செப்டம்

0 comment

அப்பழுக்கற்ற வெயில் தலைக்குள் இறங்கியது. கண்ணிமைகளுக்கு மேலிருந்த இடுக்குகளில் வெம்மை சூழ்ந்து கனத்தது. அப்படியே மொத்த ஆவியும் எழுந்து காற்றில் கண்காணாமல் கரைந்துவிட்டால் தேவலாம்.

கண்ணகி சிலைக்கு அருகில் வண்டியை நிறுத்திவைத்துவிட்டு இத்தனை நேரம் அதிலேயே அமர்ந்துகொண்டு இருந்திருக்கிறேன். எதிரில் கடலோரம் போடப்பட்டிருந்த தடுப்புப் பாறைகளில் அலைகள் தெறித்துச் சிதறிக்கொண்டிருந்தன. நான் அதனைப் பார்த்துக்கொண்டா நின்றிருந்திருக்கிறேன்? என் கண்ணில் கடல் பட்ட சுவடே பதியவில்லை.

மனைவியைத் தலைச்சங்காட்டில் என் வீட்டில் விட்டுவிட்டு வண்டியைக் குரங்குப் புத்தூர் கடைக்கு விட்டேன். அங்கேயே இருந்திருக்கலாம்தான். ஆனால் வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். வீடு திரும்ப மனதில்லாமல் வண்டியைக் கிழக்குப் பக்கமான சாலையில் செலுத்திவிட்டேன்.

வண்டியை விட்டு இறங்கிப் பூட்டிய பிறகு, தொட்டுக்கொள்வதற்காக அருகில் இருந்த தள்ளுவண்டிக் கடையில் கோலா மீன் வறுவல் வாங்கிக்கொண்டேன். பிறகு, கடற்கரையோரமாகவே கலைக்கூடத்தின் வலது பக்கக் காம்பவுண்ட் சுவர் வாக்கில் நடந்து சென்றபடி கண்மறைவான ஓர் இடத்தைத்தேடி அலைந்துகொண்டிருந்தேன்.

தூரத்தில் நெடுங்கல் மன்றத்தின் உச்சி தெரிந்தது. அந்த மன்றத்தின் பின்பக்கமாக அமர்ந்துகொள்ளலாம் என்று முடிவெடுத்து வேகமாக நடந்தேன்.

மூவடுக்கு வட்டப்படிகளுக்கு நடுவே ஒற்றை நெடிய கற்கம்பம். அதன் கால்பங்கு உயரத்திற்கு அதனைச் சுற்றி எட்டு சிறிய தூண்கள், மண்டபம் போன்ற அமைப்பில் நின்றிருந்தன. சிலப்பதிகாரத்தின் நெடுங்கல் மன்றத்தின் நினைவாக எழுபதுகளில் மகாபலிபுரத்து சிற்பிகள் கொண்டு அரசாங்கத்தினரால் எழுப்பப்பட்டது.

அந்த மன்றத்தைச் சுற்றியும் அதன் வட்டப்படிக்கட்டுகளிலும் காலி பிளாஸ்டிக் பாட்டில்கள், கப்கள், அறுந்த செருப்புகள், பாலீதீன் கவர்கள்.

மன்றத்துக்குப் பின்பக்கமாய் ஏறிய நான் கீழே கிடந்த இரண்டு லிட்டர் காலி பிஸ்லெரி பாட்டிலைக் கண்டுவிட்டு அதன் அருகே சென்று அதனை ஓங்கி மிதித்தேன். டப்பென்ற சத்தத்துடன் அது ஓரங்களில் விரிசலிட்டுப் பொத்துக்கொண்டது. பின்னர் அதனை எதிரிலே இருந்த புதர்ச்செடியை நோக்கி வேகமாக காலால் எத்தினேன்.

படபடவெனப் பறவை சிறகடித்துக்கொள்ளும் சத்தம்போல உணர்ந்து நான் உட்கார நினைத்த இடத்தை நோக்கித் திரும்பிப் பார்க்க, அங்கே ஒரு காதல் ஜோடி.

அந்தப் பெண்ணின் கழுத்துவளைவுப் பகுதி வழியாகச் சுடிதாருக்குள் சென்றிருந்த அவனது கை அவசர அவசரமாக விலகிக்கொண்டது. அவளது கிறங்கிப் போயிருந்த கண்கள் சில நேரம் வெறுண்டு என்னைப் பார்த்தன. அவளது உள்ளாடையின் மேல்பட்டை சற்று தளர்ந்து வெளியே தெரிந்தது. அவர்கள் வேகவேகமாக எழுந்துகொண்டார்கள். அவளது ஆடையின் கசங்கல் தடங்களைக் காணவே ஒரு முறை கண்ணோட்டி அவளை ஏற இறங்கப் பார்த்தேன்.

அந்த ஆண் என்னைப் பார்த்து முறைத்தான். வேண்டுமென்றே நான் மீண்டும் அவள் மேல் என் பார்வையை ஓடவிட்டேன். நல்ல கறுத்த முண்டை. எதிரில் இருந்தவர்கள் மனிதர்களாகப் போய்விட்டதால் வெறும் பார்வையோடு நின்றுவிட்டது. இதே இரண்டு நாய்களாக இருந்தால் கல்லடிதான். ஒரு கணம் அவர்களை நாயென நினைத்துப் பார்க்கத் தோன்றி, என் கைகளும் கண்களும் அருகில் கல்லுக்காகப் பரபரத்தன.

அந்த ஆடவன் அவளைத் தோளைத் தொட்டுப் பிடித்துக் கூட்டிச் சென்றான். சிறிது தூரம் சென்ற பின்னர் என்னை ஒருமுறை திரும்பிப் பார்த்தான். “செம்புளுத்தி, அப்படித்தான்டா பார்ப்பேன்” என்பவன் போலப் பார்த்துக்கொண்டே நின்றேன்.

*

கையில் இருந்ததை அருகில் வைத்துவிட்டு மேல் படியில் அமர்ந்தேன். பின்னிருந்த தூணில் சாவகாசமாக சாய்ந்துகொண்டேன். ஆனால் என்னை எதுவோ சாவகாசமாக இருக்க விடவில்லை. சற்று காலை நீட்டிக்கொண்டால் நன்றாக இருக்கும். ஆனால் முன்னிருந்த தூண் இடித்தது. ஒவ்வொரு தூணுக்கும் இடையில் இன்னும் நன்றாக இடைவெளி விட்டுக் கட்டியிருக்கலாம். இத்தனை இடுங்கலாகக் கட்டிவைத்து விட்டார்கள். உயரத்தைக் கண்டு வந்து தஞ்சம் புகுந்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். வெற்று ஜம்பத்துக்காகக் கட்டியிருக்கிறார்கள் என்று எரிச்சல் வந்து அருகில் காறி உமிழ்ந்தேன்.

தற்செயலாகக் கையை முதுகுப் பக்கமாய் கொண்டுசென்று என் சட்டையைச் சரிசெய்த போது கையில் மொழுமொழுவென்று இருந்தது. மீண்டும் தொட்டுப் பார்த்தேன். அதே மென்மை. கல் சொரசொரக்கும். ஆனால் இது என்னடா இப்படி? 

