தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய்
தினமும் நீ மனமே
மணி இரவு பதினொன்றரை கடந்தது. பெரிய சர்ச்சுக்குப் பக்கத்தில் இருக்கும் பொரி பட்டாணிக் கடைகளில் இருந்த ஒலிப்பெருக்கியில் பி.சுசீலா தேனைவிட மதுரமான குரலில் இயேசுவைத் துதித்துக்கொண்டிருந்தார். நான் அதைக் கேட்டுக்கொண்டே மிக கோபமாய் அமர்ந்திருந்தேன். சர்ச்சுக்கு நேரெதிரேயுள்ள தோமையார் இல்லத்தில்தான் தங்கியிருந்தோம். மிகவும் மோசமான காலகட்டம் அது. காலேஜ் முதலாம் ஆண்டு சேர்ந்திருந்த நேரம். வீட்டில் கடன் பிரச்சினை. வேளாங்கன்னிக்குக் குடும்பமாகப் போக முடியாத சூழல். பல வருடம் அப்படியே கழிய, மாமா தன் காசில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்துப் போக, கண்ணில் நீரோடு வேளாங்கன்னி மண்ணில் காலடி எடுத்து வைத்தோம். குடும்பமாக வேளாங்கன்னி சென்றால் அங்கே ‘சர்ச் ரூம்கள்’ என்றழைக்கப்படும் கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் தங்குவதுதான் பழக்கம். அதுவே மலிவும்கூட. அதுவொரு ஒரு சடங்கு மாதிரி. விடியற்காலையில் கிட்டத்தட்ட நான்கு மணிக்கு ரயில் நாகப்பட்டினத்தில் நிற்கும். அங்கிருந்து மினி பஸ் ஒன்றைப் பிடித்து வேளாங்கன்னி வந்துசேர்வதற்குச் சரியாக ஆறு மணி ஆகிவிடும். அந்த நேரத்திலும் கோவில் அறையை புக் செய்துவிட்டு அரக்கப் பறக்கக் குளித்துவிட்டு அறைக்கு வெளியே சாலை ஓரங்களில் வேளாங்கன்னியின் கிராமத்துப் பெண்கள் வரிசையாகப் போட்டிருக்கும் கடைகளில் காலை உணவு குடும்பத்தோடு சாப்பிட்டு முடிக்கப்படும்.
கொதிக்கக் கொதிக்க இட்லி, ஆப்பம், புட்டு, வடை என்று அப்படியொரு கண்கொள்ளாக் காட்சியை நான் தமிழகத்தில் வேறு எங்கும் கண்டதில்லை. இடம் கொஞ்சம் அசுத்தமாக இருந்தாலும் சுவையில் அடித்துக்கொள்ள முடியாது. அவ்வளவு அடுப்புச் சூட்டிலும் சிரித்துக்கொண்டே பரிமாறுவார்கள். பக்கத்திலேயே இன்னும் சில பெண்களின் கூடையில் இருந்து நித்திய மல்லிச்சரங்களின் வாசனை நாசியைத் துளைக்கும். கொஞ்சம் பணம் அதிகமாக இருந்துவிட்டால் சாலையோரக் கடைகளில் சாப்பிட விரும்பாதவர்கள் அந்தக் கடைக்கு மிக அருகில் இருக்கும் “திராவிடன்” ஹோட்டலுக்குச் செல்லுவதும் வழக்கம். திராவிடன் ஹோட்டல் மலையாளிகளுடையது. ஆனால் கேரளாவைப் போல் சுவை மிகுந்த உணவுகள் கிடைக்காது. மிக மோசமான ருசியில் இருக்கும் பதார்த்தங்களை வீண் பெருமைக்காக விழுங்குபவர்கள்தான் அங்கே அதிகம். ஏதாவதொரு இடத்தில் அரக்கப்பறக்கச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் அறைக்குச் சென்று காவி உடைகளை மாற்றிக்கொண்டு கடல் நோக்கிய பயணம் ஆரம்பமாகும். வேளாங்கன்னி பேராலயத் தரிசனத்திற்கு முன்பு கடல் தரிசனமே!
பேராலயத்தின் நேரெதிரே கடல். ஒரு காலத்தில் மக்கள் கூட்டத்தோடு கூட்டமாக கடலுக்குச் சென்று மூன்று முழுக்கு போட்ட பின்பு ஈரத்தோடு கோவிலுக்குப் பயணிப்பார்கள். இப்போதெல்லாம் அதற்கான வாய்ப்புகள் இல்லை. தண்ணீருக்குள் இறங்கி நீரை எடுத்து தலையில் தெளித்துக்கொள்வதோடு சரி. வேளாங்கன்னியின் கடல் மிகவும் ஆபத்தானது. அதில் இருக்கும் பாம்புகள், விஷ மீன்கள் கடித்து பலர் இறப்பது, ஆழமான கடலில் மூழ்கிவிடுவது என ஒரு மிகப்பெரிய பயத்தை உண்டாக்கி இருந்தது. ஒரு கடல் அதிக பக்தியுடன் ஜெபிக்கப்படுவதும் அஞ்சத்தக்கதாக இருப்பதும் நான் கண்ட வரையில் வேளாங்கன்னியில்தான்.
