தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 11): துலா முள்ளின் அசைவுகள் – பா.திருச்செந்தாழையின் கதைகள்

0 comment

ஒழுங்கான கோடுகள் கொண்ட ஒரு பக்கத்தில் சற்றே கோணலாக வளைந்திருக்கும் கோடு உடனடியாக எல்லோரது கவனத்தையும் கவரும். ஒருவழிப்பாதையில் எதிரில் வரும் ஒழுங்கு மீறிய வாகனம் அனைவரையும் பதற்றத்துக்கு உள்ளாக்கும். மீறல்கள் உருவாக்குகிற சமன்குலைவை முதன்மைப்படுத்தும் கதைகளுக்கென்று இலக்கியத்தில் தனித்த செல்வாக்கு எப்போதுமே உண்டு. ஒருவகையில் இலக்கியத்தின் பணி அத்தகைய மீறல்களையும் அதற்கான காரணங்களையும் அவற்றின் விளைவுகளையும் யோசிக்கச் செய்வதுதான். 

‘உலகமே ஒரு நாடக மேடை’ என்ற சொற்றொடருக்கு நிகரான செல்வாக்கு கொண்ட இன்னொரு கூற்று ‘எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு’ என்பது. திருச்செந்தாழையின் கதைகள் துலக்கிக் காட்ட முயல்வது வாழ்வின் உள்ளும் புறமுமாய் பின்னிக் கிடக்கும் கொடுக்கல் வாங்கல்களைத்தான். வணிக உலகின் ஒவ்வொரு அங்குலத்திலும் படிந்திருக்கும் தந்திரங்களின் நெடியை, ஈவிரக்கமற்ற அதன் உக்கிரத்தை, கால்களுக்கு அடியில் மிதிபடும் எவற்றையும் பொருட்படுத்தாது தன் இலக்கை நோக்கி மட்டுமே விரையும் வேகத்தை முதன்மைப்படுத்துபவை அவரது கதைகள். 

வியாபாரம் ஒரு சூது. தரவுகள், உலக நடப்புகள், உற்பத்திக்கும் தேவைக்குமான சமன்பாடு என அனைத்தையும் துல்லியமாகக் கணக்கிடும் மதி நுட்பம், ஆண்டாண்டுகளாகப் பொட்டுப்பொட்டாய்ச் சேர்த்த அனுபவம், காரணகாரியங்களுக்கு அப்பால் இதுதானென்று துலாமுள் போலத் துடித்து நிற்கும் உள்ளுணர்வு ஆகிய மூன்று படைக்கலன்களையும் கொண்டே இதில் இறங்க முடியும். இத்தனை இருந்தபோதும் வெற்றியோ அல்லது குறைந்தபட்சம் இழப்பின்மையோ உறுதியில்லை என்பதுதான் இது கற்றுத்தரும் பாடம். 

இவ்வாறான வெளிப்படையான கணக்கு வழக்குகளுக்குப் பின்னால் உள்ள சிக்கலான மனக்கணக்குகள் இன்னும் வலிமையானவை. அத்தகைய கணக்குகளையும் அவற்றின் ஆழத்திலுள்ள காரணங்களையும் இலக்காகக் கொண்டிருப்பவை திருச்செந்தாழையின் கதைகள்.

வணிகத்தையும் அதன் சூட்சுமங்களையும் கற்றுக்கொள்வது குருகுலபாடம் போன்றுதான். அல்லும் பகலுமாய் குருவின் காலடியில் கிடந்து அவரது ஒவ்வொரு அசைவையும் தவறவிடாது கவனித்து, ஏவல்களை நிறைவேற்றி, வசவுகளைத் தாங்கி, அவமானங்களை விழுங்கி, மிகப் பொறுமையாய் தனக்கான காலம் கனியும் வரை காத்திருந்து கற்றுக்கொள்ளும் பெரும் கல்வி. பிரிந்து தனியாகச் செல்லும் மாணவன் ஒவ்வொருவனும் ஆசிரியரின் போட்டியாளன்தான். ‘நீங்கள் இட்ட பிச்சைதான்’ என்று அவன் பணிந்து வணங்கும்போதே அவனது கணக்குகள் என்ன என்பதை அறிந்தவர் ஆசிரியர். ராம பவனத்தின் வீழ்ச்சியையும் அங்கிருந்து உருவாகி வளர்ந்து நிற்கும் தன்ராஜின் வெற்றியையும் விவரிக்கும் ‘விலாஸம்’ கதை இந்த ஆசிரிய மாணவ உறவின் உள்மடிப்புகளைத் துல்லியமாக கணித்திருக்கிறது. 

