தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 9): அகத்தின் ஆழம் தேடி… – மயிலன் ஜி. சின்னப்பனின் கதைகள்

0 comment

2019 ஜூன் மாதத்தில் ஒரு நாள் சாலை விபத்தொன்றில் சிக்கிய மோகன் சிகிச்சைக்காக கோவை கங்கா மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கியிருந்தார். அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வந்த இரண்டாம் நாள் படிப்பதற்கு ஏதாவது புத்தகம் வேண்டுமெனக் கேட்டார். கூடவே, ஆனந்த விகடனில் வந்திருக்கும் கதையைப் பற்றி சிலர் முகநூலில் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்ற தகவலையும் சொன்னார்.

இரண்டொரு புத்தகங்களுடன் ஆனந்த விகடனை வாங்கிச் சென்றேன். அதில் வெளியாகியிருந்த ‘அன்நோன்’ கதையைப் பற்றி அறிந்திருந்தவர், ‘இந்தக் கதையை இப்போது என்னால் படிக்க முடியாது’ என்று படிக்க மறுத்துவிட்டார். அப்போதிருந்த மனநிலையில் நானும் அதை வாசிக்கவில்லை.

ஊருக்கு அவர் போன பிறகு ஒரு நாள் அந்த இதழைப் புரட்டிக்கொண்டிருந்தபோது ‘அன்நோன்’ கதை கண்ணில்பட்டது. கதையை எழுதியவரின் பெயரைப் பார்த்ததும் முன்பே வேறொரு கதையைப் படித்த நினைவு வந்தது. கஜா புயல் தஞ்சை, நாகப்பட்டிணம் மாவட்டங்களில் ஏற்படுத்திய சேதாரங்களின் பின்னணியைக் கொண்ட ‘இடர்’ கதையும் ஆனந்த விகடனில்தான் வெளியாகியிருந்தது.

‘அன்நோன்’ கதைக் களமும் எழுதப்பட்ட விதமும் கவனிக்கத்தக்கதாய் இருந்தது. விபத்துக்குப் பின் அடையாளம் தெரியாமல் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குக் கொண்டு வரப்படும் நோயாளிகளைக் குறித்த வெவ்வேறு பார்வைகளையும் அதிலுள்ள மனவோட்டங்களையும் நுட்பமாக சொல்லிய இந்தக் கதை மயிலன் ஜி. சின்னப்பன் என்ற பெயரை நினைவில் நிறுத்தியது. 

அந்த ஆண்டு உயிர்மை வெளியீடாக ‘பிரபாகரனின் போஸ்ட்மார்டம்’ நாவல் வெளியானபோது உடனடியாக வியப்பைத் தந்தது. 

அவரது கதைகள் இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியானபோது வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து வெளியாகும் இணைய இதழ்கள் புதிய சிறுகதையாளர்களுக்குச் சாத்தியப்படுத்தும் வீச்சு மிக முக்கியமானது. எப்படி அதை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது யோசிக்க வேண்டிய ஒன்று. ஆனால், மயிலன் ஜி சின்னப்பனின் கதைகள் ஒவ்வொரு மாதமும் ஏதேனுமொரு இணைய இதழில் வெளியானது. தமிழினி, கனலி, வாசகசாலை, அகழ், உயிர்மை உள்ளிட்ட எல்லா இதழ்களிலும் பங்களித்திருந்தார்.

*

மயிலனின் கதைகளில் உடனடியாகக் கவனத்தைக் கவர்ந்தது மருத்துவமனை சார்ந்த கதைகளை மிகச் சுலபமாகவும் நுட்பமான தகவல்களுடன் கச்சிதமாகவும் எழுதுவது. அவரது துறைசார்ந்த களம் என்பது சாதகமான அம்சம்தான். ஆனால், தெரிந்ததை அனைத்தையும் புனைவில் நிரப்பும் அதிகப்பிரசங்கித்தனத்தை அவர் சாமர்த்தியமாகத் தவிர்த்திருக்கிறார். அதுவே புனைவு சார்ந்த அவரது புரிதலை வெளிப்படுத்துகிறது. 

