மேலும் சில சொற்கள்

5 comments

வேற்று மொழிச் சொற்கள் வேறெந்த மொழிக்குள்ளும் தன்னியல்பாகவோ, கண்ணியத்துடனோ, வல்லந்தமாகவோ நுழையும் காலை, அந்தந்த மொழிக்கான ஒலி வடிவம் எடுக்கும். திருவல்லிக்கேணி Triplicane ஆனதும் திருச்சிராப்பள்ளி Trichy ஆனதும் தூத்துக்குடி Tuticorin ஆனதும் அவ்விதம்தான். தமிழில் இன்று புழங்கும் இருபதினாயிரத்துக்கும் மிகையான சொற்களுக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண வரம்புகள் சமைத்திருக்கிறார் தொல்காப்பியர். அறிய விரும்புவோர், இதுவரை தொல்காப்பியத்துக்கு வந்துள்ள 138 பதிப்புகளில் ஏதேனுமொன்றைக் காண்க. தொல்காப்பியத்துக்கு 2000-க்கும் அதிகமான சுவடி வேறுபாடுகள் உண்டு. என்றாலும் இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வச் சிலையார், கல்லாடர் போன்ற உரையாசிரியர்கள் உதவியாக இருப்பார்கள். குறைந்தபட்சம் முனைவர் ச.வே. சுப்பிரமணியன் உரையையாவது பார்க்கலாம்.

‘கடி சொல் இல்லை காலத்து படினே’ என்பார் தொல்காப்பியர். அஃதாவது பிறமொழிச் சொல்லொன்றைக் காலங்காலமாக ஒரு மொழி ஏற்றுக்கொண்டால், அச்சொல் கடிந்து, வெறுத்து, ஒதுக்கப்பட வேண்டிய சொல் இல்லை என்பது பொருள்.

எடுத்துக்காட்டுக்கு, வராஹ (Varaha) என்பது வடமொழிச் சொல். வடமொழி என இங்கு நான் குறிப்பது சமற்கிருதத்தை. இந்தியை அல்ல. ஏனெனில் இந்தி என்றொரு மொழி தோன்றி ஐந்நூறு – அறுநூறு ஆண்டுகளே ஆகின்றன. இன்று அம்மொழி 139 கோடி மக்களையும் ஆள முயல்வது – நாகரீகமான மொழியில் சொன்னால் – பேராசை. வராகம் பற்றிப் பேச வந்தோம். வராகம் என்ற சொல்லை வராஹம் என்றும் எழுதலாம். பொருள் பன்றி என்பதுதான். வராகன் என்றால் திருமால் என்றும் பொருள், வராக அவதார காரணத்தினால். பூவராகன் என்றொரு அமைச்சரே இருந்தார் 1967-க்கு முன்பு. வராகன் என்றால் பொற்காசுமாகும்.

அதுவே போன்று ஔஷதம் என்பது வடசொல். அதனை ஔடதம் என்று தமிழில் ஆள்கிறோம். ஔவை என்ற பெரும்புலவர் அவ்வை ஆனதுபோல, மையம் எனும் சொல் மய்யம் ஆனதுபோல, ஔடதம் எனும் சொல் அவுடதம் என்றும் ஆளலாம்.

இங்ஙனம் ஆள்வதை எல்லாம் தற்சமம், தற்பவம் என்று வரையறைப்படுத்துகிறார் தொல்காப்பியர். தற்சமம், தற்பவம் என்றால் என்ன என்று முன்போர் கட்டுரையில் விளக்கமாகப் பேசி இருக்கிறேன். தொல்காப்பியமே வடமொழி இலக்கண நூலொன்றின் தமிழாக்கம் என நிறுவி, நூலொன்றினை எவரும் முனைந்து, வலிந்து எழுதிக் கரப்புணர்ச்சி செய்தால் அவருக்கு இங்கு ஒரு ‘பாரத ரத்னா’ உறுதி.

