தேவருக்காக வேய்ந்த கூரை – வில்லியம் ஃபாக்னர்

by கார்குழலி
1 comment

விடிவதற்கு ஒரு மணி நேரம் முன்னரே எழுந்து கோவேறு கழுதையில் ஏறி வெட்டுக்கத்தியையும் சுத்தியலையும் கடன்வாங்குவதற்காக கில்லேக்ரூவின் வீட்டுக்குப் போனார் அப்பா. நாற்பது நிமிடங்களுக்குள் திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால் சூரியன் மேலே எழுந்து, நான் பாலைக் கறந்து தீனி வைத்துவிட்டுக் காலை உணவைச் சாப்பிடும் போதுதான் திரும்பி வந்தார். கோவேறு கழுதை வாயில் நுரை தள்ளியதோடு அதன் விலா எலும்புக்கருகே விக்கல் எடுப்பதைப் போலத் துடித்தது.

“நரி வேட்டையாம் நரி வேட்டை. எழுபது வயது முதியவர். இரண்டு பாதங்களும் கூடவே ஒரு முட்டியும் ஏற்கனவே இடுகாட்டுக்குள் எட்டி வைத்த வயது. அவர் அருகில் வந்து காதுக்குள்ளேயே ஊளையிட்டால் ஒழிய காது கேட்காது. இதில் இரவு முழுவதும் குன்றின் மேல் உட்கார்ந்துகொண்டு நரி ஓடுவதைக் கேட்கிறாராம். காலை உணவை எடுத்து வை,” என்று அம்மாவிடம் சொன்னார்.

“இந்த நிமிடம் விட்ஃபீல்ட் அங்கே வந்து நின்றுகொண்டு இருப்பார். பலகை அறுக்கும் மரத்தின் அருகே கையில் கடிகாரத்தை வைத்துக்கொண்டு நிற்பார்.”

சொன்னது போலவே நின்றுகொண்டிருந்தார். தேவாலயத்தைக் கடந்து போன போது சோலோன் க்விக்கின் பள்ளிப் பேருந்து மட்டுமின்றி அருட்திரு விட்பீல்ஃடின் வயதான பெண் குதிரையும் நின்றது. கோவேறு கழுதையை மரக்கன்று ஒன்றில் கட்டிப் போட்டுவிட்டு உணவுத் தூக்கை கிளையில் தொங்கவிட்டோம். அப்பா கில்லேக்ரூவின் வெட்டுக்கத்தியையும் சுத்தியலையும் ஆப்புகளையும் தூக்கிக்கொண்டார், நான் கோடரியை எடுத்துக்கொண்டேன்; பலகை அறுக்கும் மரத்தை நோக்கி நடந்தோம். சோலோனும் ஹோமர் புக்ரைட்டும் வெட்டுக்கத்தியோடும் சுத்தியலோடும் கோடரியோடும் ஆப்போடும் ஆளுக்கொரு அறுத்துப்போட்ட மரத்தின் மேல் உட்கார்ந்திருந்தார்கள். விட்பீஃல்ட் வெள்ளாவியில் வெளுக்கப்பட்ட சட்டையும் கறுப்புத் தொப்பியும் கால்சட்டையும் கழுத்துப் பட்டையும் அணிந்திருந்தார். அப்பா சொன்னது போலவே கையில் கடிகாரத்தைப் வைத்துக்கொண்டு நின்றிருந்தார். தங்கத்தாலான கடிகாரம் காலை நேரத்துச் சூரிய ஒளியில் பார்ப்பதற்கு நன்கு விளைந்த பரங்கிக்காயைப் போல இருந்தது.

“தாமதமாக வந்திருக்கிறாய்,” என்றார்.

முதியவர் கில்லேக்ரூ இரவு முழுவதும் நரி வேட்டையாடப் போன கதையை மறுபடியும் சொன்னார் அப்பா. வீட்டில் திருமதி கில்லேக்ரூவும் சமையல் வேலை செய்பவரும் மட்டுமே இருந்தார்கள். வெட்டுக்கத்தியை எடுத்துக் கொடுக்க யாரும் இல்லை. எப்படி இருந்தாலும் சமையல் வேலை செய்பவரால் கில்லேக்ரூவின் ஆயுதங்களை எடுத்துக்கொடுக்க முடியாது. திருமதி கில்லேக்ரூவுக்கோ அவள் கணவனைவிடவும் அதிகமாகக் காது கேட்காது. வீடு பற்றி எரிகிறது என்று ஓடிப்போய்ச் சொன்னாலும் சாய்ந்தாடும் நாற்காலியில் ஆடியபடியே “நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” என்பார். இல்லாவிட்டால் நீங்கள் வாயைத் திறப்பதற்கு முன்னரே  சமையல் வேலை செய்பவரிடம் நாய்களை அவிழ்த்துவிடுமாறு உரத்த குரலில் சொல்லுவார்.

“நீ வெட்டுக்கத்தியை நேற்றே வாங்கி வைத்திருக்க வேண்டும்,” என்றார் விட்ஃபீல்ட். “இன்றைக்குத் தேவரின் இல்லத்துக்கு கூரை வேய்ந்து தரவேண்டும் என்பது ஒரு மாதத்துக்கு முன்னாடியே முடிவானது தெரியுமல்லவா?”

“இரண்டு மணி நேரம்தானே தாமதமானது? தேவர் மன்னித்து விடுவார். நேரத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை அவர். பாபவிமோசனம் பெற்று வீடுபேறு எய்துவதில் மட்டுமே ஆர்வமுள்ளவர்,” என்றார் அப்பா.

விட்ஃபீல்டுக்கு அப்பா முடிக்கும் வரை பொறுமையில்லை. திடீரென இடி இடித்து மழை பொழிவது போல அப்பாவைப் பார்த்து கத்தும்போது அவர் இன்னும் உயரமாகிவிட்டது போலத் தோன்றியது. “அவருக்கு எதிலும் ஆர்வமில்லை. இரண்டுக்கும் அவரே எஜமானன் எனும்போது ஒன்றில் மட்டும் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்? அவருடைய தேவாலயத்தின் கூரையை மாற்றுவதற்குத் தேவையான உபகரணங்களைத் தக்க நேரத்தில் இரவல் வாங்கி வைக்க முடியாத குழப்பமிக்க ஏழை ஆத்மாக்களுக்காக அவர் ஏன் இரங்க வேண்டும் என்பது எனக்கும் தெரியவில்லை. ஒருவேளை அவர்தான் அவர்களைப் படைத்தவர் என்பதாலா? ‘நான்தான் அவர்களைப் படைத்தேன். ஏனென்று தெரியவில்லை என்றாலும் அதைச் செய்துவிட்டபடியால் ஆண்டவராகிய நான், என் சட்டையின் கைகளைச் சுருட்டிவிட்டுக்கொண்டு அவர்களுக்கு விருப்பமில்லையென்றாலும் மகிமைக்கு இழுத்துக்கொண்டு வருகிறேன்,’ என்று ஒருவேளை தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறாரோ?”

ஆனால் அது இங்கோ அங்கோ இப்போதோ நடக்கப்போவதில்லை என்பதும் அவர் இங்கே இருக்கும் வரையிலும் நடக்காது என்பதும் தெரிந்திருந்தது. கடிகாரத்தைக் கால்சட்டைக்குள் வைத்துவிட்டு சோலோனையும் ஹோமரையும் கை காட்டி அழைத்தார். அவரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் தொப்பியைக் கழற்றினோம். சூரியன் இருந்த திசை நோக்கி முகத்தை உயர்த்தி கண்களை மூடிக்கொண்டார். புருவங்கள் பாறையின் விளிம்பில் படுத்திருக்கும் இரண்டு பெரிய கருஞ்சாம்பல் நிற கம்பளிப்பூச்சிகளைப் போல இருந்தன. 

“தேவரே, இவர்கள் நல்ல நேரான கூரையைச் சமமாக வேயட்டும். அவற்றைப் பிளப்பது இலகுவாக இருக்கட்டும். அவை உங்களுக்கானவை,” என்றார். பிறகு கண்ணைத் திறந்து எங்களைப் பார்த்தார், குறிப்பாக அப்பாவைப் பார்த்தார். பிறகு எல்லா முதியவர்களையும் போலக் குதிரையின் மேல் மெதுவாகவும் விறைப்பாகவும் ஏறி உட்கார்ந்து அங்கிருந்து கிளம்பினார். 

