1
செல்வி எமிலி கிரியர்சன் இறந்தபோது ஊர் முழுமையும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டது. விழுந்துவிட்ட நினைவுச் சின்னம் ஒன்றுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்கள் சென்றார்கள். வீட்டுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காகப் பெண்கள் சென்றார்கள். தோட்டக்காரன், சமையல்காரன் என இரண்டு வேலைகளையும் செய்துவந்த வயதான ஆண் வேலைக்காரனைத் தவிர கடந்த பத்து வருடத்தில் யாருமே அந்த வீட்டின் உட்புறத்தைப் பார்த்ததில்லை.
அது ஒரு பெரிய சதுரச் சட்டகம் போன்ற அமைப்பைக்கொண்ட வீடு. ஒரு காலத்தில் வெண்ணிறமாக இருந்தது. நல்ல வெளிச்சத்தையும் காற்றோட்டத்தையும் தரக்கூடிய எழுபதுகளின் கட்டிடப் பாணியைப் பின்பற்றிக் கலசங்களும் கோபுரக் கூம்புகளும் அலங்காரப் பலகணிகளும் கொண்டு கட்டப்பட்டிருந்தது. ஒரு காலத்தில் ஊரில் சிறப்பானதாகக் கருதப்பட்ட தெருவில் அமைந்திருந்தது. இப்போது வண்டிக்கொட்டகைகளும் பருத்திக் கிடங்குகளும் ஆக்கிரமித்து அந்தச் சிறப்புக்குக் களங்கம் ஏற்படுத்தி இருந்தன. அங்கே இப்போது எஞ்சி இருந்தது எமிலியின் வீடு மட்டும்தான். பருத்தி மூட்டைகளை ஏற்றிச்செல்லும் வண்டிகளுக்கும் எரிபொருள் அடிகுழாய்களுக்கும் நடுவே அடங்க மறுத்து துணிச்சலாகவும் கண்ணுக்கு உறுத்தலாகவும் நின்றது. தன்னுடைய இற்றுப் போய்க்கொண்டிருந்த அழகைப் பறைசாற்றிக்கொண்டு நின்றது. எமிலி இப்போது செடார் மரங்கள் நிறைந்த கல்லறைத் தோட்டத்தில் உறங்கிக்கொண்டிருந்த புகழ்பெற்ற பெயர்களைத் தாங்கிய மனிதர்களுடன் சென்று சேர்ந்துவிட்டார். அந்தக் கல்லறையில்தான் ஜெஃபர்சனில் நடைபெற்ற சண்டையில் வீழ்ந்துபட்ட அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் பெயரற்ற தென்பிராந்தியப் படையைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள்.
உயிரோடு இருக்கையில் எமிலி ஊரின் மரபாகவும் அலுவலாகவும் அக்கறையாகவும் இருந்தார். மேயராக இருந்த கர்னல் சர்ட்டோரிஸ் 1894-ஆம் ஆண்டின் ஒரு நாளில் அவர் சார்பாக வரியைச் செலுத்தியது முதல் ஊரின் மரபுரிமையான கடமையாக இருந்தார். எமிலியின் தந்தை மறைந்த நாள் முதல் அவர் காலம் முழுவதும் இந்த வரிவிலக்கு தொடர்ந்தது. இந்தக் கர்னல்தான் கறுப்பினப் பெண்கள் மேலங்கி இல்லாமல் தெருவில் போகக்கூடாது என்ற கட்டளையைப் பிறப்பித்தார். இதுபோன்ற கொடையை எளிதில் ஏற்றுக்கொள்பவரில்லை எமிலி. எனவே எமிலியின் தந்தை ஊருக்காகப் பெருந்தொகையொன்றைக் கடனாகக் கொடுத்திருந்தார் என்றும் அதை இந்த வகையில் திருப்பிக்கொடுக்க ஊர் விரும்பியது என்றும் கற்பனைக் கதையைப் புனைந்தார் கர்னல் சர்ட்டோரிஸ். கர்னலின் தலைமுறையைச் சேர்ந்த ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு கதையை இட்டுக்கட்ட முடியும், ஒரு பெண்ணால் மட்டுமே அதை நம்பமுடியும்.
ஊரின் மேயராகவும் நகர அதிகாரியாகவும் பொறுப்பேற்ற புதுமையான எண்ணங்களைக் கொண்ட அடுத்த தலைமுறையினருக்கு இந்த ஏற்பாடு பிடிக்கவில்லை. முதல் வருடம் வரி கேட்டு அறிக்கையொன்றைத் தபால் மூலம் அனுப்பினார்கள். பிப்ரவரி மாதம் வரையிலும் எந்தப் பதிலும் இல்லை. பிறகு எமிலிக்கு வசதியான நேரத்தில் ஷெரிஃபின் அலுவலகத்துக்கு வருமாறு முறையாகக் கடிதம் ஒன்றை எழுதினார்கள். தானே வந்து பார்ப்பதாகவும் அல்லது வேண்டுமென்றால் தன்னுடைய காரை அனுப்பிவைப்பதாகவும் ஒரு வாரம் கழித்து மேயர் கடிதம் எழுதினார். தொன்மையான தாளில் மங்கிய மசிகொண்டு மெலிந்த நேர்த்தியான ஒன்றோடொன்று இணைந்த கையெழுத்தில் எழுதப்பட்ட பதில் கடிதம் வந்தது. தான் இப்போதெல்லாம் வெளியே செல்வதேயில்லை என்று எழுதி, கூடவே வரி அறிக்கையையும் இணைத்திருந்தார், ஆனால் அதுபற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
நகர அதிகாரிகள் குழுமத்தின் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அவர்களால் நியமிக்கப்பட்ட குழு அவரது வீட்டு வாயிற்கதவைத் தட்டியது. சுமார் எட்டு அல்லது பத்து வருடத்துக்கு முன்னால் சீன ஓவியம் வரையக் கற்றுத்தரும் வகுப்புகள் நடத்துவதை அவர் நிறுத்திய பிறகு அந்த வாயிலின் வழியாக வீட்டுக்குள் யாரும் நுழைந்ததில்லை. வயதான கறுப்பின வேலைக்காரன் அவர்களை உள்ளே அனுமதித்தான். மங்கலான வெளிச்சத்தோடு இருந்த முன்னறையில் இருந்து மேலே சென்ற படிக்கட்டு, இன்னும் இருண்ட பகுதிக்கு இட்டுச்சென்றது. அங்கே புழுதியும் யாரும் புழங்காததினால் உண்டாகும் ஒருவிதமான அடைத்துவைக்கப்பட்ட ஈரமான வாசமும் எழுந்தது. கறுப்பின வேலைக்காரன் விருந்தினர்களுக்கான வரவேற்பறைக்கு அவர்களை அழைத்துச்சென்றான். அங்கிருந்த நாற்காலிகளுக்கும் மேசைகளுக்கும் கனமான உயர்தர தோலுறை போடப்பட்டிருந்தது. வேலைக்காரன் ஜன்னலின் திரையை விலக்கியதும் தோலுறையில் இருந்த விரிசல் தெளிவாகத் தெரிந்தது. அதில் அமர்ந்தபோது அவர்களின் தொடைகள் உரசிய இடங்களில் இருந்து புழுதி கிளம்பியதையும் ஜன்னலின் வழியே உள்ளே நுழைந்த அந்த ஒற்றைச் சூரிய ரேகையின் ஒளியில் புழுதித் துகள்கள் மெல்லச் சுழன்றதையும் பார்க்க முடிந்தது. கணப்படுப்பின் முன்னே மங்கிய தங்க முலாம் பூசிய ஓவியச் சட்டமொன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதன்மீது மெழுகு வண்ணத்தால் தீட்டப்பட்ட எமிலியின் தந்தையின் உருவப்படம் இருந்தது.
