தமிழ்த் தேசியத்தின் சமய வேர்கள் (பகுதி 1)

1 comment

தேசியம், தேசம் ஆகியவை அடிப்படையில் உணர்வுகளால் கட்டமைக்கப்படுபவை. அத்தகைய உணர்வுப்பூர்வமான அடிப்படை மிகவும் இன்றியமையாததும்கூட. அரசியல் ரீதியாகவோ பூகோள ரீதியாகவோ மட்டும் எந்த ஒரு தேசத்தையும் உருவாக்க முடியாது. இதையும் தாண்டி உணர்வுப்பூர்வமான ஒரு பந்தம் தேவை. பழங்குடிகள் இன்றும் ஒரு பகுதியைத் தங்கள் மண் என்று கூறுவதற்குக் காரணம் அது தங்கள் தெய்வங்கள் உறையும் பூமி, தங்கள் மூதாதையர் உறங்கும் பூமி என்ற அழகான உணர்வுப்பூர்வமான நம்பிக்கையால்தான். ஐக்கிய அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்கள் பெரும் நிறுவனங்களிடமிருந்து தங்கள் பூர்வ மண்ணைக் காக்க பாரிய அளவிலான போராட்டங்களில் ஈடுபட்டு அதில் கணிசமான அளவு வெற்றியும் பெற்றுள்ளனர். எத்தனை மில்லியன் டாலர்கள் இழப்பீடு கொடுத்தாலும் தங்கள் பூர்வீகர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள பகுதியில் கைவைக்க விடமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

இந்தியாவிலும் சில பகுதிகளில் ‘வளர்ச்சி’ நடவடிக்கைகளுக்கு எதிராகப் பழங்குடியினரும் பூர்வகுடியினரும் போராடுவதை நாம் காண்கிறோம். இவர்களை எதிர்கொள்ள முயலும் வளர்ச்சிக்கான தூதுவர்கள் பலருக்கு, அப்பகுதி மீது இவர்களுக்கு இருக்கும் உணர்வுப்பூர்வமான பந்தத்தின் ஆழத்தையும் அருமையையும் புரிந்துகொள்ள முடிவதில்லை. 

எந்த ஒரு விஷயத்தின் மீது நமக்கு உணர்வுப்பூர்வமான பந்தம் ஏற்படுகிறதோ அது ஓரளவிற்கு நமக்குப் புனிதப் பொருள் ஆகிவிடுகிறது. அத்தகைய புனிதப் பொருளைக் காக்க நாம் எதை இழக்கவும் தயாராகிவிடுகிறோம். 

ஓர் எளிய உதாரணத்தின் மூலம் இதனை விளக்க முயல்கிறேன். தமிழகத்தில் பல இடங்களில் குன்றுகள் தகர்க்கப்பட்டு கற்பாளங்கள் கட்டுமானப் பணிகளுக்காக விற்கப்படுகின்றன. இதனை எதிர்ப்பது, இத்துறையில் உள்ள சட்ட மீறல்களைச் சுட்டிக்காட்டுவது எல்லாம் பெரும்பாலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அரசுசாரா நிறுவனங்களும்தான். இவர்கள் இவ்விஷயத்தை நீதிமன்றங்களின் பார்வைக்குக் கொண்டுசென்று தடையாணைகளைப் பெற்றிருக்கின்றனர். பல நேரங்களில் குவாரி இருக்கும் இடத்தில் வசிக்கும் உள்ளூர்வாசிகள், தங்களுக்குக் குவாரிகளால் தொல்லை ஏற்படுகிறது என்று தெரிந்த பிறகும், அவற்றை அதிகமாக எதிர்ப்பதில்லை. குவாரிகளால் குன்றுகள் தகர்க்கப்படுகின்றன என்றபோதிலும் அத்தொழில் வழியாக அவர்கள் பெறும் நேரடி, மறைமுக வருமானம் அவர்களைக் கட்டிப்போடுகிறது. அதனால்தான் வெளியில் இருந்துவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்கு எதிராகப் போராட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் இதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் மதுரை யானைமலையை “வளர்ச்சிப்” பணிகளுக்கு என உடைக்க முயன்றபோது அப்பகுதி மக்கள் பெரும் போராட்டங்களில் திரளாக ஈடுபட்டனர். அதற்குக் காரணம் அப்பகுதி மக்கள் அம்மலையை “யானைமலையான்” என்ற பெயரில் தெய்வமாக வழிபட்டதுதான். 

