I
சமஸுக்காக ‘இந்து தமிழ்’ நாளிதழை வாங்கத் தொடங்கியவர்களில் நானும் ஒருவன். 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பொள்ளாச்சியில் நான் படித்த பி.ஏ. பொறியியல் கல்லூரியின் நூலகத்தில்தான் முதன்முதலாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழைப் பார்த்தேன். தமிழில் அதுவரை பார்த்திராத வகையில் அதன் வடிவமைப்பு இருந்தது. குறிப்பாக, அதன் எழுத்துரு. ஏனைய பக்கங்களைவிடவும் நடுப்பக்கம் கூடுதல் கவனத்தை ஈர்த்தது. முதல் நாள் ஜெயமோகன் கட்டுரை எழுதியிருந்தார். ‘இவ்வளவு செய்திகள் எதற்கு?’ பத்திரிகை வெளிவரும் முதல் நாளே செய்திகள் அதிகம் தேவையில்லை என்று ஒரு கட்டுரை. அடுத்த சில தினங்களில் அருந்ததி ராயின் கட்டுரை ஒன்று மொழிபெயர்க்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தமிழ் வெகுஜன இதழின் தன்மையை உடைக்கக்கூடியதாக ‘ தி இந்து’ தமிழின் நடுப்பக்கம் வெளிப்பட்டது.
சமஸ் என்ற பெயர் அடிக்கடி கண்ணில்படத் தொடங்கியது. அந்தப் பெயரில் வரும் கட்டுரைகள், வெகுஜனப் பத்திரிகையில் இவ்வளவு காத்திரமான, ஆழமான கட்டுரைகள் சாத்தியமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிவையாக இருந்தன. ஒவ்வொரு முறையும் சமஸ் கட்டுரைகளைப் படிக்கும்போது, அது பெரும் கொண்டாட்ட மனநிலையையும் புத்துணர்வையும் அளித்தன. அந்தச் சமயத்தில் சமஸ்தான் நடுப்பக்கத்தின் ஆசிரியர் என்று தெரியாது. தவிரவும், ஒரு பத்திரிகையில் ஆசிரியரின் பொறுப்பு என்ன என்பதுகூடத் தெரியாது. பின்னாளில் நானும் பத்திரிகையில் நுழைந்தபோதுதான் அது எவ்வளவு பெரிய விசயம் என்பது புரிந்தது. ஒரு செய்திப் பத்திரிகையின் முதல் நாளிலே ‘இவ்வளவு செய்திகள் எதற்கு?’ என்று கட்டுரையைப் பிரசுரித்த சமஸ் மீதும், அதற்கு அனுமதியளித்த ஆசிரியர் அசோகன் மீதும் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது. அடிப்படையில், சமஸுக்கே அந்த எண்ணம் உண்டு. “இவ்வளவு செய்திகள் தேவையே இல்லை. நிறைய செய்திகளைத் தருவது, மக்களின் கவனத்தை முக்கியமான செய்திகளிலிருந்து திசை திருப்பும் உத்திதான்” என்று அடிக்கடி அவர் சொல்வார். எட்டு பக்கங்கள் போதும் ஒரு பத்திரிகைக்கு என்பார்.
அதுவரையில் சாரு, ஜெயமோகன் வலைதளங்களே எனது பொது வாசிப்பின் மையமாக இருந்த நிலையில், ‘இந்து தமிழ்’ நாளிதழும் அந்தப் பட்டியலில் இணைந்துகொண்டது. குறிப்பாக, சமஸுக்காக. நான் மட்டுமல்ல, என் வீட்டில் என் தந்தை, தங்கை இருவரும் சமஸின் தீவிர வாசகர்களாக ஆனார்கள்.
என் சிந்தனையில் தாக்கம் செலுத்திய, நான் வியக்கும் ஆளுமையான சமஸ் அருகில் பணியாற்றும் வாய்ப்பானது விதிவசம் எனக்கு அமைந்தது. 2019 மே மாதம் ‘இந்து தமிழில்’ பணிக்குச் சேர்ந்தேன். அது, அவரை அருகிலிருந்து உள்வாங்கும் வாய்ப்பாக அமைந்தது.
தற்போது ‘இந்து தமிழ்’ நாளிதழிலிருந்து சமஸ் விலகியிருக்கிறார். கடந்த ஓரிரு வருடங்களாகத் தன்னுள் ஒரு தேக்கத்தை உணர்வதாகவும், தனது எழுத்து, சிந்தனை, செயல் ஆகியவற்றை அடுத்த தளத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டிய தருணத்தில் தான் இருப்பதாகவும் சமீபத்திய பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவரது விலகல் பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நான் சமஸின் முடிவை ஒரு புதிய தொடக்கமாகப் பார்க்கிறேன்.
சமஸ் எங்கு தனித்துவம் கொள்கிறார்?
அரசின் போக்குகளை விமர்சிக்கும் கட்டுரைகள், நாட்டில் நடக்கும் அவலங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஜனநாயகத்தில் ஒரு நம்பிக்கைக் குரலாக அக்கட்டுரைகள் விளங்குகின்றனவே தவிர, அவற்றிலிருந்து நான் பெறக்கூடியதாக எதுவும் இல்லை. இந்தச் சூழலில்தான் சமஸின் கட்டுரைகள் தனித்துவம் கொண்டவையாக இருந்தன. அவை விழுமியங்களைக் கற்றுத் தருவனவாகவும், ஒரு நிகழ்வை அணுகுவது தொடர்பான புரிதலை மேம்படுத்தக்கூடியவையாகவும் இருந்தன. நான் படித்தவரையில் வெகுஜன இதழ்களில் வெளிவரும் பெரும்பாலான கட்டுரைகளில் ‘author’ என்பவரைப் பார்த்ததில்லை. தகவலைத் தொகுத்துச் சொல்பவையாக, விமர்சனங்களை முன்வைப்பவையாக மட்டுமே அக்கட்டுரைகள் இருந்தன. ஆனால், சமஸின் கட்டுரைகள் அப்படி இல்லை. அவற்றில் ‘author’ இருந்தார்.
சமஸ் கட்டுரைகளில் வெளிப்படும் தொனி மிக முக்கியமானது. யாவரையும் உள்ளடக்கி முன்னகரும் தன்மையைக் கொண்ட தொனி அது. அவருடைய கட்டுரைகள் அரசை விமர்சித்துவிட்டு கடந்துவிடக்கூடியவை அல்ல. அரசுடன் உரையாடலை மேற்கொள்ள முயல்பவை. அரசுக்கு ஆலோசனைகளையும் சாத்தியங்களையும் காட்டக்கூடியவை. அதேபோல், அவரது கட்டுரைகள் யாரையும் எதிரியாக அணுகுவதில்லை. எதிர்த்தரப்புக்கும் தார்மீகத்தை உருவாக்கி, அதன் அடிப்படையில் கேள்விகளை முன்வைப்பவை. இந்தத் தன்மைதான் சமஸை மற்ற எழுத்தாளர்களிடமிருந்து தனித்துவப்படுத்துகிறது. நேரடியாக உரையாடும் தன்மையைக் கொண்டிருப்பது அவரது கட்டுரைகளைக் கூடுதல் நெருக்கமானதாக மாற்றிவிடுகிறது.
அவரது கட்டுரைகள் குறித்து நண்பர்களிடம் பேசும்போது நான் இப்படிச் சொல்வதுண்டு, ‘சமஸின் கட்டுரைகள் ஒரு மேடை நடனம்போல, மேடையில் இசைக்கப்படும் சிம்பொனிபோல, அது ஒரு performance’.
