பெண்ணாழியில் பரலென மூழ்குதல்: ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் “கன்னி”

0 comment

இலக்கியத்தில் படைப்பாளியின் உணர்ச்சியே ஊற்றுக்கண். அது எழுத்து ஊடகத்தின் வாயிலாகப் பல்வேறு கோணங்களில் சிந்திச் சிதறி கதாபாத்திரங்களுடைய உணர்ச்சிகளின் தொகுப்பினால் ஆன நிறமாலை ஒன்றை உருவாக்குகிறது. ஆசிரியரால் மிகுந்த கவனத்துடன் கட்டமைக்கப்பட்ட பகுதிகளும் நனவோடை எழுத்துமுறையில் தன்னியல்பாக எழுந்துவந்த வர்ணனைகளும் பிரித்தறியவியலாதபடி அதில் விரவியுள்ளன. வாசகரின் உணர்ச்சிகள் அகக்கண்ணாடியில் படும் படைப்புக் கிரணங்களின் உணர்ச்சிகளைப் படிந்துகொள்ள அனுமதிப்பதன் வாயிலாகவும் வாசகரின் கற்பனை ஆற்றல் காரணமாகவும் இலக்கியப் படைப்புகள் முழுமை அடைகின்றன. எனவே இலக்கியத்தில் உணர்ச்சிகள் மூன்று நிலைகளில் இயங்குகின்றன- படைப்பாளியின் உள்ளத்தில் ஊற்றெடுத்த உணர்ச்சி, படைப்பில் உள்ள கதாபாத்திரங்களின் உணர்ச்சி, வாசகர் அடையும் உணர்ச்சி. இசைஞரின் கையில் இருக்கும் கருவியின் மீட்டலோடு தாள ஒத்திசைவு கொள்ளும்போது தானாக அருகில் இருக்கும் மற்றொரு இசைக்கருவியின் தந்தி அதிரும் ஆல்ஃபா ரிதம் எந்தப் படைப்புகளில் நிகழ்கின்றனவோ அதுவே மகத்தான படைப்பு.  

ஃபிரான்சிஸ் கிருபா கன்னியில் தன் பணியைச் செவ்வனே நிகழ்த்தியிருக்கிறார் எனில் மிகையன்று. அவர் படைத்த அற்புதமான கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளும் அமரத்துவம் அடையும் தகுதி பெற்றவை. நான் வாசகனாக இந்நாவலால் எந்த அளவு ஆட்கொள்ளப்பட்டேன் என்பதன் குறிப்பு இக்கட்டுரை! 

பண்டுதொட்டு தமிழிலக்கியத்தை இரு பெரும் பிரிவாகக் கொள்வது மரபு- அகம், புறம். நாவல்களில் உணர்ச்சிகளே (Emotional Component) முதன்மையான அங்கம். மதிநலம் (Intellectual Component) இரண்டாவது. பல்லாயிரமாண்டு மானுடக் குறிப்புகளை ஏந்திய மூளை, அறிவைவிட அதிகமாக உணர்ச்சிகள் வாயிலாகவே மனிதனை இயக்குகிறது. செய்திகளை அறிவதும் பகுத்தாராய்வதும் தன்னளவில் முக்கியம் என்றபோதும் அதற்கு இலக்கியத்தில் இரண்டாம் நிலையே உள்ளது. அறிவைப் பெறும் முன்பாக நாம் உணர்ச்சிகளால் வாழ்கிறோம் அன்றோ? நற்குதலை இலக்கணம் கற்றுவிட்டா தீந்தமிழ் பேசத் தொடங்குகிறது? 

புறப்பொருள் இலக்கியத்தைக் காட்டிலும் அகப்பொருள் இலக்கியத்தில் இயல்பாக உணர்ச்சிக் கூறுகள் மிகுந்திருக்கின்றன. காரணம், அது ஆண் பெண் உறவை மையமாக வைத்து இயங்குகிறது. களவியலும் கற்பியலும் அதற்கான இரு விழிகள். அவற்றைக் கொண்டு காதல் எனும் ஆன்மீகப் பாதையில் நெக்குருகுகிறது. அதன் வீரியம், தன் ஈரமான களவு விழிகளால் உலகை அளக்கத் துடிக்கிறது. காதல் நாவல்களில் தத்துவப் போக்கு சற்றே மறைந்திருக்கக் கூடியது. சன்னமாகவும் பூடகமாகவும் உள்ளாடக்கூடியது. காளையர் கவனமாகக் கன்னியரது கலிங்கம் களைவதைப் போன்ற நிதானத்துடன் அணுகும் போது காதல் சமூகம் மீதும் கட்டுகள் மீதும் கடும் விமர்சனத்தை வைப்பதை அறிய முடியும். அதனால்தான், காதலித்து சாதிகளைக் கொலை செய்ய அழைப்பு விடுத்தான் பைந்தமிழ்த் தேர்ப்பாகன். 

ஃபிரான்சிஸ் கிருபாவின் கன்னி, தமிழ் நாவல் இலக்கியத்தின் அருங்கொடை. தமிழ்க் காதல் கதைகளின் வரலாற்றில் ஒரு தனித்துவமான படைப்பு. தமிழ்க் கவிதைச் செறிவின் இன்மொழியில் உருவாக்கப்பட்ட புதினம். தமிழ் உளவியல் துறையில் இன்னும் கண்டடைந்து ஆய்வுசெய்யப்படாமல் உள்ள பொக்கிசம்! இத்தகைய போற்றுதல்களுக்கு முழுத்தகுதியும் பெற்ற நாவல் ‘கன்னி’! ஆயினும் அந்நாவலை வாசித்ததும் அது அளித்த உணர்ச்சிகள் குறித்து மனத்தில் வெடித்த எரிமலைகளையும் குழைந்த பனிவரைகளையும் நான் விவரித்து எங்கும் எழுதியிருக்கவில்லை. அதன் சொற்குவியல் அளித்த பிரமிப்பையும் நான் முற்றாகக் கடந்திருக்கவில்லை. வாசித்து முடிக்கும் போதெல்லாம் அது அழைத்துச்செல்லும் கற்பனை வனாந்திரங்களின் புதிர்களில் சிக்கியோ, காதலின் கொங்கைத் தேனை அருந்தி மயங்கியோ, அழகுத் தமிழ்ச் சொற்றொடர்களால் இன்புற்றோ எழுதுவதில் இருந்து நழுவி வந்துள்ளேன். விரிவாக எழுத எண்ணும் போதெல்லாம் கையில் சிக்காத வண்ணத்துப்பூச்சியாய் நழுவிச்செல்லும் படபடப்பு அந்நாவலின் குணங்களுள் ஒன்று. 

உண்மைகள் என்பது செய்திகள் மட்டுமன்று. உணர்ச்சிப்பூர்வமான உண்மை என்பதும் உண்டு. காதலில் அதுவே தகவல்களைக் காட்டிலும் மிகச் செறிவானது. கிருபா அவ்வுண்மையைத் தன்னால் ஆன வரை உரித்துப் பார்த்திருக்கிறார். அதற்க்குக் கற்பனைச் சிறகுகளைக் கட்டி மனம் உறுத்தாத உயரங்களுக்குப் பறக்கவிடுவதும் ஆழக்குழி தோண்டிப் புதைத்து நம்மைப் பதைபதைக்கச் செய்வதுமாக விளையாடிப் பார்த்திருக்கிறார். அதைக் கலைப்பாங்குடன் சொல்வதற்கு அவரது விரிவான மரபிலக்கிய வாசிப்பும் நவீனக் கவிதை பயிற்சியும் உதவியிருக்கிறது. உண்மைகளைப் படிமங்களாகவும் உணர்ச்சிப் பிழம்புகளாகவும் எழுதி விரிக்கத் தேவையான செப்பனிட்ட நிலத்தைக் கதைக்களமாகத் தேர்வுசெய்தவர், மிகச் சரியான இடத்தில் சரியான சொற்களை விதையெனத் தூவி பாலையில் ஒரு மருதத்தைச் சமைத்திருக்கிறார்.

