மரண விளையாட்டு

0 comment

நீர்நிலைக்கு அருகில் இருப்பதைப் போல அறை குளிர்ச்சியாக இருந்தது. புயல் சின்னம் காரணமாக இரண்டு நாட்களாய் சூரியன் தென்படவில்லை. நேற்றிரவு முழுவதும் தூறல் விழுந்துகொண்டிருந்தது. அதிகாலையில் மழை நின்றபின் கோடை காலத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு குளிர்ந்த நாளாக அது மாறிவிட்டிருந்தது. 

மனோகரன் கண் விழித்தபோது ஜில்லென்ற நாள் அவனைத் தழுவிக்கொண்டிருந்தது. இன்று விடுமுறை என்ற நினைவு மேலும் அவனை இலேசாக்கியது. ஓய்ந்திருக்க முடியாத இயந்திரத்தில் இட்டுப் பிழியும் தன்மைகொண்ட வேலை என்ற பூதத்திடம் இருந்து விலகி இருப்பது அவன் மகிழ்ச்சியடைய போதுமானதாய் இருந்தது. 

கதவைத் திறந்தபோது வெளியே கவிந்திருந்த ஈரமான நிசப்தம் நேற்றைய நனைந்த இரவின் மீது பரவியிருந்த அதிகாலை அவனைக் கிளர்ச்சியடையச் செய்தது. 

இப்போது நவீன் அவனுடைய ரோஜா நிறப் படுக்கையில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருப்பான். அப்போது அவன் முகத்தில் இருக்கும் புன்னகையை நினைத்துக்கொண்டான். அதை அருகில் இருந்து பார்க்கும் உரிமையை இழந்துவிட்ட சோகத்தின் தடித்த முனைகள் அவன் இதயத்தை மொத்தின. வலியொன்று உருப்பெற்று மெல்ல மெல்லப் பரவிச் சென்றது. அவன் அதை அனுமதிக்கக் கூடாது என வேறு காட்சிகளுக்குக் கண்களைத் திருப்பினான். மீண்டும் கதவை மூடித் தாழிட்டு தன் அறையை வெளி உலகத்தில் இருந்து துண்டித்துக்கொண்டான். 

இதே போல தன்னையும் இந்த உலகத்தில் இருந்து துண்டித்துக்கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்துக்கொண்டான். கொஞ்ச நேரம் அதை யோசித்தான். மரணத்திற்கு முன்பாக அது சாத்தியம் இல்லை. மரணத்தின் போதுகூட அது சாத்தியம் இல்லை. எப்போதுமே அது சாத்தியம் இல்லை என்ற நினைவில் எழுந்த கசப்பை அவன் வழக்கம் போல விழுங்கிக்கொண்டான். 

மாலதியின் சுருண்ட முடிக்கற்றைகள் மனக்காட்சியில் துலக்கமாகத் தெரிந்து அவனைத் திகைப்புறச் செய்தது. தங்களுக்கிடையே இவ்வளவு சச்சரவு நடந்தும் அந்தக் கண்களும் சுருள் சுருளான கேசமும் தன்னை இப்படி இம்சிப்பதேன் என்று அவனுக்கு விளங்கவில்லை. தான் அவளை அவ்வளவு காதலிப்பதாக அதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா என யோசித்தான். அதைத் தவிர வேறு அர்த்தம் எதையும் அவனால் நினைக்க முடியவில்லை. ஏதோ ஒரு பொய்மைக்குள் சிக்கி இருப்பதைப் போல சோர்வின் அடர்ந்த காட்சிகளுக்குள் மிதந்து விழ ஆரம்பித்தான் (மாலதியும் அவனும் நிரந்தரமாக பிரிந்துவிடக் கூடியவர்கள் அல்ல என்று அவன் நம்பினான்)

பின் சுதாரித்தவனாய் மனதை வேறு திசையில் திருப்பினான். மகிழ்ச்சி எந்தத் திசையில் இருக்கிறது என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லா நிகழ்வுகளும் (அசாதாரண நிகழ்வுகளும்கூட) சாதாரணத்தில் போய் விழுகின்றன என்பதை இப்போது அவன் கண்டுபிடித்தான். அது சோர்வூட்டுவதாய் இருந்தது. காபி தயாரித்துக் குடித்தான். குளித்துவிட்டு மிக எளிமையாக காலை உணவை எடுத்துக்கொண்டான். (பிரிஜ்ஜில் இருந்த மாவை எடுத்து கலக்கி தோசை ஊற்றினான். பொடியை எண்ணெயில் குழப்பித் தொட்டுக்கொண்டு மென்று விழுங்கினான்.)