கருணாநிதிக்கு சமஸ் எழுதிய அஞ்சலிக் கட்டுரையின் (கருணாநிதி ஒரு சகாப்தம்) முதல் பத்தி இவ்வாறு தொடங்குகிறது.
“உலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்டம் ஒன்று இராணுவ மரியாதை செலுத்த நின்றிருந்த சிப்பாய்களின் பூட்ஸ் கால்கள் இடையே சுற்றுவதும் மணல் வலைக்குள் போய்ப் பதுங்கி வெளியே ஓடி வருவதுமாக இருந்தது. மக்கள் வெள்ளம் சூழ, இராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடலை ஏற்றி இறக்கி, டாப்ஸ் ஊதி, அஞ்சலிக்காக 21 துப்பாக்கிக் குண்டுகளை வெடிக்கச் செய்து, அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தியபோது, முப்படை வீரர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? இலங்கை சென்ற இந்தியப் படையினரால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்கள் நாடு திரும்ப இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததோடு, நாடு திரும்பிய படையினரை வரவேற்கவும் மறுத்த முதல்வராக இருந்தவர் அவர்.”
உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் அணிச் செயலாளர் பதவி வழங்கப்பட்டபோது அதை விமர்சித்து சமஸ் எழுதிய ‘வாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன?’ என்ற கட்டுரை இவ்வாறு ஆரம்பமாகிறது…
“அடுத்த பட்டாபிஷேகத்துக்கான முன்னோட்டம்தான் அது. தலைமை நோக்கித் தன் மகன் உதயநிதியை நகர்த்தும் முயற்சியைக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பதவியை அவருக்கு வழங்கியதன் மூலம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அன்றைய நாளில் வாதாம் மர நிழல் அடர்ந்த சாலைகள் வழியே காரில் வீட்டுக்குத் திரும்புகையில் கொஞ்சம் ஆச்சரியம்கூட அடைந்திருக்கக்கூடும். கட்சியின் முன்னணித் தலைவர்கள் எவரிடமிருந்தும் துளி முணுமுணுப்பு வெளியே வரவில்லை. அத்தனை பேரும் இதற்காகக் காத்திருந்தவர்களைப் போலக் காட்டிக்கொண்டனர். மாவட்ட அமைப்புகள் உதயநிதியை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தன. ஸ்டாலினை இளைஞர் அணியின் பொறுப்பு நோக்கி அவருடைய தந்தை கருணாநிதி நகர்த்தியபோது, சூழல் இவ்வளவு இசைவாக இல்லை.
நாட்டின் மூத்த கட்சியான காங்கிரஸின் அடுத்தடுத்த வரலாற்றுத் தோல்விகளுக்குப் பின், அதன் தலைவர் ராகுல் காந்தியை முன்னிறுத்தி, நாடு முழுவதும் என்றைக்கும் இல்லாத அளவுக்கு இன்று வாரிசு அரசியல் விவாதத்துக்குள்ளாகி, அதன் தொடர்ச்சியாக அவர் பதவி விலகியிருக்கும் சூழலில், இப்படி பட்டவர்த்தனமாக வாரிசுக் கொடியைப் பறக்கவிட எங்கேயோ ஒரு கட்சி கூச்சம் துறக்க வேண்டியிருக்கிறது. செம்மொழி மாநாட்டில் ஆய்வறிஞர்கள் மத்தியில், ‘ஸ்டாப்’ புகழ் பேத்தியைக் கவிதை வாசிக்க வைத்து கருணாநிதி அழகு பார்த்த காலகட்டத்திலேயே எல்லா இறக்கங்களையும் பார்த்துவிட்டதால், “குடும்ப அரசியல் எல்லாக் கட்சிகளிலுமே இருக்கிறது. திமுகவை மட்டும் ஏன் குற்றஞ்சாட்டுகிறீர்கள்?” என்று கம்பீரமாக முட்டுக்கொடுக்கும் நிலைக்கு முன்னேறியிருக்கிறார்கள் கட்சிப் பிரதிநிதிகள். அதிகாரம் தன் பிறப்புரிமை என்பதுபோல இருக்கின்றன உதயநிதியின் செயல்பாடுகளும், ஊடகங்களுக்கு அவர் இது தொடர்பில் முன்னதாக அளித்திருந்த பேட்டிகளும். எல்லோருக்குமே எங்கோ, யாரோ ஞாபகப்படுத்த வேண்டியிருப்பதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. அடிப்படையில், வாரிசு அரசியல் எதிர்ப்பிலிருந்து முகிழ்ந்த கட்சி திமுக.”
இது, ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ கட்டுரையின் முதல் பத்தி.
“கருணாநிதி மூன்றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ராஜமாணிக்கம் மூலமாகத் தனது மனதுக்கு நெருக்கமான சிற்பி கணபதி ஸ்தபதியைத் தொடர்புகொள்கிறார். ”ஸ்தபதியாரே, கன்னியாகுமரி கடல்ல வள்ளுவருக்கு ஒரு சிலை வைக்கணும். நாடு இங்கே முடியுதுங்கிறாங்கள்ல? இல்லை, இங்கே நம்ம தமிழ்நாட்டுலேர்ந்துதான் தொடங்குதுங்கிறதைச் சொல்ற மாதிரி அமையணும்! குமரியிலேர்ந்து வள்ளுவர் நேரா இமயத்தைப் பார்க்கிறார்!’’
ஒவ்வொரு கட்டுரையிலும் சமஸ் சித்தரிக்கும் காட்சிகள், அது மெரினாவில் கருணாநிதி இறுதி நிகழ்ச்சியில் நிற்கும் சிப்பாய்களில் பூட்ஸ்களைச் சுற்றும் நண்டுகள் ஆகட்டும், ஸ்டாலினுடைய கார் செல்லும் வாதாம் மர நிழல் அடர்ந்த சாலைகள் ஆகட்டும், குமரியிலிருந்து வள்ளுவர் நேரே பார்க்கும் இமயமலை ஆகட்டும், இந்த ஒவ்வொரு வரிகளும் அந்தப் பத்திகளை மட்டுமல்லாது கட்டுரையையே காட்சிப்பூர்வமானதாக மாற்றி சமகால அரசியல் நிகழ்வு ஒன்றை நாடகமாக பிரதியில் மாற்றும் மாயத்தைச் செய்கிறது.
அதீத நுண்ணுர்வும், வியக்க வைக்கும் தர்க்கத் திறனும் கொண்டவர் சமஸ். ஒரு விசயத்தைப் பற்றி பல தரப்புகளில் நின்று அவரால் வாதிட முடியும். அதுவே அவரது கட்டுரையைக் கட்டமைக்கும் காரணிகளாக அமைகின்றன. தவிர, வாசகர்களின் நரம்பைப் பிடிக்கத் தெரிந்தவர் அவர். அவரிடம் ஒரு சினிமாத்தன்மை உண்டு. அவர் தன்னுடைய கட்டுரைகளுக்கு வைக்கும் தலைப்புகள் கவனத்தை உடனே ஈர்க்கக்கூடியவை. ‘வணக்கம் வைகுண்டராஜன்’, ‘அழிவதற்கு ஒரு நகரம்’, ‘இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கைப் பார்க்கிறது?’, ‘பாரீஸ் ஏன் பாரீஸாக இருக்கிறது?’, ‘ஒரு காந்தியின் வருகையும் ஒரு காந்தியின் புறப்பாடும்’, ‘சர்வ பலமிக்க எதிராளி’, ‘மோடி சொல்ல விரும்பாத ஒரு சாதனைக் கதை’, ‘வலதுசாரிகள் எப்படிச் சிரிக்கிறார்கள்?’, ‘அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருந்தால் என்ன பிரச்சினை?’, ‘மோடியின் காலத்தை உணர்தல்’, ‘ஒரு மனிதன் குடியரசு ஆகும் காலம்’, ‘அரசியல் பழகு’, ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’.
