அதனைத் தழுவும்போது அதிர்ந்தான்
இதுகாறும் அவனை அச்சுறுத்திக்கொண்டிருந்த
அந்த வாள் உருவே அவள் வதனமாய்…
நெற்றிப்பொட்டிலிருந்து நேர்கீழாய்
இரண்டாய் அவனை வகிர்ந்தும்
இரண்டாகிவிடாதபடி அந்த வாளின் கைகள்
அவனைப் பிணைத்தபடியுமாய் இருந்தன
*
கடலை, ஆற்றை அடித்துப் பெய்யும் புயல் மழையைக் கிழித்துக்கொண்டு துளியாகி மறையும் வரை ஓடவேண்டும் போலப் பாண்டியின் மனம் துள்ளிக் குதித்தது. அவனோ வாசல்படியில் நின்றுகொண்டிருந்தான். தெரு நிறைய பெண்கள் கூட்டம் பிதுங்கி வழிந்தது. தேர் பெரியம்மா வீட்டைத் தாண்டி மூன்று வீடு போயிருந்தது. தேரில் அமலோற்பவ அன்னையின் முதுகுத் தோற்றம் நீலச் சுடர் போல் மிளிர்ந்தது. காற்றில் நீல அங்கி நெளியும்போது நெஞ்சும் நெளிந்தது. “அம்மா… தேவனின் தாயே… அருள் நிறைந்தவளே…” மனம் அவனைக் கேளாமலே உளமிளகிப் பாடியது.
பெரியப்பா சப்பரத்துக்குத் தோள் போடப் போய்விட்டார். பாட்டியும் பெரியம்மாவும் முற்றத்தில் கைகூப்பி தேரைப் பார்த்து நின்றார்கள். இரண்டு திண்ணைகளிலும் பெண்கள் காலாற அமர்ந்திருந்தார்கள். ஏறக்குறைய எல்லோருமே இளம்பெண்கள். குனிந்த பேச்சும், குலுங்கல் சிரிப்பும், வளையல் சிணுங்கலும் மோதிக் களித்தது. திண்ணையில் வாசலருகே முதல் ஆளாய் அமர்ந்திருந்தாள் சாரா. இள மஞ்சள் சுடிதார். அரக்கு நிறத் துப்பட்டா. காட்டன். இன்றுதான் முதன்முறையாகச் சுடிதாரில் பார்க்கிறான். வயசு குறைந்து யு.ஜி. மாணவி போலிருந்தாள். நிறத்துக்கும் உடைக்கும் கொஞ்சம்தான் வித்தியாசம் தெரிந்தது. தலை நிறைய மல்லிகை. நெட்டி முறிகிறதோ இல்லையோ அடிக்கடி விரல்களைப் பின்னித் தென்னிக்கொண்டிருந்தாள். மணி ஒன்பதைத் தாண்டிவிட்டிருந்தது.
தேர் பெரியம்மா வீட்டைக் கடந்த மறுநிமிடம் சாராவும் மூன்று பெண்களும் திண்ணையில் வந்து அமர்ந்தார்கள். பாண்டி பக்கத்துத் திண்ணை விளிம்பில் அமர்ந்திருந்தான். அவர்களுக்கு நடுவே படிக்கட்டு நீளம்தான் இடைவெளியிருந்தது. சாரா அவனைப் பார்த்து களைப்போடு சிரித்தாள். பல்லாயிரம் கண்கள் அவனை மொய்ப்பதாக உணர்ந்தாலும் பதிலுக்குச் சமாளித்தான். ‘அய்யே… அழகுதான்’ என்பது போல் உதட்டைப் பிதுக்கி முகத்தை இறக்கினாள். எப்போதுமே அழகுதான் என்றாலும் அப்போது சற்று அதிகம். கை நீட்டித் தரும் பொருளையே திருடுவது போல் கமுக்கமாக இரசித்தான். “கண்ணைக் கட்டுதோ” என்று லீலா டீச்சர் கேட்டபடியே சாரா எதிரே வந்து நின்றாள். இல்லை என்பது போல் சிரித்தாள். அது வேறு சிரிப்பு. கள்ளி… கள்ளி… “தூக்கம் வந்துச்சுளா நீ வீட்டுல போய் படு. ஊர் சுத்தி நம்ம வீட்டுக்கு தேர் வரும் போது விடிஞ்சுரும். அடுப்புல பால் இருக்கும். குடிச்சிட்டு படு”. சொல்லிவிட்டு லீலா டீச்சர் பாண்டி பக்கம் திரும்பினாள். கனிவானதொரு புன்னகை தூவினாள். இவள் சிரிக்காமலே திருவிழா முடிந்துவிடுமோ என்று நினைத்த பாண்டிக்கு ‘அப்பாடா’ என்றிருந்தது. ‘தண்ணி கொடு தம்பி குடிக்க’. அவள் கை சைகையில் எழுந்தபோதே அவனும் எழுந்துவிட்டான். பாதி செம்பு குடித்துவிட்டு சுற்றும்முற்றும் பார்த்தாள். பல கைகள் நீண்டன. பாண்டி மூன்று நடை தண்ணியெடுத்தான். டீச்சர் திரளுக்குள் மறைந்துவிட்டாள்.
சாரா யாரிடமிருந்தோ வாங்கிய வெறும் செம்பை நீட்டியபடி பாண்டியின் கண்களைச் சட்டம் போட்டுப் பார்த்து ‘கண்ணே… இரண்டொரு தீர்த்தமணிகளைத் தானமிடு’ என மெல்லிய குரலில் சொல்லிவிட்டு நாக்கைக் கடித்தாள்.
தேர் முன்னே அடித்துக்கொண்டிருந்த மேளக்காரர்கள் இடம் மாறி இப்போது அவனுக்குள் நின்று தாளத்தைத் தட்டித் தாளித்தது போல் அவன் அதிர்ந்தான். கண்ணே… கண்ணே… என்ற சொற்கள் மழையாகி எங்கும் சொரிந்தன. தெருவிலும் சுவரிலும் மறைவிலும் தேரிலும் அவை எதிரொலித்துப் பெருகின.
“தாகமாயிருக்குனு குடிக்க கொஞ்சம் தண்ணி கேட்டேன். இதுக்கு இவ்வளவு யோசனையா?” பொய் முறைப்புடன் அவனை நிதானப்படுத்தினாள்.
வீட்டுக்குள் போய் மறைவாகச் செம்புக் கழுத்துக்கொரு முத்தம் வைத்தான். தூணில் மோதிக்கொண்டான். வெட்கத்தோடு அதைக் கழுவினான். தடுமாற்றத்தில் தவலைப் பானை விளிம்பில் சொம்பு மோதி இரண்டும் அதிர்ந்தபோது ஏதோ இசைக்கருவி விழித்துப் பார்த்தது.
கூட்டம் தேரோடு நகர்ந்து முற்றமும் தெருவும் தெளிந்தபின் சாராவும் எழுந்து பெண்களோடு கலந்தாள். இடைப்பட்ட நேரத்தில் இருவர் கண்கள் எவ்வளவு காலக் கணுவில், என்ன விதமாய் எத்தனை முறை சந்தித்துக்கொண்டன என்பது எண்ணிக்கையில் இல்லை. பாண்டியின் பாத்திரம் நிரம்பிப் போய்விட்டது. அவன் அருமை இதயம் ஒரு வருடத்துக்கான துடிப்புகளைச் சில நிமிடங்களில் துடித்துக் களைத்துவிட்டது. போதும் போதுமென்று மனம் புலம்பியது. கடலுக்கு உடனே போக வேண்டுமென்று தோன்றியது. அவனால் சுமக்க முடியாத இந்த இன்பத் தோணியைக் கடல் மேல் நீந்த விடலாம் என்று நினைத்தான்.
தெருவில் இறங்கி அவன் மேற்கு நோக்கி நடந்தபோது திரும்பிப் பார்த்தான். கூந்தல் மல்லிகை மறைய சாராவும் திரும்பிப் பார்த்தாள். கதிக்க நடுவானில் முழு நிலா நீராடும் பேராவலோடு கடலில் குதிக்கத் தயாராய் நிற்பது போல் துறுதுறுவென்று ஒளிர்ந்தது. முகத்தில் மஞ்சள் ஒளி வழிய வானம் பார்த்து கடலுக்கு வந்தான். காற்றும் சருகும் ஒளியும் நிலமும் அவனே ஆனான். தேற்கே துறையில் எல்லா வள்ளங்களையும் பட்டறையேற்றி வரிசையாக நிறுத்தி கொம்பில் கொடி கட்டிவிட்டிருந்தார்கள். கடற்காற்றில் கொடிகள் சடசடத்துப் பறந்தன. கடலை நோக்கி வள்ளங்கள் நிலத்தில் விரைந்துகொண்டிருந்தன. ஆள் அணக்கமிருந்தது. ஆங்காங்கே மணலில் படுத்திருந்தார்கள். சிலர் சூழ்ந்திருந்தார்கள். உளறல் பேச்சொலிகள் தேய்ந்தும் வளர்ந்தும் செவியைத் தாண்டிச் சென்றன. கோயில் கோபுரச் சிலுவை கங்காகக் கனன்றது.
