தன் சகோதரனுடன் நடத்தும் உரையாடலில் நாம் இதைக் காண முடியும். இப்பிரச்சினையை தஸ்தாயேவ்ஸ்கி ஒரு நிஜ நீதிமன்ற வழக்கிலிருந்து எடுத்திருக்கிறார்.
“ஐந்து வயதுடைய ஒரு சிறுமி அவளது தாய், தந்தையால் வெறுக்கப்படுகிறாள். அவர்கள் சமூகத்தில் மிகவும் மதிப்பு வாய்ந்த அதிகாரிகளாகவும் கற்றவர்களாகவும் நற்பண்புடையவராகவும் உள்ளனர். கற்றறிந்த இந்தப் பெற்றோர் அந்த ஐந்து வயது குழந்தையை எல்லாவிதமாகவும் துன்புறுத்தியிருக்கிறார்கள். உடல் முழுக்கப் புண்ணாகும் அளவிற்கு அவளை அடித்திருக்கிறார்கள், சவுக்கடி தந்திருக்கிறார்கள், உதைத்திருக்கிறார்கள். ஏனென்று அவர்களுக்கே தெரிந்திருக்கவில்லை. இறுதியாக துன்புறுத்தலின் உச்சத்திற்கே சென்றவர்கள், இடையில் எழுந்து வெளியே செல்ல வேண்டும் என அவள் கேட்கக் கூடாதென்பதற்காக, உறையவைக்கும் குளிரில் வெளி மாளிகையில் இரவு முழுக்க அவளைப் பூட்டி வைத்திருக்கிறார்கள். அவள் முகம் முழுக்க மலத்தினைப் பூசி அதை உண்ண வைத்திருக்கிறார்கள். இதனை அவளது அன்னைதான் செய்திருக்கிறாள். தனக்கு என்ன நிகழ்கிறது என்பதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாத ஒரு சிறிய உயிர் இருளும் குளிரும் நிறைந்த ஒரு இழிவான இடத்திலிருந்து தனது சிறிய கைகளால் காயம்பட்ட மார்பில் அடித்துக்கொண்டு அழுதவாறு தன் வேதனை மிக்க மென்மையான குரலால் ’அன்புமிகு இறைவனி’டம் அடைக்கலம் வேண்டுவதை உன்னால் புரிந்துகொள்ள முடிகிறதா?”9
இத்தனை தீவிரமான தீங்கானது வெறும் ’நன்மை இன்மை’தான் என்னும் விளக்கம் தஸ்தாயேவ்ஸ்கியைத் திருப்திப்படுத்தியிருக்கும் என நம்புவது கடினமானது. தீமை என்கிற ஒன்று இல்லை என்கிற கருத்தானது, அதீத சக்தியுடைய ஒரு இருப்பாக தீமையைக் உருவகிப்பதற்கு அப்படியே நேர் எதிரானதென நாம் கருதத் தேவையில்லை. உருவமற்ற தீமையும்கூட அதிக பாதிப்பு ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஒரு கொலையைக் கண்ட சாட்சியின் செயலின்மையாகக்கூட அது இருக்கலாம் – எதுவும் செய்யாத ஒரு மனிதன். என்றாலும், தீமை குறித்த இந்த விளக்கம் முழுமையானதாக இல்லை. தஸ்தாயேவ்ஸ்கி குறிப்பிடும் தீமையானது உருவமற்றது அல்ல, அது அதீதமாய் வெளிப்பட்டு நிரம்பியிருப்பது. இந்தக் குறிப்பிட்ட கொடூரத்தில் நன்மை என்பது கொஞ்சமும் இல்லை என்பது நிஜம்தான். ஆனாலும் தீமை என்பது வெறும் துளை அல்லது வெற்றிடம்தான் என்பதாகவும் அவர் சொல்லவில்லை. தீமைக்கு இதில் அவர் வடிவம் தருகிறார், இந்தக் கதாபாத்திரங்கள் மூலமாக அதற்கு முகமும் தருகிறார். உருவமற்றது எனத் தீமையை அழைப்பது இவ்வுலகில் நிகழும் தீமை- அது மனிதர்களில் நிகழ்த்தும் தாக்கம் குறித்த முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுகிறது. அது ஒருவகையில் அவமதிப்பாகவும் ஆகிவிடுகிறது.
ஆச்சாரக் கிறித்துவவாதத்தின் முதல் பகுதியானது வீழ்ச்சியடைந்த தேவதைகளை உலகின் குழப்பங்களுக்குக் காரணமாகச் சுட்ட முயலுகையில், அதன் இரண்டாவது பகுதி அதில் இருக்கக்கூடிய மனிதனின் பங்கு பற்றி ஆராய்கிறது- ஏனென்றால் தேவதைகள் மட்டுமல்ல, மனிதர்களும்கூட சொர்க்கத்திலிருந்து வீழ்ந்தவர்கள்தான். இந்த இடத்தில்தான் மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் ’சுயமுடிவு’ என்கிற சிறப்புரிமை குறித்து நாம் ஆராய்தல் வேண்டும்.
“மனிதன் இந்த உலகத்திற்கு வரும்போது அது ஏற்கனவே வீழ்ச்சியடைந்த தேவதைகளால் கறைபட்டிருந்ததுதான் என்றபோதிலும், மனிதனைப் பாவம் இழைக்கச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்தவில்லை. ஏவாளுக்கு சர்ப்பம் ஆசை காட்டியதுதான், எனினும் அவள் அதை தாராளமாகப் புறக்கணித்திருக்கலாம். ஏவாள், ஆதாமுடைய ஆதிப்பாவமானது அவர்கள் மனமறிந்து மேற்கொண்ட கீழ்ப்படியாமையினால் நிகழ்ந்தது. கடவுளின் அன்பினை வேண்டுமென்றே நிராகரித்த அவர்கள், சுய விருப்பத்தோடு கடவுளிடமிருந்து விலகி தன்னை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள்.”10
கடவுளால் நல்கப்பட்டிருந்த சுயமுடிவு என்னும் ஆசீர்வாதத்தினை சுயமோகம் கொண்ட ஒற்றைச் செயல்பாட்டினால் அவர்கள் தவறாகப் பயன்படுத்திவிட்டார்கள். இந்த ஆதிப்பாவத்தினால் மனித குலம் மொத்தமுமே தண்டிக்கப்பட்டுவிட்டது.
தெய்வத்திற்கும் சக மனிதர்களுக்கும் பாவம் இழைப்பதன் வாயிலாக தனது சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தும் மக்கள் தெய்வத்திடமிருந்து தொடர்ந்து விலகி வீழ்ச்சியடைந்து இடைவெளியை அதிகப்படுத்தி வருகிறார்கள். வேறு பல கோட்பாடுகளைப் போலவே, ஆச்சாரப் பாரம்பரியமானது ‘சுயமுடிவு’ என்கிற கருதுகோளை முக்கியமானதாகக் கருதுகிறது. ஏனெனில் சுயமுடிவின் வாயிலாகவே மனிதன் கடவுளின் அன்பிற்குத் தகுதியானவனாகத் தன்னை ஆக்கிக்கொள்ள முடியும், அவன் செய்கிற நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் தார்மீகப் பொறுப்பேற்க முடியும். மனிதன் கடவுளையும் அவரது அன்பையும் சுயவிருப்பத்தோடும் சொந்த புத்தியோடும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவனே முடிவுசெய்தால் மட்டுமே இது நிகழ முடியும்.
உச்சபட்ச உருமாறுதல் அல்லது தெய்வமாதல் குறித்த ரஷ்ய ஆச்சாரப் பார்வையில் ’சுயமுடிவு’ என்னும் கருதுகோள் மைய இடம் வகிக்கிறது. தெய்வத்தினைத் தொடர்ந்து விழிப்புடன் தியானிப்பதன் மூலம் மனிதனும் தெய்வமாகலாம் என்னும் ’முயன்று மோட்சமடைதல்’ கருத்தியலை ரஷ்ய ஆச்சாரப் பாரம்பரியம் வலியுறுத்திவந்தது. தெய்வம் புவியில் மனித அவதாரமெடுக்க முடிகிற போது மனிதனும் இங்கேயே11 தெய்வமாக முடியும். முதல் எட்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்த கிறித்துவ எழுத்துலகப் பிதாமகர்கள் நமக்குச் சொல்லுகிற பாடங்களில் “உருவம்”, “சாயல்” பற்றிய கோட்பாடுகளுக்குத் தொடர்பு இருக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வத்தின் சாரம் இருக்கிறது எனவும் சுயமுடிவின் பேரில் அதைப் பூரணப்படுத்த முடியும் எனவும் அது கருதுகிறது. ஆன்மீக வளர்ச்சிக்கு கடவுளின் உருவ அமைப்பானது அவசியம் என அது கருதுகிறது. இந்த உருவமானது எல்லா மனிதருக்குள்ளும் பொதிந்திருக்கக்கூடியது. ”அவர்களது வாழ்வு எத்தனை கறைபடிந்ததாயினும் அவர்களுக்குள்ளிருக்கும் தெய்வத்தின் சாயலானது இருளடைந்தும் தூசிபடிந்தும் போகலாமே தவிர அது முழுமையாக அழிந்துவிடுவதில்லை.”12 ’உருவம்’ என்பது கடவுளில் காணப்படும் மனித வாழ்வு பற்றிச் சுட்டுகையில், அது குறித்து உணர்வதைப் பற்றி ‘சாயல்’ குறிப்பிடுகிறது. கடவுளின் ‘சாயலை’ மனிதன் அடையும் போது அவன் கடவுளுடன் ஒன்றாகக் கலந்துவிடுகிறான்.13
தர்க்கரீதியாகப் பார்க்கையில், இக்கருத்தியலானது, மனிதன் கடவுளின் சாயலுடன் பிறக்கவில்லை எனவும் ஆனால் தனது ஆன்மாவை கடவுளின் ஆன்மாவைப் போல தூயதாக்கிக் கொள்ள அழைக்கப்படுகிறவன் எனவும் புரிந்துகொள்ள முடியும். இப்படிப்பட்ட அழைப்பிற்கு இயேசு கிறிஸ்துதான் சிறந்த எடுத்துக்காட்டு. கிறிஸ்துவிற்குள் மனித- தெய்வ குணாதிசயங்கள் தனித்தனியாக இருந்தபோதிலும், அவை இரண்டும் மிகச்சரியாக ஒன்றிணைய முடிந்தது. இயேசு கிறிஸ்துவைத் தவிர்த்தால், வேறெந்த மனிதருள்ளும் இருக்கும் தெய்வாம்சம் ஒரு போதும் முழுமையாக வெளிப்படுவதில்லை என்றாலும் அவரைப் போன்ற பூரணத்துவத்தை நோக்கித்தான் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டியிருக்கிறது.14
ஆச்சாரக் கிறித்துவத்தில் இந்த உருமாற்றமானது மனிதனுக்கும் தெய்வத்திற்கும் உள்ள தொடர்பினைப் பற்றி மட்டும் குறிப்பிடவில்லை. மனிதன் சகமனிதனுடன் கொள்ளும் தொடர்பைப் பற்றியும் குறிப்பிடுகிறது.
”சக மனிதரின் கண்ணால் உலகைக் காண்பதன்”15 மூலமும் பிறரது மகிழ்ச்சியில் தானும் மகிழ்வுற்று பிறரது துயரில் தானும் துயருற்று வாழ்வதன் மூலமும் அன்பெனும் வழியில் பிற மனிதர்களுடன் மனிதர்கள் இணைந்திருக்குமாறு அழைக்கப்படுகிறார்கள். பிரக்ஞைப்பூர்வமாக பிறரிடம் செலுத்தும் அன்பாலும் கருணையாலுமே மனிதன் தெய்வத்தின் சாயலை அடைய முடிகிறது. இது சுலபமான காரியம் அல்ல – சகமனிதனை நேசிப்பதன் மூலம் அவனது துயரை தனது துயராக ஆக்கிக்கொள்கிறான். கடவுளுடன் இணைய விரும்பினால் ஒவ்வொருவரும் அன்பு செய்தலும் அதன் மூலம் துயருறுதலும் வேண்டும்.
ஒரே ஒரு மனிதன் இழைத்த ஆதித் தவறின் பொருட்டு எல்லா மனிதர்களும் தண்டிக்கப்படுவதில் இருப்பதாகத் தோன்றும் நியாயமின்மையை இக்கருத்தியல் ஈடுசெய்கிறது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருத்தலே இயல்பாதலால், ஒரே ஒரு மனிதனின் அத்துமீறலுக்காக மனித இனமே தண்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் அதற்கான எதிர்வினை இருக்கிறது, மனிதன் என்பவன் தனி அல்ல.16 ஒரு மனிதன் துயருறும்போது எல்லா மனிதர்களும் துயருற்று அவனது துயரத்தைக் குறைக்க வேண்டும். இன்னொரு மனிதனின் பாவத்திற்கு ஒரு மனிதனைக் குறிப்பிட்டு குற்றப்படுத்த முடியாதெனினும், ஏதோவொரு வகையில் ”அவனுக்கும் அதில் பங்கிருக்கிறது”.17 உலகளாவிய தண்டனை உலகளாவிய அன்பால் எதிர்கொள்ளப்படுகிறது.
தஸ்தாயேவ்ஸ்கி வாழ்ந்த ரஷ்யாவில், உருவம்-சாயல் கோட்பாடு நாடு தழுவிய உற்சாகத்தைத் தோற்றுவித்தது. நடுத்தர- உழைக்கும் வர்க்கத்தினரின் தினசரிகளில் ரஷ்ய ஆச்சாரக் கிறித்துவ தேவாலயத்தின் தாக்கம் பெருமளவில் இருந்தது. அவர்களது வாழ்வு அதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாதது போல் இருந்தது. இந்தப் பாதிப்பிலிருந்துதான் வெகுஜன கருத்தியல்களும் முன்மாதிரிகளும் உருவாகின. அவர்கள் தங்களை அளவிட முடியாத பக்தி நிறைந்தவர்களென அடையாளப்படுத்திக்கொண்டனர். ஒட்டுமொத்த மனித இனத்திற்கே இருந்த தெய்வீகத் தன்மையைத் தாண்டி ரஷ்யர்களுக்கென அதில் தனிப்பட்ட சிறப்பும் இருந்ததாகக் கருதினர். இத்தகைய தனி மனிதர்களாலேயே புனித ரஷ்யா எனும் கருத்து உருக்கொண்டது.
”உண்மையையும் துயரத்தையும் பணிவுடன் பொறுத்துக்கொள்ளும் எளிய மனிதர்களிடமிருந்தே நீதி நேர்மை போன்ற கருத்துகள் உருவாகி வருகின்றன. ‘புனித ரஷ்யா’ என்னும் கோட்பாடு இன்னுமேகூட தேவாலய தேசியவாதத்தைக் குறிப்பிடுவதாக இருக்கிறது. ரஷ்யாவிற்கு மட்டுமேயான சிறப்பு அழைப்பினை உணர்த்தும் பரந்த பொருளில் அது பயன்படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த நாடுமே தெய்வத்திற்குக் கீழ்ப்படிவதைச் சுட்டுகிறது.”18
புனித ரஷ்யா என்னும் தேசியப் பார்வை “புவியை அப்படியே ஒப்புக்கொள்ளும் ரஷ்ய மதச் சித்தாந்தத்தோடு தெய்வீக உண்மைக்கான தேடலை இணைத்துப் பார்க்கிறது. கீழ்ப்படிதலுடன் கூடிய சுய தியாகத்தோடு இது பொருத்திப் பார்க்கப்பட்டது. உண்மையைக் கண்டடையும் தேடலின் பொருட்டு மனிதன் விருப்புடன் ஏற்றுக்கொள்கிற சுமையாக, ஒரு நற்காரியமாக துயரம் பார்க்கப்பட்டது. ’துயருறும்போது நீ தனியாக இருப்பதில்லை, இயேசு உன்னுடன் இருக்கிறார். எனவே துயருறும்போது நீ இயேசுவிற்கு நெருக்கமாகிறாய்’19 என்று பொதுவில் நம்பப்பட்டது. அது ரஷ்ய ஆச்சார தேவாலயத்தால் ஊக்குவிக்கப்பட்டது.
துயரம் குறித்த இந்தப் பொது நம்பிக்கையானது தேவாலயத்தின் கொள்கையின் ஒரு பகுதியாகவும் இருந்தது. ரஷ்ய ஆச்சாரத்திற்கென்று தனித்துவமான புனிதர் வகைமை ஒன்று உள்ளது- ’துயரத்தை அனுபவிப்பவர்’.
அவர்களது நம்பிக்கையின் பொருட்டு அவர்கள் கொல்லப்படவில்லை. மாறாக இயேசுவைப் போலவே அவர்கள் தங்களது மரணத்தை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டனர். இவ்வகை ரஷ்யப் புனிதர்களில் முதலாவதாய் வருவது இரண்டு சகோதரர்கள் – ட்யூக் போரிஸ், க்லெப். இவர்கள் தங்கள் சகோதரன் ஸ்வ்யாடோவால்க்கின் கையால் மரணத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்களால் மரணத்தைத் தவிர்த்திருக்க முடியும், ஆனாலும் இயேசு கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்டு அவர்கள் வன்முறையை எதிர்க்காமல் இருக்க முடிவுசெய்திருந்தனர்.20
தஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களில் துயரம் அதிகமாகக் காணப்பட்டதற்கும் அது குறித்து முக்கியத்துவம் வழங்கப்பட்டதற்குமான காரணத்தை இப்போது ஒருவரால் புரிந்துகொள்ள முடியும். துயரம் என்னும் கருத்தானது சமூகத்திலும் தேவாலயத்திலும் மிக ஆழமாகப் படிந்திருந்தது.
அதிகாரப்பூர்வ ரஷ்ய ஆச்சார தேவாலயத்திலிருந்து தன்னை துண்டித்துக்கொண்ட ஒரு கிளர்ச்சிக் குழுவின் மீது தஸ்தாயேவ்ஸ்கி ஆர்வம் கொண்டிருந்தார் என்பதற்கான குறிப்புகள் உள்ளன. Steven Cassedy, தனது Dostoevsky’s Religion-ல் இந்த ஆர்வத்தைப் பற்றி விளக்குகிறார்.