சமஸின் கட்டுரைகள் ஒரு ரகம் என்றால், அவரது நேர்காணல்கள் வேறொரு ரகம்.
ஜெயகாந்தனின் இறுதிக் காலத்தில் அவரை சமஸ் ஒரு பேட்டி கண்டார். அதன் தலைப்பு ‘ஜெயகாந்தன் அப்படிச் செய்திருக்கக்கூடாது’.
சமஸ்: தமிழ் இலக்கியத்தில் 1990-க்குப் பிறகு ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. ஒரு புதிய படையே உள்ளே புகுந்தது. தமிழ் நவீன இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றது. ஆனால், நீங்கள் அதுபற்றியெல்லாம் மூச்சுவிடவே இல்லை. கிட்டத்தட்ட உங்கள் வயதில் மூன்றில் ஒரு பகுதி காலகட்டத்தில், உங்கள் மொழியில் புதிதாக எழுத வந்தவர்களைப் பற்றி ஒரு மூத்த படைப்பாளியான நீங்கள் எதுவும் பேசவில்லை. ஜெயகாந்தன், காலத்தின் வீட்டுக்குள் சென்று, எல்லாக் கதவுகளையும் பூட்டிக்கொண்டு, ஊரே இருண்டு கிடக்கிறது என்று சொல்கிறார் என்ற விமர்சனம் உங்கள் மீது உண்டு…
ஜெயகாந்தன்: சரியில்லை.
சமஸ்: எது சரியில்லை? விமர்சனமா, ஜெயகாந்தன் காலத்தின் எல்லாக் கதவுகளையும் பூட்டிக்கொண்டதா?
ஜெ.: ஜெயகாந்தன் பூட்டிக்கொண்டது சரியில்லை. ஜெயகாந்தன் அப்படிச் செய்திருக்கக்கூடாது.
சமஸுடைய கேள்விகளின் வீச்சும் ஆழமும் பெரும் வியப்பைத் தரக்கூடியவை. புதிய கோணங்களைத் திறக்கச் செய்பவை.
கோவை ஞானியிடம் சமஸ் எடுத்த ‘இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்’ என்ற பேட்டி அதற்கோர் உதாரணம்.
சமஸ்: பிராமணியத்தைப் பற்றிப் பேசுகையில், சாதியடுக்குக் கட்டுமானம், பாகுபாடுகள், தீண்டாமை இவற்றோடு மட்டும் அல்லாமல், அதனுடைய பிற பண்பு வடிவங்களைப் பற்றியும் பேசுகிறோம். உதாரணமாக, இந்தியாவில் நவீன அரசும் நவீன அறிவியலும் வளர்ச்சி முழக்கமும் பிராமணியத்தன்மை கொண்டிருப்பதைச் சொல்லலாம். பிராமணியத்தை விமர்சிக்கக்கூடிய நம்மைப் போன்றவர்கள், அப்படியே அபிராமணியத்தைப் பற்றியும் பேசலாம் என்று நினைக்கிறேன். பிராமணரல்லாத சமூகங்களிடம் உள்ள கலாச்சாரம், பிராமணியத்துக்கு மாற்றான பண்பை நாம் அபிராமணியம் என்று குறிப்பிடலாம் என்றால், இன்றைக்கு அதனுடைய நிலை என்ன? உதாரணமாக அது நவீன அரசு, நவீன அறிவியல், வளர்ச்சி போன்றவற்றை எப்படிப் பார்க்கிறது? பிராமணியத்தை விமர்சிப்பவர்கள் அபிராமணிய பண்பை வளர்த்திருக்கிறார்களா? அவர்களுடைய அன்றாட வாழ்க்கை எந்த மதிப்பீடுகளைக் கொண்டதாக இருக்கிறது?
ஞானி: இது ஒரு அபாரமான கேள்வி. ஆரியரும் திராவிடரும் இணைந்து செயல்படாமல் சாதியம் என்ற அமைப்பு இந்தியாவில் உறுதிப்பட வாய்ப்பில்லை. பிராமணர்கள் மட்டுமே பிராமணியத்தைக் கைக்கொள்ளவில்லை என்றாலும், பெருமளவில் பிராமணச் சமூகத்தின் பண்பே பிராமணியத்தின் பண்பாகவும் இருக்கிறது. அதன் கேடுகளையே நாம் விமர்சிக்கிறோம். மாற்று தொடர்பாகப் பேசுகிறோம். அபிராமணியம் என்று நீங்கள் ஒன்றைக் குறிப்பிடுகிறீர்கள் என்றால், அது பிராமணரல்லாத சமூகங்களின் பண்புகளின் தொகுப்பாக, அவர்களுடைய மதிப்பீடாக இருக்க வேண்டும். இன்னொரு வகையில், பிராமணியத்தில் நாம் விமர்சிக்கும் கேடான விஷயங்களுக்கு மாற்றையும் அபிராமணியம் கொண்டிருக்க வேண்டும். அப்படியான பண்புகள் சமூகத்தில் இயல்பாக இருந்தனவா என்றால், இருந்தன. இப்போதும்கூட பழங்குடிச் சமூகங்களிடமும் கிராமங்களிலும் அவற்றில் எவ்வளவோ மிச்சம் இருக்கின்றன. பொதுக் கலாச்சாரத்தில் அவை வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்றனவா என்றால், இல்லை. இந்தியாவில் இன்றைய வாழ்க்கை என்பது பிராமணியத்தை விமர்சிப்பவர்களும் பிராமணியத்தைக் கைக்கொள்வதாகவே இருக்கிறது என்பதே நிதர்சனம்.
வெகுஜனப் பத்திரிகைகளில், பல சமயங்களில் சிறு பத்திரிகைகளிலும்கூட வெளியாகும் பேட்டிகளுக்கென்று ஒரு வரையறுக்கப்பட்ட சட்டகம் உண்டு. பேட்டி கொடுக்கும் ஆளுமையிடம் பதில்களாக கருத்துகளையோ, தரவுகளையோ பத்திரிகையாளர் தன் கேள்விகளின் வழியே வாங்க வேண்டும். சமஸ் பேட்டிகளை உரையாடல் ஆக்கினார். சமூகத்தில் நிலவும் கருத்துகளைத் திரட்டி சம்பந்தப்பட்ட ஆளுமைகளிடம் இணையான ஒரு வாதமாக முன்வைத்தார். அதற்கு அவர்கள் அளித்த பதில்களோடு சேர்ந்த அந்தப் பேட்டிகளை வாசிக்கும்போது பல புதிய புள்ளிகள் வெளிப்பட்டன. 2016-ல் விசிக தலைவர் தொல். திருமாவளவனுடன் அவர் நிகழ்த்தி, ஐந்து நாட்களுக்கு நடுப்பக்கத்தில் தொடர்ந்து வெளியான பேட்டியை நல்ல உரையாடலாகக் கூறலாம்.
