விடிகாலையில் கடப்பாரைச் சத்தம் கேட்ட பின்பு போர்வையைப் போர்த்தியபடி ராசப்பன் டீ கடைக்கு வந்துசேர்ந்தவர்கள் இன்னும் உருமாலையைக் கழற்றாமல் நான்காவது டீயைக் குடித்துக்கொண்டிருந்தார்கள். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை. மொண்டிபாளையம் பெருமாள் கோயிலுக்குப் போகும் கூட்டம் விறுவிறுவெனப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தது. அப்போதுதான் தேர்ப்பெட்டிக்கார சம்முவம் அடுத்தவாரம் திங்கட்கிழமை காலையில் மடையானுக்குக் கோயமுத்தூரில் பெண் பார்க்கப் போகிறார்கள் என்ற தகவலைச் சொன்னார். 

“நெசமாவா சம்முவம். இந்தப் பயலுக்குக் கோயமுத்தூருல பொண்ணு வாச்சிருக்கா? பரவால்லயே..” ராசப்பன் டீ தம்ளர்களைக் கழுவியபடியே கேட்டார். 

“புது சொந்தமாத்தான் இருக்கோணும். தெரிஞ்சவியதான் ஒருத்தரும் பொண்ணு தரமாட்டேன்னுட்டாங்களே…” எட்டாம் நம்பர் சின்னப்பன் மீசையைத் தடவிக்கொண்டார். 

“அந்தப் பயலுக்கு ஒடம்புதான் அப்பிடி பீமனாட்டமா. மத்தபடி வெகுளி. சூதுவாது தெரியாது. நல்ல பாடுபடறான். சம்பாதிக்கறான். புள்ளையக் குடுக்கறதுக்கு வேறென்ன வேணும்?” 

“கோயமுத்தூருல யாரு என்னன்னு வெசாரிச்சீங்களா?”

“அவிங்க ஒண்டிப்புதூர்காரங்க போல. இப்ப இருக்கறது அஞ்சு முக்குக்கு மேக்கால வண்டிப்பேட்டையில. மார்க்கெட்டுல வேவாரமாம். சவுண்டம்மன் கோயில் பூசாரி வகையில தெரிஞ்சுதான் பேசிருக்காங்க.”

“எப்பிடியோ மடையானுக்கு கல்யாணம்னா அம்மன் கோயில் நோம்பி சாட்டுனா மாதிரிதான்.” உருமாலையை அவிழ்த்துக் கட்டிக்கொண்ட நடவை வீட்டுக்காரர் எழுந்தார்.

ரங்கநாதன் என்று சொன்னால் கண்ணகி நகரில் யாருக்கும் தெரியாது. மடையான் என்று கேட்டால் உடனடியாகச் சொல்லிவிடுவார்கள். தனக்கு அப்படியொரு பெயர் இருப்பது அவனுக்கே தெரியாது. மடையானைப் பெற்றவள் பசூர் கிழவி. எப்போதும் போலப் பேச்சுவாக்கில் புலம்பும்போது தெரிய வந்ததுதான் ரங்கநாதன் என்ற அவனது இயற்பெயர். பசூர் கிழவிக்கு வெகு காலமாகவே விநோத வியாதி. திறந்த வாயை மூடவும் பேசுவதை நிறுத்தவும் தெரியாது. விடிந்ததும் பேசத்தொடங்கும் அவளது வாய் ஊர் உறங்கி அவளும் உறங்கிய பின்னரும் பத்து வார்த்தை பேசிவிட்டுத்தான் ஓயும். தயிர்கடையானைப் போலக் குச்சி உடலும் கீச்சுக்குரலுமாய் அவள் வருவதைப் பார்த்தாலே தெருவில் இருப்பவர்கள் இல்லாத வேலைகளையெல்லாம் இழுத்துப்போட்டுக்கொண்டு ஓடுவார்கள்.

குள்ளிசெட்டியார் தண்டுகாரம்பாளையத்திலிருந்து பிரித்துக் கட்டிய தறிகளுடனும் பாத்திரப் பண்டங்களுடனும் திருப்பூருக்குப் பிழைக்க வந்தபோது மடையானுக்கு வயது ஆறு. கொழுக்குமொழுக்கென்று உருண்டு திரிந்திருந்தான். தண்ணீர் வசதியில்லாத பொட்டல்காட்டில் மண்சுவர் வைத்து ஓடுபோட்டு ஜல்லித்தரையிட்ட வீட்டில் தறி அமைத்து முடித்தபோது குள்ளிசெட்டியாரோடு சேர்ந்து பசூர்காரியும் நெய்யத் தொடங்கினாள். மகள் ஜெயா சமையலையும் தறிகளுக்கான சுற்றுவேலைகளையும் கவனித்துக்கொண்டாள். விறகுக்கடை கிணற்றிலிருந்தும் பிச்சம்பாளையம் கோட்டை மாரியம்மன் கிணற்றிலிருந்தும் தண்ணீர் சுமப்பதும் அடுப்புக்கு முள்ளு வெட்டுவதுமாய் ஓடியாடிக்கொண்டிருந்த மடையான் பள்ளிக்கூடத்துப் பக்கமே தலைகாட்ட முடியவில்லை. 

மடையான் தறிக்குழியில் இறங்கி வாட்டமிடத் தொடங்கியபோது குள்ளிசெட்டியார் கண்ணை மூடிவிட்டார். பசூர் கிழவியின் தறியை ஜெயக்கா எடுத்துக்கொண்டாள்.