அப்பா வெட்டுக்கத்தியையும் சுத்தியலையும் மூன்று ஆப்புகளையும் தரையில் வரிசையாக அடுக்கி வைத்துவிட்டுக் கோடரியைக் கையில் எடுத்தார்.

“நல்லது, மக்களே. வேலையை ஆரம்பிக்கலாமா? ஏற்கனவே தாமதமாகிவிட்டது.”

“நானும் ஹோமரும் தாமதமாக வரவில்லை. சரியான நேரத்துக்கு வந்துவிட்டோம்,” என்றார் சோலோன். இப்போது ஹோமரும் அவனும் வெட்டிய மரத்தின் மேலே உட்காராமல் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தார்கள். ஹோமர் ஏதோ குச்சியைக் கத்தியால் சீவிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். அதற்கு முன்னால் கவனித்திருக்கவில்லை. “நான் வந்து இரண்டு மணி நேரத்துக்குக் கொஞ்சம் அதிகமாகிவிட்டது, ” என்றார் சோலோன். 

கோடரியைப் பிடித்தபடி முன்னே சாய்ந்து நின்றார் அப்பா. “சரி ஒரு மணி நேரமாகி இருக்கலாம். ஒரு வாதத்துக்கு இரண்டு என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். சரியா?” என்றார்.

“என்ன வாதம்?” என்றார் ஹோமர். 

“சரி, இரண்டு மணி நேரம் என்றே வைத்துக்கொள்ளலாம். சரியா?” என்றார்.

“அப்படியென்றால் மூன்று நபர்களின் வேலை நேரத்தை இரண்டு மணி நேரத்தோடு பெருக்க வேண்டும்,” என்றார் சோலோன். “மொத்தமாக ஆறு வேலை அலகுகள்”. யோக்னாபடாவ்பா மாவட்டத்திற்கு வேலையற்றோருக்கான வேலைவாய்ப்புத் திட்டம் வந்து வேலையும் உணவும் படுக்கையும் தந்தபோது முதன்முதலில் ஜெஃபர்சனுக்குச் சென்றவர் சோலோன். தினமும் காலையில் அவருடைய பள்ளிப் பேருந்தை 22 மைல் ஓட்டிச் சென்றுவிட்டு இரவில் திரும்புவார். ஒரு வாரத்துக்குப் பிறகு வயலை வேறு ஒருவரின் பெயரில் எழுதிவைப்பதோடு அவரே கட்டிமுடித்த பேருந்தையும் அவர் பெயரில் வைத்திருக்கவோ ஓட்டவோ முடியாது என்பதையும் தெரிந்துகொண்டார். அன்று திரும்பி வந்தவர் மீண்டும் அந்தப் பக்கம் போகவே இல்லை. அதுமுதல் வேலையற்றோருக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பற்றி யாராவது பேசினால் சண்டைக்குப் போவார். ஆனால் அவ்வப்போது இப்போது செய்ததைப் போல வேலை நேர அலகுக் கணக்கில்தான் எதையும் பேசுவார். “ஆறு அலகுகள் குறைவாக இருக்கிறது.”

“அதில் நான்கு அலகுகளை நீயும் ஹோமரும் சும்மா உட்கார்ந்து எனக்காகக் காத்துக்கொண்டிருந்த நேரத்தில் செய்து முடித்திருக்கலாம்,” என்றார் அப்பா. 

“நாங்கள் அப்படிச் செய்யவில்லையே!” என்றார் சோலோன். “தேவாலயத்தின் கூரையை வேய்வதற்காக மூன்று நபர்களின் வேலை நேரத்தை பன்னிரண்டு மணி நேரத்துக்குத் தருவதாகவும் அதை இரண்டு தொகுப்புகளில் தருவதாகவும் விட்ஃபீல்டிடம் சொல்லி இருந்தோம். சூரியன் உதிக்கும்போதே இங்கே வந்துவிட்டோம், மூன்றாவது நபரும் வந்துவிட்டால் வேலையைத் தொடங்கிவிடலாம் என்று காத்திருந்தோம். கடந்த சில வருடங்களாக நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு முன்னேற்றத்தைக் கொண்டு வந்திருக்கும் வேலை பற்றிய நவீன கருத்துகள் உனக்குத் தெரியவில்லை.”

“என்ன நவீன கருத்துகள்?” என்றார் அப்பா. “என்னைப் பொறுத்தவரை வேலை குறித்து ஒரே ஒரு கருத்துதான் உண்டு. செய்யும் வரை முடியாது, செய்தால் முடிந்துவிடும்.” 

மீண்டும் நிதானமாக குச்சியை நீளவாக்கில் சீவினார் ஹோமர். அவருடைய கத்தி கூர்மையாக இருந்தது. 

புகையிலை பெட்டியில் இருந்து புகையிலையை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு ஹோமரிடம் நீட்டினார் சோலோன். அவர் வேண்டாமெனத் தலையை அசைத்ததும்  பெட்டியை மூடி கால்சட்டைப் பைக்குள் வைத்தார்.

“ஆக மொத்தம், எழுபது வயது முதியவர் ஒருவர் நரி வேட்டையில் இருந்து திரும்பி வருவதற்காக நான் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் காட்டுக்குள் அவருக்கு என்ன வேலை என்று புரியவில்லை. நெடுஞ்சாலையில் இருக்கும் இசையும் உணவும் பரிமாறும் விடுதியில் இரவு முழுவதும் உட்கார்ந்திருப்பது போன்ற வெட்டி வேலை. நாம் மூவரும் நாளை மறுபடியும் வந்து அந்த இரண்டு மணி நேரத்துக்கான வேலையைச் செய்து முடிக்க வேண்டும். நீயும் ஹோமரும்…”

“என்னால் வரமுடியாது. ஹோமரைப் பற்றி எனக்குத் தெரியாது. விட்ஃபீல்டிடம் ஒரு நாள் என்று சொன்னேன். சூரியன் உதிக்கும்போது வேலையைத் தொடங்குவதற்காக வந்துவிட்டேன். சூரியன் மறையும்போது என் வேலையும் முடிந்துவிடும்.”

“புரிகிறது,” என்றார் அப்பா. “ம்ம்ம்… புரிகிறது. நான் மட்டும் திரும்பி வர வேண்டும். நான் மட்டும் தனியாக வர வேண்டும். நீயும் ஹோமரும் இளைப்பாறிய இரண்டு மணி நேரத்துக்காக காலை முழுவதும் முதுகு உடைய வேலை செய்ய வேண்டும். நீயும் ஹோமரும் வேலை செய்யாத முந்தைய நாளின் இரண்டு மணி நேரத்தை ஈடுசெய்ய அதற்கு அடுத்த நாள் கூடுதலாக இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு நான் வேலை செய்ய வேண்டும்.”

“ஒரு காலைப் பொழுது  மட்டுமல்ல, அதைவிட அதிகமான நேரமாகும்,” என்றார் சோலோன். “மொத்த நாளையும் சீர்குலைக்கப் போகிறது. இன்னும் ஆறு அலகுகள் பாக்கி இருக்கிறது. ஆறு ஒரு-மணி-நேர-வேலை அலகுகள். நானும் ஹோமரும் சேர்ந்து செய்யும் வேலையை நீ இரண்டு மடங்கு வேகத்தோடு செய்தால் நான்கு மணி நேரத்தில் முடிக்கலாம். மூன்று மடங்கு வேகத்தில் செய்து இரண்டே மணி நேரத்தில் முடிப்பது கொஞ்சம் சிரமம்.”

