மெல்லுடலிகள்

3 comments

1

ஓடிப்போய் ஏறிய பின்பே பார்த்தேன். வண்டியில் கூட்டமே இல்லை. அத்துடன் பின்புறத்தில் நிறைய பெண்களே அமர்ந்திருந்தார்கள். எல்லோரும் ஒரே நிறத்திலான சேலை அணிந்திருந்தார்கள், ஏதோ நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள். வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். கூட்டமாக இருப்பதின் துணிச்சல் அவர்களைப் பற்றியிருந்தது. இளமையின் கர்வமும். வேண்டுமென்றே சத்தமாகப் பேசியது போல் பட்டது. அதில் ஒருத்தி நான் திரும்பும் போதெல்லாம் என் கண்களை ஏளனத்துடன் சந்திக்க முயன்றாள். ஒரு நடுவயதினனைத் தடுமாறச் செய்வதில் உள்ள சந்தோஷம். நான் அவர்களைக் கவனிக்காதது போல் இருந்தேன். டிக்கெட் வங்கும் போதுதான் கவனித்தேன். இடதுபக்கம் அமர்ந்திருந்த அந்த நடு வயதினளை. சிகப்புப் பருத்திச் சேலையும் மஞ்சள் ஜாக்கெட்டும். அவள் அதனுள் வேறு எதுவும் அணிந்திருக்கவில்லை என்று தெரிந்தது. முலைகள் குத்திட்டுத் தெரிந்தன.

நான் எவ்வளவோ முயன்றும் என் கவனம் அவள் பக்கமே திரும்பியது. திடீரென்று கண்டக்டர் அந்த இளம் பெண்களில் ஒருத்தியை அவள் அருகில் வந்து அமரச்சொன்னான். ஒருவேளை கவனித்திருப்பானோ? நான் என் மேலேயே சினம்கொண்டேன். இந்த உடல்தான் எத்தனை வெட்கம் கெட்டது! நான் கண்களை மூடிக்கொண்டேன். கணேசனின் நினைவு வந்தது. அவன் இதே தடத்தில் நெல்லை நோக்கிப் போன பேருந்தில் இதே போன்றதொரு நடுத்தரப் பெண்ணிடம் செருப்படி வாங்கிய காட்சி. மடேர்! மடேர்! மடேர்! பின் சீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டு விழித்தேன். பலருக்கும் என்ன நடந்தது என்று ஒருகணம் புரியவில்லை. தூங்கி வழிந்துகொண்டிருந்த பேருந்து சட்டென்று விழித்துக்கொண்டது. முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு நடுவயதுப் பெண் எழுந்து நின்று பின்னால் அமர்ந்திருந்தவனைச் செருப்பால் தலையில் அடித்துக்கொண்டிருந்தாள். அது கணேசன் என்று உணர எனக்குச் சற்று நேரம் பிடித்தது. நான் பாய்ந்து போனேன். ”கணேசா!”

“அப்போதிருந்து பார்க்கேன். பின்னால இருந்து தடவிக்கிட்டே இருக்கான். நாயே! எனக்கு உம்ம அம்மை வயசு இருக்கும்லே!”

அவளது தாக்குதலைத் தடுத்துக்கொள்ளும் முயற்சிகூட இல்லாமல் கணேசன் பிரமிப்புடன் அவளையே பார்த்துக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன். நான் போய், “அம்மா, நிறுத்தும்மா. முதல்ல என்னன்னு சொல்லு” என்று சொல்வதற்குள் பக்கவாட்டிலிருந்து ஒரு குரல். “அது அவன் இல்லே. பக்கத்தில உள்ள கிழவன், அவன் தொந்திரவு தாங்காமத்தான் நான் இந்த சீட்டுக்கு வந்தேன்”. ஒரு திருநங்கை. பேருந்துக்குள் ஓர் ஆழ்ந்த அமைதி. அந்தப் பெண் சற்றேதான் தடுமாறினாள். பிறகு, ”எல்லா ஆம்பிள நாய்ங்களும் ஒன்னுதான்“ என்று கத்திவிட்டு அமர்ந்துவிட்டாள். மருந்துக்கேனும் அவள் முகத்தில் தவறான நபரை அடித்துவிட்டோமே என்ற வருத்தம் இல்லை. அவள் திரும்பியே பார்க்காமல் என்.ஜி.ஓ காலனி நிறுத்தத்தில் இறங்கிப் போனாள். கண்டக்டர் மட்டும், ‘என்ன பொம்பிளை’ என்று முனகினான்.

