கரையில் திமிறும் மீன் – 3 Days In Quiberon

“You must not quote to me what I once said. I am wiser now.” – Romy Schneider

உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களில் அக்குறிப்பிட்ட சம்பவங்களின் பின்னணி ஆராயப்பட்டிருக்கும். அச்சம்பவம் நிகழ்வதற்குக் காரணமாக அமைந்துவிட்ட உந்து சக்திகள் மீது கவனம் குவிக்கப்படும். விதியின் கரங்கள் வாரி அணைத்த மனிதர்களின் அவலமும் அதன் விளைவுகளும் ஒற்றைச் சரடில் கச்சிதமாகக் கோர்க்கப்பட்டு வாழ்வு குறித்த பதற்றமான யோசனைகளை முன்னெடுப்பதே அவற்றின் நோக்கம். சாதனையாளர்களின், பிரபலங்களின், வரலாறை உண்டாக்கித் தனதாக்கிய மாமனிதர்களின் வாழ்க்கைச் சரிதத் திரைப்படங்கள் வேறு விதமானவை. அவர்தம் ஒட்டுமொத்த வாழ்வும் மூன்று மணி நேரத் திரைப்படத்திற்குள் திணறிப் பிதுங்கியவாறு இருக்க, காலப் பெருவெள்ளத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் முழுமையடையும் முன்னமே அது கடலைச் சேர்ந்திருக்கும். நரைகூடிக் கிழப் பருவமெய்தி மையக் கதாபாத்திரத்தின் கண்கள் நிலைத்திருக்க ஒரு கிரேன் ஷாட் அல்லது ஓர் அந்திச் சூரியன். சுபம். ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தி ஒரு நல்ல உதாரணம். விளிம்புகளின் ஓரங்களை ஒட்டியவாறே தாவித் தாவிக் கடந்து முன்னகர்ந்து முழுமைகொண்டு விட்டதைப் போன்ற நிறைவைப் புனைந்துவைத்தால் போதும் என நம்புகிற இயக்குநர்கள். தண்ணீர் கொடுத்தே ஏப்பம்விட வைக்கிறவர்கள். உங்களது மேடிட்ட வயிறைத் தடவிக்கொண்டே நீங்கள் வீடு போய்ச்சேரலாம். ஆனால், முழுமை என்றதும் மனக்கண்ணில் எழுவது விளிம்புகளற்ற வட்டம் அல்லவா?

எமிலி அதெஃப் (Emily Atef) இதன் இயக்குநர். நடிகை ரோமியின் (Romy Schneider) கதை. இயக்குநர் ரெனே க்ளெமெண்ட்டின் (René Clément) Purple Noon (1960), விஸ்காண்டியின் (Luchino Visconti), Boccaccio ’70, Ludwig (1972), ஆர்சன் வெல்ஸின் The Trial (1962) போன்ற புகழ்பெற்ற படங்களில் நடித்தவர். ஆனால், அவர் பொதுத்திரளிடையே நிலைபெற்று இறுதிவரைக்கும் நினைவுகூரப்பட்டது ரோமியே விரும்பாத ‘சிஸ்ஸி’ கதாபாத்திரத்திற்காக! தன் நடிப்பாற்றலை உணர்ந்தறிந்த ரோமிக்கு ஓர் அமெச்சூர் கதாபாத்திரத்தின் பிம்பத்தை எந்நேரமும் சுமந்தலைவது என்பது அதீத எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். தெருவில், விழாக்களில், பத்திரிகையாளர் சந்திப்பில் என எங்கும் எப்போதும் ‘சிஸ்ஸி, சிஸ்ஸி’ என்று உற்சாகத்துடன் கூக்குரலிடும் கூட்டம். கை வீசி, தலை சாய்த்து, போலிப் புன்னகைகளை ஒளிர்த்து, முத்தங்களைப் பறக்கவிடும் வாழ்வை ரோமி வெறுத்தார். மேலதிகப் பணமும் புகழும் ஈட்டித்தந்த ஜெர்மனியை விட்டு வெளியேறி, பரிசோதனை திரைப்பட முயற்சிகளை மேற்கொண்டிருந்த புதுயுகப் பாரீஸில் குடிபுகுந்தார். எழுந்துவந்த புதிய அலையில் கொட்டித் தீர்க்கும் மழையானார்.

இயக்குநர் எமிலி அதெஃபின் முந்தைய படங்கள் எதுவும் இணையத்தில் காணக் கிடைப்பதில்லை. ஆனால் இந்தக் கருப்பு வெள்ளைத் திரைப்படத்தின் நல்ல தரமான ஒளிப்பிரதி பதிவேற்றப்பட்டுள்ளது. ஜெர்மனியிலிருந்து உருவாகிவந்த பெண் இயக்குநர்கள் மீது எனக்கிருக்கும் பிரேமை காரணமாக இப்படத்தைத் தேடிப் பார்த்தேன். எதேச்சையாகக் கண்டடைந்தேன் என்றும் சொல்லலாம். ஜெர்மனியில் லெனி ரெய்ஃபன்ஸ்தால் (Leni Riefenstahl) தொடங்கி ஹெல்மா சாண்டர்ஸ் (Helma Sanders-Brahms), மார்கரெத் வான் ட்ரோட்டா (Maragarethe Von Trotta) வரை நீளும் தொய்வற்ற தரமான தொடர்ச்சி உள்ளது. அதன் மகோன்னத வரிசையில் எமிலியும் நிச்சயமாக இடம்பெறுவார் என்பதை உணர நீண்ட நேரம் எடுக்கவில்லை. வியப்பு மின்ன படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

