ஓர் அழகியல் மரபின் ஆரம்பகாலப் படைப்புகளைப் படிப்பது எப்போதும் ஆர்வமூட்டுவது. வளர்ந்த மூங்கிலைப் பின்சென்று குருத்து நிலையில் பார்ப்பதைப் போன்ற உணர்வு அது. எந்தக் கணு எவ்வாறு முளைத்து வளர்ச்சி பெறப்போகிறது என்கிற சாத்தியத்தை அதில் காணும்போது ஏற்படும் கிளர்ச்சி அலாதியானது.
மேலும் அவ்வகையான அழகியல் எழுந்து வருவதற்கான தேவையும் எவ்வகையில் அது முந்தைய வடிவிலிருந்து வேறுபட எத்தனிக்கிறது என்பதை அவதானிப்பதும் ஒரு இலக்கிய வாசகர் அம்மரபைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானது.
பால்சாக்கின் படைப்புகள் இலக்கியத்தில் யதார்த்தவாதத்தைத் தொடங்கி வைத்தவை. யதார்த்தவாத எழுத்தின் முன்னோடி என்றே உலக இலக்கியத்தில் அவர் அறியப்படுகிறார். அவருக்கு முன்பே ஸ்டெந்தாலின் ஆக்கத்தில் யதார்த்தவாதத் தடயங்கள் தென்பட்டாலும் இவரின் படைப்பில்தான் அது சரியான கலைவடிவத்தில் வெளிப்பட்டிருக்கிறது. அவரின் மிகச்சிறந்த நாவலான “தந்தை கோரியோ”வை முன்வைத்து இவ்வம்சங்கள் குறித்து நாம் யோசித்துப் பார்க்கலாம்.
நாவல் வக்கேர் நடத்தும் ஒரு தங்குவிடுதியில் ஆரம்பிக்கிறது. விடுதியையும் அதைச் சுற்றியுள்ள பாரிஸின் புராதானமான இடங்களையும் விரிவாகச் சித்தரிக்கிறது. பாந்தியன் போன்ற பண்பாட்டுப் பெருமித நினைவிடங்களுக்கு நடுவில் இருக்கும் இடுங்கிய தெருக்களையும் அவற்றின் துர்நாற்றத்தையும் சிறுசிறு தகவல்களால் விவரிக்கிறது.
இவ்வகையான தொடக்கம் இப்போது திரும்பிப் பார்க்கையில் யதார்த்தவாத எழுத்தின் மிக முக்கிய அம்சமாக மாறியுள்ளதை உணர்கிறோம். அது தன்னைச் சுற்றியிருக்கும் சமூகத்தின் நேரடித் தாக்கத்திலிருந்து உருவாகி வந்திருக்கிறது. அதை அப்பட்டமாக ஆபரணங்களற்ற நேரடித் தகவல்களால் காட்சிப்படுத்துகிறது. முந்தைய கற்பனாவாத எழுத்துகளைப் போல அச்சித்தரிப்பை உருவகங்களாலும் வர்ணனைகளாலும் அந்நியப்படுத்துவதில்லை. அதன் நேரடியான வேகத்தையே கலையாக முன்வைக்கிறது.
தமிழில் இதற்கிணையான தருணத்தைக் குறிப்பிட வேண்டுமென்றால் புதுமைப்பித்தனின் “பொன்னகரம்” சிறுகதையைச் சொல்லலாம். அதற்குமுன் எழுதப்பட்ட கற்பனாவாதப் படைப்புகளிலிருந்து முற்றாக வேறுபட்டு நேரடியாகவும் அப்பட்டமாகவும் சுற்றியிருந்த அவலத்தைச் சொன்ன படைப்பு. (ஆனால் நமக்குத் தனியாகச் செவ்வியல் யதார்த்தவாதக் காலகட்டம் என ஒன்று இல்லை. கற்பனாவாத எழுத்திலிருந்து நேரடியாக நவீனத்துவத்திற்குள் நாம் நுழைந்துவிட்டோம். நவீனத்துவத்தின் ஒரு பகுதியாகவே நமக்கு யதார்த்தவாத எழுத்து இருந்தது.)
