ஒன்பது கடிதங்களில் ஒரு புதினம் – ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி

0 comment

I

(ஃப்யோதர் இவானீச்சிடமிருந்து  இவான் பெத்ரோவிச்சிற்கு)

மரியாதைக்குரியவரும் மதிப்புமிக்க நண்பருமாகிய இவான் பெத்ரோவிச்,

நண்பரே, ஒரு முக்கியமான விஷயம் குறித்துப் பேசுவதற்காக கடந்த இரண்டு நாட்களாக உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் உங்களை எங்கேயுமே காண முடியவில்லை. நேற்று நாங்கள் சீமியோன் அலெக்ஸியிச்சின் வீட்டில் இருந்த போது என் மனைவி உங்களைப் பற்றி ஒரு அருமையான நகைச்சுவையைக் கூறினாள். நீங்களும் டத்யானா பெத்ரோவ்னாவும் எப்போதும் பறந்துகொண்டே இருக்கக்கூடிய ஜோடிப் பறவைகளாகிவிட்டீர்கள். உங்கள் இருவருக்கும் திருமணமாகி இன்னும் மூன்று மாதங்கள்கூட முடியவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே நீங்கள் உங்கள் வீட்டின் அடுக்களையை மறக்கத் துவங்கிவிட்டீர்கள் என. நாங்கள் அனைவரும் நன்றாகச் சிரித்தோம். தவறாக எண்ண வேண்டாம், உங்கள் மீதான உண்மையான அன்பின் அடிப்படையில்தான்!

என் மதிப்புமிக்க நண்பரே, இந்த நகைச்சுவைகளை விட்டுத்தள்ளுங்கள், நீங்கள் எனக்கு நிறைய சிரமம் தந்துவிட்டீர்கள். நீங்கள் சமுதாயக் கூடத்தின் கொண்டாட்டத்திற்குச் செல்லக்கூடும் என செம்யோன் அலெக்ஸேயிட்ச் கூறினான். எனது மனைவியை அவனது மனைவியுடன் விட்டுவிட்டு சமுதாயக் கூடத்திற்கு ஓடினேன். அது அவலமும் நகைச்சுவையும் கொண்டதாய் இருந்தது. என் நிலைமையை யோசித்துப் பாருங்கள்! கொண்டாட்டத்தில் தனியாக, என் மனைவி இல்லாமல்! வாயிலில் நான் தனியாக நிற்பதைப் பார்த்த இவான் ஆந்த்ரேயிச் எனக்கு நடனத்தின் மீது விருப்பம் உண்டென நினைத்து (கிறுக்கன்!), நெரிசல் மிக்க சமூகக் கூடமானது உங்களைப் போல நடனத்தின் மீது பெரு விருப்பு கொண்டவர்களுக்கான இடமில்லை எனக்கூறி என் கையைப் பிடித்து இழுத்து ஒரு நடன வகுப்பிற்கு அழைத்துச் செல்ல முயன்றான். பச்சௌலி, மிக்னோனெட்டின் வாசத்தால் அவனுக்கு தலை வலிக்கிறதென்றும் கூறினான். உங்களையும் அங்கே பார்க்க முடியவில்லை, டத்யானா பெத்ரோவ்னாவும் அங்கில்லை. நீங்கள் அலெக்ஸாண்ட்ரியின்ஸ்கி திரையரங்கில் ஞானத்தின் துயரம் (Woe from Wit) பார்த்துக்கொண்டிருப்பீர்கள் என இவான் ஆந்த்ரேயிச் சத்தியம் செய்து உறுதி சொன்னான்.  

அலெக்ஸாண்ட்ரியின்ஸ்கி திரையரங்கிற்கு பறந்தோடினேன் நான். அங்கேயும் நீங்கள் இல்லை. இன்று காலை உங்களை  சிஸ்டோக்னாவ் வீட்டில் சந்திக்கலாம் என்று எதிர்பார்த்தேன். சிஸ்டோக்னாவ் பெரிபால்கின் வீட்டிற்கு அனுப்பினான் – அங்கேயும் அதே நிலைமை. உண்மையைச் சொன்னால், நான் ரொம்பவும் ஓய்ந்துவிட்டேன். நான் எவ்வளவு சிரமப்பட்டு விட்டேன் என உங்களுக்கே புரிந்திருக்கும். இப்போது இதை எழுதிக்கொண்டிருக்கிறேன் (வேறு என்ன செய்ய முடியும் நான்). இந்த எழுதுகிற வேலையெல்லாம் எனக்குக் கொஞ்சமும் ஒத்துவராது (உங்களுக்குப் புரிகிறதுதானே?). நாம் நேருக்கு நேர் சந்திப்பதுதான் சரியாக இருக்கும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும். எனவே இன்று மாலை டத்யானா பெத்ரோவ்னாவுடன் எங்கள் வீட்டிற்கு தேநீர் அருந்த வருமாறு உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அன்னா மிஹலோவ்னாவும் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்வாள். இன்று மாலை நீங்கள் நிச்சயம் என்னைச் சந்திப்பீர்கள்.

அப்புறம், என் மதிப்புமிக்க நண்பரே – நான் எப்படியோ இந்தக் கடிதத்தை எழுதத் துவங்கி விட்டதால் உங்களுக்கெதிராக என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் சொல்லிவிடுகிறேன் – உங்கள் மேல் எனக்கொரு சிறிய புகார் இருக்கிறது. ரொம்பவும் சாதாரணம் போல் தோன்றுகிற ஒரு சூழ்ச்சியை நீங்கள் எனக்கெதிராகச் செய்ததற்காக, உண்மையைச் சொன்னால், நான் உங்களைக் கடிந்துகொள்ள வேண்டும். என் அரிய நண்பரே, நீர் ஒரு பாதகன், கொஞ்சம்கூட யோசனையற்றவர். கடந்த மாதத்தின் மத்தியில் உங்களுக்குத் தெரிந்த யிவ்கெனி நிகோலாய்ட்ச் என்பவனை என் வீட்டிற்கு அழைத்து வந்தீர்கள். ஆதூரமான, நேர்மையான பரிந்துரைகளால் அவனுக்காக வாக்களித்தீர்கள். அப்படி ஒரு இளைஞனை வரவேற்பது குறித்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் அப்படிச் செய்ததன் மூலம் நான் ஒரு தூக்குக் கயிற்றிற்குள் தலையை விட்டுவிட்டேன் போல! அது ஒரு தூக்குக் கயிறா தெரியாது, ஆனால் இப்போது அது ஒரு பிரச்சினைக்குரிய விஷயமாகிவிட்டது. அதை விளக்குவதற்கு எனக்கு இப்போது நேரமில்லை, அதைப்பற்றி எழுதுவது அசிங்கமும்கூட. உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே என் கொடூர நண்பரே! எப்படியாவது, போகிற போக்கில், அந்த இளைஞனின் காதில், எங்கள் வீட்டை விடவும் மிக நல்ல வீடுகளெல்லாம் இந்த மாநகரத்தில் உள்ளன என்று சொல்ல முடியுமா?

