ஒரு குழந்தையும் கவிதையின் குழந்தைமையும்: மகிழ் ஆதனின் கவிதைகள்

1 comment

மகிழ் ஆதன், ஒன்பது வயதில், தனது முதல் கவிதைத் தொகுப்பை – அவனது தந்தையால் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு – வெளியிட்டிருக்கிறான். நான் அறிந்த வரையில் தமிழில் ஒரு குழந்தையால் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு இதுவாகத்தான் இருக்கும். வள்ளலார் குழந்தையாக இருக்கும்போதே முருகனின் மீது பாடல் இயற்றியதாகச் சொல்வார்கள். குழந்தை மேதைகளுக்கு நம்மிடையே ஒரு தொடர்ச்சி இருக்கிறது. ஞானசம்பந்தர், இராமானுஜர், வள்ளலார், பாரதியார் என மத்திய காலத்திலிருந்து நவீன காலகட்டம் வரை மகிழ் ஆதனுக்கு இவர்களே மூதாதைகள்.

கவிதையின் கூறுகள் சில தர்க்கத்துக்கு வெளியே இருப்பவை என நாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறோம். கவித்துவ நீதி, கவித்துவத் தருணம் என நாம் சொல்வதை தர்க்கரீதியாக நிறுவிட முடியாது என்பதால் கவிதையின் சுதந்திரம் எல்லையற்றது.

ஒரு குழந்தையின் உள்ளம் எப்போது தன்னை ஒரு தனித்த மனித உயிரியாக உணர்ந்து, தன்னுள் உருவாகும் ஆளுமைக்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக்கொள்கிறது? பெரும்பாலான குழந்தைகள், சமூகத்தால் நெறிப்படுத்தப்பட்டு, கலாச்சார குளோன்களில் ஒன்றாக மாறுவிடுகின்றன. பெற்றோர், பள்ளி என இரு பெரும் நிறுவனங்களால் அன்பு, கண்டிப்பு, கண்காணிப்பு, தண்டனையும் வழங்கப்பட்டு, இப்போது ஒரு காட்டுச் செடி குறுங்கிளைகள் வெட்டப்பட்டு, தொட்டியில் வளர்க்கப்படும் செடியாகச் சீராகிவிடுகிறது.

ஆனால், மகிழ் ஆதன், மேற்சொன்ன நெறிப்படுத்தல்களுக்கு இடையேயும் தன்னுள்ளே முகிழ்ந்த காட்டுச் செடியைத் தனது கவிதைகளில் படிமங்களாக, பொருட்களின் இயல்பை மாற்றுவதெனப் படரவிட்டிருக்கிறான். அவனது வீடு அதை இரகசியமான ஒன்றாக வைத்திருக்கும் நெருக்கடியைக் கொடுக்கவில்லை என்பது அவனுக்குக் கிடைத்த நல்வாய்ப்பு. பள்ளிக் கல்வியை விமர்சனம் செய்யும் பிங்க் ஃபிளாய்ட் (Pink Floyd) குழுவினரின் புகழ்பெற்ற பாடலான “சுவரில் மற்றொரு செங்கலை”க் கேட்ட நிறவெறிக் காலத் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சில சிறுவர்கள் நிறவெறி அரசு நடத்தும் பள்ளிகளைப் புறக்கணித்தார்கள். மகிழ் ஆதன் அந்நெடும் சுவரில் மற்றொரு செங்கல்லாக மாறாதிருக்கிறான்.

ஒரு குழந்தை மேதையின் மனதை, நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வதில் நமக்குச் சிரமம் இருக்கிறது. லிடியன் நாதஸ்வரம் பியானோவைத் திறம்பட வாசிக்கையில் நமக்கு ஆச்சரியத்தோடு, இது எப்படி நிகழ்கிறதென்ற வியப்பும் வருகிறது. மகிழ் ஆதன் கவிதைகளை வாசிக்கும்போதும் ஆச்சரியமும் வியப்பும் ஒருசேர மேலெழுகின்றன.  