மாலதி இருந்தால் புதிது புதிதாக ஏதாவதொரு உணவு வகையைத் தயார்செய்வாள். (பின்னாளில் அவளிடம் சமையலிலும் ஒரு விட்டேத்தித்தனம் வந்துவிட்டது)

என்னதான் பிரச்சனை என்று அவனுக்கு இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. தங்களுக்குள் எல்லாமே முரண்பாடாக இருந்தாலும் அவன் அதைப் பொருட்படுத்தாமல் இருக்கவே விரும்பினான். மாலதிக்கு அவை எல்லாமே பூதாகரமாகத் தெரிந்தன. அவனுக்குப் பூனைகள் என்றால்தான் பிரியம். நாய்கள் பற்றி அவனிடம் எந்த எண்ணமும் இல்லை. மாலதிக்குப் பூனைகளைப் பிடிக்காது. நாய்கள் என்றால்தான் உயிர். திருமணமாகி வந்த புதிதில் அவள் வீட்டில் இருக்கும் டெடியைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தாள். அவன் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தான். ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகே அவனுக்கு நாய்களிடம் ஆர்வம் இல்லை என்பதைக் கண்டுகொண்டு அதிர்ச்சியடைந்தாள். அவனுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தைப் பல நாட்களாக ஆர்வமுடன் சொல்லிக்கொண்டிருந்ததை நினைத்து அவமானமாக உணர்ந்தாள். அவனுக்குப் பரிதாபமாகவும் குற்றவுணர்வாகவும் இருந்தது. அதன் பின் நாய்களைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். ஆனால் அவனுக்கு அது என்னவோ அபத்தமாய் இருந்தது. அது ஏதோ தன்னைச் சீண்டுவதற்காக அவன் மேற்கொள்ளும் தந்திரம் என அவள் புரிந்துகொண்டாள். அவனுக்கும் அவளுக்கும் இருக்கும் மனவேறுபாடுகளைக் கண்டுபிடித்து அவள் விலகி விலகி சென்றுகொண்டே இருந்தாள். சோர்வூட்டும் நினைவுகள் அவனை அதிகாலையிலேயே வெறுமையை நோக்கி இழுத்துச் சென்றன. அதற்குப் பலியாகிவிடக் கூடாது என நினைத்தவனாய் எழுந்து வீட்டைப் பூட்டினான். 

பிரதான சாலையில் பரபரப்பாய் இருந்த டீக்கடையொன்றில் நுழைந்து டீ குடித்தான். (அப்போது அவனுக்குப் பெரும் ஜனத்திரளில் விசேஷமில்லாத ஒரு துளி நானென்ற உணர்வுண்டாகி, உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது)

எப்படி எனத் தெரியவில்லை. இப்போது அவனுக்கு யோகேஷின் நினைவு வந்தது. (மாதக்கணக்கில் அவன் நினைவு வந்ததே இல்லை) இப்போது அவன் வீட்டுக்குப் போகவேண்டும் போல இருந்தது. யோகேஷ் பல மாதங்களாக தன் வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்துக்கொண்டிருக்கிறான். இவனும் யோகேசும் அவன் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் அந்த நாளை அவன் காலத்துக்குள் தள்ளித் தள்ளி வைத்துக்கொண்டே இருந்தான். அதற்குக் குறிப்பாக எந்தக் காரணமும் இல்லை. இன்றை அந்த நாளாக மாற்றிக்கொண்டால் என்ன என்று யோசித்தான். 

உடனே வீட்டுக்குத் திரும்பி பைக்கைத் தயார்படுத்திக்கொண்டான். யோகேஷுக்குப் போன் செய்து தான் வரவிருப்பதைச் சொல்லலாமா என யோசித்து அதைக் கைவிட்டான். பைக்கை வெளியே எடுத்து ஸ்டார்ட் செய்தபோது ஒருவேளை அவன் வேறு எங்கோ போயிருந்தால் என்ற நினைவு அவனைக் குழப்பமடையச் செய்தது. போனை எடுத்து யோகேஷ் நம்பரைத் தேடினான். பின் அதைக் கைவிட்டு வண்டியைக் கிளப்பினான். அந்த நாளை விசேஷமானதாக்கும் மனநிலை இப்போது அடங்கியிருந்தது. அவன் இல்லாவிட்டால் திரும்பி வந்து ஓய்வெடுக்கலாம், அவ்வளவுதான். 

