பெண் என்று சொல்லிடிலோ!

0 comment

‘த புள்ள… பில்லுக்கட்டு எப்டி…’

குரல் கேட்டுத் தலையைத் திருப்பி நின்றாள் மங்காத்தா. வயசுப் புள்ள. மாஞ்செவுலு. மடிசார் கட்டுப் புடவை. நெஞ்சைப் போர்த்தி பிடரி வழியாய் தலைக்கு ஏறிய முந்தானை சிம்மாடு. மேலே புல்லுக்கட்டு. இலேசான ஈரத்தலை. ஓரங்களில் கொஞ்சம் கொஞ்சம் சேற்றுத் திப்பிகள். தண்ணி தொட்டு கழுவிய முகம் மட்டும் பளிச்சென்று தெரிகிறது. காதில் மூக்கில் தொடப்பக் குச்சிகள். கழுத்தில் மஞ்சளாயிருந்து அழுக்கேறி கறுத்துப்போன தாலிக்கயிறு. மேலே கட்டை வலது கையால் எத்தாகப் பிடித்து, ‘முக்கா ரூபா…’ என்றாள்.

‘த… குடுக்கற வெலயாச் சொல்லு புள்ள…’

‘என்னா மோலியாரே. நீயே இப்புடி கேக்கற. ஒங்கிட்டதானா வெல சொல்லப் போறேன். கேக்கறத கேட்டு வாங்கிப் போடுங்க…’

‘எட்டணா குடுக்கறேன். போட்டுட்டுப் போ…’

‘கட்டாது மோலியாரே. இன்ஸ்பெக்டர் வூட்டுலியே பத்தணாவுக்கு கேட்டாங்க. மாட்டேன்னு வந்துட்டேன்.’

‘அப்புறம். நீ சொன்னா சொன்னதுதானா…’

‘முக்கா ரூபா குடுத்துடுங்க. எம்மாத்தரம் செலவு பண்ணிட்டுப் போறீங்க…’

‘ம்..ம்.. முக்கா ரூபா தாங்காது. நீ என்னுமோ ஒரேமுட்டா சொல்றியே… வாடிக்கையா வாங்கறவன்னு கூடம் இல்லாம…’

‘எம்மாத்தம்தான் தர்ற…’

‘ஒம்பதணா வாங்கிக்கோ…’

‘வராதுங்க. போடறதுன்னு அங்கியே போட்டுருக்க மாட்டேன். வேணா அந்தப் பத்தணாவே குடுத்துருங்க. ஒங்களுக்குன்னாவாசி…’

‘சரி இப்பிடி கொண்ணாந்து படலு ஒட்டாப் போடு.’ 

கொட்டாய் முன்பக்கம் பசுமாடு கட்டியிருக்கிறது. சாணமும் மூத்திரமும் குழம்பி, கொஞ்சம் சகதியாயிருக்கிறது. ஓரம் கொஞ்சம் ஒதுக்குப்புறமாகக் கட்டை இறக்கிப் போடுகிறாள். முந்தானை சிம்மாட்டைப் பிரித்து உதறி இலேசாய்த் தலையைத் துவட்டிக்கொள்கிறாள். இழுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டு நிற்கிறாள். உள்ளேயிருந்த முதலியார் வருகிறார். ஒரு ஐம்பது பைசாவைத் தருகிறார்.

சாரியான குடிசை. நெஞ்சுயரத்துக்கு எரவாணம். திண்ணை எதுவும் கிடையாது. நாலு பக்கமும் மண் சுவர். வெளியிலிருந்து பார்த்தால் கல்லும் கட்டியுமாகப் பொரைசலாகத் தெரிகிறது.

மங்காத்தா உள்ளே நுழைகிறாள். ஒரு வயதுக் குழந்தையை மடியில் வைத்து சிவனே எனக் குந்திக்கொண்டிருக்கிறாள். தனியாக ஓரம் கொஞ்சம் ஏனபானங்கள். தரையோடு ரெண்டு அழுக்குத் துணி மூட்டைகள். பிய்ந்துபோன கோரைப்பாய். மூலையிலே சுற்றி வைக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு மூலையில் பழங்கலம். ஒரே அடிக்கு பெரிசிலிருந்து ஆரம்பித்து சின்னச் சின்னதாகத் திட்டமாய் சீராய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

‘அக்கா எங்கடா?’

