பல்தஸாரே ஸில்வாண்டேவின் மரணம் – மார்சல் ப்ரூஸ்ட்

2 comments

“அட்மீடஸின் சுற்றத்தினரை அப்பல்லோ இரட்சித்ததாகக் கவிஞர்கள் கூறுகிறார்கள். போலவே, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் முட்டாள் வேடம் தரித்திருக்கும் கடவுள்தான்”ரால்ஃப் வால்டோ எமர்ஸன்.

1

“அப்படி அழவேண்டாம் அலெக்ஸிஸ். ஸில்வானியாவின் மதிப்பிற்குரிய பிரபு உனக்கு ஒரு குதிரை தருவாராய் இருக்கும்.”

“பெரிய குதிரையா பெப்போ, அல்லது சிறியதா?” 

“திரு கார்டினியோவினுடையதைப் போல பெரியதாய்த்தான் இருக்கும். சரி, இப்படி அழாதீர்கள்…. அதுவும் உங்களது பதிமூன்றாவது பிறந்த தினத்தில்!” 

ஒரு குதிரை கிடைக்கப்போகிறது என்கிற நம்பிக்கையும் தனக்குப் பதிமூன்று வயதாகிவிட்டது என்ற நினைவூட்டலும் அலெக்ஸிஸின் கண்களைக் கண்ணீரோடு பிரகாசிக்கச் செய்தன. என்றாலும் அவனுக்கு ஆறுதல் ஏற்படவில்லை. அன்று அவன், ஸில்வானியாவின் பிரபுவாகிய தனது சித்தப்பா பல்தஸாரே ஸில்வாண்டேவைக் காணச் செல்லவிருந்ததே காரணம். அவனது சித்தப்பாவிற்கு வந்திருக்கிற நோயானது குணப்படுத்த முடியாதது என்று அறிந்த பிறகு பலமுறை அவன் அவரைக் காணச் சென்றிருக்கிறான்தான். எனினும் இடைப்பட்ட காலத்தில் எல்லாமும் மாறிவிட்டிருந்தது. இப்போது அவர் தன் நோயின் முழுமையான சாத்தியங்களையும் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் மட்டுமே தான் உயிரோடு இருக்கப்போகிறோம் என்பதையும் அறிந்திருந்தார். இந்தத் துயரமே தன் சித்தப்பாவை ஏன் கொன்றுவிடவில்லை, இந்த நிச்சயமின்மை ஏன் அவரைப் பைத்தியமாக்கவில்லை போன்றவற்றைப் புரிந்துகொள்ள இயலாத அவன், அவரைக் காண்பதால் விளையும் துயரத்தைத் தன்னால் தாங்கிக்கொள்ள முடியாதென அஞ்சினான். நெருங்கிவருகிற தன் மரணத்தைப் பற்றி எப்படியும் அவர் பேசுவார் என்று உறுதியாக நம்பிய அவன், அவரை ஆறுதல்படுத்துவதற்கு மட்டுமல்லாமல் தன்னுடைய தேம்பல்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளவும் தனக்குச் சக்தியிருக்காது என எண்ணினான். தன் உறவினர்களிலேயே கம்பீரமும் அழகும் இளமையும் உயிர்ப்பும் நளினமும் உச்சபட்சமாய் வெளிப்படும் வடிவினையுடைய அவரை அவன் எப்போதும் இரசித்து வந்திருக்கிறான்.  அவரது சாம்பல்வண்ணக் கண்கள், பொன்னிறத் தாடி, சிறுவனாய் இருக்கையில் அடைக்கலம் புகுந்த மகிழ்ச்சி தரும் இனிய மடி என அனைத்தையும் நேசித்தான். தாக்கமுடியாத கோட்டை போலவும், மகிழ்வுதரும் இரங்கராட்டினத்தின் மரக்குதிரைகள் போலவும், கோவிலைவிடப் புனிதமானதாகவும் அம்மடியை அவன் உணர்ந்திருக்கிறான்.  

தன் தந்தையின் கடுமையும் சோபையுமான துணி அலமாரியைத் தீவீரமாக வெறுத்த அலெக்ஸிஸ், எப்போதும் ஒரு குதிரையில் வலம்வருபவனாகவே தன் எதிர்காலத்தைக் கற்பனை செய்துகொண்டான். அது மட்டுமல்லாது அப்போது அவன் ஒரு பெண்ணைப் போல் நளினமானவனாகவும் அரசனைப் போல் கம்பீரமானவனாகவும் இருப்பான். பல்தஸாரேதான் ஒரு முழுமையான ஆணின் வடிவம் என அவன் கருதினான். கூடவே அவனது சித்தப்பா அழகானவர் என்பதையும் இவன் அவரது சாயல் கொண்டிருந்தான் என்பதையும் அறிந்திருந்த அவன், அவர் புத்திசாலி என்பதையும் கருணைமிக்கவர் என்பதையும் ஒரு மதகுருவைப் போலவோ படைத்தலைவனைப் போலவோ அதிகாரம் மிக்கவர் என்பதையும் அறிந்திருந்தான். உண்மையைச் சொல்வதானால் அவனது பெற்றோரின் விமர்சனங்கள் மூலம் அவரிடம் குறைகளும் உண்டு என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. உறவினன் ழான் காலியஸின் பரிகாசத்திற்கு அவர் கடுமையாகச் சினமுற்றதும், பார்மாவின் தளபதி தன் சகோதரியை மணமுடிக்க இவரைக் கோரியதும் இவரது கண்கள் கர்வத்தின் சாயலுடன் பிரகாசித்ததையும் (தன் மகிழ்ச்சியை மறைக்கும்பொருட்டு அவர் பற்களை இறுக்கிக்கொண்ட போது அவரது முகத்தில் ஏற்பட்ட சுருக்கங்களை அலெக்ஸிஸ் வெறுத்தான்), அவரது இசையை மதிக்கவில்லை எனக்கூறிய லுக்ரீஷியாவுடன் உரையாடும்போது அவரது குரலில் தொற்றிக்கொள்கிற வெறுப்பின் தொனியையும் அவன் கவனித்திருக்கிறான்.

மற்ற குறைகளை விட்டுவிடுங்கள், பல்தஸாரேயின் முகச்சுழிப்பு முழுவதுமாக நீங்கிவிட்டிருந்தது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் உயிரிழக்கப் போகிறோம் என்பதை அறிந்தவுடன் ழான் காலியஸின் பரிகாசங்கள், பார்மாவின் தளபதியுடனான அவரது நட்பு, தன் இசை போன்றவற்றின் மீது அவருக்கு அலட்சியம் தோன்றியிருக்கும்தானே? அலெக்ஸிஸால் அவரை இப்போதும் அழகானவராகத்தான் உருவகித்துக்கொள்ள முடிந்தது, முன்பைவிட கௌரவமானவராகவும் கச்சிதமானவராகவும்கூட. ஆம், இவ்வுலக லௌகீகங்களிலிருந்து விலகி புனிதமடைந்தவராக! எனவே அவனது துயரத்தோடு சிறிது அச்சமும் அமைதியின்மையும் சேர்ந்துகொண்டது.

குதிரைகள் வெகுமுன்பே சேணமிடப்பட்டு தயார்நிலையில் இருந்தன. கிளம்புவதற்கான நேரம் ஆகியிருந்தது. வண்டியில் ஏறிய சிறுவன் இறுதியாகத் தன் ஆசிரியரிடம் சில சந்தேகங்களைத் தீர்க்க எண்ணி மீண்டும் கீழே இறங்கினான். பேசத் தொடங்கியதும் அலெக்ஸிஸின் முகம் செஞ்சிவப்பாகியது.

“திரு லிக்ரண்ட் அவர்களே, அவரது மரணம் பற்றி எனக்குத் தெரியும் என அவர் அறிவது நல்லதா, அல்லது அதை அவர் அறியாமல் இருப்பது நல்லதா?”

“அறியாமல் இருப்பதுதான் நல்லது அலெக்ஸிஸ்!”

“ஆனால் அவர் அதைப் பற்றிப் பேசத் தொடங்கினால் என்ன செய்வது?”

“அப்படிப் பேச மாட்டார்.”

“பேச மாட்டாரா?” அப்படி ஒரு சாத்தியத்தை அவன் சிந்தித்திருக்கவே இல்லை. சித்தப்பாவைப் பார்க்கச் செல்வது குறித்த யோசனைகளின் போதெல்லாம் ஒரு மதபோதகரின் மென்மையுடன் அவர் மரணத்தைப் பற்றிப் பேசுவதை அவனால் கேட்க முடிந்திருக்கிறது.

“ஒருவேளை அவர் அதைப் பற்றிப் பேசிவிட்டால் என்ன செய்வது?”

“அவர் நினைப்பது தவறென்று சொல்லுங்கள்.”

“நான் அழுதுவிட்டால் என்ன செய்வது?”

“இன்று காலையிலேயே போதுமான அளவு அழுதுவிட்டீர்கள், அவர் வீட்டில் சென்று அழமாட்டீர்கள்.”

“அழ மாட்டேனா!” துயரத்தால் அதிர்ந்தான் அலெக்ஸிஸ். “ஆனால் எனக்கு அவர்மேல் பாசமில்லை என்றும் நான் அவரைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை என்றும் அவர் நினைத்துக்கொண்டால் என்ன செய்வது… என் இனிய சித்தப்பாவே!”

வெடித்து அழத்தொடங்கினான் அலெக்ஸிஸ். பொறுமை இழந்த அவனது அம்மா அவனைத் தேடி வந்ததும் அவர்கள் கிளம்பினர்.

முன்னறையில் பச்சை-வெள்ளைச் சீருடை அணிந்து ஸில்வாண்டிய ஆயுதத்தை ஏந்தியபடி நின்றிருந்த பணியாளிடம் தனது மேலங்கியைக் கொடுத்த அலெக்ஸிஸ், அருகிலிருந்த அறையிலிருந்து ஒலித்த மெல்லிய வயலின் ஒலியைக் கேட்கும் பொருட்டு ஒரு கணம் அம்மாவுடன் அப்படியே நின்றான். அடுத்ததாக, கண்ணாடியால் ஆன வட்டமான அறைக்குள் விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர் – பிரபு தன் பெரும்பாலான நேரத்தை அங்குதான் கழித்தார். உள்ளே நுழைந்ததும் உங்களுக்கெதிராக கடல் தெரிகிறது, தலையைத் திருப்பினால் புல்வெளியும் மேய்ச்சல் நிலமும் வனமும் கண்ணில் படுகிறது. அறையின் மறுமூலையில் இரண்டு பூனைகளும் ரோஜாக்களும் பாப்பிச் செடிகளும் எண்ணற்ற இசைக்கருவிகளும் காணப்பட்டன. விருந்தினர்கள் சற்று காத்திருந்தனர்.