சின்ன உருவமும் பருத்த சரீரமும்கொண்டு கறுப்பு நிறத்தில் ஆடை அணிந்திருந்த எமிலி உள்ளே நுழைந்ததும் எழுந்து நின்றார்கள். இடுப்புவரை நீண்டு தொங்கிய மெல்லிய தங்கச் சங்கிலியொன்று இடுப்புப் பட்டிக்குள் மறைந்து போயிருந்தது. மங்கிய கைப்பிடியைக் கொண்ட எபோனி மரத்தாலான கைத்தடியின்மீது சாய்ந்து நின்றார். சிறிய மெலிந்த உடலமைப்பு, பூசினாற் போன்ற உடல்வாகு என்பதால் பருத்த சரீரமாகத் தெரிந்ததோ என்னவோ! தேங்கியிருக்கும் நீரில் ஊறிய மரத்துண்டைப் போல ஊதிய உடலும் வெளிறிய நிறமும் கொண்டிருந்தார். பிசைந்த மாவுக்குள் சொருகி வைக்கப்பட்ட கரித்துண்டுகளைப் போல சதைப்பற்று மிக்க முகத்திலிருந்த இடுக்குகளுக்குள் மறைந்து போயிருந்த கண்கள் தங்கள் வருகைக்கான காரணத்தை விளக்கிய ஒவ்வொரு முகமாகப் பார்த்தன.
எமிலி அவர்களை உட்காரச் சொல்லவில்லை. பேசிக்கொண்டிருந்த மனிதர் திடீரென பேச்சை நிறுத்தும்வரை கதவருகே நின்றபடி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது தங்கச் சங்கிலியின் முனையில் இருந்த கண்ணுக்குத் தெரியாத கடிகாரத்தின் முட்கள் நகரும் ஓசை துல்லியமாகக் கேட்டது.
அவரது குரல் வறண்டு போய் உயிரோட்டமின்றி இருந்தது. “எனக்கு ஜெஃபர்சனில் வரி ஏதும் இல்லை. கர்னல் சர்ட்டோரிஸ் என்னிடம் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். இதுபற்றி நகரத்தின் ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்டிருப்பதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.”
“பார்த்துவிட்டோம், செல்வி எமிலி. நாங்கள் இந்த நகரத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள். ஷெரிஃபின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை உங்களுக்கு வந்துசேர்ந்ததா?”
“வந்துசேர்ந்தது,” என்றார் எமிலி. “அவர் தன்னை ஷெரிஃப் என்று நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் எனக்கு ஜெஃபர்சனில் வரி ஏதும் இல்லை.”
“ஆனால், இதைப் பற்றிய குறிப்புகள் எதுவும் ஆவணங்களில் இல்லை. நாங்கள் விதிமுறையை…”
“பாருங்கள், கர்னல் சர்ட்டோரிஸ். எனக்கு ஜெஃபர்சனில் வரி ஏதும் இல்லை.”
“ஆனால், செல்வி எமிலி….”
“பாருங்கள், கர்னல் சர்ட்டோரிஸ்.” (கர்னல் சர்ட்டோரிஸ் இறந்து பத்து வருடங்கள் ஆகியிருந்தது) “எனக்கு ஜெஃபர்சனில் வரி ஏதும் இல்லை. டோப்!” கறுப்பின வேலைக்காரன் உடனே வந்தான். “இவர்களுக்கு வெளியே போகும் வழியைக் காட்டு.”
2
முப்பது வருடத்துக்கு முன்னால், அவருடைய வீட்டிலிருந்து வந்த நாற்றத்தைப் பற்றி பேச அவர்களுடைய தந்தையர் வந்தபோது செய்ததைப் போலவே இவர்களையும் வெற்றிகொண்டார்.
எமிலியின் தந்தை இறந்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்னர் அது நடந்தது. அவரை மணந்துகொள்ளப் போகிறார் என்று எல்லோரும் நினைத்திருந்த காதலர் பிரிந்துசென்ற கொஞ்ச காலத்தில் நடந்தது. தந்தையின் மறைவுக்குப் பிறகு வெளியே செல்வதைக் குறைத்துக்கொண்டார் எமிலி. காதலர் பிரிந்துசென்ற பிறகு ஊர்க்காரர்கள் யாரும் அவரைப் பார்க்கவேயில்லை. ஒரு சில பெண்கள் தைரியமாக வீட்டுக்குப் போனபோது அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த வீட்டில் மனிதர்கள் வசிப்பதற்கு ஒரே சாட்சியாக இருந்தது கூடையைத் தூக்கிக்கொண்டு கடைத்தெருவுக்குப் போய்வந்த கறுப்பின வேலைக்காரன்தான், அப்போது இளைஞனாக இருந்தான்.