பால்சாக் அந்த ஆழ்ந்த கசப்பும் எள்ளலும் நிறைந்த நிலையில் இருந்துகொண்டுதான் நாவலை மேலே கொண்டுசெல்கிறார். இந்தக் கசப்பின் வீரியம் சாதாரணமானது அல்ல. அதற்கு நாவல் எழுதப்பட்ட காலத்தைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. நெப்போலியன் வீழ்ச்சியடைந்த சில வருடங்களுக்குப் பின் நாவல் நிகழ்கிறது. தொடர்ந்த ஆட்சிமாற்றங்களும் உள்நாட்டுக் கலவரங்களும் நடந்துகொண்டிருந்த காலம். அரசுக்கு நெருக்கமானவர்களைத் தவிர மற்ற அனைவரும் மிகத் தாழ்ந்த நிலையில் தினசரி வாழ்வுக்கே சிரமப்பட்டுக்கொண்டிருந்தனர். ஃபிரான்ஸ் வரலாற்றின் இருளடர்ந்த காலத்தில் நிகழும் நாவல்.
இலட்சியவாதத்தின் உச்சியில் இருந்து சரிந்து வந்து அந்த நிலையை அடைகின்றனர். கலாச்சாரத்தின் முன்னுதாரனமாக உலகிற்கு இருந்த ஒரு தேசம் சென்றடைந்த புள்ளி. அக்காலத்தில் இருந்த எந்த ஒரு கலைஞனும் அந்தக் கசப்பிலிருந்து வெளிவந்திருக்க இயலாது என்றே தோன்றுகிறது. கிட்டத்தட்ட ஒரு பொன்னுலகம் கைவரப் போகிறதென்ற தோற்றத்தில் மொத்த நாட்டுமக்களும் இருந்தனர்.
வால்டேரின் புரட்சி முழக்கத்தில் தோன்றிய மகத்தான கனவு. “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்“ என அது ஃபிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டு அதன் முடிவில் நெப்போலியன் என்பவன் எழுந்து உலகத்தையே கைப்பற்றி அதன் சிகரத்தில் இருக்கப்போகிறோம் என்ற கனவு அவர்களுக்கு இருந்தது. வெறும் இருபது ஆண்டுகளில் மொத்தமும் தலைகீழாகி ஆகச்சாத்தியமான கீழ்நிலைக்கு வந்துசேரும் நாட்டின் சோர்வையும் எதிர்மறைத் தன்மையையும் தொட்டு ஆரம்பிக்கிறது நாவல்.
இந்த எதிர்மறைத் தன்மையை மக்களின் மீதான, மானுடம் மீதான விமர்சனமாக மாற்றுவதில் இதன் கலைத்தன்மை இருக்கிறது. பின்னர் யதார்த்தவாத அழகியல் சென்றடைந்த முக்கியமான இடம் இது. தல்ஸ்தோயும் தஸ்தாயேவ்ஸ்கியும் இதைப் பெரிதாக வளர்த்தெடுத்திருக்கிறார்கள். மனிதனின் உள்ளார்ந்த சுயநலமும், சந்தர்ப்பவாதமும்தான் வெளியே அவன் சமூகமாக விரிந்திருக்கிறது என்பது அதன் முக்கியமான பார்வை.
நாவலின் முதன்மைப் பாத்திரமான ராஸ்தினாக் தன்னுடைய சட்டப்படிப்பிற்காகப் பாரீஸுக்கு வந்து விடுதியில் தங்குகிறான். ஒருவகையில் தன் கள்ளமற்ற விடலைப் பருவம் முடிந்து “வளர்ந்தவர்களின்” நகரத்திற்கு வருகிறான். தன் ஏழ்மையான வாழ்விலிருந்து வெளியேற தன் படிப்பும் பிற உயர்வகுப்பினர் தொடர்பும் அவனுக்கிருக்கும் வழிகள். முன்னைவிட பின்னது மிக வேகமானது. தன் உறவினரான திருமதி பூஷாண்டைச் சந்திக்கையில் “எங்கேயும் உன் மனதைத் திறந்து காட்டிவிடாதே” எனக் கூறுகிறாள். அதுவே முன்னேற்றத்திற்கான வழி.
