தாமஸ் மன் ஏன் எழுதினார்? – செஸில் C.H. கலேந்தர்

1 comment

1875ல் பிறந்த தாமஸ் மன் (Thomas Mann), இருபதாம் நூற்றாண்டின் தவப்புகழ்பெற்ற ஜெர்மன் எழுத்தாசிரியர். 1929ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. வெனிஸ் மரணம் (Death in Venice) குறுநாவல், மாயமலை (The Magic Mountain) நாவல் ஆகிய இரு படைப்புகளின் மூலமாக அமேரிக்காவில் நன்கு அறியப்பட்டவர். மன் பற்றி எழுதப்பட்ட வாழ்க்கை வரலாற்று நூல், அதன் ஆசிரியர் பீட்டர் டி மெண்டிலோசனின் (Peter de Mendelssohn) மரணத்தால், 1982ல் முழுமை பெறவில்லை. அவரது இறப்பிற்குப் பிறகு மன்னுடைய வாழ்நாளின் 1918, 1933 ஆகிய ஆண்டுகள் குறித்த இரு அத்தியாயங்கள் வெளியாகின. ரிச்சர்ட் வின்ஸ்டன் (Richard Winston) எழுதிய இன்னொரு வாழ்க்கை வரலாற்று நூலும், நூலாசிரியரின் இறப்பால் 1911 வரையிலான தாமஸ் மன்னின் வாழ்க்கைக் குறிப்புகளோடு முடிந்தது. யூகன் கோல்பே (Jürgen Kohlbe) தாமஸ் மன் மியுனிக்கில் வாழ்ந்த காலகட்டத்தை (1894 – 1933) மட்டுமே எழுதியிருக்கிறார். 1975ல் மன்னுடைய நாட்குறிப்பேடுகள் கிடைக்கப்பெற்ற பின் அவரது முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல்கள் வெளியாகின.

மன், தனது 14ஆம் வயது முதல் நாட்குறிப்புகள் எழுதியவர். கடைசிக் குறிப்பை தன் 80ம் அகவையில் 19.07.1955 அன்று – தன் மரணத்திற்கு இரு வாரங்களுக்கு முன் எழுதினார். 1933ஆம் ஆண்டு நாஸிக்கட்சி ஆட்சிக்கு வந்ததும் தன்னை நிச்சயம் சிறைக்கோ, வதைமுகாமுக்கோ அனுப்புவார்கள் என்ற எண்ணத்தில், தானாகவே நாட்டை விட்டு வெளியேறி ஜெர்மனிக்கு வெளியே உலவியதைப் பற்றி அவற்றில் பகர்ந்தார். அவரது நாட்குறிப்பேடுகள் மியுனிக்கில் இருந்த அவரது இல்லத்தில் கிடந்தன. இரண்டாம் உலகப்போரின் போது நாஸிக்கள் கைகளில் அவை சிக்கிவிடக்கூடும் என்று அஞ்சியவர் தன் மகன் கோலோவிடம் சொல்லி – மரத்தரைக்கு அடியில் துணியால் உறையிட்டு, கட்டி, மெழுகிட்டு வைத்திருந்த – அவற்றை எப்படியாவது கைப்பற்ற அறிவுறுத்தினார். கூடவே, கோலோவிடம் ‘அவற்றை வாசித்து விடாதே’ என்றும் தெரிவித்தார். தான் இறந்து இருபதாண்டுகளுக்குப் பிறகே தனது நாட்குறிப்பேடுகள் திறக்கப்பட வேண்டும் என மன் உத்தரவிட்டார். 

1975 முதல் இந்த நாட்குறிப்பேடுகள், பீட்டர் டி மெண்டிலோசன், இங்கி ஜென்ஸ் (Inge Jens) ஆகிய இருவராலும் விரிவான குறிப்புகளுடன் ஜெர்மன் மொழியில் பதிப்பிக்கப்பட்டன. அவை மொத்தம் பத்து தொகுதிகள். முதல் தொகுதி 1918 முதல் 1921 வரையிலான காலகட்டம் குறித்தது. இதர தொகுப்புகள் 1933 முதல் அவரது மரணம் வரையிலான வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றியது. மன்னுடைய அரசியல் சிந்தனைகளின் வளர்ச்சியையும், ஜெர்மானிய, உலக வரலாற்றுப் போக்குகளையும் எடுத்துக்காட்டக்கூடிய 1921 முதல் 1932 வரையிலான நாட்குறிப்பேடுகள் கெடுவாய்ப்பாக மன்னால் எரியூட்டப்பட்டன. 1953 முதல் 1955 வரையிலான காலகட்டத்தைப் பற்றிய இறுதித் தொகுப்பு சமீபத்தில்தான் வெளியானது. 17.02.1986 அன்று தன் நண்பர் ஓட்டோ கிராடொஃபுக்கு (Otto Grautoff) எழுதிய கடிதத்தில் ‘மிகவும் அந்தரங்கமான எழுத்துகளின் தொகுப்பு இப்படி கண்முன் கிடப்பது கடும் சங்கடத்தையும் மன உளைச்சலையும் தருகின்றது’ என்று தன் நாட்குறிப்பேடுகளை எரித்ததற்கான காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார். 21.05.1945 அன்று கலிஃபோர்னியாவில் தன் இல்லத்தில் இருந்தபடி, மாலை தேநீருக்கும் இரவு உணவுக்கும் இடையில் தனது இரண்டாவது எரியூட்டை மேற்கொண்டார். அதுகுறித்து வெகு சாதாரணமாகத் தன் நாட்குறிப்பேட்டில் பதிவும் செய்தார். தனது இறுதி நாவலாகிய Dr. Faustus-ஐ உருவாக்குவதற்கான குறிப்புகளைக் கொண்டிருந்ததால் 1918 முதல் 1921 வரையிலான தனது நாட்குறிப்பேடுகளை அவர் எரிக்காமல் விட்டு வைத்திருந்தார். அந்நாவல் ஜெர்மனி எப்படி ஒரு நாஸித் தேசமாக உருவெடுத்தது என்பதைப் பற்றியது.

https://m.media-amazon.com/images/M/MV5BOGVmYjgzN2MtM2I1YS00ZWY3LWEwN2EtYWRlZGExMDMzN2YyXkEyXkFqcGdeQXVyNDkzNTM2ODg@._V1_.jpg

அவர் மரணித்த ஆகஸ்ட் 1955க்குச் சற்று முன்னும் பின்னும் தாமஸ் மன்னுடைய எழுத்து மீதான வெகுஜன ஆர்வம் குன்றி இருந்தது. தாமஸ் மன் அறிஞர்கள் குழுவினர் – ஜெர்மானிய, ஸ்விட்சர்லாந்து அறிஞர்களோடு சில ஸ்காண்டிநேவிய, அமேரிக்க அறிஞர்களும் அதில் இருந்தனர் – மன்னுடைய படைப்புகளில் ஆழ்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். 1975ல் நாட்குறிப்பேடுகள் வெளியானவுடன் தாமஸ் மன் என்ற தனி நபர் மீதான ஆர்வம் பொதுவெளியில் பல்கிப் பெருகியது. மன்னுடைய தன்னகங்காரம், தற்பால் ஈர்ப்புக் குணங்கள், தனக்கும் தன் குடும்பத்திற்கும் உதவியவர்களைப் பற்றி அவர் சாற்றியிருந்த ஆபாசமான கருத்துகள் ஆகியவை வெளியானதும் அறிஞர்களுக்கு மிகுந்த சங்கடமும் திகைப்பும் ஏற்பட்டன. ஜெர்மன் மொழியை வாசிக்க முடிந்த பலரும் அந்த நாட்குறிப்பேடுகளை வாசித்தனர். அதனால் சென்ற ஆண்டில் மூன்று வாழ்க்கை வரலாறுகள் ஆங்கிலத்திலும் ஒன்று ஜெர்மன் மொழியிலும் பிரசுரமாகின. அந்த வாழ்க்கை வரலாறுகளை மீளாய்வு செய்வது இக்கட்டுரையின் நோக்கமன்று. என்றாலும், மன்னுடைய படைப்புகளுக்குப் பின் ஒற்றைத் தூண்டலாக அவரது பாலியல் சிந்தனைகள் நிறைந்திருக்கின்றன என்ற உட்குறிப்பைத் தெரிவிக்கும் அந்த நூல்களுக்கு எதிர்வினையாகவும் இக்கட்டுரையின் பகுதிகள் இருக்கின்றன. 

மன்னுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் 13 தொகுப்புகளாக உள்ளன. அவற்றுள் ஐந்தில் நாவல்களும் சிறுகதைகளும் உள்ளன; மீதமுள்ளவற்றில் பரந்து விரிந்த பொருட்களைக் கொண்ட கட்டுரைகளும், நினைவுச் சொற்பொழிவுகளும், இரண்டாம் உலகப்போரின் போது தன் நாட்டவருக்கு அவர் விடுக்கும் விண்ணப்பங்களுமாக நிறைந்துள்ளன. அவரது இறப்புக்குப் பின் கிடைத்த 30,000 கடிதங்களில் 2,000 கடிதங்கள் அவரது மூத்த மகள் எரிகா மன்னால் (Erika Mann) தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அவரால் ‘மிகவும் அந்தரங்கமானவை’ என்று கருதப்பட்ட பல கடிதங்கள் தொகுப்புகளில் சேர்க்கப்படாமல் நீக்கப்பட்டன. இந்த விடுபடல்கள் என்றோ மேலதிக ஆய்வுக்காகக் கிடைக்கக்கூடும். இவை தவிர தன் நண்பர்கள் ஓட்டோ கிராடொஃப், இடா பாய்-எட் (Ida Boy-Ed), தன் சகோதரன் ஹென்ரிக் மன் (Heinrich Mann) ஆகியோருக்கு அவர் எழுதிய கடிதங்களின் தொகுப்புகளும் உள்ளன. பல ஆண்டுகளைக் கடந்து, இரண்டு எரியூட்டுக்குப் பிறகும் எஞ்சிய நாட்குறிப்பேடுகளின் பத்து தொகுதிகள் உள்ளன. மன் களைப்புறாத, சன்னதம் கொண்டு எழுதும் எழுத்தாளர். காலையுணவுக்குப் பிறகு நண்பகல் வரை அவர் தன் எழுத்தறைக்குள் அடைந்துகொள்வார். அவருக்கு எக்காரணம் கொண்டும் குறுக்கீடுகள் அறவே கூடாது; சில நேரங்களில் குழந்தைகளின் இரைச்சலைக் கேட்டு கடுமையாக ஒலியெழுப்பி உறுமுவார். மதிய உணவுக்குப் பின் சிற்றுறக்கம்; பின் ஒரு நடை; அதற்குப் பிந்தைய பிற்பகலில் தன் கடிதப் போக்குவரத்துகளைக் கவனிப்பார். பிறகு – பொதுவாகத் தன்னைச் சந்திக்க வருபவர்களுடன் சேர்ந்து – தேநீர். அதன் பின் இரவு உணவு. மாலைகளை அவர் நாடக அரங்குகளிலும் இசைக் கச்சேரிகளிலும் கழிப்பார். இரவு ஓய்வுக்கு முன் தன் நாட்குறிப்பேட்டை எழுதுவார், அதற்குப் பின் வாசிப்பார் – அவர் ஒரு அற்புதமான வாசகர்.  

