The White Ribbon: திரைக்கதை (பகுதி 1) – மைக்கேல் ஹனகே

1 comment

1. உள்ளே / பகல் : பண்ணை நிலத்தில் இருக்கும் குதிரைவித்தைப் பள்ளி : அண்மை ஷாட்களின் மாண்டேஜ்கள்

ஒருவன் வித்தைக் குதிரையை ஓட்டுகிறான். நம்மால் அவனது முகத்தைக் காண முடியவில்லை. அவனது சப்பாத்துகள், தார்க்குச்சி, சாட்டை, விரைத்த கடிவாளம், நுரைதோன்றும் குதிரையின் வாய், அவ்விலங்கினை முன்னகர்த்தும் இயக்கம் ஆகியவற்றை மட்டுமே காண முடிகிறது. செவியில் குளம்படிகளின் மெல்லிய சப்தமும் வேகமாக உச்சரிக்கப்படும் குதிரையோட்டியின் ஆணைகளும் நம் செவியில் விழுகின்றன. அதன் பின்னர் நாம் ஒரு மென்குரலைக் கேட்கத் தொடங்குகிறோம் :

கதைசொல்லி

(திரைக்கு வெளியே – தி.வெ.)

நான் உங்களிடம் சொல்ல விரும்புகிற கதை, ஒவ்வொரு விவரணையிலும் தன்னகத்தே உண்மையைக் கொண்டிருக்கிறதா என்பதை அறியேன். அதில் பலவும் நான் செவிவழி்யாக அறிந்ததே. பல செய்திகள் எனக்கு இன்னும் தெளிவற்றவையாகத்தான் எஞ்சியிருக்கின்றன. அதை நான் அப்படியே இருளிலேயே விட்டாக வேண்டும். இந்தக் கேள்விகள் பலவும் பதில்களின்றியே இருக்கின்றன. ஆனால், எங்களது கிராமத்தில் நடந்தேறிய விசித்திரமான சம்பவங்களை நான் சொல்லியாக வேண்டுமென நினைக்கிறேன். ஏனெனில் இந்த நாட்டில் நடைபெற்று வரும் சில சம்பவங்களின் மீது அது ஒளி பாய்ச்சக்கூடும்… 

குதிரையேற்ற தொழுவங்களின் சேய்மைப் படம் 

குதிரையோட்டி, கிராமத்தின் மருத்துவர். தனது அறுபதுகளில் இருந்த அவர் மெலிந்த, அறிவுஜீவி தோற்றம்கொண்டவர். தனது குதிரைவித்தை வகுப்பை முடித்துவிட்டு காமிராவின் அருகில் தெரிந்த திறந்த வாயிற்கதவை நோக்கி குதிரையை ஓட்டியபடி வருகிறார். அதைக் கடந்து, நிலவிரிவிற்குள் போகிறார். அவர் தெருவில் செல்வதை அவருக்குப் பின்னிருந்து பார்க்கிறோம். மெல்லச் சிறியதாகி மறையும் வரை அவரது குதிரையோட்டம் தெரிகிறது.

கதைசொல்லி

(தி.வெ.- தொடர்ச்சி)

என் நினைவு சரியென்றால், எல்லாமே தொடங்கியது மருத்துவருக்கு ஏற்பட்ட குதிரையோட்ட விபத்திலிருந்துதான். பண்ணையில் இருந்த குதிரைவித்தை பள்ளியில் தனது வகுப்பு முடிந்ததும், தனது நோயாளிகளுள் எவரேனும் வந்திருக்கின்றனரா என்பதைப் பார்ப்பதற்காக …

2. வெளியே / பகல்: மருத்துவரின் வசிப்பிடம்.

நாட்டுபுறத்தின் சமநிலத்தில் இருந்த வயல்களும் புல்வெளிகளும் நேரே தோட்டத்தில் சென்று முடிந்தன. காயம்பட்ட புரவியின் அருகே மருத்துவர் விழுந்து கிடக்கிறார். அவரது புஜம் விசித்திரமான முறையில் முறுகியும், உடைந்த கழுத்துப்பட்டை எலும்பு குருதி தோய்ந்த சட்டையில் ஒரு வீக்கத்தைப் போலத் துருத்தியும் இருக்கின்றது. அவர் வலியால் கத்துகிறார்.

சில நிமிடங்களில் மருத்துவரின் மகள் – 12 வயது செனியா, வீட்டிலிருந்து வெளியே ஓடி வருகிறாள். அவள் தனது தந்தையின் அருகே விரைந்து ஓடிவந்து, பீதியுடன் – முதலில் அவரையும் பின்னர் துடிதுடித்த புரவியையும் – பார்த்துவிட்டு அலறுகிறாள். அவள் தந்தை அவளிடம் ஏதோ கத்த, அவள் குனிந்து அவரைத் தூக்கி நிறுத்த முயல்கிறாள். அவர் கடுமையான வலியால் அவள் மீது எரிந்து விழுகிறார்.

அவள் செய்வதறியாது தளர்ந்தசைகிறாள். அவர் மீண்டும் எதையோ அவளிடம் சொல்லி கத்த, அவள் அங்கிருந்து ஓடுகிறாள். நாம், இவை அனைத்தையுமே வெகு தொலைவில் இருந்தே கேட்கிறோம், ஏனெனில், இந்த மொத்தக் காட்சியின் போதும் கதைசொல்லி தனது விதப்பைத் தொடர்ந்தபடி இருக்கிறார்:

கதைசொல்லி

(தி.வெ.- தொடர்ச்சி)

…அவர் நேரடியாக தனது இல்லத்தை நோக்கிச் சென்றார். அவரது நிலத்திற்குள் வந்ததும், இரண்டு மரங்களிடையே இறுக்கி கட்டப்பட்டிருந்த விழிக்குப் புலப்படாத கம்பியில் தடுக்கி குதிரை கீழே விழுந்தது. மருத்துவரின் 14 வயது மகள் இவ்விபத்தைச் சாளரத்திலிருந்து பார்த்து, தனது அண்டை வீட்டுப் பெண்ணிடம் தெரிவித்தாள். அவள் மூலமாக இவ்விசயம் பண்ணை வீட்டிற்குத் தெரிவிக்கப்பட்டு, அவர்களது உதவியால் 30 கி.மீ. தொலைவில் இருக்கக்கூடிய மாவட்டத்தின் தலைமையிடத்தில் இருந்த மருத்துவமனைக்கு வலியை அனுபவிக்கும் மருத்துவரைக் கொண்டுசெல்ல முடியும் என்பதுதான் நோக்கமாக இருந்தது… 

3. வெளியே / பகல் : கிராமத்தின் தெருபள்ளிக்கூடம்.

