The White Ribbon: திரைக்கதை (பகுதி 2) – மைக்கேல் ஹனகே

0 comment

முதல் பகுதி

11. உள்ளே / பகல்: மர அறுப்பு ஆலை.

உழவனின் மூத்த மகன் ஃபிரான்ஸ் தன் தாயின் மரணம் தொடர்பான தடயம் ஏதும் கிடைக்குமா என்று தேடுகிறான். அவனுடன் 16 வயது மதிக்கத்தக்க அண்டை வீட்டுக்காரரின் மகன் மாட்டியும் துணை இருக்கிறான். மர அறுப்பு ஆலை ஆற்றினருகே இடிந்துவிழும் நிலையில் இருந்த ஒரு கட்டடம். 

விபத்து நிகழ்ந்தபோது அங்கிருந்த ஃபிரான்ஸிடம் அந்த இடத்தைச் சுட்டிக் காட்டுகிறான் மாட்டி.

மாட்டி

இந்த இடம்தான். கவனமாக நட. இங்கு எல்லாமே பழுதடைந்திருக்கின்றன.

ஃபிரான்ஸ் மெல்ல முன்னகர்கிறான். அவன் கீழ்தளத்தைப் பார்க்கிறான். நேர்கீழாக அறுப்பு இயந்திரம் இருக்கிறது. கவனமாகப் பின்னால் காலடி வைத்து மாட்டியிடம் சொல்கிறான்.

ஃபிரான்ஸ்

யார் என் அம்மாவை இதன் மீது ஏற வைத்தது?

மாட்டி

எனக்குத் தெரியவில்லை. சிந்திக்கிடந்ததை எல்லாம் சேகரிக்கத்தான் எங்களிடம் சொன்னார்கள். உன் அம்மா அவர்களாகவே மேலேறிவிட்டார். 

ஃபிரான்ஸ்

அவர்களுக்கு உயரம் ஆகாது. அதனால்தான் தலைசுற்றல் எடுத்திருக்கும். யார் இந்தப் பணியை உங்களுக்குப் பிரித்துக் கொடுத்தது?

மாட்டி

(சங்கடத்துடன்)

இந்தப் பணி எப்படி நடக்கும் என்பது உனக்குத் தெரியாதது இல்லை. அறுப்பு இயந்திரத்தைச் சுத்தப்படுத்தியாக வேண்டும். தலைமைப் பணியாளர் வலுகுறைந்த அறுவடையாளர்களையே தேர்வுசெய்வார்.

ஃபிரான்ஸ்

என் அம்மாவைத் தேர்ந்தெடுத்தது யார்?

12. வெளியே / கிராமம்: கிராமத்தின் கடைசியில் இருந்த வீதி.

தான் பிடித்த மீன்களும் தூண்டிலுமாகப் பள்ளியாசிரியர் வருகிறார்.

கதைசொல்லி

மார்டினுடன் நடந்த விசித்திரமான நிகழ்விற்குப் பிறகு, வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதுதான் முதன்முதலாக ஏவாவைப் பார்த்தேன்.

ஏவா (18), சிவந்த கேசம், கொஞ்சம் வாளிப்பான உடல், ஆயினும் அழகி. அவரது பாதையில் மிதிவண்டியில் செல்கிறாள். பின் இருக்கையில் ஒரு பெரிய பை இறுக்கிக் கட்டப்பட்டிருக்கிறது.  

பள்ளியாசிரியர்

வணக்கம்.

ஏவா

(சென்றபடியே)

வணக்கம்.

பள்ளியாசிரியர் நின்று அவளைப் பார்க்கிறார்.

பள்ளியாசிரியர்

(தயக்கத்துடன்)

ஒரு நிமிடம்!

ஏவா

(தி.வெ.)

சொல்லுங்கள்?

பள்ளியாசிரியர்

(சங்கடத்துடன்)

இந்த மாதிரி உங்களை இடைமறித்து முகமன் சொல்வதற்கு மன்னிக்கவும். நீங்கள்தானே சீமானின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் புதிய செவிலித்தாய்?

நமக்கு மிதிவண்டி நிறுத்தப்படும் ஒலி கேட்கிறது.

ஏவா

(தி.வெ.)

ஏன்?

பள்ளியாசிரியர் திரும்பி அவளை நோக்கி நடக்கிறார்.

பள்ளியாசிரியர்

உங்கள் சொந்த ஊர் ஓபர்டார்ஃப் என்கிறார்கள்?

ஏவா

யார் சொன்னார்கள்?