இத்தகைய குழுக்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்ந்த ’பிளவினர்’ (ரஸ்கோலினிகள்) அல்லது ’ஆச்சாரவாதிகள்’ அமைப்பினை நோக்கி அவர் திரும்பத் திரும்ப ஈர்க்கப்பட்டிருக்கிறார். பதினேழாம் நூற்றாண்டில் தேவாலயம் மதப் பழக்கவழக்கங்களில் கொண்டுவந்த மாற்றங்களையும் மதப் புத்தகங்களின் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதிகளில் அனுமதிக்கப்பட்ட திருத்தங்களையும் எதிர்க்கும் பொருட்டு இந்தக் குழு தோன்றியது. மதத் தூயவாதிகள் என அவர்கள் அழைக்கப்பட்டனர். ஆனால் துயரத்தை விரும்பி ஏற்றுக்கொள்ளும் அவர்களது கோட்பாடுதான் தஸ்தாயேவ்ஸ்கி மற்றும் வெகுசனங்களின் ஆர்வத்தைத் தூண்டியிருக்க வேண்டும். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் ரஸ்கோலினிகள் கும்பலாகச் சுயபலி செய்துகொண்டதாகவும் அறியப்படுகிறது.21
இந்தக் குறுங்குழுவைப் பற்றி, குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கோல்நிகாவை22 போர்ஃபிரி இரண்டாவது விசாரணை செய்யும் இடத்தில் தஸ்தாயேவ்ஸ்கி எடுத்துரைக்கிறார். நாவலில் ரஸ்கோல்நிகாவ் அடகுபிடிக்கும் ஒரு மூதாட்டியையும் அவளது சகோதரியையும் கொன்றுவிடுகிறான். இவ்வழக்கு போர்ஃபிரியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்த இரண்டு பெண்கள் வசித்த குடியிருப்பில் பணிசெய்த நிகோலே என்கிற சாயம் பூசுபவன் அக்கொலையைத் தான்தான் செய்ததாக தவறாக வாக்குமூலம் அளித்துவிடுகிறான். ஆனால் தண்டனை வரும்போது அதனை அவன் மறுத்துவிடுவான் என்கிறான் ரஸ்கோல்நிகாவ். சாயம் பூசுபவனின் வாக்குமூலத்தை தான் ஏன் சந்தேகிக்கிறேன் என போர்ஃபிரி ரஸ்கோல்நிகாவிற்கு விளக்குகிறான்:
“துயரம் என்னும் வார்த்தை இந்த மனிதர்களில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பற்றி உங்களுக்குத் தெரியுமா ரோடியோன் ரஸ்கோல்நிகாவ் இன்னொருவரின் நலனிற்காகத் துயருறுதல் என்பது அல்ல அது, வெறுமனே, துயருறுவதற்காகவே துயருறுதல். அதுவும் அதிகாரத்தின் கரத்தினால் துயருற முடிந்துவிட்டால் இன்னும் சிறப்பு. நான் சிறையைக் கவனித்து வந்த காலத்தில், ஓர் ஆண்டு முழுவதும் இரவுகளில் அமர்ந்து தொடர்ந்து பைபிள் வாசித்துக்கொண்டிருந்த, ரொம்பவும் பணிவும் மென்மையுமான ஒரு கைதி எந்தக் காரணமுமின்றி ஒரு செங்கல்லை எடுத்து, அவனை எந்த வகையிலும் துன்புறுத்தாத, ஆளுநர் மீது எறிந்துவிட்டான். அந்த அளவிற்கு கிறுக்குப் பிடித்தாற்போல் அவன் அதை வாசித்திருக்கிறான். அவரைக் காயப்படுத்திவிடக்கூடாது என்னும் அச்சத்தில் அவரிடமிருந்து ஒரு கெஜம் தள்ளிச்சென்று அது விழுகும்படியாகத்தான் அதை அவன் எறியவும் செய்தான். ஒரு அலுவலரை ஆயுதம் கொண்டு தாக்குபவனுக்கு என்ன நிகழும் என்பதை நாம் நன்றாக அறிவோம். இப்படியாக அவன் அவனது துயரை விரும்பித் தேர்ந்தெடுத்தான். நிகோலேவும் அதே போன்று செய்திருக்க வேண்டும் என்றுதான் நான் கருதுகிறேன்… என்ன! விவசாயிகளில் அப்படியான கிறுக்கர்கள் இருக்க மாட்டார்கள் என்றா சொல்கிறாய்? நிறைய பேர் இருக்கிறார்கள்.” 23
இந்த விளக்கமானது அவல நகைச்சுவை கொண்டது. துயரம் பற்றி தஸ்தாயேவ்ஸ்கி முன்வைக்கும் பிற எடுத்துக்காட்டுகளிலிருந்து இது கூர்மையாக மாறுபடுகிறது. இப்படி பீடத்தில் அமர்ந்திருக்கும் தொனியில், துயரத்தை அவர் வேறு எங்கேயுமே விளக்கவில்லை.
நாவலின் துவக்கப்பகுதியில் மர்மலதேவின் வாழ்க்கைக் குறிப்பு வருகிற இடத்திலும்கூட துயருறுவதன் பொருட்டு துயருறும் கோட்பாட்டை அவர் பரிகசிக்கிறார். தான் ஆளாகியிருக்கும் அவல நிலை மட்டுமே கடவுளின் அன்பிற்கும் கருணைக்கும் தன்னை தகுதியாக்கிவிடும் என நம்புகிற நலிந்த குடிகாரனான அவன் அந்நிலையைத் தானே உருவாக்கிப் பேணுகிறான். தனது துயரம் குறித்தும் தான் மேற்கொள்ளும் சுயவதைகள் குறித்தும் ரஸ்கோல்நிகாவிடம் பெருமையடித்துக் கொள்ளும் அவன், அவனுடைய இந்தப் பரிதாப நிலையும் அதை அவன் விரும்பித் தொடர்வதும் மட்டுமே கடவுளின் அன்பைப் பெற போதுமானது என அறிவிக்கிறான். ஆனால் பாதுகாப்புணர்வையும் மோதல் குணத்தையும் பண்பாகக் கொண்ட அவன் தன் துயர நிலையைக் குறித்து நீதிக்கோட்பாட்டை வரித்துக்கொள்வதில் பணிவு என்பது எங்கேயும் காணப்படவில்லை. தன் சகாக்களால் பரிகசிக்கப்படும் அவன் இறுதியில் வீதியில் நிகழும் ஒரு குடிவிபத்தில் இறந்து போகிறான்.
நியாயமற்ற தன்னிச்சையான துயரத்தையும் இதயத்தைத் தூய்மைப்படுத்தும் பொருட்டோ இன்னொரு மனிதனுக்கு விடுதலை அளிக்கும் பொருட்டோ அனுபவிக்கும் துயரத்தையும் (ரஸ்கோல்நிகாவிற்காக சோன்யா அடைகிற துயரம்) எதிரெதிரே நிறுத்தி அவர் விளக்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஏதோ ஒரு காரணத்திற்காகவோ இன்னொருவரின் பொருட்டோ துயரமடைபவர்கள் மதிப்பிற்குரிய முக்கியப் பாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். எவ்வித நோக்கமுமற்று தன்னைத் துயருறுத்திக் கொள்பவர்கள் முக்கியத்துவமற்ற கோமாளிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். பூமியில் காணப்படும் துயரத்தின் மேல் அவருக்கிருக்கும் வெறுப்பு சுயவதையின் சாயல் கொண்டிருந்த அற்பமான துயரங்களைப் புறந்தள்ளுவதன் மூலம் வெளிப்பட்டது. ஓர் உயர்ந்த நோக்கத்திற்காக அனுபவிக்கப்படும் துயரம் மட்டுமே நன்மைக்கு உரம் சேர்க்கும்.
இப்போது ’உருவம்-சாயல்’ கோட்பாட்டிற்குத் திரும்பும் ஒருவர் கேட்கக்கூடும். இந்த உருமாற்றத்தின் வழியாக ஒரு மனிதன் எவ்வாறு துயரத்தைக் கடக்க முடியும்? ரஷ்ய ஆன்மீகத் தத்துவவாதியும் கவிஞருமான வ்ளாடிமிர் எஸ் சோலோவெவ்24 மனிதனால் எந்த அளவிற்கு இந்த உருமாற்றத்தை அடைய முடியும் என ஆராய்ந்தார். அவர் சார்ந்திருந்த முற்போக்குத் தத்துவமானது அவதாரங்கள் மூலம் மானுட இரட்சிப்பு சாத்தியமாகும் என்கிற நம்பிக்கையை வலியுறுத்தியது. “Lectures on Godmanhood” என்கிற அவரது உரையானது அடிப்படையில் மனிதன் தெய்வமாவதற்கும் தெய்வம் மனிதனாவதற்கும் உள்ள சாத்தியக்கூறுகளை ஆய்வதாக உள்ளது. ரஷ்ய ஆன்மீக மறுமலர்ச்சிக்கு25 வித்திட்டவர் எனவும் அவர் அறியப்படுகிறார்..
மனிதனையும் தெய்வத்தையும் ஒன்றிணைப்பதே மதத்தின் முக்கியக் கடமையாக இருக்க வேண்டும் என்னும் கருத்தை அவர் முன்வைத்தார். இயேசு கிறிஸ்துவின் அந்த அவதாரம் பூரணமானதாக இருந்தது எனினும் அது கிறிஸ்துவிற்கு மட்டுமேயான சிறப்புப் பண்பு எனக் கருத அவசியமில்லை.
”மீட்சி மற்றும் இரட்சிப்பு அடைவதற்கான, எல்லா மனிதர்களுக்குமான ஒரு வழியாக, ’அவதாரம்’ கருதப்பட்டது. அது ஒன்றும் தனிப்பட்ட நிகழ்வு அல்ல.“ கடவுளின் ஆசி மற்றும், மனிதரின் ஆர்வமும் புத்தி சாதுரியமும் நிறைந்த விருப்பம் சரியாக இணைகையில் அது இந்த உருமாற்றத்திற்கு வழிவகுக்கும்.
இந்த உருமாற்றத்தை அடைந்து, பூவுலகில் தெய்வீக அவதாரம்26 என்னும் பிரபஞ்ச வரலாறை அடைய வேண்டுமெனில் மனிதன் தன் விருப்போடு கடவுளின் இச்சைக்கு உடன்படுதல் வேண்டும். உண்மையான உருமாற்றத்தின் பலன்களை அடைவதற்கும் அந்தப் பலன்களுக்குத் தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளவும் மனிதனுக்குச் சுதந்திரம் அவசியமாகும். சுதந்திரமானது மனிதனுக்குள் காட்டுமிராண்டித்தனத்தை அனுமதித்து சக மனிதனைத் துன்புறுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறதுதான். ஆனால் சோலோவெவ்-ஐப் பொறுத்தவரை “அன்பும் உண்மையும் தீமையையும் பிழையையும்விட வலிமையானவை.”27
கிறிஸ்துவின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் குறித்து ரஷ்ய ஆச்சாரத்தில் நம்பப்பட்ட கருத்தானது மேலை இலத்தீன் பாரம்பரியத்தில் அதுகுறித்து நம்பப்பட்டதில் இருந்து சற்றே வேறுபட்டிருந்தது. மனிதன் மீதான தன் உரிமையை மீட்டெடுப்பதே இயேசு கிறிஸ்துவில் கடவுள் அவதரித்ததன் காரணமாகும். கிறிஸ்துவில் கடவுளும் மனிதனும் ஒருங்கிணைந்திருந்தனர். இரத்தமும் சதையுமாக கடவுள் மனிதர்களிடையே தோன்றினார். மனித வடிவில் அவர் தனது பாடங்களை, வேறெவரும் முயலாதவாறும் வேறெவராலும் முடியாதவாறும், கற்பிக்க முடிந்தது. அவரது செயல்கள் மற்றும் போதனை பற்றிய கதைகள் மூலம் மனிதர்களுக்குத் தாங்கள் அடைய முயல வேண்டிய ஒரு இலட்சிய பிம்பம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த மனிதக் கடவுள் இந்த உலகிற்குத் தந்த மிகப்பெரிய பரிசு என்னவென்றால் அவரது தியாகமும் உயிர்த்தெழலும் அதை அவர் விரும்பிச் செய்ததும்தான். கிறிஸ்து மனிதன், தெய்வம் என்ற இரண்டு தன்மைகளைக் கொண்டிருந்ததால் அவரிடம் அந்த இரண்டு பண்புகளுமே இருந்தன என ஆச்சார தேவாலயம் நம்புகிறது. இது அந்த இரண்டு பண்புகளும் அவரில் ஒருங்கிணைந்திருந்ததைக் குறைத்து மதிப்பிடவில்லை. மாறாக அவரது செய்கைகளை இன்னும் உயரத்தில் வைக்கிறது. தனக்கு வழங்கப்பட்டிருந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி, மனித குலத்தின் மீட்சிக்காக அவர் தன்னையே தியாகம் செய்துகொண்டார். அதன் மூலம் தன்னில் இருந்த மனிதத் தன்மையை தெய்வத்தன்மையுடன் பிணைத்துக்கொண்டார். கல்லிஸ்டோஸ் (Kallistos) இதுகுறித்து இவ்வாறு விளக்குகிறார்:
“அன்பின் பொருட்டே அவர் இவ்வுலகைப் படைத்தார். அன்பின் பொருட்டே அவர் இவ்வுலகில் மனிதனாய் அவதரித்தார். அன்பின் காரணமாகவே சிதைந்திருந்த மனித இனத்தை அவர் தன்னுள் ஏற்றுக்கொண்டு தன்னுடையதாகவே ஆக்கிக்கொண்டார். அன்பிற்காகவே அவர் மனிதர்களின் துயரைத் தன் துயராகக் கண்டார். அன்பிற்காகவே அவர் கெத்ஸமேன்- ல் தன்னிச்சையுடன் தன்னைத் தியாகம் செய்தார். “எனது மந்தைக்காக நான் எனது வாழ்வை அர்ப்பணிக்கிறேன்… யாரும் அதை என்னிடமிருந்து எடுக்கவில்லை. நானே அதைத் தியாகம் செய்கிறேன்” (ஜான் 10:15,18). புறத்தினரின் கட்டாயப்படுத்தல்கள் அல்ல, சுய விருப்பமே அவரை மரணிக்கச் செய்தது. கிறிஸ்து சிலுவைக்குத் தன்னை அர்ப்பணித்ததற்கு வெற்றியாக, ஒரு ரஷ்யப் போதகரின் வார்தைகளைக் கூறலாம், ”துயரத்தினால் எல்லாவற்றையும் அழிக்க முடிந்தது, ஆனால் அன்பு மட்டும் அதையும் தாண்டி நிலைத்து நின்றது” 28
மனிதன் மன்னிக்கப்படுவதை விரும்புதல் வேண்டும். அவன் செய்த பாவத்தை எண்ணி ஆன்ம ரீதியிலும் உளவியல் ரீதியாகவும் மனம் வருந்துதல் வேண்டும். ஆனால் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தினால் அவனது சுமை வெகுவாகக் குறைக்கப்பட்டுவிட்டது. இதன் அடிப்படையில் கருத்தியல் ரீதியாகப் பார்த்தால் கிறிஸ்து சிலுவையில் அடைந்த துயரத்தின் அளவிற்கு அதீத துயரத்தை எந்த மனிதனும் அனுபவித்திருக்க மாட்டான். நிலையற்ற மனிதனால் அடைக்க முடியாத ஒரு கடனை என்றும் நிலைத்திருக்கும் அவரால் திரும்பச் செலுத்த முடிந்தது. கீழை மற்றும் மேலை நாகரிகங்கள் இந்த விஷயத்தை அணுகிய விதத்தில் சிறிய மாறுபாடுதான் இருந்தது. எனினும், அந்த மாறுபாட்டை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும். அறிஞர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:
”கீழை நாடுகளில் கிறிஸ்து உயிர்த்தெழுந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்ட போது ரோமன் கத்தோலிக்குகளும் புரோடஸ்டண்டுகளும் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதையும் துயருற்றதையும் முக்கியமானதாய்ப் பார்க்கின்றன. மேற்கத்திய நாடுகளில் பாவம் பற்றிய கருத்தியலுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமானது உலகில் கடவுளின் இருப்பிற்கும் அவர் நம் பாவங்களுக்காகத் துயருற்ற நிலைக்கும் ஏன் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பதை விளக்குகிறது.” 29
ரஷ்ய ஆச்சாரமானது கடவுள் அந்தத் துயரத்தைக் கடக்க முடிந்தது பற்றியும் மனிதன் அடைய முடிந்த அந்த ஆன்மீக உருமாற்றம்30 பற்றியும் அதிக கவனம் செலுத்தியது. கிறிஸ்து அனுபவித்த துயரங்களையோ மனிதர்களின் துயரங்களையோ குறைத்து மதிப்பிடுவதாக இது பொருள் தராது. மனிதர்களின் துயரங்களோடு தன்னைப் பிணைத்துப் பார்த்துக்கொண்டதால்தான் அவரால் அதே சமயத்தில் அவர்களைக் காக்கவும் முடிந்தது. அனைத்து மனிதர்கள் மீதும் அவர் கொண்டிருந்த அன்புதான் அவரது உருமாற்றத்திற்கும் உயிர்த்தெழலுக்கும் வெற்றிக்கும் காரணமாய் அமைந்தது. பிற மனிதர்களின் பொருட்டு அவர் தனது துயரத்தை ஏற்றுக்கொண்டது போலவே மனிதர்களும் சக மனிதர்களுக்காகத் துயருற வேண்டும். கடவுள் தோற்றுவித்த மனிதனுக்காகத் துயருறும் போது நாம் கடவுளுக்காகவே துயருற்றவர்கள் ஆகிறோம். இவ்வாறாகவே அவன் உருமாற்றம் அடைகிறான்.
