”மஞ்சள் நூறு, கல்ல பருப்பு ஒன்னு, பயத்தம்பருப்பு ஒன்னு, பொன்னி அரிசி பத்து.”

“எனக்கு ரெண்டு லிட்டர் கடலெண்ணெய்.”

“அண்ணே கொழந்தைய வுட்டுட்டு வந்திருக்கேன், இந்த மூனு ஜாமான மட்டும் போட்டு அனுப்பி வுடுங்களேன்.”

’அச்சுவெல்லத்தோட சேர்த்து பத்தொம்போது பொருளு.. காசு வாங்கியாச்சா?”

“வெள்ளை மொச்சை மேல் அடுக்குல இருக்கு பாரு.”

“மொத்தம் நானூத்தி பதிமூன்ரூவா…”

மூன்று நாட்களில் பொங்கல் என்பதால் கடைவாசலில் வைத்திருக்கும் உப்புமூட்டை இரண்டு முறை கீழே சரியும் அளவிற்குக் கூட்டம் நெருக்கியடித்தது. கடைக்குள்ளே ஊழியர்கள் கபடி வீரர்கள் போல ஆறு பேர் மளிகைப் பொருட்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஓடிக்கொண்டிருந்தார்கள். கடையில் இருக்கும் மூன்று தராசுகளும் எல்லா எடைக்கற்களையும் ஓயாது உரசி சப்தமெழுப்பிய வண்ணம் இருந்தன. பில் போடுவதற்கு ஒரு ரூபாயில் இருந்து இலட்ச ரூபாய் வரை ஒரே நேரத்தில் எத்தனை கணக்கைக் கடையாட்கள் சொன்னாலும் மனதிலே ஓட்டிப்பார்த்துத் துல்லியமாக மீதிச் சில்லறை வழங்குவேன். இன்றுவரை கடையில் கால்குலேட்டர் கிடையாது. பொட்டலம் கட்டும் சத்தமும், சில்லறைகளின் சத்தமும், வாடிக்கையாளர்களின் சத்தமும், ஊழியர்களின் குரல்களும் சேர்த்து கச்சேரி நடத்திக்கொண்டிருக்க, ஓயாது அடித்துக்கொண்டிருந்த தொலைபேசி மணிச்சத்தமும் உடன் சேர்ந்துகொண்டது. ஃபோனை எடுத்துப் பேசினேன். கேட்ட செய்தியில் ஒரு கணம் எல்லாமே தலைகீழாகத் தெரிய கண்ணை மறைத்து இருண்டது. 

“வேலு.. கடைய மூடுறா..” என்றேன். கடைப்பையன்களின் புருவங்கள் நெற்றிக்கு ஏறின. யாரிடமும் எதுவும் சொல்லாமல் வெளியே வந்தேன். பேருந்து நிலையத்தை நோக்கி ஓட்ட நடையாக விரைந்தேன். 

பூக்கடையில் நல்ல கூட்டமிருந்தது. இருந்ததிலேயே பெரிய மாலையாக வாங்கிக்கொண்டேன். கூட்டத்திலிருந்து பிரியும்போது வண்டியை நிறுத்திய பூக்கடை முதலாளி கலியமூர்த்தி அண்ணன் என்னைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்டார். “நல்லாருக்கியா தம்பி.. கடைல வேலை பாக்கும்போது.. தெனைக்கும் கடைக்கி பூ வாங்க வருவ.. இன்னைக்கி மொதலாளி சாவுக்கு மாலை வாங்க வந்துருக்க.. ராமஜெயம் சாவும்போது ஒன்னல்லாம் நெனச்சிக்கிட்டுதான்யா செத்திருப்பாரு.. நான் இப்பதான் போயிட்டு வரேன்.. நாலு மணிக்கெல்லாம் தூக்கப் போறானுவோளாம்”. அவர் சொன்னவுடனே விழிகள் கசிந்தன. 

சீர்காழி செல்லும் பேருந்தில் அமர்ந்துகொண்டேன். நிலையத்திலிருந்து பேருந்து வெளியே திரும்பி அண்ணா சிலையைக் கடக்கும்போது அனிச்சையாக ஜன்னல் வழியே எங்கள் ராமஜெயம் மளிகை ஸ்டோர்ஸ் கடையைப் பார்த்தேன். ஷட்டர் கதவில் கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில் நெற்றியில் சந்தனப்பொட்டுடன் போஸ்டராய் ஒட்டப்பட்டிருந்த முதலாளி என்னைப் பார்த்து வெற்றிலைக் கறைப்பற்கள் தெரிய புன்னகைப்பதைப் போலிருந்தது. 

முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்பு அரைக்கால் சட்டைப் பருவத்தில் தகப்பனை இழந்து, பார்ப்பதெல்லாம் சோறாகத் தெரிந்த பசிக்கொடுமைக் காலத்தில், அம்மா முதலாளியின் மளிகைக்கடையில் கொண்டுவந்து விட்டபோதுதான் இந்தப் புன்னகையை நான் முதன்முதலாகப் பார்த்தேன். முதலாளியைப் பார்க்க அன்று நாங்கள் நின்றுகொண்டிருந்த போது, அருகில் இருந்த கிராமபோன் தட்டு சுழன்றுகொண்டிருக்க, அதிலிருந்து வந்த பாடலை விழிகளை மூடி, பின்னந்தலையைக் கரங்களில் தாங்கியபடி, நாற்காலியில் சாய்ந்து கேட்டுக்கொண்டிருந்தார் முதலாளி. நான் கண்மூடியிருந்த அவரது முகத்தையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தேன். பாடல் முடிந்தவுடன் கன்னச் சதைகள் விரிந்து முகம் மலர்ந்து என்னைப் பார்த்தார். ”தகப்பனில்லாத புள்ள ஐயா.. நீங்கதான் கைதூக்கி விடணும்” என்று என் அம்மா, முதலாளி முன்பு பணிவோடு வளைந்து கும்பிட்டுச் சொன்னார். 

கோபம் வந்தே பழகியிருக்காத முகமோ என்று எண்ணும்படித் தாம்பூலத்தைக் கன்னத்தில் அதக்கிக்கொண்டு, “தம்பி.. பேரென்ன?” எனக்கேட்டு அவர் சிரித்த கணம், தீபாராதனை காட்டி அணைத்த தெய்வ வடிவாய் மனதில் உறைந்திருக்கிறது.

முதலாளி எந்நேரமும் பாடல் எதையாவது முணுமுணுத்துக்கொண்டே இருப்பார். எண்பது கிலோ எடையுள்ள மூட்டையைத் தூக்கி நகர்த்தும்போதும் பாடல் கேட்கும் முகபாவனையே அவரிடம் இருக்கும். 

“யேவாரம் பண்றவன், ஒடம்புலயோ, மனசுலயோ உள்ள வலிய மொகத்துக்குக் கொண்டாரப்புடாது செல்வம்” என்பதை அடிக்கடிச் சொல்வார்.

எந்தப் பொருளுக்கும் சணல் இல்லாமல் பொட்டலம் கட்டுவார். அரிசியோ, பருப்போ ஐந்து கிலோவுக்கு மேல் கட்டும்போது அவிழும் பயத்தில் இரண்டு பொட்டலங்களாகத்தான் நாங்கள் கட்டுவோம். ஆனால் முதலாளி விரல் சொடுக்கும் நேரத்தில் ஒரே பொட்டலமாகக் கட்டுவார். அதெல்லாம் முதலாளியின் பழுத்த வித்தைகள்.