2002-ல் குஜராத் கலவரம் நடந்தபோது, சட்டையில் இரத்தக் கறையோடு, கைகூப்பி உயிர்ப் பிச்சை கேட்கும் குதுபுதீன் அன்சாரியின் முகத்தை எவராலும் மறக்க முடியாது. இதற்குப் பின் படிப்படியாக உலகத்தின் பார்வையிலிருந்து தன்னை மறைத்துக்கொண்டு வாழ்ந்துவந்த அன்சாரியின் பேட்டி 2014-ல் முதன்முறையாக ஒரு தமிழ் நாளிதழில் வெளியானது. அதிலும் குறிப்பாக, மோடி பிரதரமர் நாற்காலியை நோக்கி நகர்ந்துவந்த காலகட்டத்தில் இது வெளியானது. ‘இந்தியாவின் வண்ணங்கள்’ தொடரில் வெளியான ‘மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை’ என்ற அன்சாரியின் அந்தப் பேட்டி ஆகட்டும், அகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் வீதிகளின் நுழைவாயில்களில், ஒவ்வொரு கலவரத்தின்போதும் வீடுகளைத் தீக்கிரையாக்கும் வன்முறையாளர்களிடமிருந்து தப்பிக்க வீதிகளின் நுழைவாயில்களில் அமைக்கப்பட்டிருக்கும் பெரிய இரும்புக் கதவுகளைப் பற்றி விவரிக்கும் ‘மோடி, குஜராத், வளர்ச்சி: கதவுகளில் கசியும் உண்மை’ கட்டுரை ஆகட்டும், இரண்டுமே அந்தக் காலகட்டத்தில் முக்கியமான இதழியல் செயல்பாடுகள். ஏனென்றால், 2014 மக்களவைத் தேர்தலையொட்டி அந்தத் தொடர் வெளிவந்துகொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் தமிழில் மட்டுமல்லாது இந்தியாவில் பெரும்பாலான ஊடகங்கள், வளர்ச்சி என்ற பெயரில் குஜாராத்தை முன்னிறுத்தி மோடியை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்துகொண்டிருந்தன. இப்படியான தருணத்தில்தான், ‘இந்து தமிழ்’ நடுப்பக்கம் வழியாக குஜராத்தின் இயல்புநிலையைக் களத்திலிருந்து தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தார் சமஸ். அதில் ஒருவரி எனக்கு மறக்கவே முடியாதது. ‘பயம்தான் சார் இந்த ஊர ஆளுது.’
சமஸின் மற்ற பயணத் தொடர்களும் தனித்துவமானவை. கடலோர மக்களின் வாழ்வையும், அங்கு நிகழும் அழிவையும் பேசும் ‘கடல்’, நாடு முழுவதும் இந்துத்துவம் பேரலையாக உண்டாக்கிவரும் மாற்றத்தை ஏற்படுத்திவரும் தாக்கத்தை விவரிக்கும் ‘மோடியின் காலத்தை உணர்தல்’ ஆகிய பயணத் தொடர்கள் இந்தியாவை இன்னும் துல்லியமாக அறிந்துகொள்ளச் செய்பவை. உரையாடல் நடையில் அவர் எழுதிய ‘லண்டன்’ பிரிட்டனைப் பற்றிய விவரங்களைப் பேசுவதான பாவனையில் இந்தியாவில் உருவாக்க வேண்டிய ஜனநாயக மாற்றங்களைப் பேசியது. தமிழில் பயணத் தொடர்கள் வரிசையில் இவ்வளவு காத்திரமாக அரசியலை மையப்படுத்தி வேறு யாரேனும் எழுதியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
ஒட்டுமொத்தமாக கட்டுரை, பேட்டி, பயணம் ஆகிய வடிவங்களில் புதிய சாத்தியங்களைக் காட்டியவராகவும் அதன் வழியே தமிழ் இதழியலின் எல்லையை விஸ்தரித்தவராகவும் சமஸைச் சொல்ல முடியும்.
II
சமஸை ஏன் இலக்கிய முகமாகப் பார்க்க வேண்டும்?
தமிழ் அறிவுத்தளம் என்பது பெரும்பாலும் இலக்கிய வட்டத்தில் இயங்குபவர்களை மையப்படுத்தியதாக இருக்கிறது. ஆனால், சமஸைத் தமிழ் இலக்கியவாதிகள் தங்களுள் ஒருவராக அடையாளப்படுத்திக்கொண்டதாகத் தெரியவில்லை. சமஸை குஹாவுடன் ஒப்பிட்டு சாரு நிவேதிதா எழுதியிருக்கிறார். சமஸின் ‘கடல்’ தொகுப்பை ‘மானுடவியலையும் இலக்கியத்தையும் இணைக்கு ஒரு மகத்தான சாதனை’ என்று சாரு குறிப்பிடுகிறார். ஜெயமோகன், அ.முத்துலிங்கம் முதல் எஸ்.வி.ராஜதுரை, தமிழவன் வரையில் சமஸ் கட்டுரைகளைப் பற்றி பலரும் பாராட்டி எழுதியிருக்கின்றனர். ஆனால், தமிழ் இலக்கிய உலகத்தால் கவனிக்கப்படுபவராக சமஸ் இருந்திருக்கிறாரே தவிர, தமிழ் இலக்கிய உலகின் முகங்களில் ஒன்றாக அவர் பார்க்கப்படவில்லை.
சமஸின் ‘கடல்’ தொகுப்பைத் தமிழ்ப் பத்திரிகை உலகில் மட்டுமல்ல, இலக்கிய உலகிலும் மிக முக்கியமான தொகுப்பாகக் கூறலாம். சொல்லப்போனால், ஒரு சிறுகதைத் தொகுப்பை, நாவலை அணுகுவதுபோல் அந்தக் கட்டுரைகளைத் தமிழ் இலக்கிய உலகம் அணுகியிருக்க வேண்டும். தமிழ் இலக்கியத் தரப்பினருக்கு வெகுஜனப் பத்திரிகைகள் மீது சற்று விலக்கப் பார்வை உண்டு. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அதே சமயம், தகுதி வாய்ந்தவர்கள் பத்திரிகையில் பணியாற்றும்போது அவர்களைப் பத்திரிகையாளர் என்ற அடையாளத்துக்குள் மட்டும் குறுக்கிப் பார்க்கும் பார்வை சரியானதல்ல.
எவற்றையெல்லாம் இலக்கியமாகக் கருத வேண்டும் என்று தமிழ் இலக்கிய உலகம் கொண்டிருக்கும் வரையறையில் உள்ள போதாமையாக இதைப் பார்க்கிறேன். சிந்தனையாளர் டி.ஆர்.நாகராஜின் கூற்றாக சமஸ் அடிக்கடி கூறும் ஒரு வரி சமஸின் எழுத்துகளை நாம் எப்படிப் பார்க்க வேண்டும் என்பதற்குமான வரையறையாக நமக்கு உதவும் என்று நினைக்கிறேன். “இலக்கியம் என்பது வேறொன்றுமில்லை, தொனிதான் இலக்கியம். தொனியின் அடிப்படையில் ஒரு கட்டுரை இலக்கியப் படைப்பாக மாறலாம். தொனியற்ற ஒரு நாவல் இலக்கியமற்ற ஒரு வறட்டு பிரதியாக இருக்கலாம்.”
