பாதி அணைத்து வைத்திருந்த சுருட்டை மீண்டும் உதட்டில் கவ்வக் கொடுத்தபடி தீக்குச்சியைக் கிழித்தார் அய்யாவு. மொரமொரப்பான தாடியின் வெண்ரோமங்களுக்கிடையே பொன் வெளிச்சம் பூத்து வந்தது. குச்சியை அணைத்து வீசிவிட்டு கண்மாய்ச் சரிவின் இருளுக்குள் பார்வையை விட்டார். நீர் நிறைந்து கிடக்கும் வாகைக்குளம் கண்மாயின் மீது நிலவு வெளிச்சம் துணியைப் போல மிதந்துகொண்டிருந்தது. மேடுவரை ஏறிவந்து கரையில் மோதி கண்ணாடிக் கட்டிகளைப் போல நீர் உடைந்துகொண்டிருக்க, கருவேலம் மரத்திற்குக் கீழே பரமு பாவாடையைக் கைகளால் விரித்து குத்த வைத்திருந்தாள். கவிழ்த்து வைக்கப்பட்ட செம்பருத்திப் பூப்போல இருளுக்குள் அவள் அமர்ந்திருப்பதைப் பார்த்தபடி அய்யாவு, “ஏலா, கொஞ்சம் பாதை மாறி உக்காரு. விடிகாலைல சனங்க கால் வைக்க வேணாம்?” என்றார்.

பரமு தலையைக் குனிந்தபடி, “போப்பா. நல்லது அலையுற சாமம். நான்லாம் புதர் பக்கம் போவமாட்டேன்” என்று கூறினாள்.

சைக்கிள் சீட்டைக் கைகளால் பற்றிக்கொண்டு, அய்யாவு கண்மாய்க்கு மூலையில் கிடந்த மக்காச்சோளக் காட்டைப் பார்த்தபடி புகையை ஊதினார். அந்தப் பழைய சைக்கிளின் மீது சின்னஞ்சிறிய பாத்திரப் பண்டங்கள் கோணிச் சாக்கில் பொதியப்பட்டு கட்டப்பட்டிருக்க, கிழக்குக்காட்டிலிருந்து கம்மங்கதிர் சூல் பிடிக்கும் பால்வாசனையோடு கிளம்பி வருகின்ற காற்று பாத்திரங்களை உரசி ஒலியெலுப்பி மறைந்தது. கண்மாயின் கரையையொட்டி ஓடிய நீண்ட மண்வண்டித் தடத்தின் முடிவில் பிரசிடெண்ட் கட்டிடத்தருகே சோகையான ட்யூப்லைட் ஒன்று துயரமுகத்துடன் அவர்களுக்காகக் காத்து நின்றபடியிருக்க, ஊரை எட்டிவிட்டோமென மனதுக்குள் உணர்ந்தபடி தொண்டையச் செருமி உரிமையாகத் துப்பினார். உடம்பு முழுவதும் அசதி பரவுவதைப் போலிருந்தது.

டி.கல்லுப்பட்டிக்குப் போனது, பரமு புகுந்த வீட்டுக் கல்திண்ணையில் உட்கார்ந்து குடிக்கத்தந்த தண்ணீர் செம்பைப் பாதி குடித்துவிட்டு, பரமுவின் வீட்டுக்காரன் ஆட்டுரலில் கைலியைத் தரித்தபடி உட்கார்ந்து பரமுவைப் பற்றி ஆவேசமாய்க் கூறிய வசைகளைக் கேட்டவாறே, வெறுமனே செம்பைக் கையில் வைத்து உருட்டிக்கொண்டிருந்தது, காலில் விழாத குறையாக அவனிடம் கெஞ்சியபோதும் அவளைப் பண்டம் பாத்திரங்களுடன் இவரிடம் தள்ளிவிட்டு கதவைச் சாத்தியது வரை இப்போது துல்லியமான காட்சிகளாக இருளுக்குள் தெரிந்தது. அய்யாவுவிற்கு, தான் சரியாக மாப்பு கேட்காதது போலத் தோன்றியது. பிறகு, இதற்குமேல் எப்படி ஒரு மனிதனிடம் கெஞ்சுவது என்றும் தோன்றியது. போகவும் பரமுவிற்கு இது இரண்டாவது திருமணம். அவனுக்கும்கூட. பரமுவிற்கு வயதிற்கேற்ற சூதுவாது கிடையாது – அதைக் கிறுக்குத்தனம் என யசோதை அங்கலாய்ப்பாள் – அய்யாவுவிற்கு பரமு எப்போதுமே குழந்தைதான். ரயில்வே பீட்டர் சாலையிலிருக்கும் தானியேல் மண்டியில் பகல்முழுக்க சம்சாரிகளுக்கும் கடைக்காரருக்கும் இடைத்தரகராக ஆயிரம் வேஷங்கட்டி அலுத்துப்போய் வீடு திரும்பும்போது, வாசலில் காய்கின்ற வேப்பங்கொட்டைக் குவியல்களைச் சாக்கில் அள்ளியபடி, “அப்பா, நவ்வாப்பழம்..” எனச் சிணுங்குகின்ற ஒரு பெண் எப்போதும் குழந்தைதான்.

வெள்ளாகுளத்தில் பரமுவை முதன்முதலாகக் கட்டிக்கொண்டு போன ஐஸ்காரன் பாஸ்கரந்தான் அந்தக் குழந்தை என்கின்ற பிம்பத்தின் மீது முதல் கசப்பைப் பூசிச் சென்றான்.

“எந்நேரமும் விளையாட்டும் சக்கிலியக் கூத்தும்னா எப்புடி மாமா? பத்து பர்லாங்கு அலைஞ்சு வாரேன். இப்படி கிறுக்கச்சியாட்டமா பால்பவுடரைத் தின்னுகிட்டு உக்காந்திருந்தா வெனம் வருமா இல்லியா?”

“குழந்தையா வளத்துட்டோம் பாஸ்கரா.”

“வெறும் குழந்தையாவே எல்லா நேரமும் நின்னா எப்புடி மாமா? மருவாதிக்கு நிறைய வெசயம் நான் உங்ககிட்ட பேச முடியாது.”

சொல்லிக்கொண்டே போனவன் சட்டெனக் குரல் இடறி, “பிறந்ததிலிருந்து நாய்ப் பொழப்பு மாமா. பத்தியும் பத்தாம தின்னுட்டே படுக்கும்போது வராத கோபம், உடம்பு அனலை ஆத்தத் தெரியாம அர்த்த ராத்திரில ஒரு பொம்பள நம்பள தவிக்கவிடும் போது பத்திக்கிட்டு வருது. நல்லா இருப்பீக. கூப்ட்டு போய்டுங்க.”