அங்கிருந்து மீண்டும் மக்கள் வெள்ளத்தில் ஆலயம் நோக்கி நகர்ந்துகொண்டே போகும் வழியில் “பொருத்தனை” கடைகளில் பொருத்தனை செய்வதற்கான சாமான்களை வாங்கிக்கொள்வார்கள். மூங்கிலால் பின்னப்பட்ட தட்டு, அதில் இரண்டாக உடைக்கப்பட்ட தேங்காய், ரோஜா- லில்லிப்பூ கலந்து கட்டிய மாலை, குடும்பத்தில் தலைக்கணக்கிற்கு ஏற்றாற்போல் மெழுகுவர்த்திகள் (வசதிக்கேற்ப மெழுகுவர்த்தியின் உடல்வாகும் நிறமும் மாறுபடும்), விளக்குத் திரி, எண்ணெய்க் குப்பி. பொருத்தனை செலுத்துபவர்களில் யாருக்காவது உடல் சுகவீனம் இருந்தாலோ, இல்லை சுகவீனம் இருந்து சரியாகிப் போயிருந்தாலோ, பாதிக்கப்பட்ட அங்கங்களின் வடிவில் எவெர்சில்வரில் செய்யப்பட்ட உடல் பாகங்கள் காணிக்கையாகச் செலுத்தப்படும். அந்த எவெர்சில்வர் தட்டைக் கையில் வாங்கும் போதே கமகமவென்று இருக்கும். அது என்ன வாசனை என்று இன்றுவரை என்னால் வரையறை செய்ய முடியவில்லை. அந்தத் தட்டில் இருந்துவரும் வாசம்தான் வேளாங்கன்னியின் வாசம். இதை எழுதிக்கொண்டிருக்கும் போதும் அந்த வாசம் நினைவைத் துளைக்கிறது. வாசனைதானே எல்லாம்?
வழிபாட்டுத் தளங்களில் இருக்கும் காட்சிகளைவிட அங்கிருந்து எழும் வாசம்தானே நமக்குப் பக்தி என்கிற உணர்வைக் கொடுக்கிறது? அதுதானே மனதை அமைதியாக்கும் ஆற்றல்கொண்டது? கொசப்பேட்டையில் உள்ள கந்தசாமி கோயிலுக்குள் போகும்போது மஞ்சள், குங்குமம், தீபாராதனையின் வாசம் போன்றவை பக்தி உணர்வுகளைக் கிளர்த்தும். கோவிலின் கருங்கல் சுவரின் மேலே எண்ணெய் ஊறி இன்னொரு விதமான வாசம் வரும். வியாழக்கிழமைப் பின்னிரவுகளில் மவுண்ட்ரோடு தர்காவிற்குள் நுழையும்போதே பிர்தவுஸ் அத்தர், மஜ்முவா அத்தர், கஸ்தூரி ரோஜா ஊதுபத்தி, பிரார்த்தனைக்காகச் செலுத்தப்பட்ட ரோஜா மலர்கள், சந்தனக்கூடு விழாவில் பயன்படுத்தப்பட்டு பக்தர்களுக்கு அளிக்கப்படும் சந்தனம்- இவைகளின் கலப்பு வாசனை வரும். வேறு எங்கும் இந்த வாசனையை உணர முடியாது. வேளாங்கன்னி என்றால் கடலும் பொருத்தனைத் தட்டும் சேர்ந்த வாசனை.
அப்படியே ஒரு பத்து அடி முன்னோக்கி எடுத்து வைத்தால் கிராமத்தார் தென்னைப் பிள்ளைகள் விற்றுக்கொண்டிருப்பார்கள். அதையும் வாங்கிக்கொண்டு ஆலயம் நோக்கிப் போகும் நீண்ட வரிசையில் இணைந்துகொள்ளலாம். தென்னம்பிள்ளை என்பது மீளுருவாக்கத்தின் அடையாளம். தேரவாதப் பௌத்தத்தின் முக்கிய அங்கம். தெற்காசியாவின் முக்கியப் பௌத்தத் தளங்களில் தென்னம்பிள்ளை படைத்து வழிபடும் வழக்கம் இன்னும் இருக்கிறது. நாகப்பட்டணத்திற்கு மிக அருகில் உள்ளதால் வேளாங்கன்னியின் பௌத்தத் தொடர்பு மிகப் பலமானது. நாகப்பட்டினத்தில் நாகநாடு என அந்தக் காலத்தில் அழைக்கப்பெற்ற “இலங்கையில்” இருந்து வந்த தேரவதப் பௌத்தப் பிட்சுகள் ஏழாம் நூற்றாண்டில் கட்டிய புத்த விகாரங்களைப் பற்றி அணிமங்கலம் செப்பேடுகளில் குலோத்துங்கச் சோழன் பதிந்துள்ளார். பெண் பிக்குணிகள் ஆசிரியர்களாகவும் மருத்துவர்களாகவும் சிறந்து விளங்கி மறைந்த பின்னர் அவர்கள் சிறுதெய்வங்களாக வழிபடப்பட்டனர். அவர்களுள் ஒருவரது பெயரே வேளாங்கன்னி. அவரின் பெயரே அவ்வூருக்கு இருப்பதாக அயோத்திதாசர் குறிப்பிடுகிறார்.
