பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எங்கள் கல்லூரியின் கலைவிழாவுக்குச் சிறப்பு அழைப்பாளராக வந்தபோதுதான், நான் அவரை முதல்முறை நேரில் பார்த்தேன். பார்த்துக்கொண்டே இருக்கையில், “ஏய்ய் அப்படியே பஞ்சு மிட்டாய் மாதிரியே இருக்காருய்யா” என்று எங்கள் தோழியொருத்தி கத்தினாள், “இல்லல்ல டெடி பியர்” என்றது இன்னொரு குரல். கண்ணறியாமல் பெருக்கெடுக்கும் அன்புக்குக் கண்ணுக்குத் தெரியும் எதோ ஒரு பொருளைச் சுட்டிப் பெயர் சூட்டும் முயற்சிதான் அவை யாவும், அபத்தம் என்றாலும் அழகுதான். நாம் சொல்ல நினைத்த எதைத்தான் அந்தக் குரல் சொன்னதில்லை? அது 1996ஆம் ஆண்டு. அதற்கு முன்பும், அப்போதும், அதன் பின்பும் சரி, இனி எப்போதும் சரி, நம்மோடு சிரித்து, நம்மோடே அழுது, கோபித்து, சமாதானம் செய்து, ஒரு நாள் விடிவதிலிருந்து அடைவது வரை எப்போதும் உடனிருக்கும் நம் குடும்பத்தின் குரல் அந்தப் பஞ்சுமிட்டாயுடையதுதானே?
தொண்ணூறுகளின் துவக்கம் வரையில் தொலைக்காட்சி என்றால் தூர்தர்ஷன் மட்டுமே. சந்திரபோஸ் என்கிற ஆளுமையை தூர்தர்ஷனில் முதன்முதலாகப் பார்த்ததே அலாதியான அனுபவம். “பூஞ்சிட்டுக் குருவிகளா” என்று விளித்துப் புது மெட்டுக் கேட்ட அந்தக் குரலையும் முகத்தையும் குறித்து வைத்துக்கொண்ட மனம், அதன் பிறகு வானொலிப் பாடல்களில் ‘இசை சந்திரபோஸ்’ என்று சொல்லப்படும்போதெல்லாம் துள்ளியது. அந்தப் பஞ்சுமிட்டாயும் இந்தப் பூஞ்சிட்டுக் குருவியும் இணைந்து இனிக்க இனிக்கப் பொழிந்த பாடல்களைக் கொண்டாடியது. ‘அண்ணா நகர் முதல் தெரு’வின் “மெதுவா மெதுவா”, “தீம்தனக்கதீம்”, ‘மாநகரக் காவல்’ படத்தின் “வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை“, ‘மருமகள்’ படத்தின் “மைனா ஒரு மைனா”, “ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான்”, ‘விடுதலை’ படத்தின் “நீலக்குயில்கள் ரெண்டு”, “தங்கமணி ரங்கமணி”, ‘சங்கர்குரு’ படத்தின் “என்னைப் பத்தி நீ என்ன நெனைக்கிற” போன்ற பல பாடல்கள் பலருடைய அன்றாடங்களுக்குள் வானொலி வழிப்புகுந்து கலந்திருந்தன. விவிதபாரதியும் இலங்கை வானொலியும் கோலோச்சிய காலத்தில் வானொலி வழியாக இல்லங்களை அலங்கரித்த எஸ்.பி.பி.யின் பொற்குரல், அதற்கடுத்த தொலைக்காட்சி காலத்திலும் நின்றொலித்து வென்றது. நெடுந்தொடர்கள் செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலத்தில் “தள்ளாடும் ஒருவன் தரையில் சாயுமுன் தாங்கிப் பிடிப்பது சொந்தம் கண்ணீர்த் துளிகள் கன்னம் தாண்டுமுன் கையால் துடைப்பது சொந்தம்” என்று இல்லங்களையும் மனங்களையும் நிரப்புவார் எஸ்பிபி, இசை சந்திரபோஸ். போலவேதான் “நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ், பூவா முள்ளா உங்கள் சாய்ஸ்” என்ற முகப்புப் பாடலும்.