ஆள் அரவமற்ற கரையில் ஒதுங்கினான். மீனாகிவிட்டது கடல். பௌர்ணமி நிலவொளியில் அதன் நீர்ச்செதில்கள் அப்படித்தான் பளபளத்தன. ஆங்காரமாகப் புரண்ட அலைகள்தான் ‘இது கடல்.. இது கடல்..’ எனக் கரையில் அடித்து சத்தியம் செய்த வண்ணமிருந்தன. இல்லை. “சாரா… சாரா…” என.
தென்கிழக்கு மூலையில் தேர் மடங்கும் வரை இங்கேயே இருக்கலாம் என நினைத்தவன் மணலில் மல்லாந்து படுத்தான். வட்டக் கோட்டைக்குள் காய்ந்த நிலவை இமைக்காமல் பார்த்தபடி கிடந்தான். நிலவில் காற்றிருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும். காற்றில் அதன் ஒளிக்கற்றைகள் மஞ்சள் சீலையாக, உலகுக்கெல்லாம் கட்டிய ஒரே தொட்டிலாக ஆடினால் எப்படியொரு இன்ப உணர்வை அது தரும். மனமெல்லாம் மஞ்சளாகப் பூத்திருக்கிறதெனக் காட்டவோ அந்த உடையில் வந்தாள்!
எண்ணச்சரடுகள் அனைத்தும் அறுந்து நிலவே போலொரு அமைதி கவிந்தது.
கடற்காற்று அசத்தியது. மேளக்காரர்கள் ஆழத்தில் நின்று வாசித்தார்கள். இரண்டு நீர்த்துளிகள் தொட்டிணையும் விதமாக இமைகள் கலந்தன.
புள்ளி இல்லை, கடுகளவு பொட்டு இல்லை, குட்டியூண்டு மச்சம்.
இல்லை, பொட்டுதான்.
“ஒட்டியிருக்கு, தெரியல?” நெற்றியில் பொட்டு.
பொட்டுக்குப் பின்னே தெற்றி. ‘கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல்’.
புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மோ தெற்றிக்குக் கீழே புருவம். புருவங்களுக்குக் கீழே விழிகள். அதன் கூர் ஒளியைக் கூச்சத்தில் தாங்க முடியாமல் திடுக்கிட்டுக் கண்களைத் திறந்தான். வெகு நேரம் அயர்ந்து விட்டோமோ என்று பதறினான். நிலாவில் மணி பார்த்தான். அது பொய் சொல்லவில்லை. கண்களுக்கு மீண்டும் பசித்தது. அவை கரைந்து அழுதுவிடும் முன் அவளை ஊட்ட வேண்டும்.
தெற்குத் தெருவுக்கு வந்தான். ஐந்து காரை வீட்டுக்குப் பின்னால் வடக்குத் தெருவில் தேர் நின்றிருந்தது. பவனியில் உறங்கிவிட்ட வளர்ந்த மகனைத் தந்தை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு நடந்தார். பையனின் கால்கள் இவர் காலில் ஆடி மோதிய விதம் எந்நேரத்திலும் அவர் தடுமாறி விழலாம் என்று அச்சமூட்டியது. சுக்குக் காப்பிக்காரர்கள் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டுவிட்டு திண்ணைகளில் கோழித் தூக்கம் போட்டார்கள். எரிந்தால் எரி எனக்கென்ன என்பது போல் ஆளில்லாத வளையல் கடைக்காரர்கள் பெட்ராமாக்ஸை இரைய விட்டிருந்தார்கள். கோயில் முற்றத்தில் வந்து நின்றான். ரோஜாப் பந்தலுக்கு அடியில் மேல் திண்ணையில் ஓருருவம் கிழக்கு நோக்கி உட்கார்ந்திருந்தது.
பாண்டி பந்தலைச் சமீபித்தபோது கன்னத்தில் முட்டுக் கொடுத்திருந்த கையை விலக்கிவிட்டு பாண்டியைப் பார்த்தாள் சாரா. அதைத் தாண்டி அவன் போகவே முடியாத ஈர்ப்பு. கழுத்தில் ஒரு வெள்ளிக்கோடு உலகிலேயே மிக மெல்லிய அருவியாக அவள் நெஞ்சில் சரிந்தது சப்தமில்லாமல். பந்தலுக்கடியில் கீழ்த் திண்ணையோரம் வந்து நின்றான். முறுவலித்தான்.
திறந்த கண்களில் உறங்குகிறாளோ எனச் சந்தேகம் எழும் வரை அவளிடம் எந்தச் சலனமும் இல்லை. மடமடவென எடை கூடியது. ‘நான் கிளம்புறேன்’ என்று சொல்ல வாயெடுத்தான். “திண்ண சும்மாதானே கெடக்கு?” அவள் சொன்னது ‘லோகத்தில் என்னதான் நடக்கு’ என்பது போல் அவனுக்குக் கேட்டது. கால்கள் பின்னாத குறை. “கடவுளே.. கடவுளே…” என்று தனக்குத்தானே சொல்லிச் சிரித்தாள்.
இறுக்கம் தளர்ந்து திண்ணையில் அமர்ந்தான். இலேசாகச் சீண்டப்பட்ட ஈகோ ஒரு குட்டிச்சாத்தானாக அவனுக்குள் குதித்தது. உரையாடலின் நடுக்கோட்டு நடையுடன் இயல்பான பிசிறில்லாத குரலில் கேட்டான்.
“இது என்ன பொட்டு? கண்ல போட்டா கரைஞ்சு போற மாதிரி இத்துனூண்டு?”
சாரா கழுத்தைப் பின்னுக்கிழுத்து முறைத்தாள். “பெருசா வேணும்னா நீங்க வச்சுக்குங்களேன்.”
“அதுக்கில்ல, இவ்வளவு குட்டிப் பொட்டு நான் பாத்ததே இல்லை. அழகாத்தான் இருக்கு, கண்ணுல இருக்குற மச்சம் மாதிரி.”
“அச்சச்சச்சோ…” என்று முகத்தைச் சுழித்தாள். அதில் வெட்கமும் கொஞ்சம் குறுக்கிட்டு மறைந்தது. பாண்டி தரையைப் பார்த்துச் சிரித்தான்.
“ஆமா, இந்த சட்டை தைச்சதா, ரெடி மேடா?”
“பம்பாயில் எடுத்தது.” அவனைச் சீண்ட அவளுக்கும் ஆவல் உண்டாகிவிட்டிருந்தது.
“ஏலத்துல எடுத்ததா, வாடகைக்கு எடுத்ததானு கேக்கல. ரெடிமேடா, துணி எடுத்துத் தைச்சதானுதான் கேட்டேன்.”
பாண்டி அவள் குறும்புத்தனத்தை நம்ப முடியாதவனாக அவள் முகத்தைப் பார்த்தான். “பாத்தா எப்படி தெரியுது?”
“ரெடிமேடா எடுத்து டெய்லர் கிட்டக் கொடுத்து தைச்சு வாங்கின மாதிரி இருக்கு.”
“அவ்வளவு மோசமாவா இருக்கு?” “
“கண்றாவியா இருக்கு”. நாக்கு காட்டி பார்வையை விலக்கினாள்.
“ஏங்க, பொட்டு நல்லா இருக்குனு சொன்னதுக்கா இந்த வாங்கு வாங்குறீங்க?” பாண்டி அப்பாவியாகக் கேட்டான்.
“நாங்க வாங்கறதுமில்ல விக்குறதுமில்ல. பொட்டும்பிங்க, விட்டா நெத்திம்பிங்க, கேட்டுக்கிட்டிருந்தா கண்ணு மூக்குனு பார்ட் பார்ட்டா சொல்லுவிங்க, தேவையா? ஆத்துல மண்ணெடுத்து வீடு கட்டுறதே பெரும்பாடா இருக்கும்போது, காலடி மண்ணெடுத்து பூமி செய்யுற ஆளாச்சே!” சொல்லிவிட்டு எழுந்து வீட்டுக்குள் போனாள். அவள் தாவணி ஏவிய காற்று அவன் முகத்தில் வீசியது.