ஆழியின் விளிம்பு வரை சென்று கால்களை நனைத்துவிட்டு மீண்டுவிடும் சிறு குழந்தை போலவே இதுவரை தமிழிலக்கிய வரலாற்றில் படைப்பாளர்கள் காதலை அணுகியிருக்கிறார்கள். பெண்ணைச் சுற்றி மிளிரும் மர்ம ஒளிர்வை மட்டுமே தொடர்ந்து வர்ணித்தும், பெண்களின் ஒளிமறைவுப் பிரதேசங்களில் கிறங்கியும், பெண்களின் கார்மயிர்க் கணுக்காலையும் கவின் பொங்கும் கன்னங்களையும் கொஞ்சு விழிக் கொங்கைகளையும் கவிதை நடையில் அலங்கரித்தும், மேலோட்டமாகக் கலவியின் கிளர்வைத் தொட்டுக் காட்டியும் அங்கிருந்து நகர்ந்துவிடுவார்கள். தமிழிலக்கிய வாசகர்களுக்கு அதுவே போதும் என்று அவர்கள் எண்ணியிருந்தனரோ என்ற ஐயம் தோன்றாமல் இல்லை. பெண்ணின் வலிகளை, அவசங்களை, இயல்பான கவர்ச்சியை, வலிமையை எல்லாம் ஒன்றுவிடாமல் எழுதிப் பார்த்தவர்கள் காதலின் வசீகரமான தோல்பையைக் கிழித்துப் பார்க்க முனையவில்லை. 

இரு கைகளால் கத்தியைப் பிடித்து வயிற்றின் முன் கூர்முனை தீண்டும்படி வைத்தவாறு பறந்து கேணிக்குள் குதிக்கும் சாகசம் காதல். குதிக்கக் குதிக்க மெல்ல மறையும் கானல்நீரால் ஆன மாயப்பொழில். முட்களால் செப்பனிடப்பட்ட விழி மயக்கும் சுழல் வழிப்பாதை. கண்ணீர்ச்சுவை இனிப்பென்று மயக்கும் போதை. பாதையில் சற்றே இடறினாலும் கொதிக்கும் குருதிச் சேற்றில் நம்மை ஆதுரத்துடன் அணைத்திழுத்து மூழ்கடிக்கத் தயாராகும் புதைகுழி! பலி கேட்கும் தொன்மத் தெய்வம் காதல்! 

அந்த மர்மப் பாதையில் அநாயசமாக நடந்திருக்கிறார் ஃபிரான்சிஸ் கிருபா. வழமையான காதல் கிளர்வுகளும் பெண்களின் அவயங்கள் மீதான தாளாமையும் முந்தைய காதல் நாவல்களைப் போலவே கன்னி நாவல் நெடுகத் தளும்புகிறது. ஆயினும் அதை முன்வைக்கும் மொழியின் வீச்சும் அதைக் கண்டு இன்னலும் உவகையுமாய் அலையாடும் பாண்டியின் பாத்திரப் படைப்பும் புத்தொளி மின்னும் பசுமையான அகக் கழனிக்கு நம்மைக் கடத்திச் செல்கிறது. காதலும் தவிப்பும் நாணயங்களின் பூத்தலைப் பக்கங்கள். காதலின் பித்தெழும் உச்சத்தையும் தவிப்பின் கைமீறுகையான மனப்பிறழ்வையும் ஒழுங்கின்மையின் சமநிலையுடன் கிருபா படைத்துள்ளார். 

காதலையும் பக்தியையும் ஒரு தராசில் வைத்துப் பார்க்க முடியும். இந்நாவலிலேயே, வார்த்தைகளால் சொல்லி விவரித்துவிட முடியாத இடத்தில் கடவுளும் காதலும் இருப்பதைத் தேவதேவன் கவிதையாகச் சொல்கிறார். பக்திக்காக ஊனுயிர் உருகப் பாடல் பாடிய இலக்கியங்களை எல்லாம் சிறு சிறு மாற்றம் செய்து அவற்றுள் மறைந்திருந்த காதலின் பித்துநிலைப் பாடல்களைக் கண்டுபிடிக்க இயலும். அவை இரண்டின் கூறுகளையும் முன் பின் அடுக்கி ஆசிரியர் தந்திருக்கும் காட்சிகள் அற்புதமானவை. உதாரணம் இந்நாவலின் மழைப் பகுதிகள். அது ஆரம்பிக்கும் போது அமலோற்பவ மேரியின் அங்கங்களைக் கண்டு பக்தியில் தன்னை அறியாது வணங்கும் பாண்டி, சாராவிடம் மூழ்கித் தரைதட்டும் வரை காதலில் திளைக்கிறான். இரண்டுக்கும் கண்ணீரே புனிதத் தீர்த்தம். மழைப் பகுதியில் அமலோற்பவ அன்னை தொழுதலைக் கோரும் தூய கன்னி, சாரா மர்மம் களையாத காதலி! 

கிறித்துவப் பின்புலம் காதலின் வதையை அல்லது சுய வதையை இன்னும் மெருகேற்றுவதாக அமைகிறது. ஒவ்வொரு வலிக்கும் கோணிக் கோணி நிரந்தரமாகக் கோணிவிட்ட முகம் கொண்ட நம் கடற்கிராமத்தின் இயேசு ஒரு காட்சியில் அன்னையைக் கூவி அழைக்கிறான். அவன் முகத்தைக் காணச் சகியாமல் கதவை மூடுவது அவளுக்குச் சங்கடம் எனில் அவன் முகத்தைக் காண்பது போலத் திறந்து வைப்பது பெரும் சங்கடமாகிறது. காற்று மூடுவதைப் போல ஏமாற்றிச் சாத்துகிறாள். யார் மெக்தலீன், யார் மரியாள் அல்லது மரியாள்கள், இருவரும் மாறி மாறித் தோன்றும் பெண்மை என்ற முடிவற்ற வினாக்களை ஏந்தியவாறு கன்னி நிறைகிறாள். 

நேரடியான விளக்கங்களோ, தொடர்புறுத்தல்களோ, வார்த்தைகளோ இல்லாதிருப்பது கவிதையின் இயல்புகளுள் ஒன்று. புள்ளிகள் வைக்கப்பட்டிருக்கும் வரிசையைக் கொண்டே முழுக் கோலத்தை, ஓவியத்தை, ஜடத்தை, உயிரைக் கற்பனையில் நிகழ்த்திக்கொள்ளும் திறன்பெற்ற வாசகர்களுக்கு நற்பரிசளிக்கும் வித்தை கவிதை! அந்த நோக்கத்துக்காகவே தெள்ளிய கவிதைகள் சொற்சிக்கனத்தைத் தன் பயின்று வருதலின் பகுதியாகக் கொண்டுள்ளன. கவிதையின் சொற்சிக்கனத்தை எந்தவிதத் தயக்கமும் உறுத்தலுமின்றி நாவலிலும் பயன்படுத்துகிறார் கிருபா. நாவலுக்கு எப்படிச் சொற்சிக்கனம் பொருந்தும் என்று ஐயமுற வேண்டாம். மேற்சொன்ன பயன்பாடுகளை நோக்கங்களாகக் கொண்ட, சொற்றொடர்களுக்குள் தனித்துப் பயின்றுவரும் சொற்சிக்கனத்தையே இங்கு குறிப்பிடுகிறேன். அவ்வகையில் பக்கங்கள் தாண்டி நீண்டு செல்லும் பத்திகளில்கூடப் புத்திளமை கொழிக்கும் தனித்த சொற்றொடர்கள் சிறிய, பெரிய அரவங்களென வசீகரத்தையும் பீதியையும் ஒரு சேரக் கிளர்த்தியபடி நாவலின் பாதையெங்கும் நெளிகின்றன. அணிநயத்துடனோ, புத்திசையில் திரும்பிச் செல்லும் படிமத்துடனோ, சொற்கள் கூடி ஏற்படுத்தும் விளைவுகளினாலோ சொல்லரவங்களின் நெளிவுகள் தனித்தனிக் கவிதைகளாகின்றன. 