ஜெயக்காவுக்கு மேட்டாங்காட்டில் மாப்பிள்ளை பார்த்து கட்டிவைத்த பிறகு பசூர் கிழவிக்கு வீட்டில் பெரிதாய் வேலையொன்றும் இல்லாமல் போனது. மடையான் தனக்கான காரியங்கள் எல்லாவற்றையும் தானே பார்த்துக்கொண்டான். நாலங்கண வீட்டு வாசலில் நிழலிட்டுக் கிடக்கும் புங்க மரத்துக்குக் கீழே கித்தானை விரித்தமர்ந்து கடைகட்டினாள் பசூர் கிழவி. அவித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கெலாக்காய், சீனிப்புளிங்காய், மிளகாய்ப்பொடியிட்ட மாங்காய்ப் பத்தைகள் என்று சிறுபிள்ளைகளுக்கான சில்லரைக் கடை. தெருவில் போவோர் வருவோரை இழுத்துவைத்து ஓயாமல் வாய் பேசும்போதே ‘மடையானுக்கு ஒரு பொண்ணு பாரேன்’ என்று விண்ணப்பம் வைத்தாள். மடையானுக்குப் பெண் கொடுக்க யாரும் தயங்கமாட்டார்கள், அப்படியொரு உடம்பு அவனுக்கு வாய்க்காதிருந்தால்.

வியர்க்க விறுவிறுக்க நடந்தோடி வேலை செய்தபோதும் மடையானுக்கு உடம்பு குறையவில்லை. அவன் நடந்து வரும்போதே உருண்டு வருவது போலத்தான் இருக்கும். கன்னம், கழுத்து, கை-கால்கள் என எல்லா இடத்திலும் சதை கொழுத்து வழியும். சதைக்குள் இடுங்கின கண்கள். உருவம்தான் அப்படி. ஆனால் படு சுறுசுறுப்பு. காலை நேரத்தில் பாவடியில் பில்லுவாரை அழுத்திக்கொண்டு ஓடும்போது மடையானின் வேகத்துக்கு இன்னொருவர் ஈடுகொடுக்க முடியாது. வியர்வையில் நனைந்து சொட்டும் பனியனும் முழங்கால் வரைக்கும் தொளதொளத்து அசையும் பட்டாபட்டிக்கும் மேலே தொடைவரை மடித்துக்கட்டிய வேட்டியுமாய் ஓடிக்கொண்டிருப்பான். அந்தச் சுற்றுவட்டாரத்திலேயே அவனளவு குண்டான உருவத்தில் வேறு எவரும் இல்லை. சுத்த நெசவுக்காரன். தறியில் இறங்கி வாட்டமிடத் தொடங்கிவிட்டால் அநாவசியமாய் வெளியில் வரமாட்டான். சேலையை அறுத்து எடுத்துவிட்டுத்தான் மறுவேலை. தனது தறிக்கான சுற்றுவேலைகளுக்காக அவன் பசூர் கிழவியை எதிர்பார்ப்பதில்லை. 

தடித்த உடல்வாகு கொண்டோருக்கு குரல் மட்டும் இளைத்துத் துரும்பாகி கீச்சுக்குரலாக ஒலிக்கும் மாயம் மடையானின் விஷயத்திலும் நிகழ்ந்திருந்தது. அதிலும் சற்று பெண்சாயல் கொண்ட குரல் என்பதால் உடலுடன் சேர்ந்து அவனைக் கேலிசெய்ய ஏதுவாய்ப் போனது. மடையான் எதையும் பொருட்படுத்தமாட்டான். பலசமயம் அவனைக் கேலிசெய்கிறார்கள் என்றே அவனுக்குத் தெரியாது. 

ஆறுமுகம் டீக்கடையில் சாயங்கால வேளையில் அன்றாடம் நடக்கும் அரட்டைக் கச்சேரி அன்றும் தொடங்கியிருந்தது. மடையானுக்குத் தறியில் வேலை இல்லாததால் டீக்கடையில் உட்கார்ந்திருந்தான். 

“என்னடா மடையா… இப்பிடியே போனா பொம்பளைங்க போடற மாதிரி பாடி வாங்கி போடணுமாட்ட இருக்கு” என்று கட்டைபீடியை விரலிடுக்கில் இறுக்கியபடி செகடந்தாளி கரியப்பன் நக்கலாய்க் கேட்டான். மடையானுக்கு அவன் சொன்னது விளங்கவில்லை. முகத்தைப் பாவமாய் வைத்துக்கொண்டு சொன்னான், “அஆமுங்கண்ணா. இது இப்பிடியே தொங்கிட்டே போகுதுங்கண்ணா…”

அமாவாசையன்று ஆனந்தா கொட்டாயில் சினிமாவுக்குப் போய்விட்டு இட்டேரித் தடத்தில் திரும்பி வரும்போது பொரிக்கார சுப்பன் கேட்டான். “ஏன்டா மடையா, படத்துல டேன்ஸ் நல்லா இருந்துச்சா?”

“சூப்பர் ஆட்டம் பொரி. என்னமா ஆடறாளுங்க…” வியந்த அவன் குரலில் உற்சாகம்.

“வில்லு மாதிரி ஒடம்பு வளைஞ்சு நெளியுது. உனக்கும் ஒருமாதிரி ஆகலை?”

“அதெல்லாம் ஒன்னில்ல பொரி. ஆனா ராத்திரி படுத்துருக்கும் போது சமயத்துல டிங்குன்னு எந்திரிச்சிருது. அப்பத்தான் கஷ்டமா இருக்கும்.”

கொல்லென்ற சிரிப்புச் சத்தம் அனைவரையும் திரும்ப வைக்கும். 

அளவுக்கு மீறி கேலிசெய்யும்போது அவனுக்குக் கோபம் வந்துவிடும். மசைக் கோபம். முழியாங்கண் சிவந்து உதட்டைக் கடித்தபடி ஏறி மிதித்துவிடுவான். அதனால் யாரும் அளவுக்கு மீறத் துணியமாட்டார்கள்.