அலெக்ஸிஸ் அம்மாவை நோக்கித் தாவினான். தன்னை முத்தமிடப் போகிறான் என அவர் நினைக்க, அவர் காதின் மேல் உதட்டை அழுத்தி இரகசியமாக வினவினான்-

“என் சித்தப்பாவிற்கு எத்தனை வயது?”

“இந்த ஜூன் வந்தால் முப்பத்தியாறு வயது.”

“முப்பத்தியாறு வயதினை அவர் எட்டுவார் என நீங்கள் நினைக்கிறீர்களா?” எனக் கேட்க எண்ணினான் அலெக்ஸிஸ். ஆனால் அதற்கான தைரியம் அவனுக்கில்லை.

ஒரு கதவு திறந்தது, அலெக்ஸிஸ் நடுங்கினான். “இதோ, சற்று நேரத்தில் பிரபு வரவிருக்கிறார்” என அறிவித்தான் பணியாள்.

அடுத்ததாக, எங்கே சென்றாலும் பிரபு அழைத்துச் செல்கிற இரண்டு மயில்களையும் ஒரு குழந்தையையும் அழைத்து வந்தான் பணியாள். நிறைய காலடிச் சப்தங்களைத் தொடர்ந்து கதவு மீண்டும் திறந்துகொண்டது. சப்தங்கள் கேட்டபோதெல்லாம் துணுக்குற்றுத் துடித்த இதயத்திடம், “அது ஒன்றுமில்லை, இன்னொரு பணியாளாய் இருக்கும். நிச்சயம் ஒரு பணியாளாய்த்தான் இருக்கும்” எனச் சொல்லிக்கொண்டான் அலெக்ஸிஸ்.

ஆனால் அதே சமயத்தில் அவன் ஒரு மென்மையான குரலைக் கேட்டான். “வணக்கம் என் குட்டி அலெக்ஸிஸ், பிறந்தநாள் வாழ்த்துகள்”. அதைத் தொடர்ந்து அவர் முத்தம் இடவும் அவன் பயந்துவிட்டான். அதை உணர்ந்துகொண்டவர் அவன் மீள்வதற்கு நேரம் அளிக்கும் வகையில் விலகி அவனது அம்மாவிடம் ஆர்வத்துடன் உரையாடத் தொடங்கினார். அவரது அம்மாவின் மரணத்திற்குப் பிறகு, உலகிலேயே அவர் அதிகம் நேசித்தது இந்த மைத்துனியைத்தான். 

மிகக் கொஞ்சமாய் வெளிறியிருந்தாலும், இந்தத் துயர்காலத்திலும்கூட இயல்பான நாயகப் பண்பும் மாறாத வசீகரமுமாய்த் திகழ்ந்த சித்தப்பாவைப் பற்றிய தன் எண்ணங்கள் மீண்டும் உறுதிப்பட்டதில் அலெக்ஸிஸிற்கு அவர்மீது அளவற்ற அன்பு சுரந்தது. அவரை அணைத்துக்கொள்ள விரும்பினாலும் அது அவரது உறுதியைக் குலைத்து சுயகட்டுப்பாட்டை இழக்கச் செய்துவிடுமோ என அஞ்சினான். வேறெவற்றையும்விட, பிரபுவின் துக்கமும் இனிமையும் நிறைந்த பார்வைதான் அவனை அழத்தூண்டியது. அந்தக் கண்கள் எப்போதும் அந்தச் சோகத்தைச் சூடியபடிதான் இருந்திருக்கின்றன என்பதை அலெக்ஸிஸ் அறிவான். ரொம்பவும் மகிழ்ச்சியான தருணங்களில்கூட, நாம் அறியாமல் அவர் அனுபவிக்கிற துயரத்திற்கான ஆறுதலை நாடுவது போலவே அவை காட்சியளித்திருக்கின்றன. ஆனால் இந்தத் தருணத்தில், அவரது பேச்சிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட துயரமானது கண்களிலும் தளர்ந்த கன்னங்களிலும் குடிபுகுந்து விட்டதாக அலெக்ஸிஸிற்குத் தோன்றியது. அவரது ஒட்டுமொத்த ஆளுமையிலேயே அவை மட்டும்தான் உண்மையாக வெளிப்பட்டன.

“இரு குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியைச் செலுத்துவதற்கு நீ விரும்புவாய் என அறிவேன் அலெக்ஸிஸ்” எனத் தொடங்கிய பல்தஸாரே, “நாளை உனக்கு ஒரு குதிரை தருவேன். அடுத்த ஆண்டில் அதற்கொரு இணையையும் அதற்கடுத்த ஆண்டில் வண்டியையும் தருவேன். ஆனால் இந்த ஆண்டே ஒரு குதிரையை எப்படிச் செலுத்துவதென நீ கற்றுக்கொள்வாயாய் இருக்கும். நான் வந்தபிறகு நாம் அதை முயன்று பார்ப்போம். உனக்குத் தெரியும்தானே? நாளை நான் இங்கிருந்து கிளம்புகிறேன். ஆனால் சீக்கிரம் வந்துவிடுவேன். ஒரு மாதத்திற்குள் நான் திரும்பிய பிறகு உன்னை அழைத்துச் செல்வதாக நான் வாக்களித்திருந்த நகைச்சுவை நாடகத்திற்கும் நாம் செல்லலாம்” எனக் கூறினார்.

நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காக சித்தப்பா பல வாரங்களுக்கு வெளியில் செல்லவிருக்கிறார் என்பதை அலெக்ஸிஸ் அறிந்திருந்தான். போலவே, அவர் இன்னமும் திரையரங்குகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் அறிந்திருந்தான். ஆனால் அவன் மனம் முழுவதும் மரணம் என்னும் சிந்தையால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இங்கே வருவதற்கு முன் அவன் அச்சிந்தையால்தான் மிக அதீதமாக வருத்தமுற்றிருந்தான் என்பதால் சித்தப்பாவின் வார்த்தைகள் அவனுக்கு ஆழமும் வலியும் மிக்க ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

“நான் போகமாட்டேன்,” என நினைத்துக்கொண்டான் அலெக்ஸிஸ். ”நடிகர்களின் கோமாளித்தனங்களையும் பார்வையாளர்களின் சிரிப்பையும் செவிமடுத்தால் அவர் மிகத் துயருறுவார்.”

“நாங்கள் உள்ளே நுழைந்தபோது ஒரு இனிமையான இசை ஒலித்ததே! அது என்ன?” என வினவினாள் அலெக்ஸிஸின் அன்னை.

“அட! உங்களுக்கு அது பிடித்திருந்ததா?” மிக மகிழ்ச்சியுடனும் பரவசத்துடனும் வியந்தார் பல்தஸாரே. “நான் உங்களிடம் ஒரு காதல் பாடல் பற்றிச் சொல்லியிருந்தேனே! இதுதான் அது.”

“நாடகங்களில் நடிக்கிறாரா?” அலெக்ஸிஸ் தனக்குள் வியந்துகொண்டான். ”தன் இசையின் வெற்றி இன்னமும் அவரை மகிழ்விக்கிறதா?” 

அத்தருணத்தில் பிரபுவின் முகத்தில் கடுமையான வலியின் உணர்ச்சி தோன்றியது. அவரது கன்னங்கள் வெளிறின, முகம் கோணலானது, உதடுகள் சுருங்கின, கண்களில் நீர் நிறைந்தது.

“கடவுளே!” மனதிற்குள் கதறினான் அலெக்ஸிஸ். ”நாடகம் நடிப்பதெல்லாம் அவரால் இயலாதது. துயர்மிகு சித்தப்பாவே! ஆனால் அவர் எங்களைக் காயப்படுத்துவது குறித்து ஏன் இவ்வளவு அச்சம் கொள்கிறார்? அவர் தன்னை ஏன் இவ்வளவு வருத்திக்கொள்கிறார்!“ 

எல்லாவற்றையும் மீறி, முடக்குவாதம் அவ்வப்போது தந்த வலி அவரை ஒரு இரும்புக் கச்சையென அழுத்திப் பிசைந்ததில் ஏற்பட்ட சித்திரவதை அவர் உடலில் தன் தடயங்களை விட்டுச்சென்றது. அவரது முயற்சிகளை எல்லாம் மீறி அவரது முகத்தை இறுகச்செய்த அந்த வலியானது தற்போது தணிந்திருந்தது.

கண்களைத் துடைத்துக்கொண்டவர் மீண்டும் மகிழ்ச்சியுடன் உரையாடத் தொடங்கினார்.

“நான் எதுவும் தவறாகப் புரிந்துகொண்டேனா, அல்லது நிஜமாகவே பார்மாவின் தளபதி சமீபமாக உன்னிடம் நட்பைக் குறைத்துக்கொண்டுவிட்டாரா?” வெகு இயல்பாக வினவினார் அலெக்ஸிஸின் அம்மா.

“பார்மாவின் தளபதி! என்னிடம் நட்பைக் குறைத்துக்கொண்டுவிட்டாரா!” ஆவேசமாக இடைமறித்தார் பல்தஸாரே. ”விளையாடுகிறீர்களா அன்பானவரே? மலைக்காற்று எனக்கு நன்மை விளைவிக்குமெனில அவரது இல்லீரிய அரண்மனையில் வந்து நான் தாராளமாகத் தங்கிக்கொள்ளலாம் என்று இன்று காலையில்தான் அவர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.” 

சற்றே துள்ளியவர், வலி மீண்டும் தோன்றியதால் ஒரு நொடி அமைதி காத்தார். வலி குறைந்த அடுத்த நொடி பணியாளை அழைத்தார்.

“என் படுக்கைக்குப் பக்கத்தில் இருக்கும் கடிதத்தை எடுத்து வா.”

உற்சாகமான குரலில் வாசிக்க ஆரம்பித்தார்- “ இனிய பல்தஸாரே, நீங்கள் இல்லாமல் எனக்கு மிகவும் சலிப்பாய் இருக்கிறது…”

கடிதத்தின் வாயிலாக தளபதியின் அன்பு விரிவடைந்து பெருகப் பெருக பல்தஸாரேயின் முகம் மென்மையாகி மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கொண்டு பிரகாசித்தது. மிதமிஞ்சிப் பெருகிய மகிழ்ச்சியை மறைக்கும் பொருட்டு பற்களை நெரித்து வழக்கமான அந்தச் சிறிய அழகிய சுழிப்பை வரவழைத்துக்கொண்டார். மரணத்தின் நிச்சலனத்தை அணிந்து அணிந்து அது காணாமலே போயிருக்கும் என கருதியிருந்தான் அலெக்ஸிஸ்!