வியாபாரம் செழிப்பதோ அழிவதோ வெற்றியும் தோல்வியும் அல்ல. அது வரவு செலவு கணக்கு, அவ்வளவுதான். ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான போட்டியாளரை உள்ளுக்குள் நிறுத்தியே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். யாரை வீழ்த்தவேண்டும் யாரை மிஞ்ச வேண்டும் என்ற தெள்ளத் தெளிவான கணக்கு உண்டு. எது இலக்கு என்பதை அவரைத் தவிர வேறு யாரும் அறிந்துவிட முடியாது. போட்டியாளருக்குத் தெரியும், தானே அந்த இலக்கு என்பதையும். சமயங்களில் அவரை வெற்றியின் நிறைவையோ சாகச உணர்வையோ தரக்கூடாது என்பதற்காக ‘விலாஸம்’ கதையின் தன்ராஜைப் போல விட்டுக்கொடுத்துவிடுவதும் உண்டு. 

ஒவ்வொரு வியாபார சாம்ராஜ்யத்துக்குப் பின்னும் பழைய வெற்றிகரமான தொழிலாளி ஒருவரின் உழைப்பும் அனுபவமும் உண்டு. அவரது கணிப்புகள் தவறுவது அரிது. அவர்களில் ஒருசிலரே முதலாளியாக முடிகிறது. அவ்வாறு அவர்கள் ஆக முடியாதபடியான சூட்சுமங்களைத் தங்கள் கைக்குள்ளேயே முதலாளிகள் இருத்திக்கொள்கிறார்கள். முதலாளிக்காக வியாபார கணக்குகளைத் துல்லியமாகக் கணிக்கமுடிகிற ‘துலாத்தான்’ அய்யாவுவால் தன் மகளின் வாழ்க்கைக் கணக்குகளை எதுவும் செய்ய முடியவதில்லை. 

வியாபாரம் போலவே தந்திரங்களையும் கணக்குகளையும் அடிப்படையாகக் கொண்டவை மனித உறவுகள். மனித உறவுகளின் பல்வேறு திரிபுகளையும் வியாபாரத்தின் தந்திர நுட்பங்களையும் இணைத்து கதைகளாக்கும்போது அவை அடையும் கூடுதல் பரிமாணங்களின் அழகை உறுதிப்படுத்துகின்றன திருச்செந்தாழையின் கதைகள். 

மனிதர்களின் சுயநலமும் வியாபாரிகளின் இலாபநோக்கும் ஒரே கணக்குதான். நஷ்டமடையும்போது அவனைக் கைதூக்கிக் காப்பாற்றுபவர்களைவிட அந்த நிலையைப் பயன்படுத்தி அவர்களிடமிருந்து எதையேனும் கைபற்ற முடியும், சுரண்ட முடியும் என்று திட்டமிடும் மனமே ‘த்வந்தம்’ கதையில் செயல்படுகிறது. இரத்த உறவாக இருந்தாலும்கூட சுயநலமே வாழ்வின் ஒவ்வொரு நகர்வையும் தீர்மானிக்கிறது எனும் யதார்த்தத்தை திரவியம், மரியம் கதாபாத்திரங்களின் வழியாகச் சொல்லும் ‘ஆபரணம்’ கதையிலேயே அவர்களின் போக்குக்கு நேர் எதிரான குணாம்சங்களைக் கொண்ட திலகரையும் சித்திரையையும் கொண்டு துலாக்கோலைச் சமன்செய்திருக்கிறார் திருச்செந்தாழை. பொருட்செல்வத்தை இலக்காகக் கொண்ட மரியத்தையும் மக்கட்செல்வமே மகிழ்ச்சி தருவது என்பதை இயல்பாக உணர்ந்த சித்திரையையும் ஒரு சமன்பாட்டில் இருத்துகிறது இந்தக் கதை. தந்திரங்களைக் கொண்டு திலகரைத் தோற்கடிப்பதன் வழியாக உயர்ந்திருத்த திரவியத்தின் தட்டு இறுதியில் தாழ்ந்து போவது அந்தச் சமன்பாட்டை உறுதிசெய்கிறது. ஆனால், கதையின் எந்த இடத்திலும் இந்த துலாக்கால் விளையாட்டிலிருந்து விலகி நிற்கிறார்கள் சித்திரையும் திலகரும். 

