மொழியாலானது இவ்வுலகம் அல்லது ‘விட்கன்ஷ்டைனின் ஆசைநாயகி’

0 comment

“சந்தேகத்திற்கு இடமின்றி இவை எல்லாம் மனதைக் குழப்பும் வேலைக்காகாத புதிர்மைகளே. இருப்பினும், வேலைக்காகாத புதிர்மைகளே இருப்பின் அடிப்படை மனநிலையாக இருக்கக்கூடுமோ என்று நாம் மீண்டும் மீண்டும் சந்தேகிக்கிறோம்.

எவரோ ஒருமுறை கூறியது போல் அல்லது கண்டிப்பாகக் கூறியிருக்க வேண்டியது போல், பதற்றம் என்பது இருப்பின் அடிப்படை மனநிலை.

– விட்கன்ஷ்டைனின் ஆசைநாயகி, டேவிட் மார்க்சன்.

இது விட்கன்ஷ்டைனின் ஆசைநாயகியைப் பற்றிய அறிமுகமல்ல.

எனக்குத் தனிப்பட்ட முறையில் விட்கன்ஷ்டைனையோ அவரது ஆசைநாயகியையோ தெரியாது. ஏனெனில் விட்கன்ஷ்டைன் 1951இலேயே இறந்துவிட்டார் என்பதால். நானோ பதினேழு வருடங்களுக்குப் பிறகே இவ்வுலகிற்குள் நுழைந்தேன். அவர் புத்தகத்தைப் படித்திருந்தாலும் அவரின் சரிதையைப் படித்ததில்லை.

முந்தைய பத்தி நான் நினைத்தது போல் சரியாக வரவில்லை. அவர் இறந்து பல பத்தாண்டுகள் அவள் வாழ்ந்திருக்கலாம். எங்கள் பாதைகள்கூடச் சந்தித்திருக்கலாம். எனக்கென்ன தெரியும், அவள் இன்னும் உயிரோடு இருக்கலாம். ஆனால் அது சாத்தியமில்லை என்றுதான் நினைக்கிறேன்.

சாத்தியங்கள் குறைவு என்று கூற வந்ததை அசாத்தியம் என்று கூறிவிட்டேன்.

ஆனால் விட்கன்ஷ்டைனுக்கு ஆசைநாயகி கிடையாது. அப்படியே இருந்திருந்தாலும் அது பெண்ணாக இருந்திருக்க முடியாது. அவர் தற்பாலின விழைவு கொண்டவர். இப்படி அடித்துச் சத்தியம் செய்வதெல்லாம் தேவையா? உலகறிந்த அளவில் விட்கன்ஷ்டைன்னுக்கு ஆசைநாயகிகள் இருந்ததில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். யாருக்குத் தெரியும், அவர் இருபாலினருடனும் ரகசியமாக உறவு துய்த்திருக்கலாம். தன் தற்பாலின அடையாளங்களை உலகறிய பறைசாற்றிய அதே வேளை பெண்களுடனும் அவர் ரகசிய உறவு பூண்டிருக்கலாம்.

அக்காலத்திலெல்லாம் தற்பாலின அடையாளங்களைப் பறைசாற்றினார்களா என்ன? வாய்ப்புகள் மிகக் குறைவு.

ஒருகால் அவருக்கு ரகசிய ஆசைநாயகி ஒருத்தி இருந்திருந்தால் அவள் பெயர் கேட் ஆக இருந்திருக்க என்ன வாய்ப்பு?

யார் இந்த கேட், ஐயா? மேலும், ஆங்கிலத்தில், ‘மிஸ்ட்ரெஸாக’ இருக்கும் ஆணிற்கான அடைமொழி என்ன? மிஸ்டரா? அதுவும் சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை.

ஆகா, மீண்டும் அதைச் செய்கிறேன். “மீண்டும்” என்று சொல்வதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். இதற்கு முன் நான் அதைச் செய்ததை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால். எதைச் செய்ததை? மொழியை அக்கறை இல்லாமல் பயன்படுத்திவிட்டு அதைச் சரிபண்ண கிளைக்கதைகள் சொல்வதை. நாம் எவ்வளவு துப்புரவு செய்கிறோமோ அவ்வளவு குப்பை சேர்கிறது.