அந்த முகச்சுழிப்பு வழக்கமாக உதட்டில் ஏற்படுத்தும் சுருக்கங்களைக் கண்டதும் அலெக்ஸிஸின் கண்களில் இருந்த சந்தேகங்களெல்லாம் உதிர்ந்துவிட்டன. சித்தப்பாவைப் பார்க்க வந்தது முதல் ஏக்கமும் தெய்வீகமும் மென்துயரும் நிறைந்து கம்பீரத்துடன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்ட ஒரு ஒளிமிக்கப் புன்னகையை அணிந்த, சலிப்புமிக்க இவ்வாழ்க்கையிலிருந்து விலகி நிற்கும் விருப்பம் கொண்ட ஒரு மனிதனின் முகத்தையே பார்ப்பதாக அவன் நம்பினான், விரும்பினான். ஆனால் ழான் காலியஸின் பரிகாசம் முன்பு போலவே அவரை ஆத்திரமூட்டியிருக்கும் என்பதிலும் திரையரங்கிற்குச் செல்ல வேண்டுமென்கிற அவரது விருப்பமும் அவரது மகிழ்ச்சியும் நடிப்போ வீராப்போ அல்ல என்பதிலும் இப்போது அவனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. மரணத்தை நெருங்க நெருங்க அவர் வாழ்வைப் பற்றி மட்டுமே சிந்திப்பார் என்பதையும் அவன் புரிந்துகொண்டான்.
 
சித்தப்பாவிற்கு இருப்பதைவிட அதிகக் காலம் இருக்கின்றது என்ற போதிலும் என்றேனும் ஒருநாள் தானும் மரணிக்கத்தான் போகிறோம் என்பது வீட்டிற்கு வந்தபிறகு அலெக்ஸிஸிற்குத் தெளிவாகியது. ஆனால் பல்தஸாரேயின் வயதான தோட்டக்காரன் ரோக்கோவும், உறவினரான அலேரியோவ்ஸ் சீமாட்டியும் நிச்சயம் அவரைவிட அதிக நாட்கள் வாழப்போவதில்லை. என்றாலும், ஓய்வுபெறும் அளவிற்கு செல்வம் சேர்த்துவிட்ட பிறகும் தன் ரோஜாக்களுக்கு விலைவைக்கும் பொருட்டு ரோக்கோ தொடர்ந்து உழைத்தான். சீமாட்டிக்கு எழுபது வயதான பிறகும் கவனமாகத் தன் கேசத்திற்குச் சாயமிட்டு, அவளது இளமைத் தோற்றத்தையும், அவள் ஒருங்கிணைக்கிற கூடுகைகள் பற்றியும் அதில் அவளது  நளினமான நடத்தையையும் குணத்தையும் பற்றியும் கொண்டாடி எழுதிய கட்டுரைகள் வெளியான பத்திரிகைகளுக்கு பணம் செலுத்தி வந்தாள்.

இந்த எடுத்துக்காட்டுகள் சித்தப்பாவின் நடத்தை பற்றி அவனுக்கு எழுந்த ஆச்சரியத்தைக் குறைக்கவில்லை. மாறாக, அவன் உள்ளிட்ட அனைத்து மக்களும் வாழ்வை வெறித்தபடியே மரணத்தின் திசையில் பின்னகர்கின்ற முட்டாள்தனத்தைப் பற்றிய ஆச்சரியத்தை உண்டாக்கி விஸ்தரிக்கச் செய்தது. அவ்வளவு அதிர்ச்சிகரமான முட்டாள்தனத்தை இப்போதே பிரதி செய்ய வேண்டாமெனக் கருதிய அலெக்ஸிஸ், தான் கற்றுள்ள புகழ்பெற்ற தீர்க்கதரிசிகளைப் பின்பற்றி தன் சிறிய நண்பர்களோடு பாலைவனத்திற்குள் செல்ல முடிவுசெய்து அத்திட்டம் குறித்துப் பெற்றோருக்குத் தெரிவித்தான்.

அவர்களது பரிகாசங்களைக் காட்டிலும் அதிக வலிமை வாய்ந்த வாழ்க்கையானது, இச்சிந்தைகளிலிருந்து அவனை மீட்கும் பொருட்டு, இன்னமும் அவன் குடித்துத் தீர்த்திராத தெம்பூட்டும் இனிய பால் சுரக்கும் தன் மார்பினை அவனுக்கு ஆசீர்வதித்தது. இன்பம்நிறை தீவிரத்துடன் அதை ஏந்தி அருந்தத் தொடங்கியவன், வளமும் நம்பிக்கையும் நிறைந்த கற்பனைத் திறத்துடன் அதனைப் பரிசுத்தமாய் உட்கொண்டு நசித்துப் போன தன் நம்பிக்கைகளை அபாரமாக மீட்டுக்கொண்டான். 

2

“என் உடல் துக்கமாய் இருக்கிறதே, ஐயோ!…”ஸ்டீஃபன் மல்லார்மி

அலெக்ஸிஸ் வந்துசென்றதற்கு மறுநாள் கிளம்பிய ஸில்வானியாவின் பிரபு அதற்குப் பிந்தைய மூன்று நான்கு வாரங்களை அருகிலிருக்கும் அரண்மனையில் கழித்தார். அங்கே வருகை தரும் எண்ணற்ற விருந்தினர்கள், மீண்டும் மீண்டும் இவரது உடலைத் தாக்கும் நோயால் விளையும் துயரத்திலிருந்து அவரது மனத்தைத் திசைதிருப்ப உதவினர்.

விரைவிலேயே, பகிர்ந்துகொள்கிற மகிழ்ச்சி அனைத்தையும் இருமடங்காக்கித் தந்த ஓர் இளம்பெண்ணிடம் அவரது மகிழ்ச்சியும் கவனமும் குவியத் தொடங்கியது. அப்பெண் அவரை நேசித்தாள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தபோதும் அவர் அவளிடம் சற்றுத் தயக்கத்துடனேயே பழகினார். அவள் மிகவும் பரிசுத்தமானவள் என்பதை மட்டுமல்லாமல் தன் கணவனின் வருகையை எதிர்நோக்கி இருக்கிறாள் என்பதையும் பல்தஸாரே அறிந்திருந்தார். மட்டுமல்லாது, தான் நிஜமாகவே அவளை நேசிக்கிறோமா எனச் சந்தேகித்த பல்தஸாரே, அவள் வாழ்வை வீணடிப்பது எவ்வளவு பெரிய பாவமாகிவிடக்கூடும் என்றும் யோசித்தார். விளைவாக, எந்த நொடியில் அவர்களது உறவின் தன்மை மாறியது என அவரால் ஒருபோதும் நினைவுகூர முடியவில்லை. ஆனால் இப்போது, எழுதப்படாத- என்னவென்று அறியாத- ஏதோ சட்டத்தின்படி அவர் அவளது புறங்கையில் முத்தமிடவும் தோள்களில் கையிட்டுக்கொள்ளவும் தொடங்கியிருந்தார். ரொம்பவும் மகிழ்வானவர்களைப் போல் தோன்றியவர்கள் ஒரு நாள் அடுத்த கட்டத்திற்குச் சென்றனர்.

அவளை முத்தமிட்டபடி அதைத் தொடங்கினார் அவர். அடுத்து அவளைத் தழுவித் தழுவி முன்னேறியவர், கண்களிலும் கன்னங்களிலும் உதட்டிலும் கழுத்திலும் மூக்கின் இரு புறங்களிலும் முத்தமிட்டார். அந்த இளம்பெண்ணின் புன்னகைத்த உதடுகள் அவருடையதைச் சந்திக்க, அவளது கண்கள் கதிரவனால் வெம்மையூட்டப்பட்ட குளத்தினைப் போல மின்னின. இதற்கிடையே பல்தஸாரேயின் கரங்கள் தைரியம் பெற்றன.  ஒரு குறிப்பிட்ட நொடியில் அவர் அவளது கண்களைப் பார்த்தார். சிலுவையில் அறையப்படும் போதோ விரும்பிய ஒருவரை இழக்கும்போதோ உணர்கிற சித்திரவதையை வெளிப்படுத்துவது போலான அவளது வெளிறிய தோற்றமும் எல்லையற்ற துயரத்தை பிரசவித்த உணர்வற்ற நெற்றியும் கண்ணீரைவிடத் துயர்மிக்கதாய்த் தோன்றிய பார்வையைக் கொண்டிருந்த களைப்பான கண்களும் அவரைத் திகைப்புக்குள்ளாக்கின. பல்தஸாரே அவளை ஒருநொடி உற்று நோக்கினார். கருணையை யாசிக்கிற தன் கண்களை மிகச் சிரமத்துடன் நிமிர்த்தி அவள் அவரது கண்களை நோக்கினாள். அதே நேரம் பசிகொண்ட அவளது உதடுகள் மயக்கத்துடனும் ஆவலுடனும் இன்னும் அதிக முத்தங்களைக் கோரி நின்றன.

