சிறுகோட்டுப் பெரும்பழம்

by மானசீகன்
1 comment

பாலத்தில் நின்றபடி ஆர்த்தி காவிரியையே பார்த்துக்கொண்டிருந்தாள். கும்பகோணத்துக் காவிரி குறும்புகள் நிறைந்த பெண். அதே காவிரி திருச்சியில் சலனங்களில்லாத துறவியைப் போல் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. மண்ணுக்குத் தகுந்தாற் போல் நதியின் குணம் மாறுமா? ஒரு தண்ணீர்ப் பாம்பு தலையை மட்டும் தூக்கியபடி மிதந்துகொண்டிருந்தது. மாலைப்பொழுது மெல்ல மசங்கி இருட்டின் ஆதிக்கம் ஆரம்பித்திருந்தது. இரவு ஒரு போர்வையைப் போல் நீண்டு மனிதர்களை மூடிக்கொள்வதாக ஆர்த்திக்குத் தோன்றியது. உண்மையில் இரவென்பதே கண்ணாடி பார்த்தல்தான். பகல் பொழுதில் அவரவர் போட்டுக்கொண்ட வேஷங்களை இரவுதானே பாம்பின் சட்டையைப் போல் உரித்துப்போட்டு அப்பட்டமான நிர்வாணத்தை உணர வைக்கிறது? அவளைத் தவிர்த்த பிறர் நதியைப் பார்க்காமல் திரும்பி நின்று சாலையையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

சாலைக்கும் காவேரிப் பாலத்திற்கும் நடுவிலிருந்த பிளாட்பாரம்தான் திருச்சிக்காரர்களுக்கு பீச் மாதிரி. குழந்தைகளோடு வருகிற குடும்பங்கள், புதுமணத் தம்பதிகள், காதலர்கள், நண்பர்கள் சூழ வந்திருக்கும் ஆண்கள், பெண்கள் என்று யாருமே அங்கு தனியாக இல்லை. ஆர்த்தி மட்டும்தான் ஒற்றை ஆளாக நின்று நதியை வெறித்துக்கொண்டிருந்தாள். மற்றவர்களுக்கெல்லாம் நதி வெறும் சாக்கு. அதைப் பார்க்க வருவதாகச் சொல்லிக்கொண்டு அவர்கள் நதியை அம்போவென்று விட்டுவிட்டு கூட வருகிறவர்களுடன் உறவாட ஆரம்பித்துவிடுகிறார்கள். பாவம் இத்தனை பேர் சுற்றி நின்றும் காவிரியும் தனிமையில்தான் இருக்கிறது‌. சின்ன வயதில் இருந்தே அவளுக்கும் துணையாக இருப்பது தனிமைதான்.

ஒரு பையன் பெண்ணின் இடுப்பில் கை போட்டபடி அவளை நெருக்கமாக உரசிக்கொண்டிருந்தான். அவள் வெட்கப்படுவது போல் நடித்தபடி அவன் லீலைகளை இரசித்துக்கொண்டிருந்தாள். யாரும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை என்பது ஆர்த்திக்கு ஆச்சரியமாய் இருந்தது. இதே மாதிரி ஏதாவதொரு  தெருவில் இவர்கள் இப்படி நின்றிருந்தால் இதே மனிதர்கள் சும்மா இருந்திருப்பார்களா? இதுவும் பொது இடம்தானே? மனித மனம் ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தாற்போல் தன்னைத் தயார்செய்து தகவமைத்துக் கொள்கிறது. ‘கோடுகளைத் தாண்டாமல் எப்படி வேண்டுமானாலும் இருந்துகொள்’ என்பதுதான் இந்தச் சமூகம் நமக்குச் சொல்லும் சாதுர்யமான அறிவுரை. சித்தியும் அதைத்தானே சொன்னாள்?

“பாரு ஆர்த்தி.. நா ஒன்னைய கண்காணிக்கிறதுக்கு போலீஸோ ஒங்க அம்மாவோ இல்ல. கார்டியன், வெறும் கார்டியன். ஒங்கப்பா எந்தலைல பார்த்து ஒன்னய கட்டி விட்டுட்டாரு. அதனால எனக்கும் சில பொறுப்புகள் இருக்கு. நீ என்ன செய்ற, யாருகூட சுத்தறன்னெல்லாம் நா கூடவே வந்து பாத்துட்டு இருக்க முடியாது. ஆனா கல்யாணம் மட்டும் நா சொல்ற மாதிரிதான் நடக்கணும். நீயா எந்த முடிவும் எடுத்துரக் கூடாது. இதுக்கு சம்மதிச்சா எங்கூட இரு. இல்லன்னா இந்த சொத்து பத்திரத்தையெல்லாம் தூக்கிட்டு ஒங்கப்பாட்டயே போயிடு. மத்தபடி எப்படி நடந்துக்கணும்னு நா ஒனக்கு சொல்லப் போறதில்லை. உனக்கே நல்லது, கெட்டது தெரியும். இந்த ஒன்னுக்கு மட்டும் சத்தியம் பண்ணிக்கொடு”.

சித்தியின் கைகள்கூட சொத்துப் பத்திரங்களைப் போலவே காட்சியளித்தன. சத்தியம் செய்த கரங்களைப் பற்றிக்கொண்டு சித்தி கொஞ்ச நேரம் அழுதாள். தன் அக்காவை நினைத்துத்தான் அழுவதாக நான் நம்பிவிடுவேன் என்று நினைத்திருக்கிறாள். எனக்கு மனிதர்கள் மீது நம்பிக்கை போய் பல வருடங்களாகிவிட்டன சித்தி. உன்னைப் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். உன்னுடைய இந்த வாழ்க்கை அம்மா போட்ட பிச்சை. ஆனால் நீ அவளையே ‘வேசி’ என்று நா கூசாமல் இன்னொருவரிடம் சொல்கிறாய். என்ன செய்வாய்? பாவம் நீயும் ஒரு பெண்தானே?

ஸ்ரீமான் ராஜரத்தினம் பிள்ளையைத் தெரியாதவர்கள் கும்பகோணத்தில் இருக்கவே முடியாது. அவருடைய அப்பா முத்தையா பிள்ளை மிகப்பெரிய பண்டிதர். வ.சு.ப, பண்டிதமணி, மு.வ  உள்ளிட்ட எல்லாத் தமிழறிஞர்களிடமும் தொடர்பில் இருந்தவர். காவேரிக் கரையில் பல ஏக்கர்கள் வயல் உண்டு. தென்னந்தோப்பு, நிலங்கள், வீடுகள் என்று அசையா சொத்துகளுக்குக் கணக்கே இல்லை. ஆள் லௌகீகத்திலும் கெட்டியானவர். தமிழ் நூல்களைப் படித்துப் பண்டிதர்களுடன் விவாதித்துக்கொண்டே பத்திர ஆபிஸூக்கும் போய் சொத்துகளை வாங்கிக் குவித்துக்கொண்டேயிருந்தார். இன்னொரு பக்கம் கோவிலில் உட்கார்ந்து சிவஞான போதத்துக்கு விளக்கம் சொல்லி, “இந்த வாழ்க்கைல என்ன இருக்கு? ஒன்னுமே இல்லை.. நிகழ்வதெல்லாம் ஈஸ்வரன் லீலை” என்று எவருக்கோ அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பார். தந்தையின் தமிழறிவோ ஆன்மீகத் தெளிவோ லௌகீக சாமர்த்தியமோ புதல்வனுக்கு வாய்க்கவில்லை. அம்மாவைச் சின்ன வயதிலேயே பறிகொடுத்ததாலோ என்னவோ ராஜரத்தினம் பிள்ளை உலகம் தெரியாதவராகவே வளர்ந்து வந்தார். மகனுக்குத் தஞ்சாவூரில் உள்ள பெரிய மிராசுதார் குடும்பத்தில் பெண்ணெடுத்தார். வந்த நேரமோ, பிறந்த நேரமோ அந்தப் பெண் விசாலாட்சி ஆறே மாதத்தில் காலரா வந்து படுத்த படுக்கையாகி ஒரு வாரத்தில் போய்ச் சேர்ந்துவிட்டது.