முதலாளிக்கு வாடிக்கையாளர்கள் எப்போதுமே முக்கியமானவர்கள். குழந்தைகளோடு வருபவர்களிடம் குழந்தைகளுக்குச் சீனி முட்டாய் தருவார், பெரியவர்களை உறவு சொல்லியழைத்து, தண்ணீர் கொடுத்து, நாற்காலியில் அமரச் சொல்லுவார். இளையவர்களின் பெயர்களைக் கேட்டு அடுத்தமுறை அவர்களின் பெயர் சொல்லி அழைப்பார். 

“கஸ்தூரிமிளகு.. கர்ப்பத்துக்கா, அம்மைக்கான்னு கேட்டுக் குடு மாப்ளைக்கு” என்று சொல்வார்.

தொழில்முறை உறவு என்றில்லாமல் உறவுமுறைத் தொழில் என்றே முதலாளி எங்களுக்குக் கற்றுக்கொடுத்திருந்தார்.  

துலாத்தட்டில் எடைபோட பொருளைக் கையில் எடுக்கும்போதே வாடிக்கையாளர் கேட்ட அளவை முதலாளி எடுத்துவிடுவார். எடை நிறுத்தமெல்லாம் வாடிக்கையாளர் திருப்திக்காகத்தான். முதலாளியின் உள்ளங்கையிலேயே நாற்பது வருடங்களாக எடைக்கற்கள் ஏறியிருந்தன.

தாயை ஓடித் தொடுவதற்காகவே தாயைப் பார்த்து முதலடி நடைபழகும் குழந்தையைப் போல முதலாளியைப் பார்த்தே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன்.  

உளுத்துக்குப்பை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்து தெருமுனையில் இருக்கும் மன்மதன் கோவிலைத் தாண்டியதுமே சன்னமாக மேளச்சத்தம் கேட்டது.

வீட்டின்முன் பெருங்கூட்டம் கூடியிருந்தது. உறவினர்கள், நண்பர்கள் தாண்டி வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என ஆட்கள் வீட்டை மறைத்துக் குழுமியிருந்தார்கள். மாலையைத் தூக்கிக்கொண்டு, கால்கள் அதிரக் கூட்டத்தைக் கடந்து முன்வாசலை அடைந்தேன். நிலைக்கு முன் நின்ற கூட்டத்திற்குள் போக வழியின்றிக் காற்று திணறியது. செவ்வந்தி, சம்பங்கி, ரோஜாப்பூக்கள் சிதறிக் கிடந்தன. காம்போடு இருக்கும் ஒவ்வொரு பூ மீது அடி வைக்கும்போதும் உள்ளங்காலில் கோழிக்குஞ்சு மிதிபடும் பதற்றத்தை நெஞ்சம் உருவாக்கியதால் கவனத்தோடு கூட்டத்திற்குள் எட்டு வைத்தேன். கூடத்திற்கு உள்ளே மாலை போடுவதற்குக் காத்திருந்த நபர்களின் கூட்டம் நீண்டிருந்தது. கீழே வட்டமாக அமர்ந்து பெண்கள் ஒருவர் தோளில் மற்றவர்கள் கைகளைப் போட்டபடிக் கூட்டுக்குரலாக ஒப்பாரி பாடிக்கொண்டிருந்தார்கள். பூக்களும் ஊதுபத்தியும் கலந்த மணம் நாசியைத் துளைத்து உள்ளுக்குள் இறங்கியது. எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. விரல்கள் நடுங்கின.. கையிலிருந்து மாலை கீழே விழுந்துவிடக்கூடாது என்று இறுகப் பிடித்துக்கொண்டேன். உடல் விதிர்விதிர்த்தது. கண்ணாடிப் பெட்டிக்குள் முதலாளியைப் பார்த்தவுடன் அவர்மேல் விழுந்து கதறிக் கூப்பாடு போட்டுவிடுவேனோ என்ற கலக்கம் நெஞ்சில் சரசரவெனப் பரவியது.  

அப்போதுதான் கிளாரினெட்டில் இருந்து ’மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ என்ற பாடலுக்கான இசை புறப்பட்டது. கடும் வெயிலில் உடல் வியர்க்க  நின்றுகொண்டிருப்பவன் தலைக்குமேல் திடீரெனப் புங்கை மரம் தோன்றியதைப் போலிருந்தது எனக்கு. ஒரு கணம் அழுகையொலிகள், பேச்சுகள் எல்லாம் அடங்கி, குயில் குரலில் கிளாரினெட் வாசிப்பு மட்டுமே கேட்டது. பின்னேயிருந்து ஒருவர் தள்ள, திடுக்கிட்டு முன்னே தடுமாறினேன். சந்தனப்பொட்டு, வெற்றிலைக் குதப்பலுடன் கண்ணாடிப் பெட்டிக்குள் கடைக்குப் புறப்படத் தயாராகி இருப்பதைப் போன்ற தோற்றத்துடன் கால்நீட்டிப் படுக்க வைக்கப்பட்டிருந்த முதலாளியைப் பார்த்ததும் துணுக்குற்று முகத்தில் குபுக்கென்று வெப்பம் படர்ந்தது. 

குளிர்ப்பெட்டியும், நெற்றியிலிருந்த ஒரு ரூபாய் நாணயமும் மட்டுமே அவருக்கு உயிரில்லை என்பதைச் சொல்லியது. இறந்தும் அவர் முகத்தில் சவக்களை வராமல் எப்போதும் போலத் தெய்வீகமே பொலிந்தது. முதலாளியைப் பார்த்துக்கொண்டிருந்தேனே தவிர ஆச்சரியமாக என் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர்கூட வரவில்லை. முதலாளி முகத்தை உற்றுப் பார்த்தேன். இப்போதும் வரவில்லை.. காதில் “மாலைப்பொழுதின் மயக்கத்திலே..” கிளாரினெட் ரீங்கரித்தது. காதை அடைத்துக்கொண்டு அழத்துடித்தேன். கிளாரினெட் எனக்குள்ளே ஒலித்துக்கொண்டேயிருந்தது. பல்லவியைத் தொடர்ந்து நான்கு முறை வாசித்தவன், சரணத்திற்காக இடைவெளி எடுத்துக்கொண்ட போதுதான் நான் இருப்பது சாவு வீடு என்ற நினைப்பு வந்தது. முதலாளியின் சடலத்தைச் சுற்றிலும் நின்றுகொண்டிருந்தவர்கள் கரங்களை விரித்தும், முகத்தில் அடித்துக்கொண்டும் அழுதார்கள். என்னோடு கடையில் வேலை பார்த்த கணபதி என் கையைப் பிடித்துக்கொண்டு, “ஐய்யோ.. செல்வம் மொதலாளி நம்பளல்லாம் உட்டுட்டுப் போயிட்டாரே..” என்று கதறினான்.

அவன் அழுவதைப் பார்த்தும் எனக்குத் துளியும் கண்ணீர் வரவில்லை. முதலாளியையே மறுபடியும் பார்த்துக்கொண்டிருந்தேன். வலிந்து அழுதுவிட வேண்டுமென உள்ளுணர்வு புகை போலத் தோன்றிக்கொண்டிருக்க என்னால் எதுவுமே செய்ய முடியாதபடி கிளாரினெட் ஓசையே என்னை ஆக்கிரமித்திருந்தது. பின்னால் ஆட்கள் மாலையுடன் வந்துகொண்டிருந்தார்கள். கூட்டம் கண்ணாடிப் பெட்டியைச் சுற்றிப் பெருகத் தொடங்கியது. துளி கண்ணீர்கூட விடாமல் வெளியே வந்தேன். செருப்புகள் வெளியே சிதறிக்கிடந்தன. ஏற்கனவே முதலாளிக்குப் போடப்பட்ட மாலைகள் ஒரு திண்ணை முழுவதிலும் சிறு மலர்க்குன்றாய் கிடந்தன. 