படத்தின் தலைப்பிலேயே கதை இருக்கிறது. நடிகை ரோமியின் வாழ்விலிருந்து வெறும் மூன்று நாட்கள். ஜெர்மனியிலிருந்து இரண்டு பத்திரிகையாளர்கள் ரோமியைப் பேட்டியெடுக்க வருகிறார்கள். அவர்களுடனான உரையாடல் ஊடாக அவளது ஆளுமையும் நினைவுகளும் வெறுமையும் வெளிப்பட்டவாறு இருக்கின்றது. சம்பவங்களைக் கோர்த்துக் கொண்டுபோய் கதாநாயகர்களின் சகல பக்கங்களையும் அரைகுறையாகப் புரட்டித் தொட்டுக் காட்டி மரணத்தில் முடிக்க வேண்டும் என்கிற அசட்டுத்தனம் இல்லை. வருடங்களை அளந்து பார்க்கும் உத்தேசங்கள் இருப்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. ஆனால், வெட்டியெடுக்கப்பட்ட சின்னஞ்சிறிய சதைத் துண்டின் குருதி வாடை நாசியைத் துளைக்கிறது. தன்னுடலே தன் பாகத்தைக் கண்டு அருவருப்படையும் விசித்திரம். வாழ்வின் தீராத நோய்மை நெருங்குவதற்கான சமிக்ஞை. உதிர்ந்த இறகைக் கொண்டு பறவை அளைந்த வானத்தை நம் கற்பனையில் விரிக்கச் செய்யும் வித்தை படத்தில் அனாயசமாகக் கூடிவந்திருக்கிறது. ஒரு துளி தேனில் மகரந்தமணிக் காட்டையே காணச் செய்தல். மெல்லிய சுடரொளியில் துலங்கும் அகலக் கருவறை. பிறை நிலவு மிதக்கும் ஆழக்கிணறு. பேட்டிக்குப் பிறகு ரோமிக்கு நிகழவிருப்பதை படத்தின் தொடக்கத்திலேயே எழுத்துருவில் காட்டிவிடுகிறார்கள். அதனால், அவளுடைய எதிர்காலத்தை முன்னமே அறிந்துவிட்ட துடிப்பில், ரோமியின் கையறு நிலையைக் காணும் போதெல்லாம் நமக்குள் காருண்யம் பொங்கித் ததும்புகிறது. அவளது வாழ்வை நெருங்கி நின்று அறிந்து, மிகுந்த பரிவுடன் அணுகத் தலைப்படுகிறோம். 

தன்னுள் தானறிந்த மெய்யான சுயத்தின் விசையை, அன்புக்குரியவர்களுக்காக அறுத்துக்கொள்ள நேரிடுபவர்களின் பரிதாப நிலை, அகத்தின் ஆழத்துள் ஓயாத சுழலை உண்டு பண்ணுகிறது. தன்னுடைய விருப்பத் தேர்வுகளுக்கும் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்குமான அனுசரணைப் போராட்டத்தின் பளு ஏற்றிவைக்கும் அழுத்தங்கள். விருப்பங்கள் சுயநலமாகவும் திணிப்புகள் பிரியத்தின் பரிமாணமாகவும் புதிய பெயர்களைச் சூடிக்கொள்கின்றன. தானொரு சுயநலவாதி எனும் குற்றவுணர்விலிருந்து விடுபடும் பொருட்டு, பாவனையாகவே இருப்பினும், பரிந்திருக்கும் பிரியத்தின் கைகளைப் பற்றிக்கொள்ளத் தவிக்கிறோம். எப்பேர்ப்பட்ட மேலான ஆளுமையும் இதற்கு விதிவிலக்கல்ல. மேன்மையுற்றுப் பொலிந்து திரண்ட கலையாளுமைகளிடையே எழும் உறவுநிலை சார்ந்த சிக்கல்கள் மேலும் பன்மடங்கு ஆவேசத்துடன் உருக்கொள்கின்றன. அத்தகைய ஆவேசப் பொழிவை எதிர்கொள்ளத் திராணியற்று சரணடைபவர்கள்தான் அநேகம் பேர். தம்மைக் கலைத்துப்போட்டு, விடைத்துக்கொள்ளும் அடியாழ விருப்புகளை கவனத்துடன் விலக்கி, ‘சமூகம் என்கிற நான்கு பேர்’ ஏற்றுக்கொள்கிற ஒழுங்குகளை மட்டும் பொறுக்கியெடுத்து சீராக்கிக்கொள்ள அவர்கள் முனைகிறார்கள். ஆனால், வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் உருமாற்றங்களின் வரவினால் சிதறுண்டு தவிக்கும் அவர்தம் எண்ணக் கொப்பளிப்புகளில் செதிற்கல் பாய்கிறது. ஆளுமைச் சிதறல் உண்டாக்கும் விரிசல்களுக்குள் சிக்குண்டவர்களின் நெஞ்சத்து அதிர்வுகள் பாளம் பாளமாக வெடித்து வடுக்களாகின்றன.

ரோமிக்கு மட்டுமின்றி, நம் அனைவருக்குள்ளும் கடந்துவந்த பாதை குறித்த சலிப்புகளும் ஏக்கங்களும் வழிதவறி விட்ட அங்கலாய்ப்புகள் தரும் குற்றவுணர்ச்சியும் ஊளையிட்டவாறு இருக்கின்றன. அதன் எதிரொலிப்புகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி, எதிர்காலம் இன்னும் மிச்சமிருக்கிறது எனும் ஒரே வசீகர நம்பிக்கை. நிகழ்காலத்தைத் தகவமைத்துக்கொண்டு பழைய களங்கங்களில் இருந்து மீண்டெழ ரோமி முயலும் போதெல்லாம் பழக்கத்திற்குச் சுகப்பட்டுவிட்ட உள்ளுறைப் பேய்கள் வெற்றுச் சமாதானங்களை நாடுகின்றன. அவற்றை அடக்கி ஆள விழைகையில் மன அழுத்தங்கள் வீரிட்டுப் பெருகுகின்றன. தூக்கமற்ற இரவுகள். தகித்தணைந்த வெப்பச் சாம்பலை அவளது மேனியெங்கும் மூர்க்கத்துடன் பூசிச் செல்லும் நினைப்புப் புரவி. அப்போதெல்லாம் ஒரு முழு போத்தல் சாராயம் அவசியமாகிறது. நுரையீரல் நிறைத்து வெளியேறும் புகை, காற்றின் அடர்த்தியைக் கூட்டுகிறது. தவிர்க்க நினைத்ததெல்லாம் மனக்குரங்கின் சொறிதல்களுக்கு ஒப்புக்கொடுக்கின்றன. மறப்பதே நினைப்புதான். மாறுதல்களை உதறித்தள்ளி ஒதுக்கிவிட்டு அவள் தனது இயல்பான சந்தோஷங்களுக்குத் தாற்காலிமாகத் திரும்புகிறாள். சுய அழிப்பின் மென்சோக வருடல்களுக்கு இளகிக்கொடுத்து சிலிர்க்கிறாள். உற்சாக மிதப்பின் ஜுவாலை அவளது உரோமங்களில் அடர்ந்திருந்த சாம்பலை மீண்டுமொருமுறை தீப்பிடிக்கச் செய்கிறது.