‘மருத்துவனாக அனுதினமும் பயிலும் வாழ்க்கை எழுத்துக்கு ஒரு பிரத்யேக ஈரமளிப்பதாகவும், எழுத்தாளனாய் நோக்கும் விஷயங்கள் ஒரு மருத்துவனாய் என்னை நெறிப்படுத்துவதாகவும் முழுமையாக நம்புகிறேன்’ என்று அவர் குறிப்பிட்டபோது ஆண்டன் செகாவை நினைத்துக்கொண்டேன். 

‘அன்நோன்’ கதையைப் போல மருத்துவமனை பின்னணியில் அமைந்த இன்னொரு முக்கியமான கதை ‘ஆகுதி’. இரண்டு கதைகளிலுமே மருத்துவர்களின் மனப்போக்குகளையும், நோயாளிகளையும் அவரைச் சார்ந்தவர்களையும் மருத்துவமனை ஊழியர்கள் கையாளும் விதங்களையும் வெகு துல்லியமாக தொட்டுக்காட்ட முடிந்திருந்தது. பொது மருத்துவமனை சார்ந்து ஏற்கெனவே நம்முள் இருக்கும் சித்திரத்தின் இடைவெளிகளை இக்கதைகளின் வழியாக நம்மால் இட்டு நிரப்பிக்கொள்ள முடியும். அதே நேரத்தில் அந்தச் சித்திரத்தில் அதீதமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள ஆதாரமற்ற பல அபத்தங்களைக் களையவும் வற்புறுத்துகின்றன. ‘கதைகள் அல்லது கதை’யிலும் மருத்துவமனை அனுபவங்கள் இடம்பெற்றுள்ளன. 

தனது துறை சார்ந்து எழுதுவது மயிலனுக்கு மிக வசதியானது. பெரிதாக மெனக்கெட வேண்டாம். அவருக்கு இருக்கும் அனுபவங்களை வைத்து இன்னும் சில கதைகளை அவர் எழுதியிருக்க முடியும். ஆனால், மயிலன் அந்த இடத்திலிருந்து உடனடியாகவே நகர்ந்துவிட்டார். 

எவா’, ‘ஈடறவு’ இரண்டு கதைகளும் பால்ய கால அனுபவங்கள் சார்ந்து எழுதப்பட்டுள்ளன 

சிறுவர் பருவத்தில் பால் சார்ந்து இயல்பாக ஏற்படும் ஈர்ப்பும் நெருக்கமும் சட்டென ஏதோ ஒரு தருணத்தில் அது அனுமதிக்கப்படாமல் விலக்கப்படும்போது ஏற்படும் மனச்சரிவும் மறக்க முடியாத வடுக்களாக தேங்கி விடுபவை. ஒவ்வொருவருக்குள்ளும் எஞ்சியிருக்கும் இந்த வடுக்களை இலேசாக தொட்டுக் காட்டுவதாக எழுதப்பட்டிருக்கிறது ‘எவா’.  

சைக்கிள் சிறுவர்களின் பெருங்கனவு. தரையிலிருந்து அவர்களை மேலெழுப்பும் மாயம். அனைவருக்குள்ளும் அவர்களுடைய சொந்த ‘சைக்கிள்’ நிறம் மங்காமல் அதன் சின்னச் சின்னக் குறைகளுடன் இன்னும் துருப்பிடிக்காமல் ஓரமாக நின்றுகொண்டுதான் இருக்கும். இதை ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் இழக்க நேரிடும் துக்கம் எதைக்கொண்டும் நிவர்த்தி செய்ய முடியாதது. இப்படியொரு இழப்பை காவல்துறை எனும் அமைப்பு அணுகும் முறையையும் சிலருக்கு மட்டுமே அது அனுமதிக்கும் தீர்வையும் இந்தக் கதையில் போதனைகளின் சுமைகளின்றிச் சொல்ல முடிந்திருக்கிறது. 