கிட்டத்தட்ட நாவலின் கதைமாந்தர்கள் அனைவரும் அவ்வாறே இருக்கின்றனர். அனைவரது உறவுகளும் கணக்குப் பேரங்களுக்கு உட்பட்டுத்தான் நடக்கின்றன. குறிப்பாக பெண்களின் வாழ்க்கை அவ்வாறுதான் இருக்கிறது. அவர்களுக்கு இரண்டு உறவுகள் உள்ளன. தன் வாழ்வுத்தரத்தை உயர்த்திக்கொள்ள ஒரு செல்வந்தரை மணந்துகொள்கிறார்கள். அது சீக்கிரமே கசந்துவிட, வேறொரு ஆணைக் காதலிக்கின்றனர். ஆனால் அப்படி வரும் ஆண்களுக்கு அவர்களுக்கானத் தேவை இருக்கிறது. இவ்வாறு ஆணும் பெண்ணும் பரஸ்பரம் பல்வேறு வகையான உறவுச்சிக்கல்களில் மாட்டி அவதியுறும் விரிவான சித்திரம் நாவலில் வருகிறது.
நாயகனுக்கும் அப்படியான ஒரு தேர்வு வருகிறது. திருமதி பூஷாண்ட் மூலம் டெல்பைன் என்னும் பெண்ணின் தொடர்பு ஏற்படுகிறது. தன்னுடன் விடுதியில் தங்கியிருக்கும் கிழவரான கோரியோவின் இரண்டாவது மகள். திருமணமானவள். அவளுடனான தொடர்பு வாழ்வில் சீக்கிரம் மேலேறிச் செல்ல எளிய வழியை ஏற்படுத்துகிறது. இயல்பாக அந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறான். ஆனால் தன் மனதிற்கு அதை உண்மையான காதல் என்றே சொல்லிக்கொள்கிறான்.
மற்றுமொரு முக்கியமான முன்னோடி அம்சம் என இதன் கதாபாத்திரச் சித்தரிப்பைக் கூறலாம். பெரும்பாலும் அனைத்து கதைமாந்தர்களும் மனச்சாய்வின்றி சித்தரிக்கப்படுகின்றனர். அனைவரும் வெறும் மனிதர்களாக உள்ளனர். நேர்நிலை, எதிர்நிலை அம்சங்களின் கலவையாக. பிற்காலத்தில் வெளிவந்த அம்மாதிரியான எத்தனையோ படைப்புகளைப் படித்துவிட்டு வரும் இன்றைய வாசகருக்கும் இம்மாந்தர்கள் ஒரு சவாலாகவே இருக்கின்றனர். எவ்வகையான மனநிலையுடன் அவர்களை அணுகுவது என்கிற தடுமாற்றத்தை ஏற்படுத்துவது இதன் கலைவெற்றிகளில் ஒன்று. அத்தடுமாற்றம் வழியாக நாம் அனைவரையும் மிக நெருக்கமாகப் புரிந்துகொள்கிறோம். வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு வகையில் பிடிப்பும் விலக்கமும் அவர்களிடத்தில் நமக்கு ஏற்படுகின்றன.
நாவலின் உச்சக் கதாபாத்திரங்களில் ஒன்று வாட்ரின். அந்த ஒரு பாத்திரப் படைப்பிற்காக மட்டுமே இந்த நாவலை கட்டாயம் வாசித்தேயாக வேண்டிய படைப்புகளின் வரிசையில் வைக்கலாம். இவனும் ராஸ்தினாக்குடன் விடுதியில் தங்கியிருக்கும் ஒருவன்தான். கோரியோவுக்கு நேர் எதிரான கதாபாத்திரம். என்னவென்று விளக்கமுடியாத பெரும் அன்பால் இயக்கப்படும் கதாபாத்திரம் கோரியோவென்றால் அதேயளவு விளக்க முடியாத எதிர்விசையால் செலுத்தப்படுபவன் வாட்ரின்.