மேக மூட்டம் விலகாததால் அதிகாலை இன்னும் முதிராமல் இளசாக இருந்தது. சாலையின் இருபுறமும் உள்ள கட்டிடங்களை நோட்டமிட்டபடியே சென்றான். முன்பு வங்கியாய் இருந்த பெரிய கட்டிடம் ஒன்று இப்போது பாழடைந்து இருந்தது. அதன் முன் பன்றிகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவன் அங்கே வங்கி செயல்பட்டுக்கொண்டிருந்த நாளை நினைத்துப் பார்த்தான். அப்போது அது எவ்வளவு துடிப்பும் வசீகரமும் உள்ள கட்டிடமாய் இருந்தது. 

பெரும்பாலான கட்டிடங்கள் மாறிவிட்டன. எதுவும் முன்புபோல இல்லை. இந்த மாற்றத்தை எப்படி கண்டுகொள்ளவே இல்லை? ஆச்சரியமாய் இருந்தது. முன்பிருந்த வீதியையும் இப்போதிருந்த வீதியையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே சென்றான். ஆண்டுக்கணக்கில் இந்த வழியில் சென்றுகொண்டிருந்தாலும் வழியெங்குமே எல்லாம் மாறியிருப்பதை இப்போதுதான் அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது என்பது அவனுக்குத் துயரம் அளிப்பதாய் இருந்தது. 

மனிதர்கள்கூட முன்பிருந்தவர்கள் இல்லை. இப்போது எல்லாம் புதியவர்கள். அவன் தனக்குத் தெரிந்து இறந்து போனவர்கள் யார் யார் என யோசித்தான். இறந்தவர்களின் முகங்கள் முடிவற்று அவனுக்குள் பெருகிக்கொண்டிருந்தன. திடீரென அவனுக்கு அச்சமாய் இருந்தது. நான் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறேன். செத்துப் போய்விடுவேனா? 

அந்த நினைவைத் தீவிரமாக உதறிவிட்டு சாலையைப் பார்த்து வண்டியை ஓட்டினான். வாகனங்களில் போகும்போது தோன்றித் தோன்றி மறையும் இந்தக் கட்டிடங்கள் வாகனங்களில் போகாமல் இருந்தாலும் அப்படித்தான் தோன்றித் தோன்றி மறையும் என நினைத்துக்கொண்டான். உலகில் எல்லாமும் தோன்றித் தோன்றி மறைகின்றன. நானும் ஒருநாள் மறைந்து போய்விடுவேன். அதன் பின் நான் யார்? எங்கிருப்பேன்? இப்படிப்பட்ட தன்னுடைய கேள்விகளுக்கும் மாலதி தன்னை விட்டு விலகிப் போனதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும் என்று யூகித்தான். (ஆனால் அவன் ஒருநாள்கூட அவளிடம் இப்படி லௌகீகமற்ற தன்மையில் பேசியதில்லை)

யோகேஷ் வீடு இருக்கும் தெருவில் விதவிதமான மரங்கள் இருந்தன. மழை ஈரம் காயாத தார்ச்சாலையில் குல்மொஹர் பூக்களும் பன்னீர்ப்பூக்களும் இறைந்து கிடந்தன. சிவப்பும் வெள்ளையுமான அந்த நிறக்கலவை மனநிலையைக் கனவுத்தன்மைக்கானதாய் மாற்றியது. 

தெருவின் எல்லா அடையாளங்களும் அப்படியே இருந்ததால் இவ்வளவு நாளானாலும் எந்தக் குழப்பமும் உண்டாகவில்லை. வீடு இரண்டாவது மாடியில் இருந்தது. மூடிய கதவுகளுக்குள் இருந்த ஆழ்ந்த அமைதியைக் கவனித்தபடி அழைப்புமணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தான். அதீதமான அமைதி காலத்திற்குள் சில நிமிடங்கள் வளர்ந்தது. கதவைத் திறந்துகொண்டு யோகேஷ் எட்டிப் பார்த்தான். இவனைக் கண்டதும் முதலில் குழம்பி, பின் அதிர்ச்சியடைந்தவனைப் போன்றதொரு இரசிக்கும்படியான பாவனையைக் காட்டி, பிரகாசமான முகத்தோடு அவன் கைகளைப் பற்றிக்கொண்டு, “இப்பதான் வரத் தோனிச்சா? வா வா” என உள்ளே அழைத்துப் போனான். 

அறை பெண்ணால் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. 

சம்பிரதாயமான பேச்சுகளை சில நிமிடங்களில் முடித்துக்கொண்டார்கள். 

“மாலதி எங்க வரலையா?” என்றான் யோகேஷ்.