2

தாமஸ் மன் ஏன் எழுதினார் என்பது பற்றி என்ன சொல்ல முடியும்? தாமஸ் மன்னுடைய படைப்புகளையும் தன் படைப்பாற்றல் குறித்து மன் தெரிவித்த கூற்றுகளையும் ஆராய்வதன் மூலம் அவர் எழுத்துக்கான அடிப்படை ஊக்கம் எதுவாக இருந்தது என்பதை வெளிக்கொணர்வது இக்கட்டுரையின் நோக்கம். 1907ல் பல முக்கியமான ஆசிரியர்களோடு படைப்பூக்கம் குறித்து தன் கருத்துகளை முன்வைப்பதற்காகவும் சந்தித்து கலந்துரையாடவும் சிக்மண்ட் ஃபிராய்டும் அழைக்கப்பட்டார். ‘படைப்பாளிகளும் பகற்கனவு காணுதலும்’ என்ற தலைப்பில் அவர் ஒரு கட்டுரையைச் சமர்ப்பித்தார். குழந்தை விளையாட்டு – பகற்கனவு – மீபுனைவு என்பது பற்றிய அவரது விவாதங்களே அந்த ஆவணத்தின் மைய இழை. ’குழந்தையின் விளையாட்டுகள் இச்சைகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. கூர்ந்து அணுகினால் ஒரேயொரு இச்சையால் – தான் பெரியவனாகி வளர்ந்துவிட வேண்டும் என்ற இச்சையால். குதலைக்கு எப்போதும் ”வளர்ந்து பெரிய ஆளாகுதல்” என்று விளையாடுவதே முதன்மையான விளையாட்டு. பிள்ளைகள் தம் ஆடல்களில் முதியவர்களின் வாழ்க்கையில் எதை எல்லாம் அறிகிறதோ அவற்றையே பதிலீடு செய்தும் மீள் நடிப்பு செய்தும் பார்க்கின்றன. இந்த இச்சையை மறைத்தாக வேண்டிய கட்டாயம் ஏதும் அவற்றுக்கில்லை. ‘மீபுனைவையும் ஆசிரியரின் குழந்தைப் பருவப் பகற்கனவுகளையும் இணைத்துப் பார்க்கிறார் ஃபிராய்ட். அந்தப் பகற்கனவுகளைத் தம் படைப்புகளின் வழியே மீள மீளச் சிறைபிடிப்பதும் அவற்றை நிறைவேற்ற முயல்வதுமே அப்படைப்புகளின் நோக்கங்கள்’ என்கிறார். 

‘என்னைப் பற்றி’ என்ற தலைப்பில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மே 1940ல் மன் உரையாற்றினார். ‘கலைஞனாக என் வளர்ச்சி நிலைகளையும், என் வாழ்வு, கலைச்செயல்பாடுகள் ஆகியவற்றைப் பற்றியும் கேள்விகள் எழுந்தபோது, நானும் அதன் வேர்களைப் பற்றி எண்ணத் தொடங்கினேன். முதல் வித்து, தூண்டுதல் பற்றியெல்லாம். என் குழந்தைப்பருவ விளையாட்டுகளில் அவை உள்ளன.’ 1908ஆம் ஆண்டு வெளியான ஃபிராய்டின் கட்டுரையை மன் வாசித்திருக்கச் சாத்தியமுண்டு. தனக்கும் தன் சகோதர சகோதரிகளுக்கும் தம் அன்னை வாசித்துக் காட்டிய செவ்வியல் புராணக்கதைகளில் உள்ள காட்சிகளைச் சற்றே உருமாற்றி தான் விளையாடிய விளையாட்டுகளை அவர் விவரிக்கிறார். மேலும் சொல்கிறார்- ‘…. அவை பார்வைக்குப் புலனாகக் கூடிய விளையாட்டுகள், பிறருக்கும் அவை நன்கு புலனாகின. ஆனால் அதுமட்டுமின்றி பார்வைக்குப் புலனாகாத நுட்பங்களும் அவ்விளையாட்டுகளில் இருந்தன, அவற்றுக்கு எந்தவித விளையாட்டுக் கருவிகளும் தேவையில்லை. அந்தக் கனவுமயமான விளையாட்டுகள் எனக்களித்த சுதந்திரத்தின் திறனால் நான் திருப்திகரமாக உணர்ந்திருக்க வேண்டும். வேறெதாலும் அப்பொக்கிசத்தை என்னிடமிருந்து கொள்ளையடித்துச் செல்ல முடியவில்லை. லியூபெக்கில் இருந்தபோது ஒரு நற்காலையில் அன்று முழுவதும் கார்ல் என்ற பெயர்கொண்ட பதினெட்டு வயது இளவரசனாக வாழ்வது என்ற தீர்மானத்துடன் விழித்தேன். கம்பீரமான உடை உடுத்தி, அமைச்சரிடமும் சேனாதிபதியிடமும் நாடகத்தனமான உரையாடலை மேற்கொண்டேன். அவர்களைக் கற்பனையால் நான் நியமித்தேன். அந்தரங்கமான பெருமிதத்துடன் நடைபோட்டேன். இந்த மன விளையாட்டு ஒரு கணம்கூட பாடங்கள் படிப்பதாலோ, நடைக்குச் செல்வதாலோ, வேறு கதைகளை வாய்விட்டுப் படிப்பதாலோ தடைபடுவதே இல்லை. அதுவே இதன் நடைமுறை லாபம்.’

https://static.dw.com/image/16973159_401.jpg
தாமஸ் மன்னின் குடும்பம்

சுருக்கமாகச் சொன்னால் தன் சுற்றம் சூழலில் இருந்து முற்றாக விலகி தனிப்பட்ட ஒரு வாழ்வை அவரால் வாழ முடிந்திருக்கிறது. இப்படி இளவரசனாக வாழும் கனவை மன் ஒருபோதும் கைவிடவில்லை. அவ்விளவரசன், மிகக் கச்சிதமான, நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட உடுக்கை அணிந்தான். முதல் வகுப்பில் மட்டுமே பயணித்தான். சொகுசு விடுதிகளில் மட்டுமே தங்கினான். அரச குடும்பத்தினருக்கான மிடுக்குடனேயே வாழ்ந்தான். அவர் சிறுவனாக இருந்தபோது ஒரு கைப்பாவை அரங்கம் இருந்தது. அது குறித்து அவர் ‘எனது இனிய விளையாட்டு இன்பங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்’ என்கிறார். ’இவ்வகை விளையாட்டுகளை நான் மிகவும் நேசித்தேன். ஒருபோதும் அவற்றைக் கடந்து வளர்வது இயலாத ஒன்றாகவே எனக்குத் தோன்றியது. எனது குரல் கடினத்தன்மையைப் பெறும் காலகட்டத்தை எதிர்பார்த்திருந்தேன். அப்போதுதான் அசாதாரணமான இசை நாடகங்களுக்குப் பின்னணியில் என்னால் பாடமுடியும் என்று நினைத்து, கதவை மூடி அத்தகைய குரல்களைப் பேசி பழகினேன். நான் பெரியவனான பிறகும் இப்படி கைப்பாவை நாடகங்களின் முன் அமர்ந்தால் அது எத்தனை விசித்திரமாக இருக்கும் என்று என் அண்ணன் சொன்னதற்கு அவர் மேல் சினமுற்றேன். என் நினைவில் உள்ளபடி குழந்தை விளையாட்டுக்கும் கலைப்பயிற்சிக்கும் இடையே எந்தவிதப் பிரிவும் இருக்கவில்லை.’ இந்த வகை விளையாட்டில் இருந்து மன் ஒருபோதும் வளரவில்லை. அவரது இயல் வயதுக்கும் கனவு வயதுக்குமான முரண்பட்ட தொலைவு ‘உலகமே நாடக மேடை, அதில் ஆணும் பெண்ணும் நடிகர்கள்; அவர்களுக்கு உள்வாயில்களும் வெளிவாயில்களும் உண்டு. ஒரே மனிதன் ஒரே நேரத்தில் பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடிக்கிறான்’ என்ற சொற்றொடரில் உள்ளது. மன் தாங்கிய பல்வேறு பாத்திரங்களை அவரது நாட்குறிப்பேடுகள் வெளிப்படுத்தின. ஏறத்தாழ ‘The Confessions of Felix Krull, Confidence Man‘-ல் வரும் கதாநாயகனைப் போல இருந்திருக்கிறார். 

மன் வெகு விரைவாக படைப்புக்கலைக்குள் செல்ல, அமைதியான சிசுவாகவும், எதையும் கோராத குழந்தையாகவும் இருந்த குணநலன்களே அடிப்படைக் காரணிகள். குழந்தைப் பருவத்தில் மன்னுடைய அன்னை, சோபின் இசைக்கோர்த்த ஒற்றை வாத்திய இசை, இரவுக்குகந்த இசை ஆகியவற்றை மீட்டுவதையோ அல்லது ப்ராஹ்ம்ஸ், ஷூபர்ட், ஷூமான், லிஸ்ஸிட் ஆகியோரின் பாடல்களைப் பாடுவதையோ கேட்டபடி சோஃபாவில் அரைத்துயில் நிலையில் எப்போதும் படுத்துக் கிடந்திருக்கிறார். அது பகற்கனவுகளின் அறிகுறி. அவள் சொல்லும் தேவதைக் கதைகளையும் தன் குழந்தைப் பருவத்தில் பிரேசிலில் நடந்த காதல் கதைகளையும் கேட்க அவர் மிகவும் விரும்பினார். ஜெர்மானிய – போர்த்துக்கீசிய – கிரியோலிய மரபின் மிடைவு அவளுடைய கவர்ச்சிகரமான, இன்பத்தை விரும்பும் பண்புக்கு அடிப்படையாக இருந்தது எனில் மிகையன்று. ஆக்னஸ் மேயருக்கு எழுதிய கடிதமொன்றில் (மன்னும் அவர் குடும்பத்தினரும் குடியேறுவதற்கும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மன்னுக்கு நல்ல பணியைப் பெற்றுத் தருவதற்கும் ஆதரவளித்தவர்) அவர் தன் தாயை மிகவும் நேசத்திற்குரிய குழந்தையென்று தான் நம்புவதாகக் குறிப்பிடுகிறார். லியூபெக்கின் முக்கியமான வியாபாரியாகவும் அரசவை உறுப்பினராகவும் இருந்த தன் தந்தையுடனான உறவைப் பற்றி விவரிக்கையில், மன் விலக்கத்துடன் காணப்படுகிறார். நிலையான, நேர்த்தியான குடிமகனாகவும் அதிகாரியாகவும் வாழ்ந்த மன்னுடைய தந்தை இளம் தாமஸிடம் மிகக் குறைவாகவே நேரத்தைச் செலவிட்டுள்ளார். தாமஸின் 16ம் அகவையில் அவர் தந்தை இறந்தார். அவரது தாயின் கவர்ச்சிகரமான குணங்கள், அவளது இசைத்திறம், வாசிப்பின் மீதும் எழுத்தின் மீதும் கொண்டிருந்த ஆழ்ந்த பற்று ஆகியவை தாமஸிடம் இருந்த பெண்மைப் பண்புகளுக்கு உந்துசக்திகளாக இருந்துள்ளன. ’பெண்மைப் பண்பு’ என்ற பதத்தை நேரடியாகப் பயன்படுத்தாமல், தான் தனது ஆர்ப்பாட்டமான (கொடிய) பண்புகளை எல்லாம் விரும்பியே கட்டுக்குள் வைத்திருந்ததாகப் பின்னொரு முறை மன் தெரிவிக்கும் போது மறைமுகமாக அப்பண்பையே சுட்டுகிறார். அவர் வரிசைக்கிரமமான, வழக்கத்தை மீறாத, நேர்த்தியான ஒழுங்கைத் தவறாமல் கடைபிடிக்கும் நிலைக்கு வருகிறார். அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர் க்ளாஸ் ஹர்பெர்செட் (Klaus Harpprecht) இதை அவர் கொஞ்சம் அகங்காரம், குன்றாத தற்பெருமை, அதீத முரண் ஆகியவற்றின் கலவையால் சாதித்திருப்பதாகத் தெரிவிக்கிறார். உறுதியாக அத்தகைய மன்னே நமக்கு வெளிப்பட்டார். 