தனது மகனைத் தக்கவைத்துக்கொள்ளவே தன்னை உரித்துப்போட்டு தானல்லாத ஒன்றாய் உருமாறத் தடுமாறுகிறாள். தான் ‘திருந்தி’ ஸ்திரப்பட்டுவிட்டதை சமூகத்திற்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவளைப் பேட்டி எடுக்கவே ராபர்ட் லெபெக்கும் மைக்கேலும் வந்துசேர்கிறார்கள். அவளைச் சீண்டி, தந்திரத்துடன் ஊடுருவி, கசப்புகளை வெளிக்கொணர்ந்து, அவளது இருண்ட பக்கங்களை வாசகருக்கு விற்று பரபரப்பாக்குவதே மைக்கேலின் அசலான நோக்கம். நட்பின் போர்வையில் அமிழ்ந்துவரும் மைக்கேலின் நைச்சியப் பேச்சுகளைக் குறித்து ரோமியின் தோழி ஹில்டெ எச்சரித்துக்கொண்டே இருக்கிறாள். எச்சரிக்கைகளைப் பொருட்படுத்துவதோ அவை குறித்து அலட்டிக்கொள்வதோ அவளது டிஎன்ஏ.வில் இல்லை. ‘இது எல்லாம் வரட்டுமே. இவை அனைத்தும் என்னுள் உணரும் நான் அல்லவா?’ என அவற்றை எளிதாகப் புறந்தள்ளி விடுகிறாள். ‘இதைச் சொல்லாதே’, ‘ஐயோ, இதைப் போய் பத்திரிகையாளனிடம் சொல்லலாமா?’ என நாம் பதறிக்கொண்டிருக்கும் போதே அத்தனையையும் அவள் சொல்லி முடிக்கிறாள். மீன்களுக்குப் புழுவாவதன் வாதை. ஆனால், உடலைக் குறுக்கியவாறு அவள் சிகரெட் புகைத்தபடி அமர்ந்திருக்கையில் சட்டென்று கவியும் உளச்சித்திரம் வேறொன்றைப் புலப்படுத்துகிறது. அவள் அவர்களிடையே நடித்துக்கொண்டிருக்கிறாள். அவளது ஆளுமை அசாதாரணமானது. அவள் புழுவாகத் துடிக்க வாய்ப்பே இல்லை. புழுவை மீனுக்குத் தரும் கைகள் அவளுடையவை. சீறிப் புரண்டுவரும் பேரலையானாலும் கரைகளை மீறாத கட்டுப்பாடுடையவள். தன்னை அரிந்தெடுத்து வைத்தாலும் பொதுவெளி அறிய வேண்டியதை மட்டும் அளந்து கொடுக்கத் தெரிந்தவள். பன்னெடுங் காலமாக திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட அவளது பிம்பத்தின் முன் மைக்கேலின் கபடத்தனங்களால் ஈடுகொடுக்க முடிவதில்லை.

ஒவ்வொரு வெட்டிலும் (cuts) இயைந்து வந்திருக்கும் இலயம். கருப்பு வெள்ளைத் திரைப்படத்தில் பளிச்சிடும் ஃபிளாஷ்கள். பேசிக்கொண்டே புன்னகைத்தவாறு போஸ் கொடுக்கும் இலாவகம். ஒவ்வொரு கணமும் மாறிவரும் கதாபாத்திரங்களின் உளவியற் சிக்கல்களைப் பின்தொடரும் பக்குவம். மொத்தத்தில் அபாரமான படம். அலைகள் விசிறியடிக்கும் ஈரப் பாறைகள் மீது ரோமி தாவித் தாவி ஓடி விளையாடும் அந்தக் கடைசிக் காட்சியில் பீறிடும் அவளது உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. அது என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் எனும் மன்றாடலின்றி நாம் நிறைவுகொள்ள இயலாது. ஆனால், அதற்குப் பிறகு அவளுக்கு நிகழ்ந்ததெல்லாம் ஊழியின் கொடுங்கனவுகள். பேருவகைப் பாய்ச்சலுடன் அவள் காற்றில் மிதந்திருக்கும் அந்தக் கடைசி ஷாட், காலத்தில் எப்போதோ உறைந்துவிட்டது.