கனன்று சாம்பலாக உதிர்ந்த சுருட்டின் சாம்பல் துகள்கள் உரோமங்களில் விழுந்தது. சுருட்டு நுனியின் கங்கை ஒருமுறை எடுத்துப் பார்த்தபடி ஹேண்டில்பாரில் நசுக்கி அணைத்தார். கண்மாய்க்கரை நீரில் கால்களை அளைந்தபடி எதிர்க்கரை இருளை வேடிக்கைப் பார்த்தவாறு பரமு நின்றிருந்தாள்.

சாணி தெளிக்கும் சப்தமும் வைக்கோல் கூளத்தின் வாசனையுமாக வாசலில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த அய்யாவுவின் மீது, யசோதா குரலெடுத்துத் திட்டியபடி பாத்திரங்களை வீசுகின்ற சப்தம் மோதியவுடனேயே, அதுவரை மறந்திருந்த கவலைகள் அனைத்தும் ஈக்கூட்டம் போல வந்து அப்பிக்கொண்டன. 

“மோந்து பாத்துட்டு கசக்கிப் போடப்போட போய் பெறக்கிட்டு வரவா ஆம்பிளைன்னு அனுப்புனேன்? மனசு உதற வேணாம் மனுஷனுக்கு! மண்ணு கணக்கா போய் உக்காந்து அவனுக அழுகுறதை, திட்டுறதை பார்த்து ஊமைச் சாமியாட்டம் பொண்ணை சைக்கிள்ல வச்சு கூட்டியாறதுக்கு வெக்கப்பட வேணாம்?”

அய்யாவு வாசல் திட்டில் அமர்ந்தபடி, நன்றாக ஒருமுறை உடலை நெளித்து கொட்டாவி விட்டார். பிறகு நிதானமாகக் கைவிரல் கால்விரல்களில் சொடக்கு எடுத்துக்கொண்டிருக்கும் போது மீண்டும் வீட்டிற்குள் யசோதை ஆங்காரமாகக் கத்தினாள்.

“மூதேவி, குளிக்கும்போது பார்க்கலை? துணியை எடுத்துட்டு கொல்லைக்கு ஓடுறி. வாய்ல என்ன, அரிசியா? ஐயோ!”

பரமுவின் ஈரமான முதுகில் யசோதை அறைகின்ற சத்தம் சுளீர்சுளீரென அய்யாவுவிற்கு உறைத்தது.

“ச்சை, சனியனே! ஏண்டி ஊரைக்கூட்டுற? தூங்கி எந்திரிச்ச பிள்ளையோட ஈர உடம்புல மாட்டை அடிக்கிறவளாட்டம் அடிச்சிக்கிட்டு! இருக்குற கடுப்புல கைய முறிச்சுப்புடுவேன்.”

கொஞ்ச நேரம் வீடு அமைதியில் கிடந்தது. சைக்கிள் சீட்டுக்குக் கீழே செருகியிருந்த சுருட்டை எடுத்து மறுபடியும் பற்ற வைத்துக்கொண்டார். ஈரமான முதுகில் விரல் தடம் தெரிகிற அளவிற்கு விழுந்த அடிகளை மறந்துவிட்டு, கொல்லையில் நிற்கின்ற முருங்கை மரத்திற்குக் கீழே துணியைத் திரித்து தரித்துக்கொள்ளும்முன் பரமு ஏதேனும் விளையாட்டுப் பொம்மையாக அதனை மாற்றி விளையாடிக்கொண்டிருப்பாளெனத் தோன்றியது. அவ்வளவு நேரம்தான் பரமுவின் கண்ணீருக்கு ஆயுள். வியக்க ஒன்று கிடைத்தவுடன் எல்லாத் துயரங்களையும் மூட்டையாகக் கட்டி கண்காணாமல் எறிந்துவிட்டு அந்தப் புதிய வியப்பின் முன் குத்துக்காலிட்டு அமர்ந்துவிடுவாள். யசோதா சுக்குக்காபிக்கு கருப்பட்டி தட்டத் தொடங்கியிருக்கும் சத்தம் கேட்டது. அவளுக்கு அது பிடிக்காது. அய்யாவுவிற்கு பாலின் கவுச்சி வாடையை நினைத்தாலே குமட்டிக்கொண்டு வரும். உள்ளே சுக்கு வேகும் காரவாசனை.

காலை நீட்டி அமர்ந்துகொண்டார். நாளை நாளையென அவர் ஒத்திப்போட்டு வந்த விசயம்தான் பரமுவைத் திரும்ப அழைத்துவந்த திட்டம். ஆனால் காரியாபட்டி லட்சுமணன் தலையைக் குனிந்தபடி பாதியோடு சொல்லி முடித்துச் சென்றுவிட்ட பிறகு, தாளவே முடியாமல் சென்று கூட்டி வந்துவிட்டார்.

“பைத்தியமாவே இருக்கட்டும்ணே, வாசல்ல நிறுத்தி வச்சு ஒத்த வெளக்குமாத்து குச்சில மூஞ்சிலயே அடிக்கிறான். கண்ணை மட்டும் விரலால் பொத்திகிட்டு ஒவ்வொரு அடிக்கும் ஊளையிட்டு நிக்குது பிள்ள. சின்னப்பிள்ளைக எல்லாத்துக்கும் வேடிக்கை காட்றவனாட்டம், முகத்தைப் பொத்தினா மார்ல, மார்ல பொத்தினா தொடைலன்னு மாறி மாறி அடிச்சு கதற வெச்சு முழுப் பைத்தியமாவே பிள்ளைய ஊர்முன்ன நிக்க வெச்சு வெளாடுறான். போதும்ணே, என்னத்தையாச்சும் அரைச்சுக் குடுத்து நீங்களே அதைக் கொன்னுகூட புதைச்சிருங்க, பெரும்புண்ணியம்.”

எடைபோட்டுத் தைப்பதற்காக வரிசையாக நின்ற தானிய மூட்டைகளிலிருந்து இரண்டு தானியத்தை வாயில் போட்டு மென்றபடி அந்தப் பக்கமாக வந்த தானியெல் இதைக்கேட்டு நின்றார். மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு தரித்திருந்த வெற்றிலைச்சாறின் சிவப்பு உலர்ந்திருந்த வாயை வேட்டியில் துடைத்தபடி, “என்ன கூறுகெட்ட யோசனை அய்யாவு?போவும்யா, போய் மொத கூட்டி வாரும். அந்த நாயி ஊத்தற ரெண்டு வட்டு கஞ்சியை நம்ம புள்ளைக்கு நாம ஊத்துவோம். சங்குலேயே மிதிச்சு அவனைக் கொல்லாம, இங்க நின்னுகிட்டு..”