மேற்கூறிய சுதந்திரம், பாவங்களுக்கு எல்லாரும் பொறுப்பேற்றுக் கொள்ளுதல், உருமாறுதல் போன்ற ஆச்சாரக் கருத்தியல்கள் தஸ்தாயேவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள் மூலம் வெவ்வேறு புனைவுகளில் வெளிப்படுகின்றன. ஏற்கனவே நாம் பார்த்தது போல, கடவுளை அடைவதற்கும் அவர் அன்பிற்குத் தகுதியானவராய் ஆவதற்கும் இறுதியில் துயரத்தை வெற்றிகொள்வதற்கும் மனிதனுக்குச் ‘சுதந்திரம்’ அவசியமாகிறது. இவான் கரமசோவிற்கு இது ஒரு பெரிய சிக்கலாக இருக்கிறது. அப்பாவிகள் மற்றவர்களால் துன்புறுத்தப்படுவதைச் சகிக்க முடியாதவர் இதற்குச் ‘சுதந்திரம்’-என்னும் கோட்பாட்டைக் காரணப்படுத்துகிறார். தன் சகோதரனுடனான பின்வரும் உரையாடலில் துறவி அல்யோஷா இவ்வாறு கேட்கிறார்:
“பதில் சொல்: வாழ்வின் இறுதியில் மகிழ்ச்சியையும் ஓய்வையும் அமைதியையும் தரும் விதமாக மனித வாழ்வை வடிவமைக்கும் பொறுப்பு உனக்கு வழங்கப்பட்டு, அதன் பொருட்டு நீ ஒரு சிறிய குழந்தையை அதன் சிறிய கரங்களால் மார்பில் அடித்துக்கொண்டு பதிலற்று அழும் நிலைக்கு ஆளாக்க வேண்டும் எனக் கூறினால் நீ அப்படிப்பட்ட படைப்பவனாக இருக்க ஒப்புக்கொள்வாயா?”31
பக்தி மிக்க, கிறிஸ்துவின் சாயல் கொண்ட அல்யோஷாகூட தன்னால் அது முடியாது என்றே கூறுகிறான். மனிதர்கள் இழைக்கும் துயரங்கள், வீரர்களின் துப்பாக்கிக்குப் பலியாகும் குழந்தைகள், எஜமானனின் கட்டளைக்கிணங்க குழந்தைகளைக் கிழித்துப் போடும் நாய்கள் பற்றியெல்லாம் அவன் தொடர்ந்து நினைவூட்டிக்கொண்டே செல்கிறான். அவை அனைத்தும் மனிதனுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தினால் நிகழ்ந்த நிஜச் சம்பவங்களாக இருக்கின்றன. மனிதன் தன்னை உருமாற்றிக்கொள்வதற்கும், சுற்றத்தினரையும் தன்னையும் புரிந்துகொள்வதன் வாயிலாக கடவுள்தன்மையை அதிகரித்துக்கொள்வதற்கும் அவனுக்குச் சுதந்திரம் அவசியமாகிறது. தன் முடிவுகளை தானே சுயமாய் எடுக்க முடிவதுதான் மனிதனை சந்தோஷப்படுத்தும் முக்கியக் காரணி என்கிறான். ஆனால் அதுவே அவனை சகிக்க முடியாத கொடூரங்களை பிறர் மீது ஏவச்செய்யும் காரணியாகவும் ஆகிவிடுகிறது. ஆனால் இவானைப் பொறுத்தவரை இதன் நல்விளைவுகள் தீய விளைவுகளை ஒருபோதும் சமன் செய்ய முடியாது. சில மனிதர்களின் மகிழ்ச்சி ஒரு குற்றமற்ற சிறுமியின் பதிலற்ற கண்ணீருக்குத் தகுதியானதல்ல. கடவுளின் படைப்பில் குறை இருப்பதாகச் சொல்லி அதை மறுதலிக்கிறான் இவான்.
”இவானால் நன்மையின் பலன்களை அங்கீகரிக்க முடியவில்லை, தீமையின் சிக்கல்களை மட்டுமே காண முடிந்தது” என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மனிதர்கள் உண்டாக்கும் வலிகளையும் துயரங்களையும் பற்றிய சிந்தையால் மட்டுமே அவன் மனம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆனால் மனசாட்சியின் மர்மங்கள் பற்றியோ அவர்களால் சாத்தியப்படும் சுயநலமின்மையையோ அவன் ஒப்புக்கொள்வதில்லை. மனித மனம் வெறும் காட்டுமிராண்டித்தனங்களால் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டிருக்கவில்லை. நன்மையையோ தீமையையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடிய அடித்தளம் அவனுக்குக் கையளிக்கப்பட்டிருக்கிறது. பல சூழ்நிலைகளில் இவான் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது – மனிதன் தீமையின் வழியையே தேர்ந்தெடுக்கிறான். தனக்கு வழங்கப்பட்டிருக்கிற சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து அவன் தன்னையும் பிறரையும் துன்புறுத்திக்கொள்கிறான். அதே நேரத்தில் வேறு சில இடங்களில் மனிதன் சக மனிதனை கருணையுடன் அணுகுகிறான். பிறரது துயரத்தைப் பகிர்ந்துகொண்டு அப்போது அவன் கடவுளின் ’சாயலை’ அடைந்துவிடுகிறான்.
முயன்று செயல்படுவதன் வாயிலாக மட்டுமே அவன் கடவுளின் சாயலை அடைய முடியும். வழிபாட்டினைச் செயலாக்குவதன் மூலமாக திரித்துவத்தை (பிதா, சுதன், பரிசுத்த ஆவி) நடைமுறைப்படுத்தும்படி ஆச்சாரக் கிறித்துவம் வலியுறுத்துகிறது. ஆச்சார தேவாலயத்தில், நற்கருணை மந்திரத்தை ஜெபிப்பதற்கு முன்பு நாம் பின்வரும் வார்த்தைகளைச் சொல்கிறோம்: “பிரிக்கவியலாததும் ஒற்றைச்சாரம் கொண்டதுமான திரித்துவத்திடம் – பிதா சுதன் பரிசுத்த ஆவியிடம் – நம்மை ஒப்படைக்கும் பொருட்டு நாம் ஒருவரை ஒருவர் நேசிப்போமாக”. இதில் ‘பொருட்டு’ என்னும் வார்த்தையை நாம் கவனிக்க வேண்டும். திரித்துவத்தின் சாயலை அடைந்து ஒருவரை ஒருவர் நேசிக்க முடிகிறவர்களால் மட்டுமே மும்மையும் ஒருமையாயிருக்கிற தெய்வத்திடம் தன்னை நேர்மையாக ஒப்புவிக்க முடியும். தன் சுற்றத்தாரின் இரட்சிப்பிற்காக உழைக்காத ஒருவனால் தான் இரட்சிப்படைய முடியும் என என்னால் நம்பவே முடியாது. திரித்துவத்தின் உண்மையான நடைமுறை அர்த்தம் அதுதான். 32
இந்த மனோபாவம் கரமசோவ் சகோதரர்களில் வரும் ஜோஸ்ஸிமாவில் காணப்படுகிறது. தன் நம்பிக்கையை ஒருவன் எங்கனம் ஒருமுகப்படுத்த வேண்டும் என்பது பற்றி கீழ்வருமாறு அவர் விளக்குகிறார்:
“அன்பைச் செயல்படுத்தும் அனுபவத்தின் வாயிலாக. உன் சுற்றத்தாரைச் சோர்வின்றி நேசித்துச் செயல்பட முயற்சி செய். எவ்வளவு அதிகமாக உன்னால் அன்பு செலுத்த முடிகிறதோ அவ்வளவு அதிகமாக உன்னால் இறைவனின் இருப்பை நம்பவும் தன் ஆன்மா அழிவற்றதென நம்பவும் முடியும். சுற்றத்தாரை நேசிப்பதில் முழுமையான சுயநலமின்மையை உன்னால் எட்ட முடிந்துவிட்டால், நீ சந்தேகமின்றி நம்பிக்கையை எட்டவும், உன் ஆன்மாவிற்குள் நுழையவும் முடியும். இது பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. உறுதியானது.”33
அல்யோஷா கரமசோவ் பின்வரும் தனது பிரகடனத்தில், இந்த மனப்பாங்கின் உருவகமாகத் திகழ்கிறான். தன் சகோதரன் இவானைப் பூர்த்திசெய்பவனாக அவன் இருக்கிறான். மிஸ்கினை கிறித்துவின் வடிவாகச் சித்தரிக்க தஸ்தாயேவ்ஸ்கி முயன்றிருக்கும் போதிலும் அவரது பிந்தைய நாவலில் வரும் அல்யோஷா கரமசோவ்தான் கிறித்துவின் ஒப்புக்கொள்ளத்தக்க வடிவமாக வெளிப்பட்டிருக்கிறான். துயரம் பற்றிய தனது கருத்துகளை இவான் கரமசோவ் வெறும் வார்த்தைகளாகச் சொல்லிக்கொண்டிருக்கையில் அல்யோஷாதான் தன் நம்பிக்கைகளைச் செயல்படுத்துபவனாக இருக்கிறான். மனிதனின் துயரத்தைத் தணிக்க உதவும் பெருந்தன்மையும் அன்பும் கருணையும் நிறைந்த ஒரு வாழ்வை அவன் வாழ்கிறான். பிறரது பாவங்களை மன்னிப்பவனாகவும் மகிழ்ச்சியைக் கொண்டாடுபவனாகவும் இருக்கிறான். கிட்டத்தட்ட, உளவியல் ரீதியாக யாரேனும் துயருறும் ஒவ்வொரு காட்சியிலும் அல்யோஷா அங்கே உரையாடுகிறான்.
எங்கெல்லாம் குணமடைதலும், தன்னை உணர்ந்து ஒப்புக்கொள்ளுதலும், மன்னிப்பும் நிகழ்கிறதோ அங்கெல்லாம் அல்யோஷாவின் தொண்டு இருக்கிறது. தன் தந்தை, சகோதரன், பிற துயருற்ற ஆன்மாக்களின் பாவ மன்னிப்புகளைக் கேட்டுக்கொள்வது மட்டுமின்றி, அவர்களது நிர்ப்பந்தகளையும் பலவீனங்களையும்கூட புரிந்துகொள்கிறான். 34
நாவலின் துவக்கத்தில் அல்யோஷா தன்னைப் பிணைத்துக்கொண்டிருக்கும் மடாலயத்திலிருந்து வெளியேறுமாறு பின்னாளில் கூறப்படுகிறான். அவனது இடம் உலகத்தாரின் மத்தியில் இருக்கிறது எனத் தந்தை ஜோஸ்ஸிமா அவனை சமாதானப்படுத்துகிறார். தன்னை ஒரு துறவியாக தனிமைப்படுத்திக் கொள்வதைவிட தன் நற்காரியங்களால் அவன் உலகிற்கு பயனுள்ளவனாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார். பொதுக்குற்றம் என்னும் கருத்தியல் ஜோஸ்ஸிமாவின் மூலமாக வெளிப்படுகிறது. எல்லா மனிதர்களுக்காகவும் மனதார பொறுப்பேற்றுக் கொள்வதன் வாயிலாகவே சுயநலமற்ற அன்பை பிரசவிக்க முடியும் என்னும் கருத்தை அவர் முன்வைக்கிறார். “அதன் பின்புதான் நம் இதயமானது எல்லையற்ற உலகளாவிய முழுமையான அன்பை நோக்கி நகர முடியும். அதன் வழியாக நாம் ஒவ்வொருவரும் இந்த ஒட்டுமொத்த உலகையும் அன்பால் வெல்லவும் அதன் பாவங்களை நம் கண்ணீரால் கழுவவும் முடியும்.”35
பதினான்கு வருடங்களுக்கு முன்னதாகவே குற்றமும் தண்டனையும் நாவலின் சோன்யா கதாபாத்திரத்தின் வாயிலாக இந்தத் தன்னலமற்ற அன்பை தஸ்தாயேவ்ஸ்கி காட்சிப்படுத்தியிருக்கிறார். அவளது கதாபாத்திரத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் அவளைக் கதாநாயகி ஆக்கியிருக்கிறது எனச் சொல்லலாம். அவளது மனிதாபமானமும் பக்தியும் எல்லைகளற்றவை. ஆதரவற்ற தன் குடும்பத்தின் பொருட்டு அவள் விலைமாதுவாகும் கீழ்நிலைக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கிறாள். போலவே ரஸ்கோல்நிகாவுடன் அவனது குற்றத்திற்கான அபராதத்தைச் செலுத்துவதற்காக சைபீரியாவிற்கு வர ஒப்புக்கொண்டு அவனையும் காக்கிறாள். பைபிளிலிருந்து லாஸரஸின் கதையை அவனுக்கு வாசிப்பதன் மூலமும் பூமியை முத்தமிட்டு ரஷ்ய அன்னையிடம் மன்னிப்பு கோரச் சொல்வதன் மூலமும் அவள்தான் அவனது மனமாற்றத்திற்குக் காரணமகிறாள். முழுமையான சுயநலமின்மையை விலையாகத் தந்து அவள் செலுத்துகிற கட்டற்ற அன்பானது கிறித்துவின் தியாகத்தை ஒத்திருக்கிறது.
இருந்தும் கிறித்துவைப் போன்று அன்பு செலுத்துவதற்கான சாத்தியம் இவான் கரமசோவைத் திருப்திப்படுத்தவில்லை. நாவலின் இறுதியில் அவன் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறான். எனவே இவான் கரமசோவ் போல துயரத்தைப் புரிந்துகொள்ள முயலுகிறவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதுதான் ஒரே வழி என்றோ அது பித்துநிலைக்கே அவர்களைக் கொண்டுசெல்லும் என்றோ அவ்வழியைப் பின்பற்றாமல் இருப்பதே சிறந்தது என்றோ ஒரு வாசகர் முடிவிற்கு வர முடியும். ஆனால் அவன் அப்படித் தோல்வியடைந்தது உலகம் பற்றிய அவனுடைய கேள்விகளையும் கண்டனங்களையும் குறைமதிப்பினதாக்கிவிடாது. அல்யோஷா தன் செயல்கள் மூலம் ஏற்படுத்தும் விளைவுகளுக்கு இவான் வாதங்களால் ஏற்படுத்தும் விளைவுகள் எந்த விதத்திலும் குறைந்ததாகி விடாது. கோபமும் எதிர்ப்பு குணமும் கொண்ட இவான்தான் அதிக நபர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய கதாபாத்திரமாக இருக்கிறான். அவன் கடவுளை மறுக்கவில்லை, கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகை மறுக்கிறான்.
அவனது தீவிர வேட்கையும் கோபமும் அல்யோஷாவின் அமைதியான துறவு பூண்ட முகத்தினைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. இவான் கொண்டிருக்கும் சந்தேகங்களும் கேள்விகளும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதத்தின் தீவிரத்தினை அல்யோஷாவின் செயல்பாடுகளால் எளிதில் எட்ட முடியவில்லை. அன்பும் கருணையும் கொண்டு ஒரு மனிதன் கடவுள்தன்மையை அடையவும் வலியையும் துயரத்தையும் துடைத்துக்கொள்ளவும் முடியும்தான். என்றாலும் அவை முழுமையான திருப்தியைத் தருவதில்லை. தனது ’கலக’த்தின் இறுதியில், எந்த ஒரு மனிதனாலும் உலகிற்கான மீட்சியைத் தரமுடியாதென இவான் வெளிப்படையாக அறிவிக்கிறான்.
கிறிஸ்துவிடமிருந்து விலகியிருந்த காலத்தில் Mrs. N.D. Fonvizina-விற்குத் தனது மத நம்பிக்கை குறித்து தஸ்தாயேவ்ஸ்கி பின்வருமாறு எழுதுகிறார்.
“எனது நம்பிக்கை மிக எளிமையானது. மீட்பரைவிட அன்பும் ஆழமும் கருணையும் தர்க்கமும் ஆண்மையும் கச்சிதமும் நிறைந்த எதுவுமே இவ்வுலகில் இல்லை. எனக்குள் பொறாமையுடன் நான் சொல்லிக்கொள்கிறேன். இயேசுவைப் போல் ஒருவருமே இல்லை, இனிமேலும் இருக்கப் போவதில்லை. இன்னும்கூடச் சொல்லலாம், கிறிஸ்துவிற்கும் உண்மைக்கும் தொடர்பில்லை என்று எவரேனும் நிரூபிக்க முடிந்தால், உண்மை கிறிஸ்துவை உள்ளடக்காததாக இருந்தால், நான் கி்றிஸ்துவின் பக்கமே நிற்பேன். உண்மையின் பக்கம் அல்ல.” 36
இதே நம்பிக்கையைத்தான் அவர் தீய ஆவிகள் நாவலில் கதாநாயகன் செவோலொடொவிஷ் உடனான ஷாடப்-ன் (கடவுளை தீவிரமாக நம்ப விரும்பும்) உரையாடல் வழியாக வெளிப்படுத்துகிறார். “உண்மையானது, கிறிஸ்துவை உள்ளடக்காதென அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் நான் கிறிஸ்துவுடனே நிற்பேன், உண்மையுடன் அல்ல என என்னிடம் சொன்னது நீதானே?”37
தஸ்தாயேவ்ஸ்கி கிறிஸ்துவை ’ஒப்புமை சொல்ல முடியாத, அன்பை தன் தியாகத்தின் மூலம் வெளிப்படுத்திய தலைசிறந்த நீதிமான்’ என்னும் விதமான ஒரு இலட்சிய மனிதராக உருவகித்தார். ஆனால் இயேசு உண்மைக்கு வெளியேயும் இருக்க முடியும் என்பதற்கான ஒரு சிறிய சாத்தியத்தை விட்டுவைப்பதன் மூலம் அவர் தன்னை ஆச்சாரக் கிறித்துவத்திலிருந்து விலக்கிக் காட்டுகிறார். இப்படிச் சொல்வதே அங்கே மதத் துவேஷம் எனக் கருதப்பட்டிருக்கும்.
கிறிஸ்து உண்மைக்குப் புறம்பானவராக இருக்க முடியும் என்கிற கருத்தை அனுமதிப்பதன் வாயிலாக, தஸ்தாயேவ்ஸ்கி, ’உலகளாவிய நிரந்தர மீட்பு’ அடைய முடியாத ஒன்று என்கிற சாத்தியத்தையும் முன்வைக்கிறார். இவான் கரமசோவ்தனமான தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார். ஒட்டுமொத்த மனித இனமும் ஒன்றாக அனுபவித்து வரும் துயரத்திற்குக் காரணமான ஆதிப்பாவத்திலிருந்து அவர்களுக்கு மீட்சி அளிக்கும் பொருட்டு வேறு எந்த மனிதனும் எக்காலத்திலும் அனுபவித்திட முடியாத மீள இயலாத் துயரினை கிறிஸ்து அனுபவித்தார். என்றாலும் அது வெளிமாளிகையில் இருக்கும் அந்த ஐந்து வயது சிறுமியின் கண்ணீருக்குப் பதிலாகாது.