இப்போது ”வீடு வரை உறவு” என்ற பாடலை அவன் வாசிக்கத் தொடங்கியிருந்தான். விசுபலகைகளும், நாற்காலிகளும் வரிசையாகப் போடப்பட்டு வெள்ளை வேட்டிகளும், லுங்கிகளும் அமர்ந்திருந்தன. ஒரு பேண்ட்டுக்குப் பக்கத்தில் இடமிருக்க நான் அங்கு சென்று அமர்ந்துகொண்டேன். அருகிருந்தவரின் கைகளினூடாக அந்தக் கலைஞனைப் பார்த்தேன். இருபதிலிருந்து இருபத்து மூன்று வயதிருக்கலாம். கன்னத்தை முழுமை கொள்ளாத தாடிக்குப் பக்கத்தில் ஒரு நரம்பு ஓடிக்கொண்டிருந்தது. வலது கை கட்டை விரலின் பிடிமானத்தில் இருந்த கிளாரினெட்டின் மீது கூட்டமாகச் சிட்டுக்குருவிகள் தானியம் கொத்துவதைப் போல மற்ற விரல்கள் மீட்டிக்கொண்டிருக்க, சுண்டு விரல்கள் அதன் வாலைப் போலத் துள்ளிக்கொண்டிருந்தன. வயணமான வாசிப்பாக இருந்தது. அவனைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் அவர்களை மறந்து விரல்களால் பெஞ்சில் தட்டியோ, கால்களை ஆட்டியோ அவன் வாசிப்பைப் பாராட்டிக்கொண்டிருந்தனர். தன்னிலை மறந்து கண்மூடி வாசிப்பதிலிருந்து அவன் கூட்டத்திற்காக வாசிப்பவனில்லை என்று உணர்த்தியது. “அறிமுகமே இல்லாம மனசத் தொடுறவன் கலைஞன்” என்று முதலாளி அடிக்கடிச் சொல்வார். கிளாரினெட் கலைஞன் வாசிக்க வாசிக்க அவனைப் பாராட்ட முதலாளியே எழுந்து வந்துவிடுவாரோ என்று தோன்றியது. 

முதலாளி மிகத்தீவிரமான இசை இரசிகர். காலையில் சாதகம் செய்யும் நாதஸ்வரக் கலைஞர்கள் இருக்கும் தெரு வழியே நாதஸ்வர இசையைக் கேட்டபடியே வரவேண்டும் என்பதற்காகவே இரண்டு தெரு சுற்றிக்கொண்டு வருவார். 

எங்கள் கடையிலிருந்த நேஷனல் பானசோனிக் டேப் ரெக்கார்டரில் எந்நேரமும் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையோ காருகுறிச்சி அருணாச்சலமோ மாற்றி மாற்றி வாசித்துக்கொண்டே இருப்பார்கள். அப்போதெல்லாம் கல்லாவின் முன் அமர்ந்திருக்கும் முதலாளியைப் பார்க்கும்போது தண்ணீர்மீது எடையிழந்து அமர்ந்திருப்பவரைப் போலத் தோன்றும். 

கோவில்களுக்கு நன்கொடை கொடுக்கும்போது இன்ன ஊர் நாதஸ்வரக் குழுவினரை வரவழைக்கலாம் என்று விழாக் கமிட்டியினருக்கு யோசனை சொல்லுவார். உள்ளூர்த் திருவிழாக்களுக்குச் சொந்தச் செலவில் கச்சேரி புக் செய்வார். கச்சேரியில் தன் மனங்கவரும் கலைஞனிடம் சென்று அவரின் இரு கரங்களையும் தன் உள்ளங்கைகளுக்குள் வைத்துக்கொண்டு, ”பிரமாதம் தம்பி.. கடசியா அந்தப்பொடி சங்கதி ஒன்னு போட்டீங்க பாருங்க? அட்டகாசம்” என்று சொல்லிவிட்டுப் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை அப்படியே எடுத்து அன்பளிப்பாகக் கொடுத்து அவரை நெஞ்சுக்கு நேரே கரங்குவித்து வணங்குவார். வாத்தியக்காரரின் விழிகளில் ஒருகணம் பெருமை மின்னும். 

சீர்காழி கோவிந்தராஜனோ, எம்.எஸ்.சுப்புலட்சுமியோ பாடினால் உடன் சேர்ந்து சாதகம் செய்யும் மாணவனைப் போல முதலாளியும் அவர்கள் குரலடியைப் பிடித்துக்கொண்டு பாடுவார். இடையிடையே குரல் சறுக்கும்போதெல்லாம், தான் சுருதி விலகிப் பாடுவதைக் கடை ஊழியர்கள் நாங்கள் எங்கே கண்டுபிடித்து விட்டோமோ என்று எங்களை நோக்கிக் கண்களால் சிரிப்பார். நாங்களோ முதலாளி விளக்கிச் சொல்லும்வரை கர்நாடக சங்கீதம் என்பதையே கன்னடத்தில் பாடப்படும் பாட்டு என்றுதான் நம்பிக்கொண்டிருந்தோம்.

நாதஸ்வரமோ, பாடலோ எந்த இசைக் கச்சேரியாக இருந்தாலும் முதலாளி விரைவாக கடையடைக்கச் சொல்லிவிட்டு என்னையும் அழைத்துக்கொண்டு புறப்படுவார். இரவுக் கச்சேரிகளில் வாத்தியக்காரர்கள் வாத்தியத்தை அதற்குரிய பைகளில் எடுத்து வைக்கும் வரையிலும் முதலாளி எழுந்துவர மாட்டார். ”வயலின் வாசிச்ச அந்தப் பையன் பேரு வைத்தீஸ்வரனாம்டா.. என்னா பிரமாதமா வாசிச்சான் பாத்தியா?”

அவர் சொல் எல்லாவற்றுக்கும் தலையாட்டிக்கொண்டே இருப்பேன். இரவுக் கச்சேரி பார்க்கச் செல்லும்போதெல்லாம் நான் தூங்கிவிடுவேன் என்பது முதலாளிக்கும் தெரியும். இருப்பினும் அந்தக் கலைஞர்களைக் குறித்து அவர் என்னிடம் சிலாகிப்பதெல்லாம் தனக்குள்ளே சொல்லிக்கொள்வதுதான்.

ஒரு பெருமழைக் காலத்தில் வைத்தீஸ்வரன் கோவிலுக்குக் கச்சேரி பார்ப்பதற்காக நானும் முதலாளியும் புறப்பட்டோம். திருநன்றியூர் தாண்டியதும் வெட்டாற்றில் வெள்ளம் நிறைந்து கழுத்தளவில் தண்ணீர் பெருவெள்ளமாய் ஓடிக்கொண்டிருந்தது. நீரின் சத்தமும், வயல்வெளிகளின் சத்தமும் நடுக்கத்தை உண்டாக்கியது. ஆறுதலாக நிலா ஒளிபொழிந்து எல்லாவற்றையும் துலக்கிக் காட்டியது.

“மொதலாளி திருப்பி போயிடுலாங்களா?” என்று கேட்டேன்.

“திருப்பி போறதாவுது.. யார்றா இவன் முட்டி செத்தவனாட்டம்.. எறங்குடா” என ஆட்காட்டி விரலாலேயே அதட்டினார். 

“ஐய்யோ.. மொதலாளி நீச்சல் தெரியாதுங்க” என்று குரலை உள்ளுக்கிழுத்தேன்.