“ஒரு ஆண்மகனால் எப்படி சமையலறையைத் தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும்?” என்று ஊரிலிருந்த பெண்கள் பேசிக்கொள்வார்கள். அதனால் நாற்றம் வீசத் தொடங்கிய போது யாரும் பெரிதாக ஆச்சரியப்படவில்லை. வலிமையும் வன்மையும் பொருந்திய கிரியர்சன்களுக்கு இந்த அழுக்குப் பிடித்த உலகத்தோடு இருந்த தொடர்புக்கண்ணியானது அந்த நிகழ்வு.
பக்கத்து வீட்டில் வசித்த பெண்மணி நகரின் மேயர் நீதிபதி ஸ்டீவென்ஸிடம் புகார் சொன்னார்.
“அதுகுறித்து நான் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள் அம்மையீர்?” என்றார் அவர்.
“வேறு என்ன செய்வீர்கள்? அந்த நாற்றத்தை நிறுத்தச் செய்ய வேண்டும். அதற்கென்று சட்டம் இருக்கிறதில்லையா?” என்றார் அந்தப் பெண்மணி.
“அதெல்லாம் நிச்சயம் தேவையில்லை. அந்த வேலைக்காரன் தோட்டத்தில் ஏதாவது பாம்பையோ எலியையோ கொன்றிருப்பான். அவனிடம் பேசுகிறேன்,” என்றார்.
அடுத்த நாள் இன்னும் இரண்டு புகார்கள் வந்தன, அவர்களுள் ஒருவர் கொஞ்சம் பயந்தபடியே தன் எதிர்ப்பைக் காட்டினார். “இதுகுறித்து ஏதாவது செய்தேயாக வேண்டும் நீதிபதி அவர்களே. நான் ஒருபோதும் தேவையில்லாமல் செல்வி எமிலிக்குத் தொல்லை கொடுக்கவே மாட்டேன். ஆனால் நாம் எதையாவது செய்தே ஆகவேண்டும்.” அன்றிரவு நகர அதிகாரிகள் குழுமத்தின் கூட்டம் நடைபெற்றது – அவர்களில் மூன்று பேர் நரைத்த தாடிக்காரர்கள், ஒருவர் வளர்ந்துவரும் தலைமுறையைச் சேர்ந்தவர்.
“இது மிகவும் எளிமையாகத் தீர்க்கக்கூடிய விஷயம். வீட்டைச் சுத்தம்செய்யச் சொல்லித் தகவல் அனுப்புங்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்து முடிக்கவில்லையென்றால்…”
“நாசமாய்ப் போக! ஒரு பெண்ணின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து நாற்றம் அடிக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்?”
மறுநாள் நள்ளிரவில் நான்கு பேர் செல்வி எமிலியின் வீட்டுக்குப் போனார்கள். புல்வெளியின் மீது நடந்து அவருடைய வீட்டைத் திருடர்கள் போலச் சுற்றி வந்தனர். வீட்டின் அடித்தளத்தின் செங்கற்சுவரையும் நிலவறையின் திறந்த பகுதிகளையும் மோப்பம் பிடித்துப் பார்த்தனர். அவர்களில் ஒருவர் தோளில் தொங்கவிட்டிருந்த கோணிப் பைக்குள் கையைவிட்டு எதையோ எடுத்துத் தூவுவதைப் போன்ற செய்கையைச் செய்துகொண்டிருந்தார். நிலவறையின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போய் அங்கேயும் வெளிப்புறத்தில் இருந்த எல்லா அறைகளிலும் சுண்ணாம்பைத் தெளித்தார். மீண்டும் புல்வெளியைத் தாண்டி வெளியே சென்றபோது மேலே இருந்த ஜன்னலின் வழியாக எமிலி உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அவருக்கு நேர் பின்னால் விளக்கு ஒளிர்ந்தது. அவருடைய உடலின் மேல்பகுதி சிறிதும் அசைவின்றி ஒரு சிலையைப் போல இருந்தது. அவர்கள் ஓசையின்றித் தெருவைத் தாண்டி அங்கே வட்டமிட்டுக்கொண்டிருந்த வெட்டுக்கிளிக் கூட்டத்தின் நிழலுக்கடியில் நடந்தார்கள். ஓரிரு வாரங்களுக்குப் பிறகு அந்த நாற்றம் போய்விட்டது.
அந்த சமயத்தில்தான் ஊர்மக்கள் எமிலிக்காகப் பரிதாபப்பட ஆரம்பித்தார்கள். அவருடைய அத்தைப் பாட்டியான சீமாட்டி வையாட் தன்னுடைய இறுதிக்காலத்தில் புத்தி பேதலித்துப் போனதை நினைத்துக்கொண்டார்கள். கிரியர்சன் குடும்பத்தினர் தங்களைப் பற்றி அதிகப்படியான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசிக்கொண்டார்கள். குறிப்பாக, எந்த இளைஞனும் செல்வி எமிலிக்குப் பொருத்தமானவனில்லை என்பது போன்ற எண்ணம் கொண்டிருந்ததைப் பற்றிப் பேசினார்கள்.
வெகுநாட்களாக அந்தக் குடும்பத்தினரை நாடக மேடையில் ஒப்பனையும் உடையும் அணிந்து வலம்வருபவர்களாகவே பார்த்துக்கொண்டிருந்தோம். எமிலி மெலிந்த தேகத்தோடு வெள்ளையாடை அணிந்துகொண்டு பின்னணியில் இருந்தார். ஒரு நிழலோவியத்தைப் போல கையில் சாட்டையைப் பிடித்துக்கொண்டு குதிரைமீது காலை அகட்டி உட்கார்ந்திருந்தார் தந்தை. முப்பது வயதாகியும் எமிலி மணமாகாமல் இருந்தபோது, மகிழ்ச்சியேற்பட்டது என்பதைவிட, எங்களின் அனுமானம் சரியானதென்று நிறுவப்பட்டதாக நினைத்தோம். என்னதான் பரம்பரை குணமாகப் புத்தி பேதலிக்கும் சாத்தியம் இருந்தாலும் உண்மையாகவே அவரைத் தேடி மணமகன்கள் வந்திருந்தால் மொத்தமாக எல்லோரையும் வேண்டாமென்று சொல்லியிருக்க மாட்டார் அல்லவா?