அப்பா எழுந்து நின்று சிரமத்தோடு மூச்சுவிடுவதைக் கேட்க முடிந்தது. “அப்படியென்றால்,” என்றார், “அப்படியென்றால்.” கோடரியை உயரத் தூக்கி அதன் கூர்மையான பகுதியை மரத்துக்குள் நுழைத்துப் பிளந்தார். “அப்படியென்றால், இந்த நிமிடம் என் வீட்டில் வேலை இருக்கும்போது அரை நாளை இங்கே தண்டம் செலுத்த வேண்டும். நீங்கள் இரண்டு பேரும் இரண்டு மணி நேரம் எந்த வேலையும் செய்யாமல் இருந்த காரணத்தால் நான் ஆறு மணி நேரம் அதிகம் வேலை செய்ய வேண்டும். ஏனென்றால் நான் என்னால் முடிந்தவரை கடுமையாக உழைக்கும் சாதாரண விவசாயி மட்டுமே. நானொன்றும் க்விக் அல்லது புக்ரைட் போலச் சொந்தமாக வெட்டுக்கத்தி வைத்திருக்கும் கோடீஸ்வரன் இல்லையே!”

எல்லோரும் வேலை செய்யத் தொடங்கினார்கள். வெட்டிய மரங்களை குறுகிய துண்டங்களாகப் பிளந்து பாவோடுகளாக இழைத்தார்கள். டல், ஸ்நோப்ஸ் மற்றும் வேறு சிலரும் மறுநாள் வந்து பழைய ஓடுகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு புதியவற்றைத் தேவாலாயத்தின் கூரையின் மேல் ஆணி அடித்துப் பொருத்துவதாகச் சொல்லியிருந்தார்கள். சோலோனும் ஹோமரும் கால்களை அகட்டி வைத்துக்கொண்டு எதிரெதிரே உட்கார்ந்துகொண்டார்கள். மரத்துண்டை நடுவில் வைத்து எளிதாக சிரமமே இல்லாமல் இழைத்தார்கள். இரண்டு கடிகாரங்கள் சீராகத் துடிப்பதைப் போல இருந்தது. புஸ் புஸ் என மூச்சு வாங்கியபடி அப்பா வேலை செய்வதைப் பார்த்த போது மொக்காஸின் பாம்பைக் கொல்வது போல இருந்தது.

சுத்தியலைக் கடினமாக வீசுவதற்குப் பதில் கொஞ்சம் வேகமாக வீசினார் என்றால் சோலோன், ஹோமர் இருவரும் சேர்ந்து இழைக்கும் அதே அளவு ஓடுகளை அவரும் செய்துவிட முடியும். சுத்தியலைத் தலைக்கு மேலே உயர்த்தி கிட்டத்தட்ட ஒரு நிமிடத்துக்கு கீழேயே இறக்காமல் வைத்திருந்தார். அப்புறம் அதை வெட்டுக்கத்தியின் மேல் வீசும் ஒவ்வொரு முறையும் ஓடு தெறித்துச் சிதறுவது மட்டுமன்றி வெட்டுக்கத்தியின் கைப்பிடி பாதி வரை நிலத்துக்குள் இறங்கியது. அப்பா கீழே உட்கார்ந்து பொறுமையாகவும் பலங்கொண்டமட்டும் முனைந்தும் அதை வெளியே இழுத்தார். அது உள்ளேயே ஏதாவது வேரிலோ பாறையிலோ சிக்கிக்கொண்டால் நல்லது என்று அவர் நினைப்பது போல இருந்தது. 

“கவனமாக இல்லை என்றால் எதுவுமே செய்ய முடியாமல் போகும். மீதமிருக்கும் ஆறு மணி நேர வேலையையும் செய்ய முடியாது, சும்மா இருக்கவேண்டியிருக்கும்,” என்றார் சோலோன். 

அப்பா நிமிர்ந்து பார்க்கவேயில்லை. “தள்ளிப் போ,” என்றார்.

சோலோன் நகர்ந்துகொண்டான். தண்ணீர் வாளியை நகர்த்தாமல் விட்டிருந்தால் அப்பா அதையும் பிளந்திருப்பார். இந்த முறை ஓடு சோலோனின் முழங்காலுக்குக் கீழே வெட்டரிவாளைப் போல உரசியபடி பறந்து சென்றது.  

“அந்தக் கூடுதல் வேலையைச் செய்ய நீ கூலிக்கு ஆள் வைத்துக்கொள்ளலாம்,” என்றார் சோலோன். 

“எப்படிச் செய்வது?” என்றார் அப்பா. “வேலையாளோடு வாதம் செய்ய வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிசெய்த அனுபவம் இல்லை எனக்கு. தள்ளிப் போ,” என்றார். 

இந்த முறை சரியான நேரத்தில் நகர்ந்துவிட்டார் சோலோன். அப்பா தான் உட்கார்ந்திருந்த நிலையை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்திருக்கும். இல்லையென்றால் இதையும் பறந்து போகச் செய்திருப்பார். 

இந்த முறையும் அது சோலோனைத் தாக்கவில்லை. நிலத்துக்குள் பாய்ந்த வெட்டுக்கத்தியைப் பொறுமையாகப் பலங்கொண்டமட்டும் முனைந்து வெளியே இழுத்தார் அப்பா.

“கூலிக்குப் பதிலாக வேறெதையாவது கொடுத்து வேலை செய்யச் சொல்லலாம். உன் நாயைக் கொடுக்கலாமே,” என்றார் சோலோன்.

அதைக் கேட்டதும் அப்பா வேலை செய்வதை நிறுத்தினார். அந்தச் சமயத்தில் எனக்கும் ஒன்றும் புரியவில்லை, இருந்தாலும் சோலோனுக்குப் புரிவதற்கு வெகு நேரத்துக்கு முன்னரே எனக்குப் புரிந்துவிட்டது. தலைக்கு மேலே சுத்தியலை உயர்த்திப் பிடித்திருந்தார். வெட்டுக்கத்தியின் முனை அடுத்த அடிக்காக மரத்தில் வைக்கப்பட்டிருந்தது. நிமிர்ந்து சோலோனைப் பார்த்தார். “நாயா?” என்றார்.

அது ஒரு கலப்பின நாய். லாப்ரடாரும் கோல்லியும் வேறு ஏதோவொன்றும் கலந்தது. மரங்கள் அடர்ந்த பகுதியில் சின்ன ஓசைகூட எழுப்பாமல் நுழைந்து நிலத்தில் படிந்திருக்கும் அணிலின் வாசத்தை மோப்பம் பிடித்து ஒரே ஒரு முறை மட்டும் குரைக்கும். நீங்கள் அதைக் கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரிந்தால் மனிதனைப் போலவே மோப்பம் பிடித்தபடி சத்தமே இல்லாமல் மரத்துக்கு அருகில் போகும். அதற்குப் பிறகும் நீங்கள் கவனிக்கவில்லை என்றால் மட்டுமே குரைக்கும். அப்பாவுக்கும் வெர்னான் டல்லுக்கும் சொந்தமான நாய்.

அது குட்டியாக இருக்கும்போதே டல்லிடம் கொடுத்திருந்தான் வில் வார்னர். அதை அரை மனதுடன் வளர்த்தினார் அப்பா. நானும் அவரும் சேர்ந்து அதற்குப் பயிற்சி கொடுத்தோம். என்னோடு படுக்கையில் படுத்துக்கொள்ளும். அப்புறம் பெரிதாகிவிட்டது என்பதால் வீட்டுக்கு வெளியே துரத்திவிட்டார் அம்மா. கடந்த ஆறு மாதங்களாக அதை விலைக்கு வாங்க முயல்கிறான் சோலோன். தன்னுடைய பங்குக்கு இரண்டு டாலருக்கு விற்பதாக சோலோனிடம் ஒப்புக்கொண்டு விட்டான் டல். அப்பா எங்கள் பங்குக்குப் பத்து டாலர் வேண்டும் என்று கேட்டிருந்தார். சோலோன் நான்கு டாலர் தருவதாகச் சொன்னான். ஆறு டாலர் இழுபறியில் இருக்கிறது. டல் தனக்குப் பங்கு வேண்டாமென்று சொன்னால் முழுவதையும் அப்பாவே வாங்கிக்கொள்வதாக இருந்தார்.

“ஓ, அதுதானா கதை?” என்றார் அப்பா. “இதுவரை பேசியது வேலைக்கான கணக்கு இல்லை, நாய்க்கான கணக்கு.” 