ராஜரத்தினம் பிள்ளையைவிட முத்தையா பிள்ளையைத்தான் துக்கம் வாட்டியெடுத்தது. அவர் படித்த எந்தத் தமிழ் நூலும் இந்தத் துக்கத்தைத் தீர்க்கவில்லை. கயிலாயம் செல்லும் பாதையில் தன் பின்னால் நடந்து வரப்போகிற பரம்பரைத் தொடர்ச்சி அறுபட்டுப் போனதை அவர் மனம் ஏற்றுக்கொள்ளவேயில்லை. “ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே.. ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே” என்று நாவுக்கரசரின் வார்த்தைகளேயே மனம் உச்சரித்துக்கொண்டிருந்தது. என்னதான் வசதியும் அந்தஸ்தும் இருந்தாலும் இரண்டாம் திருமணத்திற்கு நல்ல பெண் வாய்க்கவில்லை. வந்த வரன்களும் அவருக்குத் திருப்தியாயில்லை. மகனின் நிறத்திற்கும் ஆகிருதிக்கும் ஏற்ற பெண்ணைத் தேடித்தேடி ஏமாற்றமடைந்தார். கனவுகளில் வந்த சிவனிடம், ‘சுந்தரருக்கு மட்டும்தான் பெண் பார்த்துத் தருவாயா? நானும் உன் அடியான்தானே?’ என்று கோபத்தோடு முறையிட்டார். என்னென்னவோ வேண்டுதல்களும் பரிகாரங்களும் செய்து பார்த்தார். சிவன் கண் திறந்தாரோ இல்லையோ புரோக்கர் சதாசிவம் வாசற்கதவைத் திறந்து நல்ல சேதியோடு வந்தான்.

“சாலியமங்கலத்தில் ஒரு ஏழைக் குடும்பம் இருக்கிறது. அவர்களும் சோழிய வெள்ளாளர்தான். இரண்டு பெண்கள். பெத்தவன் யாரிடமோ கணக்கு எழுதி அரை வயிற்றைக் கழுவிக்கொள்கிறான். சீர் செனத்தியெல்லாம் செய்ய வசதியில்லை. மூத்த பெண்ணுக்கு மட்டுமல்ல, அடுத்தவளுக்கும் நாமேதான் நகை நட்டு போட்டுக் கட்டிக்கொடுக்க வேண்டும்..” என்று இழுத்தார். ஆனால் பெண்ணின் புகைப்படம் முத்தையா பிள்ளையின் வாயை மூடச்செய்தது. இவள் இந்த வீட்டு மருமகளாக வருவதற்காக இன்னும் எத்தனை பெண்களுக்கு வேண்டுமானாலும் நகை போட்டுக் கட்டித்தர அவர் தயாராக இருந்தார். மகனுக்கு முதல் திருமணமே தாமதமாகத்தான் நடந்தது. நல்ல இடம், அந்தஸ்து, அழகு என்று தேடித்தேடி அந்த விசாலாட்சியைக் கண்டுபிடிப்பதற்குள் அவனுக்கு முப்பதுக்கு மேல் கடந்துவிட்டது. இப்போது முப்பத்தேழு வயது. இனியும் தாமதிக்க முடியாது. காலாகாலத்தில் நடக்க வேண்டியது நடந்தால்தான் வம்சம் தழைக்கும். பெண்ணுக்கு வயது பதினேழுதான். அதனாலென்ன? வயதா முக்கியம்? தன் இரத்தத்தில் வந்தவர்களுக்கு எழுபது வயசில்கூட பிள்ளை கொடுக்கச் சக்தியுண்டு. ஏன் தன்னாலேகூட இந்த வயசிலும் ஒரு பெண்ணைக் கர்ப்பவாதியாக்க முடியும்.

ஆனால் மீனாட்சியம்மாளுக்குப் பிறகு மனம் தமிழிலும் சைவ நெறியிலும் பொருந்திக்கொண்டது. பாட்டுப் பாடி உயிர்ப்பித்த பேரழகான பூம்பாவையை மகளாகவே பார்க்கிற ஞானசம்பந்தரின் கண்கள் தனக்கும் வந்து வெகு நாட்களாயிற்று. நீறு இட்டுக்கொள்கிற போதெல்லாம் உடலென்பது சாம்பலே என்று யோசிக்கிற இடத்திற்கு எப்போதோ வந்துவிட்டதால் மனைவிக்குக் கொள்ளி வைத்த பிறகு தனக்குச் சம்சாரப் பந்தத்தில் நாட்டம் வரவில்லை. ஆனால் தன் வம்சம் தழைத்து வேர் விடவேண்டும் என்று யோசித்த போது அவருக்கு இருபது வருட வித்தியாசம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. மருமகள் வண்டார்குழலியை மணமேடையில் பார்த்தபோது அவருக்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது. அவளுடைய உயரமும் ஈடும் பதினேழு வயசுப் பெண் மாதிரியே இல்லை. ரோஜா நிறத்தில் இருந்தாள். ஆனால் அந்த முகத்தில் கல்யாணக்களை கொஞ்சம்கூட இல்லை. அவருக்கு இலேசாக நறுக்கென்றிருந்தது. சின்னப் பெண் அல்லவா?

மனதில் வேறு விதமான ஆசைகள் இருந்திருக்குமோ என்று சஞ்சலப்பட்டார். போகப் போக சரியாகிவிடும். “சீக்கிரம் உண்டாயிட்டான்னா அவன் வசத்திற்கு வந்துவிடுவாள்” என்று யோசித்து மங்கை பங்காளனிடம், ‘அவள் வயிற்றில் பொன்னுக்குப் பதிலாய் சிறு பூவையாவது போட்டுவிடு ஈசனே’ என்று கண்மூடி இறைஞ்சினார். அவர் நினைத்தது மாதிரியே மருமகள் முதல் மாதத்திலேயே வாந்தியெடுத்தாள். அவர் வீடு விருந்துகளாலும் வேண்டுதல்களாலும் களை கட்டியது. ‘குற்றாலத்தமர்ந் துறையும் கூத்தா உன் குறை கழற்கே கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே’ என்று அவர் மனமும் நாவும் இனித்தம் உடைய எடுத்தப் பொற்பாதத்தானையே சுற்றிக்கொண்டிருந்தது. சரியாகப் பத்தாவது மாதத்தில் வண்டார்குழலி அழகானதொரு ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அந்த முகத்தைப் பார்த்துப் பார்த்து முத்தையா பிள்ளை பூரித்து ஆறுமுகங்களின் சாயல்களை அந்த ஒரு  வதனத்தில் கண்டார். அந்தப் பூரிப்பிலேயே ‘நமச்சிவாயம்’ என்று சொல்லியபடியே நாதன் தாள் பற்றி ஊர் போய்ச் சேர்ந்துவிட்டார்.

நடராஜன் பிறந்து இரண்டு வருடங்கள் கழித்துதான் சங்கரி பிறந்தாள். அவளுக்கு மூன்று வயதாகும் வரையிலும்கூட ராஜரத்தினம் பிள்ளையின் ஆட்டம் நிற்கவில்லை. இரவும் பகலும் அவளுடன் பசித்த சர்ப்பத்தைப் போல் கிடையாய்க் கிடந்தார். அவள் மனதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் அந்த உடலை அட்சரம் பிசகாமல் புரிந்து வைத்திருந்தார். வயசு வித்தியாசத்தைத் தன் காம சாகசத்தால் வெற்றிகொள்ள வேண்டும் என்கிற முனைப்பு அவரிடம் இருந்தது. ஒவ்வொரு இரவிலும் அவர் எதிரணியை வெல்லப் போகும் விளையாட்டு வீரனின் மனநிலையோடுதான் உள்ளே நுழைவார். அவளுடைய முனகல்களும் சத்தமும் அவருடைய வேகத்தை அதிகப்படுத்தும். எல்லாம் முடிந்ததும் ஒரு தேசத்தையே வெற்றிகொண்ட பெருவீரனின் மிதப்பில் அயர்ந்து தூங்குவார். “ராஜரத்தினம் எமப்பயலப்பா.. இந்த வயசில் ரெண்டாம் கல்யாணம் முடிச்சாலும் ஆணொன்னு பெண்ணொன்னு பெத்து தான் யார்னு நிரூபிச்சுட்டான்ல? என்ன இருந்தாலும் முத்தையா பிள்ளை வம்சம் இல்லையா?’ என்று விசேஷ வீடுகளில் தன் காதுபடப் பலரும் பேசிக்கொள்வதே அவருக்குப் போதுமானதாக இருந்தது.