ஊர்ப் பொதுக்காரியங்களில் முதல் ஆளாக நிற்கும் மடையானுக்கென்று தனிப்பட்ட வேலைகள் காத்திருக்கும். புள்ளாகோயிலில் கிருத்திகை நாட்களில் பஜனையின் போது ஜால்ராவைக் கையில் வைத்தபடி தாளமிட்டு இலயித்திருப்பான். கிழிசல் இலைகளில் சுண்டல் விளம்புவான். அபிஷேகத்துக்கு இருபது குடம் தண்ணீரை அடிப்பம்பில் உற்சாகத்துடன் அடித்துத் தோளில் சுமந்து வருவான். மாரியம்மன் பொங்கலின் போது பூக்கம்பத்தைச் சுற்றி அவன் ஆடும் ஆட்டம் வெகு பிரபலம். வலதுகையை உயரத்தியபடி உடம்பைத் தூக்கிக்கொண்டு ஒரு குதி. தலை அதே சமயத்தில் மேலுயர்ந்து அசைந்து தாழும். அடுத்த அடியில் இடதுகை. தலைகட்டு வரி வசூலுக்கு மஞ்சள் காப்புடன் நாற்பது பக்க நோட்டைத் தூக்கிக்கொண்டு அலைவான். 

அன்றைக்கு அமாவாசை. காட்டன் மில்லில் சாயங்காலம் நாலேகால் சங்கு ஊதியபோது மடையான் சீனிபுளிங்கா மரத்துக்கு அடியில் மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். முதல்நாள் மோர்க்காரித் தோட்டத்தில் மாட்டுச்சாணியைப் பொறுக்கிக் கொண்டுவந்து ஆசாரத்தை வழித்து சுண்ணாம்பைக் கரைத்து கரைகட்டியிருந்தான். அரிசியை ஊறவைத்து ஒருபோசி நிறைய மாவாட்டி வைத்திருந்தான். காலையிலேயே இட்லி சுட்டு தக்காளி சாம்பாரும் ரெடி. கீழடுக்கில் மூன்றும் மேலடுக்கில் நான்குமாய் அலுமினியப் பானையில் ஆவிபறக்க வெந்திருந்த நான்கு இட்லிகளைத் தக்காளி சாம்பாரில் மூழ்கடித்து சுடச்சுட முழுங்கியிருந்தான். வழக்கமாய் இந்நேரம் மீதியிருக்கும் மூன்றையும் தின்றுவிட்டு சந்திரா கொட்டாயிக்குப் புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கிழவியிடம் சீராடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். இத்தனைக்கும் இன்று டெண்டு கொட்டாயில் அவனுக்குப் பிடித்த ‘என் அண்ணன்’. 

ஈரக்கூந்தலை உலர்த்தியபடி வெளியே வந்த மீனாட்சி மடையானைக் கண்டதும் சிரித்தபடியே கேட்டாள். “ஏய் நீ படத்துக்குப் போவுலியா?”

“ஆத்தா வாடிம்மா. நீயே இந்த நாயத்தை என்னன்னு கேளு?” பசூர் கிழவி புடவையை உதறியபடி எழுந்து வந்தாள். 

“நீ வாய வெச்சுட்டு சும்மா இருந்தாத்தானே. அவனை ஏதாச்சும் சொல்லிருப்பே.”

“நா என்னத்தை சொல்றது? காலையிலேர்ந்து அந்தப் பொண்ணு போட்டோ வேணும், வாங்கிக் குடுன்னு என்னையப் போட்டு உசுர எடுக்கறான். நா எங்காத்தா போறது போட்டாவுக்கு?”

மீனாட்சி ஒருநொடி திடுக்கிட்டு நின்றாள். பின் மடையானின் அருகில் வந்து அவன் முகத்தை நிமிர்த்தினாள். சிரிப்பை அடக்கியபடி நிதானித்தாள்.

“உனக்கு அத்தனை அவரசமாடா கண்ணு. அதான் இன்னும் ரெண்டு நாள்ல  நேர்லயே பாக்கப் போறேல்ல.” 

கண்ணில் நீர்வரச் சிரித்தவளைப் பார்த்ததும் மடையானுக்கு இன்னும் கோபம் தலைக்கேறியது.

“எனக்கொன்னும் வேணாம். நீங்களே போய் பாத்துக்கங்க.” விடுவிடுவென மாரியம்மன் கோயில் தடத்தில் நடக்கலானான். 

பெண் பார்க்கப் போய்விட்டு வந்த மீனாட்சிக்குத் தாங்கவில்லை. நேரடியாகவே பசூர் கிழவியிடம் அங்கலாய்த்தாள். “மடையாந்தான் மாப்ளேன்னு அந்தப் புள்ளைக்குத் தெரியுமா கெழவி? பொண்ணு அப்பிடியே கேயார் விஜியா மாதிரியிருக்கா. எப்பிடி இவனக் கட்டிக்க ஒத்துக்கிட்டா?”

பசூர் கிழவிக்கே உள்ளூர அப்படியொரு சந்தேகம் இருந்தது. அதுவே பெருமையாகவும்கூட. “உனக்கென்னடி அத்தனை பொறாமை. இப்ப என்ன… இரு… எம் பையன் தாலியக் கட்டி அழைச்சிட்டு வர்ற அன்னிக்கு எத்தனை பேர் வாயடைக்கப் போறாங்கன்னு பாரு. அவன் யோகம் அப்பிடி. ராஜாத்தி மாதிரி பொண்டாட்டி வாய்க்கப்போறா.”

சாயங்காலம் வாலிபால் மைதானத்துக்கு வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மடையான் வந்தவுடனே ஆட்டம் நின்றது. வியர்வை வழியும் உடலுடன் அனைவரும் மடையானைச் சூழ்ந்தனர்.

“ஏன்டா ஆட்டத்தை நிறுத்திட்டீங்க? நான் எந்த பக்கம் நிக்கணும்?” மடையான் தரையில் கிடந்த பந்தை எடுத்து அழுத்திப் பார்த்தான்.

“இருடா… பொண்ணு எப்பிடி இருந்தா. அதச் சொல்லு மொதல்லே.” 

“நெசத்தை சொல்லுட்டா… செரியாவே பாக்கலே நானு” மடையானின் முகம் கோணியது.

“ஏன்டா?”

