அந்தி நேரத்துச் சூரியன் – வில்லியம் ஃபாக்னர்

by கார்குழலி
0 comment

I

இப்போதெல்லாம் ஜெஃபர்ஸனில் திங்கட்கிழமையும் மற்ற நாட்களைப் போலத்தான் இருந்தது. சாலைகள் தளம்பாவப்பட்டு இருக்கின்றன. நிறமற்ற ஊதிப்பெருகிய வெளுத்த திராட்சைக் கொத்துகள் தொங்கும் இரும்புக் கம்பங்களை நிறுவுவதற்காகத் தொலைபேசி மின்சார நிறுவனங்கள் ஓக், மேப்பிள், எல்ம், லோகஸ்ட் போன்ற நிழல்தரும் மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளுகின்றன. திங்கட்கிழமைக் காலைகளில் நகரின் சலவை நிறுவனம் பளீரென்ற வண்ணத்தில் இருக்கும் சிறப்பு மோட்டார் கார்களில் வலம்வந்து துணிமூட்டைகளைச் சேகரிக்கும். ஒரு வாரத்தின் அழுக்குத் துணி மூட்டைகள் எச்சரிக்கையும் எரிச்சலுமூட்டும் ஒலிப்பான்களின் பின்னே ஆவிகளைப் போல அலைகின்றன. கருங்காரையின்மீது ரப்பர் உரசுவது பட்டு கிழிவது போன்ற ஓசையை எழுப்புகிறது. பழைய காலத்தைப் போலவே இன்னமும் வெள்ளை மனிதர்களின் அழுக்குத் துணிகளைச் சலவைசெய்ய கறுப்பினப் பெண்மணிகள்தான் எடுத்துச் செல்கிறார்கள். ஆனால் எடுத்துச் செல்வத்தையும் கொண்டுவந்து தருவதையும் மோட்டார் வாகனங்களில் செய்கிறார்கள்.

பதினைந்து வருடத்துக்கு முன்னால், திங்கட்கிழமைக் காலைகளில் அமைதியான நிழலடர்ந்த புழுதியான சாலைகள் முழுவதும் கறுப்பினப் பெண்மணிகள் நிறைந்திருப்பார்கள். தலைப்பாகை அணிந்த உறுதியான தலைகளின்மீது பெரிய போர்வைகளில் மூட்டையாகக் கட்டப்பட்ட அழுக்குத் துணிகளைச் சுமந்து செல்வார்கள். வெள்ளைக்காரர்களின் வீடுகளின் சமையலறைகளில் இருந்து கறுப்பினத்தவர்களின் வசிப்பிடத்தில் இருக்கும் கருமைபடர்ந்த சலவையிடத்துக்குச் சென்று சேர்வது வரை பஞ்சுப் பொதியைப் போலப் பெரிதாக இருக்கும் மூட்டையைக் கையால் தொடக்கூட மாட்டார்கள்.

நான்சி முதலில் தலைமீது மூட்டையை ஏற்றிவைப்பாள், பிறகு அதன்மேல் பனிக்காலத்திலும் வெயில்காலத்திலும் எப்போதும் தான் அணிந்துகொள்ளும் கரியநிற வைக்கோல் தொப்பியை நிறுத்திவைப்பாள். அவள் உயரமாக இருந்தாள், உயர்ந்த கன்னமேடுகளைக் கொண்டிருந்த முகத்தில் சோகம் தவழ்ந்தது, பற்களில் சில காணாமல் போயிருந்ததால் கன்னம் குழிந்திருந்தது.

மூட்டையோ அதன்மீது இருக்கும் தொப்பியோ கொஞ்சம்கூட ஆடாமல் அசங்காமல் அவள் எடுத்துச்செல்வத்தைப் பார்ப்பதற்காகவே அவள் சாலையைத் தாண்டி அந்தப் பக்கம் இருக்கும் மேய்ச்சல் நிலத்தைக் கடக்கும் வரையிலும் கூடவே நடப்போம். அங்கிருக்கும் பள்ளத்தில் அவள் இறங்கி ஏறும்போதும் வேலிக்குக் கீழே குனிந்து நுழையும்போதும்கூட மூட்டை நகராது. அந்த இடைவெளியைக் கடப்பதற்காகக் கையையும் முட்டியையும் நிலத்தில் பதித்து அவள் தவழ்ந்து செல்லும்போதும் பிறகு மேலே எழுந்து நின்று நடந்துபோகும் வரையிலும் அவளுடைய தலை வளையாமல் நேராகவே இருக்கும். பொதிமூட்டை பாறையைப் போலவோ பலூனைப் போலவோ அசையாமல் இருக்கும். 

சில சமயங்களில் சலவைசெய்யும் பெண்களின் கணவர்கள் துணிகளை எடுத்துவரவும் திரும்பக் கொடுக்கவும் உதவிசெய்வார்கள். ஆனால் ஜீசஸ் ஒருபோதும் அதை நான்சிக்குச் செய்ததில்லை. எங்கள் வீட்டுக்கு வரவேண்டாம் என்று அப்பா சொல்வதற்கு முன்பு வரையிலும்கூட. டில்சே நோயுற்றிருக்கும் போது எங்களுக்கு சமைத்துத்தர நான்சி வந்தபோதும்கூட.

பாதிநேரம் நாங்கள் நான்சியின் வீடுவரை சென்று காலையுணவைச் சமைத்துத் தருவதற்காக வரச்சொல்லுவோம். பள்ளத்தை அடைந்ததும் நின்றுவிடுவோம். ஜீசஸோடு பேசவோ பழகவோ கூடாது என்று அப்பா சொல்லியிருந்தார். ஜீசஸ் கறுப்பாக குட்டையாக இருந்தான். அவன் முகத்தில் மேலிருந்து கீழாகச் செல்லும் பெரிய தழும்பு இருந்தது. அங்கே இருந்தபடியே, அவள் கதவருகே வந்து நின்று ஆடை ஏதுமணியாமல் தலையை மட்டும் வளைத்து வெளியே எட்டிப்பார்க்கும் வரையிலும், அவள் வீட்டின்மீது கற்களை எறிவோம். 

“எதற்காக என் வீட்டை உடைக்கப் பார்க்கிறீர்கள்? என்ன வேண்டும் குட்டிப் பிசாசுகளே?” என்றாள் நான்சி.

“அப்பா உங்களைக் காலை உணவைத் தயாரிப்பதற்காக வரச் சொன்னார். இப்பொழுதே அரைமணி நேரம் தாமதமாகிவிட்டது என்கிறார். நீங்கள் இந்த நிமிடமே வரவேண்டும்,” என்றாள் கேடி (Caddy). 

“காலை உணவு தயாரிக்க என்னால் வரமுடியாது. நான் தூங்கப் போகிறேன்,” என்றாள் நான்சி.

“நீ குடித்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். நீ போதையில் இருக்கிறாய் என்று அப்பா சொல்கிறார். நீ குடித்திருக்கிறாயா நான்சி?” ஜேசன் கேட்டான். 

“யார் சொன்னது? நான் தூங்க வேண்டும். காலை உணவு தயாரிக்க என்னால் வரமுடியாது,” என்றாள் நான்சி.

சிறிது நேரத்தில் அவள் வீட்டின் மீது கல்லெறிவதை நிறுத்திவிட்டுத் திரும்பினோம். ஒருவழியாக அவள் வந்து சேரும்போது நான் பள்ளிக்குச் செல்ல நேரமாகிவிட்டது. விஸ்கியினால்தான் என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம். அவளைக் கைதுசெய்து சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவள் திருவாளர் ஸ்டவாலைச் சந்திக்கும்வரை. வங்கியில் காசாளராகவும் பேப்டிஸ்ட் தேவாலயத்தின் திருச்சபையின் உதவியாளராகவும் இருந்தார் அவர். “என் ஊதியத்தை எப்போது கொடுக்கப் போகிறீர்கள் வெள்ளைக்காரரே? என் ஊதியத்தை எப்போது கொடுக்கப் போகிறீர்கள் வெள்ளைக்காரரே? இதுவரை மூன்றுதரம் ஆகிவிட்டது. நீங்கள் இன்னமும் எனக்கு ஒரு செண்ட்கூடக் கொடுக்கவில்லை…” 

ஸ்டவால் அவளை அடித்துக் கீழே தள்ளினார். ஆனாலும் நிறுத்தாமல் சொல்லிக்கொண்டேயிருந்தாள். “என் ஊதியத்தை எப்போது கொடுக்கப் போகிறீர்கள் வெள்ளைக்காரரே? இதுவரை மூன்றுதரம் ஆகிவிட்டது…” காவல் அதிகாரி இழுத்துப் பிடித்துக்கொள்ளும் வரையிலும் ஸ்டவால் காலால் அவள் வாயில் எட்டி உதைத்தார். தெருவில் கீழே விழுந்து கிடந்தபடியே சிரித்தாள் நான்சி. தலையைத் திருப்பி உமிழ்ந்தபோது வாயில் இருந்து இரத்தமும் உடைந்த பற்களும் வெளியே சிதறின. “இதுவரை மூன்றுதரமாகி விட்டது. அவர் எனக்கு ஒரு செண்ட்கூடக் கொடுக்கவில்லை.”