Doctor எனும் ஆங்கிலச் சொல்லுக்கு எத்தரத்திலும் குறைவுபடாத தமிழ்ச் சொற்கள் வைத்தியர், மருத்துவர், பண்டுவர். கலித்தொகை நூலில் நெய்தல் கலி பாடிய நல்லந்துவனார்,

“அன்னர் காதலராக, அவர் நமக்கு

இன்னுயிர் போத்தரும் மருத்துவராயின்

யாங்காவது கொல்? தோழி!”

என்ற பாடல் வரிகள் சொல்வது – காதலர் என்னிடம் கொண்ட அன்பால் தந்த நோய் இது. என்னால் தாங்க முடியாததாக இருக்கிறது. எனினும் என் உயிர் நீங்காது நிறுத்தும் மருத்துவர் அவர் ஒருவரே! – என்று. பழமொழியும், கம்ப ராமாயணமும், பெருங்கதையும், வில்லிபாரதமும், திருமந்திரமும், தேம்பாவணியும் மருத்துவர் எனும் சொல்லை ஆள்கின்றன. ‘கொடு மருத்துவர் கொல் விடம் கொல்லுவார்’ என்கிறது தேம்பாவணி. மருந்து எனும் சொல் திருக்குறளில் பத்து இடங்களில் வருகிறது.

எனினும் டாக்டர் என்ற சொல் தமிழில் வந்து நின்று பதற்றமில்லாது புழங்கிக்கொண்டிருக்கிறது. என் அப்பனைப் பெற்ற ஆத்தா, பறக்கை நெடுந்தெரு வள்ளியம்மை டாக்டரைக் குறிக்க தெரசர் என்பாள். அவள் காலத்துச் சொற்புழக்கம் அது. பின்பு நான் அனுமானம் செய்து கொண்டேன், Dresser – காயங்களுக்கு, புண்களுக்கு மருந்து வைத்துக் கட்டி, களிம்பு தடவிக் குணப்படுத்தும் டாக்டர், தெரசர் என்றே விளிக்கப்பட்டார் என்று. மலையாளம் Doctor எனும் சொல்லை டோக்டர் என விளிக்கும். டொக்டர் அல்லது டாக்குத்தர் என்னும் ஈழத்தமிழ். எனவே எவையும் கடிசொல் இல்லை.

என்னதான் மிதிவண்டி, துவி வண்டி, இருசக்கர வண்டி, உந்து வண்டி என்று சொன்னபோதிலும், சைக்கிள் மொழியில் இருந்து அஞ்சியோடி விட்டதா? தொடர்வண்டி, மின் தொடர்வண்டி, புகைவண்டி, புகையிரதம் என்று சொன்னாலும் இரயிலும், இரயில் வண்டியும் மாய்ந்து போனதா?

Potato என்பது ஆங்கிலச் சொல். பொட்டட்டோ என்கிறோம் அன்றாடம் தமிழில். உருளைக்கிழங்கு என நாம் கண்டுபிடித்த சொல்லும் வெகுவாகப் புழக்கத்தில் வந்துவிட்டது. வடநாட்டில் பட்டாட்டா என்பர். அன்றாடம் காந்தா – பட்டாட்டா எனும் குரல் கேட்கலாம் தெருக்களில். காந்தா என்றால் ப்யாஸ், ஆனியன், Onion. தமிழில் ஈருள்ளி, நீருள்ளி, ஈராய்ங்கம், ஈர வெங்காயம், வெங்காயம். சொல்லப்போனால் தமிழ்நாடு இன்று வெங்காய மண் என்றும் அழைக்கப்படுகிறது. உருளைக்கிழங்கினை வடநாடு ஆலு என்கிறது. பிறமொழிச் சொற்களுக்கு அந்தந்த மொழிகளில் தனித்தனிச் சொற்கள் உண்டு.

தமிழ்நாட்டில் சில பகுதிகளில் பொட்டி எனும் சொல் பயன்பாட்டில் உண்டு. கன்னடச் சொல் அது. பொருள் விலைமகள், பரத்தை. பொட்டி மகன் என்றால் கன்னடமும் தமிழும் கலந்த சொல், பொருள் பரத்தையின் மகன்.

