தமிழில் உள்ள பல நூல்கள் சமஸ்கிருதத்திலிருந்து தழுவலாகவோ மொழிபெயர்ப்பாகவோ ஆக்கப்பட்டவை என்று சிலர் கூறி வருகின்றனர். ஒரு மொழியில் ஒரு காலச்சூழலில் தோன்றி வேறு மொழியில் வேறு ஒரு காலச்சூழலில் இயற்றப்பட்ட ஆக்கங்களுக்கு இது பொருந்தும். பாரதம், இராமாயணம் ஆகியவை இவ்வாறு தோன்றியவை. வட இந்தியாவில் கி.மு. கி.பி நூற்றாண்டுகளில் தோன்றிய இந்த இதிகாசங்கள் சில நூற்றாண்டுகள் கழித்துத் தமிழில் இயற்றப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள நிலப்பரப்பு வட இந்தியவில் உள்ளது. பாத்திரங்கள், இடங்கள், சூழல், பண்பாடு முதலியவை வட இந்தியாவிற்கு உரியவை. இந்த இதிகாசங்கள் தமிழ்ப் பண்பாட்டிற்கு மாறானவை என்றாலும் மொழிபெயர்ப்பாகவோ தழுவலாகவோ தமிழில் ஆக்கப்பட்டவை. இதில் யாருக்கும் எந்த ஐயமும் இல்லை. ஆனால், இவற்றிலும் சமூகம், பண்பாட்டு அடிப்படைகளில் தலைகீழாக நடப்பதும் உண்டு. இந்த இயல் பிற்பகுதியில் இது விளக்கப்படும்.
ஆனால் இது எல்லா நூல்களுக்கும் பொருந்தாது.
ஒரு நூல் ஒரு மொழியில் முழுமையாக இயற்றப்பட்ட பின்னர் அதே மொழியிலோ வேறு மொழியிலோ தழுவல், மொழிபெயர்ப்பு என்ற வகைகளில் இயற்றப்பட்டுள்ளது என்ற மேலோட்டமான கருத்துப் பொதுவாக நிலவி வருகிறது. ஆனால், இது தவறான கூற்று என்று அனைவருக்கும் தெரிகிறது.
இதற்குப் பின்னர் உள்ள கருதுகோள் இங்கு முதன்மையாகிறது. மேலே கூறியபடி ஒரு நூல் ஒரே காலத்தில் ஒருவரால் முழுமையாக இயற்றப்படுகிறது என்பது இதற்குப் பின்னர் உள்ள கருதுகோள். கல்வி நிலைகளில் பல காலமாக வழக்காறாக வழங்கிவந்து காலப்போக்கில் அந்த மரபில் தோன்றும் பலராலும் வளர்த்தெடுக்கப்பட்டு ஒரு சூழலில் நூலாக்கம் பெறும் ஒன்று இன்று உள்ள நிலையை அடைகிறது. ஒரு ஆக்கம் இன்று உள்ள நிலையை எந்தக் காலத்தில் அடைந்தது என்றும் கூற முடிவதில்லை. குறிப்பாக, கலை நூல்களுக்கும் இலக்கணம் முதலான அறிவுத்துறை நூல்களுக்கும் இது பொருந்தும். எனவே ஒரு நூல் எவ்வாறு உருவாகிறது என்று ஆராய்வது தேவையானதாக உள்ளது. இந்தப் பகுதியில் அது விளக்கப்படும்.
இந்த நூலின் ஆசிரியர் எழுதிய ‘இலக்கண நூல் உருவாக்கம்‘ என்ற கட்டுரையில் இலக்கண நூல்கள் பல காலமாக வழக்காற்றில் வழங்கிவந்து ஒரு சூழலில் நூலாக்கம் பெறுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. (சீனிவாசன், 2021:11-32)
வழக்காற்றிலிருந்து நூல்கள் தோன்றுகின்றன என்ற சூழலில், அந்த வழக்காறு எந்தச் சமூகத்தில் உள்ளதோ அதே சமூகத்தில்தான் நூல் தோன்ற முடியும். அப்படி என்றால் அந்த நூல் அந்தச் சமூகத்திற்கு உரியது என்பது வெளிப்படையாகிறது. அந்தச் சமூக மக்களின் வழக்காறுகள், சிந்தனைகள் ஆகியவையே நூலாக்கத்தில் முதன்மை பெறுகின்றன. நூலாக்கத்தில் மொழிக்கு முதலிடம் இல்லை. நூலுக்கு அடிப்படையாக உள்ள சிந்தனைகளே முதன்மை இடத்தைப் பெறுகின்றன. நூலாக்கத்தில் மொழி ஒரு கருவி மட்டுமே என்பது முன்பும் கூறப்பட்டது.
தத்துவம், தருக்கம், இலக்கணம், கலைநூல்கள் முதலானவை எவ்வாறு தோன்றின என்ற உசாவல் நூல்களின் உருவாக்கம் பற்றி அறிவதற்கு உதவும். இத்துடன் மொழிக்கும் நூலுக்கும் இடையே உள்ள தொடர்பை அறிவதற்கும் இவ்வாறான உசாவல் உதவும்.
ஒரு கலை பற்றிய நூல் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு மரபுகளில் இயற்றப்படுகிறது. இவை அனைத்தும் ஒரு நூலைப் பார்த்து இயற்றப்பட்டவை அல்ல. இவை அந்தந்தக் கலை வழக்காற்றிலிருந்தே தோன்றியிருக்க முடியும். இதை நன்கு அறிவதற்கு இந்தியச் சூழலில் நூல்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்று ஆராய்தல் வேண்டும்.
நூல் வடிவல் இயற்றப்படாமல் இன்றும் வழக்காற்றில் மட்டுமே உள்ள கலைகள், தொழில்கள் பல. அவற்றிற்கு இதுவரை நூல்கள் தோன்றவில்லை. ஆனால் அந்தக் கலைகளும் தொழில்களும் காலம்தோறும் நன்கு வளர்ந்து வருகின்றன.1
ஒரு கருத்தை இங்கு மனதில்கொள்ள வேண்டியுள்ளது. கலைகளிலிருந்து நூல்கள் தோன்ற முடியும். நூலிலிருந்து கலைகள் தோன்ற முடியாது. நூல்கள் தோன்றுவதற்கு முன்பே நீண்ட காலமாகக் கலைகள் வழக்காறாக, அதற்கு உரிய எல்லாக் கூறுகளுடனும் இயங்கிக்கொண்டிருக்கும். அதிலிருந்தே ஒரு நூல் உருவாக முடியும். மற்றபடி எந்தக் கலையும் நூலிலிருந்து தோன்ற முடியாது. கலைகளைப் பொறுத்தவரை அவற்றைக் கற்றுக்கொள்ளும் செயல்பாட்டில் நூலுக்கு மிகவும் குறைவான பங்கே உள்ளது. நூலும் நூல் அறிவும் இல்லாமலேயே காலம்தோறும் கலைகளைக் கற்றல் கற்பித்தல் நடந்துவருகின்றன. கலைகளைக் கற்றலில் மட்டுமல்லாமல் நிகழ்த்துதலிலும் நூல்களின் பயன்பாடு பெரிய அளவில் இல்லை.