பேசி முடிக்கும்போது அவள் கண்கள் அகல விரிந்தன. பறந்த நிலையில் பக்கத்தில் இரண்டு கருவண்டுகள் அந்தரத்தில் நிற்பது போல் கண்மணிகள் ஒளிர்ந்தன. அவன் எழுதிய வரிகளை அவள் வாய்ச்சொல்லாகக் கேட்ட அந்தக் கணத்தில், அங்கேயே அப்போதே எரிந்து பஸ்பமாகிவிட வேண்டுமென ஒரு மரணக் கிளர்ச்சி ஏற்பட்டது. தெரு, கோவில், தேர், திருவிழா, மக்கள் எல்லாமே இல்லாமலாகி விட்டிருந்தது. பேருலகில் அவளும் அவனும் மட்டுமே இருப்பது போன்றதொரு பிரமை பிடித்தது.
அவள் எழுந்து போனதும் அவன் மரமாக, வார்த்தைகள் பறவைக் கூட்டமாக வந்தமர்ந்து அங்குமிங்கும் தாவிச் சிலம்பின. அவள் மீண்டும் வாசலுக்கு வந்ததும் எல்லாப் பறவைகளும் பதுங்கி மறைந்தன. அவளோ கூடை நிறைய வார்த்தைகளோடு வந்திருந்தாள். திண்ணையில் அமர்ந்து தெருவை இருமருங்கும் நோட்டமிட்டாள். கோவிலுக்காக உடலை முறுக்கித் திரும்பியபோது தாமரை மொட்டு போன்ற அவள் இடது ஸ்தனம் அவன் கண்ணைச் சுட்டது. அவன் கண்கள் அங்கேயே நிலைத்திருக்க அவன் பக்கம் திரும்பியவள் நெஞ்சருகே கை வைத்து விரல் சொடுக்கினாள்.
“தூக்கம் வருதோ, கண்ணு சொக்குது”. இயல்பாக இடது கை மாரப்பை இழுத்து கக்கத்துக்குள் நுழைத்தது. இல்லை. இல்லையென்று தலையாட்டியவன் மனசை மாற்றினான்.
“என் கவிதைகள்லாம் உங்ககிட்டதானே இருக்கு….?”
“நாங்க என்ன பழைய பேப்பர் கடையா வச்சுருக்கோம்?”
“சீரியசா சொல்றேன். விளையாடாதீங்க.”
“சொல்லுங்க.”
“அதைத் திருப்பிக் கொடுத்தீங்கனா நல்லது.”
“எதுக்கு?”
“என்கிட்ட வேற காப்பி இல்ல”.
“ஓகோ… சரி, அந்த கவிதைகளையெல்லாம் யாரை நெனைச்சு எழுதினீங்க?”
“அது… சும்மா கற்பனையா….”
“கற்பனையில யாரை நினைச்சு?” பதில் கூறத் திணறினான்.
தலையையும் குரலையும் சற்றே தாழ்த்தியிருந்தவள் நிமிர்ந்து குறும்பாகக் கேட்டாள். “என்னைக் கண்டதும் முளைக்குக் காலும் இதயத்துக்கு வாலும் இப்போ முளைக்கலையா?”
இறைவா இப்படியொரு கணத்தை எப்படியப்பா படைத்தாய் என்று கூவ வேண்டும் போலிருந்தது. ஆன்மா சிலிர்த்தது. கண்ணோடு கண்கலந்து ஆமோதித்தான்.
“அப்போ அது பாட்டுடைத் தலைவிகிட்டதானே இருக்கணும்? ஆமா, கவிதை கவிதையோடதான் இருக்கணும்.”
செல்லமாக அவனை அடிக்கக் கை ஓங்கி வளை குலுங்கி, அடிக்காமல் கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு உதடு கடித்துச் சிரித்தாள். ‘ஏய் நீதானா!’ பாண்டிக்குள் பெருமிதக் குரல் ஒலித்தது. நெஞ்சு திடத்துடன் ‘நானேதான்’ என்றான். “எப்பவும் கவிதைய நினைச்சிக்கிட்டேதான் இருப்பீங்களா?” தலைசாய்த்தாள்.
அந்தப் பார்வை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். “வாய்ப்பு கிடைச்சா பேசிக்கிட்டும் இருப்பேன்.”
சாரா இரண்டு கண்களையும் இறுக மூடித் திறந்தாள். பூரிப்பில் அவள் முழு எழிலும் பொங்கிப் பூத்திருந்தது. அவள் முகத்தில் அதுவரை பார்க்காத மேல் இமைகளின் மேற்பகுதியை அப்போதுதான் பார்த்தான்.
இதுகாறும் இரகசியமாய் எங்கேயிருந்தது? அவை கொத்தாக முத்தங்களை அள்ளி அவனுக்குள் விதைத்துவிட்டு மறைந்தன.
திடீரென்று ஞாபகம் மீண்டவளாக வீட்டுக்குள் ஓடினாள். அறை வாசல் திரைச்சீலைகள் நெளிந்தன. பாண்டிக்குச் சுயநினைவு திரும்பியது. அவள் வந்ததும் சொல்லிவிட்டுப் புறப்படலாம் என்று நினைத்தான். கிழக்கும் மேற்குமாகத் தலையைத் திருப்பி நோட்டமிட்டான். லீலா டீச்சரோ, புனிதாவோ அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களோ பார்த்துவிட்டால் தெற்று நினைக்க வழியிருந்தது.
திரைச்சீலையை விலக்கியபடி, “ஏய்… காஃபி. உள்ள வாங்க. காஃபி” என்று குரல் கொடுத்தாள். இரண்டு கைகளிலும் எவர்சில்வர் தம்ளர் இருந்தது. பாண்டி முழித்தான். வேண்டாம் என்று மறுக்க நினைத்தான். அது முடியவில்லை. அவள் இரண்டாம் அறைவாசலில் நின்றபடியே அன்பு மணக்கும் கண்களால் அவனை இழுத்தாள். காஃபியை வாங்கியபோது கை நடுங்கியது. இதயத்துடிப்பு குழம்பத் தொடங்கியது. “யாராவது வந்துருவாங்களோன்னு பயமா இருக்கு.” அதைச் சொல்லச் சங்கடமாக இருந்தது. ஆனாலும் சொன்னான். வாசலை வெறித்துப் பார்த்தாள். அப்போது அவள் கண்களில் ஓடிய இரேகைகளில் அச்சமும் கவலையும் கலந்திருந்தன.
“வடக்கு ரூமுக்கு யாரும் வரமாட்டாங்க” என்று சொல்லிவிட்டு நடந்தாள். அவளைப் பின்தொடர்ந்தான். பதற்றம்தான் கூடியது. இரண்டு பெரிய அறைகளைக் கடந்து வடக்கு அறைக்கு வந்தார்கள். அது சிறியதாக இருந்தது. இரண்டு வாசல்கள் உள்ளிருந்து மட்டுமே பூட்டக்கூடிய ஒன்றைத் திறந்தால் வடக்குத் தெரு வந்துவிடும். ஒரு கட்டில் மெத்தை, மேஜை நாற்காலி, மர பீரோ, கொடியில் உடைகள். அந்த மஞ்சள் சுடிதார். காஃபியை மேஜையில் வைத்துவிட்டு இவனை நாற்கலியில் அமருமாறு சைகை செய்துவிட்டு தெற்கு வாசலுக்குப் போனாள் சாரா. அவனால் எதையுமே சிந்திக்க முடியவில்லை. வடக்கு வாசலைத் திறந்தால் இங்கிருந்தே வெளியேறிவிடலாம் என்பது கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. கனவு நிஜமாகும்போது காதலும் கிலி கொள்ளுமோ?
காஃபியைப் பருகினான். மிதமான சூட்டிலிருந்தது. அதன் சுவை அதற்கு முன் வாழ்நாளில் எப்போதுமே ருசித்திராததாக இருந்தது. மேஜையில் கிடந்த புத்தகங்களை ஆர்வமின்றிப் புரட்டினான். எல்லாமே ஆங்கிலப் புத்தகங்கள். பக்கங்களில் சில இடங்களில் ஓரத்தில் பென்சில் கோடுகள்.