பள்ளியாசிரியர்

இங்கிருக்கும் ஆட்கள்தான்.

ஏவா

ஓ! அதனால் என்ன?

பள்ளியாசிரியர்

ஒன்றுமில்லை. தெரியவில்லை. மன்னிக்கவும். நான் இங்கு ஆசிரியனாக இருக்கிறேன். அது வந்து… 

(சங்கடமாகச் சிரிக்கிறார்) 

உங்களைப் பார்த்ததும் தோன்றியது… நான் கிரண்ட்பாக்காரன். தையலாளியின் மகன்.

ஏவா

எனக்குத் தெரியும்.

பள்ளியாசிரியர்

(குழம்பி)

என்ன?

ஏவா

சீமாட்டி ஏற்கனவே என்னிடம் சொல்லியிருக்கிறார்.

பள்ளியாசிரியர்

என்ன சொன்னார்கள்?

ஏவா

பள்ளி ஆசிரியர், என் ஊருக்குப் பக்கத்து ஊர்க்காரர்தான் என்று.

பள்ளியாசிரியர்

(சிரிக்கிறார்)

ஓ, அப்படியா… சரிதான்.

(பையைச் சுட்டிக்காட்டி)

நீங்கள் அங்குதான் போய்க்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

ஏவா

எங்கு?

பள்ளியாசிரியர்

ஓபர்டார்ஃபில் இருக்கும் வீட்டிற்கு.

ஏவா

(அவர் சொல்வது புரியாமல்)

என்ன?

பள்ளியாசிரியர்

(சொல்வதறியாது)

கிராமம் முழுக்க மிதிவண்டி ஓட்டி வரும் நீங்கள் அப்படியே… 

(கீழே குனிந்து மீனைப் பார்த்துச் சிந்திக்கிறார்.)

என் தந்தையை விசாரித்ததாகச் சொல்லுங்கள்.

தனது கூற்றை எண்ணித் தானே நகைத்துக்கொண்டு ஒரு மீனைப் பிடிக்கிறார்.

பள்ளியாசிரியர்

அவருக்கு இதில் ஒரு மீனைத் தந்துவிடுங்கள். இவை புதியவை. நானே பிடித்தேன். 

இப்போது ஏவாவும் சிரிக்கிறாள். 

ஏவா

என்ன?!

பள்ளியாசிரியர்

(மன்னிப்பு கேட்பது போலச் சிரித்து)

சரிதான். அவர் மிக மகிழ்வார் என்று நிச்சயம் அறிவேன். குறிப்பாக வார இறுதி நாள் என்பதால்.

அவள் மீனுக்குத் தலையசைக்கிறாள். இந்த யோசனையின் அபத்தம் அவளுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அதேசமயம் எப்படி எதிர்வினை தருவது என்று தெளிவாக அவளுக்குத் தெரியவில்லை. 

ஏவா

ம். எப்படி… இதைக்கொண்டு செல்வது?

பள்ளியாசிரியர் எப்படி இதைச் சொன்னோம் என்று குழம்பியவராய், மீனைப் பிடித்தபடி சிரிக்கிறார்.

பள்ளியாசிரியர்

எனக்கும் தெரியாதுதான். இதை மடித்துத் தரக்கூட ஏதுமில்லை. 

இருவரும் சிரிக்கின்றனர். நிறுத்தம். தனது பின்னிருக்கையைப் பார்த்துவிட்டு சொல்கிறாள். 

ஏவா

துரதிருஷ்டவசமாக என்னிடமும் இல்லை.

பள்ளியாசிரியருக்குப் புதிய எண்ணம் உதிக்கிறது.

பள்ளியாசிரியர்

(ஆர்வமாக)

மீனைக் கயிற்றில் கட்டித்தர முடியும்.

ஏவா

(வியப்புடன்)

இங்கேயா? மிதிவண்டியிலா?

பள்ளியாசிரியர் புன்னகையுடன் தன் தோளைக் குலுக்குகிறார். (’ஏன் கூடாது?’)

ஏவா

எனக்கென்னவோ இது நல்ல யோசனையாகப் படவில்லை.

பள்ளியாசிரியர்

நீங்கள் சொல்வது சரிதான். இது வெற்று எண்ணம் மட்டுமே.

ஏவா

ஆம்.

சங்கடம். நிறுத்தம். பிறகு:

பள்ளியாசிரியர்

இது உங்களுடைய மிதிவண்டியா?

ஏவா

(’என்னே ஒரு யோசனை!’) இல்லை இது பண்ணைக்குச் சொந்தமானது.

