தலைகீழ்க் கொழுந்தின் இறுதி யாத்திரை

by ஆசை
2 comments

குட்டியானைச் சவாரி

குட்டியானை* மீது
ஏறி வருகிறான்
குண்டு காதர் மொய்தீன்

ஒன்பது வயதுச்
சிறுவன் அவன்
என் பிள்ளையின்
வகுப்புத் தோழன்

எங்கள் சந்து வந்ததும்
இறங்கிக்கொள்கிறான்

‘வர்லாம்பா
வர்லாம்பா’
என்று அவன் சொல்லச் சொல்ல
புட்டமாட்டிக்கொண்டே
பின்புறமாகவே வருகிறது
அந்தக் குட்டியானை

தோழனைக் கண்டதும்
சூழ்ந்துகொள்கிறார்கள்
கிரிக்கெட் விளையாடும்
எங்கள் தெரு
சிறுவர்கள்

குட்டியானையில்
சவாரிவரும்
காதர் மொய்தீனின்
தோழர்கள் என்ற பெருமிதம்
அவர்களுக்கு

அப்பாவிடம் கெஞ்சிவிட்டு
விளையாட்டில்
சேர்ந்துகொள்கிறான்
குண்டு காதர் மொய்தீன்

எப்போதும்
பந்து பொறுக்கிப் போடும் நேரம்தான்
அவனுக்குக் கிடைக்கும்
அந்த நேரத்திலும்
ஒரு கேட்சைப் பிடித்து
ஒருவனை அவுட்
ஆக்கிவிடுகிறான்
குண்டு காதர் மொய்தீன்

ஒன்றிரண்டு பேரோடு
வியாபாரம் முடிந்துவிட
அப்பா கூப்பிடவும்
நண்பர்களிடம் சொல்லிவிட்டுப்
பாதியிலேயே போகிறான்
கையை மட்டையாகப்
போலி செய்துகொண்டு

பெருந்தொற்று
வீதியில் எறிந்த
குழந்தைகளில் ஒருவன்
அவன்

அப்பா முதலில் போட்ட
இட்லிக் கடையிலும் நின்றான்
அடுத்து போட்ட சூப் கடையிலும் நின்றான்
இப்போது குட்டியானையில்
காய்கறிச் சவாரி

தோழர்களுக்குக் கையசைத்துவிட்டு
வெங்காய மூட்டைமேல் ஏறிக்கொள்ள
புறப்படுகிறது
குட்டியானை

அப்பாவுக்குத் துணையாய்
மட்டுமல்ல
குண்டு காதர் மொய்தீன் வருவது

போய்க்கொண்டே இருக்கும்போது
அவ்வப்போது
குட்டியானையின்
புட்டம் அசைவதற்கேற்ப
அதன் வாலை அசைத்துவிட்டபடி
இருப்பதற்கும்தான்

குட்டியானைக்கு அதுதான் அழகு
குண்டு காதர் மொய்தீனுக்கு அதுதான் மகிழ்ச்சி.

*(குட்டியானை – Tata ACE வண்டி)

*

தெய்வம் வளர்தல்

உன் பேதமையுடன்
அறியாமையுடன்
தனக்கே எல்லாம் வேண்டும் என்ற
எல்லையற்ற சுயநலத்துடன்
என்னருகே வரும்போது
தெய்வமாக இருக்கிறாய் மகனே

அறிவற்ற இடம் எரிக்கும்
தெய்வச் சோதி நீ

உன் கண்களைப் பார்த்துக்கொண்டே
இருப்பது
கருத்தழிக்கிறது

அது வெற்றிடத்தின்
அளவற்ற இன்பத்தைக் கொடுக்கிறது

நீ பதிக்கும் முத்தத்திலும்
என் முத்தத்திலும்
அன்பைத் தாண்டிய
அசுரம் பிறக்கிறது

அது அதனருகே இருக்கும்
காதல் காமம் யாவற்றையும்
உருட்டி விளையாடுகிறது

கட்டியணைக்கும்போது
கருந்துளைபோல்
என் ஆவியுணர்வுகள்
உறிஞ்சிக்கொள்ளும் நீ
பிறகு எங்கே கொண்டுபோய் வைப்பாய்
அந்தக் கருந்துளையை

அதில் பத்திரமாக இருக்குமா
உன் பேதமை
அறியாமை
எல்லையற்ற சுயநலம்

அவற்றை அணைத்துக்கொண்டும்
முத்தமிட்டுக்கொண்டும் அங்கேயே இருக்கட்டும்
நீ உறிஞ்சிக்கொண்ட என் ஆதுரம்

என்னருகே வரும்போது
தெய்வமாக இருக்கிறாய் மகனே
ஆனால்,
தெய்வமாக வளர்வாயா?