நான் அதனை மீண்டும் மீண்டும் செய்தேன். அப்படிச் செய்திருக்கக் கூடாது என்று என் அறிவு மூளைக்குள் சென்று கட்டளை இடுவதற்குள் என் கைகள் அப்படிச் செய்துவிட்டன.

முதல்முறையாக என் நண்பன் மாணிக்கப்பங்கு மகேந்திரனுடன் குடிபோதையில் இருந்தபோது பின்னந்தி இருளில் நடந்த அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது. அவன் இந்த நெடுங்கல் மன்றத்தை இப்படித்தான் எங்களுக்கு அறிமுகம் செய்தான். “அட மவுட்டிப் பயலோலா, நம்ம சாமானமெல்லாம் அதோ கடல ஒட்டி நிக்குதே வானத்த முட்டி ஒழுத்துகிட்டு, அந்த கல் மாதிரி நிக்கணும் தெரியுமா? அப்பதான் வர்றவ சுணக்கப்படாம நம்ம கூடயே நிப்பா.”

அவன் மேலும் சொன்னான். “ஒன்னு சொல்றேன் பாரு. அங்க அந்த நெட்ட கல்லச்சுத்தி எட்டு சின்ன தூண் இருக்கு. அந்த எட்டு தூண்களுக்கு கீழயும் புட்டம் பெருத்த எட்டு பொம்பளையாளுவ அந்தத் தூணை கட்டித் தழுவி மருகுறாளுவ. எலேய், கல்லு உருகுமா சொல்லு? அங்க உருகுது அவளுவனால. எதுக்குன்னு நான் இன்னும் இதுக்கு மேல வெளக்கினா நீங்கலாம் ஆம்பளையானதுக்கே அர்த்தம் இல்லை பாத்துக்கங்க.”

அவன் சொன்னபோது நாங்கள் அனைவருமே கிளர்ச்சி அடைந்தோம். புட்டம் புடைத்த பெண்களுக்காகப் பரிதவித்துக்கொண்டிருந்தோம். ஒருமுறை கிழக்கு கறுத்த பிறகு மண்ணம்பந்தலில் இருந்து வண்டியில் இங்கு என்னைக் கூட்டி வந்தான். இங்கு இதே இடத்தில்தான் குடித்தோம். அவன் இந்த மன்றத்தைச் சுற்றி வந்து ஒவ்வொரு தூணில் இருந்த அழகிகளின் புட்டத்தையும் அன்றிருந்த நோக்கியா 1100 போனின் டார்ச் லைட் வெளிச்சத்தில் தடவிப் பார்த்துக்கொண்டிருந்தான். என்னிடம் திரும்பி, “இன்னும் நைஸாத்தான் இருக்கு. தேய்படத் தேய்படத்தான் நைஸாகும் போலருக்கு” என்றான். நானும் அவனருகில் சென்று அதே வேலையைச் செய்யப் பார்த்தேன். 

அவன் சொன்னது போல ஒவ்வொரு சிலையும் பின்புறத்தைக் காட்டிக்கொண்டு அந்தத் தூண்களைத் தழுவியிருந்தது.

இன்னும் ஒரு கணம்தான் மிச்சம் இருக்கிறது. அடுத்த கணத்தில் இதுவரை எங்கள் பகற்கனவை ஆக்கிரமித்திருந்த அந்தப் புட்டக் குளிர்ச்சியை இப்போது இதோ இந்தக் கல்லில் கை வைத்துத் தொட்டுணர்ந்து கொள்ளப்போகிறேன். 

சட்டென, அவன் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அப்போது ஒன்றைக் கண்டேன். மொத்தப் பரவசமும் வடிந்து அவனைக் கொலைவெறியில் அடிக்கப் பாய்ந்தேன். 

விழுந்து எழுந்து போதையில் தள்ளாடி வந்தவனுக்கு இன்னும் ஒன்றுமே புரியவில்லை. அவன் தன் வேலையிலேயே குறியாய் இருந்தான்.

“எல மயிராண்டி, கொஞ்சம் லயிட்ட சைடு வாக்குல அடிச்சுப் பாரு” என்றேன்.

பிறகு நானே அவன் கையில் இருந்து போனை வாங்கி லைட்டடித்துக் காண்பித்தேன். ஆம், அந்தச் சிலைகளின் தலைப்பக்கம் கொண்டை முடிந்திருந்தது. ஆனால் தூணோடு ஒருபக்கமாக ஒருக்களித்து ஒட்டி இருந்த முகங்களில் மீசையும் இருந்தது. அவன் தன் கைகளைச் சடாலென எடுத்துக்கொண்டான்.

“த்தூ.. மழுமட்ட மயிராண்டி, மொத்தல்ல ஆம்புளைக்கும் பொம்புளைக்குமே வித்தியாசம் தெரில உனக்கு. இதுல உருகுறாளுவ மருகுறாளுவன்னு வேற ஓலு.” 

“லேய், நான் முன்னப் பாத்தப்ப மீசை இல்லடா. ஒரு வேளை நடூல மொளச்சுருக்குமோ?”

நான் மீண்டும் கொலை வெறியானேன். “விட்டா ஆளக்கூட்டி வந்து செரச்சு விடச்சொல்லுவான் போலருக்கு.”

மறுநாள் கல்லூரியில் நண்பர்களிடம் நடந்ததைப் போட்டுக்கொடுத்தேன். “இந்த அரைபோதை நாய்க்கு, பூதகணத்துக்கும் புட்டம் பொடைச்ச பொம்பிளைக்கும் எழவு வித்தியாசம் தெரியலடா.” 

“கம்மனாட்டிப் பய, விட்டா இவன் நம்ம குண்டியையுமே தடவிப் பாத்திடுவான் போல. தூணு விழக்கூடாதுன்னு அதை தூக்கிப் புடிச்சிட்டு இருக்கற பூதகணத்தை பொம்பள தழுவிட்டுருக்கா அது இதுன்னு என்னென்ன பிட்டு ஓட்டிருக்கான். என்னையும் சேர்த்து தடவ விட்ருப்பான் நாயி. ஜஸ்டு மிஸ்ஸூ. கொஞ்சம் உஷாரா இருந்துட்டேன். இல்லன்னா..”

சொல்லி முடித்த பிறகு எனக்கே சிரிப்பு வந்தது. தொடர்ந்து ஒரே சிரிப்பலைகள். கூச்சல் கும்மாளம். ஆனாலும் அவனுக்கு அவன் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. இன்னும் தான் சொன்னதை முடிந்த வரை உறுதிப்படுத்த முயன்றான். அதற்காக வாதிட்டான். 

“ஏன்டா நம்ம லெக்ச்சரர் காத்தியாயினி இந்த காலத்து புள்ள. அவளுக்கே மீசையிருக்கு. அந்த காலத்து பொம்பளையாளுக்கு இருக்காதா என்ன?” என்றான். 