அவளுடைய பற்கள் கொட்டியது அப்படித்தான். அன்று முழுவதும் எல்லோரும் நான்சியைப் பற்றியும் ஸ்டவாலைப் பற்றியும் பேசினார்கள். இரவு நேரத்தில் சிறைச்சாலையைக் கடந்துசென்றவர்கள் நான்சி உரத்த குரலில் கத்துவதையும் பாடுவதையும் கேட்டார்கள். வேலியின் பக்கத்தில் நின்று வேடிக்கைப் பார்த்தவர்கள் அவள் கைகள் சிறைச்சாலை ஜன்னலின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு பாடுவதையும் அவளை நிறுத்த வைப்பதற்கு ஜெயிலர் முயல்வதையும் பார்க்க முடிந்தது. பொழுதுசாயும் வரை அவள் நிறுத்தவே இல்லை. அதற்குப் பிறகு மாடியில் ஏதோ உரசும் சத்தமும் இழுபடும் ஓசையும் கேட்டுப் போனபோது அவள் ஜன்னல் கம்பியில் தூக்குமாட்டித் தொங்கிக்கொண்டு இருப்பதைப் பார்த்தார். “இது கோகெய்ன் செய்யும் வேலை, விஸ்கி அல்ல” என்று சொன்னார். “கோகெய்ன் போதையில் இருக்கும் நீக்ரோதான் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவான், போதையில் இருக்கும்போது அவன் நீக்ரோவாகவே இருப்பதில்லை” என்றார்.

தூக்குக்கயிறை வெட்டிக் கீழே இறக்கினார், பின் அடித்தார், சாட்டையால் விளாசினார். அவள் தன்னுடைய ஆடையைக் கம்பியில் கட்டி அதில் தூக்கு மாட்டிக்கொண்டிருந்தாள். கைது செய்யும்போது அவளிடத்தில் ஆடையைத் தவிர வேறெதுவும் இல்லை. கையைக் கட்ட எதுவுமில்லை என்பதால் ஜன்னல் விளிம்பைப் பிடித்துக்கொண்டு இருந்தாள். அந்த ஓசையைக் கேட்ட ஜெயிலர் மேலே ஓடிப்போன போதுதான் ஜன்னலில் இருந்து நான்சி தொங்கிக்கொண்டு இருந்ததைப் பார்த்தார். உடலில் ஒட்டுத்துணி இல்லை. வயிறு சின்ன பலூனைப் போலக் கொஞ்சமாக உப்பியிருந்தது.

டில்சேவுக்கு உடல்நலமின்றி இருந்ததால் நான்சி எங்களுக்குச் சமைத்துக்கொடுக்க வந்தபோது அவளுடைய மேலங்கி வீங்கி இருந்ததைக் கவனித்தோம். அது அப்பா ஜீசஸை வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கு முன்னர். ஜீசஸ் சமையலறையில் அடுப்புக்குப் பின்னால் உட்கார்ந்து இருந்தான். அவனுடைய கரிய முகத்தில் இருந்த தழும்பு அழுக்குக்கயிறைப் போல இருந்தது.

“நான்சியின் வயிறில் தர்ப்பூசணிப் பழம் இருக்கிறது” என்று சொன்னான் ஜீசஸ். 

“அது உன்னுடைய கொடியில் இருந்து வந்ததல்ல,” என்றாள் நான்சி. 

“எந்தக் கொடியில் இருந்து வந்தது?” என்று கேட்டாள் கேடி.

“அது வந்த கொடியை நறுக்கிவிடுவேன்,” என்றான் ஜீசஸ்.

“குழந்தைகளின் முன்னால் எதற்காக இப்படிப் பேசுகிறாய்?” என்றாள் நான்சி. “போய் உன் வேலையைப் பார். நீ அதை இன்னும் செய்து முடிக்கவில்லை. நீ சமையலறையில் இருப்பதையும் குழந்தைகளின் முன்னால் இப்படிப் பேசுவதையும் திருவாளர் ஜேசன் பார்க்கவேண்டுமா?” 

“எப்படிப் பேசுகிறார்? எந்தக் கொடி?” என்று கேட்டாள் கேடி.

“வெள்ளைக்காரனின் சமையலறைக்குள் நான் வரக்கூடாது. ஆனால் என்னுடைய சமையலறைக்குள் அவனால் வரமுடியும். வெள்ளைக்காரன் என் வீட்டுக்குள் வரலாம். நான் அவனைத் தடுத்து நிறுத்தக்கூடாது. வெள்ளைக்காரன் என் வீட்டுக்குள் நுழைய விரும்பும்போது எனக்கு வீடே இருக்காது. என்னால் அவனைத் தடுத்து நிறுத்தமுடியாமல் இருக்கலாம். ஆனால் அவன் என்னை வெளியே எட்டி உதைக்கலாமா? அவனால் அதைச் செய்யமுடியாது.”

டில்சேவின் உடல்நிலை சரியாகாததால் அவள் இன்னமும் வீட்டில்தான் இருந்தாள். அப்பா ஜீசஸை வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டார். டில்சேவுக்கு இன்னமும் உடல்நிலை சரியாகவில்லை. நிறைய நாட்கள் ஆகிவிட்டது. இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் புத்தக அறையில் இருந்தோம்.

“அடுப்படியில் நான்சியின் வேலை இன்னமும் முடியவில்லையா?” என்று கேட்டார் அம்மா. “பாத்திரங்களைக் கழுவ நிறைய நேரம் எடுத்துக்கொள்வதைப் போல இருக்கிறது”.

“குவெண்டின் போய்ப் பார்க்கட்டும். குவெண்டின், நீ போய் நான்சி வேலையை முடித்துவிட்டாளா என்று பார். அவள் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்.”

சமையலறைக்குப் போனேன். நான்சி வேலையை முடித்திருந்தாள். பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அடுப்பு அணைக்கப்பட்டிருந்தது. அணைந்த அடுப்புக்கு அருகே நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள் நான்சி. என்னைப் பார்த்தாள். 

“வேலை முடிந்ததா என்று அம்மா கேட்டார்கள்.”

“ஆமாம். வேலை முடிந்துவிட்டது.” நான்சி என்னைப் பார்த்தாள்.

“என்னது?” என்றேன். “என்னது?”

“நான் ஒரு நிக்கர் மட்டும்தான். அது என்னுடைய தவறில்லை,” என்றாள்.

அணைந்த அடுப்புக்கு அருகே உட்கார்ந்துகொண்டு அந்த மாலுமித் தொப்பியைத் தலையில் அணிந்துக்கொண்டு என்னைப் பார்த்தாள். மீண்டும் புத்தக அறைக்குச் சென்றேன். சமையலறை என்றாலே கதகதப்பாகவும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்கும் என்ற எண்ணம்தான் ஏற்படும். இப்போது அடுப்பு குளிர்ந்துபோய் இருந்தது. எவரும் சாப்பிடும் நேரமில்லை என்பதால் பாத்திரங்கள் அதனதன் இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  

“வேலையை முடித்துவிட்டாளா?” என்றார் அம்மா. 

“ஆமாம்.”

“என்ன செய்துகொண்டிருக்கிறாள்?”

“ஒன்றும் செய்யவில்லை. எல்லா வேலையையும் முடித்துவிட்டாள்.”

“நான் போய்ப் பார்க்கிறேன்,” என்றார் அப்பா.

“ஒருவேளை ஜீசஸ் வந்து வீட்டுக்கு அழைத்துப்போகக் காத்திருக்கிறாளோ என்னவோ,” என்றாள் கேடி.

“ஜீசஸ் போய்விட்டான்,” என்றேன். ஒரு நாள் காலையில் எழுந்து பார்த்தபோது ஜீசஸ் அவளைவிட்டுப் போயிருந்தான் என்று நான்சி சொல்லியிருந்தாள்.

“அவன் என்னைக் கைவிட்டு விட்டான். மெம்ஃபிஸுக்குப் போய்விட்டான் என்று நினைக்கிறேன். போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காகப் போய்விட்டான் என்று நினைக்கிறேன்,” என்றாள் நான்சி. 

“போய்த் தொலைந்தானே, நல்லது. அங்கேயே இருந்தால் இன்னும் நல்லது,” என்றார் அப்பா.

“நான்சிக்கு இருட்டென்றால் பயம்,” என்றான் ஜேசன்.

“உனக்கும்தான்,” என்றாள் கேடி. 

“இல்லை,” என்றான் ஜேசன்.

“பயந்தாங்கொள்ளிப் பூனை,” என்றாள் கேடி.

“இல்லை,” என்றான் ஜேசன்.

“கேண்டிஸ்!” என்றார் அம்மா. அப்பா திரும்பி வந்தார்.

“நான்சியுடன் அவள் தெருவரைக்கும் துணைக்குப் போகிறேன்,” என்றார்.

“ஜீசஸ் திரும்பி வந்துவிட்டான் என்கிறாள்.”

“அவனைப் பார்த்தாளா?” அம்மா கேட்டார். 

“இல்லை. அவன் வந்துவிட்டான் என்ற தகவலை வேறு யாரோ நீக்ரோ சொன்னானாம். சீக்கிரம் வந்துவிடுகிறேன்.”

“நான்சியுடன் போகவேண்டும் என்பதற்காக என்னைத் தனியே விட்டுவிட்டுப் போவீர்களா?” அம்மா கேட்டார். என்னைவிட அவளுடைய பாதுகாப்புதான் முக்கியமாகிப் போனதா?”

“சீக்கிரம் வந்துவிடுகிறேன்,” அப்பா சொன்னார்.

“அந்த நீக்ரோ இங்கே சுற்றிக்கொண்டிருக்கும்போது இந்தக் குழந்தைகளைத் தனியே விட்டுப் போவீர்களா?”

“நானும் போகிறேன்,” கேடி சொன்னாள். “அப்பா, நானும் வருகிறேன்.”

“அவர்களை என்ன செய்துவிடுவான்? அப்படி ஒரு துரதிர்ஷ்டம் அவனுக்கு வாய்க்குமா?” அப்பா சொன்னார்.

“நானும் போகிறேன்,” ஜேசன் சொன்னான்.

