உயிர்த்தெழுதலின் சங்கீதங்கள்: ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்

0 comment

‘உங்கள் வாழ்வை எதிர்கொள்வதற்கு இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, எதுவுமே பொருட்டில்லை என்பது போல கடந்து செல்வது. மற்றது, ஒவ்வொன்றுமே அதிசயம் என்பது போல வியந்து பார்ப்பது.’

-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

மொழியில்லாமல் மற்ற விலங்குகளைப் போல உள்ளுணர்வின் துணையோடு சைகைகளால் மாத்திரம் பேசிக்கொண்டு மனிதர்கள் வாழ்ந்த காலமும் இருந்திருக்கும். மகிழ்ச்சி, அச்சம், வலி , வியப்பு போன்ற உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் இருந்துதான், அவற்றைச் சக மனிதர்களோடு பகிர்ந்துகொள்ளும் பொருட்டு மொழி பிறந்திருக்க வேண்டும். எல்லா மொழிகளிலுமே அவற்றின் ஆதி கவிதைகள் எவையெனத் தேடிப் போனால், அவை முழுவதும் தூய உணர்வுகளின் சொற்பெருக்குகளாகவே இருப்பதைக் காணலாம். பரிணாம வளர்ச்சியின் விளைவாக நமது வாழ்க்கையில் உணர்ச்சிகள் பெற்றிருந்த இடத்தை அறிவு பதிலீடு செய்யத் தொடங்கிவிட்டது. கலை இலக்கியங்களை விடவும் அறிவியல் தொழில்நுட்பம் இன்று முதன்மையான தேவையாக மாறிவிட்டிருக்கிறது. இலக்கியங்களிலுமே தர்க்கத்தின் நிழல் நீக்கமற எங்கும் கவிந்து இருக்க, உணர்வுகளின் செறிவும் கற்பனையின் ஒளியும் மங்கித் தெரிவதைக் காணலாம்.

சென்ற நூற்றாண்டில், நீட்சே கடவுளின் மரணத்தை அறிவித்ததைத் தொடர்ந்து தத்துவப் புலத்தைக் கடந்து, பிற துறைகளிலும் இதுபோன்ற அதிரடியான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகத் தொடங்கின. இலக்கியத்திலும் ‘எழுத்தாளனின் மரணம்’ என்கிற ரோலண்ட் பார்தெஸின் அறிவிப்பில் தொடங்கி பல்வேறு நல்லடக்கங்கள் செய்யப்பட்டன.

தமிழைப் பொறுத்தவரையிலும் ‘எதார்த்தவாதம் செத்துப் போய்விட்டது’ என்கிற அமைப்பியல்வாதிகளின் கூற்று எண்பதுகளின் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதை வாசகர்களைக் காட்டிலும் எழுத்தாளர்கள் சிலர்தான் அதிகமாக நம்பத் தலைப்பட்டனர். இன்று இவ்வளவு கால இடைவெளிக்குப் பிறகு திரும்பிப் பார்க்கையில், தமிழில் செவ்வியல் மதிப்பை அடைந்திருக்கும் உரைநடைப் படைப்புகள் பலவும் எதார்த்தவாத ஆக்கங்களே என்பதைக் காணலாம். அதைப் போலவே கவிதையிலும் கற்பனாவாதம் என்பது காலாவதியாகிப் போன வகைமை என்பதாக ஒரு பிரமை தமிழில் எழுப்பப்பட்டிருந்தது. நவீனத்துவத்தின் அபரிமிதமான தாக்கம் அதற்கு முதன்மையான காரணம் என்றாலும், ரொமாண்டிசிஸம் என்கிற ஆங்கில வார்த்தையால் சுட்டப் பெறுகிற இலக்கியப் போக்கை ஏதோ ஆண்- பெண் ஈர்ப்பு சார்ந்த விஷயம் என்பதாக மட்டும் குறுக்கிப் புரிந்துகொண்டதும், நாம் அப்போக்கினை அதிகம் கையாளாமல் புறக்கணித்தற்கு மற்றொரு காரணமாகும் என்று தோன்றுகிறது.