இன்றளவும் கிராமங்களில் சரமாரியாக விவசாய நிலங்கள் விற்கப்படும்போது குலதெய்வங்கள் உறையும் நிலப்பகுதிகளை விற்பதற்கு மட்டும் தயக்கம் இருக்கிறது. சிறிது சடைவுடனாவது அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்த யாரோ ஒரு நபர் அந்த நிலத்தினைப் பராமரிக்கிறார். 

தேசம், தேசியம் ஆகியவை நிலைத்து நிற்க இதுபோன்று ஏதாவது ஒரு உணர்வுப்பூர்வமான பந்தம் தேவை. முழுவதும் புத்தியால் சிந்திக்கத் தொடங்குபவர்களால் எதன் மீதும் பிடிப்பை வைத்துக்கொள்ள முடியாது. சட்டம் இயற்றி வயதான பெற்றோர்களுக்கு மாதம் இத்தனை ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொல்லலாம். ஆனால் அவர்களை அன்புடன், கனிவுடன் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியாது. 

மேற்கண்ட உணர்வுப்பூர்வமான பிணைப்பைத் தருவதால்தான் தேசியத்தை வலுப்படுத்துவதில் மதம் முக்கியப் பங்கு வகிக்கின்றனது. இரண்டாவதாக ஒரு விஷயம் உண்டு. அணிதிரள பொதுவான ஒரு நம்பிக்கை தேவை. மதம் அத்தகைய பொது காரணியைத் தருகிறது. மதத்தைத் தாண்டி தேசியத்தை உருவாக்கும் சக்திகள் பலவும் உண்டு. இனம், மொழி, அரசியல் சித்தாந்தம், பொதுக்கலாச்சாரம் என்பவை அவற்றில் முக்கியமானவை. ஆனால் அவற்றிற்கு மதத்தின் அளவுக்குப் பிணைப்புச் சக்தி இருப்பதாக நான் கருதவில்லை. 

மத அடிப்படையிலான தேசியத்திற்கு விநோதமான பிரச்சினை ஒன்றுண்டு. ஒரு சிறு நிலப்பகுதியாக / ஒரு நாடாக இருக்கும் வரையில் அது மிகப் பலமான சரடாகச் செயல்படும். ஆனால் நிலப்பரப்பு அதிகரிக்கும்போது, இன்னமும் தெளிவாகச் சொன்னால் மத தேசியத்தின் அடிப்படையில் தொடர்ந்து நிலப்பரப்புகளைக் கையகப்படுத்தும் போது அது வலுவற்றதாகி விடுகிறது. மத அடிப்படையிலான தேசியம் எத்தனை வலிமையானது என்பதற்கு இஸ்ரேல் ஒரு உதாரணம். அந்தச் சரடைக்கொண்டு அனைத்தையும் கட்டிவிட முயன்றால் என்னவாகும் என்பதற்கு பங்களாதேஷின் தோன்றம் ஒரு உதாரணம். 

தேசியத்தின் உருவாக்கத்தில், தேசபக்தியின் உருவாக்கத்தில், மதத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. இதனை நான் எதிர்மறையாகக் கூறவில்லை. இந்த நாட்டில் நான் விடாப்பிடியாக இருக்கக் காரணம் எனது புனித நூல்கள் இந்நாட்டைப் புண்ணிய பூமி என்று கூறுவதுதான். 