சாரா அறைக்குள் வந்தபோது அவள் கையில் பாண்டியின் செருப்புகளிருந்தன. துணுக்குற்றான். கட்டில் காலோரம் அதை மெதுவாக வைத்துவிட்டு, காஃபியைக் கையிலெடுத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள். குழல் விளக்கு வெளிச்சத்தில் குத்துவிளக்கு மீண்டும் அவனுள் ஒளி வீசி மின்னியது. அவள் கண்களை ஆழமாகப் பார்த்தான். அதில் வெளிப்பட்ட ஒரு தீவிரக் கவலையைக் கண்டதும் சாரா பார்வையை விலக்கிக்கொண்டாள். எதையோ யோசிக்கும் பாவனை. ‘காஃபி இருக்கும் வரை குடித்துக்கொண்டிருக்கலாம். அது முடிந்த பிறகு?’ அந்தத் தனிமை எழுப்பிய கேள்வியது.
“காஃபி எப்படி, குடிக்கிற மாதிரி இருக்கா? இல்ல ..கடனேனு விழுங்குறீங்களா? எனக்கு காஃபிகூட ஒழுங்காப் போடத் தெரியாது. வீட்டுல செல்லம். அப்புறம் ஏழு வருஷம் காலேஜ் ஹாஸ்டல்.” அந்த அறைக்குள் உரையாடுவதற்கான குரல் அளவை அவனுக்கு உணர்த்தினாள்.
“இந்த புத்தகங்கள்லாம் யார் படிக்கிறா?”
“ஏன், என்னயப் பாத்தா படிக்கிறவ மாதிரி தெரியலையா?”
மேஜையில் தம்ளர்கள் இரண்டும் அருகருகேயிருந்தன. “மன்னிப்பு கடிதம் என்னாச்சு?” அப்போது அவள் முகத்தில் பழைய குறும்பும் சந்தோஷமும் மீண்டிருந்தது. “நான் ஆம்பிளைப் பையனா இருந்தா, வந்தா வாடி வராட்டா போடினுதான் எழுதியிருப்பேன்.” அவன் மீண்டும் பழைய பாண்டியாக்கப்பட்டான். “இருந்து பாத்தா தெரியும்.”
“ஏன், ரொம்ப கஷ்டமோ?”
சாரா புருவத்தை நெரித்து பாண்டி முகம் பார்த்தாள். கண்ணில் கேள்வி முற்றுப்பெறாமல் தொக்கி நின்றது. பாண்டிக்கு அவள் உதடுகளைக் கிள்ளி வைக்க வேண்டும் போலத் தோன்றியது. தெற்கு அறையில் கிளி ‘இக்கித்’தது. சாரா கட்டிலிலிருந்து எழுந்து நின்றாள். மீண்டும் அழைப்பு மணியில் கிளி கிக்கித்ததும் பாண்டிக்குத் தூக்கிவாரிப்போட்டது. நொடிக்கு நூற்றி இருபது டிகிரி வேகத்தில் ஜுரம் பரவியது. பரிதாபமாக அவள் முகம் பார்த்தான். வாடிய அவன் முகத்தைக் கண்டு வாடிய சாரா, அவன் நாடியைக் கையில் ஏந்தி, கன்னத்தில் செல்லமாகத் தட்டினாள். காஃபி தம்ளர்களைக் கையில் எடுத்துக்கொண்டு போனாள். போகும்போது விளக்கு அணைக்கப்பட்டது. கதவும் சாத்தப்பட்டது.
இருளுக்குள் புழுவாகி நெளிந்தான். கட்டிலுக்கு அடியில் நுழையத் தயாராய் விளிம்பில் அமர்ந்திருந்தான். வீட்டுக்குள் பெண்கள் பேச்சொலி கேட்டது. வடக்கு வாசலுக்கு வெளியே ஆயிரம் பூதங்கள் நின்றிருந்தன. மேஜையில் கிடந்த புத்தகமொன்றை எடுத்து காரணமில்லாமல் கைக்காவலுக்கு வைத்துக்கொண்டிருந்தான். உடல், பொருள், ஆவியெல்லாம் செவியாகக் குவிந்துவிட்டிருந்தது. மின்விசிறியின் மெல்லிய சுரகரப்பு பூதாகரமாக ஒலித்தது. மேஜை, நாற்காலி, பீரோ. கொடியுடைகள் இருளில் மிதந்து, அறை நீர் மேல் அசைந்தன.
இப்படி எப்படி ஒரு பெண்ணின் கைப்பாவையாக ஒப்படைக்கப்பட்டோமென்று வியந்தான். ஏதோ மாயமந்திர சக்தியின் உடன்பாட்டுடன்தான் இது நிகழ்ந்தேறியிருக்கிறது என எண்ணினான். நாடியைத் தொட்ட விரல்களை, கன்னத்தில் பட்ட கையின் ஸ்பரிசத்தை நினைத்து மகிழ்ச்சியடைய முடியாததை நினைத்து வேதனைப்பட்டான். ஏழெட்டு நிமிடங்களுக்குப் பிறகு, சாவின் வாயாகக் கதவு திறந்தது. சாவின் வாயைச் சாத்திவிட்டு சாரா விளக்கை எரியவிட்டாள். நெஞ்சின் படபடப்பு தளர்ந்தது. அஞ்சி நடுங்கியதை, உயிர் நீங்கித் திரும்பியதை அவளிடம் காட்டிக்கொள்ளத் தயக்கமாயிருந்தது. முகத்தில் துளிர்த்திருந்த வியர்வையைச் சாமர்த்தியமாகத் துடைத்துக்கொண்டே தணிந்த குரலில் கேட்டான்.
“யார் வந்தது?”
“புனிதா.”
“இருக்காங்களா?”
“போயிட்டா.”
“ரெண்டு மூணு பேரு சத்தம் மாதிரி கேட்டுச்சு?”
“ஃபிரண்ட்ஸ்.”
“எதுக்கு?”
“பாத்ரூம்.”
பெருமூச்செறிந்தான். “இனி எப்போ வருவாங்க?” அருகே வந்தாள்.
“நீங்க போறது வரை யாரும் வரமாட்டாங்க.”
சாரா புனிதாவிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டாளோ என்ற சந்தேகம் எழுந்தது. நாற்காலியைக் கட்டிலருகே இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.
“நான் இங்கே இருக்குறது…”
“தெரியாது.”
“பின்ன எப்படி சொல்றீங்க?”
“ஒரு ஜோசியந்தான்.”
“ஆமா… நீங்க எப்ப போவீங்க?” யாரோ போல் கேட்டாள்.
“இப்பவே”. கோபத்தில் அவன் மூக்குநுனி எரிந்தது. ‘அதையும் பாக்கலாம்’ என்பது போல் ஒரு மெத்தனத்தோடு “சரி” என்றாள். தன் கழுத்தில் கைவிட்டு அழுத்தி உராய்ந்தான். மூச்சு வாங்கியது. “சரி, நான் கிளம்புறேன். நாம நாளைக்கு சந்திக்கலாம்.”
“எதுக்கு?” என்றாள்.
பதிலின்றி அவள் கண்களைப் பார்த்தான். அதைப் பொருட்படுத்தாமல் இடது கையை நீட்டி மேஜை மீது கிடந்த புத்தகத்தை எடுத்துப் புரட்டத் தொடங்கினாள். உறக்கத்தைக் கரைத்து நள்ளிரவு அவள் கண்களில் ஊற்றியிருந்தது. தூக்கக் கலக்கம் நிழல் வட்டம் போட்டிருந்தது. ஆனாலும் அவள் விழிகள் உதயத்தில் அசையும் அகல் சுடரென ஒளிர்ந்தபடி வரிகள் மீது நகர்ந்தன. அதில் மின்னிய பேரன்பையும், பெருங் கருணையையும் காந்தமுனையையும் கண்கொட்டாமல் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். காற்றின் போக்கறிய கைவிடும்பிடி மணவாய் நேரம் தூறிக்கொண்டிருந்தது. அவன் அங்கிருப்பதையே மறந்துவிட்டவள் போல் அவள் பக்கங்களைப் புரட்டினாள். அறிமுகமற்ற மௌனம் உருண்டது. காரணமில்லாத் துயரில் துவண்டான், “கோபமா?”
உணர்ச்சியின்றி நிமர்ந்தாள். “நீங்க இன்னும் போகலியா?”
“போகப்போறேன்.”
“சரி.”
மீண்டும் வாசிப்பில் ஆழ்ந்தாள். பாண்டி கட்டிலிருந்து எழுந்தான். செருப்பை அணிந்துகொண்டான். வடக்குக் கதவருகே வந்து நாதங்கியை நெகிழ்த்த கையெடுத்தபோது பின்னாலிருந்து சாரா அவன் கையைப் பற்றினாள். வலிப்பு கண்டதுபோல் கையை உதறினான்.