நகர்வு ஷாட் : ஒல்லியான உடல்வாகுடைய, நல்ல பணிவான தோரணையில் உடையணிந்திருந்த, எமிலி வேக்னர் என்ற முப்பது வயது மதிக்கத்தக்கப் பெண்மனி தெருவினூடே விரைகிறாள்.

கதைசொல்லி

(தி.வெ.- தொடர்ச்சி)

… தனது நாற்பதுகளில் ஒண்டிக்கட்டையாக வாழும் பக்கத்து வீட்டுக்காரி கிராமத்தின் தலைமைச் செவிலி. அவள் மருத்துவரது மனைவி காலமானதிலிருந்து மருத்துவருக்கு வீட்டைப் பராமரிப்பவளாகவும் வரவேற்பாளராகவும் இருந்து வருகிறாள். மருத்துவரின் இரண்டு பிள்ளைகளையும் பராமரித்ததற்குப் பிறகு தனது மகன் ஹேன்ஸைப் பள்ளிக்கூடத்திலிருந்து அழைக்கச் சென்றிருந்தாள். அவனைத் தனித்துவிட விரும்பாத அவள், வகுப்புகள் முடிந்து மற்ற பிள்ளைகள் சென்ற பிறகு கொஞ்ச நேரம் கூடுதலாக அவனைப் பார்த்துக்கொள்ளக் கோரி எனக்குத் தனியாகக் கட்டணம் தந்திருந்தாள். ஆனால், அந்த விபத்து நாளன்று பிற்பகலில் பாடல் ஒத்திகை இருந்ததால், பெரும்பாலான பிள்ளைகள் இன்னமும் இருந்தனர் … 

சில குழந்தைகள் எமிலியைக் கடந்து செல்கையில் முகமன் செய்கின்றனர். பின்னர் அவள் பள்ளியை அடைகிறாள். கதவு திறந்திருக்கிறது. பள்ளிக் குழந்தைகள் வெள்ளம் போல் வெளியேறுகின்றனர்.

நாம் ஆசிரியரைப் பார்க்கிறோம். எளிமையான, முப்பதிற்குள்ளாக வயதிருக்கக்கூடிய அவர் சில பெரிய மாணவர்களிடம் உள்ளே பேசிக்கொண்டிருக்கிறார். வலிமையான, உயரமான 12 வயது மதிக்கத்தக்க மார்டின், தனது நேர்த்தியான உடையணிவால் பிறரிடமிருந்து தனித்துத் தெரிகிறான். அவன் செவிலியின் திசைக்குத் திரும்புகிறான்: 

மார்டின்

நீங்கள் செனியா வீட்டில் இருந்தீர்களா?

அவனை மேரி இடைமறிக்கிறாள். கண்ணியமாகவும் மென்மையாகவும் பேசக்கூடிய அழகான 13 வயது பெண் அவள். அவள் இவ்வயதிலேயே முதிர்ந்த ஒருவரைப் போலப் பேசும் விசித்திர குணமுடையவள். 

மேரி

உன்னால் ஒரு வணக்கம் சொல்ல முடியாதா? மதிய வணக்கம், திருமதி. வேக்னர் அவர்களே. எங்களைப் பொறுத்தருள்க. 

செவிலி

வணக்கம், மேரி.

மேரி

நாங்கள் மிகவும் கவலையுற்றிருந்தோம். அதனால்தான் மார்டின் தனது பண்பை மறந்துவிட்டான்.

செவிலி

அது பரவாயில்லை.

மேரி

மருத்துவர் எப்படி இருக்கிறார்?

செவிலி

சுகமாக இல்லைதான்.

மேரி

அவர் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டிய நிலையா?

செவிலி

எனக்குத் தெரியவில்லை.

முடிவற்று நீளும் மேரியின் வயதிற்கு மிஞ்சிய கேள்விகள் செவிலிக்குக் களைப்பைத் தந்தன. அவள் தன்னைச் சுற்றி இருக்கும் பிள்ளைகளின் தலைகளுக்கு மேலே எட்டிப்பார்த்தபடி வகுப்பறையில் யாரோ ஒருவரைத் தேடுகிறாள்.

மேரி

நாங்கள் செனியாவைப் பார்த்துக்கொள்கிறோம். நாங்கள் எவ்விதத்திலேனும் அவளுக்கு உதவி செய்வோம்.

செவிலி

(கவனச்சிதறலுடன்)

நல்ல யோசனை. அது அவளுக்குக் கொஞ்சம் ஊக்கம் தரும்.

அவள், கதவின் வழியே வெளிவரும் தனது மகனைக் கண்டுகொண்டாள். அவன் 8 வயதான ஒரு மங்கொலாய்டு சிறுவன். அவன் பெயர் ஹேன்ஸ். அம்மா பலராலும் சூழப்பட்டிருப்பதைக் கண்டு அவன் தயக்கமடைகிறான். செவிலி கூட்டத்திலிருந்து விலகி அவனருகே செல்கிறாள்.

செவிலி

அட, பாடல்களைப் பாடி மகிழ்ந்தாயா?

ஹேன்ஸ்

(மகிழ்வுடன் தலையாட்டியபடி)

ரொம்ப சிறப்பா இருந்துச்சி!

பள்ளி ஆசிரியர் வந்து சேர்கிறார்.

பள்ளியாசிரியர்

நீ பாடிக்கொண்டிருந்ததை அம்மாவிற்குப் பாடிக் காட்டு.

ஹேன்ஸ் குழப்பத்துடன் முதலில் பள்ளியாசிரியரையும் பின்னர் தன் அம்மாவையும் பார்க்கிறான். அவள் ஆமோதித்துத் தலையாட்டியதும், ஒரு நொடி நிதானித்துப் பிறகு பாடத் தொடங்குகிறான் :

ஹேன்ஸ்

லா… லா… லலலா…

மேரி அங்கிருந்து கிளம்பும் பொருட்டு திரும்புகிறாள்.

மேரி

விடைபெறுகிறேன், ஐயா. விடைபெறுகிறேன், திருமதி வேக்னர்.