குடும்பத்தோடு திரையரங்கிற்குச் சென்று திரைப்படம் பார்ப்பது என்பதற்குச் சில அளவுகோல்கள் இருந்தன. ஏவிஎம் நிறுவனத்தாரின் பல திரைப்படங்களை அப்படிக் குடும்பத்தோடு சென்று இரசித்துப் பார்த்திருக்கிறோம். அவற்றில் ஒன்று ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’. அந்தப் படத்தில் “வெத்தல மடிச்சுக் கொடுக்க” என்ற பாடலின் இருவேறு வடிவங்களை எஸ்.பி.பி.யும் சித்ராவும் அபாரமாகப் பாடியிருந்தார்கள். தவிர, மலைப்பிரதேசப் பின்னணியில், கண்ணை உறுத்தாத வண்ணக் கலவைகளாலான உடைகளுடன், மெல்லிய நடன அசைவுகளுடன் நாயகன் – நாயகியான பாண்டியராஜன் – ஊர்வசி இருவருமே உற்சாகமான பட்டாம்பூச்சிகளாகத் தென்பட்ட அழகிய பாடல், “வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சு”, இந்தப் பாடல் குழந்தைகள் பெரியவர் பேதமின்றி அனைவரும் தங்கள் அன்றாடப் பணிகளைச் செய்தபடியே அவ்வப்போது முணுமுணுக்கும் பாடலாயிற்று.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, சந்திரபோஸ் இசையமைத்த ‘மனிதன்’ திரைப்படத்தின் நாயகப் பா ‘வானத்தப் பாத்தேன் பூமியைப் பாத்தேன்’ ஒரு சூப்பர்ஹிட் பாடல். சிறையிலிருந்து வெளிவந்த நாயகன் வெளியிலிருக்கும் வாழ்க்கையின் அபத்தங்களைப் பாடும் பாடல் அது. “குரங்கிலிருந்து பிறந்தானா? குரங்கை மனிதன் பெற்றானா? யாரைக் கேள்வி கேட்பது? டார்வின் இல்லையே.. கடவுள் மனிதனைப் படைத்தானா? கடவுளை மனிதன் படைத்தானா? ரெண்டு பேரும் இல்லையே ரொம்பத் தொல்லையே” என்ற வைரமுத்தின் வரிகளை அந்தக் கதாபாத்திரத்துக்கு இருக்க வேண்டிய நியாயமான அலுப்புடனும், எள்ளலுடனும் பளிச்சென்று அளித்திருப்பார் எஸ்பிபி. வானொலியிலுமே மிக அபூர்வமாக ஒலித்த இன்னொரு சந்திரபோஸ் – எஸ்பிபி அற்புதம் “யாரோ மன்மதன் கோயிலின் மணித் தேரோ”. தன் பாடல்களில் கைத்தட்டல் ஓசைகளை ஆங்காங்கே விதவிதமாக அழகாகப் பயன்படுத்துபவர் சந்திரபோஸ். இந்தப் பாடலில் சலங்கையின் ஓசை, தாள லயமாக மனம் கவரும். நாயகியின் செவியில் நகைபூட்டி, கூந்தலில் பூச்சூட்டி, நெற்றியில் திலகமிடுவதாக நாயகன் பாடும் இந்தப் பாடலின் இரண்டாம் சரண ஈற்றுவரிகளை, “பார்வை இசைக் கோர்வை புதுப்பாடல் ஒன்று படிக்குமோ” என்று நிறுத்தி நிதானமாக எஸ்பிபி வடித்துக் கொடுப்பது அழகென்றால் அதன்பின் சொல்லும் “யாரோ” பேரழகு.