“கண்ணில் பட்ட ஒளி
காணாமல் பறந்து போச்சு
பறந்து போன ஒளி
சூரியனாகத் திரும்பி வரும்


மற்றொரு கவிஞராக இருந்தால் இக்கவிதைக்கு இரவும்/பகலும் எனப் பெயர் வைத்திருப்பார். பெயரிடாத வரையில் ஒரு கவிதை குழந்தையாகவே இருக்கிறது. பெயரிடப்படாத குழந்தையை நாம் பல்வேறு விதங்களில் அழைப்பதைப் போல மகிழ் ஆதனின் கவிதைகள் இன்னதுதான் என்று வரையறுக்க முடியாத சுதந்திரத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளன.  

This image has an empty alt attribute; its file name is naanthaan-ulagaththai-varainthen_FrontImage_447.jpg

எனினும், கவிதைகளை ஒரு சேரப் பார்க்கையில், 60-65 அடிப்படையான சொற்களுக்குள் அவை இயங்குவதைக் காணலாம். வானம், முத்தம், ஒளி, மனசு, கனவு, எனது, போர்வை, மழை… என அவற்றின் இயங்குதளம் மண்ணை விடவும், விண்ணில் நிலை கொண்டிருக்கிறது. ஒருவேளை, வான் வீட்டின் விரிவிலிருந்தே மகிழ் ஆதனின் கவிதைகள் தோன்றியிருக்கும் வாய்ப்புகள் அதிகம். கவிதையைத் தோன்றுதல் எனச் சொல்வதின் வழியே அதற்கு அறிவின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கிறோம். மொழி கவிதையை வழிபடுகிறது. தோன்றுதல் நமது கையில் இல்லாத ஒன்று. மகிழ் ஆதன் கவிதைகள் எழுதுவதும் அவன் கையில் இல்லாத ஒன்று. அவன் மனம், வான் விரிவில் நிலை கொண்டிருக்கிறது.  

“என் பட்டத்திலே
நான் பறப்பேன்
நான் பறக்குறதை
அந்தக் காற்று கண்டுபிடித்து
என்னைக் கட்டிப்பிடிக்கும்


நடப்பது, ஓடுவதைப் பற்றி மகிழ் ஆதன் ஒன்றும் சொல்வதில்லை. பறவைகள், பட்டம், எரிகல் என அவன் மனது பறத்தலின் அளப்பரிய மகிழ்விற்காக (அதை நாம் விடுதலை உணர்வு என்று வரையறுப்போம்) தன்னையறியாமலேயே ஏங்குகின்றது. விடுதலையுணர்வு என்னவென்று அறியாத பருவம். எனவே அதைத் தெளிவாகச் சொல்லிவிட முடியாது என்பதால் திரும்பத் திரும்ப வானும் பறத்தலும், வானின் மூன்று விளக்குகளும் சொல்லப்படுகின்றன (அவற்றை நாம் குறியீடுகள் என்போம்).

துள்ளிக் குதிக்கும் மான்
துள்ளிக் குதித்தே
சூரியனைத்
தலையில் வைத்துப் போகும்


மற்றொரு கவிதையில், சிறுத்தை சூரியனைக் கால்பந்தாக்கி உதைக்கும். வடிவங்களில் வட்டம் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. நிலவின் முழுவட்டம், சூரியனின் முழுவட்டத்தைக் கண்ட கண்கள் நட்சத்திரங்களை விளக்காக, பழமாகப் பார்க்கிறது. தொலைவு வடிவங்களைக் குழப்பிவிடுகிறது. நிறங்களில் ஊதாவும் மஞ்சளும். இரவையும் பகலையும் ஊன்றிக் கவனித்திருக்கும் மகிழ் ஆதன் கருப்பு நிறத்தைக் கவனிக்காமல் விட்டது, இரவு குடியேறாத அவன் ஒளிரும் மனத்தைக் காட்டுகிறது. அவனோ மற்றொரு கவிதையில் தன்னைச் சூரியனின் குழந்தை என அழைத்துக் கொள்வதோடு, தன்னை வரைந்தது சூரியனே எனச் சூரியனுக்கு வாரிசு உரிமை கோருகிறான்.