கலைகள் பயின்றுவரும் காலத்தில் நூல் அறிவு அவற்றைச் செழுமை ஆக்குவதற்கு ஓரளவுக்குப் பயன்படலாம். ‘நூலறி புலவர்’ என்றும், ‘நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து’ என்றும் கூறப்பட்டுள்ள தொடர்கள் எல்லாம் இவ்வாறனவைதான். நடனம், இசை, கூத்து முதலான கலைகளைக் கற்றுக்கொள்வதில் நூல்கள் பயன்படுவது இல்லை.
நூல்களின் பயன்கள் இரண்டு வகை.
1. மொழியில் பதிவுசெய்து வைத்தல். இதனால் கலையைப் பற்றிய கருத்துகள் காலாகாலத்திற்கு நிலைபேற்றுத் தன்மையை அடைகின்றன.
2. நிலைப்படுத்துதல். நூல்கள் தேர்ந்த ஆசிரியர்களால் இயற்றப்படுவதால் இருப்பதிலேயே சிறந்த வழக்காறுகள் பதிவுசெய்யப்படுகின்றன. ஒரு கலையில் பல வழக்காறுகள் உள்ள நிலையில் ஆசிரியர் கற்ற மரபு அல்லது அவரால் சிறந்தது என்று கருதப்படும் மரபையே அவர் நூலாக இயற்றுகிறார்.
நூல்கள் பிற்காலத்தில் வழிகாட்டிகளாக விளங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம் அவை மாறாமல் காக்கப்படும் சூழலையும் எண்ணிப் பார்க்க வேண்டும். நூல்களில் சொல்லப்பட்டவை மாறாமல் அப்படியே இருக்கும். ஆனால், மொழி இலக்கியம் கலைகள் வளர்ந்துகொண்டே இருப்பவை. இவற்றின் வளர்ச்சியை நூல்கள் தடுக்காமல் மீறல்களைத் தொடர்ந்து அனுமதிப்பதையும் காண்கிறோம். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே, “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” (நன்.462) என்று கூறப்பட்டுள்ளது
கலைகளைப் பொறுத்தவரை நூல்கள் சிறுபகுதியே. வழக்காறுகளே பெரும்பகுதி. அதைக்கொண்டே கலைகள் கற்பிக்கப்படுவதும் பயிலப்படுவதும் நடைபெற்று வருகின்றது. அதே சமயம் கலைகள் தொடர்ந்து வளர்ந்து வருவதையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
அ. வழக்காறும் கல்வி மரபும்
இந்தியச் சூழலில் ஒரு நூல் எவ்வாறு உருப்பெறுகிறது என்று நோக்கும் போது நூலாக்கத்தில் கல்வி மரபு முதலிடம் வகிக்கிறது2. பண்டைக் காலத்தில் மரபுவழியிலேயே கற்றல் கற்பித்தல் நடைபெற்று வந்துள்ளது. ஆசிரியர்கள் தாம் கற்றதை நினைவில் வைத்திருந்து அதையே தம் மாணவர்களுக்கும் கற்பிப்பார்கள். பெரும்பாலும் நூல்களைப் பார்த்துக் கற்பிப்பதில்லை. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் அச்சியந்திரம் பயன்பாட்டிற்கு வந்தபோது நம்நாட்டில் ஐரோப்பியக் கல்வி முறை அறிமுகமானது. அதன் பிறகே மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காகப் பாடப்புத்தகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முன் காலத்தில் சுவடிகள் இருந்தாலும் கற்பிக்கும்போது அவை பெரிய அளவில் பயன்படுத்தப்படவில்லை.
கல்வி என்பது மனனம் வழியாகவும் ஆசிரியர் சொல்ல மாணவர் கேட்டு அறிதல் என்ற வகையிலும் நடைபெற்று வந்தது. ஏற்கெனவே இயற்றப்பெற்ற நூல்கள் சூத்திரமும் உரையுமாக வழிவழியாக வழங்கி வந்தன. கல்வி மரபுகளில் இவற்றுடன் நூல்களில் இல்லாத கருத்துகளையும் சேர்த்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிவழியாகக் கற்பித்து வந்தனர்.
கல்விச் சாலைகளில் வழங்கப்பெற்ற அறிவுகளில் ஒரு சிறுபகுதியே நூலாக்கம் பெற்றுள்ளது. பெரும்பாலும் ஆசிரியரிமிருந்து மாணவருக்குத் தலைமுறைதோறும் கையளிக்கப்பெற்று வந்த அறிவுகளில் ஒரு பகுதி அங்கு பயின்றுவந்த ஒருவரால் பதிவு செய்யப்பெற்று நூலாக உருப்பெறுகிறது.
பெரும்பாலும் சூத்திர வடிவங்களில் நூல்களை இயற்றுதல் இந்திய மரபின் நூலாக்கத்தின் ஒரு பண்பு. சூத்திர வடிவில் தோன்றும் நூல்களில் அதன் ஆசிரியரின் பங்கு எவ்வளவு என்று கேட்க வேண்டியுள்ளது. ஏனெனில், கல்வி பயிற்றும் முறையில் ஆசிரியர் பாடத்தை உரைநடையில் சொல்வதைவிட சூத்திர வடிவிலேயே கூறுவார். முழு நூலாக அல்லாமல் உதிரியாகச் சிறுசிறு சூத்திரங்களில் பாடங்களை மாணவர்களுக்குக் கற்பிப்பார்கள். மாணவர்களின் நினைவில் நிற்கவும் அவர்கள் இதை மற்றவர்களுடன் விவாதிக்கவும் பிறருக்குக் கற்பிக்கவும் ஏற்றதாகச் சூத்திர வடிவம் இருந்தது. ஒருவர் கற்கும் நிலையிலேயே அவருக்குச் சூத்திர வடிவில் பாடத்தின் ஒரு பகுதி கிடைத்துவிடுகிறது. தலைமுறைதோறும் இதில் சேர்க்கைகளும் புதிய விளக்கங்களும் சேர்ந்துகொண்டே வருகின்றன.
படைப்பாற்றல் மிக்க ஒருவர் தான் கற்றவற்றைக் கொண்டும் தன்னுடைய அனுபவத்தைக் கொண்டும் ஒரு நூலை இயற்றுகிறார். அதை எழுதுகிறார் என்று கூறுவதைவிட இயற்றுகிறார் என்று கூறுவதே சரியானது. ஏனெனில், இவ்வாறு தோன்றும் நூல்கள் தொடக்கத்திலேயே எழுத்து வடிவம் பெறுவதில்லை. பல தலைமுறைகள் மனப்பாடம் வழியாகவே வழிவழியாக வழங்கப்பெற்று ஒரு கட்டத்தில் எழுத்து வடிவம் பெறுகின்றன.