அப்படிக் கோவமாகக் கிளம்பிப் போனாலும், பரமுவின் பலவீனங்களை ஆராய்ந்தபடி, தனது பேச்சில் இயல்பாக வந்துவிடும் வாய்ப்புள்ள கங்குகளை ஒவ்வொன்றாக யோசித்து நீக்கிவிட்டுத்தான் அங்கு சென்றார். ஆனால் அவன் உறுதியாக இருந்தான். பரமுவிற்கு மறுசீராகக் கொடுத்துவிட்டிருந்த பண்ட பாத்திரங்களை சிறிய கோணிகளில் கட்டி வைத்துவிட்டு, அய்யாவு வருவதற்கு முன் கடைசியாக ஒரு தடவை ஆசை தீர பரமுவை அடித்திருப்பான் போல!

சைக்கிளில் போய் இறங்கியதும் வாசலின் குறுக்கே நின்றபடி, “நல்லா செஞ்சி வெச்சீங்க! ஊர் சிரிக்கிறதுக்கு முன்ன கூப்ட்டு கெளம்புங்க” என்றான்.

சைக்கிளை ஸ்டாண்ட் போடும்போதே வீட்டிற்குள்ளிருந்து சிறிய செடியைப் போல சட்டென முளைத்துவந்த ஒரு கேவலிலேயே அய்யாவு தளர்ந்து போய்விட்டார். அவனிடம் எதிர்த்துப் பேசுவதற்குக்கூட வலிமை கூடாமல் நெஞ்சு பொருபொருத்துவிட்டிருந்தது.

சொசைட்டி நெல்லைத் திருடி விற்று, இரண்டு மூன்று வருடங்கள் கம்பி எண்ணி வந்த  ஒருவன் முன், “வீட்டுக்குள்ள விடு, எம்பொண்ணைப் பார்க்கணும்” என முணங்க மட்டும்தான் அவரால் முடிந்தது.

போஸ்ட்கார்டின் பின்பக்க அரைப்பக்கம் முடிகின்ற விளிம்புவரை எல்லாவற்றையும் கூறிவிட்டு, “பரமு இங்கே வந்துவிட்டாள் – வேணும் சுபம்” – என முடித்தவர், நெல்லூரிலிருக்கும் மகனது விலாசத்தை எழுதிவிட்டு, ஏதோ தோன்ற மாட்டுவண்டி சக்கரத்தின் அச்சிலிருந்த மையைத் துளி எடுத்து போஸ்ட்கார்டின் ஒருமுனையில் தடவிவிட்டு பையில் வைத்துக்கொண்டார். டம்ளரில் மீந்திருந்த சுக்குக்காபியை ஒரே மூச்சாகக் குடித்துவிட்டு ஜன்னல் திட்டில் வைத்துவிட்டு எழுந்தார். உள்ளே யசோதை பழையபடி கத்திக்கொண்டிருந்தாள்.

“கைல விழுந்து கால்ல விழுந்தாவது தகைய வெச்சிருக்க வேணாம்? மூளிச் சாமானைக் கொடுத்த வீட்ல நம்ம பாசத்தை தரிச்சிக்கணும். நானே போறேன், எம்புட்டு நாள் இத வீட்ல சொமக்க.”

அவள் யாரையோ சொல்லிக்கொண்டிருப்பதைப் போல பரமு டீயைக் குடித்தவாறே அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

கொல்லையில் குளிக்கப் போகலாமா அல்லது கண்மாய்க்குப் போய்விடலாமா என யோசித்து நின்றுகொண்டிருந்த அய்யாவுவின் அருகே எண்ணெய்ச் செக்கு நடத்துகின்ற கிருஷ்ணனின் மச்சினன் லோகு சைக்கிளை நிறுத்தி காலூன்றினான்.

“மாமா, முத்துச் சோளம் நெலவரம் எப்படி?”

அய்யாவு அவனை ஒரு மேல்பார்வை பார்த்தபடி, “என்னடா மருமவனே, எள்ளு வித்து தீந்துட்டீங்களா? முத்துச் சோளத்துக்கு வந்துட்டீங்க!”

படுமட்டமான வெட்கத்துடன் லோகு குழைந்தான்.

“ஆமா, செக்கு லாபத்துல பாதி நொட்டீட்டுதான் மச்சான் வேற வேலை பாப்பாரு. நீ வேற ஏன் மாமா! சொல்லு, நம்ம கைல வகையான பார்ட்டி சிக்கிருக்கு. எடை போட்டவுடன பணம்.”

அந்தக் கடைசி வரிகளைச் சொல்லும்போது அவன் கண்ணிலிருந்த குழைவு நீங்கி, அய்யாவுவின் கண்களில் ஒரு ஈரம் படர்கிறதா என வேவு பார்க்கின்ற கூர்மை வந்துவிட்டிருந்தது. அய்யாவு ஒன்றும் பேசாமல் வேட்டியை உதறி தரித்துக்கொண்டார்.

”என்னாது, எடை வச்சவுடன பணமா? அதும் முத்துச்சோளத்துக்கு! போ மருமவனே. பொழுதுபோகலைன்னா உங்கக்கா புருஷனைப் போயி கொஞ்சிக் கெட.”

செருப்பை மாட்டியபடி கிளம்பியவரிடம், “பின்ன வெளையாட்டா மாமா? வடக்க நாட்டுக்காரனுக விருதைல டிப்போ அடிச்சிருக்கானுவ. கையக் காட்டுனாலே மூடைக்கு அஞ்சு ரூவா தரகு. உமக்கு தானியேல் நாடான் எம்புட்டு நொட்டுறான்? வருஷம் முழுக்க காடுகரையா அலைஞ்சு நாலு கதர் வேட்டி சட்டைதான் மிச்சம்.”

“மருமவனே, உங்கப்பன் வயசு அவருக்கு.”

“ப்ச், இருக்கட்டும். மச்சான்கிட்ட கேட்டேன். இப்ப எள்ளு சீசன். இல்லேன்னா அவரே கல்லாவவிட்டு எந்திருச்சு வந்துருவாரு. ஒருவாட்டி இவனுகளுக்கு காசு ருசி காட்டிட்டா, பின்ன மழைக்கும் வெயிலுக்கும் வண்டி கட்டி வந்து உம்ம தானியேல் கடை வாசல்ல காத்து நிக்க ஒருத்தன்கூட இருக்க மாட்டான்.”

அய்யாவுவிற்குள் எதுவோ சுறுசுறுப்படைந்து உடல் முழுவதும் ஜாக்கிரதை உணர்ச்சியாய் பரவியது. சட்டென தணிந்த குரலில், “அட ஏம் மருமவனே, வெளைஞ்ச சீதேவியாட்டம் எள்ளு வெள்ளாமைய தனியாளா உம்ம மச்சான் அள்ளி அள்ளி செழிக்கிறான். அதை விட்டுட்டு காய்கறிக்கு கறிகப்பிலை மாதிரி சீச்சீன்னு கிடக்குற முத்துச்சோளத்தைத் தின்ன வார. போ மருமவனே, வெலாங்கு பிடிக்குற தூண்டில்ல அயிரைக்கு பொடி வெச்சுகிட்டு.”