“இது வெறும் யோசனைதான்,” என்றான் சோலோன். “இந்த மர ஓடுகளைச் செய்யும் வேலை உன்னுடைய தனிப்பட்ட வேலை நேரத்தில் ஆறு மணி நேரத்தை எடுத்துக்கொண்டால் இடைஞ்சலாகுமே என்பதற்காகத் தோழமையோடு சொன்ன யோசனை. பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்ட அந்த நாயின் உன் பங்கை எனக்கு விற்றுவிடு. ஓடுகளை இழைத்துக்கொடுக்கிறேன்,” என்றான்.

“அந்த ஆறு மணி நேரத்தையும் ஒரு டாலர் கணக்கில் சேர்த்துவிடுவாய்தானே?” என்றார் அப்பா.

“இல்லை இல்லை,” என்றான் சோலோன். “டல்லுக்குக் கொடுப்பதாகச் சொன்ன அதே இரண்டு டாலரை உனக்கும் கொடுத்துவிடுகிறேன். நாளை காலை நாயோடு இங்கே வா. அப்புறம் நீ போய் உன் வேலையைப் பார்க்கலாம். தேவாலயக் கூரை பற்றி மறந்துவிடலாம்.”

தலைக்கு மேலே தூக்கிய சுத்தியலை அப்படியே ஒரு பத்து வினாடிக்குப் பிடித்தபடி நின்றார் அப்பா. சுமார் மூன்று நொடிகளுக்குச் சோலோனையோ வேறு எதையுமோ பார்க்கவில்லை, அப்புறம் சோலோனைப் பார்த்தார். சரியாக இரண்டே முக்காலாவது நொடியில் சோலோனைப் பார்க்கவில்லை என்பதை உணர்ந்து பார்த்தது போல இருந்தது. 

“ஹாஹ்,” என்றார். அப்புறம் சிரிக்க ஆரம்பித்தார். சிரிப்பது போலத்தான் இருந்தது, ஏனென்றால் வாய் திறந்திருந்தது. கேட்பதற்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால் சிரிப்பு அவருடைய உதட்டோடு நின்று போனதோடு, கண்ணிலும் தெரியவில்லை.

இந்த முறையும் “கவனமாக இரு,” என்று சொல்லவில்லை. இடுப்பை வேகமாக வளைத்து சுத்தியலைக் கீழே கொண்டுவந்தார். வெட்டுக்கத்தி மரத்துண்டில் நுழைந்து நிலத்துக்குள்ளும் பதிந்தது. இழைக்கப்பட்ட மர ஓடு விர்ரென பறந்து சோலோனின் முட்டிக்குக் கீழே அறைந்தது.

எல்லோரும் மீண்டும் வேலைசெய்ய ஆரம்பித்தார்கள். இதுவரையிலும் நான் பின்னால் திரும்பி இருந்தாலும் அப்பாவின் சுத்தியல் எழுப்பும் ஓசைக்கும் சோலோன், ஹோமரின் சுத்தியல் எழுப்பும் ஓசைக்கும் வித்தியாசம் தெரிந்தது. அப்பா வேலை செய்வது சத்தமாகவும் சீராகவும் இருந்ததால் மட்டுமல்ல, சோலோனும் ஹோமரும்கூட சீரான கதியில் வேலை செய்தனர். வெட்டுக்கத்தி எப்போதாவது மட்டுமே நிலத்தில் இறங்கியதால் அதன் ஓசை கேட்கவே இல்லை என்றும் சொல்ல முடியாது. சோலோனும் ஹோமரும் ஐந்தாறு ஓடுகளைச் சீவினார்கள் என்றால் அப்பாவின் வெட்டுக்கத்தி ஒரே ஒரு முறை “சக்’ என்று நிலத்துக்குள் இறங்கும் பின்னாடியே ஓடு விர்ரென்று பறந்துபோய் தூரத்தில் விழும். ஆனால் இப்போது அப்பாவும் சோலோன் ஹோமர் இருவரையும் போல அதிகச் சிரமப்படாமல் அதே நேரம் வேகமாகவும் ஓடுகளைச் சீவித் தள்ளினார். அவருடைய வேகத்துக்கு ஈடுகொடுத்து என்னால் அவற்றை எடுத்து அடுக்கி வைக்கமுடியவில்லை.

இப்போது வரை இழைத்த ஓடுகள் டல்லும் மற்றவர்களும் நாளை மதியம் வரையிலும் வேய்வதற்குப் போதுமானதாக இருக்கும். அப்போது ஆர்ம்ஸ்டிட்-இன் பண்ணையில் மணி ஒலித்தது. சோலோன் வெட்டுக்கத்தியையும் சுத்தியலையும் கீழே வைத்துவிட்டுக் கடிகாரத்தைப் பார்த்தான். நான் அதிக தூரத்தில் இல்லையென்றாலும் அப்பாவை எட்டிப் பிடிப்பதற்குள் கோவேறு கழுதையை அவிழ்த்து அதன் மேலே ஏறி உட்கார்ந்திருந்தார். சோலோனும் ஹோமரும் அப்பா விளையாட்டுக்காகச் செய்கிறார் என்பது போலப் பார்த்தனர். நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அவருடைய முகத்தை அவர்கள் பார்த்திருக்க வேண்டும். மரத்தில் இருந்த உணவுத்தூக்கை எடுத்து என்னிடம் நீட்டினார்.

“நீ போய் சாப்பிடு,” என்றார். “எனக்காகக் காத்திருக்காதே. அவனும் அவனுடைய வேலைத் திட்டமும். நான் எங்கே என்று கேட்டால் வீட்டிலிருந்து எதையோ எடுத்துக்கொண்டு வரப் போயிருக்கிறேன் என்று சொல். நீயும் நானும் சாப்பிடுவதற்காகத் தேக்கரண்டிகளை எடுக்கப் போனேன் என்று சொல். இல்லை அப்படிச் சொல்லாதே. ஏதாவது பொருளை எடுக்க வீட்டுக்குப் போனேன் என்றால் நம்பமாட்டான். நம் வீட்டில் அப்படி எந்தப் பொருளும் இல்லை என்பது அவனுக்குத் தெரியும்.”

கோவேறு கழுதையை திருப்பி அதன் விலாவில் உதைத்தார்.

மீண்டும் என்னருகே வந்தார். “நான் திரும்பி வந்து என்ன சொன்னாலும் அதைக் கண்டுகொள்ளாதே. என்ன நடந்தாலும் நீ எதுவும் பேசாதே. வாயைத் திறக்கவே கூடாது, புரிந்ததா?”

அவர் கிளம்பியதும் சோலோனும் ஹோமரும் உணவருந்திக்கொண்டிருந்த இடத்துக்குத் திரும்பினேன். சோலோனின் பள்ளிப்பேருந்தின் படிக்கட்டில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். அப்பா சொல்லி இருந்தது போலவே சோலோன் என்னிடம் பேசினார். 

“அவருடைய நன்னம்பிக்கையைப் பார்த்து வியக்கிறேன். அவருடைய கை காலை வைத்துச் செய்ய முடியாத வேலைக்காக ஏதோ தேவையென்றால், வீட்டுக்குப் போகவில்லை, வேறு எங்கோ போகிறார் என்று அடித்துச் சொல்வேன்.”

நாங்கள் ஓடுகளைச் சீவத் தொடங்கிய சிறிது நேரத்தில் அப்பா வந்து சேர்ந்தார். கோவேறு கழுதையை மரத்தில் கட்டினார். கோடரியை எடுத்து வெட்டத் துவங்கினார்.

“சரி மக்களே. நன்றாக யோசித்துப் பார்த்தேன். இது சரியில்லை என்றாலும் அதற்கு மாற்றாக எதுவும் தோன்றவில்லை. இன்று வேலைசெய்யாத இரண்டு மணி நேரத்தை ஈடுசெய்ய வேறு யாராவது வேலைசெய்ய வேண்டும். நீங்கள் இரண்டு பேர் இருக்கிறீர்கள், தனியாக உங்களை எதிர்த்து நான் ஒருவன் நிற்க முடியுமா? எல்லாருக்குமாகச் சேர்த்து நான் வேலை செய்ய வேண்டும் போல இருக்கிறது. ஆனால் எனக்கு வீட்டில் நிறைய வேலை இருக்கிறது. சோளம் விளைந்து நிற்கிறது, அறுவடை செய்ய வேண்டும். அதுவும் உண்மையில்லை என்றே வைத்துக்கொள்ளலாம். நாம் மட்டும் தனியாக இருக்கையில் நீங்கள் என்னை வென்றுவிட்டீர்கள் என்று ஒத்துக்கொண்டாலும் நாளை காலை எல்லோரின் முன்னிலையிலும் அதை ஒத்துக்கொள்வது கடினம். அதை நான் செய்யப்போவதுமில்லை. அதனால் நீ சொன்னதை ஏற்றுக்கொள்கிறேன் சோலோன். என் நாயை உனக்குக் கொடுக்கிறேன்.”