‘தண்ணிக்குப் போயிருக்குதும்மா…’

மண்சட்டியை எடுத்து அரிசியைக் கொட்டி வைத்துவிட்டு மளிகைச் செலவுப் பொட்டலங்களைத் தரையோடு வைக்கிறாள்.

‘தம்பிய கொண்டா இப்பிடி…’ மடியில் வாங்கி வைத்துக்கொள்கிறாள். ரவிக்கை முடிச்சை அவிழ்த்துவிட்டுக் கொள்கிறாள். ‘பாவம் புள்ள. ஆக்கம் புடிச்சிப் போயே சோங்கிப் போவுது…’

‘நைனா எங்கடா?’

‘அது எங்கியோ தெரிலம்மா. நான் பள்ளிடம் வுட்டு வந்ததுல இருந்தே காணோம்மா.’

‘இந்த ஆம்பளைக்கி தெனம் இதே ஒரு தொழிலாப் போச்சி’. தனக்குத்தானே முனகிக்கொள்கிறாள். கால் நெட்டியை நெருடி விட்டுக்கொள்கிறாள். ‘சரி. நீ போய் கொஞ்சம் வெறவு பொறுக்கினுவாமா… எங்கனா சுள்ளியாப் பாத்து…’

‘எங்கமா போவ…’

‘தோப்புக்குப் போனா அந்த மீசக்காரன் திட்டறான். அந்தக் கள்ளிச் செடிக்கா போய் பொறுக்கியா. அங்க எங்கனா காஞ்சி போன செடி  துட்டகிட்ட கெடக்கும். செத்த பெரிச்சாரலான்னா அதுக்கு ஒரு நாளைக்கு நேரம் ஒழியல. இவ்வளோ பெரிய ஆம்பள நாலு வெறவு கிறவுன்னா ஒடிச்சாந்து போடக்கூடாது? நீ போய் வாமா… புட்டூற எடுத்தும் போ…’

பையன் வெளியே போகிறான். மங்காத்தா குந்தியிருக்கிறாள். ரொம்ப நேரம். குழந்தையின் பசியும் வெறியும் தணியும் வரைக்கும் கண்களில் கனிவும் பரிவும் பொங்க குழந்தையின் தலையை வருடுகிறாள். முதுகை வருடுகிறாள். வயிறு நிறைந்த திருப்தியில் குழந்தை வாயை எடுத்துத் தாயைப் பார்த்துச் சிரிக்கிறது.

தூக்கிக் கீழே விடுகிறாள். விளையாடுவதற்கு ஒரு பழைய சைபால் டப்பாவை எடுத்துத் தருகிறாள். பையனுடைய பல்பம் போட்டு வைக்கிற டப்பா. குழந்தை கையில் பிடித்துக்கொண்டு பார்க்கிறது.

‘வூடாவா வெச்சிக்கிறா. வௌக்குமாத்த எடுத்துன்னா ரவ தள்ளக்கூடாது… வௌக்குமாத்த எங்க வெச்சிருக்கிறா…’

சூரியன் அடிசாய்ந்து புதைந்துவிட்டது. எங்கும் அந்தி வெளிச்சம். குடிசையின் உள்ளே இலேசான இருள். அடுப்பு எரிகிறது. எதிரே குந்தியிருக்கிறாள் மங்காத்தா.

‘ஏம் புள்ள… அந்தக் காடா வௌக்க எடுத்தா. கொளுத்தித் தாரேன்.’

பொண்ணு காடா விளக்கை எடுத்து ஆட்டிப் பார்த்துவிட்டு, ‘எண்ணெ இல்லம்மா’ என்கிறாள்.

‘பாட்டல்ல பாரு.’

‘பாட்டல்ல கூடம் இல்ல.’

‘சரி. போயி ஒரு பத்து பைசாவுக்கு வாங்கியாந்துடு’. முந்தானையிலிருந்து பத்து பைசாவை அவிழ்த்துத் தருகிறாள். ‘சீக்கிரம் வா. பொழுது போவுது.’

சோறு பொங்குகிறது. வடிதட்டை எடுத்து கரண்டியால் கிண்டுகிறாள். குழந்தை முட்டிபோட்டு தவழ்ந்து அடுப்பண்டை வருகிறது. குத்துக்காலிட்டு உட்கார்ந்திருப்பவளை மெல்லப் பற்றி எழுந்து நிற்க முயலுகிறது. நின்று சின்னக் கைகளால் அம்மாவைப் பொத்திச் சிரிக்கிறது.