*

இருண்ட காலத்தின் நட்சத்திரங்கள்- Cold War

படத்திலிருந்து ஒரு தருணம். இருளும் ஒளியும் முயங்கிக் கிடக்கும் அந்தக் கறுப்பு வெள்ளைக் காட்சியில் இளமை ததும்பிக்கொண்டிருக்கிறது. நாட்டுப்புறப் பாடற்குழு ஒன்றை உருவாக்கி முன்னெடுக்க முனைந்திருக்கும் போலந்து அரசாங்கத்தின் முயற்சியில் பங்குபெற்று, தத்தம் திறமைகளை வெளிக்காட்டி, தேர்வாகிவிடத் துடிக்கும் முனைப்பில் குழுமியிருக்கும் இளைஞர் கூட்டம். சமீபத்தில் நிகழ்ந்து முடிந்திருக்கும் இரண்டாம் உலகப் போரின் துக்கங்கள் தீண்டியிராத சதைப்பிடிப்புள்ள மிருதுவான கிராமத்து முகங்கள். அலைக்கழிப்புகள் ஏதுமற்ற அமைதியான கண்கள். அவர்தம் ஒவ்வோர் அசைவிலும் வியாபித்திருக்கும் வசீகரத்தைக் கண்டு மயங்காமல் இருக்க முடிவதில்லை. குளிர்ச்சியான நீர்ச்சுனையின் வாஞ்சையில் பணிந்து குழையும் புற்கள் போல. களைப்பும் சோர்வும் அலை அலையாக நெளிந்து புரண்டு மூர்க்கங்களை மழுங்கடிக்கும் பிரயத்தனங்களுடன் உக்கிரங்களைக் கரை சேர்ப்பித்துக்கொண்டிருந்த வேளையில், அந்த இளைஞர் கூட்டம் ஆடலும் பாடலுமாக ஆனந்தக் கனவில் இலயித்திருக்கிறது. அவர்கள் தாளக் கணக்குகள் எதுவுமின்றி ஆன்ம ஓர்மையை நம்பிப் பாடுபவர்கள். அவை நம் உயிர்ச்சுடரை உரசிச்செல்கின்றன. மனத்தை விம்மச் செய்யும் பேதைமை மங்காத பொன்னலங்கார நாத வருடல்கள் நம்மைக் கட்டிப்போடுகின்றன. ஸூலா (Joanna Kulig) அவர்களுள் ஒருத்தியல்ல என்பதைத் தேர்வாளரான ஐரீனா உடனடியாகக் கண்டுகொள்கிறாள். பாம்பின் கால் பாம்பறியாததா? ஆனால் துக்கங்களை விழுங்கி பாசி படர்ந்துவிட்ட ஸூலாவின் உறுதியான கருவிழிகளில் ஓர் ஆண் தேடுவது வேறு. விக்டர் அவளைக் கண்டடைகிறான்.

போரின் பின்னணியில் ஒரு காதல் கதையைச் சொல்வது ஒன்றும் புதிதல்ல. துப்பாக்கி முழக்கங்களுக்கும் பீரங்கி வெடிப்புகளுக்கும் நடுவே கண் பார்த்து, கை கோர்த்து, கட்டித் தழுவி முத்தமிட்டு, பிரியா விடைகொடுத்து கண்ணீர் உகுக்கும் காவியக் காட்சிகளை காஸப்ளாங்கா காலத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். இவற்றிலிருந்து கொஞ்சம் விலகி, படத்தின் உச்சக்காட்சி வரைக்குமே போரின் வெறுமையை முற்றிலுமாக ஒதுக்கிப் புறந்தள்ளிவிட்டு காதலை மட்டும் பின்தொடர்ந்த படம் என ஹும்பர்தோ ஸொலாஸின் செஸிலியாவைக் (Cecilia, 1982) குறிப்பிடலாம். தம்மைச் சுற்றி இறுகிக்கொண்டிருக்கும் கொந்தளிப்பான சூழல் குறித்த பிரக்ஞை துளியுமின்றி நாயகனும் நாயகியும் காதலித்துக்கொண்டிருப்பார்கள். காதலுக்குக் கண்ணில்லை! காதற் சாளரங்களின் வசந்தங்கள் திறக்கும் அதே கணத்தில் அதற்கு விரோதமாய் புரட்சிக் கனலும் முன்னறிவிப்பின்றி பிரவேசித்து காதலுக்கு ஊறு விளைவிப்பதென்பது அதிர்வுறச் செய்யும் முரண். பார்வையாளர்களுக்குமே அந்த முடிவு சகலத்தையும் கலைத்துப்போட்டு திணறடித்த ஒன்றுதான். இத்தகைய போர்ப் பின்னணி வரிசையில் வைக்கத் தகுந்த பாவெல் பாவ்லிகோவ்ஸ்கியின் (Pawel Pawlikowski) சமீபத்திய படமான Cold War-ல் வழக்கமான திடீர்த் திருப்பங்களோ போரின் மரண ஓலங்களோ இல்லை. மெல்லுணர்ச்சிச் சீண்டல்களும் சம்பிரதாயப் படபடப்புகளும் இல்லை. ஏனெனில், இப்படம் நம்பிக்கையின் விளைவாய் இணைந்த இரு மனங்களது வாழ்வின் ஊடாக போருக்குப் பிந்தைய வெவ்வேறு அரசியல் சுழிப்புகளை விரித்துச் செல்கிறது. 

இயக்குநர் பாவெலின் பெற்றோரது வாழ்வைத் தழுவி எடுக்கப்பட்ட படம். சமர்ப்பணமும் அவர்களுக்குத்தான். 4:3 விகிதத்தில் (aspect ratio) கறுப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ளது. பனிப்போர் மூளும் காலகட்டம். அத்தகைய உக்கிரமான காலகட்டத்தில் இரு நெஞ்சங்களிடையே இரைச்சலிட்டுப் பெருகி வளரும் உயிர்த்தீ. அதனை அடர்த்தியான புகைமூட்டத்தின் தற்காலிக மறைப்புக்கு அவ்வப்போது காவு கொடுக்க நேர்ந்தாலும் தங்களது காதலின் தகிப்பை விக்டரும் ஸூலாவும் ஊதிப் பெருக்கி அணையாது பாதுகாக்கிறார்கள். உச்சியில் துடிக்கும் இசையை திடும்மென நிறுத்திவிட நேர்கிற அவலம் அவர்களை வாட்டியெடுக்கிறது. அதன் அதிர்வுகள் அடங்கிக் குன்றாதிருக்க எந்நேரமும் அதனை மானசீகமாக மீட்டிக்கொண்டு பொரும வேண்டிய நிர்பந்தம் மனப் பாரங்களைக் கூட்டுகிறது. பின்னொரு நாளில் தொடர்ந்திடக் கொப்பளிக்கும் ஆவேசம் மட்டுமே ஒரே ஆறுதல். இதுபோன்று எத்தனை இடர்ப்பாடுகள் நேர்ந்தாலும் ஆழத்துள் நிலைபெற்றதைச் சோதிக்கும் வல்லமை மேற்பரப்புச் சலனங்களை உண்டாக்கும் கல்லெறிதல்களுக்கு இல்லை. எனினும், ஸ்பரிசங்களை அண்டவிடாத தொலைவும் பிரிவின் துயரும் ஆழங்களை அசைத்துப் பார்க்கிறது. சஞ்சலங்களும் சந்தேகங்களும் வரிசை கட்டிவந்து நிற்கின்றன. தீர்மானங்களின் இசைவுக்கேற்ப காரணிகளை அடுக்கிக்கொண்டு வரும் மனத்தின் வெவ்வேறு பாவனைகளை படத்தில் சலித்தெடுத்து வைத்திருக்கிறார்கள். திடீரென அந்நியப்பட்டுவிடும் நெருங்கிய நெஞ்சங்களை அணுகுவதில் உள்ள சிரமங்களையும் சிக்கல்களையும் பாவெலால் 85 நிமிடங்களுக்குள் முழுதாய்க் காட்டிவிட முடிந்திருக்கிறது. விக்டருக்கும் ஸூலாவுக்கும் இடையேயான உணர்ச்சிப் பரிமாற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இறுக்கமான புறச்சூழலுக்கு பொருந்திப் போகிறாற்போல அமைக்கப்பட்டுள்ளன. கனவுகளுக்கும் நிதர்சன வாழ்க்கைக்குமான இடைவெளிகளை இருவரும் பிரியத்தின் கைகோர்த்து பூர்த்தி செய்கிறார்கள்.