இதை நாவல் என்று சொல்லி வழமையான நாவல் போன்ற ஒரு அறிமுகத்தைத் தருவது தவறான அபிப்பிராயத்தை உருவாக்கும். இதைக் கவிதை நூல் என்று சொல்வதற்கான தடயங்கள் இருந்தபோதும், விரிவில், நெடுமையில், கதாபாத்திர அணுக்கத்தில், தத்துவத்தில், விமர்சனப் பார்வையில் நாவல் கலையை நோக்கியே நகர்கிறது. ஒருவேளை சிலப்பதிகாரத்தைப் போல உரையிடையிட்ட பாட்டுடை நாவல் என்று புதுப்பெயர் இட்டால் பொருந்துமோ என்னவோ? இந்நாவலின் கவிதைகளை இக்கட்டுரையில் மேற்கோள்களாக இடுவதைத் தவிர்க்கிறேன். தனித்துத் தரும் அழகை இங்கு இரசிப்பதைக் காட்டிலும் பொருத்தமான தருணத்தில் நாவலின் இடத்தில் ருசிப்பது கவிதைப் பிரசவமாகும் வலியையும் சேர்த்தே வெளிச்சமிட்டு வாசகரின் வியப்பைக் கூட்டும் என்பதே அத்தவிர்த்தலுக்குக் காரணமாகும். மேலும் இதற்கு முன் கன்னி நாவல் பற்றி எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் அத்தகைய மேற்கோள்களைச் சொல்லும் முனைப்பில் தன் மனத்தின் எண்ணங்களை விவரிக்கத் தவறியதாக எண்ணம் எழுந்ததும் இதற்குக் காரணம். 

கவித்துவமான வரிகளை ஒப்பிட்டால் வறண்ட உரைநடை எளிதில் நினைவில் இருந்து நீங்கக் கூடியது. உரைநடை மூலம் நாம் வாசித்தவை நெடுங்காலம் நம் மனத்தில் நிலைத்திருக்குமாயின் அதற்கு – கவித்துவ வரிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் – அந்த உரைநடையில் நிகழ்ந்த அசாதாரண சம்பவங்களும் அதிலிருந்து நம்மைத் தொற்றிய உணர்ச்சிகளுமே காரணமாக இருக்கும். 

கவிதைக்கு நெடுங்காலம் நினைவில் ஊறும் இப்பண்பு இயல்பாகவே உண்டு. காலக்கண்ணாடியில் கீறிவிட்ட வடுக்களில், மணல் திரையில் வனைந்த புதிர்ச்சுழலில், உடைந்த சம்மந்தமில்லாதத் துண்டுகளின் கச்சிதமான வடிவப் பொருத்தத்தில், எதிர்பாராத கத்திக்குத்தை ஒத்த சொல்லாட்சிகளில் எல்லாம் கவிதை தன் ஆற்றலைப் பறைசாற்ற வல்லது. அது ஞாபகக் கிடங்குகளில் தீவிரமாகப் பொதிகின்றது. அதை நாவல் இலக்கியத்தில் நிகழ்த்திக் காட்டியிருப்பதே கன்னியின் முதன்மையான சாதனை.

நேரடிக் கவிதைகள் என்றும் உரைநடையில் வரும் கவித்துவ தருணங்கள் என்றும் வேண்டுமாயின் பிரித்தறியும் வாய்ப்புகள் இதில் உண்டு. சத்ராதி தாக்கிய பேரனை உணவுக்காக ‘ஆ’ திறக்கச் சொல்லி அவன் உண்ணும் போது தன் வாயிலும் ‘ஆ’ வைத்திருக்கும் பாட்டி, காதலிகளுள் ஒருத்தியின் நாசியை ஒரு பாதி மறைத்த கன்னத்தில் படுக்கை வசத்தில் மிளிரும் பரு, வளையல்களைக் கைநீட்டி வாங்கிக்கொள்ளும் ஆழி அலை, தன்னை விரட்டியவனைச் சபிக்கக் கைகூப்பும் வண்ணத்துப்பூச்சி, அடங்கிய யானைத்தீ என எரியும் பசிப்பதற்றம் என எங்கும் சிந்தி நிறைந்திருக்கின்றன கவித்துளிகள். 

மொத்த மழையின் ஏக்கத்தையும் தாங்கி நிற்கும் ஒற்றைத் துளி பற்றிய கவிதை உரைநடையின் வேடமணிந்து கன்னியில் வருகிறது. அப்பகுதி என் மனக் கல்வெட்டில் வரிசையாகவோ வரிசை குலைந்து மேலோட்டமாகவோ எப்படிப் பதிந்துள்ளது என்பதைப் பொருட்டின்றிச் சொல்கிறேன்- உள்ளத்தைப் பிரதிபலிக்கும்படி அசையும் ஊஞ்சல். அதில் எடையற்ற பசும் இலையைப் போல அமர்ந்திருக்கும் ஒருத்தி. உலகை மறுதலிப்பதை எழுதி ஏந்திய பதாகையாய் அவள் முதுகு. தன்னை அடைகாத்துக்கொள்ளும் கூர்மை படிந்த தாவணிக் கால்கள். கால்விரல்களை ஆடைநுனியின் நிழலுக்குள் உள்ளிழுத்துக்கொள்ளும் அவள் அத்தை மகள். மிரட்சியைத் தரும் வண்ணத்துப்பூச்சி ஒன்று அவள் மேல் அமரும் அற்புத ஆபத்து. அதைத் துரத்திவிட்டு அதன் சாபத்திற்கு அஞ்சித் தவிக்கும் அவனது மருட்சி. அவளை நிமிர்த்திப் பார்க்கையில் நெற்றியில் அசையாமல் தனிப்பிரபஞ்சமாய்த் துள்ளிக் கொதிக்கும் ஒற்றை நீர்த்துளி. அவளை நனைத்துவிடக் கூடாது என்று பதறி, தன் முதல் துமியோடு நின்று போன பெயல். மெலியாரின் பிரார்த்தனைக்கு அஞ்சும் பேதை மனம். 

என் நினைவில் இருந்தே இக்காட்சியை எழுதியுள்ளேன். என் மொழியிலேயே எழுதியுள்ளேன். நாவலில், இந்தப் பகுதியில் நான் குறிப்பிட்டிருப்பதைவிட நுட்பமான செறிவான அழகிய சொல்லாடல்கள், வர்ணனைகள் நிறைய உண்டு. ஆனால் நான் எழுதி இருப்பது அப்படியே நகலெடுத்த வரிகளாக இல்லை. இங்கு நான் சொல்ல முயல்வது யாதெனில், கவிதையின் வீச்சு ஞாபகத்தின் ஆழங்களைத் துளைப்பது. என் அகத்தில் தேடுகையில் இந்தப் பகுதி இப்படியாக உருக்கொண்டுள்ளது. என் மொழியில் இவ்விதம் வெளியாகிறது. இன்னொரு கோணத்தில் சொன்னால் கவிதையின் கூர்முனை உருவாக்கும் காயங்கள் ஆறாவடுக்களாக ஞாபகக் கிடங்கில் எஞ்சுகிறது. வருடிப் பார்த்தால் அதே பச்சை வலியை மீண்டும் தரவல்லது. கவிதை ஆயுதம் கவிஞனது உணர்ச்சி, அதன் உலோகக் கூர்மையில் தடவிய நஞ்சு!  

அச்சத்தையும் பச்சாதாபத்தையும் வாசகர்களின் மனத்தில் எழுப்பும் கலையொருங்குடன் இப்படைப்பு திகழும் அதே சமயத்தில் நகைச்சுவையையும் நிலையாமை பற்றிய துறவுப் பார்வையையும் ஆங்காங்கே கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. மழலையின் சேட்டைகள் போல பல்வேறு இடங்களில் நம்மை நகைக்க வைக்கும் துண்டுகள் நிறைய உள்ளன. அவை வெறும் நகைச்சுவையோடு அகலாமல் மானுட அமைப்பின், சமூக உளவியலின் மீதான நுட்பமான அவதானிப்புகளாகவும் ஆழ்ந்த விமர்சனங்களாகவும் தோற்றம் கொள்கின்றன.