பள்ளியாசிரியர்

ஓ! அப்படியா?

(நிறுத்தம்.)

பள்ளியாசிரியர்

இதுதான் உங்கள் முதல் விடுமுறையா?

ஏவா

(இவையெல்லாம் மிகவும் அந்தரங்கமானவை என உணர்ந்ததால் சந்தேகப் பார்வையுடன்)

ஆம்.

பள்ளியாசிரியர்

சரி. நீங்கள் வீட்டிற்குப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பீர்கள்.

ஏவா

ஆமாம்.

பள்ளியாசிரியர்

எனக்குப் புரிகிறது.

(நிறுத்தம். பிறகு)

ஏவா

(கால்மிதியில் கிளம்புவதற்குத் தயாராக நிற்கும் தோரணையில்) ஆம். எனக்கு இன்னும் நிறைய தூரம் கடந்து செல்ல வேண்டியுள்ளது.

பள்ளியாசிரியர்

(சற்று பின் நகர்ந்து)

கண்டிப்பாக! சென்று வாருங்கள். 

ஏவா

வருகிறேன்.

அவள் அழுத்தி ஓட்டப் போகிறாள்.

பள்ளியாசிரியர்

நீங்கள் செல்லும் வழியில் கிரண்ட்பாக்கைக் கடக்கும் போது என் தந்தைக்கு என் வணக்கத்தையாவது தெரிவியுங்கள்.

ஏவா

எனக்கு உங்கள் தந்தை யாரென்றே தெரியாதே!

பள்ளியாசிரியர்

ஆம். உண்மைதான்.

அவர்கள் சற்று நேரம் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர். பின் ஏவா மிதிவண்டி ஓட்டிச் செல்கிறாள். காமிரா அவளைத் தொடர்கிறது. ஏவாவும் அவள் மிதிவண்டியும் கொஞ்சம் தள்ளாடுகிறது. அவள் சுற்றிப் பார்த்துச் சிரித்தபடி சத்தமாகச் சொல்கிறாள்:

ஏவா

நான் இன்றுதான் மிதிவண்டி ஓட்ட கற்றுக்கொண்டேன்!

பள்ளியாசிரியர்

(தி.வெ. சத்தமாக)

ஓ! நீங்கள் நன்றாக ஓட்டுகிறீர்கள்! இருந்தாலும் கவனமாக ஓட்டுங்கள்!

வேகம் கூடக்கூட ஏவா நன்றாக ஓட்டுகிறாள். சீக்கிரமே புழுதி வீசும் அந்த நாட்டுப்புற சாலையில் ஒரு புள்ளியாகிறாள். 

13. உள்ளே / மாலை: மருத்துவரின் வீடு

விளக்கு ஏற்றும் அளவு இன்னும் இருளவில்லை. செனியாவும் ருடோல்ஃபும் சமையலறையில் அமர்ந்து உண்கின்றனர். கொஞ்ச நேரம் கழிகிறது. சடுதியில்…

ருடோல்ஃப்

அந்த பெண்மனிக்கு என்னப் பிரச்சனை?

செனியா

(சாப்பிட்டபடியே)

எந்த பெண்? ஓ, அவர்களா? இறந்துவிட்டார்கள்.

(நிறுத்தம். பிறகு)

ருடோல்ஃப்

அப்படியென்றால் என்ன?

செனியா

என்ன?

ருடோல்ஃப்

இறந்துவிடுதல் என்றால்?

சாப்பாட்டிலிருந்து தலையை உயர்த்திப் பார்க்கிறாள்.

செனியா

இறப்பது? கடவுளே! ஒருவரது வாழ்வு முடிந்துவிடுவது. வாழ்வதை நிறுத்திக்கொள்வது.

(மெளனம். பிறகு)

ருடோல்ஃப்

ஒருத்தர் எப்போது வாழ்வதை நிறுத்திக்கொள்வார்?

மீண்டும் சாப்பாட்டிலிருந்து தலையை உயர்த்துகிறாள். அவன் தரும் முக்கியத்துவத்தை உணர்ந்தவளாய் இப்போது தெளிவாகப் பதில்தர முனைகிறாள். அதே சமயம் அவள் சற்று சங்கடத்துடனும் இருக்கிறாள். 

செனியா

உனக்கு அதிகம் வயதானாலோ அல்லது கடுமையாக உடற்சுகமின்றி போனாலோ.

ருடோல்ஃப்

அந்தப் பெண்ணுக்கு?

செனியா

அவர்களுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது?

ருடோல்ஃப்

விபத்தா?