மிக இயல்பாக அதைச் சொல்லிவிட்டு மிகச்சாதாரணமாக முகத்தை வைத்துக்கொள்ள முயன்றாலும், உள்ளே எதுவோ கெதக்கெதக்கெனத் துடிக்கத் துவங்கியிருந்தது.

டீ குடித்த டம்ளரின் அடியில் கசிந்து தேங்கியிருந்த கருப்பட்டிப்பாகை விரல்விட்டு நோண்டிச் சப்பிய பரமுவை டம்ளரைக்கொண்டே தலையில் குட்டிய யசோதா, “எப்பப் பாரு வேவாரம், சுடுகாட்டு சாம்பல்னுகிட்டு. ஒரு மனுசன் இன்னொரு மனுசனை வெட்டித் திங்குறதை ஒழிக்கும்போ தப்பி ஒளிஞ்ச மனுசங்கதான் எல்லா வேவாரியும்.”

அய்யாவுவிற்கு வகையாக கோபம் வந்தது. ஆனால் வாய் வெறுமனே, “மயிரு” என மட்டும் சொல்லிக்கொண்டது.

வழக்கத்திற்கும் சீக்கிரமாக சைக்கிளை மிதித்துக்கொண்டு, ரயில்வே பீட்டர் ரோடுக்கு வேகுவேகென்று செல்லும் அய்யாவுவைச் செக்குமண்டிக் கல்லாவிலிருந்து கிருஷ்ணனும் லோகுவும் நக்கலாகப் பார்த்துச் சிரிப்பதைப் போல அவரே நினைத்துக்கொண்டார். வயதான மரங்கள் கிளைகள் தாழ்த்தித் தணிந்திருந்த ஆஸ்பெட்டாஸ் வேயப்பட்ட தானிய மண்டியின் வாசலில் மாட்டு வண்டிகள் அவிழ்த்து விடப்பட்டிருக்க, வைக்கோல் நுனியில் பல்குத்தியபடி சம்சாரிகள் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தனர். மண்டிக்குள்ளிருந்து விரட்டுகின்ற தானியேலின் குரலிற்குப் பயந்தவனாக ‘சைக்கிள் ரிக்‌ஷா’ ஆசீர்வாதம் கலைந்த லுங்கியை அள்ளிக்கொண்டு தெருவில் ஓடினான். பின்னாலேயே அவனது பின்னந்தலையை நோக்கிப் பறந்து வந்த தானியேலின் தோல் செருப்பு அவனது தோளில் பட்டு விழுந்தது. அய்யாவு சிரித்துக்கொண்டார். வேப்பமுத்து எடை போட வந்த உள்ளூர் பெண்ணொருத்தி, “மூணாம் நாள் உயிர்த்தெழுதலன்னிக்கு இவம் சிலுவை தூக்கி ஏசுவா தெருத்தெருவா பாதிரியோட வந்தப்ப தங்கச்சங்கிலி மண்ல பட விழுந்து கும்பிட்டீகளே மனுசனே” என்றாள்.

விழுந்த ஒற்றைச் செருப்பில் ஒட்டிய சாணியை வைக்கோல் கூளத்தால் வழித்தபடி, “ஹாங்!அது.. ரெட்டை பொண்டுக, ஒரு கிறித்துவச்சி, ரெண்டு வேளை ரசஞ்சோறு மட்டும் போதும்னு நின்னு பைபிள் வாசிக்கிற தானியேலுக்கு. அவம் முன்ன யார் சிலுவை தூக்கி நின்னாலும் அவம் விழுவான். அவனுக்கு ரிக்‌ஷாக்கார ஆசீர்வாதமும் யேசுதான். யேசு வெளில போயி ஆசீர்வாதம் குடிகாரனா மண்டில நுழைஞ்சான்னா, தானியேல் போய் உடங்குடி பனையேறி புத்திக்குள்ள வந்திருவான். ஏசுவுக்கு என்ன மயித்துக்கு காசு!” என்றான்.

அய்யாவு தானியேலைச் சாடை காட்டி கல்லா அறைக்குக் கூட்டிச் சென்றார். நீண்ட மேஜையெங்கும் வெவ்வேறு செய்தித்தாள்களால் சுற்றப்பட்டு வந்திருந்த தானிய மாதிரிகளைப் பேசியபடி விரித்துச் சரிபார்த்து பழையபடி பொட்டலம்கட்டி அதைச் சுற்றியிருந்த தேவைக்கதிகமான ரப்பர்களைக் கவனமாகச் சிறிய தகர டப்பாவில் போட்டுக்கொண்டார். கொஞ்ச நேரம் யோசித்தபடி விரல் நகங்களையே பார்த்தவர், பிறகு அய்யாவுவிடம் தணிந்த குரலில், “முத்துச்சோளத்துக்கு ரொக்கம்னா, நெல்லுக்கெல்லாம் வயல்லயே போயி உக்காந்திருவானுக போல” என்றபடி பெருமூச்சுவிட்டார். “கையில ஒன்னும் எழுத்தும் இல்ல அய்யாவு. வாங்கி அடுக்குனா கோடைக்குத்தான் வெலை போகும். எடைச்சேதாரம் வட்டின்னு எம்புட்டு விடுறது?”

அய்யாவுவிற்கும் அந்த அலுப்பும் விட்டேத்தித்தன்மையும் ஒருகணம் வரத்தான் செய்தது. ஆனால் லோகு மாதிரி நேற்று வந்த ஒருவனின் ஆழம்பார்க்கும் பார்வையும் சிரிப்பும் அவரை மூர்க்கங்கொள்ள வைத்திருந்தன.

நேற்று மாலை பரமுவின் வீட்டுக்காரன் முன்பு சோர்ந்து கூம்பியிருந்த மனதுகூட இப்போதுதான் தினவாகச் சோம்பல் முறித்து எழுகின்றது. சுவரில் மாட்டி, பழுப்பேறி விட்டிருந்த சாமிப் படங்களைப் பார்த்தபடி அய்யாவு, “ஒரு சீசன் லாபத்தை விட்டுருவோம் தானியேலு. அநேகமா குசராத்துக்காரனுகளாத்தான் இருக்கும். அவனுக நீ சொன்ன வட்டிக்கணக்குப் பார்க்காம இருக்க முடியாதவனுக. அதுதான் சாத்தையாறு அணக்கட்டுக்கு மேற்கோடி வரை விளைஞ்சு கெடக்குற எரநூறு ஏக்கர் மக்காச்சோளக் கொள்முதல் நமக்கு காத்துத் தரும்.”

