Editor’s Picks

0 comment

மகாத்மா காந்தி: இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி (1940), ஏ.கே.செட்டியார்

பல நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த ஆவணப்படம். காந்திய இலக்கியச் சங்கத்தால் தற்போது வெளியிடப்பட்டு குறுந்தகடு வடிவில் விற்பனையில் உள்ளது. கிட்டத்தட்ட நூறு ஒளிப்பதிவாளர்களால் பல்வேறு சமயங்களில் வெவ்வேறு நாடுகளில் படமாக்கப்பட்ட காந்தியின் வாழ்வை நமது வரலாற்று அக்கறையின்மையினால் பாதுகாக்க மறந்து தொலைத்துவிட்டோம். எஞ்சியதை கண்டடைந்து மீட்கப்பட்டதைத் தொகுத்து காட்சிப் பிரதியை மேம்படுத்தி இருக்கிறார்கள்.

காந்தி குறித்து ஏராளமாக வாசித்திருந்தாலும் அவரை மையமாகவோ துணைக் கதாபாத்திரமாகவோ கொண்டு எடுக்கப்பட்ட படங்களை முன்னமே பார்த்திருந்தாலும் இன்னமும் தெரிந்துகொள்ள ஏதேனும் ஒன்று மிச்சம் இருக்கும் எனத் தோன்றியது. நாம் சலிக்கச் சலிக்கப் பேசிவிட்ட காந்தியின் வாழ்வுதான் எனினும் காட்சிகளின் உடனடித் தாக்கம் களிப்பூட்டுகிறது. பின்னணியில் எந்நேரமும் ஒலித்துக்கொண்டிருக்கும் விளக்கங்கள் அநாவசியம் எனும் அளவிற்குக் காட்சித் துணுக்குகளே காந்தியின் செய்தியைத் துல்லியமாக அறிவித்துவிடுகின்றன. பரிசுத்தமான புன்னகையைப் பேரொளியாக உருமாற்றும் காந்தியின் கனிவான முகத்தில் தொடங்கி உச்சக்கட்ட சோர்வில் விழுந்துகொண்டிருக்கும் இறுதிக் காலத்திலும் அணையாத சிற்றகல் விளக்கை ஏந்தி நிற்கும் வேதனை அப்பிய முகம் வரை அணுக்கமாகப் பின்தொடர்கிறது இந்த ஆவணப்படம்.

ஏராளமான படச்சுருள்களை இழந்துவிட்ட போதிலும் காட்சிக் கோர்வைகளுக்கு நடுவே துண்டு விழாமல் பார்த்துக்கொண்டதே சாதனைதான். மிக எளிமையான, மேலோட்டமான தகவல்களைக் கொண்ட காட்சிகள் என்று நம்பி ஏமாந்துவிடக்கூடிய இடங்களில் எப்போதும் மறக்கக் கூடாத வரலாறு இயல்பாக மின்னிக் கிடந்தது. உண்மையைத் தன்னுடைய துணையாக இழுத்துக்கொண்டு பயணிக்கும் அலைச்சலில் அதன் பிரம்மாண்டத்தைக் காந்தி முழுமையாய் அறிந்துகொண்டு விட்டாரா என்ற பதில் வேண்டாத மனசைப் பிசையும் கேள்வி இந்த முறையும் எழுந்து அச்சுறுத்தியது. எப்போதும் அடக்கி வைக்கப்பட்ட மனசின் விரட்டலில் செயல்பட்டவர் சமூக வாழ்வில் ஒரு தவறான அசைவைக்கூட முன்னெடுக்கவில்லை என்பதே பேராச்சரியம்தான். கூடவே இப்போது எப்படியெல்லாம் வீணாய்ப் போய்க்கொண்டிருக்கிறோம் எனும் கவலையும் முகத்தில் சொடுக்கியது.