சொல்வதில் பிசிறு தட்டுவதைச் சரிசெய்ய பிசிறு சேர்க்கும் பிறிதொன்றைச் சொல்வது.

மொழியைக் கொண்டு மொழியைச் சரிசெய்ய முடியாது.

சரி, இதை வரையறை செய்தாயிற்று (ஆனால் செய்யவில்லை என்பதே உண்மை!). இறுதி முயற்சியாக இன்னொரு முறை சரிசெய்வோம். விட்கன்ஷ்டைனின் ஆசைநாயகியைப் பற்றிப் பேசாத ‘விட்கன்ஷ்டைனின் ஆசைநாயகி’ என்ற புத்தகத்தை (இனி விஆ) அறிமுகம் செய்யப் போகிறேன். விட்கன்ஷ்டைனின் ஆசைநாயகியைச் சாய்வெழுத்துகளில் எழுதியிருக்கலாம், ஆனால் அதைப் பிந்தைய சொற்றொடரில் செய்திருக்கக்கூடாது. ஐயோ, இந்த முயற்சியைக் கைவிடுகிறேன். நீங்களும் வேறு வேலையைப் பார்ப்பதே உசிதம்.

சரி, வேறு மாதிரி முயன்று பார்க்கலாம். லுட்விக் விட்கன்ஷ்டைன் ஒரு ஆஸ்திரிய தத்துவவாதி. அவர் இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் வாழ்ந்தார்.

அவர் முதலில் எழுதிய Tractatus Logico-Philosophicus என்ற புத்தகத்துக்காக இன்றும் நினைவுகூரப்படுகிறார். அவர் இறந்தபின் பதிப்பிக்கப்பட்ட Philosophical Investigations புத்தகத்தைக் குறித்து யாரும் அதிகம் பேசுவது இல்லை.

ஒரு வகையில் சொன்னால் பிந்தையது முந்தையதை மறுக்கிறது.

“வஸ்துக்களின் தொகை அல்ல, தரவுகளின் தொகை” என்று உலகைத் தகவல்களின்  அணுக்கூட்டாக விவரிக்கிறது Tractatus.

“பரிசீலனைக்கு உள்ளது எல்லாம் இவ்வுலகு” (“The world is everything that is the case.”) என்ற வாக்கியத்துடன் தொடங்குகிறது Tractatus.

விஆவில் பலமுறை இவ்வாக்கியத்தைக் கேட் துல்லியமாக மேற்கோள் காட்டுகிறாள்.

விஆவில் பலமுறை கேட் பிழையாக மேற்கோள் காட்டுகிறாள்.

விஆ நாவலில் கேட் ஒரு பாத்திரம். கேட் விவரிக்கும் கதைதான் விஆ.

Tractatus பலமுறை நிராகரிக்கப்பட்டது. அவர் அணுகிய முதல் பதிப்பகம் அவரையே அச்சுக்கான செலவையும் காகிதச் செலவையும் தரச்சொல்லிக் கேட்டது. விஆவோ 54 முறை நிராகரிக்கப்பட்டது.

மீண்டும் நான் திசை தவறி காத்தாடிவிட ஆரம்பித்துவிட்டேன்.

இவ்வுலகு தகவல் அணுக்களின் தொகையன்றி வேறன்று என்பது உண்மையாக இருந்தால் தத்துவக் கேள்விகளை எல்லாம், தகவல்களையும் உலகையும் வெளிப்படுத்தும் ப்ரொபொசிஷன்ஸ் எனப்படும் முன்மொழிவுகளுக்கு இடையே நிலவும் உறவு எத்தகையவை என்ற தர்க்கக் கேள்விகளாக மாற்றிவிடலாம்.

மொழி இவ்வுலகின் சித்திரம் என்கிறது Tractatus.

அப்படியானால் முன்மொழிவுத் தர்க்கத்தை (propositional logic) முழுமையாய் விவரிப்பது என்பது இவ்வுலகை முழுமையாய் விவரிப்பதற்கு இணையாக அமையும். “…எல்லா கேள்விகளுக்கும் அடிப்படையில் இறுதி விடை கண்டாகிவிட்டது” என்று முன்னுரையில் முழங்கும்போது Tractatus இப்படித்தான் பொருட்படுகிறது.