தானியேல் காதின் விளிம்பில் வளர்ந்திருந்த நரைத்த உரோமங்களை விரல்களால் நீவியபடி அய்யாவுவைப் பார்த்தார். கண்களுக்குள் குதிரைகள் சொடக்குவிட்டு எழுந்து நிற்கின்ற துவக்கம். அறையின் ஒரு மூலையில் சாமிப் படங்களுக்குக் கீழே சுவரைப் பார்த்து உட்கார்ந்தவாறே சுவரோரம் அடுக்கியிருந்த பணக்கட்டுகளைப் பைக்குள் அடுக்கிக்கொண்டிருந்த சாத்தூர் நல்லமணி கடை ஏஜெண்ட் பழனிமுத்து, “வட்டிக்குக் கட்டாத கொள்முதல்னா, ரெண்டு புள்ளி ஸ்கேல்ல சரிக்கட்டி அளக்கலாம்ல?” என இவர்களைப் பாராமல் கூறினான். தானியேல் அவன் பக்கம் திரும்பி, ”ஏலே, சாமிப் படத்துக்குக் கீழ உக்காந்து என்ன பேசுற? பாவாடைச் சட்டை போட்ட சின்னப் பொண்ணைப் பாத்துக்கங்கனு சொல்லி கைல ஒப்படைச்சிட்டு கோயிலுக்குள்ள போற மனுசனுக மாதிரி இந்தா வாசல்ல உக்காந்து சிரிச்சிக்கிட்டிருக்காங்க சம்சாரிக. கூதற தாய்ளி, உனக்கு ஏண்டா புத்தி இப்டி பீ திங்குது?”

அய்யாவு இதைச் சட்டை செய்யாதவராக தினத்தந்தியில் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் குறிப்புகளைப் படித்துக்கொண்டிருந்தார். வெளியே ஆடி மாசக்காற்று கூளங்களைச் சுருட்டி மேலேறி வீசிக்கொண்டிருக்க, இலேசான மழை பெய்யத் தொடங்கியது. களத்து வேலையாள் செங்கு இரண்டு டம்ளர்களில் சுக்குத் தண்ணியை ஆவிபறக்க கொண்டுவந்து வைத்தாள். தானியேல் வாய் கொப்புளிக்க எழுந்து செல்ல, செங்குவிடம் இரண்டு சாக்கைக் கொண்டுவந்து தரையில் விரிக்கச் சொன்னார் அய்யாவு. பழைய கருங்கல்லால் ஆன தளம். கோடையிலேயே தண்ணீர் மாதிரி உருகிக் கிடக்கின்ற கல்லின் தண்மையை மழையில் கேட்கவே வேண்டியதில்லை, ஐஸ்கட்டியேதான். பாதத்தைத் தரையில் பாவ முடியாது.

மூடைகள் அட்டியலிடப்பட்ட கிட்டங்கி வாசலில் தலைக்குத் துண்டு கட்டி தயங்கி அமர்ந்திருக்கும் சம்சாரிகளை, ”உள்ளார போயி உக்காருங்கடா. மழைக்கு நனைஞ்சிக்கிட்டே பேசுனது போதும். செங்கு, எல்லாருக்கும் டீ ஆத்து” என்றவாறே உள்ளே வந்து அமர்ந்து கிளாஸைக் கையில் எடுத்துக்கொண்டார்.

“ஏன் அய்யாவு, இன்னமும் போட்டு ஏன் இதுகளைக் கட்டி அழுதிட்டு, வயசா இருக்கு நமக்கு? வர்ற நெல்லை மட்டும் எடைபோட்டு கெடப்போமே. பொண்ணுகளுக்குக் கட்ட வர்றவனுக இதெல்லாம் உக்காந்து ஆளவா போறானுகன்னு ஒரு செமயம் விட்டேத்தியாத் தோணிடுது.”

கொஞ்ச நேரம் அங்கே பேச்சே எழவில்லை. அய்யாவு தனது பாதங்களைப் பூனைக்குட்டிகளைப் போல சாக்குக்கட்டுக்குள் பொதிந்துகொண்டார். ஒருவிதப் பாதுகாப்பை மனது உணர்ந்தது போல் நிம்மதி வந்தது.

சின்ன வில்லுத்தராசும் நாலைந்து கோணிச்சாக்குப் பண்டல்களுமாக முப்பது நாப்பது வருசங்களுக்கு முன்பு தானியேல் கடை ஆரம்பித்தபோது, தரகராக அய்யாவு அறிமுகமாகி வளர்ந்த பழக்கம். இப்படி அங்கலாய்த்துப் பேசுகின்ற தானியேலுக்கு உடலோ உருவமோ கிடையாது என்பது அய்யாவுவிற்குத் தெரியும். நரைத்த நெஞ்சு உரோமங்களுக்குள் பத்துப் பவுன் செயின் தொங்க, முண்டா பனியனுக்கு வெளியே திமிறி நிற்கின்ற வார்பிடித்த தொப்பை வயிற்றோடு அட்டியல் அட்டியலாக நெல்லைக் கசக்கிச் சரிபார்த்தபடி, விலை நிலவரத்தைப் பக்கத்தில் நிற்கும் சம்சாரிகளிடம் சன்னதம் வந்ததைப் போல் கூறிச்செல்கின்ற தானியேல் மட்டும்தான் உண்மை. இந்தக் குடும்பக் கிறித்துவ தானியேல் வாய் கொப்புளிக்கும் இடைவெளியில் காணாமல் போய்விடக்கூடிய ஆள். அதனால் தானியேல் சொல்வதை ஒப்புக்குக் கேட்டவாறு தினத்தந்தியை மடித்து மேஜையில் போட்டார். எழுதி எழுதி நுணுகிவிட்ட பென்சிலில் திட்டக்கணக்கை அழித்து பழையபடி எழுதிய தானியேல், பழனிமுத்து பக்கம் திரும்பாமல், “68292…செரியா?” என்றார்.

அவன் தொடைக்குக் கீழே எழுதி வைத்திருந்த ரூபாய் திட்டத்தை எடுத்துப்பார்த்து, “நேர்” என்றான்.

சட்டென தானியேலின் முகத்தில் அந்த இளமையும், மகிழ்ச்சியுமான புன்னகை எழுந்து வந்தது. மிகுந்த உற்சாகத்துடன் கைகளைப் பரபரவெனத் தேய்த்துக்கொண்டார்.

”ரெண்டு நாளா சாப்பிடவே முடியல. நூத்தி சொச்ச ரூவா வித்தியாசம். சரியாப் போகாத அவஸ்தையோட உடம்பையும் மனசையும் தூக்கி அலைஞ்சு… ஸ்ஸப்பா..”

பழனிமுத்து வால்பையை இடுப்பில் கட்டியவாறே, ”எடைத்தராசுக்கு பூவும் பொட்டும் வச்சுவிட்டா, ராத்திரிக்கு கூடவே படுத்துக்கிடுவாரு உடங்குடிக்காரரு” எனச் சிரித்தபடி கூறினான்.