செனியா

ஆம். அப்படித்தான் ஒருவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்படும்.

ருடோல்ஃப்

அப்பாவிற்கு ஏற்பட்டது போலவா?

செனியா

ஆம். ஆனால் அதைவிட இன்னும் மோசமாக காயம்பட்டுவிட்டது. அதாவது நம் உடம்பால் தாங்க முடியாத அளவிற்கு. 

(இன்னொரு மெளனம். பிறகு..)

ருடோல்ஃப்

அதற்குப் பிறகு இறந்துவிடுவோமா?

செனியா

ஆம். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு விபத்து நேர்வதில்லை.

ருடோல்ஃப்

அப்படியென்றால் அவர்கள் இறக்க வேண்டியதில்லையா?

செனியா

இல்லை. நெடுங்காலம் கழித்து இறப்பார்கள்.

ருடோல்ஃப்

எப்போது?

செனியா

நிறைய வயதாகிய பின்பு.

(நீண்ட நிறுத்தம்.)

ருடோல்ஃப்

எல்லாருமே இறப்பார்களா?

செனியா

ஆம்.

ருடோல்ஃப்

அனைவருமா? உண்மையாகவா?

செனியா

ஆம். எல்லோரும் இறந்துவிடுவார்கள்.

ருடோல்ஃப்

ஆனால், நீ இறக்கமாட்டாய் தானே? செனி?

செனியா

நானும்தான். அனைவரும்தான்.

ருடோல்ஃப்

நம் அப்பா இறக்கமாட்டார்தானே?

செனியா

அப்பாவும்தான்.

ருடோல்ஃப்

நானுமா?

செனியா

நீயும்தான். ஆனால் இன்னும் வெகு நீண்ட காலம் வரை இல்லை. நாம் அனைவருமே இன்னும் வெகுகாலம் வரை இறக்க மாட்டோம்.

ருடோல்ஃப்

அதற்கு எதிராக ஒன்றுமே செய்ய முடியாதா? நடந்தே தீருமா?

செனியா

அது நடந்தே தீரும். ஆனால் இன்னும் நெடுங்காலத்திற்கு இல்லை.

(நீண்ட நிறுத்தம். பிறகு.)

ருடோல்ஃப்

அம்மா? அவர்கள் பயணத்திற்குப் போகவில்லைதானே?

நிறுத்தம்.

ருடோல்ஃப்

அவர்களும் இறந்துவிட்டார்களா?

நிறுத்தம்.

செனியா

ஆம். அவர்களும் இறந்துவிட்டார்கள். ஆனால் அது நெடுங்காலத்திற்கு முன்பு. 

இருவருமே மெளனம் காத்தனர். இடையில் உணவறை இருண்டுவிட்டது. 

சடுதியில் ருடோல்ஃப் தன் தட்டினைக் கோபத்துடன் தட்டிவிட்டு செனியாவை நோக்கினான். தட்டு தரையில் விழுந்து தெறிக்கிறது.

முதலில் செனியா செய்வதறியாது திகைத்தாள். பின்னர் தம்பியிடம் காட்டிடாதவாறு மெலிதாய் அழுதாள். 

14. உள்ளே / இரவு : கல்லூரி முதல்வரின் வீடு

பிள்ளைகளுக்குப் பிரம்படி விழும் சத்தம் கேட்கிறது. அதை எண்ணுகின்ற சத்தமும், கூடவே மெல்ல மெல்ல அதிகரிக்கும் முனகலும் மூச்சுத்திணறியபடி அழும் சத்தமும் கேட்கிறது. நாம் இதர பிள்ளைகளின் முகங்களைக் (அண்மை கோணத்தில்) காண்கிறோம். சிலர் முகத்தைத் திருப்பிக்கொள்ள பிறரோ பரிதாபமும் அச்சமுமாக அழத்தொடங்குகிறார்கள். 

இறுதியாக இருவரும் தலா பத்து அடிகள் வாங்கி முடித்தனர். 

அண்மைக் கோணம்: போதகர். அவர் மூச்சிரைந்து தன் நெற்றியில் வியர்வைத் துளிகள் இருக்க வெளிவருகிறார். 

போதகர்

இந்தா.

(அவர் மார்டினிடம் பிரம்பைத் தருகிறார். மார்டினுக்கு அண்மைக் கோணம்.)

போதகர்

பிரம்பைப் பிடி. அதன் இடத்திலேயே திரும்ப வை. 

மார்டின் நகரத் தொடங்க அவன் தந்தை பேசத் தொடங்கினார். 