முன்னதாக தன் கடிதத்தில்கூட தஸ்தாயேவ்ஸ்கி இவ்வாறு ஒப்புக்கொள்கிறார், ”என் வயதிற்கு நான் ஒரு குழந்தை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இந்த நொடி வரையிலும் நம்பிக்கையின்மையாலும் சந்தேகத்தாலும் நிறைந்திருக்கிற குழந்தை. மரணம் வரையிலுமேகூட இது இப்படித்தான் இருக்கும் என்பதும் உறுதி என நினைக்கிறேன். நம்பிக்கை மீதான தாகத்தின் பொருட்டு நான் எதையெல்லாம் இழந்துவிட்டேன், இப்போதும் இழந்துகொண்டிருக்கிறேன்! முரணான வாதங்கள் அதிகமாக அதிகமாக உள்ளிருக்கும் உலையின் கொதிப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ”38 அவன் கடவுளை நம்பவேண்டுமென மிகவும் பரிதவிக்கிறான். என்றாலும் அவனுள் நிச்சயமின்மை இடைவிடாமல் நச்சரித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் முயன்று அடைய வேண்டிய இலட்சிய மாதிரி கிறிஸ்து. கிறிஸ்து உலகை நேசித்தது போல ஒவ்வொரு மனிதனும் உலகை நேசிக்க முயல வேண்டும். ஆனாலும் கிறிஸ்து ஒரு முழுமையான திருப்தியளிக்கும் தீர்வாக இருக்க முடியாது.
அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. இவான் சொல்லுகிறபடி, கடவுளின் குழந்தையாகிய இயேசு உள்ளிட்ட ஒருவராலும் மனித இனம் அடைகிற ஒட்டுமொத்த துயரத்திலிருந்து மீட்சி அளிக்க முடியாது. தூய்மையான அன்பின் அழகிய எடுத்துக்காட்டாக கிறிஸ்து இருந்த போதிலும் ஒட்டுமொத்த மனித இனத்தின் பாவங்களுக்கும் பரிகாரம் செய்வதற்கான உரிமை அவருக்கு வழங்கப்படவில்லை. ஒருவர் இன்னொருவருக்கு இழைத்த துயரத்திற்கோ தான் அனுபவித்த துயரத்திற்கோ அவ்வவரேதான் மன்னிப்பு கோரவோ மன்னிப்பு வழங்கவோ முடியுமே அன்றி வேறெவருக்கும் அதற்கான சக்தி கிடையாது. தன் சகோதரனுடனான உறவில் இவான் இதை வெளிப்படுத்துகிறான்:
”சொர்க்கத்திலும் பூமியிலும் இதுவரை வாழ்ந்தவர்களும் இப்போது வாழ்கிறவர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில், “நீரே எங்கள் இறைவன்! உங்களது வழிமுறைகள் புலப்பட்டன” என உரக்கக் குரலெழுப்பும்போது இந்தப் பிரபஞ்சமே நடுக்கமுறும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆமாம், நிச்சயமாக! அந்த அன்னையும் அவளது மகனை தன் வேட்டை நாயை வைத்துச் சிதைத்தவனும் ஒருவரை ஒருவன் அணைத்துக்கொண்டு, மூவரும் மொத்தமாக “நீயே எங்கள் இறைவன்” எனச் சப்தமெழுப்பும்போது அறிவின் கடவுள் பூமிக்கு வந்து எல்லாவற்றையும் விளக்கியிருப்பார். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதைத்தான் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. நான் பூமியில் என் காலத்தை விரைந்து முடித்துக்கொள்ள பிரயாசைப்படுகிறேன். நீயே பார் அல்யோஷா, நான் ஒருவேளை அந்தத் தினம் வரை உயிருடன் இருந்தாலோ அல்லது அத்தினத்தில் உயிர்த்தெழுந்தாலோ எல்லோரையும் போல, அந்த அன்னை தன் குழந்தையைச் சித்திரவதை செய்தவனை அணைத்துக் கொள்வதைக் கண்டபடி, “நீரே எங்கள் இறைவன்” எனச் சப்தெமெழுப்பக்கூடும். ஆனால் எனக்கு அவர்களோடு சேர்ந்து சப்தமெழுப்ப வேண்டாம். அதற்கு இன்னும் காலமிருந்தாலும், நான் என்னை அதற்கு எதிராக நிறுத்த விரும்புகிறேன். அதன் பொருட்டு நான் இறைவனோடு இணைதல் உள்ளிட்ட எல்லா உயர்நிலை ஒருமைப்பாடுகளையும் துறக்கிறேன். அந்தச் சிறுவனின் ஒரே ஒரு துளி கண்ணீருக்குக்கூட அது பெறுமதியானதில்லை. ஏனென்றால் அவளது கண்ணீர் இன்னும் மீட்பளிக்கப்படவில்லை. அவை தீர்க்கப்பட வேண்டும், இல்லாதபட்சத்தில் அங்கே ஒருங்கிணைவு ஏற்படாது. ஆனால் எப்படி? எப்படி அவற்றைத் திருப்பிச் செலுத்துவது? அது சாத்தியம்தானா? பழிவாங்குதல் மூலம் அதைச் செய்துவிட முடியுமா? அப்படியே அவை பழிவாங்குதல் மூலம் ஈடுசெய்யப்பட்டாலும் அதை நான் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? சித்திரவதை செய்தவர்கள் நரகத்திற்கு அனுப்பப்பட்டாலும் நான் அதை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? இங்கே ஏற்கனவே இவர்கள் அனுபவித்த சித்திரவதையை நரகம் எப்படி சமன்செய்ய முடியும்? நரகம் என்ற ஒன்று இருக்குமானால் இங்கே நல்லிணக்கம் எப்படி உருவாகிறது? நான் மன்னிக்க விரும்புகிறேன், அணைத்துக்கொள்ளவும் விரும்புகிறேன். இதற்கு மேல் எந்தத் துயரமும் எனக்கு வேண்டாம். இறுதியாக, தன் மகனை நாயை விட்டு சிதைத்த கொடுமைக்காரனை அந்த அன்னை அணைப்பதை என்னால் ஏற்க இயலாது. அவள் அவனை மன்னிக்கக் கூடாது. தேவைப்பட்டால், ஒரு அன்னையாக அவளுக்கு நிகழ்ந்த அளவற்ற தீமைக்காக வேண்டுமானால் அவள் அவனை மன்னிக்கலாம். ஆனால் சுக்குநூறாகச் சிதைக்கப்பட்ட அந்தக் குழந்தை அடைந்த துயரத்திற்கான மன்னிப்பை வழங்குவதற்கு அவளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அந்தக் குழந்தையே விரும்பினாலும் அவள் அந்த மன்னிப்பை வழங்கக்கூடாது. அப்படியாயின் அங்கே மன்னிப்பு வழங்கப்படவில்லையாயின் அங்கே எங்கிருந்து ஒருமைப்பாடு வருகிறது? மன்னிப்பதற்கான உரிமை கொண்ட ஜீவன் ஏதேனும் இந்த ஒட்டுமொத்த உலகத்திலும் இருக்கிறதா? நல்லிணக்கம் எனக்குத் தேவையில்லை. மனித இனத்தின் மீது இருக்கும் அன்பினால் சொல்கிறேன், எனக்கு நல்லிணக்கம் வேண்டாம். நல்லிணக்கத்திற்குத் தரவேண்டிய விலை ரொம்பவும் அதிகமாய் இருக்கிறது. ஒப்படைப்பின் பொருட்டு எங்களால் அவ்வளவு விலைதர முடியாது.”39
கிறிஸ்துவின் தியாகத்தின் மூலம் அடைய வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்ட ’உறுதியற்ற நல்லிணக்க’த்திற்கும் ஒடுக்கப்பட்டோரின் நிலை கண்டு ஒரு மனிதன் அடையும் மன உளைச்சலுக்கும் இடையே இருக்கும் பொருந்தாத்தன்மையில் இருக்கிறது இந்த வாதத்தின் வலிமை. ’நல்லிணக்கத்தில்’ இருக்கும் புதிர்த்தன்மை காரணமாக மனிதர்கள் தினசரி அனுபவிக்கிற துயரங்களை அது ஈடுசெய்ய முடியாது. நியாயம் வழங்கப்படும் எனக் கண்ணை மூடிக்கொண்டு நம்பச் சொன்னால் இவானுக்கு அது இயலாத காரியமாய் இருக்கிறது.
உச்சபட்ச ஒட்டுமொத்த மீட்சி அசாத்தியமானதற்கு இரண்டாவது காரணமாக, ஒவ்வொரு தனி மனிதனும் தன் சுயத்தை முழுமையான கடவுள்தன்மையுடையதாக மாற்றுவதில் இருக்கும் சிரமங்களைச் சொல்லலாம். கிறிஸ்துவினால் அடைய முடிந்த மத ஆன்மீக உருமாற்றத்தை எல்லா சாதாரண மனிதர்களும் அடைவது சாத்தியமா என்ன? ரஷ்ய குருமார்களின் வாழ்க்கை வரலாறிலும் இலக்கியத்திலும் உருமாற்ற நடைமுறை பின்வருமாறு முக்கியப்படுத்தப்பட்டுள்ளது:
“முதலில் மனிதனின் இதயமும் மனமும் கடவுளின் மனதோடு ஒத்திசைவதற்கான மாற்றம் நிகழ்கிறது, அதன் பிறகு புத்தியும் அதே வழியைப் பின்தொடர்கிறது. இந்த வரிசையானது கிறிஸ்துவின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது”, “உனது தேவனை நீ முழு இதயத்தோடும் முழு ஆன்மாவோடும் முழு புத்தியுடனும் நேசிப்பாயாக” (மாத்யூ 22:37)40 அத்தோடு, அந்த உருமாற்றமானது துயரத்தின் வாயிலாகவே அடைய முடியவல்லது. மனிதனை தெய்வமாகச் சொல்லும் இந்த அழைப்பானது அத்தனை எளிதானதல்ல. தன்னுள்ளிருக்கும் தெய்வத்தின் சாயலை அதன் உச்சபட்ச எல்லை வரை கொண்டுசெல்வது எல்லா மனிதர்களுக்கும் சாத்தியமா என்ன?
தஸ்தாயேவ்ஸ்கியின் கதாபாத்திரங்களில் எப்போது உருமாற்றம் காணப்பட்டாலும் அது மேற்குறிப்பிட்டபடியான முழுமையான உருமாற்றமாக இருப்பதில்லை. குற்றமும் தண்டனையும் நாவலின் இறுதியில் ரஸ்கோல்நிகாவ் உடனடி உருமாற்றம் அடைந்தது போல காட்டப்பட்டிருந்தாலும் அது கொஞ்சம்கூட நம்பும்படியாகவே இல்லை.
சிறையில் இருக்கும்போது அவன் சோன்யாவின் பைபிளை எடுத்து இரவுகளில் வாசிக்க ஆரம்பிக்கிறான். ஒரு நாளில் சோன்யாவின் முன்னிலையில் அவன் திடீரென முழுமையான மனமாற்றம் அடைகிறான்.
”அது எப்படி நடந்ததென அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் திடுதிப்பென ஏதோவொன்று அவனை ஆக்கிரமித்து சோன்யாவின் காலடியில் கொண்டு எறிந்தது போல் உணர்கிறான். அழுகிற அவன் அவளது முழங்காலைக் கட்டிக்கொள்கிறான். ஆரம்பத்தில் அவள் ரொம்பவும் பயந்து வெளிறிவிடுகிறாள். குதித்து நகர்கிற அவள் அவனை அச்சத்துடன் பார்க்கிறாள். ஆனால் அதே நேரத்தில் அவள் அவனைப் புரிந்துகொண்டதும் எல்லையில்லா மகிழ்வின் ஒளி அவள் கண்களில் மிளிர்கிறது. வேறெதையும்விட அதிகமாக அவன் அவளை நேசிக்கிறான் என்பதை எந்தச் சந்தேகமும் இன்றிப் புரிந்துகொள்கிற அவளுக்கான அக்கணம் இறுதியில் வந்தேவிடுகிறது. அவர்கள் பேச விரும்பினார்கள், ஆனால் முடியவில்லை. கண்களில் கண்ணீர் நிறைந்து நின்றிருந்தனர். இருவரும் மெலிந்தும் வெளிறியும் இருந்தனர். ஆனால் அந்தத் துவண்ட முகங்கள் ஒரு புதிய உதயம் குறித்த நம்பிக்கையில் ஒளி பெற்றிருந்தன, ஒரு புதிய வாழ்க்கைக்கான முழுமையான உயிர்த்தெழல். காதலினால் அவர்கள் புதுப்பிக்கப்பட்டிருந்தனர். ஒருவரின் இதயம் மற்றவரின் இதயத்திற்காக எல்லையற்ற அன்பால் நிறைந்திருந்தது.”41
நாவல் முழுவதும் ரஸ்கோல்நிகாவின் கதாபாத்திரத்தை அத்தனை விரிவாகவும் கூர்மையாகவும் தஸ்தாயேவ்ஸ்கி படைத்திருக்கும் போது இறுதியில் ஒரே ஒரு பத்தியில் நிகழும் இந்தத் திடீர் உருமாற்றம் நம்பச் சிரமமானதாக உள்ளது. அவனது இதயம் உருமாற்றம் அடைந்திருந்த போதும் அவனது புத்தி அவ்வாறு ஆகவில்லை. நாவலின் பிறபகுதிகளில் அவன் வெளிப்படுத்தும் குணாதிசயத்தில்தான் அவன் தொடர்ந்தும் நிலைத்திருக்கிறான் என அதற்குச் சற்றுமுன்புதான் தஸ்தாயேவ்ஸ்கி தெளிவுபடுத்தியிருக்கிறார்.
‘எனது நடவடிக்கை ஏன் அவர்களுக்குக் கொடூரமானதாகப்படுகிறது? அவனையே அவன் கேட்டுக்கொள்கிறான். அது ஒரு பாவம் என்பதாலா? பாவம் என்பதன் பொருள் என்ன? எனது மனசாட்சி நிம்மதியுடன்தான் இருக்கிறது. சட்டப்படி அது குற்றம்தான், சட்டம் மீறப்பட்டு குருதி சிந்தப்பட்டுள்ளது, உண்மைதான். சரி, சட்டத்தின் பொருட்டு என்னைத் தண்டித்துக்கொள்ளுங்கள். அதுபோதும். இதே வழிமுறையைக் கைக்கொண்டால், உரிமை ஏதுமில்லாத போதும் மனித நலனின் பொருட்டு அதிகாரத்தைத் தாமே முயன்று கைப்பற்றியவர்களும்கூட அவர்களது முதல் படியிலேயே தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வெற்றி பெற்றதனால் அவர்கள் செய்தது சரி என ஆனது. ஆனால் நான் அங்ஙனம் ஆகாததால், அந்தச் செயலினைச் செய்ததற்கு எந்தத் தகுதியும் இல்லாதவனானேன்.”42
ரஸ்கோல்நிகாவின் உருமாற்றம் நம்மை அசைப்பதாக இல்லை, ஏனெனில் அது முழுமையற்றதாக இருக்கிறது. இதயம், மூளை, ஆன்மாவின் முழுமையான உருமாற்றமாக அது நிகழவில்லை. அவ்வகையான முழுமையான உருமாற்றம் எல்லா மனிதர்களுக்கும் சாத்தியமில்லை என்பதையே இது நமக்கு உணர்த்துகிறது.
ரஸ்கோல்நிகாவின் இதயத்தில் நிகழ்ந்த மாற்றமானது சோன்யாவின் மீது அவன் கொண்டிருந்த காதலால் தூண்டப்பட்டது. கிறிஸ்துவைப் போல அவள் அவனை வழிநடத்தியிருக்கிறாள். அவனது மனநிலை மாற்றத்தின் துவக்கத்திற்குத் தூண்டுதல் அளித்திருக்கிறாள். சோன்யாவின் மீதான அன்பும் கருணையும் அவன் சிறையில் அனுபவிக்கிற துயரிலிருந்து மீள்வதற்கு உதவியிருக்கிறது. புவியில் இருக்கும் சக மனிதன் மீதான அன்பே புவியில் அனுபவிக்கிற துயரங்களிலிருந்து விடுபட உதவியாய் இருக்கிறது.
கிறிஸ்து உண்மையானவராக இல்லாவிட்டாலுமேகூட தான் அவரை ஆதரிப்பதாகச் சொல்வதன் மூலம் தஸ்தாயேவ்ஸ்கி கிறிஸ்து என்கிற மனிதனைக் கொண்டாடுகிறார். கிறிஸ்துவின் தத்துவத்திலும் செயல்முறையிலும் உள்ள மனித நேயத்தைப் போற்றுகிறார். ஒருவர் அனுபவிக்கிற துயரத்திற்கு முழுமையாக இழப்பீடு நல்க முடியாதெனினும், எல்லாமும் கைவிட்டுப் போய்விடுவதில்லை என உணர்த்துகிறார். சக மனிதனை நேசிப்பதையும் அவர்களைப் போலவே துயருறுவதையும் அவர்களோடு இணைந்து வாழ்வதையும் பரிந்துரைக்கிறார். மேலே சொன்னதைப் போல, சோன்யா ரஸ்கோல்நிகாவை வான் நோக்கி கையேந்தி மன்னிப்பு வேண்டச் சொல்லவில்லை, தான் வாழ்கின்ற பூமியிடம்தான் மன்னிப்பு கோரச் சொல்கிறாள்.