“ஜேசன்!” அம்மா  அழைத்தார். ஆனால் அவர் பேசிக்கொண்டிருந்தது என்னவோ அப்பாவோடு. அதை அந்தப் பெயரை அவர் உச்சரிக்கும் தொனியில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். நாள் முழுவதும் தனக்குப் பிடிக்காதவற்றைச் செய்யவேண்டும் என்று அப்பா திட்டமிடுவதாக நம்பினாள். கொஞ்ச நேரத்தில் அவரும் அதையேதான் நினைப்பார் என்பதும் அவளுக்குத் தெரியும். நான் அமைதியாக இருந்தேன். சரியான நேரத்தில் அம்மா நினைத்துவிட்டாரென்றால் நான் அவருடன் வீட்டில் இருக்க வேண்டியிருக்கும் என்பதை நானும் அப்பாவும் அறிந்திருந்தோம். அதனால் அப்பா என்னைப் பார்க்கவில்லை. நான்தான் மூத்தவன். எனக்கு ஒன்பது வயது. கேடிக்கு ஏழு. ஜேசனுக்கு ஐந்து.

“உளறாதே. சீக்கிரம் வந்துவிடுவோம்.”

நான்சி தொப்பியைத் தலைமீது வைத்திருந்தாள். அவளுடைய தெருவுக்கு வந்துவிட்டோம். “ஜீசஸ் என்னை நன்றாகத்தான் வைத்திருந்தான். அவனிடம் இரண்டு டாலர் இருந்தால் எனக்கு ஒன்றைத் தந்துவிடுவான்.” தெருவில் நடந்துகொண்டே இருந்தோம். “இந்தத் தெருவை மட்டும் கடந்துவிட்டால் போதும். நான் சரியாகிவிடுவேன்,” நான்சி சொன்னாள். 

தெரு எப்போதும் இருட்டாகவே இருக்கும். “ஹாலோவீன் போது ஜேசன் இந்த இடத்தில்தான் பயந்துபோனான்,” கேடி சொன்னாள். 

“நான் பயப்படவில்லை,” ஜேசன் சொன்னான்.

” ரேச்சல் அத்தையால் அவனை ஒன்றும் செய்யமுடியாதா?” அப்பா கேட்டார்.

ரேச்சல் அத்தை வயதானவர். நான்சியின் வீட்டுக்கு அடுத்து இருந்த அறையில் தனியாக வசித்துவந்தார். வெளுத்த தலைமுடியோடு கதவருகே உட்கார்ந்துகொண்டு நாள் முழுவதும் புகைபிடிப்பார். இப்பொழுதெல்லாம் வேலைக்குப் போவதில்லை. அவர்தான் ஜீசஸின் அம்மா என்று சொன்னார்கள். சில சமயங்களில் அது உண்மை என்றார். சில சமயங்களில் அவருக்கும் ஜீசஸுக்கும் எந்த உறவுமில்லை என்றார்.

“இல்லை, நீ பயந்துபோனாய். ஃப்ரோனியை விடவும் அதிகமாகப் பயந்துகொண்டாய். டீ. பி.-யை விடவும்கூட அதிகமாகப் பயந்துகொண்டாய். நீக்ரோக்களை விடவும்கூட.”

“அவனை யாரும் எதுவும் செய்யமுடியாது? அவனுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பிசாசைத் தட்டி எழுப்பிவிட்டேன் என்கிறான். ஆனால் அதை மறுபடியும் தூங்கச் செய்ய எதுவும் செய்யவில்லை என்கிறான்,” நான்சி சொன்னாள். 

“அவன்தான் போய்விட்டானே? நீ இப்போது எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. நீ மாத்திரம் வெள்ளைக்கார ஆண்களைச் சும்மா இருக்கவிட்டால் போதும்.”

“எந்த வெள்ளைக்கார ஆண்களைச் சும்மா இருக்கவிட வேண்டும்? எப்படி அதைச் செய்வது?” என்று கேட்டாள் கேடி.

“அவன் எங்கேயும் போகவில்லை. என்னால் அவன் இருப்பதை உணர முடிகிறது. இப்போது, இந்தத் தெருவில் இருப்பதை உணர முடிகிறது. நாம் பேசுவதை, சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டுக்கொண்டிருக்கிறான். இங்கே ஒளிந்துகொண்டு என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். என்னால் அவனைப் பார்க்க முடியவில்லை. இன்னும் ஒரேயொரு முறை மட்டும்தான் அவனைப் பார்ப்பேன். அவன் வாயில் வைத்திருக்கும் சின்னக் கத்தியோடு பார்ப்பேன். கயிறில் கட்டி தன்னுடைய முதுகில் சட்டைக்கடியில் தொங்கவிட்டிருக்கிறானே, அந்தக் கத்தியோடு. அப்போது நான் ஆச்சரியப்படக்கூட நேரம் இருக்காது,” நான்சி சொன்னாள்.

“நான் ஒன்றும் பயப்படவில்லை,” என்றான் ஜேசன்.

“நீ ஒழுங்காக இருந்திருந்தால் இந்தப் பிரச்சினையில் சிக்கிக்கொண்டிருக்க மாட்டாய்,” அப்பா சொன்னார். “இப்போதும் எதுவும் கெட்டுப்போய் விடவில்லை. அவன் செயிண்ட் லூயிஸில் இருக்கிறான். இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு உன்னைப் பற்றி மறந்து போயிருப்பான் என்று நினைக்கிறேன்.”

“ஒருவேளை அப்படிச் செய்திருந்தால் அது எனக்குத் தெரியாமல் இருப்பதுதான் அவனுக்கு நல்லது,” நான்சி சொன்னாள். “அவர்கள் தலைக்கு மேலே நின்று அவன் ஒவ்வொரு முறை அவளைக் கட்டியணைக்கும் போதும் அவனுடைய கையை வெட்டுவேன். அவன் தலையை வெட்டி அவளுடைய வயிறைக் கிழித்து அதற்குள் திணித்துவிடுவேன்.”

“ஷ்ஷ்…” என்றார் அப்பா. 

“யாருடைய வயிறைக் கிழிக்கவேண்டும் நான்சி?” என்றாள் கேடி.

“நான் ஒன்றும் பயப்படவில்லை. இந்தத் தெருவில் தனியாகவே நடந்துபோவேன்,” என்றான் ஜேசன்.

“ஓஹோ, நாங்கள் உன்னுடன் இல்லையென்றால் நீ இங்கே காலைக்கூட எடுத்து வைக்கமாட்டாய்,” என்றாள் கேடி. 

II

டில்சேவுக்கு இன்னமும் உடம்பு சரியாகவில்லை என்பதால் ஒவ்வொரு இரவும் நான்சியோடு துணைக்குப் போகவேண்டி இருந்தது. “இன்னும் எத்தனை நாளைக்கு இதைச் செய்யப் போகிறீர்கள்? என்னை வீட்டில் தனியாக இருக்கவைத்துவிட்டு அந்தப் பயந்துபோன நீக்ரோவை வீட்டில் கொண்டுபோய் விடப்போகிறீர்களா?” என்றார் அம்மா.

சமையலறையிலேயே நான்சி உறங்குவதற்குப் படுக்கை தயார்செய்தோம். ஓர் இரவு ஓசைகேட்டு எழுந்தோம். பாடுவது போலவும் இல்லாத அழுவது போலவும் இல்லாத அந்த ஓசை இருட்டான படியேறி மேலே வந்தது. அம்மாவின் அறையில் விளக்கு எரிந்தது. அப்பா கீழே இறங்கி வரவேற்பறைக்குப் போய் பின்னறைக்குப் போகும் ஓசை கேட்டது. நானும் கேடியும் வரவேற்பறைக்குப் போனோம். 

தரை சில்லென்று இருந்தது. ஒலிவரும் திசையில் காதுகொடுத்துக் கேட்கும்போது குளிர்தாங்காமல் கால் விரல்களை மடக்கிக்கொண்டோம். பாடுவது போலவும் இருந்தது, பாடுவது போலவும் இல்லை, கறுப்பினத்தவர்கள் பொதுவாக எழுப்பும் ஓசைபோல இருந்தது.

கொஞ்ச நேரத்தில் அது நின்றுபோனது. அப்பா படியிறங்கிக் கீழே போகும் சத்தம் கேட்டது. நாங்கள் பின்னாடியே போய் மேல்படியில் நின்றுகொண்டோம். படிக்கட்டுக்கருகில் அதிக ஓசையின்றி நான்சியின் குரல் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது. நான்சியின் கண்கள் படிக்கட்டின் பாதி வழியில் இருந்த சுவரைப் பார்த்து நிலைகுத்தி இருந்தன. சுவருக்கு முன்னால் நின்றபடி பார்க்கும் பெரிய பூனையின் கண்களைப் போல இருந்தன. நாங்கள் படியில் இறங்கி அவள் இருக்கும் இடத்தை அடைந்ததும் பாடுவதை நிறுத்திவிட்டாள். சமையலறையில் இருந்து கைத்துப்பாக்கியோடு அப்பா வரும் வரையில் அங்கேயே நின்றோம். அவரும் நான்சியும் மீண்டும் கீழே போய் நான்சியின் படுக்கையை எடுத்துவந்தார்கள்.

படுக்கையை எங்கள் அறையில் விரித்தோம். அம்மாவின் அறையில் விளக்கு அணைக்கப்பட்ட பிறகு மீண்டும் நான்சியின் கண்களைப் பார்க்க முடிந்தது. 

“நான்சி,” கேடி மெல்லிய குரலில் பேசினாள். “தூங்கிவிட்டாயா நான்சி?”

நான்சி பதிலுக்கு எதையோ முணுமுணுத்தாள். ஓ என்றோ இல்லை என்றோ சொன்னாள், எதுவென்று சரியாகத்  தெரியவில்லை. அந்த ஓசையை ஒருவரும் எழுப்பாததைப் போல இருந்தது. அது வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. நான்சியே அங்கு இல்லாததைப் போல இருந்தது. சூரியனைப் பார்த்துவிட்டுக் கண்ணை மூடிக்கொண்ட பிறகும் சூரியனே இல்லாதபோதும் நம் கண்ணுக்குள் அது தெரிவது போல, படியில் இருந்தபடியே நான்சியின் கண்களை நான் ஊன்றிப் பார்த்ததால் அவை என்னுடைய விழியின்மீது பதிந்து போயிருந்தன.  

