காஃப்காவின் நண்பர் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்

by எஸ்.கயல்
1 comment

காஃப்கா எழுதிய நூல்களை வாசிப்பதற்குப் பல வருடங்களுக்கு முன்பே காஃப்காவின் நண்பரும், யூத நாடகக் குழு ஒன்றின் முன்னாள் நடிகருமான ஜாக் கோஹன் மூலமாக அவரை நான் அறிந்திருந்தேன். முன்னாள் நடிகர் என்று நான் ஜாக்கைக் குறிப்பிடக் காரணம் எனக்கு அறிமுகமான போதே அவர் மேடை நாடகங்களில் நடிப்பது நின்றுவிட்டிருந்தது. வார்சாவின் யூத நாடக அரங்குகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை முப்பதுகளின் துவக்கத்திலேயே குறைய ஆரம்பித்திருந்தது. ஜாக்கும்கூட நொடித்துப் போயிருந்தார். தன் பகட்டைப் பறைசாற்றும்படியான நாகரீக உடைகளையே அவர் இப்போது உடுத்தியிருந்தாலும் அவை நைந்துபோய் மோசமான நிலையில்தான் இருந்தன. தன் இடது கண்ணில் ஒற்றைக் கண்ணாடியும், முன்னொரு காலத்தின் புகழ்பெற்ற (ஃபாதர்ஸ் மர்டரர் எனும் கதையில் அணியப்பட்ட வகையிலான) சட்டையின் கழுத்துப் பட்டையும், காப்புரிமையுடைய உயர் இரகத் தோல் காலணிகளும், டெர்பி ஜீன்ஸும் அணிந்திருந்தார். 

நாங்கள் இருவரும் அடிக்கடி செல்லும் யூத எழுத்தாளர்கள் சங்கத்தில் இருந்த கிண்டல் பேர்வழிகள் அவரைக் “கோமான்” என்று பட்டப்பெயரிட்டு அழைத்தனர். தன் பெருமளவு வளைந்த தோள்களைப் பிடிவாதமாக நிமிர்த்திக் காட்டுவதற்கு முயற்சி செய்தவண்ணம் இருந்தார். ஒருகாலத்தில் பொன்னிறமாக இருந்த அவருடைய தலைமுடி இப்போது கொஞ்சமே மிஞ்சியிருந்தது. தன் வழுக்கை மண்டையின் மீது பாலம் போன்ற வடிவில் அதை வாரியிருந்தார். முன்னாட்களில் மேடை நாடகத்தில் நடித்த அதே நினைவில் அவர் அடிக்கடி ஜெர்மனியர்களின் யூத உச்சரிப்பில் பேசுவார். குறிப்பாக காஃப்காவுக்கும் அவருக்குமான உறவைப் பற்றிப் பேசும்போது இது நடக்கும். சமீபகாலமாக அவர் செய்தித்தாள்களில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருந்தார். ஒட்டுமொத்தமாக எல்லாப் பத்திரிகை ஆசிரியர்களும் அவருடைய கட்டுரைகளை நிராகரித்தனர். அவர் லெஸ்னோ வீதியில் இருந்த எதோ ஒரு வீட்டின் மிகச் சிறிய அறையொன்றில் வசித்தார். அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டபடி இருந்தது. “நாள் முழுக்க ஒரு ஆக்சிஜன் கூடாரத்தில் படுத்துக் கிடப்பார். இரவுகளில் வெளியே வரும்போது டார்ஜானாகத் தோன்றுவார்” என்று சங்கத்தின் உறுப்பினர்கள் செய்யும் பகடி அப்போது மிகப் பிரபலமாக இருந்தது.

நாங்கள் எப்போதுமே மாலை நேரங்களில்தான் சங்கத்தில் சந்திப்போம். ஜாக்கை உள்ளே அனுமதிப்பதற்காகச் சங்கத்தின் கதவு மெதுவாகத் திறக்கும். யூதர்கள் வாழும் ஏழ்மையான பகுதியைப் பார்வையிட வரும் ஒரு முக்கியமான ஐரோப்பியப் பிரபலத்தின் இறுமாப்பு அவரிடம் இருந்தது. தன்னைச் சுற்றிலும் நோட்டமிட்டபடி ஹெர்ரிங் வகை மீன், பூண்டு, மலிவான புகையிலை ஆகியவற்றின் வாசம் தனக்குப் பிடிக்காது என்பதைக் குறிக்கும்படி முகம் சுழிப்பார். உரத்த குரலில் சங்க உறுப்பினர்கள் இலக்கியக் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த மேஜைகளின் மீது சிதறிக்கிடக்கும் செய்தித்தாள்கள், உடைந்த சதுரங்கத் துண்டுகள், புகைத்து மீதமுள்ள மிகச் சிறிய வெண்சுருட்டுத் துண்டுகள் இருந்த ஆஷ் ட்ரேக்கள் ஆகியவற்றை ஏளனமாக ஒரு பார்வை பார்ப்பார். “இந்த மூடர்களிடமிருந்து நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?” என்று சொல்வது போலத் தன்னுடைய தலையைக் குலுக்கிக் கொள்வார். நான் உள்ளே நுழைவதை அவர் பார்த்ததுமே என் சட்டைப் பைகளுக்குள் கைகளை நுழைத்து, எப்படியும் அவர் என்னிடம் கடன் கேட்கப் போகும் சில்லறை நாணயங்களைத் தேட ஆரம்பிப்பேன். 

இன்று மாலை வழக்கத்தைவிட நல்ல மனநிலையில் இருந்தார். என்னைக் கண்டதும் அவருடைய தோற்றத்துக்குச் சற்றும் பொருந்தாத வகையில் பீங்கான் போன்றிருந்த தன் பற்களைக் காட்டித் திகைப்புடன் சிரித்தவர், மேடையில் நடிப்பது போன்ற மெல்லிய அசைவுகளுடன் நிதானமாக என்னை நோக்கி வந்தார். நீண்ட விரல்களுடைய தன் கையை என்னை நோக்கி நீட்டி, “உதய நட்சத்திரமே, நலமா?” என்று கேட்டார். நான், “அதற்குள் ஆரம்பித்து விட்டீர்களா?” என்றேன். “நான் விளையாடவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன். எனக்குத் திறமையில்லை என்றாலும்கூட ஒரு திறமையானவனைப் பார்த்த உடனேயே என்னால் அடையாளம் காண முடியும். 1911ஆம் ஆண்டு நாங்கள் ஒரு நாடகத்தைப் பராக்கில் நிகழ்த்தினோம். அது காஃப்காவை யாருமே அறிந்திராத காலகட்டம். காஃப்கா நாடக மேடையின் பின்புறம் வந்ததும், அந்த நொடியில் அவரைப் பார்த்ததுமே அவருக்குள் இருந்த மேதையை நான் அடையாளம் கண்டுகொண்டேன். பூனை எலியை மோப்பம் பிடிப்பது போல என்னால் அதை மோப்பம் பிடிக்க முடிந்தது. அப்படித்தான் எங்களுடைய உயர்ந்த நட்பு துவங்கியது.”

இந்தக் கதையைச் சிலபல மாற்றங்களுடன் இதற்கு முன் நான் நிறைய முறை கேட்டிருக்கிறேன். ஆனாலும் இப்போது அதை மறுபடி ஒருமுறை நான் கேட்டாக வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அவர் என்னுடைய மேஜை அருகில் வந்து அமர்ந்தார். உணவு பரிமாறும் பணியாளரான மான்யா தேனீரும் இனிப்பு பிஸ்கட்டுகளும் கொண்டுவந்து வைத்தாள். ஜாக் கோஹனின் கண்கள் மஞ்சளாக இருக்கும். அதன் வெண்ணிறப் பகுதியில் முடிச்சிட்டிருந்த சிறிய இரத்தக் குழாய்களின் மீதிருந்த தன் புருவத்தை அப்போது அவர் உயர்த்தினார். அவருடைய இந்த முகபாவம், “இந்தக் காட்டுமிராண்டிகள் பாஷையில் இதுதான் தேநீரா?” என்று கேட்பது போலிருந்தது. ஐந்து சர்க்கரை வில்லைகளை எடுத்து, தன் தேநீர்க் கோப்பையில் போட்டுக் கலக்கி, தகரத்தால் ஆன சிறு கரண்டியால் சுழற்றினார். தன்னுடைய கட்டை விரல், ஆட்காட்டி விரல்களின் நீண்டு வளர்ந்த நகங்களால் இனிப்பு பிஸ்கெட்டில் இருந்து ஒரு துண்டை உடைத்து, தன் வாயில் போட்டு, “நு ஜா” என்றார். இதற்குப் பொருள், “ஒருவர் தன் வயிறை நிகழ்காலத்தில் மட்டுமே நிரப்பமுடியும்” என்பது.