என் அன்பரே, என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. நம் நண்பர் செம்யோனோவிட்ச் சொல்வது போல, நாங்கள் உங்கள் காலில் விழுகிறோம். நாம் சந்திக்கும் போது இது குறித்து விவரமாகச் சொல்கிறேன். அந்த இளைஞனுக்கு கெட்ட பழக்கங்கள் இருக்கின்றன என்றோ, பக்தியற்றவன் என்றோ, வேறு குறைபாடுகள் இருக்கின்றன என்றோ நான் கூறவில்லை. மாறாக அவன் மிகவும் நட்பானவனும் இனிமையனாவனும் ஆவான். ஆனால், இருங்கள், நாம் சந்திப்போம். ஆனால் என் நண்பரே, அதற்கிடையில் நீங்கள் அவனைப் பார்த்தீர்களாயின், தயவுசெய்து அவனிடம் நான் சொன்னவாறு சொல்லுங்கள். நானேகூட அதைச் செய்யலாம்தான். ஆனால் உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியும், என்னால் அது நிச்சயம் முடியாது, அவ்வளவுதான். நீங்கள்தான் அவனை அறிமுகப்படுத்தினீர்கள். ஆனால் இன்று மாலை நான் உங்களுக்கு முழுவதையும் விளக்கமாகச் சொல்கிறேன். இப்போதைக்கு முடித்துக்கொள்கிறேன். அன்புடன்…

பி.கு – பாலகனான என் மகனுக்கு கடந்த வாரத்திலிருந்து உடல்நிலை சரியில்லை. நாளுக்கு நாள் அது மோசமாகிக்கொண்டே போகிறது. அவனுக்குப் பால்பற்கள் முளைத்துக்கொண்டிருக்கின்றன. என் மனைவி பாவம் எந்நேரமும் அவனையே கவனித்து கவனித்து சோர்ந்து விட்டாள். அவசியம் வீட்டிற்கு வாருங்கள் என் மரியாதைக்குரிய நண்பரே, நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்.

II

(இவான் பெத்ரோவிச்சிடமிருந்து ஃப்யோதர் இவானீச்சிற்கு)

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஃப்யோதர் இவானீச்!

நேற்று உங்கள் கடிதம் கிடைத்தது, அதை வாசித்து நான் குழம்பிப் போனேன். என்னை எங்கெங்கோ தேடியிருக்கிறீர்கள், ஆனால் நான் வீட்டில்தான் இருந்தேன். பத்துமணிவரை இவான் இவானீச் டொலொகொனோவிற்காகக் காத்திருந்த நான், உங்கள் கடிதத்தைப் பார்த்த பிறகு, என் மனைவியை அழைத்துக்கொண்டு வாடகை கார் அமர்த்தி, ஆறரைக்கு உங்கள் வீட்டிற்கு வந்தேன். நீங்கள் வீட்டில் இல்லை, ஆனால் உங்கள் மனைவியைச் சந்திக்க முடிந்தது. இரவு பத்தரை வரையில் அங்கேயே காத்துக்கொண்டிருந்தேன். அதற்கு மேல் இருக்க முடியவில்லை. மீண்டும் வாடகைக்குக் கார் அமர்த்தி மனைவியை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு, ஒருவேளை நீங்கள் பெரிபால்கின் வீட்டில் இருக்கக்கூடுமென அங்கு ஓடிவந்தேன். ஆனால் மீண்டும் என் கணக்குத் தப்பிவிட்டது. வீட்டிற்குத் திரும்பிய பிறகு என்னால் உறங்கவே முடியவில்லை, ரொம்பவும் சங்கடமாக இருந்தது. காலை எழுந்து மீண்டும் ஒன்பது மணிக்கு, பத்து மணிக்கு, பதினொரு மணிக்கு என மூன்று முறை உங்களைத் தேடி வந்தேன். மூன்று முறை வாடகைக் காருக்குச் செலவழித்தும் உங்களைக் காணவே முடியவில்லை.

உங்கள் கடிதத்தைப் படித்து எனக்கு ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது. யிவ்கெனி நிகோலாய்ட்ச் பற்றிச் சொல்கிறீர்கள், அவனிடம் நான் குறிப்புணர்த்த வேண்டும் என வேண்டுகிறீர்கள், ஆனால் அது எதைப் பற்றி எனச் சொல்ல மறுக்கிறீர்கள். உங்களது எச்சரிக்கையைப் பாராட்டுகிறேன். ஆனால் எல்லாக் கடிதங்களையும் நான் ஒன்றுபோல் கையாளுவதில்லை. முக்கியமான கோப்புகளை என் மனைவியின் சுருள்முடி அலங்காரத்திற்குத் தருவதில்லை. உண்மையில், அதையெல்லாம் நீங்கள் என்ன நோக்கத்துடன் எழுதினீர்கள் என எனக்கு ரொம்பவும் குழப்பமாக இருக்கிறது. எப்படியோ! அப்படி ஒரு பிரச்சினை இருக்குமாயின், அதில் நான் ஏன் தலையிட வேண்டும்? எனக்கு அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கப் பிடிக்காது. அவனோடு உங்களுக்கு ஒத்துவராமல் இருக்கலாம். சில தீர்க்கமான விளக்கங்களைத் தாண்டி, நாம் இருவரும் அதிகமாய்ப் பேசிக்கொள்ள எதுவுமிருக்காது. நேரமும் போய்க்கொண்டே இருக்கிறது. நமது வணிக ஒப்பந்தங்களை நீங்கள் மீறினால் என்ன செய்வதென்கிற சங்கடத்தில் இருக்கிறேன் நான். பிரயோஜனமற்ற ஒரு பயணம். ஆனால் செலவுமிக்க பயணம்.