ஒன்றைக் கடைபரப்பிக் காட்டிவிட்டு வேறொன்றை நுட்பமாக உணர்த்துவதில் பாவெல் கைதேர்ந்தவர். பாவெலின் முந்தைய படமான Ida-விலும் நாம் அகழ்ந்தெடுக்க வேண்டிய சங்கதிகள் ஏராளமாகப் பொதிந்திருக்கும். இவரது பெரும்பாலான காட்சிச் சட்டகங்களின் குவிமையமாக உரையாடுகின்ற முகங்களோ ஏதேனுமொரு செயலில் ஈடுபட்டிருக்கும் கதாபாத்திரங்களோ இல்லாது அந்தக் குறிப்பிட்டத் தருணங்கள் நிகழ்கின்ற பின்னணிக்கு மேலதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வரலாற்றின் ஒழுக்கில் சின்னஞ்சிறிய கண்ணிகளாக வாழ்ந்து மடியும் சொற்ப காலத்திற்குள் எத்தனை எத்தனை அற்பக் கூச்சல்கள்! பிற படங்களில் முழுத் திரையையும் ஆக்கிரமிக்கும் பிரதான பாத்திரங்களின் ஆகிருதியை காட்சிச் சட்டகத்தின் கீழ்ப்பகுதிக்கு நகர்த்திவிட்டு காட்சிப் பின்புலம் பிரம்மாண்டமாய் எழுந்து நின்று அச்சுறுத்துவதை கவனப்படுத்துகிறார். இடதுசாரி அரசாங்கத்தின் மீதான பாவெலின் கூரிய விமர்சனங்கள் வெற்றுக் கோஷங்களாக முன்வைக்கப்படாமல் அமைதியின் உள்ளொடுங்கிய தன்மையுடனும் அறிவின் ஆழ்ந்தறியும் பக்குவத்துடனும் எதிரொலிக்கின்றன. தேசத்தின் பெயரால் வயிறு வளர்ப்பவர்கள்தான் அடிக்கடி ஏப்பம் விடுகிறவர்கள். முஷ்டி உயர்த்தி நரம்பு புடைக்க அவர்கள் கூச்சலிடுவதெல்லாம் முகமூடிகளை இறுகப் பற்றிக்கொண்டு கோமாளித்தனங்களை இன்னும் கொஞ்சம் நீட்டித்துவிட முனைவதன் வெளிப்பாடே. ஆனால் நாம் உள்ளுள் அறியும் உண்மை வேடங்களுக்கு எதிரானது. எவராவது முதுகெலும்புள்ளவர்கள் முறுக்கிக்கொண்டு எதிர்க்கிற பட்சத்தில் அவர்கள் மீது பொல்லாத முத்திரைகள் குத்தி ஆக்ரோஷத்தின் வழியாகப் பசப்புவதைவிட மேலான வழியை இன்னமும் தேச பக்தர்கள் கண்டுபிடிக்கவில்லை. விக்டர் சுரணையுள்ளவன். போலந்திலிருந்து பாரீஸுக்குத் தப்பித்துச் செல்கிறான். பாதசாரியின் கவிதை வரி உணர்த்தும் அனர்த்தங்களைப் போல ‘சொந்த வீட்டில் அகதியாக, சொந்த உடம்பில் அகதியாக’ காதலியையும் தேசத்தையும் பிரிந்து வாழ்கிறான்.

பழம்பெருமை பேசி பழங்கதைகளுக்கு பூரித்துப்போகும் தனி நபர்களிடமே எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனும் போது ஓர் அரசாங்கமே புதுமைக்கு எதிராக வீற்றிருக்கிறது. ஜாஸும் ராக்கும் கோலோச்சிய காலத்தில் போலந்து நாட்டின் கம்யூனிச அரசாங்கம் நாட்டுப்புறப் பாடலைப் பாடுவதற்கு கோஷ்டி சேர்க்கிறது. குழுவினரது உடைகள் பழங்குடி மக்களின் பிரதிபலிப்புகளாக உருமாறுகின்றன. இங்கே கிராமங்களுக்குத் திரும்ப வேண்டும் என்பது வெறும் பாவனைதான். இவர்களது ‘பண்பாட்டைப் பாதுகாத்தல்’ முழக்கங்கள் அத்தனையும் நவீன மனங்களின் ஒன்றிணையும் தன்மைக்கு எதிரான நோக்கங்கள் கொண்டதாகவே இருக்கின்றன. தனது சுய இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முனையும் அதிகார வர்க்கங்களின் அசட்டு மோதலில் வேரற்றுத் திரியும் மனிதர்கள் மீதான பச்சாதாபம் புதிய உருக்கொள்கின்றது. கடந்த காலத்திற்குத் திரும்பினாலன்றி மோட்சமில்லை என்று நம்பச் சொல்கிறார்கள். ஆனால் நிதர்சனம் வேறு விதமானது. அது காலூன்றிக் கிடக்கும் சுரணையுள்ளவர்களையும் நிலம் நீங்கச் செய்கிறது. ‘We Welcome Tomorrow’ எனும் வாசகம் பொதிந்த பதாகையை நாட்டுப்புறப் பாடற் குழுவின் தொடக்க விழாவிற்காக கொடியேறி கயிறில் கட்ட முனைபவன் குப்புற வீழ்வதைப் படத்தில் காட்டுகிறார்கள். பாவெலின் நக்கல்!