“அங்க ஒரே கூட்டமா இருந்துச்சு. பொண்ணு காப்பி கொண்டு வந்தப்ப ஒரே பூ வாசம். எல்லாரும் என்னையே பாக்கற மாதிரி இருந்துச்சா. ஒருக்கா தலையை தூக்கிப் பாத்துட்டு காப்பி டம்ளரை எடுத்துட்டேன். அப்பறமா அந்தப் பக்கமா நிக்கற மாதிரி தெரிஞ்சுது. பளிச்சுன்னு மஞ்சப் புடவை கட்டிட்டு நெறையு பூ வெச்சுட்டு நின்னுது. கூடவே இன்னும் நாலஞ்சு பொண்ணுங்க. அதான் என்னால மொகத்தை செரியாவே பாக்க முடியலை. ஆனா…”

“ம்… சொல்லு.”

“ஆனா, ரொம்ப அழகா இருக்குதுன்னு எல்லாருமே சொல்றாங்க…” அவன் முகத்தில் சிரிப்பும் கூடவே கொஞ்சம் கூச்சமும். 

“பார்றா… நம்ம மடையானுக்குகூட மொகம் இப்பிடி செவக்குது.”

“பரவால்லே வுடு. கல்யாணத்தப்ப நல்லா பாத்துக்கலாம்.. ஆனா அந்தப் பொண்ணு உன்னைப் பாத்துருக்குமே மடையா. அப்பறம் எப்படி?”

“அப்பறம் எப்பிடின்னா? ஏன்டா எல்லாரும் இதையவே கேக்கறீங்க? உங்களுக்கெல்லாம் பொறாமைன்னு கெழவி சொல்றது செரிதான். பெரியவங்க என்ன சொல்றாங்க… ஒனக்குன்னு ஒருத்தி பொறந்துருப்பா, அவளைத்தான் நீ கட்டிக்க முடியும்னு. எனக்குன்னு பொறந்துருக்கறது அந்தப் பொண்ணு. அதான் நடக்குது.”

“செரி, செரி. கோச்சுக்காதே. நாம வேணா ஒரு நாள் கோயமுத்தூர் போய் இன்னொருக்கா பொண்ணைப் பாத்துட்டு வருவமா?”

கையிலிருந்து பந்தைத் தரையில் ஓங்கி எறிந்துவிட்டு விறுவிறுவென நடந்தான். 

“டேய் இருடா. நாங்க ஒன்னும் கேக்கல. வாடா….”

மடையான் திரும்பிப் பார்க்காமல் நடந்தான். 

“பொண்ணு பேரு என்னன்னு சொல்லிட்டு போடா…”

“சொல்லமாட்டேன்…”

அவனருகில் வந்து விழுந்தது பந்து. திரும்பிப் பார்த்துவிட்டு ஒற்றையடிப் பாதையில் நடந்தான். 

கோயமுத்தூரில் உக்கடம் தேவாங்கர் சத்திரத்தில் கல்யாணம். பளபளவென வண்ணத் தோரணங்கள் காற்றில் அசைய ஒலிபெருக்கியில் எம்ஜியார் பாடல் முழங்கிக்கொண்டிருந்தது. தரைத்தளத்தில் கூடமும், முதல் தளத்தில் தங்கும் அறைகளும் இருந்த மண்டபத்தைப் பார்த்ததுமே கிழவிக்குப் பெருமை தாங்கவில்லை.. தலைமுடியை நறுக்கி சவரம் செய்த முகத்துடன் வேட்டியும் முழுக்கைச் சட்டையுமாக மடையான் மாப்பிள்ளைக் கோலத்தில் உள்ளே நுழைந்தான். கனவில் மிதப்பது போலிருந்தது. மீனாட்சி அவன் கன்னத்தில் திருஷ்டிபொட்டு வைத்தாள். “எல்லார் கண்ணும் உம் மேலதான்… நல்லபடியா கலியாணம் முடிஞ்சு புள்ளக்குட்டியோட நல்லா இருக்கோணும்.”

ராத்திரி சாப்பாட்டு பந்தி முடிந்ததும் அருகிலிருந்த ராஜா தியேட்டருக்குப் புறப்பட்டார்கள் நண்பர்கள். இன்னும் அவர்கள் பெண்ணைப் பார்க்கவில்லை. ராத்திரி பத்து மணிக்கு மேல்தான் சீர். அப்போதுதான் பார்க்க முடியும். அதற்காகக் காத்திருந்தால் சினிமாவுக்குப் போக முடியாது. எப்படியிருந்தாலும் காலையில் முகூர்த்தப் பந்தலில் பார்க்கத்தானே போகிறோம் என்று கிளம்பினார்கள். “ஏன்டா, என்னைய விட்டுட்டு சினிமாவுக்குப் போறீங்களாடா?” என்று கோவித்துக்கொண்ட மடையானிடம் ‘எங்க பாட்டன் சொத்து’ படம் என்றதும் சந்தோஷமடைந்தான். “ஜெயிசங்கர் படந்தானே அது? வேணாம். நீங்களே போய் பாருங்க.” எம்ஜியார் படத்தைத் தவிர வேறெதையும் பார்க்கமாட்டான்.

காலையில் மஞ்சள் புடவையும் மாலையுமாய் மணவறைக்கு வந்தவளைப் பார்த்த நண்பர்கள் வாயடைத்து நின்றனர். எல்லோருமே சொன்னதுபோல மடையானின் அருகில் மணமகளாக அமர்ந்தவள் அழகி இல்லை, பேரழகி. கண்ணகி நகரிலும் காலனியிலும்கூட இப்படியொரு அழகியை இதுவரை கண்டதில்லை. கற்சிலை போல எல்லாமே கச்சிதமாக அமைந்தவளுக்குப் பக்கத்தில் மடையான். எப்படி இது சாத்தியம்? அழகு வாய்த்த அளவுக்கு அந்தப் பெண்ணுக்கு புத்தி இல்லையா? எப்படி இவனை மணந்துகொள்ள ஒத்துக்கொண்டாள்?

பொறாமையும் வியப்பும் எரிச்சலும் ஆட்கொண்டிருந்த அதே வேளையில் கெட்டிமேளம் கொட்டியது. மடையான் அவள் கழுத்தில் தாலிகட்டினான். அட்சதைகள் விழுந்தன. மாலைகளை மாற்றிக்கொண்டனர். 