‘மக்கள் என் பக்கம்‘ படத்தின் “ஆண்டவனப் பாக்கணும்..” எனும் பாடலில் உருகிக் கசிந்தபடியும், ஓங்கி வளர்ந்தபடியும் எஸ்பிபி உச்சரிக்கும் “சர்வேசா”வை மட்டும் ஓர் ஒலிப்பேழை முழுக்கப் பதிந்துகொண்டு நாளெல்லாம் கேட்கலாம். நானெல்லாம் எங்கிருந்தாலும் அந்தச் சொல்லுக்கு மட்டும் ஓடிவந்து வானொலிக்கு எதிரில் நின்றுகொள்வேன், உலகத்தின் வேறெந்த ஓசையும் செவியேறாது. மொழியும், இசையும், குரலும் வசியத்திறம் கொண்டவை என்பதை அறிந்திராத காலத்தில் உணரக் கிடைத்த இந்தப் பாடலை இன்றும் மனம் துவளும்போதெல்லாம் கேட்கும் வழக்கம் எனக்கு இருக்கிறது, சத்தமே வராமல் அதே “சர்வேசா”வை அழைக்க எனக்குத் தெரியும். சந்திரபோஸ் இசையில் எஸ்பிபி பாடிய பாடல்கள் தனித்துவமானவை. தனி என்பதைப் பன்மையில் சொல்லத்தக்க இனிய முரண் எஸ்பிபிக்கே உரித்தானது. தனித்துவங்கள் இன்னும் உள்ளன.
*
சங்கர்-கணேஷ் என்பது ஒருவரின் பெயர் என்றே முதலில் நினைத்திருந்தேன். அவர்கள் இருவர், இரண்டு பேர் இசையமைப்பது என்பது இந்தியத் திரையுலகின் பல்வேறு மொழிகளிலும் நிகழ்ந்திருக்கிறது என்பதெல்லாம் பிறகு தெரியவந்தது. ‘நட்சத்திரம்’ திரைப்படத்தின் டைட்டில்களில் முதன்முறையாகப் பார்த்தேன், ‘இசை கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் – கணேஷ்’ என்று. அந்தப் படத்தில் ஆட்கொண்ட பாடல், “அவள் ஒரு மேனகை, என் அபிமானத் தாரகை”. பல்லவி மெல்ல மெல்ல வளர்ந்து ‘ரஞ்சனி.. சிவரஞ்சனி’ என்று பேருருக் கொள்ளும் இடத்தில் அசந்து நிற்கும் இரசிக மனம். இந்தப் பாடலையும் இருவருமாகவா இசைத்திருப்பார்கள் என்ற வியப்பு இன்றுவரை தணியவில்லை, தணியவிடும் உத்தேசமும் இல்லை. இன்றளவும் இரண்டு பேர் என்பதோ இரண்டு பெயர் என்பதோ இல்லாமல் சங்கர் கணேஷ் என்றே பொதுவாக இருப்பது எத்தனை அழகு. அந்தத் தோழமைக்கு ஒரு சல்யூட்.
‘இதயத் தாமரை’ திரைப்படத்தின் “ஒரு காதல் தேவதை” பாடல் சங்கர்-கணேஷ் இசையமைப்பில் எஸ்பிபியும் சித்ராவும் பாடிக்கொடுத்த கல்லூரிகளின் அரசவைப் பாடல் என்றே சொல்லலாம். இந்தப் படத்தின் “ஓ மை லவ்” பாடலை பொங்கிப் பொங்கித் தணியாத காதலின் துயரம் மிகுந்த குரலில் பொழிந்திருப்பார் எஸ்பிபி. சிறையில் இருந்து திரும்பிய காதலன், தன் காதலி தன்னை மறந்து சென்றதாக நினைத்து அத்தனை கனத்தையும் இறக்கி வைக்கும் பாடல். “யார் வம்பு இது யார் நம்புவது நீர் மீது தணலா நீ வந்த வழி.. நீ சொன்ன மொழி நீர் மீது நிழலா” எஸ்பிபியின் குரல் இத்தனைக் கடுமையாகவும் ஒலிக்குமா என்று அதிசயித்த வரிகள் இவை. விடை என்று எதுவும் இல்லை எனத் தெரிந்த கேள்விகளை அனாயாசமாக அடுக்கிச் செல்லும் அந்தக் குரல் இலேசான பயத்தைக் கொடுத்தது. கூடவே சின்னச் சின்ன வரிகளென்றாலும் தமிழ் மொழி எவ்வளவு சொல்லிவிடுகிறது, அதன் உச்சரிப்புக் கடினத்தை இந்த மனிதர் எவ்வளவு எளிதாகக் கடக்கிறார் என்கிற பெருவியப்பையும்.