மாறாக இவ்வாழ்வின் தத்துவார்த்தமான வெறுமை அல்லது அபத்தம் இவற்றில் இருந்து தப்பி ஒரு பெரும் கனவை வரித்துக்கொள்ளவும், அதைக்கொண்டு இப்பேரண்டம் முழுவதையும் தழுவிக்கொள்ளும் முனைப்பைப் பெருக்கிக் கொள்ளவும், கற்பனாவாதத்தைக் காட்டிலும் உதவக்கூடிய உபாயம் வேறொன்றில்லை. பிண்டத்தில் அண்டத்தைத் தரிசிக்கும் கலையாக கவிதையை அது மாற்றிவிடுகிறது.

தமிழில் மகாகவி என்று அறியப்படும் பாரதியின் கவிதைகள் பெரிதும் இத்தன்மைக்குள்ளாகவே அடங்கும். நவீன கவிதையில் தேவதேவனை இவ்வாறான வகைமைக்கு முதன்மையான உதாரணமாகச் சுட்டலாம். அதன் பிறகு பெரும் வீச்சுடன் இத்தன்மையிலான கவிதைகளை எழுதிப் பார்த்தவர்களாக யூமா வாசுகி, பிரான்சிஸ் கிருபா இருவரையும்தான் கூற வேண்டும். தொடக்க காலத்தில் பிரான்சிஸின் கவிதைகள் பிரசுரமாக யூமா பெரிதும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு வகையில் கிருபாவை அவர் தன் சக பயணியாக முன்னுணர்ந்து இருக்கிறார் என்பதே அதற்குக் காரணம்.

பிரசுரமாகத் தொடங்கிய  குறுகிய காலத்திற்குள்ளாகவே 1) மெசியாவின் காயங்கள், 2) வலியோடு முறியும் மின்னல், 3) நிழலின்றி எதுமற்றவன், 4) மல்லிகைக் கிழமைகள், 5) ஏழுவால் நட்சத்திரம், 6) சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம் என ஆறு தொகுப்புகளில் அடங்கும், சற்றேறக் குறைய ஐநூறுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ள பிரான்சிஸ் கிருபா, இத்தலைமுறையின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவர். இவரது கவிதைகளில் தென்படும் சொல்லாட்சிகளும் கற்பனை விரிவும் அபாரமானவை. பெருகிடும் உணர்ச்சி வேகத்தினால் ஒரு கணம் துள்ளவும் மறுகணம் துவளவும் செய்யும் இவருடைய வரிகள், சிறிதும் பெரிதுமாய் திரும்பத் திரும்ப வந்து கரையை மோதிச் சிதறுண்டுபோகும் கடல் அலைகளை ஒத்தவை. வாசிப்பவர்களை முதல் பார்வையிலேயே வசியம் செய்வதும் அவ்வுணர்வுகளின் ஈரம்தான்.

எதிர்பார்ப்புகளுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் தினப்படி வாழ்க்கை அதற்கேயுரிய சிரமங்களுடனும் சிராய்ப்புகளுடனும் நகர நேர்ந்த போதிலும் இவர் கவிதைகள் வாழ்வின் அபத்தத்தையோ அர்த்தமின்மைகளையோ பட்டியலிடுவதில்லை. மாறாக அவற்றினூடாக ஒரு நம்பிக்கையை, அர்த்தத்தை உருவாக்கிக்கொள்வதுதான் கவித்துவம் என்பதை உணர்ந்தவராகவே இவர் உள்ளார்.

“வாழ்வு முடிவற்றதொரு

முத்தமென உணர்ந்த கணமே

என்னிதயம் விண்மீனாயிற்று

துக்கங்களுக்கு மேலே

துயரங்களுக்கப்பால்

தோல்விகளற்ற நாள் முடிவில்

உறக்கமற்ற இரவுகளுக்கு நேர்துணையாக

அது அடர்கிறது” (வலியோடு முறியும் மின்னல்)

நம்பிக்கையின் இம்மெல்லிய, ஆனால், உறுதியான வெளிச்சத்தைக் கொண்டே நிராசைகளின் மொத்த இருளையும் கடந்து மேலெழுந்து வருகின்றன இவருடைய கவிதை வரிகள்.