மடையான் என்கிற ரங்கநாதனுக்கு, சரஸ்வதி மனைவியாகி அருகில் நிற்க ‘உரிமைக் குரல்’ எம்.ஜி.ஆர் தோளில் ஏர் வைத்து நிற்கும் படத்துடன் கூடிய வாழ்த்துமடலை நண்பர்கள் பரிசளித்தனர். 

எஸ்ஆர்டி பஸ்ஸில் திருப்பூருக்குத் திரும்பி வரும்போது மீனாட்சிதான் சொன்னாள். “பொண்ணு ரொம்ப கடுசா இருக்காப்பலத் தெரியுது. நீ வேணா பாரு… ரெண்டே மாசத்துல மடையானை கோயமுத்தூருக்கு கூட்டிட்டு வந்து மார்க்கெட்ல மூட்டை தூக்க வெச்சிருவா.”

“அப்ப அவங்க வீட்ல பொண்ணுக்கு மாப்ள பாக்கலை. மார்க்கட்ல மூட்டை தூக்கறதுக்கு ஆள் பாத்துருக்காங்க…” 

“பின்னெ என்னடா? நீதான் பாத்தில்ல… அவ இருக்கற அழகுக்கும் எடுப்புக்கும் இவனை எப்பிடிடா ஒத்துக்கிட்டா?”

மதியம் மூன்று மணிக்கு மணமக்கள் திருப்பூருக்கு வந்து சேர்ந்தவுடன் ‘மஞ்ச நீர்’ ஆடினார்கள். பாவுணத்தும் கட்டாந்தரையின் ஒரு எல்லையில் மடையான். மறு எல்லையில் மணமகள். இரண்டு பக்கமும் வாளிகளில் மஞ்சள் நீர். கல்யாணத்துக்கு வந்தவர்கள், வராதவர்கள், பக்கத்துத் தெருவைச் சேர்ந்தவர்கள் என எல்லோரும் கூடிநின்று வேடிக்கைப் பார்த்தார்கள். மணமகன் ஒரு கோப்பை மஞ்சள் நீரை எடுத்துக்கொண்டு மணமகள் இருக்கும் இடத்துக்கு நடந்து சென்று அவள் தலையில் ஊற்றினான். “நல்லா தலையத் தட்டிக் குடுப்பா…” கேலிச் சிரிப்புடன் குரல் எழுந்தது. அவன் திரும்பி வந்ததும் மணமகள் அதே போல ஒரு கோப்பை மஞ்சள் நீருடன் இவனிடம் வந்தாள். மடையான் தயாராக குனிந்து நின்றான். “இதென்ன நீ, இப்பிடி குனிஞ்சிட்டு நிக்கறே. நிமிந்து நில்லு. அப்பத்தானே பொண்ணை நல்லா பாக்க முடியும்.” அவன் சிரித்தபடியே அவளுடைய முகத்தைப் பார்த்தான். எந்தச் சலனமும் இல்லாமல் தண்ணீரை அவன் தோளில் ஊற்றிவிட்டு திரும்பி நடந்தாள். மூன்று முறை இருவரும் மஞ்சள் நீரை ஊற்றிக்கொண்டதும் சடங்கு முடிந்தது. 

அவளது கட்டான உருவத்தையும் இடை ஒடுங்கி அசைகிற நடையையும் பார்த்தவர்களுக்கு எதையும் நம்ப முடியவில்லை. “இப்பிடியொரு பொண்ணா இவனுக்கு வந்து வாச்சிருக்கு?” என்ற புலம்புல் ஓயவேயில்லை.. 

குளித்து முடித்து கூரைப் புடவையைக் கட்டிக்கொண்டு இடுப்பில் குடத்துடன் அவளைக் ‘கிணற்று நீர்’ எடுத்து வர அழைத்துச் சென்றனர். தலைநிறைய மல்லிகை, காதிலும் கழுத்திலும் பளபளக்கும் நகைகள், இலேசான மஞ்சள் பூச்சுடன் தெளிந்த முகம், திருத்தமான நெற்றிப்பொட்டு. மணக்கோலம் தருகிற கூடுதல் அழகுடன் அவள் தலைகுனிந்து நடந்தாள். மடையானுக்குப் பெருமை தாளவில்லை. ஊரே அவனைப் பார்த்து பொறாமைப்படுகிறது. உடனிருப்பவர்களின் வயிற்றுப் பொருமலை அவனால் உணர முடிந்தது. கிழவிக்குப் பெருமையையும் சந்தோஷத்தையும்விட கவலை அதிகமானது. “எல்லாருமே இப்பிடிச் சொன்னா இந்தப் பையன் எப்பிடி பொழைக்க முடியும்? நல்லபடியா இருக்கட்டும்னு ஒரு மனுஷங்கூட நெனக்க மாட்டேங்கறானே? ஒலகமே இப்பிடித்தானா…”

மறுநாள் காலையில் பாவுபோட வந்த குமார், மடையான் எப்போதும் போல வேப்பங்குச்சியைக் கடித்தபடி தலையில் உருமாலையுடன் நிற்பதைப் பார்த்துச் சிரித்தான். 

“என்ன மாப்ளே, சீக்கரமா எந்திரிச்சிட்டே?”

“ஆமா குமாரு. எப்பவும்போல அஞ்சு மணிக்கே முழிப்பு வந்திருச்சி…”

“அசதியா இல்லையா மாப்ளே? ராத்திரி தூங்கறதுக்கு லேட்டாயிருக்குமே?” அவன் சிரித்தபடியே கேட்டான்.

“எதுக்கு இப்ப நீ இப்பிடி குறும்பா பாத்துட்டு சிரிக்கறே? நீ நெனக்கற மாதிரியெல்லாம் ஒன்னும் நடக்கலை… போ… போய் வேலையப் பாரு.” 

“கோவிச்சுக்காத மாப்ளே. அதெப்பிடி மொத ராத்திரி அன்னிக்கு ஒன்னுமே நடக்கலேன்னா… அதும் இப்பிடியொரு…” அவன் தொடர்வதற்கு முன்பே மடையான் கையை ஓங்கினான்.