3

டிரேவ் நதி பால்டிக் கடலில் கலப்பதைப் பார்த்தவாறே, தன் ஏழு வயதிலிருந்து பதினாறு வயதுவரை ஒவ்வொரு கோடையையும் கடற்கரையில் கழித்தது அவரது கற்பனைக்கும் படைப்புத் திறத்துக்குமான இன்னொரு காரணியாக இருக்கிறது. அங்கு பல மணி நேரங்கள் வெறுமனே பகற்கனவுகள் காண்பதும் தான் விரும்பியதை வாசிப்பதுமாகப் பொழுதைக் கடத்தியிருக்கிறார். தன் வாழ்விலேயே இந்தக் கோடைகளைத்தான் மிக மகிழ்வான காலங்கள் என்று சொல்கிறார். மன் எழுதி கிடைத்திருக்கும் முதல் கடிதம் 14.10.1889 என நாளிடப்பட்டது. அப்போது அவருக்கு அகவை 14. அவர் ‘ஆயிஷா’ (முகமதுக்குப் பிடித்த மனைவி ஆயிஷா. மன்னுடைய தாய் வாசித்த செவ்வியல் புராணக் கதைகளிலிருந்து இந்த நாடகத்தை எழுதும் ஊக்கத்தை அவர் பெற்றிருக்கக்கூடும்) என்ற நாடகத்தைத் தான் எழுதியதாக அதில் குறிப்பிடுகிறார். அவர் அக்கடிதத்தில் ‘தாமஸ் மன், பாடலாசிரியர், நாடகக் கவிஞர்’ என்று குறிப்பிட்டு கையெழுத்திட்டிருக்கிறார். மகத்துவத்திற்கான தேடல் மனநிலை இந்த இளம் அகவையிலேயே தென்படுகிறது. பதினெட்டு வயதில் இரு பள்ளித் தோழர்களுடன் சேர்ந்து வசந்தப் புயல் (The Spring Storm) என்ற பதிப்பகத்தை நிறுவினார். ‘கலை, இலக்கிய, தத்துவ இதழ்’ என்று உபதலைப்பிடப்பட்ட இந்த இதழுக்கு மன் எழுத்தாளராகவும் ஆசிரியராகவும் சேவையாற்றினார். இந்த ஏட்டில் இரு இதழ்கள் மட்டுமே வெளியாகின. 

https://1.bp.blogspot.com/-MbmvciT3Lec/XoHv7ZMGzzI/AAAAAAAAAlE/aDG5aGpHfWMvbv_qPu5LwwWL3G3xGkPmQCLcBGAsYHQ/s1600/mann4.jpg

பிரின்ஸ்டனில் தனது படைப்புத் திறத்திற்கான ஆதிமூலத்தைப் பற்றி பேசுகிறார்- ‘வளர்ந்து வரும் எழுத்தாசிரியர்களிடம் விசித்திரமான உள்ளார்ந்த ஆன்மீகக் கோர்வை இருக்கிறது. அதை ஆற்றலின் இருப்பு பற்றிய அந்தரங்க அறிதல் எனலாம். அதற்கு அவர்களுடைய காலத்தை செலவழிக்க நேரலாம், ஆனால் அது அவர்களின் கையில் பொதிந்தே இருக்கிறது.’ இங்கு முன்பொரு காலத்தில் கார்ல் எனும் இளவரசனாக இருந்த மன் இப்போது 65 வயதான வெற்றிபெற்ற கலைஞனாகப் பேசுகிறார்! வெனிஸ் மரணம் (Death in Venice) பற்றிப் பேசுகையில் ‘இந்தப் படைப்பின் எல்லாப் பகுதிகளை எழுதும் போதும் எனக்கு வேறெதையும் எழுத வேண்டியதே இல்லை என்பது போன்ற முற்றான ஆக்கிரமிப்பு உணர்வுடனேயே எழுதினேன்’ என்கிறார். ஹாரி டிரோஸ்மேன் (Harry Trosman) என்ற உளப்பகுப்பாய்வாளர் – சமீபத்தில் ஃபிராய்டு படைப்பாற்றல் பற்றி வெளியிட்ட அறிக்கை தொடர்பான ஆய்வையும் விவாதங்களையும் மேற்கொண்டவர்- ‘படைப்பாற்றலின் இன்பத்துய்ப்பு என்பது இச்சைகளை வெளிப்படுத்துவதில் மட்டுமே இல்லாமல் அகங்கார உணர்வில் தங்கி இருக்கிறது’ என்று குறிப்பிடுகிறார். என் வாழ்வின் கோட்டுச்சித்திரம் (A Sketch of My Life) என்ற ஆக்கத்தில் மன் எழுதும்போது ‘… சில தருணங்களில் அனைத்துமாதல் என்ற உணர்வு என்னை மிகத்தெளிவாக ஆட்கொள்கிறது, பிறப்பை இறையாண்மையுடன் உணரும் நிலை’ என்கிறார். இந்த உணர்வு அகங்காரத்தில் இருக்கிறதா, இல்லை இச்சையின் பகுதியாக இருக்கிறதா என்று நாம் வாதிடலாம். அனைத்துமாதல் என்ற உணர்வோ அல்லது இன்பத்துய்ப்போ, எங்கிருந்தாலும் தனக்கு மகிழ்வளித்ததாலேயே மன் எழுதியிருக்கிறார். 

தான் நேசித்த ஆண் காதலர்களைப் பற்றி தனது நாட்குறிப்பேடுகளில் எழுதியது போக, தன் நாவல்களிலும் கதைகளிலும் அவர்களைக் கதாபாத்திரங்களாக உலவவிட்டு நினைவுச்சின்னங்களாக ஆக்கினார். என் வாழ்வின் கோட்டுச்சித்திரம் நூலில் அவர் ‘…இனிய நண்பனுக்காக பொறிக்கப்பட்ட கவிதைகள் உண்டு. அவர்களில் ஒருவன் ஹான்ஸ் ஹான்சென். TonioKröger-ல் ஒருவித குறியீட்டு இருப்பை அவனுக்குத் தந்திருக்கிறேன் என்றபோதும், நிஜ வாழ்வில், ஆப்பிரிக்காவில் இருந்தபோது, குடித்தே தன் வாழ்வைத் துயர் பொங்க முடித்துக்கொண்டான்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவரது குறிப்பேடுகளில் கிடைத்த தகவல்களிலிருந்து அவன் மன்னின் பள்ளித்தோழன் என்று தெரிய வருகிறது. அவரது முதல் காதலன் அர்மின் மார்டென்ஸ்தான் அது என்றும் முடிவுக்கு வர இயலும். அவனது வாழ்வு முடியும் தருணத்தில் மன் தனது இன்னொரு பள்ளித் தோழனாகிய ஹெர்மன் லேங்குக்கு எழுதிய கடிதத்தில் ‘எனக்கு இதைவிடச் சன்னமான, இனிய வலி தரக்கூடிய இன்னொரு காதல் இனியொருமுறை வாய்க்காது’ என்றும் குறிப்பிட்டுள்ளார். (தன் மனைவி காடியாவை மனப்பூர்வமாகக் காதலிக்கவில்லை என்றும் அவளால் அப்படி காதலிக்கப்படவும் இல்லை என்றும் ஒப்புதல் கூறுகிறாரா?) ’எழுபதாண்டுகள் வெவ்வேறு வாழ்வின் நிறங்களைக் கடந்தாலும் இதைப் போன்ற காதல் மறந்து கடக்கக் கூடியதல்ல. நான் சொல்வது அபத்தமாக இருக்கலாம். ஆனால், இந்தக் களங்கமற்ற உணர்ச்சிப் பெருக்கின் நினைவை நான் பொக்கிசமாக மனத்தில் பொதிந்து வைப்பேன்’ என்று எழுதியுள்ளார். 

TonioKröger-க்கு முன்பாகவே மன் தனது முதல் நாவலான பட்டென்ப்ரூக்ஸை (Buddenbrooks) எழுதிவிட்டார். அதில் நடுத்தர வர்க்கத்து குடிமக்களின் வாழ்வுமுறையைப் பிரதிபலிக்கும் ஒரு மாதிரி குடும்பத்தின் வீழ்ச்சியைப் புனைந்தார். அவர் தன்னையே ஹன்னோ பட்டென்ப்ரூக்ஸ் என்ற துயர்மிகுந்த கதாபாத்திரத்தில் பொருத்தினார். ஹன்னோ பட்டென்ப்ரூக்ஸுக்கு மன்னின் காதல் வரிசையில் இருந்தவர்களின் முதன்மையான குணநலன்கள் கொண்ட நண்பரும் உண்டு. உண்மை வாழ்வில் அது ஹான்ஸ் காஸ்பர் வான் ரண்ட்சா என்ற பிரபு (Hans Kaspar von Rantzau) ஆவார். மன்னுடைய தொடக்கக் கல்வி காலத்தில் ஐந்தாண்டுகள் நண்பராக இருந்தவர். பட்டன்ப்ரூக்ஸில் அவர் காய் மொலின் (Kai Mölin) என்ற கதாபாத்திரமாக வருகிறார். ‘ஹன்னோவின் உயரத்தையே காயும் கொண்டிருந்தான். அவன் கைகள், விசித்திரமாகக் குறுகி, நேர்த்தியாக, நீள்விரல்களையும் கூரிய நகங்களையும் கொண்டவையாக இருந்தன. இயற்கை அவன் தலையை நற்குடிப் பிறப்பைச் சுட்டும் அத்தனை இலட்சணங்களோடும் அருளியிருந்தது. இலகுவாக வகிடு எடுத்த, சிவந்த பொன் தலைமுடி, கையசைத்து அழைப்பது போன்ற அலையடிக்கும் வெண்புருவம். ஓரிணை நீலக்கண்கள் பிரகாசமாக ஒளிர்ந்து, ஆழத்தில் இருந்து பொங்கின. தாடை எலும்புகள் சற்றே நீட்சியடைந்திருந்தன. சன்னமான நாசித்துளைகளுடன் கழுகுபோல நாசி வளைந்திருந்தது. வாய் சிறிய மேலுதட்டோடு பார்க்கையில் வரையறுக்கப்பட்டதாய் தோற்றமளித்தது.’ மன்னுடைய இந்த ஆகச்சிறந்த மனம் கவர்ந்த காதல் இளைஞனின் தோற்றம் மாயமலை நாவலிலும் காணப்படுகிறது. பிரிஸ்பிஸ்லாவ் ஹிப்பி மன்னுடைய இரண்டாம் காதலனாகிய வில்ரி டிம்பியைக் (Willri Timpe) குறிக்கிறது. தன் படைப்புகள் நெடுக அவர் தனது இளமையில் நேசித்த காதலர்களையும் பள்ளித் தோழர்களையும் தொடர்ந்து கதாபாத்திரங்களாகக் கட்டமைத்தபடியே இருக்கிறார்.