படைப்பிற்கான விஷயம் என்று தனியே எதுவுமில்லை. கால, இட வரையறைகளுக்கு ஓரளவு உட்பட்டதாய் படைப்பவனின் மனம் குவியும் மையமே படைப்பின் கச்சாப் பொருளாகிறது. அவ்வகையில் சமூகத் தனியன் ஒருவனின் துன்புறும் மனதை, உடலின் அலைக்கழிப்பை எழுத முயலும் கிருபாவின் இக்கவிதைகளில் பெண்மையின் பிரகாசத்தைக் கண்ட மலைப்பும், அதன் மீதான கட்டற்ற ஈர்ப்பும் ஆராதனையும் மிகவும் அழுத்தமாக ஒலிக்கின்றன.

“பெண்ணைக் கண்டு

பேரிரைச்சலிடுகிறாயே மனமே…

பெண் யார்?

பெற்றுக்கொண்டால் மகள்

பெறாத வரையில்

பிரகாசமான இருள்

வேறொன்றுமில்லை” (வலியோடு முறியும் மின்னல்)

அறுதியிட்டு சுலபமாகச் சொல்லிவிட்டாலும் இவருடைய கவிதைகளில் செம்பாகமும் நாம் காண்பது அவ்விருளின் பிரகாசத்தைச் சித்தரிக்க முயலும் பித்துமொழிகளையே.

“திகைத்துப் படர்ந்த முகத்தின் அழகு

இன்னும் திளைத்து உயிரில் செருக

உன்னை வளைத்துப் பின்னி வேருருவ

என்னை இழுத்து வரும் தாவரம் நான்.” (மெசியாவின் காயங்கள்)

“சின்னப்பிள்ளையில் இட்டதாலோ என்னவோ

உன் பெயர் இன்னும்

மழலையாகவே இருக்கிறது.” (வலியோடு முறியும் மின்னல்)

“சுற்றிக் களைத்து

சும்மா இருக்க

பூமிக்குத் தோன்றும் போது

மற்றொரு முத்தம் வெடித்து

நான்கு உதடுகளாய் சிதறும்

அப்போது தொனிக்கும்

ஒரு அற்புத விம்மலில்

உன் மின்னல்கள் திகைக்கும்

மேலும் மேகங்கள் பூக்களை

இன்னும் ஆழமாய் புகைக்கும்.” (ஏழுவால் நட்சத்திரம்)

சொற்சிக்கனத்தையும் இறுக்கமான வடிவத்தையும் வலியுறுத்தும் மரபான நவீனத்துவப் பார்வை இத்தகைய நெகிழ்வான வெளிப்பாட்டை, உணர்வுகளின் தளும்பலை, சமநிலையின்மையை பலவீனமான ஒன்றாகவே கருதும் என்றாலும், இத்தகைய வரையறைகளை ஏதோ ஒருவகையில் மீறும் விதமாகவே இன்று கவிதைகள் எழுதப்படுகின்றன. தவிர, கவிதைகளுக்கான தொனியே இந்த உணர்ச்சி வேகத்தினின்றும் பிறப்பதுதான். இதை நாம் சரியாக அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் பட்சத்தில் மட்டுமே இக்கவிதைகளின் சாரமான அனுபவத்தை முழுமையாகப் பகிர்ந்துகொள்ள இயலும்.

மிகு கற்பனை என்பதும் மனதின் இயல்பு என்பதால் அதுவும் ஒருவகை யதார்த்தமாகவே படைப்பில் அனுமதிக்கப்படுகிறது. இத்தன்மையிலான வர்ணனைகளை மிகச் சாதாரணமாகத் தன் கவிதைகளில் கிருபா பயன்படுத்துகிறார். பிரிவாற்றாமையின் தருணங்களில் மனம் கற்பித்துக்கொள்ளும் வேதனையை, பொறுக்கவியலா வலியை, மறக்கும் பொருட்டு உடலை வருத்திக்கொள்ளும் முனைப்பு ஒருவருள் உருவாவதுண்டு. பிரத்யட்சயமாக உணரப்படும் உடலின் வலியை ஏதோ ஒருவிதத்தில் மனம் உணரும் துன்பத்தை இல்லாமல் ஆக்குகிறது, தற்காலிகமாகவேனும். அவ்வாறான நுட்பமானதொரு கணத்தைத் தொட்டு மீளுகின்றன பின்வரும் வரிகள்.