சமஸின் கட்டுரைகள் மட்டுமல்ல, அவரது பொறுப்பில் இருந்த நடுப்பக்கத்தின் ஆன்மாவானது இந்தத் தொனியைக் கொண்டிருந்தது. நடுப்பக்கத்தில் இலக்கியவாதிகளைக் கொண்டாடும் போக்கை மட்டும் சமஸ் உருவாக்கவில்லை. கூடவே, தமிழ் இலக்கியத்தில் குறுக்கீடுகளையும் அவர் நிகழ்த்தினார். குறிப்பாக, தமிழ் இலக்கியம் கொண்டிருக்கும் ’அரசியலற்ற பாசாங்கு’த்தனத்தை அவர் தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்கினார். அதேசமயம் தமிழ் இலக்கியத்தையும் தமிழ் அரசியலையும் நேருக்குநேர் நிறுத்தி பகைமையை வளர்த்தெடுப்பவராக அல்லாமல், இரு தரப்புகளிடையில் இணக்கத்துக்கான பாலத்தை உருவாக்க முயன்றார். பாரதி, புதுமைப்பித்தன் மீதும் அவருக்கு மரியாதை இருந்தது, பெரியார், அண்ணா மீதும் அவருக்கு மரியாதை இருந்தது. இந்த இரண்டு தரப்புகளும் சேர்ந்ததுதான் இன்றைய நவீன தமிழ்நாடு என்பது அவரது பார்வை. இலக்கியவாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது மட்டுமல்ல, நடுப்பக்கத்தின் உள்ளடக்கத்தையே இலக்கியத்தன்மை கொண்டதாக சமஸ் கட்டமைத்தார்.
ஏன் சமஸை De-professionalized intellectual என்று கூறலாம்?
மெக்சிகோவைச் சேர்ந்த, உலக அளவில் கவனிக்கப்படும் முக்கியமான அறிவாளுமைகளில் ஒருவரான கஸ்டாவா எஸ்டீவா (Gustavo Esteva) தன்னை ஒரு ‘De-professionalized intellectual’ ஆக அடையாளப்படுத்திக்கொள்கிறார். ‘சமூக நிறுவனங்கள் கட்டமைக்கும் சிந்தனைகளின் வழியாகவே நாம் உலகைப் பார்க்கிறோம். அதன் வழியாகவே எல்லாவற்றையும் அர்த்தப்படுத்திக்கொள்கிறோம். கல்விப்புலம் வாயிலான சிந்தனை மட்டுமே இங்கு நம்பத்தகுந்த சிந்தனையாகவும், அதிகாரப்பூர்வ சிந்தனையாகவும் பார்க்கப்படுகிறது. இங்கு ஒரு தனிமனிதனின் தன்னியல்பான சிந்தனைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. இந்தக் கட்டமைப்பிலிருந்து விடுபடுவது அவசியம்’ என்பது அவரது வாதம்.
தொழில்சார் சான்றிதழ் பெற்றிருப்பவர்களின் கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதை, அவை மட்டுமே அறுதியானது என்று கூறப்படுவதை நாம் பார்க்கிறோம். தொழில்சார் தகுதியைக் கொண்டிராத தனிநபரின் கருத்துகள் முக்கியத்துவமற்றவையாகப் பார்க்கப்படுகின்றன. இதை இப்படிப் புரிந்துகொள்ளலாம். கடலோடி ஒருவர் தன் அனுபவங்களின் வழியே கடல் குறித்து சில புரிதல்களை முன்வைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ‘அவர் கடல்சார் ஆய்வாளர் அல்ல. எனவே, அவரது கருத்துகளை ஏற்க முடியாது’ என்று கூறுவது ஒருவகை சர்வாதிகாரம்தான். இந்தப் போக்குக்கு எதிரானதுதான் “de-professionalization”. அதாவது, ஒருவர் தன்னைத் தொழில்சார் தன்மையிலிருந்து விடுவித்துக்கொள்வது அல்லது தொழில்சாராத் தன்மையைத் தன் இயல்பாகக் கொண்டிருப்பது.
அடிப்படையில், சமஸ் நிறுவனக் கட்டமைப்பிலிருந்து விடுபட்டுச்செல்லும் இயல்புகொண்டவர். அவரது ஆடைத் தேர்வு முதல் அவரது உடல்மொழி வரையில் அதைக் காண முடியும்.
அஷிஸ் நந்தியைப் படித்தவர்களுக்கு, சமஸின் பார்வை நந்தியின் பார்வைக்கு அருகில் இருப்பதை உணர முடியும். நந்தி கல்விப்புல மொழியில் பேசும் சிந்தனைகள் சமஸிடம் வெகுஜன மொழியில் வெளிப்படுவதைக் காண முடியும். நந்தியின் ‘Talking India’ நூலில் வெளிப்படும் இந்தியாவும், சமஸின் ‘அரசியல் பழகு’ நூலில் வெளிப்படும் தமிழ்நாடும் ஒரே சிந்தனைப் புள்ளியின் இரு உருவங்களாகத் தெரியும். கல்விப்புலத்துக்கு வெளியே வெளிப்படும் சமஸின் இத்தகு அறிவுநுட்பத்தைத் தமிழவன் ஏற்கெனவே அடையாளம் கண்டிருக்கிறார். “பிராந்தியங்களால் ஆனது இந்தியா, அது மையமற்றது என்ற இடத்துக்கு மேற்கத்தியச் சிந்தனைமுறைகள் வழி நான் வந்துசேர்ந்தால், சமஸ் வெகு சல்லிசாக அவரது இயல்பான புத்திநுட்பத்தால் இதே இடத்துக்கு வேறு வழியில் வந்துசேர்கிறார்” என்று சமஸின் ‘அரசியல் பழகு’ நூலைப் பற்றி தமிழவன் குறிப்பிட்டிருப்பதை இந்தப் பின்புலத்தில் பொருத்திப் பார்க்கலாம்.
சமஸ் தன்னளவில் மட்டுமல்ல, நடுப்பக்கத்தையும் de-professionalized தன்மை கொண்டதாகவே கட்டமைத்திருக்கிறார். முக்கியமாக நடுப்பக்கத்தின் மொழிநடை எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்கிற சுதந்திரத்தைக் கொண்டிருந்தது. ஒரு சமயத்தில் கிராம மக்களுடைய நாட்டுப்புறப் பாடல்கூட பிரசுரமாகியிருந்தது நினைவில் இருக்கிறது. பத்திரிகையில் பணியாற்றுபவர்களுக்குத்தான் தெரியும் சில வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு எவ்வளவு கட்டுப்பாடுகள் உண்டு என்பது. சமஸ் கட்டுரைகளிலும், நடுப்பக்கத்திலும் சொற்களின் பயன்பாட்டை மிக சகஜமாகப் பார்க்க முடியும். ஆங்கில இந்து உட்பட இந்திய நாளிதழ்களின் நடுப்பக்கத்தில் எழுதுபவர்களில் பெரும்பாலோனோர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் துறையில், உயரிய பொறுப்புகளில் இருப்பவர்கள். ஆனால், ‘இந்து தமிழ்’ அந்த வரையறையை மாற்றி அமைத்தது. எழுதும் நபரின் கல்வித் தகுதி, வேலை ஆகியவற்றின் அடிப்படையில் இல்லாமல், சமூக அக்கறை கொண்ட எவரும் எழுதலாம் என்ற தளத்தை சமஸ் உருவாக்கினார்.