இந்திய மரபில் நூல்கள் எழுத்தாக அல்லாமல் நினைவிலேயே ஆக்கப் பெற்றன. நினைவிலிருந்தே பயிற்றுவிக்கப் பெற்றன. தொடர்ந்து நினைவிலேயே வழங்கிவந்தன. ஆனால், இவற்றில் இருந்தது எழுத்துநடை. இது தேர்ந்த செறிவான செவ்வியல் நடையாக இருந்தது. மனப்பாடம் செய்வதற்கும் நினைவில் வைத்திருப்பதற்கும் ஏற்றவாறு திட்டமிட்டுச் செறிவான நடையில் இயற்றப் பெற்றிருந்தன. சூத்திரங்களை எவ்வாறு இயற்ற வேண்டும் என்பதற்கும் வழிகாட்டும் சூத்திரங்கள் இருந்தன.3
எழுத்து வடிவில் பதிவுசெய்வதற்கு முன்பும் அவை எழுத்து நடையிலேயே இருந்தன என்பதை இங்கே அழுத்திச் சொல்ல வேண்டும். மேலைநாடுகள் போல இங்கு எல்லாமே எழுதப்பட்டவையாக இருந்ததில்லை. ஒரு கருத்து கருத்தாகச் சொல்லப்பட்டே வந்தது. ஆனால், அதில் மாற்றங்கள் நெகிழ்ச்சிகள் ஏற்படா வண்ணம் சுருக்கமாகத் திட்டமிட்ட இறுகிய வாக்கியங்களாக உருவாக்கப்பட்டுப் பயிலப்பட்டுவந்தன. இவற்றை எளிதில் நினைவில் வைத்துக்கொள்வதற்கான சூத்திர வடிவில் உருவாக்கினார்கள்.
எழுத்துமரபு, வாய்மொழி மரபு என்பதை விரிவான பொருளில் நடைமுறை நிலையில் விளங்கிக்கொள்ள வேண்டும். நாட்டார் வழக்காற்றியலில் சொல்லப்படும் பொருளில் இதைப் புரிந்துகொண்டால் அடிப்படையே மாறிவிடும்.
நூல் உருவாக்கம் எந்தெந்தப் படிநிலைகளில் நடைபெற்றிருக்கலாம் என்று சிந்தித்துப் பார்ப்பது பயன் தருவதாக இருக்கும்.
1. முதலில், இந்தியச் சூழலில் நூல்கள் எதற்காக, யாரால் இயற்றப்பெற்றன என்ற வினாவை எழுப்பிக்கொள்வது பயன்தரும். கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களால் கற்பிப்பதற்காக உருவாக்கப்பட்டவையே நூல்கள். இது இலக்கணம், தத்துவம், தருக்கம் முதலான அறிவுத்துறைகள் அனைத்துக்கும் பொதுவான நிலை.
2. இந்த நிலையில் இவை நூல் என்ற பெயருக்கு ஏற்பத் திருத்தமான வடிவத்தில் முழுமையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. உட்பிரிவுகளும் வகைப்பாடும் செம்மையாக அமைந்திருக்கும் என்றும் எதிர்பார்க்க முடியாது.
3. இவ்வாறு உருவாக்கப்பெற்றவை ஒரு ஆசிரியரால் அக முரண்பாடுகள் இல்லாத பொதுவான கருத்துகள் கொண்டவையாக திரட்டப்பட்டுக் கல்வி நிலைகளில் வழங்கி வந்தன. ஆனால், நூலில் உள்ள எல்லாக் கருத்துகளுக்கும் அவரே முழுப்பொறுப்பு என்று கூறிவிட முடியாது. தொடர்ந்து நடந்துவரும் உரையாடல்களால், வினா விடைகளால், வாதங்களால் அவற்றில் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படலாம். விளக்கங்கள் சேரலாம், எடுத்துக்காட்டுகள் சில புதிதாகச் சேர்க்கப்படலாம்.
4. இவ்வாறு வழங்கிவரும் கருத்துகள் ஒருவரால் திருத்தமான வடிவில் நூலாக இயற்றப்படும். நீண்ட காலமாகப் பயிலப்பட்டு வந்ததால் வகைப்பாடு, உட்பிரிவுகள், தொடக்கம், முடிவு முதலானவை செம்மைப்பட்டுக்கொண்டே வந்திருக்கும். இந்த நிலையில் ஒருவரால் ஒரு நூல் வடிவத்தை அடைகிறது.
இப்படிப் பல படிநிலைகளைக் கடந்தே ஒரு நூல் ஆக்கம் பெறுகிறது.
வழக்காறு அல்லது மரபிலிருந்தே ஆக்கங்கள் உருப்பெற்றுள்ளன என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. இவை வழக்கில் பல காலம் வழங்கி நன்கு பட்டை தீட்டப்பெற்ற பின்னரே நூலாக்கம் பெற்றுள்ளன.
க) இலக்கியம்
கா) இலக்கணம்
கி) உரைகள்
கீ) சிற்ப நூல்கள்
கு) ஆகமங்கள்
கூ) தலபுராணங்கள்
கெ) தத்துவ, தருக்க நூல்கள்
கே) இசை, நாடக நூல்கள் (நாட்டிய சாத்திரம்)
முதலானவை இவ்வாறு வழக்காற்றிலிருந்து நூலாக்கம் பெற்றவையே. தனி ஒரு ஆசிரியரால் இவற்றை முழுமையாகப் படைத்துவிட முடியாது. இனி இவை உருப்பெற்றுள்ள முறை விளக்கப்படும்.
க) இலக்கியங்களுக்கு அடிப்படையான கதைகள் மக்கள் வழக்கில் நீண்டகாலமாக வழங்கி வந்தவை என்பதை பல ஆய்வாளர்களும் எடுத்துக் கூறியுள்ளனர். எடுத்துக்காட்டாக, உதயணன் கதை, சீவகன் கதை முதலானவற்றிற்கு ஆதாரமாக உள்ள கதைகள் பல காலமாக மக்கள் வழக்கில் வழங்கிவந்தவை. அந்தக் கதைகளை எடுத்துப் பலர் நூலாக இயற்றியுள்ளனர். இவர்கள் எல்லோரும் மக்கள் வழக்கில் இருந்த கதைகளையே தொகுத்துள்ளனரே தவிர யாரும் இந்தக் கதைகளைக் கற்பனையாகப் புதிதாக இயற்றியவர்கள் அல்ல. அந்த வடிவத்திற்கு மட்டுமே இவர்கள் ஆசிரியர்களே தவிர ஒட்டுமொத்தக் கதைகளையும் படைத்தவர்கள் அல்ல.