சோலோன் அப்பாவைப் பார்த்தான். “அந்தப் பண்டமாற்றுக்கு நான் இப்போது தயாரா என்று தெரியவில்லை,” என்றான்.

“ஓ, அப்படியா?” என்றார் அப்பா. மரத்தினுள் பதிந்திருந்த கோடரியை மேலும் கீழுமாக அசைத்து வெளியே இழுத்தார். 

“இரு, கோடரியைக் கீழே போடு,” என்றார் சோலோன். அப்பா கோடரியை உயர்த்திப் பிடித்தபடியே சோலோனைப் பார்த்தார். அவர் சொல்லப்போவதைக் கேட்கக் காத்திருந்தார்.

“நான் அரை நாள் வேலை செய்தால் அரை நாயைத் தருகிறேன் என்கிறாய். இந்த ஓடுகளைச் சீவும் உன்னுடைய அரை நாள் வேலைக்கு நாயின் உன் பங்கைத் தருகிறாய்,” என்றார் சோலோன்.

“அந்த இரண்டு டாலர் பணமும் சேர்த்து!” என்றார் அப்பா. “நீயும் டல்லும் ஏற்கனவே ஒப்புக்கொண்டது. இரண்டு டாலருக்கு என் நாயை விற்கிறேன், நீ நாளை வந்து ஓடுகளைச் செய்துமுடிக்க வேண்டும். நான் காலையில் நாயோடு இங்கு வரும்போது டல்லுக்கு நீ கொடுத்த இரண்டு டாலருக்கான ரசீதை என்னிடம் காட்ட வேண்டும்.”

“நானும் டல்லும் ஏற்கனவே பேசியாயிற்று,” என்றார் சோலோன். 

“நல்லது,” என்றார் அப்பா. “அப்படியென்றால் டல்லிடம் இரண்டு டாலரைக் கொடுத்துவிட்டு ரசீதை வாங்கிக்கொண்டு வருவதில் சிரமமேதும் இருக்காது.”

“நாளை காலை டல் இங்கே இருப்பான். பழைய ஓடுகளைப் பிரிப்பதற்காக வருவான்,” என்றார் சோலோன். 

“நல்லது. அப்படியென்றால் அவனிடம் இருந்து ரசீதை வாங்குவது இன்னும் எளிதாக முடிந்துவிடும். போகும் வழியில் தேவாலயத்தில் சிறிது நேரம் நின்றால் போதும். கடப்பாரையைக் கடன் கேட்பதற்காக யாரையாவது தேடிக்கொண்டு போவதற்கு டல் ஒன்றும் க்ரியர் அல்லவே.”

அப்பாவிடம் இரண்டு டாலர்களைக் கொடுத்தான் சோலோன். எல்லோரும் மறுபடியும் வேலையைத் தொடங்கினார்கள். இப்போது பார்த்தால் வேலையை இன்று மதியத்துக்குள்ளாகவே முடித்துவிட முயல்வது போல இருந்தது. சோலோன் மாத்திரமல்ல, இது வரையில் அதுகுறித்து அக்கறை காட்டாத ஹோமரும் சேர்ந்துதான். மீதமிருக்கும் என்று சோலோன் சொன்ன வேலையைச் செய்துமுடிப்பதற்கு அவனுக்கு நாயைக் கொடுப்பதாகச் சொன்ன அப்பாவையும் சேர்த்துத்தான். அவர்களுக்கு ஈடுகொடுக்கும் முயற்சியைக் கைவிட்டேன். ஓடுகளை அடுக்கும் வேலையை மட்டும் செய்தேன்.

கொஞ்ச நேரத்தில் வெட்டுக்கத்தியையும் சுத்தியலையும் கீழே வைத்தான் சோலோன். “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. ஆனால் என்னளவில் இன்றைய வேலைப் பொழுது முடிந்தது.”

“சரி. இத்தோடு முடித்துக்கொள்ளலாம் என்று நீதான் முடிவு செய்திருக்கிறாய். மிச்சமிருக்கும் எல்லா வேலையையும் நாளைக்கு நீதான் செய்துமுடிக்க வேண்டும்,” என்றார் அப்பா.

“ஆமாம், அதுதான் சரி. தேவாலயத்துக்காக என்னுடைய ஒரு நாளை ஒதுக்குகிறேன் என்று சொன்னதற்கு மாறாக இப்போது ஒன்றரை நாட்கள் வேலை செய்யப்போகிறேன். அதனால் இப்போது வீட்டுக்குப் போய் என் சொந்த வேலையைக் கொஞ்சம் முடிக்கலாம் என்று நினைக்கிறேன்,” என்றார் சோலோன். தன்னுடைய வெட்டுக்கத்தியையும் சுத்தியலையும் கோடரியையும் எடுத்துக்கொண்டு பேருந்துக்கு அருகே போய் ஹோமர் வந்து ஏறுவதற்காகக் காத்திருந்தார்.

“காலையில் நாயுடன் வருகிறேன்,” என்றார் அப்பா.

“நிச்சயமாக,” என்றார் சோலோன். நாயைப் பற்றி அவர் மறந்துவிட்டதைப் போல இருந்தது, அல்லது இப்போது அது ஒன்றும் முக்கியமான விஷயமில்லை என்பது போல இருந்தது. அப்படியே நின்று ஒரு நொடி அப்பாவை ஆழ்ந்து அமைதியாகப் பார்த்தார். “டல்லின் பாதியை விற்றதற்கான ரசீதை அவனிடம் இருந்து வாங்கி வரவேண்டும். நீ சொன்னது போல, அதில் எந்தத் தொல்லையும் இருக்க முடியாது.”

ஹோமர் வண்டிக்குள் ஏறியதும் வண்டியை உயிர்ப்பித்தார்.

இன்னதென்று சொல்ல முடியவில்லை. அப்பா எதையாவது செய்ய வேண்டுமென்றோ செய்யாமல் இருக்கவேண்டுமென்றோ சாக்குப்போக்கோ பாசாங்கோ செய்யாமல் இருப்பதற்காகவே சோலோன் அங்கிருந்து கிளம்ப அவசரப்பட்டது போல இருந்தது. “இரண்டு முறை தாக்க வேண்டியதில்லை என்பதால்தான் அதற்கு மின்னல் என்று பெயர். மின்னலால் தாக்கப்படும் அபாயம் யாருக்கும் நடக்கலாம். நான் பார்த்தது மேகம் என்பதை புரிந்துகொள்ளாமல் இருந்ததுதான் நான் செய்த தவறு. காலையில் சந்திக்கலாம்.”

“நாயுடன்,” என்றார் அப்பா.

“நிச்சயமாக,” என்ற சோலோன், என்னவோ எல்லாவற்றையும் மறுபடியும் மறந்துவிட்டவனைப் போல பின்னாடியே “நாயுடன்”, என்றார். 

இருவரும் அங்கிருந்து கிளம்பியதும் அப்பா மேலே எழுந்தார்.

“என்னது?” என்றேன். “என்னது? நாளைக்குச் செய்யவேண்டிய அரைநாள் வேலைக்கு ஈடாக டல்லின் நாயில் உங்களுக்கு இருக்கும் பங்கைக் கொடுத்துவிட்டீர்களா? அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்?”

“ஆமாம். ஆனால் நாளைக்கு டல் பிடுங்கவேண்டிய பழைய ஓடுகளையெல்லாம் நானே பிடுங்குகிறேன் என்று சொல்லிவிட்டேன். அதற்கு ஈடாக அவன் பாதி நாயையும் எனக்கே தருமாறு கேட்டு வாங்கிக்கொண்டேன். ஆனால் நாளை வரை காத்திருக்கப் போவதில்லை. ஓடுகளைப் பிடுங்கும் வேலையை சத்தமே இல்லாமல் இன்று இரவே செய்து முடிக்கப் போகிறேன்.”