‘டேய், இங்க வா. தம்பிய தூக்கிம்போய் அப்பிடி காத்து வாட்டமா வச்சிரு. அனல்ல அதுவும் ஏன் கூட வேவணும்…’

பையன் வருகிறான். குழந்தையைத் தூக்கிக்கொண்டு போகிறான். காலை உதைத்துக்கொண்டு குழந்தை ஒட்டாரம் பிடிக்கிறது. ‘போய் அப்பிடி தெருவுக்கா இருடி. தோ… வேலைய முடிச்சிக்னு வந்து தூக்கி வச்சிக்கிறேன்’ என்று முனகுகிறாள்.

தெருமுற்றத்தில் குழந்தையின் சிணுங்கல் ஓய்ந்து வேடிக்கை பார்த்துச் சிரிக்கிறது. 

அமைப்பான முகம். ஆனால் ஆழ்ந்த சோகம். கூடப் பிறந்து கூடவே வந்து நெஞ்சிலே ஒட்டியிருக்கிற சோகம். மூக்கை உறிஞ்சி… அடுப்பை ஏறத் தள்ளுகிறாள்.

‘என்னா சொன்னாலும் பொழுதானா கௌம்பிடறாரு. நீ கெடறி கழுதன்னு… புள்ளெய்வளாச்சா… பொண்டாட்டி யாச்சான்னு ஒரு இத காணோம். கால முச்சூடுமா இப்பிடி…’

எண்ணெய் வாங்கிக் கொண்டுவந்த பெண் காடா விளக்கில் நிரப்பி அம்மாவிடம் கொண்டுவந்து தருகிறாள். மங்காத்தா எரிகின்ற சுள்ளி ஒன்றை எடுத்து விளக்கைக் கொளுத்தித் தருகிறாள்.

‘நைனா எப்படி போனாரு…’

‘பொழுதூகதாமா… மத்தியானம் கூழக் கரச்சிக் குடுத்தனா, குடிச்சிப்புட்டு கொஞ்ச நேரம் தூங்கனாரா… அப்புறம் எழுந்து துண்ட எடுத்துப் போட்டுக்னு அவருமாட்டுங் கௌம்பிப் பூட்டாரு.’

‘அவரா போனாரா… ஆருன்னா வந்து கூப்டும் போனாங்களா?’

‘அவருமட்டும் தாமா போனாரு.’

‘சரி. வௌக்கக் கொன்னும்போயி வச்சி தம்பியப் படிக்கச் சொல்லு. கொழந்தைய நீ வாங்கிக்கோ. அவன் படிக்கட்டும்.’

‘சரிம்மா’ என்று மகள் போகிறாள். மங்கிய கண்கள். அழுக்குப் பாவாடை. அழுக்குச் சட்டை. எதிலுமே ஏதோ ஒரு பயம் நிறைந்திருப்பது மாதிரி எப்போதும் கலவரத்துடனே இருக்கும் கண்கள்.

‘இதுங்க தலையிலல்லாம் இப்பிடியா எழுதணும். அங்கங்க புள்ளைங்க என்னாமா வளருது. தனக்கு இல்லன்னா கூடம் ஊட்டி ஊட்டி வளக்கிறாங்க. அங்கல்லாம் எங்கணா போயி பொறந்திருக்கக்கூடாது… என்னா பாவத்த பண்ணுச்சிங்களோ.. எம் வவுத்துல வந்து புள்ளியாப் பொறந்துகிதுங்க…’

சோறு பொங்குகிறது. மீண்டும் விறகைத் தள்ளித் தீயைத் தூண்டுகிறாள். ‘தெனம் இதே பொழப்பா பூடுத்து… ஒரு நாளு கூடம் இந்த வூட்ட ஒரு நிம்மதி கெடயாது.’

தெருவில் பையன் சத்தம் போட்டு பாடம் படிக்கும் சத்தம் கேட்கிறது. குழந்தையைத் தூக்கிக்கொண்டு போய் அக்கா விளையாடுகிறாள். ‘ஆசப்பட்டது அரிபட்டது ஒரு நாளைக்கு அதுங்களுக்கு ஒன்னாவது வாங்கிக் குடுக்க முடியுதா… அப்பன் செத்த புள்ளைங்களாட்டமில்ல இருக்குதுங்க…’

தண்தண்னென்று தரையதிரும் சத்தம் கேட்கிறது. அப்படி நடப்பது அவள் புருஷன் ஒருத்தன்தான். வந்துவிட்டான். என்ன கூத்து நடக்க இருக்கிறதோ! பேசாமல் அடுப்படியிலேயே இருக்கிறாள்.