இவை அனைத்துமே நடிப்பு. ஏனெனில் அவரே போலந்தின் சிறிய கிராமம் ஒன்றில் வசித்த ஹசிடிக் யூதக் கோட்பாட்டைத் தழுவிய குடும்பத்தைச் சேந்தவர்தான். அவருடைய பெயரும்கூட “ஜேன்கல்”தானே தவிர ஜாக் இல்லை. ஆனால் அவர் பல வருடங்கள் பராக், வியன்னா, பெர்லின், பாரிஸ் ஆகிய நகரங்களில் வாழ்ந்திருக்கிறார். யூத மேடை நாடகங்கள் மட்டுமின்றி ஃபிரான்சிலும் ஜெர்மனியிலும் நடந்த நாடகங்களில் நடித்திருக்கிறார். பல பிரபலங்கள் அவருக்கு நண்பர்களாக இருந்தனர். பெலவில் நகரத்தில் சாகல் ஒரு ஸ்டுடியோவைக் கண்டவதற்கு அவர் உதவி புரிந்திருக்கிறார்.

ஆங்கில நாவலாசிரியரான இஸ்ரேல் சேங்வில்ஸின் வீட்டுக்கு அடிக்கடி அவர் செல்வதுண்டு. ரேன் ஹார்ட் தயாரிப்பில் மேடையில் தோன்றியிருக்கிறார். நாடகத் தயாரிப்பாளரான பிஸ்கேடருடன் அமர்ந்து இறைச்சித் துண்டுகளை ருசித்ததுண்டு. காஃப்கா மட்டுமின்றி ஜேகப் வசர்மேன், ஸ்டீஃபன் ஸ்வைக், ரோமைன் ரோலண்ட், இல்யா எஹ்ரன்பர்க், மார்ட்டின் பூபர் ஆகியோரிடமிருந்து அவருக்கு வந்த கடிதங்களை அவர் எனக்குக் காண்பித்துள்ளார். அதில் அவர்கள் அனைவரும் அவரை ஜாக் என்றே அழைத்தது அவர்களுடனான நெருக்கத்தைக் காட்டியது. நாங்கள் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்துகொண்ட பிறகு அவருடன் தொடர்புகொண்டிருந்த புகழ்பெற்ற நடிகைகளின் புகைப்படங்களையும் கடிதங்களையும்கூட அவர் எனக்குக் காட்டினார்.

ஜாக் கோஹனுக்கு என்னிடமிருந்த சில்லறையைக் கடனளிப்பது என்பது மேற்கு ஐரோப்பாவுடன் தொடர்பேற்படுத்திக் கொள்வதாகும். வெள்ளிப் பூணிட்ட கைத்தடியைத் தன் கையில் வைத்துக்கொண்டு அவர் நடக்கும் விதமேகூட எனக்கு விசித்திரமாகத் தோன்றும். அவர் வெண்சுருட்டுகளைப் புகைத்த விதம் வார்சாவில் நாங்கள் புகைப்பதைவிட வித்தியாசமாக இருந்தது. அவர் மிக நாகரீகமான நடத்தையுடையவர். அரிதாக ஒருமுறை அவர் என்னுடன் முரண்பட்ட போது என் உணர்வுகளைக் காயப்படுத்தாதபடி முதலில் சில புகழுரைகளை எனக்களித்து அந்தச் சூழலை நேர்த்தியாகக் கையாண்டார். மற்ற அனைத்தையும்விட பெண்களிடம் அவர் நடந்துகொண்ட விதமே அவர் மீது என்னை மதிப்புகொள்ள வைத்தது. பெண்களைக் கண்டால் நான் வெட்கப்பட்டு முகம் சிவப்பேன். அவர்களுடைய இருப்பே எனக்குச் சங்கடமாக இருந்தது. ஆனால் அவரிடமோ ராஜ குடும்பத்தினருடைய தன்னம்பிக்கை இருக்கும். சிறிதும் கவர்ச்சியற்ற ஒரு பெண்ணிடமும்கூட நல்லதாக ஏதோவொன்றைச் சொல்வதற்கு அவரால் முடிந்தது. ஜாக் எல்லாப் பெண்களிடமும் முகத்துதி செய்வார். ஆனால் அனைத்தையும் முன்பே அனுபவித்து அறிந்த, எதற்கும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத ஒரு ஹெடோனிஸ்டின் நடத்தை அவரிடமிருந்து வெளிப்பட்டாலும், அதனுடன் முற்றிலும் முரண்படும் கனிவான தொனியில்தான் அது எப்போதும் ஒலிக்கும்.

“இங்கே பார் நண்பா! நான் கிட்டத்தட்ட ஆண்மையற்றவனாகி விட்டேன். ருசியாகத் தேர்ந்து உண்பதில்தான் அது எப்போதும் ஆரம்பிக்கும். ஒருவன் பசியோடிருக்கும்போது அவனுக்கு விலை உயர்ந்த கேவியர் முட்டைகளால் செய்த மார்சிபன் இனிப்பு வகைகள் தேவைப்படாது. கவர்ச்சியானவள் என எந்தப் பெண்ணையும் கருதமுடியாத நிலையை நான் அடைந்துவிட்டேன். எவ்விதமான குறைபாட்டையும் என்னிடமிருந்து மறைக்கமுடியாது. அதுவே ஆண்மையிழப்பு. வடிவுடையவர்களாகத் தோற்றங் காட்டிக்கொள்வதற்காகப் பெண்கள் தம் இடையில் அணியும் பிரத்யேக ஆடைகளை ஊடுருவினால் அவர்களின் உண்மையான உடலமைப்பு எனக்குத் தெளிவாகத் தெரியும். சாயமிட்டோ நறுமணம் பூசியோ இனியும் என்னை முட்டாளாக்க முடியாது. நான் என்னுடைய பற்களை இழந்துவிட்டேன். ஆனால் ஒரு பெண் வாயைத் திறந்தாலே போதும். அதில் சொத்தைப் பற்கள் அடைக்கப்பட்டுள்ள இடங்களை என்னால் கண்டுபிடித்துவிட முடியும். காஃப்காவுக்கும் இதே பிரச்சினைதான். தன் படைப்பிலும் மற்றவர்களுடைய படைப்பிலும் இருந்த குறைகள் அவருடைய கண்களுக்குத் தெரிந்தன. பெரும்பாலான இலக்கியப் படைப்புகள் ஜோலா, டி அன்னுனிஜியோ ஆகிய சாதாரண படைப்பாளிகளாலும், அனுபவமற்ற கற்றுக்குட்டிகளாலும்தான் எழுதப்பட்டன.

“காஃப்கா இலக்கியத்தில் கண்ட அதே குறைபாடுகளை மேடை நாடகத்தில் நான் கண்டேன். அது எங்கள் இருவரையும் இணைத்தது. ஆனால் மேடை நாடகத்தைப் பொறுத்தவரை காஃப்கா முற்றிலும் குருட்டாம்போக்கில் இருந்தார். எங்களுடைய மலிவான யூத நாடகங்களை வானளாவுக்குப் புகழ்ந்தார். தன் மிகையான நடிப்பால் பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கும் நடிகையான பெருமாட்டி ஷிசிக் மீது பித்துப்பிடித்தாற் போலக் காதல் வயப்பட்டார். அந்த ஜந்தின் மீது, அதாவது அந்த நடிகையின் மீது அவர் காதல் வயப்பட்டதையும், அவளைப் பற்றிக் கனவு கண்டதையும் பார்த்த நான், ஆண்களையும் அவர்களுடைய மாயைகளையும் நினைத்து அவமானப்பட்டேன். ஆனால் என்றென்றும் நிலைத்து நிற்கும் புகழை நாம் தேர்வுசெய்ய முடியாது. மாபெரும் மனிதர்களுடன் தொடர்பு ஏற்படும் ஒருவன் அவர்களுக்கிருக்கும் அழியாப் புகழுடன் அவர்களோடு தானும் நடை பயில்கிறான். ஆனால் சகதி படிந்த காலணிகளுடன்தான் பெரும்பாலும் அந்தப் பயணத்தில் அவனால் நடக்க முடியும்” என்று அவர் என்னிடம் வெளிப்படையாகப் பேசினார்.