என் மனைவி நவீன வெல்வெட் மேலங்கி வேண்டுமென நச்சரித்துக்கொண்டிருக்கிறாள். நேற்று பாவெல் செம்யோனோவிட்ச் பெரிபால்கினைக் கண்ட போது யிவ்கெனி நிகோலாய்ட்சைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டவற்றையும் அப்படியே சொல்லிவிடுகிறேன். யாரோஸ்லவ் மாகாணத்தில் அவனுக்கு ஐநூறு அடிமைகள் இருக்கிறார்கள். அவனது பாட்டியின் மூலமாக, மாஸ்கோவிற்கு அருகில் முந்நூறு அடிமைகளைக் கொண்ட தோட்டம் ஒன்றையும் அவன் அடையக்கூடும். அவனிடம் கணக்கற்ற பணமும் இருக்கிறது. அது உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன். நாம் எங்கே சந்திக்கலாம் என்பது பற்றி இறுதியாக இந்த ஒரு முறை மட்டும் முடிவு செய்யும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இவான் ஆந்த்ரேயிட்ச்சை நேற்று நீங்கள் சந்தித்தபோது நான் என் மனைவியுடன் அலெக்ஸாண்ட்ரிஸ்கி திரையரங்கில் இருக்கக்கூடும் என அவன் சொன்னதாக எழுதியிருந்தீர்கள். அவன் ஒரு பொய்யன், இதுபோன்ற விஷயங்களில் அவனது வார்த்தைகளை நம்பவே கூடாதென்பதையே இது மீண்டும் நிரூபிக்கிறது. அதற்கு முந்தைய நாள்தான் அவன் அவனது பாட்டியிடமிருந்து எண்ணூறு ரூபிள்களை ஏமாற்றியிருந்தான். தங்கள் உண்மையுள்ள …..  

பி.கு – என் மனைவி கருவுற்றிருக்கிறாள். அதுகுறித்து பதற்றமாகவும் சமயங்களில் சோர்வாகவும் இருக்கிறாள். திரையரங்குகளில் அவ்வப்போது துப்பாக்கி முழக்கங்களும் போலி இடியோசைகளும் நிகழ்த்தப்படுகின்றன. இது அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடுமென்பதால் நான் அவளை அங்கேயெல்லாம் அழைத்துச் செல்வதில்லை. தவிரவும், எனக்கும் திரையரங்குகளுக்குச் செல்வதில் அதிக விருப்பம் இல்லை. 

III

(ஃப்யோதர் இவானீச்சிடமிருந்து  இவான் பெத்ரோவிச்சிற்கு)

மதிப்பிற்குரிய நண்பர் இவான் பெத்ரோவிச் அவர்களே,

ஆமாம் தவறுதான், தவறுதான், என்மீது ஆயிரம் மடங்கு தவறுதான். என்றாலும், நான் என் பக்க நியாயத்தை எடுத்துச்சொல்ல விரும்புகிறேன். நேற்று மாலை ஐந்து மணிவாக்கில் உங்களைப் பற்றி நாங்கள் மிக்க அன்புடன் பேசிக்கொண்டிருந்த போது, மாமா ஸ்டீஃபன் அலெக்ஸேயிட்ச்சிடமிருந்து அத்தைக்கு உடல்நலமில்லை என்னும் சேதியுடன் ஒருவன் விரைந்து வந்தான். அதைப் பற்றிச் சொல்லி என் மனைவியை பயப்படுத்த வேண்டாம் என எண்ணியதால், வேறு எதோ வேலை இருப்பதாக அவளிடம் சொல்லிவிட்டு அத்தையின் வீட்டிற்கு ஓடினேன். கிட்டத்தட்ட மரணிக்கின்ற தறுவாயில் இருந்தார் அவர். சரியாக ஐந்து மணிக்கு அவளுக்குப் பக்கவாதம் ஏற்பட்டிருந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இப்படி நிகழ்கிறது. அதிகாலைக்குள்ளேயே அவள் மரணித்துவிடக்கூடும் என அவர்களது குடும்ப மருத்துவரான கார்ல் ஃப்யோடோரிட்ச் எங்களிடம் தெரிவித்தார்.

பிரிய நண்பரே, உங்களுக்கு என் நிலைமை புரிந்திருக்கும். அந்த இரவு முழுவதையும் நாங்கள் வருத்தத்திலும் பதற்றத்திலும் கழித்தோம். உடலாலும் மனதாலும் மிகவும் சோர்வுற்றுவிட்ட நான் காலையில் அப்படியே ஸோஃபாவில் படுத்து உறங்கிவிட்டேன். என்னை எழுப்பும்படி யாரிடமும் சொல்லாமல் விட்டுவிட்டதால், பதினொன்றரை மணிக்குத்தான் எழுந்தேன். என் அத்தையின் உடல்நிலை தேறியிருந்தது. மீண்டும் வீட்டிற்கு என் மனைவியைக் காண ஓடினேன். பாவம் அவள், எனக்காகக் காத்திருந்து ஓய்ந்துவிட்டாள். அவசரம் அவசரமாக எதையோ சாப்பிட்ட நான், என் மகனை ஒருமுறை தழுவிய பிறகு, மனைவியிடம் சொல்லிக்கொண்டு மீண்டும் உங்களைச் சந்திப்பதற்காகப் புறப்பட்டேன். நீங்கள் வீட்டில் இல்லை. உங்கள் வீட்டில் யிவ்கெனி நிகோலாய்ட்சைப் பார்த்தேன். வீட்டிற்குத் திரும்பிய நான் இதோ இந்தக் கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னிடம் குறைபட்டுக் கொள்ளவோ கோபப்படவோ வேண்டாம் என் உண்மை நண்பரே. அடியுங்கள், தவறு செய்த இந்தத் தலையை உடலிலிருந்து துண்டியுங்கள். ஆனால் உங்கள் அன்பிலிருந்து என்னை விலக்கிவிட வேண்டாம். நீங்கள் இன்று மாலை ஸ்லாவ்யானோவ்வின் வீட்டில் இருப்பீர்கள் என உங்கள் மனைவி கூறினார். நான் நிச்சயம் அங்கு வருவேன். உங்களைச் சந்திக்கும் அந்தத் தருணத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.

அன்புடன்… 

பி.கு – எங்கள் மகனைப் பற்றி மிகுந்த கவலையில் இருக்கிறோம் நாங்கள். மருத்துவர் கார்ல் ஃப்யோடோரிட்ச் அவனுக்கு ரூபர்ப் பரிந்துரைக்கிறார். அவன் அழுகிறான். நேற்று அவனுக்கு யாரையுமே அடையாளம் தெரியவில்லை. இன்று காலையில்தான் எங்களை அடையாளம் கண்டுகொண்டு அம்மா அப்பா என மிழற்றினான். இன்று காலை முழுக்க என் மனைவி கண்ணீரில் மூழ்கியிருந்தாள். 

IV

(இவான் பெத்ரோவிச்சிடமிருந்து ஃப்யோதர் இவானீச்சிற்கு)

மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய ஃப்யோதர் இவானீச்!