அவன் திடீரென சோனியாவின் வார்த்தைகளை நினைவுகூர்கிறான், “சாலை சந்திப்புகளுக்குச் செல், அங்கிருக்கும் மக்களிடம் தலை வணங்கு, நீ பாவம் இழைத்திருக்கும் பூமியை முத்தமிடு, உலகை நோக்கி சப்தமாகச் சொல், ”நான் ஒரு கொலைகாரன்”. உடனே அவனுக்கு அது வலிப்பு நோயினைத் தோற்றுவிக்கிறது. அவனது ஆன்மாவில் சிறிய ஒரு தீப்பொறியைப் போலத் தோன்றி அவனுள் தீயைப் போலப் பரவுகிறது. அவனுள்ளிருக்கும் எல்லாமும் மென்மையாக, கண்களிலிருந்து கண்ணீர் பெருகத் துவங்குகிறது. உடனடியாக அங்கேயே மண்ணில் வீழ்கிறவன்… சதுக்கத்தின் மத்தியில் மண்டியிடுகிறவன், தரையில் கவிழ்ந்து அந்தக் கறைபடிந்த பூமியை மகிழ்ச்சியும் பேரானந்தமுமாக முத்தமிடுகிறான்.”43
தஸ்தாயேவ்ஸ்கி ஏதேனும் ஒற்றை முடிவை முன்வைக்கவில்லை. நிரந்தர மீட்சி சாத்தியம் என்றும் கூறவில்லை. அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறவில்லை. இரண்டு கோணங்களையுமே அவர் தனது கதாபாத்திரங்கள் மூலம் ஆராய்கிறார். அதில் உலகளாவிய மீட்பிற்கான சாத்தியத்தைச் சந்தேகிக்கும் கதாபாத்திரங்களின் குரல் அதிக சப்தமாய் ஒலிக்கிறது. இறப்பிற்குப் பிறகான இழப்பீடு என்பதற்கான வாய்ப்பு பெரும்பாலும் இல்லை, ஒவ்வொரு மனிதனும் தன்னை நிஜமான தெய்வத்தன்மையை நோக்கி உருமாற்றிக் கொள்வதோ நிகழச் சாத்தியமற்றது. அதற்குப் பதிலாக தஸ்தாயேவ்ஸ்கி இப்புவியில் இப்போது செய்ய முடிகிற விஷயங்களைப் பரிந்துரைக்கிறார். சக மனிதனை நேசித்து அவனை அவனது துயரிலிருந்து விடுவிக்கக் கூறுகிறார். இதன் வழியாக அவர் தேவாலயத்திலிருந்தும் கிறிஸ்து என்னும் தெய்வத்திலிருந்தும் விலகி கிறிஸ்து என்னும் மனிதனின் மீது தன் நம்பிக்கையை வைக்கிறார்.
துயரம் குறித்த சோஷியலிஸ்டுகளின் கருத்தியல் மீதான தஸ்தாயேவ்ஸ்கியின் கண்டனம்
”தஸ்தாயேவ்ஸ்கியின் அனைத்து படைப்புகளிலும் அடிநாதமாக இருக்கும் கருத்து என்னவென்றால், மனிதன் எவ்வளவு முயன்றாகினும் கடவுளின் ராஜ்ஜியமானது பூமியில் ஒருபோதும் சாத்தியப்படாது” 44
கிறிஸ்து என்னும் அழகிய வடிவம் மீது தஸ்தாயேவ்ஸ்கிக்கு இருந்த மாறாத அன்பையும் மீறி, அவர் தனது இளவயதில் மதம் சார்ந்த நிச்சயமின்மையால் மிகுந்த வேதனையை அனுபவித்தார். 1840களில் தீவிரமான நாத்திகக் கருத்துகள் கொண்டிருந்த அரசியல் தத்துவக் குழுக்களில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த ஆண்டுகளை அவரது வாழ்வின் அதீத கொந்தளிப்பான வருடங்கள் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 1840களில் ‘ரஷ்யக் கனவு சோஷியலிஸ்டுகள் (Russian Utopian Socialists) எனத் தங்களை அழைத்துக்கொண்ட ’ஒரு குழுவினர் வாராவாரம் எம்.பி. புடஷ்விச்-பெத்ரஷேவ்ஸ்கியின் இல்லத்தில் கூடி தொடர்புடைய நடப்புகால விஷயங்களை விவாதித்து தடைசெய்யப்பட்ட புத்தகங்களை வாசித்து வந்தனர். இந்தச் சமயத்தில்தான் அவர் லூட்விக் ஃபாயர்பாக், டி.எஃப். ஸ்ட்ரௌஸ், ஃப்ரடரிக் ஹெகல் போன்ற சிந்தனையாளர்களுக்கு அறிமுகமானார். “பெத்ரஷேவ்ஸ்கி சங்கம்” என அழைக்கப்பட்ட இக்குழுவானது ஒரு பொதுவான அரசியல் சமூகத் தீர்வினை ரஷ்யாவிற்கு முன்வைக்கவில்லை. ஆனால் அவர்கள் அனைவருமே ஜார் மன்னரது எதேச்சதிகாரப் போக்கின் மீது கடும் கண்டனமும் மேலை ஐரோப்பிய சங்கங்கள் மீது மரியாதையும் கொண்டிருந்தனர். இறுதியாக தஸ்தாயேவ்ஸ்கி இந்தப் பெத்ரஷேவ்ஸ்கி சங்கத்திலிருந்து பிரிந்தவர்கள் உண்டாக்கிய துரோவ் சங்கம் என்னும் சிறிய அமைப்புடன் இணைந்து அவர்களுக்கு சோஷலிச கட்டுரைகளும் பரப்புரைகளும் எழுதித்தந்தார். பெரிதும் மதிக்கப்பட்ட இலக்கிய விமர்சகரும் சோஷியலிஸ்டும் தீவீர ரஷ்ய இளைஞர்களின் ஆதர்சமுமாய் இருந்த வஸ்ஸாரியன் பெலின்ஸ்கி45 எனப்படுகிறவரும் இக்காலத்தில் தஸ்தாயேவ்ஸ்கியின் சிந்தனைகளில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தினார்.
பெலின்ஸ்கியைப் பற்றி எழுதும்போது, “ஒரு சோஷியலிஸ்டாக அவர் முதலில் கிறித்துவத்தை உடைக்க வேண்டியிருந்தது. உண்மையான புரட்சி நாத்திகத்திலிருந்தே துவங்க வேண்டும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது… கிறிஸ்துவின் போதனைகளை, ‘நவீன அறிவியல்- பொருளாதாரக் கொள்கைகளால் பேரழிவுக்குள்ளான, பொய்மையான, அறியாமை நிறைந்த மனிதாபிமானம் கொண்ட’ நம்பிக்கைகள் எனக்கூறி ஒழிக்க வேண்டியது ஒரு சோஷலிஸ்டாக அவரது கடமையாய் இருந்தது.”46 இந்த நம்பிக்கைகளும் சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளால் துயரம் குறித்து வழங்கப்பட்ட விளக்கங்களும் பின்னாளில் தஸ்தாயேவ்ஸ்கியால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டன. துயரம் குறித்த தனது விளக்கங்கள், அதற்கான தீர்வுகளில் போதாமையுடையவை எனத் தஸ்தாயேவ்ஸ்கியால் கருதப்பட்ட இரண்டாவது கோட்பாடு இதுவாகும். ரஷ்ய ஆச்சாரக் கருத்தியல் போலவே இதனுடனும் இவர் நெருங்கிய பரிச்சயம் கொண்டிருந்தார். இந்த சோஷலிஸ்ட்டுகளிடமிருந்து அவர் எங்ஙனம் விலகினார் என்பதை ஆராயும்போது, அவர் எதையெல்லாம் துயரத்திற்கான காரணங்கள், நியாயங்கள் இல்லையெனக் கருதினார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதன் வழியாக அவர் எவற்றையெல்லாம் துயரத்திற்கான காரணங்களாகக் கருதினார் என்பது குறித்து சற்று தெளிவுபெற முடிகிறது.
பிந்தைய கால தஸ்தாயேவ்ஸ்கி சோஷலிஸ கோட்பாடுகளை கடுமையாக எதிர்த்தாராயினும் இளவயது தஸ்தாயேவ்ஸ்கி அவற்றால் பெரிதும் கவரப்பட்டிருந்தார். அதன் பிந்தைய கால உறுப்பினர்களில் பலரை தீவிர மத எதிர்ப்புப் பார்வைகளோடு தொடர்புபடுத்த முடியும் எனினும் ஆரம்ப காலங்களில் கனவு சோஷலிசம் அங்ஙனம் இருந்திருக்கவில்லை. ஃப்ரான்ஸை பிறப்பிடமாகக் கொண்ட கனவு சோஷலிசவாதிகள் இயேசுவின் போதனைகளில் கவனம் செலுத்தி அதன் மூலம் புதிய சமூக நெறிமுறைகளை ஸ்தாபிக்க விரும்பினர். இயேசுவின் போதனைகளைத் தேவாலயம் தவறாகப் பயன்படுத்தி வருவதாக அவர்கள் கருதினர். தஸ்தாயேவ்ஸ்கி பற்றிய ஆய்வாளர்களில் முதன்மையானவரான ஜோஸஃப் ஃப்ரான்க் கிறிஸ்து பற்றிய அவர்களது ஆரம்பகால கருத்தைப் பின்வருமாறு விவரிக்கிறார்:
”கனவு சோஷலிசவாதிகள் கிறிஸ்துவை பல நூற்றாண்டுத் தவறுகளிலிருந்து நம்மை விடுவித்து நவீன உலகில் புவியை ஆள்வதற்கான நெறிமுறைகளை போதிக்க வந்த ஒரு தெய்வீக அவதாரமெனக் கருதினர். கனவு சோஷலிசவாதிகள் முன்வைத்த ‘புதிய கிறிஸ்துவம்” இயேசு கிறிஸ்துவின் உண்மையான மதத்திற்கும் (நம்பிக்கையையும் ஒளியையும் மையமாகக் கொண்ட, மனிதன், கடவுள் இருவரின் சக்திகளிலும் நம்பிக்கை கொண்ட), அதிலிருந்து விலகி வந்து முடிவற்ற நரகத்தையும் அச்சத்தையும் பரப்புகிற பொய் மதத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டினை அடிப்படையாகக் கொண்டது. அறியாமையின், குழப்பத்தின் ஊற்றாகவும் அரசியல் மாற்றங்களுக்கு செவிசாய்ப்பதாகவும் இருக்கிற நிறுவப்பட்ட தேவாலயத்தைக் கடுமையாக எதிர்ப்பதனை இந்தப் புதிய கிறிஸ்துவம் தன் மைய நோக்கமாகக் கொண்டிருந்தது.”47
கனவு சோஷலிசத்தின் ஆரம்பகால கோட்பாடுகளை விவரிப்பதன் வாயிலாக தஸ்தாயேவ்ஸ்கி ஏன் இதனால் துவக்கத்தில் ஈர்க்கப்பட்டிருந்தார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இதற்கு முந்தைய அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டிருந்தது போல தஸ்தாயேவ்ஸ்கியின் தனிப்பட்ட பக்தி தேவாலயம் கூறுகிற கோட்பாடுகளோடு பொருந்திப்போகவில்லை. கிறிஸ்துவினால் அடைய முடியாத அறநெறிகளின் மூலமாக மனிதனால் சமூகத்தை மேம்படுத்த முடியும் என்கிற பார்வை ஏன் ஆரம்பத்தில் தஸ்தாயேவ்ஸ்கியை ஈர்த்திருக்கும் என்பதை இதன்மூலம் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
என்றாலும், 1840களில் ரஷ்யாவில் திரண்ட சமூக, பொருளாதார தத்துவங்களின் வருகையை அடுத்து உதித்த புதிய ரஷ்யக் கனவு சோஷலிசத்தின் உறுப்பினர்கள் அதைவிடத் தீவிர கருத்துகளையே பரிந்துரைத்தனர். எடுத்துக்காட்டாக ஸ்ட்ரௌஸ், ஃபாயர்பாக்குடைய படைப்புகள் தெய்வீக உலகைப் புவிக்குக் கொணர முயன்றன.
ஸ்ட்ரௌஸ் எழுதிய The Life of Jesus புதிய ஏற்பாட்டினை பகுத்தறிவு நோக்கில் ஆய்ந்து அது இயேசு காலத்திய யூத மக்களின் வரலாறு, புராணங்களின் கலவையா எனக் கண்டறிய முனைந்தது. தன்னைத் தீர்க்கதரிசி என அறிவித்துக்கொண்ட எத்தனையோ பேரில் ஒருவரான இயேசுவைச் சுற்றிப் பின்னப்பட்ட புராணக்கதைகள்தான் இவை.48 கடவுள் என்பது மனித மனத்தின் வெளிப்பாடு மட்டுமே எனக் கூறுவதன் மூலம் வேதாமகத்தை வெறுமனே மானுடவியல் எனச் சுருக்க முற்பட்டது. கடவுளின் குணாதிசயங்களைப் பட்டியலிடும்போது உண்மையில் மனிதன் தன் குணத்தைப் பற்றி தனக்குத்தானே உறுதிப்படுத்திக் கொள்கிறான். கடவுளை மனிதனிலிருந்து தனித்துப் பிரித்து அவருக்கு உண்மையாக இருப்பதை ஊக்குவித்த பண்பே அவனைச் சக மனிதன் மீதுள்ள கடமையிலிருந்து விடுவித்து வரலாற்றில் நிகழ்ந்த பல அட்டூழியங்களுக்கு காரணமாகியது49 என ஃபாயர்பாக் கருதினார். இதனை மனதில் கொண்டு, தற்போது மனித இனத்தின் கடமை என்னவென்றால் தெய்வத்திற்குச் சூட்டப்பட்ட மனித குணங்களை திரும்பவும் மனிதனுக்கே மீட்டு புவியில் செயல்படுத்தி சமூக வாழ்வில் பழக்கப்படுத்துதல்50 ஆகும் எனச் சொன்னார்.
இதேபோன்ற சிறந்த பல சமகாலச் சிந்தனையாளர்களின் கூற்றும் இந்தச் செயல்முறைக்கான அழைப்பாக அமைந்தது. ஃபாயர்பாக் பற்றி ”உண்மையிலேயே பழம்சிந்தனைகளை வெற்றிகொண்டவர்” என 1844ல் கார்ல்மார்க்ஸ் எழுதினார். கடவுளும் சொர்க்கமும் மனிதர்களால் தங்களின் சாயலில் உருவாக்கப்பட்டதெனில் சொர்க்கம் பூமியிலேயே உண்டாக்கப்படலாம் என ஃபாயர்பாக்கின் கோட்பாட்டை மார்க்ஸ் இன்னும் விரித்து எழுதினார். பகுத்தறிவின் அடிப்படையில் சமூகமானது மீண்டும் கட்டமைக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், 1848ல் ஐரோப்பாவில் புரட்சி பரவத்தொடங்கிய சமயத்தில், ஜெர்மனிக்கென ஒரு கம்யூனிஸ்ட் கட்சியைத் திட்டமிட ஆரம்பித்தார். மார்க்ஸின் கோட்பாட்டின்படி தனிநபர் சொத்தானது மனிதர்களை ஒருவரிடமிருந்து ஒருவரைப் பிரித்து தனிமையையும் குற்றத்தையும் அதிகரிக்கிறது. இந்தத் தனிநபர் சொத்தென்னும் பிரச்சினையை, சமூகத்தில் அனைவருக்கும் பொருட்களை சமமாகப் பிரித்து வழங்குவதன் மூலமும் சமநிலையான தொழில் உறவுகளை நிறுவுவதன் மூலமும் மனிதனை மனிதனுக்குத் திருப்பி வழங்குவதன் மூலமும் கம்யூனிசம் வெற்றிகொள்ளும். பொதுவுடைமையின் அடிப்படையில் கட்டப்பட்ட அவரது தத்துவமானது தன்னை வரலாற்றை நோக்கிய ஒரு அடியாக அடையாளப்படுத்திக்கொண்டது. “மனிதனின் முழு சாத்தியக்கூறுகளையும் உணர்வது”51
சமூக, பொருளாதார மறுமலர்ச்சி நோக்கிய அவரது அழைப்பின் பொருட்டு மனிதத் துயரத்தை மதமல்லாத காரணி கொண்டு அவர் விளக்கினார். மார்க்ஸிஸ்டுகள் துயரத்தை ஒரு முடிவிற்கான வழியாகப் பார்த்தனர்- பொருளாதார, சமூக விடுதலைக்கான வழி. கீழ்வர்க்கத்தினரைச் சமத்துவத்தின் பேரில் கிளர்ந்தெழும்படி ஊக்குவித்த அவர்கள் சமூக மறுமலர்ச்சிக்கு பாட்டாளி வர்க்கத்தின் போராட்டமானது அடிப்படைத் தேவை என அறிவித்தனர். போராட்டமும் துயரமும் வரலாற்று இயங்கியலின் தவிர்க்க முடியாத விளைபொருளென பார்க்கப்பட்டன.
மனிதர்களின் அதீத துயரத்தை தஸ்தாயேவ்ஸ்கி இதயத்தைப் பிசையும் ஒரு கூறாகப் பார்க்கையில், மார்க்ஸ் அதைப் புதிய புரட்சியின் அடையாளமாகக்கண்டார். ஆனால் இறுதியாக, பொதுவுடைமையினால் விளைந்த சமத்துவம், சகோதரத்துவம் கொண்டு வரவிருக்கும் பொற்காலத்தில் இவ்வுலகிலுள்ள எல்லாத் துயரங்களும் முடிவிற்கு வந்துவிடும்.
துவக்க காலத்தில் இந்தக் கோட்பாட்டை ஆதரித்த பலரோடு இணைந்திருந்த பெலின்ஸ்கிதான் இதைத் தஸ்தாயேவ்ஸ்கிக்கு அறிமுகப்படுத்தினார். அந்த இருபத்திநான்கு வயது இளைஞன் மேல் பெலின்ஸ்கி செலுத்திய ஆதிக்கம் மறுக்கவியலாதது. பெயர்பெற்ற இலக்கிய விமர்சகரான பெலின்ஸ்கி தஸ்தாயேவ்ஸ்கியைப் பற்றி ‘அடுத்த கோகோல்’ எனக் குறிப்பிட்டது அந்த இளைய எழுத்தாளரின் புகழ்வாழ்வைத் துவக்கி வைத்தது. தனது பிற்காலத்தில் தஸ்தாயேவ்ஸ்கி அந்த விமரிசகரைப் பற்றி, “சைபீரியாவை நோக்கிய எனது பயணத்தின் துவக்கத்திற்கான பொறுப்பு அந்தக் கருத்தியல் ஆசானையே சாரும்”52 எனக் குறிப்பிடுகிறார்.