நகைச்சுவைப் பகுதிகள் நிறைய உள்ளபோதும் அவை வாழ்வை அறியும்தருணங்களாகவும் அவ்வப்போது மாறிவிடுகின்றன. சேசு மரியாயி பாட்டி தன் புகழ்பெற்ற ‘கினா’ பற்றி விவரித்து அது நிஜத்தில் நிகழ்ந்ததும் இன்னும் சில அடிகள் உயரத்தில் ஏறிக்கொள்வது அத்தகைய ஒன்றுதான். பாண்டியைக் காதலிக்கும் விஜிலாவின் கடிதமும் அவள் அமலாவைப் பார்த்து பொறாமையால் துடிக்கும் காட்சியும் அத்தகையனவே. 

தொல்காப்பியர் மனித மனத்தில் உள்ள எட்டு உணர்ச்சிகளைக் குறிப்பிடுகிறார். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகிய அவை அனைத்துக்கும் தலா நான்கு நிலைக்கள அடிப்படை உணர்ச்சிகளைச் சுட்டி மொத்தம் 32 உணர்வுகளைப் பட்டியலிடுகிறார். அதை விவரிப்பது கட்டுரையின் நோக்கத்திற்கும் அப்பாற்பட்டது என்றே கருதுகிறேன். ஆயினும் கன்னி நாவலில் இந்த எண்குணங்களும் அவற்றின் 32 உணர்ச்சிநிலைகளும் விடுதலின்றிக் கச்சிதமாக வெளிப்பட்டுள்ளன என்பதை வியக்காமல் இருக்க முடியவில்லை.

அமானுஷ்யங்களை வெறுமனே சொல்லிச் செல்வதில் எந்தக் கலையமைதியும் இல்லை. அதுவே அமானுஷ்யங்கள் யதார்த்தத்துடன் எங்கெல்லாம் முடிச்சு போட்டுக்கொள்ளும் என்ற அர்த்தப்பூர்வமான இடங்களையும் இடைவெளிகளையும் முன்வைக்கும் விவரணைகள் இந்நாவலின் அதிர்வூட்டக்கூடிய அம்சங்களுள் ஒன்று. அதைக் கிருபா செவ்வனே சாதித்திருக்கிறார். கடற்கோள், காட்டாறு ஆகிய பகுதிகளில் மெல்ல இயல்புச் சமநிலையில் இருந்து பிறழ்வு அடைந்து பாண்டி கோரமான பள்ளத்தாக்கிற்குள் வீழும்போது அவனது வல்லிய இடுக்கண் நம்மை வெகுவாகத் தாக்குகிறது. அவனது சிறுவயதில் பைத்தியமாகத் தெருவில் அலையும் சூசைமணிப் பாட்டையாவின் சமீபத்திய தொன்மம், அத்தை மகளின் வனப்பு குறித்த வியப்பு, மெசியாவின் முடிவிலாத் துயர், அம்மனுடைய கோரம் எல்லாம் கலந்து உண்மைக்கும் பொய்க்கும் இடையே பாண்டியை நுழைத்துச் சக்கையாக வெளித்தள்ளுகின்றன. 

ரஸ்கோல்நிகோவின் உளக்கொந்தளிப்பும் ரஷ்யக் குமுகத்தின் வறுமையும் ஒளிவிளக்கு ஏந்திவரும் சோனியாவை அவன் கண்டடைவதும் இன்னும் பல பகுதிகளும் குற்றமும் தண்டனையும் நாவலை நூற்றாண்டுகளாய் உளவியல் துறைக்கு முக்கியமான ஆவணமாக்குகிறது. மானுட மனத்தை அணுகும் அத்தனை துறையினராலும் தொடர்ந்து அந்நூல் வாசிக்கப்படுகிறது. ரஸ்கோல்நிகோவ் தனது வீட்டு உரிமையாளருடைய முகத்தில் பட்டுவிடாமல் எரிச்சலும் சாதுர்யமுமாகத் தன் சிறு கூண்டு போன்ற ஏழ்மை மணம் வீசும் அறையில் இருந்து வெளியேறும் முதல் காட்சியிலிருந்தே அவனுடைய உளவியல் ஒருமை பூண்டிருந்தது. அந்நாவலை அணுகும்தோறும் அதன் மடிப்புகள் விரிந்துகொள்ளும் ஆச்சரியத்தை உணர முடியும். இப்பண்பே உலகின் உன்னதப் படைப்புகளுள் முதன்மையான ஒன்றாகக் குற்றமும் தண்டனையும் நாவலை நிலைநிறுத்தியுள்ளது. நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் உளவியல் துறை முளைவிடும் முன்பே உளவியலின் ஆவணமாக அது திகழ்ந்தது. செய்திகளாலும் வரலாற்றுப் புனைவுகளாலும் புற விவரணைகள் மிகுந்த நாவல்களின் வழங்கி வரும் கலாச்சாரத் தேட்டங்களாலும் நிகழ்த்த முடியாத அரும்பெறுமதித் தருணங்களை (Epiphany) ஒரு கதாபாத்திரத்தின் மனவோட்டங்களை முன்வைப்பதன் மூலம் தஸ்தாயேவ்ஸ்கி வழங்கியுள்ளார். 

கன்னி நாவல் நிச்சயம் அதன் சொல்லாட்சியிலும், கதாபாத்திரங்களை உலவவிட்ட கலையமைதியிலும் குற்றமும் தண்டனையும் நாவலைவிட மேன்மையானது. உளவியல் நோக்கில் பார்த்தால் சந்தனப்பாண்டியும் ரஸ்கோல்நிகோவுக்கு இணையான ஆழ்படிமம். அவன் தமிழ்நாட்டின் நலம் பொருந்திய ஆண்களின் சுயஇடுக்கணுக்குச் சான்று. உள்ளொடுங்குப் பண்புகொண்ட ஆணின் ஒரு சோற்றுப் பதம்! ஆரம்பத்தில் இருந்தே கன்னி நாவலும் பாண்டியைத் துல்லியமாகத் தீட்டுகிறது. நாவல் முழுவதும் வரும் காட்சிகளில் அவன் மையப் பாத்திரமாக இருக்கும் போதெல்லாம், அவனிலிருந்து விரிந்து பரவி பல்வேறு திசைகளைத் தேடிச்செல்கின்றன அவனது உள்ளத்தின் அம்புகள் – அவனது எண்ணச்சிதறல்கள்! அவன் மையத்தில் இல்லாத காட்சிகள்தோறும் உலகத்தின் அசைவுகள் அம்புகளாகித் துளைக்கும் பொருட்டு அவனை நோக்கியே குவிந்து செறிகின்றன.

உளவியல் துறையின் மிக முக்கியமான தர்க்கம் அல்லது கவனம் பிறப்புக்கும் வாழும் சூழலுக்கும் இடையேயான தாக்கத்தைக் கண்டறிவதில் இருக்கிறது. தனியன் ஒருவன் தன் பிறப்பில் ஏந்திவரும் பண்புகளையும் பதிவுகளையும் உள எல்லைகளையும் கொண்டே முதல் மூச்சைத் தன்னம்பிக்கையுடன் சுவாசிக்கிறான். ஆயினும் அவனது சூழல் தொடர்ந்து அவன் மீது தன் உளிக்கைகளை இட்டுச் செதுக்கியபடியே இருக்கிறது. அதற்கு எதிர்வினை புரிய போதிய விரளமில்லை என்பதாலும் அதன் சம்மட்டி அடிகளைச் சில நேரம் ஏற்பதாலும் ஒருவன் பிறவியின் கொடைகளை இழத்தலும் மறத்தலும்கூட நிகழலாம். கன்னியில் பல்வேறு நுண்தகவல்கள் பூடகமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவனுக்கு உண்டாகும் மனப்பிறழ்வுக்குச் சூழ்நிலையின் காரணங்கள் வெகு விரிவாகச் சொல்லப்பட்டிருக்கும் போது, இன்னொரு புறம் அமானுஷ்யத் தோரணையில் வரும் கதைகள் அவனது பிறப்பின் வாயிலாக வந்துசேர்ந்த மனப்பிறழ்வின் ஆதிமூலங்களைச் சன்னமாக எடுத்துரைக்கிறது. எனவேதான் இந்நாவல் உளவியல் துறைக்கான ஆய்வுத்திரட்டு என்று திண்ணமாகச் சொல்கிறேன்!