நுட்பமான தகவல்களுடன் கச்சிதமான விவரணைகளுடன் கூடிய கதைமொழி கனிந்து திருச்செந்தாழையின் கதைகளுக்கு தனித்த அடையாளத்தைத் தருகின்றன. சம்பவங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் அந்த நேரத்தில் கதையின் உணர்வுதளத்துக்கும் பொருத்தமான உவமைகள் மிக இயல்பாக அமைந்துள்ளன. ‘தங்கத்திற்கேயுரிய சுறுசுறுவென நாசியைத் தீண்டுகிற மின்மணத்தோடு பாலின் வெம்மையான கவுச்சி வாசனையும் சேர்ந்தெழுந்தது’, ‘அவள் தனது ஒவ்வொரு நகையாகக் கழற்றிக் கொடுத்துவிட்டு பொட்டுத் தங்கம் இல்லாத, கலங்கலான நீர் நிரம்பிய கண்ணாடிப் பாத்திரத்தைப் போல தூணில் சாய்ந்துவிட்டாள்’ (ஆபரணம்) போன்ற வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் உவமைகள் வலிந்து தம்மைக் காட்டிக்கொள்வதில்லை. ஆனால் அவை தம் வலுவான இருப்பை உணர்த்திவிடுகின்றன. ‘குத்தவைத்திருந்த காலருகே மக்காச்சோளத்திலிருந்து உரித்து எறியப்பட்ட காய்ந்த சோகை தலைவிரி கோலம்கொண்ட பெண்ணின் முகச்சாயலோடு உருண்டு வந்தது’ (துலாத்தான்) என்பது வெறும் சித்தரிப்பாக நின்றுவிடாமல் கதையின் குறிப்பிட்ட தருணத்தில் அய்யாவு கதாபாத்திரத்தின் உளப்போக்கைக் காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. 

கதையின் போக்குக்கும் வார்ப்புக்கும் பொருத்தமாக, இயல்பாக சூழலை சித்தரிப்பதென்பது கதையின் வாசிப்புத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கியமான காரணி. ‘பாதி அணைத்து வைத்திருந்த சுருட்டை மீண்டும் உதட்டில் கவ்வக் கொடுத்தபடி தீக்குச்சியைக் கிழித்தார் அய்யாவு. மொரமொரப்பான தாடியின் வெண்ரோமங்களுக்கிடையே பொன் வெளிச்சம் பூத்து வந்தது. குச்சியை அணைத்து வீசிவிட்டு கண்மாய்ச் சரிவின் இருளுக்குள் பார்வையை விட்டார். நீர் நிறைந்து கிடக்கும் வாகைக்குளம் கண்மாயின் மீது நிலவு வெளிச்சம் துணியைப் போல மிதந்துகொண்டிருந்தது’ (துலாத்தான்) என்று தொடங்கும்போதே கதை திருத்தமாக உருவாகிவிடுகிறது. 

‘வெளியே நாங்கள் வந்திருந்த செர்ரி நிறத்துக் காரை டிரைவர் மேலும் மேலும் பழமாக மாற்றிவிடுபவனைப் போலத் துடைத்து மெருகேற்றிக்கொண்டிருந்தான். அருகிலேயே அந்த வீட்டுக்காரர்கள் உபயோகப்படுத்துகிற பிஸ்தா நிற பியட் கார் மெழுகு பொம்மையைப் போல் நின்றிருக்க, அதன் வயசாளியான டிரைவர் அருகேயிருந்த பூந்தொட்டியின் விளிம்பில் சாய்ந்து நின்று பீடி புகைத்தவாறே எங்களது காரையும் டிரைவரையும் பார்த்தபடியிருந்தான்’ என விலாஸம் கதைக்கு அழுத்தம் தரும் வகையில் கதையின் ஆரம்பத்திலேயே அமைந்துள்ளன இந்த வரிகள். 

சொற்களின் வழியாகக் கதை மாந்தர்களின் தோற்றத்தை உருவாக்கிக் காட்டுவதைக் காட்டிலும் அவர்களது குணவிசேஷங்களை வெளிப்படுத்தவே அதிகமும் முனைகின்றன திருச்செந்தாழையின் கதைகள். கதாபாத்திரங்கள் கோட்டுச் சித்திரங்களாக அல்லாமல் கண்முன் உயிரூட்டத்துடன் உலவும் மனிதர்களாவதன் நுட்பம் அதுவே. 

‘காய்ப்புப் பிடிக்காத கையும் புளிக்கறை படியாத நகங்களுமாக கல்லாவில் அமர்ந்து பணம் எண்ணிச் சிரிக்க வைப்பது அண்ணன் தம்பி வியாபாரத்தில் ஒரு நீண்ட நாளுக்கான சூதுகளில் ஒன்று’ (ஆபரணம்) என்ற ஒற்றை வரி அண்ணன் தம்பி இருவரின் குணாம்சங்களையும் தீர்க்கமாக வகுத்துவிடுகிறது. 

‘வியக்க ஒன்று கிடைத்தவுடன் எல்லாத் துயரங்களையும் மூட்டையாகக் கட்டி கண்காணாமல் எறிந்துவிட்டு அந்தப் புதிய வியப்பின் முன் குத்துக்காலிட்டு அமர்ந்துவிடுவாள்.’ ‘துலாத்தான்’ கதையின் பரமுவின் வெகுளித்தனத்தை இதைவிட நேர்த்தியாகச் சொல்ல முடியாது. 