அவளது பிரியாவிடை பிற பிள்ளைகளுக்கான முன்மாதிரியாகிறது. அவர்களும் விடைபெறுகை சொல்கிறார்கள். ஆயினும், அவர்களது சொல்லல் அவள் சொன்னதைப் போல் அத்தனை விகாரமாக இல்லை. சொல்லிவிட்டு அவளைப் பின்தொடர்கிறார்கள். 

பிள்ளைகளோடே ஒரு நகர்வு ஷாட். கொஞ்சம் தொலைவிற்குப் போனதும், 13 வயது வலுவான சிறுவன் ஜியார்ஜ், சத்தமெழுப்பிப் பிறரை ஊக்கப்படுத்துகிறான்:

ஜியார்ஜ்

கடைசி முட்ட பீ முட்ட!

பின், அவன் ஒரு விருட்டோட்டம் எடுக்கிறான். பெரும்பாலான பிள்ளைகள் அவனைத் தொடர்கிறார்கள். ஆனால், மேரியும் சில பிள்ளைகளும் நடந்தபடியே தங்கள் வேகத்தை அதிகரிக்கின்றனர். 

காமிரா, ஜியார்ஜ் ஓடிப்போனதும் நிலைகொண்டு, இப்போது மேரியைப் பின்தொடர்கிறது. அவ்விதம், சற்று நேரத்தில், பிறரும் தெருவின் கோடியில் தெரிகின்றனர். 

4.வெளியே / பகல் : மருத்துவரின் வீடு

பரிதாபமான நிலையில் இருந்த செனியா தனது நான்கு வயது தம்பி ருடோல்ஃபைத் தன் முழங்காலோடு சேர்த்து அணைத்திருந்தாள். அவனைத் தன்னோடு சேர்த்து முன்னும் பின்னும் ஆட்டினாள். அவன் தலை குனிந்திருப்பதைப் பார்த்தால் அழுதுகொண்டிருப்பதாக நாம் ஊகிக்க முடியும். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு

செனியா

(மெல்லிய குரலில்)

நீ விரும்பினால் சென்ற வாரம் செய்தது போலவே இப்போதும் மிருகங்களின் படங்களைக் கத்தரித்துத் தரட்டுமா?

எந்த மறுவினையும் இல்லை.

செனியா

(தொடர்ந்து…)

உனக்கு அது பிடிக்கும்தானே?

மிக மென்மையாக ருடோல்ஃப் தன் தலையை அசைக்கிறான்.

செனியா

(தொடர்ந்து…)

நாமிருவரும் சேர்ந்து அவற்றிற்கு வர்ணம் தீட்டலாம். வேண்டாமா?

எந்த மறுவினையும் இல்லை. 

செனியா

(தொடர்ந்து…)

இல்லையெனில், அழகான தங்கத்தாளில் இருக்கிறதே, உனக்கு நினைவிருக்கிறதா? ஈஸ்டருக்கு வாங்கினேனே? அதை நாம் கத்தரித்து விளையாடலாம்.

எந்த மறுவினையும் இல்லை. செனியா செய்வதறியாது தன் தம்பியின் தலையின் மீது தன் தலையைச் சாய்த்து முணுமுணுக்கிறாள்.

செனியா

(தொடர்ந்து…)

வாடா, என் செல்வமே!

அவர்கள் அப்படியே கொஞ்ச நேரம் இருந்தனர். இறுதியாக செனியா ருடோல்ஃபைத் தூக்கி எழுப்பித் தானும் எழுந்தாள்.

செனியா

(தொடர்ந்து…)

சரி. நாம் சாப்பிடுவதற்கு எதையாவது சமைக்கிறேன். திருமதி வேக்னர் அனைத்தையும் தயார்செய்துவிட்டார். நான்…

ருடோல்ஃப்

(தன் தலை குனிந்த நிலையிலேயே மெலிதாக அவளை இடைமறித்து)

அவர் திரும்பி வராமலேயே போய்விட்டால் என்னவாகும்?

செனியா

(புரியாததைப் போல)

என்ன? 

ருடோல்ஃப் குனிந்த தலையை வெறுமனே அசைக்கிறான்.செனியா தன் தம்பி முன் முழங்காலிட்டு அவன் விழிகளைப் பார்க்க முயல்கிறாள். அவனோ இன்னும் அழுத்தமாகத் தலையைப் புதைத்தான்.

செனியா

(கனிவுடன்)

எழுந்திரு. மூடனைப் போலப் பேசாதே! காய்ச்சலைப் போலவே இதுவும் சரியாகிவிடும். சென்ற குளிர்காலம் நினைவிருக்கிறதா? உனக்குக் கடுமையாக நோய் வந்திருந்தது, இல்லையா? இரண்டு வாரங்கள் கழித்து…

ஒரு பெரிய சத்தம் அவளது செவியைக் கூர்மையாக்கியது. பக்கத்து அறையின் சாளரத்தில் ஏதோ ஒன்று விழுந்ததைப் போன்ற சத்தம்.

செனியா எழுந்து உற்று கேட்டாள். மெளனம். கொஞ்ச நேரம் தொடர்ந்து உற்று கேட்டதற்குப் பிறகு மீண்டும் அதே சத்தம்.

செனியா

உஷ்ஷ்…

அவள் அடுத்திருந்த அறைக்குள் சென்றாள். திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்துகொண்டு வெளியே நோக்கினாள்.

வெளியே மேரியும் அவளைச் சூழ்ந்திருந்த பிள்ளைகளும் இருந்தனர். அவர்கள் வீட்டைப் பார்த்தபடி நின்றனர். எதற்கோ காத்திருக்கிறார்கள். 

கொஞ்ச நேரம் கழித்து முன்பு எல்லோரையும் ஓட்டப்பந்தயத்திற்குத் தூண்டிய அதே சிறுவன் – ஜியார்ஜ், இன்னொரு கல்லை சாளரக்கதவின் மேல் எறிகிறான். செனியா திடுக்கிடுகிறாள். தயங்குகிறாள். இறுதியாக சாளரத்தைத் திறக்கிறாள். 

ஜியார்ஜ்

ஏய். ஜியார்ஜ்!

செனியா பதிலளிக்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து

மேரி

(மெதுவாக)

எப்படி இருக்கிறாய்? உனக்கு ஏதும் உதவி தேவைப்படுகிறதா?