அரசியல்வாதிகளுக்கு இந்த அடிப்படை நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர்கள் தங்கள் கனவு தேசத்தின் வரைபடத்தை மதம்/இனம்/மொழி ஆகியவற்றில் ஒன்றாலான மையைக் கொண்டு வெகுஜனங்களின் மனதில் வரைகிறார்கள். ஹிட்லர் இன அடிப்படையிலான தேசியத்தை முன்வைத்தார். ஏராளமான நாடுகள் மத அடிப்படையிலான தேசியத்தை இன்றும் முன்வைக்கின்றனர். சில நேரங்களில் இவற்றில் இரண்டு காரணிகள் சேர்ந்து தேசியக் கதையாடலை உருவாக்குவதும் உண்டு. உதாரணத்திற்கு, ஐயர்லாந்து தேசியம் என்பது ஐரிஷ் மொழியாலும் கத்தோலிக்கக் கிறித்துவத்தாலும் வலுவூட்டப்பட்ட விஷயம். 

இந்தப் பின்னணியில்தான் நான் தமிழ்த் தேசியம் குறித்த ஆய்வை முன்வைக்க விரும்புகிறேன்.

சமகாலத்தில் தமிழ்த் தேசியத்தைக் குறித்துப் பேசுபவர்களும் அதற்கு மாற்றான அரசியல் தரப்பாக வர விரும்புகிறவர்களும்கூட சமயத்தை உதாசீனப்படுத்துவது இல்லை. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சீமான் குமுதம் இதழுக்கு அளித்த பேட்டியில், தான் அதுகாறும் சமயக்கூறுகளைத் தவிர்த்து மொழி அடையாளத்தை மட்டும் முன்வைத்ததால்தான் பாரிய அளவில் மக்களிடையே தனது கருத்துகளைக் கொண்டுசேர்க்க இயலவில்லை என்றும் இனிமேல் மொழி அடையாளத்துடன் தமிழர் மதம் என்பதையும் முன்வைக்கப் போவதாகவும் கூறினார். அதன் பிறகுதான் சீமான் பச்சை வேட்டி கட்டி கையில் வேலுடன் ஊர்வலம் வரத்தொடங்கினார். முப்பாட்டன் முருகன் என்ற கோஷத்தை முன்வைத்தார். அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப தமது பரப்புரை யுக்தியை சீரமைத்துக்கொள்ளும் இடதுசாரிகளும் மதமற்றச் சித்தாந்தம் பயன்தராது என்று புரிந்துகொண்டு அதற்கேற்ப செயலாற்றத் தொடங்கினார்கள்.

உலகெங்கும் எண்பதுகளிலேயே இந்த மாற்றம் ஏற்படத் தொடங்கியது. Terry Eagleton முன்வைக்கும் மார்க்சியம் ஒரு உதாரணம். ஒரு காலத்தில் ஜன்ம விரோதிகளாக இருந்த மார்க்சியமும் கத்தோலிக்க இறையியலும் இணைந்து முன்வைத்த விடுதலை இறையியல் மற்றொரு உதாரணம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் 1990களின் ஆரம்பத்திலேயே சிறு தெய்வங்கள் / மக்கள் தெய்வங்கள் என்ற கருத்தை இடதுசாரிகள் முன்வைக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் சிறுதெய்வ வழிபாட்டைத் தந்திர உபாயமாகவேனும் ஏற்றுக்கொள்ளவும் தொடங்கினர். அதன் விளைவுதான் சு.வெங்கடேசன் கீழடி மண்ணைச் சாமியாடிகளுடன் சேர்ந்து ஊர்வலமாக எடுத்துச்சென்றது. இச்செயலுக்காக அவரை முற்போக்காளர்கள் சிலர் கண்டித்தபோது, மதமும் கலாச்சாரமும் பின்னிப் பிணைந்து கிடப்பதால் இத்தகைய களநகர்வுகளை யாராலும் தவிர்க்க முடியாது என்று பதிலுரைத்தார். இவை எதுவும் புதிதல்ல. இந்தப் போக்கின் விழுதுகள் புதிதாகத் தோன்றினாலும், வேர்கள் நூற்றாண்டுகாலப் பழக்கம் உடையவை. 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் மொழி அரசியல், அதாவது தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கம் அதன் ஆரம்ப நாட்கள் தொட்டே மதப்பின்னணியுடன்தான் இருந்திருக்கிறது. தமிழ் மொழி அரசியலுக்கும் சைவ சமயத்திற்கும் இடையே உள்ள கொடுக்கல் வாங்கல் உறவு அப்பட்டமானது. இது எவ்வாறு உருவானது, எவ்வாறு இப்போது இருக்கும் உருவைப் பெற்றது என்று புரிந்துகொள்ள முயல்வது இக்கட்டுரையின் குறிக்கோள்களில் ஒன்று. 