தந்தை இறந்தபோது எமிலிக்கு அந்த வீடு மட்டும்தான் மிஞ்சியது ஒருவகையில் ஊர்மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களால் செல்வி எமிலிக்காகப் பரிதாபப்பட முடிந்தது. தனியாக விடப்பட்டதாலும் நொடித்துப்போய் இருந்ததாலும் ஒரு வகையில் சராசரி மனிதர்களைப் போல ஆனார். இனி ஒரு பைசா அதிகமாக இருக்கும்போது ஏற்படும் பரவசத்தையும் ஒரு பைசா குறையும்போது ஏற்படும் மனவேதனையையும் புரிந்துகொள்வார்.
தந்தை இறந்த மறுநாள் ஊரிலிருந்த பெண்கள் எல்லோரும் எமிலியின் வீட்டுக்குப்போய் துக்கத்தையும் ஆதரவையும் தெரிவிப்பதற்காகக் கிளம்பினார்கள். வழக்கம் போலவே அவர்களை வீட்டு வாசலிலேயே எதிர்கொண்டார். வழக்கமாக அணியும் உடையை அணிந்திருந்தார், முகத்தில் கொஞ்சம்கூட துயரத்தின் சாயலே இல்லை. அவர்களிடம் தன்னுடைய தந்தை இறக்கவில்லை என்று கூறினார். இதையே மூன்று நாட்கள் சொல்லிக்கொண்டு இருந்ததும் தேவாலயத்தின் பாதிரிமார்களும் மருத்துவர்களும் உடலை அடக்கம் செய்தாக வேண்டும் என்று எடுத்துச்சொல்வதற்காக வீட்டுக்குப் போனார்கள். இறுதியாக, சட்டரீதியான நடவடிக்கையை எடுக்கலாம் என்று அவர்கள் முடிவுசெய்தபோது எமிலி உடைந்துபோய் அழுதார். இதுதான் நல்ல சமயம் என்று உடனடியாக உடலை அடக்கம் செய்துவிட்டனர்.
அப்போதுகூட அவருக்குப் புத்தி பேதலித்துவிட்டது என்று நாங்கள் சொல்லவில்லை. அவருடைய நிலைமையில் அதைத்தான் செய்ய முடியும் என்று நம்பினோம். அவரை மணமுடிப்பதற்காக வந்த இளைஞர்கள் எல்லோரையும் தந்தை விரட்டி அடித்தது நினைவுக்கு வந்தது. எல்லா மனிதர்களையும் போலவே பிடிப்பே இல்லாமல் தனித்துவிடப்பட்ட நிலைமையில் தன் வாழ்க்கையை எது சூறையாடிற்றோ அதையே பிடித்து வைத்துக்கொள்ள முயன்றார் என்பதைப் புரிந்துகொண்டோம்.
3
நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் எமிலி. அடுத்து அவரைச் சந்தித்தபோது முடியைக் குட்டையாக வெட்டிக்கொண்டு சிறுமியைப் போல இருந்தார். அவருடைய உருவம் தேவாலயத்தின் வண்ணமயமான ஜன்னல்களில் இருக்கும் துயரமும் அமைதியும் ஒருங்கே தவழும் தேவதைகளை ஒத்திருந்தது.
அந்தச் சமயத்தில்தான் ஊரில் இருந்த நடைபாதைகளைப் பாவுவதற்காக ஒப்பந்த முறையில் வேலை ஒதுக்கப்பட்டிருந்தது. எமிலியின் தந்தை இறந்துபோன கோடையில்தான் அதற்கான பணிகள் துவக்கப்பட்டன. கட்டுமான நிறுவனத்தின் வேலையாட்களும் கோவேறுக் கழுதைகளும் இயந்திரங்களும் வந்துசேர்ந்தன. கூடவே ஹோமர் பேர்ரன் என்ற அமெரிக்க மேற்பார்வையாளரும் வந்தான், இயந்திரங்களையும் கருவிகளையும் தயார்செய்யும் பொறுப்பில் இருந்தான். உயரமாக, கறுத்த மேனியோடும் கனத்த குரலோடும் இருந்தான். கண்கள் அவனுடைய முகத்தைவிட வெளுத்த நிறத்தில் இருந்தன. அவன் வேலையாட்களைக் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுவதையும் வேலையாட்கள் பெரிய சுத்தியல்களை உயர்த்தும்போதும் கீழே இறக்கும்போதும் பாடுவதையும் கேட்பதற்காகச் சின்னப் பையன்கள் கூட்டமாகத் திரிந்தனர். சீக்கிரமாகவே ஊரில் இருக்கும் எல்லோருக்கும் அறிமுகமாகிவிட்டான். ஊர்ச் சதுக்கத்தில் சிரிப்பொலி அதிகமாகக் கேட்டால் கூட்டத்தின் மத்தியில் ஹோமர் பேர்ரன் இருக்கிறான் என்று தெரிந்துகொள்ளலாம். கொஞ்ச நாளில் ஞாயிற்றுக்கிழமை மதியங்களில் அவனும் செல்வி எமிலியும் ஒன்றுபோல இருக்கும் செம்பழுப்பு நிறம்கொண்ட குதிரைகள் இழுத்துச்செல்லும் மஞ்சள் சக்கரங்கள் கொண்ட குதிரைவண்டியில் வெளியே போக ஆரம்பித்தார்கள்.
முதலில் செல்வி எமிலிக்கு பிடித்த மாதிரி ஒருவர் கிடைத்தாரே என்று மகிழ்ந்தோம். “கிரியர்சன் குடும்பத்தவர்கள் போயும் போயும் வடக்குப் பகுதியில் இருந்துவந்த தினக்கூலிக்கு வேலை செய்பவனை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்,” என்று ஊர்ப் பெண்கள் பேசிக்கொண்டார்கள். வயதானவர்களோ என்னதான் துக்கம் இருந்தாலும் ஒரு உண்மையான சீமாட்டி தன்னுடைய உயர்குடியின் கடமையை மறந்துவிட முடியாது என்றனர். உயர்குடியின் கடமை என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல், “பாவம் எமிலி. சொந்தக்காரர்கள் வந்து புத்தி சொல்ல வேண்டும்,” என்றுமட்டும் சொன்னார்கள். எமிலியின் உறவினர்கள் அலபாமாவில் இருந்தார்கள். ஆனால் பல வருடங்களுக்கு முன்னரே அந்தப் புத்தி பேதலித்த வயதான வையாட் அத்தையின் சொத்து குறித்து எமிலியின் தந்தை அந்தச் சொந்தக்காரர்களோடு சண்டை பிடித்திருந்தார். அதுமுதல் இரண்டு குடும்பத்துக்கும் பேச்சுவார்த்தை நின்றுபோனது. தந்தையின் இறப்பின்போதுகூட யாரும் வரவில்லை.