பாண்டி ஊழின் கைகளில் ஒரு விளையாட்டுப் பொருள். நல்லதோர் வீணையெனச் செய்து அவனைப் புழுதியில் இட்டுச் சிரிக்கவும் அவ்வூழ் தயங்கவில்லை. அதன் முடிவற்ற நிகழ்தகவுகளை நாவலில் புனைந்திருப்பது கிருபாவின் மேதைமை. ஊழ் என்பதைப் பிறப்பின் வாயிலாகவும் சூழலின் வாயிலாகவும் கிடைக்கும் பயன்படுத்தப்பட்ட அல்லது கைவிடப்பட்ட வாய்ப்புகளின் தொகுப்பு என்று கொள்ளலாம். 

பாண்டி போலவே நாம் அறத்திற்கும் காமத்திற்கும் இடையில் கிழிபடும்போது நம்முள் பல வழக்குகளை நமக்கெதிராக நாமே தொடுத்துக்கொள்வதுண்டு. ஒவ்வொரு புறமும் நின்று வாதாடும் எத்தனிப்பில் நமது வலியையும் வலிதாங்கும் அளவையும் மறந்துபோய் தொடர்ந்து பிறருடைய கோணங்களையே முன்னிறுத்தி அகநீதிமன்றத்தில் சலிக்காமல் நாம் வாதிடுவதுமுண்டு. தன்முனைந்து தானே தண்டனைகளைத் தலையேற்பதும் உண்டு. போதாக்குறைக்கு மிருதுவான மனமலரை ஆத்திர முட்களால் குத்திக்கொள்ளவும் தலைப்படுவதுண்டு. தண்டனைக்கு அடிமையானவனுக்கு மீட்சி ஏது? சொல்லச் சொல்லக் கேளாமல் விசத்தைத் தேர்வுசெய்து மூழ்கி மடியும் தும்பியைக் காப்பவர் யார்? 

ஒரு பார்வையில் கன்னி தன்வரலாற்றுப் புனைவு. பாண்டியின் வாழ்க்கைச் சம்பவங்களே நாவலின் அடிப்படை. அதன் இருள் ஒளியே பல்வேறு விகிதங்களில் முன்புலத்திலும் பின்புலத்திலும் கூடித் தோன்றி நிறமாலைகளையும் நிறப்பிரிகைகளையும் உருவாக்குகின்றன. பெரும்பாலும் நாவலாசிரியர்கள் தன் வரலாற்றுப் புனைவை உருவாக்கும் போது கதைநவில்பவரின் பார்வைப் புள்ளி (Point of View) தன்மையாக (First Person) இருப்பதுண்டு. படர்க்கையைவிடத் (Third Person) தன்மையே தன் வரலாற்று நாவல் நிகழும் களத்தின் அந்நியத்தன்மையை வெகுவாகக் குறைக்கவும் நேரடியாக முதன்மை கதைநவில்பவரின் உணர்வுகளோடு ஆசிரியரின் எழுத்து வன்மையும் ஒன்றிணைந்து ஆழமான பாதிப்பை உருவாக்கவும் உதவும். ஆனால் கன்னியில் படர்க்கையில் இருந்து கதைநவில்வதையே தேர்வுசெய்கிறார் எழுத்தாளர். ஆயினும் கதை இயல்பாகப் பாண்டியை நாம் அணுகுவதில் எந்தச் சிரமத்தையும் தரவில்லை. (நாவல் நிச்சயம் வாசிப்புக்குச் சவால் தரும் ஒன்று என்பது வேறு கோணம்!) மாறாக இது பாண்டி ஒரு நாவல் கதாபாத்திரம் என்பதைத் தாண்டி நிழல் உலகின் எல்லைகளைக் கடந்துவந்து நம்மைத் தீண்டும் தருணங்கள் நிறைந்திருக்கின்றன.

அக்கா வேண்டுமென ஏங்குவது, பார்த்தவுடன் காதலின் இரசாயனத்தில் பிணைந்துகொள்வது, இன்பமென்று நினைத்து ஒவ்வொரு முறையும் வதைக்கும் தீநறவத்தில் நாவை வைப்பது, சிறு வெற்றிக்குக் கண்டக்டரை நிமிர்ந்த நெஞ்சோடு பார்ப்பது, சிறு தோல்விக்கு தன்னுள்ளேயே ஓடி ஒளிந்து வலி தாங்குவது, அலைகளற்று இருத்தலின் இன்பத்தை அறிந்தபிறகும் தன் கட்டுப்பாட்டை மீறிக் கொந்தளிப்பின் நட்டுவாக்கிளிப் பிடியில் சிக்குவது. வாழ்வை, தாயை, தன்னை என அனைத்தையும் சத்ராதிக்குள் இழப்பது என்று நம்மை வெகு அணுக்கமாகச் சுகிக்கவும் அஞ்சவும் வைத்திருக்கிறார் எழுத்தாளர். 

மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட வேண்டிய நாவல்களுள் ஒன்று கன்னி. ஒருசில பகுதிகள் மறுமுறை வாசிக்கப்படும் முன் நம் வயிற்றினுள் ஒரு சிறு புரட்டலை உருவாக்காமல் இருக்காது. மகாநதி திரைப்படத்தில் காவிரிக் கரை வாழ்வினைப் பார்க்கையில் எல்லாம் ஒரு ஆனந்தம் எழும், மெல்ல நாயகனின் பிள்ளைகள் வளருந்தோறும் – நம் மனத்தில் வங்காளத்திற்குச் சென்று தன் பிள்ளையைச் சோனாகஞ்சிலிருந்து மீட்டு வரும் காட்சியின் நினைவு எழுந்து நம்மைக் குமையச் செய்யும். அதைப் போலவே சுனை, மழை ஆகிய பகுதிகளைப் படிக்கும் போதெல்லாம் நம்முள் குழையும் நாய் இதரப் பகுதிகளில் வன்பற்களோடு செவ்விழி தெறிக்க நம்மைத் துரத்த வருகிறது. 

“சுனை” பகுதி இருப்பவற்றில்யே மிகவும் இனிமையானது. இனிமைக்கு நடுவே பாண்டியின் மனப்பிறழ்வுக்கான சங்கேதங்கள் நிழல் போல ஊடுருவிக் கிடப்பதும் உண்டு. ஆயினும் அமலாவும் ஃபிரான்சிஸும் ஒவ்வொரு பக்கங்களிலும் வளர்ந்து நாமறியாத தருணங்களில் பெரியவர்கள் ஆகும் பரிணாம நகர்வு வரையிலான பகுதியை உள்ளடக்கியது சுனை. இப்பகுதி முழுக்க நம் நினைவேக்கங்களின் காலக்கண்ணாடியாக இருக்கிறது. உலகமயமாதலுக்கு முந்தைய குழந்தைகளின் வாழ்வை அப்பழுக்கற்ற குழந்தை விழிகளாலேயே பார்க்க வைக்கிறது. கால வரிசையில் இந்தப் பகுதியே முதற்பகுதியாக இருக்கக் கூடியது. ஆயினும் சம்பவங்கள் நினைவுகளின் ஒழுங்கையும் ஒழுங்கின்மையையும் பின்பற்றி நகர்வதால் அப்படியொரு கறாரான வரிசையை நாம் பின்பற்றும் தேவையை நாவல் கோரவில்லை. 