இவ்வளவு தன்னம்பிக்கையுடன் தத்துவவாதி விட்கன்ஷ்டைன் அறுதியிட்டுக் கூறியது சாதாரண மனிதனாகிய விட்கன்ஷ்டைன் நம்பிய எண்ணங்களுக்கு முரணாக இருந்தது. அணுமயமாக்கப்பட்ட இலக்கண உலகில், வாழ்வுக்கு அர்த்தம் தந்த நியாயங்கள் அல்லது “விழுமியங்கள்” அல்லது வஸ்துக்கள் குறித்த கருத்துகளுக்கு இடமில்லை என்பதே அந்த யதார்த்த மனிதராகிய விட்கன்ஷ்டைனை உறுத்தியது.

எங்கு பேச முடியாதோ அங்கு ஒருவன் மௌனமாக இருந்தாக வேண்டும் – இவ்வாறு முடிகிறது Tractatus. அப்படியானால் நாம் என்ன புரிந்துகொள்ள? பேச முடியாத விஷயங்கள் எவை? ஒழுக்கம், அழகு, இதுபோன்ற சிக்கல்களுக்குச் சொற்கொண்டு அறுதி முடிவு காண இயலாது என்பதே அதன் உட்கிடை.

Tractatus-ஐ எழுதி முடித்தபின் விட்கன்ஷ்டைன் மௌனமாகிவிட்டார் என்றும் சொல்லலாம். அதன்பின் அவர் உயிரோடு இருந்தவரை வேறு புத்தகம் எதுவும் வரவில்லை என்பதால்.

விஆ குறித்து David Foster Wallace ஒருமுறை அற்புதமான கட்டுரை ஒன்றில் எழுதியதை மாற்றிச் சொன்னால்- தத்துவவாதியின் தர்க்கச் சொர்க்கம் சாதாரண மனிதனின் மீமெய்ம்மை நரகம்.

எனவேதான், முதலில் வந்த Tractatus படைப்பில் அடித்துச் சொல்லப்பட்ட உறுதிப்பாடுகள் சிலவற்றைப் பின்னர் எழுதப்பட்ட Philosophical Investigations நிராகரிக்கும். இதிலிருந்து நாம் இதை மட்டுமாவது அனுமானிக்கலாம்: விட்கன்ஷ்டைன் C.K. Ogden-க்கு எழுதியதற்கு மாறாய் அவர் தன்னை ஒரு எலுமிச்சம் பழம் போல் பிழிந்து தன்னிலிருந்து இன்னும் கொஞ்சம் சாறு எடுத்தார் என்பதை.

உலகம் உண்மையாகவே தகவல்களாய் துண்டுதுண்டாய்ச் சிதறி விழக்கூடியது, அல்லது அது திணிக்கப்பட்ட தகவல்களின் கூட்டுத்தொகை என்றால் அப்படிப்பட்ட துக்கடா தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்று சுதந்திரமாகத் தனித்திருக்கும் உலகில் வாழ்வதென்பது எப்படிப்பட்ட அனுபவமாக இருக்கும்?

விஆ இப்படிப்பட்ட உலகைப் புனைவுப் பார்வை கொண்டு விவரிக்கிறது, Tractatus-ஐ நினைவுகூரும் நடையில். இவ்வறிமுகம் விஆ-வின் நடையை நகலெடுக்கிறது.

உலகும் வாழ்வும் ஒன்று, நானே என் உலகம், என்று வாதிடுகிறது Tractatus.

இது அப்படியே உண்மையாக இருக்கட்டும், நீதான் இந்த உலகில் வாழும் ஒரே மனிதன், இந்த உலகம் நீ மட்டுமே கண்டு துய்க்க உரியது என்றே இருக்கட்டும், உனது உரிமையை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றே ஆகட்டும். அதனால் என்ன?

விஆ கதை சொல்லும் கேட் உலகின் கடைசி மனுஷி.

உலகில் தனி ஒருத்தியாய் எஞ்சி நிற்கும் நிலைக்கு அவள் எப்படி வந்தாள் என்பது நமக்குச் சொல்லப்படுவதில்லை என்றாலும் ஏதோ ஒரு காரணத்தால் அவள் இது குறித்து குற்ற உணர்ச்சி கொண்டிருக்கிறாள் என்பதை நம்மால் உணரமுடிகிறது.