“பாவம், எமிலி” என்று வயதானவர்கள் சொல்லத் துவங்கிய உடனேயே ஊர் மக்கள் முணுமுணுக்க ஆரம்பித்தனர். “அது உண்மை என்று நினைக்கிறாயா?” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். “ஆமாம், உண்மைதான். வேறு என்னவாக…” என்று கையால் வாயை மறைத்துக்கொண்டு பேசத் துவங்கினார்கள். பெண்கள் பட்டாடைகளும் சாட்டின் உடைகளும் சரசரக்க ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்துச் சூரியனை மறைக்கும் கண்ணாடிப் பலகைகள் பொருத்திய ஜன்னல்களின் பின்னே நின்றுகொண்டு பேசினார்கள். ஒரே மாதிரி இருந்த ஜோடிக் குதிரைகளின் குளம்பொலி சீராக ஒலித்தபடி அவர்களைக் கடந்து சென்றபோது, “பாவம் எமிலி” என்றனர்.
எமிலியின் உயர்குடி இறுமாப்பு கீழே விழுந்தது என்று நாங்கள் எல்லோரும் எண்ணியபோது அவளோ தன் தலையை உயர்த்திப் பிடித்தபடி வளைய வந்தாள். கிரியர்சன் தலைமுறையின் கடைசிப் பிரதிநிதி என்ற வகையில் தன் தகுதிக்குண்டான அங்கீகாரத்தை முன்னெப்போதையும்விட அதிகமாகக் கோருவதாக எங்களுக்குத் தோன்றியது. யாராலும் எதனாலும் தன்னை எளிதில் தொட்டுவிட முடியாது என்பதை உறுதிசெய்வதைப் போல இருந்தது. ஆர்சனிக் என்ற விஷத்தை வாங்கும்போது நடந்ததைப் போல. “பாவம் எமிலி,” என்று ஊர்மக்கள் சொல்லத் தொடங்கி ஒரு வருடமான பிறகு அவளுடைய இரண்டு பெண் உறவினர்களும் அவளைப் பார்ப்பதற்காக வந்திருந்த சமயம் அது.
“எனக்குக் கொஞ்சம் விஷம் வேண்டும்,” என்று மருந்துக் கடைக்காரரிடம் கேட்டபோது எமிலிக்கு வயது முப்பதுக்கு மேல் ஆகியிருந்தது. இன்னமும் மெலிந்த உடலோடு, ஆனால் முன்னைவிட இளைத்துப் போயிருந்தார். நெற்றிப்பொட்டையும் கறுத்த கர்வம்கொண்ட களையிழந்த கண்களைச் சுற்றியும் முகத்தின் தசை சுருக்கம் விழுந்து இறுகியிருந்தது. “எனக்குக் கொஞ்சம் விஷம் வேண்டும்,” என்றார்.
“கண்டிப்பாகத் தருகிறேன், செல்வி எமிலி. என்ன மாதிரியான விஷம்? எலியைப் போன்ற பிராணிக்கா? நான் எதைப் பரிந்துரை…”
“உன்னிடம் இருப்பதிலேயே சிறந்தது வேண்டும். எது என்பது குறித்து கவலையில்லை.”
பல விஷங்களின் பெயரை ஒப்பித்தான் கடைக்காரன். “இவையெல்லாம் ஒரு யானையைக்கூட கொன்றுவிடும். ஆனால் உங்களுக்குத் தேவையானது…”
“ஆர்செனிக். அது நன்றாக வேலை செய்யுமா?” என்றார் எமிலி.
“அது நன்றாக… ஆர்செனிக். ஆமாம், ஆனால் உங்களுக்குத் தேவையானது….”
“எனக்கு ஆர்செனிக் வேண்டும்.”
மருந்துக் கடைக்காரன் அவரைப் பார்த்தான். எதற்கும் அசைந்து கொடுக்காமல் முகத்தை நேராக வைத்துக்கொண்டு அவரும் அவனைப் பார்த்தார். “சரி, உங்களுக்கு அதுதான் வேண்டுமென்றால் தருகிறேன். ஆனால் அதை எதற்குப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதைச் சொல்லவேண்டும் என்ற சட்டம் இருக்கிறது.”
எமிலி தலையைச் சற்று பின்னால் சாய்த்து அவனைக் கண்ணோடு கண் பார்த்து முறைத்தார். அவன் கண்களை விலக்கிவிட்டு நகர்ந்துபோய் சத்தமில்லாமல் ஆர்செனிக்கைப் பொட்டலம் கட்டினான். மருந்துக் கடைக்காரன் அதன்பிறகு அந்தப் பக்கமே வரவில்லை. கடையின் கறுப்பினச் சிப்பந்தி பொட்டலத்தைக் கொண்டுவந்து கொடுத்தான். வீட்டுக்குப் போய் பொட்டலத்தைப் பிரித்தபோது உள்ளே இருந்த பெட்டிமீது மண்டையோடும் இரட்டை எலும்புச் சின்னமும் அதற்குக் கீழே ‘எலிகளுக்காக’ என்ற வாக்கியமும் இருந்தது.