III
சமஸ் சிந்தனையின் பரிணாமம்
சமஸின் எழுத்துகளை 2017-க்கு முன், பின் என்று பிரிக்கலாம் என்று நினைக்கிறேன். 2017-க்கு முன்பு வரை அவர் எழுதிய கட்டுரைகள் அரசின், சமூகத்தின் போக்குகளில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டக் கூடியவையாகவும் விமர்சிக்கக்கூடியவையாகவும் இருந்தன. 2017-க்குப் பிறகு சூழல் மாறுகிறது. மோடி பதவியேற்று மூன்றாண்டுகள் முடிகின்றன. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என நாடு பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாகிறது. யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார். இதற்குப் பின் நாடு முழுவதுமே பாஜக கையில் வந்துவிட்டதான தோற்றம் உருவாகிறது. பெரும்பாலான ஊடகங்கள் மோடிக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கின. இப்படியான ஒரு சூழலில்தான் ‘மோடியின் காலத்தை உணர்தல்’ தொடரை சமஸ் எழுதுகிறார். இம்முறை, இந்தியாவின் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பயணப்படும் சமஸ், மகாராஷ்டிரா – வங்கம் இடையிலான பயணத்தின் மையமாக உத்தர பிரதேசத்தை மாற்றுகிறார்.
இந்தத் தொடர், ஒருவகையில் சிந்தனைரீதியாக சமஸிடம் உருவாகிவந்த மாற்றத்தை வெளிக்காட்டக்கூடியதாக இருந்தது. பலர் வலதுசாரிகளை விதந்தோதும் விதமாகவும், இடதுசாரிகளைக் குற்றஞ்சாட்டும் விதமாகவும் இக்கட்டுரைகள் அமைந்திருப்பதாகச் சொல்லி சமஸை இந்தத் தொடருக்காகத் திட்டித் தீர்த்தனர். ஆனால், இடதுசாரிகளின் சறுக்கல்கள், பலவீனங்களிலிருந்து வலதுசாரிகள் பலம் பெற்று எழுந்து நிற்கிறார்கள் என்பதைப் பேசிய இந்தத் தொடர் இன்று நாடு முழுவதும் நடந்திருக்கும் மாற்றங்களை அன்றே முன்கூட்டிக் கூறியது. வங்கத்தில் பாஜக இவ்வளவு பெரிய சக்தியாக எழுவார்கள் என்று அப்போது யாரும் எழுதி நான் படிக்கவில்லை. சமஸ் இந்தத் தொடரில் முக்கியமான இடத்தை வந்தடைந்தார். மதரீதியிலான அரசியலுக்கு மொழிரீதியிலான அரசியலே பதில் கொடுக்கும், ஒற்றையாட்சியின் அரசியலுக்கு முன்பு கூட்டாட்சி அரசியலே பதில் கொடுக்கும், இனி பிரச்சினைகளை மட்டுமல்ல, தீர்வுகளையும் முன்வைத்துதான் செயல்பட வேண்டும் என்ற புள்ளிக்கு அவர் வந்திருந்ததை அத்தொடர் வெளிப்படுத்தியது.
இதன் நீட்சியாகவே, அவர் பேசிவந்த காந்திய அரசியலில் டெல்லிக்கும் கிராமத்துக்கும் இடையிலான அதிகாரப் பரவலாக்கப் பயணத்தில் மாநிலங்களின் முக்கியத்துவத்தைப் பேசிய அண்ணாவை அவர் கண்டடைகிறார். இதன் பிறகு இன்னும் கூட்டாட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிய அவர், திராவிட இயக்கத்தை மறுவாசிப்பு செய்யும் நோக்கில், ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க்கனவு’ ஆகிய நூல்களைக் கொண்டுவருகிறார். 2017-க்குப் பிறகு அவர் எழுதிய கட்டுரைகளில் மையச் சாரமாகக் கூட்டாட்சித் தத்துவம் இடம்பிடிக்கலாயின. நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்பட வேண்டிய குரலாகவே அக்கட்டுரைகள் வெளிப்பட்டன. சென்ற ஆண்டு அவர் எழுதிய ‘இந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை’ கட்டுரை அதற்கு ஒரு முதன்மை உதாரணம்.
சமஸின் அரசியலைப் புரிந்துகொள்ளல்
சமஸைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீங்கள் படிக்க வேண்டியது 2017-ல் வெளியான அவருடைய ‘அரசியல் பழகு’ நூலைத்தான். மாணவர்கள் அரசியல்வயப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ‘இந்து தமிழ்’ நாளிதழில் அவர் எழுதிய கட்டுரைத் தொடர்தான் ‘அரசியல் பழகு’ நூலாக வெளிவந்தது. அந்நூல் இவ்வாறு தொடங்குகிறது…
‘வரலாற்றில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதும் எங்கே இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து இருப்பதும்தான் உங்கள் வாழ்வைத் தீர்மானிக்கின்றன… எவர் ஒருவருமே தனிமனிதர் அல்ல. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு சமூக மனிதர் இருக்கிறார். ஒரு வரலாற்று மனிதர் இருக்கிறார். நீங்கள் எந்தச் சமூகத்தில் இருக்கிறீர்கள்? வரலாற்றில் உங்கள் சமூகம் எங்கே இருக்கிறது? இந்தப் புரிதலில் இருந்துதான் உங்கள் அரசியல் தொடங்குகிறது’.
‘அரசியல் பழகு’ நூலில் கடைசிப் பகுதியாகக் கேள்வி – பதில் இணைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு கேள்வி, ‘இந்தியா என்ற கருத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’
சமஸ் சொல்கிறார், ‘உலகமேகூட ஒரு ஒன்றியமாகச் செயல்படலாம். தமிழரின் ஆதித் தொன்மத்திலேயே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பரந்த பார்வை பொதிந்திருக்கிறது. இந்திய ஒன்றியம் என்கிற அமைப்பை விதியின் ஆட்டங்களில் ஒன்றுபோல்தான் காண்கிறேன். எல்லாத் தனிமனிதர்களுக்கும் சமமான உரிமையையும் எல்லா மாநிலங்களுக்கும் சமமான வாய்ப்பையும் வழங்குகிற நியாயமான ஒரு அமைப்பாக இன்றைய இந்திய ஒன்றியம் இல்லை. ஆனால், நெடுநாள் நகர்வில் அதற்கான சாத்தியங்களையும் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. சமூக நீதி, ராஜ்ஜிய நீதி.. இந்த இரு தடங்களிலான பயணம் அங்கே நம்மை இட்டுச்செல்லலாம். இராணுவம், வெளியுறவு, பரிமாற்ற நாணயம் நீங்கலாக ஏனைய அதிகாரங்கள் அனைத்தையும் மாநிலங்கள் கொண்டிருக்கும், ஒரு பிராமணரையும் தலித்தையும் இஸ்லாமியரையும் சமமாகப் பாவிக்கும் இந்திய ஒன்றியத்தைக் கற்பனைசெய்து பாருங்கள். ஐரோப்பிய ஒன்றியத்தைவிட அற்புதமான வாய்ப்புள்ள ஒரு அமைப்பு உங்கள் கண் முன் விரியும்’.
திராவிடத்துக்குப் புத்துயிர்- சமஸின் பங்கு என்ன?