பாளை பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் போதுதான் கணேசனின் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருப்பதை நான் கவனித்தேன். அவன் இன்னமும் திகைப்பில் இருந்தான். நான் என் கர்ச்சீப்பால் அவன் இரத்தத்தைத் துடைத்தபோது என் கையைப் பற்றிக்கொண்டு, “நான் பண்ணலைங்க” என்றான். நான், “தெரியும், வாடா போகலாம். தேவடியா! ஆளும் மூஞ்சியும். இவளை யார் சீண்டுவானாம்?” என்றேன். அவன் என் கையை மீண்டும் பற்றிக்கொண்டு, “நான் பண்ணல அம்மா” என்று சொன்னதும்தான் அவன் மனச்சிதைவுக்குள் விழுந்துவிட்டான் என்பது எனக்குப் புரிந்தது. டாக்டர், “என்னாச்சு?” என்றார். அவன் அவரிடம், “நான் பண்ணல அம்மா” என்றான் மீண்டும்.

நான் திரும்பி அந்த நடுவயதுப் பெண் இன்னமும் முலை காட்டிக்கொண்டிருக்கிறாளா என்று பார்த்தேன். இளவயதுப் பெண் மறைத்துக்கொண்டிருந்தாள். அவள் செல்போனில் எதையோ தீவிரமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். காதல் பாடல்கள். நான் கவனிப்பது தெரிந்ததும் நிமிர்ந்து பார்த்தாள். அவள் முகத்தில் ஒரு கர்வமான சிறிய புன்னகை படர்ந்தது. எனக்கு அவளிடம், “நீயில்லயடி பொட்டை நாயே!” என்று சொல்ல வேண்டும் போலத் தோன்றியது. இவள்கள் எல்லோர் பாவாடையையும் தூக்கி அவர்கள் பொன்னைப் போல் பாதுகாத்து மினுக்கம் கொண்டிருக்கும் சாமான் மேல் காறித் துப்ப வேண்டும் என்று தோன்றியது. ”வெறும் புண்! வெறும் புண் இது!” அதன் பிறகு அவர்கள் கர்வத்தோடு சுழிக்கும் அவர்கள் வாயைத் திறந்து அதற்குள் துப்ப வேண்டும்.

நான் கண்களை மூடிக்கொண்டேன். கணேசன் ஆடி ஆடி தூக்கில் தொங்கிக்கிடந்த காட்சி நினைவுக்கு வந்தது. பேருந்தில் போலவே இந்தக் காட்சியும் முதலில் எனக்குப் புரியவில்லை. தூக்கில் தொங்குகிறவனின் இரத்தம் அவன் அறை முழுக்கத் தெறித்திருந்தது. அவன் விரும்பி வாசித்த அத்தனை புத்தகங்கள் மீதும் அவனது இரத்தக் கறை இருந்தது. தூக்கில் தொங்கும் முன்பு அவன் தனது விதைக் கொட்டைகளை அறுத்துக்கொண்டிருந்தான் என்று பிறகுதான் கண்டுபிடித்தார்கள். நான்தான் அவனைக் கீழிறக்கினேன். அவனை மயானத்துக்குக் கொண்டுவருகிற வரைக்கும் நானும் அவன் அப்பாவும் தெற்குப் பஜாரில் இருக்கும் அவனது அம்மா வருவாள் என்று எதிர்பார்த்திருந்தோம். “தகவல் சொல்லியாகிவிட்டது” என்று மட்டும் அவனது அப்பா சொன்னார். “ஒருவேளை, அவர் தடுத்திருப்பாரோ? நான் வேண்டுமானால் போய்…” என்று கேட்டேன். அவர் இல்லை என்பது போல் தலையசைத்தார். அவள் வரவேயில்லை. ஏன் வரவில்லை என்று அவளிடம் கேட்க வேண்டும் என்று நெடுநாட்களுக்கு நினைத்துக்கொண்டே இருந்தேன். அது தெரியாவிட்டால் என்னால் அந்த விஷயத்தை மூட முடியாது என்று தோன்றியது. ஒரு நாள் அவள் வேலை பார்க்கும் வங்கியில் கண்ணாடித் தடுப்புக்கு மறுபுறம் இருந்துகொண்டு அவளைப் பார்த்தேன். “யெஸ்?” என்றாள். பாப் கட் செய்து லிப்ஸ்டிக் அணிந்திருந்தாள். நான், “நான் கணேசனோட பிரண்டு” என்று சொல்லிவிட்டு திரும்பிவிட்டேன்.