4
“அவள் தற்கொலை செய்துகொள்ளப் போகிறாள்.” அதுதான் சிறந்த முடிவாக இருக்கும் என்று அடுத்த நாளே எல்லோரும் பேசிக்கொண்டோம். முதன்முதலில் அவளை ஹோமர் பேர்ரனுடன் பார்த்தபோது, “அவனைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறாள்,” என்று பேசினோம். ஹோமர் தனக்குத் திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் இல்லை என்றும் ஆண்களைத்தான் பிடிக்கும் என்றும் சொன்னான். எல்க்ஸ் கிளப் மதுக்கூடத்தில் இளவயது ஆண்களோடு மது அருந்தினான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். என்றாலும், “அவன் மனதை மாற்றிவிடுவாள்,” என்று பேசிக்கொண்டோம். ஞாயிற்றுக்கிழமை மதியங்களில் பளபளக்கும் குதிரைவண்டியில் தலையை உயர்த்திப் பிடித்தபடி எமிலியும் தலையில் ஒரு பக்கமாகச் சரிந்த தொப்பியும் பற்களுக்கிடையே சுருட்டும் மஞ்சள் நிறக் கையுறையை அணிந்த கைகளில் சாட்டையையும் குதிரையின் வாரையும் பிடித்தபடி ஹோமரும் வெளியே செல்வார்கள். அப்போதெல்லாம் கண்ணாடிப் பலகைகள் பொருத்திய ஜன்னல்களுக்குப் பின்னால் நின்றபடி “பாவம் எமிலி,” என்று பேசிக்கொண்டோம்.
அவர்கள் இப்படிச் செய்வது ஊருக்குத் தலைகுனிவைத் தரும் விஷயமென்றும் இளையவர்களுக்குத் தவறான எடுத்துக்காட்டு என்றும் சில பெண்கள் பேச ஆரம்பித்தனர். ஆண்கள் முதலில் இந்த விஷயத்தில் தலையிட விரும்பவில்லை என்றாலும் பெண்களின் வற்புறுத்தலால் பாப்டிஸ்ட் தேவாலயத்தின் பாதிரியாரிடம் எமிலியைச் சந்தித்துவிட்டு வருமாறு கேட்டுக்கொண்டார்கள். எமிலியின் குடும்பமோ எபிஸ்கோபல் பிரிவைச் சேர்ந்தவர்கள். அந்தச் சந்திப்பின் போது என்ன நடந்தது என்பதைப் பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டார் பாதிரியார். கூடவே மீண்டும் எமிலியைச் சந்திக்க மறுத்துவிட்டார். அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் அவர்கள் அதேபோல வெளியே சென்றார்கள். அதற்கடுத்த நாள் பாதிரியாரின் மனைவி அலபாமாவில் இருக்கும் எமிலியின் உறவினர்களுக்குக் கடிதம் எழுதினார்.
இப்படியாக எமிலியோடு இரத்த சம்பந்தம் உள்ளவர்கள் மீண்டும் அவருடைய வீட்டுக்கு வந்தார்கள். நாங்களும் என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை பார்ப்பதற்குத் தயாரானோம். முதலில் எதுவுமே நடக்கவில்லை. பிறகு அவர்கள் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று உறுதியாக எண்ணினோம். ஏனென்றால் எமிலி நகைக்கடைக்குப் போய் ஆண்கள் பயன்படுத்தும் எளிய ஒப்பனைப் பொருட்களை வெள்ளியில் செய்து அவை ஒவ்வொன்றிலும் H. B. என்ற எழுத்துகளைப் பொறித்துத் தருமாறு கேட்டுக்கொண்டார் என்பது தெரியவந்தது. இரண்டு நாட்கள் கழித்து, ஆண்களுக்கான உடைகளையும் இரவுநேரத்தில் அணிந்துகொள்ளும் நீண்ட அங்கி ஒன்றையும் வாங்கினார் என்பது தெரியவந்தது. “திருமணம் செய்துகொண்டுவிட்டார்கள்,” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டோம். இப்போது உண்மையாகவே மகிழ்ந்தோம். ஏனெனில் அந்த இரண்டு பெண் உறவினர்களும் எமிலியை விடவும் அதிகமாக கிரியர்சன் குடும்பத்தின் இயல்புகளைக் கொண்டிருந்தனர்.
அதனால் கொஞ்ச நாள் கழித்து ஹோமர் பேர்ரனைப் பார்க்க முடியாத போது எங்களுக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. நடைபாதை பாவும் வேலையும் முடிந்திருந்தது. இந்த நிகழ்வு எல்லோருக்கும் தெரியும் வகையில் முடியவில்லை என்பதில் எங்களுக்குக் கொஞ்சம் வருத்தம்தான். இருந்தாலும் தன்னுடைய ஊருக்குப் போய் எமிலியின் வரவுக்காகத் தன் குடும்பத்தைத் தயார்செய்யப் போயிருக்கிறான் என்று நினைத்தோம் அல்லது அவளுடைய அந்தப் பெண் உறவினர்களை ஊருக்கு அனுப்பிவைக்க அவகாசம் கொடுத்திருக்கிறான் என்று நினைத்தோம். இதற்குள்ளாக நாங்கள் எமிலியின் இரகசிய சூழ்ச்சிக் குழுவின் உறுப்பினர்கள் ஆகியிருந்தோம். அந்த உறவினர்களை அனுப்பிவைக்க எமிலிக்கு உதவும் நண்பர்களானோம். நினைத்தது போலவே, அடுத்த வாரத்தில் அந்தப் பெண்கள் கிளம்பிவிட்டார்கள். எதிர்பார்த்தது போலவே அதற்கடுத்த மூன்று நாட்களில் ஹோமர் பேர்ரன் திரும்பி வந்தான். ஓர் அந்தி நேரத்தில் சமையலறை வாசலின் வழியாக அந்தக் கறுப்பின வேலைக்காரன் கதவைத் திறந்து அவனை உள்ளே அனுமதிப்பதைப் பக்கத்து வீட்டுக்காரர் பார்த்தார்.
அதுதான் ஹோமர் பேர்ரனை நாங்கள் கடைசியாகப் பார்த்தது. எமிலியையும் கொஞ்ச நாட்களுக்குப் பார்க்க முடியவில்லை. கறுப்பின வேலைக்காரன் கூடையைத் தூக்கிக்கொண்டு கடைத்தெருவுக்குப் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தான், ஆனால் வீட்டின் வாயிற்கதவு எப்போதும் மூடியே இருந்தது. அவ்வப்போது ஜன்னலருகே எமிலியை ஒரு சில நொடி பார்ப்போம், சுண்ணாம்பைத் தெளிக்க ஆட்கள் போனபோது பார்த்த மாதிரி. ஆனால் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பார்க்கவே முடியவில்லை. எமிலியின் வாழ்வை நசுக்கிச் சிதைத்த அவரது தந்தையின் இயல்பு இன்னமும் நச்சுத்தன்மையோடும் கோபத்தோடும் விடமால் துரத்துகிறது என்று நினைத்துக்கொண்டோம்.