“காலைலே பொழப்பப் பாருடா. என்ன நடந்துச்சுன்னு வந்து கிண்டல் பண்ணிட்டு நிக்கறயா? போடா.”

குமார் சிரித்தபடியே நகர்ந்தான். “செரி மாப்ளே… அப்பறமா பேசிக்கலாம். எங்க போயிடப் போறே?”

திங்கட்கிழமை மதியம் மறுவீட்டுக்கு அழைத்துப் போனார்கள். “வெள்ளிக்கிழமை காலையிலே வந்துருங்க. மத்தியானம் சாப்பாடு முடிஞ்சி நீங்க மறுக்கா அழைச்சிட்டு வந்திருவீங்களாம்..” 

“அவந்தான் எந்த ஊருக்குப் போயி என்னத்தைக் கண்டிருக்கான். நாலு நாள் கோயமுத்தூர்ல இருந்து பாத்துட்டு வரட்டும்.” பசூர் கிழவி கண்ணீருடன் நின்றாள்.

ஆனால், அவன் வியாழக்கிழமை சாயங்காலமே திரும்பி வந்துவிட்டான்.

புங்கமரத்தடி நிழலில் புடவைத் தலைப்பை விரித்துப் படுத்திருந்தாள் பசூர் கிழவி. இரண்டு நாளாய் மடையானைப் பார்க்காத ஏக்கம். ‘இன்னொரு நா தானே. வந்துருவான். அதுக்கப்பறம் இங்கதானே இருக்கப் போறான்’ என்று சமாதானப்படுத்திக்கொண்டு கண்ணை மூடியிருந்தாள். குளுகுளுவென காற்று. அப்படியே தூங்கிப்போனாள்..

“இங்க ஏம்மா படுத்துருக்கறே? திண்ணையில போயி படுக்க வேண்டிதானே?” மடையானின் குரல் கேட்டது. ஆனாலும் அவள் கண்ணைத் திறக்கவில்லை.. 

“இந்தாம்மா… எழுந்திரு’’ அவன் தோளைப் பிடித்து உலுக்கவே எழுந்து உட்கார்ந்தாள். கடைவாயில் வழிந்த சளவாயைத் துடைத்தாள்.

“என்ன கண்ணு, எப்படா வந்தே? நாளைக்குத்தானே வெள்ளிக்கிழமை?” என்ன சொல்வதென்று தெரியாமல் என்னவோ கேட்டாள். 

சிறுநெல்லி ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டவன், பையிலிருந்து ஒவ்வொன்றாய் எடுத்துவைத்தான். வாழைப்பழ சீப்பு, முறுக்கு, அதிரசம். 

“சரசுக்கு ஒடம்பு சொகமில்லே. ரெண்டு நாளாவே காச்சல். தலவலி. டாக்டரப் பாத்து ஊசி போட்டிருக்கு. அதான் இன்னும் ரெண்டு நாள் அங்கயே எடுக்கட்டும்னு பாத்தேன். என் ஒருத்தனுக்காக நாளைக்கு மாமாவும் அத்தையும் வரணும். எதுக்கு செரமம்ன்னு நானே கௌம்பி வந்துட்டேன்.”

கொட்டையைத் துப்பிவிட்டு வாயைத் துடைத்தவனை நம்ப முடியாதவளாய் கேட்டாள். “அது செரி. ஆனா மொறைன்னு ஒன்னு இருக்குல்ல. இப்பிடியா திடுதிப்புன்னு கௌம்பி வருவே? அவியளும் ஒன்னும் சொல்லலியா?”

“இல்லல்ல… அவங்கல்லாம் இருங்க மாப்ளேன்னுதான் சொன்னாங்க. சரசுவும் அப்பிடித்தான் சொல்லிச்சு. ஆனா நாந்தான் வந்துட்டேன். தறி பூந்து ஒரு மாசமாச்சு. எல்லாம் அப்பிடியே கெடக்குது. அங்க இருந்து என்ன பண்ணறது? தின்னுட்டு தின்னுட்டு தூங்கணும். இங்க வந்தாலாச்சும் தறியை செரி பண்ணி நாலு வாட்டம் போடலாமேன்னு… ஒடம்பெல்லாம் ஒரே மந்தமாயிருச்சு. இப்பிடியே இருந்தா செரிப்படாதுன்னுதான்…”

அவன் சொல்வதையே ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோது மீனாட்சி எட்டிப் பார்த்தாள்.

“என்னடா இது இங்க வந்து நிக்கறே? சரசு எங்க?”

மீண்டும் அந்தக் கதையைச் சொல்லி முடித்தான். 

“இது நல்ல நாயமா இருக்கே? என்னதான் இருந்தாலும் மாப்ளைய இப்பிடி தனியா அனுப்புவாங்களாடா? எந்த ஊர்லயும் பாக்காத அதிசயமா இருக்கே?”

கிழவி கொடுத்த சூடான டீயைக் குடித்துவிட்டு தறிக்குழிக்குச் சென்றான் மடையான். கிழவியும் மீனாட்சியும் பேசுவதைக் கேட்டு இன்னும் சிலர் கூடி நின்று பேசினார்கள். அக்காவும் மாமாவும் வந்தபோது இருட்டிவிட்டது.

எல்லோரும் கூடிப் பேசிவிட்டு கலையும்போது கிழவியிடம் சொன்னார்கள். “என்னவோ அவன் கௌம்பி வந்துட்டான். மருமவளுக்கு ஒடம்பு செரியாகட்டும். நாலு நாள் கழிச்சு போயி புள்ளைய கூட்டிட்டு வந்தர்லாம். அவனும் தறி பூதலாம்னுதானே வந்துருக்கான். நல்லதுதான்.. இருக்கட்டும்.”