முதலாளி அந்த இருட்டிலும் கன்னத்தசைகள் விரிய பளீரெனச் சிரித்தபடி, “இதென்னடா, பத்து தப்புடி தாண்டுனா கர.. ஒடம்ப சிலுப்பி, கையையும் காலையும் தம்பட்டம் அடிச்சா நீச்சலு.. அதுலாம் பொயிடுலாம் வா.. கச்சேரிக்கு நேரமாயிடும்” என்று அவர் ஏதோ போய் மேடையேறப் போவதைப் போல வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு நீரில் இறங்கினார். 

தண்ணீரில் இறங்குவதற்கு முன்னரே உடற்சதைகள் ஆட்டமெடுத்தன. தொடைகளின் நடுக்கத்திலிருந்த காலை மெதுவாகத் தண்ணீரில் வைத்து மூச்சை இழுத்துவிட்டேன். ஒரு கணம் தண்ணீரில் அடித்துக்கொண்டே போய் சேமங்கலம் வயல்வெளியில் உப்பிய உடலாய் கரை ஒதுங்குவதாக எண்ணம் மின்னலெனத் தோன்றியதும் உடலைச் சிலுப்பிக்கொண்டேன். அதீதக் குளிரில் இருந்த நீரில் இறங்கியதுமே காலை மேலே தூக்கினால் உடல் அமிழ்ந்துவிடுமோ என்று உடலை உந்தி மூச்சையடக்கி கைகளையும், கால்களையும் வேக வேகமாக வீசினேன். எதையோ பற்றிக்கொள்ளத் தேடுபவனைப் போல கைகளால் தாவித்தாவித் தண்ணீரில் அடித்ததில் மூச்சிரைத்தது. கால்கள் சேற்றுக்குள் அமிழ்வதைப் போல இழுத்தன. கால்களை உந்தி உந்தி நீந்தினேன். கரையில் ஈரமாய் நின்றிருந்த முதலாளி என்னை நோக்கிக் கரம் நீட்டினார். அவரைப் பிடித்து மேலேறியதும் மொத்த உடலும் ஒருகணம் மேலேழும்பி அடங்கி நெஞ்சு இரைத்தது. 

உடல் குளிரில் நடுநடுங்க.. நாசியிலும், வாயிலுமிருந்து ஊதல் ஓலியோடு நெடுமூச்சு வந்தது.. முதலாளிக்கு நான் மூச்சுவிடுவது சீழ்க்கையொலி போல கேட்டிருக்கக்கூடும். முதலாளி முகத்தில் தெரிந்த மென்சிரிப்பு அதைத்தான் உணர்த்தியது. முதன்முறையாக அந்தக் கணம் அவர் மீது எனக்குக் கடுப்பு உண்டானது. 

முதலாளி தன் துண்டைப் பிழிந்து எனக்குத் துவட்டக் கொடுத்தார். அந்நொடியே அவர் மீதான கடுப்பு நீர்க்குமிழியாய் உடைந்தது. நான் தலை துவட்டிக்கொண்டிருக்கும் போது முதலாளி இரகசியப் புன்னகையுடன் சொன்னார், “செல்வம்.. எனக்கும் நீச்சல் தெரியாதுய்யா.. எங்கூரு பனம்பள்ளி கொளத்துலயே கரைப்பக்கத்து கடைசிப் படிகட்டுலதான் ஒக்காந்து குளிப்பன்” என்று சொல்லிவிட்டுப் பள்ளிக்கூடச் சிறுவனைப் போல இரண்டு கைகளையும் உதறி, கண்களைத் தாழ்த்திச் சிரித்தார்.

”ஐய்யோ செல்வம்.. அண்ணன பாத்தியா செல்வம்..?” கதறிய குரல் கேட்டு நிமிர்ந்தேன். கடை பெருக்க வரும் செல்லம்மா கிழவி நின்றுகொண்டிருந்தது. எழுபது வயதுக்கும் மேல் இருக்கும். சுருக்கம் விழுந்த சாம்பல்நிறக் கண்கள் அழுவதைக் கண்டால் யாருக்குமே கண்ணீர் வரும். எனக்கு வரவேயில்லை. நான் ‘பார்த்துவிட்டேன்’ எனத் தலையாட்டியவுடன் கிழவி அங்கிருந்து சென்றாள்.  

பலகையிலிருந்து எழுந்து வீட்டுப்புறத்தே இருந்த மாட்டுத்தொழுவத்திற்கு அருகில் ஒன்றுக்கிருப்பதைப் போல வெளியே வந்தேன். மேளம், தப்பு வாசித்தவர்கள் பீடி இழுத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு தென்னை மரத்தில் சாய்ந்திருந்தபடி கையில் அலைபேசியுடன் நின்றிருந்தான் கிளாரினெட் கலைஞன். அதில் ‘சமரசம் உலாவும் இடமே’ சீர்காழியின் வெண்கலக் குரல் கேட்டது. நான் அருகில் சென்றதும் சட்டென அலைபேசியை நிறுத்தினான். 

“எத்தன வருசமா வாசிக்கிறீங்க தம்பி?” என்று கேட்டேன்.  

“ஆறு வருசமா சார்.. எங்க அப்பா செத்ததுலயிருந்து..”

“உங்க அப்பாகிட்டதான் கத்துக்கிட்டியா?”

“ஆமா சார். அவுரு வாசிக்கும்போது பக்கத்துல குந்திக்கிட்டுப் பாப்பன்.. அப்டியே பழக்கி உட்டுட்டாரு”

”ரொம்ப நல்லா வாசிக்கிற தம்பி.. ” என்றேன். என்னைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தான். 

“என்ன இந்த பாட்டு கேக்குற?’ 

“எங்க அப்பா எல்லா சாவு வூட்லயும் இந்தப் பாட்ட வாசிப்பாரு சார்..” 

அவன் சொன்னதும் முதலாளி நினைவுக்கு வந்தார். ஒருமுறை சரக்கு கொள்முதல் செய்வதற்காக நானும் முதலாளியும் சீர்காழியைக் கடந்து இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தோம். அப்போது முதலாளி சொன்னார், “நீ சீர்காழி கோவிந்தராஜன் பாட்ட கேக்கணும் செல்வம்.. கொரல்ல தெய்வத்த நிறுத்துவான் மனுசன்.. ஸ்ரீரங்கத்துல ஒரு கச்சேரி கேட்டு ஒடம்பு சிலுத்து அழுத அழுகையில மறுநாளு ஒடம்பு காய்ச்சல் கண்டிருச்சு” என்று சொல்லி சீர்காழியின் நினைவு இல்லம் வழியாக வண்டியை விடச்சொன்னார். நேரில் பார்த்து வணங்குவதைப் போலச் சீர்காழி கோவிந்தராஜனின் வீட்டை வணங்கியவர், கண்ணில் நீர் மின்ன, “மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா” என அடிவயிற்றில் இருந்து குரலெடுத்துப் பாடிக்கொண்டே வந்தார். அன்றைக்கு வாங்க வேண்டிய சரக்குகளைப் பற்றியே என் கவனம் முழுவதும் இருந்ததால் மனதுக்குள் பொருட்களைச் சொல்லிப் பார்த்துக்கொண்டே வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன்.

தென்னங்குருத்துகள், கலர் காகிதங்கள், மாலைகள், பூக்கள், வாழை மட்டைகள் முதலியவற்றைக் கொண்டு பச்சைமூங்கிலில் தேர்ப்பாடையைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட அது ஒரு பல்லக்கைப் போன்று காட்சியளித்தது. பாடைக்கருகில் ஒருவர் அமர்ந்து பச்சைத் தென்னைமட்டையை முடைந்துகொண்டிருந்தார். 