அந்த முத்தங்களால் இருவரில் விளைந்த இன்பத்தாலும் தழுவல்களின் நினைவினாலும் ஆட்கொள்ளப்பட்ட அவர்கள், தம் இதயத்தின் துயரை வெளிப்படுத்திய இரக்கமற்ற கண்களை மூடியபடி ஒருவரை ஒருவர் பாய்ந்து தழுவிக்கொண்டனர். அவர்கள் அத்துயரைக் காண விரும்பவில்லை. மரண தண்டனையை  நிறைவேற்றும் போது கைதியின் கண்களைக் காண நேர்ந்தால் அதிலிருக்கும் துயரை தானும் ஒரு நொடி அனுபவிக்க நேர்ந்து கைகள் நடுங்கி கடமையைச் செய்ய முடியாமல் போகுமென அச்சம்கொண்ட சுயநிந்தை மிக்க ஊழியனைப் போல தன் வலிமையை எல்லாம் திரட்டி அவர் கண்களை மூடிக்கொண்டார். இரவு வந்தபிறகும் கண்ணீரற்ற வெறுமையான கண்களுடன் அவள் அவரது அறையில் இருந்தாள். பிறகு வார்த்தைகள் எதுவுமின்றி அதீத துயரத்துடன் அவரது கரங்களை முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

அவரால் உறங்கவே முடியவில்லை. அயர்ச்சியில் சற்று கண்கள் மூடினாலும் துயரும் யாசிப்பும் நிறைந்த அந்தப் பலியாளின் கண்கள் பற்றிய நினைவுகள் மேலே கவிந்து அவரை அதிர்ந்து விழிக்கச் செய்தன. திடீரென அவளும் இப்போது உறக்கமற்றும் மிகத் தனிமையாக உணர்ந்தபடியும் இருப்பதான சித்திரம் அவருள் எழுந்தது. எழுந்து உடையணிந்து மெதுவாக அவளது அறைக்கு நடந்தார். ஒருவேளை அவள் உறங்கிக்கொண்டிருந்தால் தொந்தரவாகிவிடுமே எனச் சப்தம் எழுப்பவும் துணியாமல், பூமியும் வானமும் தன் ஆன்மாவும் தங்களது எடையால் அவரை அழுத்திக்கொண்டிருந்த தன் அறைக்குத் திரும்பவும் துணிவில்லாமல் தவித்து அங்கேயே நின்றார். இன்னும் ஒரு நொடிகூட தாமதிக்காமல் இதோ இப்போதே உள்ளே சென்றுவிட வேண்டும் என நினைத்தபடியே அவளது வாசலில் நின்றார். ஆனால் அவளது இனிமையான உறக்கத்தையும் சுவாசத்தையும் தொந்தரவு செய்யப்போகிறோம் என்கிற எண்ணம் அவரை அச்சுறுத்தியது. குற்ற உணர்விற்குள்ளும் துயரத்திற்குள்ளும் இரக்கமற்று வீழ்வதற்குப் பதிலாக அவற்றின் பிடியிலிருந்து சற்றே விடுபட்டு அமைதியடைந்திருக்கிற அவளைத் தொந்தரவு செய்ய அவருக்கு அச்சம் தோன்றியது. நின்றும் முழங்காலிட்டும் படுத்தும் அவர் அந்த வாசலிலேயே இரவைக் கழித்தார். காலையில் குளிர்ந்திருந்தாலும் அமைதியாய் உணர்ந்தவர், அறைக்குத் திரும்பி நீண்ட நேரம் உறங்கி நிம்மதியான மனநிலையுடன் எழுந்துகொண்டார்.

தங்களது விவேகமான நடத்தையால் ஒருவர் மற்றவரது மனநிலையை ஆறுதல்படுத்தும்படி செயல்பட்ட அவர்கள் குற்ற உணர்விற்குப் பழகிக்கொண்டனர். அது மகிழ்ச்சியாய் மாறி, கொஞ்சம் கொஞ்சமாய் தன் வலிமையை இழக்கத் தொடங்கியது. இறுதியாக அவர் ஸில்வானியாவிற்குத் திரும்பியபோது அந்தக் கொடூரமான தகிக்கும் தருணம், அவளுக்கு நேர்ந்தது போலவே, இனிமையும் சற்றே குளுமையும் நிறைந்த நினைவாய் மட்டுமே எஞ்சியது. 

3

“அவனது இளமை உள்ளுக்குள் கர்ஜிக்கிறது, ஆனால் அவன் அதைச் செவிமடுப்பதில்லை”.  — மேடம் டி செவிக்னே.

தனது பதினான்காவது பிறந்தநாளில் அலெக்ஸிஸ் சித்தப்பாவைக் காணச் சென்றபோது முந்தைய ஆண்டில் தோன்றிய தீவிர உணர்ச்சிகள் குறித்து அஞ்சினாலும், இந்த ஆண்டு அவற்றால் ஆட்கொள்ளப்படவில்லை. அவர் தந்திருந்த குதிரையில் மேற்கொண்ட இடைவிடாத சவாரிகள் துயரச் சிந்தனைகளை நீக்கி ஆரோக்கியமான எண்ணங்களை நிலைக்கச் செய்து அவனது வலிமையை அதிகரித்திருந்தன. இளமை தன்னகத்தே கொண்டிருக்கும் நிறைவான வளங்களையும் அது தரும் மகிழ்ச்சியின் ஆற்றலையும் பிரதிபலிப்பதாய் இருந்தது. சவாரியின் பாய்ச்சலினால் உண்டான காற்றில் அவனது மார்பு ஒரு படகைப் போல் எழுந்தது, உடல் பனிக்காலத் தீயைப் போல் எரிந்தது, மலர் மாலையில் உள்ள எடையற்ற இலையைப் போல அவன் நெற்றி குளிர்ந்தது. வீட்டிற்குத் திரும்பியதும் குளிர்ந்த நீரில் உடலை இறுக்கியோ நீண்ட கால செரிமானத்திற்கு அதைத் தளர்த்தியோ ஓய்வெடுத்தான். ஒருகாலத்தில் பல்தஸாரேயின் பெருமிதமாய் இருந்து இப்போது அவரை முழுவதுமாய்க் கைவிட்டுவிட்ட உயிர்ச்சக்தியை இந்த அனுபவங்களெல்லாம் அவனுக்குள் பெருக்கின. இன்று இளம் ஆன்மாக்களை மகிழ்விக்கிற அவை, நாளை அவர்களையும் கைவிடும் தன்மை கொண்டவையே.

இப்போது, சித்தப்பாவின் பலவீனங்களால் அவனுள் இருக்கும் எதையும் தடுமாறச்செய்ய இயலவில்லை. நெருக்கத்தில் இருக்கும் அவரது இறப்பால் அவனுள்ளிருக்கும் எதையும் மரணிக்கச் செய்யவும் இயலவில்லை. மாறாக, மகனது உடலின் மகிழ்வான பாடல்களும் அவன் மனதின் ஆசைகளும் நோயுற்ற அம்மனிதனின் சோர்வுமிக்கப் புகார்களை இல்லாமல் செய்தன. உச்சபட்ச உழைப்பை நல்கி தன் தசைக்கும் ஆன்மாவிற்கும் இடையில் ஒரு பெரிய கோட்டையை எழுப்பும் உடலானது, ஆன்மாவின் இருப்பையே மறக்கச் செய்துவிடக்கூடிய அந்த உற்சாகமான காலகட்டத்தில் இருந்தான் அலெக்ஸிஸ். துயரமோ நோய்மையோ தோன்றினால் மட்டுமே, கவனமின்றி விடப்பட்டிருந்த அச்சுவரில் துயர்மிக்கப் பிளவு தோன்றி அங்கே மீண்டும் ஆன்மாவை அனுமதிக்கும். நம் வாழ்வில் நீடித்து இருக்கக்கூடிய எல்லா விஷயங்களுக்கும் நாம் பழகிவிடுவதுபோல அலெக்ஸிஸும் சித்தப்பாவின் உயிர்போக்கும் நோய்க்குப் பழகியிருந்தான். இறந்துபோன ஒருவருக்காக அழுவதைப் போல அவர் அவனை ஒருமுறை அழச்செய்துவிட்டதால், அவர் உயிரோடு இருந்தபோதிலும் இறந்தவரைப் போலவே அவரை நடத்த ஆரம்பித்தான், அவரை மறக்கத் தொடங்கினான்.

”என் குட்டி அலெக்ஸிஸ், இரண்டாவது குதிரையோடு வண்டியையும் நான் உனக்குத் தருகிறேன்” என அன்று அவர் சொன்னபோது அவர் மனதில் என்ன நினைக்கிறார் எனப் புரிந்துகொண்டான்- ”அல்லது அதை நீ பெறாமலேயே போகக்கூடும்”. அதுவொரு துயர்மிக்க எண்ணம் என்று அலெக்ஸிஸ் அறிந்திருந்தான். ஆனாலும் அவனுக்கு வருத்தம் தோன்றவில்லை, தீவிர வருத்தங்களுக்கெல்லாம் அவனிடம் இப்போது இடமே இல்லை. பல நாட்களுக்குப் பிறகு வாசித்துக்கொண்டிருந்த போது, தன்னை மிகவும் நேசித்த ஒருவரின் மரணக்கால உருக்கமான அன்பினைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் வில்லனைப் பற்றிய விவரிப்பைக் கண்டு அலெக்ஸிஸ் அதிர்ச்சியுற்றான்.  

அதில் வந்த சித்தரிப்பில் தன்னையே கண்டவன், அந்த வில்லனைப் போல்தான் தானும் என்று அஞ்சியதில் அவனால் அன்றிரவு உறங்கவே முடியவில்லை. ஆனால் மறுநாள் ஓர் அட்டகாசமான குதிரைச் சவாரியும் தீவிர உடற்பயிற்சியும் மேற்கொண்ட அவன், உயிரோடிருக்கும் பிற உறவினர்கள் அத்தனை பேரின் மேலும் தோன்றிய வெகுவான அன்பினால் மீட்சியடைந்து மீண்டும் தடுமாற்றங்களின்றி மகிழ்ந்திருக்கவும் குற்ற உணர்வின்றி உறங்கவும் தொடங்கினான்.

இதற்கிடையே, நடக்க முடியாமல் போனதால் ஸில்வானியாவின் பிரபு தன் அரண்மனையை விட்டு அரிதாகவே வெளியேறினார். அவரது நண்பர்களும் உறவினர்களும் நாள் முழுவதும் அவருடனேயே இருந்தனர். மிக மோசமான குற்றத்தையோ அபத்தமான ஊதாரித்தனத்தையோ மேற்கொள்ளவும், அப்பட்டமான முரண்களைப் பேசவோ அதிர்ச்சிகரமான குற்றத்தைச் சுட்டிக்காட்டவோ அவரால் முடிந்தது. அதனை உறவினர்கள் கடிந்து கொள்ளவுமில்லை, நண்பர்களும் மறுப்புத் தெரிவிக்கவோ பரிகாசம் செய்யவோ இல்லை. எழுதப்படாத ஒரு விதியால் அவரை அவரது சொற்களுக்கும் செயல்களுக்குமான பொறுப்புகளிலிருந்து அவர்கள் விடுவித்துவிட்டது போல் தோன்றியது. தீர்ந்துகொண்டிருக்கிற வாழ்க்கையினைச் சுட்டியபடி சப்தமெழுப்பும் உடலினையும் அதன் கடைசி ஓசைகளையும் கேட்பதிலிருந்து அவரைக் காத்து அந்த இறுதி நாட்களில் மகிழ்ச்சி சூழச்செய்ய விரும்பியதைப் போல் இருந்தது அவர்களது நடத்தை.