குழந்தைகளைக் கொஞ்சக்கூட அவருக்கு நேரம் இல்லை. எப்போதும் மனைவியையே சுற்றிச் சுற்றி வந்தார். அவளும் காலை உணவு செய்துகொண்டிருக்கிற போது அவர் அழைத்தாலும் தோசைச் சட்டியை அப்படியே விட்டுவிட்டு வந்து பூட்டிய அறைக்குள் சேலை சுழற்றி பிறந்த மேனியோடு நின்றாள். சில நேரங்களில் அவளை வெற்றுடம்புடன் நிற்க வைத்து வெறுமனே பார்த்துக்கொண்டேயிருப்பார். விசாலாட்சி அழகுதான் என்றாலும் இவள் பக்கத்தில் நிற்கக்கூட முடியாது என்று தோன்றும். கோவில் சிலை மாதிரி இருக்கும் அவளைக் கொடியைப் போல் வளைத்து மேலே சாய்வார். வண்டார்குழலியின் தயவால் அவள் பிறந்த வீடு மச்சு வீடானது. தங்கை கௌரவமாக நகை நட்டு அணிந்து சீர் செனத்தியோடு ஒரு வாத்தியாருக்கு வாழ்க்கைப்பட்டாள். அப்பா வெள்ளை வேட்டி கட்டி திண்ணையில் உட்கார்ந்து வெத்தலை போட்டபடி, ‘புள்ளைமார் அந்தஸ்து, பெருமை’ என்று பேசுகிற அளவுக்கு உயர்ந்துவிட்டார். அம்மாவும் கழுத்து நிறைய நகைகளைப் போட்டு, ‘அவுஹ ஆசைப்படறாஹ.. அதான்’ என்று வெட்கம் பாதி, பெருமை பாதி கலந்து பேசுகிற அளவுக்குப் பெரிய மனுஷியாகிவிட்டாள்.

சங்கரிக்கு மூன்று வயதாகிற போதுதான் வண்டார்குழலி வீட்டைவிட்டு, ஊரைவிட்டு, புருஷனை விட்டு, மூன்றே மூன்று வயதான பச்சை மண்ணை விட்டு ஓடிப்போனாள். அவள் வீட்டைவிட்டுப் போனபோது அவளுக்கு மாமனார் செய்துபோட்ட எழுபது பவுன் நகைகள் அப்படியே பீரோவில் இருந்தன. ஒரு ரூபாய்கூட எடுத்துச் செல்லவில்லை. இங்கிருக்கும் நூற்றுக்கணக்கான பட்டுப்புடவைகளை மட்டுமல்ல, ஒரே ஒரு மாற்றுப் புடவையைக்கூட எடுத்துச் செல்லவில்லை. வெள்ளி, வெண்கலப் பாத்திரங்களும், சீர் செனத்தி சாமான்களும் ஆறு வருடத்துக்கு முந்தைய சுபமுகூர்த்தத் தினத்தின் சாட்சியாய்க் கட்டின புடவையோடு அவள் மட்டும் வெளியேறியிருந்தாள். இன்றுவரை அவள் இருக்கிற இடத்தை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் அம்மாதான் மகள் போனதிலிருந்து படுத்த படுக்கையாகி விட்டாள். யாரைப் பார்த்தாலும், “வண்டார்குழலி என்னை மன்னிச்சுர்றி.. நா பண்ணது பாவம்..” என்று கைகளைப் பிடித்துக்கொள்கிறாள். வண்டார்குழலியின் அப்பா மாதம் தவறாமல் மருமகனைச் சந்தித்து காசு வாங்கிவிட்டுப் போவார். இந்த வீட்டுக்கு வருகிற போதெல்லாம் “அவளையும் அவனையும் கண்டுபிடிச்சு கண்டந்துண்டமா வெட்டலன்னா நா ஒரு புள்ள மகனுக்குப் பிறக்கல” என்று தவறாமல் சபதம் செய்துவிட்டுப் போவார். ஆனால் அவருடைய சபதம் நிறைவேறுவதற்கு வண்டார்குழலியோ இராணுவ வீரன் பழனியோ எந்தச் சந்தர்ப்பமும் தரவில்லை. வடக்கே பார்த்ததாக ஓரிருவர் சொன்னாலும் எதுவுமே நம்பத்தகுந்த தகவல்கள் இல்லை.

பழனி மிலிட்டரியிலிருந்து லீவில் வந்திருக்கும் போது வண்டார்குழலி பாபநாசம் ஸ்கூலில் பனிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். குறுகிய காலத்திலேயே அவர்கள் உடலாலும் மனதாலும் ஒன்றாகியிருந்தனர். இந்தச் சம்பந்தம் வந்தபோது அம்மா குடும்பத்தோடு விஷம் குடிப்பதாக மிரட்டி, காலில் விழுந்து காரியத்தைச் சாதித்தாள். அப்பா பழனியைச் சாதியைச் சொல்லித் திட்டி வீட்டுக்கே போய் அவமானப்படுத்தினார். அவருக்கிருந்த கொஞ்ச நஞ்ச செல்வாக்கை வைத்து நிச்சயதார்த்தத்திற்கு முன்பாகவே பழனியின் குடும்பத்தை ஊரை விட்டே போக வைத்தார். திருமணத்தன்று முத்தையா பிள்ளை பார்த்தது வண்டார்குழலியின் இந்த முகத்தைத்தான்.

திருமணமாகி ஆறு ஆண்டுகள் வரை புருஷனோடு ஒரு குறையும் இல்லாமல் குடும்பம் நடத்தியவள் திடீரென்று எப்படி ஓடிப்போனாள் என்று பேசிப் பேசி ஊர் ஆச்சரியப்பட்டது. கொஞ்ச நாளில் வண்டார்குழலி சகலருக்கும் வெறும் கதையாக எஞ்சிப் போனாள். நடராஜனுக்கு அம்மா என்றால் சுத்தமாக ஆகாது. கொஞ்சம் வளர்ந்த பிறகு அவள் புகைப்படங்களைக்கூட ஒன்றுவிடாமல் தேடித் தேடி எடுத்து தீயில் போட்டான். தன் வாழ்வில் தீராத களங்கத்தை அவள் ஏற்படுத்திவிட்டுப் போய்விட்டாள் என்றெண்ணி ஆத்திரம் கொண்டான். அவமானமும் இழிவும் தன்னை நிழலாகத் தொடர்ந்து வருவதாகவும் அதற்கு அவளே காரணம் என்றும் உறுதியாக நம்பினான். ராஜரத்தினம் பிள்ளைக்கு யார் மேல் தவறு என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் தன் மீது இல்லை என்று உறுதியாக நம்பினார். இத்தனைக்கும் பிறகு மூன்றாம் திருமணம் செய்ய அவருக்குத் தைரியம் வரவில்லை. வண்டார்குழலி ‘பெண் என்றால் யார்?’ என்பதை அவருக்கு எல்லா விதத்திலும் உணர்த்திவிட்டுப் போயிருந்தாள். வாய்ப்புகள் இருந்தும் வேறு சகவாசங்களையும் அவர் தேடிப் போகவில்லை. அவருக்கு அந்த விஷயத்தில் சுத்தமாகச் சுதி விட்டுப்போயிருந்தது. ‘பெண்’ என்றாலே அருவருப்பு கொள்கிற இடத்தை அவர் வந்தடைந்திருந்தார். “அவன் ஆள் பயங்கர கருப்பு. என்னைப் போல் சாதியில் உசந்தவனுமில்லை. தாழ்ந்த ஜாதி. வசதியோ, அந்தஸ்தோகூட இல்லை. நான் பார்த்துப் பார்த்து ரசித்த இந்தப் பால்நிலா ஏன் அந்தச் சாக்கடையில் விழுந்தது?” என்று எண்ணி எண்ணிப் பொருமுவார். சங்கரி வளர வளர ஜாடையிலும் பாவனையிலும் அவளையே நினைவூட்டியதால் அவர் அவளையும் பரிபூரணமாக வெறுத்தார்.