தமிழில் பரத்தைக்கு, வேசி, விலைமகள், தேவடியாள், தாசி, கூத்தியாள், பொருட் பெண்டிர், விலை முலையாட்டி, வரைவின் மகளிர், பொதுமகள், தாதி எனப் பற்பல சொற்கள். அண்மையில் நாம் கண்டுபிடித்த சொல், பாலியல் தொழிலாளி. இவற்றுள் தாசி எனும் சொல் சமற்கிருதம், Dasi என்பார் பேராசிரியர் அருளி. பொருள் விலைமகள், அடிமைப் பெண், இரண்டாமூடு, மருதோன்றி, பணிப்பெண். ஆதாரம் – அயற்சொல் அகராதி. தாதி எனும் சொல்லுக்கு செவிலித்தாய், வேலைக்காரி, விலைமகள் என மூன்று பொருள்கள் அயற்சொல் அகராதியில். ஆனால் தாதி எனும் சொல் பிராகிருதம். Dhati என்ற உச்சரிப்பு. எல்லாச் சொல்லுமே இடமறிந்து பொருள் தரும்.

Hamam என்ற சொல் உலவாத இந்திய மொழி இல்லை. Brand name. தமிழில் ஹமாம் என்று எழுதினோம். தனித்தமிழ்ப் பிறப்பாளர்கள் கமாம் என்று எழுதுவார்கள். அஃதே போல் ஸ்வஹமாம் என்றெழுதும் தமிழரும் இருத்தல் கூடும்.

சோப்புத் தேய்த்துக் குளிப்பவர் பலரும் இப்பெயர் அறிவர். நான் முதன்முதலில் சோப்புத் தேய்த்துக் குளித்தபோது பதினைந்து வயதாகி இருக்கும். அப்போதும் துணி துவைக்கும் சோப்புக்கும் மேல் தேய்க்கும் சோப்புக்கும் வேறுபாடு தெரியவில்லை. சவுக்காரம், சவுக்காரக் கட்டி எனும் சொற்கள் நாஞ்சில் மொழியில் இல்லை. சோப் என்பதே முதலில் அறிமுகமான சொல். ஆனால் சோப் – Soap – என்பது ஆங்கிலம் என்பதறிவோம். இணையான தமிழ்ச்சொல் வழலை. மூன்றாம் வகுப்புக்குப் போகும் என் முதல் பேரனுக்கு இந்தச் சொல் தெரியும். சோப்பும் தெரியும்.

வழலை எனும் சொல்லுக்கு இலக்கிய மேற்கோளாக ஒரு பாடல் கிடைக்கிறது. பாலைத்திணைப் பாடல். ஆக்கியோன் பெயர் அறிந்தேமில்லை. பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது என்பது One line. இனி பாடல் –

“உள்ளார் கொல்லோ தோழி! துணையொடு

வேனில் ஓதிப் பாடுநடை வழலை

வரிமரல் நுகும்பின் வாடி, அவண

வறன் பொருந்து குன்றத்து உச்சிக் கவாஅன்

வேட்டச் சீறூர் அகன்கண் கேணிப்

பய நிரைக்கு எடுத்த மணிநீர்ப் பத்தர்,

புன்தலை மடப்பிடி கன்றொடு ஆர,

வில் கடிந்து ஊட்டின பெயரும்

கொல்களிற்று ஒருத்தல சுரன் இறந்தோரே?”

என்பது முழுப்பாடல்.

நற்றிணைக்கு என்னிடம் சில உரைகள் உண்டு. ஔவை. துரைசாமிப்பிள்ளை உரை; பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை; முனைவர் கதிர். மகாதேவன் உரை; அறிஞர் ச.வே. சுப்பிரமணியன் உரை; டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் நூல் நிலையம் பதிப்புக்கு வித்துவான் H. வேங்கடராமன் எழுதிய பதவுரையும் உ.வே.சா. எழுதிய அரும்பத அகராதியும்.