அடுத்த முறை எமிலியைப் பார்த்தபோது உடல் பெருத்திருந்தது, தலைமுடி நரைக்க ஆரம்பித்திருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கொஞ்சங்கொஞ்சமாக நரைத்து ஒரு கட்டத்தில் தலைமுழுவதும் உப்புத்தூளும் மிளகுத்தூளும் கலந்த நிறத்துக்கு மாறியது. அத்தோடு நரைப்பதும் நின்றுவிட்டது. எழுபத்து நான்கு வயதில் அவர் இறந்த சமயத்திலும் நன்றாக ஓடியாடிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனுடைய முடியைப் போலவே சாம்பல் வண்ணத்தில் இருந்தது.
அன்று முதல் அவருக்கு நாற்பது வயதாகும்வரை வீட்டு வாயிற்கதவு மூடியே இருந்தது. இடையே ஆறு அல்லது ஏழு வருடங்களுக்குச் சீன ஓவியங்களை வரையக் கற்றுக்கொடுத்த சமயம் தவிர. வீட்டின் கீழ்ப்பகுதியில் இருந்த அறையொன்றை வரையக் கற்றுக்கொடுக்கும் வகுப்பாக மாற்றினார். கர்னல் சர்ட்டோரிஸின் வயதொத்தவர்களின் மகள்களும் பேத்திகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்துக்குச் செல்வதைப் போன்ற சிரத்தையுடன் வகுப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கூடவே வசூல் செய்யும் தட்டில் போடும் 25 செண்ட் காசையும் எடுத்துவந்தனர். அந்த நேரத்தில் எமிலியின் வரியும் செலுத்தப்பட்டு இருந்தது.
அதற்குப் பிறகு ஒரு புதிய தலைமுறை ஊரின் முதுகெலும்பாகவும் ஆன்மாவாகவும் மாறியது. ஓவிய மாணவர்களும் வளர்ந்து பெரியவர்களானார்கள். வண்ணக் குப்பிகளோடும் நீண்ட தூரிகைகளோடும் பெண்கள் பத்திரிகைகளில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட அலுப்பூட்டும் படங்களோடும் அவர்களுடைய குழந்தைகளை ஓவியம் கற்றுக்கொள்ள அனுப்பிவைக்கவில்லை. கடைசி மாணவி போனபிறகு சாத்தப்பட்ட வீட்டு வாயிற்கதவு அதன்பிறகு மூடியே இருந்தது. ஊருக்கு இலவச தபால் சேவை வந்தபோது தன் வீட்டுக் கதவின்மீது உலோக எண்ணையும் தபால் பெட்டியையும் பொருத்த அனுமதிதர மறுத்தார் எமிலி. அவர்கள் சொல்வது எதையும் கேட்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார்.
ஒவ்வொரு நாளும் மாதமும் வருடமும் அந்தக் கறுப்பு வேலைக்காரனின் தலைமுடி நரைப்பதையும் முதுகில் கூன் விழுவதையும் கூடையைத் தூக்கிக்கொண்டு கடைத்தெருவுக்குப் போவதையும் வருவதையும் பார்த்துக்கொண்டு இருந்தோம். ஒவ்வொரு டிசம்பர் மாதமும் அவருக்கு வரி அறிக்கையை அனுப்பிவைத்தோம். ஒரு வாரம் கழித்து அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை என்ற குறிப்புடன் தபால் அலுவலகத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது. வீட்டின் மேல்தளத்தை முழுவதுமாக மூடிவிட்டார். அவ்வப்போது கீழ்த்தளத்தில் இருந்த ஜன்னலின் வழியே மாடத்தில் நிறுவப்பட்ட செதுக்கப்பட்டச் சிலையைப் போலக் காட்சி தந்தார். எங்களை அவர் பார்த்தாரா இல்லையா என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியவில்லை. இப்படியாக தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்துகொண்டு இருந்தார் – பிரியமானவராக, தவிர்க்க முடியாதவராக, ஊடுருவ முடியாதவராக, சலனமற்றவராக, முரண்பட்டவராக.
அப்படியே ஒரு நாள் இறந்தும் போனார். எமிலி உடல்நலிவுற்றிருந்த சமயத்தில் தூசியும் நிழலும் நிறைந்த அந்த வீட்டுக்குள் அவரைப் பார்த்துக்கொள்ள கை, கால்கள் நடுங்கும் வயதான கறுப்பின வேலைக்காரன் மட்டுமே இருந்தான். அவருக்கு உடல்நலமில்லால் போனதுகூட எங்களுக்குத் தெரியவில்லை. அந்தக் கறுப்பின வேலைக்காரனிடம் இருந்து எந்தவொரு தகவலையும் பெற முடியாது என்பதால் எதைப் பற்றியும் கேட்பதை நிறுத்திவிட்டோம்.
யாரிடமும் பேச மாட்டான், ஏன், எமிலியிடமே கூடப் பேச மாட்டான் என்றுதான் தோன்றியது. பயன்படுத்தாமலே இருந்ததால் அவனுடைய குரல் துருப்பிடித்து கரகரத்துப் போயிருந்தது.
தரைத்தளத்தில் இருந்த அறையொன்றில் திரைச்சீலைகள் தொங்கும் பெரிய கனத்த வால்நட் மரக்கட்டிலில் படுத்தபடியே உயிர்நீத்தார் எமிலி. அவருடைய சாம்பல் வண்ணத் தலை சூரியவொளி படாததால் மஞ்சள் பாய்ந்து பூஞ்சை பூத்திருந்த பழைய தலையணை ஒன்றின்மீது சாய்ந்திருந்தது.
5
வீட்டுக்கு வந்த பெண்களுக்கு வாயிற்கதவைத் திறந்துவிட்ட கறுப்பின வேலைக்காரன் காணாமல் போய்விட்டான். பெண்கள் மெல்லிய குரலில் குசுகுசுவெனப் பேசியபடி வீட்டை ஆவலோடு நோட்டமிட்டனர். பின்கட்டு வாசலின் வழியே வெளியே போன வேலைக்காரனை அதற்குப் பிறகு பார்க்க முடியவில்லை.