ஃபாயர்பாக், ஸ்ட்ரௌஸின் எழுத்துகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட பெலின்ஸ்கி கனவு சோஷலிசவாதிகளின் அடிப்படை கோட்பாடுகளிலிருந்து விலகி ரஷ்யாவில் வேரூன்றத் தொடங்கிய தீவிர கருத்துகளுடன் கைகோர்க்கத் தொடங்கினார். சந்தேகத்திற்கிடமின்றி தஸ்தாயேவ்ஸ்கி தன் ஆரம்பகாலத்தில் பெலின்ஸ்கியை தன் ஆசானாகக் கருதினாலும் அவரது தீவிரவாதப் போக்கின் கருத்தியல் குறித்து சந்தேகம் கொண்ட பிறகு அந்த இருவருக்கிடையே பிரிவு நேர்ந்தது. ஃப்ரான்க்தான் எழுதிய தஸ்தாயேவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றில் தங்களுக்கிடையே நிகழ்ந்த உரையாடலை (தஸ்தாயேவ்ஸ்கியே ஆவணப்படுத்தியிருக்கிறபடி) குறிப்பிட்டு ஆசானின் வழிகள் மீது தஸ்தாயேவ்ஸ்கிக்கு சந்தேகம் எழத்துவங்கியது பற்றி எடுத்துரைக்கிறார்.
“‘உங்களுக்குத் தெரியுமா, ஒரு நாள் மாலை அவர் (பெலின்ஸ்கி) சப்தமாகக் கத்தினார் (அதிக உற்சாகமாய் இருக்கும் சமயங்களில் அவர் கூச்சலிடுவதுண்டு), ‘தவறு செய்யாமல் இருக்க முடியாத அளவிற்கு மோசமான சமூகத்தில் வாழும் ஒரு மனிதனைப் பாவங்களுக்குப் பொறுப்பாக்குவதும் கடனாளியாக்குவதும் மறுகன்னத்தைக் காட்டச் சொல்வதும் ரொம்பவும் தவறானது. பொருளாதார ரீதியாக குற்றம்செய்ய உந்தப்படும் ஒருவனை அவனே விரும்பினாலும் அடைய முடியாத ஒரு நிலையினை அடையும்படி கூறுவது அடிப்படையிலேயே ரொம்பவும் முட்டாள்தனமானதும் வன்முறையுமாகும்.’”… அடுத்ததாக உரையாடல் கிறிஸ்துவின் பிம்பத்தைப் பற்றி நகர்கிறது… தஸ்தாயேவ்ஸ்கி தொடர்கிறார்- “அவரைப் பார்த்து நான் ரொம்பவும் நெகிழ்ந்துவிட்டேன்” என்று சொல்கிற பெலின்ஸ்கி அவரது நண்பரை நோக்கித் திரும்பி என்னைச் (தஸ்தாயேவ்ஸ்கி) சுட்டியபடி, “ஒவ்வொரு முறை நான் கிறிஸ்துவைப் பற்றிக் கூறும்போதும் அவனது முகம் அழப்போவதைப் போல மாறிவிடுகிறது. உண்மைதான், நம்புங்கள் அப்பாவியே,” – அதன்பிறகு திடீரென என்னை நோக்கித் திரும்பி, ”நம்புங்கள், ஒருவேளை உங்களது கிறிஸ்து இப்போது பிறந்திருந்தால் இக்கால அறிவியல், அரசியல் தலைவர்களுக்கு முன்னால் ஒன்றும் இல்லாமல் காணாமலாகிவிடுவார்.”53
இந்தக் குழுக்களுடன் தொடர்பில் இருந்ததற்காக, அவர் அவற்றை முழுமையாக அங்கீகரித்திருக்கவில்லை எனக் கூறமுடியுமாயினும், தஸ்தாயேவ்ஸ்கி சிறைப்படுத்தப்படுகிறார். ஐரோப்பா முழுவதும் 1848ல் பரவிய அரசியல் கிளர்ச்சிகளால் பல சர்வாதிகார, பழமைவாத அரசாங்கங்கள் சீர்திருத்தவாதிகளாலும் தாராளவாதிகளாலும் தூக்கி எறியப்பட்டன. இதைக் கண்டு அஞ்சிய ஜார் மன்னர் பெத்ரஷேவ்ஸ்கி, துரோவ் உள்ளிட்ட பல தீவீரவாதக் குழுக்களை சிறைப்படுத்தி மரண தண்டனை விதித்தார். நான்காண்டு கடும் உழைப்பிற்காக சைபீரியாவிற்கு அனுப்பப்பட்ட தஸ்தாயேவ்ஸ்கி மீண்டும் பீட்டர்ஸ்பர்க்கிற்கு திரும்பிய பிறகு இதுபோன்ற குழுக்களுடனான தொடர்பு முடிவிற்கு வந்துவிட்டது.
இளமைப் பருவத்தில் கனவு சோஷலிச செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும், ஃபாயர்பாக், மார்க்ஸால் வளர்த்தெடுக்கப்பட்டு அவரது தோழர்களால் வெகு ஆர்வத்துடன் ஊக்குவிக்கப்பட்ட தீவிர கருத்துகளுடன் அவரால் பின்னாளில் இணைய முடியவில்லை. ஃபாயர்பாக்கின் முடிவுகளை தஸ்தாயேவ்ஸ்கி ஒருபோதும் ஒப்புக்கொண்டிருந்திருக்க மாட்டார். கடவுள் மனிதனின் உருவாக்கம் அல்ல, மனிதன் தன்னையே கடவுளாகக் காட்டிக்கொள்வதற்கான தேவைகள் இருக்கின்றன. மனிதன் தன் உருமாற்றத்திற்கான இலட்சிய மாதிரியாகக் கொள்ள வேண்டிய அடையாளம் கிறிஸ்துவே ஆவார். ஆனால் அங்ஙனம் முழுமையாக ஒருபோதும் அவனால் அவரை இப்புவியில் பிரதியெடுத்திட முடியாது. கிறிஸ்துவைப் போல சக மனிதனை சுயநலமற்று நேசிப்பதென்பது சாத்தியமற்றது. ஆன்மீகத்திலும் நீதியிலும் முழுமையான நேர்மையானவனாக மாறுவதில் உள்ள சிரமங்கள் அவனைப் பரிசுத்த ஜீவகாருண்யத்திற்கு தன்னை ஒப்புக்கொடுப்பதிலிருந்து தடுத்து விடுகிறது.
அதைப் போலவே, துயரத்தை வரலாற்று அவசியம் எனவும் சூழலின் தவிர்க்க முடியாத விளைவு எனவும் விளக்கிய மார்க்ஸின் பார்வையையும் அவரால் ஒப்புக்கொண்டிருக்க இயலாது. சமூகத் தீமைகளின் விளைவு என்பதாக அவற்றை எளிமையாக விளக்கிவிட முடியாது. ’குற்றமும் தண்டனையும் நாவலில், குற்றத்தின் தன்மை பற்றிய ஒரு உரையாடலில், ரஜுமிஹின் குறிப்பாகக் கேட்கிறான், “நாற்பது வயதான ஒரு ஆண் பத்து வயதுக் குழந்தையிடம் அத்து மீறுகிறான். சூழல்தான் அவனை அங்ஙனம் தூண்டியதா?”54 சமூக, பொருளாதார அநீதிகள் சமூகத்தின் எல்லாத் தீமைகளுக்கும் பொறுப்பாக முடியாது. கபடமற்ற ஒரு குழந்தையின் மலைக்க வைக்கும்படியான துயரத்திற்கு சமநிலையற்ற பொருளாதார சூழலை ஒற்றைக் காரணமாக முன்வைப்பது போதாமையுடையது. சைபீரியாவிகுப் பிறகு அவர் தயாரித்த நாடகங்களில் இவ்வுண்மையினைத் தெளிவாக்கினார். ஆற்றொணாத் துயரை அனுபவிக்கும் கதாபாத்திரங்கள் அவரது கற்பனையில் தோன்றியவர்கள் அல்ல, சமகால செய்திக் கட்டுரைகளிலிருந்துதான் அவர் அவர்களுக்கான தாக்கத்தைப் பெற்றார். அன்னையின் கருவிலிருந்து கிழித்து ஈட்டிமுனைக்கு வீசப்பட்ட சிசு, குளிரால் உறைந்த வெளிமாளிகையில் இரவெல்லாம் அடைத்து வைக்கப்பட்ட ஐந்து வயதுச் சிறுமி, நிலச்சுவான்தாரின் நாயால் கடித்துச் சிதைக்கப்பட்ட சிறுவன்55 ஆகியோரால் தங்களுக்கு நிகழ்ந்த துயரம் சமூக வர்க்கப் பேதங்களினால் விளைந்தது என்னும் புரிதலில் ஆறுதல் காணமுடியாது. இதில் தர்க்கமே இல்லை. அப்படியே அது உண்மையாகினும், அதனால் என்ன ஆறுதல் கிடைத்துவிடப் போகிறது. “எதிர்கால நன்மையின் பொருட்டே நான் துயரம் அடைந்துள்ளேன், எனது தீநடவடிக்கைகளும் துயரங்களும் இன்னொருவரின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கான உரங்கள்?”56 என்பதா அதன் பொருள்?
மனிதனின் துயரத்திற்கு அவனது சூழல்தான் காரணமென முடிவுசெய்ய இயலாதென்பதால், சூழலை அரசியல் பொருளாதார ரீதியாக சரிப்படுத்துவதன் வாயிலாக அவனைத் துயரிலிருந்து விடுவிக்க இயலும் என்பதும் இயலாததாகிறது. ”குற்றம் என ஒன்று இருக்கிறதா?” என்கிற போர்ஃபிரியின் கேள்விக்கு ரஜுமிஹின் அளிக்கிற பதிலில் இதுகுறித்த தஸ்தாயேவ்ஸ்கியின் எண்ணங்கள் வெளிப்படுகின்றன:
”சோஷலிசக் கோட்பாட்டுடன் இது துவங்குகிறது. அவர்களது கோட்பாடு பற்றி நீ அறிவாய். குற்றம் என்பது சமூக அமைப்பிலுள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கை, அவ்வளவுதான், அதுமட்டும்தான். மற்ற எந்தக் காரணமும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை எல்லாமே “சூழலில் தாக்கம்”தானே தவிர வேறொன்றுமில்லை. மனித இயல்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதேயில்லை. அதைத் தவிர்த்துவிடுகிறார்கள். அப்படி ஒன்று இருப்பதையே பொருட்படுத்துவதில்லை. வரலாற்றின் வாயிலான தொடர்ந்த இயக்கத்தின் காரணமாக வளர்ந்து வருகிற மனித இனமானது இறுதியில் ஒரு இயல்பான சமுதாயமாக மாறும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை, மாறாக, ஏதோ ஒரு கணித சிந்தனையிலிருந்து உருவான சமூக அமைப்பானது, இப்போதிருக்கிற எந்தத் தொடர் செயல்பாடுகளையும்விட வேகமாக, ஒரே சமயத்தில் மனித இனத்தை ஒருங்கிணைத்து பாவமற்ற சமுதாயமாக உருமாற்றிவிடும் என நம்பினர்.”57
இந்தப் பத்தியில் மனிதன் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களை வகுத்து அதன் மூலம் ஒரு இலட்சிய உலகத்தை உருவாக்க முடியாதென்கிறார். ஏனென்றால் அவன் முழுமையான பகுத்தறிவுவாதி கிடையாது. தினந்தோறும் அவன் அனுபவிக்கிற முடிவேயில்லாத உணர்ச்சிகளும் மனவோட்டங்களும் அதற்கான சாத்தியத்தை இல்லாததாக்குகின்றன. முந்தைய அத்தியாயத்தில் பார்த்தபடி, எல்லா மனிதர்களும், தங்களது குணாதிசயத்தை கடவுளின் குணாதிசயத்தோடு ஒன்றும்படி முயன்று செயல்பட்டு, தங்களை இயேசு போல உருமாற்றம் செய்ய இயலும் என்கிற கோட்பாட்டை எங்ஙனம் சந்தேகித்தாரோ அதே போல மேற்கூறிய பத்தியில் உள்ளபடி எல்லா மனிதர்களும் எல்லா சமயத்திலும் குறிப்பிட்ட சில சட்டதிட்டங்களின்படி தங்களை நடத்திக்கொள்ள முடியும் என்பதையும் சந்தேகித்தார். இதனை இவ்வாறு நாம் வரையறை செய்யலாம் – ஒட்டுமொத்த மனித இனத்தின் மேல் அவருக்கு நம்பிக்கை இருந்த போதிலும் தனிமனிதனின் செயல்வல்லமை குறித்து அவருக்குச் சந்தேகங்கள் இருந்தன.
தர்க்கரீதியான ஒரு திட்டத்தைத் தொடர்ந்து உறுதியாக வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் மனிதனுக்கு உள்ள இயலாமையை, அல்யோனா இவனோவா என்கிற அடகுபிடிக்கும் மூதாட்டியை கொல்வதற்காக ரஸ்கோல்நிகாவ் தீட்டுகிற திட்டத்தின் மூலம் ஓரளவு நம்மால் புரிந்துகொள்ள முடியும். நாவலின் பிற்பகுதியில் அவன் செய்த கொலைக்கு வேறு காரணங்கள் கூறப்பட்டிருப்பினும்58 ஆரம்பத்தில் தனது கொலையை ரஸ்கோல்நிகாவ் பின்வருமாறு நியாயப்படுத்துகிறான். அந்த அடகுபிடி மூதாட்டி இறந்தால் புனித பீட்டர்ஸ்பர்க்கின் பொதுமக்கள் பயனுறுவர். இவனது செயல் அவர்களது துயரம் தீர உதவும். அவளிடம் வணிகம் செய்த ஏழை மக்களையும் ஆதரவற்ற தனிமனிதர்களையும் அவள் ஏமாற்றிவந்ததால் அவள் மரணத்திற்கு ஒரு நியாயம் கிடைக்கிறது. “ஒருபுறம் அறிவற்ற, முட்டாள்தனமான, வீணான, கோவம்கொண்ட, தீங்கு புரிகிற, நோய்வாய்ப்பட்ட கொடூரமான முதியவள். பயனற்றவள் மட்டுமல்ல வேண்டுமென்றே தீங்குகள் புரிகிற அவளுக்கு தான் எதற்காக வாழ்கிறோம் எனவே தெரியாது. எப்படியாகினும் அவள் ஓரிரண்டு நாட்களில் இறக்கப் போகிறாள்.”59 கூடவே ரஸ்கால்நிகாப் இதையும் பார்க்கிறான்.
”மறுபுறம் ஆயிரக்கணக்கான புதிய இளைஞர்கள் உதவியின்றி நாற்புறமும் தூக்கி எறியப்படுகின்றனர். மடாலயத்தில் புதைக்கப்படப் போகிற அம்மூதாட்டியின் பணத்தைக் கொண்டு, லட்சக்கணக்கான நற்காரியங்கள் செய்துவிட முடியும். நூற்றுக்கணக்கானோரும் ஆயிரக்கணக்கானோரும் நல்வழியில் செல்ல முடியும். நிராதரவிலிருந்தும் அழிவிலிருந்தும் தீமையிலிருந்தும் அவளது பணத்தின் உதவிகொண்டு டஜன் கணக்கான குடும்பங்களை விடுவிக்க முடியும்.”60
இந்த நியாயப்படுத்துதலில் உள்ள நுணுக்கமான முரண்கள் வெளிப்படையானவை. துயரத்தை எதிர்கொள்ளும் விதம் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனையும் சார்ந்தது. ஒரு மனிதனால் தாங்கிக்கொள்ளவே முடியாத துயரத்தை இன்னொரு மனிதன் மிக எளிதாகக் கடந்துவிடக்கூடும். அல்யோனா இவனோவாவின் தலையில் ஒரு கோடாரியால் தாக்கியபோது அவள் அடைந்த துயரமும் அவளால் ஏமாற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மனிதர்கள் எதிர்கொள்ளும் துயரமும் சமமானவையா என மதிப்பிட எந்த அளவுகோலும் இல்லை. போலவே அவளது பணத்தினால் சரிசெய்யப்பட்ட ஆயிரம் நல்ல காரியங்கள் அவளது மரணத்தினை ஈடுகட்டிவிடும் என்றும் அளந்துவிட முடியாது. ஒரு புதிய துயரத்தால் பழைய துயரத்தைச் சமன் செய்துவிட முடியாது. நீதியை நம்புகிற ஒரு மனிதன் நியாயமற்ற முறையில் சிந்தப்படுகிற குருதியினால் விளைகிற மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ள மாட்டான்.
இக்கதையின் நீதியானது ரஸ்கோல்நிகாவால் அவனது அடிப்படை நோக்கத்தைச் செயல்படுத்த முடியாமல் போனதில் இருக்கிறது. அவன் கொள்ளையடித்த பணத்தைப் பிறருக்குப் பகிராமல் விடுவதோடு மட்டுமல்லாமல், இச்செயல்பாட்டின் பொருட்டு அம்மூதாட்டியின் சகோதரி லிஜாவெட்டாவையும் கொல்ல நேர்கிறது. இது சொல்கிற செய்தி மிகத் தெளிவானது. சமூகத்தைச் சீரமைப்பதன் மூலம் மனிதனால் துயரத்திலிருந்து விடுபட முடியாது, அங்ஙனம் அவன் முயன்றானாயின் அதில் தோல்வியே அடைகிறான். தான் ஒரு ‘அசாதாரணமான’ மனிதனா என்பதை அறியும் பொருட்டு சமூகத்தைச் சட்டப்பூர்வ நீதி சார்ந்த தளங்களில் நெறிமுறைப்படுத்தி அதன்மூலம் சமூகத்திற்குப் பலனளிக்க அவன் விரும்புகிறான். தஸ்தாயேவ்ஸ்கியின் காலத்தில் மலர்ந்த சோஷலிச, கம்யூனிசவாதிகளைப் போலவே, தன்னைத் தெய்வமாக்கிக்கொள்ளும் இந்த முயற்சியில் ரஸ்கோல்நிகாவ் திரும்பத் திரும்ப தோல்வியே அடைகிறான்.
துயரம் என்பது புவி வாழ்வின் ஒரு பகுதி என்றான பிறகு, துயரங்களற்ற சொர்க்கத்தைப் புவியில் அடைவது சாத்தியமற்றது. சமூகச் சீர்திருத்தத்தின் மூலம் அநீதியையும் துயரத்தையும் இல்லாமலாக்க முயன்ற சோஷலிசத்தை நவீன உலகின் ’பேபில் கோபுரம் (Tower of Babel)” எனக் குறிப்பிட்டார். பூமியிலிருந்து சொர்க்கம் செல்வதற்கான தேடலுக்குப் பதிலாக சொர்க்கத்தையே பூமிக்குக் கொணர61 அது முயல்கிறது. மனித வரலாற்றின் நோக்கம் சோஷலிசவாதிகள் கூறுவது போல இயங்கியல் அல்ல, அது உலகியலுக்கு அப்பாற்பட்டது, மனிதனை அவனது உயர்ந்த பண்பிற்கு உருமாற்றி ஒவ்வொரு மனிதனிலும் தெய்வீகத் தன்மையை உறையச் செய்வதே அதன் நோக்கம் ஆகும்.