காலம் வழுக்கிச்செல்வதை இயக்குநர் உணர்த்துகின்ற இடங்கள் பிரமிப்பை உண்டாக்கியவாறு இருந்தன. ஒரே பாடல் நாட்டுப்புறப் பண்ணிலும் ஜாஸிலும் ராக்கிலும் பாடப்படுகிறது. எடித் பியாஃப் (Edith Piaf) மேற்கோள் காட்டப்படுகிறார். இத்தனை பெரிய கான்வாஸிற்கு 85 நிமிடங்கள் என்பது மிகக் குறுகிய அவகாசம்தான். ஆனால் அதனுள் அணு உலை கொதித்து வெடிப்பதற்கு முந்தைய கணங்களை அநாயசமாக அடுக்கிச் செல்கிறார். ஓரிரு வசனங்களிலேயே கதாபாத்திரங்களின் வடிவ நேர்த்தி துலங்கிவிடுகிறது. நேர்முகத் தேர்வறைக்கு வெளியே தன் அருகே அமர்ந்திருப்பவளிடம் அவள் பாடவிருக்கும் பாடலைப் பாடச் சொல்லி கேட்கிறாள் ஸூலா. ‘நல்லாருக்கு. ஆனா இதை ரெண்டு பேர் சேர்ந்து பாடுனா இன்னும் நல்லாருக்கும்’ என்று தந்திரமாக அவளைத் தன்னுடன் கூட்டு சேர்த்துக்கொள்கிறாள். தேர்வாளர்களான விக்டர், ஐரீனா முன்பு ஸூலாவும் அவளும் இணைந்தே அந்தப் பாடலைப் பாடுகிறார்கள். ஸூலா கிராமத்திலிருந்து வந்தவள் அல்ல என்பது அவளது கண்களைப் பார்த்தவுடன் ஐரீனாவிற்குத் தெரிந்துவிடுகிறது. ‘வேற நாட்டுப்புறப் பாட்டு எதையாச்சும் பாட முடியுமா?’ என விக்டர் கேட்கையில் அவள் ரஷ்யப் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடலையே பாடுகிறாள். அவளது கடந்த காலத்தின் இடைவெளிகள் அடுத்தடுத்தக் காட்சிகளில் கச்சிதமாக முழுமை கொள்கின்றன. உண்மைக் கதையாக இருப்பதன் அனுகூலம். மரணத் தறுவாயிலும் ‘அந்தப் பக்கம் இன்னும் அழகா இருக்கும். அங்கே போய் காத்திருக்கலாம்’ என ஸூலா விக்டரின் தோளணைத்து அழைத்துச் செல்லும் காட்சியில் சிலிர்க்காமல் இருக்க முடியாது.

கூடடைந்துவிட்ட பறவைகள் வானில் விட்டுச்சென்ற சிறகடிப்பு இந்தப் படம். நம் காலத்தின் மாபெரும் இயக்குநர்களுள் ஒருவர் பாவெல்.

*

நெடுமரத்தின் தனிமை – The Wild Pear Tree

ஒரு வட்டத்துள் அடைபட்டு வாழ்வதைப் பற்றிய விசனங்கள் தீவிரமெடுக்கும் இளமையில் நமக்குரிய இடம் எங்கோ மலையுச்சியில் இருப்பதாய் நம்பத் தலைப்பட்டு அடிவாரத்தில் அரற்றத் தொடங்குகிறோம். உச்சியில் ஆடும் மரக்கிளையின் பூரிப்பைக் கண்டு ஏக்கங்கொள்ளும் மலையின் காலடிப் பெருமரத்தின் நமைச்சல் எளிதில் அடங்கிவிடக் கூடியதல்ல. அதனுள் மலை முகடுகளில் வேர் பரப்பும் கனவுகள் முகிழ்க்கின்றன. வெறும் பகற்கனவுகள்! நிதர்சனங்களின் சாபங்களை வடிகட்டிவிட்ட கானல் கிளர்ச்சியின் ஊற்றுகள். எடையற்று மிதக்கச் செய்யும் மாயக் கனவுகளின் இலயிப்பில் கட்டுண்டு கிடந்த பிடிமானங்கள் வெகு விரைவிலேயே நழுவத் தொடங்குகின்றன. மிதப்பின் விசை திடீரென அறுபட்டதால் திடுக்கிட்டு விழித்த மனத்தில் பெரும் பதற்றம் உண்டாகிறது. தூரத்திலிருந்து ஒற்றை மலையென அறிந்திருந்ததை நெருங்கி நின்றுணர்கையில் பிளவுண்ட பெரும் பாறைகளின் தொகுப்பாகக் காணத் தலைப்படுகிறோம். தலைக்கு மேலே தொங்கிக்கொண்டிருக்கும் மலையை இலகுவாகப் பறந்து சென்று அளைந்துவிடத் துடித்த பேராசைக் கனவுக்குமிழ்கள் சட்டென்று வெடித்துக் காணாமற் போகின்றன. பள்ளத்தாக்கின் சரிவுகளிலிருந்து சீறியெழும் மூச்சொலிகள் ஓய்ந்தொடுங்கிக் குமைகின்றன. தான் வீழ்ச்சியடைவதை பெரும் ஆரவாரத்துடன் உலகுக்கு அறிவித்துக்கொண்டவாறு எக்காளமிட்டுக் கொட்டும் அருவியின் சீற்றம் அளப்பரியதாகிறது.