மேற்கண்ட அரசியல் பார்வையின் தொடர்ச்சியாகவே அவர் திராவிடத்தை அணுகுகிறார். காந்தி வலியுறுத்திய கிராம சுயராஜ்யத்தில் இருக்கும் இடைவெளியைத் தீர்க்கக்கூடியதாக திராவிட அரசியலை, குறிப்பாக அண்ணாவின் கூட்டாட்சி முழக்கத்தைப் பார்க்கிறார். இதன் வெளிப்பாடே ‘மாபெரும் தமிழ்க் கனவு’. வரலாற்றுத் தலைவர்களின் வாழ்க்கையைப் பற்றி, அவர்களது சாதனைகளைப் பற்றிக் குறிப்பிடுவதல்ல விசயம், வரலாற்றுத் தலைவர்களை சமகாலத்தோடு இயங்கச் செய்வது முக்கியம். சமஸ் கட்டுரைகள் அதைச் செய்தன. திராவிடம் சார்ந்து சமஸ் எழுதிய கட்டுரைகள் நவீன தளத்துக்குத் திராவிடக் கருத்தியலை எடுத்து வந்தன.
கருணாநிதி, ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் திராவிடக் கருத்தியல் இளைஞர்கள் மத்தியில் தீவிரம்கொள்ளத் தொடங்கியது. மோடி இரண்டாம் முறை பதவியேற்ற பிறகு அந்தத் தீவிரம் இன்னும் அதிகரித்தது. பெரியார், அண்ணாவின் மேற்கோள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் வலம் வரத்தொடங்கின. இந்த எழுச்சியில் சமஸுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. ‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும் அதிகம் புழங்கியது. அந்தப் புத்தகம் தமிழகக் கட்சிகளுக்குள்ளும் தாக்கம் செலுத்தியதைப் பல்வேறு தருணங்களில் உணர முடிந்தது.
இன்றைக்கு மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று தமிழக அரசும் குறிப்பிடுகிறது, பலரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகவே ‘இந்து தமிழின்’ நடுப்பக்கம் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்றே குறிப்பிட்டுவந்துள்ளது.
சமஸ் மீதான என் விமர்சனம்
சமஸ் மீது எனக்கு விமர்சனங்களே இல்லையா? நிறைய உண்டு. அது அவ்வப்போது மாறும். இந்தச் சமயத்தில் முக்கியமாகத் தோன்றுவதை இப்போது எழுதுகிறேன்.
பொதுவாக பிரச்சினைகளை மட்டும் பேசாமல் தீர்வை முன்னிறுத்திப் பேசுவதில் எனக்குச் சங்கடம் உண்டு. தீர்வுகளை வாசகர்கள் போக்குக்கு விடும்போது அது வாசகர்களை மேலும் சிந்திக்கத் தூண்டும். குறிப்பிட்ட தீர்வை முன்வைத்து எழுதும்போது கட்டுரையின் எல்லா விசயங்களும் அந்தத் தீர்வை நோக்கி இழுப்பதாக, வாசகர்களை convince செய்வதாக அமைந்துவிடும். அதேபோல சமஸ் கட்டுரைகள் சமூக யதார்த்தத்தையும், தனிமனித உளவியலைக் காட்டிலும் அவருடைய இலட்சிய யதார்த்தத்தைப் பிரதானப்படுத்தி சூழலின் பிரச்சினைகளைப் பேசுகின்றன. அதேபோல் சென்ற நூற்றாண்டின் விழுமியங்களை இந்நூற்றாண்டோடு பொருத்தச் செய்யும் முயற்சியை அவரது கட்டுரைகளில் காண முடியும். அதில் பிரச்சினை என்னவென்றால், அவர் தன் கட்டுரைகளின் வாயிலாகக் கட்டியெழுப்ப முயலும் விழுமியங்கள் பல, தற்கால சமூக யதார்த்தத்தோடு பொருந்திப் போக முடியாதவையாக உள்ளன.
ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதிக்கப்பட்டதை எதிர்த்து, 2017 ஜனவரி மாதம், சென்னை மெரினா கடற்கரையில் இரவு பகல் பாராது போராட்டம் நடைபெற்றது. அதையொட்டி, சமஸ் எழுதிய ‘டெல்லிக்கட்டு’ கட்டுரையை அவருடைய இலட்சிய யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.
“ஒட்டுமொத்த இந்தியாவும் திகைப்பில் ஆழ்ந்திருக்கிறது. மெரினா கடற்கரையை நோக்கிச் செல்லும் சென்னையின் ஒவ்வொரு சாலையும் மனிதத் தலைகளால் நிரம்பி வழிகிறது. இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் மெரினாவில் உட்கார்ந்திருப்போர் எண்ணிக்கை இன்றைக்குப் பத்து இலட்சத்தைத் தாண்டிவிட்டது. இது தவிர, பல்லாயிரக்கணக்கானோர் நாளெல்லாம் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். பேரணியாக வர முடியாதவர்கள் ஆங்காங்கே தெருமுக்குகளில் கையில் கருப்புக் கொடியுடன், மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளுடன் கூடி நிற்கிறார்கள். சைதாப்பேட்டையில் பணி முடித்து சீருடையைக்கூடக் கலைக்காமல் பெண் துப்புரவுத் தொழிலாளர்கள் ‘தமிழர் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்று கோஷமிட்டபடி ஊர்வலமாகச் சென்றதைப் பார்த்தேன். எங்கு பார்த்தாலும் கருப்புச் சட்டையர்கள். எங்கும் பறை, மேளதாள முழக்கங்கள். ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்றே அறிந்திராத எதிர்வீட்டு ஐந்து வயதுச் சிறுமி கையில் பென்சிலால் எழுதப்பட்டு, மாடு வரையப்பட்ட காகிதத்துடன் தெருவுக்கு ஓடுகிறாள். ஒவ்வொரு ஜல்லிக்கட்டும் பலரை முடக்கும் காயங்களைத் தந்து செல்லக் கூடியது; சிலரது உயிரையும் உடன் எடுத்துச் செல்லக்கூடியது. ஜல்லிக்கட்டை அறிந்த பெண்கள் அதை உவகையோடு அணுகிப் பார்த்ததில்லை. இன்று மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் தன்னெழுச்சியாகக் குடும்பம் குடும்பமாக மக்கள் வீதிக்கு வந்து நிற்கிறார்கள். குறிப்பாகப் பெண்கள்! திருச்சியில் முக்காடிட்ட முஸ்லிம் சிறுமிகள் சிலம்பம் சுற்றியபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். அத்தனையையும் ஜல்லிக்கட்டுத் தடைக்கான எதிர்வினையாக மட்டுமே பார்க்க முடியுமா?”
இதில் அவர் கூறியிருக்கும் நிகழ்வுகள் அப்போது நடந்தவைதான். ஆனால், அந்த நிகழ்வின் வழியே சமஸ் ஒரு யதார்த்தத்தைக் கட்டமைக்கிறார். அதாவது, தமிழக மக்கள் அரசியல்வயப்பட்டு ஒன்றிய அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள் என்று. இதைத்தான் இலட்சிய யதார்த்தம் என்கிறேன். உண்மையில், திருச்சியில் முக்காடிட்ட முஸ்லிம் சிறுமிகள் சிலம்பம் சுற்றியபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதையும், எதிர்வீட்டுச் சிறுமி மாடு வரையப்பட்ட காகிதத்துடன் தெருவுக்கு ஓடிச்சென்றதையும், பெண் துப்பரவுத் தொழிலாளர்கள் ‘தமிழர் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்று கோஷமிட்டபடி ஊர்வலமாகச் சென்றதையும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இரவு பகலாக மெரினாவில் போராடியதையும் முழுமுற்றாக அரசியல்வயப்பட்டதாகப் பார்க்க முடியுமா? அந்தப் போராட்டத்துக்கு மறுநாள் அவர்கள் யாராக இருக்கிறார்கள், அந்த இளைஞர்கள் தங்கள் கல்லூரிகளில், தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் தங்கள் அடிப்படை உரிமைக்காக, நிர்வாகத்தின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக எந்த அளவுக்குப் போராடக்கூடியவர்களாக இருக்கிறார்கள், முக்காடிட்ட முஸ்லிம் பெண்கள், தங்கள் உரிமை சார்ந்து தங்கள் குடும்பத்தில் எந்த அளவில் உரையாடலை நிகழ்த்தக்கூடியவர்களாக இருக்கிறார்கள்… இத்தகைய தனிமனித உளவியலை, சமூக யதார்த்தத்தை சமஸ் கணக்கில் கொள்ளாமல், தன்நோக்கிலான ஒரு இலட்சிய யதார்த்தத்தைக் கட்டமைக்கிறார். விளைவாக, அவர் முன்வைக்கும் தீர்வுகள் பல சமயங்களில் ஒரு அறைகூவலாக மட்டும் எஞ்சிவிடுவதுண்டு.