அந்த இரண்டு பெண் உறவினர்களும் உடனே வந்துசேர்ந்தனர். இரண்டாம் நாளன்று ஈமச் சடங்குகள் நடந்தன. கடையில் மொத்தமாக வாங்கப்பட்ட பூங்கொத்துக்களுக்கு நடுவே தெரிந்த செல்வி எமிலியின் முகத்தைப் பார்க்க ஊர் முழுவதும் வந்தது. சவப்பெட்டி வைத்திருந்த மேடைக்கு மேலே மாட்டப்பட்டிருந்த மெழுகுவர்ண ஓவியத்தில் இருந்த அவளுடைய தந்தையின் முகம் ஆழ்ந்த யோசனையில் இருந்தது. கூடியிருந்த பெண்கள் கோரமான முகத்தோடு குசுகுசுவெனப் பேசிக்கொண்டு இருந்தனர். வயது முதிர்ந்த ஆண்கள் வீட்டின் முகப்பிலும் புல்வெளியிலும் நின்றுகொண்டு இருந்தனர். அவர்களில் சிலர் வெள்ளையர்களின் மீயுயர்வில் நம்பிக்கைகொண்ட தென்பிராந்தியக் குழுவான கான்ஃபெடரேட்டுக்களின் சீருடையை அணிந்திருந்தனர். எமிலி அவர்களுடைய வயதொத்தவர் என்பது போலப் பேசிக்கொண்டிருந்தனர். அவரோடு நடனமாடியதாகவும் அவரை மணம்புரியும் எண்ணத்தோடு பழகியதாகவும் எல்லா வயதானவர்களையும் போலவே காலத்தைக் கணிதத் தொடரோடு குழப்பிக்கொண்டனர். கடந்தகாலம் என்பது மறைந்துகொண்டே இருக்கும் பாதை அல்ல, எந்தப் பனிக்காலத்தாலும் தொட முடியாத பரந்த புல்வெளியைப் போன்றது என்றும் இப்போது அவர்களிடம் இருந்து அதைப் பிரித்திருப்பது போத்தலின் குறுகிய கழுத்தைப் போன்ற சில பத்தாண்டுகள் மட்டுமே என்றும் நினைத்துக்கொண்டார்கள்.
மேல்தளத்தில் ஒரு அறை இருக்கிறது என்பதும் நாற்பது வருடங்களில் அதை யாருமே பார்த்ததில்லை என்பதும் கடும் முயற்சிக்குப் பிறகுதான் திறக்க முடியும் என்பதும் எல்லோருக்குமே தெரிந்ததுதான். தக்க மரியாதையுடன் செல்வி எமிலியைக் குழிக்குள் அடக்கம் செய்தபிறகு அதைத் திறந்தார்கள்.
கதவை உடைத்துத் திறந்ததால் உள்ளே தூசி நிறைந்தது. முதலிரவுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த அறையில் இருந்த படுக்கையைச் சுற்றிலும் தொங்கிய இளஞ்சிவப்பு வண்ணத் திரைச்சீலைகளின் மீதும் இளஞ்சிவப்பு விளக்கு கவிப்புகளின் மீதும் ஒப்பனை மேசையின் மீதும் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட கண்ணாடிப் பொருட்களின் மீதும் வெள்ளியிலான ஆண்களின் ஒப்பனைப் பொருட்களின் மீதும் கல்லறையின் கடுமையான நெடி பரவியிருந்தது. வெள்ளிப் பொருட்கள் எல்லாம் மிகவும் மங்கியிருந்ததால் அவற்றின் மேல் பொறிக்கப்பட்டிருந்த பெயரின் முதல் எழுத்துகள் மறைந்துபோயிருந்தன. அவற்றுக்கு நடுவே அப்போதுதான் கழற்றி வைக்கப்பட்டது போன்ற ஒரு சட்டையின் கழுத்துப் பகுதியும் கழுத்துப்பட்டியும் காணப்பட்டன. அவற்றைக் கையில் எடுத்தபோது மேசையில் புழுதி படியாத பகுதி பிறைவடிவில் இருந்தது. நாற்காலியின் மீது நறுவிசாக மடித்து வைக்கப்பட்ட மேலங்கியொன்று இருந்தது. கீழே அசைவற்ற இரண்டு காலணிகளும் கழற்றி எறியப்பட்ட தோரணையில் இரண்டு காலுறைகளும் கிடந்தன.
அந்த மனிதன் கட்டிலின் மீது படுத்திருந்தான்.
அந்த முகத்தில் இருந்த ஆழமான பொக்கைவாய்ச் சிரிப்பைப் பார்த்தபடி வெகுநேரம் அங்கேயே நின்றிருந்தோம். அருகில் படுத்திருப்பவரைத் தழுவும் பாவனையில் கிடந்தது அந்த உடல். காதலையும் அதன் முகச்சுழிப்பையும் வெற்றிகொண்ட உறக்கம் அவனை ஏமாற்றிவிட்டிருந்தது. அவனில் எஞ்சியிருந்தது ஒரு காலத்தில் இரவுநேர அங்கியாக இருந்த ஒன்றின் கீழே மட்கிப்போய் படுக்கையோடு ஒட்டிக்கொண்டு இருந்தது. அவன் மீதும் அவன் பக்கத்தில் இருந்த தலையணையின் மீதும் பொறுமையும் காத்திருப்பும் கொண்ட புழுதி சம அளவில் போர்த்தியிருந்தது.
அப்போதுதான் பக்கத்தில் இருந்த தலையணையின்மீது தலைவைத்துப் படுத்ததால் ஏற்பட்ட குழிவைக் கவனித்தோம். எங்களில் ஒருவர் முன்னால் குனிந்து அதிலிருந்த ஒரு பொருளை கையில் எடுத்தபோது வறண்ட, கண்ணுக்குத் தெரியாத தூசி மூக்குக்குள் நுழைந்தது. அப்போதுதான் அந்தப் பொருள் நீளமான நரைத்த தலைமுடி என்பதைக் கவனித்தோம்.
*
ஆங்கில மூலம்: A Rose for Emily, William Faulkner, Collected stories, Vintage Publications, October 1995 Edition.