”நீங்க ஏன்டா விருந்துக்கு வந்தவனுவோளாட்டம் ஒக்காந்துருக்கீங்க.. அடிங்களேன்டா..?” தாளக்காரர்களை நோக்கி ஒரு குரல், நாற்காலிகள் குழுமத்திலிருந்து அதிகாரத்தோடு வந்து விழுந்தது. அந்தக் குரலைக் கேட்டதும் எனக்குப் பொட்டுக்குழியில் நரம்பு தெறிக்க ஆத்திரம் கிளம்பியது. முதலாளி மட்டும் உயிரோடிருந்தால் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரனை இழுத்து வைத்து அறைந்திருப்பார் என்று நினைத்தபோது சற்று ஆறுதலாக இருந்தது. 

‘எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் கணவன் விட்டுவிட்டுப் போனானடி” என்று வாசிக்கத் துவங்கிய கிளாரினெட், துயரூட்டுவதற்குப் பதிலாகத் துக்கத்தை வடிகட்டி மனத்துள்ளலை அளித்து, உடலைச் சிலிர்க்கச் செய்தது. அவனது வாசிப்பின் பிரமிப்பில் நான் அழுவதையே சுத்தமாக மறந்துவிட்டேனோ என்று தோன்றியது. 

வீட்டிற்குள்ளே முதலாளியின் மனைவி தையல்நாயகி அக்காவின் அழுகைச் சத்தம் எல்லா அழுகைக்கும் மேலேறி ஒலித்தது. “எப்ப வீட்டுக்கு வந்தாலும் நம்ப வீட்ல சாப்புட வயித்துல எடம் ஒதுக்கிக்கிட்டு வா செல்வம்” என்ற தையல்நாயகி அக்காவின் கருணை தோய்ந்த வார்த்தையில் எத்தனை நாள் உயிர்த்தெழுந்திருப்பேன். அந்தக் குரலைக் கேட்டும் என் பாவக் கண்களிலிருந்து கண்ணீர் வரவேயில்லை. 

பத்தொன்பது வருடம் தன்னிடம் வேலை பார்த்தவனுக்கு முன்னின்று திருமணம் செய்துவைத்தார் முதலாளி. திருமணத்திற்கு எனக்கொரு ரேடியோவோடு கூடிய டேப் ரெக்கார்டரைப் பரிசளித்தார். அது பயன்படுத்தப்படாத எடைக்கல்லைப் போல வீட்டில் அப்படியே இருந்தது.     

எனக்குத் திருமணமான பிறகு குத்தாலத்தில் புதிய கடை ஒன்றை ஆரம்பித்தார் முதலாளி. அந்தக் கடையைப் பார்த்துக்கொள்ளும்படி என்னிடமே முழுப் பொறுப்பையும் ஒப்படைத்தார். குத்தாலத்திலேயே ஒரு வீடும் வாடகைக்கு எடுத்துக் கொடுத்தார். அருகில் கடை ஏதுமில்லாத இடத்தில் இருந்ததால் எப்போதும் கூட்டமிருந்தது. முதலாளி சொல்லிக்கொடுத்திருந்த அணுகுமுறைகள் எளிதில் வாடிக்கையாளர்களிடம் அபிமானத்தைப் பெற உதவின. நாளுக்கு நாள் நண்பகலுக்கு முன்பே கல்லாவில் காசைப் போட்டால் சத்தமெழுப்பாமல் விழும் அளவுக்கு வியாபாரம் நெடுநெடுவென வளர்ந்தது. 

வாரத்திற்கொரு முறை கணக்கு வழக்கைச் சமர்ப்பிக்க நான் மயிலாடுதுறைக்குப் போய் வருவேன். முதலாளி, கும்பகோணத்திற்கு வேலையாய்ப் போகும்போது கடைக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவார். 

மனைவி, குழந்தை என்று ஆனபின்பு சிறிது சிறிதாகத் தேவையின் கொடிகள் என்மீது படர ஆரம்பித்தன. என் உடலெங்கும் சுற்றிவிட்ட அந்தக் கொடி ஒரு கட்டத்தில் என் கழுத்தை வளைத்துக்கொண்டது.

ஒருமுறை என் மனைவி கேட்ட நூறு ரூபாயை அன்றைய வியாபாரத்திலிருந்து எடுத்து தனியே வைத்துக்கொண்டேன். இரண்டு நாள் கழித்து வரவேண்டிய முதலாளி அன்றைக்கே வந்தார். முதலாளியிடம் அன்றைய கணக்கை ஒப்படைத்த பின்னர் குடும்பச் செலவுக்காக நான் எடுத்துக்கொண்ட நூறு ரூபாயைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் நான் கொடுத்தப் பணத்தை எண்ணிப் பார்க்காமலேயே வேட்டியை விலக்கி கால்சட்டைக்குள் வைத்துக்கொண்ட முதலாளி கும்பகோணத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பார்த்துவந்த புல்லாங்குழல் கலைஞரைப் பற்றி சிலாகிக்கத் தொடங்கினார். நான் இடையில் அந்த நூறு ரூபாய் விஷயத்தை அவர்முன் வைத்துவிட முனையும்போதெல்லாம் அவரது பேச்சு என் குரல்வளையின் மேல் ஏறி நின்றுகொண்டு என்னைப் பேசவிடாமல் செய்தது. நேரம் செல்லச் செல்ல நானும் குரல்வளையை விடுவித்துக்கொள்ள விரும்பவில்லை. 

நூறு ஐநூறாக மாறுவதற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளவில்லை. நாளடைவில் பணத்தை உரிமையுடன் எடுத்துக்கொள்ளும் தைரியம் ஒரு உறுப்பைப் போல உடன் வளர்ந்தது. முதலாளி அருகில் இல்லாததால் நானே என்னை முதலாளியாக எண்ணிக்கொள்ளத் தொடங்கினேன். கையில் புழங்கிய பணம் என் புத்தியைக் கோணலாக்கியது. கொள்முதல் செய்யும் பொருட்களுக்குக் கால்பங்கு இலாபம்கூட இல்லாத அளவிற்கே முதலாளியிடம் கணக்கு காண்பித்தேன். அந்த மாதம் அதீத நட்டக்கணக்கு எழுதிக் காட்டினேன். “இம்மாம் நஷ்டமாவுதே… அந்தக் கடைய மூடிருவமா செல்வம்?” என்று அப்பாவியாய்க் கேட்டார் முதலாளி. துணுக்குற்றவனாக அடுத்தடுத்த மாதங்களில் சரியானக் கணக்கைக் காண்பிக்கத் தொடங்கினேன். 

முதலாளிக்கு அந்தப் பகுதியில் நட்பு வட்டத்தில் இருந்தவர்கள், நெருக்கமானவர்கள் கடை நல்ல இலாபத்தில்தான் நடக்கிறது என்பதைச் சொல்லியிருந்தார்கள். இருந்தும், முதலாளி நேரடியாக என்னிடம் ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை.

ஆனால் நாளடைவில் முதலாளி வாரத்திற்கு இரண்டு மூன்று முறை கடைக்கு வரத் தொடங்கினார். அவருக்குள் புகையத் தொடங்கிவிட்டது, அது பற்றிக்கொள்ளக் கூடாது என்று மிகுந்த கவனத்துடன் கணக்குகளைக் கொடுத்தேன். ஆனால் எண்ணெய் வடிவில் ஊழ் என்னைக் குப்புறத் தள்ளியது.

வழக்கமாக எண்ணெய்க் கொள்முதல் செய்யும் கும்பகோணம் ஆயில் மில்லில் எடுக்காமல் எனக்குக் கமிஷன் வரக்கூடிய திருவிடமருதூரில் எண்ணெய் வாங்குவதற்குப் பணம் கொடுத்திருந்தேன். முதலாளி கடையில் இருக்கும் நேரத்தில் திருவிடைமருதூர்க்காரன் எண்ணெய் டின்களை எடுத்து வர, என் திருட்டுத்தனம் வெளிப்பட்டு மாட்டிக்கொண்டேன். வேறொரு இடத்திலிருந்து வந்த எண்ணெய் டின்னும் அதன் விலையும் புலனாக, டின்னுக்கு நூறு ரூபாய் இலாபம் வைத்து நான் கமிஷன் அடிப்பது முதலாளி கண்முன்னே அம்பலப்பட்டுப் போனது.