தத்தம் போக்கில் பெருகி வழியும் வெவ்வேறு மனச்சாய்வுகளும் பலவீனங்களும் கொண்ட இலட்சோபலட்சம் மனிதர்களைத் தன்னுடைய ஆன்ம பலத்தால் கட்டுப்படுத்தினார் என்றால் காந்தியைப் பார்த்து மட்டுமே நம்ப முடியும். எண்ணற்ற சந்தேகங்கள், குழப்பங்கள், பசப்பல்கள் வழியாகக் கும்பலில் ஊடுருவி அவரவர் விருப்பப்படி பாய்ந்தோடச் செய்யும் குழப்பச் சுழியில் சிக்காமல் மானுடரைக் கரை சேர்க்கும் துணிவும் ஆற்றலும் சாமானியர்க்கு உரிய காரியமல்ல. அதை ஈடேற்றுவதற்காக ஒவ்வொரு கணமும் காந்திக்குத் தேவைப்பட்டிருக்கும் விழிப்புணர்ச்சியைப் பற்றி நினைத்துப் பார்த்தாலே மனநோய் வந்துவிடும் போலிருக்கிறது. காந்திக்குள் நேரத்தைப் பற்றிய கவனம் எந்நேரமும் விழிப்புடன் இருந்திருக்கிறது. இரயிலில் பயணிக்கும் போதோ உடல் இளைத்து களைத்துச் சுருண்டு கிடக்கும் போதோகூட என்னமோ எழுதிக்கொண்டே இருக்கிறார். அடுத்து நடக்க வேண்டிய காரியங்கள் குறித்து உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார். படத்தில் காட்டுகிறார்கள்.

அது காங்கிரஸ் மாநாட்டின் எத்தனையாவது ஆண்டு விழா என்பதைத் தெரிவிக்கும் வகையில் மாட்டு வண்டிகள் அல்லது யானைகளின் எண்ணிக்கையை அதற்கேற்றாற் போல அதிகரிப்பது, உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்திற்குப் பிறகு பிரிட்டிஷ் வைஸ்ராயை சந்திக்கச் செல்லும் காந்தி, அங்கு தனக்கு அளிக்கப்படும் தேநீரில், தான் காய்ச்சிய உப்பின் சிறு துகளைக் கலந்து குடிப்பது போன்ற அட்டகாசமான தகவல்களுக்கும் பஞ்சமில்லை. குசும்புக்காரரையா நீர்! அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கி ஹரிஜன் இயக்கங்களை முன்னெடுக்கும் முடிவை எடுக்கிறார். நாடு முழுவதையும் சுற்றி வருகிறார். அவர்களது வாழ்வு மேம்பாட்டிற்காக கையேந்தித் திரியும் கம்பீர காந்தி குறித்து பெருமிதம் கொள்வதன்றி இரண்டு விதமான அபிப்ராயங்கள் இருக்க முடியாது. தன்னையே மோதி நொறுக்கிச் சீராக்கி முன்னகரும் பக்குவம் எக்காலத்திலும் வழிபடத் தகுந்ததுதான்.

தான் படமெடுக்கப்படுகிறோம் என்பதை அறிந்து மெல்லிய கூச்சத்துடன் கேமராவை நோக்கிச் சிரிக்க முயலும் நேரு நம்மையும் புன்னகைக்க வைக்கிறார். காந்தியின் தாக்கத்தினால் காங்கிரஸில் பங்கெடுத்த திரளான பெண்களின் பங்களிப்பு, ஐரோப்பியப் பயணம், ஜின்னாவுடனான முரண்பாடு போன்றவற்றை விவரித்தபடியே நகரும் படத்தில் நவகாளி யாத்திரை பற்றி ஓரிரு வரிகளில் கடந்துவிடுகிறார்கள். அம்பேத்கர், கஸ்தூர்பா காந்தி எனப் பலரையும் ஒன்றிரண்டு துணுக்குகளில் காட்டி ஒப்பேற்றி இருக்கிறார்கள். படச்சசுருள்கள் கிடைத்திருக்காது என ஊகிக்கிறேன். காந்தியின் இறுதி ஊர்வலத்தின் போது அதுவரை அவரை நேரில் கண்டிராத பெண்கள் கதறி அழுவதைப் பார்க்கையில் எங்கோ செகந்திராபாத்தில் ‘காந்தீ! காந்தீ!’ என அரற்றிய சந்திரசேகரன் நினைவுக்கு வருகிறான். (பதினெட்டாவது அட்சக்கோடு) இது போல இதுகாறும் வாசித்தவற்றை இந்தப் படத்துடன் தொடர்புறுத்தி நினைத்துப் பார்ப்பது அலாதியான அனுபவமாக இருந்தது. அவரவர்க்கு அவரவர் அனுபவங்கள் துணை நிற்கட்டும்.