கணவன் மனைவி உறவிலுள்ள விளங்க முடியாத ஆழத்தை அல்லது அபத்தத்தை நாடகீயமான முடிவுடன் சித்தரிக்கிறது ஊழ்த்துணை.

*

உடல் மனம் இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றையொன்று சார்ந்திருப்பவை. எனவே, மனித உடல் சார்ந்த அவரது மருத்துவ அறிவின் துணைகொண்டு மனத்தை பகுத்துப் பார்க்கும் கதைகளை எழுத முனைகிறார் மயிலன். 

வெவ்வேறு தேசங்களைச் சார்ந்த இரு மருத்துவர்களின் அக மோதலைச் சதுரங்க விளையாட்டு போல சித்தரித்துக் காட்டுகிறது ஓர் அயல் சமரங்கம். எல்லோரிடமுமே ஏதோவொரு விதத்தில் அவர்களைக் காட்டிலும் நம்மை மேம்பட்டவனாகக் காட்டிக்கொள்ளவே விழைகிறோம். அவர்கள் கை ஓங்கும்போது விலக நினைக்கிறோம். எரிச்சல் அடைகிறோம். ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் சறுக்கும்போது நிம்மதி கொள்கிறோம். ஒரு கணம் விலகி நின்று இதையெல்லாம் யோசிக்கும்போது அனைத்துமே பொருளற்று உதிர்வதை உணர்கிறோம். மனம் சட்டென விகாசம் கொள்கிறது. ஆனால், அந்த விகாசம் தற்காலிகமானது. மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இன்னொருவனை சந்திக்கும்போது விகாசமற்ற அகமே முந்திக்கொண்டு நிற்கிறது. 

அகம் தன்னிச்சையாக உருமாறும் வெவ்வேறு தோற்றங்களையும் அவற்றின் பாவனைகளையும் களமாகக்கொண்டிருக்கும் இன்னொரு கதை ‘ஏதேன் காட்டின் துர்க்கந்தம்’. மதுபான விடுதியில் சந்திக்க நேரும் ஆணும் பெண்ணுக்குமான சாதாரண உரையாடல் திசை திரும்பி தீவிரமடைந்து விசித்திரமான எல்லையைச் சென்றடைகிறது. குறிப்பிட்ட தருணம் தரும் சின்னஞ்சிறு ஆசுவாசத்தில் தன்னை வெளிப்படுத்தும் அவளது அகத்தை அறுவை சிகிச்சை நிபுணன் போல சொற்களைக் கொண்டு உடைத்தெறிகிறான். சமகாலத்தின் மேம்போக்கான உள்ளீடற்ற உறவுகளின் போலித்தனங்களையும் அதன் எல்லையில் வெளிப்படும் சிறுமைத்தனத்தையும் போதைமிக்க சூழலில் தீர்க்கமாக விவாதிப்பது சுவாரஸ்யமானதுதான்.  

சொந்த வாழ்வின் கசப்புகளைத் தன்னைவிட எளியவன் மீது கசப்பாக மாற்றி வதைக்கும் மனநிலையின் விளைவுகளே ‘ஊடுவெளி’ கதையின் மையம். மனைவியை இன்னொருவனிடம் இழந்தவனின் தோல்வி தரும் வலியை தன்னைக் கண்டு அஞ்சும் எளியவனை நுட்பமாக வதைப்பதன் வழியாக பழிதீர்க்க முனைபவனின் எல்லையற்ற தடுமாற்றங்களை, கோழைத்தனங்களை தீர்க்கமாக வரையறுக்கிறது இந்தக் கதை. வெறிகொண்டு இலக்கின்றிக் கொந்தளிக்கும் உணர்வுகளின் உச்சமும் வீழ்ச்சியும் ஆபாசமானவை. தோற்றுத் தோற்று அனைத்தையும் வென்றெடுக்க வேண்டும் எனும் தினவு. உடைத்து நொறுக்கி எதுவுமில்லாமல் செய்யவேண்டுமென்ற ஆத்திரம் என எல்லா அலைவுகளையும் உள்ளடக்கியுள்ளது ‘ஊடுவெளி’.