“இன்னும நீ கடைக்கி வரவேணாம் செல்வம்” என்று மட்டும் சொல்லி சணல்கண்டிலிருந்து கயிறறுப்பதைப் போல என்னை அறுத்தெறிந்தார் முதலாளி. 

பிழைப்புக்கு வழியின்றி இரண்டு வயதுக் குழந்தையுடனும் நான்கு மாதக் கர்ப்பிணியான மனைவியுடனும் திக்கற்று நின்றிருந்தேன். மயிலாடுதுறை, குத்தாலம் எனப் பழகிவிட்டுச் சொந்த ஊருக்கும் போக வழியின்றித் தவித்தேன். 

ஒருநாள் முதலாளி கடை திறக்கும் நேரம் அதுவரை கடை மூலம் முறைகேடாக ஈட்டிய இலட்சத்து எழுபதாயிரம் ரூபாயை ஒரு துணிப்பையில் சுருட்டிக் கடைவாசலில் வைத்துவிட்டு மறைவாக நின்றிருந்தேன். முதலாளி வந்து துணிப்பையை எடுத்துப் பார்த்துவிட்டு, ஒரு கணம்கூட யோசிக்காமல் கடை எதிரே இருந்த விநாயகர் கோவில் உண்டியலில் பணத்தைப் போட்டார். அதைப் பார்த்த எனக்கு முதலாளியை எதிரே பார்க்கும் மிச்ச சொச்சமிருந்த தைரியமும் மறைந்தது. “மொதலாளி என்னை மன்னிச்சிடுங்க” என்று சொல்லிவிட்டு இருட்டுக்குள் ஓடினேன். முதலாளி குரல் வந்த திசையில் எட்டிப் பார்த்துவிட்டுக் கடைக்குள் சென்றுவிட்டார். நிச்சயம் அவருக்கு என் குரல் கேட்டிருக்கும். 

கடைத்தெருக்களில் நடந்த உரையாடல்களில் இடிபடும் என் பெயருக்குத் தலைப்பெயரைப் போல ஒட்டிக்கொண்ட திருட்டுப்பட்டத்தால் எந்தக் கடையிலும் எனக்கு வேலை கொடுக்கத் தயங்கினார்கள். 

நான் வேலையைவிட்டு நிறுத்தப்பட்டதை என் மனைவியின் புலம்பல் மூலமாக அறிந்துகொண்ட என் அம்மா, முதலாளியைப் பார்ப்பதற்காகச் சென்றிருக்கிறாள். 

மாயூரநாதர் கோவில் வாசலில் சாமி கும்பிட்டுவிட்டு வந்த முதலாளியை என் அம்மா பார்த்திருக்கிறார். “இம்மாம் புள்ளையா இருந்ததுலேருந்து இப்ப ஆளாயி நிக்கிற வரைக்கும் ரத்தத்த வேர்வயாக்கி என் புள்ள ஒனக்கு ஊழியம் அடிச்சு ஒழச்சிக் குடுத்ததுக்கு.. என் புள்ளக்கி திருட்டுப்பட்டம் கட்டி இப்புடி அம்போன்னு ஆக்கிவுட்டுட்டியே நீயெல்லாம் நல்லா இருப்பியா.. ஒன் குடும்பம் தழைக்கிமா.. நாசமா போவோ..” என்று மண்ணைவாரித் தூற்றிவிட்டிருக்கிறார். முதலாளி எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார்.

வீட்டில் வந்து இதைச் சொன்னதும் வீட்டிலிருந்து அன்னக்கூடையைத் தூக்கி என் அம்மாவை அடிக்க ஓடினேன். என் அம்மாவின் பயந்த முகத்தைப் பார்த்ததும் குற்றவுணர்ச்சி தாளாமல் நெற்றியைச் சுவரில் இரத்தம் வரும்வரை மோதினேன். என் மனைவி வந்து தடுக்காவிட்டால் அன்று என் உயிர் போயிருக்கும். 

சில நாட்கள் கழித்து சித்தர்காட்டில் கே.எல்.மளிகைக் குடோனிலிருந்து பொருள் தருவதாகவும் கடை வைத்துக்கொள்ளும்படியும் அதன் முதலாளி கிருஷ்ணமூர்த்தி ஐயா கூப்பிட்டனுப்பினார். 

வெறுங்கையோடு போக மனமின்றி வீட்டிலிருந்த கடைசிப் பைசா வரை துடைத்து எடுத்துச்சென்றிருந்தேன். அவரோ பணம் வேண்டாம் எனச் சொல்லி, ”வார வாரம் வியாபாரம் செய்து அடைத்துக்கொள்” என்று சரக்கு எடுத்துக்கொள்ளச் சொன்னார்.    

சரக்கு வாரக்கடனுக்கு எடுத்துக் குத்தாலத்திலேயே கடைபோட்டேன். ஆளாய்ப்பறந்து பேயாய் வேலை செய்தேன். வியாபார நுணுக்கம், உழைப்பு என எல்லாமும் சேர்ந்து கடையை விரிவுபடுத்தினேன். அடுத்த ஐந்து வருடங்களில் குத்தாலத்திலும், மயிலாடுதுறையிலும் இரண்டு மளிகைக் கடைகளைத் திறந்தேன்.  

நான் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக ஆதரவற்று நிற்கும்போதும் எனக்குக் கடை வைக்கச் சொல்லிச் சரக்குக் கொடுக்கச் சொன்னது முதலாளிதான் என்று பின்னாளில் கிருஷ்ணமூர்த்தி ஐயா மூலமாகத் தெரிந்துகொண்டேன்.

இதற்கிடையே எத்தனையோ முறை முதலாளியின் கடை வழியே செல்லும்போதெல்லாம் இறங்கி அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டுமெனத் தோன்றினாலும், ஏனோ என்னால் முடியாமலேயே போனது.  

முதலாளியைக் குளிப்பாட்டுவதற்காக வெளியே தூக்கிக்கொண்டு வந்தார்கள்.

“ஏ.. கால் பக்கம் ஒராளு போதும்ப்பா.. ஒடம்பு பக்கம் கையக்குடுத்து வாங்கப்பா.. ஏய்.. நீ இப்புடி தலமாட்டுப் பக்கமா வாயேன்யா..” குரல்கள் பறந்தன.

முதலாளியைக் கடைசியாகத் தொடக்கூடிய வாய்ப்பு. அவரைத் தொட்டால் என்னால் நிச்சயமாகக் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் உடைந்து அழுதுவிடுவேன். விரைந்து சென்று முதலாளியின் தோள்பட்டைப் பக்கம் தாங்கிப் பிடித்தேன். அதே கணத்தில் கிளாரினெட்டில் இருந்து இசை கிளம்பி வந்தது.. ஈரமான உள்ளங்கையிலிருந்து  கண்ணாடிப் பொருள் நழுவுவதைப் போல முதலாளியின் தோள் மீதிருந்த கரம் இடறிவிட உடல் கனத்துக் கீழிறங்கியது. 

“சார்.. தூக்க முடியலின்னா அந்தாண்ட போங்க.. தூக்குறவங்க தூக்குவாங்க..” காலைப் பிடித்திருந்தவர் பெருங்குரலில் சொன்னதும் உடலச்சம் கண்டு ஒடுங்கி நின்றேன். பதின் வயதிலிருந்து எத்தனையோ பாரத்தைத் தூக்கியவன். ஆனால் இந்தப் பாரம் என்னால் தாங்க முடியாததாக இருந்தது. 