தமிழகத்தில் மொழியும் நிலமும் இணைந்தே இருந்தது. மதிழ் செவ்வியல் அழகியலின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றான திணை என்பது மண்பகுதியை / நிலத்தை அடிப்படையாகக் கொண்டதே. ஐந்திணை நிலங்களும் அவற்றின் தெய்வங்களும் ஏனைய கருப்பொருட்களும் உரிப்பொருட்களும் இணைந்து ஒரு வகை தேசியத்தை உருவாக்கத் தலைப்பட்டுள்ளன. பிற்காலங்களில் எவ்வளவோ இந்தக் கோட்பாடு மக்களின் கூட்டு நனவிலியில் இருந்து மறைந்துவிட்டது. மூலநூல்கள் புழக்கத்தில் இருந்து இடைக்காலத்தில் மறைந்து போனது போல இந்த நிலம் – திணை தொடர்பான உணர்வும் மறைந்து போயிருக்கக்கூடும். உ.வே.சுவாமிநாதய்யர் போன்றோர் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்) சங்க இலக்கிய நூல்களை மறுபதிப்பு செய்த காலகட்டத்தில்தான் இது சார்ந்த ஓர்மையும் பெருமிதமும் மீண்டும் திரண்டு எழுந்து வந்தது. 

இன்னொரு கோணத்தில் பார்க்கும் போது ஒரு மொழியால் கட்டி எழுப்பப்பட்ட நிலம் என்ற உணர்வு இருந்திருக்கக்கூடுமே தவிர ஒரு அரசு என்பது எண்ணத்திலோ செயலிலோ இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் வரலாறு நமக்குத் தரும் செய்தி. பிற்காலங்களில் சிறு சிறு பகுதிகள், அதனை ஆண்டவர்கள் என்பது மாறி மூவேந்தர்கள் போன்ற பெருமன்னர்கள் உருவானார்கள். அப்போதும் சேர நாடு, பாண்டிய நாடு, சோழ நாடு என்ற கருதுகோள்களே இருந்தன. தமிழ்நாடு என்ற கருதுகோள் உருவானதாகத் தெரியவில்லை. இப்பகுதியை ஒன்றாக இணைத்தது மொழியும் சமயமுமே. அதில் சமயம் என்பது தமிழ்நாட்டை மட்டுமல்ல, பாரத தேசத்தையே ஒன்றிணைத்தது. காசியும் கங்கையும் அயோத்தியும் காஞ்சியும் மதுரையும் குமரியும் ஹிந்துமதம் என்னும் வலுவான சரட்டில் இணைக்கப்பட்ட புனித பூமிகளாயின. 

தமிழ்மொழி இப்பரப்பிற்கான மொழி என்ற வகையில் இப்பரப்பைச் சேர்த்துக்கட்டும் ஆற்றலுடைய விஷயமாகத் திகழ்ந்தது. மூவேந்தர் காலத்திற்கு முன்பும் சரி, மூவேந்தர் காலத்திலும் சரி, தமிழ்ப்புலவர்கள் அரசியல் எல்லைகளைத் தாண்டி உலவி வந்தனர். 