https://www.ndr.de/kultur/buch/buddenbrooks243_v-contentgross.jpg

தனது நாட்குறிப்பேட்டில் 25.08.1950 அன்று ‘இதையெல்லாம் நான் ஏன் எழுதுகிறேன்? நான் இறக்கும் தறுவாயில் அனைத்தையும் அழித்துவிட வேண்டும் என்பதற்காகவா அல்லது உலகம் என்னைப் புரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேனா? எனக்கு அளிக்கப்பட்டவர்களைவிட அதிகப்படியான மக்களைச் சென்றடைய விரும்புவதே என் குறைந்தபட்ச இச்சை என்று கருதுகிறேன்’ என்று மன் குறிப்பிட்டுள்ளார். மக்கள், நாட்குறிப்பேடுகளின் வாயிலாகத் தன்னை இன்னும் திரிபறத் தெரிந்துகொள்வதோடு, தன் சொற்களைப் பாவமன்றாடலாக ஏற்று மன்னிக்கவும் வேண்டும் என்று விரும்பினார். தனது பெருமையின் வீச்சை மக்களுக்கு அறிவிப்பதன் மூலம் அதீத தற்பெருமையையும் பெருந்தன்மையையும் ஒரே நேரத்தில் தெரிவித்தார். அநேகமாக அவர் சரியாகவே எண்ணினார். மக்கள் அவருடைய நாட்குறிப்பேடுகளில் அதீத ஆர்வம் காட்டினர். அவருக்குத் தன் ஆழமான எண்ணங்களையும் உணர்வுகளையும் நம்பிக்கையுடன் பகிர ஒரு நண்பன் தேவைப்பட்ட போது, ஒருபோதும் வாய்த்திடாத நெருக்கமான நண்பனைப் போலத் தன் நாட்குறிப்பேடுகளைப் பயன்படுத்தி எழுதினார். அதுவே அவற்றின் தனிச்சிறப்புமாகும். ஆயினும் அவற்றில் குறைகளும் உண்டு. தான் நேசித்த உடல்களும், பொன்னிறத் தலைமுடியும், நீல விழிகளும் கொண்ட ஓரிரு இளைஞர்களுடன் அவர் பழகி வந்தபோது சில சாகசங்களைச் செய்ய விரும்பியதாகத் தெரிவித்த மன், எத்தகைய கனவுகளை அவர்கள் மீது பிரயோகிக்க விரும்பினார் என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஃபெலிக்ஸ் குருல் (Felix Krull) விவாதத்தின் போது அதில் வரும் வருணனைகள், நாட்குறிப்பேடுகளில் வெளிப்படையாக எழுதப்படாத சாகசக் கனவுகளை வெளிப்படுத்துவதாகக் கருத சாத்தியங்கள் உள்ளன. மன் வாழ்நாள் நெடுக குற்றவுணர்வையும் தனது கலவித் தேர்வுகள் மீதான ஏங்குதலையும் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார். தனது நாட்குறிப்புகளில் அந்த உணர்வுகளை அவரால் வெளிப்படுத்த முடிந்தது, அதன் வழியாகத் தனது குற்றவுணர்வைத் தளர்த்திக்கொள்ள முயன்றிருக்கிறார். சுய சிகிச்சை முயற்சி என்று அவரது நாட்குறிப்பேடுகளைக் கருதலாம். குற்றம் புரிந்தவர் தன்னுடைய பிறழ்ந்த எண்ணங்களையும் உணர்வுகளையும் செயல்பாடுகளையும் தனது உளப்பகுப்பாய்வாளரிடமோ தனது ஆன்மீகத் தந்தையிடமோ வெளிப்படுத்தி அதன் வழியாக மீட்பை மன்றாடுவதைப் போலவே தாமஸ் மன்னும் தனது குற்றவுணர்வுகளை நாட்குறிப்பேடுகளில் ஒத்துக்கொள்வதன் வாயிலாகத் தனக்கான ஆன்ம விடுதலையும் மன்னிப்பும் கிட்டும் என்றே நினைத்தார். 

ஐரோப்பியப் பண்பாட்டிலும் குடும்ப அமைப்பிலும் நிகழும் மாற்றங்களையும் நகர்வுகளையும் சித்தரிக்கும் விதமாகத் தனது தனித்துவமான படைப்பூக்கத்தை எழுத்திற்குப் பயன்படுத்தினார். மன் ஆய்வாளர்களில் ஒருவரான டி.ஜே.ரீட் சொல்கிறார்- “அவரது முதல் நாவல் பட்டென்ப்ரூக்ஸ் கதை நிகழும் மாகாணத்தின் (லியூபெக் என்ற வடக்கோர நகரம்) பண்பாட்டை இழந்து முன்னகரும் வாழ்வின் நினைவுச்சின்னக் கதையாக முதன்மையாகத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இந்நாவலின் வெற்றி அதன் நில வாழ்வு சார்ந்த அம்சங்களாக இல்லாமல், தன் தன்மைக்கு மீறிய படைப்பூக்கத்தின் திட்பத்தால் – முதிர்ந்த கசடுகளற்ற தெள்ளிய தொனி, திறம்மிக்க ஏற்ற இறக்கங்களுடன் கூடிய ஆர்வத்தைத் தூண்டுகிற கதையோட்டம், நீண்ட சிடுக்குகள் மிகுந்த வரலாற்றைக் கையாளும் சரளம், இடைவிடாமல் மைய இழையுடன் தொடர்புகொண்டு சமநிலை பேணும் பாணி (Decline of a Family என்பது நாவலின் துணைத்தலைப்பு), நாவலில் நிரம்பியிருக்கும் கதாமாந்தர்களிலும் இடைக்கதைகளிலும் மிளிரும் செழுமை ஆகியவற்றால் -நிகழ்ந்திருக்கிறது. தனது இருபதுகளிலேயே மன் தல்ஸ்தோய், துர்கனேவ், ஃப்ளாபெர்ட், கோன்கோர்ட் சகோதரர்கள், மாப்பசான், போர்ஹே ஆகியோரை வாசித்துள்ளார். இவை அனைத்தையும் தன் சொந்த முயற்சியால் வாசித்தார். பின்னர், நீட்சேவை வாசித்து ஐய பகுப்பாய்வு வழிமுறையின் துணையுடன் தன் வாசிப்பை மேம்படுத்திக்கொண்டார்.”

சில விமர்சகர்கள் மன்னை மாண்டேஜ்களின் விற்பன்னர் என்று கருதுவதுண்டு. அதாவது நேரடியாக நகலெடுத்தல் என்ற பொருளில் அன்றி அடுக்கு வைப்பு வரிசையின் தேர்ச்சியில் ஆளுமை கொண்டவர் என்ற பொருளில் சொல்லப்பட்டது. படைப்பாற்றல் குறித்துப் பேசுகையில் மன் ‘ஒருவருடைய சாயலை வியந்து செய்தல் பற்றி என் பட்டறிவுக்கு உட்பட்டு தீர்க்கமாகச் சொன்னால், ஒரு குறிப்பிட்ட வயதில், அது இலக்கியத் தளர்வாகவோ, திறன் இன்மை என்றோ கருதப்படாது; மாறாக அது இலக்கியச் செழுமையின், ஆற்றல் விரிவின் அறிகுறியாகவே கருதப்படும்… இன்று, எனக்கென்று தனித்துவமான எழுத்து முறை உண்டு என்றே அறியப்பட்டுள்ளது. (இது நிகழ்ந்தது 1940ல்) நெடுங்காலமாகச் சொல்லப்பட்டும் வருகிறது. ஆனால் சில காலங்களாக வெறும் போலச் செய்தல் என்ற செயல்பாட்டிலேயே என் படைப்பூக்கம் உருவாகி வெளிப்பட்டு வந்திருக்கிறது.’ அவரும் டி.ஜே. ரீடும் பட்டென்ப்ரூக்ஸை அசலான உருவாக்கமாகக் கருதினர். அந்தப் பின்னணியில் இக்கூற்று மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. பட்டென்ப்ரூக்ஸை எழுதியதைப் பற்றிக் கூறுகையில் மன் சொல்கிறார்- ‘கடந்த நூற்றாண்டின் மேதைகளிடம் நான் துணையையும் உதவியையும் கோரி நின்றேன். தல்ஸ்தோயின் ஆன்னா காரனீனா நாவலையும் போரும் வாழ்வும் நாவலையும் நான் வாசித்தது குறிப்பாக நினைவிலாடுகிறது. அதன் வழியே மாபெரும் ஆக்கங்களைத் தொடர்ந்து விடாமல் பற்றிக்கொள்வதன் மூலம் எனக்குத் தேவையான ஆற்றலைப் பெற்று பலமடைந்தேன்.’ இந்தப் பறைசாற்றுதலுக்குப் பின்னும் மன், பட்டென்ப்ரூக்ஸ் உருவாக்கத்தில் தியோடர் ஃபோண்டானேவின் (Theodor Fontane) நாவல் (Effi Briest) ஏற்படுத்திய தாக்கத்தைக் குறிப்பிடவில்லை.

https://s.wsj.net/public/resources/images/B3-GB470_mann_M_20200207105559.jpg

பிரின்ஸ்டன் சொற்பொழிவுகளின் பதிப்பாசிரியர் ஜேம்ஸ் என்.பேட், பட்டென்ப்ரூக்ஸின் உருவாக்கம் பற்றிக் கருத்திடுகையில் ‘மன், தியோடர் ஃபோண்டானேவின் Effi Briest நாவலை 1896ல் – பட்டென்ப்ரூக்ஸ் எழுதத் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன் – வாசித்தார். அந்நாவல் மன்னின் முதல் நாவலின் உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் நல்ல தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது’ என்று தெரிவிக்கிறார். ஓட்டொ கிராடோஃபுக்கு மன் எழுதிய 02.02.1896 நாளிட்ட கடிதத்தில், தான் சமீபத்தில் படித்த நாவலாக Effi Briest-ஐக் குறிப்பிடுவதோடு அது முதல் தர நாவல் என்றும் தெரிவிக்கிறார். பிற்காலத்தில் மன் Effi Briest-ஐயோ ஃபோண்டானேவின் இதர நாவல்களையோ பட்டென்ப்ரூக்ஸ் எழுதுவதற்கு முன் வாசித்ததே இல்லை என்று மறுக்கிறார். 