இப்போது கடற்கரையோரம் (Long Island, லாங் ஐலண்ட்) உள்ள ஒரு வீட்டில் வசித்துவரும் கேட், உலகெல்லாம் சுற்றித் திரிந்தவள், ஏஜியன் கடலையும் பெரிங் ஜலசந்தியையும் படகில் கடந்தவள், ருஷ்யா, மேற்கு ஐரோப்பா எங்கும் பயணம் செய்திருப்பவள் – மிஞ்சி இருக்கும் மனிதர்களைத் தேடுவதற்காக என்று நாம் யூகிக்கிறோம். “உண்மையிலேயே நான் வேறு ஒருவரைக் கண்டுபிடித்தாக வேண்டும் என்றுதான் கவலைப்பட்டேனா, நான் அத்தனை தேடிய காலத்தில்,” என்று அவள் நினைத்துப் பார்க்கிறாள்.

அவர்களுக்காக அவள் சாலைகளில் செய்திகள் விட்டுச்செல்கிறாள். உண்மையில் நாவலின் முதல் வாக்கியம் விவிலியத்தன்மை கொண்டதாக இருக்கிறது. “ஆதியில் சிலசமயம் நான் சாலையில் செய்திகள் விட்டுச்சென்றேன்…”

உயிரோடு இருப்பவர்களை, தன்னுடன் பழகக்கூடியவர்களை, கண்டுபிடிக்க முயன்று அவள் தோற்றுப் போகிறாள். இந்த நிலையில் அவள் அடுத்து என்ன செய்ய முடியுமோ அதைச் செய்கிறாள்- அவர்களின் எச்சங்களுடன் உறவாடுகிறாள், நினைவுகளின் எச்சங்கள், வரலாற்று மற்றும் கலைச் சின்னங்களின் எச்சங்கள்.

Met, Louvre, Uffizi- இவ்வருங்காட்சியகங்கள் அனைத்திலும் அவள் வசித்துவிட்டாள். தலைசிறந்த ஓவியங்களின் சட்டகங்களைச் சூட்டுக்காகக் கொளுத்திச் சாம்பலாக்குகிறாள். தான் வரைந்த ஓவியங்களைக்கூட அவள் அவற்றுக்கு அருகே மாட்டிவைத்து அழகு பார்க்கிறாள்.

கேட் ஆர்வத்தால் ஓவியர், கட்டாயத்தால் எழுத்தாளர். அவள் தட்டச்சு செய்துகொண்டிருக்கும் புத்தகம் விஆ, அதில் அவள் விஆ தட்டச்சு செய்துகொண்டிருக்கும் கதைசொல்லி.

யாரும் இல்லாத உலகம் ஒரு அர்த்தத்தில் தரவுகள் நீக்கப்பட்ட உலகமும்கூட. கேட் தன் நினைவுகளில் இருந்து உலகை நிறைக்க முயல்கிறாள், அதன் தரவுகளால் Cogito ergo mundus talis est. (நான் சிந்திக்கிறேன், ஆகவே இவ்வுலகம்)

ஆனால் அவளது நினைவுகளோ எப்போதுமே நம்பும்படியாக இருப்பதில்லை. சில பக்கங்களுக்கு முன் தான் சொன்னதைப் பின்னர் திருத்தி எழுதுகிறாள். நிலையிழந்த கதைசொல்லலாக இருந்தாலும் இந்த நினைவுகள், இசை, ஓவியம், இலக்கியம், வரலாறு, போன்றவற்றுக்குள் வசீகரமான கிளைப் பாதைகளைத் திறந்துகொடுக்கின்றன. இந்த நிலைத் தடுமாற்றம் அவளது கலவர உணர்வுகள் குறித்து நமக்கும் ஓர் உணர்த்தலை அளிக்கிறது. ஏதோ ஒருவகையில் தான் இந்த உலகுக்குப் பொறுப்பாக இருப்பதாய் அவள் நினைக்கிறாள். அதாவது, அவளது நம்பமுடியாத, சந்தேகத்துக்கிடமான நினைவுகளின் அடிப்படையில்தான் இந்த உலகின் தகவல்கள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்.