சங்கரிக்கு அம்மாவின் முகம்கூட சரியாய் நினைவில் இல்லை. அம்மாவை நினைத்தால் ஒன்றிரண்டு வேலைக்காரிகள் முகமே நினைவிற்கு வருகிறது. நடராஜ் அண்ணன் எல்லாப் புகைப்படங்களையும் மொத்தமாக அழித்துவிட்டான். ஆறு வயதிற்குப் பிறகு வேலைக்காரிகள்கூட இல்லை. எல்லாமே ஆண் வேலையாட்கள்தான். “பொம்பளை இல்லாத வீடு, அபவாதம் வந்துவிடுமோ?” என்றஞ்சி உறவுக்காரப் பெண்கள்கூட இங்கு வருவதை நிறுத்திக்கொண்டனர். அவள் முழுக்க முழுக்க ஆண்களின் உலகத்திலேயே வாழ்ந்தாள். எட்டு வயதிலிருந்து அவளுக்கான ஒரே துணை அம்மா வைத்துப் போட்டுப் போயிருந்த கதைப் புத்தகங்கள்தான். லட்சுமி, சிவசங்கரி, அநுத்தமா, அனுராதா ரமணன், சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன் என்று பலருடைய புத்தகங்கள் அந்தப் பெட்டியில் இருந்தன. ரமணர், ஜே.கே.வின் ஒன்றிரண்டு புத்தகங்களைக்கூட அதில் பார்த்திருக்கிறாள். முக்கியமான வரிகளில் அம்மா அடிக்கோடு போட்டிருப்பாள். அவளுக்கும் அதே வரிகள்தான் மிகவும் பிடித்திருந்ததை எண்ணி சங்கரி ஆச்சரியப்படுவாள். சில இடங்களில் அம்மாவே எதையாவது எழுதியிருப்பாள். அம்மாவின் கையெழுத்து அவ்வளவு அழகாக இருக்கும். கறுப்பு மையில் எழுதப்பட்ட அந்த வரிகளைப் படிக்கிற போதெல்லாம் அம்மாவும் எழுத்தாளராகி இருக்கலாம் என்று தோன்றும்.

அம்மாவின் ஏழு வருட டைரிகள் அந்தப் பெட்டியில் இருந்தன. அவளுக்கு அந்த வயசில் அதைப் படிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் வைத்துவிடுவாள். ராஜரத்தினம் பிள்ளையோ நடராஜனோ வண்டார்குழலி சம்பந்தப்பட்ட எந்தப் பொருளையும் தொட மாட்டார்கள். யாருடனும் அதிகம் பேசாமல், பழகாமல் அவள் தானுண்டு தன் படிப்புண்டு என்று வாழ்ந்து வந்தாள். பத்து வயதிலேயே பொது நூலகத்துக்குப் போக ஆரம்பித்தாள். மற்ற அம்மாமார்கள் இவள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லி வைத்திருந்த கதைகளால் சங்கரிக்குத் தோழிகளே சரியாய் அமையவில்லை. இவளாகப் பேசினாலும்கூட பட்டும் படாமல்தான் பேசுவார்கள். இவளுக்கும் பெண்களுடன் இயல்பாகப் பேச முடியவில்லை. அவர்கள் வீட்டிற்கு வந்துபோவதுகூட ஆண்கள்தான். ஒப்பந்தக்காரர்கள், குத்தகைக்காரர்கள், கணக்குப் பிள்ளைகள், கூலியாட்கள், எடுபிடி வேலை செய்வோர், பால்காரர், மளிகைக்காரர் என்று அவள் பார்த்த உலகம் முழுக்க முழுக்க ஆண்களால் நிரம்பியது. பக்கத்து வீட்டு ராதாமணி அக்காவுக்கு மட்டும் அவள் மீது கொஞ்சம் கரிசனம் உண்டு. அவள் வண்டார்குழலிக்கு ரொம்ப நெருக்கம். அவளும் புத்தகங்கள் வாசிக்கிறவள்தான். மாமியார் வீட்டில் இல்லாதபோது மட்டும் சங்கரியுடன்  பேசுவாள். பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே சங்கரி ஆண்களோடுதான் அதிகம் பழகினாள். அதுவே அவளுக்கு இயல்பாக இருந்தது. அவர்களோடு சேர்ந்து கிரிக்கெட்கூட ஆடக் கற்றிருந்தாள்.

பாவாடையைக் கூட்டிப் பிடித்தபடி அவள் பேட்டேடு நிற்கும்போது ஒருநாள் அப்பா வந்து அடித்து இழுத்துப் போனார். “இவளும் அவங்க அம்மா மாதிரிதான். ஒத்த புருஷன் போதாது போல” என்று ஊர் பேசுவதைக் கேட்கக் கேட்க அவருக்கு ஆத்திரமாக வந்தது. பத்து வயதிலேயே அவளுக்குப் பதினெட்டு வயசு விவரம் வந்திருந்தது. தன் வீட்டில் பெண்கள் யாருமில்லை என்பதால் வயசுக்கு வருவதைப் பற்றியெல்லாம் ராதாமணி அக்காவிடம் கேள்வி கேட்டு தெரிந்து வைத்துக்கொண்டாள். “வலிக்குமா? செத்துப் போயிடுவனா? ரத்தம் வருமா? அப்ப பாய்ஸை பாத்தா தப்பா?” என்றெல்லாம் அவள் கேள்வி கேட்பதை ராதாமணி ஆச்சரியத்தோடும் கவலையோடும் பார்த்துக்கொண்டிருந்தாள். “ஏ சங்கரி, ஒம் பாவாடைல ரத்தம்டி” என்று ஜெகதீசன்தான் கண்டுபிடித்துச் சொன்னான். ஓட்டமும் நடையுமாக அவள் ராதாமணி அக்கா வீட்டுக்கு வந்து அழுதாள். ராதாமணி அவளை அணைத்துக்கொண்டே அவள் அப்பாவிடம் போய் தயங்கித் தயங்கி, “சங்கரி பொண்ணாயிட்டா” என்றபோது, “இதுவரைக்கும் என்ன அவ ஆம்பளையா?” என்று குத்தலாகக் கேட்டார். “இல்ல…” என்று ஏதோ சொல்லப்போன ராதாமணியை இடைமறித்து, “புரியுது.. இங்க யாரும் இல்ல. நீதான் கொஞ்சம் பார்த்துக்கணும்” என்று கை கூப்பிவிட்டு நகர்ந்துவிட்டார். பெற்ற மகளுக்குச் சடங்கு செய்வதைப் பற்றிக்கூட யோசிக்காமல் நடந்து போகும் தகப்பனை ராதாமணி எரிச்சலோடு பார்த்தாள். அடுத்த மாதத்தில் ராதாமணி உதவி இல்லாமலே துணி வைக்க, அலசிப்போட, ஜட்டி மாற்ற என்று பெரிய மனுஷியைப் போல் தன் வேலைகளைச் சங்கரி தானே செய்துகொண்டாள். காலண்டரில் தேதியைக் குறித்து வைத்து ஒரு வாரத்திற்கு முன்பே மனதளவில் தயாராகிவிடுவாள்.