“தொடர்ந்து இவ்வாறு செயல்பட எது என்னைத் தூண்டுகிறது என்று ஒருமுறை நீ என்னைக் கேட்டாய் இல்லையா அல்லது நீ கேட்டதாக நானே கற்பனை செய்துகொண்டேனா? ஏழ்மை, நோய்மையுற்ற உடல்நிலை, இவற்றைவிட மோசமாக நம்பிக்கையின்மை என அனைத்தையும் தாங்கிக்கொள்ளும் சக்தியை எனக்குத் தருவது எது? இதுவொரு நல்ல கேள்வி நண்பா. ஜாப் எழுதிய நூலை முதல்முறை வாசித்தபோது இதே கேள்வியைத்தான் நானும் கேட்டுக்கொண்டேன். ஜாப் ஏன் இன்னும் உயிர் வாழ்ந்து துயரப்படுகிறார்? இறுதியில் அவரிடம் நிறைய மகள்கள், நிறைய கழுதைகள், நிறைய ஒட்டகங்கள் இருக்கும் என்றா? இல்லை. அதற்கான பதில் வாழ்வே போராட்டத்தால் ஆனது என்பதுதான். நாம் அனைவரும் விதி எனும் கூட்டாளியுடன் சதுரங்கம் விளையாடுகிறோம். விதி ஒரு சதுரங்கக் காயை நகர்த்துகிறது. நாம் ஒரு சதுரங்கக் காயை நகர்த்துகிறோம். விதி தன்னுடைய மூன்று நகர்வுகளில் மன்னனைக் குறிவைத்து நம்மைத் தோற்கடிக்க முயல்கிறது. நாம் அதைத் தடுக்க முயல்கிறோம். நம்மால் வெற்றிபெற முடியாது என்று நமக்குத் தெரியும். ஆனால் அவனுக்கு எதிராகச் சிறப்பாகப் போராடுவதில் தீவிரமாக முனைப்பு காட்டுகிறோம். என்னுடைய எதிராளி ஒரு இரக்கமற்ற தேவதை. தன்னுடைய எல்லாத் தந்திரங்களையும் வைத்து அது ஜாக் கோஹனுடன் சண்டையிடுகிறது.

“இப்போது குளிர்காலம். கணப்பு அடுப்பு எரியும்போதுகூட குளிர்கிறது. ஆனால் பல மாதங்களாக என்னுடைய கணப்பு அடுப்பு வேலை செய்யவில்லை. வீட்டின் உரிமையாளர் அதைச் சீராக்கித் தர மறுக்கிறார். அது மட்டுமின்றி என்னிடம் நிலக்கரி வாங்கப் பணமில்லை. வெளியே எவ்வளவு குளிராக இருக்கிறதோ அதே அளவுக்கு என்னுடைய அறையும் குளிராக இருக்கிறது. நீ சிறிய பொந்து போன்ற ஒரு அறையில் வாழ்ந்திருக்கவில்லை என்றால் காற்றின் பலத்தைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. என்னுடைய ஜன்னலில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடித் தகடுகள் கோடை காலத்திலும்கூட தடதடவென ஒலியெழுப்புகின்றன. ஒரு ஆண் பூனை என் ஜன்னலுக்கு அருகில் இருக்கும் கூரையின் மீது சில சமயங்களில் ஏறிக்கொண்டு பிரசவ வலியில் இருக்கும் பெண்ணைப் போல இரவு முழுக்க ஓலமிடுகிறது. நான் என் கம்பளிக்குள் குளிரில் விறைத்துக் கிடக்க அவனோ ஒரு பூனைக்காக வேதனைக் குரல் எழுப்புகிறான். ஒருவேளை அதற்குப் பசியாக இருக்கலாம். ஒரு வாய் உணவளித்து அதை நான் அமைதிப்படுத்தியிருக்கலாம், அல்லது அதைத் துரத்தி அடித்திருக்கலாம்.

“ஆனால் குளிரில் விறைத்து இறந்து போய்விடாமல் இருக்க, நான் என்னிடமிருந்த அத்தனை கிழிசல் துணிகள், பழைய செய்தித்தாள்கள் என எதையும் விட்டுவைக்காமல் போர்த்திக்கொண்டு படுத்திருந்தேன். ஒரு சிறிய அசைவு போதும். அந்த மொத்த உழைப்பும் வீணாகிவிடும். ஆனாலும் நண்பா, சதுரங்கம் விளையாடினால், சம பலமுடைய எதிராளியுடன் விளையாட வேண்டுமே தவிர தகுதியற்றவர்களுடன் அல்ல. நான் என் எதிராளியை வியக்கிறேன். அவனுடைய புத்திக்கூர்மை சில சமயங்களில் என்னை வசியப்படுத்திவிடுகிறது. பூமி எனும் நம்முடைய சிறிய கோளை ஆட்சிசெய்யும் வான் துறையினுடைய மூன்றாவது அல்லது ஏழாவது சொர்க்கத்தின் உச்சியிலுள்ள ஒரு அலுவலகத்தில் அவன் அமர்ந்திருக்கிறான். அவன் முன்னே இருப்பது ஜாக் கோஹனை ஆபத்தில் சிக்கவைக்கும் ஒற்றைப் பணி மட்டுமே. 

“நீ மதுப்பீப்பாயை உடை. ஆனால் மதுவை வெளியே வழிய விட்டுவிடாதே” என்பதே அவனுக்கு இடப்பட்டுள்ள கட்டளை. அவன் மிகச்சரியாக அதைத்தான் செய்தான். அவனால் எப்படி என்னை உயிருடன் வைத்திருக்க முடிகிறது என்பது ஒரு அதிசயம். நான் எவ்வளவு மருந்து எடுத்துக்கொள்கிறேன், எத்தனை வில்லைகளை விழுங்குகிறேன் என்பதை உனக்குச் சொல்வது எனக்கு அவமானமாக இருக்கிறது. போதைக்கு அடிமையான ஒரு நண்பன் எனக்கு இருக்கிறான். இல்லையென்றால் என்னால் அதற்குப் பணம் செலவழிக்க இயலாது. படுக்கச் செல்வதற்கு முன்பு தண்ணீர் அருந்தாமல் வறட்சியாக அவற்றை ஒவ்வொன்றாக விழுங்குகிறேன். தண்ணீர் குடித்தால் சிறுநீர் கழிக்க வேண்டும். எனக்கு புராஸ்டேட் சுரப்பி பிரச்சினை இருக்கிறது. ஆகவே இரவில் பலமுறை நான் தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மெய்யியலாளரான காண்ட் கூறும் எந்தவிதமான ஒழுக்கக் கோட்பாடுகளும் இருட்டில் இருக்காது. காலம் நின்றுபோய் அகாலமாகிறது. வெற்றிடம் வெற்றிடமாக இல்லை. கைகளால் ஒரு பொருளைப் பிடிக்கிறோம். திடீரென அது நம் கையில் இல்லாமல் போகிறது. என்னிடமுள்ள எரிவாயு விளக்கைக் கொளுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. என்னிடம் இருக்கும் தீக்குச்சிகள் எப்போதும் காணாமல் போய்விடுகின்றன. என்னுடைய அறை சாத்தான்களால் மொய்க்கப்பட்டிருக்கிறது. “ஏய், வினிகர், மதுவின் மகனே, உன்னுடைய கேவலமான தந்திரங்களை நீ சிறிது நிறுத்தினால்தான் என்ன?” என்று எப்போதாவது நான் அவற்றுடன் பேசுவதுண்டு.