5. வெளி / இரவு : மாளிகை

ஐம்பதுகளின் மத்தியில் இருந்த, கணத்த, நாட்டுப்புறத்தான் – பண்ணையின் மேற்பார்வையாளன், அதே வயதுகொண்ட நில உரிமையாளரிடம் பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் வண்டிக்குதிரைகளின் நிரையின் முன் நின்று பேசினார்கள். அந்த வண்டிக்குதிரைகள் இழுத்து வந்த ஒரு குதிரைச்சடலத்தின் மீது தீப்பந்தத்தால் ஒளியூட்டினான். 

மேற்பார்வையாளன்

இதன் கால்தசை நாண் முற்றிலும் அறுந்துவிட்டது. நிச்சயம் இதிலிருந்து மீண்டிருக்கவே முடியாது. 

நில உரிமையாளர் மண்டியிட்டு அமர்ந்து இறந்த அந்த விலங்கின் முன்னங்கால் குறுதுண்ட என்பில் இருந்த காயத்தைப் பரிசோதித்துப் பார்க்கிறார். 

நில உரிமையாளர்

இங்கு எப்படி இது வந்தது? மருத்துவர் இது குறித்து ஏதும் சொல்லவில்லையா?

மேற்பார்வையாளன்

(அடக்கமான சிரிப்புடன்)

அவருடைய கழுத்துப்பட்டை எலும்பு தொண்டையைக் கிழித்து வெளியே நீட்டியிருப்பதால் அவர் பேசும் நிலையில் இல்லை. அவர் மகளிடம் கேட்டேன். அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. அவர் எப்போதும் அந்த மரங்களின் ஊடாகத்தான் வருவார்.

நில உரிமையாளர்

நீ அந்த கம்பியைப் பார்த்தாயா?

மேற்பார்வையாளன்

ஆம். பார்த்தேன். அது மெலிதாக இருந்தது. ஆனாலும் நல்ல வலிமையுடன் இருந்தது. உற்று பார்க்காவிடில் அது கண்களுக்குப் புலப்படாது.

நில உரிமையாளர்

ஆனால், அது ஏன் அங்கே கட்டப்பட்டது?

மேற்பார்வையாளன்

(தோளைக் குலுக்கியபடி)

அதுவும் முழங்கால் உயரத்தில்! எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை பிள்ளைகள் தாண்டி விளையாடுவதற்காக இருக்கலாம். மருத்துவர் தானே அதைக் கட்டிவைக்கும் அளவிற்கு முட்டாள் இல்லை. 

நில உரிமையாளர்

அதற்கு என்ன பொருள்?

மேற்பார்வையாளன்

பொருள். நான் அறியேன் என்பதே. எப்படியோ அது வேண்டுமென்றே அங்கு கட்டப்பட்டிருப்பதைப் போலவே தெரிகிறது. கொடுமை…

6. உள்ளே / இரவு : மாளிகைமேல்மாடியில் உள்ள வாழ்வறை

நில உரிமையாளரின் மகன் – 9 வயது சிஜி சாளரத்தில் நின்று, இறந்த குதிரையையும் அதை பந்தம் ஏற்றிப் பார்த்தபடி இருக்கும் தன் தந்தை, மேற்பார்வையாளர் இருவரையும் பார்க்கிறான்.

பின்னணி இசை (பியானோ / வயலின்) ஒலிக்கிறது. 

கொஞ்ச நேரத்திற்குப் பின் முற்றத்தில் இரு ஆண்களும் – நில உரிமையாளர் மாளிகைக்கும் மேற்பார்வையாளன் வண்டிக்குதிரைகளோடு பண்ணைக் கட்டடத்திற்கும் – தனித்தனியே பிரிந்து செல்கின்றனர். 

சிஜி சாளரத்திலிருந்துத் தலையைத் திருப்பி அறைக்குள் பார்க்கிறான்.

அங்கே அவனது அழகிய, பதற்றமான தாய் – பீட்ரிக்ஸ் பியானோவின் முன் அமர்ந்திருக்கிறாள். அவள் தன் முப்பதுகளில் இருக்கிறாள். அவளருகே தன் கழுத்தினால் வயலினைப் பிடித்தபடி இசையாசிரியன் நிற்கிறான். தன் பின்னிருபதுகளில் இருந்த அவன் சற்றே பருமனும் கொழுப்புமாக இருந்தான். நிச்சயம் தன் அழகிய எஜமானியிடம் ஈர்ப்புகொண்டிருந்த அவன் அப்போதுதான் அவளது இசையைத் தன் நொந்த பெருமூச்சால் இடைமறித்திருந்தான்.

இசையாசிரியன்

மன்னிக்கவும் அம்மையீர். என்னைப் பொறுத்தமட்டில் நீங்கள் அதீதச் சிறப்புடன் வாசிக்கிறீர்கள்.

பீட்ரிக்ஸ்

மன்னிப்பு கோருவதை நிறுத்திவிட்டு கவனத்தைத் தொடருங்கள். அது நம் இருவருக்கும் நன்மை பயக்கும்.

இசையாசிரியன்

உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், நீங்கள் மிகவும் வேகமாக வாசிக்கிறீர்கள். ஆனால், நான் பகானினி இல்லை.

பீட்ரிக்ஸ்

சரி, மீண்டும் ‘டி’ஸ்வரத்தில் ஆரம்பத்திலிருந்து வாசிக்கலாம். 

இசையாசிரியன் அதைப் பின்பற்றினான். ஒருகணம் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு மீண்டும் தொடங்கி வாசித்தனர்.

சிஜி அவர்களைச் சாளரத்தின் வழியாகப் பார்த்துவிட்டு அலட்சியமாக நடந்து உள்ளே சென்று அவர்களிடம் இருந்து தொலைவிலேயே நின்று பார்த்தான். பின் மீண்டும் அதே தொனியிலேயே நடந்து வெளியேறுகிறான்.

பீட்ரிக்ஸ் சடுதியில் மீண்டும் தன் வாசிப்பை நிறுத்துகிறாள்.

பீட்ரிக்ஸ்

செல்லமே கொஞ்சம் கேள். உனக்கு இசை பிடித்திருந்தால் என்னருகே அமர்ந்து இசைத்தாள்களைத் திருப்பு. இல்லை சலிப்பாக உணர்ந்தாயெனில் குறைந்தபட்சம் என் பார்வையிலேனும் படாதபடி, உன் அறைக்குப் போய்விடு. எனக்கு முன்னால் நீ அன்ன நடை போட்டபடியே இருந்தால் எனக்குப் பதற்றமாக இருக்கிறது. 

சிஜி நாணித் தன் தலையைத் தாழ்த்துகிறான். இருப்பினும் அங்கிருந்து அகன்றிடவில்லை.