முதலாளியின் சலனமற்ற முகத்தை அருகிருந்து பார்த்தும் எனக்குள்ளிருந்து ஒரு துளி கண்ணீரும் சுரக்கவில்லை. அந்தப் படுபாவி மறுபடியும் ”தென்பாண்டிச் சீமையிலே… தேரோடும் வீதியிலே” என்று வாசிக்க ஆரம்பித்திருந்தான். கேட்கக் கேட்க மண்டைக்குள் சூடேறியது. ஓடிச்சென்று அவன் கையிலிருந்த கிளாரினெட்டைப் பிடுங்கித் தூர எறிந்துவிட வேண்டுமெனத் தோன்றியது. 

சுயவெறுப்பும், எரிச்சலும் தலைக்குள் திரண்டெழுந்தது. என்னால் ஒரு நிமிடங்கூட அங்கே நின்றிருக்க முடியவில்லை. அவர் புண்ணியத்தில் சோறு தின்று, வாழ்க்கை கிடைத்து.. ஒரு சொட்டுக் கண்ணீர்கூடச் சிந்தாமல் ’விசுவாசத்தை விற்றுத் தின்றவன்’ என்று அங்கிருக்கும் யாரேனும் என்னைத் தூற்றிவிடக் கூடுமெனப் பதற்றமுற்று அவசர அவசரமாகப் புறப்பட்டேன்.

தூரம் போகப் போக ஒலி குறையும்தானே? ஆனால் முன்னே நடக்க நடக்கக் கிளாரினெட் இன்னும் வளர்த்தியான ஒலியாகக் காதருகே கேட்டது. 

மரங்களடர்ந்த அய்யனார் கோவில் பாதையில் காற்றின் நாவுகளாய் இலைகள் எழுப்பிய குலவைச் சத்தம் அச்சத்தை உடல் முழுவதும் இறக்கியது.  

குறுக்கே பேருந்து நிறுத்தத்தை நோக்கி வயலில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். கூட்டை நோக்கி அணிவகுத்துப் பறந்த கிளிகள் ஆவலம் கொட்டின. காட்டாமணிச் செடியில் கட்டப்பட்டிருந்த பசுவின் மடியில் முகம் முட்டிப் பால் குடித்துக்கொண்டிருந்த கன்றுக்குட்டியைக் கழுத்தை வளைத்து நக்கிக்கொடுத்துக் கொண்டிருந்தது பசு. அதன் கழுத்திலிருந்த மணியோசை ‘க்ணிங்..க்ணிங்’ என்று அடித்துக்கொண்டேயிருந்தது. அறுவடை முடிந்த வயல்களில் அரிதாளில் கால்கள் உரசும்போது வைக்கோல் உடையும் ஒலியோடு, செருப்புச் சத்தமும் இணைந்து எழும்பியது. உடனே செருப்பைக் கழற்றிக் கையிலெடுத்துக்கொண்டு வெறுங்காலோடு நடந்தேன். சத்தம் குறைந்திருந்தது. 

ஒலியற்ற அமைதிக்காக அடித்துக்கொண்டது மனம். வானத்தை அண்ணாந்து பார்த்து பெருவெளியில் விரவிக்கிடக்கும் பேரமைதியை நோக்கி மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டேன்.

அந்தரத்தில் மேகங்கள் சத்தமெழுப்பாமல் மிதந்துகொண்டிருந்தன. ஆகாயப் பஞ்சுப்பொதிகள் என்னை இளக்கியது போல உணர்ந்தேன். இனம்புரியாத பேரமைதியின் பெரும் பாரத்தைச் சுமக்க முடியாமல் நடை தளர்ந்தேன்.

அழவில்லை என்ற குற்றவுணர்வின் அழுத்தப் பிடியிலிருந்து தளர்ந்ததில் சற்று ஆசுவாசமடைந்தேன். அழாவிட்டாலும் என்ன? அத்தனை பெரிய தப்பு செய்ததற்கு என்னை மன்னித்த முதலாளி, நிச்சயமாக இதற்கும் என்னை மன்னிப்பார் என்று நம்பத் தோன்றியது. 

அவருக்கு இந்த மன்னிக்கும் பரந்த உள்ளத்தை எது கொடுத்திருக்கும்? மனிதர்களில் நற்குணங்களை மட்டுமே எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை முதலாளி எதிலிருந்து பெற்றிருப்பார்? வியாபாரத்தில் குறுக்கு சூட்சுமம் இல்லாத அசாத்திய நேர்மையை இறுதிவரை முதலாளி கடைபிடித்ததற்கு எது காரணமாக இருக்கும்?

முதலாளியாக வேண்டுமென்று அவரைப் பார்த்துக் கற்றுக்கொண்ட நான், அவரை எது முதலாளியாக்கியது என்பதை இத்தனை நாட்களாக அறிந்துகொள்ளாமலே இருந்திருக்கிறேன். 

பேருந்து பிடித்து வீட்டுக்கு வந்தேன். என் அறைக்குள் நுழைந்து கதவுகளைப் பூட்டிக்கொண்டேன். நிலைப்பேழையின் மேலடுக்கில் முதலாளி கொடுத்திருந்த டேப் ரிக்கார்டரை எடுத்து கட்டிலில் அமர்ந்து ஒரு துணியைக்கொண்டு துடைத்தேன். என்னையறியாமல் எனது உதடுகள் அரை ஒலியில் “நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை” என்று முணுமுணுத்தது. 

நான் பாடியதே எனக்கு முதலாளியின் குராலாய்க் கேட்டது. 

பயந்துபோய் டேப் ரெக்கார்டரை கீழே வைத்தேன். முகத்தில் வெப்பம் படர்ந்து ஒரு கணம் தலை சுற்றியது. உள்ளங்கைகளில் முகம் புதைத்துக்கொண்டேன்.

ராசாகுளத்தில் மூழ்கி எழுந்து என் தகப்பனின் பிணத்துக்கு மொட்டைத் தலையோடு கொள்ளி வைக்கிறேன்.

நடு இரவில் தூக்கத்தில் எழுந்து, ”எம்மா பசி தாங்க முடியலியேம்மா..“ என்று கதறுகிறேன். 

“வயித்துக்கு சாப்புடு செல்வம்.. கடக்கி லேட்டா போனா ஒன்னும் ஆயிடாது” என்றபடியே இலை முழுக்கச் சோறிட்டுக் கறியாக எடுத்து வைக்கும் தையல்நாயகி அக்கா என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. 

”செல்வம் கடைய எடுத்து வையிடா.. தின்னண்டியூருக்கு மோளக் கச்சேரி பாக்கப் போவோம்”.

காட்சிகள் மாறி மாறி தலைக்குள் மின்னலாய் வெட்ட, கண்களை மெல்லத் திறந்தேன். விழிகளிலிருந்து பொத்துக்கொண்டு கண்ணீர் கொட்டியபடியே இருந்தது.