உங்களது அறையில் உங்களது அலமாரிக்கு அருகில் அமர்ந்து நான் இதை எழுதுகிறேன். எழுதுவதற்காக பேனாவை எடுக்கும் முன்பு இரண்டரை மணி நேரம் உங்களுக்காகக் காத்திருந்தேன். இந்தக் குழப்பங்களைப் பற்றிய எனது கருத்தை நான் வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேன். கடந்த கடிதத்தில், நீங்கள் ஸ்லாவ்யானவ்வின் வீட்டிற்குச் செல்வதாகவும் அங்கே என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் எழுதியிருந்தீர்கள். அங்கே வந்த நான் ஐந்து மணி நேரமாக உங்களுக்காகக் காத்திருந்தேன். ஆனால் நீங்கள் வருவதற்கான அடையாளமே தென்படவில்லை. ஏன்! எல்லோர் முன்பும் நான் கோமாளியாக வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா? மன்னியுங்கள் நண்பரே, இன்று காலை நான் உங்களைச் சந்திக்க வந்தேன். சில ஏமாற்றுப் பேர்வழிகளைப் போல, வீட்டிலேயே குறிப்பிட்ட நேரத்தில் சந்திக்க முடிகிறவரை எங்கெங்கோ போய்த் தேடிக்கொண்டிருக்காமல் நேராக உங்கள் வீட்டிற்கே வந்தேன்.

ஆனால் உங்கள் வீட்டில் நீங்கள் இல்லவே இல்லை. உங்களிடம் முகத்தில் அடித்தாற்போல் உண்மையைச் சொல்வதிலிருந்து எது என்னைத் தடுக்கிறதென்றே தெரியவில்லை. நமது ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்குவதன் பொருட்டுத்தான் நீங்கள் இப்படி நடந்து கொள்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக யோசிக்கும்போதுதான் எனக்கு உங்களது சூது புரிகிறது. அது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாகவே நீங்கள் என்மீது பகைமையை வளர்த்து வந்திருக்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட சூழலில் நாம் இட்டுக்கொண்ட ஒப்பந்தத்தைப் பற்றி (அது எதைப் பற்றி என நான் உங்களுக்கு நினைவூட்டத் தேவையில்லை), எனக்கு எழுதிய கடிதத்தில் மன்னிக்கவே முடியாத வகையில் எழுதியிருந்ததில் இருந்ததை (தெளிவில்லாமலும் தொடர்பில்லாமலும்) வைத்து நான் உங்கள் பகைமையை உறுதிசெய்து கொள்கிறேன். நீங்கள் ஆவணங்களைக் கண்டு அஞ்சுகிறீர்கள். அவற்றை அழித்துவிட்டு என்னை முட்டாளாக்கப் பார்க்கிறீர்கள். ஆனால் அப்படி என்னை முட்டாளாக்குவதை அனுமதிக்க மாட்டேன். யாருமே இதுவரை என்னை அப்படி நடத்தியதில்லை, மரியாதை மிக்கவன் நான். நான் கண்களைத் திறந்து எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முயல்கிறேன். ஆனால் நீங்கள் என்னைக் குருடாக்கி, யிவ்கெனி நிகோலாய்ட்ச் பற்றிய பேச்சுகளால் என்னைக் குழப்பப் பார்க்கிறீர்கள்.

இந்த மாத ஏழாம் தேதியிட்ட கடிதம் இன்னுமே எனக்குப் புரியவில்லை. உங்களது விளக்கங்களை நான் கோரும்போது நீங்கள் பொய்யான காரணங்களைக் கூறிக்கொண்டு என்னிடமிருந்து விலகிப் போகிறீர்கள். இதுவெல்லாம் எனக்குப் புரியாது என்று நினைத்துக்கொள்கிறீர்களா தாங்கள்? பல்வேறு மனிதர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் வேலைக்காக நீங்கள் எனக்குப் பணம் தருவதாக ஒப்புக்கொண்டிருந்தீர்கள். மட்டுமல்லாது, எவ்வித இரசீதுமின்றி நீங்கள் என்னிடமிருந்து கடன் வாங்கிக்கொண்டிருக்கிறீர்கள். போன வாரம்கூட இது நடந்தது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இப்போது, பணம் உங்கள் கைக்கு வந்தவுடன் யிவ்கெனி நிகோலாய்ட்சை உங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கான எனது பணத்தைத் தருவதிலிருந்து பின்வாங்குகிறீர்கள். நான் சீக்கிரமே  சிம்பிர்ஸ்கிற்குக் கிளம்ப விருக்கிறேன் என்பதால் இவ்விஷயத்தை முடிக்க எனக்கு நேரம் இருக்காதென நினைக்கிறீர்களா? ஆனால் நான் என் மேல் உறுதியாகச் சொல்கிறேன், அப்படி ஒரு நிலை வந்தால், நான் பீடர்ஸ்பெர்கிலேயே இன்னும் இரண்டு மாதங்கள் கூடுதலாகத் தங்கியாவது உங்களுடனான இந்த வணிகத்தை முடித்து எனது நோக்கத்தை நிறைவேற்றித்தான் தீருவேன். சமயங்களில், யாரை எப்படி வழிக்குக் கொண்டுவருவதென எனக்கும் நன்றாகவே தெரியும். இறுதியாக உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். நம் இருவருக்கும் இடையேயுள்ள ஒப்பந்தத்தின் முக்கியக் கூறுகள் பற்றியும் யிவ்கெனி நிகோலாய்ட்ச் குறித்த உங்களது எண்ணங்கள் பற்றியும் கடிதத்திலும் நேரிலும் இன்று எனக்கு நீங்கள் தெளிவாக விளக்காவிட்டால் உங்களால் விரும்பத்தகாத நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்கு நான் தள்ளப்படுவேன் என்பதை சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். எனக்குமே அது சங்கடத்தைத்தான் ஏற்படுத்தும்.

நட்புடன் இருக்கவே விழைகிறேன்

V

(ஃப்யோதர் இவானீச்சிடமிருந்து இவான் பெத்ரோவிச்சிற்கு)

நவம்பர் 11.

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர் இவான் பெத்ரோவிச்!

உங்களது கடிதம் என்னை ரொம்பவும் காயப்படுத்திவிட்டது. உங்கள்மீது மிகுந்த அன்புகொண்ட ஒரு நண்பனிடம் இப்படி நடந்துகொள்ள உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா என எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என் நியாயமற்ற நண்பரே. எதையும் முழுவதாய் விளக்குவதற்கு முன்னரே, இப்படிப்பட்ட அவமரியாதை தரும் சந்தேகங்களால் என்னைக் காயப்படுத்துவதில் உங்களுக்கு அப்படி என்ன அவசரம்?  உங்களது முறைப்பாடுகளுக்கு நான் விளக்கம் தருகிறேன். நேற்று உங்களால் ஏன் என்னைச் சந்திக்க முடியவில்லை என்றால் நான் திடீரென எனது அத்தையின் மரணப்படுக்கைக்கு அழைக்கப்பட்டுவிட்டேன். எனது அத்தை, யிவ்மியா நிகோலாவ்னா, நேற்றிரவு பதினோரு மணிக்கு மரணித்துவிட்டார். துயர்மிகு இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை நான்தான் செய்ய வேண்டுமென உறவினர்கள் அனைவரும் முடிவெடுத்து விட்டதால், உங்களைக் காலையில் சந்திக்கவோ ஒருவரி எழுதி அனுப்பவோகூட எனக்கு நேரமே கிடைக்கவில்லை. நம் இருவருக்கிடையே ஏற்பட்டுவிட்ட இந்த மனவேற்றுமை குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். யிவ்கெனி நிகோலாய்ட்ச் குறித்து நான் போகிற போக்கில் சொன்னதை நீங்கள் ரொம்பவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு என்னைக் குற்றப்படுத்தும்படியாக அதற்குத் தவறான பொருள் கொண்டுவிட்டீர்கள்.