பீட்ரிக்ஸ்

(இசையாசிரியனை நோக்கி)

சரி, இப்பொழுது நேரம் என்ன ஆயிற்று? பெண்பிள்ளை எங்கே?

இசையாசிரியன் தனது பைக்கடிகாரத்தை வெளியே எடுத்துப் பார்க்கிறான்.

இசையாசிரியன்

அவள் இரட்டையருடன் இருப்பாள் என நினைக்கிறேன். எட்டு நாற்பது ஆகிறது.

பீட்ரிக்ஸ்

எட்டு நாற்பதா?

(சிஜியை நோக்கி)

நீ படுக்கையில் இருக்க வேண்டிய நேரமெல்லாம் கடந்தே போய்விட்டது.

(இசையாசிரியனை நோக்கி)

அவன் தன் வீட்டுப்பாடத்தை முடித்துவிட்டானா?

இசையாசிரியன்

ஆம், அம்மையீர்!

பீட்ரிக்ஸ்

சரி.

(சிஜியிடம்)

நீ எனக்காகப் பக்கங்களைத் திருப்ப விரும்புகிறாயா இல்லையா?

சிஜி ஆமோதித்துத் தலையாட்டுகிறான்.

பீட்ரிக்ஸ்

அப்படியானால், இங்கே வா!

மந்தகாசப் புன்னகையுடன் அமர்வுப் பலகையில் தன்னருகே இருந்த இடத்தில் தட்டுகிறாள். சிஜி அவளருகே வந்தமர்ந்து இசைத்தாளைப் பார்க்கிறான். பீட்ரிக்ஸ் பக்கங்களை மீண்டும் பின்னோக்கித் திருப்புகிறாள். 

பீட்ரிக்ஸ்

(இசையாசிரியனிடம்)

சரி. இதோ மீண்டும் தொடங்குவோம். ‘டி’ ஸ்வரம். கொஞ்சம் வேகமாக வாசிக்க முயற்சி செய்யுங்கள். இல்லாவிடில் நான் கிராமத்துப் பள்ளியாசிரியருடன் சேர்ந்து வாசிக்க நேரிடும்.

அவர்கள் மீள வாசிக்கின்றனர். சிஜி அவளுடன் சேர்ந்து இசையைப் படிக்கிறான். பின் பக்கத்தைத் திருப்புகிறான். 

7. உள்ளே / இரவு : கல்லூரிமுதல்வரின் வீடு.

மேரியும் மார்டினும் கதவின் வழி நுழைந்து முன்பாக நிற்கின்றனர்.

உணவு மேசையில் தன் முதுகைக் கதவிற்குக் காட்டியவாறு அமர்ந்திருக்கிறார் தன் நாற்பதுகளில் இருந்த போதகர். அவருக்கு நேரெதிர் முனையில் அவரது மனைவி அன்னா அமர்ந்திருக்கிறாள். அவள் தன் பின் நாற்பதுகளில் இருந்தாள். மேசையின் இருபுறமும் பிள்ளைகள் அமர்ந்திருக்கின்றனர். ஆண்டன் (11), மாக்தலீனா (10), கேத்தரீனா (9), ஃப்ளோரியன் (7). இரண்டு இருக்கைகள் காலியாக இருந்தன. 

மெளனம்.

மேரி

(மெல்லிய குரலில்)

தயவுசெய்து எங்களை மன்னித்துவிடுங்கள்.

மார்டின்

(அவளைப் பின்பற்றி)

தயவுசெய்து எங்களை மன்னித்துவிடுங்கள்.

மெளனம்.

அந்த இரு பிள்ளைகளிடமும் பாராமுகமாய் மிகவும் குன்றிய ஒலியில் போதகர் பேசத் தொடங்குகிறார்:

போதகர்

மன்னிப்பதற்கான வினாவே எழவில்லை. நீங்கள் என்னை அவமதிக்கவில்லை. உம் தாய், சகோதர சகோதரிகளையே நீங்கள் அச்சமூட்டியும் அவமதித்தும் இருக்கிறீர்கள். அவர்களிடம் மன்னிப்பு கோருங்கள். என்னை ஆச்சரியப்பட வைக்கிறீர்கள். என் இரண்டு மூத்த, விபரமறிந்த பிள்ளைகளால் அலட்சியமாகத் தன் தாயையும் உடன்பிறந்தோரையும் எப்படி மரணபயத்தில் ஆழ்த்தும் காரியத்தைச் செய்ய முடிகிறது!

அவர் இரு பிள்ளைகளை நோக்கித் திரும்புகிறார்:

போதகர்

நீங்களே சொந்தக் காலில் நிற்குமளவு வளர்ந்துவிட்டீர்களா? என்ன? வீட்டைவிட்டு வெளியேறி சொந்தமாகத் தம்மைப் பார்த்துக்கொள்ளும் திறன் வந்துவிட்டதா உமக்கு? அப்படியிருந்தால் நீங்கள் எந்நேரமும் வரலாம் போகலாம். வீட்டில் யாரும் உங்களைக் கேட்க இருக்க மாட்டார்கள். இதுதான் உங்களுக்கு வேண்டுமா?

இரு பிள்ளைகளும் தலைதாழ்த்தி மெளனம் காக்கின்றனர். போதகர் மீண்டும் அவர்களுக்குப் புறமுதுகு காட்டி மேசையில் அமர்கிறார்.

போதகர்

இன்று இந்த பந்தியில் யாருமே உண்ணவில்லை. பொழுது சாய்ந்தும் நீங்கள் வராமல் போனதால் உங்கள் தாய் கண்ணீர் சிந்தியபடி ஊரெல்லாம் உங்களைத் தேடியிருக்கிறாள். உங்களுக்கு என்னவாகிவிட்டதோ என்ற பதற்றத்துடன் எங்களால் நிம்மதியாக உண்டிருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? இப்போது இங்கு வந்து பொய்க் காரணங்களைச் சொல்லிக்கொண்டிருக்கையில் நாங்கள் உணவை நிம்மதியாக உண்ண முடியுமா? எனக்கு எது மோசமானது என்று சொல்லத் தெரியவில்லை. நீங்கள் வராமல் இருந்ததா இல்லை திரும்பி வந்து சேர்ந்ததா?

(நிறுத்தம்)

இன்றிரவு நாம் அனைவருமே பசியுடன் படுக்கைக்குச் செல்வோம். 