நாகர்கோவில் வரும்போது மணி எட்டாகிவிட்டிருந்தது. அந்த இளம்பெண்கள் கூச்சலுடன் இறங்கிப் போனார்கள். அதில் ஒரு பெண் “பை” என்பது போல் என்னை நோக்கிக் கையசைத்தாள். நான் அந்த நடுவயதுப் பெண்ணின் பின்னால் இறங்கினேன். அவள் உடலிலிருந்து காரமான வியர்வை நெடி அடித்தது. நான் மெதுவாக அவள் பின்னால் இறங்கி நின்றேன். நான் ஒரு சமிக்ஞைக்கு காத்திருந்தேனா? கனகமூலம் சந்தையை நோக்கி அவள் போனாள். அங்கே கடை எதுவும் வைத்திருக்கிறாளோ? அவளைப் பார்த்தால் அப்படி ஒரு சாடை இருக்கத்தான் செய்தது. ஒட்டி இறங்கும்போது அவளது கடைவாயில் சிறிய வெற்றிலைப் புண்களைப் பார்த்தேன். அது எனக்கு ஏனோ நீலப்படங்களில் நான் பார்த்த பெண்ணுறுப்புகளை நினைவுபடுத்தியது.

சற்று தூரம் போனதும் அவள் திரும்பிப் பார்த்தாள். நான் அவள் பார்வையைக் கோபம் என்றோ அழைப்பு என்றோ வகைப்படுத்த முயன்றேன். அவள் ஒருகணம் சந்தைக்குப் பேருந்து நிலையத்திலிருந்து ஏறும் வாசல் மேட்டில் நின்றுவிட்டு மறைந்தாள்.

கணேசனுக்கு இறுதிக் காலங்களில் அவ்வப்போது போதம் வருவதுண்டு. அப்போது அவன் அந்தப் பேருந்துக் காட்சியைத் துல்லியமாக நினைவுகூர்வான். ”அந்தப் பெண் கடைசிவரை ஏன் ஒரு சாரிகூட கேட்கவில்லை?” என்பான். ”அந்தத் திருநங்கை மட்டும் அது நானில்லை என்று சாட்சி சொல்லியிருக்காவிட்டால்?” என்று பதற்றமடைவான். ”அவர்கள் என்னை போலீஸ் ஸ்டேஷனில் கொண்டுபோய் அடித்திருப்பார்கள். பேப்பரில் என் பெயர் வந்திருக்கும். ஆபீசில், தெருவில் நமக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும் அதைப் படித்திருப்பார்கள். அப்புறம் அம்மா…” என்று கண்ணீர்விடுவான். ”அந்தப் பெண் நம்மை  நிரந்தரமாகக் காயடித்துவிட்டுப் போய்விட்டாள். உனக்குப் புரிகிறதா?”

நான் தலையை உலுக்கிக்கொண்டேன்.

“நம்மையல்ல. உன்னை, உன்னை, உன்னை” என்று நடுபேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு கத்தினேன்.

இரண்டொருவர் திரும்பிப் பார்த்தார்கள்.