அடுத்த புதன்கிழமை மடையான் சரசுவை அழைத்து வருவதாகச் சொல்லி புறப்பட்டுப் போனான். ஆனால் அன்று மாலையே உற்சாகமற்றவனாய்த் திரும்பி வந்தான். சரசு வரவில்லை. என்னவென்று விசாரித்த கிழவியிடம் எந்தப் பதிலையும் சொல்லாமல் சினிமாவுக்குப் போனவன், ராத்திரி பதினொரு மணிக்குத்தான் திரும்பி வந்தான்.

புலம்பியபடியே திண்ணையில் காத்திருந்த கிழவியைக் கண்டதும் எரிச்சலுடன் கத்தினான். “எதுக்கு இப்ப பொலம்பிட்டு கெடக்கறே? அவ உனிமே இங்க வரமாட்டாளாம். கல்யாணத்துக்கு முன்னாடியே பேச்சே அதானாமே? ஒனக்குகூட தெரியும்னு சொல்றாங்க. அப்பறம் எதுக்கு இப்பிடி அழுகற மாதிரி ஜாலாக்கு பண்றே?”

கிழவி எழுந்து வந்து அவன் கையைப் பற்றினாள். “சாமி, சத்தம் போடாத சாமி. அவங்க சொன்னதெல்லாம் வாஸ்தவந்தேன். ஆனா கல்யாண முடிஞ்சா எல்லாம் செரியாப் போகும்னு நெனச்சு செரின்னு சொன்னேன். இப்பிடி பண்ணுவாங்கன்னு நெனக்கல சாமி.”

“நீ எப்ப வேணா இங்க வர்லாம், போலாம். ஒரு பிரச்சினையுமில்ல. ஆனா நா அங்க வந்து இருக்கமாட்டேன்னு சொல்றா சரசு. அதெல்லாம் என்னால முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அவ இங்க வந்து எங்கூட இருக்கறதுன்னு இருக்கட்டும். நா அங்கல்லாம் போயி இருக்க முடியாது.” தீர்மானமாகச் சொன்னவன் சமையல் தடுப்புக்குள் போய் சோத்துப் போசியை உருட்டினான். தட்டு நிறைய சோற்றை அள்ளிப் போட்டுக்கொண்டு புளித்த மோரை எடுத்து ஊற்றினான். திண்ணையில் உட்கார்ந்து பிசைந்து உண்ணத் தொடங்கினான்..

மறுநாள் காலையில் கூடிப் பேசினார்கள். நாலுபேர் போய் என்ன விபரமென்று கேட்டு வருவது என்று தீர்மானித்தார்கள்.. மதியம் இரண்டரை மணி சாந்தாமணி பஸ்ஸூக்குப் புறப்பட்டு போனார்கள்.

“கல்யாணத்தப்ப எல்லாரும் அப்பிடி வயிறெரிஞ்சாங்க. பொறாமைப்பட்டாங்க. அதான் இப்பிடி வந்து முடிஞ்சிருக்கு.. யப்பா… கருப்பராயா, எம் புள்ளைக்கு ஒரு நல்ல வழி காட்டுப்பா. கெடா வெட்டி பொங்க போடறேன்”. கிழவி திண்ணையில் உட்கார்ந்து புலம்பிக்கொண்டேயிருந்தாள். 

மடையான் எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.. காலையிலிருந்து தறியிலிருந்து எழுந்திருக்கவே இல்லை. கை வெளிச்சம் மங்கி இனி வாட்டம்போடுவது முடியாது என்ற நிலையில்தான் வெளியே வந்தான். தொட்டியிலிருந்து தண்ணீரை அள்ளித் தலையில் ஊற்றிக்கொண்டவன், சட்டையை மாட்டிக்கொண்டு மைதானத்துக்கு நடந்தான். 

“நீ இன்னும் ஊருக்குப் போகலையா?”

“எதுக்குடா போகோணும்?”

“சொல்றேன்னு தப்பா நெனக்காதே. எனக்கெல்லாம் இப்பிடியொரு பொண்ணு சம்சாரமா வாச்சிருந்தா ஏன் எதுக்குன்னு ஒன்னுமே கேக்க மாட்டேன். இப்ப என்ன உன்னை அங்கயே வந்து இருக்க சொல்றாங்க. அவ்ளோதானே. போ. சந்தோஷமா இரு. அத வுட்டுட்டு இங்க வந்து உக்காந்துருக்கே.”

“அவ அழகா இருக்காங்கறதுக்காக எல்லாத்தையும் வுட்டுட்டு அவ பின்னாடியே போவணுமா? என்னால முடியாது.”

“இங்க இருந்து என்னடா பண்ண போறே? தறிக்குழிலயே கெடந்து கடேசீல என்னத்தடா கண்டோம்? உனக்கொரு நல்ல சந்தர்ப்பம் கெடைச்சிருக்கு. கோயமுத்தூரு பெரிய ஊரு. மார்க்கெட்ல போயி கூடமாட ஒத்தாசையா இரு. பொழச்சிக்கலாம். கண்ணுக்கு நெறைஞ்ச பொண்டாட்டி வேற. யோகம் வாச்சிருக்கு. வேண்டாம்னு புடிவாதம் பண்ணாத.”

“என்னடா யோகம்? மரியாதை கெட்ட யோகம். பொண்டாட்டி வீட்ல போயி உக்காந்திருக்கறது ஒரு பொழப்பாடா? அதெல்லாம் என்னால முடியாது.”

“சரி. பரவால்லே, வேணாம். இப்போதைக்கு செரின்னு கொஞ்சநா இருந்துட்டு அவளை சரிபண்ணி சமாதானப்படுத்தி இங்க கூட்டிட்டு வர்ற வழியைப் பாக்கலாமில்ல… கூடவே சேந்து இருந்தாதானே வழிக்கு கொண்டுவர முடியும்? இப்பிடி விட்டுட்டு வந்துட்டா உன்னைப் பத்தி யோசிக்கவே மாட்டா. நான் சொல்றது புரியுதா?”

“அதெல்லாம் நல்லா புரியது. அதுகூட தெரியாமயா இருக்கேன்? அவளுக்குத்தான் என்னைக் கண்டாலே ஆகலையே. அப்பறம் எப்பிடி கூடவே இருந்து வழிக்குக் கொண்டு வரது?”