Effi Briest ஒரு சிறந்த யதார்த்தவாத நாவல். நற்குடும்பத்தில் பிறந்த ஒரு இளம்பெண், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தால் சம்பிரதாயமான, மகிழ்வற்ற குடும்பத்திற்குச் சென்று துயரான முடிவை எய்துவது பற்றியது. இப்பாத்திரம் பெரிதும் டோனி பட்டென்ப்ரூக்ஸை ஒத்திருக்கிறது. எஃப்ஃபியின் கணவருக்கும் காதலருக்கும் இடையில் டூயல் நடக்கும் போது காதலர் கதாபாத்திரத்தின் பெயர் பட்டென்ப்ரூக்ஸ்! அந்தக் காதலர் கொல்லப்படுவார். Effi Briest-ல் வரும் பல கதாபாத்திரங்களுக்கும் மன்னுடைய பட்டென்ப்ரூக்ஸ் பாத்திரங்களுக்கும் இடையே நிறைய இணைகோடுகளை வரைய இயலும். ஆழ்ந்த சுய ஐயத்தைக் கொண்டிருப்பதே தனது குணநலன் என்கிறார் மன்! பலமுறை தனது கைப்பிரதிகளைப் பதிப்பாளர்களிடம் தருகையில் கடுமையான அதிருப்தியும் ஐயமுமாகவே அவற்றைத் தந்ததாகக் குறிப்பிடுள்ளார். எப்போதும் தன் படைப்பு மறுக்கப்படும் என்றே எதிர்பார்த்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு, மிகச்சிறப்பாக விற்பனையாவதைக் கண்டு அவரே ஆச்சரியமுற்றார். அவருடைய குருவாக இருந்த கதே இயல்பாகவே தனித்துவம் மிக்கவர், ஆனால் மன்னோ தனது உன்னதமான படைப்புகளை உருவாக்கக் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இத்தகைய உணர்ச்சிக் கொந்தளிப்பின் பின்னணியில் ஃபோண்டானேவின் நாவல் பட்டென்ப்ரூக்ஸில் ஏற்படுத்திய தாக்கத்தை ஒப்புக்கொள்வதில் அவருக்குத் தயக்கம் ஏற்பட்டிருக்கலாம். பல்வேறு படைப்புகளின் தாக்கங்களை மன் எழுதிய மாயமலை, Lotte in Weimar ஆகிய படைப்புகளில் காண முடிகிறது. அவை அனைத்தும் கதேவின் Wilhelm Meister’s Apprenticeship-உடன் தொடர்புடைய Bildungsroman (நாயகனின் மேம்பாட்டை மைய இழையாகக் கொண்ட நாவல் வகைமை) நாவலாகவே உள்ளன. ஆகவே மன் மகத்தான நாவல்களைப் பின்பற்றி எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதைத் திண்ணமாய்ச் சொல்ல முடியும். 

இவற்றை ஒதுக்கிவிட்டு நோக்கினும் பட்டென்ப்ரூக்ஸ் தாமஸ் மன்னின் உள்ளிருந்த படைப்பு மேதையை வெளிக்கொணர்ந்ததாகவே கருத முடியும். முதல் நாவலில் ஆசிரியர் இதுவரை வாழ்ந்த வாழ்வின் கதை இருந்தது. அவர் பின்னால் தொடர்ந்து எழுதிய ஐரோப்பியப் பண்பாட்டு வீழ்ச்சி அல்லது உருமாற்றம் பற்றிய படைப்புகளின் வரிசையில் இதுவே முதலானது எனலாம். இது ஆளும் வர்க்கத்தின் முதலாளித்துவம், நடுத்தர வர்க்கத்தினர், 19ம் நூற்றாண்டின் வணிகமயம் ஆகியவற்றின் வீழ்ச்சியை முன்வைக்கிறது. ஆகவே மன் ஐரோப்பியப் பண்பாட்டின் வீழ்ச்சிக் காலத்தின் ஒரு பகுதியைப் பதிவுசெய்வதற்காக எழுதினார் என்றால் அது மிகையன்று. 

4

தனது முதல் நாவலின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மன் தனது ‘நல்ல எழுத்தாளர்’ நாற்காலியில் அமர்ந்தவாறே பல சிறுகதைகளை எழுதினார். (Schriftsteller என்ற ஜெர்மானியச் சொல் மகத்தான எழுத்தாளுமை என்றும் இல்லாமல் சாதாரண எழுத்தாளர் என்றும் இல்லாமல் இடைநிலையில் இருப்பவர்களைக் குறிக்கும் சொல்). அச்சிறுகதைகளில் அவரது மிகச்சிறந்த படைப்புகளான TonioKröger, Tristan, The Infant Prodigy ஆகியன உண்டு. அவரது இரண்டாம் நாவலாகிய Royal Highness (1910) பட்டென்ப்ரூக்ஸின் தரத்தை எட்டவில்லை. 1909ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஃபெலிக்ஸ் குருல் என்ற தலைப்பிட்டு, மோசடிப் பேர்வழி ஒருவனுடைய போலி தன்வரலாற்று நூலை எழுதத் தொடங்கினார். நிஜவாழ்வில் ஏமாற்றுப் பேர்வழியாக இருந்த மனோலெஸ்கு என்ற நபரின் தன்வரலாற்று நூலில் இருந்து இந்த நூலுக்கான சிந்தனையை அவர் அடைந்தார். தனது போலி தன்வரலாற்று நூலில் மன், கதேவின் தன்வரலாற்றை மாதிரியாக வைத்து அதைப் போலச் செய்ய விரும்பினார். தன் அண்ணன் ஹென்ரிக்கு 10.01.1910 அன்று எழுதிய கடிதத்தில் ஃபெலிக்ஸ் குருல்  எழுதும் போது, உளப்பூர்வமாக ஏராளமான இன்னல்களைப் பட்டறிந்ததாகவும், தன்னை அவை எத்தனை தளர்வடையச் செய்தன என்றும் சொல்லியிருக்கிறார். அவர் அப்படைப்பைத் தொடராமல் தள்ளி வைத்தார். 1910 முழுவதும் தாமஸ் மன் கடுமையான சிரமங்களைச் சந்தித்தார். அவற்றின் விளைவாகக் கடுமையான தலைவலியும் வயிற்று வலியும் உற்று பல வாரங்கள் சூரிக்கில் இருந்த மருத்துவமனையில் தங்க வேண்டிய அளவுக்குச்  சென்றுள்ளது. மே மாத நடுவில் ஓய்வு அத்தியாவசியம் என்பதால் காடியாவுடனும் ஹென்ரிக்குடனும் பிரோனி தீவுகளுக்குச் சென்றார். அங்கிருக்கும் போது அவருக்கு கஸ்டவ் மாலர் (Gustav Mahler) என்பவருடைய மரணச் செய்தி வருகிறது. அவரை சென்ற செப்டம்பரில் மன் சந்தித்திருந்தார். மாலர்தான் வெனிஸ் மரணம் நூலின்  மையக் கதாபாத்திரமான கஸ்டவ் வான் ஏசென்பாக்கின் (Gustav von Aschenbach) மாதிரி. பிரோனி பயணம் அத்தனை திருப்திகரமானதாக இல்லாமல் போகவே மூவரும் வெனிஸ் நகரில் இருந்த தே பெயின் என்ற உல்லாச விடுதிக்குச் சென்றனர். அங்கு மே 20-லிருந்து ஜூன் 2 வரை தங்கினர். இந்த விடுமுறையின் போதுதான் வெனிஸ் மரணம்  குறுநாவல் மன்னுக்குள் முகிழ்த்தது. பிலிப் விட்காப்க்கு (Philipp Witkop) எழுதிய கடிதத்தில் மன் தனது திட்டத்தைச் சொன்னார். ‘வெனிஸில் இருந்து வரும்போது என்னுடன் நான் எடுத்துவந்த ஒரு விசித்திரமான கருவை எழுதத் தொடங்கி இருக்கிறேன், அது வடிவக் கச்சிதம் பொருந்திய ஊக்கமூட்டும் ஒரு குறுநாவல். அது முதிய கலைஞருடைய இளம் காதலைச் சொல்லும். 1965ல் போலந்து நாட்டின் சீமான் ஒருவர், தான் 1911ல் வெனிஸ் நகரத்திற்கு விடுமுறையைக் கழிப்பதற்காகச் சென்றிருந்தபோது தாமஸ் மன் தன்னைப் பின்தொடர்ந்து வந்ததாகத் தெரிவிக்கிறார்.

https://media.newyorker.com/photos/5b2d1a3eefbafb29b90886a9/1:1/w_2559,h_2559,c_limit/Ross-At-Thomas-Manns-House_01.jpg

இந்தக் காலகட்டத்தில்தான் காடியா மன்னுக்குக் காசநோயின் அறிகுறிகள் தென்பட்டு, சுவிட்சர்லாந்தின் சில்ஸ் மரியாவில் உள்ள சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்படுகிறார். அதுதான் ஃப்ரெட்ரிக் நீட்ஷேவின் கோடை வாழிடம். 1911ம் ஆண்டு செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 19 வரை காடியா அங்கு இருந்தார். அதன் பிறகு 1912ம் ஆண்டு மார்ச் 10 முதல் செப்டம்பர் 25 வரை டாவோஸில் டாக்டர் ஜெஸ்ஸெனுடைய சுகாதார மையத்தில் இருந்தார். மன் அவரை அங்கு சென்று சந்தித்து மூன்று வாரங்கள் துணையிருந்த காலத்தில் டாக்டர். ஜெஸ்ஸென் அவருடைய நுரையீரல்களுள் ஒன்றில் ஈரப்புள்ளிகள் மிகுந்திருந்தாகத் தெரிவித்தார். இந்தப் பட்டறிவு மாயமலை-யின் கதாநாயகன் ஹான்ஸ் காஸ்டோர்ப் தனது உறவினரைச் சந்திக்க வந்து சுகாதார நிலையத்தில் மூன்று வாரங்கள் தங்கும் பகுதியில் எழுதப்பட்டுள்ளது. ஹெயின்ஸ் கோஹுட் தனது – நாட்குறிப்புகள் பிரசுரிக்கப்படுவதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு – ஆய்வில் (ஆய்வின் பெயர்- Death in Venice by Thomas Mann, A Story About the Disintegration of Artistic Sublimation) இந்தக் குறுநாவல் பிரத்யேகமாக மன்னுடைய தற்பால் ஈர்ப்புப் பதற்றங்களைப் பற்றியது என்று விவாதித்துள்ளார். மன் கடுமையான வலிகளுடனேயே தன் இச்சைகளை உணர்ந்திருக்கிறார் என்பதால், அதில் கலையமைதி உருவானதா என்பதில் ஐயங்கள் உள்ளன. விஸ்காண்டியின் திரைப்படமோ ஏசன்பாக்குக்கும் தாட்சியோவுக்கும் இடையேயான மனமொத்த தற்பால் ஈர்ப்பை மட்டுமே காட்டுகிறது. 

டி.ஜே.ரீடின் கருத்துப்படி வெனிஸ் மரணம் , நகாசு வேலைப்பாடுகள் அடங்கிய ஒரு ஒப்புதல் வாக்குமூலம் என்பதை விடவும் முதன்மையாக ஒரு தற்பால் ஈர்ப்புக் கதையாக உள்ளது. அத்தகைய அம்சங்கள் இருக்கின்றன என்றபோதும் அதைவிடவும் மேலதிக அம்சங்கள் நிறைந்துள்ளன. உளவியலையும் தொன்மத்தையும் திறம்பட இணைப்பதோடு நில்லாமல் மன்னுடைய வாழ்விற்குத் தொடர்புடைய பிரதியாகவும் உள்ளது. ஏனெனில் ரிச்சர்ட் வாக்னர் Tristan, Isolde-ன் இரண்டு பகுதிகளையும் வெனிஸில் எழுதிவிட்டு அங்கேயே இறந்தும் போனார். அவை இரண்டுமே தாமஸ் மன்னுக்கு மிகப்பிடித்த ஆக்கங்கள். நீட்சே அங்கு தங்கி அந்நகரைப் பற்றி கவிதை எழுதியிருக்கிறார். மன்னுக்குப் பிடித்த தற்பால் ஈர்ப்புக் கவி ஆகஸ்ட் வான் பிளாடன் என்ற இன்னொருவரும் வெனிஸிலிருந்து வரும் சொன்னெடுகள் எழுதியுள்ளார். அவரும் காலரா பெருந்தொற்று காரணமாக வெனிஸிலிருந்து விமானத்தில் வந்து இத்தாலியில் இறந்தார். 