“நமக்கிடையில் படர்ந்து நிற்பது

பால்வீதியின் கிரக இடைவெளியே

என்ற நம்பிக்கையோடுதான்

உன்னைத் தொட்டுணரத் துடித்த விரலைத்

துணித்துச் செலுத்தியிருக்கிறேன்

விண்கலமாக.” (மெசியாவின் காயங்கள்)

இயற்கையைப் பிரதிநித்துவப்படுத்தும் அவதானிப்புகள் இவர் கவிதைகளில் அரிதாகவே தென்படுகின்றன. எனினும் அவற்றுள் அவருடைய சித்தரிப்பின் நுட்பம் தனித்துக் தெரிகிறது.

“ஒரு முழு நீள இரவு

நிராகரித்த பனிக்காலத்து பிஞ்சு நிலவு

நீர் முடிச்சுக்குள் ஒடுங்கியிருந்து விம்மியது.

கண்ணீர்த்துளியைப் பனித்துளியாக மாற்ற முடியாமல்

பச்சைப்புல்லின் நீள் கன்னத்தில்

அது பருவாகி

வைரக்கல்லின் கனவாகக் கலையும் நேரம் நெருங்கியது.”

(வலியோடு முறியும் மின்னல்)

“புற்பனிப் பாத்திரங்களில்

தன்னைப் பிட்டு தானமிட்டு

தானேயுண்டு பசியாறும் சூரியன்.” (வலியோடு முறியும் மின்னல்)

கவிதையின் முக்கிய இலட்சணங்களில் ஒன்று அது தன்னுள் தக்க வைத்துக்கொண்டிருக்கும் வியப்பு. அந்த வியப்பு அல்லது புத்துணர்வு என்பது கவிஞனின் பார்வையோடு சம்பந்தப்பட்டது. கிருபாவின் கவிதை வரிகளில், குறிப்பாகப் பெண்ணைப் பற்றி விவரிக்க நேரும் போதெல்லாம், ஒப்பீடாக அவர் முன்வைக்கும் உவமைகளில் ஒரு வித்தியாசமான அழகை உணரலாம்.

“முலைக் காம்புகளால்

நீர் மட்டம் அளந்த நதி

நடந்தது நாணலில் கட்டுண்டு.” (வலியோடு முறியும் மின்னல்) 

“குட்டிச் சிறுமியின் கூந்தல் பூ உயரத்தில்

தரையை நெருங்கிப் பறக்கும் தட்டான்கள்” (வலியோடு முறியும் மின்னல்)

“பயணங்களின் வரப்புகளில்

முன்னே கூடைபொருந்திய

சைக்கிள் செலுத்தும் பெண்

எவ்வளவு சிறுமியாக இருக்கிறாளோ

அவ்வளவு அழகான வண்ணத்துப்பூச்சி

அவளைப் பின்தொடர்கிறது.” (வலியோடு முறியும் மின்னல்)

“நிறுத்திவைத்த வீணையைவிடச்

சற்றே உயரமாக இருப்பாளோ?” (நிழலன்றி ஏதுமற்றவன்)

“ஆலம் விழுதுகளில் கிளிகள்

எப்படி மரமேறுமென்று

உன் ஜடைப் பின்னலில்

நடித்துக் காட்டிய

என் விரல்களைக் கோபித்துக்கொண்ட

உன் கூந்தல்

முதுகை விட்டுத் தாவி

மார்பில் விழுந்து

செல்ல முகச்சுழிப்போடு

உன் விரல்களே பின்னத் தொடங்க

இப்போது கற்றுக்கொண்டிருக்கிறேன்

ஆலம் விழுதுகளில் கிளிகள்

எப்படி மரமிறங்குமென்று.” (மல்லிகைக்கிழமைகள்)

கிருபா கவிதைகளின் பலமும் பலவீனமும் ஒன்றேதான். அது அவர் பயன்படுத்தும் உருவகத் தொடர்களால் அமைந்த மொழி. அவருடைய கவிதைகளை உத்வேகமும் உணர்ச்சிச் செறிவும் கொண்ட ஒன்றாக மாற்றும் அதுவே மிஞ்சிப் போகும் சில சமயங்களில் சரளமான வாசிப்பிற்கான தடையாக மாறிவிடுகிறது.