சீவகன் கதையை இயற்றியவர்கள் பற்றி உ.வே.சா:
வடமொழியில், க்ஷத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி, ஜீவந்தர நாடகம், ஜீவந்தர சம்பு என நான்கு நூல்கள் உள்ளன. அவையெல்லாம் இச்சீவகன் சரித்திரமே கூறுகின்றன. மஹாபுராணத்தின் ஒரு பாகத்தும் மணிப்பிரவாளமாகிய ஸ்ரீபுராணத்தின் ஒரு பாகத்தும் இச்சரிதம் கூறப்பட்டுள்ளது. அவற்றிற்கும் இதற்கும் கதையில் வேறுபாடுகளுண்டு. அந்நூல்களுள் க்ஷத்திர சூடாமணி என்பதை இதற்கு முதனூலென்று சைனர் கூறுகின்றனர்.(1986:6)
சீவக சிந்தாமணிக்கு முதல் நூல் என்று கூறப்பட்டுள்ள க்ஷத்திர சூடாமணியையும் கத்திய சிந்தாமணியையும் இயற்றிய வாதீபசிம்மன் என்ற கவிஞர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். இவரது காலம் கி.பி. பதினோராம் நூற்றாண்டு என்று கூறப்பட்டுள்ளது. (ஜகந்நாதராஜா:1994) பதினைந்தாம் நூற்றாண்டில் மணிப்பிரவாள நடையில் ஸ்ரீபுராணத்தை இயற்றியவர் ஒரு தமிழர். அதற்கு முதல் நூலாக விளங்கிய மகாபுராணத்தை இயற்றிய இருவரில் ஒருவர் குணபத்திராசாரியர் என்ற தமிழர். (ஜகந்நாதராஜா:96)
மேற்கண்ட கருத்துகளை நோக்கும்போது சமண மடங்களில் நீண்ட காலமாகச் சீவகன் கதை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதைக் கவிஞர்கள் தமிழ், சமஸ்கிருதம், ஆகிய மொழிகளிலும் மணிப்பிரவாளத்திலும் இயற்றினர் என்றும் தெரிகிறது. அதனால், இந்தக் கதைக்கு எந்தக் கவிஞரையும் தொடக்கப்புள்ளியாகக் கூற முடியாது. ஒரு நூலிலிருந்து இன்னொரு நூல் உருவாகவில்லை என்பதற்கும் கதை வழக்காறுகளிலிருந்தே நூல்கள் உருவாகியுள்ளன என்பதற்கும் இது சான்றாகிறது.
சமணர்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள உதயணன், நரவாணதத்தன் கதைகளும் நீண்ட காலமாக மக்கள் வழக்கில் வழங்கிவந்தவை. இவற்றைத் தொகுத்து குணாட்டியர் முதலானவர்கள் நூலாக இயற்றியுள்ளனர். பல வேறுபாடுகளுடன் இந்தக் கதைகள் வழங்கி வந்தன. தமிழில் கொங்குவேளிர் பெருங்கதை என்ற பெயரில் உதயணன் கதையை இயற்றியுள்ளார்.
பெருங்கதையின் தோற்றம் பற்றிப் பின்வரும் கூற்று கவனிக்கத்தக்கது.
“இனி இந்நூற்கு முதனூல் தான் யாது? மற்றிது தோன்றியது எவ்வாறு? எனக் கடாவுவாருக்குக் கூறுவதும்
“அருக சமயத்தினரால் வழிவழியாகக் கேள்வி மாத்திரையானே போற்றப்பட்டு வந்த முடிவேந்தர் வரலாற்றின் தொகுதியை அவர் பெருங்கதை என்று வழங்கிவந்தனர் என்றும் அப்பெருங்கதைப் பகுதிகளினின்றும் பல்வேறு காலத்திலும் நாட்டிலும் வாழ்ந்திருந்த பற்பல புலவர்களும் பல்வேறு நூல்களை இயற்றிக்கொண்டனர் என்றும், அருக சமயம் வடநாடும் தென்னாடுமாகிய எவ்விடத்தும் நன்கு பரவியிருந்தமையால் அவ்வந்நாட்டுப் புலவர்கள் தத்தம் மொழியாலே நூல் செய்வார் ஆயினர் என்றும் அருக சமயம் நஞ்செந்தமிழ் நாட்டில் ஓங்கியிருந்த காலத்தே அச்சமயநெறி நின்றொழுகிய வேளிர் இக்கதையில் ஒரு பகுதியாகிய உதயணன் கதையைப் பொருளாக அமைத்து நந்தண்டமிழில் இப்பெருங்கதையை ஆக்கியருளினார் என்றும் அதனால் இது முதனூலே என்றும் கருதுவது பொருந்தும் என்றே எமக்குத் தோன்றுகிறது.”(சோமசுந்தரனார், 1970:7-8)
இதற்குச் சான்றாகப் பெருங்கதையில் வரும் யூகி என்ற பாத்திரம் பற்றி மணிமேகலையில் இடம்பெற்றுள்ள குறிப்பையும் அவர் தருகிறார். (மேற்படி 8)
இந்த இயலில் வைக்கப்பட்டிருக்கும் வாதத்திற்கு சோமசுந்தரனாரின் கூற்று சிறந்த சான்றாக அமைகிறது.
அரசவைகளில் இவ்வாறு கதைகூறும் சூதர்கள் புழங்கி வந்ததும் அவர்கள் கதைகள் சொல்வதும் அவர்களுக்கு நிறைய சன்மானம் கிடைப்பதும் நாம் அறிந்ததே. இவர்கள் சிறுபறையுடன் பாடலாகவோ அல்லது உரைநடையிலோ கதைகளைக் கூறுபவர்கள். இன்னும் சொல்லப்போனால் கதைகளை நிகழ்த்துபவர்கள்.
சந்தை, திருவிழா முதலிய இடங்களில் கூடும் மக்கள் மன்றங்களிலும் அரசவைகளிலும் அவர்கள் விரும்பும் கதைகளை நிகழ்த்திப் பொருளும் புகழும் பெற்றவர்கள்.
கதையைவிட கதை கூறும் இவர்களது திறமை மேலோங்கியிருக்கும். எந்தக் கதையையும் கேட்போரைப் பிணிக்கும் வண்ணம் சொல்லும் ஆற்றல் இவர்களுக்கு இருந்தது. இவர்களிடம் வழங்கிவந்த கதைகளே பழங்காலத்தில் இலக்கியங்களாக முகிழ்த்தன. கவிஞர்கள் இந்தக் கதைகளைத் தம் படைப்பாற்றலால் இலக்கியங்கள் ஆக்கினர்.
பாரதம், இராமாயணம் முதலான கதைகள் இவர்களின் வழியாகவே வளர்ந்தன, பரவின. இவர்கள் இந்தியா முழுவதும் பரவிச் சுற்றிக்கொண்டே இருந்தனர்.
பாணர்கள், விறலியர், கூத்தர், பொருநர் முதலான கலைஞர்கள் இவ்வாறு அலைகுடிகளாக இருந்து கலைகளைப் பரப்பி வந்ததைப் பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே அறிகிறோம். இவர்களிடமிருந்துதான் கதைகள், பாடல்கள், இசை, நடனம் முதலானவை தோன்றிப் பரவின.
கா) இலக்கண நூல்களில் உள்ள இலக்கணக் கூறுகளும் இவ்வாறு கல்வி மரபுகளில் வழங்கிவந்து பிறகு நூலாக இயற்றப்பட்டவையே. இதை இலக்கண நூல்களின் அடிப்படையில் நன்கு அறியலாம். எந்த ஆசிரியரும் கலைச்சொற்களைப் படைப்பது இல்லை. ஏற்கெனவே வழங்கிவரும் கலைச்சொற்களையும் பகுப்பு முறையையும் அடிப்படையாகக் கொண்டே இலக்கண நூல்கள் உருவாகியுள்ளன. கலைச்சொற்கள் வெறும் பெயர்கள் மட்டும் அல்ல. குற்றியலுகரம் என்ற சொல் ஓர் எழுத்து ஒரு சூழலில் குறைந்து ஒலிக்கும் என்றும் தொடர்களில் அதன் செய்லபாடுகள் வேறுபட்டிருக்கும் என்றும் உள்ள அனைத்தையும் உள்ளடக்கியது. குற்றியலுகரத்தின் வகைகள் உள்ளிட்டவை எல்லாம் அந்தக் கலைச்சொல்லுக்குப் பின் இருக்கும். இவ்வளவு நுட்பமான இலக்கணம் ஒரே ஆசிரியரிடமிருந்து ஒரு நேரத்தில் தோன்றிவிட முடியுமா?