இதற்கு நேரெதிராக இறகைப் போன்ற இலகுவான குரலில் வழங்கிய பாடல் நடிகர் மோகனுக்கான தனித்த பொலிவுடன், ஷைலஜாவுடன் பாடிய “எல் ஓ வீ ஈ லவ் தான்” என்ற ‘விதி’ திரைப்படப் பாடல். கடற்கரை மணலில் ஆடியபடி கதைப்படி அதீதமாக நம்பிவிடும் அப்பாவியான நாயகியைப் பார்த்து, “லவ் என்னென்று அறிஞ்சவன்” என்ற வரியை நாயகனின் பாத்திரத்துக்கு உண்டான அலட்சியத்துடன் அசத்தலாக வழங்கியிருப்பார். கமல் நடித்து சங்கர் கணேஷ் இசையமைத்த நீயா, தாயில்லாமல் நானில்லை, பட்டிக்காட்டு ராஜா ஆகிய படங்களில் அற்புதமான பாடல்கள் வானொலியில் மீண்டும் மீண்டும் விரும்பிக் கேட்கப்பட்டன. “கண்ணே நான் பாட, கற்சிலையும் எழுந்தாடும்” என்று ஆர்ப்பாட்டமாகத் (ஆனாலும் அது உண்மைதான்) தொடங்கும் “நடிகனின் காதலி” (தாயில்லாமல் நானில்லை படப் பாடல்) தன்னோடு ஒரு சுறுசுறுப்பை அழைத்துவரும். உறங்குவோர் விழித்தெழும்படியான பாடல் என்ற சூழலுக்குத் தகுந்த இசையும் குரலும் வரிகளும் பா’வமும் இணைந்த அற்புதம். “என்னிடம் நாடகமா..” என்றொரு வரி, அதன்பின் ஒரு சிரிப்பு, தொடர்ந்து “நானே நடிகனடீ..” என்றொரு வரி. சங்கர் கணேஷ், எஸ்பிபி, வாலி, கமல் என்று ஒருவரை விட்டுவிட்டு மற்றவரைச் சுட்ட இயலாத கூட்டணியின் அபாரம் இந்தப் பாடல்.
சங்கர் கணேஷ் இசையமைப்பில் ரஜினிக்கு எஸ்பிபி பாடிய மறக்கவே முடியாத வானொலி ப்ரிய பாடல்கள், ‘ரங்கா’ படத்தில் மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடிய “பட்டுக்கோட்டை அம்மாளு”, எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடிய “டூத் பேஸ்ட் இருக்கு ப்ரஷ் இருக்கு”. 1982ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் “பட்டுக்கோட்டை அம்மாளு” பாடலை இன்றும் இசைப் போட்டிகளில் இளைஞர்கள் பாடுகின்றனர் என்பது இதன் செல்வாக்குக்கு சாட்சி. சிவாஜிக்கு எஸ்பிபி பாடிய அழகான பாடல்களில் சங்கர் கணேஷ் இசையமைப்பில் ‘அன்புள்ள அப்பா’ படத்துக்காக பாடிய “அன்புள்ள அப்பா, என்னப்பா” பாடல் வித்தியாசமானது. அப்பா – மகளுக்கிடையிலான உரையாடற் பாடலாக வளரும் இந்தப் பாடலை மிகக் கவனமாகக் கதைக்கேற்பப் பாடியிருப்பார்கள் எஸ்பிபியும் ஷைலஜாவும். தன் காதல் கதையைக் கேட்கும் மகளின் குறும்பை இரசித்தபடி பாடலைத் தொடங்கி, உற்சாகமாகக் கதையைத் தொடர்ந்து, கனிந்த குரலில் அன்பை விளக்கி, இறுதியில் பிரிவின் துயரைச் சொல்லி நிறையும் இந்தப் பாடல் கிட்டத்தட்ட ஒரு முழுமையான திரைப்படம் என்றே சொல்லலாம். ஒரு பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பின்னணிப் பாடகி சுஜாதா எஸ்பிபியின் ஒரு பாடலைச் சிலாகித்து “அவர் ஆக்ட் செய்திருப்பார் இந்தப் பாடலில்” என்றார், அப்படி எத்தனையோ முத்துகள் உண்டு, அவரது நவரத்தினக் குவியலில் இந்தப் பாடலுக்கும் ஒரு தனித்த இடம் உண்டு. இன்னும் ஒரு பெருவிருப்பப் பாடலைச் சொல்ல வேண்டும். உரத்த இசையினூடாக ஒலிக்கும் க்ளப் பாடல், “உன்னை நான் பார்த்தது” எனும் ‘பட்டிக்காட்டு ராஜா’ திரைப்படப் பாடல். வசீகரம் என்ற சொல்லுக்கான நீண்ட விளக்கமாக இந்தப் பாடலைச் சொல்லலாம். ‘வெண்ணிலா’ என்ற சொல் உச்சரிக்கப்படும் பாங்கை எவ்வளவு வியந்தாலும் தீராது. சின்னதொரு மயக்கத்தைத் தொட்டுத் தெளித்தபடி மேற்செல்லும் இந்தப் பாடலுக்கு எஸ்பிபியின் மதுக் குரல் மிகப் பொருத்தம். பல்லவியாகட்டும், சரணங்களாகட்டும், எங்கும் பெரிதாகக் குரலிடை மௌனங்கள் இல்லாத, தொடர்ச்சியாகப் பொழியும் அருவியைப் போன்ற பாடல் இது, மதுவின் அருவி.