சுய பலவீனங்களின் பெருஞ்சுழலில் சிக்கி மீண்டெழ மூச்சுத் திணறிக்கொண்டிருக்கையில் நமது சுற்றமும் நட்பும் சிறு கல்லாய் இடறினாலும் நெஞ்சின் ஆழங்களிலிருந்து ஆவேசம் பொங்கிப் பிரவகிக்கின்றது. காலூன்றி நிற்கவே தள்ளாட்டம் போடும் மனது, கற்கூரை தடுத்திருக்காவிட்டால் வானத்தை எட்டியிருப்பேன் என நொண்டிச் சாக்கு சொல்லி சமாதானமடைகிறது அல்லது வெறுப்பை உமிழ்கிறது. அவரவர்க்கு அவரவர் வழித்தடம். தன்னை மட்டும் கவனத்துடன் விடுவித்துக்கொண்டு மற்றமை மீது பழிகள் சுமத்தி தப்பித்துக்கொள்ளத் தோதாக நாம்/நம்மைச் சார்ந்திருக்கும் மனிதர்கள் எப்போதும் இருப்பார்கள்தானே? பலவீனர்களின் கூட்டுத் தொகையாக நிலைபெற்றுவிட்ட குடும்ப அமைப்பில் ஒருவரையொருவர் அண்டி அனுசரித்து ஐக்கியமாவதே தினசரி அல்லாட்டமாக நஞ்சூறி அச்சுறுத்தத் தொடங்குகின்றது. தான் இன்னார் எனும் விருப்பத்திற்கும் அறிதலுக்குமான இடைவெளிகள் நடைமுறை சார்ந்த முட்டுக்கட்டைகளால் நிரப்பப்படுகின்றன. உள்ளும் புறமும் தளைகள் இறுக இறுக நெருக்கிப் பிடித்து அழுத்தி வைக்கப்பட்டிருந்த உஷ்ணப் புழுக்கங்கள் தாள முடியாத தருணங்களுக்காகக் காத்திருக்கின்றன. ஓர் உச்சக்கணத்தில் அவை உக்கிரப் பிரவாகமெடுக்கின்றன. அவை எதிர்ப்படும் எவரையும் சீண்டிக் குதறி நெஞ்சங்குளிர்ந்து பசியாறத் தயங்குவதில்லை.

துருக்கிய இயக்குநர் நூரி பில்கே சைலானின் (Nuri Bilge Ceylon) சமீபத்திய படம் The Wild Pear Tree. 2018ம் ஆண்டின் தங்கப்பனை விருதிற்காக கான் திரைப்பட விழாவில் போட்டியிட்டது. அதன் மையக் கதாபாத்திரமான சினான் (Sinan), இளமைக்கால சைலானைப் பிரதிபலிக்கும் திரை வார்ப்பு. மேலே குறிப்பிடப்பட்டிருப்பவற்றின் விநோதக் கலவை. வரலாற்றுப் பெருமிதங்களில் தன்னை அமிழ்த்திக்கொண்டு நிகழ்கால ஒளியை இழந்துவிட்ட கிராமத்துக்குப் பட்டம் பெற்றுத் திரும்புகிறான். ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பது அவன் இலட்சியம். மெட்டாஃபிக்ஷன் வகைமையில் எழுதி முடிக்கப்பட்ட நாவல் பிரதியும் கைவசம் உண்டு. ஆனால், இன்னமும் இறந்த காலத்து நினைவேக்கச் சிறப்புகளை எண்ணிப் பொருமியவாறு இன்றைய நாளில் திணிக்கப்பட்டதைக் கசப்புடன் சப்புக்கொட்டும் ஊர். `சுற்றுலாக் கையேடு எழுதேன்’ என்று ஆலோசனை சொல்கிற மனிதர்கள். இன்மைகள் பலவும் புடம்போட்டு வரிசை கட்டி நிற்கிற சீரணிக்க இயலாத சூழலில் தனது நூலைப் பதிப்பித்து, தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள யத்தனிக்கும் இளைஞனின் கதை என ஒற்றை வரியில் படத்தைச் சுருக்கி விடலாம்தான். ஆனால், அவனது குறுகியோடும் வாழ்வில் சைலான் பொதிந்து வைத்திருக்கிற விசாலமான பார்வைகளை வியக்காமல் இருக்க முடியாது. பழைய கூடுகளை விட்டு வெளியேறி புத்துயிர் பூணும் சினானின் அகப்பயணத்தை விரித்தும் வளைத்தும் சகலத்தையும் காட்டிக்கொண்டு போகிறார்.

எந்தக் காட்சியைச் சொல்வது? எதைத்தான் விடுவது? மூன்று மணி நேரம் எட்டு நிமிடங்கள் ஓடும் படத்தின் அடர்த்தி கூடிக்கொண்டே போகிறது. தனது முந்தைய படங்களின் தடங்களைத் துடைத்தெறிந்துவிட்டு, சைலான் தன்னை முற்றிலுமாகப் புதுப்பித்துக்கொண்டிருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். நிறைய பேசுகிறார்கள். நகைத்து வைப்பதற்கான சொல்லாடல்கள் அவ்வப்போது மின்னுகின்றன. ரிச்சர்ட் லின்க்லேட்டரின் Before Sunrise/ Sunset/ Midnight படங்களில் பயின்று வருவது போன்று ஒரு ஃப்ளாஷில் கடக்கும் வேடிக்கைக் கதைகள் அல்ல. எட்டுத் திசைகளிலும் இலக்கற்று சிதறிப் பறப்பது போன்ற போக்குக் காட்டல்களுக்கு ஊடே துலக்கம் பெறும் வரையறைக்குட்பட்ட கரைகளுமல்ல. சைலானுக்கென்று அழுத்தமாய் நிறுவுவதற்கு ஓர் உறுதியான நோக்கம் இருக்கிறது. அது பாதை புலப்படாத காட்டில் திக்கற்று அலைவுறுவதில்லை. தன்னைத் திரட்டி வலுவாய் மிதந்தெழும் உள்ளடுக்குகள் ஒவ்வொன்றும் அதனதன் பிரத்யேகப் பின்புலத்தில் பலமாய் நெய்யப்பட்டிருக்கின்றன.