ஆக, கையில் குழந்தையுடன் காட்சி கொடுப்பதாகச் சொல்லப்படும் மாதாவுக்கு அங்கே முதன்முதலில் குடிசைக் கோவில் ஒன்றைக் கட்டி, நோயில் இருந்து சுகத்தைக் கொடுப்பதால் “ஆரோக்கிய மாதாவாக” அருளப்பட்டு, பின்னே பௌத்தப் பெயரிலேயே “வேளாங்கன்னி மாதா” என்று அழைக்கப்படுகிறார். அவரும் சிறுதெய்வமாகிறார். இதையே அந்த ஆலயத்தில் பௌத்த வழிபாடுகள் நிறைந்து இருப்பதற்கான காரணமாக நான் பார்க்கிறேன். உலகெங்கும் எந்த இடத்தில் காட்சி கொடுத்ததாகச் சொல்கிறார்களோ அவ்வூரின் பெயர்களையே அந்த மாதாவுக்குச் சூட்டிவிடுகிறார்கள். குறிப்பாக, லூர்து மாதா, பாத்திமா மாதா போன்றவை. வேளாங்கன்னி மாதாவைப் பொறுத்தவரை அவர் சிறுதெய்வம், நாட்டார் தெய்வம், பெண் தெய்வம் என்று பல பரிமாணங்களில் மக்களால் அணுகப்படுகிறார். வேளாங்கன்னி மாதா ஆலயம் பதினாறாம் நூற்றாண்டில் இருந்தே இருக்கிறது. ஏற்கனவே பெண் தெய்வ வழிபாடு, தாய் தெய்வ வழிபாடு முறைகளைக் கொண்ட தமிழ்ச் சமூகத்திற்கு அவரை ஏற்றுக்கொள்வது மிக எளிதாகிறது. இப்படியே வரலாறைப் பேசிக்கொண்டே இருக்கலாம். அதற்கான நேரமும் இடமும் இது இல்லை என்பதனால் இதை இங்கேயே முடித்துக்கொண்டு பொருத்தனைத் தட்டு, தென்னம்பிள்ளை சகிதம் நாம் ஆலயத்தை நோக்கியும் நான் சொல்லப்போகும் கதைக்குள்ளும் பயணப்படுவோம்.
இதையெல்லாம் வாங்கி கையில் வைத்துக்கொண்டு பார்த்தால் காலை கிட்டத்தட்ட பத்து மணி ஆகியிருக்கும். வேளாங்கன்னியைப் பொறுத்தவரை விடியற்காலை எவ்வளவு ஏகாந்தமானதோ அதற்கு அப்படியே தலைகீழானது பகல் வேளை. காலையிலேயே வெயில் சுட்டெரிக்கும். அதுமட்டுமல்ல, வேளாங்கன்னியின் வெயில் எல்லா மாதங்களிலும் கோடையைப் போலவே இருக்கும். சென்னையின் வெயிலைவிட மோசமானது வேளாங்கன்னியின் வெயில். என் அம்மா வீட்டிலிருந்து கிளம்பும்போதே ஒரு குடையைப் பேக் செய்துகொள்வார். தெய்வ தரிசனத்திற்குக் குடையை எடுத்துக்கொண்டு போவதெல்லாம் கொஞ்சம் விசித்திரம்தான். ஆனால் பாருங்கள், என்னதான் நாம் முன்னெச்சரிக்கையாக நடந்துகொண்டாலும் நம்மை மீறி சில விஷயங்கள் இயங்கவே செய்யும்.