கோரியோ தன் இரண்டு மகள்களின் வாழ்வுக்காகத் தன் சொத்துகள் அத்தனையையும் கொடுத்துவிட்டு மிகச் சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார். கண்மூடித்தனமான அன்பு அவரை அவ்வகையான வாழ்வை வாழச் செய்கிறது. நாவல் எழுதுவதற்கான தூண்டுதலாக அக்கதாபாத்திரமே இருந்திருக்கிறது. நாவலின் ஆரம்பத்தில் அவர் சித்தரித்துக் காட்டும் பாரீஸின் எதிர்மறைச் சூழலில், அந்த மனிதர்களுக்கிடையில் இப்படியான கதாபாத்திரம் இருக்க முடியுமா என்கிற வினாவே நாவலை முன் நகர்த்துகிறது. கோரியோவின் பாத்திரத்தை ஒட்டியே நாவலின் மைய உணர்வு நிலை இருக்கிறது.
ஆனால் இன்று வாசிக்கையில் வாட்ரினே நமக்கு முக்கியமாகப்படுகிறான். அதிலும் குறிப்பாக, அவன் ராஸ்தினாக்கிடம் பேசும் நீண்ட உரையாடல் உலக இலக்கியத்தில் எழுதப்பட்ட மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று என மேலைநாட்டு விமர்சகர்கள் கருதுகின்றனர். எந்தப் பாதையில் செல்வது எனத் தத்தளித்துக்கொண்டிருக்கும் ராஸ்தினாக்கிடம் அவன் முன்னால் இருக்கும் வாய்ப்புகளை விளக்குகிறான். “ஒழுங்காகச் சட்டப்படிப்பை முடித்து, ஒரு திருட்டு முதலாளியை விடுவிப்பதற்காக வாதிடும் வக்கீலுக்குக் கீழ் ஜூனியராகச் சேர்ந்து, வருடம் சில ஆயிரம் ஃபிராங்குகள் சம்பாதித்து, அதிலிருந்து அடுத்தக் கட்டத்திற்கு உயர இன்னும் சில ஆண்டுகள் உழைத்து, பின் மனைவி குடும்பம் என நீண்ட மதிப்பற்ற வாழ்வை வாழப்போகிறாயா?” எனக் கேட்கிறான். “நீ சிங்கத்தைப் போன்றவன். சிங்கத்தின் வேட்கையை உன் கண்களில் காண்கிறேன். அதன் வழி இதுவல்ல” என்கிறான்.
“இந்த உலகில் இரண்டு வகையான மக்கள் இருக்கிறார்கள். ஒன்று ஜீனியஸின் பாதை. மற்றொன்று சுரண்டலின் பாதை. இரண்டாவது சுலபம் என்பதால் அனைவரும் அதையே தேர்ந்தெடுக்கின்றனர். உன்னைச் சுற்றி அவர்களின் உலகமே உள்ளது. நாலாயிரம் ஃபிராங்க் சம்பளம் கொண்ட அரசு அதிகாரியின் மனைவி இருபதாயிரம் ஃபிராங்க் கொண்ட முத்துகள் பதித்த கவுனை அணிகிறாள். அத்தகைய மனிதர்கள் உள்ள உலகம் உன்னைச் சூழ்ந்துள்ளது, அவர்களுக்குக் கீழ்தான் நீ நேர்மையாக இருந்து வேலை செய்ய வேண்டும். உதிரத்தில் சிங்கத்தின் சூடுகொண்டவன் அதைத்தான் செய்யப்போகிறானா?” என மேலும் தொடர்கிறான்.
அதே விடுதியில் தன் அப்பாவான பெரிய செல்வந்தரின் ஆதரவில்லாமல் நிற்கும் விக்டோரினைக் காட்டி “அவளுக்கு உன்னிடம் ஈர்ப்பிருக்கிறது. அந்தச் செல்வந்தருக்கு ஒரே மகன் மட்டுமே. நீ சரியென்று மட்டும் சொல். அத்தனை சொத்தும் உனக்கு வந்துசேரும்” என்கிறான். அதைக் கேட்டுத் திகைக்கும் ராஸ்தினாக் எச்சிலை விழுங்க முடியாமல் திணறி, “எப்படி?” எனக் கேட்கிறான். வாட்ரின் அவன் கண்களைத் திடமாகப் பார்த்து சிறிய புன்னகையுடன், “நாளை அவன் உயிரோடு இருக்க மாட்டான்” என்கிறான். “நீ சொல்லவேண்டியதெல்லாம் சரி என்ற ஒற்றை வார்த்தை மட்டுந்தான்” என மீண்டும் கேட்கிறான்.