“திருவாளர் சோலோன் வேலைத்-தொகுதி க்விக் அந்த நாயை இரண்டு டாலருக்கு விற்ற ரசீதை எப்படி வாங்கப் போகிறார் என்பதையும் இன்னொரு பாதி நாய்க்கான பத்து டாலரை எப்படித் தரப்போகிறார் என்பதையும் மட்டும் நாளைக்கு வேடிக்கை பார்க்கப்போகிறேன். இன்றிரவே எல்லாவற்றையும் செய்து முடிப்போம். காலையில் எழுந்து வரும்போது தாமதமாக வந்துவிட்டோமே என்று மட்டுமல்ல, அவன் தூங்கப் போனபோதே எல்லாம் முடிந்துவிட்டது என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும்.”

வீட்டுக்குப் போனதும் மாடுகளுக்குத் தீனி வைத்து பாலைக் கறந்தேன். வெட்டுக்கத்தியையும் சுத்தியலையும் கொண்டுபோய் கில்லேக்ரூவிடம் கொடுத்துவிட்டு கடப்பாரையைக் கடன்வாங்கி வரப் போனார் அப்பா. முதியவர் கில்லேக்ரூ இருக்கும் எல்லா இடத்தையும் விட்டுவிட்டு எதற்காகக் கடப்பாரையை படகில் எடுத்துப்போய் ஏரிக்குள் நாற்பதடி ஆழத்தில் போட்டுத் தொலைத்தார் என்பது தெரியவில்லை. நேராகச் சோலோனிடமே போய் அவனுடைய கடப்பாரையைக் கடன் வாங்கலாமா என்று ஒரு நொடி யோசித்ததாகச் சொன்னார் அப்பா. ஆனால் எதற்காக வாங்குகிறார் என்பதைச் சோலோன் கண்டுபிடித்துவிடுவான் என்பதால் அப்படிச் செய்யவில்லை. ஆர்ம்ஸ்டிட்டின் வீட்டுக்குப் போய் அவனுடையதை வாங்கி வந்தார். இரவு உணவைச் சாப்பிட்டதும் விளக்கைத் துடைத்து எண்ணெய் விட்டோம். காலை வரை காத்திராமல் அப்படி இரவே செய்துமுடிக்க வேண்டிய வேலை என்னவென்று புரியாமல் விழித்தார் அம்மா.

நாங்கள் கிளம்பி முன்வாசலுக்குப் போகும் வரையிலும் பேசிக்கொண்டே இருந்தார் அம்மா. தேவாலயத்தின் பின்புறத்துக்குச் சென்றோம். இந்த முறை நடந்தே போனோம். கயிறு, கடப்பாரை, சுத்தியல் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு விளக்கைப் பற்ற வைக்காமல் இருட்டில் போனோம்.

இருட்டு விழுவதற்கு முன்னால் வீட்டுக்குப் போகும் வழியில் தேவாலயத்தைக் கடக்கையில் ஸ்நோப்ஸின் வண்டியில் இருந்து விட்ஃபீல்டும் ஸ்நோப்ஸும் சேர்ந்து ஏணியை இறக்குவதைப் பார்த்தோம். இப்போது அதை  எடுத்து வந்து சாய்த்து வைத்தால் போதும். அப்பா விளக்கோடு மேலே ஏறினார். முதலில் கொஞ்சம் ஓடுகளைப் பிரித்து எடுத்துவிட்டால் உள்ளே இருந்த தளத்தில் விளக்கைத் தொங்கவிடலாம். பலகைகளின் இடுக்கு வழியே அதன் ஒளி தெரியும். ஆனால் தெரு வழியே போனால் ஒழிய யாராலும் பார்க்க முடியாது. அப்படித் தெருவழியே போனால் நாங்கள் வேலை செய்யும் ஓசையையும் கேட்க முடியும். கயிறை எடுத்துக்கொண்டு மேலே ஏறினேன். தளத்தின் வழியே எட்டிப்பிடித்து அதை விட்டத்தோடு சேர்த்து இணைத்து இரு முனைகளையும் எங்கள் இருவரின் இடுப்பிலும் கட்டினார் அப்பா. வேலையைத் தொடங்கினோம்.

பழைய ஓடுகளைப் பிரித்து கீழே வீசி எறிந்தோம். நான் சுத்தியலையும் அப்பா கடப்பாரையையும் எடுத்துக்கொண்டோம். கடப்பாரையை உள்ளே விட்டு ஒரு வரிசையைச் சேர்ந்த எல்லா ஓடுகளும் பிரிந்து வருவது போல நெம்பினார் அப்பா. கடப்பாரை ஏதாவது ஒரு முடிச்சில் இடித்தால் பெட்டியின் மூடி திறப்பது போல எல்லா ஓடுகளும் மொத்தமாக மேலே பிரிந்து வரும் . 

கடைசியாக அதைத்தான் செய்துகொண்டிருந்தார். கடப்பாரையோடு உள்ளே நுழைத்த போது முடிச்சில் இடித்தது. அது வெறும் ஒரு வரிசையை சேர்ந்த ஓடுகளை மட்டுமின்றி கூரையின் ஒரு பக்கமிருந்த மொத்த ஓடுகளையும் இணைத்தது. அவர் பின்னால் சாய்ந்து நெம்பியெடுத்த போது சோளத்தில் இருக்கும் முத்துகள் உதிர்வது போல விளக்கைச் சுற்றிலும் இருந்த மொத்தக் கூரையையும் பெயர்ந்தது. விளக்கு ஆணியில் இருந்து தொங்கியது. அவர் அந்த ஆணியைத் தொடவில்லை என்றாலும் அதைச் சுற்றி இருந்த மொத்தப் பலகையும் பிடுங்கிக்கொண்டு வந்தது. ஒரு நிமிடம் முழுவதும் விளக்கும் கடப்பாரையும் பிடுங்கி எறியப்பட்ட ஓடுகளுக்கு நடுவே நிறுத்தி வைக்கப்பட்டது போல இருந்ததைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். ஆணி இன்னமும் விளக்கின் கைப்பிடியில் சிக்கி இருந்தது. பிறகு எல்லாமாகச் சேர்ந்து தேவாலயத்துக்குள் இறங்கியது.

நிலத்தை இடித்து ஒரு முறை மேலே எம்பிக் குதித்தது. பிறகு மீண்டும் நிலத்தில் இடித்தது. இந்த முறை தேவாலயம் முழுவதும் குபீரென்று துள்ளிக் குதிக்கும் மஞ்சள் சுவாலையாக மாறி எரிய ஆரம்பித்தது. நானும் அப்பாவும் மேலே கயிற்றின் இரு முனைகளில் இருந்து தொங்கிக்கொண்டு இருந்தோம்.

கயிறு என்ன ஆனது என்பதோ அதில் இருந்து எப்படி விடுபட்டோம் என்பதோ தெரியவில்லை. கீழே இறங்கியதும் நினைவில் இல்லை. பின்னால் இருந்து அப்பா கத்தியதும் ஏணியில் பாதி வழியில் என்னைக் கீழே தள்ளியதும் மீதி வழிக்கு என்னுடைய மேலங்கியைக் கொத்தாகப் பிடித்து கீழே எறிந்ததும் தரையில் இறங்கியதும் தண்ணீர் பீப்பாயை நோக்கி ஓடியதும் மட்டுமே நினைவில் இருந்தது. கூரையில் விழும் நீரை நிலத்தில் விடும் குழாய்க்கு அருகில் இருந்தது பீப்பாய், பக்கத்தில் ஆர்ம்ஸ்டிட் நின்றிருந்தார். ஒரு மணி நேரத்துக்கு முன்னால் இந்த வழியாகப் போகையில் தேவாலயத்தின் கூரையில் விளக்கு எரிவதைப் பார்த்தாராம். அது நினைவில் இருந்து அகலாமல் இருக்கவே என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகத் திரும்பி வந்தாராம். சரியான நேரத்தில் வந்து சேர்ந்ததால் தண்ணீர் பீப்பாய்க்கு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் நின்றுகொண்டு அப்பாவும் அவரும் சத்தம் போட்டார்கள். அப்போதுகூட அதை அணைக்கும் சாத்தியம் இருந்தது என்றே சொல்வேன். அப்பா கீழே உட்கார்ந்து முழுவதும் நிரம்பியிருந்த பீப்பாயை முதுகில் தூக்கிக்கொண்டு எழுந்து நின்றார். ஒரே ஓட்டமாக ஓடி தேவாலயத்தின் மூலையில் இருந்த படிக்கட்டுகளில் ஏறுகையில் மேல் படியில் விரல் மாட்டிக்கொண்டது. அங்கிருந்து கீழே விழுந்தபோது பீப்பாய் அவர் மேலே விழுந்து உடைந்ததால் மயக்கமடைந்து மரக்கட்டை போல அசைவற்றுக் கிடந்தார்.