குறிப்பாக, அவ்வளவு மக்கள் வெள்ளத்தில் குடை பிடித்து நடப்பதென்பது மிகவும் கடினமானது. குடை மற்றவர்கள் கண்ணைக் குத்திவிட்டால் அவ்வளவுதான். குடை இருந்தாலும் உபயோகம் இல்லை. அவ்வளவு வெயிலையும் தாங்கிக்கொண்டு அத்தனை விசுவாசிகளும் ஏதோ ஒரு நம்பிக்கையின்பால் ஆலயத்தை நோக்கி மெதுவாக, குடும்பம் குடும்பமாக நடப்பதைப் பார்க்கும்போது விசித்திரமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். இதில் முக்கால்வாசி பேர் காவியுடை அணிந்து தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்த வந்தவர்கள். மாதா என்றாலே காவிதான். உலகம் முழுவதும் நீல நிறமே மாதாவைக் குறிக்கும் நிறமாகக் கருதப்பட்டாலும் இந்தியாவில் காவியே பிரதானம். அதுவும் ஆரோக்கிய மாதாவுக்கு வேண்டிக்கொண்டு ஆலயங்களுக்குக் காவியுடை அணிந்துசெல்வது கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் மிக முக்கியப் பண்பாடுகளில் ஒன்று. இன்று இந்தியாவெங்கும் காவி ஹிந்துத்துவத்தின் முகமாகப் பயமுறுத்தும் காலகட்டத்தில் பௌத்த அடையாளமான காவியை கிறிஸ்தவர்கள் அணிந்துகொண்டிருப்பது இந்த நாட்டின் மிகப்பெரிய முரண்களின் ஒன்று. கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை காவி என்பது வேண்டுதலை நிறைவேற்றும் விஷயம் மட்டுமல்ல. யாரையாவது பழிதீர்க்க வேண்டும், பாடம் புகட்ட வேண்டும் என்றாலும் காவிதான். “நான் காவி போடறேன், அதுக்கு அப்புறம் அவ என்ன ஆவுறான்னு மட்டும் பாரு!” என்று ஆக்ரோஷத்தோடு கொண்டையை முடிந்துகொள்பவர்கள் ஏராளம். என் அப்பா ஒரு அளவுக்கு மேல் போய் அம்மாவிடம் சண்டை போடும்போதெல்லாம் சொல்லுவார். “நான் எல்லாம் காவி போடுறவன், பொய் சொல்ல மாட்டேன்!!” காவிக்கு மட்டும் வாய் இருந்தால் அடித்துக்கொண்டு அழும்.
இப்படி வரிசையாக வேண்டுதல்களோடு நிற்கும் காவிகளைக் கடந்து, வியர்வை உடம்பெங்கும் தாரை தாரையாக ஊற்ற, உள்ளே நுழைந்ததும் அப்படியோர் ஆசுவாசம் பிறக்கும். அந்த உணர்வை வார்த்தைகளில் விவரிப்பது மிகவும் கடினம். வெயில் ஏற்படுத்திய அத்தனை அழற்சியும் உள்ளே நுழைந்ததும், சூரியனின் முதல் கதிர் மேலே பட்ட நொடி காணாமல் போன பனித்துளி போல, இருந்த இடம் தெரியாமல் போகும். அதற்கு முதல் காரணம் ஆலயம் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதம். காதிக் (Gothic) முறைப்படி கட்டப்பட்ட தேவாலயங்கள் உள்ளுக்குள்ளே குளிர்ச்சியாகவும் நல்ல காற்று வசதியுடனும் அமைந்திருக்கும். அவைகளின் கட்டிட அமைப்பின்படி வண்ணக் கண்ணாடி ஜன்னல்களின் வழியாக ஒளி உருமாறி ஊடுருவுவது, உயர்ந்து நிற்கும் கூரை, வளைவுகள் இவை எல்லாமும் சேர்ந்து சொர்க்கத்தை மனிதனுக்கு உருவாக்கம் செய்ய வேண்டும் என்பதே காதிக் கட்டிடக்கலையின் தொழில்நுட்பமோ என வியக்க வைக்கும். ஆகவே, பேராலயத்தின் உள்ளே நுழைந்ததும் அத்தனை களைப்பும் உடல் வலியும் வெக்கையும் மறந்து ஒருவித அமைதியும் நிம்மதியும் சூழ்ந்துகொள்ளும் ஆனால் அதைவிடப் பெரிய விஷயம் ஒன்றுண்டு. அதுதான் வேளாங்கன்னி மாதாவின் சுருவம். அந்தச் சுருவத்தைக் காணும்போது நம் மூளைக்குள் நடக்கும் வேதியல் மாற்றத்தை நான் எப்படி விவரிப்பேன்! எவ்வளவு ஆனந்தமான காட்சி அது!
நான் எனது கிறிஸ்தவப் பின்னணியில் இருந்து இதைச் சொல்லவில்லை. கிறிஸ்தவர்கள் அல்லாத யாராக இருந்தாலும், ஏன் கடவுள் நம்பிக்கையே இல்லாத வறட்டு நாத்திகராக இருந்தாலும்கூட, ஒரு நொடி அந்தச் சுருவம் உங்கள் மனதை நெகிழ வைத்தே தீரும். தங்கநிறப் புடவையில் கையில் குழந்தை இயேசுவோடு தாய்மை பொங்க அந்த அம்மா காட்சி தரும் அழகு இருக்கிறதே… அதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை…
“எத்தனை கோடிப் பாடல்களாலும் உன் அழகைச் சொல்ல முடியாது” என்கிற மாதா பாடல்கூட மிகப் பிரசித்தம். அது அந்த மாதா அணிந்திருக்கும் புடவையோ நகைகளோ அவர் தலையில் இருக்கும் விண்மீன் கிரிடமோ இல்லை. அதையெல்லாம் தாண்டிய வேறு ஒன்று. தாய்மை.