“சில காலத்துக்கு முன்பு, ஒரு நாள் நள்ளிரவில் என்னுடைய அறைக்கதவு பலமாக அறைந்து தட்டப்படும் சத்தமும் அதனுடன் ஒரு பெண்ணின் குரலும் சேர்ந்து ஒலித்தது. அவள் அழுகிறாளா சிரிக்கிறாளா என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. “இது யாராக இருக்கும்? லிலித்? நமாஹ்? கேடவ் மெரிரியின் மகள் மெக்லத்?” என்று மனதுக்குள் நினைத்தபடி, “சீமாட்டியே, நீங்கள் தவறுசெய்கிறீர்கள்” என்று சத்தமாகச் சொன்னேன். ஆனால் அவள் தொடர்ந்து கதவை அறைந்து தட்டியபடியே இருந்தாள். பிறகு யாரோ கீழே விழும் சத்தம் கேட்டது. கதவைத் திறக்கும் துணிச்சல் எனக்கு இல்லை. நான் தீக்குச்சிகளைத் தேடத் தொடங்கினேன். பிறகு பார்த்தால் அவை என் கையிலேயே இருந்தன. நான் கட்டிலில் இருந்து கீழே இறங்கி எரிவாயு விளக்கைப் பற்றவைத்து என்னுடைய மேலங்கியையும் காலணிகளையும் அணிந்துகொண்டேன். என்னுடைய தோற்றத்தைக் கண்ணாடியில் ஒரு பார்வை பார்த்தபோது அதில் தெரிந்த என்னுடைய பிம்பத்தைப் பார்த்து எனக்கே பயமாக இருந்தது. என்னுடைய முகம் நோய்வாய்ப்பட்டும் சவரம் செய்யப்படாமலும் இருந்தது. நான் கதவைத் திறந்தேன். இரவு நேர உடையும் அதன் மீது விலையுயர்ந்த தோல் அங்கியும் அணிந்திருந்த ஒரு இளம்பெண், வெற்றுப் பாதங்களுடன் நின்றிருப்பதைப் பார்த்தேன். அவளுடைய பொன்னிறக் கூந்தல் கலைந்திருந்தது. “என்ன விஷயம்?” என்று கேட்டேன். “யாரோ என்னைக் கொல்வதற்கு முயல்கிறார்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். என்னைத் தயவுசெய்து உள்ளே அனுமதியுங்கள். விடியும் வரை உங்கள் அறையில் இருப்பதற்கு என்னை அனுமதியுங்கள்” என்றாள்.

“அவளைக் கொல்வதற்கு யார் முயல்கிறார்கள் என்று நான் கேட்க விரும்பினேன். அவள் குளிரில் விறைத்துப் போயிருப்பதைப் பார்த்தேன். ஒருவேளை அவள் குடித்தும் இருக்கலாம். நான் அவளை அறைக்குள் அனுமதித்தபோது அவள் தன் கையில் அணிந்திருந்த பெரிய வைரங்கள் பதித்த ஒரு காப்பைப் பார்த்தேன். “என்னுடைய அறையில் கணப்பு இல்லை” என்றேன். “வீதியில் சாவதைவிட அது பரவாயில்லை” என்றாள். “நாங்கள் இருவரும் அந்த நொடியில் அங்கு தனியே நிற்கிறோம். ஆனால் நான் அவளுக்காக என்ன உதவி செய்யமுடியும்? என் அறையில் ஒரு படுக்கை மட்டுமே இருக்கிறது. நான் மது குடிப்பதில்லை. அதாவது எனக்கு அனுமதியில்லை. நண்பனொருவன் எனக்குப் பரிசளித்திருந்த ஒரு குடுவைப் பிராந்தியும் கெட்டுப்போகும் நிலையில் இருந்த பழைய பிஸ்கெட்டுகளும் என்னிடமிருந்தன. சிறிது மதுவும் ஒரு இனிப்பு பிஸ்கெட்டும் அவளுக்குத் தந்தேன். மது அவளுக்குப் புத்துணர்ச்சி அளித்தது போல் தோன்றியது. “நீங்கள் இந்தக் கட்டிடத்தில்தான் வசிக்கிறீர்களா?” என்று கேட்டேன். “இல்லை. நான் வார்சா நகரின் மரங்களடர்ந்த பெரிய வீதியில் உள்ள உசஸ்டௌஸ்கி மாளிகையில் வசிக்கிறேன்” என்றாள்.

“அவள் மேட்டுக்குடியைச் சேர்ந்தவள் என்று உடனே எனக்குப் புரிந்துவிட்டது. அவள் கணவனை இழந்த ஒரு கோமாட்டி என்பதும், ஒரு சிங்கக் குட்டியை வளர்ப்பு மிருகமாக வைத்திருக்கும் காட்டுமிராண்டியான அவளுடைய காதலன் இந்தக் கட்டிடத்தில் வசித்ததையும் அவளுடன் பேசிக்கொண்டிருந்ததில் இருந்து நான் அறிந்துகொண்டேன். அவனும் உயர்குடியின் அங்கமாக இருந்தும், கொலை முயற்சிக் குற்றத்திற்காக ஒரு வருடச் சிறைத்தண்டனை அனுபவித்தவன் என்பதால், அவனைத் தீண்டத்தகாதவனாகவே அவர்கள் கருதினர். இறந்துபோன தன் கணவரின் அம்மாவுடைய வீட்டில் அவள் வசித்ததால் அவனால் அவளைச் சந்திக்க முடியவில்லை. ஆகவே அன்றிரவு அவள் அவனுடைய வீட்டுக்கு வந்திருக்கிறாள். வேறொருவனைக் காதலிக்கிறாளோ என்று சந்தேகப்பட்டு அவளை அடித்து, அவளுடைய நெற்றியின் மீது தன் கைத்துப்பாக்கியை அவன் வைத்திருக்கிறான். இந்தப் பெருங்கதையின் சுருக்கம், அவள் அங்கு கழற்றி வைத்திருந்த தன் மேலங்கியைப் பாய்ந்து எடுத்துக்கொண்டு அவனுடைய அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து வேகமாக ஓடினாள் என்பதே. அவள் வெளியே வந்ததும் அக்கம்பக்கத்திலிருந்த வீடுகளின் கதவுகளைத் தட்ட, யாருமே அவளைத் தம் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இப்படியாகத்தான் இப்போது அவள் என்னுடைய இந்தச் சிறிய அறையை வந்தடைந்திருக்கிறாள்.

“சீமாட்டியே, உங்கள் காதலர் இப்போது உங்களைத் தேடிக்கொண்டிருக்கலாம். ஒருவேளை அவர் இங்கு வந்து உங்களைப் பார்த்துவிட்டால் என்னாவது? உங்களை அவரிடமிருந்து பாதுகாக்கும் மாவீரனின் நிலையில் இப்போது நான் இல்லை” என்றேன்.

“அவன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்திருக்கிறான். ஆகவே எனக்குத் தொல்லை தரும் துணிவெல்லாம் இப்போது அவனுக்கு இல்லை. அவனுடனான என் உறவு காலத்துக்கும் முறிந்துவிட்டது. என் மீது கருணை கொள்ளுங்கள். இந்த நள்ளிரவில் என்னை வெளியே அனுப்பிவிடாதீர்கள்” என்றாள்.

“நாளை இங்கிருந்து உங்கள் வீட்டுக்கு எப்படித் திரும்பிச் செல்வீர்கள்?”

“அது எனக்குத் தெரியாது. வாழ்வு சலிப்பாக இருக்கிறது. ஆனாலும் நான் அவனால் கொல்லப்பட விரும்பவில்லை.” 

“எப்படியும் எனக்குத் தூக்கம் வரப்போவதில்லை. ஆகவே நான் அந்த நாற்காலியில் ஓய்வெடுக்கிறேன். நீங்கள் கட்டிலில் படுத்துக்கொள்ளுங்கள்”. 

அவள், “இல்லை. என்னால் அப்படிச் செய்ய முடியாது. உங்களுக்கு இளம் வயதில்லை. அத்துடன் நீங்கள் உடல் நலமற்று இருப்பதாகத் தெரிகிறது. தயவுசெய்து நீங்கள் கட்டிலில் உறங்குங்கள். நான் இந்த நாற்காலியில் அமர்ந்துகொள்கிறேன்” என்றாள்.

“நாங்கள் வெகுநேரம் வாதிட்டோம். பிறகு இருவரும் கட்டில் மீது ஒன்றாகப் படுக்க முடிவுசெய்தோம். ‘நீ என்னைப் பார்த்து அச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை’ என்று நான் அவளுக்கு உறுதி கூறினேன். ‘எனக்கு வயதாகிவிட்டது. பெண்களிடம் எதுவும் செய்ய வாய்ப்பற்றவன்’ என்றேன்.

அவள் அதை முழுவதுமாக நம்பினாள்.

“நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? ம்ம். எதிர்பாராத விதமாக இந்தக் கோமாட்டியுடன் நான் கட்டிலில் ஒன்றாகப் படுத்துக்கிடப்பதையும், எந்த நொடியிலும் அவளுடைய காதலன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வரலாம் என்பதையும் நான் அப்போது உணர்ந்தேன். இரண்டு கம்பளிகளால் எங்கள் இருவரையும் போர்த்தினேன். உதவாத விஷயங்களை வைத்து மனம் வழக்கமாகப் பின்னும் சிலந்தி வலைகளைப் பற்றி நான் அப்போது கவலைப்படவில்லை. மிகுந்த மனக்கலக்கத்தில் இருந்ததில் குளிரை மறந்தேபோனேன். அவளுடைய நெருக்கத்தை உணர்ந்தேன். விநோதமான ஒரு கதகதப்பு அவளுடைய உடலில் இருந்து வெளிப்பட்டது. அதுவரை நான் அறிந்திராத, அல்லது நான் மறந்து போயிருக்கக்கூடிய ஒன்றாக அது இருந்தது. என் எதிராளி புதிய உபாயத்தை முயல்கிறானா? என்னுடன் தீவிரமாக விளையாடுவதைக் கடந்த  சில வருடங்களாக அவன் நிறுத்தி வைத்திருந்தான். உனக்கொன்று தெரியுமா? சிரிப்பூட்டும் சதுரங்க விளையாட்டு என்ற ஒன்று இருக்கிறது. நிம்ஜோவிஷ் அடிக்கடி தன் கூட்டாளிகளை முட்டாளாக்கிப் பகடி செய்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். முன்னொரு காலத்தில் மார்ஃபி அத்தகைய சேட்டைகளைச் சதுரங்க விளையாட்டில் செய்பவன் என்று அழைக்கப்பட்டான். என் போட்டியாளரிடம் “சிறப்பு! இது உன்னுடைய உச்சகட்டமான நகர்வு” என்றேன். அதே நொடியில் அவளுடைய காதலன் யார் என்பது எனக்குப் புரிந்தது. அவனை நான் மாடிப்படிகளில் பார்த்திருக்கிறேன். வாட்டசாட்டமான உடலுடனும் ஒரு கொலையாளியின் முகத்துடனும் அவன் இருந்தது நினைவுக்கு வந்தது. ஜாக் கோஹனுக்கு எப்பேர்ப்பட்ட நகைச்சுவையான முடிவு- போலந்தின் ஒத்தெல்லோவால் கொல்லப்படுவது.

“நான் சிரிக்கத் தொடங்கினேன். அவளும் என்னுடன் சேர்ந்துகொண்டாள். நான் அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டேன். அவள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்போது திடீரென ஒரு அதிசயம் நிகழ்ந்தது. நான் மறுபடியும் ஆணாகிவிட்டேன். முன்னொரு சமயம், ஒரு வியாழக்கிழமை மாலையில் ஒரு சிறிய கிராமத்தின் இறைச்சிக் கடை அருகே நான் நின்றிருந்தேன். *சபாத்து (வார ஓய்வுத் திருநாள்) இறைச்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பசுவும் காளையும், வெட்டுப்படுவதற்கு முன்பு  உடலுறவுகொள்வதை அப்போது நான் பார்த்தேன். அவள் ஏன் இதற்கு ஒப்புக்கொண்டாள் என்பது எனக்குத் தெரியப்போவதே இல்லை. ஒருவேளை, அவள் தன் காதலனைப் பழிவாங்கும் வழியாகக்கூட இது இருக்கலாம். அவள் என்னை முத்தமிட்டு கொஞ்சல் மொழிகளைக் காதருகே கிசுகிசுத்தாள். அப்போது பலத்த காலடியோசை ஒன்று எங்களுக்குக் கேட்டது. யாரோ தம் முழங்கையால் கதவைப் பலமாக இடித்தனர். அவள் கட்டிலில் இருந்து புரண்டு தரையில் விழுந்தாள். இறப்பதற்கு முன் சொல்லும் பிரார்த்தனையை நான் கூற விரும்பினேன். ஆனால் கடவுளுக்கு முன் இப்படி நிற்பதை அவமானமாக உணர்ந்தேன். ஆனால் என்னைக் கேலிசெய்து சிரிக்கும் எதிராளியின் முன் அவமானப்படுவதைவிட அது பெரிய அவமானமில்லை. இத்தகைய கூடுதல் இன்பத்தை ஏன் நான் அவனுக்குத் தரவேண்டும்? மிகை உணர்ச்சிகொண்ட படைப்புகளுக்குக்கூட எல்லைகள் இருக்கின்றனவே!

“அந்தக் காட்டுமிராண்டி தொடர்ந்து கதவைத் தட்டியபடியே இருந்தான். அவன் அப்படி விடாப்பிடியாகத் தட்டியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அடுத்து அவன் தன் காலால் கதவை எட்டி உதைத்தான். கதவு கிரீச்சிட்டதே தவிர திறக்கவில்லை. மிகவும் பயமாக இருந்தாலும் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அதற்குப் பிறகு அந்த ஏவுகணையின் பாய்ச்சல் நின்றுவிட்டது. ஒத்தெல்லோ அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டான். அடுத்த நாள் காலை அந்தக் கோமாட்டியின் காப்பை ஒரு அடகுக்கடைக்கு எடுத்துப் போனேன். அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு என் கதாநாயகிக்கு உடையும் உள்ளாடைகளும் காலணிகளும் வாங்கினேன். அந்த உடையும் காலணிகளும் அவளுடைய உடல் அளவுக்குப் பொருத்தமாக இல்லை. ஆனால் அவளுக்கு உடனடியாகத் தேவைப்பட்டதென்னவோ ஒரு வாடகைக் கார்தான். அதாவது எங்காவது ஒளிந்திருக்கிற அவளுடைய காதலன் அவள் படிகளில் இருந்து இறங்கும்போது அவளைத் தாக்கவில்லை என்றால் அது தேவைப்படும். ஆனால் அன்றிரவு காணாமல் போனவன் மறுபடியும் திரும்பி வரவேயில்லை. இது விசித்திரமாக இருந்தது. அங்கிருந்து கிளம்புவதற்கு முன் என்னை முத்தமிட்டவள், தொலைபேசியில் தன்னைத் தொடர்புகொள்ளுமாறு என்னை வற்புறுத்தினாள். ஆனால் நான் அந்த அளவுக்கு முட்டாள் அல்ல. டால்மண்ட் சொல்வது போல, ‘அதிசயங்கள் எல்லா நாளும் நடப்பதில்லை’. 

“முதுமையில் எனக்கிருந்த அதே தயக்கம்தான் காஃப்காவையும் அவருடைய இளமைக் காலத்தில் பீடித்து வதைத்தது. அது அவருடைய எல்லாச் செயல்களிலும்- காமம், எழுத்து என அனைத்திற்கும்- தடங்கலாக இருந்தது. அவர் காதலுக்காக ஏங்கினார். ஆனால் அவர் அதிலிருந்து தப்பித்து ஓடிக்கொண்டே இருந்தார். ஒரு வாக்கியத்தை எழுதி உடனே அதை அடித்துவிடுவார். மனப்பிறழ்வும் மேதைமையும் ஒருங்கே கொண்ட ஓட்டோ வெய்னிங்கரும் இப்படித்தான். நான் அவரை வியன்னாவில் சந்தித்தேன். அவரிடமிருந்து சொலவடைகளும் புதிர்களும் பொழிந்தன. ‘கடவுள் மூட்டைப் பூச்சியை உருவாக்கவில்லை’ எனும் அவருடைய கூற்றை நான் மறக்கவே மாட்டேன். இந்தச் சொற்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் உனக்கு வியன்னாவைத் தெரிந்திருக்க வேண்டும். ஆனாலும் யார்தான் மூட்டைப்பூச்சியைப் படைத்திருப்பார்கள்?