எல்லோர் முகத்திலும் சட்டென ஒரு சந்தோஷம் பரவியதை அவன் கவனிக்கவில்லை. 

“நீதான் புடிக்கற மாதிரி நடந்துக்கணும். உடனே காரியம் ஆகுமா?”

“ஒரு காரியமும் ஆகவேணாம். மொதா நாள்லேர்ந்து பக்கத்துல இருக்கும்போதெல்லாம் அவ சொன்ன ஒரே வார்த்தை ‘எனக்குத் தலவலி’. அவ்ளோதான்.. வேறென்ன காரியம் ஆகும்?”

“அப்ப ஒன்னுமே நடக்கலையாடா?”

“ஒரு மண்ணும் நடக்கலை. போதுமா?” எரிச்சலுடன் எழுந்து இருட்டில் நடந்தான். 

பின்னால் சிரிப்பலை எழுந்து அடங்கியதை அவன் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

பஞ்சாயத்து பேசப்போனவர்கள் வெறுங்கையுடன் திரும்பி வந்தார்கள். “அவங்க ரொம்ப கெடுசா இருக்காங்க. கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னதுதானே? இப்ப என்ன புதுசா பேசறதுக்கு இருக்கு? இங்க மார்க்கெட்ல கடை இருக்கு. அதை எப்பிடி விட்டுட்டு வர முடியும்? மாப்ளை வேணா வந்துட்டு போயிட்டு இருக்கட்டும். நோம்பி நொடின்னா புள்ளைய ஒரு நா ரெண்டு நா அனுப்பி வெக்கறோம். அவ்ளோதான். அங்க வந்து குடித்தனம் பண்றதெல்லாம் தோதுப்படாதுன்னு கறாரா சொல்லிட்டாங்க… வேறென்ன பண்ண முடியும்?”

“பெரியவங்க நீங்களே இப்பிடிச் சொன்னா என்ன பண்றது? வேறொன்னும் வழியில்லையா?”

“இப்போதைக்கு கொஞ்ச நாள் போட்டும். பாப்போம். எல்லாத்துக்கும் ஒரு வழி இருக்கும்.”

அவர்கள் பேசுவதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல மடையான் வேகமாக வாட்டம்போட்டுக் கொண்டிருந்தான்.

கொஞ்ச நாள் கழித்து வழி பிறந்ததுபோல அந்தச் செய்தி வந்தது. சரசு முழுகாமல் இருக்கிறாள் என்று சொல்லி அனுப்பினார்கள்.

கிழவிக்கு வாயெல்லாம் பல். சந்தோஷத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் கைகூப்பி கருப்பராயனுக்கு நன்றி சொன்னாள். 

சேதி சொல்ல வந்தவர் துண்டை உதறிக்கொண்டு அப்போதுதான் திண்ணையில் உட்கார்ந்தார். சொம்புத் தண்ணியைக் கொண்டுவந்து நீட்டினாள் கிழவி. தறிக்குழியிலிருந்து வேகமாக எழுந்து வந்தான் மடையான். வியர்வையில் தெப்பலாக நனைந்த உடல். பெரிய கண்களை உருட்டியபடி எதிரில் வந்து நின்றான்.

“யாரு ஊட்ல வந்து என்ன சமாச்சாரம் சொல்றே? மரியாதையா எந்திரிச்சி போயிருங்க. அப்பறம் வில்லங்கமா எதாச்சும் நடந்துபோவும்…”

கைகள் நடுங்க அவர் சொம்பைக் கீழே வைத்துவிட்டு எழுந்தார். மடையானைப் பார்க்கவே பயமாக இருந்தது. கண்கள் உருண்டு சிவந்திருந்தன. உதடுகள் துடிக்க ஆவேசத்துடன் முறைத்தான்.

“என்னடா கண்ணு இப்பிடி பேசறே? நல்ல சமாச்சாரம் சொல்ல வந்துருக்காரு. உனக்கொரு வழி பொறந்துருச்சுன்னு பாத்தா நீ என்னவோ ஔர்றே?”

“கெழவி, வாயை மூடிட்டு அக்கட்டால போயிரு. செவுனில போட்ருவேன்.” அவள் கையை உதறினான்.

“இதுக்குத்தான் இவ்ளோ நாடகம் போட்டாங்களா? எவன்கிட்டயோ வாங்கின பாவத்தை என் தலையில போடறதுக்குத்தான் இத்தனை வேலையா? பாத்தீங்களா? எல்லாரும் சொன்னீங்களே, பொண்ணு எவ்ளோ அழகா இருக்குன்னு. உன்னை எப்பிடிடா கட்டிக்க ஒத்துக்கிட்டான்னு கேட்டீங்களே? இப்பத் தெரியுதா?”

யாரும் எதுவும் பேசவில்லை. வந்தவர் தலையைக் குனிந்தபடி வேகமாக வெளியில் போனார். வேப்பமரத்தடியில் அவரை நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தபோது மடையான் மறுபடியும் தறிக்குழியில் புகுந்திருந்தான்.

*

பின்குறிப்பு: தமிழினி அச்சிதழில் சில நடைச்சித்திரங்களை எம்.கோபாலகிருஷ்ணன் எழுதியிருந்தார். ராஜபிளவை, காற்றில் எழுதிய ஓலை, ஒத்தத்தறி முதலியார், எங்கிருந்தோ வந்தான் ஆகிய நான்கு சித்திரங்கள் அதில் வெளியாகின. அதன் ஐந்தாம் சித்திரம் இது.

2 comments

Lajshmi November 26, 2021 - 6:11 pm

Excellent

Manguni December 12, 2021 - 10:47 pm

ஒரு எளிய கதை போல் தெரிகிறது. ஏதேனும் வாசகனின் கற்பனைக்கு விடும் இடம் இல்லை. அல்லது எனது சின்ன அறிவுக்கு எட்டவில்லை.

ஆனாலும் கதை நடை அருமை. கதை களமும் புதிது அருமை. வாழ்த்துக்கள்

Comments are closed.