வேளாங்கன்னி மாதாவின் முகத்தில் ஜொலிக்கும் அந்தத் தாய்மைதான் ஆண்டு முழுவதும் மக்களை அங்கே வர வைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அங்கே வரும் இலட்சக்கணக்கான மக்களில் பாதி பேர் ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள்தான். வடசென்னையில் வேளாங்கன்னி மாதா சுருவம் இல்லாத இடமே இல்லை என்று சொல்லிவிடலாம். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எல்லா ஹிந்து மக்களின் வீட்டிலும் மாதா படமோ சிறு சுருவமோ இருக்கும். சர்வ ரோக நிவாரணியாகக் கருதப்படும் மாதா எண்ணெய் இருக்கும். வயிறு வலியா மாதா எண்ணெய் தடவு, ஜுரமா மாதா எண்ணெய் தடவு, பேய் பிடித்திருக்கிறதா மாதா எண்ணெய் தடவு என்று அசத்துவார்கள். அவர்கள் மாதாவை வேற்று மதக் கடவுளாகப் பார்ப்பதில்லை. தமிழகத்தின் எல்லா இடங்களில் இருந்தும் வேளாங்கன்னிக்கு வரும் பிற மதத்தினர் அதிகம்.
சமீபத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயத்தை இங்கே சொல்லியாக வேண்டும். இரண்டு மாதங்களுக்கு முன்பு, குமுதத்தில் என்னுடைய கட்டுரயைப் படித்துவிட்டு என்னுடைய அலைபேசி எண்ணை வாங்கி என்னுடன் பேச வேண்டும் என்று ஹிந்துத்துவ அரசியல் பின்னணி கொண்ட பிரபலம் ஒருவர் அழைத்திருந்தார். பெண்ணியம் பற்றியெல்லாம் புகழ்ந்து பேசினாலும் அவர் ஒரு பக்கா ஆர்.எஸ்.எஸ் சிந்தாந்தவாதி என்று எனக்குத் தெரியும். ஆகவே அவரோடு சரியாகப் பேசவில்லை. அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அழைப்பைத் துண்டித்த அடுத்த நொடி வாட்ஸப்பில் இரண்டு படங்களை அனுப்பி வைத்திருந்தார். அதில் அவர் சமீபத்தில் வேளாங்கன்னியில் பிரார்த்தனை செய்துவிட்டு குடும்பத்தோடு எடுத்த புகைப்படம் இருந்தது. இதையெல்லாம் என்னவென்று சொல்ல? பலரின் அரசியலும் பக்தியும் இப்படித்தான் இருக்கிறது. மனதிற்குள் சிரித்துக்கொண்டேன். இப்படியாக, பாவிகள் பலரை மாதா மன்னித்து இரட்சிப்பதாக நம்பிக்கை .
தெய்வம் என்று கருதப்படும் ஒருவர் கையில் குழந்தையோடு இருப்பது யாருக்குத்தான் பிடிக்காது? மாதாவைப் பலரும் விரும்புவதற்கான காரணமாக நான் இதைப் பார்க்கிறேன். மாதாவைப் பார்க்கும்போது கிடைக்கும் ஆறுதல்தான் இங்கே பலருக்கு தேவைப்படுகிறது. அந்த ஆறுதல் கிடைத்ததும் அவர்கள் மனம் நெகிழ்ந்து அது கண்களில் ஊற்றாகப் பெருக்கெடுக்கிறது. பேராலயத்தின் உள்ளே சுற்றிப் பார்த்தால் ஆங்காங்கே விசும்பல் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும். இதுவே அவர்களின் ஜெபம். அழுது முடித்ததும் உடைத்து வைத்த தேங்காய்களில் எண்ணெய் ஊற்றி அதில் திரி போட்டு விளக்கு போல் ஏற்றி அதை மாதாவிற்குப் படைப்பார்கள். பின்னர் அதோடு பொருத்தனைத் தட்டையும் தென்னம்பிள்ளையையும் அங்கே இருப்பவர்களிடம் கொடுத்து படைத்துவிட்டு தேங்காயையும் மாலையையும் வாங்கிக்கொள்வார்கள். அந்தத் தேங்காயை வீடு வரை சுமந்துகொண்டு போய், நீண்ட பயணத்தினால் கிட்டத்தட்ட கொப்பரையாக மாறியதை, துண்டு போட்டு வேளாங்கன்னியில் வாங்கிய பொறி கடலையோடு கலந்து பக்கத்துக்கு வீடுகளுக்கு கொடுத்துவிடுவார்கள். அந்த மாலை சாமி ஸ்டாண்ட்டில் மாட்டப்பட்டு அது அடுத்து அவர்கள் வேளாங்கன்னி போகும் வரை காய்ந்து ஒருவித வாசத்தோடு அங்கேயே இருக்கும். இதுதான் பொருத்தனையின் துவக்கமும் முடிவும்.