மருமகனுக்கு இவளைக் கண்டாலே கோபம் வருகிறது என்பதைத் தெரிந்துகொண்டு பணம் வாங்க வருகிற தாத்தா சங்கரியிடம் பேசுவதே இல்லை. நடாஜனோடு மட்டும் பேசிவிட்டுப் போவார். இதைப் புரிந்துகொண்டதிலிருந்து தாத்தா வந்தாலே அவள் உள்ளே போய்விடுவாள். பாட்டி செத்த போதுகூட அப்பா இவளை அழைத்துச் செல்லவில்லை. நடராஜனோடு மட்டுமே போய் வந்தார். ஒரே ஒரு தடவை சித்திக்காரி ஜெயந்தி அப்பாவிடம் கேட்டு பிடிவாதமாகப் பட்டீஸ்வரத்துக்கு‌ அழைத்துப் போனாள். ஆனால் அங்கே சங்கரியால் இருக்கவே முடியவில்லை. தன் இரண்டு பெண் பிள்ளைகளையும் சங்கரியிடம் பழகவிடாமல் பார்த்துக்கொண்டாள். அவ்வப்போது மற்றவர்களிடம் அக்காளை ஜாடை பேசினாள். அது சங்கரிக்குப் பிடிக்காததால் நான்காவது நாளிலேயே திரும்பிவிட்டாள்.

எட்டாவதிலேயே நெஞ்சு திரண்டு தளதளவென இருந்தவள் வயதுக்கு வந்தவுடன் பெரிய பொம்பளை மாதிரி இருந்தாள். “என்னடி ஜெயப்பிரதா மாதிரி இருக்க” என்று ஹசீனா டீச்சர் ஆச்சரியமாகக் கேட்பார். ஒன்பதாவது படிக்கும் போதுதான் கூடப் படித்த பார்த்தசாரதி லவ் லெட்டர் தந்தான். சினிமா பாடல்களை எழுதி அவளையும் கொஞ்சம் வர்ணித்திருந்தான். அவன் கண்ணுக்கு இவள் குஷ்பூ மாதிரி இருக்கிறாளாம். “கனவுகளில் ஏண்டி வருகிறாய்?” என்று செல்லமாகக் கோபப்பட்டிருந்தான். அவளைக் கட்டிப்பிடிக்க வேண்டுமாம், முத்தம் தர வேண்டுமாம், கூட உட்கார்ந்து படம் பார்க்க வேண்டுமாம், கடைசியாக முடிக்கும் போது ‘உன் வருங்காலக் கணவன்’ பார்த்தசாரதி ஐஏஸ் என்று தன் எதிர்கால இலட்சியத்தையும் கடிதத்தில் வடித்திருந்தான். அந்தக் கடிதம் அவளுக்கு ஆரம்பத்தில் சிரிப்பாக இருந்தாலும் படிக்கப் படிக்கக் கிளுகிளுப்பாக இருந்தது. இரவெல்லாம் மீண்டும் மீண்டும் அதையே படித்துக்கொண்டிருந்தாள். நள்ளிரவு வரை அறையில் லைட் எரிவதைப் பார்த்து பூனை போல் உள்ளே வந்த ராஜரத்தினம் கடிதத்தைக் கைப்பற்றிவிட்டார். இரவெல்லாம் அடி, உதை கிடைத்தது. நடராஜனும் அவளைப் பார்த்துக் காறித் துப்பினான். ஒருவாரம் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்தார்கள். அடுத்த வாரமே அப்பா ஸ்கூலை மாற்றிவிட்டார்.

அவள் பத்தாவது படிக்கும் போதுதான் டைரி எழுத ஆரம்பித்தாள். இரவில் எழுதாமல் ஜாக்கிரதையாக அதிகாலையில் எழுந்து டைரி எழுதினாள். அந்த டைரி ஓடிப்போய்விட்ட தன் அம்மாவுடன் பேசுவது மாதிரியே அமைந்திருந்தது. பெரும்பாலும் மாதவிடாய்த் தருணங்களில் அழுகை அழுகையாக வரும். முறையீடு மாதிரி, கடிதம் மாதிரி, பிரார்த்தனை மாதிரி, பாடல் மாதிரி அவள் தன் கண் முன்னால் இல்லாத அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாள். அப்போதுதான் திடீரென்று அம்மாவின் டைரிகளைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆரம்பத்தில் சாதாரணமாகப் படிக்க ஆரம்பித்தவள் தொடர்ந்து படிக்கப் படிக்க ஆச்சரியப்பட்டாள். அது ஒரு நாவல் போலவே இருந்தது. தாத்தா, பாட்டி, சித்தி, சித்தி கணவர், அப்பா, முத்தையா தாத்தா, நடராஜன் எல்லோரைப் பற்றியும் தெளிவான சித்திரங்கள் அதிலிருந்தன. ஒரே ஒரு இடத்தில் மட்டும் அவள் சங்கரியைப் பற்றி இப்படி எழுதியிருந்தாள்.

“இன்று அதிகாலை நாலு மணிக்கு இது பிறந்திருக்கிறது. என்ன செய்வது? என் விதி. என் இருதயம் கல்லாயிருந்திருந்தால் நான் இதை கலைத்திருப்பேன். ஆனால் நான்… என்னால் முடியவில்லை பழனி மாமா. என்னை மன்னித்துவிடுங்கள். இவளைத் தொடக்கூட எனக்குத் தோன்றவில்லை. எல்லாம் அவள் விதி, என் விதி. யாரை நொந்துகொள்வது? சிவார்ப்பணம்”.

சங்கரி டைரியை மூடிவிட்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள். ஆனால் அம்மாவைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும் போலிருந்தது. வைராக்கியமாக உட்கார்ந்து படித்தாள். அம்மாவுக்கு முத்தையா தாத்தா மீது மிகப்பெரிய மரியாதை இருந்தது தெரிய வந்தது. “அவர் மிகப்பெரிய மனிதர்தான். ஆனால் எல்லாப் பெரிய மனிதர்களும் குடும்பம் என்று வந்துவிட்டால் சுயநலவாதிகள்தான். வம்சம் தழைக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெண்ணின் கண்ணீரைத் துச்சமாக நினைக்க எப்படித் துணிந்தார்? அவர் நாள்தோறும் உச்சரிக்கும் சிவனென்ன வெறும் ஆண்மகனா? உமையவளைப் பாதியாய் ஏற்று கங்கையைத் தலைக்கு மேல் வைத்து ஆடுகிறவன்தானே? நீங்கள் செய்த பாதகத்தை ஏற்றுக்கொள்வாரா மாமா அந்தத் தோடுடைய செவியன்?” என்று கேள்வி கேட்டிருந்தாள். அதற்குக் கீழேயே “சிறுபிள்ளைத்தனமா பேசியிருந்தா பெரியவாள் பெரிய மனசு பண்ணி என்னை மன்னித்து ஆசிர்வதிக்கணும். சிவார்ப்பணம்” என்றும் எழுதப்பட்டிருந்தது. சித்தப்பா தன்னிடம் தனியாய் இருக்கும் போது மோசமாக நடக்க முயன்று செருப்பால் அடிவாங்கிய சம்பவத்தைச் சுருக்கமாக எழுதியிருந்தாள். “ஜெயந்திக்குத் தெரிஞ்சா செத்துருவா சார்” என்று கூறியதற்கு, “அவளுக்கு எல்லாந் தெரியும். நா அந்த மாதிரி இருக்கிறப்பகூட அவகிட்ட ஒன்ன பத்திதே பேசுவேன்” என்று சொல்லிவிட்டு ஈ என்று இளித்தாராம். “அப்போது அந்த முகம் செருப்படி வாங்கிய தெருநாய் மாதிரி இருந்தது” என்று எழுதியிருந்தாள்.

அப்பாவுடனான உறவு குறித்தும் விலாவரியாக எழுதியிருந்தாள். சங்கரியே அறைக்கதவைத் திறந்து கட்டிலைப் பார்ப்பது போல் அந்த நடை அமைந்திருந்தது. ஆனால் ஒவ்வொரு நாள் வர்ணனையின் முடிவிலும் அவள் பழனி மாமாவிடம் உருகி உருகி மன்னிப்பு கேட்டிருந்தாள். “இந்தக் கடிதத்தை நீங்கள் ஒருபோதும் பார்த்துவிடக் கூடாது மாமா! இதில் ஒரு எழுத்தைப் படித்தாலும் உங்கள் மூச்சு நின்றுவிடும் என்பதை நானறிவேன்” என்று முடித்திருந்தாள். அதில் பாதி விஷயங்கள் அந்த வயதில் சங்கரிக்குப் புரியவில்லை. இப்போது  எடுத்துப் படிக்கும் போது வரிக்கு வரி புரிகிறது. அப்பாவுக்கு அவள் ஒரு விளையாட்டு மைதானம் என்பதை மட்டும் அப்போதே புரிந்து வைத்திருந்தாள்.