“அடடா! இந்த பாம்பெர்க் இருக்கிறானே! கல்லறைக்குள் ஓய்வெடுக்க மறுக்கும் பிணத்தைப் போல தன் குட்டைக் கால்களுடன் அவன் வாத்து போல எப்படி அசைந்தசைந்து நடக்கிறான் என்று பார். தூக்கம் வராத பிணங்களுக்காக ஒரு குழு ஆரம்பிப்பது நல்ல யோசனை. அவன் ஏன் இரவு முழுதும் பதுங்கியபடி நடமாடிக்கொண்டிருக்கிறான்? கேளிக்கை விடுதிகளால் அவனுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது? பல வருடங்களுக்கு முன்பு நாங்கள் பெர்லினில் இருந்தபோதே மருத்துவர்கள் அவனைக் கைவிட்டுவிட்டார்கள். ஆனால் காபி விற்பனைக் கடைகளில் விடிகாலை நான்கு மணி வரை அமர்ந்து விலைமாதர்களுடன் காதல் உணர்வுகளைக் கிளர்த்துகிற கதைகளைப் பேசிக்கொண்டிருப்பதில் இருந்து அது எந்தவிதத்திலும் அவனைத் தடுக்கவில்லை. உணவு, மது, பாலியல் கொண்டாட்டங்களுடன் கூடிய விருந்தை தன் வீட்டில் தரப்போவதாக நடிகர் கிராணட் ஒரு முறை அறிவித்திருந்தார். அந்த விருந்துக்குப் பாம்பெர்கையும் அழைத்திருந்தார். விருந்துக்கு வருபவர்கள் தன் மனைவி அல்லது தோழி என ஒரு பெண்ணைத் தம்முடன் அழைத்து வருமாறு கிராணட் அறிவுறுத்தியிருந்தார். மனைவியோ காமக் கிழத்தியோ இல்லாத பாம்பெர்க், ஒரு விலைமகளுக்குப் பணம் தந்து தன்னுடன் அழைத்துச்செல்ல முடிவுசெய்தான். விருந்தில் அணிந்துகொள்வதற்கென அவளுக்காக அவர் ஒரு ஆடையை வாங்க வேண்டியதாயிற்று.

“எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், தத்துவவாதிகள், மிகுந்த அறிவாற்றல் கொண்டவர்களுடன் வழக்கமாக ஒட்டிக்கொண்டிருக்கும் அவருடைய அடிபொடிகள் ஆகியோர் மட்டுமே அந்த விருந்தில் இருந்தனர். அவர்கள் அனைவரும், பாம்பெர்கைப் போலவே, விலைமாதர்களைத் தம்முடன் அழைத்து வந்திருந்தனர். பலகாலத்துக்கு முன் எனக்குப் பழக்கமான பராகைச் சேர்ந்த ஒரு நடிகையை நான் அழைத்துச் சென்றிருந்தேன். உனக்கு கிராணட்டைத் தெரியுமா? அவர் ஒரு காட்டுமிராண்டி. பிராந்தியைச் சோடா போலக் குடிப்பார். பத்து முட்டைகளை உடைத்துப் போட்டு ஊற்றிய ஒற்றை ஆம்லெட்டைச் சாப்பிடுவார். அங்கிருந்த மேதைமை நிறைந்த பார்வையாளர்களைக் கவர நினைத்தவர், விருந்தினர்கள் வந்ததும் தன்னுடைய ஆடைகளைக் களைந்து பித்துப்பிடித்தாற் போல அந்த விலைமாதர்களைச் சூழ்ந்துகொண்டு நிர்வாண நடனமாட ஆரம்பித்தார். அந்தச் சிந்தனையாளர்களும் இந்தக் காட்சியை நாற்காலியில் அமர்ந்தவாறே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தனர்.

“அதன் பிறகு ஷோப்பன்ஹாவர் இதைச் சொன்னார்…. நீட்ஷே அதைச் சொன்னார் என்று காமத்தைக் குறித்து அவர்கள் கலந்துரையாட ஆரம்பித்தனர். இதனைத் தம் கண்களால் நேரிட்டுக் காணாத யாருக்குமே இத்தகைய மேதைகள் எவ்வளவு முட்டாள்தனத்துடன் இருக்க முடியும் என்பதைக் கற்பனை செய்து பார்ப்பதுகூட கடினமாக இருக்கும். இவற்றின் இடையில் பாம்பெர்க்கின் உடல்நலம் திடீரென மோசமானது. அவனுடைய உடல் பசும்புல்லின் நிறத்தில் மாறியது, பதற்றத்தில் வியர்த்துக் கொட்டியது. “ஜாக், என் கதை முடிந்தது. இறப்பதற்கு இதுவொரு நல்ல இடம்” என்றான். சிறுநீரகம் அல்லது கணையம் தொடர்பான பலமான பாதிப்பு அவனுக்கு அப்போது ஏற்பட்டிருந்தது. நானும் இன்னும் சிலரும் அவனை மருத்துவமனைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தோம். அதிருக்கட்டும், எனக்கொரு ஸ்லாட்டி (போலந்து நாணயம்) தர முடியுமா?”

நான், “இரண்டு தருகிறேன்” என்றேன்.

“இரண்டா! நீ போலந்து வங்கியைக் கொள்ளையடித்துவிட்டாயா என்ன?”

“ஒரு கதையை விற்றுப் பணமாக்கினேன்.”

“வாழ்த்துகள். இன்றிரவு என்னுடைய வீட்டுக்கு வா. நாம் ஒன்றாக உண்போம்.” 

2

நாங்கள் உணவருந்திக்கொண்டிருந்த போது பாம்பெர்க் எங்களுடைய மேஜைக்கருகே வந்தான். அவனுடைய உடல் ஆரோக்கியம் குன்றி, உணவுக் குறைபாட்டால் மெலிந்து, முன் பக்கம் வளைந்திருந்தது. மூட்டு சூம்பிக் கிடந்த தன் கால்களில் இருந்து பாதம் வரை மூடும் வகையிலான உயர்ரகத் தோல் காலணியை அணிந்திருந்தான். அவனுடைய கூரான மண்டையில் கொஞ்சமே கொஞ்சமாக இருந்த தலைமுடி வெளியே தெரிந்தது. அவனுடைய ஒரு கண்ணைவிடப் பெரியதாகவும், சிவந்தும், பிதுங்கிக்கொண்டுமிருந்த மற்றொரு கண் தன்னைக் கண்டு தானே பயப்படுவது போலிருந்தது. எலும்பு துருத்தும் தன் சிறிய கைகளை எங்கள் மேஜை மீது வைத்துச் சாய்ந்துகொண்டு, கோழி முட்டையிடுகையில் எழுப்பும் கேவுகிற குரலில் “‘காஃப்கா’ஸ் கேஸல்’ நூலை நேற்று படித்தேன். சுவாரஸ்யமாக இருந்தது. மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் அவன் என்ன சொல்ல வருகிறான்? ஒரு கனவு என்று பார்த்தால் அது மிக நீண்ட காலம். உருவகங்கள் சிறியதாக இருக்க வேண்டும்” என்றான்.

மென்றுகொண்டிருந்த உணவை வேகமாக விழுங்கிய ஜாக், “வா, இங்கு உட்கார்ந்து பேசுவோம். ஒரு மேதை விதிகளைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

“மேதைகளும் கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்று சில உள்ளன. போரும் வாழ்வும் நாவலைவிட வேறு எந்த நாவலும் பெரியதாக இருக்கக்கூடாது. போரும் வாழ்வும் நாவலேகூட மிக நீளமானதுதான். பதினெட்டு தொகுதிகளாக பைபிள் இருந்திருந்தால், அது எப்போதோ மறக்கப்பட்டிருக்கும்.”

“டால்மண்ட் முப்பத்து ஆறு தொகுதிகள்‌ கொண்டது. ஆனால் யூதர்கள் அதை மறந்துவிடவில்லையே?”

“யூதர்கள் அதிக நினைவாற்றல் கொண்டவர்கள். அது நம்முடைய துரதிர்ஷ்டம். நாம் நம்முடைய புனித பூமியில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் இப்போது மறுபடி அதற்குள் நுழைய முயல்கிறோம். இது பைத்தியக்காரத்தனம் இல்லையா? நம்முடைய இலக்கியம் இந்தப் பைத்தியக்காரத்தனத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது என்றால் அது சிறப்பானது‌. ஆனால் நம்முடைய இலக்கியமோ அசாதாரணமான வகையில் விவேகமாக இருக்கிறது. சரி, இதைப் பற்றி நாம் பேசியது போதும்.”