போதகர்

முதலில் இன்னும் மோசமான நடத்தைக்குச் செல்லாதபடி உன்னைக் காத்தமைக்காக எனக்கு நன்றி சொல்.

(அண்மைக் கோணம்: மேரி)

போதகர்

உங்களை எவ்வளவு நேசிக்கிறேன், இத்தகைய வலியை உங்களுக்குத் தர நான் எத்தனைத் துயரை அனுபவிக்கிறேன் என்று உமக்கே தெரியும். என் வாழ்விலேயே துயரமான நாள் இன்றுதான். இனியொருமுறை இந்த நிலை ஏற்படாது என நாம் அனைவரும் நம்பிக்கை கொள்வோம். 

(அண்மைக் கோணம்: இருவரும் தந்தையின் கையை முத்தமிடுகின்றனர்.)

(அண்மைக் கோணம்: போதகர்.)

போதகர்

(சிரித்தபடியே)

இப்போது என்னைக் கட்டித் தழுவுங்கள். ஒருவரையொருவர் மன்னித்துக்கொள்ள மீதம் ஏதுமில்லை. நான் மனப்பூர்வமாக உங்களை விரும்புகிறேன். 

இன்னும் கண்ணீர் ஒழுகியபடி இருந்தாலும், வலிந்து உருவாக்கிய புன்னகையை முகத்தில் காட்டிய மேரியை முதலில் தழுவுகிறார். அதைத் தொடர்ந்து மார்டினைத் தழுவுகிறார். பிறகு தன் மனைவியை நோக்கித் திரும்புகிறார்.

போதகர்

இப்போது நாடாவை எடு அன்னா.

அன்னா வெள்ளை நாடாவுடன் இரண்டு பிள்ளைகளிடம் சென்று மார்டினின் புஜத்தில் ஒன்றையும் மேரியின் கூந்தலில் இன்னொன்றையும் கட்டுகிறாள்.

போதகர்

தீய எண்ணங்களையும் நடத்தையையும் சரியான முறையில் கையாளத் தெரிந்துகொண்டீர்கள் என்பது உறுதியாகும் வரை இவை கட்டப்பட்டிருக்கும். இந்த ஆண்டு கிறித்துவின் உடல் ரொட்டியாகவும் ஒயினாகவும் உங்களுக்கு ஒப்பளிக்கப்படவிருப்பதை நீங்கள் அறிவீர்கள்? அதுவரை பாவ எண்ணங்களிலிருந்து முற்றிலும் விலகியிருங்கள். இப்போது நாம் உண்ணலாம். 

(மார்டின் பிரம்புடன் வெளியேறுகிறான். போதகரும் மற்ற பிள்ளைகளும் மேசையைச் சுற்றி அமர்கின்றனர். மேரி தன் தாயுடன் அந்த அறையை விட்டு வெளியேறுகிறாள். தண்டனைக்கு முன் இருந்த இடத்தில் அனைவரும் தட்டினை வைக்க இரு பிள்ளைகள் சூப்பும் கிண்ணமுமாக வந்து அமர்கின்றனர். மார்டினும் வந்து தன் தந்தையின் அருகில் இருக்கும் தன் இடத்தில் அமர்கிறான். கைகூப்பி தன் தொழுகையைத் தொடங்குகிறார் போதகர். மற்றவர் தொடர்கின்றனர்.)

போதகர்

(நட்பார்ந்த முகத்துடன்)

மேரி, இன்று நீ இறைவனுக்கு நன்றி பகர்வாயா?

மேரி

கர்த்தரே! எங்களுக்கு நீர் அளித்த உணவை ஆசிர்வதியும். இறைவா உமக்கு நன்றி.

மற்றவர்கள் அனைவரும் ‘இறைவா உமக்கு நன்றி’ என்றனர்.

சாறு இருந்த கோப்பையைத் திறந்து மேரியும் அவள் தாயும் அனைவருக்கும் தந்தனர். பிறகு அவர்கள் அருந்தினர்.

15. உள்ளே / இரவு : பண்ணை.