மன் இந்தக் குறுநாவலை எழுதுவது பல்வேறு வகைகளில் நிர்ணயிக்கப்பட்டது. அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்தார், தனது ஆளுமை வெடித்து துண்டுகளாகியதைக் கண்டார், முன்னிளமை ததும்பும் ஒருவனுடன் காதலுற்றார், காடியாவின் உடல்நிலை பற்றி வருந்தினார், போதாகுறைக்கு நீட்சே, வேக்னர், வான் பிளாடென் ஆகியோருடன் தொடர்புகளும் இருந்தன. ஆயினும் அவரது படைப்பூக்கம் மேலெழுந்தது. கெட்டிகாரத்தனமாக உளவியலையும் தொன்மத்தையும் (தாட்ஸியோ – ஹெர்மிஸ்) ஒன்றிணைத்து டினோசியஸின் அபல்லோ தெய்வ இருக்கையையும் பின்னடைவையும் கைவிட்டு, அதில் சிற்றின்பத்தையே முற்றிலும் பேசியிருந்தார். வெகு முன்னரே 1910களிலேயே ஐரோப்பியப் பண்பாட்டில் இருந்த தீக்குறிகளைக் கண்டறிந்து மோசமான சம்பவங்களையும் அபசகுணங்களையும் எழுதி இந்த நாவலின் வழியே நிறைய சிடுக்குகளை வெளிப்படுத்தினார். Mario and the Magician-ல் (1929) இந்தத் தீச்சகுணங்களை தெளிவாக எழுதினார். மன் பல்வேறு காரணங்களுக்காக எழுதியுள்ளார். உள்ளத்தை ஒத்திசைவோடு வைத்திருக்க, தனது படைப்பாற்றலைப் பயன்படுத்தினார்; அது மட்டுமின்றி வரலாற்று நிகழ்வுகளை முன்னறிவிக்க தன் உள்ளுணர்வை வெளிப்படுத்தும் கருவியாகவும் படைப்பூக்கத்தைப் பயன்படுத்தியுள்ளார். 

https://worldofwonder.net/wp-content/uploads/2018/06/6-6-mann.jpg

ஜூலை 24, 1913 அன்று தனது நண்பர் எர்னஸ்ட் பெர்ட்ராமுக்கு (Ernst Bertram) எழுதிய கடிதத்தில் மன் தனது மாயமலை என்ற பெரும்பணியைத் துவக்க இருந்ததை அறிவிக்கிறார். 1901ம் ஆண்டு நவம்பர் 5 முதல் டிசம்பர் 20 வரை ரிவா அம் கார்டசியில் இருந்த கிரிஸ்டோபோரோ என்ற மாளிகையில் தங்கியிருந்த போது இந்நாவலுக்கான குறிப்புகளைச் சேகரிக்கத் தொடங்கினார். நேர்த்தியான நரம்பியல் நோய்களைக் குணமாக்கும் இந்த நிலையத்தின் சொந்தக்காரர், டாக்டர் கிரிஸோப் வான் ஹார்டுங்கன் (Christoph von Hartungen) ஆவார். தானும் தாமஸும் 1901ல் அங்கு சென்று தங்கும் முன்பே ஹென்ரிக் பலமுறை அங்கு சென்று காலம் கழித்தவர். மாயமலை நாவலின் ஊற்றுக்கண் குறித்த ஆய்வுத்தாளில் மேன்ஃப்ரெட் டையெர்க்ஸ் (Manfred Dierks) ‘தெளிவாகத் தெரியாத பாலியல் பிரச்சினைகளுக்காக ஹென்ரிக் சிகிச்சை எடுத்துள்ளார். தாமஸ் மன்னுடைய பிரச்சினையோ மிகத் தெளிவானது – அவர் ஒரு தற்பாலீர்ப்பாளர்! டையெர்க்ஸ் 1896 முதலே மன் (அவருக்கு 21 வயதான போதிலிருந்தே) தற்பாலீர்ப்பாளராக இருந்துள்ளார் என்று வலியுறுத்துகிறார். இரு சகோதரர்களும் அந்தக் காலத்தில் பலரும் நம்பியதைப் போல தங்கள் பிரச்சினைகள் மரபுவழி வந்தது என நம்பினர். 1901 முதல் 1904 வரை சுகாதார நிலையத்தைப் பார்வையிடுவது அடிக்கடி நிகழ்ந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் தாமஸ் தனது நெருங்கிய நண்பரும் கலைஞனுமாகிய பவுல் எரன்பர்க் (Paul Ehrenburg) மீது ஆழ்ந்த காதல் கொண்டிருந்தார். மன் கடுமையான மனவழுத்தத்திலும் தற்கொலை எண்ணங்களிலும் உழன்றிருந்தார். அவருக்குத் துணையாக பவுல் இருந்தார், அது தற்கொலை எண்ணங்களில் இருந்து அவரை விடுவித்தது. மன் ஒருபோதும் தன் காதலைப் பவுலிடம் தெரிவிக்கவில்லை. 

அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளுள் உளவியல் சிகிச்சையும் ஒன்று. மாயமலைக்குத் தொடர்பான தனது குறிப்புகளையும் பிற நோயாளிகளது குறிப்புகளையும் பாதுகாத்து வைத்தார். அந்தக் குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டு, பன்னிரண்டு ஆண்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அதில் மருத்துவர் குரோகோவ்ஸ்கியின் (Dr. Krokowski) கேலிச்சித்திரம் ஒன்றும் சுகாதார நிலையத்தில் இருந்த பிற நோயாளிகளின் கேலிச்சித்திரங்கள் சிலவும் இருந்தன. தன் வாழ்வில் இருந்த பலரையும் கேலிச்சித்திரங்களாக வரைந்து வைக்கும் பழக்கம் மன்னுக்கு இருந்தது. முக்கியமான நாடகாசிரியரும் நாவலாசிரியருமான கெர்ஹார்ட் ஹாப்மென் (Gerhardt Hauptmann) என்பவர், விசித்திரமான முறையில் தற்கொலை செய்துகொள்ளும் ‘Bombastic Mynheer Peeperkorn’ என்ற கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருந்தார். இந்த வகைக் கேலியால் கடுமையாகப் புண்பட்ட ஹாப்மென், மன் மன்னிப்பு கேட்ட பிறகே சாந்தமானார். லியூபெக்கின் குடிமக்கள் மன் யார் யாரைக் கேலி செய்கிறார் என்பதை அறிந்திருந்தனர். அதைப் போலவே சுகாதார மனையின் அதிபரும் அறிந்திருந்தார். புகழ்பெற்ற எழுத்தாளர் ஆகும் வரை மன்னின் இந்தப் போக்கினை யாரும் வரவேற்கவில்லை. மன் தனக்குத் தெரிந்தவர்களைப் பகடி செய்வதன் வழியாக அவர்கள் மீதான தன் விரோதத்தைத் தணித்தார். 

எர்னஸ்ட் பெர்ட்ராமுடன் விவாதித்து மன் மாயமலை நாவலை எழுதினார். அவருடைய குடும்பத்தினருக்குத் தான் எழுதியதைத் தொடர்ந்து, ஆகஸ்டு 1914ல் முதல் உலகப்போர் மூளும் வரை வாசித்து காட்டினார். இறுதி வரைவில் இருந்த இரண்டு தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கை எழுதி முடித்திருந்த போதும் ஏப்ரல் 1919 வரை அவர் மீண்டும் தொடர்ந்து எழுதவில்லை. மன் மாயமலை நாவலைத் தனது ஐரோப்பியப் பண்பாட்டின் மீதான விமர்சனமாகவும் ஒரு கோணத்தில் எழுதி இருந்தார். பட்டென்ப்ரூக்ஸ், நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை முறை நலிவுற்று வீழ்வதைப் பற்றிய விவாதத்தை ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியைக் காட்டுவதன் வழியே புனைவாகக் காட்டியது. வெனிஸ் மரணம் அத்தகைய பண்பாட்டில் இருந்த முக்கிய அறிவுஜீவி ஒருவருடைய நலிவடைதலையும் வீழ்ச்சியையும் பற்றியது. மாயமலை நாவலோ ஒட்டுமொத்த ஐரோப்பியப் பண்பாட்டுச் சிதைவையும் முன்வைப்பது. அதை Bildungsroman நாவலுக்கான கச்சிதமான உதாரணமாகச் சுட்டலாம். தனது நாயகன் ஹான்ஸ் காஸ்டோர்ப்பை வளர்த்தெழுதும் பொருட்டு பல்வேறு துறை தொடர்பான அறிவுகளைத் தாமஸ் மன் தேடிக் கற்றார். இது அவருக்கே ஒரு பெரும் கல்விப்பணி. மன் எழுதிய அனைத்துமே தீவிர சுய கல்வியை உள்ளடக்கியது. பலரும் அவரை உயர்தளத்தில் ஒரு அறிவுஜீவியாகக் கருதினர். இது குறித்துப் பதிலளிக்கையில் தான் எழுதுவதற்கு என்ன தேவையாக இருந்ததோ அதை மட்டுமே வாசித்து, கற்று, அறிந்ததாக மன் தெரிவித்தார். அவர் தனக்கும் பிறருக்கும் அறிவூட்டிக்கொள்ள எழுதினார். 

5

தாமஸ் மன்னைப் பொறுத்தவரை ஜனவரி 1910 முதல் ஆகஸ்டு 1914 வரையிலான காலகட்டம் தனிப்பட்ட முறையில் அரசியல் விழிப்புணர்வு பெருகிய காலம். அதுவரையில் ஒரு கலைஞனுடையதாக இருந்த எழுத்து, உண்மையான அரசியலில் இருந்து விலகியே இருந்தது. அவர் சொற்கள்- ‘காதல், மரணம், வேட்கை, கட்டுப்பாடு, ஒழுக்கத்துடன் படைப்பூக்கம் கொண்டிருக்கும் தொடர்பு அல்லது தொடர்பின்மை ஆகியவற்றோடு நெருங்கிப் பயணிக்கிறேன். இது பிரக்ஞை மனமும் நனவிலி மனமும் செயல்படும் விதங்களை விட்டுவிட்டு தனியனது விதியை நிர்ணயிக்கும் காரணிகளையும் குணநலன்களின் சிடுக்குகளையும் நோக்க வைக்கிறது.’ அவரது புதிய தோழர் எர்னஸ் பெர்ட்ராம் மன்னைவிட ஒன்பது வயது இளையவர், தீவிர ஜெர்மன் தேசியவாதி. மியூனிக், போன், பெர்லின் பல்கலைக்கழகங்களில் கற்றவர். அவரோடு ஜனவரி 1910 முதல் மன் தொடர்பில் இருக்கிறார். அவர் ஜெர்மானியப் பண்பாட்டையும் ஜெர்மன் தேசத்தையும் உச்சத்தில் தூக்கிப் பிடிப்பவர். அவரும் தற்பாலீர்ப்பாளரே. அந்தக் காலகட்டத்தில் பெர்ட்ராமுடன் சேர்ந்து தேசிய உணர்வை மன்னும் வலுவாகப் பகிர்ந்துகொண்டார். மேலும் உண்மையான கலைத்துவமும் அதற்கான படைப்பூக்கமும் பிறழ்வுகளிலிருந்தும் நோயிலிருந்துமே வரக்கூடியவை என்று சொன்ன நீட்ஷே மீதுகொண்ட ஆர்வத்தால் இருவரும் உற்ற தோழர்களாயினர். அப்போதே மன்னின் படைப்புகளில் நீட்ஷேவின் தாக்கம் விரவி இருந்தது. பெர்ட்ராம் நீட்ஷே பற்றி ஒரு நூலை எழுதி வந்தார். 

https://www.vatmh.org/files/villa-aurora/fotos/historic_tmh/TMA_3072.jpg

அரசியலற்ற மனிதனின் உளப்பிரதிபலிப்புகள் (Reflections of a Non-political Man) நவம்பர் 1915ல் தொடங்கியது. அதற்குப் பல்வேறு வரைவுகள் உண்டு. தாமஸ் மன் ‘இது வலிமிகுந்த உள்ளாய்வைக் கோரிய பணி. (முதல்) உலகப் போரையும் அதன் பிரச்சினைகளையும் நான் வெகுவாக அணுகிச் செய்த பணி’ என்று குறிப்பிட்டார். தனக்குரிய இலக்கிய எழுத்திற்கான களத்தை முதலில் ஏற்படுத்தியது இதுவே என்று அவர் கருதினார். மாயமலை நாவலில் வரும் செட்டம்பிரினி என்ற மானுடவாதிக்கும் நாப்தா என்ற கெட்டித்தன்மை கொண்ட ஆன்மீகத்தின் பிரதிநிதியாக இருக்கும் பெண்ணுக்கும் இடையில் நிகழும் வாத- பிரதிவாதங்கள் இந்தப் பிரதியிலேயே இருப்பதாகச் சொன்னார். தனது சிந்தனையைத் தெளிவுபடுத்த இருபுறத்திலும் இருக்கும் கேள்விகளின் வழியாக வாதங்களைக் கண்டடையும் பொருட்டு எழுதினார். 