தான் சாய்ந்துகொண்டிருந்த மேஜையிலிருந்து பெருமுயற்சி செய்து நிமிர வேண்டியிருந்ததால் முகம் சுழித்துக்கொண்டே எழுந்த பாம்பெர்க், கால்களை இழுத்து வைத்தபடி அங்கிருந்து மெதுவாக நடந்து சென்றான். கிராமஃபோனுக்கு அருகே சென்று நடனம் ஆடுவதற்கான ஒரு இசைத்தட்டைச் சுழலவிட்டான். பல வருடங்களாக அவன் ஒரு சொல்கூட எழுதவில்லை என்பதை எழுத்தாளர் சங்கத்தில் இருந்த அனைவரும் அறிந்திருந்தனர். தன் நண்பரும் ‘எண்ட்ரோபி ஆஃப் ரீசன்’ நூலின் ஆசிரியருமான முனைவர் மிஷ்கினின் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு தன்னுடைய இந்த முதிய வயதில் அவன் நடனமாடுவதற்குக் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தான். மனித அறிவு நொடித்துப் போகும் என்றும் உண்மையான ஞானத்தைத் தீவிரமான காம உணர்வின் வழியாக மட்டுமே எய்த முடியும் என்பதையும் மிஷ்கின் அந்த நூலின் வழியே நிறுவ முயன்றிருந்தார்.

“இவன் ஒரு அரை வேக்காடு. காஃப்கா, தானும் பாம்பெர்க் போல ஆகிவிடுவோமோ என்று அச்சப்பட்டார். அதனால்தான் அவர் தன்னைத்தானே அழித்துக்கொண்டார்” என்றபடி ஜாக் கோஹன் தன் தலையை உலுக்கிக்கொண்டார். 

“அந்தக் கோமாட்டி அதற்குப் பிறகு எப்போதாவது உங்களைத் தொடர்புகொண்டார்களா?” என்று கேட்டேன். ஜாக் தன் சட்டைப் பையிலிருந்து கண்ணாடியை வெளியே எடுத்து அணிந்துகொண்டார்.

“அவள் என்னைத் தொடர்புகொண்டிருந்தால்தான் என்ன? என்னுடைய வாழ்க்கையில் எல்லாமே சொற்களாக மாறிவிடுகின்றன. எல்லாம் வெறும் பேச்சு. பேச்சு மட்டும்தான். இறுதியில் மனிதன் ஒரு சொல் இயந்திரமாக மாறிவிடுவான் என்பது மிஷ்கினின் தத்துவம். மனிதன் தன் சொற்களை உண்டு, சொற்களை அருந்தி, சொற்களை மணந்து, சொற்களால் தனக்கே நஞ்சை ஊட்டிக்கொள்வான். இதைச் சொல்லும்போது மிஷ்கினும்கூட கிராணட் அளித்த அந்த காமக் களியாட்ட விருந்தில் கலந்துகொண்டது நினைவுக்கு வருகிறது. தான் போதித்தவற்றைப் பயில்வதற்காக அவர் அங்கு வந்திருந்தார். ஆனால் அங்கு வராமலே போயிருந்தாலும் ‘தி எண்ட்ரோபி ஆஃப் ஃபேஷன்’ நூலை அவரால் எழுதியிருக்க முடியும். ஆம், அந்தக் கோமாட்டி அடிக்கடி என்னைத் தொடர்புகொண்டாள். அவளும் ஒரு சிந்தனையாளர்தான். ஆனால் அறிவற்ற சிந்தனையாளர். உண்மையைச் சொல்லப்போனால் பெண்கள் தங்கள் உடல் அழகை வெளிக்காட்டிக்கொள்ளத் தங்களால் ஆன அனைத்தையும் செய்தாலும் காமத்தின் அர்த்தம் குறித்து அவர்களுக்கு எவ்வளவு குறைவாகத் தெரியுமோ அதே அளவுதான் அறிவுத்திறம் குறித்தும் அவர்களுக்குத் தெரியும்.

“உதாரணத்திற்கு, பெருமாட்டி ஷிசிக்கை எடுத்துக்கொள்வோம். உடலைத் தவிர அவளிடம் வேறு என்ன இருந்தது? உடல் என்பது என்ன என்று அவளைக் கேட்பதற்கு முயன்று பார். இப்போது அவள் அழகிழந்து விட்டாள். பராகில் அவள் ஒரு நடிகையாக இருந்த காலத்தில் அவளிடம் ஏதோ ஒன்று இருந்தது. நான் அவளுடைய கதாநாயகனாக நடித்தேன். அவள் மீச்சிறிய ஒரு திறமைசாலி. பணம் ஈட்டுவதற்காகப் பராகுக்கு வந்த நாங்கள், எங்களுக்காக ஒரு மேதை அங்கு காத்திருந்ததைப் பார்த்தோம். அது பகுத்தறிவுடைய ஒரு மனிதன் தன்னை உட்படுத்திக்கொண்ட உச்சபட்ச சுயவதை. காஃப்கா ஒரு யூதராக வாழ விரும்பினார். ஆனால் அது எப்படி என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் சிறப்பாக வாழ விரும்பினார். அதையும் எப்படிச் செய்வது என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் ஒருமுறை அவரிடம், “ஃபிரான்ஸ் (காஃப்கா), நீ ஒரு இளைஞன். நாங்கள் செய்வதையெல்லாம் நீயும் செய்” என்று கூறினேன்.

“எனக்குத் தெரிந்த ஒரு விபச்சார விடுதி பராகில் இருந்தது. என்னுடன் அங்கு செல்வதற்கு நான் அவரை இணங்க வைத்தேன். அவர் அதுவரை பெண்களுடன் உடலுறவு கொண்டதில்லை. அவருடன் பேசிக்கொண்டிருந்த பெண்ணைப் பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டிய தேவையில்லை என்று நினைக்கிறேன். மத்திய வர்க்கச் சிந்தனை எனும் சதுப்பு நிலத்தில் தன் கழுத்து வரை மூழ்கியிருந்தார். அவரைச் சுற்றியிருந்த யூதர்களுக்கு ஒரே ஒரு இலட்சியம்தான் இருந்தது. அது, வேற்றுச் சாதியினராக மாறிவிட வேண்டும் என்பதே. ஆனால், செக்கெஸ்லோவாகியாவைச் சேர்ந்த வேற்றுச் சாதியினராக மாற வேண்டுமே தவிர ஜெர்மனியைச் சேர்ந்த வேற்றுச் சாதியினராக மாறக்கூடாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்தச் சாகசத்துக்கு எப்படியோ நான் அவரைச் சம்மதிக்க வைத்துவிட்டேன். முன்னொரு காலத்தில் ஏழைகளின் வாழ்விடமாக இருந்த இருட்டான சந்துக்கு அவரைக் கூட்டிக்கொண்டு சென்றேன். அங்கேதான் அந்த விபச்சார விடுதி இருந்தது.

“நாங்கள் குறுகலான படிகளில் ஏறிச்சென்றோம். நான் கதவைத் திறந்தேன். விபச்சாரிகள், பாலியல் தரகர்கள், வாடிக்கையாளர்கள், சீமாட்டிகள் ஆகியோரைக் கொண்ட ஒரு நாடக மேடை போல அது காட்சியளித்தது. அந்தத் தருணத்தை என்னால் எப்போதுமே மறக்க முடியாது. நடுங்கத் தொடங்கிய காஃப்கா, என்னுடைய சட்டையின் கைப்பகுதியைப் பிடித்து இழுத்தார். பிறகு படிகளில் இறங்கி வேகமாக ஓடத் தொடங்கினார். அவர் ஓடிய வேகத்தைப் பார்த்து தன்னுடைய காலை உடைத்துக் கொள்வாரோ என்று எனக்குப் பயமாக இருந்தது. வீதியை அடைந்ததும் அங்கு நின்று, ஒரு பள்ளி மாணவனைப் போல பயத்தில் வாந்தி எடுத்தார். நாங்கள் திரும்பிச் செல்லும்போது ஒரு பழைய யூத சமயப் பள்ளியைக் கடந்தோம். காஃப்கா கோலெம்* (யூதர்கள் களிமண்ணுக்கு உயிரூட்டி உண்டாக்கிய பிசாசு போன்ற உருவம்) குறித்துப் பேசத் தொடங்கினார். அவர் கோலெம் இருப்பதாக நம்பினார். எதிர்காலத்தில் அத்தகைய ஒன்று தோன்றலாம் என்று அவர் நினைத்தார். ஒரு சிறிய களிமண் பொம்மைக்குச் சொற்கள் உயிர் தருவது என்பது ஒரு அதிசயம். புனித வார்த்தைகளை மட்டுமே உச்சரித்து இறைவன் உலகை உருவாக்கியதாக கபாலா* (பண்டைய யூதர்கள் கடைபிடித்த பைபிளின் மாற்று வடிவம்) கூறுகிறதுதானே? ஆதியில் அது மாற்ற இயலாத சத்தியமாக இருந்தது.