கல்வி மரபுகளில் வழக்கத்தில் உள்ள கருத்துகளே இலக்கண நூல்களுக்கு ஆதாரமாக அமைகின்றன. ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்பிக்கும்போது எற்படும் சிக்கல்கள் பல. அவற்றையும் சேர்த்துக்கொண்டே அந்த ஆசிரியர்கள் இலக்கண நூல்களை இயற்றுகின்றனர். இதைப்பற்றி இலக்கண நூல் உருவாக்கம் என்ற இந்நூலாசிரியரின் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. (சீனிவாசன், 2021:11-32)
இலக்கணத்தில், குறிப்பாகப் பொருள் இலக்கணத்தில், கல்வி மரபுகளில் நீண்ட காலமாக ஆசிரியர்களிடம் வழங்கிவரும் கலைச்சொற்களையும், பொருள்களையுமே ஒரு இலக்கண ஆசிரியர் நூலில் கூற முடியும். மற்றபடி தாமாகப் புதிதாக ஒன்றைப் படைத்துக் கூறிவிட முடியாது. சமூகத்தில் நிலவும் பல மரபுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதும் அந்த மரபில் கூறப்படும் இலக்கணத்தைச் சரியாகவும் விரிவாகவும் விளக்குவதும் இலக்கண ஆசிரியரின் பணி. இலக்கண நூல்களில் கலைச்சொற்களையும் வகைகளையும் இலக்கணத்தையும் கூறும்போது, ‘இவ்வாறு வழங்கப்படுகிறது’ என்ற வாய்ப்பாட்டிலேயே கூறப்பட்டுள்ளதை அறிகிறோம். மற்றபடி ‘இவ்வாறு கூறவேண்டும்’ என்ற வாய்ப்பாட்டில் கூறப்படுவதில்லை என்பதையும் இங்கே எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. (மேற்படி கட்டுரை)
இலக்கண நூல்களிலும் உரைகளிலும் மாற்று மரபுகள் கூறப்படுவதும் அவை வேறு இலக்கண நூல்களில் காணப்படாததும், ‘வல்லார்வாய்க் கேட்டறிக‘ என்று கூறப்படுவதும் இவ்வாறான மாற்றுக் கருத்துகள் வெவ்வேறு கல்வி மரபுகளில் வாங்கிவந்தவை என்பதைக் காட்டப் போதுமானது.
நூலைப் பார்த்து நூல் இயற்றப்படுகிறது என்பதைக் கடந்து வழக்காற்றிலிருந்தே நூல்கள் கருத்துகளைப் பெறுகின்றன என்ற கூற்றுக்கு நாட்டிய சாத்திரமும் தொல்காப்பியமும் சான்றுகள்.
பொருளதிகாரத்தில் இலக்கியத்தின் உள்ளடக்கம் பற்றி அக்கறை காட்டும் தொல்காப்பியம், இலக்கியத்தில் அகப்பொருளில் வெளிப்படும் மெய்ப்பாடு பற்றிக் கூறுகிறது. மேலும், இலக்கியத்திற்கு வேண்டிய மற்றொரு முதன்மைக் கூறான உவமையைப் பற்றியும் தொல்காப்பியம் கூறுகிறது. அங்கும் உவமை பற்றிய பொதுவான கருத்துகளைக் கூறிவிட்டுப் பின்னர் அகப்பொருள் பாத்திரங்கள் உவமை கூறும் முறையை எடுத்துரைக்கிறது தொல்காப்பியம்.
நாட்டிய சாத்திரத்திலும் உவமை பற்றிய கருத்துகள் கூறப்பட்டுள்ளன. நாட்டியத்திற்கு உவமை இலக்கியத்தில் உள்ளதுபோல் அவ்வளவுக்குத் தொடர்புடையது அல்ல என்பதையும் அறிய வேண்டியுள்ளது.
உவமை பற்றிய கருத்தாக்கத்திலும் தொல்காப்பியமும் நாட்டிய சாத்திரமும் வழக்காற்றிலிருந்து கருத்துகளை எடுத்துக்கொள்ளுதல் என்ற வகையில் ஒத்துப்போகின்றன.
கி) உரைகள் வழக்காறாக வந்துள்ளன என்பதையும் அறிய முடிகிறது. இதற்குப் பல சான்றுகள் உள்ளன. தொல்காப்பிய உரைகள் பல காலமாக வெவ்வேறு மரபுகளில் வழக்காற்றில் இருந்து, பின்பு தனித்துவம் மிக்க உரையாசிரியர்களால் அவர்களுடைய பங்களிப்பும் சேர்ந்து இன்றைய நிலையை அடைந்துள்ளன. உரையாசிரியர்கள் என்ற நூலில் மு.வை. அரவிந்தன் இதைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார். இறையனார் அகப்பொருள் உரை பல தலைமுறைகளாக இவ்வாறு வழங்கி வந்தது என்று அந்த உரையிலேயே கூறப்பட்டுள்ளது.
இந்த நூலாசிரியரின் “உரைமரபும் மரபுவழி உரையும்” என்ற கட்டுரையில் உரைகள் மரபுவழியாக வழங்கிவந்தன என்று விரிவாக ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கட்டுரையில் வில்லி பாரதத்திற்கு எழுத்து வடிவில் எழுதப்படாத, மரபுவழியாக வழங்கிவரும் உரையையும் அதன் பொருத்தமும் காட்டப்பட்டுள்ளன. இவை எல்லாம் உரைகள் வழக்காற்றில் வழங்கிவந்தன என்பதற்குச் சான்றுகள்.
கோயில்கள் அமைப்பது, வழிபாடு நடத்துவது, திருவிழாக்களை நடத்துவது முதலான நடைமுறைகளைக் கூறுவன ஆகம நூல்கள். இவை திருவிழாக்கள், பூசைகள் முதலிய கோயில் சார் சடங்குகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்று கூறுகின்றன. இந்த வழிபாட்டின் நேரம் இது என்றும் இந்தச் சூழலில் சொல்லப்படும் மந்திரம் இது என்றும் ஆகமங்களில் கூறப்படுகின்றன. இப்படிச் செய்ய வேண்டும் என்று கூறப்படுவதில்லை.
கோயில்கள் உருவாகி அவற்றில் திருவிழாக்களும் வழிபாடும் படிப்படியாக வளர்ந்துவந்த நிலையில் ஆண்டு முழுவதும் நடைபெறும் விழாக்களையும் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் குடமுழுக்கு போன்ற நிகழ்வுகளையும் நினைவில் இருத்துவதற்காக ஆகமங்கள் உருவாயின. எனவே இவை வழக்காற்றிலிருந்தே உருவாக முடியும் என்று தெரிகிறது.