“இல்ல அவளும் பையனும் இப்ப அவங்க அம்மா வீட்ல இருக்காங்க” என்றான். 

அவன் ஆச்சரியமாய் இவனைப் பார்த்தான்.

“அவ அங்க போய் மூணு மாசம் ஆயிடுச்சி.“

இருவரும் அமைதியாய் இருந்தார்கள். 

“நீலா எங்க?”

“உள்ளதான் இருக்கா. தூங்கிகிட்டிருக்கா.” 

அவனே இருவருக்கும் காபி தயார்செய்து கொண்டு வந்தான். ஒரு கோப்பையை அவனிடம் கொடுத்துவிட்டு, தன்னுடைய கோப்பையுடன் சோபாவில் உட்கார்ந்துகொண்டு, “இன்னைக்கி என்ன கிழம?” என்றான். தன் கேள்வியில் இருந்த அபத்தத்தை சமன் செய்பவனாய், “எனக்கு இப்போ ஒரு நாளைக்கும் இன்னொரு நாளைக்கும் வித்தியாசமே தெரியறது இல்ல” என்றான். பின் ஆழ்ந்த யோசனையோடு இரண்டு மிடறு காபியை உறிஞ்சிக் குடித்தான். “ஒவ்வொரு நாளும் தனித்தனியானது இல்ல, எல்லாம் ஒன்னுதான். நம்ம வாழ்க்கைங்கறது நீளமான ஒரு நாள், அப்படித்தான் தோனுது.” 

மனோகரன் அதைக் கற்பனை செய்து பார்க்க முயன்றான். அவனால் அப்படி யோசிக்க முடியவில்லை. நினைவுவெளியில் பழைய நாட்கள் துண்டுத் துண்டாக மிதந்துகொண்டிருப்பதைப் போலத்தான் இருந்தது. 

எல்லாம் ஒரே நாள் என்றவன் அதைப் பற்றிய தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். பின், “வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு?” என சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தான்.  

“வாழ்க்கைங்கற விஷயம் ரொம்ப அபத்தமா இருக்கு இல்ல” என்றான் திடீரென்று.

மனோகர் ஒன்றும் சொல்லவில்லை. ஏதோ ஒன்று இயல்பற்றதாய் உணர்ந்தான். யோகேஷ் இப்படியெல்லாம் பேசக் கூடியவனில்லை.

“இப்பல்லாம் இப்படித்தான் அடிக்கடி தோனுது. பல ஆயிரக்கணக்கான வருஷமா மக்கள் பிறக்கறாங்க, சாகறாங்க, பிறக்கறாங்க, சாகறாங்க. இதுக்கெல்லாம் என்னதான் அர்த்தம்? இப்படி இருக்கற ஒன்னு நிஜமானதா இருக்க சாத்தியமில்லையோன்னு ரொம்ப குழப்பமா இருக்கு.” 

அவனுடைய வார்த்தைகள் மனோகருக்குள் கால ஓட்டத்தின் பெரும் வடிவத்தை உண்டாக்கின. சற்று முன் அவனும் அதையே யோசித்ததை நினைத்துப் பார்த்தான். குழப்பமாக, “ஆமாம் காலம் காலமா கோடிக்கணக்கான ஜனங்கள் பிறக்கறாங்க சாகறாங்க. நாமும்தான் பிறந்திருக்கோம், சாகப் போறோம்” என்றான். இருவருக்கும் இன்று எப்படி ஒரே மாதிரி சிந்தனைகள் வருகின்றன எனப்தைப் பற்றி யோசிக்க நினைத்தான். ஆனால் யோகேஷின் குரல் ஊடறுத்தது. 

“கடைசியா ஒருநாள் இந்தப் பூமி அழிஞ்சி போயிரும். இருந்த இடம் தெரியாம காணாம போயிரும். ஆமாம், அப்படித்தான் முடியும். அப்போ இதெல்லாத்துக்குமே எதாவது அர்த்தம் இருக்குமா? இந்த வரலாறு, அறிவியல், கலைகள், காவியங்கள் இதுக்கெல்லாம் அர்த்தம் என்ன? அண்ட வெளியில நட்சத்திரங்கள், கோள்கள் இதுக்கெல்லாம் அர்த்தம் என்ன?” 

அவன் சொன்னதெல்லாம் மனோகருக்குள் காட்சிகளாய் விரிந்தன. அச்சமாய் இருந்தது. 

“நீ என்ன இப்படியெல்லாம் பேசிகிட்டிருக்க. நேத்தென்ன சரக்கு கொஞ்சம் அதிகமா போயிடுச்சோ?” கேட்டுவிட்டுச் சிரித்தான்.