பாடலை நான் புரிந்துகொண்ட விதத்தில் எனது விளக்கம் அமையும். தோழி! வருத்தமான நடையை உடைய ஓதி வளமில்லாத காலத்தில் வழலைப் பாம்புபோல் காட்சியளிக்கும். முதுவேனிற்காலம் ஆனபடியால் வரிகளைக்கொண்ட மரல் மரத்தின் இளம் மடல்கள் வாட்டமடைந்திருக்கும். வறட்சியுற்ற குன்றின் உச்சியில் இருந்த வேட்டுவச் சிற்றூரை நோக்கி களிறு ஒன்று தன் பிடியுடனும் கன்றுடனும் நடந்து செல்லும். சிற்றூரின் புறத்தே அகன்ற வாயுடைய கிணறு. அந்தக் கிணற்றில் இருந்து தமது பசுக்கூட்டத்துக்காக வேட்டுவர் தெளிந்த நீரைக் கோரி, தொட்டியில் நிறைத்து வில் பொறியால் மூடி வைத்திருப்பர். அந்தத் தொட்டியின் – பத்தரின் – மூடியை உடைத்துப் போட்டுவிட்டு, கொல்லும் தொழிலை உடைய ஆண்யானை பெண்யானைக்கும் கன்றுக்கும் நீரூட்டி அகன்று செல்லும். இத்தகு சுரத்தில் சென்று தங்கும் நம் தலைவர், அந்த இடத்திலும் நம்மை நினைக்கவில்லை போலும்! ஒருத்தல் – களிறு – ஆண்யானை, பிடி – பெண்யானை, ஓதி – ஓணான் – ஓதி – ஒடக்கான் – ஓந்தான், மரல் நுகும்பு – முற்றாத மரலின் இளமடல், வழலை – கருவழலைப் பாம்பு.

வழலை எனும் சொல் தேடிப் புறப்பட்டோம். அது நம்மைப் பிரிவாற்றாமையில் கொணர்ந்து நிப்பாட்டியிருக்கிறது. கருவழலைப் பாம்பிலும். வழலை எனும் சொல்லுக்கு ஒருவகைப் பாம்பு, ஒருவகை உப்பு, சவுக்காரம், புண்ணிலிருந்து வடியும் ஊனீர், கோழை, ஓர் மருந்து, எனப் பொருள் தருகின்றன அகராதிகள்.

சோப்பின், சலவைக் கட்டியின், சவுக்காரத்தின், வழலையின் Brand name ஒன்று Hamam என்றறிவோம் இன்று. அதனைத் தேய்த்துக் குளித்தாலும் மாற்று பிராண்ட் ஏதும் தேய்த்தாலும். நாம் நினைக்கலாம் Hamam  என்பது ஆங்கிலச் சொல் என்று. அன்று, அது அரபிச் சொல் என்கிறது அயற்சொல் அகராதி. சரி! அரபி மொழியில் Hamam என்ற சொல்லின் பொருள் என்ன? குளியலறை என்று பொருள் தருகிறார் பேராசிரியர் அருளி.

குளியலறையில் பயன்படுத்தப்படும் வழலைக்கு குளியலறை என்று பெயர் வைத்ததன் பொருத்தப்பாடு பற்றி தயாரிப்பாளர்கள் சிந்திக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். குளியலறையே இல்லாத, குளியலறையே பயன்படுத்தாத, முன்முற்றத்தில், புறவாசலில், ஆற்றங்கரை –குளத்தங்கரை, ஓடைப் படித்துறையில் குளிக்கும் பலரும் Hamam தேய்த்துக் குளிப்பவராக இருக்கலாம்.

அதுவே போல ஹர்த்தால் அல்லது அர்த்தால் என்று சொல்கிறோம் அல்லவா, அது Hartal எனும் ஆங்கிலச் சொல்லின் பிறப்பு. பொருள் கடையடைப்பு, கடையடைப்புப் போராட்டம். பலர் இதனை வடசொல் என்று நினைத்துக்கொண்டிருக்கலாம்.

ஹவில்தார் அல்லது அவில்தார் என்று காவல்துறையின் தொடக்கநிலை ஊழியரைச் சொல்கிறோம் இன்று. அந்தச் சொல் பாரசீக மொழிச் சொல். பொருள் படை அலுவலர். தொல்காப்பியரின் வழிகாட்டுதலின்படி Hartal எனும் சொல்லை அர்த்தால் என்றும் Havildar என்ற சொல்லை அவில்தார் என்றும் நீண்டகாலம் நம் மொழி பயன்படுத்துமேயானால் அச்சொற்கள் கடிசொல் இல்லை.