அந்தப் பேச்சு ஒரு வாரம் நீடித்தது. அந்த ஒரு வாரமும் சிரித்துச் சிரித்து எங்களுக்கு வயிறு வலி கண்டுவிட்டது. மகேந்திரனைப் போட்டுப் பார்க்க வேண்டுமென்றால் அன்றெல்லாம் அப்பேச்சை நண்பர் குழாமில் கிளறிவிடுவோம். 

இன்றும் அது போலச் சிரிக்கவேண்டும் என்று தோன்றிச் சிரித்துப் பார்த்தேன். முடியவில்லை. அந்தச் சிரிப்பை வரவழைத்துக்கொள்வதற்காகத் தொண்டையில் இருந்து இருமிப் பார்த்தேன். பின்னர் என் முன்னால் முகம் பார்க்கும் கண்ணாடி இருப்பது போலப் பாவனை செய்துகொண்டு “ஈஈஈ” என்று இளித்துப்பார்த்தேன். எந்த முயற்சியும் பலனளிக்காமல் ஒரு சமயத்தில் வேண்டாமென்று விட்டுவிட்டு அப்படியே சாய்ந்து வானத்தைப் பார்த்து அமர்ந்துகொண்டேன்.

கொண்டுவந்திருந்த பையைப் பிரித்து குரங்குப் புத்தூர் சரக்கை எடுத்தேன். உள்ளே இரண்டு பிளாஸ்டிக் கப்கள் இருந்தன. ஒன்றை எடுத்து அதில் கால் பங்குக்கு ஊற்றி பின்னர் பாட்டில் நீரைக் கலந்தேன். மீன் வறுவல் பொட்டலத்தைப் பிரித்து வைத்துக்கொண்டேன். 

கலந்து வைத்தது வைத்தாகவே கடந்தது. ஏனோ குடிக்கத் தோன்றவில்லை. என் அலைபேசி இரண்டு முறை அடித்தது. எடுக்கத் தோன்றவில்லை. பேண்டில் இருந்து எடுத்து அருகில் வைத்தேன்.

அருகில் ஏதோ சலனம். மன்றத்தின் நடுத்தூணுக்குப் பின்னால் இருந்து வந்தது. அங்கு ஒரு அழுக்குப் பொதி கிடந்தது. அங்கிருந்து ஒரு தலை எட்டிப்பார்த்தது. இத்தனை இடுங்கலிலும் அங்கு ஒரு உருவம் இருந்ததை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. சுவரிடுக்கில் இருந்து எட்டிப்பார்க்கும் பல்லியைப் போல தலை தெரிந்தது. பரட்டைத் தலை. பிசிறுண்ட தாடிமயிர்கள். செம்பட்டை பிடித்துப் போயிருந்தது. என்னைப் பார்த்திருந்தவாறு இருமுறை இருமியது. நல்ல கனத்த கக்குவான் இருமல். அடிநெஞ்சுவரை இழுப்பு சென்று வந்தது. 

மூன்றாம் முறை என் அலைபேசி மணி ஒலித்தது. என் மனைவிதான். இரண்டுமுறை எடுக்காதவனைத் தொந்திரவு செய்யாமல் இருக்கலாமல்லவா? வேறு வழியின்றி அழைப்பை ஏற்றேன். 

“கிளம்பி ரொம்ப நேரம் ஆச்சே. எங்க இருக்கீங்கன்னு கூட தெரிலயே?”

“அதுக்குத்தான சொல்லாம வர்றது?” 

போனைத் துண்டித்தேன்.

மீண்டும் அந்த இருமல் சத்தம் இடைப்பட்டது. எட்டிப்பார்த்து இருமிய உருவம் என்னருகில் வந்து மூட்டுக்காலில் கைவைத்து குந்தி அமர்ந்துகொண்டது.

தேசலான தேகம். நெஞ்சொடுங்கிப் போயிருந்தது. எலும்பில் தோலை காயப்போட்டது போல உடல் வத்தியிருந்தது. பல்லில் புகையிலை பழுப்புக்கறை. 

“யோவ். நீ இத்தனை நேரம் இங்கத்தான் இருந்தியா?”

அது தலையைச் சொரிந்துகொண்டே “ஆமாம்” என்பது போல ஆட்டியது. 

“அந்த காதல் ஜோடி இருந்த போதும் கூடவா?”

அது “ஆமா” என்றது.

“நீ இருந்தத அதுங்க கவனிக்கலையா?”

அது வாய் திறந்து, “தெரிஞ்சாலும் தெரிஞ்சுருக்கும் தம்பி. ஆனா என்னால அதுங்களுக்கு எதுவும் பாதகமில்ல” என்றது.

“நான் ஏதோ இந்த கல்லுத் தூணுல ஓடி ஒளியிற பல்லி மாதிரி ஒடுங்கி இருக்கிறவன். இது மாதிரி எத்தனையோ வருதுங்க போவுதுங்க தெனமும். என்னை பெருசா கண்டுக்கறதில்லை.”

நான் “கருமம்” என்று மீண்டும் தரையில் காறித் துப்பினேன். 

பின்னர் யோசித்துப் பார்த்தபோது, நான் நினைத்த ஒப்புமையையே அவரும் தனக்குப் பொருத்திச் சொன்னது எனக்குத் திகைப்பளித்தது.

மீண்டும் அதே கக்குவான் இருமல். 

“வத்தாத இருமல் போலயே. கொடலுக்குந்தானிலாம் வாரிப் போட்டுறப் போவுது.”

“ஆமா தம்பி, அந்த புள்ளைங்க இருந்துதுகளே, அதுங்க போகட்டும்னு அதுவரை நெஞ்சுலயே தேக்கி வச்சுருந்தது” என்று சொல்லி இளித்தது.

“என்ன காசமா?”

“ஆமா”.

“எத்தனை வருஷமா?”

“20 – 25 வருஷமா.”

“பரவால்ல. இன்னும் வாழறியே.. கஞ்சா குடிப்பியோ? எங்க கிடைக்கிது இங்க?”

அது மீண்டும் தலையைச் சொரிந்துகொண்டு இளித்தது. பின்னர் குறுகி என் காதருகினில் வந்து “நெய்தவாசல் ரோட்டுக்கு அந்தண்டப் பக்கம்” என்றது.

நான் “சரி” என்றுவிட்டு மீண்டும் வானத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.

கடற்கரை காங்கை உப்பு மணத்துடன் சுழன்றடித்தது. முதல் இரு சட்டைப் பட்டன்களைக் கழற்றி என் நெஞ்சுக்கூட்டில் கைவைத்துப் பார்த்தேன். வியர்த்துப் பிசுபிசுத்திருந்தது. என் மேல் எழுந்த புழுக்க வாடை எனக்கே அடித்தது.

அது குந்தி அமர்ந்துகொண்டு என்னையும் நான் கலந்து வைத்திருந்ததையும் மாறி மாறிப் பார்த்தது.

“என்ன யோசனை?” என்றது.

“என்ன யோசனை?” மீண்டும்.

கண்களைச் சுருக்கி வானைப் பார்த்தபடி நான் பதில் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தேன்.

“வாழ்க்கைன்னா என்னன்னு யோசிக்கிறீங்களா இருக்கும்” என்றது. 