யோகேஷ் அவனைப் பார்த்தான். 

மனோகர் சிரித்துக்கொண்டே திரும்பி பிரகாசமாய் வெய்யில் வரும் ஜன்னலைப் பார்த்தான். “இந்த நேரத்துக்கும் இந்தப் பேச்சுக்கும் கொஞ்சம்கூட ஒட்டல” என்றான். சட்டென அவன் மனதில் கவிதையின் குதூகலம் மலர்ந்தது. “இங்க பார், இந்த நாள் எவ்வளவு ரம்யமா இருக்கு. வானம் பூரா மேக சேறு, குளிர்ச்சி. குளிர்ச்சியாய் இரு” என்றான். 

யோகேஷ் சிரித்தான். “கவிதை மாதிரி ஏதோ சொல்ற. இன்னும் புக்ஸ் எல்லாம் படிச்சிகிட்டுதான் இருக்கியா? உனக்கிப்ப யாரோட கவிதைகள் பிடிக்கும்?” கேட்டுக்கொண்டே பதிலுக்கு எதிர்பார்த்திருக்காமல் சம்பந்தமில்லாமல் பேச ஆரம்பித்தான்.

“அண்டவெளியில பல ஒளியாண்டுகள் விலகி இருக்கும் மில்லியன் கணக்கான நட்சத்திரங்களுக்கு இடையில நாம ரொம்ப தனியா இருக்கோம்.” அவன் கண்களில் அச்சம் மிளிர்ந்தது. 

மனோகருக்கு இப்போது பதற்றமாய் இருந்தது. புத்தி பேதலித்து விட்டானோ? இந்தப் பேச்சுக்காக அவனை இப்படிச் சந்தேகப்படலாமா என தன் யூகத்தைக் கட்டுப்படுத்தினான். ஆனால், சந்தேகம் என்று வந்தபின் இங்கிருப்பது சரியான விஷயமாய்ப் படவில்லை. 

யோகேஷ் சிரித்தான். “ஏன் அமைதியாயிட்ட? பயமா இருக்கா?” என்றான்.  

“இல்ல, நான் கிளம்பறேன்.”

“இரு, ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்க. சாப்பிட ஏதாவது செய்யறேன் சாப்டுட்டுப் போ.”

“இல்ல… நா வரும்போதுதான் சாப்ட்டேன். “

“பரவால்ல கொஞ்சமா சாப்பிடலாம்” சொல்லிக்கொண்டே கிச்சனுக்குள் நுழைந்தான்.

“நீலாவுக்கு என்ன.. உடம்பு சரியில்லையா?”

“ஆமாம். நல்லா தூங்கினா சரியா போயிரும்னு நினைக்கிறேன். அவ தூங்கட்டும், தொந்தரவு பண்ண வேண்டாம்.” 

கல்லூரியில் படிக்கும் போது இவன் இப்படியெல்லாம் பேசுபவனாக இல்லை. சினிமாக்களைப் பற்றித்தான் ஓயாது பேசிக்கொண்டிருப்பான். எது இவனை இப்படி பேச வைத்திருக்கும்? இறப்பு பற்றிய சிந்தனையா? இப்போது செல்வத்தின் நினைவு வந்தது. உற்சாகமாகப் பேசுவான். ஆனால் அவன் பேச்சை இரண்டு நிமிடங்களுக்கு மேல் கேட்க முடியாது. அற்ப விஷயங்களைப் பெரும் அதிசயம் போல பேசுபவன், எதிரில் இருப்பவர்களை முட்டாள்களாக நினைத்துக்கொள்வான். அலங்காரமான விவரிப்புகள், அர்த்தமற்ற உதாரணங்கள், எரிச்சல் உண்டாக்கும் உவமானங்கள், ஒப்புமைகள் என அவன் பேச்சு விசித்திரமாக இருக்கும். அவனும் இவனும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்த்தான். சிரிப்பு வந்தது. 

“நாம தனியா இருக்கோம்” என்றான் யோகேஷ். 

மனோகருக்கு சலிப்புணர்வு எழுந்தது. 

“நான் கிளம்பலாம்னு பாக்கறேன்.” 

“இரு போகாதே. உனக்கு எப்பவாவது தற்கொலை பண்ணிக்கனும்னு தோனியிருக்கா?” என்றான். கடாயில் ஏதோ தாளித்துக்கொண்டிருந்தான். 