“ஜீசஸ்,” நான்சி முணுமுணுத்தாள். “ஜீசஸ்.”

“வந்தது ஜீசஸா? சமையலறைக்குள் வர முயன்றானா?” கேடி கேட்டாள்.

“ஜீசஸ்,” என்றாள் நான்சி. இப்படிச் சொன்னாள்- ஜீஈஈஈஈஈஈஈஈஈஈசஸ், ஒலி மறைந்துபோகும் வரை. தீக்குச்சியோ மெழுகுவர்த்தியோ எரிந்து அணைவதுபோல.

“அவள் இன்னொரு ஜீசஸைச் சொல்கிறாள்,” என்றேன்.

“உன்னால் எங்களைப் பார்க்க முடிகிறதா நான்சி?” மெல்லிய குரலில் கேட்டாள் கேடி. “உன்னால் எங்களுடைய கண்களைப் பார்க்க முடிகிறதா?”

“நான் வெறும் நிக்கர்தானே? கடவுளுக்குத் தெரியும். கடவுளுக்குத் தெரியும்” நான்சி சொன்னாள்.

“கீழே சமையலறையில் என்ன பார்த்தாய்? உள்ளே நுழையப் பார்த்தது யார்?” மெல்லிய குரலில் கேட்டாள் கேடி. 

“கடவுளுக்குத் தெரியும். கடவுளுக்குத் தெரியும்” நான்சி சொன்னாள். எங்களால் அவளுடைய கண்ணைப் பார்க்க முடிந்தது.

டில்சேவின் உடல்நிலை சரியாகிவிட்டது. அவள் வந்து மதிய உணவைச் சமைத்தாள். “நீ இன்னும் ஓரிரு நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு வா,”என்றார் அப்பா. 

“எதற்காகவாம்?” என்றாள் டில்சே. “நான் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து வந்திருந்தால் இந்த இடம் பாழாகிப் போயிருக்கும். இந்த இடத்தைவிட்டு நகருங்கள். சமையலறையைச் சீர்செய்ய வேண்டும்.”

டில்சே இரவு உணவையும் தயாரித்தாள். அன்றிரவு இருட்டுவதற்கு முன்னர் நான்சி சமையலறைக்குள் நுழைந்தாள். 

“அவன் வந்துவிட்டான் என்று உனக்கு எப்படித் தெரியும்? நீ அவனைப் பார்த்தாயா?” டில்சே கேட்டாள்.

“ஜீசஸ் ஒரு நிக்கர்,” என்றான் ஜேசன். 

“என்னால் அவன் இருப்பதை உணரமுடிகிறது,” என்றாள் நான்சி. “அவன் அந்தப் பள்ளத்தில் ஒளிந்துகொண்டு இருப்பதை என்னால் உணரமுடிகிறது.”

“இன்றைக்கா?” கேட்டாள் டில்சே. “இப்போது அவன் இங்கே இருக்கிறானா?”

“டில்சேவும் நிக்கர்தான்,” என்றான் ஜேசன்.

“கொஞ்சம் ஏதாவது சாப்பிடு,” என்றாள் டில்சே.

“எதுவும் வேண்டாம்,” மறுத்தாள் நான்சி. 

“நான் நிக்கர் இல்லை,” என்றான் ஜேசன். 

“கொஞ்சம் காபி குடி,” என்றாள் டில்சே. நான்சிக்காகக் கோப்பையில் காப்பியை ஊற்றினாள். “இன்று இரவு இங்கே இருக்கிறான் என்று உனக்கு எப்படித் தெரியும்? இன்று இரவுதான் என்று எப்படித் தெரியும்?”

“எனக்குத் தெரியும்,” என்றாள் நான்சி. “அங்கே காத்துக்கொண்டு இருக்கிறான். எனக்குத் தெரியும். நான் அவனோடு நீண்ட காலம் வாழ்ந்திருக்கிறேன். தான் என்ன செய்யப்போகிறோம் என்பது அவனுக்குத் தெரிவதற்கு முன்னரே எனக்குத் தெரிந்துவிடும்.”

“கொஞ்சம் காபி குடி,” என்றாள் டில்சே. கோப்பையை வாய்க்கருகே கொண்டுசென்று அதனுள் ஊதினாள் நான்சி. அவள் வாய் ரப்பரால் ஆனதைப்போல இருந்தது. ஆட்டர் பாம்பின் தலையைப் போல உப்பி விரிந்தது. காபியை ஊதும்போது அவள் வாயில் இருந்த நிறத்தையெல்லாம் வெளியே ஊதித் தள்ளியதைப் போல இருந்தது.

“நான் ஒன்றும் நிக்கர் இல்லை,” என்றான் ஜேசன். “நீ நிக்கரா நான்சி?” என்றான் ஜேசன். 

“நான் நரகத்துக்குப் பிறந்த பிள்ளை,” என்றாள் நான்சி. “கூடிய சீக்கிரத்தில் இல்லாமல் போய்விடுவேன். நான் வந்த இடத்துக்கே சீக்கிரம் திரும்பிப் போய்விடுவேன்,” என்றாள்.

III

நான்சி காபியைக் குடிக்க ஆரம்பித்தாள். இரண்டு கைகளாலும் கோப்பையைப் பிடித்துக்கொண்டு காபியைக் குடிக்கும்போது மீண்டும் அந்த ஒலியை எழுப்பினாள். 

கோப்பைக்குள் அந்த ஒலியை எழுப்பியதால் உள்ளேயிருக்கும் காபி அவளுடைய கைகளிலும் ஆடையிலும் தெறித்தது. கைகளை கால்முட்டிக்குள் அண்டக்கொடுத்தபடி கோப்பையைப் பிடித்திருந்தாள். ஈரக் கோப்பையுடன் உட்கார்ந்துகொண்டு எங்களைப் பார்த்தபடியே அந்த ஒலியை எழுப்பினாள். 

“நான்சியைப் பாரேன். அவளால் இப்போது நமக்குச் சமைக்க முடியாது. டில்சேவுக்கு உடல்நிலை சரியாகிவிட்டது,” ஜேசன் சொன்னான். 

“பேசாமல் இரு,” என்றாள் டில்சே. இரண்டு கைகளாலும் கோப்பையைப் பிடித்துக்கொண்டு எங்களைப் பார்த்தபடியே அந்த ஒலியை எழுப்பினாள் நான்சி. இரண்டு நான்சிக்கள் இருப்பது போல இருந்தது. ஒருத்தி எங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாள், இன்னொருத்தி ஒலியை எழுப்பினாள்.

“திருவாளர் ஜேசனை காவல்நிலையத்துக்குத் தொலைபேசியில் அழைக்கச் சொன்னால் என்ன?” டில்சே சொன்னாள். தன் நீளமான பழுப்புநிறக் கைகளில் கோப்பையைப் பிடித்திருந்த நான்சி ஒலி எழுப்புவதை நிறுத்தினாள். மறுபடியும் காபியைக் குடிக்க முயன்றபோது கோப்பையில் இருந்து அவள் கைகளிலும் உடையின்மீதும் சிந்தியதால் கோப்பையைக் கீழே வைத்தாள். ஜேசன் அவளைப் பார்த்துக்கொண்டு இருந்தான். 

“என்னால் விழுங்க முடியவில்லை,” என்றாள் நான்சி. “விழுங்க முயல்கிறேன், ஆனால் உள்ளே இறங்க மாட்டேன் என்கிறது.”

“நீ வீட்டுக்குப் போ. ஃபிரோனி படுக்கை விரித்துக்கொடுப்பான். நானும் சீக்கிரம் வந்துவிடுகிறேன்,” என்றாள் டில்சே.

“எந்த நிக்கராலும் அவனை நிறுத்தமுடியாது,” என்றாள் நான்சி. 

“நான் ஒன்றும் நிக்கர் இல்லை,” என்றான் ஜேசன். “சரிதானே டில்சே?”

“நிச்சயம் இல்லை,” என்றபடி டில்சே நான்சியைப் பார்த்தாள். “எனக்கு அப்படித் தோன்றவில்லை, நான்சி. இப்போது என்ன செய்யப்போகிறாய்?”

நான்சி எங்களைப் பார்த்தாள். பார்ப்பதற்கு அதிக நேரமில்லை என்பதுபோல அவள் கண்கள் வேகமாக நகர்ந்தன. கொஞ்சமும் அசையாமல் எங்கள் மூவரையும் ஒருசேரப் பார்த்தாள். “உங்கள் அறையில் ஒரு நாள் படுத்துக்கொண்டேனே, ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டாள். “மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்து விளையாடினோமே?” என்றாள். அப்பா எழுந்துவந்து காலையுணவு சாப்பிடும் வரையிலும் அவளுடைய படுக்கையின்மீது அமைதியாக விளையாடினோம். “அம்மாவிடம் போய் இன்று இரவு நான் இங்கே தங்கிக்கொள்ளலாமா என்று கேளுங்கள். எனக்கு படுக்கை தேவையில்லை. நாம் இன்னும் கொஞ்சம் விளையாடலாம்,” என்றாள் நான்சி. 

கேடி அம்மாவிடம் கேட்டாள். ஜேசனும் அவளுடன் போனான். “என்னுடைய படுக்கையறைகளில் நீக்ரோக்களை உறங்கவிட மாட்டேன்,” என்றார் அம்மா. ஜேசன் அழுதான். 