வாட்ரின் வாதம் எவ்வகையிலும் எதிர்த்துப் பேசமுடியாத ஒன்று. தன் தரப்பைப் பக்கம்பக்கமாக விரித்துக் கூறுகிறான். அவன் தூற்றும்படியாகத்தான் வெளியே வாழ்வு இருப்பதை நாம் உணர்கிறோம். அனைவரும் சுரண்டுகின்றனர். காதல், அன்பு எனக் கூறிக்கொண்டு பெண்களும் குழந்தைகள், சமுதாய அங்கீகாரம் எனக் கூறி ஆண்களும் சுரண்டுகின்றனர். விழுமியங்கள் அனைத்தையும் வளைத்து தன் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சுயகௌரவம் உள்ள எந்த நபரும் வாட்ரின் கூறுவதையே ஒப்புக்கொள்வர்.
அத்தகைய இக்கட்டில் கதையின் பிரதானப் பாத்திரத்துடன் நாமும் நிற்க வைக்கப்படுகின்றோம். அவ்விடத்தில் அவன் ஒப்புக்கொள்வதில்லை. மறுத்துவிடுகிறான். ஆனால் அந்தக் கேள்வி அவனைக் குடைந்துகொண்டேயிருக்கிறது. ஆம் என்கிற ஒற்றை வார்த்தைதான். அவன் நேரடியாக எதையும் செய்யப்போவதில்லை. அதை விட்டுவிட்டு வாழ்நாள் முழுவதும் இத்தகைய கூழைக்கும்பிடு வாழ்வை வாழ வேண்டுமா என எண்ணுகிறான்.
ஓரிடத்தில் வெளிப்படையாகவே தன் நண்பன் ஒருவனிடம் கேட்கிறான். “நீ இங்கு இருக்கிறாய். தூர தேசத்தில் உனக்கு யாரென்றே தெரியாத ஒரு கிழட்டுச் சீனன் இருக்கிறான் என வைத்துக்கொள். உன்னிடம் ஒரு சக்தி உள்ளது. மனதில் அவன் இறந்துவிட வேண்டும் என நினைத்தால் அவன் அவ்வாறே ஆகிவிடுவான் என்றால் நீ அப்படி நினைப்பாயா?” எனக் கேட்கிறான்.
இது பால்சாக் நம்மிடம் நேரடியாகக் கேட்கும் கேள்விதான். ஒரு துளி இரத்தம் உன் மீது படவில்லையென்றாலும் ஒரு கொலையை மனதளவிலேனும் நீ செய்வாயா என்கிற கேள்வி நம் முன் வைக்கப்படுகிறது.
வாட்ரின் கூறும் பக்கம் பக்கமான நியாயங்களுக்கு எதிராக வைக்கப்படும் ஒற்றை வாக்கியம், இந்த இணைப்பு நிகழும்போது நாவல் அதன் புனைவுக்களத்தின் சமூகப் பண்பாட்டு எல்லைகளைத் தாண்டி என்றைக்குமான கேள்வியாகி விடுகிறது. இந்த உலகம் கீழ்மையாக இருப்பினும் இதன் மக்கள் சுயநலவாதிகள் எனினும் உண்மையாக இருப்பதால் இந்த வாழ்வில் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்றாலும் நீ அவ்வாறு மனதில் நினைப்பாயா என்று கேட்கிறார்.
ஆனால் மேற்சொன்ன வாசிப்பு இன்றைய நிலையில் நின்றுகொண்டு வாசகர் கேட்டுக்கொள்வது. ஆனால் நாவலுக்குள் ராஸ்தினாக்கின் பயணம் இறுதியில் வேறு விதமாக அமைகிறது.