“விடுங்க. நான் போகணும்.”
திமிறியவனை இரண்டு கைகளாலும் பற்றித் தன் பக்கம் திருப்பினாள். “தேர் இன்னும் வடக்குத் தெருவுலதான் நிக்குது. யாராவது உங்களை பாத்துட்டா எனக்குத்தான் கஷ்டம்.” அவன் இரு கைகளையும் மணிக்கட்டில் பிடித்து அவளை விட்டுப் பிடுங்கினான்.
“தெக்கு வாசல் வழியா போயிருதேன் சாரா.” அவன் முகத்தை ஏறிட்டாள். கோபமும் பயமும் குழைந்திருந்தது.
“வாங்க”. சாரா முன்னே நடந்தாள். தெற்கு வாசலைத் திறக்குமுன் பாண்டியிடம் உறுதியான குரலில் சொன்னாள்.
“நாம பாத்தது, பேசுவது, சிரிச்சதெல்லாம் இந்த நிமிஷத்தோட முடியுது. மண்டியிடுவேன், மன்றாடுவேன், மரிக்கும் கணத்திலும் உன்னை உன்னிடமே கேட்பேன்னு உருகக் கூடாது. நிம்மதியா இருக்க விடணும். போய்ட்டு வாங்க.”
பாண்டியின் மூளையோட்டம் துண்டிக்கப்பட்டது. கண்களில் ஜிவுஜிவுவென்று வெப்பம் பரவியது. கதவை நோக்கி முன்னேறியவளை முரட்டுத்தனமாக மறித்து, இரண்டு கைகளாலும் அவள் தலையை இறுகப் பற்றி முகத்திலும் உதடுகளிலும் ஆவேசமாக முத்தமிட்டான். அவள் துடித்தாள். பிடியை விலக்கப் போராடினாள். தோற்றாள்.
உதடுகள் விலகியதும், “ம்ம்மா.. “என்ற பெருமூச்சுடன் கண்களைத் திறந்தாள். தலைச்சுற்று கண்டது போல் சில நொடிகள் தள்ளாடினாம். பாண்டியின் கண்களில் வெறி மின்னியது.
‘சட்’டென்று அவன் முகத்தில் அறைந்தாள். நெஞ்சில் கை வைத்துத் துவண்டாள். கதவைத் திறந்து வெளியில் எட்டிப்பார்த்து விட்டு வாசல் நடையில் குறுகி அமர்ந்தாள். கண்களை இறுக மூடி தலையைக் கவிழ்த்து வைத்திருந்தாள். நெஞ்சு விம்மி விம்மித் தணிந்தது. வெண்கல மணியோசை எழுந்தது. மேளம் எகிறி முழங்கியது. வாண வேடிக்கைகள் சீறிச்சென்று அடுக்கடுக்காக வெடித்தன. தேர் கிழக்கு மூலை திரும்பியிருக்கும். பாண்டி கட்டிலில் அமர்ந்து கைகளால் முகத்தைப் பொத்திப் பிடித்தபடி மனத்திற்குள் கடவுளிடம் புலம்பினான். அழுதான். உடல் மட்டும் குலுங்கியது. கண்ணீர் வரவில்லை. சாராவின் காலடியில் விழுந்து கால்களை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. முகத்திலோ முதுகிலோ கோபத்தில் உதைப்பாள். உதைத்தாலும் பட்டுக்கொள்ளலாம் என்று குற்ற உணர்வு சொன்னது. நினைக்க நினைக்க வலி நெஞ்சை அறுத்தது. வைகறையில் பூத்து, வருடினாலே வாடிவிடும் மலரை, இளங்காற்றும் பணிந்து வீசும் ஆனந்தத்தின் தளிரைப் பற்களால் கடித்திழுத்துப் பறித்த வன்முறை மனசைப் புரட்டிப் புரட்டியெடுத்தது. உடலெங்கும் கொலை வெயிலடித்தது. மனத்தின் தவிப்பு கற்பனையின் சிறகுகளைத் திசைகளெங்கும் விரித்தது. விதவிதமான வேதனைகளைக் காட்சிச் சித்திரங்களாக வரைந்து வரைந்து அழித்தது. எல்லா நாடகங்களும் முடிவில் தொடங்கியது. தோளில் கிடந்த சிலுவை ஆளை நசுக்கியது. சுடும் பாறையில் தூக்கிப்போட்ட பனிக்கட்டியாகச் சிறுதுளியை நோக்கி சிறுகச் சிறுகச் சுருங்கிக்கொண்டிருந்தான்.
சாரா மீண்டும் வடக்கு அறைக்கு வந்தபோது பீதி அவனை கட்டிலிலிருந்து வெட்டித் தூக்கியது. எழுந்து நின்றான். பார்வை அவள் காலில் கிடந்தது; அவள் “ஸாரி” என்றதும் நிமிர்ந்து முகத்துக்கு வந்தது. நம்ப முடியாமல் கண்கள் அகல விரிந்தன. சற்றைப் பொழுதில் சாரா ஐந்தாறு கிலோ எடை மெலிந்து போயிருந்தாள். நெற்றியில் அந்தக் குட்டிப் பொட்டில்லை. நீரில் முகம் கழுவித் துடைத்திருந்தாள். நனைந்த ஈர ரோமங்கள் விளிம்போரம் படிந்தோடின. இல்லை, கண்ணீரில் சாய்ந்தனவா? பலமான அடியில் கன்னிச் சிவந்திருந்த அவன் கன்னத்தைக் கண்டதும் மன்னிப்புக்குக் கெஞ்சும் பார்வையுடன் அருகில் வந்தாள். “ஸாரி. வெரி வெரி ஸாரி”. திணறித் தெறித்த மூச்சுக்காற்று கழுத்தோரம் மோதியது. தன் காதுகளையோ கண்களையோ அவன் இன்னும் நம்பத் தயங்கினான். குளிர்ந்த கரம் தோளைத் தொட்டு மிருதுவாக அழுத்தி அவனை அமரச் செய்தது. கட்டிலுக்கு நோகாமல் பக்கத்தில் அமர்ந்தாள்.
“வலிக்குதா?” பதில் சொல்லாமலிருந்தான். அவள் அப்படிக் கேட்பதைக் கேட்கும் போது அவன் அவயவங்கள் ஒவ்வொன்றாய்த் தொலையத் தொடங்கின. அந்த ஆறுதலில் இலயித்திருந்தான்.
“வாயைத் திறந்து எதாவது பேசுங்க. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ப்ளீஸ்…”
அவன் கைகளைக் கையிலெடுத்து அழுத்தினாள். உயிர்க்காற்று உடெலுங்கும் வீசியது. அவள் பக்கம் திரும்பினான்.
“நான் எதிர்பார்க்கல நீங்க இப்படி நடப்பீங்க, நானும் இப்படி அடிப்பேன்னு. எல்லாம் தப்பு தப்பா நடந்து போச்சு. யாரையுமே நான் அடிச்சதே இல்ல. யாருமே என்னை கிஸ் பண்ணதுமில்ல”. வார்த்தைகளை வாயில் ஊட்டி விடுவதுபோல் பேசினாள்.
வெகு அண்மையில் சாராவின் முகத்தை அறிந்தான். கண்களில் கனவுகள் புகைந்தெழுந்தன. நெற்றியில் தண்ணீர்த் துளிகள் அல்லது வியர்வைத் துளிகளா? நாசியும் செவிகளும் ஓலைக்குருத்தை நினைவூட்டின. தரையிறங்கும் கரிய பறவையின் சிறகுகள் புருவங்களில் விரிந்திருந்தன. நூலளவு கோடிழுத்து விளிம்பு கட்டியிருந்த வெளிர் சிகப்பு உதடுகள் நெய் வார்த்த அகல் போலிருந்தது. மேலுதட்டின் மேல் நடுவாங்கமாக குழிந்திருந்த பள்ளம் சுடராக ஒளிர்ந்தது. முதல் முத்தத்தின் ருசியும், சுடும் உயிர்ச்சுவையும் காலம் தப்பி அவனுடலில் கிளர்ந்தன. முத்தத்தின் ஞாபகம் அவனை நிதானமிழக்கச் செய்தது. அவள் கையைப் பற்றியெடுத்து உதடுகளில் ஒற்றிக்கொண்டு விம்மினான். சாரா செயலற்றுப் போனாள். அவன் கண்ணீர் விரலைச் சுட்டதும் அவள் உடலில் நடுக்கம் பரவியது. வெகு நேரமாக அப்படியே இருந்தார்கள். இரண்டு மூன்று முறை சத்தமில்லாமல் கடவுளைக் கூப்பிட்டு நெடு மூச்செறிந்தாள். அவள் கைகள் முற்றிலும் பலமிழந்து தொய்ந்து போயிருந்தன.