கொஞ்சம் கூடுதலான கேலிதான். தானியேலுக்கு அந்த நேரத்தில் அது இரசிக்கக்கூடிய ஒன்றாகவே இருந்தது. திட்டப்பேப்பரை மடித்து கல்லாப்பெட்டிக்குள் வைத்தவாறு அய்யாவுவிற்கு மட்டுமே கேட்கும் குரலில், “ஒரே கூட்டல்ல திட்டக்கணக்கு நேராகுறப்ப வர்ற சந்தோசம், கெட்டினவகிட்ட ரெண்டுவாட்டி படுக்கும்போது கூட கிட்டாது. இல்லியா அய்யாவு?” என உதட்டுக்குள் சிறிய சிரிப்போடு கேட்டார்.

அய்யாவு மெல்ல புன்னகைத்தவாறு கோணிச்சாக்கைப் பாதங்களுக்கு நன்றாக இழுத்துவிட்டுக்கொண்டார்.

”சாத்தியாறு அணைன்னா அதுக்குத்தாண்டி எர்ரம்பட்டி சம்பா நெல்லுபூமி வந்துரும்ல அய்யாவு? முத்துச்சோளத்தை விட்டோம்னா ஏறிவந்து சம்பாவைத் தொட எவ்வளவு நாளாகும்?”

வெளியே ஆடிக்காற்றும் குற்றாலச் சாரலும் வீசிக்கொண்டிருக்க குளிர்ந்த கற்தளம் கொண்ட அறையில் தானியேல் இப்படி கங்காகக் கனிந்துகொண்டிருப்பதை அய்யாவு மகிழ்ச்சியாக அனுபவித்தார்.

“பின்ன யோசனையில்லாமலா சொல்லுறேன்?” ஆர்வங்காட்டாத குரலில் சொல்லியபடி வெளியே வேடிக்கைப் பார்த்தார்.

“சம்பால எஞ்சுறதுதான் லாபம் அய்யாவு. இல்லாட்டி வருசம் முழுக்க இந்த யானைக்கு தீனிபோட முடியாது. என்ன செய்யலாம்?”

முற்றிய பதற்றம் ஏறியிருந்த தானியேலின் அந்தக் குரலிற்காகத்தான் அய்யாவு அவ்வளவு நேரம் காத்திருந்தார்.

தானியேலின் மண்டியில் கட்டி எடுத்திருந்த சாக்குக்கட்டோடு அணைக்கட்டு செல்லுகின்ற சகதித்தடத்தில் வம்பாடாக சைக்கிளில் எக்கிக்கொண்டிருந்தார் அய்யாவு. மனசுக்குள்ளே ஒரு மெல்லிய குரல், தானியேல் முதலில் சொன்னதுதான் உண்மை என்றது. இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படிப் போராடுவது? பத்து வருடங்களுக்கு முன்பு அப்பாவியைப் போல எள்ளு வயலில் நுழைந்த கிருஷ்ணனை, பிறகு ஒருபோதும் அய்யாவுவால், தானியேலால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. கொள்முதலில் ஏகபோகம் பெற்றவனாக அவன் செக்கு திறந்து புதுக்கணக்கிற்கு அழைத்தபோது, போய் ஆதாய வரவு எழுதி சந்தனம் தடவிவைத்துத் திரும்பும்போது தானியேலும் அய்யாவுவும் ஒரு வார்த்தை பேசிக்கொள்ளவில்லை. முழுமுற்றாக வீட்டிலிருந்த ஏதோவொரு உயிரைத் தூக்கிக் கொடுத்துவிட்டு வந்த உணர்வு. ஒவ்வொரு ஆயுதபூஜைக்கும் கழுவித் திலகமிட்டுப் பரப்பிவைக்கப்படுகின்ற, மண்டியில் புழங்கும் சாமான்களுக்குள், துருப்பிடித்து ஓரம் கிழிந்த எள்ளு சலிக்கின்ற சல்லடை பழைய ஞாபகத்தின் மிச்சமாக, மங்கலத்தில் அமங்கலமாகச் சிரித்தபடி நிற்கும். அதற்குத் தீபம் காட்டும்போது மட்டும் தானியேலின் உடலில் சின்னதாக ஒரு குறுகல் நிகழும். அய்யாவுவால் மட்டுமே உணர முடிகிற குறுகல். பரமுவை நேற்று சைக்கிள் கேரியரில் அமரவைத்து மிதித்து வரும்போது அய்யாவுவின் உடலில் இருந்த குறுகல்.

நினைத்தது போலவே அணைக்கட்டிற்கு அடுத்து விரிந்திருந்த மக்காச்சோளக்காட்டிற்குச் சமீபத்தில்தான் லோகு வந்து சென்றிருக்கிறான் என்பதை அறிந்தபோது, அய்யாவுவின் நரைத்தமுடி கொண்ட கரங்கள் முழுக்க அவ்வளவு தொலைவு சைக்கிள் மிதித்த வியர்வை திரளாக வழிந்துகொண்டிருந்தது. இதுநாள்வரை நிலவரம் கேட்காத சம்சாரிகள் விலைச்சீட்டு கேட்கும்போது அய்யாவுவிற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. இவ்வளவிற்கும் நிலவரத்திற்குப் பத்துப் பைசா குறையாமல் சீட்டெழுதி தருபவர்தான். அதுநாள் வரை அவர்கள் கேட்காமலும் இவர் சொல்லாமலும் இயல்பாக, கண்ணியமாக நிகழ்ந்துகொண்டிருந்த ஒன்றின்மீது இப்போது அவர்கள் விலை கேட்கும்போதும், அய்யாவு அதற்கு மோசமான வியாபாரச் சிரிப்போடு பதில் அளித்தபோதும் முதல் விரிசல் விழுந்தது.

இன்னும் சிலரிடம் எடுத்தேறி மறைமுகமாகக் கெஞ்சவே வேண்டியிருந்தது. எங்கேயோ உட்கார்ந்து கணக்கெழுதி ரூபாயை எண்ணிக்கொண்டிருக்கும் தானியேலுக்காக, அவர் தருகின்ற மூன்று ரூபாய் தரகுக்காக, இப்படிச் சகதிக்காட்டில் சைக்கிள் நிறுத்த இடமில்லாமல், சாக்குச் சுமையோடு இந்தச் சம்சாரிகளிடம் ஏதோ புதியவனைப் போல கெஞ்சுகின்ற போது உள்ளூர எழுந்த அவமானத்தை எரிச்சலாகவும் தவிப்பாகவும் உணர்ந்தார். பரமுவின் வீட்டுக்காரன் ஆட்டுரலில் உட்கார்ந்து நியாயம் பேசும்போதுகூட இப்படி உள்ளூர பாயாத வலி, ஆண்டுக்கணக்காக அலைந்து திரிந்த இந்த மக்காச்சோளக்காட்டில் பாய்ந்துகொண்டிருந்தது.