கீ) தலபுராணங்களில் உள்ளவை உள்ளூர் வழக்காறுகளே என்று தெரிகிறது. ஒரு படைப்பாளி ஓர் ஊரைப்பற்றி தாமே விரும்பித் தலபுராணம் இயற்றுவது உண்டு. ஓர் ஊருக்குத் தலபுராணம் வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் ஒரு புலவரிடம் வேண்டி நூலைப் பாடவைத்து அரங்கேற்றம் செய்வதும் உண்டு. இரண்டாவது வகைக்கு மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை எடுத்துக்காட்டு. அவர் பல ஊர்களுக்குத் தலபுராணங்களை இயற்றியதை அவருடைய வரலாற்று நூலில் உ.வே. சாமிநாதய்யர் எழுதியுள்ளார்.
முதல் வகைக்கு மற்ற ஊர்களுத்குத் தோன்றியுள்ள தல புராணங்கள் சான்று. தமிழ்நாட்டில் பெரிய கோயில்கள் உள்ள பெரும்பாலான ஊர்களுக்குத் தலபுராணங்கள் தோன்றியுள்ளன. அந்தந்த ஊர்களில் வழங்கிவரும் தொன்மங்களை அறிந்தே புலவர்கள் தலபுராணங்களை இயற்றியுள்ளனர். வழக்காற்றிலிருந்து அவற்றை அறியாமல் தலபுராணங்களை இயற்ற முடியாது. திருவிளையாடற் புராணம் பற்றிக் கூறப்பட்டுள்ள மொழியும் நூல்களும் என்ற இயலில் இதைப்பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது.
கு) தத்துவமும் தருக்கமும்கூட மேலே கூறியவாறு வழக்காற்றில் வழிவழியாக வந்தவையே. அவற்றை ஒரே ஆசிரியர் உருவாக்கவும் முடியாது. அதை மற்றவர்கள் பின்பற்றவும் முடியாது. பல ஆண்டுகளாகக் கல்வி மரபுகளில் வழங்கப்பட்டு ஆசிரியர்களால் நன்கு பட்டை தீட்டப்பட்டே தத்துவங்கள் இன்று உள்ள நிலையை அடைந்துள்ளன. இன்று மூல நூல்களாக உள்ள தத்துவ ஆக்கங்கள் எல்லாம் பல காலமாக வழக்காறாக வழங்கி வந்தவையே. இதைக் கீழே வரும் கூற்று உறுதிப்படுத்தும்.
“சாங்கியம் ஆசிரியர் மாணவர் மரபுவழி வந்தது என்பதற்கும் அதன் பிறகு அதற்குக் கபிலர் என்பவர் எழுத்துருவம் அளித்தார் என்பதற்கும் சான்று உள்ளது.” (சுப்ரமண்ய சாஸ்திரி, 1946:293-94)
பிள்ளை லோகாசாரியர் பற்றிப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. “முன்னாட்களில் வைணவ மடங்களில் உபதேசிக்கப்பட்டவைகளை முதன்முறையாக எழுத்துருவில் கொணர்ந்த பெருமை இவரையே சாரும்.”
மணிமேகலையின் இறுதிப் பகுதியில் தருக்கங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. அவருடைய காலகட்டத்தில் ஆசாரிய திக்நாகர் நியாயப் பிரவேசம் என்ற நூலை இயற்றியிருந்தார். இரண்டுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி ஆராயப்பட்டுள்ளது. மணிமேகலையின் காலம் பற்றிய ஆய்வுக்குக்கும் இது பயன்பட்டது. நியாயப் பிரவேசம் மணிமேகலைக்குப் பின்னர் இயற்றப்பட்டிருக்கலாம் என்று கூறி அந்த நூல் சாத்தனாரின் மணிமேகலைக்குக் கடன்பட்டது என்பதை வலுவாக மறுத்துள்ளார் கிருஷ்ணசாமி அய்யங்கார்.
இதைப்பற்றி சம்பகலட்சுமி, “மணிமேகலையில் வரும் பௌத்த மதபோதகரான அறவண அடிகளின் தருக்கவியலை தின்னாகருடைய தருக்கவியலுடன் தொடர்புபடுத்தும் முயற்சியும் வீணானதே. ஏனென்றால, பொதுவான மரபுகளிலிருந்து இரு நூல்களுமே இக்கருத்துகளை எடுத்தாண்டிருக்கக் கூடும்.” (சீனிவாசன், காமராசன், 2014:40) என்று எழுதியுள்ளார். தருக்கமும் வழக்காற்றிலிருந்தே நூல் ஆக்கமாக மாறியுள்ளது என்ற கருத்து இங்கே வலியுறுகிறது. ஒருவர் ஒரு நூலை இயற்றிய பின்னர் அந்த நூலைப் பார்த்து அந்த நூலில் கூறியுள்ளபடி தருக்கம் செய்ய இயலாது. ‘தருக்க முறையில் இவ்வாறு எல்லாம் தருக்கம் செய்கிறார்கள்’ என்றே நூல்களில் கூற முடியும். அதாவது, ஏற்கெனவே வழக்காற்றில் உள்ளதைத்தான் நூல்களில் கூறமுடியும்.
கூ) இசை, நாடக நூல்கள்
வழக்காறுகளிலிருந்தே கலைகள் தோற்றம் பெறுகின்றன. கலைகளைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தாம் கற்ற முறைப்படி நினைவிலிருந்தே கலைகளைப் பயிற்றுவிக்கின்றனர். நூல்களைப் பார்த்துக் கலைகளைப் பயிற்றுவிப்பதில்லை.
கலைகளுக்கும் நூல்களுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் குறிப்பாக நாட்டிய சாத்திரத்திற்கும் நடனக்கலைக்கும் உள்ள தொடர்பு பற்றியும் ஆராயப்பட வேண்டியுள்ளது.
ஒன்றை நன்கு மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். ஒரு நூலைப் பார்த்து ஒரு கலையை உருவாக்கிக்கொள்ள முடியாது. கலையின் வழக்காற்றில் இருப்பதையே நூல் இயற்றுவோர் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்களின் பங்களிப்பு நூலாக்கம் செய்வதாக மட்டுமே இருக்கிறது. மற்றபடி கருத்துகள், கலைச்சொற்கள் முதலான அனைத்தும் கலையில் வழங்கி வருவதே.
எடுத்துக்காட்டாக ஒருவர் கூத்தைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு நூல் இயற்றுகிறார். பின்னர் தமிழில் இயற்றுபவர்களும் அவர் பயன்படுத்திய கலைச்சொற்கள் முதலானவற்றையே பயன்படுத்தி நூல் இயற்றுகின்றனர். இதனால் தமிழில் இயற்றப்பட்ட புத்தகங்கள் ஆங்கில நூலைப் பார்த்து எழுதப்பட்டவை என்று கூறுவது எந்த விதமானதோ அதே போன்றதுதான் நாட்டிய சாத்திரமும். கூத்து பற்றிய புத்தகம் இயற்றும் எல்லோரும் கூத்துக் கலை வழக்கிலிருந்தே கலைச்சொற்கள் முதலானவற்றைப் பெறுகின்றனர். கூத்துக்கலையில் வழக்காற்றில் இருக்கும் சொற்களே நூல்களில் பயன்படுத்தப்படுகின்றன. மற்றபடி ஆசிரியர்கள் இவற்றை உருவாக்குவதில்லை. இந்த நிலை எல்லாத் துறைக்கும் பொதுவானது. நாட்டியக் கலை எங்கு வழக்கில் உள்ளதோ அங்கிருந்துதான் இதற்கான அறிவையும் கலைச்சொற்களையும் பெற்றிருக்க முடியும்.