அவள் மீண்டும் நிலைநிறுத்தும் தகவல்கள் இந்தக் கலவரத்தால் வழிநடத்தப்படுகின்றன. உதாரணத்துக்கு, வான் கோ பற்றிய இந்தக் குறிப்பு:

“வான் கோ பற்றிப் பலரும் போற்றிய, ஆனால் அவர்கள் தாமே எப்போதும் அறியாது இருந்த விஷயங்களில் ஒன்று, அவரால் ஒரு நாற்காலியைக்கூடக் கவலைப்படுவதாய் வரைய முடியும், ஒரு ஜோடி காலணிகளையும்கூட.”

அல்லது இந்த பாஸ்கலியத் துணுக்கு:

“… மிகவும் பிடித்த வாக்கியம், அதாவது பாஸ்கல்… தனக்கு இரு புறமும் கூடுதல் நாற்காலிகள் இல்லாத ஒரு நாற்காலியில் அமர மறுத்தார், வெற்றிடத்தில் விழுந்துவிடக்கூடாதாம்”.

இத்தகவல்களின் தனிமை (திணிக்கப்பட்ட தகவல்கள் தம்மளவில் இணைக்கப்படவில்லை, ஏரண வினைக்குறிகளைக் கொண்டுதான் கூடுகின்றன என்று Tractatus கூறியது நினைவிலிருக்கலாம்) அதுதான் அவற்றைச் சோகமானவையாய் ஆக்குகிறது என்று நாம் David Foster Wallace-இன் சுருக்கமான சித்தரிப்பைக் கடன்பெற்றுச் சொல்லலாம்.

அந்த Wasteland வாக்கியம் ஞாபகம் இருக்கிறதல்லவா? “எதையுமே எதனுடனும் என்னால் இணைக்க முடியவில்லை.” (“I can connect / Nothing with nothing.”)

சோகமான இத்தனித் தகவல்கள் பேரச்சத்தை உருவாக்குகின்றன. இது Pynchon-இன் The Crying Lot of 49-இல் வரும் Oedipa Mass போல் அவற்றுக்கிடையே தொடர்புகளை உருவாக்கும் தற்காப்புச் செயற்பாட்டைத் தன்னிச்சையாய் தருவிக்கின்றன.

பாத்திரங்கள், கவிஞர்கள், சம்பந்தப்பட்ட சொற்றொடர்கள் மீண்டும் மீண்டும் வருவது இந்தப் பைத்தியக்காரத்தனத்தில் ஒரு ஒழுங்கு இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. Homer, Iliad, Odyssey, Euripides, Helen of Troy, Agamemnon, Clytemnestra, Electra, Achilles, Ithaca, Siren போன்றவற்றைக் குறித்து அளிக்கப்படும் தகவல்களிலிருந்து கிரேக்க இலக்கியத்தைக் குறித்த வலைப்பின்னலொன்றை நாம் அனுமானிக்கிறோம். அதே போல் Brahms, Rembrandt, இயல்பாகவே Wittgenstein இவர்களைச் சுற்றி உருவாகும் பிற பின்னல்களையும்.

இந்த வலைப்பின்னல்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டவை, ஒன்றோடொன்று மகரந்தச்சேர்க்கையால் கூடுபவை. இவ்வகையில் கிரேக்கத் தொன்மத் தொகையில் இருந்து Helen, Electra, Clytemnestra முதலானவர்கள் ஓவியக் குழுவைச் சேர்ந்த புத்தொளி காலகட்டத்தின் மீடூ ஓவியரான Artemisia Gentileschi போன்றவர்களுடன் இணைந்து பெண் அடையாளத்தை ஆண் பார்வையில் வெளிப்படுத்திய போக்குக்கு எதிராகச் செயல்படும் பெண்ணிய வலைப்பின்னலைக் கட்டமைக்கின்றனர். (கடவுளே இந்த ஆண்கள் செய்யும் காரியம், என்பது கேட் மீண்டும் மீண்டும் சொல்லும் வாசகங்களில் ஒன்று.)