சமசரமற்ற எதிர்நிலைக் கதாபாத்திரம் வாட்ரினுடையது. அவனை வாசிக்கும்போது தஸ்தாயேவ்ஸ்கியின் ஸ்மெர்தியாகோவ்வும் (கரமசோவ் சகோதரர்கள்), ஸ்வித்ரிகைலோவ்வும் (குற்றமும் தண்டனையும்) மனதில் எழுந்து வருகிறார்கள். அனைத்துக்குமான முன்னோடி வடிவம். நாவலுக்குள் உருவாக்கப்படும் சிக்கல் வலுவான எதிர்கதாபாத்திரம் மூலமே நிகழும். அதில் ஒருவன் வாட்ரின்.
அவனுடைய முழுக் குணாதிசயமும் இந்த நாவலுக்குள் வெளிப்படவில்லை. இதை ஒரு நாவல் தொடராகத்தான் வடிவமைத்தார் பால்சாக். ஒரு நாவலில் வரும் கதாபாத்திரம் அடுத்த நாவலில் மேலும் பரிணாமம் கொள்ளும். இதற்கு முந்தைய நாவல்களின் தொடர்ச்சியாகவே அவன் வருகிறான். இதில் சித்தரிக்கப்படும் வாட்ரின் நல்ல திடகாத்திரமான நாற்பது வயது மனிதன். அவனைத் தேடி வரும் போலீஸ் மூலமே அவனுடைய உண்மையான பெயர் காலின்ஸ் என்றும் அவன் பல கொலைகளுக்காகத் தேடப்படும் குற்றவாளி எனவும் அறிகிறோம்.
அந்த விடுதியில் வாழும் ஒரு ஜோடி கொடுக்கும் துப்பு மூலம் அவன் சிக்கிக்கொள்கிறான். அவன் கைது செய்யப்படும் சம்பவம் ஒரு பரபரப்பான த்ரில்லர் வாசிக்கும் இடத்தின் நேர்த்திகொண்டது. முதலில் அவனிடம் இருந்து ஒரு கட்டுக்கடங்காத ரௌத்திரம் எழுகிறது. அந்தக் கண்களில் அவ்வளவு வலிமை இருக்குமென்று அதுவரை அவனுடன் பழகிய யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவனைக் கொன்று பிடிக்கவே போலீஸார் வந்துள்ளனர் என்று அறிகையில் கணப்பொழுது இலாவகத்துடன் தன்னை அப்பாவியாக மாற்றிக்கொண்டு போலீஸிடம் சரணடைகிறான். கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும்போது தன்னைக் காட்டிக்கொடுத்த ஜோடியின் நிம்மதியை முழுவதுமாகக் கலைத்துவிட்டுச் செல்கிறான்.
“என்னைப் பற்றிய துப்புக் கொடுக்க இவர்கள் அதிகபட்சம் ரெண்டாயிரம் ஃபிராங்ஸ் கொடுத்திருப்பார்களா? ஆனால் அதே விஷயத்தை என்னிடம் சொல்லியிருந்தால் நான் இருபதாயிரம் ஃபிராங்ஸ் கொடுத்திருப்பேனே?” எனக் கூறிவிட்டுச் செல்கிறான். அவனுக்குத் தெரியும். அவன் குற்றவாளி என்பதால் காட்டிக்கொடுக்கப்படவில்லை, பணத்தின் ஈர்ப்பால் காட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறான். இனி இச்சம்பவத்தை எண்ணி அவர்கள் வாழ்நாள் முழுதும் வருந்துவர். அப்பகுதியுடன் நாவலில் இருந்து மறைகிறான்.