இலேசாக மின்னி மழை பெய்ய ஆரம்பித்தது.

2

எனக்கு மூத்திரம் முட்டுவது போலிருந்தது. ஆனால் பேருந்து நிலையத்தின் கழிவறைக்குச் செல்லத் தயக்கமாக இருந்தது. ஒரு தடவை மூத்திரம் பெய்துகொண்டிருந்த போது பக்கத்துப் புரையில் மூத்திரம் பெய்துகொண்டிருந்த ஆள் எட்டி சுன்னியைப் பிடித்துவிட்டான். நான் “ஏய் என்ன?” என்று உளற, “டேய் இருடா, சும்மா வா என்கூட. நான் நல்லா ஊம்பி விடுவேன்” என்றான். நான் விடுவித்துக்கொண்டு வெளியே ஓடிவந்து வாசலில் சில்லறையை எண்ணிக்கொண்டிருந்தவனிடம், “அங்கே ஒரு ஆளு தப்பா….” என்று சொன்னேன். அவன் நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் சில்லறையை மௌனமாகப் பிரித்து வைக்க ஆரம்பித்தான். நான் அங்கேயே நிற்பதைப் பார்த்துவிட்டு, “புடிச்சா போ சுன்னி. இல்லேனா விடு. என்கிட்ட வந்து எதைச் சிரைக்கச் சொல்லுதே?” என்றான்.

நான் எட்டிப் பார்த்தேன். இன்று வேறு ஒரு ஆள் இருந்தான். ஒரு பையன். நான் சற்றே ஆசுவாசமாய் உள்ளே நுழைந்தேன். ஒரே ஒரு வயசாளி மட்டும் கோவணத்தை அவிழ்த்து கட்டிக்கொண்டிருந்தார். அவரது ஆண்குறி பெரிய கழுதையுடையதைப் போலத் தொங்கிக் கிடந்தது. அதை மடித்து கோவணத்துக்குள் பொதிய சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். “இழவு. இந்த ஓதத்தோட நான் கிடந்து சாவுதேன்” என்றார். நான், “ஆபரேசன் பண்ணிக்கலாமே?” என்றபடியே மூத்திரம் பெய்ய ஆரம்பித்தேன். அது அங்கு ஏற்கனவே நுரைத்துக் கிடக்கும் மஞ்சள் அம்மோனியக் கழிவுடன் போய்ச் சேர்ந்தது. மூத்திரப் புரைக்கு மேலே, “தரமான ஓலுக்கு ஷீலா கொட்டாரம்” என்று ஒரு பெண் புண்டையை விரித்து அமர்ந்திருப்பது போல் படம் போட்டு – அதே போல் ஒரு சிலையை சுசீந்திரம் கோவிலில் பார்த்திருக்கிறேன், லஜ்ஜா தேவி என்று ஏதோ ஒரு பெயரைக் கணேசன் சொன்னான் – ஒரு போன் நம்பரும் எழுதியிருந்தது. கீழே எவனோ, “உண்மையிலேயே சூப்பர் ஓல்!” என்று ரிவ்யூ வேறு அளித்திருந்தான்.

“அரசாங்க ஆஸ்பத்திரில இன்னிக்கி வா நாளைக்கி வா, கூட கையெழுத்து போட ஒரு ஆளைக் கூட்டிட்டு வான்னு விரட்டி விரட்டி விடுதான். தனியார்ல வீட்டை எழுதிக் கேக்கான். புள்ளைங்களும் பார்க்க மாட்டேங்குதோவ்” என்றார் அந்த முதியவர். அவருக்கு இருப்பது போன்ற விரை வீக்கம் கொண்ட ஒரு ஆணின் சிலையையும் கோவில்களில் பார்த்திருக்கிறேன். அந்தச் சிலையின் பெயர் என்னவோ? கணேசனுக்குத் தெரிந்திருக்கும்.