ஜெபங்களுக்குப் பின்னே வெளியே வந்து சின்ன வேளாங்கன்னி ஆலயத்திற்குப் போகும் வழியில் ஒரு இடம் இருக்கும். அங்கேதான் அந்த ஊரின் பெண்கள் வரிசையாகப் பாத்திரங்களை வாடகைக்கு வைத்திருப்பார்கள். காலை உணவு மட்டும்தான் ஹோட்டலில், பக்த கோடிகளைப் பொறுத்தவரை வேளாங்கன்னிக்குச் சென்றால் சமைத்துச் சாப்பிட வேண்டும். அது ஒரு சாங்கியமாகவே பின்பற்றப்பட்டது. பெரிய பெரிய அலுமினியப் பாத்திரங்கள், ஸ்டவ், கரண்டிகள், தட்டுகள் என்று வாடகைக்குக் கிடைக்கும். அதை அங்கேயே வைத்தும் சமைப்பார்கள், இல்லை என்றால் தாங்கள் தங்கியிருக்கும் அறைகளின் வாசலில் வைத்தும் சமைப்பார்கள். இவர்கள் பாத்திரம் வாங்குவதற்குள் ஆண்கள் கடல் வரை சென்று மீன், இறால், நண்டு போன்றவைகளை வாங்கிருவார்கள். வடசென்னைக்காரர்கள் வேளாங்கன்னிக்குப் போவது இரண்டு விஷயத்திற்கு- ஒன்று மாதாவைப்பார்க்க, இன்னொன்று சலிக்கச் சலிக்க மீன் சாப்பிட! வடசென்னையில் கிடைக்காத மீனா என்று கேட்கலாம். அங்கே எத்தனை வகையான மீன்கள் கிடைத்தாலும் வேளாங்கன்னி மீன் போல் வருமா என்று கேட்பார்கள். வேளாங்கன்னியில் கிடைக்கும் “பாம்பே டக்” கருவாடு வகைக்கு கிராக்கி அதிகம். பொரி கடலை, தேங்காய், ஹல்வாவோடு வீடு திரும்பும் பைகளில் கருவாடு கட்டாயம் இருக்கும். சில குடும்பங்களில் பாத்திரம் வாடகை எடுப்பதோடு அதை வாடகைக்கு விடும் பெண்களிடமே சமைத்துக் கொடுத்துவிடச் சொல்லுவதும் உண்டு. எங்கள் குடும்பத்திற்கு வேளாங்கன்னியைச் சேர்ந்த பிலோமினா என்கிற அம்மையார் சமைத்துக் கொடுப்பார். என்னதான் வடசென்னை மீன்குழம்பின் ருசியை அடித்துக்கொள்ள முடியாது என்றாலும் வேளாங்கன்னி ஊர்ப் பெண்களுடைய மீன் குழம்பின் ருசி அலாதியானது. ஆயிரம் சொன்னாலும் ஊர்நாட்டுக் குழம்புகள் ருசி தனி ருசிதான்.
அன்றைக்கும் அப்படித்தான் பிலோமினா அம்மையாரிடம் சமைக்கச் சொல்லும்போது மதியம் பனிரெண்டு மணி. மீன் குழம்பு, மீன் வறுவல், சோறு, ரசம் என்று அவர் சமைத்துக்கொண்டு வர மணி மூன்றை எட்டியது. வந்த வேகத்தில் பசியின் விளிம்பிற்குச் சென்ற வயிறுகள் மீன் குழம்பைச் சட்டி தேயும் வரை சுரண்டி வைத்தன. திடீரென்று மழை கொட்டத் தொடங்கியது. மழைவிட்ட கொஞ்ச நேரத்தில் சின்ன வேளாங்கன்னிக்குச் சென்றுவர முடிவானது. சின்ன வேளாங்கன்னி என்பது பேராலயத்திற்குப் பக்கத்தில் நேரெதிரே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இன்னொரு சிறு ஆலயம். மாதா காட்சி தந்த குளமொன்று அங்கேயுள்ளது. முடிந்தவரை பேராலயத்தில் இருந்து அந்தக் குளம் வரை முட்டி போட்டுக்கொண்டே போவது இன்னொரு சாங்கியம். அப்படிச் செல்ல வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. அது பக்தர்களே பழக்கிக்கொண்ட விசித்திரமான வழக்கம். கடவுள் என்ற ஒன்று இருந்தால் அது நிச்சயம் இவ்வளவு சாடிஸ்ட் ஆக இருக்காது. ஆனால் மனிதர்கள் அப்படியல்ல. தன்னைத்தானே அறுத்துக்கொண்டும் குத்திக்கொண்டும் கடவுளை மிரட்டி, எமோஷனல் டார்ச்சர் செய்து, பெறுவதைப் பெற்றுவிட வேண்டும் என்று நினைக்கும் பாவப்பட்ட சமூக விலங்குகள். நான் இதுவரை அப்படிச் செய்ததில்லை. என் அப்பா செய்திருக்கிறார். அவர் ஒரு வன்முறை பக்தியாளர்.