ஒப்பனை, வண்ணங்கள், அடவு, தாளங்கள், பண்கள், பாடல் வகைகள் முதலிய யாவும் கூத்தர்களிடம் இயல்பாக வழங்கிவருகின்றன. கூத்து பற்றி நூல் எழுதும் யாரும் அவர்களிடமிருந்து இவற்றை அறிந்தே எழுத முடியும். கூத்துக்கலையில் வல்லவராக உள்ள ஒரு கூத்தரே அந்தக் கலையைப் பற்றி நூல் இயற்றினாலும் ஏற்கெனவே வழக்கில் உள்ளவற்றையே அவர் எழுத முடியும். அவராக ஒன்றைப் புதிதாக உருவாக்க முடியாது. எந்த மொழியில் யார் இயற்றினாலும் ஏற்கெனவே கூத்துக்கலை வழக்கில் உள்ளதைத்தான் அதே கலைச்சொற்களைக் கொண்டு எழுத முடியும்.
நாட்டிய சாத்திரத்தில் கூறப்பட்டுள்ள நாட்டியக்கலை தமிழ்நாட்டில் இன்று பரதம் என்று அழைக்கப்படும் சதிர் நாட்டியமே ஆகும் என்பதைப் பலரும் ஆராய்ந்து கூறியுள்ளனர். தமிழகத்தில் பெருங்கோயில்களிலும் அரண்மனைகளிலும் ஆடப்பட்டு வந்த நடனமே நாட்டிய சாத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
நாட்டிய சாத்திரத்தில் கூறப்பட்டுள்ள அடவுகள், முத்திரைகள், இசை, தாளம் முதலான அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள நடனத்தையே முதன்மையாகக் குறிக்கின்றன.
தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள மெய்ப்பாடு பற்றிய கருத்துகள் பொதுவாகவும் அகப்பொருளுக்குக் குறிப்பாகவும் கூறப்பட்டவை என்று தெரிகிறது. முதலில் மெய்ப்பாடு பற்றியும் அதன் வகைகள் பற்றியும் விளக்கும் தொல்காப்பியம், பிற்பகுதியில் தலைவிக்கு உரிய மெய்ப்பாடுகள் பற்றியும் தலைவன் தலைவி ஆகியோருக்கு இருக்க வேண்டிய ஒப்புமைகள் பற்றியும் கூறுகிறது. அவர்களுக்கு இருக்கக்கூடாத பண்புகளையும் மெய்ப்பாட்டியல் கூறுகிறது.
மேலும் மெய்ப்பாடு பற்றிய கருத்துகள் வேறு தமிழ் நூல்களிலும் கூறப்பட்டிருப்பதையும் உரைகள் சுட்டிக் காட்டுகின்றன. (யா.வி. அடியார்க்கு நல்லார் உரை) இப்படிக் காட்டப்படும் நூல்கள் இசை நாட்டியம் பற்றியவை என்று அறிய முடிகிறது.
‘நூலைப் பார்த்து நூல் இயற்றப்படுகிறது’ என்பதைக் கடந்து வழக்காற்றிலிருந்தே நூல்கள் கருத்துகளைப் பெறுகின்றன என்ற கூற்றுக்கு நாட்டிய சாத்திரமும் தொல்காப்பியமும் சான்றுகள்.
நாட்டியம் கற்பிக்கும் மரபில் வழக்கில் சொல்லப்படும் கருத்துகளைத்தான் நாட்டிய சாத்திரமும் தொல்காப்பியமும் எடுத்துக்கொண்டுள்ளன. இலக்கியத்தின் உள்ளடக்கம் பற்றி அக்கறை காட்டும் தொல்காப்பியம் இலக்கியத்தில் அகப்பொருளில் வெளிப்படும் மெய்ப்பாடு பற்றிக் கூறுகிறது.
மேலும், இலக்கியத்திற்கு வேண்டிய மற்றொரு முதன்மைக் கூறான உவமையைப் பற்றியும் தொல்காப்பியம் கூறுகிறது. அங்கும் உவமை பற்றிய பொதுவான கருத்துகளைக் கூறிவிட்டுப் பின்னர் அகப்பொருள் பாத்திரங்கள் உவமை கூறும் முறையை எடுத்துரைக்கிறது தொல்காப்பியம்.
நாட்டிய சாத்திரத்திலும் உவமை பற்றிய கருத்துகள் கூறப்பட்டுள்ளன. நாட்டியத்திற்கு உவமை இலக்கியத்தில் உள்ளதுபோல் அவ்வளவுக்குத் தொடர்புடையது அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
உவமை பற்றிய கருத்தாக்கத்திலும் தொல்காப்பியமும் நாட்டிய சாத்திரமும் வழக்காற்றிலிருந்து கருத்துகளை எடுத்துக்கொள்ளுதல் என்ற வகையில் ஒத்துப்போகின்றன. இது தவிர வேறு வழியும் இல்லை.
வழக்காற்றிலிருந்துதான் நூல்கள் உருவாக முடியும். நீண்ட காலமாக கல்வி மரபுகளில், (இலக்கியம், பிறகலைகள் கற்பிக்கும் இடம்) வழங்கிவந்த கருத்துகளையே திறம்பட்ட ஆசிரியர்கள் நூல்களாக இயற்றுகின்றனர். மேலும் கல்வி மரபுகளில் சிறிய அளவில் சூத்திரவடிவில் இவை தனித்தனியாக இருந்திருப்பதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை. நூலாசிரியர்கள் முதலில் அவற்றைத் தொகுத்துக் கொள்கிறார்கள். கலைகளில் பல பாணிகள் இருப்பதால் அவற்றில் எதை நூலில் கொண்டுவருவது என்ற சிக்கலும் எழுகிறது. இருப்பனவற்றில் சிறந்ததையோ அல்லது ஆசிரியர் மரபுவழியாகக் கற்று அறிந்ததையோ நூலாக இயற்றுகிறார். பல கருத்துகள் இருக்கும் நிலையில் அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கு அவர் பயின்ற கல்வி மரபு காரணமாக இருக்கும். தான் கற்று அறிந்ததை நூலாக இயற்றுவது ஆசிரியர்களின் பணியாக உள்ளது. மற்றபடி ஒரு தனி ஆசிரியர் இவற்றை உருவாக்கிவிட முடியாது. கலைச்சொற்களைக்கூட ஒருவர் உருவாக்கிவிட முடியாது. அவை கலைஞர்களிடம் புழக்கத்திலிருந்துதான் நூலுக்கு வரமுடியும்.
எடுத்துக்காட்டாக, தாளங்களைப் பற்றி நூல் இயற்றும் ஒரு ஆசிரியர் நடைமுறையில் உள்ள தாளங்களை, அவற்றிக்கு வழங்கிவரும் பெயர்களைக்கொண்டு விளக்க முடியும். மற்றபடி எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும் வழக்கில் இல்லாத ஒரு தாளத்தைத் தானே புதிதாக உருவாக்க முடியாது. அதை மற்றவர்கள் பின்பற்றுவதும் இயலாதது. இதுவே பாக்களுக்கும் பண்களுக்கும் பொருந்தும்.