பணத்தைப் பற்றியும் அதுகுறித்த உங்களது பதற்றத்தைப் பற்றியும் சொல்கிறீர்கள். எவ்விதத் தாமதமுமின்றி நான் உங்களது பணத்தைத் திருப்பித்தரத் தயாராக இருக்கிறேன். என்றாலும் கடந்த வாரத்தில் நான் உங்களிடமிருந்து வாங்கிய முந்நூற்றைம்பது ரூபிள்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெறப்பட்டதுதானே தவிர கடனாக அல்ல என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். அது கடனாக இருந்திருந்தால் அங்கே நிச்சயம் அதற்கான இரசீது இருந்திருக்கும். உங்களது கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிற விஷயங்களைப் பற்றிப் பேசுகிற அளவிற்கு நான் என்னைத் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. அது ஒரு தவறான புரிதல் என்றே நான் எடுத்துக்கொள்கிறேன். உங்களது வழக்கமான அவசரப் புத்தியினாலும் சினத்தினாலும் பிடிவாதத்தினாலும்தான் அது நிகழ்ந்திருக்கிறது என்பதையும் உணர்கிறேன். உங்களது நற்குணத்தின் காரணமாகவும் வெளிப்படைத் தன்மையினாலும் எவ்விதச் சந்தேகத்தையும் உங்களால் மனதிற்குள் வைத்துக்கொண்டிருக்க முடியாது என்பதை நான் அறிவேன். உண்மையைச் சொன்னால், எனக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் முதலில் கைகொடுப்பது நீங்களாய்த்தான் இருப்பீர்கள் என்பதையும் நான் அறிவேன். நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள் இவான் பெத்ரோவிச், ரொம்பவும் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள்!

உங்கள் கடிதம் என்னைக் காயப்படுத்திவிட்டதுதான் என்ற போதிலும், இன்றேனும் உங்களைச் சந்தித்து மன்னிப்பு கோர நான் தயாராக இருக்க வேண்டும். ஆனால் நேற்று வரை நான் மிகுந்த அலைச்சலில் இருந்ததால் என்னால் நிற்கக்கூட முடியவில்லை. இது போதாதென்று என் மனைவிக்கும் பிரச்சினை. அவளுக்கு உடல்நிலை ரொம்பவும் மோசமாய் இருக்கிறதென நான் அஞ்சுகிறேன். கடவுள் புண்ணியத்தில் என் மகன் தேறிவிட்டான். ஆனால் உடனடியாக முடிக்க வேண்டிய முக்கிய வேலைகள் நிறைய இருக்கின்றன. இத்துடன் முடித்துக்கொள்கிறேன். நட்புடன் இருக்கவே விழைகிறேன். 

VI

(இவான் பெத்ரோவிச்சிடமிருந்து ஃப்யோதர் இவானீச்சிற்கு)

நவம்பர் 14.

மதிப்பிற்குரிய ஃப்யோதர் இவானீச்!

மூன்று நாட்களாக நான் காத்துக்கொண்டிருக்கிறேன், அவற்றை பிரயோஜனமாகப் பயன்படுத்தவும் முயன்றேன். அதே சமயத்தில், பணிவும் நன்னடத்தையுமே ஒவ்வொருவரது மிகப்பெரிய ஆபரணங்கள் என்றும் எண்ணுகிறேன். பத்தாம் தேதி நான் உங்களுக்கு எழுதிய கடிதத்திற்குப் பிறகு சொல்லாலோ செயலாலோ எனது இருப்பை உங்களுக்கு நான் நினைவுபடுத்தவே இல்லை. ஒரு கிறிஸ்துவனாக தொந்தரவின்றி நீங்கள் உங்களது அத்தை சார்ந்த கடமைகளைச் செய்யட்டும் என நான் நினைத்ததும், உங்களுக்குத் தெரிந்த ஒரு பிரச்சினை குறித்து சில யோசனைகளும் விசாரணைகளும் செய்யவேண்டி இருந்ததும்தான் அதற்கான காரணங்கள். இப்போது இந்தக் கடிதத்தில், நான் விரிவாகவும் தீர்மானமாகவும் என்னை விளக்கிவிடுகிறேன்.  

உங்களது முதல் இரண்டு கடிதங்களை வாசித்த போது, உண்மையில் நான் என்ன கேட்கிறேன் என்பதே உங்களுக்குப் புரியவில்லை என்றுதான் தோன்றியது. நான் உங்களை நேரில் சந்தித்து சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ளவே விரும்பினேன். எனக்கு எழுதுவது குறித்து தயக்கம் இருந்தது, மனதில் நினைப்பதை கடிதத்தில் என்னால் தெளிவாக விளக்க முடியாதது குறித்து நான் குறைபட்டுக்கொண்டேன். எனக்குக் கல்வியறிவோ நயமாக வெளிப்படுத்திக்கொள்ளும் தெளிவோ இல்லை என்பதை நீங்களே அறிவீர்கள். போலவே, உள்ளீடற்ற வெற்று மரியாதைகளிலும் எனக்கு நம்பிக்கையில்லை. தோற்றங்கள் நம்மை ஏமாற்றக் கூடியவை என்பதையும் மலருக்கு அடியில் நாகம் ஒளிந்திருக்கக்கூடும் என்பதையும் நான் பல கசப்பான அனுபவங்களால் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஆனால் உங்களுக்கு என்னைப் பற்றித் தெரிந்திருந்தது. எனக்கு முறையாக நீங்கள் பதிலளிக்கவில்லை. ஏனென்றால் உங்கள் வாக்கினை மீறவும் நமக்கிடையே உள்ள நட்புறவை அவமதிக்கவும் நீங்கள் முன்னரே முடிவு செய்துவிட்டீர்கள். அருவருக்கத்தக்க உங்களது சமீபத்திய நடவடிக்கைகளால் நீங்கள் இதை உறுதி செய்துவிட்டீர்கள்.