ஒவ்வொரு மனிதனிலும் தன்னை உயர்ந்த பண்பிற்கு உயர்த்திக்கொள்ளும் தன்மை இருக்கிறதென தஸ்தாயேவ்ஸ்கி நம்பவில்லைதான். எனினும் சீர்திருத்த நடைமுறைகளால் பூமியில் சொர்க்கத்தை உருவாக்க முடியும் என்பதையும் அவர் நம்பவில்லை என்பது உறுதி. போலவே, புறவயமான, கடுமையான திட்டங்கள் கொண்ட அதிகாரத்தினால் மனித இனத்தை ஒருங்கிணைக்கவும் முடியாது.
மற்ற எல்லாவற்றின் மீதும் தஸ்தாயேவ்ஸ்கி கொண்டிருந்த விருப்பங்களைவிட கிறிஸ்துவின் பூரணத்துவத்தின்மீது அவர் கொண்டிருந்த விருப்பம் மிக உயர்ந்தது. அந்தப் பூரணத்துவம் எல்லோராலும் அடையவல்லது என அவர் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே கடவுள் மனித மனதால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு பிம்பம் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார். மனித வாழ்வானது கிறிஸ்து என்னும் பூரண பிம்பம் நோக்கிய, ஒரு போதும் நிறைவேற்ற முடியாத, ஒரு தொடர் பயணம். மனிதனால் தெய்வமாக முடியாதெனில் பூமியில் சொர்க்கமும் சாத்தியமில்லை.
லௌகீகத் துயரங்களுக்கு லௌகீக அன்பை அவர் தீர்வாக முன்மொழிந்தாலும், லௌகீக உலகில் சொர்க்கம் சாத்தியமில்லை. தர்க்கரீதியான குறிப்பிட்ட சட்டங்களாலும் வழிமுறைகளாலும் துயரத்தைத் தோற்கடித்துவிட முடியும் என்பதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இவ்வாறாக, அவர் வளர்ந்த ரஷ்ய ஆச்சாரச் சூழலோ பின்பு அவர் தொடர்பில் இருந்த சோஷலிசமோ துயரத்திற்கான விளக்கம் பற்றிய அவரது தேடலுக்குத் திருப்தியான பதிலை வழங்க முடியவில்லை. இரண்டு அமைப்புகள் மீதும் அவருக்கிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டிற்குப் பின்பும் அவற்றில் ஏதோ ஒன்றில் அவரால் நிலைகொள்ள முடியவில்லை. அவரது வாழ்வின் இறுதிவரையிலும் கூட மனித துயரமானது மனிதர்களால் மனித வரலாற்றில் தீர்க்கப்பட்டுவிட முடியும் என்கிற திருப்தியை அவர் அடையவில்லை.
மத நம்பிக்கைகளின் பொருட்டு உளவியல் துயரடைவது: தாங்கவொண்ணாத் துயரென அங்கீகரிக்கப்படாதிருத்தல்
”ஒரு வீட்டின் அளவுடைய பெரிய கல் ஒன்று உங்கள் தலை மேல் தொங்கிக்கொண்டிருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அது உங்கள் மேல் விழுந்தால், நீங்கள் வலியடைவீர்களா?” 62
உளவியல் ரீதியான துயரத்தை சோஷலிசமும் கம்யூனிசமும் பொருட்படுத்தவேயில்லை என்பதும் ரஷ்ய ஆச்சாரவாதம் ரொம்பவும் குறைவாகவே அது குறித்துச் சிந்தித்திருக்கிறது என்பதும் மிக சுவாரஸ்யமானது. தஸ்தாயேவ்ஸ்கியால் மனித மனத்தையும் அவர்களது பல்வேறு உளவியல் சிக்கல்களையும் துல்லியமாகச் சித்தரிக்க முடிந்திருப்பது பற்றி நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டிருந்தாலும் அவர்களது கதாபாத்திரங்கள் மத நம்பிக்கைகளின் பொருட்டு துயரடைவது பற்றி அதிகம் விவாதங்கள் இல்லை. மதக் கோட்பாடுகள் பற்றி ஒருபோதும் பதிலளிக்கப்படாத ஆழமான தீவீரமான நம்பிக்கைகளையும் கேள்விகளையும் அவர்கள் கொண்டிருந்தனர். அவற்றின் இயல்பே பதிலளிக்க இயலாததாக இருக்கிறது. இந்த உலகு பற்றிய கடவுளின் நோக்கங்கள் என்ன என்பதும் மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதும் புவியில் இருக்கும் மனிதர்களின் அறிவிற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.
துயருறும் தனிமனிதர்கள், குறிப்பாக குழந்தைகள் வாசிப்பவரின் இதய நரம்புகளை அறுக்கிறார்கள். உளவியல் ரீதியாகத் துயரடைபவர்களும் வேறொரு வகையில் வாசகர்களில் இரக்கத்தைச் சுரக்கச் செய்கிறார்கள். ஆனால் இன்னொருவரின் கையால் துயரடைபவர்கள் குறித்து நாம் கொஞ்சம் நம்பிக்கை கொள்ளலாம். அவர்கள் துயரத்தை வெல்லவோ துயர்படுத்துபவரிடமிருந்து தப்பிக்கவோ வாய்ப்பிருக்கிறது. அவர்களது எதிர்காலம் சரியாகக்கூடும். ஆனால் மத நம்பிக்கைகள் சார்ந்து துயருறுபவர்களுக்கு அவர்களது துயரத்திலிருந்து விடுதலையே கிடைப்பதில்லை. தங்களது பிரச்சினையை தீர்க்கவோ சரிசெய்து கொள்ளவோ இயலாமல் அவர்கள் பகலும் இரவும் அல்லல்படுகிறார்கள். பிற வகையான துயரடையும் பல்வேறு கதாபாத்திரங்கள் வெவ்வேறு வழியில் தீர்வுகளை எட்டுகிறார்கள். ஒருசிலர் தங்களது துயரங்களிலிருந்து விடுபடுவதே இல்லை, துயரங்களால் பலனடைவதே இல்லை எனினும் சிலர் அமைதியை அடையத்தான் செய்கிறார்கள். ஆன்மீக- உளவியல் ரீதியான துயர் அடைபவர்கள் விடுதலையே அடைவதில்லை. அவர்கள் ஒன்று மனம் பிறழ்கிறார்கள் அல்லது தற்கொலை செய்துகொள்கிறார்கள். மனதளவில் அடையும் துயரம்தான் பிற எல்லா வகை துயரங்களையும்விட இரங்கத் தகுந்தது என இக்கதாபாத்திரங்கள் வாதிடுகின்றன. குறிப்பாக, மிகத்தீவிர அடிப்படை மதக்கருத்துகளினால் துயரடைபவர்கள் இப்புவியில் தீர்க்க முடியாத சித்திரவதையை அனுபவிக்கிறார்கள். இம்மாதிரியான துயரத்திற்கான எவ்விதத் தீர்வும் சோஷலிசத்தில் அறுதியே இல்லாமலிருந்ததும், ஆச்சாரக் கோட்பாடுகள் முழுமையாக இதைத் தீர்க்க முடியாமல் போனதும்தான் அவரை முன்னதை முழுமையாக நிராகரித்து பின்னதை ஓரளவு ஒப்புக்கொள்ளச் செய்ததெனக் கூறலாம்.
முந்தைய அத்தியாயத்தில் சொல்லியபடி, ஜார் நிகோலஸால் மரண தண்டனை விதிக்கப்பட்ட போது தஸ்தாயேவ்ஸ்கி மிகக் கடுமையான துயரங்களை அனுபவித்தார். ஆரம்பத்தில் அவர் “சதித்திட்டங்களில் பங்குபெற்றதாகவும், ஆச்சார தேவாலயம்- அதன் தலைமைக்கு எதிரான இழிவான வார்த்தைகள் அடங்கிய இரகசிய கடிதத்தைச் சுற்றுக்கு விட்டதாகவும், அரசுக்கு எதிரான இலக்கியத்தை அச்சுப்பிரதிகள் மூலமாக பரப்ப முயன்றதாகவும்”63 குற்றம்சாட்டப்பட்டு இவருடன் பதினான்கு சிறைவாசிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனைக்காக காத்திருந்த நேரத்தில் தஸ்தாயேவ்ஸ்கி தன்னுடைய நாத்திக நண்பரிடம், “நாம் கிறிஸ்துவிடம் சென்று சேர்வோம்” என்று சொன்னதாகவும் அதற்கு அவர் “தூசியின் சிறு துகளாவோம்”64 என்று பதிலளித்ததாகவும் பிரபலமான குறிப்பு புழக்கத்திலுண்டு. சரியாக அவர்கள் கொல்லப்படுவதற்கு முன்பு ஜார் அவர்களை விடுவித்து சைபீரியாவிற்கு நாடு கடத்தினார். கண்முன் இருந்த மரண தண்டனையிலிருந்து தப்பி உயிர் பிழைத்தாலும் உடனிருந்தவரிடம் அப்போது அவர் பகிர்ந்துகொண்ட வார்த்தைகள் மிச்ச வாழ்வு முழுவதும் அவரைத் தொந்தரவு செய்தபடியே இருந்தன.
மரண தண்டனையை அனுபவிப்பது பற்றிய கற்பனையால் அவர் மனம் அனுபவித்த துயரம் பற்றி, அசடன் நாவலில் வருகிறது. மிஷ்கின், பலிபீடத்தில் தலைவெட்டப்பட இருந்த ஒருவனுடன் சாட்சியாய் இருந்ததை விளக்குகிற இடத்தில் இதை விவரிக்கிறார். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு இழைக்க முடிகிற மிகக் கொடூரமான தீங்கென மரண தண்டனையை மிஷ்கின் தன் பின்வரும் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்.
”புத்திசாலியாகவும் பயமற்றவனாகவும் வலிமையானவனாகவும் முதிர்ச்சியுடையவனாகவும் இருந்த அந்தக் குற்றவாளியின் பெயர் லெக்ரோ. நம்பினால் நம்புங்கள், தூக்கு மரத்தின் மீது ஏறியபோது அழுதவன் ஒரு காகிதத்தைப் போல வெண்மையாக இருந்தான். அதற்கு வாய்ப்பிருக்கிறதா? இது பயங்கரமானதில்லையா? மனிதர்கள் பயத்தால் அழுகிறார்களா? அப்போது ஆன்மாவில் என்ன நிகழ்கிறது, என்ன மாதிரியான நிலைக்கு அது உட்படுகிறது? அது ஆன்மாவின் சீற்றமே தவிர வேறொன்றுமில்லை.”65
உடன் உரையாடுபவர், “வெட்டப்பட்டு தலை பறந்து போகும்போது அதிக வலி இருக்காதென்பது நல்ல விஷயம்தானே” என்கிறார். அதற்கு மிஷ்கின் இவ்வாறு பதிலளிக்கிறார்.
”நீங்கள் அதை மட்டுமே கவனித்திருக்கிறீர்கள், மற்ற எல்லாருமேகூட அதையேதான் சொல்கிறார்கள், அந்த இயந்திரம்கூட அதற்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதன்பிறகு எனக்கு ஒன்று தோன்றியது. நாம் நினைப்பதைவிட அது மோசமாக இருந்தால்? யோசியுங்கள். எடுத்துக்காட்டாக, ஒரு தண்டனை இருக்கிறது, அதனை அடுத்து துயரம், காயம், உடல்வலி எல்லாம் ஏற்படுகிறது, எனும் பட்சத்தில் அது உங்களை மனத்துயரிலிருந்து திசைதிருப்பி சாகும்வரை காயங்களால் ஏற்படும் துயரத்தை மட்டுமே அனுபவிக்கச் செய்கிறது. என்றாலுமேகூட, உச்சபட்ச வலியானது, காயத்தினால் ஏற்படாது. இன்னும் ஒரு மணிநேரத்தில், இன்னும் பத்து நிமிடத்தில், இன்னும் அரை நிமிடத்தில், இதோ இப்போது உங்கள் ஆன்மா உடலைவிட்டு பறந்து விடப்போகிறது, அதன்பிறகு நீங்கள் மனிதனாய் இருக்கப் போவதில்லை. இது உறுதி என்கிற அந்த அறிதல் தருகிற வலிதான் அதீதமாய் இருக்கும்.”66
அவர் கிட்டத்தட்ட மரண தண்டனையை அனுபவித்தார் என்பதைத் தாண்டி மரண தண்டனைக்கு எதிரான அவரது மனநிலையில் வேறு நியாயமும் இருக்கிறது. சட்டரீதியான மரணதண்டனை மூலம் கொல்லப்படுவது அளவிட முடியாத திகிலை ஏற்படுத்தக்கூடியது, ஏனெனில் நம்பிக்கைக்கான வாய்ப்பு அங்கே கிஞ்சித்தும் இல்லை. இரண்டு உதாரணங்கள் தருகிறார். திருடனால் தாக்கப்பட்ட ஒரு மனிதன், துப்பாக்கிச் சூட்டிற்காகக் காத்திருக்கும் ஒரு இராணுவ வீரன். மற்ற எல்லாத் தர்க்கங்களையும் தாண்டி இந்த இருவருமே கடைசி நிமிடம் வரை, தாங்கள் உயிர்பிழைக்கக்கூடும் என்கிற நம்பிக்கையைக் கைக்கொள்ள முடியும். இந்தக் கடைசி நம்பிக்கைதான் மரணத்தைப் பத்து மடங்கு சுலபமாக்குகிறது. 67 மாறாக, பிழைக்கவே வாய்ப்பில்லை எனும்படியாக மரணதண்டனை விதிக்கப்பட்டு, தான் இனி வாழவே போவதில்லை என உறுதியாக அறிந்திருப்பதும், அதன் பிறகு இயேசுவிடம் செல்வோமா தூசியாய் ஆவோமா என அறியாதிருப்பதும் ஒரு மனிதனை பைத்தியமாக்குவதற்குப் போதுமானதாக இருக்கிறது.
மிஷ்கின் தனது சொற்பொழிவை “கிறிஸ்து இந்தத் துயரத்தையும் திகிலையும் பற்றிப் பேசியிருக்கிறார்” என்பதாக முடிக்கிறார். பைபிளை நன்றாக அறிந்திருந்ததால், தஸ்தாயேவ்ஸ்கிக்கு, மரணத்திற்கு முன்பு கெத்சமேனில் இயேசு சொன்னதாக அறியப்படுகிற, “பிதாவே, முடியுமாயின் இப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யுங்கள்”, “எனது ஆன்மா மரணத்திற்குரிய துயருற்றிருக்கிறது” (மாத்யூ 26:38-39) போன்ற வார்த்தைகள் அவசியம் தெரிந்திருந்திருக்கும்.
விவாதிக்கப்பட்டபடி, கிறிஸ்துவை தஸ்தாயேவ்ஸ்கி பல்வேறு காரணங்களுக்காக உயர்ந்த இடத்தில் வைத்துப்போற்றினார். குறிப்பாக, கிறிஸ்து அனுபவித்த ‘அடுத்து தான் இறக்கப் போகிறோம்’ என்கிற ’அறிதல்’ தரும் உளவியல் துயரத்தை இவரும் அனுபவித்திருந்ததால் அது இன்னும் அதிகரித்திருக்கலாம். அவரது கையில் அறையப்பட்ட ஆணிகளோ, முதுகில் பெற்ற சவுக்கடிகளோ, தலையில் தரித்த முட்கிரீடமோ கிறிஸ்துவுக்கு ஏற்படுத்திய வலியைவிட, மரணத்தை எதிர்நோக்கியபோது அவர் அனுபவித்த உளவியல் துயரமும் முழுவதுமாக கைவிடப்பட்டு விடப்போகின்ற சாத்தியமும்தான் அவரை அதிகமும் துன்புறுத்தியிருக்கும் என இந்த வாதம் உரைக்கிறது. ரஷ்ய ஆச்சாரம் சொல்கிறபடி வேறெந்த மனிதனையும்விட அதிக துயரத்தை கிறிஸ்து அனுபவித்திருக்கிறார் எனில் மனதாலும் ஆன்மாவாலும் அவர் அனுபவித்த இந்த உளவியல் துயரம்தான் வலியின் அதீதம் என ஒப்புக்கொள்ளலாம். ஆனால் பைபிளின் எந்த இடத்திலும் அது அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. எனவே, கிறிஸ்து உளவியல் ரீதியாகத் துயரடைந்திருந்தாலும் அவரது நம்பிக்கையானது அத்துயரத்தைவிடவும் வலிமை மிகுந்திருந்தது எனக் கொள்ளலாம். தான் மீட்கப்படுவோம் என்கிற நம்பிக்கையுடன் அவர் அத்துயரத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார். எனில், நம்பிக்கையைவிட உளவியல் துயரம் வலிமையானதாக இருக்கும் மனிதர்களின் நிலை என்ன?
மதம் சார்ந்த நம்பிக்கையால் துயருற்ற, நம்பிக்கையைவிட துயரத்தின் வலிமை அதிகமாய் இருந்த மனிதர்களுக்கு இவான் கரமசோவை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இதை எதனாலும் மாற்ற இயலாது. தீய ஆவியுடன் (மனக்கோளாறுக்கு ஆளான ஒருவனது செயலை வேறு எவ்வாறு சொல்வது) உரையாடுகிற காட்சியில் இவானே அதை ஒப்புக்கொள்கிறான். “கட்டாயப்படுத்தலால் விளையும் நம்பிக்கையால் என்ன பயன்?”68 துயரம் நிறைந்ததாக கடவுள் படைத்திருக்கும் இவ்வுலகத்தை எதைக்கொண்டு சமன்செய்வது என்னும் கேள்வியால் அவன் மிகுந்த பிரயாசைப்படுகிறான். இக்கேள்விக்குப் பதில் காணும் அவனது முயற்சி அவனைப் பைத்தியமாக்குகிறது.