அடுப்பைச் சுற்றியிருக்கும் வெளிச்சம் தவிர மற்றபடி எங்கும் மங்கலான இருள். காடாவிளக்கு வெளிச்சம் மங்கித் தெரிகிறது. அமைதியோடு நின்று எரிகிறது. சுடரும் ஒட்டரணையும் மேல்கூரையில் படிந்து படிந்து ஒரே கருப்பாக இருக்கிறது.

புருஷன் உள்ளே நுழைகிறான். உடம்பில் ஒன்றும் குறைச்சல் கிடையாது. நல்ல ஆகிருதியான உடல். முறுக்கு மீசை. பரட்டைத்தலை. கரட்டு முகம். அம்மைத் தழும்புகள். வெறும் உடம்பு. ஒரு நாலு முழ வேட்டியை முழங்காலுக்கு மேலே துண்டு மாதிரி கட்டியிருக்கிறான்.

உள்ளே நுழைந்ததுதான் தாமதம்.

‘என்னாமே சோறு ஆக்கிட்டியா…’

மங்காத்தா பேசாமலிருக்கிறாள்.

‘ஏய் ஒன்னத்தாமே சோறு ஆக்கிட்டியா…’

‘ஆய்கினே இருக்கது. செத்த பேசாமப் படு.’

‘இம்மா நேரம் என்னா புடிங்கிக்னு இருந்தியா… இப்பதான் ஆக்கற சோறு மாஞ்சி மாஞ்சி…’

‘படுதே பேசாம… அப்புறம் பேசிக்லாம்.’

‘ஏய் என்னாமே… என்னுமோ படுக்கச் சொல்லிக்னேகிற. என்னா குடிச்சிட்டு வந்துகிறேன்னு பாத்துக்கிறியா…’

‘நீ நல்லாதான் இருக்கிற. உன்னப் பாத்து ஆருன்னா குடிச்சிட்டுகிறேன்னு சொல்லுவாங்களா’ என்று சொல்லிக்கொண்டே மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்த பாயை எடுக்கப் போனாள்.

‘பாய தொட்டே ஒதைப்பெ இப்போ.. என்ன மனுஷனைப் படுக்க வக்யறதுலியே இருக்கிறீங்க. என்னா…’

குழந்தையோடு உள்ளே வந்த மூத்த பெண் பயந்து நிற்கிறாள்.

‘நீ தெருவுக்குத் தூக்கிம்போயி வெளையாடு பேசாம. இந்த ஆம்பளகிட்ட ஆரால முடியும்…’

‘ஏய் என்னா… எனக்கு! சண்ட வளத்தலாம்னு பாக்கிறியா? எலும்ப நொறுக்கிப்புடுவேன் நொறுக்கி. என்னா கொழம்பு வச்சிக்கிற…’

மங்காத்தா பேசாமலிருந்தாள்.

‘ஏய்! என்னா கொழம்புமேன்றேன். என்னுமோ உம்முன்னு கிறாடா இவ…’ சொல்லிக்கொண்டே கிட்டே நெருங்குகிறான். ‘என்னா கொழம்பு…’

‘பயறுக் கொழம்புதான். வேற என்னா கொழம்பு வக்யறது இங்க…’

‘பயறுக் கொழம்பா… தூக்கிப் போட்டு ஒடைச்சிடப் போறேன் பாரன் இப்போ… ஏன் போட்டி கறி எடுத்து ஆக்கறது.’

‘சும்மா கெடய்யா. அப்புறம் என் வாயெ கௌப்பாத… அய்யா இங்க சம்பாரிச்சாந்து கொட்டி வச்சிக்றாரே… அதுல போட்டி கறி எடுத்து ஆக்கணுமா போட்டி கறி…’

‘என்னாமே நீ என்னுமோ எகுத்து எகுத்துப் பேசிங்கிற…’

மங்காத்தா கம்மென்று இருந்தாள். ஆனால் அவன் விடவில்லை. படிக்கிற பையனை அழைத்து ‘டாய்’ என்றான். 

‘போய் ஓரணா பீடி வாங்கியா’ மடியிலிருந்து அவிழ்த்துக் கொடுத்தான். ‘தே புள்ள… எம் புள்ளையத் தூக்கியாமே இங்க…’ என்றான்.