நான் அதை எதிர்பார்க்கவேயில்லை. எனது நலனுக்கெதிரான உங்களது நடவடிக்கைகளை இந்த நொடி வரை நான் நம்பாமலிருக்கவே விரும்புகிறேன். நமது முதல் அறிமுகத்திலிருந்தே உங்களது சாமர்த்தியத்தாலும், மென் நடத்தையாலும் விஷய ஞானத்தாலும் உங்களால் நான் அடைய வாய்ப்புள்ள பலன்களாலும் என்னை ஆக்கிரமித்துவிட்டீர்கள். எனக்கு ஒரு உண்மையான நண்பரும் நலன் விரும்பியும் கிடைத்துவிட்டதாக நான் கற்பனை செய்துகொண்டேன். ஆனால் இப்போதுதான் தெளிவாகத் தெரிகிறது. அபாரமான அறிவுத்திறமிக்க வெளித்தோற்றத்தைக் கொண்டிருப்பவர்களும்கூட இதயத்தில் விஷத்தை மறைத்துக்கொண்டிருக்ககூடும், தமது தந்திரத்தைப் பயன்படுத்தி மன்னிக்கவே முடியாதபடி சுற்றத்தாரை ஏமாற்றி வலை பின்னக்கூடும். எனவே அவர்கள் ஆவணங்களை அஞ்சுபவர்களாக இருப்பார்கள். ஆனால் அதே நேரம், தமது மொழியாற்றலைப் பயன்படுத்தி தன்னுடன் வணிகத்தில் ஈடுபடுகிற ஒவ்வொருவரையும் மயக்கவும் வீழ்த்தவும் செய்கிறார்கள். அதை அவர்கள் சுற்றத்தாரின் நலனிற்காக ஒருபோதும் பயன்படுத்துவதில்லை. நீங்கள் எனக்குச் செய்த துரோகங்களைக் கீழே தெளிவாக விளக்கியிருக்கிறேன். 

முதலாவதாக, எனது முதல் கடிதத்திலேயே என் நிலையைக் குறித்து தெளிவாக விளக்கி, யிவ்கெனி நிகோலாய்ட்ச் பற்றிய உங்களது குறிப்புகள் குறித்து விவரமாய்ச் சொல்லும்படி கேட்டுக்கொண்ட பிறகும், அது குறித்துப் பேசுவதையே தவிர்த்து என்னை ஐயங்களுக்குள்ளும் சந்தேகங்களுக்குள்ளும் மூழ்கடித்து விட்டீர்கள். அடுத்ததாக, வார்த்தைகளாலும் விவரிக்க முடியாதபடி என்னைச் சிரமப்படுத்திய பிறகு, நான் உங்களைக் காயப்படுத்திவிட்டதாக கடிதம் எழுதுகிறீர்கள், இல்லை, இதை நான் எப்படி எடுத்துக்கொள்வது, மதிப்பிற்குரியவரே? ஒவ்வொரு நிமிடமும் மதிப்புமிக்கதாயிருக்க, என்னை உங்களைத் தேடி நகர் முழுக்கத் திரிய வைத்துவிட்டு, ரொம்பவும் நெருக்கமானவர் போல எனக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். அவற்றில் முக்கியமானவற்றை எல்லாம் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு தொடர்பற்ற விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தீர்கள். உங்கள் மனைவியின் -அவரை நான் மதிக்கிறேன்தான் – நோய்மை குறித்தும் உங்கள் குழந்தைக்கு பல் முளைப்பது குறித்தும் அவனுக்கு ரூபர்ப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறித்தும் ஒவ்வொரு கடிதத்திலும் தொடர்ச்சியாக, என்னை அவமதிக்கும் விதத்தில் குறிப்பிட்டு வந்தீர்கள். குழந்தையின் துயரம் தந்தையின் இருதயத்தைக் கிழிக்கும் என்பதை நான் ஒப்புக்கொள்ளத் தயாராகவே உள்ளேன். ஆனால், அதற்குச் சம்பந்தமில்லாத, அதைவிட முக்கியமான, ஆர்வமூட்டும் விஷயம் பேசப்பட வேண்டியிருக்கும் போது இது எதற்காக?

நான் அதைப் பொறுமையாகத் தாங்கிக்கொண்டேன். ஆனால் இப்போது நாட்கள் கடந்து விட்டதால் அதை உங்களுக்கு விளக்குவது என் கடமை என்று தோன்றுகிறது. இறுதியாக, போலியான சந்திப்புகளை ஏற்பாடு செய்வதன் மூலம் பலமுறை என்னை ஏமாற்றி கோமாளியாகவும் முட்டாளாகவும் ஆக்கியிருக்கிறீர்கள். எனக்கு அதில் ஒருபோதும் விருப்பமில்லை. அடுத்ததாக, என்னை வரச்சொல்லி முழுவதுமாக ஏமாற்றிய பிறகு, சரியாக ஐந்து மணிக்கு உங்களது அத்தைக்கு பக்கவாதம் ஏற்பட்டது குறித்து தகவல் வந்ததாக வெட்கமேயில்லாமல் துல்லியமாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதிர்ஷ்டவசமாக இந்த மூன்று நாட்களில் சில விஷயங்களை வெற்றிகரமாக விசாரித்துத் தெரிந்துகொள்ள முடிந்தது. உங்களது அத்தைக்கு ஆறாம் தேதி நள்ளிரவுதான் பக்கவாதம் ஏற்பட்டதெனத் தெரிந்துகொண்டேன். புனிதமான குடும்ப உறவுகளை அதற்குச் சம்பந்தமே இல்லாத ஒருவரை ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை இந்த உண்மை விளக்குகிறது. இறுதியாக, உங்களது கடைசி கடிதத்தில், பல அலுவல் சம்பந்தமான விஷயங்களை நான் பேச வந்த அந்தக் குறிப்பிட்ட சமயத்தில்தான் உங்களது அத்தை இறந்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களது இழிவான கணக்கீடுகளும் அதைத் தெரிவித்த விதமும் அதை அப்படியே நம்பச் செய்வதாக இருந்தாலும், கடிதத்தில் நீங்கள் அறமற்றுக் குறிப்பிட்ட நேரத்திற்கு இருபத்திநான்கு மணி நேரத்திற்குப் பின்புதான் அவர் உண்மையில் இறந்திருக்கிறார்.  அதிர்ஷ்டவசமாக என்னால் இதை அறிந்துகொள்ள முடிந்தது. எனக்கெதிராக நீங்கள் செய்த துரோகத்தினை நான் கண்டறிந்த விதங்களைப் பற்றிச் சொல்லி மாளாது. நீங்கள் எனக்கெழுதிய ஒவ்வொரு கடிதத்திலும் என்னை உண்மையான நண்பர் என்றும் வெவ்வேறு அன்பு வார்த்தைகளிலும் குறிப்பிட்டதெல்லாம் என்னை ஏமாற்றுவதற்காகத்தான் என்பதைப் புரிந்துகொள்ள, பக்கச் சார்பற்ற ஒரு பார்வையாளருக்கு, இதுவே போதுமானது. 