அவர் ‘இந்த நூலை இயந்திரமயமான நாகரீகத்தின் அசுர வளர்ச்சிக்கு எதிரான கிளர்ச்சியாகவும் பார்க்கலாம். மக்கட்திரளின் கலகத்தை ஆன்மீகப் பாழடைவு, பணத்தின் ஆதிக்கம், அரசியல்வாதிகளின் ஊழல் ஆகியவற்றுக்கு எதிரானது என்றும் கருதலாம்’ என்கிறார். அரசியலற்ற மனிதனின் உளப்பிரதிபலிப்புகள் நூலை எழுதியதற்காக பெர்ட்ராமுக்கு மன் எவ்வித நன்றியும் தெரிவிக்கவில்லை, ஆயினும் அடிப்படையில் அது இருவரும் இணைந்து எழுதிய படைப்பே. Bernhard Böschenstein என்ற கொலோன் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவர் 1955-56 ஆம் ஆண்டுகளில் அடிக்கடி எர்னஸ்ட் பெர்ட்ராமைச் சந்தித்தார். அப்போது பணி ஓய்வு பெற்றிருந்த பெர்ட்ராம், ஆர்வமுள்ள மாணவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கான தனிமையும் மனநிலையும் வாய்க்கப் பெற்றிருந்தார். உளப்பிரதிபலிப்புகள் எழுதியபோது தனக்கு மன்னிடம் இருந்து நீண்ட தொலைபேசி அழைப்புகள் அடிக்கடி வந்ததையும், தேவையான குறிப்புகளையும் உசாத்துணைகளையும் தான் அளித்ததையும் அவர் குறிப்பிட்டார். தான் நீட்ஷே பற்றி எழுதிவந்த நூலுக்கு அந்தக் குறிப்புகள் தேவைப்பட்ட போதும் அது குறித்து பொருட்படுத்தாமல் மன்னுக்கு வழங்கி இருக்கிறார். 

காடியா மன், மேற்கை நோக்கி அதீத சாய்வுள்ள ஹென்ரிக் எழுதிய ‘சோலா’ (Zola) என்ற கட்டுரைக்குப் பதிலளிக்கும் விதமாக, அல்லது தாக்கும் விதமாகத்தான் தாமஸ் உளப்பிரதிபலிப்புகள் நூலை எழுதினார் என்று வலியுறுத்துகிறார். ஹெர்பர்ட் லேனெர்ட் என்கிற தாமஸ் மன் ஆய்வாளர் ‘உளப்பிரதிபலிப்புகள் நூலின் எழுத்துப்பணி நவம்பர் 1915ல் தொடங்கியது என்றாலும் அதற்கான முன்தயாரிப்புகள் செப்டம்பரிலோ அதற்கு முன்பாகவோ தொடங்கி இருக்கும். சோலா கட்டுரை அப்போது பிரசுரிக்கப்படவில்லை என்றபோதும் ஹென்ரிக் மீதான தாமஸின் மனநிலை அப்போதே தெளிவாக உறுதியாகி இருந்தது. ஹென்ரிக் எழுதிய சோலா கட்டுரையின் நோக்கம் தன் மீது சேறை வாரி இறைப்பதே என்று தாமஸ் நினைத்தார். அவர்களது பிரிவினையை அது மேலும் அதிகப்படுத்தி 1922 வரை நீண்டது. இந்தக் கட்டுரையின் நகலை பெர்ட்ராம் தாமஸ் மன்னுக்கு அனுப்பினார். தாமஸ் ஹென்ரிக்கிடமிருந்து பெர்ட்ராமை நோக்கி தன் நெருக்கத்தைத் திருப்பிய காலம் அது. அவரது தீவிர தேசியவாதச் சிந்தனைகளுடன் ஒன்றியிருந்தார், கூடவே ஒரு தற்பாலீர்ப்பாளர் இருப்பது குறித்தும் தாமஸ் இலகுவாக உணர்ந்திருக்கக்கூடும். இவையெல்லாம் வெளிப்படையாக அவ்விருவராலும் ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை. 1918ல் ஹான்ஸ் ப்ளூஹர் (Hans Blu’her) என்பவரது எழுத்தை மன் வாசிக்கிறார். தேசம் முழுக்க அலைவதன் சிறப்பு அனுபவங்களைப் பேசும் வாலிபர்களின் இயக்கமான Wandervögelend (பறந்தலையும் பறவைகள்) பற்றி அவர் எழுதியிருந்தார். ப்ளூஹர், செமிடிக் எதிர்ப்பு மனநிலையையும் இந்த இயக்கத்தின் அங்கத்தினரது தற்பால் ஈர்ப்பு இயல்பையும் எழுதி நிறுவியிருந்தார். 1917லிலிருந்து 1919 வரை The Role of the Erotic in the Relationship of Men என்ற இரு தொகுதிகள் கொண்ட நூலை எழுதினார். அவற்றை 1918ன் பிற்பகுதியில் இருந்து 1921 வரை மன் வாசித்தார். (இரண்டாம் தொகுப்பை காடியா மன்னுக்கு அளித்திருக்கிறார்.)

செப்டம்பர் 17, 1919 அன்று ‘நேற்றிரவு ப்ளூஹரை வாசித்தேன். உளப்பிரதிபலிப்புகள் நூலும் என் பாலியல் விசித்திரங்களைப் பற்றிய வெளிப்பாடுதான் என்பதில் எந்தவித ஐயமும் எனக்கில்லை’ என்று ஒரு நாட்குறிப்பை எழுதியுள்ளார். இதில் உளப்பிரதிபலிப்புகள் நூலும் என்று உம்மை விகுதியைச் சேர்த்தமைக்கு என்ன விளக்கம் என்பது நமக்குத் தெரியவில்லை. உளப்பிரதிபலிப்புகள் நூல் மன்னும் பெர்ட்ராமும் சேர்ந்து எழுதியதுதான். 1915 முதல் 1922 வரையிலான காலகட்டம் மன்னும் பெர்ட்ராமும் மிக நெருக்கமாக இருந்த காலம். 

https://famoushotels.org/images/hotels/beradl_thomas_mann.png

தன் வாழ்க்கை முழுவதும் பாராளுமன்ற முடியாட்சியையே மன் விழைந்தார். ஃபாசிஸம் போன்ற சர்வாதிகார ஆட்சி முறைகளுக்கு மாறாக மக்களாட்சியையே தேர்வுசெய்தார். ’என்னைப் பற்றி’ என்ற நூலில் அவர் ‘ஒரு தனியரால் அரசியலற்றவராக இந்தப் பண்பாட்டில் பங்கேற்க முடியும் என்று கருதுவது ஜெர்மன் முதலாளி அமைப்பின் பிழைகளுள் ஒன்று. அரசியல் உள்ளுணர்வோ விழைவோ இல்லாமல் போனால் பண்பாடு ஆபத்தில் சிக்கிக்கொள்ளும். சுருங்கச் சொன்னால், மக்களாட்சிக்கான உறுதிமொழி என் உதடுகளுக்குள் வலுக்கட்டாயமாக இறங்கி அதை வெளிப்படுத்தியாகும் வண்ணம் வீரியம் கொண்டுள்ளது’ என்றார். அவருடைய இரண்டாம் உலகப்போர் பற்றிய எழுத்தும் சொற்பொழிவுகளும் அவருடைய அரசியல் முதிர்வுறுதலைச் சுட்டுகின்றன. தனது அரசியல் கருத்துகளை முன்வைக்கும் பொருட்டு தாமஸ் மன் எழுதினார். 

ஜோசப் பற்றியும் அவரது சகோதரர்கள் பற்றியும் மன் இவ்வாறு கூறுகிறார்- ‘என் மனைவியின் பழைய நண்பர் தனது வரைபடத் தொகுப்பைக் காட்டினார். அதில் ஜோசப்பின் மகன் பற்றிய கதை இருந்தது. அந்தக் கலைஞர் என்னிடம் தனது படைப்புக்கு ஒரு சிறு அறிமுக உரை வழங்கக் கோரினார். அதைச் செய்ய எனக்கே விருப்பம் இருந்தது. என்னுடைய குடும்ப பைபிளை எடுத்துப் பார்த்தேன். இந்த வசீகரமான கதை குறித்து கதே சொல்கிறார்- “இந்த இயல்பான கதை மிக நயமானது, மிகச் சிறியதாகத் தோன்றினாலும் அதில் பலரும் நுண்ணிய விவரணைகளைப் பொருத்திப் பெருக்க இயலும்.” சமீபத்தில் வெளிவந்த நூலில் ஜார்ஜ் பிரிட்ஜஸ், ’தாமஸ் மன் தனது ஜோசப் நாவல்களை எழுதத் தொடங்கிய போது பதினேழு வயது இளைஞனின் பாலியல் ஈர்ப்பு ஏற்படுத்தும் படிமத்தின் மீதான அவரது தனிப்பட்ட பிரேமையே அடிப்படை உந்தமாக இருந்திருக்கிறது. அவர் இந்த ஈர்ப்பைப் புரிந்துகொள்ளவே இந்தப் பைபிள் கதையை மீளச் சொல்ல விழைந்தார். தற்பாலினக் காதல் இச்சையில் இருக்கும் மெய்யியல் அடிப்படையை அவர் கண்டறிந்தார். ஆழிச்சையை அடக்கிவைப்பது, அதைத் தொடர்ந்து எதிர்நோக்குவதற்கான உந்துசக்தியாக இருக்கிறது என்ற முரண்கருத்தும் அதில் அடங்கியுள்ளது’ என்று குறிப்பிடுகிறார். இங்கு மீண்டும் மன் தற்பால் காதலை உந்துசக்தியாக வைத்து எழுதியிருந்தாலும் அதைப் பண்டைய மனிதனுக்கும் நவீன மனிதனுக்குமான தொடர்ச்சியைப் பேசும் ஆழமான படைப்பாகவும் உருமாற்றினார். 