நான் மீண்டும் ஆழ்ந்தேன். சிறிது நேரம் கழித்து, “என்னன்னு தெரிஞ்சுதா என்ன?” என்று நக்கலடித்தது.

நான் எரிச்சலாகி, “ம்ம்ம்… ஒவ்வொன்னுத்துக்கும் மூக்கால அழுவுறது” என்று பொரிந்து தள்ளினேன்.

“அதென்ன மூக்கால அழுகுறது? கண்ணாலதான அழுக முடியும்?” என்றது.

இது முக்கியமா இப்போது?

“யோவ், கண்ணால அழுதா வருத்தம். கண்ணீர் வரும். இது அது இல்லை. இது மூக்கால அழுவுறது. எரிச்சல். புரியுதா?”

அது என்னைப் பார்த்து கெக்கலித்தது.

“சரி, இதை இப்படியே விட்டா எப்படி? எடுத்துக் குடி” என்று நான் கலந்து வைத்ததைக் காண்பித்து கையசைத்துச் சொன்னது.

நான் கண்டுகொள்ளவே இல்லை. சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை அதையே சொல்லி எனக்கு ஞாபகப்படுத்தியது.

நான் “யோவ் இங்க ஒக்காந்து தொணத் தொணங்கப்படாது பாத்துக்கோ. உனக்கு வேணும்னா நீ எடுத்துக் குடி. ஆனா குடிச்சுட்டு என் கண்ணு முன்னாடி நிக்கப்படாது தெரிஞ்சுதா?” என்றேன்.

அது அந்த கிளாஸை எடுத்து ஒரே மடக்கில் குடித்தது. பழுப்படர்ந்த பற்களில் ஒரு மீன் வறுவலை எடுத்து இடுக்கிக்கொண்டது. பிறகு தன் அழுக்குப் பொதியை லாவி நெஞ்சோடு வைத்துக்கொண்டு அறுந்த ரப்பர் செருப்பில் காலை கோணலாய்ச் சொருகிக்கொண்டு குடுவோட்டம் குதியோட்டமாக ஓடிப்போனது.

*

நான் அந்த மன்றத்திலேயே தனித்து இருந்தேன். ஆளரவமற்ற அந்த இடுங்கல் மன்றம் என்னை இருப்புக்கொள்ளாமல் செய்தது. எங்கேயாவது விஸ்தீரணமான இடத்துக்குப் போய்விட வேண்டும். எழுந்து கரையோரமாகவே தெற்குப் பக்கம் நோக்கி நடந்தேன்.

காவேரியம்மன் ஆலயம் தாண்டி நடந்தேன். அதன் பின்னர் காவேரி சங்கமம். ஓராள் உயரம் வரை இருந்த கரைமணல் குவியல்களுக்கு நடுவில் காவேரி வங்கக்கடலில் கலந்தது. முழங்கால் அளவு நீர்தான் இருந்தது. பேண்டை மடித்துவிட்டுக்கொண்டு நடந்தேன். சலனமற்ற ஆற்று நீர் சலனித்திருக்கும் கடல் அலைகளுக்குள் ஒடுங்கிப்போகும் நீர்க்கோடுகளைத் தொடர்ந்தவாறு சென்றுகொண்டிருந்தேன். உண்மையில் ஆறும் கடலும் அங்கேதான் சரியாகப் பிரிகிறது என்று எண்ணிக்கொண்டேன்.

பெரிய தூரம் எல்லாம் கடக்கவில்லை. சில பத்து அடிகளில் ஆறு முடிந்துவிடும்.. அப்போது இது ஏனோ தோன்றியது. “திருச்சி அருகே பரந்து விரிந்து அகண்ட காவேரியாகக் காட்சியளிக்கிறது. இங்கு மட்டும் ஏன் ஒடுங்கி இடுங்கி ஒரு கோமணத்து அளவுக்குக் கடலில் கலக்கிறது?”

தொடர்ந்து நடந்தேன். வலப்பக்கமாய் தூரத்தில் மீனவக்கிராமம் தெரிந்தது. காவேரி ஆற்றை வளைத்துத் தேக்கி வைத்திருந்த நீரில் மீன்பிடி மதகுகளும் வலைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன. 

நான் நேர் நோக்கியபோது கடலை ஒட்டிய கரையிலேயே கருவேலம் புதர்கள் மண்டிக்கிடந்தன. அதைத் தாண்டி இன்னும் செல்ல முடியுமா எனத் தெரியவில்லை. இதற்கு முன்னும் நான் சென்றதில்லை. சரி, போகிற வரை போய்விட்டு வரலாம் என்று தொடர்ந்து நடந்தேன். ஜன நடமாட்டம், ஆள் அரவம் எதுவும் இல்லை. அதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது.

*

ஆனால் என்னைச் சூழ்ந்திருக்கும் அனைத்து திசைகளில் இருந்தும் இன்னமும் நெருக்கடியை உணர்கிறேன். என்னை நாலாப்பக்கத்தில் இருந்தும் எவரோ இடித்துக்கொண்டே வருகிறார்கள் அல்லது என்னைச் சுற்றியும் என் உடம்பைச் சுற்றியும் ஒட்டியவாறு கண்ணுக்குப் புலப்படாத சுவரொன்று என் கூடவே நகர்ந்து வருகிறது. அதுதான் என்னை நெருக்குகின்றதோ?

அது என் குழியிடி வாழ்க்கையை நினைவூட்டுகிறதா என்ன? சிறு வயது முதலே எனக்கு அமைந்தது அதுதான். பொந்து வாழ்க்கை. என்னைச் சுற்றி நால்வர் இடித்தபடியே வளர்ந்திருக்கிறேன். என் வீடோ ஒரு எலிப்பொந்து. எங்கு திரும்பினாலும் எதுவோ இடிக்கும். என்னைச் சூழ்ந்திருக்கும் அத்தனை சாமான்களும் எனக்கு எதிராக மாறும்.

என்னுடன் பிறந்தவர்கள் ஐவர். நான் அவர்களில் இளையவன். அப்பா இல்லை. கரும்பு ஆலையில் லோட் இறக்கிக்கொண்டிருந்தவர் நான் பிறந்த பிறகு மாரடைத்து இறந்துபோனார். முதல் இரண்டு அக்காக்களும் திருமணமாகிப் போய்விட்டார்கள். முதல் அண்ணன் படிப்பேறாமல் அரக்கோணம் அருகில் சூளை வேலை என்று போனவன் இன்று அங்கே சொந்தச் சூளை வைத்து நடத்துகிறான். எப்போதாவது வருவான். இரண்டாமவன் சாதி மாறி பக்கத்து ஊர்ப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதால் அம்மா அவனை விரட்டி விட்டுவிட்டாள். திருவாரூர் பக்கம் கோகிலமங்கலம் அருகே இருப்பதாகக் கேள்வி.

எங்கள் வீட்டில் படுக்கவே இடம் இருக்காது. சிறிய வயதில் நான் வளரவே கூடாது என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். வேண்டியிருக்கிறேன். சொல்லப்போனால், நான் என் உடன்பிறந்தவர்களைவிட உயரமானவனாக இருந்தேன். மனிதனின் சராசரி உயரம் ஆறடி என்றால் எங்கள் வீட்டுக்குள் ஒதுக்கப்பட்ட அளவு மூன்று அடிகள்தான்.