அவர் எழ, அவரைத் தொடர்ந்து தாயும் மேசையில் அமர்ந்திருந்த பிள்ளைகளும் எழுகின்றனர். மீண்டும் அவர் பிழை செய்த இருவரையும் நோக்கி:

போதகர்

நம்மிடையே பரஸ்பர மரியாதை இருக்க வேண்டுமெனில், நான் உங்களுக்குத் தண்டனை தராமல் இருக்க முடியாது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று கருதுகிறேன். நாளை மாலை இதே நேரம் ஆளுக்குப் 10 பிரம்படிகள் தருவேன். அதுவரை உங்கள் பிழையை நீங்கள் மனத்தில் ஓட்டிப் பார்க்கலாம். என்ன ஏற்கிறீர்களா?

மேரி

(மார்டினுடன் சேர்ந்துகொண்டு)

ஏற்கிறோம் தந்தையே.

போதகர்

அப்படியெனில், எல்லாம் முடிந்தது. இப்போது எல்லோரும் படுக்கைக்குச் செல்லுங்கள். 

மேசையில் அமர்ந்திருந்த பிள்ளைகள் நிரையாக – முதலில் தாயிடமும் பின் தந்தையிடமும் செல்கின்றனர். அவர்கள் கைகளுக்கு முத்தமிட்டு, அறையைவிட்டு வெளியேறுகின்றனர். அதையே தாமும் செய்ய மேரியும் மார்டினும் முயல, அவர்களிடம் சொல்கிறார்.

போதகர்

உங்கள் தொடுகையை நான் மறுக்கிறேன். நாளை உங்களை அடிக்க வேண்டியதால் இன்று நானும் உங்கள் தாயும் நல்லுறக்கம் கொள்ள முடியாது. விளாசல்கள் உங்களுக்குத் தரவிருக்கும் வலியைவிட நாங்கள் அதிக வலியை உணர்வோம். எங்களை விட்டுவிட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். 

இரு பிள்ளைகளும் அறையைவிட்டு வெளியேறும் போது சொல்கிறார். 

போதகர்

நீங்கள் சின்னதாக இருந்தபோது உங்கள் தாய், உங்கள் கைகளைச் சுற்றி அவ்வப்போது ஒரு வெண்ணிற நாடாவைக் கட்டுவாள். உங்களது மாசின்மையையும் அப்பாவித்தனத்தையும் சுட்டும் வெண்ணிறம் அது. உங்கள் வயதில் அத்தகைய நினைவூட்டல்கள் உங்களுக்குத் தேவையில்லை என்று நினைத்திருந்தேன். அது தவறென உணர்கிறேன். நாளை உங்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்ட பின், உங்கள் தாய் மீண்டும் அந்த வெள்ளை நாடாவை உங்களுக்குக் கட்டுவாள். உங்கள் நடத்தையைப் பார்த்து எங்களுக்கு நம்பிக்கை பிறக்கும்வரை அதை உங்கள் கைகளில் நீங்கள் கட்டிக்கொண்டிருக்க வேண்டும். 

8. வெளியே / பகல் : மருத்துவரின் இல்லம்.

அண்மைக் கோணம் : மருத்துவரின் புரவியைத் தடுக்கிவிட்ட கம்பி கட்டப்பட்டிருந்த மரங்களுள் ஒன்று. காவலர் ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என்று அவதானிக்கிறார். 

அவருடன் செனியா, ருடோல்ஃப், செவிலி, அவள் மகன் ஹேன்ஸ் ஆகியோர் இருக்கின்றனர். இரு சிறுவர்களும் இந்த விசாரணையில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. தோட்டத்திலும் அருகில் இருந்த களத்திலும் ஓடிப்பிடித்து விளையாடுகின்றனர். குறிப்பாக ஹேன்ஸ் இதை மிகவும் கொக்கரித்து மகிழ்வுடன் விளையாடுவதாகத் தெரிகிறது. 

காவலர்

இப்போது கம்பி எங்கே இருக்கிறது?

செவிலி செனியாவைப் பார்க்க, அவளோ தான் அறியேன் எனும்விதமாகத் தோளைக் குலுக்குகிறாள். 

காவலர்

அப்படியெனில், யார் அதை கழற்றியது?

செனியா

எனக்குத் தெரியாது.

காவலர்

நீங்கள் இங்கே இருக்கவில்லையா?

செனியா தெளிவற்ற முகத்துடன் செவிலியைப் பார்க்கிறாள்.

செனியா

நகரத்திற்குச் செல்லும் போது உங்கள் தந்தையுடன் நீங்களும் போனீர்களா?

செனியா

இல்லை.

காவலர்

அப்படியானால் நீங்கள் இங்குதான் இருந்திருக்க வேண்டும்.

செனியா

நான் பள்ளியில் இருந்தேன். இன்று.

காவலர்

நீங்கள் பள்ளிக்குச் சென்றபோது கம்பி அப்படியேதான் இருந்ததா?

செனியா

நான் அதைக் கவனிக்கவில்லை.

காவலர் செவிலியை நோக்கித் திரும்புகிறார்.

காவலர்

நீங்கள் எப்போது வந்தீர்கள்?

செவிலி

நண்பகலில். மருத்துவருக்கும் அவர் பிள்ளைகளுக்கும் மதிய உணவு ஆக்கித் தருகிறேன். மருத்துவரின் மனைவி இறந்ததிலிருந்து நான் அவருக்கு உதவி வருகிறேன். 

காவலர்

அது எப்போதிலிருந்து?

செவிலி

நான்காண்டுகளாக. ருடோல்ஃப் பிறந்ததிலிருந்து. நான் செவிலியாகப் பணிபுரிகிறேன். நாங்கள் அடிக்கடி சேர்ந்தே பணிபுரிவதும் உண்டு. 

காவலர்

ஆனால் நீங்கள் எதையுமே பார்க்கவில்லையா?

செவிலி

இல்லை.

காவலர்

எவ்வளவு நேரம் வரை கம்பி இங்கேயே இருந்தது என்பது பற்றி ஏதும் தெரியுமா?

செவிலி

நான் அதை இதுவரை பார்க்கவே இல்லை.

காவலர்

(சினத்துடன்)

தெரியாமல்தான் கேட்கிறேன். முன்பும் அதை யாரும் பார்க்கவில்லை, சம்பவத்திற்குப் பின்பும் யாரும் பார்க்கவில்லை. அது தானாகவே இரு மரங்களிடையே தன்னைக் கட்டிக்கொண்டு பின் மருத்துவர் விழுந்ததற்குப் பிறகு தானாகவே மறைந்தும் போய்விட்டது. அதானே?