முதல் காட்சியிலேயே தெருவில் இருக்கும் ஒவ்வொரு இல்லத்திலும் விழா விழியாகப் பூத்தொளிரும் கிறிஸ்துமஸ் ஸ்டார்களை அண்ணாந்து பார்த்தவாறே ஓடும் வியப்புக் குழந்தையாகப் பாண்டி அறிமுகமாகிறான். எப்படி மரங்களில் இத்தனை ஒளிவந்தது, அதுவும் திடீரென்று. மாட்டுக் கொட்டிலில் குதலையாய்க் கிடந்த தேவபாலனை முன்னறிவிப்பதால் மட்டுமே எக்ஸ்மஸ் ஸ்டார்கள் இத்தனை மின்னுவதில்லை; ஒவ்வொரு குழந்தையும் வாழ்வைக் காணும் முன் கனவைக் கண்டு பூரிப்பதற்காக அவை தம் விழிகளைத் திறந்து, சிமிட்டி, ஒளிர்ந்து மலர்ச்சியாகப் பாடமெடுக்கின்றன. பெரியப்பா வீட்டு எக்ஸ்மஸ் ஸ்டாருக்குத் தனி மதிப்பு. மேல் மாடியில் மத்தாப்பு அசைத்தபடி இருக்கும் அமலா அக்கா அதைவிட மதிப்புமிக்க உச்சி விண்மீன். மத்தாப்பினைச் சுற்றி விளையாடும் அக்குழந்தை அந்த ஒளி மின்னும் வதனத்தால் தேவதை என்று பாண்டிக்கு அறிவிக்கப்பட்டுவிடுகிறாள். 

அவள் தேவதை என உறுதிசெய்யும் காட்சிகளும் உண்டு. ஞானஸ்நானம் செய்த நாளன்று வெண்பஞ்சு முகில் போல உடையணிந்து புகைப்படத்திற்குக் காட்சி தரும் அமலா தேவாலயச் சுவர்களில் வரையப்பட்ட அழகிய ஏஞ்சல்களுக்கு நிகரென நிற்கிறாள். அந்தக் காட்சியைப் படம்பிடித்து மனத்தில் ஆணியடித்து மாட்டிக்கொள்கிறான் பாண்டி. இன்னொரு காட்சியில் ரூபினா அக்கா மணக்கோலத்தில் இருந்ததைப் பார்த்து இந்த ஊரிலேயே ரூபினா அக்காதான் அழுகு என்று நினைத்தவன் மறுகணமே அந்த எண்ணத்தை அந்தரங்கமாக எச்சிலிட்டு அழித்துவிட்டு இந்த ஊரிலேயே அமலா அக்காதான் அழகு என்று மாற்றி எழுதுகிறான். ஒருபோதும் மறுதலிக்காத அக்காவின் நிழல்! 

தேவதையாகத் தோற்றமளிக்கும் அமலா அதற்குப் பிறகு மெல்ல மெல்ல தரைக்கு வந்து அவனுக்குத் தேவைக்கு ஏற்றாற்போல் தோழியாகி, தமக்கையாகி, அன்னையாகிறாள். குறிப்பாக அவள் அவனுக்கு ஒரு வழிகாட்டி. தடுமாறும் போதெல்லாம் காக்கும் இனிய அணங்கு! வரிசையாக ஒரு மனமுதிர்வின் அடிப்படையிலோ அகவை முதிர்வின் அடிப்படையிலோ அல்லாமல் தேவைக்கேற்ப உருவங்களையும் பாத்திரங்களையும் மாற்றிக்கொள்கிறாள். அமலா பாண்டியைவிட ஓராண்டு நாற்பத்தெட்டு நாட்கள் மட்டுமே அகவையில் மூத்தவள். இருவரும் ஏறத்தாழ ஒன்றே போல் வளர்கிறார்கள். அவளின் நிழல் போல பாண்டி வளர்கிறான். அமலா அக்காவுக்குப் பாண்டிதான் நிழல் என்பதைக் கேலியாகப் பாட்டுப் பாடுகிறாள் ஜாய்ஸ் அக்கா. பகடியில் ஒளிந்திருக்கும் உண்மையைப் பாண்டி கண்டுகொள்கிறான்.  

அவள் ஞானஸ்நானம் கொள்ளும்போது தானும் ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறான். அவள் பாவாடை தாவணிக்கு மாறிவிட்ட போது அமலா பாண்டி இருவருக்கும் ஏற்படும் சிறு தயக்கம், அவனுக்கு மாமன் முறை வேட்டி கட்டுவதற்கு அவள் உதவி, மடித்துக் கட்டிவிடும் போது அணைந்துவிடுகிறது. இருவரது குழந்தைப் பருவத்திற்கும் முற்றுப்புள்ளி முளைத்துவிட்டதை இந்தத் தாவணி – வேட்டி காட்சியை வைத்து எழுத்தாளர் பொருத்தியிருக்கும் அழகு பாராட்டுக்குரியது! 

பாண்டியின் உதவியோடு அமலா ‘மெக்ரூன்’ திருடித் தின்றுவிடுகிறாள். பெரியம்மா திருட்டுக்குத் தண்டனை தராமல் தின்ற இனிப்பைச் சமன் செய்வதற்காக ‘வேப்பிலைச் சாறு’ தண்டனை தருகிறாள். பாண்டி அருந்தினால்தான் தானும் அருந்துவேன் என்று அமலா செய்யும் அடத்தை மனத்திற்குள்ளாகவே மென்வெறுப்பு கொள்கிறான் பாண்டி. ஆயினும் போக்கிடம் அற்றவனுக்கு தூயவளான அமலா அக்கா, அடுத்த நொடியே மீண்டும் தேவதையாகிவிடுகிறாள். அவளுடைய தூய்மையே பாண்டிக்கு எதையும் ஒப்பிட்டு அளக்கும் அளவுகோல். வணங்கியபடியே சிரிப்பதற்கும் உருகியபடியே உரிமை கொள்வதற்கும் என்று அவர்களது உறவு வகைப்படுத்த முடியாத அன்பின் வனாந்திரத்தில் வலம் வருகிறது.

“அருவி” பகுதி அப்படியே வளர்தலின் தவிப்பைக் காட்டுகிறது. பால்யத்தில் முளைத்த கனவுகளைச் சட்டைப்பையில் திணித்துக்கொள்ள முடிந்தது. ஆனால், எதார்த்தத்தின் முட்கள் நீண்ட கருவேலச் சிலுவையைச் செல்லுமிடமெல்லாம் தூக்கித் திரிவது சாத்தியமாக இல்லை. அருவி முழுவதும் கவிதையின் அருவியாகவே இருக்கிறது. கிருபாவின் கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகளும் அதன் தலைப்புகளும் அருவியின் அத்தியாயங்களாக வருகின்றன. ஃபிரான்ஸிஸ் தேவதேவனைச் சந்திப்பதும் அங்கே நிகழ்கிறது. பாண்டியைக் கவிதைகள் அர்த்தங்களில் இருந்து மெல்ல மெளனத்திற்கு அழைத்துச் செல்கின்றன. அமலா ‘வளராமலேயே இருந்திருக்கலாம்’ என்று நினைவேங்கிச் சொல்லும் இடம் வருகிறது. அதுவே அருவியின் அடிப்படை. கனவுகளின் சிறகுகளைக் கத்தரிக்க வேண்டிய அவசியம். இயலாமையின் எடை. கட்டுப்பாடுகளின் கத்தி விரல்கள். 

அமலாவின் சுய தேர்வு எந்த அளவில் இருக்கிறது என்ற கொடிய கேள்வியைத் தொடர்ந்து நம்முள் எழுப்புகிறது கன்னி. குமரியின் ஆலயத்திற்குப் பாண்டியுடன் செல்லும்போது ஓரிடத்தில் சந்தனம் பூசி வேறு முகம் கொள்கிறாள். அன்னை மேரி மீதே அக்காவுக்கு நம்பிக்கை இல்லை என்று மனத்தில் சொல்லிக்கொள்கிறான் பாண்டி. அமலாவின் அழகை வியந்து போற்றும் விஜிலாவின் சொல் பற்றி, அமலா செவியே புளித்துப்போன பொருளற்ற போற்றுதல் என்கிறாள். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியும் மெய்ப்பொருளை அடையலாம் என்பதை அறிந்தவளுடைய நம்பிக்கை எத்தகையது? தான் மதப்பற்று கொண்டவளாக நிச்சயம் இல்லை என்றும் அமலா சொல்கிறாள். பாட்டிக்காக இல்லாமல் தானாகவே இந்தத் துறவினை ஏற்பதையும் ஓரிடத்தில் சொல்லி பாண்டியைத் தேற்ற நினைக்கிறாள்! நீண்ட நாட்களுக்கு முன் தொலைவில் இருந்த சுமை தற்போது நெருங்கி வந்துவிட்டதன் எதார்த்தம் அவளுக்குப் புரிகிறது. அவளைத் தூய்மையின் பிறப்பிடமாகக் கருதிய பாண்டிக்குப் புரியவில்லை. 