மதியம்வரை வெயிலில் அலைந்து முடித்தும் சாக்குக்கட்டையை எந்தச் சம்சாரியும் வாங்கிக்கொள்ள முன்வரவில்லை. “நிலவரம் சொல்லிட்டுப் போங்க”, “யோசித்துச் சொல்றோம்” என்பதே பலரது பதிலாக இருந்தது. ஒரு கட்டத்தில் அய்யாவுவிற்கு சிரிப்பே வந்துவிட்டது.

“ஏதேது! என்னமோ தங்கத்தை தகரம்னு சொல்லி ஏத்திக்கிட்டு போற திருடனாட்டம் கூச வெக்கிறீகளே!”

லோகு ஆசைகாட்டி கூறிச்சென்ற விலை நிலவரங்களை உள்ளுக்குள் எண்ணிக் கணக்குப் போட்டுப் பார்த்துக்கொண்டே, தங்களுக்கு முன் வியர்வையை வழித்தபடி சிரிக்கின்ற அய்யாவுவைப் பரிதாபமாகப் பார்த்தவாறு தங்களுக்குள் அவதியாக புன்னகைத்துக்கொண்டனர்.

உச்சிவெயில் சரியத் தொடங்கும்போது பாதிக்காட்டைக் கடந்துவிட்டிருந்தார். மனமெங்கும் அவநம்பிக்கை பூத்துவிட்டது. தெளிவான அறிகுறிகள்தான். வெகு சீக்கிரமே லோகு தானிய மண்டி திறந்துவிடுவான் எனத் தன்னையறியாமல் சொல்லிக்கொண்டார். 

ராசு டீக்கடையில் அமர்ந்து ஒரு பன்னையும் டீயையும் பிய்த்துப் போட்டுக்கொண்டிருக்கும் போது யசோதையின், பரமுவின் ஞாபகம் வந்தது. ஏசுவது அடிப்பது எல்லாம் அய்யாவு திண்ணையில் இருக்கும் போதுதான். மற்ற நேரங்களில் பரமுவிற்கும் சேர்த்து யசோதை தனியொருத்தியாகத் துயரைத் தாங்கிச் சுருண்டு கிடப்பாள். அந்தக் கோபம் எப்படி அய்யாவுவிற்கு வராதோ அதே அளவு அந்தத் துயரத்தின் எடையும் அவரால் தோளில் சுமக்க முடியாதவொன்று. நினைக்கும்போதே பாதரசக் கட்டிபோல அவ்வளவு கனம் உள்ளிறங்குகிறது.

எல்லாம் கைமீறிவிட்டதாக எண்ணியபடி ஊர் திரும்பிக்கொண்டிருக்கும் போதுதான், பழைய ரயில்வே மாஸ்டர் மகன் நடராஜனை எதிர்கொள்ள நேரிட்டது. அவனது அப்பா காலத்திலிருந்து நல்ல பழக்கம். அணைக்கட்டிற்கு அடுத்த முதல் காடே அவர்களுடையதுதான். அங்கே எடை போட்டுவிட்டால் பின்னிருக்கும் எல்லா வயலும் புனலுக்குள் நீர் இறங்குவதுபோல சரசரவென கோணிக்குள் அடைந்துவிடும். அவனும் விபரம் கேள்விப்பட்டிருந்தான்.

“தெரியாததில்லை பெரியய்யா, ரெண்டு வெள்ளாமைக்கு அந்த பத்து ரூபா கூட்டித் தருவானுக. பின்ன உங்களை ஒழிச்சவாட்டி மூட்டைக்கு இருவதா குறைச்சு எடுப்பானுக. பல்லு கடிச்சு ஒரு ரெண்டு வெள்ளாமைய நீங்க தாக்காட்டிருங்க பெரியய்யா. அலுத்துப் போய் ஓடிருவானுக.”

அவன் சொல்லிமுடிக்கும் முன்பே அய்யாவுவிற்குள் கணக்கு வழக்கு ஓடத் தொடங்கியிருந்தது. கொண்டுவந்த சணல் சாக்கிற்குப் பதிலாக யூரியா பிளாஸ்டிக் பையில் சரக்கைப் பிடித்தால் எப்படியும் பதினைந்து மிச்சப்படும். சம்சாரிக்குப் பத்துபோக, மண்டிக்கு அஞ்சு. தனக்கு தரகுக்குக்கூட தகையாது என்கின்ற எண்ணமே வரவில்லை. தெரிந்த எல்லா மோட்டார் ரூம்களிலும் சும்மா கட்டிக்கிடக்கும் யூரியாப் பைகளை அள்ளிவந்து கால்வாய் நீரில் வேட்டியை ஏறக்கட்டிவிட்டு, இறங்கி அலசத் தொடங்கினார். காட்டிற்கும் வீட்டிற்கும் போய் வந்துகொண்டிருந்த சம்சாரிகள் பலரும் அவர் பார்க்கவே கேலியாகச் சிரித்தபடி சென்றனர். மோசமான விசயம்தான். யானையைச் சணலால் கட்டி இழுத்துச் செல்வது மாதிரியான அவமரியாதையான கொள்முதல் நுணுக்கம்தான். வேறு வழியில்லை. யாரையும் ஏறிடாமல், யூரியா குருணைகளை அடித்துச் செல்கின்ற நீரோட்டத்தைப் பார்த்தவாறாக குனிந்து அலசிக்கொண்டிருந்தார்.

பேச்சினூடாக யசோதை திரும்பவும் பரமுவை அவளது வீட்டுக்காரனுடன் சமாதானமாக அனுப்ப நேரில் போய் பேசப்போவதாகச் சொன்னது கசப்பாக ஞாபகம் வந்தது. அவர்களை எப்படித் தனியாக அனுப்புவது? அடிபட்ட தெருவிற்கே திரும்ப அதே புண்களோடு செல்வதை நினைக்கவே கூசியது.

ஏதேதோ யோசித்தபடியிருந்தபோது, நடராஜன் எடை போடுவதற்கு தராசைக் கொண்டுவந்து காட்டில் இறக்கிவைத்துச் சென்றான்.