இந்நிலமும் ஒரு சமயப்பிரிவும் இணைவது என்பது தொல்காப்பியக் காலம் தொட்டே இருந்த விஷயம்தான் என்று ஏற்கனவே பார்த்தோம். ஒவ்வொரு திணைக்கும் அதற்கான தெய்வம் என்ற வகைப்படுத்துதல் இருந்தது. திணை தெய்வங்களைத் தாண்டி சிவனுக்கும் தமிழ் மண்ணில் சிறப்பான இடம் உண்டு. இன்னமும் தெளிவாகச் சொல்லப்போனால் சிவபெருமானுக்கு ஒரு சிறப்பான பந்தம் இருந்தது. பழைய ஏற்பாட்டின் தெய்வம், மனிதர்களின் அகந்தையை அடக்க பல்வேறு மொழிகளை உருவாக்கி அவர்களைக் குழப்புகிறது. ஆனால் தமிழ்த் தொன்மமோ இம்மொழியின், மொழி இலக்கியத்தின் ஆதார நூல்களை உருவாக்கியவராகச் சிவபெருமானைக் கொண்டாடுகிறது. 

கடவுளில் இருந்து மொழி உருவானது என்பது பெரும்பான்மையான மதங்களின் அடிப்படைத் தொன்மங்களில் ஒன்று. இந்திய மதங்கள் ப்ரணவம் என்றும் சப்த ப்ரும்மன் என்றெல்லாம் ஒலிக்கும் பொழிக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள தொடர்பை விவரிக்கின்றன. ஆபிரகாமிய மதங்களில் ஆதியில் கடவுள் இருந்தார், கடவுளிடம் இருந்து வார்த்தை உருவானது என்பதாகத் தொன்மம் விரியும். 

வடமொழி உருவாக்கப்பட்டதை விளக்கும் புராணங்கள், வடமொழியின் மாத்ருகா அக்ஷரங்கள், சிவபெருமானின் உடுக்கை ஒலியில் இருந்தே உருவானதாக விளக்கும். இந்தப் பின்னணியில் பார்த்தால் தமிழ் மொழியை உருவாக்கியதும் போஷித்ததும் சிவபெருமான்தான் என்ற புராணச் செய்தி சாதாரணமான ஒன்றாகத் தோன்றும். ஆனால் தமிழுக்கும் சிவபெருமானுக்கும் இடையேயான உறவு அத்துடன் முடிந்துவிடவில்லை. சிவபெருமானே அதற்கான அடிப்படை நூல்களையும் / நூலையும் வழங்குகிறார். இறையனார் என்ற பெயரில் நூலை இயற்றியது சிவபெருமான் என்றே பழைய உரையாசிரியர்கள் நம்புகிறார்கள். மேலும் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கியது சிவபெருமான்தான் என்றும் ஒரு புலவரின் தகுதியை நிர்ணயம் செய்யச் சங்கப்பலகையை அளித்தது அவர்தான் என்றும் புராணங்கள் / தொன்மங்கள் கூறுகின்றன. 

இப்படி மொழிக்கான அடிப்படை நூல்களை தந்தது மட்டுமல்லாமல், அம்மொழியின் இலக்கியத்திற்கான அளவுகோல்களை உருவாக்குவதுடன் நின்றுவிடாமல், அப்புலவர்களுள் ஒருவராகச் சிவபெருமான் இருக்கிறார். One among the peer group. இலக்கியச் சச்சரவுகளில் ஈடுபட அவர் நேரடியாக வருவதற்குத் தயங்கியதே இல்லை என்பதுதான் நம்பிக்கை. 