கிரேக்க நாடகவியல் மற்றும் ஹோமரிலிருந்து தோன்றும் பகுதிகள் மிகப் பிரமாதமானவை. அவற்றில் Clytemnestra, Electra, Orestes, ஏன் Cassandraவும்கூட- பின் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கற்பனை செய்யும் பெண்ணிய மனதைப் நம்மால் பார்க்க முடிகிறது. Clytemnestra, Penelope, Electra and Orestes, Helen-ஐப் பார்க்க இதாகா செல்லும் காட்சியில் அனைவரும் இணைவது: “Penelope, விண்ணில் உள்ள சொர்க்கம்மீது ஆணையிட்டுக் கேட்கிறேன். என் மைத்துனன் மற்றும் குளியல் தொட்டி பற்றிய கதையை நீ இதுவரை கேட்டதே கிடையாதா?” அல்லது, “முதலில் வலையால் என்றா சொல்கிறாய்? உனக்கு மூன்று கோஷங்கள், கஸின் க்ளை!”

இவ்வாறு இணைப்புகளைக் கூட்டிக்கொள்ளும் உந்துதல் அவளால் கட்டுப்படுத்த இயலாததாக கைமீறிப் போகிறது. ஒத்த ஒலி கொண்ட பெயர் கொண்டவர்கள் ஒருவரே என்று நம்பத் தலைப்படுகிறாள்- உதாரணமாக William Gaddis-ஐயும் Taddeo Gaddi-ஐயும்; அல்லது ஒரே இடத்தில் அல்லது ஒரே காலத்தில் தன்னிச்சையாக நிகழும் வெவ்வேறு சம்பவங்களுக்குக் குறிப்பிட்ட முக்கிய அர்த்தம் இருக்கிறது என்று கற்பனை செய்கிறாள்.

சுட்டுதல்கள் மிகுந்த, ஆனால் தற்போது மறைந்துவிட்ட உலகைக் குறித்த நினைவு அர்த்தங்களை இழந்து நிற்கும் நிதர்சனத்தை எதிர்கொள்கிறது. இதனால் மனதளவில் ஒரு முரண்பாடு ஏற்படுகிறது. தான் பித்து பிடித்தவள் ஆகிக்கொண்டு இருக்கிறோம் என்கிற சந்தேகம் அவளுக்கு எழுவதைப் பலமுறை கேட் நமக்கு வெளிப்படுத்துகிறாள். (“மனம் மீறிய காலம்”, “Time out of mind” என்று அவள் இதைக் குறிப்பிடுகிறாள்).

குறிப்பிடத்தக்க ஒரு அர்த்தத்தைச் சுட்டத் தவறும் தரவுகளின் வெள்ளத்தைக் கையாள முடியாதவளாக அவள் அத்தனையையும் தன் மனதிலிருந்து இறக்கிவைக்க முடிவுசெய்கிறாள். நவீன சன்னியாசி ஒருத்தியைப் போல் அவள் நினைவுகளை மட்டுமல்ல, அவற்றிற்கு அடிப்படையான வஸ்துக்களையும் துறக்க முடிவு செய்துவிடுகிறாள். இதைச் சொல்வது சுலபம், செய்வது கடினம் என்பதை அவள் மிக உருக்கமாக விவரிக்கிறாள்:

சுமை, அடிப்படையில் அதைத்தான் நான் தலை முழுகினேன். ஆம், வஸ்துக்களை.

ஆனாலும் அவ்வப்போது ஏதோ ஒரு குறிப்பிட்ட இசை தலையினுள் ஒலிக்கத்தான் செய்கிறது.

எது எப்படியானாலும், எதுவாக இருந்தாலும், ஏதோ ஒரு இசைத்துணுக்கு. Antonio Vivaldi, என்று வைத்துக்கொள்ளலாம். அல்லது Joan Baez பாடுவதாய் ஒரு குரல்.

சில நாட்களுக்கு முன் பெர்லியோஸின் Les Troyens-சிலிருந்து ஒரு பகுதியைக்கூடக் கேட்க நேர்ந்தது.

கேட்டேன் என்று சொல்கிறேன். கேட்டது போல் என்றுதான் பொருள்கொள்ள வேண்டும்.

ஆனாலும் சுமை என்று ஒன்று இருந்துகொண்டிருக்கும் போல. சுமைகள் அத்தனையும் இறக்கி வைத்துவிட்டேன் என்று என்னதான் நான் நம்பிக்கை கொண்டிருந்தாலும்.