தன்னுடன் தனக்குள்ளே உரையாடியபடி நீண்ட மகிழ்ச்சியான பொழுதுகளைக் கழித்தார் பல்தஸாரே. ஜன்னல் திட்டில் விட்டேத்தியாகச் சாய்ந்து கடலினைப் பார்க்கும் துக்கம் நிறை மகிழ்வில் ஆழ்ந்தார், துயருறும் தன் உடலை அலங்கரிக்க முயன்றார். துளைக்கும் துயருடன் தன் இறுதி நிமிடங்களை அவர் மீண்டும் மீண்டும் தனக்குள் நிகழ்த்திப் பார்த்தார். இன்னமும் அவரை மகிழ்வித்த இவ்வுலகின் உயிர்களையும் நிகழ்வுகளையும் அதைச் சுற்றி நிறுத்தி ஒரு கலைப்படைப்பைப் போல மெருகூட்டி அழகுபடுத்தினார். ஆனால் அவரது படிப்படியான விடைபெறலால் ஏற்கனவே அவை கொஞ்சம் கொஞ்சமாக அவரிடமிருந்து நீங்கி மங்கலான அழகுபெற்றிருந்தன. சீமாட்டி ஒலீவியேனுடனான தன் இறுதி நிமிடங்களை அவரது மனம் ஏற்கனவே வரைந்திருந்தது. அவரது மிகச்சிறந்த நட்பாகிய அச்சீமாட்டியின் வரவேற்பறைக்கு எத்தனையோ பெரிய மனிதர்களும் புகழ்மிக்க கலைஞர்களும் ஐரோப்பாவின் மிகச்சிறந்த சிந்தனையாளர்களும் வந்துசென்ற போதிலும் இவர்தான் அங்கே முதன்மையான இடம் வகித்தார். சீமாட்டியுடனான தன் இறுதி உரையாடலை இப்போதே அவரால் மனதுள் நிகழ்த்திப்பார்க்க முடிந்தது.

“. . . அந்தி சாய்ந்திருந்தது, ஆப்பிள் மரங்களினூடாகக் காட்சியளித்த கடல் ஊதா நிறம் கொண்டிருந்தது. வெளிறிய மலர்களைப் போல் எடையின்மையும் குற்ற உணர்வினைப் போல் கனமும்கொண்ட இளஞ்சிவப்பு முகில்கள் தொடுவானில் இறங்கின. நெலிங்க மரங்களின் துயர்மிகு வரிசை ஒன்று நிழலுருவாய் தோற்றம் கொள்கையில் அவற்றின் உச்சிகள் தேவாலய ரோஜாக்களென காட்சியளித்தன. நாளின் இறுதிக் கதிர்கள் மரங்களின் மையத்தண்டில் படாமல் கிளைகளை மட்டும் வண்ணமிட்டு ஒளிமாலை செய்து இந்த இருளான தூண்களுக்கு அணிவித்தன. கடலின் வாசனையையும் இலைகளின் பச்சை வாசனையையும் பாலின் வாசனையையும் கலந்து பரப்பியது தென்றல். ஸில்வானிய நகரம் தன் துயர்மிகு மாலைகளை இதற்குமுன் ஒருபோதும் இவ்வளவு மென்மை செய்ததில்லை.

“ ‘நான் உன்னை மிகவும் நேசித்தேன் நண்பனே, ஆனால் உனக்கு எதுவுமே செய்யவில்லை,’ என்றாள் அவள்.

“ ‘நீ எதைப் பற்றிச் சொல்கிறாய் ஒலீவியேன்? எதுவுமே செய்யவில்லை என்பதன் மூலம் நீ என்ன சொல்ல வருகிறாய்? நான் எவ்வளவு குறைவாகக் கேட்டேனோ நீ அவ்வளவு அதிகம் தந்திருக்கிறாய். உண்மையைச் சொன்னால், நாம் காதல் என்னும் உறவில் இருந்திருந்தால் நீ தந்திருக்கக் கூடியதைவிட அதிகம் எனக்குத் தந்திருக்கிறாய். நான் உன்னை ஆராதித்தேன், மடோன்னாவைப் போல் தெய்வீகமும் செவிலித்தாயைப் போல் கருணையும் கொண்டு நீ என்னைத் தாலாட்டினாய். உடல் ரீதியான இன்பங்களுக்கான தேவையின் பொருட்டு தடைபட்டுவிடக் கூடியதாக அல்லாத நேசத்துடன் நான் உன்னை விரும்பினேன். அதற்குப் பிரதிபலனாக ஒப்பிட முடியாத ஒரு நட்பை நீ எனக்குப் பரிசளித்தாய். எவ்வளவு நேர்த்தியான தேநீர், இயல்பாகவே அழகு கொண்டிருந்த உரையாடல்கள், எத்தனை மலர்ச்சியான ரோஜாப் பூங்கொத்துகள்! உன் தாய்மைமிகு அன்பினாலும் உவப்புமிக்க கரங்களாலும் நீ மட்டுமே காய்ச்சலுற்ற என் நெற்றியைத் தணிக்கவும் உலர்ந்த என் உதடுகளுக்கிடையே தேன் இடவும் உயர்ந்த விஷயங்களை என் வாழ்வில் இணைக்கவும் அறிந்திருந்தாய்.

“ ‘என் நட்பே, உன் கரங்களைத் தா, நான் அதில் முத்தமிடுகிறேன்.”

தன் அத்தனை உணர்வுகளாலும் முழு இதயத்தாலும் அவர் இன்னமும் ஸைரக்யூஸ் இளவரசி பியாவை நேசித்தார். ஆனால் அவள் கஸ்ட்ருக்கோவின் மீதான தீவிரமான காதலினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறாள் என்னும் உண்மை இவர் மீதான அவளது அலட்சியத்தின் போதெல்லாம் வெளிப்பட்டதைத்தான் அவர் சிரமப்பட்டு மறக்க முயன்றார். சில நாட்களுக்கு முன்பு வரையிலும்கூட அவர் சில கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார். அவற்றில் அவளுடன் கரம்கோர்த்து நடனமாடுவதன் மூலம் தன் எதிரியைக் கீழ்மைப்படுத்த முடியும் என நம்பினார். அவளுடன் கைகோர்த்து நடனமாடிய போதும்கூட அவளது கண்கள் வேறொரு காதலினால் கவனம் சிதறியிருப்பதையும் நோயுற்ற இவரின் மீதான இரக்கத்தால் அவள் அதை மறைக்க முயன்றதையும் இவரால் உணர்ந்துகொள்ள முடிந்தது. ஆனால் இப்போது அதுவும்கூட அவருக்குச் சாத்தியமில்லை. அவரது கால்களின் இயக்கம் மோசமாகி சமநிலை தவறியதால் அவரால் அரண்மனையை விட்டு வெளியே செல்ல முடிவதில்லை. என்றாலும் அவள் அவரை அடிக்கடி வந்து சந்தித்து, பழைய நாட்களின் தயக்கங்களும் கோபமும் விடுத்து பொய்மையற்ற அன்புடன் பேசிச் சென்றாள். வேறெவரையும்விட அவளிடமிருந்து வெளிப்பட்ட இந்த அன்பு அவர் மனம் முழுக்கப் பரவி அவரை மகிழ்வித்து திருப்திப்படுத்தியது.

ஆனால் ஒரு நாள், நாற்காலியில் இருந்து எழுந்து உணவு மேசைக்கு நடந்த பல்தஸாரே, முன்னைவிட நன்றாக நடப்பதைக் கண்ட பணியாளர்கள் ஆச்சரியமுற்றனர். மருத்துவரை வரவழைத்து சோதனை மேற்கொண்ட பல்தஸாரே, அடுத்த நாள் முதல் இயல்பாக நடக்கத் தொடங்கினார். ஒரு வாரத்திற்குப் பிறகு அவர் வெளியே செல்லவும் அனுமதிக்கப்பட்டார். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகுந்த நம்பிக்கை தோன்றியது. ஒரு சிறிய குணப்படுத்தக்கூடிய நரம்புப் பிரச்சினை முடக்குவாதத்தின் அறிகுறியாய்த் தோன்றி இப்போது மறையத் தொடங்கியிருக்கலாம் என மருத்துவர் கருதினார். தன் ஊகத்தினை உறுதியான சொற்களால் அவர் வெளிப்படுத்தினார்.

”நீங்கள் தப்பித்துவிட்டீர்கள்!”

தண்டனை அனுபவித்து வந்த அந்த மனிதன் தனது மீட்சியைப் பற்றி அறிந்து மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆனால் நன்றாகக் குணமடைந்த சில காலத்திற்குப் பின், அந்த மகிழ்ச்சியை ஒரு கூர்மையான வருத்தம் துளைத்தது. முன்னரே மகிழ்ச்சி சற்று குறையத் தொடங்கியிருந்ததுதான்! கட்டாய ஓய்வும் சுமைகளற்ற தியானமும் விளைவித்த, கருணையும் அநுகூலமும் மிக்க சூழலினால் வாழ்வின் சீரழிவிலிருந்து தப்புவிக்கப்பட்ட அவருக்குள் மரணம் மீதான ஆசை துளிர்விடத் தொடங்கியது. மரணம் குறித்த அச்சத்திலிருந்து அவர் வெகுதூரம் வந்திருந்தார். மீண்டும் முதலிலிருந்து தொடங்குவது குறித்தும் மறந்திருந்த பிரச்சினைகளை எதிர்கொள்வது குறித்தும் தன்னைச் சூழ்ந்திருந்த அன்பை இழப்பது குறித்தும் அவருக்கு இலேசான கவலை தோன்றியது. தன்னைப் பற்றி – தனக்குள்ளிருக்கும் அந்நியமான அந்தச் சகோதரனைப் பற்றி – கடலில் உழும் படகுகளைப் பார்த்தபடி அவனுடன் நீண்ட நேரம் உரையாடி வெகு தொலைவிலிருந்தும் நெருக்கத்திலிருந்தும் அறிந்துகொண்டதால் இன்பத்தில் மூழ்கி உலகை மறக்க வேண்டும் என விரும்புவது தவறாகுமோ என்றும் தனக்குள் குழப்பத்துடன் எண்ணினார். தன் தாய் நிலம் பற்றி அறியாத ஒரு இளைஞனுக்கு அந்நிலத்தைக் காணும்போது ஏற்படும் புதிதான பழக்கமற்ற நேச உணர்வைப் போல வாழ்வின் மீது எழுந்த ஓர் உணர்வால் அவர் மரணத்திற்கு ஏங்கினார். ஆனால் முன்னர், திரும்பவியலாத நாடு கடத்தல் ஒன்றை எதிர்நோக்கிய மனநிலையில் இருந்தார் அவர். 