*
தேவா எங்கள் சென்னைக்காரர். சென்னையின் குரலை, தான் பங்கேற்ற திரைப்படங்களில் ஒலிக்கச் செய்பவர், இன்னும் நெருக்கமாக உணரச் செய்பவர். குரல்களின் தன்மை உணர்ந்து பயன்படுத்துபவர், தன் குரல் உட்பட. மேடைகளுக்குப் பழகிய நெடுங்காலத்துக்குப் பிறகு வெள்ளித்திரையில் மின்ன வாய்த்த பொழுது, தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டவர். நிதானமாகப் புறப்பட்டு பிறகு வேகமெடுப்பது நீண்ட தூரப் பிரயாணங்களின் இயல்புதானே. தேவா, ரஜினி – கமல், விஜய் – அஜீத் என்று தமிழ்த் திரையின் வெற்றிப் பட்டயங்களின் அடுத்தடுத்த பக்கங்களில் தன் பாடல்களைப் பதித்து வைத்தார். எஸ்பிபி அவற்றைத் தன் குரலால் மிளிரச் செய்தார். ‘பாட்ஷா’ படத்தின் “நான் ஆட்டோக்காரன்”, ‘அவ்வை ஷண்முகி’ படத்தின் “வேல வேல வேல வேல”, ‘தேவா’ படத்தின் “ஒரு கடிதம் எழுதினேன்”, ‘வான்மதி’ படத்தின் “வைகறையில் வந்ததென்ன” பாடல்களைச் சான்றுகளாக முன்வைக்கலாம்.
மெல்ல மெல்ல வானொலிக்கு ஈடாகவும் பின்னர் அதைத் தாண்டி அதிக அளவிலும் வீடுகளில் தொலைக்காட்சிக்கான நேரம் அதிகரித்தது. மெட்ரோ சேனல், கேபிள் டிவி போன்ற புதிய வரவுகள் பாடல்கள் நில்லாமல் ஒலிக்கும் ஊடகங்கள் ஆயின. எஸ்பிபி – தேவா இணைந்த பாடல்கள் விரும்பிக் கேட்கப்படும், விரும்பிப் பார்க்கப்படும் பட்டியல்களில் இடம்பிடித்தன. ‘மனசுக்கேத்த மகராசா’வின் “ஆத்து மேட்டு தோப்புக்குள்ள”, ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் “நீலக்குயிலே நீலக்குயிலே நெஞ்சுக்குள் என்ன குறை”, “தண்ணிக் கொடம் எடுத்து தங்கம் நீ”, ‘புது மனிதன்’ படத்தின் “அங்கம் உனதங்கம்”, ‘மரிக்கொழுந்து’ படத்தின் “கண்ணதாசனே கண்ணதாசனே”, ‘வசந்தகால பறவை’ படத்தின் “செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போலப் பெண்ணொருத்தி”, “தை மாசி பங்குனி போயி சித்திர மாசம்” போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் ஒலி/ஒளிபரபாயின.