அழுகையை நிறுத்தவில்லை என்றால் இனி மூன்று நாட்களுக்கு இனிப்புகள் எதையும் அவன் சாப்பிட முடியாது என்று அம்மா சொல்லும்வரை அழுதான். பிறகு, டில்சே சாக்லேட் கேக் செய்துகொடுத்தால் அழுகையை நிறுத்துகிறேன் என்றான். அப்பாவும் அங்கே இருந்தார். 

“நீங்கள் ஏதாவது செய்யுங்களேன்,” என்றார் அம்மா. “அதற்குத்தானே காவல் அதிகாரிகள் இருக்கிறார்கள்?”

“நான்சி ஏன் ஜீசஸைப் பார்த்துப் பயப்படுகிறாள்? உங்களுக்கு அப்பாவைப் பார்த்தால் பயமா?” என்றான் ஜேசன்.

“அதிகாரிகள் என்ன செய்ய முடியும்? நான்சியே அவனைப் பார்க்கவில்லை என்றால் அவர்களால் எப்படிப் பார்க்க முடியும்?” என்றார் அப்பா. 

“அப்புறம் ஏன் பயப்படுகிறாள்?” அம்மா கேட்டார். 

“அவன் இங்கேதான் இருக்கிறான் என்கிறாள். இன்று இரவு நிச்சயம் இங்கே இருப்பான் என்கிறாள்.” 

“நாம்தானே வரி கட்டுகிறோம்? நீங்கள் அந்த நீக்ரோ பெண்ணை அவள் வீட்டுக்கு அழைத்துப் போகும் நேரத்தில் நான் இந்தப் பெரிய வீட்டில் தனியாக இருக்க வேண்டுமா?” அம்மா கேட்டார்.

“நான் கத்தியைக் கையில் வைத்துக்கொண்டு வெளியே படுத்துக் கிடக்கவில்லை என்பது உனக்குத் தெரியுமல்லவா?” என்றார் அப்பா.

“டில்சேவை சாக்லேட் கேக் செய்துகொடுக்கச் சொன்னால் அழுகையை நிறுத்துகிறேன்,” என்றான் ஜேசன். அம்மா எங்களை வெளியே போகச் சொன்னார். ஜேசனுக்கு சாக்லேட் கேக் கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியாது என்றாலும் இன்னும் ஒரு நிமிடத்தில் அவனுக்கு வேறு என்ன கிடைக்கப் போகிறது என்பது நிச்சயமாகக் தெரியும் என்று அப்பா சொன்னார். நாங்கள் சமையலறைக்குப் போய் நான்சியிடம் சொன்னோம். 

“அப்பா வீட்டுக்குப் போய் கதவைத் தாழ் போட்டுக்கொண்டால் நீ பத்திரமாக இருப்பாய் என்று சொல்லச் சொன்னார்,” கேடி சொன்னாள். “எதில் இருந்து பத்திரமாக இருப்பாய் நான்சி? ஜீசஸ் உன்மீது கோபமாக இருக்கிறானா?”

நான்சி மீண்டும் காபிக் கோப்பையைக் கையில் வைத்திருந்தாள். கைகளைக் காலின்மீது வைத்திருந்தாள். கோப்பையைக் கால்முட்டிக்கு நடுவே பிடித்திருந்தாள். கோப்பைக்குள் பார்த்துக்கொண்டிருந்தாள். “ஜீசஸுக்குக் கோபம் வரும் அளவுக்கு என்ன செய்தாய்?” என்றாள் கேடி. நான்சி கோப்பையைக் கைதவறவிட்டாள். அது தரையில் விழுந்தாலும் உடையவில்லை. காபி தரையில் சிந்தியது. நான்சி உட்கார்ந்தபடியே இருந்தாள். அவளுடைய கைகள் கோப்பையின் உருவத்தைக் காட்டியபடி இருந்தன. மீண்டும் அந்த ஒலியை மெலிதாக எழுப்ப ஆரம்பித்தாள். பாடுவது போலவும் இல்லை, பாடாதது போலவும் இல்லை. நாங்கள் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

“இங்கே பார்,” என்றாள் டில்சே. “அதை முதலில் நிறுத்து. அமைதியாக இரு. வெர்ஷேவை உன்னுடன் வீடுவரை துணைக்கு வரச்சொல்கிறேன்,” என்றபடி டில்சே வெளியே போனாள்.

நாங்கள் நான்சியைப் பார்த்தோம். அவளுடைய தோள் நடுங்கிக்கொண்டு இருந்தது, ஆனால் ஒலி எழுப்புவதை நிறுத்திவிட்டாள். நாங்கள் அவளையே கவனித்துக்கொண்டிருந்தோம். “ஜீசஸ் உன்னை என்ன செய்யப்போகிறான்?” என்று கேட்டாள் கேடி. “அவன்தான் போய்விட்டானே!”

நான்சி எங்களைப் பார்த்தாள். “நான் உங்கள் அறையில் தங்கி இருந்தபோது குதூகலமாக இருந்தோம் அல்லவா?”

“எனக்கு அப்படியில்லை,” என்றான் ஜேசன். “நான் ஒன்றும் குதூகலமாக இல்லை.”

“நீ அம்மாவின் அறையில் தூங்கிக்கொண்டு இருந்தாய்,” என்றாள் கேடி. “அப்போது அங்கே நீ இல்லை.”

“என்னுடைய வீட்டுக்குப்போய் அங்கே இன்னும் கொஞ்ச நேரம் குதூகலமாக இருக்கலாம்,” என்றாள் நான்சி. 

“அம்மா விடமாட்டார்கள்,” என்றேன் நான். “நேரமாகிவிட்டது.”

“அம்மாவைத் தொந்தரவு செய்யவேண்டாம்,” என்றாள் நான்சி. “அவரிடம் காலையில் சொல்லிக்கொள்ளலாம். ஒன்றும் சொல்லமாட்டார்.”

“எங்களை அனுப்பமாட்டார்,” என்றேன். 

“இப்போது அவரைக் கேட்க வேண்டாம். அவரைத் தொந்தரவு செய்யவேண்டாம்,” என்றாள் நான்சி.

“நாம் போகக்கூடாது என்று அவர் சொல்லவில்லையே,” என்றாள் கேடி. 

“நாம் அவரைக் கேட்கவே இல்லையே,” என்றேன். 

“நீங்கள் போனீர்கள் என்றால் அவரிடம் சொல்லிவிடுவேன்,” என்றான் ஜேசன். 

“நாம் குதூகலமாக இருப்போம். யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள். என் வீட்டுக்குத்தான் போகிறோம். நான் உங்கள் வீட்டில் நிறைய காலமாக வேலை செய்துவருகிறேன். அதனால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.”

“எனக்கொன்றும் பயமில்லை. ஜேசன் ஒரு பயந்தாங்கொள்ளி. அவன் சொல்லிவிடுவான்,” என்றாள் கேடி. 

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை,” என்றான் ஜேசன்.

“ஆமாம், நீ பயந்தாங்கொள்ளி. நீ சொல்லிவிடுவாய்,” என்றாள் கேடி.

“நான் சொல்ல மாட்டேன். எனக்குப் பயமில்லை,” ஜேசன் சொன்னான். 

“என்னோடு வருவதற்கு ஜேசன் பயப்பட மாட்டான். பயமாக இருக்கிறதா, ஜேசன்?” நான்சி கேட்டாள்.

“ஜேசன் சொல்லிவிடுவான்,” என்றாள் கேடி. தெரு இருட்டாக இருந்தது. 

மேய்ச்சல் நிலத்தின் கதவைத் தாண்டிப் போனோம். “அந்தக் கதவுக்குப் பின்னால் இருந்து ஏதாவது எகிறிக் குதித்து வந்தால் ஜேசன் பயத்தில் அலறுவான்.”

“அப்படிச் செய்யமாட்டேன்,” என்றான் ஜேசன். தெருவழியே நடந்துகொண்டிருந்தோம். 

நான்சி உரத்த குரலில் பேசிக்கொண்டு இருந்தாள்.

“எதற்காக இவ்வளவு சத்தமாகப் பேசுகிறாய், நான்சி?” கேட்டாள் கேடி. 

“யார், நானா? குவெண்டின், கேடி, ஜேசன் எல்லோரும் பேசுவதைக் கேட்டபிறகு நான் உரக்கப் பேசுகிறேனா என்று சொல்,” நான்சி பதில் சொன்னாள்.

“என்னவோ ஐந்து பேர் இருப்பதைப் போலப் பேசுகிறாய். நம்முடன் அப்பாவும் இங்கே இருப்பது போலப் பேசுகிறாய்,” என்றாள் கேடி. 

“யார்? நானா உரக்கப் பேசுகிறேன், திருவாளர் ஜேசன்?” என்றாள் நான்சி. 

“நான்சி ஜேசனைத் திருவாளர் என்கிறாள் பாரேன்,” கேடி சொன்னாள்.

“கேடியும் குவெண்டினும் ஜேசனும் பேசுவதைக் கேளுங்கள்,” என்றாள் நான்சி.

“நாங்கள் யாரும் சத்தமாகப் பேசவில்லை. நீதான் அப்பாவைப் போலப் பேசுகிறாய்,” கேடி சொன்னாள்.

“ஷ்ஷ்ஷ்ஷ்….” என்றாள் நான்சி. “திருவாளர் ஜேசன்…ஷ்ஷ்ஷ்ஷ்…”

“மறுபடியும் ஜேசனைத் திருவாளர் என்கிறாள் பாரேன்.”