பெண்களின் உளவியலை இன்னும் ஆழமாகப் பகுத்துச் சொல்வதாக அமைந்திருப்பது ‘நியமம்’. எல்லாவற்றையுமே தம் தீர்மானத்துக்குள் பிடிவாதமாக வரையறுக்கும் தன்மைகொண்டவர்களால் எதன்மீதும் நம்பிக்கை வைக்க முடிவதில்லை. பாசம், குடும்பம், உறவு, காதல், கண்ணீர் என அனைத்தையும் பாசாங்குகளாகவே அணுகுகிறார்கள். இந்தக் கசப்பை அனைத்திலும் வெளிப்படுத்துகிறார்கள். எல்லோருமே வேண்டும் என்றும் அதே நேரத்தில் அனைவருமே சுயநலமென்றும் தடுமாறுகிறார்கள். குடும்ப அமைப்பைப் பகுத்துப் பார்க்கும்போது அதில் காணநேரும் பல யதார்த்தங்கள் முகத்தில் அறைபவை. ஆணும் பெண்ணும் இயன்ற வரை அடுத்தவரின் மீதான தத்தமது புகார்களை உள்ளடக்கி அனுசரித்து விட்டுக்கொடுத்து அன்றாடங்களின் சமூக ஒழுங்கின் நிர்ப்பந்தங்களைக் கடக்கிறார்கள். எல்லாம் முடிந்து இருவர் மட்டுமே எஞ்சும்போது சில ஆசுவாசங்கள் வாய்க்குமெனில் அதில் முழுமையாகத் தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். இந்த இடத்திலும் ஆண்களுக்கு வாய்க்கும் சுதந்திரம் பெண்களுக்கு அத்தனை எளிதில் வாய்ப்பதோ அல்லது அதை மேலெடுத்துச் செல்வதோ சாத்தியமில்லை. இவ்வாறு பல்வேறு உள அடுக்குகளுக்குள் இந்தக் கதை வெகு யதார்த்தமாகவும் இயல்பாகவும் பயணிக்கிறது. புற விவரிப்பின் ஊடாக கதாபாத்திரங்களின் மன ஆழங்களை கோடிட்டுக் காட்டி மேலும் மேலும் அது குறித்த தேடல்களையும் சாத்தியங்களையும் கொண்ட ஒரு அதிநுட்பமான கதை.

உளவியல் ஆழங்களை துலக்கிக் காட்டும்போது சொல்லப்பட்டிருப்பதைவிட சொல்லாமல் விடப்பட்டிருப்பவையே முக்கியமானவை. சவாலானவை. அந்த உச்சத்தை எட்டியிருக்கும் கதை ‘சாந்தாரம்’.

தஞ்சை கோயிலின் சுற்றுச்சுவருக்குள் மீதி கரணங்கள் செதுக்கப்படாமல் விடப்பட்டது ஏன் என்ற கேள்விக்குச் சாத்தியமான பல்வேறு பதில்களினூடாக பேராசிரியரின் மனைவியைக் குறித்த விதவிதமான ஊகங்களை வாசகனால் யோசிக்க முடியும். கரணங்கள் பூர்த்தி பெறாமைக்கும் பேராசிரியரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குமான இணைப்பை இந்தக் கதையின் முடிவு சாத்தியப்படுத்தியுள்ளது. கூடவே வரும் அவருடைய மகளின் இருப்பு அந்த மர்மத்தை மேலும் கூட்டுவதாகவும் அது என்ன என்று அறிந்துகொள்ளும் முனைப்பைக் கூராக்குவதாகவும் அமைந்துள்ளது. 

