மழை, கொட்டும் மழை! பின்னும் மூன்று நாட்களாக விடாது தொடர்ச்சியாக அடிக்கடி சடசடத்தும் பிசுபிசுத்தும் பெய்யும் மழை.

‘பாழும் மானம் எப்பதான் தெறக்குமோ?’

ராசாத்தி அலுத்துக்கொண்டாள். ஒரே பிள்ளை. செல்லப் பிள்ளை. ஜுரமாகக் கிடக்கிறாள். ஸ்மரணையில்லாமல் குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கிறாள். மருந்து மாத்திரை சங்கதி ஒரு பக்கம் கிடக்கட்டும். கதகதப்பாகப் படுக்க வைக்க ஒரு இடம் உண்டா…

ராசாத்தி என்ன பங்களாவாசியா, கதவையும் ஜன்னலையும் இறுக்கிச் சாத்திவிட்டு கம்பளிப் போர்வைக்குள் பிள்ளையை அவையம் வைக்க! கடைநிலைவாசிகூட இல்லை. நடைபாதைவாசி. வெயில் காலத்துக்குத்தான் இந்த நடைபாதையெல்லாம் சுகம். மழை பெய்துவிட்டால் சொல்ல வேண்டியதே இல்லை.

மாடர்ன் டெய்லரிங் மார்ட்டுக்கும் அஜந்தா பிரிண்டிங் ஒர்க்ஸுக்கும் நடுவில் கொஞ்சம் இடைவெளி. அந்த இடைவெளியில் மூங்கில் குச்சிகளைக் கட்டி மேலே கந்தல் கோணிகளை விரித்து ஜாலவித்தை மாதிரி கட்டிப் பிணைத்திருப்பதுதான் அவளுக்கு இருப்பிடம். கணவன் சவுரிமுத்துக்குக் கைரிக்ஷாவில் வருமானம். கலியாணங் கட்டி நாலு வருஷங்கள் ஆகியிருக்கலாம். முதல் பையன் இரண்டு பேரின் பிரியத்துக்கும் ஏகபோகமான வாரிசாக ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்டவன். அந்த முண்டகண்ணியம்மனுக்கு கண்ணில்லையோ என்னவோ… ஒரு வயசிலேயே காலராவில் திடீரென்று போய்விட்டான். இவள் இரண்டாவது. மூன்று வயது இருக்கும். அடைமழை நாளில் இதோ இப்படி ஜுரம் வந்து படுத்துவிட்டாள்.

சாக்குப் பொத்தல்களில் தேங்கி வழியும் நீருக்குக் கண்ணாடிக் காகிதத்தையெல்லாம் ஒருவாறு குடை கட்டி பிள்ளையை ஒழுகாத இடமாகப் பார்த்து நகர்த்திப் படுக்க வைத்தாள் ராசாத்தி.

‘ஏமே, நான் வரட்டுமா… புள்ளைய பத்திரமா பாத்துக்க.’

‘ஏந்தே, இந்த மழையில எங்க போற? புள்ளைக்கு வேற இந்த மாதிரி இருக்கு.’

‘சும்மா குந்திக்னு இருந்தா பொழப்பு எப்பிடி? மணி எட்டுதான் ஆவுது. இன்னும் ஒரு மணி ரெண்டு மணி வரிக்கும்கூட சவாரி போலாமே… மழையில போனாதான் மழை கிழைன்னு சொல்லி கூட ரெண்டணா சம்பாரிக்கலாம். சவாரிக்கும் கெராக்கி இருக்கும்.’

‘எங்கியும் தொலவட்டா போவாத. கிட்டத்துலியே சவாரி புடிச்சிக்னு சீக்கிரமா வந்து சேரு.’

‘இருக்கற துட்டுக்கு சோனுகுட்டி கடையில ரொட்டி வாங்கிக் குடு. நான் அதுக்குள்ளாற வந்திடறேன். புள்ளை பத்தரம். வுட்டுட்டு எங்கியும் பூடாதே.’