நீங்கள் எனக்குச் செய்த ஒரு தலையாய துரோகத்தைப் பற்றியும், நம் இருவருக்கிடையேயான ஒரு விஷயத்தில் தொடர்ந்து நீங்கள் கடைபிடித்து வரும் மௌனம் பற்றியும் இப்போது நான் பேசவிருக்கிறேன். எவ்வித இரசீதுமின்றி ஒரு தொழிற்பங்காளனாக நீங்கள் என்னிடமிருந்து காட்டுமிராண்டித்தனமாக மிரட்டி கடன் வாங்கிய முந்நூற்றைம்பது ரூபிள்கள், நமது ஒப்பந்தம், யிவ்கெனி நிகோலாய்ட்ச் மீதான அவதூறுகள் குறித்து கொஞ்சமும் புரியாத வகையில் நீங்கள் எழுதியிருந்த கடிதத்தை வஞ்சகமாகத் திருடிக்கொண்டீர்கள். உங்கள் கடிதத்தில் நீங்கள் சொல்லவந்தது இப்போது எனக்கு நன்றாகப் புரிகிறது. ஒரு வெள்ளாட்டுக் கிடாவினைப் போல அவன் பாலுக்கும் ஆகமாட்டான் தோலுக்கும் ஆகமாட்டான். அறுதியிட்டுக் கூற முடியாதபடியிலான குணம் அவனுடையது, இதுதான் அவனிடமிருக்கும் பிரச்சினை என்பதே அதன் சாரம். பணிவும் நற்குணமும் நிறைந்தவன் என்பதாகவே நான் அவனை அறிந்திருக்கிறேன். சமூகத்தில் நல்ல மரியாதை பெறுவதற்கான தகுதிகளை உடையவன். அதோடு கடந்த பதினைந்து நாட்களாக ஒவ்வொரு மாலையும் அவனுடன் சூதாடியதன் மூலமாக உங்களது சட்டைப் பையினை நூற்றுக்கணக்கான ரூபிள்களால் நிரப்பியுள்ளீர்கள் என்பதையும் நான் அறிவேன். இப்போது நீங்கள் இதையெல்லாம் மறுத்துவிட்டு, எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய மறுப்பதோடல்லாமல் எனக்குச் சொந்தமான பணத்தையும் பறித்துக்கொண்டீர்கள்.

கைவர வாய்ப்புள்ள பல்வேறு இலாபங்களைப் பற்றிக் கூறி உங்களோடு நானும் கூட்டுசேர வேண்டும் என ஆசை காட்டினீர்கள். என்னுடைய பணத்தையும் யிவ்கெனி நிகோலாய்ட்சினுடைய பணத்தையும் முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பான முறையில் அபகரித்துவிட்டு, நான் சிரமப்பட்டு உங்களது வீட்டிற்கு அறிமுகப்படுத்திய அந்த மனிதனைப் பற்றி வேண்டுமென்றே தவறாகச் சித்தரிப்பதன் மூலம் எனக்குச் சேர வேண்டிய பணத்தைத் தருவதிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறீர்கள். ஆனால் முரணாக, இன்னமும் நீங்கள் அவன் பின்னால் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு திரிகிறீர்கள் என்பதும் ஒட்டுமொத்த உலகத்திடமும் அவன் உங்களது நெருங்கிய நண்பன் என்று சித்தரிக்க முயல்கிறீர்கள் என்பதையும், உங்கள் நண்பர்கள் மூலமாக, அறிந்துகொண்டேன். ஆனால் உங்களது திட்டங்களையும் நட்பென்பதற்கு உங்கள் அகராதியில் என்ன பொருள் என்பதையும் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு உலகத்தில் யாரும் முட்டாள் இல்லை. அவை அனைத்தும் ஏமாற்றும் துரோகமும் தெய்வத்திற்கெதிரான சிந்தையும் கொண்டவை, மனிதனுக்குரிய கடமைகளை மறந்தவை, எல்லா வகையிலும் தீங்கானவை. நானே அதற்குச் சான்றும் உதாரணமும் ஆவேன். நான் உங்களுக்கு என்ன தீங்கு செய்துவிட்டேன் என இப்படி இரக்கமில்லாமல் என்னிடம் நடந்துகொள்கிறீர்கள்? 

நான் எனது கடிதத்தை முடித்துக்கொள்கிறேன். என் நிலையை முழுதாக விளக்கிவிட்டேன். இறுதியாகச் சொல்லுகிறேன். இந்தக் கடிதம் பெறப்பட்டவுடன், கூடிய விரைவில், என்னிடமிருந்து நீங்கள் வாங்கிய முந்நூற்றைம்பது ரூபிள்களையும் நீங்கள் எனக்கு வாக்களித்த தொகையையும் முழுவதுமாகத் திருப்பித் தரவேண்டும். தவறும் பட்சத்தில் உங்களிடமிருந்து அதைத் திரும்பப்பெற எல்லா வகையிலும் முயல்வேன். முதலில் வெளிப்படையான மிரட்டலாலும், இரண்டாவதாக சட்டத்தின் பாதுகாப்புடனும் இறுதியாக உங்களைப் பற்றி என்னிடமிருக்கிற சில தகவல்களை வெளியிடுவது குறித்த அச்சுறுத்தலாலும் என அது எவ்வகையினதாகவும் இருக்கலாம். அந்தத் தகவல்கள் உங்களது பணிவான வேலைக்காரனிடமே தொடர்ந்து இருக்குமாயின் இந்த உலகத்தின் முன் உங்களது நற்பெயருக்கு களங்கள் விளைவித்து அழிவினைத் தேடித் தரக்கூடும்.

நட்புடன் தொடர விரும்பும்…

VII

(ஃப்யோதர் இவானீச்சிடமிருந்து  இவான் பெத்ரோவிச்சிற்கு)

நவம்பர் 15.

இவான் பெத்ரோவிச்!

நாகரீகமற்ற, முறையற்ற உங்களது கடிதத்தைக் கண்டவுடன் அப்படியே அதை சுக்குநூறாகக் கிழித்துவிட வேண்டுமெனத்தான் முதலில் எனக்குத் தோன்றியது. ஆனால் ஒரு ஆர்வத்தில் நான் அதைப் பத்திரமாக வைத்துள்ளேன். உண்மையில், நடந்துவிட்ட குழப்பங்கள் குறித்தும் மகிழ்ச்சியற்ற நிகழ்வுகள் குறித்தும் நான் வருந்தத்தான் செய்கிறேன். உங்களுக்குப் பதிலளிக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால் அதற்கான தேவையினால் நான் உந்தப்படுகிறேன். எந்த நேரத்திலும், உங்களை என் வீட்டில் பார்க்க நான் விரும்பவில்லை என்பதை இப்போது உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். என் மனைவியும் அவ்வாறே எண்ணுகிறாள். அவளது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது, தார் வாசனை அவளுக்கு ஒத்துப்போவதில்லை. என் மனைவி டான் க்விஸாட் டி லா மன்ச்சா (Don Quixote de la Mancha) புத்தகத்தை உங்களது மனைவிக்கு நன்றியுடன் அனுப்புகிறாள். கடந்த வருகையின் போது நீங்கள் இங்கே விட்டுச்சென்று விட்டதாகக் கூறிய காலணிகளை இங்கு எங்கேயும் காண முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். நான் அவற்றைத் தொடர்ந்து தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். ஒருவேளை அவற்றைக் கண்டறிய முடியவில்லை எனில் புதிய ஜோடி ஒன்றை உங்களுக்காக வாங்குவேன். 