ஓராயிரம் கால்கொண்டு நூறாயிரம் திசையில் தறிகெட்டு ஓடுவது அகம்.  கால்தடங்களைத் தொடர்ந்து அது சென்றடைந்த இடத்தைக் கண்டடையவே கலைகளும் நவீன அறிவியலும் தத்துவங்களும் தொடர்ந்து முயல்கின்றன. உளம் கொள்ளும் திரிபுகளையும் பாவனைகளையும் பகுத்துணர முயலும் மயிலனின் இக்கதைகளும் அந்தப் பெருமுயற்சியின் பகுதியாகவே அமைகின்றன. 

*

மயிலனின் கதைகளில் குறிப்பிடத்தக்க அம்சம் கதைக் களத்துக்கேற்ப அவர் தேர்ந்துகொள்ளும் மொழி. ‘வீச்சம்’, ‘இடர்’ போன்ற கிராமப் பின்னணி கொண்ட கதைகளில் குறிப்பிட்ட வட்டாரத்தின் பேச்சு மொழியைக் கச்சிதமாகப் பயன்படுத்து முடிந்திருக்கிறது. ‘ஓர் அயல் சமரங்கம்’, ‘ஏதேன் காட்டின் துர்க்கந்தம்’ போன்ற கதைகளை சரளமான மேல்தட்டுத்தனத்துடன் போலிப் பாவனைகளுடன் எழுதியுள்ளார். உளவியல் கதைகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு தன்மையைக் கொண்டுள்ளன. ‘ஊடுவெளி’யின் துண்டுத் துண்டான சித்திரங்கள் கதைசொல்லியின் மனச் சிதறல்களையும் கசப்பையும் வெளிப்படுத்தும்போது ‘நியமம்’ கதையில் அவை ஊசலாட்டங்களாக புறச்சித்தரிப்புடன் மட்டுமே அமைகின்றன. இதற்கெல்லாம் உச்சமாக ‘சாந்தாரம்’ கதை மிக எளிமையான கதையமைப்புக்குக் கீழே அழுத்தமான நிழலென உள்ளடுக்குகளைப் புதைத்துக் காட்டியுள்ளார். 

மயிலன் நிறைய எழுதுகிறார். தொடர்ந்து எழுதுகிறார். வெவ்வேறு தளங்களில் பல்வேறு முனைகளைத் தொட முனைகிறார். தல்ஸ்தோயின் ‘புத்துயிர்ப்பு’ நாவலின் அடிப்படையில் எழுதியுள்ள ‘நூறு ரூபிள்கள்’ கதை அத்தகைய அவரது முயற்சிக்கு வலுவான சான்று. அவருக்கு அமைந்துள்ள கதைமொழியும் அதன் வீச்சும் வாசகரை உள்ளிழுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. புனைவின் சாத்தியங்களைக் கண்டறிய முற்படும் அவரது துடிப்பும் வேகமும் ஆச்சரியம் தரும் மேலும் நல்ல கதைகளை எழுதச் செய்யும். சமகாலச் சிறுகதையாளர்களில் நிச்சயம் தொடர்ந்து வாசிக்கப்பட வேண்டியவர் மயிலன் ஜி.சின்னப்பன்.

*

முந்தைய பகுதிகள்:

  1. தந்தையர்களும் தனயர்களும் – தூயனின் சிறுகதைகள்
  2. அன்னையின் சித்திரங்களும் சாதியின் முகங்களும் – சுரேஷ் பிரதீப் சிறுகதைகள்
  3. நடுவில் இருக்கும் கடல் – சித்துராஜ் பொன்ராஜ் கதைகள் 
  4. உழைக்கும் சிறுவர்களின் துயர உலகம் – ராம் தங்கம் கதைகள்
  5. கலையும் வண்ணங்களும் மறையும் காட்சிகளும் – கிருஷ்ணமூர்த்தியின் கதைகள் 
  6. போரும் காமமும் – அனோஜன் பாலகிருஷ்ணன் கதைகள்
  7. இருண்ட வானில் ஒளிரும் நட்சத்திரங்கள் – கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் கதைகள்
  8. புனைவெழுத்தின் புதிய சாத்தியங்கள் – சுனில் கிருஷ்ணனின் கதைகள்