சவுரிமுத்து ரிக்ஷாவை இழுத்துக்கொண்டு சளசளக்கும் நீரில் ஓடினான். ராசாத்தி பழைய புடவையைப் போட்டு பிள்ளைக்குக் குளிராமல் போர்த்திவிட்டாள். குழந்தையின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

இரவு. ஹோஹோவெனப் பேய்க்காற்றும் மழையும் சேர்ந்து மரங்களையும் குடியிருப்புகளையும் சூறையாடியது. பகலெல்லாம் பிசுபிசுத்த மழை இரவு கொண்டாட்டத்தோடு வெறியாட்டம் ஆடியது. சாலைகளில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கிப் போக்கிடமின்றித் தளும்பியது. கடைகளெல்லாம் சாத்தியாகிவிட்டது. சவுரிமுத்து இன்னும் திரும்பவில்லை. எங்காவது தூரத்துச் சவாரி போய் நேரமாகிவிட்டால் அங்கேயே படுத்துக் கிடந்துவிட்டு காலையில் வரும். புள்ளைக்கு இந்த மாதிரி இருக்கும்போது எங்கே போயிருக்கும்? 

சாக்குப் படுதாவும் மூங்கில் குச்சுகளும் பயனற்றுப் போய்விட்டன. அவள் வீட்டுக்குள் கரண்டைக் காலளவு தண்ணீர். தெருவில் மின்கம்ப விளக்குகளையும் மழைத் தண்ணீரையும் வாடைக் காற்றையும் தவிர வேறெதுவும் இல்லை.

ராசாத்தி குழந்தையை ஓரளவு சாரல் படாத பழைய அழுக்குத் துணிகள் மேல் சுவர் ஓரம் கிடத்திவிட்டு பிரமையோடு நின்றாள், என்ன செய்வதென்று புரியாமல். தண்ணீரில் மிதக்க ஆரம்பித்த ஒன்றிரண்டு அலுமினியப் பாத்திரங்களை எடுத்து, மூடிக்கிடந்த கடைக்கு முன்னே ஒரு ஆள் படுக்குமளவு ஒரு படியிருக்குமே, அதில் வைத்தாள். நனைந்து ஊறிப் போய்விட்ட துணிகளையெல்லாம் தலைக்கு மேலேயே ஒரு கயிறு கட்டி உலரப் போட்டுவிட்டுத் தானும் அந்தப் படியிலேயே ஒண்டி உட்கார்ந்தாள்.

குழந்தை ‘ம்மா… ம்மா…’ என்று முனகினாள். அம்மாவை கைகளால் துழாவி, ‘எங்கம்மா இருக்குற? எனக்கு பயம்மா இருக்குதும்மா…’ என்றாள். தொட்டுப் பார்த்தால் அந்தக் குளிரிலும் நெற்றி நெருப்பாய்ச் சுட்டது.

சுழன்றுச் சுழன்று அடிக்கும் காற்றுக்கு அந்த இடம் எம்மாத்திரம்? நீரை வாரியிறைக்கும் சாரலில் ராசாத்தி தெப்பமாய் நனைந்தாள். பிள்ளையும். அவளுக்கே பல் கிட்டி வெடவெடத்தது. குழந்தைக்கு…!

அவள் பதறிப் போய்விட்டாள்.

இப்படியே கிடந்தால் குழந்தை விறைத்துப்போகும். இதையும் பறிகொடுத்து விடக்கூடாது.

அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். எல்லாக் கடைகளும் வீடுகளும் மூடிக்கிடந்தன.  என்ன செய்வதென்று புரியாமல் குழந்தையின் மேல் போர்த்தியிருந்த ஈர வேட்டியை எடுத்து பிழிந்து போட்டு, கட்டியிருந்த ஈரப் புடவையை அவிழ்த்து நன்கு பிழிந்து அதையே சுற்றிக்கொண்டு, தோளில் தூக்கிய குழந்தையுடன் மழையில் நனைந்தபடியே சென்று இரண்டொரு வீட்டுக் கதவுகளைத் தட்டினாள். எதுவும் திறக்கப்படவில்லை. ஒரு மகானுபாவன் மட்டும் விழித்திருந்தார். கதவைத் திறந்தார். ‘அதெல்லாம் இங்க ஒன்னும் இடங்கிடையாது. போ போ’ என்று கதவைச் சாத்த இருந்தவரை, ‘ஏதாவது பழைய வேட்டி, புடவை இருந்தா குடுங்களேன்’ என்று கேட்டாள். ‘இப்ப ராத்திரியில அதெல்லாம் பாக்க முடியாது. காலைல வா பாப்பம்’ என்று சட்டென்று கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார்.

ஏமாற்றமும் வெறுப்பும் சூழ அடுத்தடுத்த கதவுகளைத் தட்டிக்கொண்டேயிருந்தாள். கடைசியில் ராயல் டெய்லரிங் கடைக் கதவு திறந்தது. பெரும்பாலும் உள்ளே இரவில் யாரும் இருக்க மாட்டார்கள். தீபாவளி சீசன். தைத்துப் போட்ட துணிகளுக்கு காஜா எடுத்து பட்டன் கட்டிக்கொண்டிருந்தான் சொக்கலிங்கம்.

இளமைக்கு எப்போதுமே அழகு, கவர்ச்சிதான். அதுவும் மழையில் துப்புர நனைந்து, வெறும் பாவாடை, ரவிக்கையுடன் அதுவும் பிரயோசனப்படாமல் பிதுங்கிக்கொண்டு காட்சி தரும்போது ‘வா வா… உள்ளே வா…’ என்று தாராளமாய் வரவேற்றான் சொக்கு.

ராசாத்தி உள்ளே நுழைந்து ‘நல்லாயிருக்கணும். இந்த ராத்திரியில எந்தப் பாவியும் கதவெத் தெறக்க மாட்டன்னிட்டானுங்க. நீ மவராசனா இருக்கணும்’ என்று மழையில் ஊறிய புடவையைப் பிழிந்து பிள்ளையை ஈரம் போகத் துவட்டி, மடியில் கிடத்திக்கொண்டு ஒரு மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்தாள்.

சொக்கு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

‘யாருது புள்ள?’

‘எம் புள்ளதான். மூணு நாளா ஜொரம்.’

‘அடப்பாவமே… மழையில வேறெ நனைஞ்சிட்டிருக்குது. அதிகமாயிடுமே. இந்தா சூடா இந்த காபியெ வேணும்னா குடு…’ என்று பிளாஸ்க்கிலிருந்து கொஞ்சம் காபியை ஊற்றிக் கொடுத்தான்.

ராசாத்தி பிள்ளைக்கு அதைக் குடிப்பாட்டினாள். குழந்தையின் பிதற்றல் மட்டும் அடங்கவில்லை.

அறை கதகதப்பாயிருந்தது. ஒரு துணியில்கூட ஈரம் என்பதே இல்லை. வெளியில் பெய்யும் மழையும் காற்றின் சப்தமும் தவிர உள்ளே அதன் தாக்கம் கொஞ்சமும் தெரியவில்லை.  ராப்பொழுது மட்டும் குழந்தையோடு தங்க இடம் கொடுத்தானானால் பரவாயில்லை.

சொக்குவும் கொஞ்சம் காபியை ஊற்றிக் குடித்துவிட்டு, ஒரு சிகரெட்டைக் கொளுத்தியபடி, ராசாத்தியைப் பார்த்து, ‘நீயும் கொஞ்சம் காபி குடியேன். சூடா… இதமாயிருக்கும்’ என்றான்.

‘வேணாம்.’