“ஆண்களின் குறட்டைதான் எவ்வளவு கொடூரமானது. அது குறட்டை அல்ல, சுடலை ஒலி. ஒரு பெண்ணின் உணர்வுகளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டு சுடுகாட்டிலிருந்து ஒலிக்கும் ஒலி”.

“நீங்கள் எதை வெற்றிகொண்டீர்கள் திரு.ராஜரத்தினம் பிள்ளை? என் மனதையா? அதில்தான் உங்களுக்கு இடமே இல்லையே? உங்கள் தொடுதல், முத்தங்கள், ஆக்கிரமிப்பு, வெறிக்கூச்சல், விகாரமான அசைவுகள் யாவும் அந்தரத்தில் நிகழ்கின்றன. நான் பழனி மாமாவோடு ஏகாந்தமாய்த் தனித்திருக்கிறேன். என் அத்தனை சிருங்கார முனகல்களும் பழனி மாமாவின் தோளுக்கு இட்ட மாலைகள்தான். நீங்கள் இரவல் ஏக்கங்களை உதிர்த்துவிட்டு உடல் தளர்ந்து சரிகிறீர்கள். உங்களைப் பார்த்தால் எனக்குப் பாவமாயிருக்கிறது. முத்தையா பிள்ளையின் ஒரே வாரிசுக்கு ஒரு பெண்ணின் மனதைப் பார்ப்பதற்குக் கூடவா கண்கள் இல்லை? நீங்கள் ஒரு அந்தகன்…”

“நீங்கள் அழைத்த போதெல்லாம் நான் வருகிறேன் என்பதற்காக என்னை வேசி என்று நினைத்துவிட்டீர்களல்லவா? எல்லாம் முடிந்ததும் உடனே எழுந்து ஜன்னல் வழியாய்க் காறி உமிழ்கிறீர்கள். ஒவ்வொரு நிமிடமும் நான் உங்களைப் பார்த்துக் காறி உமிழ்வது உங்கள் காதுக்குக் கேட்கவில்லையா? நீங்கள் அந்தகன் மட்டுமில்லை, செவிடனும்தான்…”

“நடராஜா! உன்னிடம் எப்படிச் சொல்வேன் உன் தந்தை இவரில்லை என்பதை… பாவம் இதை நம்பித்தான் உங்கள் தாத்தா நிம்மதியாகக் கண்ணை மூடினார். கயிலாயத்துக்குச் செல்லும் பாதையில் அவர் பின்னால் வரப்போவது அவர் தொடக்கூட விரும்பாத சாதியில் பிறந்த பழனியின் இரத்தம்தான் என்பதை அந்தச் சைவப்பழம் எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறார்? ஆனால் பிறை சூடிய பித்தன் எல்லாவற்றையும் பேய்ச்சிரிப்போடு ஏற்றுக்கொள்வான் என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே மாமா? அவன் நந்தனாருக்கே நந்தியை விலகச் சொல்லிவிட்டு தரிசனம் தந்தவனல்லவா‌? என்றேனும் ஒருநாள் பழனி மாமாவோடு வந்து உன்னை அழைத்து மாரோடு தழுவிக்கொள்வேன் நடராஜா. அதுவரை இந்தக் காமாந்தகனை நீ அப்பா என்று அழைத்துக்கொள்…”

“பழனி மாமா, நான் யாரை ஏமாற்றுகிறேன்? உன்னையா? இவரையா? என் அப்பன் ஆத்தாளையா? செத்து தெய்வமாகிவிட்ட என் மாமனாரின் ஆத்மாவையா? இந்த ஊரையா? எதுவுமே இல்லை. என்னைத்தான் ஏமாற்றிக்கொள்கிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது. அழுகை அழுகையாக வருகிறது பழனி மாமா… என்னைக் காப்பாற்ற வரமாட்டாயா?… நான்….”

இதற்குப் பிறகு டைரியில் எதுவும் எழுதப்படவில்லை. “ஓம் நமச்சிவாய” என்பதைத் திரும்பத் திரும்பப் பல பக்கங்களில் எழுதி வைத்திருந்தாள். ஏழு டைரிகளையும் படித்து முடித்தவுடன் அம்மாவின் மீது மிகப்பெரிய மரியாதை பிறந்தது. அவளுடைய உக்கிரமான காதலும் வைராக்கியமும் சுயமரியாதை உணர்வும் காதலித்தவனுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்கிற பிடிவாதமும் அவளை ஆச்சரியப்படுத்தியது. கண்ணகி, சீதை, நளாயினி என்று தான் படித்திருந்த பெண்களைவிட ‘அம்மாதான் சிறந்த பத்தினி’ என்று நினைத்துக்கொண்டாள். அந்தப் பழனி மாமா தனக்கு அப்பாவாக இருந்திருக்கக் கூடாதா என்று நினைத்து ஏங்கி ஏங்கி அழுதாள். அப்பாவின் மீதும் அவளுக்குக் கோபம் வரவில்லை. பரிதாபம்தான் பிறந்தது. அன்றிலிருந்து அவள் அம்மாவை எவர் மோசமாகப் பேசினாலும் அங்கேயே முறைத்தாள். ஒன்றிரண்டு தடவை இதற்காகவும் ராஜரத்தினம் பிள்ளை அவளை அடித்து உதைத்தார்.

பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது ஜெகதீசன் மேல் அவளுக்குக் காதல் வந்தது. இவள்தான் முதன்முதலில் காதலைச் சொன்னாள். ஆரம்பத்தில் தயங்கிய ஜெகதீசனைக் கொஞ்சம் கொஞ்சமாக வழிக்குக் கொண்டுவந்தாள். அம்மா டைரியைப் போதெல்லாம் உடல் கிளர்ந்தெழும். பழனியுடனான உறவை அம்மா இரசித்து இரசித்து எழுதியிருந்தாள். அப்பாவுடனான உறவு கன்ஃபெஷன் பாணியிலேயே எழுதப்பட்டிருக்கும். அதனால் அதை விட்டுவிட்டு பழனி சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டும் மீண்டும் மீண்டும் இரவுகளில் படித்தாள். அதைப் படிக்கும் போதெல்லாம் மனம் ஜெகதீசனைத் தேடும். தன்னை அம்மாவாகவும் அவனைப் பழனி மாமாவாகவும் உருவகித்துக்கொள்வாள். டைரியின் வரிகளை நிஜமாக்கிவிட வேண்டும் என்று மனமும் உடலும் பரபரக்கும். அவனைத் தனிமையில் சந்தித்து உதடுகளைக் கவ்விக்கொள்வாள். அவன் ஒருவகையில் இவளைக் கண்டு பயந்தான். அவன் வீட்டிலும் இவளைக் குறித்து மோசமாகவே பேசினார்கள். இருந்தாலும் அவள் அழகும் வாசனையும் அவனை விலகவிடாமல் கட்டிப் போட்டிருந்தன.

அந்த உறவில் அவளே முதலாளியாக இருந்தாள். அவன் அவள் சொல்வதை எல்லாம் ஒரு தேர்ந்த வேலைக்காரனைப் போல் இரசித்துச் செய்தான். நிறைய அனுமதித்துவிட்டு குறிப்பிட்ட எல்லை வந்தவுடன் அவளே துரத்தியும்விடுவாள். ராதாமணி அக்கா வீட்டில் அவள் மாமியார் இல்லாத போது அவர்கள் சந்தித்துக்கொண்டார்கள். இவர்களுக்குச் சொந்தமான தோப்புக்கு அவளே தைரியமாக அவனை அழைத்துப் போனாள். அந்தத் தோப்புக் காவலாளி ராமையாவுக்கு இவள் மீது கொள்ளைப் ப்ரியம். தனியாகப் போகாமல் நாலைந்து பசங்களைக் கூட்டிக்கொண்டு போவாள். “படிக்கிற பசங்களோட புள்ள தோட்டத்தைச் சுத்திப் பாக்க வந்திருக்கு” என்று அவரும் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவார். பம்ப் செட்டுக்குப் பக்கத்தில் மற்றவர்களைக் காவல் வைத்துவிட்டு அவள் ஜெகதீசனுக்குக் கண்களால் ஆணையிடுவாள். அவன் அவளை முத்தங்களால் நனைய வைப்பான். இதுவரை பள்ளியில் வைத்து மட்டும் அவனோடு பேசியதில்லை.