பல்தஸாரே குணமுற்றதை அறிந்த ழான் காலியஸ், அவர் ஒரு கருத்தைச் சொன்னபோது வன்மையாக மறுத்து பரிகாசம் செய்தார். தினமும் காலையும் மாலையும் வந்து இவரைப் பார்த்துச்சென்ற மைத்துனியை இரண்டு தினங்களாகக் காணவில்லை. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது! வாழ்வின் சுமைகளற்று கொஞ்ச காலமாய் வாழ்ந்து பழகியவருக்கு மீண்டும் அவற்றை ஏற்றுக்கொள்வதில் விருப்பமில்லை. வாழ்க்கை அவருக்கு அதன் இன்பங்களுடன் திரும்பக் கிட்டவில்லை. ஆனாலும் வலிமையையும் வாழ்வதற்கான விருப்பத்தையும் அவர் திரும்பப் பெற்றார். வெளியே சென்று வாழத் தொடங்கியவர், இரண்டாம் முறையாகத் தனக்குள் ஒரு இறப்பினை எதிர்கொண்டார். ஒரு மாதத்திற்குப் பிறகு முடக்குவாதத்தின் அறிகுறிகள் மீண்டும் தோன்றத் தொடங்கின. முன்பைப் போலவே, கொஞ்சம் கொஞ்சமாக, நடப்பதில் சிரமம் ஏற்பட்டு பின் இயலாததாகியது. மீண்டும் மரணத்தை நோக்கி நகர்வதற்கும் வாழ்வை வேறு வகையில் புரிந்துகொள்ளவும் மட்டும் போதுமானதாக அது ஆகியது. இந்த மறுவருகையில் முதல் பாதிப்பின் பண்புகள் ஏதும் இல்லை. விளைவாக அவர் வாழ்விலிருந்து விலகி நிற்கத் தொடங்கினார். அதை அதன் இயல்போடு நோக்குவதற்காக அல்ல, மாறாக ஒரு சித்திரத்தைப் போல் நோக்குவதற்காக. அவர் அதிக தன்முனைப்புடையவராகவும் எரிச்சல் மிக்கவராகவும் தன்னால் அனுபவிக்க முடியாத மகிழ்ச்சிகள் குறித்து மிகுந்த ஏக்கமுடையவராகவும் நடந்து கொள்ளத் தொடங்கினார். நெருங்கி வருகிற அவரது மரணத்தை மென்மையாக்க முயன்ற ஒரே ஒரு நபர் அவரது மைத்துனிதான். ஒவ்வொரு நாளும் அலெக்ஸிஸுடன் அவர் பலமுறை வந்து சென்றார்.

அவர் பிரபுவைக் காணச் சென்ற ஒரு பின்மதியத்தில், கிட்டத்தட்ட இருப்பிடத்தை நெருங்கிய தருணத்தில் குதிரைகள் தடம்புரண்டன. தரைக்குத் தூக்கி எறியப்பட்ட அவர் மீது வேகமாகச் சென்றுகொண்டிருந்த இன்னொரு குதிரைக்காரனும் ஏறிவிட்டான். மண்டையோட்டில் முறிவு ஏற்பட்டு நினைவிழந்த அவர் பல்தஸாரேயின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

காயங்களின்றித் தப்பித்த வண்டியோட்டி அவரிடம் நடந்ததைத் தெளிவாகச் சொல்லியதும், அவர் கோபமுற்றார். பற்களை நெரித்த அவரது பிரகாசமான கண்கள், விழிப்பள்ளத்திலிருந்து தெறித்துவிடுவது போல் புடைத்து நின்றன. மிகுந்த ஆத்திரத்துடன் அவர் வண்டிக்காரன் மீது வசைமாரி பொழிந்தார். ஆனால் அப்படி வெடித்த அவரது கோபமானது உண்மையில் உதவி கோரும் ஒரு வலிமிக்க அழுகையாகவே தோன்றியது. வசைகளின் இடையே ஏற்பட்ட அமைதியின் போது அதனைக் கேட்க முடிந்தது. இயலாதவன் ஒருவன் ஆத்திரமிக்க பிரபுவிற்கு அருகே நின்று புலம்புவதைப் போல அது ஒலித்தது. ஆரம்பத்தில் மெதுவாய் ஒலித்த அந்தப் புலம்பலானது, அவரது ஆத்திரமிக்க குரலை மூழ்கடித்ததில் தேம்பியபடியே அம்மனிதர் நாற்காலியில் சரிந்தார். 

துயரத்தின் சாயல்படிந்த அவரது முகத்தை மைத்துனி பார்த்தால் வருந்துவார் என்பதால், அவர் முகத்தைக் கழுவிக்கொள்ள விரும்பினார். பணியாள் வருத்தத்துடன் தலையசைத்தான். காயமுற்ற அப்பெண்மணிக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை. இரண்டு அச்சம் மிகுந்த பகல்களையும் இரவுகளையும் தன் மைத்துனியருகே பிரபு கழித்தார். அவள் எந்த நேரமும் மரணிக்கக்கூடும். இரண்டாவது இரவில் மருத்துவர் ஒரு அபாயமான அறுவை சிகிச்சையை முயன்று பார்த்தார். மூன்றாவது காலையில் காய்ச்சல் குறைந்து கண் விழித்த பெண்மணி, பல்தஸாரேயைப் பார்த்துப் புன்னகைத்ததும் அவர் தனது மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுது தீர்த்தார். மரணம் அங்குலம் அங்குலமாக அவரை நோக்கி நகர்ந்தபோது அதை அவர் எதிர்கொள்ள மறுத்துவிட்டார். இப்போது அவர் திடீரென அதனை வெகு அருகில் உணர்ந்தார். அவர் மிகவும் நேசிக்கும் ஒரு பொருளை ஆபத்திற்குள்ளாக்கி மரணம் அவரை அச்சுறுத்திவிட்டது. அதனிடம் கெஞ்சி வேண்டிக்கொண்ட பிரபு இப்போது அதன் கருணையை அனுபவித்துவிட்டார்.

அவர் தைரியமாகவும் சுதந்திரமாகவும் உணர்ந்தார். தன் மைத்துனியின் வாழ்க்கை அளவிற்கு தன் வாழ்க்கை முக்கியமானதல்ல என்று உணர்ந்ததில் பெருமை தோன்றியது. தன் வாழ்க்கை மீது கண்டனமும் அவள் வாழ்க்கை மீது இரக்கமும் தோன்றியது. இப்போது அவர் மரணத்தை நேருக்கு நேர் பார்த்தார். முன்பு அதைச் சுற்றி அவர் வரைந்தெழுப்பிய காட்சிகள் இப்போது அவருக்குத் தேவைப்படவில்லை. இறுதி வரை அவர் அப்படியே தொடர விரும்பினார். துயரத்தை அழகாக்கவும் அற்புதமாக்கவும் முயலும் அப்பொய்கள், அவரது வாழ்வின் மர்மங்களை அவரிடமிருந்து மறைத்ததைப் போலவே அவரது மரணத்தின் மர்மங்களை அசுத்தப்படுத்தி அவர்மீது அவதூறு உண்டாக்கியிருக்கும்.

4

“நாளையும் மறுநாளும் அதற்கடுத்த நாளும் முந்தைய தினத்தின் அற்ப தருணங்களுக்குள் நுழைந்து நிச்சயிக்கப்பட்ட காலத்தின் இறுதி நொடிகளை நோக்கி அழைத்துச் செல்கின்றன; நமது கடந்த காலங்களனைத்தும் முட்டாள் மனிதர்களுக்கு மரணத்தை நோக்கி ஒளிகாட்டியிருக்கிறது. அணைந்திடு, அணைந்திடு, சிறிய மெழுகுவர்த்தியே! வாழ்க்கை என்பது ஒரு நகர்கிற நிழல், தன் காலத்தில் மேடையில் கர்வத்துடனும் பதற்றத்துடனும் நடைபோடுகிற ஒரு துயர்மிகு நடிகன், அதன்பிறகு அவன் காணாமல் போய்விடுகிறான்; வாழ்க்கை என்பது கர்வமும் ஆத்திரமும் நிறைந்த ஒரு முட்டாள் சொல்கிற அர்த்தமற்ற கதை”. —ஷேக்ஸ்பியர், மெக்பத் 

மைத்துனியின் நோய்மைக் காலத்தில் அவருள் ஏற்பட்ட உணர்வுகளும் களைப்பும் அவரது நோயை அதிகப்படுத்தியிருந்தது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சியிருக்கிறதென அவரது பாதிரியார் அறிவித்தார். அப்போது காலை பத்து மணி, மழை அடித்துப் பெய்துகொண்டிருந்தது. அரண்மனைக்கு முன்பு ஒரு வண்டி வந்து நின்றது. சீமாட்டி ஒலீவியேன் வந்திருந்தார். முன்பு மரணத்தின் தருணங்களை அலங்கரிக்க முயன்ற காலங்களில் அவர் தனக்குள் இப்படிச் சொல்லியிருந்தார்.

“அது ஒரு தெளிவான மாலையாய் இருக்கும். சூரியன் இறங்கிக்கொண்டிருக்க, ஆப்பிள் மரங்களினூடாகக் காட்சியளிக்கும் கடல் ஊதா நிறம் கொண்டிருக்கும். வெளிறிய மலர்களைப் போல் எடையின்மையும் குற்ற உணர்வினைப் போல் கனமும் கொண்ட இளஞ்சிவப்பு முகில்கள் தொடுவானில் இறங்கும்… “

அது காலை பத்து மணி. அடித்துப் பெய்கிற மழையினூடாகத் தாழ்ந்து இறங்கியிருக்கும் விசும்பின் கீழ் சீமாட்டி ஒலீவியேன் வந்துசேர்ந்தார். நோய்மையினால் முற்றும் சோர்வடைந்து, உயர்சிந்தைகளால் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அவர், இதுநாள் வரை வாழ்விற்கு அழகும் மதிப்பும் பெருமையும் சேர்க்கின்ற விஷயங்கள் எனக் கருதியவற்றின் கருணை மீது தற்போது ஆர்வம் இழந்திருந்தார். தான் மிகவும் சோர்ந்திருப்பதாகச் சீமாட்டியிடம் சொல்லும்படி பணியாட்களைப் பணித்தார். சீமாட்டி மீண்டும் கட்டாயப்படுத்திய போதும் அவர் உறுதியாக மறுத்துவிட்டார். அவள் இப்போது அவருக்கு எதுவுமில்லை. பல வாரங்களாக அவர் அஞ்சிக்கொண்டிருந்த உறவுகளின் சங்கிலியிலிருந்து இறப்பு அவரைச் சட்டென விடுவித்துவிட்டது. ஒலீவியேனைப் பற்றிச் சிந்திக்க முயன்றபோது, அவரது மனதின் கண்களுக்கு எதுவுமே தட்டுப்படவில்லை. அவரது கற்பனையின் கண்களும் கர்வத்தின் கண்களும் உணர்விழந்திருந்தன.