உலகம் சார்ந்த பார்வையிலும் சமஸின் முன்னுரிமையும் எனது முன்னுரிமையும் வெவ்வேறானவை. சமஸ் அடிப்படையில் அடையாள அரசியலை முன்வைப்பவர். தற்போது அடையாள அரசியல் என்பதே தவறான கோட்பாடாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் சமஸ் முன்வைக்கும் அடையாள அரசியல் அத்தகையது அல்ல. சமூக நீதி என்பதுதான் அவரது அரசியலின் அடிப்படை. எனில், இந்தியா ஒரு தேசியமாக பார்க்கப்படும் போது தமிழ்நாட்டுக்கான உரிமை மறுக்கப்படுகிறது. அவரது அக்கறை தமிழ்நாடு சார்ந்தது மட்டுமல்ல, சிக்கிம் சார்ந்து, நாகலாந்து சார்ந்து, அருணாச்சலப் பிரதேசம் சார்ந்ததும்கூட. எனினும், தமிழ் சார்ந்து சமஸுக்குப் பற்று அதிகம். அதுவே தமிழ், தமிழகம் சார்ந்து அவரைத் தீவிரமாகச் செயல்பட வைக்கிறது.
ஆனால், நான் தனிமனிதவாதத்தை முன்வைக்கக்கூடியவன். தனிமனித நடத்தைகள் சார்ந்துதான் என்னுடைய கவலைகளும் சிந்தனைகளும் மையப்படுகின்றன. நான் ஒரு நபரை அவரது நாடு சார்ந்து, பாலினம் சார்ந்து, மொழி சார்ந்து, மதம் சார்ந்து, சாதி சார்ந்து, பாலினம் சார்ந்து அணுகுவதில்லை. அவர் என் முன் இருக்கும் ஒரு மனிதர் அவ்வளவே. ஆனால், இந்தப் பார்வையின் வழியாக வரலாற்றுரீதியாக ஒடுக்குதலையும், பாகுபாட்டையும் எதிர்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தை மேம்படுத்த முடியாது. அரசியல் தளத்தில் இந்தப் பார்வையைக் கொண்டு மாற்றத்தை ஏற்படுத்த இயலாது. எதோவொரு விதத்தில் ஒரு நபர் அடையாளங்களின் வழியாகவே அணுகப்பட வேண்டியவராகிறார். அவரது வளர்ச்சிக்கும், பின்தங்கலுக்கும் வரலாற்றில் அவர் சார்ந்திருக்கும் சமூகத்துக்குப் பெரும் பங்கு இருக்கிறது. ஒவ்வொரு தனிமனிதருக்குள்ளும் ஒரு சமூக மனிதர் இருக்கிறார் என்பதுதான் சமஸின் வாதம். அவருடைய வாதத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், என்னுடைய சிந்தனை தன்னியல்பாக அதை நோக்கி நகர மறுக்கிறது. என்னால் ஒருபோதும் என்னை ஒரு ஆணாகவோ, ஒரு முஸ்லீமாகவோ, இந்தியனாகவோ, தமிழனாகவோ அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது. கூடாது என்று இல்லை. இயல்பாக முடியவில்லை. இந்த இரண்டு புள்ளிகளுக்கு மத்தியிலான ஊசலாட்டத்தின் ஊடாகவே அவருடைய கட்டுரைகளோடு உரையாடவும் முரண்படவும் விவாதிக்கவும் செய்கிறேன்.
சமஸின் புதிய தொடக்கம்
சமஸ் எழுதுவதற்கு நிகராக கல்லூரி மேடைகளிலும் உரையாற்றிக்கொண்டிருந்தார். கரோனாவுக்கு முன்பு வரையில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஞாயிறும் ஏதேனும் ஒரு கல்லூரியில் சமஸ் பேசினார். அவர் பத்திரிகையில் எழுதுவதை மட்டும் தன் கடமையாகப் பார்க்கவில்லை. மக்களிடம் நேரடியாகக் கலந்துரையாடுவதையும் தன் கடமையாகக் கொண்டிருந்தார். மக்களிடம் முழுமையாகச் சென்றுவிட வேண்டும் என்பதே அவருடைய இலட்சியம். எனவே, அவர் தற்போது ‘இந்து தமிழ்’ நாளிதழிலிருந்து விலகியிருப்பதை, மக்களை நோக்கி இன்னும் நெருக்கமாகச் செல்வதற்கான நகர்வாகப் பார்க்கிறேன்.
சமஸ் தற்போது புதிதாக மின்னிதழ் ஒன்றைத் தொடங்கும் திட்டத்தில் இருக்கிறார். தான் களம் காணும் எதிலும் பெரும் தாக்கத்தையும் முன்னகர்வையும் ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டவர் அவர். அந்த வகையில் ஆங்கில இந்துவிலிருந்து விலகிய சித்தார்த் வரதராஜன் எப்படி ‘தி வையர்’ மின்னிதழைத் தொடங்கி, அதை இந்தியாவின் முதன்மை இதழாக மாற்றினாரோ, அதுபோல தமிழ்ப் பண்பாட்டுத் தளத்திலும் சிந்தனைத் தளத்திலும் மாற்றங்களை உண்டு பண்ணக்கூடிய வகையில் தனித்துவமான முன்னெடுப்பை சமஸ் மேற்கொள்வார் என்று ஆழமாக நம்புகிறேன்.
5 comments
அருமை ஐயா, திரு. சமஸ் அவர்களின் கட்டுரைகள் படித்ததால், திராவிட அரசியல், தலித், இந்திய அரசியல் உள்ளிட்டவைகளில் நிதர்சன உண்மை எனக்கு புரிந்தது. என் எண்ணம் மற்றும் பார்வையும் மாறியது.
வாரிசு
விரிவான, நேர்மையான அலசல்! பாராட்டுகள்!
மிக முக்கியமான கட்டுரை.. இத்தனை விரிவாக பன்முக அம்சங்களை விவரித்து சமஸ் அவர்களின் இதழியல் பணியை அணுகியது அருமை.. இந்த வகைமையில் இக் கட்டுரை முன்னோடியாக அமையும். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Indeed…! This is a great article!
என்னுடைய அரசியல் குருவே சமஸ் தான்.
2017 இல் அவருடைய 2 ஜி கட்டுரை படித்த பிறகு தான் அது எவ்வளவு உதி பெரிதாகிய கட்டு கதை என்று புரிதல் ஏற்பட்டது. அவருடைய மின் இதழ் பெரிய தாக்கம் ஏற்படுத்தும்.
Comments are closed.