ஒரு வகையில். தலையில் மிஞ்சி இருக்கும் சுமை, ஒருத்தி அறிந்ததில் எதுதான் மிஞ்சி இருக்கிறது, அதன் எச்சங்கள்.

ஆனால் வாசகருக்கு அவள் விட்டுச்சென்ற சுமை வசீகரமாக இருக்கிறது. அவளுக்கு, அதாவது அந்த வாசகிக்கு, தன் சுமையின் தன்மை எத்தகையது என்பதைப் புதிய வெளிச்சத்தில் அது காட்டுகிறது.

கேட்டின் தினசரி வாழ்க்கை மிகச் சாதாரணமானது. அவள் அதைப் புதிதாக வார்த்துக்கொண்ட, ஆனால் வேகமாக மறையும் உலகோடு எப்படிக் கோர்க்கிறாள் என்பதே நம்ப முடியாத இந்த நாவலை நம்பும்படியதாக ஆக்குகிறது: சாக்கர் சட்டைகள், டெனிம் ஷார்ட்டுகள், வெட் சாலட்கள், துணி துவைப்பது (புதர்களில் தான் உலர்த்தும் ஆடைகளை ஸ்கர்ட் சிற்பங்கள் என்று அழைக்கிறாள்), அறையை வெம்மைப்படுத்துவதன் அவசியங்கள், மலசலக் கிரீடைகள் (மணல் மேட்டில் மூத்திரம் பெய்கிறாள், கடலில் மலம் கழிக்கிறாள்). இவற்றை எல்லாம் அவள் தன் மனத்தை ஆக்கிரமித்திருக்கும் கலை, தத்துவம், வரலாறு போன்ற உயர்ந்த விஷயங்களுடன் கலந்துபேசுகிறாள். உதாரணத்துக்கு:

மணல் மேட்டில் மூத்திரம் பெய்வது லாரன்ஸ் ஆஃப் அரேபியாவுக்கும் நேஷனல் காலரியில் உள்ள அவரது ஓவியத்துக்கும் பின் டி.ஈ. ஷாவுக்கும் (அவளால் நினைவுகூர முடியவில்லை என்றாலும் நமக்குத் தெரியும் அது டி.ஈ. லாரன்ஸின் புனைப்பெயர் என்று) அவள் நினைவுகளைக் கொண்டுசெல்கிறது.

அவளது மாதவிடாய் குறித்த தகவல்கள் நம்மிடமிருந்து மறைக்கப்படுவதில்லை: “ஸ்பார்ட்டா செல்லும்போது பாதி வழியில் என் மாதவிடாய் தொடங்கியது”, “மாதவிடாய் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தியது”, “மாதவிடாய் வேறொரு விஷயம்… எத்தனை நாளாயிற்று என்பதை இப்போது மறந்துவிட்டபோதிலும்”, இன்னபிற. இதன்பின் தொடர்பு அறுபடாமல் கற்பனையில் ஆழ்கிறது அவளது நினைவு, உதாரணமாக:

இப்போதும் அவ்வப்போது, காலம் தப்பியேனும், மாதவிடாய் வருகிறது.

அல்லது கறைபடுகிறது. வாரக்கணக்கில்.

ஆனால் அப்புறம் பல மாதங்கள் வராமல் போகலாம்.

மாதவிடாய் பற்றி Iliadல் எதுவும் கிடையாது. அதில் வியப்பில்லை. நாடகங்களிலும் கிடையாது. Odyssey-யிலும் கிடையாது. சந்தேகமில்லை. இது எதுவும் ஒரு பெண்ணால் எழுதப்படவில்லை. 