நான் பதில் பேசவில்லை. மூத்திரம் போகிற இடம் இலேசாக எரிவது போல் இருந்தது. கீழே குனிந்து பார்த்தேன். பழுப்பாய் முத்து போல் ஏதோ ஒன்று வெளிப்பட்டு என்னவென்று பார்ப்பதற்குள் மூத்திரப் புரைக்குள் விழுந்துவிட்டது. சட்டென்று ஒரு பதற்றம் ஏற்பட்டது. நான் திரும்பி அந்த முதியவரிடம், “பிள்ளைங்க பார்க்கலைன்னா சாவுவே” என்று கத்தினேன். “பூல் பாண்டி! போலே!” கிழவன் அதிர்ச்சியடைந்து அப்படியே நிற்பதைப் பார்த்தபடி வெளியேறினேன்.

3

ஒரு வாரமாகவே மாத்திரை இல்லை. வீட்டுக்குப் போகும் முன்னர் டாக்டர் க்ளினிக்கில் எட்டிப் பார்த்தேன். கூட்டம் அதிகம் இல்லை. நர்ஸ், “சீக்கிரம் போங்க. டாக்டரு போகப் போறாரு” என்றாள். உள்ளே போகும்போது யாரிடமோ போனில், “இதோ வரேம்மா” என்பது போல் தெலுங்கில் மென்மையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். மாத்திரை எழுதித் தரும்போது, “மாத்திரை போட்டாலும் பெரிதாய் தூக்கம் வருவதில்லை” என்று சொன்னேன். “கனவுகள்தான் வருகின்றன”. அவர், “நீங்க நிறைய காபி, சிகரெட் குடிக்கறீங்க. அதெல்லாம் கார்ல ஆக்சிலேட்டர் மாதிரி. நான் கொடுக்கிற மாத்திரைகள் பிரேக் மாதிரி. இரண்டையும் ஒரே நேரத்தில பிடிச்சா?” இதைச் சொல்வதற்குள் அவருக்கு மறுபடி அந்தப் போன் வர ‘இதோ வரேம்மா’ என்று மறுபடியும் மென்மையாகச் சொன்னார். அவரது அந்தக் குரல் வேறுபாடு எனக்கு வெறுப்பை அளித்தது. நான் எனது ஹோமியோபதி டாக்டர் பற்றி நினைத்துக்கொண்டேன். அவளானால், “என்ன மாதிரியான கனவுகள்?” என்று கேட்பாள். நான் வேண்டுமென்றே மிக ஆபாசமான கொடூரமான கனவுகளை விவரித்துச் சொல்லி அவள் முகம் மாறுவதைப் பார்த்துக்கொண்டிருப்பேன். ஒரு கட்டத்தில் அவள், “என்னால உங்களை க்யூர் பண்ண முடியாது. வேற டாக்டரைப் பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டாள். ஆனால் அவளிடம் போய்க்கொண்டிருந்த நாட்களில் நன்றாக உறக்கம் வந்துகொண்டிருந்தது.

நான் மாத்திரையை வாங்கிவிட்டு கௌரி சங்கரில் இரண்டு மசால் தோசையும் பன்னீரும்  பார்சல் வாங்கிக்கொண்டேன். டெரிக் சந்திப்பைக் கடக்க முடியாமல் ஒரே கூட்டமாக இருந்தது. எட்டிப் பார்த்தேன். ஒரு ஸ்கூட்டி கவிழ்ந்து கிடக்க எதிரே ஒரு டவுன் பஸ் நின்றிருந்தது. “ஒரு பொண்ணு பஸ்ஸுக்கு அடியிலே போய்டுச்சு” என்று கத்திக்கொண்டிருந்தார்கள். நான் வண்டியை நிறுத்திவிட்டு குனிந்து பார்த்தேன். ஒரு பெண்ணின் வலது கையின் மேல் பேருந்தின் டயர் ஏறி நின்றிருந்தது. அவள் அதிலிருந்து கையை உருவ முயல அது இரத்தமும் நிணமுமாய்ப் பிய்ந்து வந்தது. எலும்பே கூழாகியிருக்க, தன் மற்ற கையால் ஊன்றித் தவழ்ந்து வர முயன்று, முடியாமல் அப்படியே மயங்கிச் சரிந்தாள். நத்தை ஒன்று தன் உடலை இழுத்துக்கொண்டு ஊர்ந்து ஊர்ந்து வருவது மாதிரி இருந்தது. டிராபிக் போலீஸ் ஒருவர் நிதானமாக நடந்துவந்து கீழே பார்த்துவிட்டு ‘ச்ச்ச்ச்’ என்றார். பிறகு போனை எடுத்துக்கொண்டு தள்ளிப் போனார். அந்தப் பெண் மறுபடி விழித்து, இருந்த ஒற்றைக் கையை அசைத்து, வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த எங்களைப் பார்த்து எதையோ சொல்லிவிட்டு, மறுபடி மயங்கினாள்.