“ஷ்ஷ்ஷ்..” பள்ளத்தைத் தாண்டி அவள் தலையில் துணிமூட்டையைச் சுமந்துகொண்டு போகும்போது கீழே குனிந்து நுழையும் வேலிக்குக் கீழே இப்போது குனிந்து நடந்தோம். அவளுடைய வீட்டை நெருங்கும்போது வேகவேகமாக நடந்தோம். கதவைத் திறந்தாள். வீடு விளக்கைப் போன்ற வாசம் வீசியது. நான்சி விளக்கின் திரியைப் போல வாசம் வீசினாள். இருவரும் அடுத்தவரின் வாசத்துக்காகக் காத்திருந்தது போலத் தோன்றியது. விளக்கை ஏற்றிக் கதவைச் சாத்தி சட்டத்தைப் பொருத்தினாள். பிறகு உரத்த குரலில் பேசுவதை நிறுத்துவிட்டு எங்களைப் பார்த்தாள்.

“என்ன செய்யப் போகிறோம்?” கேடி கேட்டாள்.

“என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள்,” நான்சி சொன்னாள்.

“நாம் குதூகலமாக இருக்கலாம் என்று நீங்கள் சொன்னீர்களே,” என்றாள் கேடி. 

நான்சியின் வீட்டில் ஏதோ வித்தியாசமாக இருந்தது. நான்சியையும் வீட்டையும் தவிர வேறு ஏதோ ஒன்றின் வாசமும் வீசியது. ஜேசனாலும் அதை உணர முடிந்தது. “எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை. வீட்டுக்குப் போகவேண்டும்,” என்றான். 

“அப்படியென்றால் வீட்டுக்குப் போ,” என்றாள் கேடி. 

“தனியே போகமாட்டேன்,” என்றான் ஜேசன். 

“நாங்கள் இப்போது விளையாடப் போகிறோம்,” என்றாள் நான்சி.

“எப்படி?’ என்றாள் கேடி.

நான்சி கதவருகே நின்றுகொண்டிருந்தாள். எங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாள் என்றாலும் கண்கள் வெறுமையாக இருந்தன, அவள் அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டது போல இருந்தது. “உங்களுக்கு என்ன பிடிக்குமென்று சொல்லுங்கள்.”

“கதை சொல்லு,” என்றாள் கேடி. “உனக்குக் கதைசொல்லத் தெரியுமா?”

“தெரியும்,” என்றாள் நான்சி. 

“சொல்லு,” என்றாள் கேடி. நாங்கள் நான்சியைப் பார்த்தோம். “உனக்குக் கதையே தெரியாது.”

“தெரியும், எனக்குத் தெரியும்,” என்றாள் நான்சி.

கணப்படுப்பின் முன்னால் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். நெருப்பு சிறியதாக எரிந்துகொண்டிருந்தது. உள்ளே ஏற்கனவே வெப்பமாக இருந்தது என்றாலும் அடுப்பையும் பற்ற வைத்திருந்தாள். அதை நன்றாக எரியச் செய்தாள். கதையைச் சொல்ல ஆரம்பித்தாள். அவள் பேசும்போது அவளுடைய கண்கள் எங்களைப் பார்ப்பது போலவும் கவனிப்பது போலவும் இருந்தது. ஆனால் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தது அவளுடைய குரல் அல்ல. அவள் வேறு எங்கோ உயிர் வாழ்வதைப் போலவும் வேறு எதற்கோ காத்திருப்பதைப் போலவும் இருந்தது. அவள் தன்னுடைய அறைக்கு வெளியே இருந்தாள். நான்சியின் குரலும் தலைமீது சுமக்கும் துணி மூட்டை ஒரு பலூனைப் போல இலேசாக இருப்பது போன்ற பாவனையோடு முள்வேலிக்கு அடியில் குனிந்து நுழையும் அவளின் உருவமும் உள்ளே இருந்தன. அவ்வளவுதான். “ஆக ராணி அந்தக் கெட்டவன் ஒளிந்துகொண்டிருக்கும் பள்ளதுக்கு அருகே வந்தாள். பள்ளதுக்குள் நடந்து சென்றாள். ‘இந்தப் பள்ளத்தை மாத்திரம் கடந்துவிட்டால் போதும்’…என்றாள்.”

“எந்தப் பள்ளம்?” என்றாள் கேடி. “அங்கே இருக்குமே அதைப் போன்ற பள்ளமா? ராணி ஏன் பள்ளத்துக்குள் இறங்க வேண்டும் என்று நினைத்தாள்?”

“அவளுடைய வீட்டுக்குப் போவதற்காக,” என்றபடி நான்சி எங்களைப் பார்த்தாள். “அந்த பள்ளத்தைத் தாண்டினால்தான் வீட்டுக்குச் சீக்கிரமாகப் போய் கதவை மூடி சட்டத்தைப் பொருத்த முடியும்.”

“எதற்காக வீட்டுக்குப் போய் கதவை மூடி சட்டத்தைப் பொருத்த வேண்டும் என்று நினைத்தாள்?’ கேடி கேட்டாள்.

IV 

நான்சி எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பேசுவதை நிறுத்திவிட்டாள். எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

நான்சியின் மடியில் உட்கார்ந்திருந்த ஜேசனின் கால்கள் கால்சட்டைக்கு உள்ளிருந்து வெளியே துருத்திக்கொண்டு இருந்தன. “கதை நன்றாகவே இல்லை. நான் வீட்டுக்குப் போகவேண்டும்,” என்றான்.

“ஆமாம், நாம் கிளம்பலாம். வீட்டில் எங்களைத் தேடிக்கொண்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன்,” என்றபடியே தரையில் இருந்து எழுந்து கதவருகே போனாள் கேடி. 

“வேண்டாம், அதைத் திறக்காதே,” என்றாள் நான்சி. வேகமாக எழுந்திருந்து கேடியைத் தாண்டி கதவருகே போனாள். ஆனால் கதவையோ சட்டத்தையோ தொடவில்லை. 

“ஏன் கூடாது?” கேட்டாள் கேடி. 

“விளக்குக்கு அருகே வந்து உட்கார். இன்னும் கொஞ்ச நேரம் குதூகலமாக இருக்கலாம். இப்போது கிளம்ப வேண்டாம்,” என்றாள் நான்சி. 

“நாங்கள் கிளம்புகிறோம். இதைவிட அதிகக் குதூகலமாக எதையாவது செய்தால்தான் இங்கே இருக்க முடியும்.” கேடியும் நான்சியும் இப்போது விளக்கும் நெருப்பும் இருக்கும் இடத்துக்கு வந்தார்கள். 

“எனக்கு வீட்டுக்குப் போக வேண்டும். நான் போய் எல்லாவற்றையும் சொல்லுவேன்,” என்றான் ஜேசன். 

“எனக்கு இன்னொரு கதை தெரியும்,” என்றாள் நான்சி. விளக்குக்கு அருகில் நின்றுகொண்டாள். மூக்கின்மீது நிற்க வைத்திருக்கும் குச்சியை நழுவவிடாமல் பார்த்துக்கொண்டே இருப்பதைப் போல நிலைகுத்தி இருந்தன அவளுடைய கண்கள். கேடியைப் பார்க்கக் கீழே குனிய வேண்டியிருந்தது என்றாலும் அவள் கண்கள் குச்சியைப் பார்ப்பது போல இருந்தன. 

“நான் கதை கேட்க மாட்டேன். தரையைத் தட்டி ஓசை எழுப்பப் போகிறேன்,” என்றான் ஜேசன். 

“இது நல்ல கதை. முதலில் சொன்னதைவிடவும் சுவாரசியமாக இருக்கும்,” என்றாள் நான்சி. 

“எதைப் பற்றியது?” கேட்டாள் கேடி. விளக்குக்கு அருகே நின்றுகொண்டிருந்தாள் நான்சி. அவள் கை விளக்கின்மீது இருந்தது. வெளிச்சம்பட்டு நீளமாக பழுப்பு நிறத்தில் ஒளிர்ந்தது.

“கையை அந்தச் சூடான உருண்டையின்மீது வைத்திருக்கிறாயே, சுடவில்லையா?” கேட்டாள் கேடி. 

விளக்கின் புகைபோக்கியின்மீது இருந்த தன் கையைப் பார்த்தாள் நான்சி. அதை மெதுவாக பின்னே இழுத்துக்கொண்டாள். அங்கேயே நின்றபடி கேடியைப் பார்த்துக்கொண்டே கையைத் திருகியதைப் பார்த்தால் அது மணிக்கட்டோடு கயிறால் பிணைத்ததுபோல இருந்தது.  

“நாம் வேறு ஏதாவது செய்யலாம்,” என்றாள் கேடி. 

“எனக்கு வீட்டுக்குப் போகவேண்டும்,” என்றான் ஜேசன். 

“என்னிடம் கொஞ்சம் பாப்கார்ன் இருக்கிறது,” என்றாள் நான்சி. கேடியைப் பார்த்தாள், பிறகு ஜேசனைப் பார்த்தாள், கடைசியில் என்னைப் பார்த்தாள். மீண்டும் கேடியைப் பார்த்தாள். 

“என்னிடம் கொஞ்சம் பாப்கார்ன் இருக்கிறது.” 

“எனக்குப் பாப்கார்ன் பிடிக்காது,” என்றான் ஜேசன். “மிட்டாய் வேண்டும்.”

நான்சி ஜேசனைப் பார்த்தாள். “பாப்கார்ன் செய்யும் சாதனத்தை நீ பிடித்துக்கொள்ளலாம்.” இன்னமும் தன் மணிக்கட்டைத் திருகிக்கொண்டு இருந்தாள். அது நீளமாக பழுப்பு நிறத்தில் தளர்ந்துபோய் இருந்தது. 

“சரி, அப்படி என்றால் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கிறேன். கேடி பிடித்துக்கொள்ளக் கூடாது. கேடி பிடித்துக்கொண்டால் நான் வீட்டுக்குப் போய்விடுவேன்,” என்றான் ஜேசன்.

நான்சி தீயை எரியவிட்டாள். “நான்சி நெருப்புக்குள் கையை விடுகிறாள் பார்,” என்றாள் கேடி. “உனக்கு என்ன ஆயிற்று நான்சி?”