“மனதில் முளைத்த சிறகுகளின் வன்மைக்கு

கனவுகளின் திசைகள் போதவில்லை” (நிழலன்றி ஏதுமற்றவன்)

என்று துயரப்படும் கிருபாவின் வரிகளில் இளமைக்கே உரிய வேகமும் அவசரமும் அதிகம் இருப்பினும் நிதானத்துடன் கூடிய அமைதியும் சிற்சில இடங்களில் கூடி வந்திருக்கிறது. அத்தகைய வரிகளில் ஒரு சொல்லும் மிகையின்றி தம்மிடத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.

“சொற்களிலிருந்து அர்த்தங்கள்

மௌனத்திற்குத் திரும்பும் வழி இது” (வலியோடு முறியும் மின்னல்)

அவ்வழியில் நம் புலன்கள் அனைத்தும் துல்லியம் கொள்கின்றன. சொற்களின் அர்த்தங்கள் அதன் ஒலியினின்றும் மோனத்திற்கு நழுவி விடுகின்றன. அப்போது கிடைக்கும் கவிதை அனுபவம் பின்னமற்றதாக இருக்கும் என நம்பலாம். பிரான்சிஸின் அனைத்து தொகுப்புகளிலுமே சொல்லமைதி நிரம்பிய அத்தகைய வாக்கியங்கள் அங்கங்கே பளிச்சிடுவதைக் காண முடியும்.

“கண்களில் நீர் இறங்கும் அரவம் கேட்டது”, 

“விஸ்கி நிறைந்த கிண்ணத்தருகே நின்றெரிந்த மெழுகுவர்த்தி வெளிச்சம் சுவர்களில் தள்ளாடியது” (வலியோடு முறியும் மின்னல்) 

“வயதுகள் கூட்டமாகக் கலைந்து

பறவைகளாக வட்டமடித்து

பத்துப் பதினேழு மட்டும்

மாடப்புறாக்களாக

பழைய இடத்திற்குத் திரும்புகிறதா?” (நிழலன்றி ஏதுமற்றவன்)

“அகலைப் போல எனக்குள்

ஆங்காங்கே தீயின் ஓரிலைத் தீவாகி

தள்ளாடத் தொடங்கிவிட்டாய்” (வலியோடு முறியும் மின்னல்)

“வானத்தின் கன்னத்தில்

முத்தங்கள் கலைகின்றன

கனவுகள் இருள்கின்றன

நிழலின்றி உடமை ஏதுமற்று

நான் நட்சத்திரங்களால் நிரம்பியிருப்பது

யாருடைய

பிச்சைப் பாத்திரமாய்?” (நிழலின்றி ஏதுமற்றவன்)

வாழ்வின் அதிர்ஷ்டமற்ற சூதில் தன்னைத்தானே பணயம் வைத்து ஆடி, கொஞ்சம் கொஞ்சமாகத் தோற்றுக்கொண்டிருப்பவன் அந்நிதர்சனத்தினின்றும் தப்பிக்கும் முகமாக, தான் யாக்கும் கவிதைகளில் அழிக்க முடியாத நித்தியத்துவத்தை நாடுபவனாகிறான். ஆக, கவிஞனின் விதியான தன்னைத்தானே அழித்துக்கொள்ளுகிற முனைப்பானது முற்றிலும் தனிநபர் உணர்வுதான் என்றாலும், வெளிப்படுத்தப்படும் விதத்தில் அதன் தீவிரத்தாலும் ஆழத்தாலும் அது துயருரும் எல்லோருக்குமான பொது அனுபவமாகப் படைப்பில் உருக்கொண்டு விடுகிறது. இத்தகைய வினைக்கு உதாரணமாகப் பின்வரும் சிறு கவிதையைச் சுட்டலாம்.

ஒரு குடை 

“தேநீர் நிறத்து மணலில்

யாருடையதெனத் தெரியாமல்

தன்னைத்தானே பிடித்துக்கொண்டு

நிற்கிறது குடை.