“ஆமாம். இவை அனைத்துமே ஒரு பெரிய சதுரங்க ஆட்டம்தான். என் வாழ்க்கை முழுவதும் நான் மரணத்தைக் கண்டு அச்சப்பட்டிருக்கிறேன். இப்போது கல்லறையின் வாயிற்படியில் நிற்கும்போது நான் அச்சப்படுவதை நிறுத்திவிட்டேன். விளையாட்டை மெதுவாக ஆடவேண்டும் என்று என்னுடைய கூட்டாளி நினைப்பது தெளிவாகப் புரிகிறது. அவன் என்னுடைய ஒவ்வொரு சதுரங்கக் காயாக வீழ்த்திக்கொண்டே இருந்தான். நடிகனுக்குரிய என் தோற்றத்தை முதலில் அகற்றினான். எழுத்தாளன் என்று மற்றவர்களால் அழைக்கப்படும் ஒருவனாக என்னை மாற்றினான். அதை முடித்ததுமே, தொடர்ந்து எழுதுவதால் எழுத்தாளர்களின் கைகளில் ஏற்படும் விறைப்புத்தன்மையுடன் கூடிய கடும் வலி எனும் நோயை எனக்குத் தந்தான். அவனுடைய அடுத்த நகர்வு என்னை ஆண்மையற்றவனாக மாற்றியதுதான். ஆனாலும் சதுரங்கத்தில் என் ராஜாவை வீழ்த்தும் கட்டத்துக்கு வெகுதூரத்தில் அவன் இருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். இது எனக்குப் பலம் தருகிறது. என்னுடைய அறை குளிராக இருக்கிறது. அது அப்படியே இருக்கட்டும்.

“எனக்கு இரவு உணவு இல்லை. அதனால் நான் இறந்துபோய்விட மாட்டேன். அவன் என் வெற்றி வாய்ப்பைத் தந்திரமாக நாசப்படுத்துகிறான். நான் அவனுடைய வெற்றி வாய்ப்பைத் தந்திரமாக நாசப்படுத்துகிறேன். சில காலத்துக்கு முன்பு ஒரு நாள் இரவில் நான் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். வெளியே குளிர் பற்றி எரிந்துகொண்டிருந்தது. அப்போதுதான் என்னுடைய சாவியை நான் தொலைத்து விட்டது எனக்குத் தெரிந்தது. நான் வாயிற் காவலரை எழுப்பினேன். ஆனால் அவரிடம் மாற்றுச் சாவி இல்லை. அவர் மீதிருந்து வோட்காவின் நாற்றம் அடித்தது. அங்கிருந்த அவருடைய நாய் என்னுடைய காலைக் கடித்துவிட்டது. இதற்கு முந்தைய காலகட்டமாக இருந்திருந்தால் எல்லா வழிகளும் அடைபட்டுவிட்டாற் போல நான் தவித்துப் போயிருப்பேன். ஆனால் இந்த முறை நான் என் எதிராளியிடம், “எனக்கு நிமோனியா வரவேண்டும் என்று நீ விரும்பினால் அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றேன்.

“வீட்டை விட்டு வெளியேறிய நான் வியன்னா புகைவண்டி நிலையத்திற்குச் செல்ல முடிவுசெய்தேன். ஏறத்தாழ காற்றே என்னை அங்கு கொண்டுபோய்ச் சேர்த்தது. ட்ராம் வண்டிக்காக சற்றேறக் குறைய முக்கால் மணி நேரம் அந்த இரவு நேரத்தில் நான் காத்திருந்தேன். நடிகர்கள் சங்கத்தைக் கடந்தபோது அதன் ஜன்னல் வழியாக வெளிச்சம் தெரிவதைப் பார்த்ததும் அந்த இரவை அங்கு கழிக்கலாம் என்று நினைத்தேன். அதன் படிகளில் ஏறியபோது என்னுடைய காலணி எதன் மீதோ தட்டிய ஓசை கேட்டது. குனிந்து பார்த்ததும் அதுவொரு சாவி என்று தெரிந்தது. என்னுடைய சாவி. இந்தக் கட்டிடத்தின் இருளான படிகளில் ஒரு சாவியைக் கண்டெடுக்கும் வாய்ப்பு கிடைப்பதென்பது இலட்சத்தில் ஒருமுறை நடக்கக்கூடியது. ஆனால் என் எதிராளியோ தான் தயாராவதற்குள் நான் போராடுவதை நிறுத்திவிடுவேன் என்று நினைத்திருக்கலாம். அதென்ன சொல்வோம், விதிப்பயன் கோட்பாடா? சரி, உனக்குப் பிடித்திருந்தால் விதிப்பயன் என்றே இதனைக் கூறிக்கொள்.”

தொலைபேசியில் யாரையோ அழைப்பதற்காக ஜாக் எழுந்தார். நடுங்கும் கால்களுடன் பாம்பெர்க் ஒரு இலக்கியப் பெண்மணியுடன் நடனமாடுவதை அங்கேயே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவருடைய கண்கள் மூடியிருந்தன. ஒரு தலையணை மீது சாய்ந்திருப்பது போல அவர் அவளுடைய மார்பின் மீது சாய்ந்துகொண்டு இருந்தார். அவர் நடனமாடிக்கொண்டே தூங்குவது போல அந்தக் காட்சி இருந்தது. ஜாக் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார். வழக்கமாக ஒரு தொலைபேசி அழைப்புக்கு ஆகும் நேரத்தைவிட அதிக நேரமானது. அவர் திரும்பி வந்தபோது அவருடைய கண்களில் இருந்த கண்ணாடி மின்னியது.

“அடுத்த அறையில் யார் இருக்கிறார்கள் என்று உன்னால் யூகிக்க முடிகிறதா? பெருமாட்டி ஷிசிக்! காஃப்காவின் மாபெரும் காதல்!”

“உண்மையாகவா?”

“நான் அவளிடம் உன்னைப் பற்றிக் கூறியிருக்கிறேன். உன்னை அவளுக்கு அறிமுகம் செய்துவைக்க விரும்புகிறேன்.”

“வேண்டாம்.”

“ஏன் வேண்டாம்? காஃப்காவால் நேசிக்கப்பட்ட ஒரு பெண் நிச்சயமாகச் சந்திக்கப்பட வேண்டியவள்”.

“எனக்கு விருப்பமில்லை”.

“நீ கூச்சப்படுகிறாய். அதுதான் உண்மை. காஃப்காகூட யூத சமயக் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவனைப் போலக் கூச்சப்படுவார். நான் எப்போதும் கூச்சப்பட்டதே இல்லை. ஒருவேளை நான் விளங்காமல் போனதற்கு அதுவே காரணமாக இருக்கலாம். என் நெருங்கிய நண்பா! இந்தக் கட்டிடத்தின் வாயிற்காவலர்களுக்குத் தருவதற்குப் பத்து, என்னுடைய கட்டிடத்தின் வாயிற்காவலர்களுக்குத் தருவதற்குப் பத்து என்று எனக்கு இன்னும் இருபது கிராஷென்கள் (நாணயம்) வேண்டும். பணம் இல்லாமல் நான் வீட்டுக்குத் திரும்பிப் போக முடியாது”.

நான் என்னுடைய சட்டைப் பையிலிருந்து சிறிது சில்லறையை எடுத்து அவரிடம் தந்தேன்.

“இவ்வளவா? நீ நிச்சயமாக இன்று ஒரு வங்கியைக் கொள்ளை அடித்திருக்க வேண்டும். நாற்பத்து ஆறு கிராஷென்கள்! கடவுள் இருக்கிறார். இதற்கான வெகுமதியை அவர் உனக்குத் தருவார். ஜாக்குடன் இந்த விளையாட்டை விளையாடிக்கொண்டிருப்பது கடவுள் இல்லாமல் வேறு யார்?”

*

ஆங்கில மூலம்: A friend of Kafka, Isaac Bashevis Singer, From “Isaac Bashevis Singer: The Collected Stories”, Published by “Library of America”, Nov.2015 Edition.

1 comment

Manoharan August 7, 2021 - 8:13 pm

All the characters of this story have well potent

Comments are closed.