“என்னிடம் பாப்கார்ன் இருக்கிறது,” என்றாள் நான்சி. “கொஞ்சம்போல இருக்கிறது.” கட்டிலுக்கு அடியில் இருந்து பாப்கார்ன் செய்யும் சாதனத்தை எடுத்தாள். அது உடைந்து போயிருந்தது. ஜேசன் அழத்துவங்கினான்.

“நாம் பாப்கார்ன் சாப்பிட முடியாது,” என்றான்.

“நாங்கள் இப்போது வீட்டுக்குப் போகவேண்டும்,” என்றாள் கேடி. “வா குவெண்டின்.”

“இருங்கள்,” என்றாள் நான்சி. “இருங்கள். இதைச் சரிசெய்து விடலாம். இதைச் சரிசெய்ய எனக்கு உதவி செய்வீர்கள்தானே?”

“எனக்கு எதுவும் வேண்டாம். நேரம் வேறு ஆகிவிட்டது,” என்றாள் கேடி.

“நீ எனக்கு உதவிசெய்யேன் ஜேசன். எனக்கு உதவி செய்வாய்தானே?”

“இல்லை, எனக்கு வீட்டுக்குப் போகவேண்டும்.”

“ஷ்ஷ்..” என்றாள் நான்சி. “ஷ்ஷ்.. கவனியுங்கள். என்னைக் கவனியுங்கள். நான் அதைச் சரிசெய்யப் போகிறேன். அப்புறம் ஜேசன் பாப்கார்ன் வெடிக்கும்போது அதைப் பிடித்துக்கொள்வான்.” துண்டு வயர் ஒன்றை எடுத்து பாப்கார்ன் செய்யும் சாதனத்தைச் சரி செய்தாள்.

“அது நிற்காது,” என்றாள் கேடி. 

“நிற்கும். நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள். சோளத்தை உதிர்க்கக் கொஞ்சம் உதவுங்கள்.”

சோளமும் கட்டிலுக்கு அடியில் இருந்தது. அதை உதிர்த்து பாப்கார்ன் செய்யும் சாதனத்துக்குள் போட்டோம். அடுப்புக்கு மேலே ஜேசன் அதைப் பிடித்துக்கொள்ள உதவினாள் நான்சி. 

“அது வெடிக்கவே இல்லை. எனக்கு வீட்டுக்குப் போகவேண்டும்,” என்றான் ஜேசன்.

“கொஞ்சம் பொறு. வெடிக்க ஆரம்பிக்கும். அப்புறம் வேடிக்கையாக இருக்கும்.” நான்சி நெருப்புக்கு அருகில் உட்கார்ந்திருந்தாள். விளக்கு பெரிதாக எரிந்ததால் புகை படிய ஆரம்பித்தது.

“கொஞ்சம் சின்னதாக எரியவிடு,” என்றேன். 

“பரவாயில்லை, இருக்கட்டும். பிறகு துடைத்துக்கொள்கிறேன். கொஞ்ச நேரத்தில் சோளம் வெடிக்க ஆரம்பித்துவிடும்.”

“வெடிக்காது என்று தோன்றுகிறது. நாங்கள் வீட்டுக்குக் கிளம்ப வேண்டும். கவலைப்படுவார்கள்,” என்றாள் கேடி.

“இல்லை, இப்போது வெடிக்கும் பாரேன். நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள் என்று டில்சே சொல்லிவிடுவாள். நான் உங்கள் வீட்டில் நிறைய நாள் வேலை செய்திருக்கிறேன். அதனால் என் வீட்டில் இருந்தால் ஒன்றும் சொல்லமாட்டார்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இப்போது வெடிக்கத் தொடங்கும் பாருங்கள்.”

அதற்குள் ஜேசனின் கண்ணுக்குள் புகை புகுந்ததால் அழத்துவங்கினான். சாதனத்தை நெருப்புக்குள் போட்டுவிட்டான். ஈரத்துணி ஒன்றை எடுத்து ஜேசனின் முகத்தைத் துடைத்துவிட்டாள் நான்சி. ஆனால் அவன் அழுகையை நிறுத்தவில்லை. 

“ஷ்ஷ்…” என்றாள். “ஷ்ஷ்.” ஆனால் ஜேசன் நிறுத்தவில்லை. கேடி சாதனத்தை நெருப்புக்குள் இருந்து வெளியே எடுத்தாள். 

“எல்லாம் கருகிப்போய்விட்டது. “இன்னும் கொஞ்சம் சோளம் வேண்டும், நான்சி,” என்றாள்.

“எல்லாவற்றையும் உள்ளே போட்டுவிட்டாயா?” எனக் கேட்டாள் நான்சி. 

“ஆமாம்,” என்றாள் கேடி. நான்சி கேடியைப் பார்த்தாள். சாதனத்தை வாங்கி அதைத் திறந்து உள்ளே கருகிப் போயிருந்ததை மேலங்கியில் கொட்டி நீளமான பழுப்பு விரல்களால் அவள் பொறுக்குவதைப் பார்த்தோம். 

“வேறு இல்லையா?” கேடி கேட்டாள். 

“இருக்கிறது. இங்கே பார், இதெல்லாம் கருகவில்லை. இப்போது என்ன செய்ய வேண்டுமென்றால்….” 

“வீட்டுக்குப் போக வேண்டும். நான் எல்லாவற்றையும் சொல்லப் போகிறேன்,” ஜேசன் அழத் துவங்கினான்.

“ஷ்ஷ்ஷ்…” என்றாள் கேடி. எல்லோரும் உன்னிப்பாகக் கேட்க ஆரம்பித்தோம். நான்சியின் தலை சட்டம் பொருத்தப்பட்ட கதவை நோக்கித் திரும்பி இருந்தது. விளக்கின் சிவந்த ஒளி அவள் கண்களை நிறைத்தது. 

“யாரோ வருகிறார்கள்,” என்றாள் கேடி. 

நான்சி மீண்டும் அந்த ஒலியை மெலிதாக எழுப்ப ஆரம்பித்தாள். நெருப்பின் முன்னால் அமர்ந்திருந்தவளின் நீளமான கைகள் முட்டிக்கு நடுவே தொங்கின. திடீரென நீர் அருவிபோல அவள் முகத்தில் இருந்து வழிந்து பெரிய துளிகளாகத் தரையில் விழத் துவங்கியது. ஒவ்வொரு துளியிலும் தீப்பொறி போல நெருப்பின் ஒளி சுற்றிச்சுழன்று பின் தரையில் விழுந்தது. “அவள் அழவில்லை,” என்றேன் நான். 

“நான் ஒன்றும் அழவில்லையே,” என்றாள் நான்சி. அவள் கண்கள் மூடியிருந்தன. “நான் ஒன்றும் அழவில்லையே, யாரது?”

“தெரியவில்லையே,” என்றபடி கதவருகே சென்ற கேடி வெளியே பார்த்தாள். “நாம் இப்போது கிளம்பியாக வேண்டும். அப்பா வந்திருக்கிறார்.”

“நான் சொல்லப்போகிறேன். நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் என்னை இங்கே அழைத்து வந்தீர்கள்,” என்றான் ஜேசன். 

நான்சியின் முகத்தில் இன்னும் நீர் வழிந்துகொண்டிருந்தது. நாற்காலியில் உட்கார்ந்தபடியே திரும்பினாள். “நான் சொல்வதைக் கேளுங்கள், அவரிடம் சொல்லுங்கள். நாம் குதூகலமாக விளையாடப் போவதாக அவரிடம் சொல்லுங்கள். காலை வரையிலும் நான் உங்களை நன்றாகப் பார்த்துக்கொள்வேன் என்று சொல்லுங்கள். நான் உங்களுடன் வீட்டுக்கு வந்து உங்களுடன் அறையில் தரையில் படுத்துத் தூங்க வேண்டும் என்று சொல்லுங்கள். எனக்குப் படுக்கைகூடத் தேவையில்லை என்று சொல்லுங்கள். நாம் சந்தோஷமாக விளையாடலாம். போன முறை நாம் எவ்வளவு குதூகலமாக விளையாடினோம் என்று சொல்லுங்கள்.”

“நான் ஒன்றும் குதூகலமாக விளையாடவில்லை,” என்றான் ஜேசன். “நீ என்னை நன்றாகப் பார்த்துக்கொள்ளவில்லை. நீ என் கண்ணுக்குள் புகை நுழையச் செய்தாய். அதைச் சொல்லப்போகிறேன்.”

V

அப்பா உள்ளே வந்தார். எங்கள் எல்லோரையும் பார்த்தார். நான்சி எழுந்திருக்கவில்லை. 

“அவரிடம் சொல்லுங்கள்,” என்றாள் நான்சி. 

“கேடிதான் இங்கே போகலாம் என்று அழைத்துவந்தாள். நான் வேண்டாம் என்று சொன்னேன்,” என்றான் ஜேசன். 

அப்பா நெருப்பின் அருகே வந்தார். நான்சி நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். “நீ ரேச்சல் அத்தையின் வீட்டில் தங்க முடியாதா?” நான்சி முட்டிக்குள் கைகளை இடுக்கிக்கொண்டு நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள். “அவன் இங்கே இல்லை,” என்றார் அப்பா. ” இருந்திருந்தால் நான் பார்த்திருப்பேன். ஒரு ஈயோ காக்கையோகூட என் பார்வையில் படவில்லை.”

“அவன் அந்தப் பள்ளத்துக்குள் இருக்கிறான்,” என்றாள் நான்சி. “அங்கே இருக்கிறதே, அந்தப் பள்ளத்துக்குள் ஒளிந்துகொண்டு இருக்கிறான்.”

“வெறும் உளறல். அவன் அங்கே இருக்கிறான் என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்றபடி நான்சியைப் பார்த்தார். 

“குறியீடு தெரிந்தது,” என்றாள் நான்சி. 