என் அம்மா கால்மடக்கிச் சுருண்டுகொண்டு ஒருபக்கமாக ஒருக்களித்து உறங்குவதையே நான் இதுநாள் வரை கண்டிருக்கிருக்கிறேன். கொஞ்சம் நீட்டிப்படுத்தால் தரையில் கிடக்கும் ட்ரங்குப் பெட்டி இடிக்கும். அப்படி முடங்கி முடங்கியே அவளுக்கு நடுத்தர வயதில் மூட்டுவலி கண்டுவிட்டது. நான் வேலை வாங்கி பெரிய வீடுகட்டி குடி வந்த பிறகும் அவள் அதே போன்றுதான் உறங்குகிறாள். அப்படி உறங்கினால்தான் உறக்கமே வருகிறது என்றுவிடுவாள்.

ஒவ்வொரு முறையும் வீட்டில் இருக்கும் போது அம்மா சொல்வாள். “கவனம், கவனம்” என்று. சாப்பிட்ட தட்டைக் கொல்லைக்கு எடுத்துக்கொண்டு போய் கழுவப் போடும் போது நாள் தவறாமல் குறைந்தது நான்கு இடங்களிலாவது இடித்துக்கொள்வேன். தடுமாறுவேன்.

சாப்பிட்டு எழும்போது பின்னிருக்கும் சாய்வு நாற்காலியின் நீண்ட கைமுனை முதுகில் இடிக்கும். 

அறையைவிட்டு கொல்லை வாசலுக்குத் திரும்பும் போது நிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் காலி சிலிண்டரின் அடிவிளிம்பில் இடிபட்டு இடக்கால் சுண்டுவிரல் நசுங்கும். 

கொல்லைப்பக்கம் சற்று தாழ்வான பகுதியாக இருப்பதால் படி வைத்துக் கட்டியிருந்தோம். அதில் ஒரு படிக்கும் இன்னொரு படிக்கும் இருக்கும் உயரம் சீராக இல்லாததால் கணிப்பு தவறி கால் தடுக்கும். சில நேரம் இறங்கும் போது விழப்போனதும் உண்டு.

வீட்டின் பின்பகுதியைச் சற்று நீட்டியெடுத்து ஆஸ்பெஸ்டாஸ் தட்டோடுகள் போட்டு மறைத்துக் கட்டியிருந்ததால் கூரையைத் தாங்க நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரும்புக்கால்களில் எதில் ஒன்றிலாவது வேகமாக என் கைமூட்டின் நுனிபட்டு விண்ணென்று தெறிக்கும்.

“இங்க எல்லாமே எடைஞ்சல்தான் இல்ல?” என்று அவள் மேல் எரிந்து விழுவேன். 

“நீதான் பாத்துப் போகணும். கவனமா இருக்கணும்” என்பாள்.

எழுந்தால் வானமே இடிக்கும் என்பது போல அவளால் இந்த வீட்டில் குறுக்கிக்கொண்டு திரிய முடியும். என்னால் முடியவில்லை. அன்று என்னால் எனக்கென்று தனியாக எதுவும் செய்துகொள்ளவும் முடியவில்லை.

அம்மாவும் அவளால் முடிந்த வரை குறைந்தபட்ச இடைஞ்சல்களுக்குள் வீட்டையும் பொருட்களையும் மாற்றி மாற்றி வைத்துப் பார்ப்பாள்.

*

நான் மண்ணம்பந்தல் கல்லூரியில் வேதியியல் இளங்கலை படித்தேன். ஐந்தாறு வருடம் வேலையில்லாமல் கழித்தேன். பிறகு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்திருந்தது உதவியது. அதன் மூலமாக ஊரக வளர்ச்சித் துறையில் செம்பதனிருப்பு ஊராட்சியில் அலுவலக உதவியாளராகப் பணி நியமனமாகியது. 

கல்லூரிக்காலத்தில் முதல் ஒன்றரை வருடத்துக்கு நான் வீட்டில் இருந்து பேருந்தில் கல்லூரிக்குச் சென்று வந்தேன். அலைச்சலும் சோர்வும் மிகுதியாக இருந்தது. தஞ்சாவூர்க்காரப் பயல்கள் கல்லூரிக்கு அருகே வீடெடுத்து தங்கிப் படித்தார்கள். ஒரே வீட்டில் ஒன்பது பேர் இருந்தார்கள். என்னைப் பத்தாவதாகச் சேர்த்துக்கொண்டார்கள். வீட்டு ஓனரிடம் இத்தனைப் பேர்தான் தங்கவேண்டும் என்கிற கெடுபிடியெல்லாம் இல்லை. அவர் மயிலாடுதுறையில் இருந்தார். மாதம் ஒருமுறை வந்துபோவார். மாத வாடகையாக ஆளுக்கு இருநூறு ரூபாய் கொடுத்தால் போதும். கல்லூரி முடித்தும் வேலையில்லாமல் இருந்த ஆரம்பகாலங்களில் அங்குதான் தங்கினேன்.

அதுவும்கூட கீக்கிடம்தான். வேறு வழியில்லை. தனி வீடு. ஹால் மட்டும் கொஞ்சம் பெரியது. இரண்டு ரூம். வீடு பத்து பேருக்குத்தான் விடப்பட்டிருந்தது. ஆனால் குடிஇரவு என்று வந்துவிட்டால் வாரி வழியும். இருபது இருப்பத்தியைந்து பேர் இருப்போம். ஒருவர் கவட்டைக்குள் மற்றொருவராகவும் ஒருவரது அக்குள் இடுக்கில் இன்னொருவராகவும் உறங்கிக் கிடப்போம். ஒருவரின் கால் கட்டை விரல் மட்டும்தான் இன்னொருவரின் வாயில் சொருகியிருக்காது.

மறுநாள் எவரேனும் ஒருவரைப் பிடித்து இழுத்தால் போதும். சுவரோரத்தில் மண்டிய நூலாம்படை இருக்குமில்லையா? ஒரு திரியை இழுத்தால் மொத்தமும் கொத்தாக இழுபட்டு வந்துவிடுமே? அது போல சிக்குண்டு படுத்துக்கிடப்போம்.

*

நான் விஸ்தாரத்திற்காக ஏங்கினேன். என்னை விஸ்தரிக்க விடாமல் ஒரு சரடு, ஒரு சங்கிலித்தொடர் செவ்வனே பார்த்துக்கொண்டது. அந்தச் சங்கிலித்தொடரின் கண்ணிகள் எவை எவையென்று நானும் முடிந்தவரை பார்த்துக்கொண்டே வந்தேன்.

அதனாலேயே வேலைக்குச் சேர்ந்த பிறகு முதல் மாதத்தில் இருந்தே பணம் சேர்த்தேன். சீட்டு போட்டேன். தவணைமுறையில் தலைச்சங்காட்டில் என் பழைய வீட்டின் எதிர்ப்புரத்தில் பத்து செண்டுக்கு நிலம் வாங்கினேன். வாழைக்கொல்லையாய் இருந்த இடம். பின்னர் சில வருடங்கள் கழித்து பின்பக்கப் பாதியைக் கொல்லையாகவே விட்டு வைத்துவிட்டு முதல் பாதியில் பெரிய வீடாகக் கட்டிக்கொள்ளலாம் என்கிற எண்ணம் இருந்தது. 