முதலில் அவரைப் பத்திரமான இடத்துக்கு இழுத்துச் சென்றோம். அதற்குள்ளாக அம்மாவும் திருமதி ஆர்ம்ஸ்டிட்டும் வந்து சேர்ந்தனர். நானும் ஆர்ம்ஸ்டிட்டும் இரண்டு வாளிகளை எடுத்துக்கொண்டு ஊற்றுக்கு ஓடினோம். நாங்கள் திரும்பி வருவதற்குள் நிறைய பேர் வந்துவிட்டார்கள். வாளிகளை எடுத்துக்கொண்டு விட்ஃபீல்டும் வந்தார். எங்களால் இயன்றதைச் செய்தோம். ஊற்று இருநூறு அடி தூரத்தில் இருந்தது. பத்து வாளிகளை நிறைத்துக்கொண்டு போய் திரும்பவும் வந்து நிறைக்க ஐந்து நிமிடங்கள் ஆயின. தலையில் பெரிய வெட்டுக் காயத்தோடு இருந்த அப்பாவுக்கு நினைவு திரும்பி, நடப்பதை எல்லாம் பார்த்தபோது நாங்கள் சும்மா நின்றுகொண்டு இருந்தோம். 

அது பழைய தேவாலயம், காய்ந்துபோய் இருந்தது. ஐம்பது வருடமாக விட்ஃபீல்ட் சேகரித்து வைத்திருந்த பழைய வண்ண ஓவியங்களுக்கு நட்டநடுவில் விளக்கு விழுந்து வெடித்திருந்தது. தேவாலயத்தின் பக்தர்களுக்கு ஞானஸ்நானம் செய்விக்கும்போது அவர் அணிந்துகொள்ளும் இரவு நேர மேலங்கியை மாட்டி வைப்பதற்கென்று ஒரு கொக்கி இருந்தது.

தேவாலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வகுப்புக்கு போகும்போது அதையே பார்த்துக்கொண்டு இருப்பேன். தேவாலயத்தைத் தாண்டி போகும்போது நானும் மற்ற பையன்களும் சும்மா உள்ளே எட்டிப்பார்ப்போம். பத்து வயது சிறுவனுக்கு அது வெறும் துணியாலான ஆடையோ இரும்புக் கவசமோ அல்ல. அதை அணிந்துகொண்டு பாடுபட்டு பாவங்களை எல்லாம் வென்று திரும்பிய முதிய வலிமைமிக்க தேவதூதனான புனித மைக்கேலே அதுதான் எனத் தோன்றும். மீண்டும் மீண்டும் பாவத்துக்கே திரும்பிச் செல்லும் பன்றிகளை, நாய்களைப் போன்ற மனிதர்களின்பால் அந்தத் தேவதூதனுக்கு ஏற்பட்ட வெறுப்பு அதற்கும் ஏற்பட்டிருக்கக் கூடும். உள்ளே இருந்த எல்லாப் பொருட்களும் எரிந்து முடித்த பின்னரும் அது மட்டும் நீண்ட நேரத்துக்குத் தீப்பிடிக்காமல் இருந்தது. எரியும் நெருப்புக்கு நடுவே அது தொங்கிக்கொண்டு இருந்ததைப் பார்த்தோம். இத்தனை நாட்களில் நிறைய தண்ணீரைப் பார்த்தது, அதனால் எளிதாக எரிந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் அது விருப்பத்தோடு சாத்தான் மற்றும் மற்ற நரகத்தின் வசிப்பாளர்களுடன் சென்று சேர்ந்துவிட்டது. எனவே, பாதி நாயை சோலோன் க்விக்கிடம் ஏமாந்துவிடாமல் இருப்பதற்காக ரெஸ் க்ரியர் உருவாக்கிய நெருப்பில் எரிவதற்கு அதற்கு விருப்பமில்லை என்பது போலத் தோன்றியது.

இறுதியில் அதுவும் எரிந்து போனது, நிதானமாக எரிந்தது என்றாலும் ஒரே நேரத்தில் மொத்தமாக எரிந்து போனது. வானை நோக்கி உறுமலுடன் எழுந்த தீப்பிழம்பு விண்மீன்களையும் தாண்டி தொலைதூரத்தில் இருந்த இருள்வெளிக்கு நடுவே எரிந்து முடித்தது. இப்போது அப்பா நனைந்துபோய் எதையும் தெளிவாகப் பார்க்க முடியாத மயக்கத்துடன் நின்றுகொண்டிருந்தார். நாங்கள் அவரைச் சுற்றி நின்றோம். விட்ஃபீல்ட் எப்போதும் போலவே வெள்ளாவியில் வெளுத்த சட்டையும் கறுப்பு தொப்பியும் கால்சட்டையும் அணிந்திருந்தார். நிகழக்கூடாத ஒன்றைத் தடுத்து நிறுத்த நீண்ட நேரம் முயற்சி எடுத்தவரைப் போல நின்றிருந்தார். அந்த நாசமாகப்போன விஷயத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் போனதால் அதன் முன்னிலையில் தொப்பியைக் கழற்றவேண்டிய அவசியம் இல்லை என்பது போல நின்றிருந்தார். அப்படியே எங்கள் எல்லோரையும் பார்த்தார். அந்தத் தேவாலயத்தைச் சேர்ந்த எல்லோரும் அங்கே இருந்தோம். அங்கேயே பிறந்து மணமுடித்து இறந்தும் போகும் ஆர்ம்ஸ்டிட்களும் டல்களும் புக்ரைட்டும் க்விக்கும் ஸ்நோப்ஸும் எல்லோரும் அங்கே இருந்தோம்.

“தவறுதலாகச் சொல்லிவிட்டேன். நாளை காலை இங்கே ஒன்றுகூடி தேவாலயத்துக்குப் புதிய கூரையை அமைப்போம் என்று சொல்லியிருந்தேன். ஆனால் நாளை காலை புதிய தேவாலயம் ஒன்றைக் கட்டி எழுப்புவதற்காக இங்கே கூடப்போகிறோம்,” என்றார் விட்ஃபீல்ட்.

“ஆம், நமக்கு தேவாலயம் நிச்சயம் தேவை,” என்றார் அப்பா. “நாம் அதை உருவாக்கப் போகிறோம், சீக்கிரமே உருவாக்குவோம். இங்கிருப்பவர்களில் சில பேர் ஏற்கனவே நம் தனிப்பட்ட வேலையை நிறுத்திவிட்டு தேவாலயத்துக்காக இந்த வாரத்தில் ஒரு நாளைக் கொடுத்தோம். அது சரியான செயல்,  நியாயமானதும்கூட. அதனோடு இன்னும் சில நாட்களைக் கூடுதலாகத் தரப்போகிறோம் என்பதில் மகிழ்ச்சி. தேவர் ஒன்றும்…”

அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்தார் விட்ஃபீல்ட். அசையாமல் நின்றிருந்தார். பேசுவதைத் தானாகவே நிறுத்திவிட்டு அசந்துபோய் தரையில் உட்கார்ந்தார் அப்பா. அம்மாவைப் பார்ப்பதைத் தவிர்த்தார். அதற்கு பிறகுதான் வாயைத் திறந்தார் விட்ஃபீல்ட். 

