கார்த்திக் நேத்தா கவிதைகள்

1 comment

நாதக் காம்பு

எழுநூறு வருடப் பழைய மணியின் ஒலியில்

துளியும் முதுமையில்லை.

கைக்குழந்தையின் துள்ளல் அதன் ஒலி.

பாலுண்ட கன்றுக்குட்டியின்

மூச்சின் நன்றி போன்றது

சீரான அதன் அதிர்வு.

மணியைப் பார்த்தவாறே

அமைதியாக அமர்ந்திருந்தேன்

கோயில் தரையில்.

ஆட்டுக்குட்டியின் மடிக்காம்பு போல

அசைந்தது

எழுநூறு வருடப் பழைய மணியின் நா.

*

தொழுகை

இந்த அழுகை

ஆற்றாமையினது அன்று.

அடைந்துவிட்ட சிறகமைதி.

உள்நின்ற சுவையின்

உயர் நிலை.

கருணை கொண்ட விழிகளில்

கட்டி நிற்கும் பேராண்மை.

இந்த அழுகை

அழுகையின் குணம்

கொஞ்சமும் இல்லாத

நிசப்தம் பொதிந்த

பேதமறியா கண்ணீரின்

மலையேற்றம்.

இந்த அழுகை

அடைமழையின் நாதத்தை

நினைவுறுத்தும்

சடசடக்கும் காட்டுத்தீயெரி

ஓலம்.

*

வாய்த்தல்

மௌன விசாலத்தில்

மிதக்கும் இலையாக

வாழ்க்கை வாய்த்தது.

ஒளி மினுங்கும்

குழந்தைக் கண்களைப்

பார்த்துப் பார்த்து வாலடிக்கும்

குட்டி நாயாக

வாழ்க்கைக்கு வாய்த்தேன்

நான்.

*

எளிய குடில்

ஒளி நிறைய உண்டு

விளக்கை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.

பயணத்தில்தான் இப்போதும் இருக்கிறேன்

காலத்தையும் இடத்தையும்

நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.

விடைபெறும்போது

தவறாமல் சொற்களை

எடுத்துச்செல்லுங்கள் அன்பரே

உண்மையை வைக்குமளவேயான

எளிய குடில் இது.

*

தொலைத்தல்

எப்போதும் எதையாவது தொலைத்துவிடுகிறேன்

அப்பா காட்டிய பாதைகளை

அம்மா கையளித்த பக்தியை

தாத்தா வாங்கித்தந்த மலைகளை

ஆயா ரகசியமாகத் தந்த பழமொழிகளை

ஆசையாக வாங்கிய கைக்கடிகாரத்தை

பிறரைப் பார்க்கும் பொருட்டு

வாங்கி வாங்கி அணியும்

மூக்குக் கண்ணாடியை.

தொலைக்குந்தோறும் துயருறுவேன்.

இப்போது நான் தொலைத்திருப்பது

வாக்கையும் மனத்தையும்

இடத்தையும் காலத்தையும்

துறவையும் தத்துவத்தையும்.

தொலைக்க வேண்டியவற்றைத்

தொலைத்ததும் கிட்டியதோ

தொலைக்க முடியாத தன்மம்.

*

மிதத்தல்

சாலையில் ஒரு சைக்கிள் சென்றது.

சைக்கிளில்

இடத்தை ஏற்றிக்கொண்டு

காலம் சென்றது.

பார்த்தவாறே இருந்தேன்.

தூரத்தில் வெகுதூரத்தில்

சாலைப் பிரவாகத்தின்

புகைமூட்டத்தில்

சைக்கிள் மிதப்பதைப் பார்த்தேன்.

அகண்ட வெளியில்

சிறுபறவையின் அசைவாக

அது இருந்தது.

*

கனிந்த இன்மை

கேட்டது

பறக்கும் பறவையின் குரலையோ?

பறந்த பின் நிலைத்த

மௌனத்தையோ?

கேட்டதற்கும்

பார்த்ததற்கும் இடையில்

கனிந்திருந்த ஒன்றையோ?

*

கணவனை எரித்துவிட்டு

மரணத்தோடு வீடு சென்ற கிழவி

குடிசையின் நடுவில் விளக்கேற்றி

மரணத்தை வணங்கினாள்

பாயை விரித்து

மரணத்துடன் படுத்தாள்

ஊளையிட்ட குரலுக்குத் தண்ணீர் தந்து

வந்து உட்கார்ந்தாள்

மரணத்தையே வெறித்தாள்

அதன்மேல் அமர்ந்த சுடரின் ஈயை

ஓங்கி விசிறி விரட்டினாள்

அந்த இரவிலிருந்து

நடக்கையில்

இருக்கையில்

சிரிக்கையில்

அழுகையில்

எங்கும் பரந்துவிட்ட

மரணத்தின் மேல் அமரும் ஈயை

விரட்டியவாறே இறந்தாள்.

*

நினைவுப்பாவை

நீ பரிசளித்த

ஆளுயரக் கண்ணாடிமுன் நிற்குந்தோறும்

எனது கண்களில்

இன்று வந்து சேர்ந்துவிட்ட

காலத்தின் குரூரம் இருப்பதில்லை.

எனது தலைமுடியில் முடியாத மினுக்கம்.

எனது முகத்தில்

அனுபவம் ஏறாத பிஞ்சுக் கருணை.

காமத்தின் ஒள்ளொளி

உடலெங்கும் சுடர்ந்தெரிய

பதின் வயது சிறுவனாகப்

பூரித்து நிற்கிறேன்.

உனது கண்ணாடிமுன் நிற்கையில்

எனக்கு வயதேறுவதே இல்லை.

*

பெயரெச்சம்

சொல்லப் போனால்

நீ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்

ஆனால் பெண்ணே

உனது பெயரைச் சொல்

நான் பெயர்களை மோகிப்பவன்

உச்சக் கலவியின்

ஓங்குயர் நிலையில்

ஓலமிட்டுக் கதறிச் சிலிர்த்து

நான் உரைக்க

உன் பெயரை மட்டும் சொல்.

1 comment

கலாப்ரியா September 1, 2021 - 3:07 pm

அருமையான கவிதைகள். வாழ்த்துகள் கார்த்திக் நேத்தா..

Comments are closed.