சென்னைத் தமிழுக்கும், சென்னையைத் தலைநகராகக் கொண்ட சினிமாத் தமிழுக்கும் எனப்பல சொற்கள் உண்டு. எவரேனும் அவற்றைத் தொகுத்து, அகர வரிசைப்படுத்தி, பொருளும் எழுதி வெளியிடலாம். சொந்தமாகத்தான் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் அரசு மானியம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தால், நீங்கள் ஆளுங்கட்சி ஆதரவாளராக இருத்தல் வேண்டும்.

பிஸ்தா என்றொரு சொல். நமக்குத் தெரிந்த பொருள் – விலையேறிய உலர் பருப்பு. சர்வ இயல்பாக, ‘அவனென்ன பெரிய பிஸ்தாவா?’ என்று கேட்கிறார்கள். அந்தச் சொற்றொடர் உணர்த்தும் பொருள் அயற்சொல் அகராதியிலும் இல்லை. ஆனால் அதே அகராதி, பிஸாத் எனும் சொல் இந்துஸ்தானி மொழிச் சொல், பொருள் – பயனற்றது, என்கிறது. நாஸ்தி எனும் சொல்லும் அயற்சொல் அகராதியில் காணக் கிடைக்கும். சமஸ்கிருதச் சொல், Nasti. பொருள் – இன்மை, அழிவு, நசிப்பு. ‘எல்லாத்தையும் நாஸ்தி பண்ணி வெச்சிருக்கான்’ என்றால் அதன் பொருள் புரிகிறது. ஆனால் நாஜுக் – நாசூக்கு என்றால் அது உருது மொழிச் சொல். பொருள் – அழகு, நயம், நேர்த்தி. மானுடரிடம் நாஸ்தியும் உண்டு, நாசூக்கும் உண்டு.

சரி கஸ்மாலம் எந்த மொழிச் சொல்? சமஸ்கிருத மொழிச் சொல், Kasmala. பொருள் – அருவருப்பு, அழுக்குக் கசண்டு, ஒழுக்கக்கேடு. சென்னைத் தமிழில் ‘பாடு’ என்றொரு வசவுச்சொல் கேட்டிருக்கிறேன். உச்சரிப்பில் அது Baad/Bhad/Bahd போன்று ஒலிக்கும். ஆனால் Baad, Bhad, Bahd போன்ற சொற்கள் ஆங்கில அகராதிகளில் இல்லை. வேறு எம்மொழிச் சொல்லாக இருக்கும்? பிணம் அல்லது சவம் எனும் பொருளில் Body –யைத்தான் பாடு என்கிறார்களோ என்றும் தோன்றியது. அயற்சொல் அகராதியிலும் ‘பாடு’ என்ற சொல் கண்டிலேன்.

சென்னை நண்பர்கள் பத்துப்பேருக்கு வாட்ஸ்ஆப் செய்தி அனுப்பினேன். ‘யாவரும்’ பதிப்பக உரிமையாளர், சிறுகதை ஆசிரியர், ஜீவ கரிகாலன் சொன்னார், Bawd எனும் ஆங்கிலச் சொற்பிறப்பே பாடு எனும் தமிழ்ப் பயன்பாடு என்று. பொருள் – பரத்தைத் தரகி, பரத்தைத் தரகர் என்கிறது சென்னைப் பல்கலைக்கழகத்து ஆங்கிலம், தமிழ்ச் சொற்களஞ்சியம். பதிப்பாசிரியர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார். பதிப்பித்த ஆண்டு 1963. எனவே Bawd – பாடு என்றால் Pimp, மாமா வேலை பார்ப்பவன்.

எதற்கு பாடு என்ற சொல்லில் நின்று இடது பதம் தூக்கி நர்த்தனம் செய்து மனக்கசப்புடன் இந்தக் கட்டுரையில் நின்றும் வெளிநடப்புச் செய்ய வேண்டும்?