6

மன்னுடைய இறுதி நாவல் Doctor Faustus (the Life of the German Composer Adrian Leverkühn as Told by a Friend) ஜெர்மனி, நாசிஸத்தில் வீழ்ந்ததைப் புரிந்துகொள்வதற்கான தேடல். அவர் வளரிளம் பருவத்தினர் எப்படி தங்கள் ‘திரிந்தலைதல்’ குழுவுக்குள் காலத்தைக் கடத்தினர் என்பதை ஏக்கத்துடன் எழுதியுள்ளார். இது பழைய வாழ்வின் மிச்சங்களைச் சொன்னது. கதையோட்டம் அட்ரியன் லெவெர்குனுடைய (Adrian Leverkühn) வாழ்க்கைக்குள் செல்கிறது. இந்தப் படைப்பு மன்னிடம் தொடர்ந்து குன்றாமல் இருக்கும் அறிவுத்தேடலையும், தற்கல்வி முறைகளையும் காட்டுவதோடு தனது பழைய காதலர்களையும் (Paul Ehrenberger போன்றோர்) மீள அழைத்து வருகிறது. மன் 12 நாத ஸ்தாயிகளையும் இசையின் நுட்பங்களையும் கற்க முயன்றிருக்கிறார். இங்கு மன் கல்வியாளராகவும், மன்னிப்பு கோருபவராகவும் நினைவுச்சின்னங்களை உருவாக்குபவராகவும் உள்ளார். 

உண்மையில் தாமஸ் மன் இறுதியாக எழுதிய நாவல் Confessions of Felix Krull, Confidence Man ஆகும். இதை “Confessions of Thomas Mann, Confidence Man” என்று தலைப்பிட்டாலும் தகுமோ? அவருடைய நாவல்களிலேயே இதுதான் கனம் குறைந்தது. எளிதான வாசிப்பைக் கோருவது. நேரடி வாசிப்பு இன்பத்தைத் தருவது. 1909ல் இப்பணியைத் தொடங்கி பின் ஒத்தி வைத்தார். முதல் உலகப்போருக்கு முன்பு நான்கு முறை எழுதத் தொடங்கி தள்ளி வைத்தார். அதன் பிறகு 1953ல் நாற்பதாண்டுகளுக்கு முன் அவர் நிறுத்திய புள்ளியில் இருந்து சரியாக எழுதத் தொடங்கினார். அது இன்னும் முற்றுப்பெறவில்லை. அவர் எழுதியது ஆரம்ப வருடங்கள் என்ற தலைப்பைத் தாங்கி உள்ளது. 1964ல் நாட்குறிப்பேடுகள் வெளியாவதற்கு 11 ஆண்டுகளுக்கு முன் ஹெர்பெர்ட் லேனெர்ட் சொல்கிறார்- ‘க்ருல்லின் ஆரம்பகாலப் பகுதிகளில் தன்வரலாற்றுக் கூறுமுறை எத்தனை முக்கியமாக இருக்கிறது எனில், மன் சிறுவனாக இருந்த காலத்து – இளவரச விளையாட்டு உள்ளிட்ட- விளையாட்டுகளை எழுத்தில் தாங்கிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளில் உள்ளவற்றோடு அப்படியே ஒப்பிட்டுப் பார்க்கும் அளவிற்கு வந்துள்ளது. சில பத்திகள் ஒரே மாதிரியானவை. க்ருல்லின் தந்தையின் மரணமும் அதற்குப் பிறகு ஏற்பட்ட தொழில் சறுக்கல்களும் மன்னின் தந்தைக்கு நிகழ்ந்தவையே.’ மன் தனது தன்வரலாற்று எழுத்துமுறையின் தாக்கத்தை அறிந்தே இருந்தார். அவர் எழுதிய எந்தப் படைப்பிலும் வலுவான தன்வரலாற்று எழுத்துக்கூறுகள் இருந்தன. ஒருவேளை அவர் தனது நாட்குறிப்பேடுகளில் எத்தனை வெளிப்படையாகத் தன்னை முன்வைத்தாரோ அந்த அளவுக்கு இந்த ‘மோசடி மனிதன்’ பாத்திரத்திலும் தன்னை முன்வைக்கக் கருதியிருக்கலாம். 

https://pbs.twimg.com/media/EycmjRtWQAQi4-k.png

மன் எழுதிய தன்வரலாற்று நூல்களிலேயே ஃபெலிக்ஸ் க்ருலையே மிகவும் நேரடியான புனைவாகக் கருதலாம். தனது இறுதி இலக்கிய முயற்சியாக, 44 ஆண்டுகளாகப் போராடிய அவர், தன்னைப் பற்றி சொல்லியாக வேண்டும் என்ற உள உந்தத்திற்கு ஆளாகிறார். மின்தூக்கியைச் சரிசெய்யும் நபராக அவர் எழுதிய ஃபெலிக்ஸ் கதாபாத்திரத்தை வயதில் பெரிய, வளமான, திருமணமான வாழ்க்கை கொண்ட பெண்மணி தன் மஞ்சத்தைப் பகிர்ந்துகொள்ள அழைப்பது, மன் இளம் இராணுவப் பயிற்சி வீரர்கள் மீது தான் கொண்டிருந்த அந்தரங்கமான பாலியல் கற்பனைகளில் இருந்து உருவானது. அவற்றை எங்கும் மன் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஒருவேளை எரிக்கப்பட்ட நாட்குறிப்புகளில் அவற்றை எழுதி இருக்கக்கூடும். மேடம் ஹவ்புல் பாத்திரத்தின் வழியாக தாமஸ் மன், ‘பிறழ்வு என்று அறியப்பட்ட வாழ்வை வாழ்கிறேன், என் வாழ்வின் ஆதாரமாக, என்னிருப்புக்கு அடித்தளமாக இருக்கும் இந்த இன்பத்துயர் மிடைந்த கிளர்ச்சி கடும் சாபமாக இருக்கிறது. எதுவும், இந்த விழியறிந்த உலகில் உள்ள எதுவுமே, இளம் ஆணின் வசீகரத்திற்கு ஈடாகாது. நான் உங்களுடைய காதலைப் பெறவே வாழ்கிறேன். நீங்கள் வேண்டும், நீங்கள் வேண்டும். ஆத்மாவை முற்றிலும் விலக்கிவிட்டு மனக்காட்சியில் தெரியும் உங்கள் அழகை முற்றாக முத்தமிடுகிறேன். நீங்கள் புன்னகைக்கும் போது மிளிரும் வெண்பற்கள் மீதிருக்கும் உம் அகந்தை வழியும் அதரங்களை முத்தமிடுகிறேன். கனிந்த மார்பில் இருக்கும் நட்சத்திரங்களையும், இருண்ட அக்குளின் தோலில் இருக்கும் சிறிய பொன்னிற மயிர்களையும் முத்தமிடுகிறேன். இது எப்படி நடக்கிறது? உங்கள் நீல விழிகளுக்கும் பொன்னிறத் தலைமுடிக்கும் எங்கிருந்து நிறத்தைப் பெறுகிறீர்கள், வெண்கலத்தின் சிறு கலவையும் அதில் இருக்கிறது?’ இது போல வர்ணனைகள் இன்னும் இருக்கின்றன. நூலின் இறுதியில் எருதுச்சண்டையில் கலந்துகொண்ட டொரெடோரை (எருதுச்சண்டை வீரன்) மிகவும் இரசித்து, அவனுடைய உடல், முகம், கருணை என்று இரசித்தபடியே மர்மமான முறையில் க்ருல் (மன்) டொரேடோர் அங்கிருந்து சடுதியில் அகன்று விடுவதைச் சொல்வதாக காட்சியை முடிக்கிறார். மேலும் அப்பாத்திரம் ’அதற்குப் பின் வேறொரு கதாபாத்திரத்தில், அல்லது இரட்டைப் பாத்திரத்தில் அவர் மீண்டும் என் வாழ்வில் தோன்றுகிறார். ஆனால் இன்னும் பொருத்தமான இடத்தில்’ என்கிறது. மன் இந்த நாவலை முடிக்கவில்லை என்பதால் அந்தக் கூற்று நமக்குப் புதிர் போட்டு தடுமாறச் செய்கிறது. ஒருவேளை உடல் ரீதியான தற்பாலீர்ப்பு அனுபவத்தை விரிவான விவரணைகளுடன் வாக்குமூலம் போல் தெரிவிக்க நினைத்தாரோ?

தாமஸ் மன் ஏன் எழுதினார் என்பது பற்றி இன்னும் என்ன சொல்ல முடியும்? ஆழத்தில் இருந்த நனவிலி உந்தங்களை நம்மால் நிர்ணயிக்க முடியாது. ஆயினும் அவருடைய சிறு வயதில் இருந்தே உன்னதத்தை நோக்கிய திசையில் பயணிக்கும் எண்ணம் இருந்திருக்கிறது என்பது திண்ணம். மேதைமை அடைந்த பலருக்கும் அதுவொரு அடிப்படை குணநலனாகவே இருக்கிறது. அவருடைய விகாரமான விலக்கத்தை அவர் ‘காதல், மரணம், வேட்கை, கட்டுப்பாடு, ஒழுக்கத்துடன் படைப்பூக்கம் கொண்டிருக்கும் தொடர்பு அல்லது தொடர்பின்மை ஆகியவற்றோடு நெருங்கிப் பயணிக்கிறேன்’ என்கிறார். தனது சொந்தப் பண்பாடு, நாகரீகம் போன்றவற்றைப் பதிவுசெய்வதற்கான கச்சிதமான விழிப்புணர்ச்சியாலும் அவற்றின் வீழ்ச்சியில் உட்பொதிந்திருந்த உள்ளார்ந்த விழுமியங்களைக் கற்று அரசியல் முதிர்ச்சி பெற்றதாலும் அவரால் மிகத் துல்லியமாகவும் ஆளுமையுடனும் எழுத முடிந்தது. அவரது படைப்புகள் கொண்டுவந்த உலகளாவிய புகழ், வெற்றி, முக்கியத்துவம் அனைத்தையும் மீறி அவர் நிஜ வாழ்வில் குறைவான மகிழ்வையே அனுபவித்தார் எனலாம். அவர் அடிக்கடி நோயில் வீழ்ந்தார். இளஞ்சிறுவர்கள் மீதான ஈர்ப்பினால் மனவேதனை அடைந்தார். அதனால் உண்டான நித்திய குற்றவுணர்வில் சுருங்கினார். தனது தன்னகங்காரத்தையும் பிழைகளையும் இலக்கியத்திற்குக் கச்சாப் பொருட்களாக பயன்படுத்தியது அவரது உளச்சமநிலையைப் பேணுவதில் பெரும் பங்காற்றியது. தன்னை வளர்த்துக்கொள்ளவும் உருமாற்றிக்கொள்ளவும் தயாரான ஆற்றலுடன் இருந்தார். அவருக்குப் பிடித்த மகள் எரிகா ‘அவர் எழுதும் பொருட்டு வாழ்ந்தவர், வாழும் பொருட்டு எழுதியவர் அல்ல’ என்றார். 

எல்லாவற்றையும்விட முதன்மையாக ’அது இருந்தது’ எனும் பொருட்டு ஒரு கதையைச் சொல்ல தனது படைப்பூக்கத்தைப் பயன்படுத்தியது அவருக்கு மகிழ்வளிப்பதாக – பிறப்பை இறையாண்மையுடன் உணரும் நிலைக்கு இணையான, அனைத்துமாதலின் தெளிந்த உணர்வாக – இருந்தது. 

*

ஆங்கில மூலம்: Why Thomas Mann Wrote by Cecil C. H. Cullander

1 comment

Balasubramanian Ponraj July 27, 2021 - 4:01 pm

This is an important one to understand the writings of Thomas Mann. Good job

Comments are closed.