என் திருமணத்திற்காக அம்மா பெண் பார்த்துக்கொண்டிருந்தாள். திருமணப் பேச்சை எடுத்த போதே வீடு கட்டும் வேலையை ஆரம்பித்தேன். அம்மா பழைய வீட்டிலேயே இருந்துகொள்வதாகச் சொன்னாள். புது வீடு கட்ட ஆரம்பித்த போது அஸ்திவாரம் போடுவதற்காகத் தோண்ட வந்த ஜே.சி.பி இயந்திரத்தை வைத்துக்கொண்டு என் பழைய வீட்டின் மீது அதன் இயந்திரத் தூக்கியால் இடிப்பது போலக் கொண்டுபோய் காட்டி மிரட்டிய பிறகுதான் புது வீட்டில் வந்து தங்குவதற்கு அம்மா ஒத்துக்கொண்டாள்.

திருமணமும் உடனே நடந்துவிடவில்லை. நாளெடுத்தது. அதுவும் மூன்று வருடங்கள். அம்மா புலம்பித் தீர்ப்பாள். பின்னர் திருச்சி குளித்தலைக்கு அருகே பெண் அமைந்தது. வீடும் ஆமை வேகத்தில் கட்டி முடிக்கப்பட்டிருந்தது.

என் மனைவி பூஞ்சையான உடம்புகொண்டவள். சாது. ஓங்கிப் பேசவே மாட்டாள். நானும் அவளிடம் கத்தியது இல்லை. அம்மாவுக்கு அவளைப் பிடித்திருந்தது. களையப்படாத சோகம் அவள் முகத்தில் இழையோடிக்கொண்டிருப்பதாகத் தோன்றும். அந்தச் சோகத்தை வெகுளித்தனம் என்று என் அம்மா அர்த்தப்படுத்திக்கொண்டிருந்தாளோ என்னவோ?

நான் அதுவரை புது வீட்டில் பொருட்கள் எதுவும் வாங்கிப் போடவில்லை. படுத்துக்கொள்வதோடு சரி. மனைவியைத் திருமணம் செய்து கூட்டி வந்த பிறகும் கொஞ்ச நாளைக்கு எதுவும் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். வேண்டுமென்றேதான். எந்த இடர்ப்பாடும் என்னைச் சுற்றியில்லை. நடு ஹாலில் கால் மேல் கால் போட்டுப் படுத்துக்கொள்வேன். நல்ல பெரிய ஹால். கப்பல் போல எண்ணிக்கொள்வேன். என்னை நானே வியந்துகொள்வேன். என் குழியிடி வாழ்க்கையின் நினைப்பே இல்லாமல் நன்றாகத் தூங்குவேன்.

இரவில் மனைவியுடன் இருந்துவிட்டு படுக்கையறையில் தங்காமல் எழுந்துபோய் நடுஹாலில் படுத்துக்கொள்வேன். அருகில் இருங்களேன் என்று அவள் கெஞ்சிக் கேட்பாள். நான் எழுந்து வந்துவிடுவேன். 

ஓர் இரவில் நான் எழுந்துசென்ற போது அவளே கேட்டாள்.

“உங்களுக்கு நானுமே எடஞ்சல்தானா?”

நான் அதனைச் சரியாக காதில் வாங்கவில்லை. வெளியே சென்று நீர் அருந்திவிட்டு வந்து என் படுக்கை விரிப்பை எடுத்துக்கொண்டேன்.

பிறகு நான் அவளிடம், “என்ன கேட்ட?” என்றேன்.

அவள் “ஒன்னுமில்லை” என்றாள். 

நான் “சரி” என்றுவிட்டு, “பேசாம கொல்லைப்பாதியையும் சேர்த்து இன்னும் பெருசா வீட்டக் கட்டியிருக்கலாமோ?” என்று சொல்லிவிட்டு ஹாலில் படுத்து உறங்கிப் போனேன். திருமணம் முடிந்து ஆறுமாதம் ஆகிய பின்னர்தான் புது வீடு பொருட்களால் நிறையத் தொடங்கியது.

ஒருமுறை டீப்பாய் வாங்குவதற்காக மனைவியை மயிலாடுதுறை வரை அழைத்துச் சென்றேன். டீப்பாயை டாடா ஏஸ் வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு கடையின் அருகில் இருந்த குட்டைச் சுவரில் ஒட்டியிருந்த ஒரு மலையாளப் படத்தின் போஸ்டரை என்னை அறியாமலேயே கண்களைச் சுருக்கிப் பார்த்துக்கொண்டு நின்றேன். இத்தனைக்கும் அது ஜனநடமாட்டம் மிகுந்திருந்த பட்டப்பகல். 

பின்னர் என் மனைவி வந்து என் கவனத்தைக் கலைத்து என்னை அங்கிருந்து இழுத்துச் சென்றாள். அவள் என்னிடம் பெரிதாக வேறெதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. வண்டியில் ஏறி ஓட்டிச்சென்ற போதும்கூட அந்நினைவை அசைபோட்டுக்கொண்டிருந்தேன். 

எத்தனை தாட்டியான உடல்வாகு கொண்டு அப்பெண் தாழ்ந்து அமர்ந்திருந்தாள். மாரிடுக்கில் ஒற்றை மயிரிழைகூட நுழைந்துவிட முடியாத அளவுக்குக் கெட்டிப்பட்டிருந்த தாட்டியம்.

பிறகெப்போதோ சில மாதங்களுக்குப் பிறகு இரவில் ஹாலுக்குச் சென்று படுக்கும் அவசரத்தில், என் மனைவியுடன் துரிதகதியில் இயங்கிவிட்டு விலக முற்பட்டேன். வலியில் அவள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். கடந்த சில நாட்களாகவே கூடும்போது அவள் இப்படி முணுமுணுப்பது போல இருந்தது.

“ஏதோ சொல்றியா நீ?”

இளைப்புகளுக்குள் இடைப்பட்டு சிக்கி அவ்வார்த்தைகள் வெளிவந்துகொண்டிருந்தன.

“அந்த… நெனச் நெனச்சு…. க்கோங்க”

“என்ன மொனகுற? ஒன்னும் புரியல.”

கொஞ்சம் நிதானித்து அவள் தாடையைப் பிடித்துக் கேட்டேன்.

“அன்னிக்கு போஸ்டர்ல பாத்த அந்த பொம்பளை. அவள…  அவள கொஞ்சம் நெனச்சுக்கோங்க” என்றாள்.

நான் வியர்த்து வெலவெலத்துப் போய் எழுந்துகொண்டேன். வேகவேகமாகப் படுக்கை விரிப்பை வாரி எடுத்துக்கொண்டு ஹாலுக்குச் சென்று படுத்தேன்.