தமிழ், சமஸ்கிருதம் முதலான மொழிகளில் இயற்றப்பட்ட நூல்கள் வழக்காற்றிலிருந்த கருத்துகளைக் கொண்டே இயற்றப்பட்டவை. நூல் கற்றல், வழங்குதல், இயற்றுதல் முதலானவற்றைக்கொண்டு பார்க்கும்போது இக்கருத்து தெளிவடைகிறது. எனவே, இயற்றப்பட்ட ஒரு நூலைப் பார்த்து இன்னொரு நூல் – அதே மொழியிலும் பிற மொழியிலும் – இயற்றப்பட்டது என்ற கருத்து வலுவிழந்து விடுகிறது. பண்டைச் சமூகத்தில் நூல்கள் உருவாகிய முறையை ஆழ்ந்து நோக்கும்போது இதைப் புரிந்தகொள்ள முடிகிறது.
மேலும், மற்றொரு முதன்மையான கருத்தையும் இங்கே சொல்ல வேண்டும். இன்று கிடைக்கும் இதே வடிவில் தொடக்கத்தில் உருவானது என்று கூற முடியாது. இதில் வளர்ச்சி என்பது மிகவும் இயல்பானது. இடைச்செருகல்கள் இருக்கும் வாய்ப்பை மறுக்கவே முடியாது. வழக்காற்றில் இந்த நிலை இயல்பானதே.
2
கல்வி மரபுகளில் வழக்காறாக வழங்கிவந்து நூலாக்கப்பட்டவை பற்றி மேலே கூறப்பட்டது. இனி, ஒரு சமூகத்தில், பண்பாட்டில் உள்ள விழுமியங்கள் மூலக்கதைகளுக்கும் பரவியுள்ளன என்று ஆய்வுகளின் வழியே தெரியவருகிறது. இதை ஆங்கிலத்தில் counter influence என்று அழைப்பார்கள். (அ.அ. மணவாளன்)
நீண்ட காலத்திற்கு முன்பு சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுப் பின்னர் தமிழில் தோன்றிய பாரதம், இராமாயணம் ஆகியவற்றில் தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு, விழுமியங்கள் சென்றுள்ளன என்பது தெரிகிறது.
க) இராமாயணம் வடநாட்டில் தோன்றித் தமிழ்நாட்டில் பரவியிருந்தாலும் தமிழ்நாட்டு நூல், வழக்காறு, பண்பாடு ஆகியவற்றில் உள்ள கருத்துகள் சமஸ்கிருத இராமாயணத்திற்குச் சென்றுள்ளன.
இராமாயணத்தில் இராமன் பிறந்தநாள் பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்தை இதற்குச் சான்றாகக் காட்டலாம். தமிழில் கம்ப ராமாயணத்தில் இராமன் பிறந்தது நவமித் திதியில் என்று கூறப்பட்டுள்ளது. வடநாட்டில் உள்ள சமஸ்கிருத இராமாயணத்தில் இராமன் பிறந்தநாள் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. தென்புலப் பாடங்களில், சுவடிகளில் மட்டும் நவமித் திதியில் இராமன் பிறந்ததாகக் கூறப்பட்டுள்ளது. கம்பர் தன்னுடைய நூலில் தமிழ்நாட்டு வழக்காற்றின் அடிப்படையில் இராமன் பிறந்தநாள் பற்றிக் கூறிய பிறகு தமிழ்நாட்டில் இருந்த சமஸ்கிருத இராமாயணப் பாடங்களில் இது பரவியது. இந்தியா முழுவதும் இராமன் பிறந்தநாள் கொண்டாடப்படுவதற்குத் தமிழ்நாட்டு வழக்காறும் கம்பர் இயற்றியதும்தான் அடிப்படை.
ஆ) பாரதக்கதை வடநாட்டில் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுப் பின்னர் தமிழில் தோன்றியது. இதில் உள்ள வேறுபாடுகள் பற்றி எனது நல்லாப்பிள்ளை பாரதம் நூற் பதிப்பின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது.
*
குறிப்புகள்
1. நாடு முழுவதும் பல இடங்களில் வேறுபட்ட அளவுகளிலும் வடிவங்களிலும் காலத்திலும் கோட்டைகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால் இன்று வரை கோட்டையை எவ்வாறு வடிவமைப்பது என்று கூறும் நூல்கள் எதுவும் இல்லை. ஆனால் கோட்டைகள் சில அடிப்படையான பொதுக்கூறுகள் கொண்டு கட்டப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. அகழி முதலான அரண்கள், பாதுகாப்படன் கூடிய மதில் சுவர், வலுவான கதவுகளுடன் கூடிய வாயில்கள், ஆபத்துக் காலத்தில் தப்பிப்பதற்கான கரவுப் பாதைகள், படைவீர்கள் தங்குமிடம், படைக்கலன்களைச் சேமித்துவைக்கும் இடம், காவல்புரியும் இடம், எதிரிகளை நோட்டமிடுவதற்குத் தேவையான உயரமான மாடங்கள் முதலான அமைப்புகள் எல்லாக் கோட்டைகளிலும் உள்ளன. கோட்டையை உருவாக்குவதற்கான நெறிமுறைகள் சிற்ப நூலாரிடையே வழக்கிலேயே வழங்கி வருகின்றன. இது எங்கும் எழுதிவைக்கப்படவில்லை. அரசின் மையமான காவல் முக்கியத்துவம் உள்ள மிகப்பெரும் கோட்டைகளை உருவாக்குவதற்கே நூல்கள் இல்லாத போது பிற கலைகள் நூல்களின் அடிப்படையில் இயங்குகின்றன என்று எவ்வாறு கூறு இயலும்?
2. கல்வி, நூலாக்கம், எழுத்து, மரபுவழி அறிவு முதலானவை இந்தியாவில் பொதுவாக இருந்த முறையிலேயே தமிழகத்திலும் இருந்தன. எனவே, இந்தியச் சூழல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
3. சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைச்
செவ்வ னாடியிற் செறித்தினிது விளக்கித்
திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம் (நன்னூல் பாயிரவியல் 18)
*
துணை நூல்கள்
- அரவிந்தன், மு.வை. உரையாசிரியர்கள். சென்னை: மணிவாசகர் நூலகம்.
- திருத்தக்க தேவரியற்றிய சீவக சிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியருரையும். (1986). சாமிநாதையர், வே. (பதி.) தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.
- கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை. 1970. சோமசுந்தரனார், பொ.வே. (விளக்கவுரை) சென்னை திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
- சாமிநாதையர், உ.வே. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை சரித்திரம்.
- சுப்பிரமண்ய சாஸ்திரி பி.சா. 1946. வடமொழி இலக்கிய வரலாறு. அண்ணாமலை நகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
- சீனிவாசன், இரா. 2021. பூவா வேங்கை. சென்னை: பரிசல் புத்தக நிலையம்.
*
விரைவில் வெளிவர இருக்கும் “தமிழ் இலக்கிய வரலாற்றுக் கோட்பாடுகள்” என்ற நூலிலிருந்து ஒரு அத்தியாயம்.