‘அப்பாவால் இன்னமும் மொடமொடப்பான ஒரு வெள்ளை நிறச் சட்டைக்குள் முழுமையாகத் தன்னை நுழைத்துக் கொள்ளமுடியாமல் திணறச் செய்கின்ற சிரிப்பு’ என ‘விலாஸம்’ கதையின் அப்பாவும், ‘தவறான காலத்தில் தவறான விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்ட நவதானிய மூடைகள் தகப்பனைச் சூழ்ந்திருக்கும் மக்குப் பிள்ளைகளைப் போல பம்மிக் கிடக்க அதன் நடுவே அபத்தமான புன்னகையோடு நின்றிருந்தான்’ என தீபனும், ‘கல்லாப் பெட்டியின் இரும்பு கைப்பிடியைப் பிடித்தபடி கேட்கின்ற லீலாவின் கண்களுக்குள் இந்தப் பேச்சின் போதையை விரும்புகிற கிறக்கம் தெரியும். பராமரிப்பிலில்லாத தெய்வமொன்று புதிய குருதி வாசனையை நுகர்ந்தபடி கண்களில் ஒளிபடர ஒரு எட்டு முன்னால் எடுத்து வைத்து வருகின்ற கிறக்கம்’ என்று ‘த்வந்தம்’ கதையின் லீலாவும் உணர்ச்சிப் பரிமாணங்களுடன் உருவாகி நிற்கிறார்கள். 

திருச்செந்தாழையின் கதையுலகை மேலும் நம்பகத்தன்மைக் கொண்டவையாக ஆக்குபவை வியாபார உலகில் புழங்கும் சொற்களுடன் அமைந்த உரையாடல்கள். “லாபத்துல நட்டம் விழும். அப்படி நட்டம் விழும்ங்கறது இந்த சம்சாரிகளுக்கும் தெரியும். தெரிஞ்சேதான் இந்த நட்டத்தை சுமக்கறோம்ங்கறத அவங்களுக்கு உப்பு ஒறப்பா புரிய வைக்கணும். ஏன்னா நாகலாபுரத்துலருந்து விளாத்திகுளம் வரைக்கும் அடுத்தடுத்து வரப்போற மல்லிக்கும் வத்தலுக்கும் இப்ப இவங்ககிட்ட நம்மபேர்ல உண்டாக்குற கரிசனந்தான் தூண்டில் புழு. ஒருவகையில இது நட்டம் கூட கிடையாது. அந்த கரிசனத்துக்கான முதலீடு.” (த்வந்தம்)

வியாபார களத்தையும் மனிதர்களின் அகத்தையும் இணைத்து ஆ.மாதவன் உருவாக்கிய ‘சாலைத் தெரு’வுக்கு இணையானது திருச்செந்தாழை உருவாக்கும் ‘மண்டி’ உலகம். சின்னச் சின்ன தகவல்கள், செறிவாக உருவாக்கும் கதாபாத்திரங்கள், வாசனையும் வண்ணமுமான சூழல் எனத் திருச்செந்தாழை உருவாக்கும் வணிக உலகம் தமிழ்ச் சிறுகதைக்கு புதியதொரு களத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கூடவே, அதனுடன் இணைந்த மனிதர்களின் அக அசைவுகளையும் முன்னுதாரணமற்ற புதிய மொழியில் அது கூர்மையுடன் எழுதிக் காட்டுவதால் கூடுதலான கவனத்தையும் வீச்சையும் பெறுகிறது. 

*

முந்தைய பகுதிகள்:

  1. தந்தையர்களும் தனயர்களும் – தூயனின் சிறுகதைகள்
  2. அன்னையின் சித்திரங்களும் சாதியின் முகங்களும் – சுரேஷ் பிரதீப் சிறுகதைகள்
  3. நடுவில் இருக்கும் கடல் – சித்துராஜ் பொன்ராஜ் கதைகள் 
  4. உழைக்கும் சிறுவர்களின் துயர உலகம் – ராம் தங்கம் கதைகள்
  5. கலையும் வண்ணங்களும் மறையும் காட்சிகளும் – கிருஷ்ணமூர்த்தியின் கதைகள் 
  6. போரும் காமமும் – அனோஜன் பாலகிருஷ்ணன் கதைகள்
  7. இருண்ட வானில் ஒளிரும் நட்சத்திரங்கள் – கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் கதைகள்
  8. புனைவெழுத்தின் புதிய சாத்தியங்கள் – சுனில் கிருஷ்ணனின் கதைகள்
  9. அகத்தின் ஆழம் தேடி – மயிலன் ஜி.சின்னப்பனின் கதைகள்
  10. கதை சொல்லாத கதைகள் – கமல தேவியின் கதைகள்