பாரமெல்லாம் இறங்கிவிட்டது போல் நிமிர்ந்தான். கண்களை அழுந்தத் துடைத்துக்கொண்டான். சாரா உடலை நகர்த்தி விலகி சுவரில் சாய்ந்தாள். மின்னிய கண்களில் அச்சத்தின் வெளிச்சமடித்தது. அவள் அமர்ந்திருந்த விதம் அவனைக் குழந்தையாக்கி விட்டது. வெட்கமின்றி ஏங்கும் குரலில் கெஞ்சினான். “சாரா… அந்தக் கையிலும் கொஞ்சம் கொஞ்ச நேரம்…” அவள் இரண்டு விரலால் தலையிலடித்துக்கொண்டாள்.
“அப்படி பேசாதிங்க, நெஞ்செல்லாம் படபடக்குது.”
“ஸாரி சாரா, எனக்கு என்ன பேசன்னே தெரியவை. ஏதேதோ உளறுறன். குடிக்க தண்ணி வேணும்.”
‘இதோ’ என்பது போல் எழுந்து தண்ணிக்குப் போனாள். கொலுசொலி ஒளிர்ந்து அகன்று மங்கியது.
அவள் தண்ணீரோடு திரும்பியபோது கட்டிலில் அமர்ந்தபடியே கை நீட்டி மேஜையில் எழுதிக்கொண்டிருந்தான். பென்சிலும் பேப்பருமாக அவனைக் கண்ட சாரா ‘என்ன’ என்பது போல் முகம் வெட்டிச் சின்னதாகச் சிரித்தாள். தண்ணீரை வாங்கிக் குடித்தான். காகிதத்தை எடுத்துப் படித்தாள்.
குதிகால் வெளுப்பில் மழலைப் பரல்கள் கொஞ்ச
எங்கே கூட்டிக்கொண்டு போகிறாய்
இரண்டு நிலாக் குட்டிகளை?
அலையலையாய் அவள் முகம் விடிந்தது. எண்ணங்கள் பறவைகளாக எழுந்து வட்டமிடுவதை அவன் மனக்கண்களால் பார்க்க முடிந்தது.
“எப்போ தோணுச்சி இது?”
“நீங்க தண்ணிக்குப் போகும்போது.”
“கிணத்துக்கு போகும்போதா?”
“குடத்துக்குப் போகும்போது.”
“இப்பவா?”
“ஆமா.”
“ஐயோ!”
துள்ளிக் குதிக்க ஒரு ஆசை அவள் உடலெங்கும் கிளர்ந்து முடியாமல் அடங்கியது.
“எப்படி இருக்கு?”
“எப்படியோ இருக்கு”.
குதிகாலால் தரையில் தாளமிட்டாள். கொலுசில் மணியடித்தது. வெள்ளிக் குருத்தொலிகள் சீரின்றி நெஞ்சில் பட்டுச் சிணுங்கின. காகிதத்திலிருந்து கண்ணெடுக்காமல் கட்டிலில் வந்தமர்ந்தாள். ‘மஞ்சள் நிற இசைத்தட்டில் மௌனமாகச் சுற்றும் நிலா’ என்ற வரி எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுல என்ன பாட்டு இருக்கும்னு யோசிச்சி யோசிச்சி பாப்பேன்.”
“அதுல இல்லாத பாட்டே இல்ல. எழுதுனது எழுதாதது எல்லாம் இருக்கும்.”
“நீங்க கேட்டிருக்கீங்களா?” சொல்ல வாயெடுத்தான்.
“கேட்டுக்கிட்டுதான் இருக்கேன்னு சொல்லக்கூடாது” என்று அவனை முந்தினாள்.
இருவரும் சிரித்தார்கள். எந்த மாயக்காற்று வந்து வாரி வீசியதோ தெரியவில்லை, பழசெல்லாம் பறந்து போய் புதிதாய்ப் பிறந்திருந்தார்கள். பேசப்பேச குழல் விளக்கு நிழல்கள் சுவரில் நெருங்கிக்கொண்டிருந்தன.
நான்கு கண்களுக்கு இரண்டு பேசும் பொம்மைகள் தேவைப்பட்டன. பொம்மைகள் பேசும்போது கண்கள் ஒன்றையொன்று ஊடுருவிச் சிலிர்த்தன. பேச்சுக் குரலைத் தாழ்த்தத் தாழ்த்தப் புலன்களின் பரபரப்பு கூடி அச்சம் மூண்டது, மூச்சு வாங்கியது.
தேர் பவனி கிழக்கு மூலையிலிருந்தது. மணி ஒன்றைத் தொட்டிருக்கும். பாண்டி சாராவிடம் விடைபெற்றான்.
விலகலின் வலி இதயத்தைப் பலியிட்டது. இரவில் அடிக்கும் வெயிலாகச் சாராவின் இரண்டு கண்களும் பட்டும் சுட்டும் ஒளிர்ந்தன. பாண்டி எழுந்துகொண்டான். அவளும். மீதமிருந்த செம்புத் தண்ணீரைப் பசியோடு குடித்தான். அவன் புறப்படுகிறேன் என்று சொன்னதும் நம்ப முடியாமல் பார்த்தாள். அவள் முகத்தில் நிம்மதியும் ஆசுவாசமும் திரும்பியது. அப்போது துரத்திக்கொண்டே ஓட வேண்டிய வேட்டைப் பொருளாக கடைசி வரை பிடி கிட்டாத வசீகரத்துடன் அவள் அழகு கூடிக்கொண்டே போனது. அக்கணத்தில் நரம்புகள் எல்லாம் கொடியாகி உடலொரு மலராகப் பிறந்து மணம் வீசியது. எப்படியென்றே தெரியவில்லை. காலைத் திருப்பலிக்கு சூடிக்கொள்ள சாராவுக்கு ஒரு மஞ்சள் ரோஜாப்பூ வாங்கித் தரவேண்டும் என மனத்துக்குள் குறிப்பெழுதினான். நினைக்கவே சந்தோஷமாக இருந்தது. உயிரின் இளவெயில் உதட்டில் வடிக்க, சுருக்கமான சிரிப்பும் திருத்தமான பார்வையுமாக அவள் ரோஜாவைப் பெற்றுக்கொள்ளும் காட்சி உள்ளத்திரையில் விரிந்தது. காலைத் திருப்பலியில் சாராவையும் அவன் வாங்கித் தந்த மஞ்சள் ரோஜாவையும் ஜாமத்தில் நின்றே பார்த்தான்.
“என்ன சிரிப்பு?” அவள் கேட்டதும் இன்னும் சிரித்தான்.
“சொல்லக் கூடாததா?”
“ஏதோ நெனைச்சேன்.”
“ஜோக்கா?”
“இல்ல. பூ”
“என்ன பூ? “
“ரோஜா.”
“பூவ நெனைச்சா சிரிப்பு வருமா?”
“எதோ வந்துருச்சி.”
“நீங்க நெனைச்ச ரோஜாப்பூ என்ன நிறம்னு நான் சொல்லட்டுமா?”
“சொல்லுங்களேன்.”
“வேண்டாம். மயங்கி விழுந்துருவீங்க.”
“மாட்டேன்.”
“மஞ்சள்.” வியப்பில் விழிகள் விரிந்தன. இரத்தமெல்லாம் மஞ்சள் நிறத்துக்கு மாறியது.
“எப்படி கரெக்டா சொல்லிட்டீங்க?”
“மஞ்சள்தான் நெனைச்சீங்களா… கடவுளே!” சிணுங்கிச் சிரித்தாள். சீரான பற்களில் வெண்மை ஒளிர்ந்தது. முறைக்கும்போது மூக்கில் பூக்கும் மோகினியும் நீயே! சிரிக்கும்போது உயிரைக் கேட்கும் தேவதையும் நீயே! அவளை அவளே இரசித்தாள்.
அந்தக் கணத்தில் அவன் நெஞ்சோரம் குட்டிப் பொறாமை எட்டிப் பார்த்து மறைந்தது.
“பூ கோவிலுக்கா?”
“ஆமா.”
“எந்தக் கோவிலுக்கு?”
“கவிதைக்…”
“கவிதைக் கோவிலா? அது எங்க இருக்கு?”
“நாளைக்கு காலையில் உங்களுக்கு தெரியும்.”