வாட்ரினுக்கும் கோரியோவுக்கும் இடையில் அலைவுறும் கதாபாத்திரமாக ராஸ்தினாக் இருக்கிறான். வாசகரான நமக்குமே கிட்டத்தட்ட அந்த மனநிலைதான் உருவாகிறது. நாவல் வாட்ரின் பக்கம் சென்றுதான் முடிகிறது. அப்படியான ஒரு சுயநலச் சமுதாயத்தில் கோரியோ படும் இன்னல்களைக் காட்டி ஒரு சோக நாவலாகத்தான் இது அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மகள்களாலும் கைவிடப்பட்டு தன் மரணப்படுக்கையில் அவதியுறும் கோரியோவின் நீண்ட மனப்பிறழ்வுகளும் புலம்பல்களும் இறுதிப் பகுதியாக வருகிறது. ஓரிடத்தில் கோரியோ சொல்கிறார், “என் மகள்களிடத்தில் நான் அன்பு செலுத்தும் போது என்னை ஒரு இயேசுவாக உணர்கிறேன். அவரும் மானுடம் மொத்தத்தையும் இதே உணர்வில்தான் அணுகினார். அவர்களின் நல்வாழ்வில்தான் அவரின் மகிழ்ச்சி இருந்தது. என் மகிழ்ச்சி என் மகள்களின் சந்தோஷத்தில் இருப்பதைப் போல.” இறுதியில் கோரியோ படும் துன்பம் உண்மையில் இயேசு படும் துன்பமாகத்தான் நம்முள் எழுகிறது.
அவர் மெல்ல துடித்து அடங்கும் காட்சியை ராஸ்தினாக் காண்கிறான். அவரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவரின் இரு மகள்களையும் அழைத்து வர முயல்கிறான். ஆனால் இருவரும் வேறு சில சில்லறைக் காரணங்களைக் கூறி மறுத்துவிடுகின்றனர். அவரின் இறுதி ஊர்வலத்திற்குக்கூட ஆளில்லாமல் ஒரு மட்டரக எழுபது ஃபிராங்க் மரப்பெட்டியில் புதைக்கப்படுவதைக் காணும் ராஸ்தினாக் முழுதாக மாறுகிறான். நாவலின் இறுதிப் பக்கத்தில் அவன் எப்படி மெல்ல இன்னொரு வாட்ரினாக மாறுகிறான் என்ற குறிப்புடன் நாவல் நிறைவுறுகிறது.
முன்னோடி படைப்பு என்பதைத் தாண்டி இரு அம்சங்கள் நாவலை இன்று வாசிக்கையில் முக்கியமானவையாக ஆக்குகின்றன. முதலாவது நாவலில் தொடர்ந்துவரும் ஆசிரியரின் அவதானிப்புகள். வாழ்க்கையைப் பற்றிய, மனிதர்களைப் பற்றிய நுட்பமான இடங்களை அவரின் கை சென்று தொடுகிறது. உதாரணத்திறகு கோரியோவைப் பற்றிய அறிமுகப் பகுதியில், ‘ஒரு மனிதன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனத் தெரிந்தால் சுற்றியிருப்பபவர்கள் அவனை மேலும் மேலும் சீண்டுவார்கள்’ என்கிறார். ஏனென்றால் அவன் எளிதான இலக்காக இருக்கிறான். இடுக்கில் மாட்டிக்கொண்ட பட்டாம்பூச்சியின் இறக்கைகள்தான் அவசரமல்லாமல் மெதுவாகப் பிடுங்கப்படுகின்றன. அதேபோல் இன்னொரு இடத்தில் ராஸ்தினாக்கைப் பற்றிக் கூறுகையில் “இளமையே வாழ்க்கையை நேர்நிலையாக அணுகச் செய்கிறது. ஏனெனில் அவன் முன் இருக்கும் சாத்தியங்கள் எண்ணற்றவை. எந்தக் கதவையும் திறக்கலாம் என்கிற சாத்தியம் அவனுக்கு வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையை அளிக்கிறது” என்கிறார். இவ்வகையில் நாவல் நெடுக தொடர்ந்து வரும் நுட்பமான அவதானிப்புகள் கலைச்செறிவைத் தருகிறது.