என்றாலும், அவரது மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, பொஹீமியாவின் சீமாட்டி ஒரு கேளிக்கையை ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் பியா, மறுநாள் டென்மார்க் கிளம்பவிருக்கும் கஸ்ட்ரூக்கோவுடன் நடனமாடவிருக்கிறாள் என்றும் கேள்வியுற்றபோது தோன்றிய ஆத்திரம் அவருள்ளிருந்த பொறாமையைத் தூண்டியது. பியாவைக் காண வேண்டுமெனப் பிரபு விருப்பம் தெரிவித்த போது அவரது மைத்துனி அதற்கு மறுப்பு தெரிவித்தாள். பியாவைப் பார்க்கவிடாமல் அவர்கள் தடுப்பதாகவும் அவரைச் சித்திரவதை செய்வதாகவும் எண்ணிச் சினமுற்றார் அவர். எனவே அவரது துயரத்தைக் குறைக்கும் பொருட்டு உடனடியாக அவளுக்கு அழைப்பு விடுத்தனர்.

அவள் வந்து சேர்ந்தபோது அவர் அமைதியடைந்திருந்தார். ஆனால் மிகவும் துயருற்றிருந்தார். அவளைப் படுக்கை அருகே அழைத்தவர், உடனடியாகவே பொஹீமியாவின் சீமாட்டி ஏற்பாடு செய்திருக்கும் கேளிக்கையைப் பற்றிப் பேசினார்.

“நாம் உறவினர்கள் அல்ல. எனவே நீ எனக்காக துக்கம் அனுஷ்டிக்க மாட்டாய். ஆனால் நான் உன்னிடம் ஒரு உதவி கோர உள்ளேன். அந்தக் கேளிக்கைக்கு நீ செல்லாதே. செல்ல மாட்டேன் என எனக்குச் சத்தியம் செய்துகொடு.“

கண் மணிகளின் விளிம்பில், மரணத்தினாலும் பிணைக்க முடியாதென அறிந்து  துயரத்தாலும் அன்பாலும் நிறைந்த அவர்களது ஆன்மா ததும்பி நிற்க, அவர்கள் ஒருவரை ஒருவர் உற்று நோக்கினர்.

அவளது தயக்கத்தை அவர் புரிந்துகொண்டார். உதடுகள் வலியால் முறுக்கிக்கொள்ள அவர் மெல்ல முனகினார்.

“வேண்டாம், சத்தியம் செய்யாதே. இறக்கின்ற ஒரு மனிதனுக்குச் செய்த சத்தியத்தை நீ மீற வேண்டாம். உனக்கு உறுதியாகத் தெரியாதபட்சத்தில் நீ சத்தியம் செய்யாதே.”

“என்னால் உங்களுக்குச் சத்தியம் செய்ய முடியாது. நான் அவரைப் பார்த்து இரண்டு மாதங்களுக்கும் மேலாகிறது. மீண்டும் சந்திக்க இயலாமலேயேகூடப் போகலாம். அந்த விருந்திற்குச் செல்ல முடியாவிட்டால் நான் ஒருபோதும் ஆறுதலடையாதவளாய் திரிவேன்.” 

“நீ அவனைக் காதலிப்பதாலும் இறப்பு வந்துவிடக்கூடும் என்பதாலும்… நீ உடல்நலத்தோடு இன்னும் உயிரோடிருக்கப் போவதாலும், நீ சொல்வது சரிதான். ஆனாலும் நீ எனக்குச் சிறியதாக ஏதேனும் செய்ய முடியும். எல்லோரையும் குழப்புவதற்காக, கேளிக்கையின் போது சிறிது நேரத்தை நீ என்னுடன் செலவழிக்க வேண்டும். அந்த நேரத்தை உனது மாலையில் இருந்து கழித்துவிடு. உன்னுடனான சில நிமிடங்களை நினைவுகொள்ள எனது ஆன்மாவிற்கு அனுமதியளி. என்னைப் பற்றி கொஞ்சம் யோசி.”

“அந்தச் சத்தியத்தையும்கூட என்னால் உங்களுக்குத் தர முடியாது. கொண்டாட்டம் மிகக்குறைந்த நேரத்திற்குத்தான் திட்டமிடப்பட்டுள்ளது. நான் கிளம்பாவிட்டாலும்கூட அவனுடன் செலவிட மிகக்குறைந்த நேரமே எனக்கு இருக்கும். ஆனால் அதற்குப் பிறகு தினமும் உன்னை நினைத்துக்கொள்வேன்.”

“அது உன்னால் முடியாது, நீ என்னை மறந்துவிடுவாய். ஆனால் ஒரு வருடத்திற்குப் பிறகோ அதற்கு அதிகமான காலத்திற்குப் பிறகோ ஏதேனும் துயரக் கவிதையோ ஒரு மரணமோ அல்லது ஒரு மழை மாலையோ உனக்கு என்னை நினைவூட்டினால், நீ என்மேல் கருணை காட்டலாம். நான் உன்னை ஒருபோதும் திரும்பக் காண முடியாது. என் ஆன்மாவிற்கு மட்டுமே அது சாத்தியமாகும் –ஆனால், அதற்கு நாம் இருவருமே ஒருவரை ஒருவர் நினைக்க வேண்டும். நான் உன்னை எப்போதும் நினைத்துக்கொண்டே இருப்பேன் என்பதால் நீ, ஒருவேளை, வரவிரும்பும் சமயத்திற்காக அந்தப் பாதை திறந்தே இருக்கும். ஆனால் அதற்கு நான் அதிக காலம் காத்திருக்க வேண்டும்! நவம்பர் மாதப் பருவமழை என் கல்லறையில் இருக்கும் பூக்களை அழுகிப்போகச் செய்திருக்கும். ஜூன் மாதம் அவற்றை எரித்திருக்கும். முடிவாக என் ஆன்மா பொறுமையற்று எப்போதும் அழுதபடியே இருக்கும். ஹ்ம்! என்றேனும் ஒரு நாள் ஒரு நினைவுப்பரிசோ, பிறந்தநாளோ என்னைக் குறித்த எண்ணத்தை உன் சிந்தனையில் தோற்றுவித்து என் அன்பு வளையத்திற்குள் உன்னைக் கொண்டுவரக்கூடும். அந்த தினத்தில், எனக்கு அது கேட்டுவிட்டது போலவும் நான் உன்னை உணர்ந்துகொண்டது போலவும் ஆகி ஒரு மந்திரத்தால் உன் வருகைக்காக எல்லாமும் மலர்களால் சூழப்பட்டுவிடும். இறந்துபோனவனைப் பற்றி யோசி. ஆனால், ஐயோ! வாழ்வின் உற்சாகமும் நமது கண்ணீரும் மகிழ்ச்சித் தருணங்களும் உதடுகளும் சாத்தியப்படுத்தாத ஒன்றை மரணமும் உன் வருகையும் சாத்தியப்படுத்திவிட முடியுமா?” 

5

“உன்னதமான ஓர் இதயம் இதோ இப்போது மடிந்துவிட்டது. உறங்குங்கள், இனிய இளவரசரே; தேவதைகள் இணைந்து உங்களது ஓய்விற்காகப் பாடுகிறார்கள்!” — ஷேக்ஸ்பியர், ஹாம்லட்.

இதற்கிடையே பிரபுவிற்கு ஏற்பட்ட சித்தப்பிரமையுடன் கூடிய காய்ச்சல் குணமாகாமலேயே போனது. முன்பு, மகிழ்ச்சியைத் தக்கவைத்திருந்த பல்தஸாரேயை தன் பதிமூன்றாவது பிறந்த நாளில் அலெக்ஸிஸ் சந்தித்த அந்த அகன்ற வட்ட அறைக்கு அவரது படுக்கை மாற்றப்பட்டது. இங்கே அவரால் கடலை, கப்பல்களை, மறுபுறம் சமவெளியை, வனத்தைக் காண முடியும். அவ்வப்போது அவர் பேசினார். ஆனால் அவரது வார்த்தைகள், சமீபமாய் அவருக்குள் தோன்றிச் சமநிலைப்படுத்தியிருந்த உயர்சிந்தனைகளுக்கு சற்றும் தொடர்பில்லாதனவாய் இருந்தன. அவரைப் பரிகாசம் செய்த கண்ணுக்குத் தெரியாத ஒரு மனிதனை மோசமாகச் சபித்தபடி, இந்நூற்றாண்டின் மகத்தான இசைக்கலைஞனும் இப்பிரபஞ்சத்தின் புகழ்பெற்ற மேற்குடியினனும் தான்தான் எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.

பின் திடீரென அமைதியானவர், தன்னை ஒரு குகைக்கு அழைத்துச் சென்று வேட்டைக்காகக் குதிரைகளைச் சேணமிடுமாறு குதிரைக்காரனிடம் வேண்டினார். பார்மாவின் தளபதியின் தங்கையுடனான தன் திருமணக் கொண்டாட்டத்திற்குப் பெரிய மனிதர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதற்கான ஏற்பாடுகளைக் கோரினார். சூதாட்டத்தில் பட்ட கடனை அடைக்க முடியாமல் போனதை எண்ணி அஞ்சிய அவர், படுக்கை அருகே இருந்த அட்டைக்கத்தியை எடுத்து அதைத் துப்பாக்கி போல் ஏந்தி குறிவைத்தார். முந்தைய இரவு அவர் தாக்கிய காவலர்கள் இறந்துவிட்டனரா எனக் கண்டறிவதற்காக தூதுவர்களை அனுப்பினார். தான் யாருடைய கரங்களையோ பற்றிக்கொண்டிருப்பதாகக் கருதிச் சிரித்தபடியே அவரிடம் ஏதேதோ உளறினார். தீய எண்ணங்களை விரட்டி இழிவான நினைவுகளை இருளில் தள்ளும் அந்த ’விருப்பம்’, ’சிந்தை’ என்ற இரண்டு தேவதைகளும் அவரைக் கைவிட்டிருந்தனர்.