மொழியுடன் மட்டுமல்ல, மண்ணுடனும் சிவபெருமானுக்குப் பலமான தொடர்பு இருக்கிறது. பார்வதி தேவி மலையத்வஜ பாண்டியனின் மகளான போது, மீனாக்‌ஷியான அப்பெண்ணை மணமுடிக்க சிவபெருமான் வருகிறார். திருக்கல்யாணத்துடன் லீலைகளை முடிக்காமல் மனைவி வழிச்சொத்தான பாண்டிய நாட்டை மன்னனாக ஆளவும் செய்கிறார். இதைத் தவிர்த்து மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்களை விளக்கும் ஹலாஸ்ய புராணம் போன்ற நூல்கள் அம்மண்ணுக்கும் சிவபெருமானுக்கும் இடையேயான தொடர்பைப் பலமாக நிறுவுகின்றன. திருவிளையாடல் திரைப்படத்திற்கு இன்றளவும் வரவேற்பு இருப்பதற்கான காரணம் அத்திரைப்படம் வெகுஜனங்களுக்கு நன்றாகத் தெரிந்த, வெகுஜனங்கள் உணர்வுப்பூர்வமாக இரசித்த ஒன்றின் காட்சி வடிவம் என்பதனால்தான். 

பாண்டிய மன்னர்களில் வைணவர்கள் உண்டு. நகர் மத்தியில் கூடலழகர் உண்டு. பிற்காலப் பாண்டியர்களில் ஒருவர் ஸ்ரீரங்கம் கோவிலைத் தங்கத்தால் இழைத்திருக்கிறார். இருப்பினும் மதுரையை ஆண்ட சுந்தரேஸ்வரர் என்பது மண்ணுடனும் மக்களுடனும் ஆழமான தொடர்புடைய ஒரு விஷயம். 

அதே போலத்தான் சோழர்கள் விவகாரமும். ஸ்ரீரங்கம் கோவிலை மண்ணில் இருந்து அகழ்ந்தெடுத்தவனே ஒரு சோழன்தான் என்று (தர்மவர்மச் சோழன்) அத்தலப்புராணம் சொல்லும். திருவேங்கடமுடையானுக்கும் சோழ மன்னன் ஒருவனுக்கும் இடையேயான பந்தம் இன்றளவும் திருவேங்கடமுடையானைப் போற்றப் பயன்படுத்தப்படும் துதியில் இருக்கும். “சோள புத்ர ப்ரிய:” என்னும் வார்த்தைகள் வாயிலாக அதை அறியலாம். இருப்பினும் சோழர்கள் சைவச் சார்பு கொண்டிருந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். சோழ மன்னர்களது குலகுருக்களாக ஆதிசைவர்கள் இருந்தனர். ராஜராஜசோழன் தன் பெயரை வரலாற்றின் பக்கங்களில் அழியாமல் இருக்கச்செய்ய பெருவுடையார் கோவிலையே கட்டினான். 

சேர மன்னர்கள் குலசேகரப் பெருமாள்களாக இருந்த போதிலும் அவர்களில் ஒருவர் சேரமான் நாயனாராக உடலுடன் சொர்க்கத்திற்குச் சென்றது போன்றதான நிகழ்வுகள் அங்கிருந்த சைவத் துடிப்பைக் காட்டுபவை. 

சைவம்தான் தமிழரின் மதம் என்று நிறுவுவதற்காக நான் மேற்கண்ட பத்திகளை எழுதவில்லை. வைணவம், சாக்தம், கெளமாரம், காணபத்தியம் ஆகியவையும் இம்மண்ணில் செழித்து இருந்தன என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு. சைவச் சமயமும் அவ்வாறாக செழித்து இருந்த சமயங்களில் ஒன்று என்று நிறுவுவதற்காகவே நான் மேற்கண்ட விவரங்களை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்தேன். 

1 comment

Vengaimarbhan October 9, 2021 - 8:56 am

நல்ல கட்டுரை இன்னும் ஆழமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். கட்டுரை சுவாரசியமான ஒன்றாக ஆரம்பித்து அதற்கு சம்பந்தம் இல்லாமல் திடீரென முடிக்கப்பட்டு விட்டது. இன்னும் விரிவான கட்டுரையை தமிழ் தேசியம் மதம் தொடர்பாக எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்

Comments are closed.