இந்தப் படம் எதைக் களமாக எடுத்துக்கொண்டதோ அதைப் பிசிறின்றிப் பார்வையாளர்களுக்குக் கடத்திவிடுகிறது. பரவசத்துடனேயே பார்த்தேன் என்பதைத் தனியாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

*

Red River (1948), Howard Hawks

ரெட் ரிவர் படத்தின் கதையிலுள்ள சாகச அம்சம் மிகவும் பிடித்தமானது. வெறும் இரண்டு மாடுகளுடன் தாமஸ் டன்ஸன் என்பவன் டெக்ஸாஸில் குடியேறுகிறான். பதினான்கு ஆண்டுகளில் அமெரிக்காவின் மிகப்பெரிய பண்ணையாக அது உருவெடுக்கிறது. அப்போது ஆபிரகாம் லிங்கன் ஆட்சியில் உள்நாட்டுப் போர் மூண்ட சமயம். கான்ஃபிடரேட் மாகாணங்கள் தோற்றுவிடும் என்பது உறுதியாகத் தெரிகிறது. அதனால் தனது ஒட்டுமொத்த வாழ்நாள் உழைப்பின் பலனை ஈட்டும் பொருட்டு டெக்ஸாஸில் இருந்து மிசௌரிக்குப் புறப்பட்டுச் செல்ல முடிவெடுக்கிறான்.

பத்தாயிரம் மாடுகளுடன் ஆயிரம் மைல்களைக் கடந்தால்தான் அவற்றை நல்ல விலைக்கு விற்க முடியும் என்கிற நிலை. தகிக்கும் கோடை காலத்தில் ஓய்வின்றிப் பயணித்தால் நூறு நாட்களுக்குள் மிசௌரியை அடைந்துவிடலாம் எனக் கணக்கிடுகிறார்கள். அனலடிக்கும் பாலையையும் குறைவான நீர்நிலைகள் கொண்ட மலைகளையும் அத்தனை ஆயிரம் மாடுகளுடன் கடக்க வேண்டும். மகத்தான காரியத்தில் ஈடுபட எண்ணியதும் எட்டுத் திக்கிலிருந்தும் பலநூறு பிரச்சினைகள் வரிசைகட்டி நிற்கின்றன. நூறு நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், கொள்ளையர்களின் தொல்லையைச் சமாளிக்க ஆயுதங்கள், செவ்விந்தியர்களுடனான பகை, குழுச் சண்டைகள், உட்பூசல்கள், மாடுகளுக்கான மேய்ச்சல் வழித்தடங்கள்…

ஆனால், டன்ஸனின் நெஞ்சுரத்தின் முன் அதெல்லாம் ஒன்றுமே இல்லை. இந்தக் காட்சியைப் பாருங்கள். நாள் முழுக்க நடந்த களைப்பில் மாடுகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன. உச்சபட்ச நிலைகொள்ளாமையின் தவிப்பில் அவை தடுமாறி நிற்கிற கணங்கள். அந்த நேரத்தில் அவற்றின் மீதான கட்டுப்பாடு என்பது அறுந்துகொண்டிருக்கும் நூலிழை. அவற்றின் சமநிலையைக் குலைத்து வெறிகொள்ளச் செய்ய சிறிய சப்தமே போதும். அத்தகைய எச்சரிக்கையுணர்வுடன் எல்லோரும் விழித்திருக்க டன்ஸன் குழுவிலுள்ள ஒருவனின் அசட்டுத்தனத்தால் அந்த விபரீதம் நிகழ்ந்துவிடுகிறது. மாடுகள் மூர்க்கமடைகின்றன. தறிகெட்டுப் பாய்கின்றன. இனி எதிர்ப்படுகிற அனைத்தையும் நிர்மூலமாக்காமல் அவை ஓயப்போவதில்லை. Stampede!

இக்காட்சியை முதல்முறை பார்த்த போது மிகுந்த உணர்வெழுச்சிக்குள்ளானேன். வியந்து வியந்து மீண்டும் மீண்டும் இக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பலநூறு எருதுகள் பிசாசுத்தனத்துடன் திமிறிப் பாய்கிற இதே போன்றதொரு காட்சியை ஜான் ஃபோர்டும் எடுத்திருக்கிறார். படத்தின் பெயர் How the west was won.