அன்று கெமிஸ்ட்ரி லேபில் அவர்கள் இருவரைத் தவிர மற்ற எல்லோரும் பிராக்டிகல் முடித்துச் சென்றுவிட்டனர். சங்கரி ரிசல்ட் வராதது போலக் குடுவையைச் சாய்த்து நடித்துக்கொண்டிருந்தாள். ஜெகதீசனும் புரிந்துகொண்டு அதையே செய்தான். கெமிஸ்ட்ரி மேடம் ஹெச்.எம் மைப் பார்க்கச் சென்றிருந்தார். லேப் அட்டெண்டர்கள் வெளியில் சேர் போட்டு அமர்ந்திருந்தனர். அதனால் துணிந்து அவனை இழுத்துக்கொண்டு பிப்பெட், பியூரெட் வைக்கிற உள்ளறைக்குச் சென்றாள். அந்த நாளில் அவள் அதீத மோகத்தில் இருந்தாள். தலைக்குக் குளித்து சில நாட்களே ஆகியிருந்தன. அதனால் இடம், சூழல் எல்லாவற்றையும் மறந்து அவன் உதடுகளை விடாமல் பற்றிக்கொண்டாள். அவனுக்கு அந்த முத்தம் பிடித்திருந்தாலும் பள்ளி என்பதால் பயமாகவும் இருந்தது. “சங்கரி ப்ளீஸ்… ப்ளீஸ்.. நாம போயிடலாம். யாராவது வந்துரப் போறாங்க” என்று விலகிக்கொண்டேயிருந்தான். ஆனால் அவள் கைகள் உடும்பாக மாறி அவனை விடாமல் பற்றிக்கொண்டன. தற்செயலாக உள்ளே வந்த துரைராசு அண்ணன் இதைப் பார்த்துவிட்டுப் போட்ட சத்தத்தில் எல்லோரும் ஓடி வந்தார்கள். கெமிஸ்ட்ரி மேடமும் அதற்குள் லேபுக்கு வந்திருந்தார். அவர்கள் இருந்த கோலமும் உடைகளும் தலைமுடியும் கலைந்து கிடந்த விதமும் என்ன நிகழ்ந்தது என்பதைச் சகலருக்கும் படம் போட்டுக் காட்டியது. கெமிஸ்ட்ரி டீச்சர் ஜெகதீசனைக் கன்னத்தில் அறைந்தார். “மேடம் அடிக்காதீங்க மேடம்.. ப்ளீஸ் மேடம்” என்று கத்திக்கொண்டிருக்கும் போதே அவன் கழுத்தைப் பிடித்து இழுத்து ஹெச்.எம்.ரூமுக்கு அழைத்துச் சென்றார். சங்கரி பிரமை பிடித்தது போல் தங்களின் உடல்கள் பட்டு உடைந்து கிடந்த பியூரெட்டையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஒரு மணிநேரம் நடந்த தனி விசாரணையில் ஜெகதீசன் ஒன்றுவிடாமல் சகலமும் சொல்லிவிட்டான். சொன்னதோடு நிற்காமல் லெட்டராகவும் எழுதித்தந்து தன் மீது தவறில்லை என்று மன்னிப்பு கேட்டிருந்தான். மற்ற மாணவர்களை அழைத்து விசாரித்த போது அவன் சொன்ன தகவல்கள் அனைத்துமே உண்மை என்பதை ஹெச்.எம் தெரிந்துகொண்டார். சில மாணவிகளும்கூட வலிய வந்து, “ஜெகதீசன் நல்வவந்தான் சார். அவதான் இப்டி” என்று சங்கரிக்கு எதிராகச் சாட்சி சொன்னார்கள். ஜெகதீசனை மன்னித்துச் சேர்த்துக்கொண்ட பள்ளி  நிர்வாகம் சங்கரியின் அப்பாவை வரவழைத்து அசிங்கப்படுத்தியது. ஹெச்.எம் ஜெகதீசன் எழுதிய மன்னிப்புக் கடிதத்தை அவர் முகத்தில் வீசியெறிந்தார். காலஞ்சென்ற தமிழறிஞர் முத்தையா பிள்ளையின் மகனும் பெரிய நிலச்சுவான்தாருமான ராஜரத்தினம் பிள்ளை அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு கூனிக்குறுகி உட்காரந்திருந்தார். “இந்த ஸ்கூலுக்கு டிசிப்ளின்தான் முக்கியம். படிப்புகூட ரெண்டாவதுதான். இனி ஒங்க பொண்ணு ஸ்கூலுக்கு வரக்கூடாது… எக்ஸாம் மட்டும் எழுதட்டும். அதுகூட ஒங்க அப்பா முத்தையா பிள்ளை முகத்துக்காகத்தான்” என்று ஹெச்.எம் எச்சரிக்கிற தொனியில் விரலை ஆட்டி ஆட்டிப் பேசினார். ஒரே நாளில் இந்த விஷயம் ஊருக்கே தெரிந்தது. ஊரே தன்னைக் கண்டு கேலியோடு சிரிக்கிற மாதிரி ராஜரத்தினம் பிள்ளை உணர்ந்தார். “வண்டார்குழலியால் நேர்ந்த அவமானத்துக்குக் கொஞ்சமும் குறைவில்லாததுதான் இதுவும்” என்று நினைத்து ஆத்திரம்கொண்டார். வீடு வருவதற்கு முன்பாகவே அவளை அடித்து உதைத்தார். தடுக்க வந்தவர்களையும் பிடித்துத் தள்ளிவிட்டார்.

உள்ளே நுழைந்தவுடன் நடராஜனும் அவள் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளினான். பூச்சி மருந்தை எடுத்துவந்து, “நீயே குடிச்சிட்டு செத்துர்றீ ” என்று கத்தினான். இருவரும் மாறி மாறி உதைத்தும் சங்கரி அழவேயில்லை. மரக்கட்டை மாதிரி அப்படியே கிடந்தாள். நடராஜன் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். தங்கையால் தனக்கு நேர்ந்த அவமானத்தை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஓடிப்போன அம்மாவையும் பழனியையும் பச்சைப் பச்சையான கெட்ட வார்த்தைகளில் பயங்கரமாகத் திட்டினான். “பழனிதாண்டா ஒனக்கு அப்பா.. இந்தாளு இல்ல” எனச் சொல்லிவிடலாமா என்று சங்கரிக்குள் ஆங்காரம் எழுந்தது. அந்த நிலையிலும் இதை நினைத்தவுடன் அவளுக்குச் சிரிப்பு வந்தது. “அப்பா, பாருங்கப்பா.. நம்மள பாத்து கிண்டலா சிரிக்கறாப்பா”. நடராஜன் சொன்ன பிறகுதான் ராஜரத்தினம் பிள்ளையும் அதைக் கவனித்தார். அவருக்கு முதன்முறையாக அவளைக் கண்டு பயம் ஏற்பட்டது. கொஞ்ச நேரம் யோசனையோடு உட்காரந்திருந்தவர் பட்டீஸ்வரத்திலிருந்த ஜெயந்திக்கு ஃபோன் போட்டார். நிறைய சொத்துப் பத்திரங்களைக் கைகளில் திணித்து, “நாளைக்கே அவ பேர்ல எல்லாத்தையும் மாத்தித் தந்திடுறேன். இனி நீதான் அவளைப் பார்த்துக்கணும்.. முடியாதுன்னா நீயே அவளைக் கொன்னு போட்டுப் போ ஜெயந்தி. முத்தையா புள்ளைக்கு மகனா பொறந்ததுனால என் கை ரத்தத்துல நனைஞ்சுரக் கூடாதுன்னு யோசிக்கிறேன். இல்லாட்டி நடக்குறதே வேற” என்று உறுமினார்.