எனது பம்பாய் காலத்து நெருக்கமான நண்பர், கான்சாகிப் எனும் என் கதைக்கு ஆதாரமானவர், அசதுல்லா கான். அவர் ஞானபாநு எனும் புனைபெயரில் சென்னை வாராந்திரி ஒன்றுக்கு பம்பாய் செய்திகளும் கட்டுரைகளும் எழுதிக்கொண்டிருந்தார். இன்று பாநு எனும் சொல்லை அயற்சொல் அகராதியில் தேடியபோது எனக்கது கிட்டவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்து Lexicon அந்தச் சொல்லைப் பதிவிட்டிருக்கவில்லை. ஆனால் திருப்புகழில் நாலைந்து இடங்களில் பாநு எனும் சொல்லைக் காணலாம். பதிப்புப் பிழையா அல்லது அச்சுப் பிழையா என்பதறியேன். திருவாசகத்தில், அச்சப்பத்து பகுதியில், மாணிக்கவாசகர், ‘புற்று வாள் அரவும் அஞ்சேன்’ என்பார். இன்றைய பதிப்புகள் ‘புற்று வாழ் அரவும் அஞ்சேன்’ என்று அச்சிடுகின்றன. மாணிக்கவாசகர் கருதிய வாளரவு என்பது விடமுள்ள பாம்பு. இன்று திருத்தி அச்சிடப்படும் வாழரவு என்பது வாழும் அரவு.

பாநுவுக்கு மாறாக அயற்சொல் அகராதியில் பானு என்ற சொல் கிடைக்கிறது. அயற்சொல் அகராதி, பானு எனும் சொல்லை சமற்கிருதம் – Bhanu என்கிறது. பொருள் – கதிரவன், அழகு, முதலாளி, தலைவன், அரசன்.

பானம் எனும் சொல்லும் சமற்கிருதம். பருகும் உணவு, மது எனப் பொருள்கள். பானுவாரம் என்றால் ஞாயிற்றுக்கிழமை. அன்று பானுவார் என்றிருந்ததைத்தான் இன்று ரவிவார் என்கிறார்கள். நாம் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்பதைத்தான் வடநாட்டவர் ரவிவார், சோமவார், மங்கல்வார், புத்வார், குருவார், சுக்ரவார், சனிவார் என்பார்கள். அவர்கள் தேவபாஷை, நாம் நீச்ச பாஷை! அவ்வளவுதான் வேறுபாடு!

பேரகராதி பானு எனும் சொல்லுக்குத் தரும் பொருள் ஆறு.

  1. Sun; சூரியன் (பிங்கல நிகண்டு)
  2. Brightness; ஒளி (பிங்கல நிகண்டு)
  3. Beauty; அழகு (யாழ் அகராதி)
  4. A treatise on architecture; சிற்ப நூல் வகை
  5. Master; எசமானன் (யாழ் அகராதி)
  6. King; அரசன் (யாழ் அகராதி)

பானுவை மேடுறுத்தி மேலும் சில சொற்கள் உண்டு.

பானு கம்பன்சிவகணங்களில் ஒருவன்
பானுகோபன்சூரபதுமன் மகன்
பானுபலைவாழை (யாழ் அகராதி)
பானு மத்தியம்மழை நிற்பதற்கு அறிகுறியாக சூரியன் புதனுக்கும் வெள்ளிக்கும் இடையில் நிற்கும் நிலை
பானு மைந்தன்சூரியனின் மகன். யமன், சனி, கர்ணன், சுக்கிரீவன்
பானு வாசரம்பானு வாரம், ஞாயிற்றுக்கிழமை, Sunday.