இரண்டாவது, நாவலில் இருக்கும் அருமையான பகடிகள். மிக யதார்த்தமாகவே அவை நாவலுக்குள் வருகின்றன. ஆனால் வாசகர் அவ்விடங்களை ஒரு நமுட்டுச் சிரிப்புடன்தான் படித்துச் செல்கிறார். உதாரணமாக, “பனோரமா” என்னும் புதிய வகைப் புகைப்படத் தொழில்நுட்பம் அறிமுகமாகியிருக்கிறது. அந்தத் தொழில்நுட்பம் தரும் அதே கிளர்ச்சியை புரியாத அந்தச் சொற்பதமும் தருகிறது. அந்த அந்நியச் சொற்றொடரை அனைத்து இடங்களிலும் வேடிக்கையாகக் கையாள்கிறார்கள். விருந்தில், நண்பர்கள் சந்திப்பில் எனச் சாத்தியமான எல்லா இடங்களிலும் “ரமா” என்னும் விகுதியைக் கேலியாகப் பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் சுரணையற்றதாக்கி தங்கள் அன்றாடத்திற்குள் கொண்டுவந்து விடுகிறார்கள். அதன்பிறகு அது அவர்களின் சாதாரண வார்த்தைகளில் ஒன்றாகி விடுகிறது. அந்தப் பகுதியை வாசிக்கும் இன்றைய வாசகருக்குத் தெரியும், அது “பனோரமா” என்னும் தொழில்நுட்பத்தை மட்டும் குறிக்கவில்லையென்று.
இந்த நாவல் வெளிவந்த காலத்தில் இது பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களையே சந்தித்தது. இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது போல பாரீஸ் அவ்வளவு மோசமான நகரமில்லை எனவும் மக்கள் அத்தனை சுரண்டல்காரர்களாகவும் சுயநலமிக்கவர்களாகவும் இருக்கவில்லை எனவும் அப்போதைய ஃபிரெஞ்சு விமர்சகர்களால் கூறப்பட்டது. ஒருவகையில் அது நாவலுக்குக் கிடைத்த வெற்றி என்றே கூறலாம். நாவலின் முக்கியமான வாழ்க்கைப் பார்வைகளில் ஒன்று, மனத்தின் பாவனைகள் பற்றியது. மனிதன் தன் போதாமைகளை ஒருபோதும் ஒத்துக்கொள்வதில்லை. கோரியோவின் இரு மகள்களும் முடிந்தவரை தன் தந்தையிடமிருந்து பணத்தைப் பறித்துக்கொள்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு முறை பணம் பெறுவதற்கு மட்டுமே அவரைச் சந்திக்கிறார்கள். ஆனால் அதை ஒத்துக்கொள்ள அவர்களின் மனம் இணங்குவதில்லை. அதை அப்படியே திருப்பி தன் வாழ்க்கை பற்றிய தன்னிரக்கமாக, தன் கணவனால் அன்பின்றிக் கைவிடப்பட்டவளாக, மகனைக் கைவிட்டு வரமுடியாதவளாக மாற்றிக்கொள்கிறார்கள். மனிதனின் எல்லை அது என பால்சாக் முன்வைக்கும் இடம். அதை மனிதனால் ஒருபோதும் தாண்ட முடியாது. அதையே நாவல் பற்றிய விமர்சனங்களிலும் காண முடிகிறது.
மேலும் அவ்வகையான சித்தரிப்பு என்பது ஒருவகை பிரதிநிதித்துவப்படுத்துதல். இலட்சியவாதக் கனவுகள் தோற்றுப் போய் நிதர்சனம் கண்முன் தெரியும் காலகட்டத்தின் உருவகம் அச்சித்தரிப்பு. மனிதன் மேல் அவ்வளவு நம்பிக்கை வைக்கத் தேவையில்லை என்கிற உணர்வு நாவல் முழுதும் வெளிப்படுகிறது. அதன் நடுவில் கோரியோ என்கிற தூய மனம் படும் அல்லல்களையே கருவாக வைத்து நாவல் எழுதப்பட்டுள்ளது. நாவலுக்கான விமர்சனங்களைப் பால்சாக் எவ்வாறு எதிர்நோக்கியிருப்பார்? அன்றைய தினத்தின் எட்டாவது காபியை அருந்திக்கொண்டு அகல நாற்காலியில் அமர்ந்துகொண்டு சிரித்திருப்பார். அப்போது ராஸ்தினாக்கின் செல்திசை இன்னும் தெளிவாக அவருக்குப் புலப்பட்டிருக்கும். அடுத்தடுத்த நாவல்களில் அக்கதாப்பாதிரம் ஒரு பெரும் பணக்காரனாகவும் அரசியல்வாதியாகவும் மாற்றம் கொள்வதை அப்போது அவர் முடிவு செய்திருக்கக்கூடும்.