“இதுவரை எத்தனை கோவிலுக்கு எத்தனை பூ கொடுத்துருப்பீங்க?”
“நாளைக்குதான் ஃபர்ஸ்ட்.”
“உண்மையாவா?”
“சத்தியமா.”
“ஐயயோ.. அப்ப ரொம்பக் கஷ்டமாச்சே…”
பரிதாபப்படுகிறாளா கிண்டல் பண்ணுகிறாளா, பிரித்தறிய முடியவில்லை. சிறிது நேரம் காற்றாகக் கண்ணில் வீசிக்கொண்டிருந்தவள் ஏதோ உணர்ச்சியால் உந்தப்பட்டு ஊற்றெனப் பொங்கிப் பேசினாள் பார்வையில்.
நகர்ந்து அவனைக் கடந்து மேஜைக்கு வந்து ஷெல்லியின் புத்தகத்தை எடுத்து இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு “இது உங்களுக்கு” என்றாள்.
“இதுல எபிசைகிடியான்னு ஒரு கவிதை இருக்கு. நாளைக்கு படிச்சுப் பாருங்க. ஏன்னு புரியும். நேரா சொல்லி உங்கள சங்கடப்படுத்தப் பிடிக்கல.”
குரலில் ஏதோ துயரத்தின் ஒலி இழைந்திருந்தது. புத்தகத்தையும் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான். “ம்… பிடிங்க. வீட்டுல போய் தூக்கம் வரலைனா எடுத்துப் படிங்க.”
புத்தகத்தை வாங்கக் கை நீட்டியவன் சட்டென்று மனம் தடுமாறி அவள் கைகளைப் புத்தகத்தோடு சேர்த்துப் பிடித்தான். மெல்லிய நடுக்கம். மூச்சிழுத்து விழி தாழ்த்திச் சலிப்பு காட்டினாள். “விடுங்க”. குரலில் வலியிருந்தது. மிருதுவான கைகளை மேலும் இறுக்கமாகப் பற்றியபடி, “ஐ லவ் யூ” என்றான். கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு முகத்தை தோள் பக்கம் திருப்பி வைத்தபடி பதிலின்றி நின்றாள்.
“எந்நேரமும் உங்க நினைப்பாவே இருக்கு. எப்பவும் பாத்துக்கிட்டே இருக்கணும் போலிருக்கு. என் சக்திக்கும் அதிகமா உங்களை காதலிக்கிறேன் சாரா. என்னை பாக்க மாட்டேன் பேச மாட்டேன்னு விளையாட்டுக்குக்கூட சொல்லாதீங்க சாரா. வீணா செத்துருவேன்.”
அவள் கைகள் நடுங்க புத்தகம் தொப்பென்று தரையில் விழுந்தது. கைகளைப் பின்னுக்கிழுத்து மேஜையில் ஊன்றிக்கொண்டாள். கண்களைத் திறக்கவில்லை. கீழுதட்டைக் கடித்து உணர்ச்சியை முறிக்கப் போராடினாள். புத்தகத்தை எடுக்கக் குனிந்தபோது பாண்டியின் மனம் மேலும் பேதலித்தது. அவன் பிடரியை ஏதோ சக்தி பிடித்தழுத்தியது. தரையோடு தரையாகி சாராவின் பாதத்தை முத்தமிட்டான். மெத்தென்று குளிர்ச்சியாக இருந்தது. அவள் கால்களில் கிளர்ந்த வாசனை அவனுக்கு மேலும் பித்தேற வைத்தது. உதட்டுச் சூடு காலில் பட்டு உடல் சிலிர்க்கச் சாரா பதறிப் போனாள். பின்னால் விலக முடியவில்லை. மேஜை தடுத்தது. பக்கவாட்டில் நகர்ந்தாள். தள்ளாடினாள். அவன் கால்களைப் பற்றிப் பிடித்திருந்தான். நிதானமாக, காதலோடு முத்தமிடுவதை நிறுத்தவில்லை.
அதிர்ச்சியில் அந்தரத்தில் உறைந்து நின்ற கைகள் இறங்கின. வலது கையால் அவன் தலைமுடியை ஆவேசமாகப் பற்றித் தூக்கினாள். அவன் எழுந்து நின்றதும் அவளை அவளே தடுக்க முடியாமல் தளைகளை அறுத்துப் பாய்ந்து அவனைக் கட்டியணைத்து ஆரத் தழுவினாள். தோள் மாற்றி தோள் மாற்றி முகம் புதைத்து மருகினார்கள். தழுவலின் நடுவே வினோதமான குரல்கள் கசிந்தெழுந்தன. அவள் முலை வழியே அவனும் அவன் நெஞ்சு வழியே அவளும் நுழைந்து வெளியேற முயன்று தழுவித் துவண்டதும் மெல்ல பிரக்ஞை மீண்டவளாக சாரா அவனை உதறி விடுவித்தாள்.
படபடப்பில் முத்து முத்தாக வியர்த்துவிட்டிருந்தது. பாண்டியின் உடல் கனன்றது. தலைமுடி அலங்கோலமாகக் கலைந்திருந்தது. நீளமான முத்தங்களில் அவள் கை விரல்கள் கலைத்துப் போட்டது. இருவரும் பேசாமல், முகம் பார்க்க வெட்கப்பட்டு நாற்காலியிலும் கட்டிலிலும் அமர்ந்திருந்தனர். சாரா உயர்த்தி அணைத்த முழங்கால்களுக்குள் முகம் புதைத்தபடி அமர்ந்திருந்தாள். மூச்சின் சீற்றமொலித்தது. இருவரையுமே சொற்கள் கைவிட்டு விட்டிருந்தன. பதற்றம் தணிந்த பிறகு பாண்டி எழுந்து புத்தகத்தை எடுத்துக்கொண்டு வடக்குக் கதவருகே வந்து நின்று சாராவைப் பார்த்தான். கனவுகளால் சூழப்பட்டவள் போல் கட்டிலில் சமைந்திருந்தாள். “சாரா…”
கொலுசுச் சத்தம் அவனுக்கு அருகே வந்தது. வளையல் சத்தம் கதவைத் திறந்தது. சாரா தெருவை எட்டிப் பார்த்தாள். கதவை மீண்டும் பூட்டிவிட்டு, “கொஞ்சம் பொறுத்துப் போறீங்களா? ஆளா இருக்காங்க” என்று கேட்டாள். தலையாட்டினான்.
நேரம் நெளிந்தது. தேர்ப் பவனியின் திருச்சலனங்கள் விலகி வெகு தொலைவு போய்விட்டிருந்தது. சாரா அறையின் தெற்கு வாசலைத் திறந்து மறைந்தாள். இடையைச் சுற்றி வளைத்துக்கொண்டு விடமாட்டேனென்று நெரித்த அமுத ஸர்ப்பத்தின் மாயத்தில் மெல்ல அந்த அறை பெரும் வனமாகி வந்தது. சற்றைப் பொழுதில் தோட்டம் கொத்துக்கொத்தாக, குலைகுலையாகப் பூத்துச் சொரியும் மணத்தில் கிறங்கிச் சரிந்துவிடுவோம் என்ற பிரமை ஏற்பட்டது. தண்ணீர் சிதறும் ஓசை கேட்டது.
“நீ என்னைக் காதலிக்க வேண்டாம். முத்தம் தர வேண்டாம். காதலிக்கிறேன்னு கூட சொல்ல வேண்டாம். காதலிக்கலைனு சொல்லாம் இருந்தா போதும். நான் காதலிப்பேன் மூச்சு முட்ட முட்ட…”
எண்ணம் தோன்றியதா, மெல்லிய மனக்குரல் பேசியதா தெரியவில்லை. இன்னும் என்னென்னவோ சொற்கள் சாரை சாரையாகக் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தன. பார்க்க முடிந்தது. கேட்க முடியவில்லை. எல்லாமே செல்லாத சொற்கள். நல்ல சொல் ஒன்றே ஒன்றுதானிருந்தது. சாரா. அந்தச் சொல்லும் செல்லாமல் போகும் நாளில் அவன் உயிரோடு இருக்க மாட்டான் என்று உறுதியாக நம்பினான்.