உழவரின் மனைவியுடைய சடலம் கிடத்தப்பட்டிருக்கிறது. அதன் இடவலமாக எரியும் மெழுகுவர்த்திகள் தீரும் நிலையில் உள்ளன. கடும் அமைதி. மேல்சட்டை மட்டும் அணிந்திருக்கும் ஐந்து வயது செப், வெறுங்காலுடன் அறைக்குள் நுழைகிறான். அவன் தயங்குகிறான். பின் மெல்ல கவனமாகத் தன் இறந்த அன்னையினருகே வந்து நிற்கிறான். இறந்த பெண்மனியின் வதனம் வெள்ளைக் கைகுட்டையால் மூடப்பட்டிருக்கிறது. செப் கடும் பீதியடைந்திருக்கிறான். கைகுட்டையை எடுப்பதற்குப் பலமுறை முயல்கிறான். வாயும் விழியும் அகலத் திறந்தபடி மூச்சற்றுக் கிடக்கும் பிணத்தைப் பார்க்கிறான். சடுதியில் ஒரு பேரொலி கேட்டுத் தடுமாறி பின்னகர்கிறான். திரும்புகிறான். அவனது பதினான்கு வயது அண்ணன் பவுல் சுவரில் சாய்ந்தபடி பலகையில் அமர்ந்திருக்கிறான். அவனும் மேற்சட்டை மட்டுமே அணிந்திருக்கிறான். 

செப்

(வியப்புடன் இரகசியக் குரலில்)

பவுலி?!

பவுல் ஒரு சொல்லும் பேசவில்லை. செப்பிற்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அவன் மீண்டும் தன் தாயைப் பார்த்துவிட்டுத் தன் அண்ணனையும் மீளப் பார்க்கிறான். அவனருகே சென்று பலகையில் அமர்கிறான். கூண்டுப்பறவை போல அவர்கள் இருளில் அமர்ந்திருக்கின்றனர். ஒன்றாக. வெகு நெருக்கமாக. 

16. உள்ளே / இரவு : பண்ணை. சீமானின் இல்லம். வாழ்வறை. படுக்கையறை.

சிமான் தன் பிள்ளைகள் லிஸல் (15), ஜியார்ஜ் (10), ஃபெர்டினாண்ட் (10) ஆகியோருடன் எதற்காகவோ காத்திருக்கிறார். பிறகு கதவு திறக்க அங்கிருந்து பேறுசெவிலி வெளிவருகிறாள். அவர்களை மறு அறைக்கு வரும்படி அழைக்கிறாள். 

கதைசொல்லி

அன்றிரவு சீமானின் மனைவி தனது நான்காவதும் கடைசியுமான குழந்தையைத் தன் 42 வயதில் பெற்றெடுத்தாள்.

பிள்ளைகளும் தந்தையைத் தொடர்ந்து உள்ளே நுழைய விரும்புகின்றனர். குறைந்தது, நற்குணமுடைய, சதைப்பற்றான லிஸல் மட்டுமாவது உள்ளே நுழைய ஆர்வத்துடன் ஆயத்தமாக இருந்தாள். ஆனால் அவர்களை அமைதி காக்குமாறு அறிவுறுத்திய செவிலி, தந்தையை மட்டும் உள்ளே அனுமதித்தாள். 

லிஸல்

(கொந்தளிப்பான ஆர்வத்துடன்)

என்ன பிறந்திருக்கிறது?

செவிலி

(சிரித்தபடியே)

நீ என்னவாக இருக்கும் என நினைக்கிறாய்?

லிஸல்

(நிதானமின்றி தலையை அசைத்தபடி)

எனக்குத் தெரியவில்லையே!

செவிலி

பையன்.

ஃபெர்டினாண்ட்

அடக்கடவுளே!

செவிலி

என்ன சொல்ல வருகிறாய்? உனக்குத் தம்பி வேண்டாமா?

ஃபெர்டினாண்ட்

ப்பூ…

செவிலி

உம் தந்தையின் காதில் விழாததால் நீ தப்பித்தாய்.

தந்தைக்குப் பதிலாக ஜியார், அவனது புறந்தலையில் தட்டினான். அவர்கள் சண்டையிட்டனர். 

செவிலி

நிறுத்துங்கள்.

அவள் குறுக்கிட்டு சில அடிகள் தருகிறாள். லிஸல் ஓலமிட்டபடியே அறையை விட்டு வெளியே ஓடுகிறாள். 

செவிலி

நீங்கள் இதற்காக வெட்கப்பட வேண்டும்.

ஃபெர்டினாண்ட்

(சடுதியில் வேறொரு ஆளாக மாறியவனைப் போல)

மன்னியுங்கள்.

செவிலி அவனைக் குழப்பத்துடன் பார்க்கிறாள்.

17. வெளியே / புலர்வு: வயலுக்கு அருகில் இருந்த பாதை.

உழவர், ஃபிரான்ஸ், பவுல் இருவரோடு அவ்வயல் நிலத்திலிருந்து கிளம்பினர். அவர்கள் பணிக்குச் செல்கின்றனர். முதியவர் இருவரும் கதிர் அருவாள் வைத்திருந்தனர். பின்னணியில் விரிந்து பரவிய பயிர்நிலம். மூவரும் அவசரமாக நடந்தனர். 