பெரும்பாலான கவிதைகளிலிருந்து மூன்று கவிதைகள், ஒரு குழந்தையின் கவிதை மனதுக்கு மிகத் தொலைவிலிருந்து சொல்லப்பட்டிருக்கின்றன.  

“என் நிழல்
எப்படி வருது தெரியுமா?
என் மனசாலே வருது
என் இருட்டிலே
பிறந்தது அது
வடிவம் இல்லை
அது பிரகாசம்


ஆளுமை உருவாகி, ஒரு கட்டமைப்பிற்குள் சிக்காத உட்பரப்பைக் கொண்ட மனதே தனது நிழலையும் பிரகாசமாகப் பார்க்கும்.

காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்
காலத்தில் பறப்பான்
காலத்தை நேரில் பார்ப்பான்
காலத்தைக் கற்பனை பண்ணிப்பான்


காலம் என்பது ஒரு தோற்றப் பிழை என இக்கவிதை மனம் அறிந்திருக்கிறது. எனக்கு இந்தத் தொகுப்பில் மிகவும் பிடித்த கவிதையென பின்வருவதைச் சொல்வேன்.

நம்மள் கண்ணாடியில்
பார்க்கும் அற்புதம்
நம்மளைத் திரும்பியும்
கண்ணாடியில் பார்க்க வைக்கும்


இங்கே கண்ணாடியில் பிரதிபலிக்கும் மகிழ் ஆதனோ, பிரதிபலிக்கும் இயல்பைக் கொண்ட கண்ணாடியோ அல்ல, இரு பருப்பொருட்கள் ஒன்றாகச் சேர்ந்து எப்படி ஒரு பிரதிபலிப்பை உண்டாக்குகின்றன என்பது அவனுக்கு வியப்பு அளிக்கிறது. அந்த வியப்பே, பிரதிபலிப்பை ஓர் அற்புதம் என அழைக்கிறது. பின்னாளில் நாம் அனைவருமே ஒன்றின் சாயல்கள் என அழைக்கும் இடத்துக்கு அவன் வரக்கூடும். நகுலன் இக்கவிதையை வாசித்திருந்தால், வாரிசற்ற அவருக்கு ஒரு வாரிசு கிடைத்திருக்கிறான் என, மனிதர்களைப் பார்க்க மட்டுமே அவர் பயன்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் மூக்குக் கண்ணாடியைப் பரிசளித்திருப்பார்.  

கவிதையின் குழந்தைமை என்பது அதன் வரையறுக்க முடியாத தன்மையும், அது எடுத்துக்கொள்ளும் சுதந்திரமுமே. மகிழ் ஆதன் எனும் குழந்தையோடு அதிதுவக்கத்திலேயே கவிதையின் குழந்தைமை கைகோர்த்திருக்கிறது. சூரியனை நோக்கிப் பறக்கும் பறவைகளிலும், காற்றில் அல்லாடும் பட்டங்களிலும் குதூகலிக்கும் மகிழ் ஆதன் தானொரு குழந்தையாக இருந்தேன் என்பதற்கு அவனது புகைப்படங்களைக் கடந்து மற்றொரு அழுத்தமான அடையாளத்தை (காலடித்தடத்தை அம்மா என்கிறான்) உருவாக்கியிருக்கிறான். கவிதைக்கும் ஒரு குழந்தைப் பருவம் இருக்கிறதென்று அதுவும் ஓர் அடையாளத்தை மகிழ் ஆதனின் வழியாக உருவாக்கியிருக்கிறது.

*

புத்தக விவரங்கள்:

நான்தான் உலகத்தை வரைந்தேன் (கவிதைகள்) – மகிழ் ஆதன், வானம் பதிப்பக வெளியீடு, விலை: ரூ.50, தொடர்புக்கு: 9176549991

1 comment

ஜீவன் பென்னி June 29, 2021 - 9:15 pm

குழந்தைமையின் கவிதை மொழி வெளிப்பாடுகளை மிக நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறீர்கள் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் மிக்க மகிழ்ச்சி மற்றும் மகிழ் ஆதனுக்கு வாழ்த்துக்கள்.

Comments are closed.