4

வீட்டுக்குள் நுழையும்போதே குப்பென்ற மல நாற்றம் அடித்தது. சனியன் என்று நினைத்துக்கொண்டேன். டயபரையும் போட மாட்டாள், ஹோம் நர்சும் பிடிக்காது, அதே நேரம் வாயிலும் கட்டுப்பாடு இல்லை. எதையாவது கண்டது கழியது தின்றுவிட்டு பேதி கழிந்துகொண்டு இருப்பாள். நான் விளக்கைப் போட்டேன். “என்ன.. மறுபடி ஒரு மணி நேரம் வேலை வச்சிட்டியா? மனுஷன் ஒரு நாள் நிம்மதியா தூங்கிரப்படாது. ஏனிப்படி உயிரை வாங்கறே?” என்று கத்தினேன். அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு கையால் என் சட்டையைக் காண்பித்து ‘என்ன?’ என்பது போல் கேட்டாள். நான், “சொல்றேன்” என்றபடி பாத்ரூமுக்குப் போனேன். என் ஆடைகளை உரிந்து தனியாக வாளியில் போட்டேன். கை காலைக் கழுவினேன். பிறகு வெளியே வந்து அம்மாவைத் தூக்கி அவள் நைட்டியை உருவி ஈரத்துண்டால் அவள் உடல் முழுவதையும் துடைத்தேன். போர்வையை மாற்றினேன். பக்கத்து ஸ்டூலில் சாப்பாடு பாதி சாப்பிட்டு உலர்ந்து அப்படியே கிடந்தது. அதை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டேன். வேறொரு நைட்டியை அவளுக்கு அணிவித்துவிட்டு எழுப்பிச் சாய்த்து சுவரோடு உட்கார வைத்தேன். பிறகு பார்சலைப் பிரித்து அவள் முன் வைத்து, “சாப்பிடு” என்றேன். அவள் சாப்பிடாமல் என் நெஞ்சைக் காண்பித்து ‘என்ன?’ என்று மறுபடியும் சைகையால் கேட்டாள்.

நான், “அதுவா?” என்றேன். “ரத்தம், ஆக்சிடண்ட். ஒரு பொண்ணு வண்டிக்கு அடியில போயிடுச்சு. எல்லாத் தேவடியா மவனுங்களும் ஆம்புலன்ஸ் வரட்டும் மயிரு வரட்டும்னு பார்த்துக்கிட்டே நிக்கானுங்க. நான் போயி இழுத்து வெளியே போட்டேன்” என்றேன்.

“என் கழுத்தைப் பிடிச்சிக்கிட்டே செத்துப் போச்சு”.

3 comments

மணி வேணுகோபாலன் August 31, 2021 - 2:22 am

பட்டினத்தடிகள் படித்த உணர்வு.

Muthuvel August 31, 2021 - 7:39 pm

Bogan love you

SURESHKUMAR KS September 1, 2021 - 3:49 pm

அட்டகாசம் போகன். ஒரு வனாந்திர்த்தில் அமர்ந்துகொண்டு எந்த இடையூறும் யார் குறுக்கீடும் இல்லாமல் எனக்கு நேரெதிர் அமர்ந்து சொல்வதுபோல் இருந்தது.

Comments are closed.