*

Monsieur Lazhar (2011), Philippe Falardeau

ஆசிரிய மாணவ உறவை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் ஒரே வகையான வார்ப்புரு உடையவை. கல்லூரி அல்லது பள்ளிக்குப் புதிதாக பணியாற்ற வரும் ஆசிரியர் அங்கு ஏற்கனவே நிலவுகின்ற சீர்குலைவுகளைச் சீராக்கி ஒன்றிரண்டு ‘வழிதவறிய’ மாணவர்களைத் திருத்தி, இலட்சியக் கனவை விதைக்கும் உணர்ச்சிகர உரை நிகழ்த்தி, பலருக்கு உதாரணப் புருஷராகி, நடப்பாண்டு முடிவடையும் போது விடைபெற்றுக்கொண்டு அடுத்தக்கட்டப் புரட்சி நகர்வுக்குத் தயாராவார். படத்தின் இறுதியில் எல்லோரும் கை கட்டி கண்களில் சோகம் ததும்ப நிற்கிற கூட்டுப் புகைப்படமும் மறக்காமல் எடுத்துக்கொள்ளப்படும். அந்த ஆசிரியர் ஓர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவராகவோ விரைவில் சாகப் போகிறவராகவோ இருந்தால் இன்னும் விசேஷம். “To Sir with love” காலத்திலிருந்தே இப்படித்தான். ஆசிரியை எனில் வேறொரு டெம்ப்ளேட் உண்டு.

இந்தத் திரைப்படத்தின் ஆசிரியக் கதாபாத்திரம் ஓர் அல்ஜீரிய அகதி (லஸார்). ஆனால், தலைமைப் பண்புகளும் மேய்ப்பன் ஸ்தானமும் அமையப்பெற்ற ‘ஹீரோ’ அல்ல. தடுமாற்றங்களையும் தினசரி பிழைப்பிற்குத் தேவைப்படும் முகமூடிகளையும் பழக்கிக்கொண்டு வாழ்வை அனுசரித்துச் செல்லும் அன்றாடன். தனது பொய்களுக்கும் நடிப்புக்குமான வலுவான சமாதானமும்கூட அவனிடம் உண்டு. அதனாலேயே பொய்யுரைத்த மாணவனின் குற்றவுணர்ச்சியுடன் தன்னைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிகிறது.

கைவிடப்பட்ட மனிதர்களின் ஆற்றாமையைத் தேற்றிச் சாய்வுகொள்ள அனுமதிக்கும் வரமாக பொய்கள் இருக்கும் பட்சத்தில் அதுகாறும் பயின்று வந்த அர்த்தங்கள் குலைத்து அடுக்கப்படுகின்றன. பொய்க்கும் உண்மைக்குமான தீர்மானமான வரையறைகள் நெகிழ்வு கொள்கின்றன.

லஸாரின் கோபமெல்லாம் வகுப்பறையில் தூக்கு மாட்டிக்கொண்டு நீங்காத வடுவாக பிள்ளைகள் மனதில் உறைந்துவிட்ட ஆசிரியை மீதுதான். பொய்யினால் ஏற்பட்ட விளைவாயினும் அவனுக்கு அது குறித்த குற்றச்சாட்டுகள் ஏதுமில்லை. ஏனெனில் அதிகாரம் இருக்குமிடத்தில் உண்மைகள் பிறழ்வதைத் தனது சொந்த அனுபவத்தில் கண்டிருக்கிறான். மரணத்தின் நித்திய உண்மையைக் காட்டிலும் ஓங்கி நிலைபெறும் வன்முறையின் வல்லமையை அறிந்திருக்கிறான்.

இந்தக் கதைக்களத்தில் இதைக் கொண்டு வந்ததே ஒரு சாதனை. சம்பிரதாயப் போக்குகளை இயன்றவரை தவிர்த்து அதன் சாத்தியக்கூறுகளை விரிவாக்கியுள்ள படம். இந்த வகைமையில் (ஆசிரிய – மாணவ உறவு) இதற்கு நிகரான இன்னொரு திரைப்படம் The Class (2008) மட்டுமே.

*

Season of the Devil (2019), Lav Diaz

நவீன ரகத் துப்பாக்கிகளுடன் நின்றிருக்கும் அமைப்புடன் முட்டி மோதி உரிமை வேண்டிப் போராடுபவர்களின் அவலங்களைக் காட்டிய எத்தனையோ திரைப்படங்கள் உண்டு. இது போன்ற கதையைப் படமாக்க எடுத்துக்கொள்பவர்கள் ஒரு கிராமத்தைக் களமாகக் கொண்டு அரசின்மைவாதத்திற்கு ஓர் உலகளாவிய தன்மையை அளிப்பார்கள். லாவ் டியாஸ் விதிவிலக்கல்ல. ஆனால் இப்போது இன்னும் விசேஷம். அக்கிரமங்களைக் கண்டு கையறு நிலையில் தவிக்கும் ஒரு கலைஞனின் சீற்றத்தையும் உத்வேகத்தையும் முழுமையாக உணர்ந்தேன். தனது முந்தைய படங்களைப் போல எதையும் உருவகப்படுத்தி சூசமாக உணர்த்துவதைக் கைவிட்டு இந்த முறை நேரடியாகவே அரசின் வன்முறையை ஆவேசத்துடன் சாடியிருக்கிறார்.