இரண்டு இமாம்களும் சினானும் தங்களுக்குள் விவாதங்கள் நிகழ்த்திக்கொண்டவாறு நீண்ட நடைப்பயணம் மேற்கொள்ளும் காட்சி ஓர் உதாரணம். திருட்டுப் பழம் பறிக்கும் இமாம்கள். மூத்த இமாமான சினானின் தாத்தாவைச் சுரண்டிப் பிழைக்கத் தயங்காதவர்கள். மரமேறி நின்றிருக்கும் இமாம் மீது மறைந்திருக்கும் சினான் தொடர்ந்து கல்லெறிந்து அவர்களைப் பதைபதைக்கச் செய்துவிட்டு, பின்னர் சாவகாசமாய் வெளிப்படுவதில் உள்ள வன்மம் சினானையும் புதிதாய்க் காட்டிக் கொடுக்கிறது. இருளின் ஆழங்களில் உள்ளுறைந்த கீழ்மைகளின் போதம் வெட்டவெளியை எட்டிப் பார்த்தல். நிழலின் கருக்கு. வெறுமையில் புரண்டு ஒருக்களிக்கும் ஒளியின் சின்னஞ்சிறிய கீற்று. Medium Long Shot-கள் வெட்டப்பட்டு Extreme Long Shot-கள் உட்புகும் அந்த விவாதப் பயணத்தில் முகமூடிகள் தம்மை உதறிக்கொள்கின்றன. மூவருடைய முகங்களின் கரிப்பையும் ஊடறுத்து குரல்களின் தீவிரம் மட்டும் மேலெழுகிறது. பல்வேறு முகங்களைச் சூடிக்கொண்ட ஒற்றைக் குரல். துளைக்க இயலாத பாறைகளில் மோதிச் சிதறும் எதிரொலிப்பு.

Red Weapon 6K கேமராவைப் பயன்படுத்திப் படமாக்கப்பட்ட விதம் ஃபிலிம் சுருள்களில் எடுக்கப்பட்ட படங்கள் தோற்றுவிக்கும் மயக்கத்தைக் கிளர்த்துகின்றது. பேரி மரத்தின் நிழலில் துயில்கொண்டிருக்கும் கைக்குழந்தையின் சிவந்து கன்றிப்போன மேனியெங்கும் செவ்வெறும்புகள் ஊர்ந்து செல்லும் அந்த ஒற்றைக் காட்சித் துணுக்கு போதும். சைலானின் மேதைமை வீச்சு எளிதில் புலப்பட்டுவிடுகிறது. சலிப்பும் சோர்வும் வீணடிக்கும் தினசரி வாழ்வு பற்றிய ஏக்கங்களினால் சன்னதங்கொள்ளும் உளைச்சல்களின் பெருக்கை அவற்றின் வீரியங்குன்றாது வளர்த்தெடுக்கிறார். ஆர்ப்பாட்டமில்லை. கூச்சலில்லை. ஆனாலும் அது நம் சிடுக்கான மனங்களைத் தீண்டுகிறது.

உணர்வுச் சீற்றம் சுழிந்தோடும் தருணங்களிலும் சைலான் தேர்ந்தெடுத்துக்கொள்கிற நிதானம் ஆச்சரியப்படுத்தியது. குற்றமும் கசடுகளும் சூழ்ந்த மின்சாரமற்றப் பின்னிரவில் தேநீர் கொண்டுவரும் கள்ளமில்லாப் பேரழகியை நாம் Once Upon A Time In Anatolia-வில் தரிசித்திருப்போம். முணுமுணுப்புகளின் ஒலியையும் முற்றடங்கச் செய்து நிசப்தங்களைத் தொட்டணைபவள். அவளுக்கு நிகராக நம்மைக் கலைத்துப்போடும் பெண்ணொருத்தி இந்தப் படத்திலும் வருகிறாள். ஹதீஸ்! சினானின் நண்பனுடைய முன்னாள் காதலி. அவளது தோரணையும் வேதனையும் பின்னியாடும் அவளுடனான சந்திப்பில் சினானின் பாசாங்குகள் பலமிழந்து தவிக்கின்றன. இயலாமையும் கழிவிரக்கமும் ஆங்காரமாக உருவெடுக்கும் அந்த முத்தக்காட்சியில் சிறிய அவகாசத்திற்குள்ளாகவே ஒருவிதமான கனவுத்தன்மை சலனமற்று முழுமையாகத் திரண்டுவிடுகிறது. ஒரு பழுத்த இலை அசையும் ஒலியைத் தவிர வேறு இசையில்லை. முடிக்கற்றைகள் அலைபாயும் ஹதீஸின் தீர்க்கமான முகத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும் நம்மைப் போலவே சினானின் ஆழத்தினுள்ளும் அப்போதே ஓர் உடைவு ஏற்பட்டிருந்தால் எத்தனை ஆறுதலாய் இருந்திருக்கும்?

ஒவ்வொரு கதாபாத்திரமும் அதனதன் இடத்தில் கச்சிதமாய்ப் பொருந்தி நிறைவுசெய்கிறார்கள். சிறுகதைகளின் சூட்சமங்களுக்குள் நின்று படம் பண்ணிக்கொண்டிருந்த இயக்குநர் நாவலுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார் என்று சொல்லலாம். நீட்டி முழக்கி விரித்தெடுக்க ஏராளமான அம்சங்கள் நெளிந்தோடும் படம். இதுகாறும் வரலாற்றுத் தொடர்ச்சியின் புழுதிப் பக்கங்களில் தனி மனிதர்களின் இருப்பைக் காத்திரமாகக் கேள்விக்குட்படுத்தி வந்தவர், முதன்முறையாக நம்மைத் தொடர்ந்துவரும் நிழலுருவை அரவணைக்கப் பார்த்திருக்கிறார். அதன் விளைவு என்றென்றும் நிலைத்திருக்கக்கூடியது.