மூன்று தினங்களுக்குப் பிறகு ஐந்து மணிவாக்கில் அவர் ஒரு மோசமான கனவிலிருந்து விழித்தது போல் எழுந்துகொண்டார். அக்கனவிற்கு அதனைக் கண்டவர்தான் பொறுப்பென்பது போல் தோன்றினாலும் அவரால் அதை முழுமையாக நினைவுகூர முடியவில்லை. அதீத கீழ்மையையும் பழமையையும் மறைந்துவிட்ட சுயத்தையும் அவர் வெளிப்படுத்திய அந்தச் சமயத்தில் உறவினர்களோ நண்பர்களோ அங்கிருந்தனரா என வினவினார். ஒருவேளை தான் மனம்பிறழ்ந்து நடந்துகொண்டால் பார்வையிட வந்தவர்களை உடனடியாக வெளியேற்றி மீண்டும் நினைவு திரும்பிய பிறகுதான் உள்ளே அனுமதிக்க வேண்டும் எனப் பணியாளர்களுக்கு ஆணையிட்டார்.

கண்களை உயர்த்தி அறையைச் சுற்றிப் பார்த்தவர், ஒரு சீன ஜாடியின் மேல் அமர்ந்து செவ்வந்தி மலருடன் விளையாடியபடி அதன் நறுமணத்தை நுகர்வது போல சைகை செய்துகொண்டிருந்த கருப்புப் பூனையைக் கண்டு புன்னகைத்தார். எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு, அவருக்காகக் காத்திருந்த மதபோதகரிடம் நீண்ட நேரம் பேசினார். என்றாலும், வேறு உணவை ஏற்றுக்கொள்ளும் நிலையில் தன் உடல் இல்லை என மருத்துவர் மூலம் தெரிவித்து, இறுதி விருந்தை மறுத்துவிட்டார். ஒருமணி நேரத்திற்குப் பிறகு பணியாள் மூலம் மைத்துனியையும் ழான் காலியஸையும் வரவழைத்தவர் பின்வருமாறு கூறினார்.

“நான் விடைபெறுகிறேன், மரணிப்பது குறித்தும் கடவுளிடம் செல்வது குறித்தும் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.”

அறையில் காற்றோட்டம் குறைவாய் இருந்ததால் கடலை நோக்கி இருந்த ஜன்னலைத் திறந்து வைத்தனர். மறுபுறத்தில் மேய்ச்சல் வெளியிலிருந்தும் வனத்திலிருந்தும் வந்த காற்று அதீதமாக இருந்ததனால் அந்த ஜன்னலை அவர்கள் திறக்கவில்லை.

திறந்த ஜன்னல்களுக்கருகே தன் படுக்கையை இழுத்துப்போடச் செய்தார் பல்தஸாரே. மாலுமிகளின் வழிகாட்டுதலோடு படகொன்று கடலை நோக்கி நகர்ந்தபடி இருந்தது. பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு அழகான சிறுவன் கப்பலின் முகப்பில் நின்றுகொண்டிருந்தான். ஒவ்வொரு அலையும் அவனை நீருக்குள் மூழ்கடிப்பது போல் தோன்றினாலும் அவன் தனது உறுதியான கால்களால் வலுவாக நின்றான். உப்பு படிந்த உதடுகளுக்கிடையே எரிகிற குழாய் ஒன்றை பொருத்தியிருந்த அவன், மீன் பிடிக்கும் பொருட்டு தன் வலையை விரித்தான். படகை உயர்ந்தெழச்செய்த அதே காற்று இவர்களது வட்ட அறைக்குள்ளும் நுழைந்து பல்தஸாரேயின் கன்னங்களைக் குளிர்வித்து ஒரு காகிதத் துண்டை அறைக்குள் படபடக்கச் செய்தது. ஒருசமயம் தான் மிகவும் விரும்பி அனுபவித்த, இனி அனுபவிக்க வாய்ப்பில்லாத அந்த மகிழ்ச்சியான காட்சியைத் தவிர்க்கும் பொருட்டு அவர் தலையை வேறு புறம் திருப்பிக்கொண்டார். துறைமுகத்தை நோக்கிப் பார்வையைத் திருப்பினார். முப்பாய்மரக் கப்பல் ஒன்று புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தது.

“அது மேற்கிந்தியத் தீவுகளை நோக்கிக் கிளம்புகிறது,” என்றார் ழான் காலியஸ்.

கப்பலில் இருந்தபடி தங்கள் கைக்குட்டைகளை அசைத்த அந்த மனிதர்களை அவரால் அடையாளம் காண இயலவில்லை. ஆனால் அறியப்படாத விஷயங்கள் மீதான தாகம் நிறைந்த அவர்களது கண்களை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. அறிந்துகொள்ளவும் அனுபவிக்கவும் உணரவும் இன்னும் அவர்களுக்கு எவ்வளவோ உள்ளது. நங்கூரம் அகற்றப்பட்டது, கூச்சல்கள் எதிரொலிக்க கப்பல் இருண்ட கடலைத் துளைத்தபடி மேற்கு நோக்கிப் பாய்ந்தது. பொன்னிற மூடுபனியின் பின்னணியில் படகுகளை மேகங்களோடு பிணைத்து ஒளியூட்டி தெளிவற்ற ஆர்வமூட்டும் நம்பிக்கைகளைப் பயணிகளுக்கு அளித்தபடி காட்சியளித்தது அக்கடல்.

வட்ட அறையின் கடலை நோக்கிய ஜன்னல்களை மூடச்சொல்லிய பல்தஸாரே, புல்வெளிகளையும் வனத்தையும் நோக்கிய ஜன்னல்களைத் திறந்து வைக்கச் சொன்னார். சமவெளிகளின் மீது பார்வையைச் செலுத்தினாலும் முப்பாய்மரப் படகிலிருந்தபடி விடைபெற்றவர்களின் கூக்குரலைச் செவிகளிலும், பற்களிடையே குழாயைப் பொருத்தியபடி வலை விரித்த சிறுவனைக் கண்களிலும் உணர முடிந்தது.

பல்தஸாரேயின் கரங்கள் காய்ச்சலுற்றது போல் நடுங்கின. இதயத்துடிப்பைப் போல, ஆழமும் பிரித்தறிய முடியாததமுமான தன்மைகொண்ட, ஒரு மங்கலான வெள்ளி மணியோசையை அவரால் கேட்க முடிந்தது. வெகுதொலைவில் இருக்கும் ஒரு கிராமத்தில் ஒலிக்கின்ற அந்த மணியை இவரது குற்றமற்ற செவிகளில் சேர்க்கும்படி பல மைல் நிலங்களையும் ஆறுகளையும் கடக்கச் செய்த தெளிவான சாதகமான மாலைத் தென்றலுக்கு நன்றி. அந்தக் குரல் ஒரே சமயத்தில் தற்காலத்தியதாகவும் பழங்காலத்தியதாகவும் ஒலித்தது. இப்போது அவரது இதயமும் அந்த மணியோசையோடு இயைந்து ஒலிப்பது போல் இருந்தது. இடையிடையே அது அமைதியுற்ற போது அதை ஆழ்ந்து உள்ளிழுத்து, பின் பலவீனமான நீண்ட சுவாசமாக வெளியிட்டது. வாழ்க்கை முழுவதுமே எப்போது இப்படித் தொலைதூர மணியோசைகளைக் கேட்டாலும், பால்யகால நாட்களில் சமவெளிகளைக் கடந்து தன் அரண்மனையை நோக்கித் திரும்பும்போது உணர்ந்த காற்றின் இனிமையை நினைவுகூர்வார்.

அந்த நிமிடம் எல்லோரையும் அழைத்த மருத்துவர், “எல்லாம் முடிந்துவிட்டது!” என அறிவித்தார்.

நெருங்கிவிட்ட மரணத்தினால் மரத்துப் போயிருந்த தன் செவிகளால் கேட்கமுடியாத மணியோசையை இதயத்தால் கவனித்தபடி கண்களை மூடி பல்தஸாரே படுத்திருந்தார். வீட்டிற்குத் திரும்பிய அவரை நெற்றியில் முத்தமிட்டு, இரவில் கால்களைத் தேய்த்துச் சூடுபடுத்தி, படுக்கைக்கு அனுப்பி, உறங்கும் வரை உடனிருக்கிற அம்மாவை நினைவில் கண்டார். ராபின்சன் க்ரூஸோவை நினைத்துக்கொண்டார். பிற்காலத்தில் இவர் ஒரு சிறந்த இசைக்கலைஞனாவார் எனக் கணித்த ஆசிரியரையும் மறைத்துக்கொள்ள இயலாமல் அதற்குத் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்திய அன்னையையும் நினைத்துக்கொண்டார். அன்னையும் சகோதரியும் அவரிடம் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை நிஜமாக்குவதற்கு இனி நேரமில்லை. ஊணா மரத்தின்கீழ் தனக்குத் திருமணம் நிச்சயமான தினத்தையும் பின் அந்த நிச்சயம் முறிந்து போன தினத்தையும் நினைத்துக்கொண்டார். அன்று அவரது அன்னையால் மட்டுமே அவரை ஆறுதல்படுத்த முடிந்தது. தன் பாட்டியை முத்தமிடுவதாகவும் தன் முதல் வயலினைக் கையில் பற்றியிருப்பதாகவும் எண்ணிக்கொண்டார். ஒரு பிரகாசமான தொலைவில் சமவெளியை நோக்கித் திறந்திருக்கும் ஜன்னல் வழித்தெரியும் இனிமையும் துயரமும் நிறைந்த காட்சிகளைப் போல இவற்றைக் கண்டார்.

அவர் இக்காட்சிகளைக் கண்ட இரு நொடிகளுக்குள், அவரது நாடித்துடிப்பைச் சோதித்த மருத்துவர், “இதுதான் இறுதி!” என்றார்.

எழுந்துகொண்ட மருத்துவர் சொன்னார்.

“எல்லாம் முடிந்துவிட்டது!”

அப்போதுதான் வந்து சேர்ந்த பார்மாவின் தளபதியுடன் சேர்ந்து அலெக்ஸிஸும் அவனது அம்மாவும் ழான் காலியஸும் முழங்காலிட்டனர். திறந்திருந்த வாயிலில் அவரது பணியாட்கள் அழுதுகொண்டிருந்தனர். 

*

ஆங்கில மூலம்: The Death of Baldassare Silvande by Marcel Proust, From the book “Pleasures and Days”, Published by Alma Classics, 2014 Edition.

2 comments

A M KHAN July 30, 2021 - 1:22 pm

சிறந்த தெளிவான நடையில் மொழிபெயர்ப்பு… வாழ்த்துகள் சுபத்ரா அவர்களுக்கு.

Selvam kumar July 31, 2021 - 10:42 am

அருமையான கதையாடல்

Comments are closed.