பிரபு -குஷ்பூ நடித்த ‘கிழக்குக் கரை’ படத்துக்கு இசையமைத்தார் தேவா. எஸ்பிபி – சித்ரா இணைந்து பாடிய “எனக்கெனப் பிறந்தவ ரெக்க கட்டிப் பறந்தவ” பாடல் ஒரே நாளில் பலமுறை ஒலிக்கும் பாடலானது. ‘தெற்குத் தெரு மச்சான்’ படத்தின் “எங்க தெக்குத் தெரு மச்சானே”, “தென்ன மரத் தோப்புக்குள்ளே” ஆகிய பாடல்கள் பேருந்துகளில் தொடர்ந்தொலிக்கத் தொடங்கின. ஒரு பயணத்தின்போது உடன்வரத்தக்க பாடல்களாக தேவா – எஸ்பிபி கூட்டணியின் பல பாடல்கள் உணரப்பட்டன. டவுன்பஸ் பாடல்கள் என்று ஒரு பட்டியலிட்டால் இவர்கள் இணைந்த பல பாடல்கள் இன்றளவும் முதல் வரிசையில் சென்றமரும்.
‘ஊர் மரியாதை’ படத்தின் “கிச்சிலி சம்பா குத்தி எடுத்தேன்”, ‘சூரியன்’ படத்தின் “கொட்டுங்கடி கும்மி”, ‘கோட்டை வாசல்’ படத்தின் “மூக்குத்தி காற்சிலம்பு… கோட்டவாசலுக்கு எங்காத்தா காவல் நிக்கிறவ”, ‘சாமுண்டி’ படத்தின் “மண்ணத் தொட்டுக் கும்பிட்டுட்டு”, “முத்து நகையே முழுநிலவே”, ‘சோலையம்மா’ படத்தின் “கூவுற குயிலு சேவலைப் பாத்து”, ‘வேடன்’ படத்தின் “கம்மாக் கரையிலே சும்மா நான் மறிச்சா”, ‘கட்டபொம்மன்’ படத்தின் “ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா”, ‘என் ஆசை மச்சான்’ படத்தின் “ராசிதான் கை ராசிதான்”, “சோறு கொண்டு போற புள்ள” போன்ற பாடல்கள் அன்றாடம் முணுமுணுக்கப்படும் பாடல்களாக உருவாகின.
‘அண்ணாமலை’ படத்தின் முகப்புப் பாடலான, எஸ்பிபி பாடிய “வந்தேண்டா பால்காரன்” மறக்க முடியாத சூப்பர்ஹிட் ஆனது. அதே படத்தில் சித்ராவுடன் இணைந்து பாடிய “அண்ணாமலை அண்ணாமலை அன்னந்தண்ணி உண்ணாமலே”, “கொண்டையில் தாழம்பூ” ஆகிய பாடல்கள் கொண்டாடப்பட்டன. அதிலும் “கொண்டையில் தாழம்பூ” பாடலில் எஸ்பிபி “குஷ்பூ குஷ்பூ குஷ்பூ” என்று பாடியபோது திரையரங்குகளில் இரசிகர்கள் உடன் பாடும் அளவுக்கு, மீண்டும் மீண்டும் விரும்பிக் கேட்கும் அளவுக்கு அதன் வீச்சு இருந்தது. இந்தப் படத்தில் பரபரப்பான காட்சி நகர்வுகளால் ஆன பாடல், “வெற்றி நிச்சயம்”. ஒரே பாடலில் கதையில் ஒரு பாய்ச்சல் நிகழ வேண்டும் என்னும்போது அதற்குச் சரியான வேகத்தில், மிகச் சரியாகப் பொருந்தும் எஸ்பிபியின் குரலில் இந்தப் பாடல் அபார வெற்றி பெற்றது. “வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம், கொள்கை வெல்வதே நான் கொண்ட இலட்சியம், என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்.. என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்.. அடே நண்பா உண்மை சொல்வேன், சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்” என்று பல்லவியின் இந்த ஆறு வரிகளில் வரிக்கு இரண்டு என்ற கணக்கில் பா’வங்களை மாற்றிப் பாடியிருப்பார் எஸ்பிபி. அழுத்தமாக வெற்றி என்று தொடங்கி, வேத சத்தியம் என்பதை அதற்குண்டான சரணாகதிக் குரலில் சொல்லி, அடே நண்பா என்று அதட்டி, உன்னை வெல்வேன் என்று உறுதி சொல்லும்போது சிலிர்க்கச் செய்வார். ஒரே ஒரு எஸ்பிபி.