*

நான் அந்தக் கருவேலம்புதர் இருக்கும் எல்லை வரை வந்துவிட்டேன். இன்னும் செல்ல முடியுமா என்று எக்கிப் பார்த்தேன். இதற்கு முன்பெல்லாம் அதைத் தாண்டிப் போக முடியாது. கரை தெரியாது. கடல் கடைசி வரை ஏறி இருக்கும். ஆனால் இன்று கடல் உள்ளொடுங்கி இருந்தது. கரை தெரிந்தது. தாண்டிப் போகலாம் என்றிருந்தது.

எனக்கு முன் இடைப்பட்டிருந்த ஒரு உடைமுள் செடியை விலக்கிவிட்டு அந்தப் பகுதிக்குள் நுழைந்தேன். நான் நடந்துசென்ற தடத்தில் எல்லாம் கடலிருந்த நேற்றைய ஈரம். நடக்கையில் நசநசத்தது. ஆனால் என்னால் வேகமாக நடக்க முடிந்தது. காய்ந்த மணலில் நடப்பது போல் இல்லை.

தூரத்தில் அக்கரையின் நடுவே கடலால் அடித்துக்கொண்டு வந்து போடப்பட்டிருந்த ஏதோ ஒரு மரத்தின் நடுமரக்கிளை. அதன் மேல் இரு காகங்கள் அமர்ந்து கரைந்துகொண்டிருந்தன. நான் அவற்றைத் தூரத்தில் இருந்தே விரட்டிவிட்டு அங்கே போய் அமர்ந்துகொண்டேன். 

வானை நோக்கி அண்ணாந்து பாராமல் என் கண் முன் இருந்த விரிவையே நேர்குத்திப் பார்த்தவாறு இருந்தேன். கழிமுகத்துச் சதுப்பு நிலங்களில் இருந்து அடித்துக்கொண்டு வரப்பட்ட தீவுச்செடிகள் ஓடம் போன்ற மிதவையில் அலைகளில் தள்ளாடிச் சென்றுகொண்டிருந்தன. தூரத்து நீர்வெளி அருகில் வரவர நீலத்தில் இருந்து பச்சையாக மயங்கும் நிறப்பிரிகை துலக்கமாகத் தெரிந்தது. 

யதேச்சையாகக் கீழே பார்த்தேன். கரைமணலில் நேற்று கடல் இருந்த இடத்தின் ஈரத்தில் ஒருவகையான சீர்மைகளைக் கண்டேன். மண்ணைத் திரித்து இழைகளாக்கிக் கோலம் போட்டது போல. வட்டவட்டமாகச் சுழன்று கொடிமலர்கள் இதழ் விரித்தது போல. சேலை ஜரிகைகளில் இருக்குமே அது போன்ற வேலைப்பாடுகள். 

அந்தக் கடல் ஈரம் தென்பட்டவரையில் என் இருபக்கமும் கண்ணோட்டிப் பார்த்தேன். அதே மாதிரியான வேலைப்பாடுகளே தென்பட்டன. திருவெண்காட்டுக் கோயில் தலைவாயிலின் தூண்களில் இப்படிப்பட்ட வேலைப்பாட்டைக் கண்டிருக்கிறேன்.

உற்றுக் கவனித்தேன். மணல் நிறத்திலான மண்ணுருட்டி நண்டுகள். அரை இஞ்சு அளவுக்கே இருந்தன. ஒவ்வொன்றும் ஈர மண்ணில் இருந்து மிளகளவு கரைமணலை உருட்டித் திரட்டி, வரிசைக்கிரமமாக, வளைந்து சென்ற வழிகளில், சீரான இடைவெளிகளில் அடுக்கிச் சென்றன. இப்படி அந்த நண்டுகள் கரை முழுதும் வரைந்து வைத்திருந்தன. ஒவ்வொரு பூவையும் ஒவ்வொரு நண்டு பார்த்துக்கொள்கிறது போலும்.

நான் வெறுமனே அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். மண்ணை அரித்து அரித்து உண்டு தன்னை நிறைத்துக்கொண்டிருந்தன அவை. உண்ட மிச்சத்தை உருண்டை எச்சங்களாக விட்டுச்சென்றுகொண்டிருந்தன. அவை மண்ணை மட்டும் அரிக்கவில்லை. என் எண்ணங்களாகிய என்னையும் சேர்த்தே அரித்து உருட்டித் திரட்டி உண்டு செரித்துச் சென்றுகொண்டிருக்கின்றன. 

*

மீண்டும் என் அலைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தேன். ஆனால் பேசவில்லை. அடித்து அதுவே நிற்கட்டும் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். 

திருமணமாகி இரண்டரை வருடம் கழித்து என் மனைவி கருவுற்றிருந்தாள். முதலில் என்னிடம் அவள் சொன்ன போது இனம் புரியாத பூரிப்பை அடைந்தேன். என் அம்மாவிடம் சென்று சொன்னேன். அவளுக்கு அவ்வளவு சந்தோஷம். என் மனைவியின் பெற்றோர்களுக்குச் சொல்லிவிட்டேன். அவர்கள் வந்து அவளைப் பார்த்துச் சென்றனர். 

இத்தனை நாளாக நான் எதிர்பார்த்திருந்தது கைகூடி வந்ததைப் போல பேருவகை எழுந்தது. ஒருவேளை நான் என்னை அறியாமலேயே அதனை எதிர்பார்த்து இருந்திருக்கிறேனோ? நான் இதனை இழக்கலாகாது. பலவாறு பெருக்கிக்கொள்ள முயன்றேன். சில சமயங்களில் எடை கூடிவிட்டது போல இருந்தது. சந்தேகப்பட்டு எடைக்கருவியில் நின்று பார்த்துவிட்டு வருவேன்.

தலைச்சங்காட்டில் உள்ள ஒரு பொதுநல மருத்துவரிடம் – பெண்தான் – என் மனைவியைப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றேன். என்னிடம் மனைவியை நன்றாகப் பார்த்துக்கொள்ளச் சொன்னார். அவளிடம் “நல்லா சாப்பிடணும்ப்பா. வலுசேரணும்” என்றார். மூன்று மாதத்திற்குப் பிறகு மயிலாடுதுறைக்குச் சென்று மகப்பேறு மருத்துவரிடம் காட்டி ஸ்கேன் எடுத்துக்கொள்ளுங்கள் என்று பரிந்துரைத்தார். சில சத்து மாத்திரைகளை எழுதிக்கொடுத்தார். 

நான் என் மனைவியை நன்றாகவே பார்த்துக்கொண்டேன். அவள் வேண்டுவதைப் பார்த்து வாங்கிக் கொடுத்தேன். அது அவளுக்கே ஆச்சரியமளித்தது. அவளிடம் இரவில் நெடுநேரம் பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பேன்.

குழந்தைக்காக வீட்டை எப்படி மாற்றி அமைக்கலாம் என்று சொல்லிக்கொண்டிருப்பேன். ஊஞ்சல் தூளி கட்ட எல்லா அறையின் உட்கூரையிலும் கொக்கி அடித்து வைத்தேன்.