அந்தக் கேள்வி மனோகருக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை என்றாலும் அவன் அது சம்பந்தமான நினைவுகளுக்குள் தள்ளிவிடப்பட்டான். 

பள்ளிக்கூடம் படிக்கும்போது அப்பா திட்டினார் என்றோ அல்லது வேறு என்ன காரணமோ தெரியவில்லை, தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என தீவிரம் ஏற்பட்டது. அது இன்னும் ஒரு சில நிமிடங்கள் நீடித்திருந்தால் அப்போதே செத்திருப்பான். ஆனால் எப்படியோ அதிலிருந்து வெளியேறிவிட்டான். 

பின் கல்லூரி படிக்கும் சமயத்தில் ஒருமுறை தற்கொலை எண்ணம் உண்டானது. அவன் வாழ்க்கையில் மாலதி வந்த பின் பலமுறை அப்படி யோசித்துவிட்டான். அந்த நினைவுகள் இப்போது அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தின. இவன் எதற்காக இதையெல்லாம் கேட்கிறான்?

வேறென்னவோ கேட்க நினைத்து வாயைத் திறந்தவன், “நீ எப்பவாவது அப்படி யோசிச்சிருக்கியா?” என்றான். 

“பலமுறை” என்றுவிட்டு அவன் வானலியில் எதையோ கிளறிக்கொண்டிருந்தான். 

திரும்பவும், “பலமுறை” என்றான். 

“இப்பகூட நான் அதைத்தான் யோசிச்சேன்.” 

மனோகருக்கு நெஞ்சம் நடுங்கியது. “என்ன சொல்ற நீ?”

“ஆமாம் நிஜமாதான். நாம காலேஜ் படிக்கும் போது வசந்த் சொன்னான்னு இடைவெளி நாவல் படிச்சோமே ஞாபகம் இருக்கா? அவங்கப்பா ஒரு ஸ்டோரி ரைட்டர்.” 

மனோகர் எதுவும் பேசவில்லை. “சரி நான் கிளம்பட்டா?”

“ஏன்டா.. பயந்துட்டியா?” 

இடைவெளியின் சுருக்குக் கயிறு பல ஆண்டுகளாக அவன் நினைவில் ஆடிக்கொண்டிருந்தது. அதை என்றென்றைக்கும் மறக்க முடியாது என நினைத்திருந்தான். பின் எப்படியோ அதை மறந்துவிட்டிருந்தான். இவன் இப்போது மீண்டும் அதை நினைவுப்படுத்திவிட்டான். 

அந்தக் கயிறு இப்போது மிக வலிமையாய் இருந்தது. இவனும் யோகேஷும் அதில் சேர்ந்து தொங்குவதைப் போலக் காட்சி மனசுக்குள் வந்தது. 

மாலதியும் நவீனும் வந்து சிரித்தார்கள். இவன் மாலதியை வன்மத்துடன் பார்த்தான். 

“நீ இப்ப தற்கொலை பண்ணிக்குவேன்னா எதுக்காக பண்ணிக்குவே?” என்றான். 

“புல்ஷிட்.. நான் இங்க வந்ததுக்காகத்தான் பண்ணிக்குவேன்.” 

யோகேஷ் வாய்விட்டுப் பலமாகச் சிரித்தான். அடுப்பை அணைத்துவிட்டு கிளறுவதை நிறுத்தினான். 

“நான் ஒரு பைத்தியம். தற்கொலை பண்ணிக்கும்போது யாராவது டிபன் செஞ்சி சாப்டுட்டு தற்கொலை பண்ணிக்குவாங்களா?” என்றுவிட்டு மீண்டும் ஒருமுறை பலமாகச் சிரித்தான். 

“நீ தற்கொலை பண்ணிக்கப் போறியா?”

“சோ வாட்?” 

“இந்த மரணம்னா என்னன்னு கண்டுபிடிக்க வேண்டாமா?” 

தூக்குக் கயிறு பலமாக ஆடியது. இப்போது அந்த சாகச உணர்வு அவனையும் தொற்றிக்கொண்டது. 

“நீ தற்கொலை பண்ணிக்கறதா இருந்தா எப்படி தற்கொலை பண்ணிக்குவ?” என்றான்

யோகேஷ் அவனைப் புன்னகையோடு பார்த்தான். 

“துப்பாக்கியில சுட்டுக்கனும். இல்லாட்டி ரயில் முன்னாடி பாயனும். அதைவிட யாராவது துப்பாக்கியால என்னை சுட்டா?” அந்த நினைவின் போதையில் அவன் உடல் உச்சம் அடைவதைப் போல கண்களைச் செருகினான். 