முட்டி போட்டுக்கொண்டு பிரார்த்திப்பவர்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே ஆலயத்திற்குச் சென்று, சாமி கும்பிட்டு, குளத்தை எட்டிப்பார்த்து, மாதா தீர்த்தத்தைக் குப்பிகளில் அடைத்துக்கொண்டு கடற்கரையை நோக்கிப் பயணப்பட வேண்டும். இதுவும் சாங்கியம். கடற்கரையில் சுக்கு மல்லி காபி குடித்துவிட்டு அப்படியே கடைத்தெருக்களில் ஒரு உலா. வடசென்னையில் கிடைக்காத எவர்சில்வர் பாத்திரங்கள், டீ கப்புகள், துடைப்பக்கட்டை, நைட்டி என்று வாங்கிக்கொண்டு குடும்பத்தோடு குடும்பமாக கூட்டத்தில் நடப்பது இன்னொரு சாங்கியம். வேளாங்கன்னியில் என்றுமே கூட்டத்திற்குக் குறைவிருக்காது. எந்த மாதத்தில் எந்த நேரத்தில் போனாலும் ஜெக ஜெக என்றே இருக்கும். இதற்கு முக்கியக் காரணம் அங்கே அதிகமாக வரும் சிலோன் கிறிஸ்தவர்கள், மலையாளிகள், கோவாக்காரர்கள், பம்பாய்க்காரர்கள். வேளாங்கன்னியில் பெரும்பாலான ஹோட்டல், லாட்ஜுகளின் முதலாளிகள் மலையாளிகள்தான். எந்தக் காலகட்டத்தில் இவர்கள் இங்கு வந்துசேர்ந்தார்கள் என்று சரியாகக் கணிக்க முடியவில்லை. மேலும் கொங்கணி பேசும் இந்தியாவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வருடத்தில் ஒருமுறைக்கு மேல் இங்கே வருவது வழக்கம். அதனால் இங்கே கொங்கணியும் மலையாளமும் சிங்களமும் கேட்டுக்கொண்டே இருக்கும். நான் பார்த்தவரையில் கொங்கணி மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் நிறைய ஒற்றுமையுண்டு. அவர்கள் பேசும் மொழியின் சப்தம், உடை, உணவு, வாழ்வியல் முறை எனப் பலவற்றில் ஒற்றுமையைக் காணலாம். பலதரப்பட்ட இன, மொழி குழுக்கள் இங்கே வருவதினால் இந்தக் கோவிலின் பூசை தமிழ், ஆங்கிலம், லத்தீன், மலையாளம், கன்னடம், தெலுங்கு, கொங்கணி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடைபெறும்.
இதில் மலையாளப் பூசையைக் கேட்பதற்கே திவ்யமாய் இருக்கும். என்னைப் பொறுத்தவரை உண்மையிலேயே மலையாளம்தான் தேவபாஷை. இப்படி ஏதோ ஒரு பாஷயில் நடக்கும் பூசையை ஒலிப்பெருக்கியில் காதில் வாங்கிக்கொண்டே நடந்துகொண்டிருக்கும் வேளையில் திடீரென்று மீண்டும் மழைவர அறைக்குத் திரும்பினோம். குழம்பும் வறுத்த மீனும் பகலிலேயே தீர்ந்துவிட்டதால் இராத்திரிக்கு ரசம் சாதம் மட்டும் என்று முடிவானது. என்னால் மட்டும் இதை ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. அதெப்படி வேளாங்கன்னி வந்துவிட்டு ரசம் சோறு சாப்பிடுவது? அது அநியாயம் இல்லையா? அதிலும் வழி நெடுகப் பார்த்த சாப்பாட்டுக் கடைகளின் விதவிதமான வாசங்கள் மூளையை வந்து சுரண்டிக்கொண்டிருந்தன. அதனால்தான் சுசீலாவின் குரலைக்கூட இரசிக்க முடியாத கோபத்தில் இருந்தேன். எல்லோரும் சாப்பிட்டு முடித்து தூங்கவே போய்விட்டார்கள். நான் மட்டும் பசியில் வயிறு காய ஒரு ஓரத்தில் அமர்ந்து விசும்பிக்கொண்டிருந்தேன். நீண்ட நேரமாக என்னைப் பார்த்துக்கொண்டிருந்த என் அம்மா பக்கத்தில் வந்தார். யாருக்கும் தெரியாமல் கண்ணடித்து வெளியே வரச்சொன்னார். வெளியே போனதும் “செருப்பு போட்டுனு வா” என்று சொல்லிவிட்டு படக்கென்று கையைப் பிடித்து கடைத்தெரு வழியாக இழுத்துச் சென்றார். மணி இரவு பதினொன்று. மழை விட்டிருந்தது. எல்லா உணவகங்களும் மூடி இருந்தன. ஆனால் வேளாங்கன்னியிலேயே பிரபலமான “சந்திரா” ஹோட்டல் வாசலில் ஒளியின் சிறு கீற்று தெரிந்தது. கடகடவென்று அங்கே போனோம்.
“ஏதாவது சாப்பிட இருக்காங்க?”
“இல்லம்மா… இப்போதான் க்ளோஸ் பண்ணோம்.”
“ஐயோ… ஏதாச்சும் இருக்கா பாருங்களேன், கொழந்த சாப்டல.”