‘ப்ரியமுடன்’ படத்தின் “பூஜா வா பூஜா வா” பாடல் கதைப்படி குழப்பமான சூழலில் விரியும் பாடல். வித்தியாசமான இசைக் கலவையுடன் இணைந்தொலிக்கும் இலேசாகக் கலங்கிய எஸ்பிபியின் குரல் இந்தப் பாடலின் கனத்தை அதிகரித்துக் கொடுத்தது. இதே படத்தில் நிகரில்லாக் காதலைச் சொல்லும் “பாரதிக்கு கண்ணம்மா” பாடலில் அதே எஸ்பிபியின் குரல் குழைந்து கதாபாத்திரத்தின் அன்பை அப்படியே எடுத்துச் சொல்லும். “பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே ஒருநாள் விழிகள் பார்த்தது என் வாழ்நாள் வசந்தமும் ஆனது என் இலையுதிர்காலம் போனது உன் நிழலும் இங்கே பூக்குது” இதற்குமேல் இதை எப்படிச் சொல்ல என்ற அயர்ச்சியும் ஆனாலும் சொல்லுவேன் என்னும் உறுதியும் மின்னும் அந்தக் குரலில். எஸ்பிபியும் தேவாவும் சித்ராவுடன் இணைந்து பாடிய ‘கோகுலத்தில் சீதை’ படத்தின் “கோகுலத்துக் கண்ணா கண்ணா” பாடல் வடிவில் கிடைத்த பரவசம். அகத்தியன் – தேவா கூட்டணியின் பாடல்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இதுவரையில் தன் வாழ்வில் சரியென்றே உணர்ந்திராத ஒன்றை உள்ளுக்குள் உணர்பவனின் இனிய குழப்பத்தில் நாயகன் கார்த்திக், எப்போதும் போலத் தன் அன்பால், தன் புன்னகையால் தானும் ஒளிர்ந்து தன்னைச் சுற்றிலும் ஒளிதிகழச் செய்யும் நாயகி சுவலட்சுமி, தன் மகனுக்கென்று அழகான ஒன்றைச் நேர்த்திப் பார்த்துவிட மாட்டோமா என்ற ஆதங்கத்தில் நாயகனின் அப்பாவாக மணிவண்ணன், இவர்களுக்கு முறையே எஸ்பிபி, சித்ரா, தேவா பாடியிருக்கும் ஒற்றை வரியான “கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே” என்பது பரவசத்தின் முப்பரிமாணம்.
சற்றேறக் குறைய பத்தாண்டு கால இடைவெளியில் அவரவர் திரை முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கிய எஸ்பிபி, சங்கர் கணேஷ், சந்திரபோஸ், தேவா, தத்தமது பாதை வேறு, பயணம் வேறானாலும் இரசிக மனங்களை வந்தடைந்ததும், இன்றளவும் ஆட்கொண்டிருப்பதும் மறுக்கவியலாத உண்மை. மிக இயல்பாக வாழ்வோடு கலந்த இந்த மேதைகளின் பாடல்களில் ஒன்றேனும் அன்றாடம் நம்மை வருடியபடிதானே இருக்கிறது. எங்கோ ஒரு திருவிழாவில், திருமண விழாவில், இவர்களை எட்டிவிடும் ஆவலுடன் ஒருவர் இசைக்கவும் ஒருவர் பாடவுமாக, கண்ணிலும் மனத்திலும் இடம்பிடிக்கிறார்கள் அல்லவா? பாடல் இரசனை என்பதன் பல கோடுகள் ஒன்றாக வந்து குவியும் பஞ்சுமிட்டாய்ப் புள்ளியில் என்றென்றும் ஒளிர்கிறது எஸ்பிபியின் புகழ். அவர் குரல் நிரந்தர ஆசுவாசம், தடையற்ற நம்பிக்கை, தொடர்ந்து வரும் தோழமை, நித்திய நேசம். கொண்டாடக் கொண்டாடத் தீராத பண்டிகை. வாழ்தல் இனிது.