சற்று நேரத்திற்குப் பிறகு…

ஃபிரான்ஸ்

(தயக்கத்துடன்)

தந்தையே, உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.

உழவர்

என்ன?

ஃபிரான்ஸ்

நான் மர அறுப்பு ஆலைக்குச் சென்றேன்.

அதைக் கேளாதவர் போல உழவர் தொடர்ந்து நடந்தார். ஃபிரான்ஸ் அவரைப் பக்கவாட்டில் இருந்து பார்த்தான். மூவரும் நடக்க, நெடுநேரம் அவர் மெளமாகவே காணப்பட்டார். அதன் பின் ஃபிரான்ஸ் மென்மையாகச் சொன்னான்:

ஃபிரான்ஸ்

அம்மா வேலை செய்த முதல் தளம், முற்றிலும் பழுதடைந்திருந்தது.

தொடர்ந்து நடந்தனர்.

ஃபிரான்ஸ்

அவளை அங்கு அனுப்பிய மேற்பார்வையாளருக்கு நிச்சயம் அது தெரிந்திருக்கும். நிலக்கிழாருக்கும்தான்.

தந்தை இன்னும் மெளனம் காத்தார். தொடர்ந்து நடந்தனர்.

ஃபிரான்ஸ்

தந்தையே?

உழவர்

(கடுப்பாகி)

உனக்கு என்ன வேண்டும்?

ஃபிரான்ஸ்

(தந்தையின் பொருட்டின்மையை எதிர்பாராதவனாய்)

ஆபத்து என்று தெரிந்தே அம்மாவை அவர்கள் அனுப்பியிருக்கிறார்கள்.

(உழவர் நின்று ஃபிரான்ஸை நோக்கித் திரும்பி)

உழவர்

(சினத்துடன்)

என்னதான் சொல்ல வருகிறாய்?

ஃபிரான்ஸ்

(புரியாதவனாய்)

ஆனால்…

உழவர்

(கடும் சினத்தில் இருந்தாலும் வலுக்கட்டாயமாக நிதானித்து)

சீமானுக்கு எதிராகப் புகாரளிக்கச் சொல்கிறாயா, இல்லை மேற்பார்வையாளரைக் கொல்லச் சொல்கிறாயா?

ஃபிரான்ஸ்

நான்…

உழவர்

உன் அரிவாளை எடுத்துச் சென்று அவன் தலையைக் கொய். கண்டிப்பாக அதுதான் உன் தாயை மீள உயிர்ப்பிக்க வழி.

(ஃபிரான்ஸிடமிருந்து திரும்பி தொடர்ந்து நடந்தார். பிறர் பின்தொடர்ந்தனர். சில அடிகள் வைத்த பிறகு…)

ஃபிரான்ஸ்

(மென்மையாக)

தந்தை அம்மாவை நேசித்தார் என்று நினைத்திருந்தேன்.

(உழவர் சடுதியில் நின்று கடுமையான குரலில் விரக்தியுற்று கத்தினார்.)

உழவர்

வாயை மூடு.

அண்மைக் கோணம்: இதை முழுவதும் பவுல் உற்று கவனித்தான். அவன் தந்தையைப் பார்த்தான். பின் தன் விழிகளைத் தாழ்த்தினான். 

கதைசொல்லி

இந்த இரு நாட்களுக்குப் பிறகு கிராமத்து வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியது. 

18. உள்ளே / வெளியே, பகல் / இரவு. மாண்டேஜ்கள். 

அ) அறுவடை: சிறுவர்களும் குழந்தைகளும்கூட சிறு சிறு வயல் வேலைகளில் ஈடுபட்டனர். 

கதைசொல்லி

தினந்தோறும் தொடரும் அறுவடைப் பணி மக்களை அயர்ச்சிக்குள்ளாகியது. பல குழந்தைகளும் தம் பெற்றோருக்கு உதவுவதில் மும்மரமாக இருந்தனர். 

ஆ) செவிலி மருத்துவரின் வீட்டுப் பணிகளைச் செய்துவந்தாள். ருடால்ஃபுக்கும் தனது மனநலம் குன்றிய நான்கு வயது மகனுக்கும் இடையில் நடந்த சண்டை (கதைசொல்லியின் கூற்று ஒலியால் அதை நம்மால் முற்றிலும் அறியமுடியவில்லை.) செவிலியால் – தன் மகனுக்குச் சாதகமாகத் – தீர்த்து வைக்கப்பட்டது. 