முடியாது என்று கைவிரித்துவிட்ட பல இடங்களில் விட்டுக்கொடுக்காமல் கேட்டு பல விஷயங்களைப் பெறுவதில் என் அம்மாவை அடித்துக்கொள்ள முடியாது. குடும்பத்திற்காக என்று வரும்போது யாரையும் கெஞ்சுவதற்கு அவர்கள் வெட்கப்பட மாட்டார்கள்.
உடனே உள்ளே இருந்து இன்னொரு குரல் வந்தது, “சிக்கன் பிரைட் ரைஸ்தான் செஞ்சு குடுக்க முடியும். வேணுமா?”
அம்மா காசு கொடுக்க, சுடச்சுட தயாரானது சிக்கன் பிரைட் ரைஸ். அதை வாங்கிக்கொண்டு அறைக்குச் செல்ல முடியாது, அங்கே சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். எத்தனை பேருக்கு இதைப் பகிர்ந்து கொடுப்பது? அமர்ந்து சாப்பிடுவதற்கு இடம் தேட ஆரம்பித்தோம். ஆலயத்தைச் சுற்றி மக்கள் ஓய்வெடுக்கும் இடங்கள் எல்லாம் மழையினால் ஈரமாக இருந்தன. சுற்றிலும் ஒரு ஜீவன்கூட கண்ணுக்குத் தெரியவில்லை. மழைக்குப் பயந்து வேளாங்கன்னியே காலியாக இருந்தது. திடீரென்று அம்மாவுக்கு ஏதோ தோன்ற ஆலயத்தின் நுழைவாயில் படிக்கட்டுகளைப் போய்ப் பார்த்தார். அங்கே மழையின் சுவடே இல்லாமல் காய்ந்து சுத்தமாக இருந்தது. ஆயிரக்கணக்கானோர் கடந்து ஆலயத்திற்குள் செல்லும் படிக்கட்டுகள் அவை. அப்பொழுதுதான் சுத்தம் செய்திருந்தார்கள். பசியில் பொட்டலத்தைப் படிக்கட்டில் வைத்துப் பிரித்து உணவை வாயில் வைத்த போது மணியடித்தது. நேரம் சரியாகப் பனிரெண்டு மணி. உணவின் ருசியை அசைபோட்டுக்கொண்டே இடதுபுறமாகத் திரும்பிப் பார்த்தபோது கோவில் கதவுகள் அடைக்கப்படாமல் அப்படியே இருந்தது கண்ணில்பட்டது. எங்களுக்கு எதிரே இருந்த மாதா நான் சாப்பிடுவதைத் தாய்மையோடு பார்ப்பதுபோல் தோன்றியது. எதிரே என் அம்மா அதே புன்னகையுடன். தூரத்தில் பொரி கடையின் ஒலிப்பெருக்கி, “வங்கக் கடலில் ஒரு முத்தெடுத்து..” என்று பாடத் தொடங்கியது.
9 comments
ரொம்ப அருமை!! வேளாங்கண்ணி எனக்கு கொஞ்சம் பக்கமான ஊர்தான். அந்த ஊர் வெயில் பத்தி சொன்னது அருமையான அவதானிப்பு. தாங்கவே முடியாது.
அழகாக எழுதி இருக்கீங்க. வேளாங்கன்னி நினைவுகளும் , நிகழ்வுகளும் நெஞ்சில் இரண்டற கலந்தவை.
வேளாங்கண்ணி மாதா கோயில்-பௌத்த தொடர்பு -சிறு தெய்வம் வழிபாடு வழியாக ஏழாம் நூற்றாண்டு தொடர்பு.
காவி நிறம், நீல நிறம் புதிய புரிதல்.
/தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்/ லூத்தரன் சபையில் பாடிய ஞாபகம். “திராவிடன்” ஹோட்டல் சுவை நல்ல இருக்காதா? இது வேற யாருக்காவது தெரியுமா?
ஏன் பக்கத்துல உட்கார்ந்து சொல்றது மாதிரி இருந்தது உங்க வார்த்தைகள் ரொம்ப அழகு மனசு ரொம்ப நிம்மதியா இருக்கிறது
நன்றி
வாசித்து முடிக்கும் போது என் கண்களில் நீர் ததும்பி வழிகிறது…..ஆம் மாதா என்றால் தாய்மை, முழு கட்டுரையும் அருமை, கட்டி போட்டு வாசிக்க செய்தது..
திராவிடன் ஹோட்டல் தமிழருடையது தான்.சொல்லப் போனால் என் நண்பரின் மாமா ஓட்டல் அது..
அருமையான கட்டுரை. எத்தனை விவரிப்புகள்!!
நான் திருச்சியில் இருந்தபோது அடிக்கடி வேளாங்கண்ணி சென்றுவருவோம் . ஆரோக்கிய அன்னையின் முகத்தை தரிசிக்கும்போதே ஒரு நிம்மதியை என் மனசுக்குள்ள உணர்வேன்.
Most touching line in this write up is ” edhire en amma adhe punnagaiyudan”
மாதா சோறு
தந்த மாதா நம் இராஜ மாதா…
Comments are closed.