அந்தச் சொத்துப் பத்திரங்கள் மட்டும் இல்லாமல் மாமா இதே மாதிரி சொல்லியிருந்தால் அவள் ‘எனக்கென்ன மயிரா போச்சுன்னு’ வந்த வழியே திரும்பிப் போயிருப்பாள். ஆனால் அவற்றின் மதிப்பு அவளுக்கு நன்கு தெரியும் என்பதால் கொஞ்ச நேரம் அழுவது போல் நடித்து அவளை வீட்டிற்கு இழுத்துப் போனாள். வழக்கம் போலவே தன் பிள்ளைகளை இவளை அண்டாமல் பார்த்துக்கொண்டாள். சித்தப்பாவின் பார்வை சரியாக இல்லை என்பது சங்கரிக்கு ஆரம்பத்திலேயே புரிந்துபோனது. அம்மா டைரியில் எழுதியிருந்ததை நினைவுபடுத்திக்கொண்டு அவரிடம் எச்சரிக்கையோடு நடந்துகொண்டாள். சித்தி வீட்டில் இல்லாத போது, “அந்த ஜெகதீசனை உனக்குப் பார்க்கணுமா? நாட்டார் வீட்டுப் பையன்தானே அவன்? ஒங்க சித்திக்குத் தெரியாம நா உன்னை கூட்டிட்டுப் போறேன்.‌ நீ என்னை நம்பு சங்கரி” என்று கைகளைப் பற்ற வந்தவரை விட்டுச் சட்டென்று விலகி, “எந்த ஜெகதீசன் சித்தப்பா?” என்று கேட்டவுடன் முறைத்துக்கொண்டே வெளியில் போய்விட்டார். அவள் சித்தியைத் தனக்கான பாதுகாப்பாக மட்டுமே கருதினாள். அவள் மேல் எந்தப் பாசமும் இல்லை. வண்டார்குழலியின் அழகில் ஜெயந்தி கால்வாசிகூட இல்லை. அவளுக்கு அக்கா மீது தீராத பொறாமையும் வயிற்றெரிச்சலும் உண்டு. இரண்டாம் தாரம் என்றாலும் மிகப்பெரிய இடத்தில் வாக்கப்பட்டுப் போனதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. சங்கரி அச்சு அசல் அக்காவைப் போலவே பிறந்திருந்ததால் அந்த வன்மம் இவள் மீதும் எட்டிப் பார்த்தது. ஆனால் அவளுடைய சொத்துகளுக்கு கார்டியனாக இருப்பதால் பாசமாக இருப்பது போல் நடித்தாள். சங்கரிக்குச் சித்தியின் சகல கணக்குகளும் தெரிந்தே இருந்தன. இப்போதைக்கு அவளை விட்டால் வேறு கதி இல்லை என்பதால் அமைதியாக இருந்தாள்.

என்ன நிகழ்ந்தாலும் சங்கரி சின்ன வயசிலிருந்தே படிப்பில் சோடை போனதில்லை. இத்தனைக்குப் பிறகும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வைக் கும்பகோணத்துக்குப் போய் சிறப்பாகவே எழுதினாள். லீவிலேயே சித்தியிடம் பிடிவாதம் பிடித்து தன் பெயரை ‘ஆர்த்தி’ என்று கெஜட்டிலேயே மாற்றிக்கொண்டாள். அவள் இதுவரை தனக்கு நிகழ்ந்த எல்லாவற்றையும் தலைமுழுகிவிட்டு வேறொருத்தியாக விரும்பினாள். அவளுக்கு இந்தப் பெயர் சிறுவயதிலிருந்தே பிடிக்காது. பெயர் மாற்றம் தன்னைப் புதிதாய்ப் பிறக்க வைக்கும் என்று நம்பினாள். இந்தப் பதினெட்டு வயதிலேயே அவள் மனம் முதிர்ச்சி அடைந்திருந்தது. அவளுக்கு ஜெகதீசன் மீது கோபமே வரவில்லை. பரிதாபமே கொண்டாள். தான்தான் அவனைப் பலிகாடாவைப் போல் பயன்படுத்திக்கொண்டோம் என்பதை நினைத்து குற்றவுணர்வு அடைந்தாள். அப்பாவையும் நடராஜனையும் நினைத்துக்கூட கொஞ்சம் கனிவு பிறந்தது. தன் முகத்தைப் பார்க்காமல் அவர்கள் நிம்மதியாக இருக்கட்டும் என்று நினைத்துக்கொண்டாள். வண்டார்குழலிக்கும் அவள் மகள் சங்கரிக்கும் காரியம் செய்துவிட்டு வீட்டை அலசட்டும். “அந்தப் பழைய சங்கரிக்கு நானே காரியம் செய்துவிட்டேன் அப்பா” என்று நினைத்த போது அன்று மாதிரியே அவளுக்கு இன்றும் சிரிப்பு வந்தது. நடராஜனை அம்மா எந்த நாளிலும் சந்திக்கவே கூடாது, அதுதான் இருவருக்கும் நல்லது என்று சிவனிடம் வேண்டிக்கொண்டாள். ஆனால் இந்தத் தடை நடராஜனுக்கு மட்டும்தான். அவளுக்கு அம்மாவையும் பழனி அங்கிளையும் சந்திக்க வேண்டும் போல அவ்வளவு ஆசையாக இருந்தது.

சித்தியிடம் திருச்சியில் படிக்கப் போவதாகச் சொல்லி ஹோலி கிராஸ் கல்லூரிக்கு அப்ளிகேஷன் அனுப்பினாள். சித்திக்கும் அவள் ஹாஸ்டலுக்குப் போய்விட்டால் நல்லது என்றிருந்தது. சரியென்று தலையசைத்துவிட்டு எல்லாவற்றுக்கும் ஒன்றுக்குப் பத்தாய் கணக்கு எழுதி வைத்தாள். உடன் வருவதாகச் சொன்ன சித்தப்பாவை நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டு ஆர்த்தி ஒற்றை ஆளாகத் திருச்சிக்குப் பஸ்ஸேறினாள். “தான் தனி ஆள் அல்ல, அந்த டைரி என்னோடு இருக்கும் வரை அம்மாவும் உடனிருக்கிறாள்” என்று சொல்லிக்கொண்டாள். எனக்கு அம்மா மட்டும் போதும். ‘மனிதர்களை வெறுக்கவும் கூடாது, நம்பவும் கூடாது’ என்பதையே மந்திரம் போல் தனக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டாள். ஜெகதீசனுக்குப் பிறகு இனி எவனிடமும் காதல் கீதல் என்று வழிந்துவிடக் கூடாது என்று கிளம்பும் போது சங்கற்பம் செய்தது நினைவுக்கு வந்தது. மனிதர்களின் ஆசைகளையும் அஸ்திகளையும் தனக்குள் உள்வாங்கிக்கொண்டு ஓடும் நதி தன் பாரத்தை எங்கே இறக்கி வைக்கும்? நன்றாக இருட்டியிருந்தது. நாளைக்கு நேஷனல் கல்லூரியில் நடக்கவிருக்கும் வினாடி வினாவுக்குத் தயாராக வேண்டும் . வினாடி வினா பற்றி யோசித்ததும் போன வாரம் இந்திரா காந்தி கல்லூரியில் முதல் பரிசு பெற்ற பையனின் ஞாபகம் வந்தது. அவன் பெயரென்ன? சையதுவா? அடுத்த முறை அவனைப் பார்த்தால் பாராட்ட வேண்டும் என்று நினைத்தபடி பாலத்தின் மீது கைகளை உரசிக்கொண்டே மெதுவாக நடந்தாள். மெல்லிய நிலவு வெளிச்சத்தில் நதி தன் கதைகளை எவருக்கும் சொல்லாமல் மறைத்தபடி மௌனமாக நகர்ந்தது.

1 comment

Kasturi G November 16, 2021 - 8:02 pm

Very nicely written
Good luck
Thanks

Comments are closed.