சாராவில் அமலாவின் ஒருசில கூறுகளைத் தன்னையறியாமல் கண்டுகொள்கிறான் பாண்டி. தனிமையின் நெருக்கம் தந்த படபடப்புக்கும் காவல் இல்லாத சுதந்திரத்திற்கும் ஆட்பட விழைந்தும் மருகும் சாரா, ஷெல்லியின் எபிசைகிடியான் (Epipsychidion) என்ற கவிதையைப் பாண்டிக்குத் தருகிறாள். இந்தப் பகுதி நாவலின் சமூக விமர்சனக் கண்ணோட்டத்தை நேரடியாக உறுதிசெய்கிறது. ஷெல்லி தன் உற்ற தோழி எமிலியா விவியானி விருப்பத்திற்கு மாறாக கன்னியாஸ்திரீ ஆக்கப்பட்டதற்கு எதிரான பாடல் இது. பிற்சேர்க்கை 2 ஆக நூலில் கவிஞர் மோகனரங்கன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. இந்தத் துப்பின் அடிப்படையில் நாவல் முடிவில் அற்புதமான பட்டறிவுத் தருணமாக நிலைத்துவிடுகிறது. 

அமலா – பாண்டி சந்திப்புகளின் போது ஓரிடத்தில் அவனை நன்கு புரிந்துகொண்டவளாய் ‘இப்படியே இருந்தால் பைத்தியமாகிவிடுவாய்’ என்று எச்சரிக்கிறாள். தமக்கை – தம்பி உறவின் கிடுக்குப்பிடி துறவறத்தில் வீழவிருப்பவளுக்குப் புரிந்திருக்கிறது. தன்னைச் சார்ந்து அவன் வாழக்கூடாது என்பதற்காகப் பாம்பே செல்லும்படி அன்புக் கட்டளை இடுகிறாள். பாம்பேயில் இருக்கும் தீவுக் குகையான எலிபெண்டாவிற்குச் சென்று அங்கும் நிழலன்றி ஏதுமற்று அமர்ந்தவனுக்கு அமலாவின் நினைவுகளே துணையாகின்றன. என்பே விறகாய் இறைச்சி அறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்பைக் கைவிடவேண்டிய நிலைகள் கொண்ட யதார்த்தம் கவிஞனுக்குப் புரியாது! 

சுனை, அருவி, கார்மை, மழை ஆகிய நான்கு பகுதிகளிலும் உணர்ச்சிகள் கொட்டிக்கிடக்கின்றன. அதன் வழியாக காட்டாற்றுப் பாதையில் சென்று கடற்கோளில் சிக்கித் தவிக்கும் பாண்டியை முழுதறிய முடியும். இந்தப் பயணமே உளவியல் துறைக்கும் இதர மானுட அறிவியல் துறைகளுக்கும் முக்கியமானது என்று முன்பு குறிப்பிட்டேன். முதலில் கடற்கோளை வைத்துவிட்டு இறுதியாக மழையை வைத்ததற்கு எழுத்தாளரின் கருணையே காரணமாக இருக்கிறது. பிறவிப் பெருங்கடலின் இறுதிப் புள்ளிக்குச் சென்று சேரும்போது இனிய நினைவு மூளையின் உதடுகளில் ஒட்டியிருந்தால் போதும் என்று எண்ணாதோர் எவருண்டு? அதனால்தானே வாழ்வியலில் சலித்தவர்கள் தள்ளாடும் வயதில் பக்தியில் திளைக்கிறார்கள்? பாண்டியின் முடிவு கடற்கோளின் வன்மையால் நசிந்திருந்த போதும், நாவலின் முடிவேனும் வேர் நனைக்கும் மழையாக இருப்பதில் வாசகர்கள் பிழைக்கிறார்கள். மழை முடிந்ததும் அதிலேயே மனம் இலயித்தபடி சற்று நேரம் இனிமையை நீட்டிக்கொள்ள முடிகிறது. பாண்டி ஒரு காட்சியில் ‘கடலுக்கு அப்பால்’ நாவலின் இறுதி வரிகள் தரும் நம்பிக்கையை வாசித்து அதிலேயே தங்கிச் சுழல்வதைப் போலத்தான்! 

பாண்டி பெண்களால் நான்கு புறமும் சூழப்பட்டிருக்கிறான். பெதும்பைகளின் ஆழியில் அலைவுறும் சிறு ஓடம். வேற்று தேசத்து அகதியைப் போலப் பரிதாபத்திற்குரியவனாகவும் போற்றுதலுக்குரியவனாகவும் பெண் தேசத்தில் புகுகிறான். அவர்களது மென்மை அவனைத் தொற்றிப் படர்ந்து கழுத்தைச் சுற்றி வெட்பமளிக்கிறது. ஆயினும் அவர்களது சூதும் மெல்லிய வன்முறையும் அவனுக்குப் புரியவுமில்லை, ஏற்புமில்லை. சேசு மரியாயி பாட்டி ஜிம்மி வாலை வானோக்கி உயர்த்துவதை அபசகுணமாகச் சுட்டிக்காட்டி அதை ஆற்றில் விட்டெறிய அறிவுறுத்திவிட்டுச் சாவகாசமாக எரிச்சலூட்டும் மெளனத்திற்குள் தஞ்சமடைகிறாள். பிரேமா ராணி வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் பாண்டியைச் சீண்டி அவன் தன்னையே கீழ்மையாக உணரும்படிச் செய்கிறாள். நசரேத் டீச்சர் பிழை செய்யாத பாண்டியை ஒரு ஊகத்தில் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறாள். தெரியாமல் செய்த பிழையைச் சுட்டி பாண்டியை மோசமானவன் என்று வண்ணம் தீட்டுகிறாள் சிறுவயது மெல்கி. அவனைச் சுற்றிப் பெண்களே இருக்கின்றனர். அமலா இவர்களுக்கெல்லாம் அப்பால் தூய்மையுடன் இருக்கிறாள். தூய்மையை வணங்காமல் வேறு கதியில்லை, அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு! அதிலும் குறிப்பாகப் பெண்களால் சூழப்பட்ட பாண்டி போன்றோருக்கு! பெண்களுடைய மெளனமும் கேலியும் வன்மமும் புறக்கணிப்பும் அச்சமும் அவனைத் தொடர்ந்து குழப்புகின்றன. அவனைத் தேவைக்கதிகமான குற்ற உணர்வில் தள்ளுவதும் மனப்பிளவின் உக்கிரத்தைப் பட்டறியச் செய்வதும் இந்தப் பெண்கள் சூழ்ந்த குழந்தைப் பருவமே! 

பாண்டியின் அப்பா வெளியூரில் வேலை செய்பவர். அவரிடம் அவ்வப்போது சென்று ஓரிரு நாட்கள் தங்கி மகிழ்ந்து வருவது மட்டுமே அவனுக்கு வாய்த்தது. அண்ணன்களோடும் அத்தனை நெருக்கமில்லை. இவனைப் பலரும் செல்லமாகக் கொஞ்சும் நிலை கண்டு அவர்களுக்குப் பாண்டி மேல் அழுக்காறுதான் நிறைந்திருக்கிறது. பள்ளி நண்பர்கள் – சன்னாசி, நாளிவாயன் – இவனுடன் பெரிய நெருக்கத்துடன் இல்லை. சொல்லப்போனால் நாவலில் பாண்டிக்கு அருகமைந்த ஆண்கள் அனைவரும் நாவலில் ஓரிரு வரிகளாத்தான் எஞ்சுகிறார்கள். அப்பா வெளியூரில் உழைக்க, வீட்டின் நிர்வாகம் அனைத்தும் அம்மாவிடம் இருந்தது. அம்மாவிடம் வளர்ந்த பாண்டியாடு துள்ளிச் சிலிர்த்துத் தாவியோடினாலும் பெரியப்பா வீடுதான் எல்லை. அங்கிருக்கும் நான்கு அக்காள் ஆடுகளிடம்தான் சென்றாக வேண்டும்.