(எமிச்சேட்டா புச்சிக்கு)

*

தலைகீழ்க் கொழுந்தின் இறுதி யாத்திரை

அவர் கொண்டுசெல்லும்
காய்கறிப் பையின்
கீழ்ப்பகுதி ஓட்டையிலிருந்து
எட்டிப்பார்த்தன
கீரைத்தண்டின்
சில இலைகள்

அவர் கைவீச்சின்
முன்னும் பின்னுமான
மெல்லூசலில்
தரையைக்
கால்வட்டமாகப் பார்க்கின்றன
அந்த இலைகள்

இப்படியும்
அப்படியும் என்று
சீரான தாளத்திலோர்
பச்சைத் தாலாட்டு

விண்ணகத்தையே
பார்த்து வளர்ந்த அவற்றுக்கு
உயிர்கொடுத்துச்
சில நாட்கள் தஞ்சம் கொடுத்திருந்த
புவியை இக்கோணத்தில்
பார்ப்பது புதிதாகத்தான் இருக்கும்

தம் உறிஞ்சுதல் வேலையிலிருந்து
ஓய்வெடுக்கும் வேர்களும்
தம் புதிய திசைமாற்றத்தை
வியந்தபடி
பைக்குள் நெரிசலில்
இழையோடும்

பைக்குள் இருக்கும்
மகிழ்ச்சியின் மொத்த எடையிலிருந்து
ஓர் பச்சைப் பிதுக்கம்
எட்டிப்பார்த்தபடி
போய்க்கொண்டே இருக்கும்

தலைகீழ்க் கொழுந்தே
தலைகீழ்க் கொழுந்தே
நீயுன் விடுதலையை
மரணத்திடமிருந்து
உறிஞ்சிக்கொண்டிருப்பது
உனக்குத் தெரியுமா?

*

முதுமை கண்டதுண்டு

கனத்த உடம்பு
கொண்ட தாத்தா
தடியை ஊன்றி ஊன்றிப்
போகிறார்

ஒவ்வொரு எட்டுக்கும்
நின்று நின்று
போகிறார்

அவர் கையில்
கட்டைப்பை வேறு

அவர் எப்போது
கடைக்குப் போய்விட்டு
எப்போது வீடு திரும்புவது
என்று மலைக்கிறாய்

அவர் நீயாக வீடு திரும்பிவிடுவாரோ
என்ற அச்சம் உனக்கு

அவர் நீயாகத் திரும்பும்வரை
நீ காத்திருந்து பார்த்தால்
நீயும் ஆகலாம் புத்தன்

ஆனால்
ஆகிவிடாதே

இந்த டீக்கடையில்
இன்னொரு டீ சொல்.

*

காகத்தின் ஆயுள்

எவ்வளவு தூரம் சென்றாலென்ன
எவ்வளவு வாழ்வு வாழ்ந்தாலென்ன
எவ்வளவு அண்டங்களை ஈன்றாலென்ன
இரண்டு
மின்கம்பிகளுக்கு இடையில்தான்
ஒரு காகத்தின் ஆயுள்
பறந்துகொண்டிருக்கிறது.

*

அந்தக் கிழவர்களின் கண்கள்

அந்த டீக்கடை முன்
எப்போதும் ஏழெட்டு
பிளாஸ்டிக் நாற்காலிகள் கிடக்கும்

டீ குடிக்க
பேப்பர் படிக்க வருவோர்
உட்கார்வதற்கு
மட்டும் அல்ல அது

எப்போதும் இடையறாது
ஓடிக்கொண்டிருக்கும்
காலத்தை நிறுத்தி
அதை வெறுமனே
தங்கள் கண்களால்
பார்த்துக்கொண்டிருக்கும்
இரண்டு மூன்று கிழவர்கள்
உட்கார்வதற்கும்

அவர்கள்
டீ குடித்தோ
பேப்பர் படித்தோ
ஒருபோதும் பார்த்ததில்லை நான்

காலத்தை நிறுத்தி வைத்து
நேருக்கு நேர்
வெறுமனே பார்க்க
அந்த நாற்காலிகளில்
அந்தக் கிழவர்கள்
அமர வேண்டும் என்பதில்லை

யாரும் உட்காராத
நாற்காலிகளும்
அதைத்தான் செய்துகொண்டிருக்கும்.

2 comments

Umamaheswari September 29, 2021 - 7:56 am

அனைத்துமே சிறப்பு , யானை , தாத்தா குறித்தானை வ பள்ளிக் குழந்தைகளுக்கு பாட்டுகளாகக் கொடுக்கும் அளவிற்கு சுருதியுடன் வந்துள்ளன .வாழ்த்துகள்

Kasturi G November 21, 2021 - 8:58 pm

Fantastic poetry
Salutations and good luck to the Authour
Thanks

Comments are closed.