“நீ வரத் தேவையில்லை. நீ ஒரு தீக்கொளுத்தி,” என்றார் விட்ஃபீல்ட்.

“தீக்கொளுத்தியா?” என்றார் அப்பா.

“ஆமாம். வெள்ளமோ நெருப்போ அழிவோ சாவோ உன் பின்னாடியே வந்து சேராமல் எந்த வேலையையாவது செய்து முடிக்க முடியுமா உன்னால்? இருந்தால் அதைச் செய். ஒரு மனிதனிடம் இருக்கும் ஆற்றலையும் திறமையையும் நம்பி அவனிடம் பொறுப்பை ஒப்படைக்கலாம் என்பதை நீ நிகழ்த்திக் காட்டும் வரையில் தேவருக்கெனக் கட்டப்படவிருக்கும் இந்தப் புதிய வீட்டில் உன்னுடையை கை படவே கூடாது.” மீண்டும் எங்களைப் பார்த்தார். “டல் ஸ்நோப்ஸ் ஆர்ம்ஸ்டிட் எல்லோரும் நாளை வருவதாக முன்பே சொல்லி இருந்தார்கள். க்விக்கும் இன்னொரு அரை நாள் வேலை செய்வதாகச் சொல்லியிருந்தார்.”

“என்னால் இன்னொரு முழு நாள் வேலை செய்ய முடியும்,” என்றார் சோலோன்.

“என்னால் வாரம் முழுவதும் வேலை செய்ய முடியும்,” என்றார் ஹோமர்.

“எனக்கும் வேறு வேலை எதுவும் இல்லை,” என்றார் ஸ்நோப்ஸ். 

“வேலையைத் தொடங்குவதற்கு இதுபோதும்,” என்றார் விட்ஃபீல்ட்.

“நேரமாகிவிட்டது. எல்லோரும் வீட்டுக்குப் போகலாம்” என்றபடி முதலில் அவர் கிளம்பிப் போனார். திரும்பி ஒரு முறையாவது தேவாலயத்தையோ எங்களையோ பார்க்கவில்லை. அவருடைய முதிய பெண் குதிரையின் அருகில் சென்று அதன்மீது மெதுவாகவும் விறைப்பாகவும் வலிமையாகவும் ஏறி அமர்ந்து அங்கிருந்து போனார். நாங்களும் அவரவர் வீட்டுக்குத் திரும்பினோம்.

ஆனால் நான் திரும்பிப் பார்த்தேன். வெறும் வெளிக்கூடு மட்டும்தான் மிச்சம் இருந்தது. மையப் பகுதி கொஞ்சங்கொஞ்சமாக மங்கும் சிவப்பு நிறத்தில் இருந்தது. அதைச் சில நேரம் வெறுத்தேன், மற்ற நேரத்தில் பயந்தேன் என்பதால் எனக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அங்கேயிருந்த நெருப்புகூடத் தொட முடியாத ஏதோ ஒன்றுதான் அதன் அழிவற்ற நீட்சிபெற்ற நிலைத்துநிற்கும் தன்மையாக இருக்குமோ? அதுதான் அதன் சுவர்கள் நெருப்பின் கடுமையில் வெந்துகொண்டிருக்கும் போதே மீண்டும் கட்டி எழுப்பிவிடலாம் என்ற நம்பிக்கையை அவருக்குத் தந்திருக்குமோ? புதிதாகக் கட்டுவதற்கு எதையும் கொடுக்க முடியாத மனிதர்கள்கூட தங்கள் உழைப்பைக் கொடுப்பதற்காக நாளை காலை சூரிய உதயத்தின்போது அங்கே இருப்பார்கள் என்பதையும், அதற்கடுத்த நாளும் அதற்கடுத்த நாளும்கூட வருவார்கள் என்பதையும், சொல்லப்போனால், எத்தனை நாள் தேவையோ அத்தனை நாளும் அதைத் திரும்பவும் கட்டி எழுப்புவதற்காக வருவார்கள் என்பதையும் அறிந்திருந்ததால்தான் திரும்பிக்கூட பார்க்காமல் சலனமில்லாமல் நடந்து போனாரோ? ஆக அது ஒன்றும் முற்றிலும் இல்லாமல் ஆகிவிடவில்லை; அது சின்ன நெருப்பையும் வெள்ளத்தையும் பொருட்படுத்துவதில்லை. விட்ஃபீல்டின் ஞானஸ்நான உடுப்பைப் போலவே எதற்கும் கவலைப்படுவதில்லை. 

நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம். அம்மா அவசர அவசரமாகக் கிளம்பி வந்திருந்ததால் வீட்டில் இருந்த விளக்கு இன்னும் எரிந்துகொண்டு இருந்ததால் அப்பாவைப் பார்க்க முடிந்தது. அவர் நின்ற இடத்தில் அவர் காலைச் சுற்றி தண்ணீர் குளம் கட்டியிருந்தது. பீப்பாய் விழுந்து உடைந்ததில் பின்னந்தலை கிழிந்திருந்தது. இரத்தம் கலந்த தண்ணீர் அவரை இடுப்பு வரையிலும் நனைத்திருந்தது.

“என்ன செய்வது என்று தெரியவில்லை. என்னை வெள்ளைக்காரர்களோடு சேர்ந்து பணியாற்றுவதற்குத் தகுதியற்றவன் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் அதே வெள்ளைக்காரர்களிடமும் மெத்தடிஸ்ட் திருச்சபையைச் சேர்ந்தவர்களிடமும் நானும் வெளிப்படையாகவே சொல்லிவிடப் போகிறேன். என்னோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று. இல்லையென்றால் சாத்தான் அவர்களைப் பிடித்துக்கொண்டுவிடும் என்று.”

அவர் சொன்னதை அம்மா காதில் போட்டுக்கொள்ளவில்லை. தண்ணீரையும் துவாலையையும் மருந்து புட்டியையும் எடுத்துக்கொண்டு அவர் வருவதற்குள் அப்பா ஆடையைக் களைந்து இரவுநேர மேலங்கியை அணிந்திருந்தார்.

“எனக்கு எதுவும் வேண்டாம்,” என்றார். “உடைவதற்குக்கூட என் மண்டை இலாயக்கில்லை என்றால் அதை ஒட்டுப்போடவும் தேவையில்லை.” அம்மா எதையும் கண்டுகொள்ளவில்லை. அவருடைய தலையைக் கழுவி துடைத்துக் கட்டுப்போட்டார். அப்பா படுக்கப் போனார். 

“என் மூக்குப்பொடியை எடுத்துக் கொடுத்துவிட்டு நீயும் இங்கேயிருந்து போ!” என்றார்.

அவர் சொன்னதை நான் செய்வதற்குள்ளாக அம்மா வந்தார். அவர் கையில் வெதுவெதுப்பான கள் இருந்தது. அப்பாவின் படுக்கையருகே போய் நின்றார். அப்பா திரும்பிப் பார்த்தார்.

“என்னது?” 

அம்மா பதிலேதும் சொல்லவில்லை. அப்பா படுக்கையில் உட்கார்ந்து நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டது கேட்டது. ஒரு நிமிடத்துக்குப் பிறகு கையை நீட்டிக் கள்ளை வாங்கிக்கொண்டார். மீண்டும் பெருமூச்சு விட்டார், பிறகு ஒரு வாய் குடித்தார். “கடவுளே! எல்லோரும் ஒன்று சேர்ந்து அவர்களைப் போல நானும் தேவாலயத்துக்காக வேலை செய்வதில் இருந்து என்னைத் தடுத்துவிடலாம் என்று நினைத்தால் அதைச் செய்து பார்க்கட்டும்.” இன்னொரு வாய் குடித்தார். மீண்டும் பெருமூச்சு விட்டார். “தீக்கொளுத்தியாம்!” என்றார். “வேலை அலகு, நாய் பங்கு, இப்போது தீக்கொளுத்தி. கடவுளே! என்ன மாதிரியான நாள் இது!”

*

ஆங்கில மூலம்: Shingles for the Lord written by William Faulkner, Selected Short Stories of William Faulkner, Modern Library, 1993 Edition.

1 comment

Kasturi G November 29, 2021 - 12:49 pm

Beautiful
Thanks

Comments are closed.