“என்ன குறியீடு?”

“எனக்குத் தெரிந்தது. நான் உள்ளே வரும்போது மேசையில் இருந்தது. இரத்தம் படிந்த தசை ஒட்டியிருந்த பன்றியின் எலும்புத்துண்டு விளக்கின் அருகே இருந்தது. அவன் வெளியில் இருக்கிறான். நீங்கள் எல்லோரும் போன பிறகு, நானும் போய்விடுவேன்.”

“எங்கே போவாய் நான்சி?” கேடி கேட்டாள். 

“நான் ஒன்றும் கோள்சொல்லி இல்லை,” என்றான் ஜேசன். 

“வெறும் உளறல்,” என்றார் அப்பா. 

“அவன் வெளியில் இருக்கிறான். இந்த நிமிடம் ஜன்னலின் வழியே பார்த்தபடி நீங்கள் எல்லோரும் கிளம்பிப் போவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறான். அப்புறம் நானும் போய்விடுவேன்.”

“உளறாதே. வீட்டைப் பூட்டு. உன்னை ரேச்சல் அத்தையின் வீட்டில் கொண்டுபோய் விடுகிறோம்,” அப்பா சொன்னார்.

“அதனால் எந்தப் பயனும் இல்லை,” என்றாள் நான்சி. அவள் அப்பாவைப் பார்க்கவில்லை. ஆனால் அப்பா குனிந்து அவளையும் நீண்டு மெலிந்து தளர்ந்த அவள் விரல்களையும் பார்த்தார். “ஒத்திப்போடுவதால் எந்தப் பயனும் இல்லை.”

“வேறு என்ன செய்யலாம் என்று நினைக்கிறாய்?” அப்பா கேட்டார்.

“எனக்குத் தெரியவில்லை,” என்றாள். “என்னால் எதுவும் செய்யமுடியாது. ஒத்திப் போடத்தான் முடியும். ஆனால் அதனால் எந்தப் பயனும் இல்லை. அதுதான் எனக்கானது என்று தோன்றுகிறது. எனக்கு எது கிடைக்க வேண்டுமோ அது நடந்தே தீரும் என்று நினைக்கிறேன்.”

“என்ன கிடைக்கும்? எது உன்னுடையது?” கேடி கேட்டாள்.

“ஒன்றுமில்லை. நீங்கள் எல்லோரும் தூங்கப் போகவேண்டும்,” என்றார் அப்பா. 

“கேடிதான் என்னை அழைத்துவந்தாள்,” என்றான் ஜேசன். 

“நீ ரேச்சல் அத்தையின் வீட்டுக்குப் போ,” என்றார் அப்பா. 

“அதனால் எந்தப் பயனும் இல்லை.” முட்டியின்மீது முழங்கையையும் கால்களுக்கு நடுவே நீண்ட கைகளையும் வைத்தபடி நெருப்புக்கு முன்னால் உட்கார்ந்திருந்தாள் நான்சி. “என்னுடைய சமையலறையே எனக்கு உதவியாக இல்லாதபோது என்ன செய்ய? உங்கள் குழந்தைகளுடன் அவர்களின் அறையில் படுத்து உறங்கினாலும்கூட விடியும்போது அங்கே இரத்தத்தில் கிடப்பேன்.”

“ஷ்ஷ்… கதவைப் பூட்டிக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டுத் தூங்கு,” அப்பா சொன்னார்.

“இருட்டைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. இருட்டில் அது நடந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.”

“அதற்காக விளக்கை எரியவிட்டுக்கொண்டு இங்கேயே உட்கார்ந்திருக்கப் போகிறேன் என்கிறாயா?” நெருப்புக்கு முன்னால் கால்களுக்கு நடுவே நீளமான கைகளை அணைகொடுத்தபடி உட்கார்ந்திருந்த நான்சி மீண்டும் அந்த ஒலியை எழுப்பத் தொடங்கினாள். 

“நாசமாய்ப் போனது!” என்றார் அப்பா. “வாங்க குழந்தைகளே, தூங்கும் நேரமாகிறது.”

“நீங்கள் எல்லோரும் வீட்டுக்குப் போனதும், நானும் போய்விடுவேன்.” நான்சி இப்போது அமைதியாகப் பேசினாள். அவளுடைய முகமும் கைகளைப் போலவே அமைதியாக இருந்தது. “என்னுடைய சவப்பெட்டிக்கான பணத்தை திருவாளர் லவ்லேடியிடம் கொடுத்து வைத்திருக்கிறேன்.”

திருவாளர் லவ்லேடி குட்டையாக அழுக்காக இருப்பார். கறுப்பினத்தவர்களிடம் இருந்து காப்பீட்டுத் தொகையை வசூலிப்பவர். ஒவ்வொரு சனிக்கிழமையன்று காலையில் அவர்கள் தங்கி இருக்கும் அறைகளுக்கே வந்து பதினைந்து செண்டுகளை வசூலித்துச் செல்வார். அவரும் அவருடைய மனைவியும் ஓட்டலில் தங்கியிருந்தனர். ஒரு நாள் அவருடைய மனைவி தற்கொலை செய்துகொண்டாள். அவர்களுக்கு ஒரு சின்னப் பெண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தையோடு கிளம்பிப்போனார். ஓரிரு வாரத்துக்குப் பிறகு அவர் மட்டும் தனியே திரும்பி வந்தார். 

“உளறாதே. நாளைக்குக் காலையில் சமையலறையில் முதலில் உன்னைத்தான் பார்க்கப் போகிறேன்,” சொன்னார் அப்பா. 

“எதைப் பார்க்க வேண்டுமோ அதைப் பார்ப்பீர்கள்,” என்றார் நான்சி. “ஆனால் அது என்ன என்பதை ஆண்டவரால்தான் முடிவுசெய்ய முடியும்.”

VI

நாங்கள் கிளம்பும்போது அவள் நெருப்புக்கு முன்னால் உட்கார்ந்திருந்தாள். 

“வந்து சட்டத்தைப் பொருத்திக்கொள்,” என்றார் அப்பா. அவள் நகராமல் உட்கார்ந்திருந்தாள். எங்களைப் பார்க்காமல் விளக்குக்கும் நெருப்புக்கு இடையே உட்கார்ந்திருந்தாள். தெருவில் இறங்கி கொஞ்ச தூரம் நடந்துபோன பிறகு திரும்பிப் பார்த்தபோது திறந்திருந்த கதவருகே அவள் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தோம். 

“அப்பா, என்னது? என்ன நடக்கப் போகிறது?” கேடி கேட்டாள். 

“ஒன்றுமில்லை.” ஜேசன் அப்பாவின் தோளில் உட்கார்ந்திருந்தான். அதனால் எங்கள் எல்லோரையும்விட உயரமாக இருந்தான். பள்ளத்துக்குள் இறங்கி நடந்தோம். அது அமைதியாக இருந்ததைப் பார்த்தேன். நிலவொளியும் நிழல்களும் பின்னிப்பிணைந்த இடங்களில் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. 

“ஜீசஸ் இங்கே ஒளிந்திருந்தால் அவனால் நம்மைப் பார்க்க முடியும், இல்லையா?” கேடி கேட்டாள்.

“அவன் இங்கே இல்லை. வெகு நாட்களுக்கு முன்னரே போய்விட்டான்,” அப்பா சொன்னார்.

“நீதான் என்னை இங்கே கூட்டிவந்தாய்,” உயரத்தில் இருந்து ஜேசன் சொன்னான். மேலே வானத்தின் பின்னணியில் பார்க்கும்போது அப்பாவுக்கு இரண்டு தலைகள் இருப்பதுபோலத் தெரிந்தது – ஒன்று சின்னது, இன்னொன்று பெரியது.

“எனக்கு வருவதில் இஷ்டமே இல்லை.”

பள்ளத்தில் இருந்து மேலே ஏறினோம். இங்கிருந்து நான்சியின் வீட்டையும் திறந்திருந்த கதவையும் பார்க்க முடிந்தது. ஆனால் களைப்பாக இருந்ததால் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு நெருப்புக்கு முன்னால் உட்கார்ந்திருந்த நான்சியைப் பார்க்க முடியவில்லை.

“எனக்குக் களைப்பாக இருக்கிறது,” என்றாள். “நான் ஒரு நிக்கர், ஆனால் அது என் தவறில்லை.”

இப்போது எங்களால் அவள் குரலைக் கேட்க முடிந்தது. பள்ளத்தில் இருந்து மேலே ஏறியதும் பாடுவது போலவும் பாடாதது போலவும் இருக்கும் அவள் குரல் ஒலிக்க ஆரம்பித்தது. “இனிமேல் நம்முடைய துணிகளையெல்லாம் யார் துவைப்பார்கள் அப்பா?” என்றேன். 

“நான் ஒன்றும் நிக்கர் அல்ல,” அப்பாவின் தலைக்கு மேலே இருந்து சொன்னான் ஜேசன். 

“நீ அதையும்விட மோசமானவன். நீ ஒரு கோள்மூட்டி. இப்போது ஏதாவது திடீரென்று வந்தால் நிக்கரைவிடவும் அதிகப் பயந்தாங்கொள்ளியாக இருப்பாய்,” என்றாள் கேடி. 

“அப்படிச் செய்யமாட்டேன்,” என்றான் ஜேசன். 

“நீ அழுதுவிடுவாய்,” என்றாள் கேடி. 

“கேடி,” என்றார் அப்பா. 

“அப்படிச் செய்யமாட்டேன்,” என்றான் ஜேசன். 

“பயந்தாங்கொள்ளிப் பூனை,” என்றாள் கேடி. 

“கேண்டிஸ்!” என்றார் அப்பா.

*

ஆங்கில மூலம்: That Evening Sun by William Faulkner, Collected stories, Vintage Publications, Edition- Oct, 1995.