தனிமைத் துயரம் நீட்டிய நிழலை

என்னிடம் நீட்டச் சரிகிறது சூரியன்.” (வலியோடு முறியும் மின்னல்)

இங்கே கவிதை சொல்லியின் தனிமையானது அவனது தலைக்குமேல் நின்றெரியும் அந்தச் சூரியனின் பிரபஞ்சத் தனிமையோடு ஒப்பிடப்பட்டு பொதுமைப்படுத்தப்படுவதன் வழியாக கவிதையின் அனுபவம் பெறப்படுகிறது. “தன்னைத்தானே பிடித்துக்கொண்டு இருக்கும் குடை” என்பது அத்தனிமையின் ஆழத்தையும், தேநீர் நிறத்து மணல் என்ற தகவல் அச்சூழலின் துயர உணர்வையும், இலேசான கசப்பையும் குறிப்புணர்த்துவதாகிறது. இதைப் போலவே குரலுயர்த்தாத மற்றொரு கவிதை ‘மழைவிருந்து’. நம்முடைய அகப்பாடல்கள் தீட்டிக் காட்டும் வாழ்க்கைச் சித்திரங்களுக்கு நிகரானது இது. குறித்த நேரத்திற்கு வீடு திரும்ப முடியாத தலைவனின் தவிப்பே இக்கவிதை.

“புகைபோக்கி வழியே வெளியேறி

வெகுதொலைவு வந்து எனக்குமேல்

பந்தல் கட்டி நிற்கிறது நீ சமைத்த மேகம்.

காதல் மயக்கத்தில் காலம் மறந்து

தாமதமாய் கூடு திரும்பும் பறவைகளின் குரல்

என் நெஞ்சில் விழுந்து தவித்துப் புரள்கிறது.

கண்களின் திரண்ட கருமுகிலை

ஆவி பறக்க காப்பி கோப்பைகளில் நிரப்பியபோதும்

கல்பொறுக்கி உலையில் கொட்டிய மனசை

குழையும் முன் பக்குவமாய் வடித்து இறக்கியபோதும்

உன் கைகள் நடுங்கியிருக்கின்றன.

மின்னல் இடியாக நடுநடுங்குகிறது

வெடித்த கடுகும் பொரிந்து மருகிய

கறிவேப்பிலைக் கருகலுமாக தாளித்த வாசனையில்

அறைச் சுவர்களை விளாசுகிறது அறிமுகமில்லாத காற்று.

உன் பார்வையைப் போல் மின்னலும் வானத்தைக் கிழிக்கிறது.

மழை வரும் போலிருக்கிறது நான் வரமுடியாததால்.” (வலியோடு முறியும் மின்னல்)

இக்கவிதையில் தொழிற்படும் கருப்பொருள், உரிப்பொருள், பருவம், பொழுது அனைத்துமே கவிதையின் மைய உணர்வைச் சமைப்பதற்கு உதவியுள்ளதை அவதானிக்கலாம். 

விரைவாகவும் நிறையவும் எழுதும் பழக்கமுடையவராகத் தோன்றும் கிருபாவுடைய கவிதைகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது, பெரும்பாலும், அக்கவிதைகளை உருவாக்கும்போது அவர் கொண்டிருந்த மனோவேகமே எனலாம். இவர் கவிதைக்கெனத் தேர்ந்தெடுக்கும் அனுபவங்களில் அறிவின் வெளிச்சத்தைக் காட்டிலும் உணர்வுகளின் நிழல்கள் அழுத்தமாகப் படிந்திருப்பதைக் காணலாம்.

புற உலகின் நெருக்கடிகளால்

மனம் சோர்ந்து

ஒரு புள்ளியாய்

ஒடுங்கி நிற்பது

ஒரு கணமெனில்

மறுபோது அதன் எதிர்விசையால்

அகண்டு விரிந்து

அனைத்தையும் விம்மித் தழுவிடும்

அகத்தின் நெகிழ்வாய் பெருகிடும் சொற்கள்.

கவிஞன் கொள்ளும் அயற்சியென்பது

வெறும் கழிவிரக்கமல்ல.

தேனாகித் தித்திப்பதற்கு முன்,

தானாகித் திரளுகையில்

ஊறும் கசப்பு அது. 

இருட்டில் வெடிக்கும்

உன் கைத்துப்பாக்கியிலிருந்து வெளிப்படும்

ஒரு சிட்டிகை வெளிச்சத்தில்

என் மொத்த கவிதைகளையும்

படித்து முடித்துவிடலாம்

நீ 

அதுவரையிலும்

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு

செத்து தொலையாமலிருக்க வேண்டும்

நான் (சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம் )

ஒரு சிட்டிகை வெளிச்சம்தான் எனினும் மொழியின் இருள் மடிப்பில் எப்போதும்  எரிந்தவாறிருக்கும் கவிதை, எழுதியவனின் பெயரை அணையாது காக்கிறது.