நாவலின் வேறு இடங்களில் வரும் வேறு தகவல்கள் இந்த எண்ணக் கூட்டங்களை வாசிக்கும் மனதில் திரட்டுகின்றன. உதாரணத்துக்கு இது. மேற்கண்ட விஷயங்கள் சொல்லப்பட்டு எழுபது பக்கங்கள் சென்றபின் ஒரு விஷயம் சொல்லப்படுகிறது. ஏதோ ஒரு காரில் ஏறுகிறாள் கேட் (கார்கள் எல்லாவற்றிலும் ஓட்டத் தயாராகச் சாவி பொருத்தப்பட்டிருக்கிறது, தடையில்லாமல் அவள் அந்த உலகில் பயணம் செய்கிறாள்). அந்தக் காரில் சாமுவேல் பட்லரின் The Way of all Flesh நாவலின் பேப்பர்பாக் பதிப்பு ஓரமாய்க் கிடந்தது என்பது நமக்குச் சொல்லப்படுகிறது. அதன்பின், அவள் யதேச்சையாகக் கண்ணுற்ற ஒரு அடிக்குறிப்பு கவனப்படுத்தப்படுகிறது- Odyssey ஒரு பெண்ணால் எழுதப்பட்டது என்று எப்போதோ ஒருமுறை சாமுவேல் பட்லர் சொல்லியிருக்கிறார் என்று அக்குறிப்பு அறிவிக்கிறது.

தன் அருமையான கட்டுரையில் DFW சொன்னதற்கு மாறாய், விஆ என்ற நாவல் ட்ராக்டாடஸ் என்ற தத்துவ நூலின் பக்க விளிம்புகளில் எழுதப்பட்டிருக்கலாம். அதுவே இதன் வலிமையும் ஆகும். அதே விளிம்புகளில் அதன் நாயகியின் தனிப்பட்ட இழப்பும் தனிமையும் பதிவுசெய்யப்பட்டிருப்பது அதன் கலை வெற்றி பெற்றதற்கான அத்தாட்சி. அவள் காதலர்கள், மகனின் மரணம், நோயுடன் போராடும் அவள் தாய், அவள் படுக்கைக்கு அருகேயுள்ள ஆடி, தந்தையின் மரணம் என்று வாழ்ந்த அனுபவத்தை, வெறும் தகவலாக உருமாறுவதற்கு முன், அதை உயிர்ப்பித்த உக்கிரத்துடன் நாம் அறிந்துகொள்கிறோம்.

உலகு உள்ளது. என்க்குத்தான் பித்து. அல்லது நான் மட்டுமே இருக்கிறேன். இவ்வுலகு என் கற்பனைச் சிதறல் மட்டுமே. கேட்டின் நரகத்தில் விடுவிக்க முடியாத, விடுபட முடியாத புதிர் இது. அல்லது இந்தப் புதிரும் ஒரு கற்பிதமா? No exit போடப்பட்டிருக்கும் நரகத்திலும்கூட உய்விற்கான சாத்தியமொன்று இருக்கிறதா?

இவ்வுலகும் அவளது பிரக்ஞையும் ஸ்தம்பித்து நின்றபோதிலும் கேட் ஓர் எதிர்ப்புச் செயலாய் விஆ-வைத் தட்டச்சு செய்கிறாள். தன் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் எதிர்ப்பு இயக்கம் இது. அவள் தட்டச்சு செய்வதற்கு அப்பால், அவளுக்கும் வெளியே, அவள் தட்டச்சு செய்த விஷயம் விளங்குகிறது என்பது உலகின் இருப்புக்குச் சான்று. வேறு சொற்களில், கற்பனாபூர்வமாக, கலாபூர்வமாக, நாம் செயல்படுவது நம் இருப்பை நிலை நிறுத்துகிறது. நமக்கு வெளியே ஓர் உலகு இருப்பதையும் ஆமோதிக்கிறது.

“இக்கடற்கரையில் யாரோ வசிக்கிறார்கள்.” இப்படி ஒரு ஸிஸிபிய ஒப்பளிப்புடன் விஆ முடிகிறது.

இந்த அறிமுகம் யாரோ ஒருவரால் வாசிக்கப்பட வேண்டும். அத்தகைய சாத்தியத்தை முன்வைத்து இது முற்றுப்பெற வேண்டும். ஆனால்…

அந்த ஒருவருக்கு, அந்த வாசகருக்கு, என் வாசகிக்கு, நான் சொல்கிறேன்- “நீ இருக்கிறாய்” என்று, “என்னை நீ வாசிக்கையில்” மட்டுமே.

*

மூலநூல்கள் / மேலும் படிக்க:

  1. Markson, David, Wittgenstein’s Mistress, Dalkey Archive Press, 2006
  2. Wittgenstein, Ludwig, Tractatus Logico-Philosophicus, Tr. Ogden, C.K, Dover 1998