“அதுக்கு வாய்ப்பில்ல. இங்க துப்பாக்கி இல்ல, இருந்தாலும் நான் உன்னை சுட மாட்டேன்.” 

“நான் சுடுவேன். பேசிகிட்டே போய் உனக்குத் தெரியாம துப்பாக்கியை எடுத்து ஒரே நொடியில உன் நெஞ்சுக்கு நடுவுல சுட்ருவேன்.” 

“நீ பிணம் ஆகறதைப் பாத்துட்டு நானும் சுட்டுக்குவேன்.” 

“இல்ல, நீ ரொம்ப சினிமா பாக்கறவன். உனக்கு அப்படித்தான் தோனும். சுருக்குக் கயிறுதான் என்னோட சாய்ஸ்.” 

“மரணம்னா எப்படி இருக்கும்? இப்பவே நாம அதைப் பாத்துருவோமா?” 

மனோகருக்கு ஜிவ்வென எங்கோ வானத்தில் பறப்பதைப் போல இருந்தது. 

சுருக்குக் கயிறு ஆடியது. 

“இந்த சொர்க்கம் நரகம்லாம் உண்மையாவே இருக்குமா?” 

“பாத்துருவோம்” யோகேஷ் சத்தமாகச் சிரித்தான். 

மனோகர் சட்டென விழித்தான். அது ஏதோ தூக்கத்தில் இருந்து அல்லது கனவில் இருந்து விழிப்பதைப் போல இருந்தது. 

அது நடந்துவிடும்போல இருந்தது. நடக்க வேண்டும் போல இருந்தது. நடக்கக் கூடாதென்றிருந்தது. என்ன நடக்குமென்றே தெரியாமல் இருந்தது. பயத்தின் பிரம்மாண்டமான கத்தி கூரையில் இருந்து அவன் தலையில் சரேலென செங்குத்தாக விழுந்தது. 

 “நீலா எந்திரிச்சிருவா” என்றான், இது நிகழச் சாத்தியமில்லை என்ற தொனியில்.

“அவ எந்திரிக்க மாட்டா” என்றான் யோகேஷ். நிச்சயம் அதுதான் நடக்கப் போகிறது என்ற தொனியில். 

மனோகர் “ஏன்?” என்றான். 

“அதை நீ அப்புறம் தெரிஞ்சிக்குவ?”

“செத்ததுக்கு அப்புறமா?” 

“ஆமாம்.” 

“நீ அவள என்ன பண்ணின?” 

“டேய் சும்மா இருடா. சும்மா கண்டதையும் யோசிக்காத.”

“நீ தற்கொலை பண்ணிக்கனும்னா எதுக்காக பண்ணிக்குவ? அதை மட்டும் யோசி.” 

“ஏன்டா இப்படி சாவடிக்கற? சரி நீ எதுக்காக சாகப் போற? நீலாவுக்காகவா? நீலா நீலா…” மனோகர் உள்ளறையைப் பார்த்துக் கத்தினான். 

“மனோகர் நீ ஒரு இண்ட்ரஸ்ட்டான கேமை கெடுத்துக்கிட்டிருக்க. நீ ஒரு கோழை. தற்கொலைகூட செய்துக்க முடியாத கோழை. நாம் இங்க ஒன்னும் சாதிக்கப் போறதில்லன்னு தெரிஞ்சாலும் சாக மட்டும் மாட்டோம்.” 

மனோகர் மௌனமாக இருந்தான். “சரி, நீ எதுக்காக சாகப் போற?” 

“நான் சாகணும்ங்கறதுக்காக சாகப் போறேன்.. வேற எதுக்காகவும் இல்ல. அந்த தினகரனோட ஆராய்ச்சியை நான் முடிச்சி வெக்கப் போறேன்.” 

“டேய் பெருசா சீன் போடாத. நீ சாக மாட்ட. அப்படியே சாகறதா இருந்தாலும் உன் பொண்டாட்டி மேல இருக்கிற கோபம், சந்தேகம்னு அற்ப காரணமாத்தான் இருக்கும். அதை ஒத்துக்காம என்னென்னவோ ஜோடிக்கற.” சொல்லிவிட்டு மனோகர் சிரித்தான். அந்தச் சமயத்தைச் சாக்கிட்டு வேண்டுமென்றேதான் அவன் அப்படிச் சிரித்தான். அது அவனுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்தது. 

யோகேஷும் பலமாகச் சிரித்தான். “நீ முதல்ல நெருக்கமா இருந்த.. இப்ப விலகி விலகி போயிட்டிருக்க. நீ ஒரு கோழை.” 