என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் செனியாவும் செவிலியும் விழித்தனர். அப்போது ஆர்வத்துடன் அங்கே ஹேன்ஸ் ஓடி வந்தான். 

ஹேன்ஸ்

அம்மா! பாரு. பாரு. வா!

செவிலி

(தயக்கத்துடன்)

என்ன நிகழ்கிறது?

ஹேன்ஸ்

மக்கள்! நிறைய மக்கள். வா!!

செவிலி

(காவலரிடம்)

மன்னிக்கவும்.

செவிலி நிலத்தை நோக்கியபோது நிறைய ஆட்கள் சேர்ந்து மருத்துவரின் நிலத்தை ஒட்டியிருந்த பாதையைக் கடந்து நம் பார்வையில் பட்டுச் செல்கின்றனர். பாடையில் ஒரு சடலத்தை எடுத்துச் செல்கின்றனர். காவலரும் செனியாவும் செவிலியைப் பின்தொடர்ந்து வந்து சேர்கின்றனர். தோன்றிய வேகத்திலேயே அந்த மக்கள் கூட்டம் புதர்களைத் தாண்டி மறைந்தும் போயினர். அவர்கள் அருகில் வருகையில் நாம் இதைக் கேட்கிறோம்.

கதைசொல்லி

மருத்துவருக்கு ஏற்பட்ட விபத்தின் மறுநாள் அதை யார் செய்தது என்பதற்கான எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்பதோடு, அச்சம்பவத்தையே மக்கள் மறந்துவிடக்கூடிய அளவு துயரமான இரண்டாவது துர்நிகழ்வு நடந்தேறிவிட்டது: ஒப்பந்த உழவரின் மனைவி பணியில் நடந்த விபத்தில் இறந்துவிட்டாள்.  

9. உள்ளே / பகல் : பண்ணை.

தாழ்கூரை இருந்த அறையில் கடும் இருள் இருந்தது. சிறிய சாளரங்கள். குடியானவப் பெண்கள் இருவர் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த பிணத்தைச் சீர்படுத்திக்கொண்டிருக்கின்றனர். ஆடைகளைக் களைந்து துவைத்துக்கொண்டிருக்கின்றனர். 

கதைசொல்லி

கையில் காயம் இருந்ததால் அந்தப் பெண்ணுக்கு இலகுவான பணிகளை மட்டுமே செய்ய முடியும். எனவே மேற்பார்வையாளர் அவளை அறுவடைப் பணியிலிருந்து விடுவித்து இலகுவான பணிசெய்யும் பொருட்டு மரம் அறுப்பு ஆலைக்கு அனுப்பியிருந்தார். 

எல்லாமே மெல்லிய ஒலியில் நடந்துகொண்டிருக்கின்றன. பிணத்தைக் கழுவித் தூய்மை செய்வதில் திறன்பெற்ற ஒரு முதிய செவிலி அனைத்து செயல்முறைகளையும் கவனித்துக்கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு முறை கதவு திறக்கப்படும்போதும் வெளியே காத்திருக்கும் மக்களின் முணுமுணுப்பு கேட்டபடி இருக்கிறது. மண்படிந்த நீர் வெளியேற்றப்படுகிறது. புதிய உள்ளாடை எடுத்துவரப்படுகிறது. நிர்வாணமாக இருந்த சடலத்திற்கு மீண்டும் ஆடை அணிவிக்கின்றனர். வெளியே கிளர்வுற்ற குரல்களின் ஒலி பெருகிக்கொண்டிருக்கிறது. கதவு திறந்ததும் 50 வயது மதிக்கத்தக்க உழவர் அந்த அறைக்குள்ளே வருகிறார். முதுசெவிலி சினத்துடன் திரும்பிப் பார்க்கிறாள்.

முதிய செவிலி

நீ வெளியே போ! நாங்கள் இன்னும்…

உழவர்

(மெதுவாக)

வெளியே போ!

அரை நிர்வாணமாய்க் கிடந்த சடலத்தின் மீது இன்னும் போர்த்தப்படாமல் வைக்கப்பட்டிருந்த சீலையை அப்படியே விட்டுவிட்டு மனமின்றி முதுசெவிலி வெளியேறுகிறாள். மற்ற பெண்களும் சங்கடத்துடன் அவளைப் பின்தொடர்கின்றனர். அவர்கள் வெளியேறி கதவைச் சாத்திய பின் அந்த உழவர் அப்படியே நின்றபடி இருக்கிறார். சிறிது நேரம் கழிந்த பின்னரே முன்னகர்ந்து தன் மனைவியின் அருகே அமர்கிறார். நிலைத்து அமர்ந்திருக்கிறார். நெடுநேரம் போகிறது. ஒரேயொரு முறை அந்த நிர்வாணத்தை மறைக்க முயல்பவரைப் போலப் பிணச்சீலையைச் செருகிவிடுகிறார். பின் மீண்டும் அதே இருண்ட அறையில் அப்படியே அமர்கிறார். அவர் எந்நேரமும் உடைந்து அழக்கூடும் என்பதை அவரது நிலைத்த மூச்சு நமக்கு அறிவிப்பது போலிருக்கிறது.

10. வெளியே / பகல் : நதியும் ஒரு பாலம் அமைந்த புல்வெளியும்.

தூண்டில் வலையுடன் பள்ளியாசிரியர் மீன்பிடித்தவாறு இருக்கிறார். 

கதைசொல்லி

அதே நாள் நான் ஒரு விசித்திரமான நிகழ்வைக் காண வேண்டியதாயிற்று. வானிலை இதமானச் சூட்டுடன் கவின் மிகுந்திருந்தது. எனது அற்பமான உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக அதில் மீனைச் சேர்க்கலாம் என முடிவெடுத்தேன். அந்த ஆற்றில் நிறைய மீன்கள் கிடைக்கும். என்னைப் பிடித்திருந்ததால் நில உரிமையாளர் என்னை மீன் பிடிக்க அனுமதித்திருந்தார். 

பள்ளியாசிரியர் சடுதியில் பிரம்மை பிடித்து நின்றார். முப்பது அடி உயர்ந்திருந்த பாலத்தின் மீது, ஏதோ கயிற்றில் நடக்கும் கூத்தாடியைப் போல மார்டின் நடந்துகொண்டிருந்தான். 