உங்களது உண்மையான நண்பனாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

VIII

நவம்பர் பதினேழாம் தேதி ஃப்யோதர் இவானீச்சின் முகவரிக்கு இரண்டு கடிதங்கள் தபாலில் வந்திருந்தன. முதல் உறைக்குள் கவனமாக மடிக்கப்பட்ட வெளிர்சிவப்பு நிற காகிதத்தில் எழுதப்பட்ட குறிப்பொன்றைக் கண்டான். அதிலிருந்த கையெழுத்து அவனது மனைவியினுடையது. நவம்பர் இரண்டாம் தேதியில் அது யிவ்கெனி நிகோலாய்ட்சிற்கு எழுதப்பட்டிருந்தது. அதைத் தவிர அந்த உறையில் வேறெதுவும் இல்லை. ஃப்யோதர் இவானீச் அதனை வாசித்தான்: 

அன்புள்ள யூஜீன்,

நேற்று எதுவுமே கொஞ்சம்கூட சரியில்லை. நேற்று மாலை முழுக்க என் கணவர் வீட்டில் இருந்தார். நாளை சரியாக பதினோரு மணிக்கு வந்துவிடு. பத்தரை மணிக்கு ஸார்கோவிற்குச் செல்கிற என் கணவர் மாலைவரை வர மாட்டார். இரவு முழுக்க நான் கடும் கோபத்தில் இருந்தேன். தகவலையும் கடிதங்களையும் அனுப்பியதற்கு நன்றி. எவ்வளவு காகிதங்கள்! நிஜமாகவே அவள் அத்தனையையும் எழுதினாளா? நன்றாகவே எழுதுகிறாள். மிக்க நன்றி, அன்பே. நீ என்னை விரும்புகிறாய் என்பதைப் புரிந்துகொள்கிறேன். கோபம் கொள்ளாதே, தயைகூர்ந்து நாளை அவசியம் வா.

ஃப்யோதர் இவானீச் அடுத்த கடிதத்தைக் கிழித்துத் திறந்தான். 

ஃப்யோதர் இவானீச்,

உன் வீட்டில் நான் மறுபடி கால் எடுத்து வைக்கவே போவதில்லை. அதற்காக நீங்கள் அவ்வளவு காகிதத்தை வீணாக்கியிருக்க வேண்டாம். 

அடுத்த வாரம் நான் சிம்பிர்ஸ்கிற்குச் செல்கிறேன். யிவ்கெனி நிகோலாய்ட்ச் உங்களது அன்பும் மதிப்புமிக்க நண்பராகத் தொடர்வான். வாழ்த்துகள், எனது காலணிகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். 

IX

நவம்பர் பதினேழாம் தேதி இவான் பெத்ரோவிச் தனது முகவரிக்கு இரண்டு கடிதங்கள் தபாலில் வந்திருக்கக் கண்டான். முதல் கடிதத்தைத் திறந்த போது, அதில் அவசரமாகவும் கவனமின்றியும் எழுதப்பட்ட ஒரு குறிப்பு இருந்தது. அந்தக் கையெழுத்து அவனது மனைவியினுடையது. ஆகஸ்ட் நான்காம் தேதியிட்ட அது யிவ்கெனி நிகோலாய்ட்சிற்கு எழுதப்பட்டிருந்தது. அதைத் தவிர அந்த உறையில் வேறெதுவும் இல்லை. இவான் பெத்ரோவிச் அதனை வாசித்தான்:

விடைகொடு, விடைகொடு, யிவ்கெனி நிகோலாய்ட்ச்! கடவுள் உனக்கு இதற்கான பரிசையும் அளிப்பார். நீ மகிழ்ச்சியாக இரு, ஆனால் எனது நிலைமைதான் மோசமாக இருக்கிறது. ரொம்பவும் மோசமாக! இது உனது விருப்பம். எனது அத்தைக்காக மட்டும்தான். இல்லாவிடில் நான் உன்னை அவ்வளவு நம்பியிருக்கவே மாட்டேன். என்னையோ எனது அத்தையையோ பரிகாசம் செய்யாதே. நாளை எனது திருமணம். வரதட்சணையின்றி என்னை மணமுடித்துக் கொள்ளக்கூடிய ஒரு நல்ல மனிதன் கிடைத்தது குறித்து என் அத்தை மகிழ்ச்சியடைகிறாள். இன்றுதான் நான் அவரை முதன்முதலாக நன்றாகப் பார்த்தேன். நல்லவராகத்தான் தெரிகிறார். என்னை அவசரப்படுத்துகிறார்கள். சென்று வருகிறேன் என் அன்பே… எனக்கு விடைகொடு. எப்போதேனும் என்னை நினைத்துக்கொள், உன்னை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். விடைகொடு! இந்தக் கடைசிக் கடிதத்தில் நான் எனது முதல் கடிதத்தில் போலவே கையொப்பமிடுகிறேன், உனக்கு நினைவிருக்கிறதா? 

டத்யானா. 

இரண்டாவது கடிதம் பின்வருமாறு இருந்தது: 

இவான் பெத்ரோவிச்,

நாளை நீங்கள் ஒரு புது ஜோடி காலணிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அடுத்தவர்களது சட்டைப் பையிலிருந்து திருடுவது எனது பழக்கமுமில்லை, தெருவில் கிடக்கிற குப்பைகளைப் பொறுக்குவதில் எனக்கு விருப்பமுமில்லை. 

தனது தாத்தா சம்பந்தப்பட்ட ஒரு வேலைக்காக யிவ்கெனி நிகோலாய்ட்ச் ஓரிரு நாட்களில் சிம்பிர்ஸ்கிற்குச் செல்வதாகவும், யாரேனும் பயணத்துணை இருந்தால் கேட்டுச் சொல்லுமாறும் கூறினான். நீங்கள் அவனை உடன் அழைத்துச்செல்ல விரும்புவீர்கள்தானே?

*

ஆங்கில மூலம்: A Novel in Nine Letters, Fyodor Dostoevsky, Published by “Read Books”, 2018 Edition.