நாவலில் பாண்டியின் விழிகளுக்கு அணுக்கமாக வரும் இன்னொரு ஆண் சூசைமணிப் பாட்டையா! ஒப்பீட்டளவில் பிற ஆண்களைவிட அவரை அணுக்கமாக எடுத்துக்கொள்கிறான் பாண்டி. அவரும் பித்துப்பிடித்து கையறுநிலையில் இருப்பவர்! பிச்சை எடுப்பதற்குக் கிழிந்த மட்டை மட்டுமே, உலோகத் தட்டைக் கையாலும் தொடேன் என்ற கொள்கைப் பிடிப்புடன் இருக்கும் பைத்தியம்! சிறுவர்களின் உலகத்தில் சில கொடூரங்கள் உற்பத்தியாவதுண்டு. சில நேரங்களில் அவர்கள் கொடூரமானவர்கள்! அவர்கள் தம்மைச் சுற்றியிருக்கும் உயிர்களில் பூஞ்சையானவற்றைத் தேர்ந்தெடுத்துத் துன்புறுத்தி மகிழ்வார்கள். ஆண் சிறுவர்கள் சூசைமணிப் பாட்டையாவைத் துன்புறுத்தும் போதும் பாண்டி வருந்துகிறான். அவருக்காகப் பரிதாபம் கொள்கிறான். இந்தப் பச்சாதாப உணர்வு அவனுள் நிறைந்து வழிகிறது. பின்னாளில் உளம் பிளந்து அவதிப்படுகையில் சூசைமணிப் பாட்டையாவாக ஒரு கணம் மாறி மீள்கிறான். இந்தப் பகுதி வெகு நுட்பமானது. சூசைமணியைச் சில காலம் காணவில்லை என்பதால் அவன் இறந்து அவனுடைய ஆவி தன் பெயரன் பாண்டியைப் பிடித்திருக்குமோ என்று பாட்டி மருகும் காட்சியும் கடற்கோள் பகுதியில் குறிப்பென வருகிறது. வேகமான வாசிப்பில் இதன் பொருத்தமும் பொருண்மையும் பிடிபடாமல் போகக்கூடும். ஆனால், மரபு ரீதியாக மனப்பிறழ்வைப் பாண்டி பெற்றிருக்கக்கூடும் என்பதற்கான சாத்தியங்களை வெகு மெலிதான நூலிழையில் சொல்லிச் செல்லும் பகுதிகள் இவை. 

எல்லோர் மீதும் பரிதாபம் கொள்ளும் பண்பு, பெண் வளர்ப்பினால் அவனுக்குள் வேர்கொண்டிருக்கக் கூடும். முதிர்கன்னியாக இருக்கும் பிரேமா ராணி மீது அவனுக்குப் பரிதாபம் உண்டு. அவள் அவனைச் சீண்டி அழவைத்த போது தன் மீதே பரிதாபப்பட வேண்டிய நிலைமாற்றம் அடைகிறானே அன்றி அவளை எதிர்த்து சினம் பொங்க மறுப்பு பேசத் தோன்றவில்லை. சத்ராதிபதியிடம் சிக்கிக்கொள்ளப் போகிறாள் என்று மெல்கியைக் காப்பாற்ற முனையும் போதும் அப்படியே அவப்பெயர் சுமக்கும் எதிர்பாரா நிலை உண்டாகிவிடுகிறது.

தன்னைப் பின்தள்ளி முன்னிலையில் இருப்பவரது அகத்திற்குள் புகுந்து அவர்களின் வலியை ஏற்றுக்கொண்டவன் போல ஆயிரம் சிறு சிறு வலிகளைத் தன்னுற்பத்தி செய்து தாளாமல் தவிக்கிறான். குற்ற உணர்வுகளை மென்மேலும் பெருக்கிக்கொள்கிறான். பலூன் போல அவன் இதயம் விரிவடைகிறது. தெவிட்டு நிலை வந்ததும் உள்ளத்தின் ஏதோ ஒரு பகுதி நைந்து விரிசல் உண்டாகிறது. தன்வலி முடிவின்றி நீள்கிறது.

நீர்மை பெண்மையின் வடிவம். ஆண் திடப்பொருள். அவன் சில நேரங்களில் நீர்மமாகாமலேயே வாயுவெனப் பதங்கமாகிவிடக் கூடியவன். பாண்டி பதங்கமாகிறான்! ஆனால் பெண் முழுமையாக நீராலானவள். குறைந்தபட்சம் கன்னி நாவலில் வரும் பெண்கள் அனைவருமே நீராலானவர்கள். இழப்பின் கண்ணீரால், மின்னும் வியர்வையால், கொதிக்கும் உதிரத்தால் ஆனவர்கள். தந்தையுடனான வெளியூர்ப் பிரவேசம் ஒன்றில் அலைகளே இல்லாத ஒரு கடலைக் கண்டு துணுக்குறுகிறான் சிறுவன் பாண்டி. அலைகள் வீசும் பெருங்கடலைவிட இந்த மெளனக் கடலின் மர்மம் அவனை அசைத்துவிடுகிறது. ஏன் இப்படி இருக்க வேண்டும்? தந்தையிடம் விசாரிக்கிறான். அவர் இந்தக் கடலை ஒரு ‘பெண் கடல்’ என்று பதிலளிக்கிறார். 

ஃபிரான்சிஸ் கிருபா தன்னைத்தானே சிலுவையில் ஏற்றிக்கொண்டவர். கன்னியில் பாண்டியையும் சிலுவை ஏற்றிய கருணையற்றவர். ஆனால், அதுவும் தன் சிலுவையேற்றத்தின் மீள்கணங்களே! சில நேரங்களில் பாண்டியின் சிலுவையாகச் சாராவோ, அமலாவோ இருக்கிறார்கள். உலகின் பார்வைகள் ஆணியடிக்கின்றன. அதில் அறையப்பட்ட வலியில் சற்று சுகத்தைக் கண்டறிய முடிகிறது பாண்டியால். ஆனால் சில நேரங்களில் அமலாவும் சாராவுமே ஆணியடிக்கிறார்கள். அதைத் தாளாமல் கற்பனையின் ஆழத்திற்குள் வீழ்ந்து, மயங்கி, வெளியேற முயன்று, கைவிட்டு அலைகிறான். சிலுவைக்கு அர்த்தம் தந்தவர்கள் தொடர்ந்து உயிர்த்தெழுந்தபடி இருக்கிறார்கள். 

பாண்டி இப்படி இருக்க ஃபிரான்சிஸ் கிருபாவோ தீவிர குடிப்பழக்கம் என்ற ஆணியால் தன்னைத்தானே மீண்டும் மீண்டும் தனிமைச் சிலுவையில் அறைந்துகொண்டவர். அவர் தன்வதையின் வழியே வார்த்தைகளைத் தீண்டியவர். வார்த்தைகளோ ஆற்றலோ குன்றும் போதும் வதை மட்டும் தீராமல் தொடர்ந்தது. நிச்சயம் அவரும் தேவகுமாரன்தான். 

ஒவ்வொரு முறையும் கன்னி நாவலை வாசிப்பவர்களின் ஈரக்குள விழிகள் கண்ணீராய் அதன் பக்கங்களில் விழுந்து தாளை நனைக்கும் போதும், ஒவ்வொரு வாசகரும் தன்னைச் சுற்றியுள்ள பெண்களிடம் சாராவையோ அமலாவையோ அவர்களின் சாயல்கொண்ட அன்னை மரியாளையோ தேடும் போதும், கிருபாவின் தமிழ் அழைத்துச் செல்லும் அற்புத வனாந்திரங்களில் ஆடித் திளைக்க வாய்க்கும் போதும் பாண்டியைப் போலவே தன் கல்லறையில் ஒருக்களித்த விழிகளுடன் முனகியவாறு ‘ஏறக்குறைய இறைவனாகிவிட்ட’ அவர் அசையக்கூடும். வலியோடு முறிந்த அம்மின்னல், தம் வாசகர் மனங்களில்  மீண்டும் மீண்டும் புத்துயிர்த்தெழட்டும்!