அய்யாவுவிற்கு போன உயிர் அப்போதுதான் திரும்பிவந்த நிம்மதி எழுந்தது. அலசி காயவைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அள்ளியபடி வயலில் இறங்கினார். தலையில் முண்டாசுகளும் வியர்வை வழிகின்ற முதுகுகளுமாக வயலுக்குக் கல்யாண வீட்டுத் தோரணை வந்துவிட்டிருந்தது. எதிர் வரப்புகளில் நின்றபடி, உற்சாகமாக எடை போட்டுக்கொண்டிருக்கும் நடராசனை, அவனது சிரிப்பு குன்றாத அளவிற்கு அவனிடம் பேச்சுக் கொடுத்து பைகளைப் பிடித்துக்கொண்டிருக்கும் அய்யாவுவை, சற்று முன்பிருந்த கேலி நீங்கி பழைய ஸ்நேகமான பார்வையோடு பார்த்துச் சென்றனர். எல்லாவற்றையும் ஓரமாகப் பார்த்துக் குறித்துக்கொண்டுதானிருந்தார். சொல்லின், செயலின் வாள்முனையில் நிற்கின்ற அத்தனை பேரையும் தனியொருவனாக வீழ்த்திவிட்ட பெருமிதத்தோடு, பழகிப்போன நிலத்தில் நீண்ட நாளுக்குப் பிறகு செய்கின்ற போரைப் போல மிக இலேசான சந்தோஷமும் பிறந்து வந்தது.

சாலை மேட்டில் நின்றிருந்த சைக்கிளும், சாக்குக்கட்டும் எளிய உயிர்களைப் போல இதற்குச் சம்பந்தமேயில்லாமல் நின்றன. மூடையெல்லாம் எடையிட்டு அட்டியல் போட்டபோது இரவு கவிந்துவிட்டது. நடராசனுக்கு விலைச்சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு, அய்யாவு அசதி தீர ஒரு சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டு அங்கேயே சாக்கை விரித்துப் படுத்துவிட்டார்.

இங்கே நடந்த இந்தக் கூத்தெல்லாம் தானியேலிற்குத் தெரிந்தால் திட்டுதான் விழும். அப்படி எறங்கிப்போக அவசியமே இல்லையெனச் சீறுவார். அது கடல். பார்க்கப் பெரியதுதான், ஆனால் மாடு போட்ட சாணி போல ஒரே இடத்தில் அலையடித்துக் கிடந்தாலும் தப்பில்லை. ஆனால் ஆற்றுக்கு அப்படியில்லை, மண்ணை நெகிழ்த்தி தன் வழியை நிறைத்து அது ஓடிக்கொண்டிருக்கத்தான் வேண்டும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு காட்டில் சிறுவனைப் போல ஓடியாடித் திரிந்த அசதியில் நல்ல உறக்கம் வந்தது. வெற்றியா தோல்வியா என்று தெரியாத ஒரு விளையாட்டு. வெற்றி என்றால் எவ்வளவு நாளைக்கென அச்சம் கூடவே வருகின்ற வெற்றி. அறுத்து எடை போட்டுவிட்ட வயலின் நீண்ட வெற்றுச் செவ்வகமும், ஒரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்ட சோள மூட்டைகளும் இரவுக்குள் நிழலோவியமாக வென்றுவிட்ட அரண்மனை வாசலும், யானை நிற்கின்ற முற்றமுமாக தோன்றத் தோன்ற நிறைந்த மனதோடு தூக்கம் சூழ்ந்தது. காய்ந்த மக்காச்சோளத் தட்டைகள் காற்றில் தகரத்தைப் போல உரசிக்கொள்வதை இனிய ஓசையாக அனுபவித்தபடி ஆழ்ந்து கவிழ்ந்தார். விடிவதற்கு முந்தைய மூன்றாம் சாமத்தில் விழிப்பு வந்துவிட்டது. நிற்கின்ற யானையைத் தட்டுவது போல மூட்டைகளை ஒருமுறை தட்டிக் கொடுத்துவிட்டு வரப்பினோரம் குத்த வைத்தார். எப்போது விடியுமென்கிற தவிப்பு மனம் முழுக்க நிறைந்திருந்தது. நேராகத் தானியேலிடம் போய் தகவலைச் சொல்வதை மனதிற்குள் வேறுவேறு விதமாக நினைத்துப் பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டார்.

குத்தவைத்திருந்த காலருகே மக்காச்சோளத்திலிருந்து உரித்து எறியப்பட்ட காய்ந்த சோகை தலைவிரி கோலம்கொண்ட பெண்ணின் முகச்சாயலோடு உருண்டு வந்தது. தூரத்துச் சாலையில் நின்றிருந்த சைக்கிளில் நேற்றிலிருந்து இறக்கப்படாமல் அவமானப்பட்டு மண்டி திரும்பும் சாக்குப் பண்டல்கள் துயரமான இருளோவியமாக எதனையோ ஞாபகப்படுத்துகிறதென யோசித்தபடி எழுந்தவருக்கு, எண்ணி பத்து மூட்டைகள் அடுக்கினாலே நிறைந்துவிடும் வீட்டையும், காய்ந்த சோளத்தட்டையைப் போல பாவாடை மேலேறியது தெரியாமல் கொடுவாய் வடியத் தூங்கும் பரமுவையும் நினைத்தபோது விரிந்த வானத்திற்குக் கீழே கிடுகிடுவென ஒற்றைப் புள்ளியாகத் தன்னை எதுவோ சுருக்கி அடக்குவதை பீதியாக உணர்ந்தார். நட்சத்திரங்கள் பொலிவிழந்துகொண்டிருந்த வானில் விடியலின் முதல் செந்தீற்றலைப் பார்த்தபோது, யானையும் அரண்மனையும் சூழ்ந்திருக்க அய்யாவுவிற்கு அழுகை வந்தது.

7 comments

panneerselvam July 27, 2021 - 12:18 pm

very good and heart touchable story.

அகிலன் July 27, 2021 - 12:30 pm

வெற்றியா? தோல்வியா? கடலின் மனத்தில் எழ வாய்ப்பில்லாத கேள்வி. நதியின் ஓட்டத்தில் அன்றாடம் எழும் கேள்வி. எலியோரின் வாழ்க்கைப் பரிமாணத்தை மனம் துவளப் படமெடுத்து விட்டீர்கள் திருச்செந்தாழை. பாராட்டுகள்! நிலைத்து நிற்கும் உங்கள் எழுத்து.

கி.ச.கல்யாணி July 27, 2021 - 6:38 pm

அற்புதமான கதைக்களம் செந்தாழை !! எப்பவும்போல தனித்துவமான மொழிநடையில் விவரிப்புகள் அழகு !! எல்லாவற்றையும் தன் வியாபார மதிநுட்பத்தால் வென்ற அய்யாவு, இறுதியில் இயலாமை வெளிப்பட அழுகிறார். வேறென்ன இயலும் அவரால் ?? – கி.ச.கல்யாணி

A M KHAN August 10, 2021 - 11:01 am

அய்யாவுவின் வலிகள்… அப்படியே படமாக விரிகிறது

Kasturi G November 25, 2021 - 8:09 pm

Beautiful .
Good luck.
Thanks

Comments are closed.