மூன்றாவது மாதம் வந்தது. மயிலாடுதுறைக்குச் சென்றோம். ஸ்கேன் செய்து பார்த்தோம். பென்சில் அளவில் இருந்த ஏதோ ஒரு மெட்டல் குழாயில் ஆணுறையை மாட்டி, போர்த்தப்பட்டிருந்த என் மனைவியின் கீழ்ப்பக்கத்தில் சொருகினார்கள். பிறகு, என்னை உள்ளே அழைத்துக் காண்பித்தார்கள். அருகில் இருந்த தொடுகணினித் திரையில் இருட்டும் வெளுப்புமாகத் தெரிந்த மேகமூட்டத்தின் நடுவே தனித்து ஒரு திசு துலங்கி இருந்தது தெரிந்தது. அந்த ஒற்றைத் திசுவின் மையத்தில் இருந்து சுருள்வளை சுருள்வளையாக அதிர்வலைகள் எழுந்துகொண்டிருந்தன. 

மருத்துவர், “குழுந்தைக்கு ஹார்ட் பீட் இருக்கு பாருங்க” என்று என்னிடமும் படுத்திருந்த என் மனைவியிடமும் கணினித் திரையைத் திருப்பித் திருப்பிக் காண்பித்தார். என் மனைவி என் கண்களில் கண்ணீர் துளிர்த்திருப்பதைப் படுத்திருந்தபடி தலையசைப்பால் சுட்டிக்காட்டினாள்.

பின்னர் “எல்லாம் நார்மலாதான் இருக்கு” என்று ஒருமுறை கணினித் திரையைத் தொட்டுப் பெரிதாக்கினார். “இதான் உங்க மனைவியோட கருப்பை. உங்க கொழந்த வலப்பக்கமா.. இதோ.. இங்க இருக்கு பாருங்க” என்று சுட்டிக்காட்டினார். மேலும் திரையை அங்கங்கு தொட்டு பெரிதும் சிறிதுமாக ஆக்கியபடி முழுதுமாக அலசினார்.

பின்னர் தயங்கியபடி ஓரிடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். நானும் அவரின் பின்னிருந்தபடிக்கே பார்த்தவாறு நின்றிருந்தேன். திரையைப் பிரித்தபடி நடுவில் ஒரு மெலிதான கோடு ஓடியது. அது வலப்பக்கம் சிறியதாகவும் இடப்பக்கம் பெரியதாகவும் அக்கருப்பையைப் பிரித்திருந்தது. வலப்பக்கம் சிறியதாக இருந்த அறையில் இருந்து சுருள்வளை அதிர்வலைகள் எழுந்துகொண்டிருப்பது தெரிந்தது. 

மருத்துவர் என்னை வெளியே போகச் சொல்லிவிட்டு என் மனைவியை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார். 

பின்னர் இருவரிடமும், “கருப்பையில செப்டம் இருக்கு” என்று சொன்னார். 

“உங்களுக்கு முன்னாடியே இது பத்தி தெரியுமாப்பா?” என்று என் மனைவியைப் பார்த்துக் கேட்டார். அவள் தெரியாது என்று சொல்லிவிட்டாள்.

“ஒன்னும் கவலைப்பட தேவையில்ல. இதலாம் இப்போ காமன் அப்னார்மலிட்டிதான், சரியா? இனி ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை செக்கப்புக்கு வாங்க. குழந்தைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஹார்ட் பீட் நல்லா இருக்கு. சோ கவலைப்படத் தேவையில்லை. கொஞ்சம் இன்னும் கவனமா இருக்கணும் அவ்ளோதான்.” 

என்னைப் பார்த்து, “இன்னும் கொஞ்சம் இவங்கள கவனமா பாத்துக்கோங்க சார்“ என்றார்.

எனக்கு மேலும் கேட்கத் தோன்றவில்லை. நான் மனைவியிடமும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஃபார்மசிக்கு சென்று எழுதிக்கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்கி வந்தேன். மனைவியை என் வீட்டில் விட்டுவிட்டு, வண்டியைக் குரங்குப்புத்தூர் கடைக்கு விட்டேன். இங்கு வந்து சேர்ந்தேன். 

*

என் மனைவியோ நரம்பானவள். அவளிடம் குழந்தை ஒன்று உருவாகி அதற்கு இடம் இருந்ததே பெரிய விஷயம். இதில் இந்த எழவு வேறு என்று எரிச்சல்பட்டு அருகில் நண்டு வரைந்து வைத்திருந்த ஒரு மணற்பூ மீது காறி உமிழ்ந்தேன்.  

தூரத்தில் ஏதோ ஒரு சலசலப்பைக் கண்டேன். கடல் நேற்றுவிட்ட இடத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளப் பார்த்தது. ஒரு பேரலை எழுந்து என் காலடியைத் தொட்டுவிடும் என்பதை உணர்ந்துகொண்டவனாக, கரைப்பரப்பில் ஊர்ந்துகொண்டிருந்த இம்மண்ணுருட்டி நண்டுகளைப் பார்த்தேன். இவற்றையும் இக்கடல் மொத்தமாக வாரிச் சுருட்டிக்கொண்டு விடட்டும். தொலையட்டும் இவை.

அவை தான் ஏற்படுத்தி வைத்திருந்த அச்சீர்மைகளின் மேல் அவ்வளவு சுறுசுறுப்பாக நகர்ந்தன. அவையும் ஒரு பேரலை வருவதைக் கணித்துவிட்டது போல. அக்கடலலை அவற்றை நெருங்கியது. அவை அச்சீர்மைகளின் மையப்பகுதிக்கு வந்து நின்று, சூழ்ந்திருந்த கால்களை உள்ளிழுத்துக்கொண்டு, சட்டென அங்கிருந்த கண்ணுக்குத் தெரியாத துளைக்குள் ஒடுங்கி, சுவடே இல்லாமல் மறைந்து போயின. ஒன்றுகூட அலைகளோடு போய்விடவில்லை. அலை நுரை அந்தச் சிறிய பள்ளங்களை மூடி நுரைத்துக் கொப்பளித்து அடங்கியது. மேல் வந்த அலை தழைந்து சென்ற பிறகு அக்குழிகளின் மேல் நின்ற ஆயிரம் குமிழிகள் ஒருசேர வெடித்ததைக் கண்ணால் கண்டுகொண்டிருந்தேன்.

நான் எழுந்து அகன்று சென்றேன். தன் வளைமையத்தின் ஆரத்திலேயே இத்தனை நேரம் தன்னை வைத்திருந்த அந்த நண்டுகள் என் கண்முன் காற்றில் ஊர்ந்து சென்றன. நான் என் நெஞ்செரிச்சலைப் பெருக்கிக்கொண்டவாறு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தேன். நடந்து சென்றுகொண்டே கையில் இருந்த பையிலிருந்து சிறிய பாட்டிலை எடுத்தேன். எதுவுமே கலக்காமல் அப்படியே வாய் வைத்துக் குடித்து பாட்டிலைத் தூர எறிந்தேன். அந்த உடைமுள் செடிக்கு அருகே நின்று ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். முதல் அலையைப் பின்தொடர்ந்து தொடர்ச்சியாகப் பல பேரலைகள் எழுந்துகொண்டிருந்தன.