அசடன் நாவலில் காச நோயினால் இறக்கும் இப்போலிட்டால் கடவுளின் பல்வேறு பரிமாணங்களையும் மனிதனை அவர் படைத்திருக்கும் விதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே வாழ முடியும் என்கிற நிலையில், மனிதனால் வாழ்வை முழுமையாக வாழ இயலாதது குறித்த ஆற்றாமையினால் சக மனிதர்களை வெறுப்புடன் நோக்குகிற அவன் கடவுளின் மீதான பகைமையுடன் பின்வருமாறு கேட்கிறான், “என்னைத் தின்று தீர்க்கப் போகிறவரை புகழ்ந்துதான் ஆக வேண்டுமென்கிற கட்டாயப்படுத்தல்கள் எதுவும் இல்லாமல் என்னை வெறுமனே தின்று தீர்த்தால் ஆகாதா? நான் இன்னும் இரண்டு வாரங்கள் வாழ விரும்பவில்லை என்று சொல்வதனால் நிஜமாகவே யாராவது காயமடைந்துவிடப் போகிறார்களா என்ன?” 69 தன் உடனிருக்கும் பல மனிதர்களால் ஏன் தங்களது வாழ்க்கையின் முழு சாத்தியத்தையும் உணர முடியவில்லை என்பதையும் அதை உணர முடிந்த தனது வாழ்க்கையோ இன்னும் இரண்டு வாரத்தில் முடிந்துவிடப் போகிறமையால் அவனால் ஒருபோதும் அதை வாழ்ந்து தீர்க்க முடியாது என்பதையும் அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. கடவுள் திட்டமிட்டபடி இறப்பதற்காக இரண்டு வாரங்கள் காத்திருப்பதற்குப் பதிலாக அவன் உடனடியாகத் தன் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்புகிறான். தற்கொலை செய்துகொள்ளும் அவனது முயற்சி தோல்வியில் முடிகிறது.
தீய ஆவிகளில் வரும் கிரியோஃப் கடவுளின் இயல்பு பற்றிய சிந்தையால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆன்மீக காரணத்திற்காகத் துயருறுகிறான். கறைபடியாத சுயவிருப்பத்துடன் செயல்பட முடிவதே கடவுளின் அம்சம் எனக் கூறுகிற அவன், தன்னாலும் அதே போல் செயல்பட முடிந்தால் தானும் கடவுளாகி விடுவேன் என்கிறான். அந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஒரே வழியாக தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறவனை அம்முடிவு மனம்பிறழச் செய்கிறது. கதைசொல்லிக்குத் தன் திட்டங்கள் பற்றிச் சொல்லுகிற அவன், “என்னால் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாது. என் ஒட்டுமொத்த வாழ்விலும் நான் ஒன்றைப் பற்றியே சிந்திந்து வந்திருக்கிறேன். என் வாழ்வு முழுவதும் நான் கடவுளால் துயருறுத்தப்பட்டிருகிறேன்.”70 இறுதியில் அவன் தற்கொலையும் செய்துகொள்கிறான்.
இக்கதாபாத்திரங்கள் துன்பியலாய் இருப்பதற்கு அவை பலவீனமானவையாய் இருப்பதோ, உடல் ரீதியாகத் துயருறுபவர்களைப் போல வெளிப்படையாகவும் மோசமாகவும் பாதிக்கப்படுவதோ காரணமில்லை. கடவுளைப் பற்றி – அவர் உலகைப் படைத்த விதம், ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் வகுத்திருக்கும் விதி, அவரது மீஇருப்பு பற்றி – தொடர்ச்சியான வாதங்களை முன்வைப்பதாலேயே அவர்கள் கவனம் ஈர்ப்பவர்களாக இருக்கின்றனர். பொருண்மையான இப்புவி வாழ்வில் பதில் காண முடியாத, மதம் சார்ந்த இந்தக் கேள்விகள் சித்திரவதை செய்பவை. தத்தமது கேள்விகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் இக்கதாபாத்திரங்கள் அவற்றைத் தீர்க்க இயலாமல் உளவியல் ரீதியாக முழுவதும் உடைந்து போகிறார்கள். மதத்தில் இதற்கான பதில் இல்லை என்பது தெளிவு, பொருளாதாரச் சீர்திருத்தங்களாலும் இக்கேள்விகளுக்குத் தீர்வளித்திருந்திருக்க முடியாது. தனக்கெதிரான கேள்விகளுக்கு கடவுள் ஒருபோதும் பதிலளிப்பதில்லையாததால், அவர்களது துயரமும் முடிவற்றதாகிறது. சுமூகமான முடிவுகளுக்கான சாத்தியமும் இல்லை. இவையெல்லாமும் சேர்ந்து இந்தக் கதாபாத்திரங்களை அதிகபட்ச துயரனுபவிப்பவர்களாய், தீர்வற்றவர்களாய், வளமான எதிர்காலத்திற்கான வாய்ப்பற்றவர்களாய், இப்புவியில் தீர்க்கவியலாத மனத்துயரில் உழல்பவர்களாய் ஆக்கிவிடுகின்றன.
முடிவுரை
துயரத்தை ஒரு மீயுலக உண்மையாக ஒப்புக்கொண்டாலும் அவரால் அதை அலட்சியம் செய்ய முடியவில்லை. அதற்கான தீர்வை தன் மதத்தின் போதனைகளிலும் புரட்சித் தோழர்களின் சித்தாந்தங்களிலும் தேடினார். ஆனால் அவை இரண்டாலுமே அது குறித்த விளக்கத்திற்கான அவரது தேவையை நிறைவுசெய்ய முடியவில்லை. உறுதியாகத் தெரியாத மோட்சத்தினைக் கண்மூடித்தனமாக முன்மொழிந்த ரஷ்ய ஆச்சாரம் ஒவ்வொரு மனிதனுள்ளும் பொதிந்திருக்கும் சுதந்திரத்தையும் அதைப் பயன்படுத்தி உருமாற்றம் அடைவதற்கான அவனது வலிமையையும் கூடுதலாக நம்பியது. சோஷலிசத்தின் தத்துவங்கள் மனிதன் வாழும் சூழலைத் துயரத்திற்கான காரணமாக்கி துயரங்கள் நீங்க வேண்டுமெனில் சமூகம் மாற வேண்டுமெனத் தவறாக அறிவுரை நல்கியது. மட்டுமல்லாது, இரண்டு கோட்பாடுகளுமே தஸ்தாயேவ்ஸ்கி நாவல்களின் அதிக துயருற்ற கதாபாத்திரங்களுக்கான- உளவியல் ரீதியாக துயருறுபவர்கள்- எந்தத் தீர்வையும் முன்வைக்கவில்லை.
அவரது கதாபாத்திரங்கள் வழியே துயரம் குறித்து தஸ்தாயேவ்ஸ்கி வெளிப்படுத்தும் சித்தாந்தமானது பன்முகத்தன்மை வாய்ந்தது. வெறும் நம்பிக்கை மூலமோ அல்லது வெறும் பகுத்தறிவு மூலமோ தீர்க்கப்பட முடியாத சமூக- லௌகீக உணர்வு, நீதி சார்ந்த பிரச்சினை ஆகும் அது. மனிதனின் சுய உருமாற்றத்திற்கான இலட்சிய மாதிரியாக அவர் இயேசுவைப் பரிந்துரைத்தார். எனினும் அதை மனிதன் அடைந்துவிட முடியும் என நம்பவில்லை. புவியில் உடனிருக்கும் மனிதர்களுக்கு எல்லையற்ற அன்பை வழங்க வேண்டும் என உபதேசித்தாலும் மனிதனால் அதை வழங்கிவிட முடியும் என நம்பவில்லை. நடைமுறைப் புரிதலுடன் கூடிய உயர் நோக்கத்தின் உருவகமாக அவர் திகழ்ந்தார். அவரது இந்த முரண் அணுகுமுறை துயரத்தின் மர்மத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
துயரத்தின் இருப்பையும் தாண்டி, துயரத்தின் துணையோடே, தஸ்தாயேவ்ஸ்கி ’வாழ்க்கை’க்கு அதிக முக்கியத்துவம் அளித்தார் என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். வாழ்வை வாழ்வதன் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக மனிதன் துயரை அனுபவிக்க வேண்டியிருக்கும். என்றாலும் தஸ்தாயேவ்ஸ்கி துயரத்தைவிட இருப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்.
மிஸ்கினின் வலிப்பு நோயின் வாயிலாக அளிக்கப்பட்ட உதாரணத்தை வைத்து இதை நாம் புரிந்துகொள்ளலாம்:
பிற விஷயங்களுக்கிடையே அவர் தன் வலிப்பு நோய் பற்றிச் சிந்தித்தார். வலிப்பு ஏற்படும்போது அதற்கு முந்தைய ஒரு கட்டத்தில் (அவர் முழித்திருக்கும்போது வலிப்பு ஏற்படுமாயின்), துயரத்திற்கு மத்தியில், ஆன்மாவின் இருளுக்கிடையில், அந்த அழுத்தத்தில், ஒரு நொடி சட்டென அவரது மூளை தீப்பற்றியது போலாகி அவரது வாழ்வின் அத்தனை சக்தியும் அசாதாரணமான ஒரு தூண்டலால் முறுக்கப்படும். வாழ்வு பற்றிய உணர்வும் சுய விழிப்பும் மின்னலைப் போல இந்த நொடியில் பத்து மடங்கு அதிகரிக்கும். அவரது சிந்தையும் இதயமும் ஒரு அசாதாரணமான ஒளியால் ஒளியூட்டப்படும். அவரது எல்லா அதிருப்திகளும் சந்தேகங்களும் துயரங்களும் ஒரே நொடியில் சமாதானமடைந்தது போலாகி சாந்தமும் இணக்கமும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நியாயமும் தர்க்கமும் நிறைந்த மேலான அமைதி உணரப்படும். எல்லையற்ற மகிழ்ச்சியை முழுமையாக உணர முடிகிற இந்த நொடியானது அவனது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் போதுமானதாக இருக்கக்கூடும்.71
இப்பத்தியில் மறைமுகமாக ஒலிக்கும் ஆன்மீகக் குரலானது ஆழமானது. வலிப்பின் நடுவில் ஒருவர் அனுபவிக்கிற அதீத வலியின் துவக்கத்தில் முதல் நொடியில் ஒப்பிட முடியாத மகிழ்ச்சியும் அவருக்கு ஏற்படுகிறது. ஆனால் இந்தப் பேரானந்தத்தை அனுபவிக்க வேண்டுமெனில் ஒருவர் துயரத்தையும் அனுபவித்தே தீர வேண்டும். மனித வரலாற்றில் ஒருபோதும் துயரத்தை முழுமையாக விளக்கிவிட முடியாது. மாறாக அது அனுபவித்து ஆராயப்பட வேண்டியது. ஆனால் அது வாழ்வதன் மூலம் ஒருவர் அடையக்கூடிய பரிசாகும். இவ்விஷயத்தில் தஸ்தாயேவ்ஸ்கி கூறும் நீதி இதுவாகும்: மனிதன் வாழ்வில் துயரை அனுபவிக்க வேண்டியிருக்கும். என்றாலும் அவனுக்கு வாழ்க்கை இருக்கிறது. அதுதான் அதிமுக்கியமானது.
குறிப்புகள்:
1Malcolm V. Jones, “Dostoevskii and religion,” in Cambridge Companion to Dostoevskii, ed. W.J. Leatherbarrow, 148-174. (Cambridge: Cambridge University Press, 2002), 150
2 Steven Cassedy, Dostoevsky’s Religion (California: Stanford University Press, 2005), 10
3 Jones, “Dostoevskii and religion”, 150
4 Ibid, 150
5Thomas A. Idinopulos “The Mystery of Suffering in the Art of Dostoevsky, Camus, Wiesel, and Grünewald.” Journal of the American Academy of Religion 43, no. 1 (March 1975): 51-61. http://www.jstor.org/stable/1460734
6 Bishop Kallistos Ware, The Orthodox Way (New York: A.R. Mowbray & Co., Ltd., 1998), 57
7 Ware, The Orthodox Way, 57
8 Which Dostoevsky, like his contemporaries, termed “consumption.”
9 Dostoevsky, Fyodor, The Brothers Karamazov, translated by Richard Pevear and Larissa Volokhonsky, (New York: Farrar, Straus and Giroux, 2009), 242
10 Ware, The Orthodox Way, 58
11 (ரஷ்ய ஆச்சாரக் கருத்தியலானது கடவுளுடன் இணைதலை நம்புகிறதே தவிர கடவுளாகவே மாறிவிடுவதைப் பரிந்துரைக்கவில்லை. இயற்கையில் காணப்படும் அனைத்துமே தெய்வம்தான் (Pantheism) என்னும் கோட்பாடு நோக்கிய நகர்வுகளை அது முழுமையாக மறுக்கிறது என Ware விளக்குகிறார்)
12 Ibid, 52
13 Ibid
14 Andrey N. Gorbunov, “Christ’s Temptations in the Wilderness (Milton and Dostoevsky)” Literature & Theology 20, no. 1 (March 2006): 58
15 Ware, The Orthodox Way, 62
16 Ibid
17 Ibid
18 Vasily V. Zenkovsky, “The Spirit of Russian Orthodoxy.” The Russian Review 22, no.1 (January 1963), 49. http://www.jstor.org/stable/126594
19 Ware, The Orthodox Way, 62
20 Elena Volkova, “The Salvation Story in Russian Literature.” Literature & Theology 20, no.1 (March 2006): 32
21 Cassedy, Dostoevsky’s Religion, 61
22 ரஸ்கோல்நிகி என்கிற ரஷ்ய வார்த்தைக்கும் ரஸ்கோல்நிகாவ் என்கிற பெயருக்கும் உள்ள ஒற்றுமையை ஒரு வாசகரால் கவனிக்க முடியும். ரஸ்கோல்நிகிகளைப் போலவே ரஸ்கோல்நிகாவும் நாவலில் ஒரு வகையான சுயவதையை மேற்கொள்கிறான். தான் கொலை செய்த காட்சியைத் திரும்பத் திரும்ப மனதில் ஓட்டிப் பார்ப்பதன் மூலம் அவன் தன்னையே தண்டித்துக்கொள்கிறான். இந்தப் பெயர் ஒற்றுமையை தஸ்தாயேவ்ஸ்கி விரும்பியே உண்டாக்கினார் என ஒரு வாசகர் கருத இயலும்.
23 Dostoevsky, Fyodor, Crime and Punishment, translated by Constance Garnett (Avon, Connecticut: The Heritage Press, 1938), 402
24 தஸ்தாயேவ்ஸ்கி சோலோவெவ்வைவிட முப்பத்தி இரண்டு வயது மூத்தவராகினும் அவர்கள் இருவரும் சிறந்த நண்பர்களாய் இருந்திருந்திருக்கின்றனர். அல்யோஷா, இவான் கரமசோவ் கதாபாத்திரங்களை தஸ்தாயேவ்ஸ்கி படைப்பதற்கான தாக்கம் சோலோவவ்விடமிருந்து கிடைத்ததுதான் எனப் பல அறிஞர்கள் கருதுகின்றனர்.
Although he was thirty-two years Dostoevsky’s junior, the two were noted friends; it has been widely held by scholars that Solov’ev was the author’s inspiration for the characters of Alyosha and Ivan Karamazov.
25 Cassedy, Dostoevsky’s Religion, 4
26 Matthew Spinka, “The Russian Progressive Religious Thought,” The Journal of Religion 6, no. 6 (November 1926), 608, http://www.jstor.org/stable/1195508
27 Ibid
28 Ware, The Orthodox Way, 81
29 Zenkovsky, “The Spirit of Russian Orthodoxy,” 49
30 Ibid
31 Dostoevsky, The Brothers Karamazov, 245
32 Ware, The Orthodox Way, 39
33 Dostoevsky, The Brothers Karamazov, 55
34 Idinopulos, “The Mystery of Suffering in the Art of Dostoevsky, Camus, Wiesel, and Grünewald”
35 Dostoevsky, The Brothers Karamazov, 164
36 Denis Dirscherl, Dostoevsky and the Catholic Church (Chicago: Loyola University Press, 1986), 52
37 Dostoevsky, Fyodor, Demons, translated by Robert A. Maguire, (New York: Penguin Books, 2008), 276
38 Jones, “Dostoevskii and religion”, 155
39 Dostoevsky, The Brothers Karamazov, 245
40 Volkova, “The Salvation Story in Russian Literature”
41 Dostoevsky, Crime and Punishment, 483
42 Dostoevsky, Crime and Punishment, 479
43 Dostoevsky, Crime and Punishment, 464
44 Dirscherl, Dostoevsky and the Catholic Church, 59
45 Joseph Frank, Dostoevsky, (Princeton: Princeton University Press, 2010), 11946 Dirscherl, Dostoevsky and the Catholic Church, 47, with reference to Dostoevsky’s
Diary
47 Frank, Dostoevsky, 120
48 Frank, Dostoevsky, 119
49 Class with Dr. Frank Kirkpatrick, in “Atheism and the Eclipse of Religion”, October 19th, 2010
50 Joseph Frank, 121
51 Class with Dr. Frank Kirkpatrick, in “Atheism and the Eclipse of Religion”, October 20th and 26th, 2010
52 Frank, Dostoevsky, 119
53 Frank, Dostoevsky, 125
54 Dostoevsky, Crime and Punishment, 233
55 Dostoevsky, The Brothers Karamazov, 242
56 Dostoevsky, The Brothers Karamazov, 244
57 Dostoevsky, Crime and Punishment, 233
58 Page 368 of Crime and Punishment explains he didn’t murder the woman to benefit mankind but rather for an “ideal.”
59 Dostoevsky, Crime and Punishment, 66
60Dostoevsky, Crime and Punishment, 66
61 Dostoevsky, The Brothers Karamazov, 26
62 Dostoevsky, Demons, 127
63 Dirscherl, Dostoevsky and the Catholic Church, 48
64 Jones, “Dostoevskii and religion”, 148
65 Dostoevsky, Fyodor, The Idiot, translated by Richard Pevear and Larissa Volokhonsky, (New York: Alfred A. Knopf, 2001), 22
66 Dostoevsky, The Idiot, 23
67 Ibid
68 Dostoevsky, The Brothers Karamazov, 636
69 Dostoevsky, The Idiot, 413
70 Dostoevsky, Demons, 129
71 Dostoevsky, The Idiot, 225-226