சாரா அறைக்குள் வந்தாள். கட்டிலில் பாண்டி விறைத்துப் போயிருந்தான். அவள் கண்கள் அவன் மேல் ஊர்வதை உணரமுடிந்தது. கொஞ்ச நேரம் அமைதி நிம்மதியளித்தது. பிறகு மயானத் திகிலேற்ற ஆரம்பித்தது. ஒரு சொல்லெடுத்து இந்த அநாதை மௌனத்தை உடைக்க மாட்டாளா என்று எதிர்பார்த்தான். தெருவில் சந்தடி ஓய்வதற்கான காத்திருப்பில் அமைதி ஒரு புழுவாகிக்கொண்டிருக்கிறதா எனத் தோன்றியபோது நிமிர்ந்து பார்த்தான். ‘இப்போதுதான் முதன் முறையாக இவளைப் பார்க்கிறேனோ! புதுப்புது உருவெடுத்துக் கொள்கிறாளோ! அலுக்கவே மாட்டாளோ!’ அவள் மார்புத் திரட்சியில் பார்வை நிலைத்தது. தணிந்தடங்கிப் போயிருந்த அவள் ஸ்பரிசத்தின் இதமும் வெம்மையும் சிலிர்ப்பும் மீண்டும் இரத்தத்தில் பரபரத்தது. கண்களால் கண்களைக் கண்டித்தாள். பார்வை பதறி விலகியதும், புன்னகையால் மன்னித்தாள்.
குளிர்ந்த மிருதுவான பாதங்களுக்குள் நிலவெரிகிறதோ என்று நினைத்தான். விரல்கள் சிரித்தன. ‘அவ்வளவுதானா முத்தங்கள்?’ என்று கேட்பது போலிருந்தது. அவள் கூச்சப்படுகிறாள் போலும். வலது கால் கட்டை விரலை மடித்து தரையை நிமிண்டினாள். ‘அடியில் இரண்டு பூக்கள். அதன் மேல் ஒரு கொடியோ இவள். அதற்கு மேலும் நின்றுகொண்டிருக்க இயலாதவளாக கட்டிலில் அமர்ந்தாள்.
மேஜையிலிருந்த பேப்பரில் வேகத்தோடு எழுதினான். நாற்காலியில்கூட அமர மறந்து எழுதுகிறவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள். அவன் முடித்துவிட்டான் என்று தோன்றியபோது வாங்கக் கை நீட்டினாள். அவன் கவனிக்கவில்லை. படித்துப் பார்க்கும்போதே சொற்களையும் வரிகளையும் மாற்றினான். அதை முழுக்க அடித்துவிட்டு திருத்தமாக மீண்டும் எழுதி முடித்து பேப்பரை மடித்து பழையதைக் கிழித்துக் கசக்கிய போது, அவள் நெருங்கி வந்து தாளைப் பிடுங்கினாள்.
உதட்டில் சுடர்ந்த
உன் உயிரின் இளவெயிலை
உனக்குத் தெரியாமல்
உறிஞ்சி சூரியனானேன்.
தெரிந்ததும் திடுக்கிட்டாய்
வானத்தை நோக்கி நீ
கோபத்தில் எறிந்த கற்கள்
மேகத்தைத் தாண்டியதும்
மின்னிச் சிரித்து
விண்மீன்களாயின.
என்னைக் காண
கிழக்கில் தேடுகின்றன.
அமுதவெளியைப் பருகித் திளைத்து
அம்மாவென உனை அழைக்கின்றன.
தேயாத நிலவாய் நிலைக்குமா
என் அழிவற்ற கனவு?
மீண்டும் பறவைகள் தங்கள் கிளைகளிலிருந்து எழுந்தன. இமைச் சிறகடித்து இதயத்துக்குள் பறந்தன. அதரங்கள் திளைத்தன. தேன் குடித்தது போல் தலைக்கொரு மாயக் கிறக்கமேறிக்கொண்டிருந்தது. சுதாரித்த சாரா அவனிடமிருந்து சட்டென்று விலகி சிறுபொழுது வெட்கத்தோடு வருந்தியவள், தனக்குத்தானே சிரித்துவிட்டு வடக்கு வாசல் கதவை நோக்கி நடந்தாள்.
நாதங்கியை நெகிழ்த்த கை நீட்டியவள் வெடுக்கென்று துடித்தாள். இடையோடு அணைத்து இழுத்தவன் அவள் மல்லிகை மணக்கும் புறங்கழுத்தில் சூடான உதடுகளைப் பதித்தான். கூச்சத்திலும் பயத்திலும் அவள் சற்றே முன் வளைந்து நின்றதால் கூந்தல் கற்றை முன்பக்கம் விழுந்திருந்தது. மல்லிகை வாசமிருந்தது. கழுத்தோர உரோமச் சுருள்களில் முத்தமிட்டான். அவள் உடல் சிலிர்ப்பதை சரும அதிர்வில் உணர்ந்தான். அவனை அது இன்னும் பித்தாக்கியது. கோபம் வருத்தம் எதுவுமில்லாத உணர்ச்சியற்ற குரலில் நிதானமாகச் சொன்னாள், “போதும் விடு.” முத்தமிடுவதும் அவள் பெயரை முனகுவதுமாக அவன் வேகம் கூடிக்கொண்டே போனது. வயிற்றைத் தழுவிய கைகள் மெல்ல மெல்ல மேலெழுந்தபோது சாரா அவன் கைகளைப் பலம் கொண்ட மட்டும் தடுத்துக் கீழிழுத்துப் பார்த்தாள். முடியாமல், “ச்சோ… கடவுளே…” என்றாள். அவனே அறியாத வலு வந்து அவன் உடலில் கூடியிருந்தது. மணிக்கட்டில் அமிலம் கொட்டியது போல் ஒரு சொட்டு விழுந்தது. கண்ணீர்த்துளி. திடுக்கிட்டான். தளர்ந்தான். காதுக்கருகில் வாய் வைத்துக் கேட்டான்.
“அழுறியா?”
“ம்… ”
“ஏன்?”
“தெரியலை.”
மௌனத் துளிகள் சப்தமின்றிச் சொட்டின.
“என்ன எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தே?”
“மன்னிக்க.”
அவன் அவளை விட்டுத் தெறித்தது போல் விலகி கட்டிலில் வந்து முகம் பொத்தி அமர்ந்தான். மூச்சுக்காற்றின் வெப்பம் உள்ளங்கையைத் துளைத்தது. திடீரென்று பற்றிய அச்சம் உடலை நடுங்க வைத்தது. மழைக்கத் தலைப்பட்ட வானமாக மனம் முடிவற்று விரிந்தது. மேகத் தீவுகள் மோதி ஓலமிட்டன. எங்கெங்கோ மின்னி எங்கோ மழையடித்தது. இடிகள் மட்டும் /அவனுக்குள் விழுந்த வண்ணமிருந்தன. கனவுத் தனிமை கூடிக் கூடி வந்தது. தாங்க முடியாமல் தலை நிமிர்த்தினான். கண்ணீரைத் துடைக்க வசதியாகத் தாவணி விளிம்பை வாயில் கடித்துப் பிடித்திருந்தாள்.
சற்று நேரத்துக்குப் பின் தயக்கத்துடன் அணுக்கமான தொனியில் அழைத்தான்.
“சாரா… ”
சோப்பு நீர்க்குமிழாக அவன் குரல் கனமிழந்து அவன் கண் முன்னே மிதந்து எழுந்து சுவரில் மோதியுடைந்தது. கட்டிலிலிருந்து எழுந்து நின்றான். கை நீட்டி சுவர் தொட்டு விளக்கை அணைத்தான்.
எதிரே நிழலாகி நின்றிருந்தாள். திக்கித் திணறும் குரலில் மீண்டும் அவள் பெயர் மிதந்தது. கனவில் நடந்து செல்வதாக ஒவ்வொரு அடியிலும் மயிர்ச்கூச்செறிந்தது. அருகில் சென்று நிழலையள்ளக் கை நீட்டினான். நிழல் ததும்பியது. முகத்தை ஏந்திப் பார்த்தாள். கண்கள் மூடியிருந்தன. கண்களில் முத்தமிட்டான். இமைகள் விரிந்தன. நீருக்கடியில் மின்னும் வைரமாக ஒரு பிரியம் ஒளிர்ந்தது. நீரிலிட்ட கல்லாக நழுவி நழுவி இலக்கின்றிப் போய் எங்கென்று தெரியாத அடிப்பரப்பில் அணைந்தான். இனி அவன் கல்லாக காலகாலத்துக்கும் அங்கேதான் கிடக்க வேண்டுமோ! சாராவின் கைகள் ஆரத் தழுவின. கல் மீனாகியது.
நீந்தி நீந்தியே உயிரை மாய்த்துக்கொள்ளும் வரத்தை விழுங்கிய மீன்களென இரண்டு உயிர்கள் கடலின் அடியாழத்தைத் துளைந்து சிலும்பிய வண்ணம் தொலைந்து போயின.