வேறுமொரு சொல் தமிழனுக்குத் தெரியும், ஆனால் அச்சொல் பேரகராதியில் இல்லை – சினிமா நடிகையின் பெயர். நல்ல நடிகை, நல்ல பாடகி, எழுத்தாளரும் ஆவார். எத்தனை ஆண்டுகள் கடந்து போனாலும் தமிழருக்கும் தமிழ் ஊடகத்தாருக்கும் திரைப்பட நடிகையின் பெயர், அவர் அபிநயித்த சினிமாக்கள், அவர் குறித்த சம்பவங்கள், பெற்ற விருதுகள், செய்துகொண்ட மணங்கள், மணமுறிவுகள், இரண்டும் இல்லாத வணிக – சமூக – அரசியல் களவொழுக்கங்கள் யாவும் சமய நூல் செய்திகள் போலிங்கே பேணப்படும், நினைவூட்டப்படும், கொண்டாடப்படும். படிதாண்டாப் பத்தினி – முற்றும் துறந்த முனிவன் எனும் உவமை இன்றும் பேரறிஞர் ஒருவரின் பெரும்புகழ் மங்கலமாக இதிகாசச் செய்திபோல் நினைவுகூரப்படுகிறது.

உலகில் எத்தனை ஆயிரம் மொழிகள், எழுத்துரு இருந்தும் இல்லாமலும்? அது அம்மொழி பேசுபவரின் உயிர்மொழி. அம்மனிதனின் மரபின், பண்பாட்டின், இசையின், தெய்வத்தின் மொழி! “எங்க அம்மா செய்யக்கூடிய வத்தக்குழம்பு / எரிசேரி / சொதி / பொரிச்ச கூட்டு / மொளகூட்டல் / சம்பல் / புளிசேரி போல் உலகில் எவராலுமே வைக்க முடியாது!” போன்ற கூற்றுக்களின் ஆதாரம் அறிவல்ல, உணர்வு. மொழியும் அவ்விதமே! மனிதன் பேசும் மொழி அனைத்துமே அவனவன் தேவனின் மொழிதான். ஹீப்ரு, அராமிக், இலத்தீன், கிரேக்கம், அரபி, உருது, சீனம், சமற்கிருதம், தமிழ் எனும் மொழிகள் அறிந்திருப்பவரே கடவுள் என்றால் அவர் என்ன கடவுள்? அம்மொழிகள் அறியா மானுடவர்க்கு அவர் வாடகைக் கடவுளா? குத்தகைக் கடவுளா?

5 comments

JAYAKUMAR December 25, 2021 - 9:09 pm

sir
பண்டுவர்
தெரசர்

இது வரை கேட்டதில்லை..

பாடு க்கான அர்த்தம் இன்று தான் தெரிந்தது..

மிக அருமை sir

Parthiban M sathya December 26, 2021 - 9:24 am

சொற்களை பின் தொடர்ந்ந்து கொண்டே சென்றால் சொற்கள் , சொற்கள், சொற்கள். நிறைய கொள்முதல் செய்யலாம். ஒன்றே ஒன்றுதான் வேண்டும் தீராத காதல். சொல்லாத(பயன்படுத்தாத) சொற்கள் நிறைய புதைந்து கிடக்கின்றன மொழியில் . அகழ அகழ பொக்கிஷம் தெரியும். அப்பொக்கிஷம் நோக்கி படிப்போரை பயணப்பட வைப்பதில் தேர்ந்த வழிகாட்டி நாஞ்சில் ஐயா அவர்கள். அவர் வழியில் நின்றால் எத்திசை நோக்கினும் அத்திசை சொல்லே. சொற்களை சொற்களின் பொருளை உணர உணர உவகையன்றி வேறு என்ன உணர்வு ஏற்படும்?.செவிக்கு உணவளிப்பதில் வல்லவர். ஏனெனில் அவர் நாஞ்சிலார் அல்லவா?. பிறப்பு ஒக்கும் எல்லா மொழிகளும் என்கிறார். சரிதான் அனைத்தும் தேவ மொழிகளே. தேவன் மொழிந்ததே. உண்மையை உரக்கச் சொல்லும் பேரறிவாளர் ஐயாவுக்கு அன்பும் வந்தனங்களும்.❤️❤️

கா. பானுமதி December 26, 2021 - 1:00 pm

பானுசப்தமி. ஞாயிறும் சப்தமிதிதியும்இனணயும்அபூர்வநாள்.
சனீஸ்வரன் சிவனனபிடித்தநாள்தாய் தந்தைக்குபூஜை செய்தநாள்.
பானுமதி_துரியோதனின் மனனவி
தன்இறுதி நாட்களில் கணவனின் நற் குணங்களை சமுதாயத்திற்கு பரப்பியவள்(கல் ஆனாலும் கணவன்!)
நட்பில் புரட்சிக்கு வித்திட்டவள்
(எடுக்கவோ கோர்க்கவோ!)
.கருனணயும்உறுதியும் உடையவள்
பானுமதி_சூரியசந்திரன்.