பள்ளியாசிரியர்

(அச்சத்துடன் கத்துகிறார்)

மார்டின்!

அவர் குரலைக் கேட்காதவனாய் அவன் தொடர்ந்து சமநிலையைப் பேணி நடந்துகொண்டிருந்தான்.

பள்ளியாசிரியர்

(இன்னும் சத்தமாக)

மார்டின்!

மார்டின் அவன் போக்கில் இருக்கிறான்.

பள்ளியாசிரியர் தன் தூண்டிலையும் துடித்துக்கொண்டிருக்கும் மீனையும் ஆற்றின் படுகையில் இருந்த சரளைக்கற்களில் வீசியெறிந்துவிட்டு, தடுமாறிக் கரைக்கு வந்து சேர்கிறார். விரைந்து அவர் மேலேறியதும் சிறுவன் பாலத்தின் இன்னொரு முனையின் கடைசிக்கு சமநிலை பேணி நடந்துவந்திருக்கிறான். 

பள்ளியாசிரியர்

மார்டின், கவனம்!

ஒரு சில அடிகள் எடுத்து வைத்ததும் பாலத்தின் சுவரினைக் கடந்து முடித்துவிட்டுப் பாலத்தின் மறுமுனையில் இறங்கிவிடுகிறான். 

அவனை நோக்கி வரும் பள்ளியாசிரியரை விருப்பமின்றித் திரும்பிப் பார்க்கிறான். 

பள்ளியாசிரியர்

நீ என்ன உலகமகா முட்டாளா? விழுந்து கழுத்து உடைபட வேண்டுமா உனக்கு?

மார்டின்

(தன் தலையைக் குனிந்தபடி)

வணக்கம், ஐயா!

பள்ளியாசிரியர் அவனருகே சென்று சேர்கிறார். 

பள்ளியாசிரியர்

என்ன நடக்கிறது? நீ என்ன பைத்தியமா?! இது எத்தனை உயரம் என்று தெரியாதா? 

சிறுவன் தலைகுனிந்து மெளனம் காக்கிறான். 

பள்ளியாசிரியர்

நான் அழைத்தது கேட்டதா இல்லையா? கத்தினேன்!

மார்டின்

(சிறிய மெளனத்திற்குப் பின்)

ஆம், கேட்டது.

பள்ளியாசிரியர்

அதற்குப் பின்னும்?

சிறுவன் மெளனம் காக்கிறான்.

பள்ளியாசிரியர்

சரியாகப் போயிற்று!

தலைகுனிந்தபடியே தோளை ’ஒன்றுமில்லை’ என்பதுபோல கொஞ்சமாக ஆட்டுகிறான். இப்படிக் கேட்பதில் எந்தப் பயனும் இல்லை என்று அறிந்த ஆசிரியர் மீண்டும் அமைதியான குரலில் பேச முனைகிறார்.

பள்ளியாசிரியர்

நீ நான் அங்கு இருப்பதைப் பார்த்து என் கவனத்தை ஈர்க்கத்தானே இப்படிச் செய்தாய்?

சிறுவன் இல்லை என்று தலையசைக்கிறான்.

பள்ளியாசிரியர்

ஏன் நீ அப்படிச் செய்யாமல்…

மார்டின்

(இடைமறித்து)

என்னைக் கொல்வதற்கான வாய்ப்பைக் கடவுளுக்குத் தந்தேன். அவர் செய்யவில்லை. அவருக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்றுதான் அதற்கு அர்த்தம்.

பள்ளியாசிரியர்

(குரல் தடுமாறி)

என்ன சொல்கிறாய்?

மார்டின்

நான் மரணிப்பதை அவர் விரும்பவில்லை.

பள்ளியாசிரியர்

(குழம்பியவராக)

யார்? யார் உனது மரணத்தை விரும்பவில்லை?

மார்டின்

கடவுள்!

நிறுத்தம்.

பள்ளியாசிரியர்

நீ இறக்க வேண்டுமென கடவுள் ஏன் விரும்பப் போகிறார்?

சிறுவன் பதிலளிப்பதை நிறுத்திவிட்டு மீண்டும் தலையைக் குனிந்துகொள்கிறான். பள்ளியாசிரியர் சற்று மெளனமாக அவனைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். பின் மெல்ல இதைச் சொல்கிறார்.

பள்ளியாசிரியர்

இதைப் போன்ற முட்டாள்தனத்தை இனி செய்யவே மாட்டேன் என்று உறுதி தா. சரியா? என்னைப் பார்.

மார்டின் மனமின்றி பார்க்கிறான்.

பள்ளியாசிரியர்

உறுதி செய்து தா.

மார்டின் மெளனமாகவே இருக்கிறான். கீழே பார்க்க முடியாமல் ஆசிரியரைக் கடந்து எங்கோ பார்க்கிறான். 

பள்ளியாசிரியர்

நீ என்னை நம்பவில்லை. அப்படித்தானே?

மார்டின்

(பணிவுடன் உணர்ச்சியின்றி)

நான் நம்புகிறேன் ஐயா!

இதற்கு மேல் பேசுவதில் எந்தப் பயனும் விளையாது என்று பள்ளியாசிரியர் புரிந்துகொள்கிறார். 

பள்ளியாசிரியர்

(முடிவாக)

எல்லாம் சரி. இப்போது வீட்டிற்குச் செல். நாளைக்குப் பியானோ பாடத்திற்காக வருவேன். அப்போது உன் தந்தையுடன் பேசுகிறேன்.

தன் முகத்தைத் திருப்பி ஆசிரியரைப் பார்த்து கெஞ்சும் குரலில் மார்டின் இறைஞ்சுவதைப் பார்த்து பள்ளியாசிரியர் திடுக்கிடுகிறார்.  

மார்டின்

வேண்டாம். தயவுசெய்து அவரிடம் சொல்ல வேண்டாம்.

பள்ளியாசிரியர்

ஏன்?

இடவலமாகத் தலையை ஆட்டியபடி அவரைக் கெஞ்சும் விழிகளுடன் பார்க்கிறான். தனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மன்றாடுவது போலிருந்தது.

-தொடரும்.

1 comment

M.M.bysel February 25, 2022 - 9:12 pm

திரைக்கதையைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இறந்த உடலை சுத்தப்படுத்தும் காட்சி மனதில் விரிகிறது. தொடர்ந்துப் படிக்கும் போது இன்னும் முழுமையான காட்சிகளைக் காண முடியுமென நம்புகிறேன்.

Comments are closed.