டியாஸின் பாணி என்பது கதையில் அல்லது வாழ்வில் நிகழக்கூடிய முக்கியமான தருணங்களை வெட்டித் தொகுத்து அவற்றில் மேலதிகக் கவனம் குவித்துப் படமாக்குவதல்ல. முக்கியமோ இல்லையோ செக்குமாடு அசைபோடுகிற வாழ்க்கை வெளிப்பட வேண்டுமென நினைக்கிறார். ஒரு நாவல் போல. அதனால் இயல்பாகவே அவரது படங்களில் பல்குரல் தன்மை உருவாகிவிடுகிறது. ஆனால் அவை இயக்குநரின் சுய விருப்பு வெறுப்புக்கு உட்பட்டே அமைந்திருக்கின்றன. கதாபாத்திரங்களின் மன அமைப்பு வெளிப்படுவதற்குப் பதிலாகப் பல்குரல் தன்மையானது ஒரே நபரின் மிமிக்ரி போல பாவ்லா ஆகிவிடுகிறது. டியாஸின் வீழ்ச்சி இந்தச் சிக்கலில் இருந்தே தொடங்குகிறது.

கதை எழுபதுகளின் இறுதியில் நிகழ்கிறது. படத்தில் வரும் சர்வாதிகாரிக்கு முன்னும் பின்னுமாக இரட்டை முகங்கள். அவன் ஆற்றும் வீராவேசச் சொற்பொழிவுகளுக்கு மட்டும் சப்-டைட்டில் இல்லை என்பதைப் பார்வையாளர்கள் கவனிக்கலாம். முகங்கள், நாடுகள், காலங்கள் மாறினாலும் காட்சிகள் ஒன்றுதானே! கையுயர்த்தி முஷ்டி மடக்கி நெஞ்சுருகி கண்ணீர் துடைப்பது வரை அதே கபட நாடகம், அதே கட்டுக் கதைகள். ஹிட்லரா? முசோலினியா? ஸ்டாலினா? எவராயினும் கச்சிதமாகப் பொருந்திப் போகிற பிம்பத்திற்கு விளக்க உரை அவசியமில்லை என முடிவெடுத்திருக்கும் இயக்குநர் அதனை மிகச் சரியாகவே கையாண்டிருக்கிறார். ஒரே குறை, படத்தை மியூசிக்கலாக எடுத்திருக்க வேண்டாம் என்பதுதான். உணர்ச்சிகளின் வீரியத்தை ஒத்திசைவற்ற பாடல்கள் குறைத்து விடுகின்றன. பொறுமையைச் சோதிக்கின்றன.

நான்கு மணி நேரப் படத்தில் இரண்டு முறை துப்பாக்கி வெடித்திருக்கும். ஆனால் கருத்தியல் வன்முறையின் வீச்சைப் பதைக்கப் பதைக்கச் சொல்லியிருக்கிறார்கள். அதிகாரத்துடன் இணையும் வரை நாடும் மக்களும் தனித்தனி. அதிகாரத்தை மண்டியிட்டுப் பெறும் இடத்தில் இருந்தால் மட்டுமே நீங்கள் நாட்டின் வரையறைக்குள் அனுமதிக்கப்படுவீர்கள். மற்றபடி, ஊன்றுகோல் உதவியுடன் நீதி கேட்டு வந்தாலும் நாட்டிற்கும் அதன் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் ஓர் அச்சுறுத்தல். நாசக்கார சக்தி. தஞ்சம் தேடிக் காட்டுக்குப் போக வேண்டும். வீதிக்கு வந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

படத்தின் காட்சியமைப்பைப் பற்றி விரிவாகவே எழுத வேண்டும். தெருவோ ஒற்றை அறையோ அதன் எதிர்க்கோணங்களைச் சட்டகங்களுக்குள் அனுமதித்தவாறே அரை வட்டப் பரிமாணத்தில் மூன்று திசைகளைக் காட்டிவிடுகிறார்கள். கறுப்பு வெள்ளையில் வெளிச்சங்களை மட்டுப்படுத்தியிருக்கும் விதமும் அபாரமானது. மங்கிய வெளிச்சத்தில் நிழல்கள் பூதாகாரமாகத் தெரிகின்றன. நடமாடும் பிணங்களை நிழற்பேய்கள் உண்ணட்டும்.