14 comments

kumar shanmugam September 28, 2021 - 10:15 am

எழுத்தாளர் செந்தில் ஜெகந்நாதன் அவர்களின் மற்றுமொரு சிறந்த படைப்பு …
இசையின் ஊடாக மனித மனங்களை அதன் சூழலின் வயப்பட்ட சித்திரங்களை நம் முன் வைக்கிறார் …
ஒரு நல்ல இசை நம்மை கொஞ்சம் குழைந்து போகச் செய்யும் .அது இந்த கதையிலும் உள்ளது …
இந்த கதையும் அதை செய்கிறது …

asokraj September 28, 2021 - 3:27 pm

ஒரு பழைய மளிகைக் கடைக்காரனாகவும் நான் இருந்திருக்கிறபடியால் இந்தக் கதையோடு எனக்கு மேலும் ஒட்டுதல் கிடைத்தது. இப்படியான முதலாளிகளை நானும் அனுபவரீதியில் கண்டிருக்கிறேன். எங்கள் குடும்பமே வியாபாரக் குடும்பம் தான். அப்பா வழித் தாத்தாவும், அம்மா வழித் தாத்தாவும் மாயவரத்தில் ஜவுளிக் கடை வைத்திருந்தவர்கள்.

கடும் வெயிலில் உடல் வியர்க்க நின்றுகொண்டிருப்பவன் தலைக்குமேல் திடீரெனப் புங்கை மரம் தோன்றியதைப் போலிருந்தது எனக்கு.

சிறிது சிறிதாகத் தேவையின் கொடிகள் என்மீது படர ஆரம்பித்தன.

நாளடைவில் பணத்தை உரிமையுடன் எடுத்துக்கொள்ளும் தைரியம் ஒரு உறுப்பைப் போல உடன் வளர்ந்தது.

சணல்கண்டிலிருந்து கயிறறுப்பதைப் போல என்னை அறுத்தெறிந்தார்

முதலாளியாக வேண்டுமென்று அவரைப் பார்த்துக் கற்றுக்கொண்ட நான், அவரை எது முதலாளியாக்கியது என்பதை இத்தனை நாட்களாக அறிந்துகொள்ளாமலே இருந்திருக்கிறேன்.

செந்திலின் மொழியை ரசிக்கிறேன்.

Dr.Jayavel September 28, 2021 - 4:19 pm

ஐயா வணக்கம்…..

வாசித்”தேன்” வரிக்கு வரி கவிநயம் மிகுந்த சொற்றொடர்களில் சிறைப்படுத்திச் சிறைப்படுத்தி விடுதலை கொடுத்தைப்போல். உள்ளுணர்வு வெம்மையும் ஆட்படா தவிப்பும் விம்மியது…..

முதலாளியின் நேர்மையும் இசை மீதான அவரது ஆர்வமும் ஊழியர்கள் மீதான கரிசனமும் வாடிக்கையாளர்கள் மீதான உறைமுறையும் மெய்சிலிர்க்க வைக்கிறது….அதிலும்….தொழில்முறை உறவு என்றில்லாமல் உறவுமுறைத் தொழில் என்று முதலாளி கற்றுக்கொடுத்தது…வியப்பில் கட்டுண்டு கிடக்க வைத்தது….

கதை இருதளங்களில் விரிந்து கிளைகளாய் படர்ந்து…வேர்களாய் மனதில் பற்றின……

“அதிலும்அறுவடை முடிந்த வயல்களில் அரிதாளில் கால்கள் உரசும்போது வைக்கோல் உடையும் ஒலியோடு, செருப்புச் சத்தமும் இணைந்து எழும்பியது”

என்ற வரிகளில் மனதின் மென்மையும் அன்பின் அடர்த்தியுமாய் காட்சியளிக்கிறது…..

வாழ்த்துக்கள் அன்புத் தோழர் …..

(Master’s)

ம.மணிமாறன். September 28, 2021 - 5:39 pm

கண்ணீருக்குத் தெரியும் அதன் நிலையும் நிலையாமையும்

Umamaheswari September 29, 2021 - 10:25 pm

அற்புதம் செந்தில் …. உணர்வு பூர்வமாக கதை நெகிழ்ந்து நகர்கிறது .

கிறிஸ்டி நல்லரெத்தினம் September 30, 2021 - 3:38 am

எழுத்தாளர் செந்தில் ஜெகந்நாதனின் படைப்பைப் படித்ததும் இழக்கக் கூடாத ஒன்றை இழந்த தனிமை வாசகனை ஆட்கொள்வதை தவிர்க்க முடியாது.
‘சணல் கண்டிலிருந்து கயிறறுப்பதைப் போல’ எனும் வார்த்தைககள் எத்தனை யதார்த்தமானவை!
உறவுகள் மட்டுமல்ல உணர்வுகளும் வாழ்வில் ‘கயிறறுத்துப் போவதுண்டு’ என்பதை அழகாய் சொல்லிப் போனார்.
வராத கண்ணீர் இறுதி வரிகளில் பொத்துக் கொண்டு கொட்டியதின் மாயம் ஒரு இதமான முரண்பாடு. அந்தப் புள்ளிக்கு வாசகனை எழுத்தாளர் கிளாரினெட் இசை சகிதம் அழைத்துச் சென்ற பாங்கு பாராட்டுக்குரியது.
அருவி போல் கொட்டும் இவரின் வர்த்தைகளுக்கு வழிவிடும் மென்மை உணர்வுகள், வாசகனுக்கு கதிரை போட்டு முதலாளியின் சாவீட்டிலும்  மாளிகைக்கடையிலும் உட்காரவைத்த  தத்ரூபம், வட்டார வழக்கிற்கு வளைந்து கொடுக்கும் வர்த்தைப்பிரயோகம்…. எதைச் சொல்வது?
உணர்வுகளின் ஓடையில் குளித்த திருப்தி.
ஒரு உயர்ந்த படைப்பைப் படைத்து எம்முடன் பகிர்ந்ததற்கு நன்றி!

Hariharan R October 12, 2021 - 1:30 pm

Arumai Mappillai…!!!

Kasturi G October 13, 2021 - 2:44 pm

Excellent . Poignant story that weaves human emotions effortlessly. Rarest of rare beautiful short story i have read in recent times with tears flowing . Distressed at the end of the story .
Thanks and Good luck to you Mr Senthil Jagannathan for a great literary career ahead.
Regards

K Balaji October 16, 2021 - 3:44 pm

மிகச்சிறந்த படைப்பு. உணர்வுகளால் வாழ்கின்ற முதலாளி உருவமாய் கண்முன்னே நிற்கின்றார். இசையே உருவமாய் இயல்பாய் இயங்கும் முதலாளி. நேர்மையும் நற்குணமுமே வியாபாரத்தின் அங்கமென வாழும் முதலாளி சிந்தையை நினைக்கிறார். இனி எந்த இசையைக் கேட்கும் போதும் இந்த முதலாளியின் உருவம் என் கண்முன்னே நிற்கும். செல்வம் என்ற பாத்திரம் படைப்பு அருமை. சகஜமாக நாம் பார்க்கக் கூடிய மனிதன்தான் செல்வம். அவனது குற்ற உணர்வும் மனக்குமுறல்களும் நெஞ்சைத் தொடாமல் தொட்டுச் செல்லும் வகையில் அற்புதமான ஒரு எழுத்து! என் மனதைக் தொட்ட சில வசனங்கள் : “அறிமுகமே இல்லாம மனசை தொடர வந்த கலைஞன்”; ” கர்நாடக சங்கீதம் என்பது கன்னடத்தில் பாடப்படும் பாட்டு என்று நினைத்துக் கொண்டிருந்தோம்”;
சூடுபிடிக்கும் கடைவியாபாரத்தின் வேகத்தில் ஆரம்பிக்கும் கதை கடைசிவரை தொய்வின்றிச் செல்லுகிறது. எழுத்தாளர் செந்தில் ஜெகந்நாதன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.

ரிஷபன் October 19, 2021 - 9:58 am

அற்புதமான சிறுகதை. மனதைக் கனப்படுத்தும் இசையைக் கேட்ட உணர்வு.

Ganesan Swaminathan October 20, 2021 - 5:11 pm

அருமை. பாராட்டுகள்…

Comments are closed.