“நான் ஒன்னும் கோழை இல்ல. ஆனா உன்னைப் போல கதை சொல்லத் தெரியாது. நான் சாகறதா இருந்தா மாலதிக்காகத்தான் சாவேன். அது மாதிரி நீயும் உண்மையைச் சொல்லு. ரெண்டு பேரும் இப்பவே கயித்துல தொங்கிறலாம்.” 

யோகேஷ் ஒரு கணம் அவனைச் சலனமின்றிப் பார்த்தான். கதவைத் திறந்தபோது சட்டென அவன் கண்களில் தோன்றிய அதிர்ச்சி, இப்போது அவன் முகத்தில் மெல்ல மெல்ல துலக்கமாகி அதன் கீழ் மகிழ்ச்சியின் நிறம் விரிந்துகொண்டு வந்தது. 

“சரி, நீலாவுக்கும் எனக்கும் இடையில இருக்கற பிரச்சினைக்காகத்தான் நான் தற்கொலை செஞ்சுக்க நினைக்கிறேன்.” 

மனோகருக்கு இனியும் இதை இழுத்துக்கொண்டு போவதில் விருப்பமில்லை. “ஏய் மாலதி, இப்ப என்ன சொல்ற நீ? வீட்டுக்கு வரப்போறியா இல்லையா?” எனக் கடைசியாய் ஒருமுறை கேட்டுவிட நினைத்தான். 

போனை எடுத்தபோது மாலதி வாட்ஸ்அப் செய்தி அனுப்பியிருந்தாள். ‘மனோ எங்கிருக்க? இங்க வீட்டுக்கு முன்னாடி நான் இன்னும் எவ்வளவு நேரம்தான் வெய்ட் பண்றது?’

மனோகருக்கு ஏதோ ஒரு நெருக்கடி நிலையில் இருந்து விடுபட்டதைப் போல இருந்தது. நாடகக் காட்சியில் இருந்து மீண்டவனைப்போல, “ஓகே, நான் வீட்டுக்குப் போறேன்” என்றான். 

“என்னாச்சு?” அவனுடைய மாற்றத்தை யோகேஷ் எதிர்பார்க்கவில்லை என்பதும் அதனால் உண்டான ஏமாற்றமும் அந்தக் குரலில் வெளிப்படையாக இருந்தது.

“மாலதி வீட்டுக்கு வந்துட்டா. காத்துக்கிட்டிருக்கா.” 

யோகேஷ், “திரும்பவும் அதே கதைதான் நடக்கப் போவுது” என்றான் அழுத்தம் திருத்தமாக. மனோகர் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. “சரி நான் கிளம்பறேன். நீயும் தற்கொலை அது இதுன்னு யோசிக்காம போய் வேலையைப் பார்.” 

“நீ மொதல்ல கிளம்பு.” 

“டேய் என்னடா சொல்ற?” தற்கொலை எண்ணத்தில் இருந்து அவனை மீட்க வேண்டி ஏதாவது நீண்ட விளக்கமாக பேச வேண்டும் என நினைத்தான். ஆனால் மாலதியின் காத்திருக்கும் முகம் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது. 

“நீயும் மொதல்ல இங்கிருந்து கிளம்பு. அப்பத்தான் இந்த யோசனை மாறும்.” 

யோகேஷ் சிரித்தான். “மனோ சரியான நேரத்துக்கு நீ வந்த. இல்ல இல்ல நீ வந்தது ஒரு விபத்து. இப்ப எல்லாமே மாறிப் போச்சி.” 

மனோகர் சிரித்துக்கொண்டே அவன் தோளில் தட்டினான். “சரி வா, கடைக்குப் போவோம். நான் அப்படியே கிளம்பறேன்.” 

யோகேஷ் எதுவும் பேசாமல் எழுந்து வந்து வீட்டைப் பூட்டினான். 

இருவரும் கீழே வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தனர். மனோகருக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. “டேய்.. நீலா உள்ள இருக்கா.”

அவன் அதைக் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. திரும்பிப் பார்க்காமல் வண்டியை சீறவிட்டுக்கொண்டு போனான். 

நீரில் நனைந்து மைபோல் கறுப்பாய் இருந்த சாலையில், வெள்ளையும் சிவப்புமாய் பூக்கள் கிடந்த அந்த வசீகரமான பின்னணியில், அவன் இடது கை வண்டியின் பிடியிலிருந்து விடுபட்டு, அவனை நோக்கித் திரும்பி விரிந்து அசைந்தாடி விடைபெற்றது.