அவன் ராசாத்தியைத் தெருவில் கண்டதுதான். பேசியதில்லை. இப்போது கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டது போல் கூர்ந்து பார்த்தான். இயற்கையாகக் கண்ணைச் சிமிட்டும் நேரத்தைக்கூட மறந்து வியப்போடு பார்த்தான். அக்கறையோடு அவளைப் பற்றியும் பிள்ளையைப் பற்றியும் ஏதேதோ விசாரித்துவிட்டு ஒரு இரண்டு ரூபாய் நோட்டை எடுத்து அவள் கையில் திணித்தான்.

ராசாத்தி ஒன்றும் புரியாமல் அவன் கருணையை உள்ளூர பாராட்டியபடி, ‘வேணாய்யா. துட்டுக்கு ஒன்னும் கஷ்டங் கெடையாது. தோ என் மச்சான் வந்துடும்’ என்றாள்.

‘பரவாயில்ல வச்சுக்கோ.’

‘வேணாம் வேணாம்.’

‘ஏன் வேணாம்ன்ற…?’ என்று அவளை நெருங்கி தோளில் கை வைத்தான் சொக்கு. அவளருகே அமர்ந்து இடுப்பைச் சுற்றி வளைத்துப் பிடித்தான்.

இந்தத் தொடுகையில் எந்தவித விருப்போ வெறுப்போ எதுவும் இல்லாமல் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சுரணையற்றவள் போல் கிடந்த ராசாத்தி, ஒரு கணம் நிதானித்தாள்.

இது மிக நல்ல தருணம்தான்… இதை மறுத்தால் என்ன ஆகும்? மின்னலைப் போல பல காட்சிகள் அவள் கண்முன்னே வெட்டின. 

‘யோவ்… இந்தப் புள்ள மட்டும் இங்கியே இருக்கட்டும். நா வேணா வெளியவே நின்னுக்கறேன். காயலாகாரப் புள்ள. ஒரே புள்ள. இன்னிக்கு மட்டும்…’ என்று கெஞ்சினாள்.

ராசாத்தியின் மறுப்பையும் நிராகரிப்பையும் சகிக்க முடியாத, ஏற்க இயலாத சொக்கு சீற்றம் கொண்டு, ‘அதுமட்டும் என்னா கொசுறு. தூக்கு தூக்கு. உங்களுக்கெல்லாம் பாவ புண்ணியமே பாக்கக்கூடாது’ சொக்கு முடிவாகக் கறாராய்ச் சொல்லிவிட்டான்.

ராசாத்தி சற்றுநேரம் அவனையே பரிதாபமாகப் பார்த்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவள் முகத்தில் இருந்த இறுக்கம் தளர்ந்தது.

சட்டென்று உரிமையோடு உள்ளே நுழைந்தாள். ‘யோவ், ஒரு பழைய துணி இருந்தா எடு.’ குழந்தையை நன்றாகத் துவட்டினாள். ‘அந்த மெத்தைய இந்தப் பக்கமா இழுத்துப் போடு. அந்தத் தலையணையக் கொண்டா’ என்று அடுக்கடுக்காக கட்டளைகள்.

சொக்கு மை வைத்து வசியப்பட்டவன் மாதிரி செயல்பட்டுக்கொண்டிருந்தான்.

அடுத்த சில நிமிடங்களில்…

கடையின் ஷட்டர் கீழே கொஞ்சம் இடைவெளிவிட்டு இறக்கி விடப்பட்டது. 

இரவு விளக்கு போடப்பட்டு தற்போது நடப்பில் இருந்த விளக்கு அணைக்கப்பட்டது. பிள்ளை வெதுவெதுப்பான பஞ்சு மெத்தையில் இரண்டு பக்கமும் கதகதப்பான தலையணை அணை தர, பேண்ட் தைக்கக் கொடுத்திருந்த துணியைப் போர்த்துக்கொண்டு படுத்திருக்க, ராசாத்தி மட்டும் வெறுந்தரையில் மல்லாந்து கிடந்தாள் மரக்கட்டை மாதிரி.