ஆர். எஸ். கோபாலன் December 27, 2021 - 8:42 am

அருமை. “சொற்களின் விரிவு காடு போல் ஆகும், அதில் தொலைந்து போகவும் நேரும்” என்பது வடமொழி. இக் கட்டுரை போன்ற காடானால் வனவாசமும் இனிதே.

பண்டுவம் பார்ப்பது என்று கேட்டிருக்கிறேன். கஸ்மாலம் என்பது வடமொழி என்று நினைவு. கொங்குத் தயிழின் சில வசைச்சொற்களுக்குப் பொருளும் தெரியாது, வேறெங்கும் கேள்விப்பட்டதுமில்லை. “தத்தாரி” என்பது அவற்றில் ஒன்று. இது Tartary என்பதிலிருந்து வந்திருக்குமேயானால் உண்மையிலேயே மயக்கம் போட வேண்டியதுதான்.

இன்னொரு சொல் “பரங்கி”. ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் மேற்கு ஐரோப்பாவில் குடியேறிய இனம் ஒன்று பேரரசாகியது. அதன் பெயர் Franks. இது அரபியில் Firangi ஆகிப் பாரசீகம் வழியாகத் தமிழையும் வந்தடைந்தது! மொத்த ஐரோப்பியரையும் குறிக்கும் இந்தச் சொல் இழிசொல்லாக மாறியது விடுதலைப்போரின் போதுதான். பரங்கிப்பேட்டை, பரங்கிக்காய் என்பன எடுத்துக்காட்டுகள்.

ஹம்மம் என்பது துருக்கியச் சொல் இல்லையா? துருக்கிய மொழியில் அதன் பொருள் குளியலறை என்பதுதான்.

Vidhya Arun December 30, 2021 - 12:23 pm

வணக்கம் ஐயா.
கொரிய மொழியில் அம்மா அப்பா என்பது தமிழில் உள்ள பொருளில் தான் பேசப்படுகிறது. கடி சொல் இல்லை காலத்து பயனே – இது அவரவர் வாழும் நிலப்பரப்பில் எத்தனை உண்மை என்பதை அனைவரும் அறிவோம்.
மலேசியாவில் காடி (Gaadi) என்பது வாகனத்தையும், கரங்குனி( Karanguni ),
என்பது சாக்குப்பையில், பழைய பேப்பர், இரும்பு சாமான் போன்றவற்றைச் சேகரிப்பவரைக்குறிக்கும் சொல்லாகவும் மாறிப்போயிருக்கிறது.
கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து பயிலும் பாடத்தை, சிங்கப்பூரில் என் மகன், இல்லம் சார்ந்த கற்றல் வகுப்பு என்று தான் சொல்லுகிறான்.
நீங்கள் சொல்லும் மருத்துவரைப்போல மருத்துவச்சி என்ற சொல், பிரசவம் பார்க்கும் பெண்ணைக்குறிப்பதை கவனித்திருக்கிறேன்.
ஷாம்பூ (Shampoo) என்ற சொல்லும் வடமொழி மூலம் கொண்டது தான்.
நீங்கள் சொன்ன பானு, ஞாயிற்றுக்கிழமை கோயில்களில் அர்ச்சனை செய்யும்போது சொல்லும் “பானுவாசர”வில். கேட்டதை நினைவு கூர்கிறேன்
கீழுள்ள இரண்டும் சிங்கப்பூர் சார்ந்த மொழிப்பயன்பாட்டுக்கு உதவும் என தயாரிக்கப்பட்ட தளங்கள்.
https://www.languagecouncils.sg/tamil/en/language-resources/vocabulary/a
http://www.singlish.net/category/dictionary/a/

நன்றி
வித்யா அருண்

Comments are closed.