கதைசொல்லி

தற்காலிகமாக மருத்துவர் மருத்துவமனையிலேயே இருக்க நேர்ந்தது. அவரது இரு குழந்தைகளுடைய – செனியா, ரூடோல்ஃப் – அடிப்படைத் தேவைகளைச் செவிலி பார்த்து வந்தாள். ஒட்டுமொத்த ஊரே திரண்டு பங்கேற்ற உழவரின் மனைவியுடைய ஈமச்சடங்குகள் முடிந்த பிறகு, மெல்ல இவ்விரு விபத்துகளும் மறக்கப்பட்டன…

19. வெளியே / பகல்: மாளிகை.

கதைசொல்லி

ஆனால் கோடையின் முடிவில் வரும் அறுவடைத் திருவிழா மீண்டும் ஊர்மக்களை ஒன்றுதிரட்டியது. முதலில் விழாவுக்கான ஆர்ப்பரிப்பும் கூச்சல்களும் நிறைந்திருந்த இடத்தில் மெல்ல பீதியும் குழப்பமும் பதிலீடு செய்யப்பட்டது. 

மைதானம் முழுவதும் மக்களால் நிரம்பியிருந்தது. அனைவரும் தத்தம் ஞாயிற்றுகிழமைக்கான சிறந்த உடைகளில் இருந்தனர். 

உழவர்கள், பருவப் பணியாளர்கள், கிராமத்து மக்கள், குழந்தைகள், பதின்மர்கள். 

நடன மேடை கட்டமைக்கப்பட்டது. அதன் மீது நிலக்கிழார், மேற்பார்வையாளர், போதகர் ஆகியோர் தத்தம் குடும்பங்களுடன் வீற்றிருந்தனர்.

அறுவடைக் குழுவினரின் சார்பில் அறுவடை மகுடத்தை நிலக்கிழாருக்குச் சூட்டும் பொருட்டு இரு இளம் பெண்கள் தம் கைகளில் ஏந்தி வந்தனர். 

அறுவடையாளர்

நம் பாடலையும் பிரார்த்தனைகளையும் தொடங்குவோம்…

இங்கு பயிருடன் திரண்டோம்; பிரபுவுக்கு மகுடத்தைச் சூட்டினோம்

அது பெரிதுமில்லை, சிறிதுமில்லை; ஆனால் அழகானது

அது முள்ளால் ஆகவில்லை, புல்லாலும் இல்லை; தூய கதிராலானது

நம் பிரபு நிறைய அளித்தார்; உழவர் நிறைய உழுதனர்;

அதனால்தான் நிறைய இளம்பெண்கள் நாங்கள் திரண்டோம்.

நாங்கள் சேர்ந்து பள்ளத்தாக்கு குன்று புதர்கள் முட்கள் எல்லாம்

தேடிக் கோர்த்து புனைந்தது இம்மகுடம்.

கடற்கரையில் மணல் உள்ளவரை

மழைப்பெருக்கில் துளி எஞ்சும் வரை

வாழ்வாங்கு வாழ்க பிரபும் அவர் இல்லத்தாரும்

நல்ல மகிழ்ச்சிக்குப் பலனாக

அருந்தி மகிழ்வோம் மதுவாக

நன்கு வறுத்த வாத்து கிடைத்தால் 

சுவைத்து நறுக்கென நடனமாடுவோம்.

இந்தப் பாடலின் போது இதுவரை நாம் சந்தித்துவிட்ட அனைத்தையும் காமிரா காட்டி வருகிறது. ஊர்மக்கள் அனைவரும் (மருத்துவர், உழவர், உழவரின் இரு மகன்கள் ஆகியோரைத் தவிர) விழாவிற்கு வந்தனர். அங்கிருந்த அனைவரும் சிரித்தும் கூச்சலிட்டும் மகிழ்ந்திருக்கையில், தடுமாறிய நடையுடன் வந்த பணிப்பெண், சீமானிடம் மகுடத்தை ஒப்படைக்கிறாள். கிராமத்து இசையணி கொட்டிசை முழக்குகிறது. 

(முழக்கம் முடிந்த உடன்)

சீமான்

அனைவருக்கும் என் நன்றி உரித்தாகட்டும். நீங்கள் கடுமையாகப் பணியாற்றியுள்ளீர்கள். சொர்க்கம் உங்களுக்கு நன்மையைப் பொழியட்டும். இப்போது நம் களஞ்சியங்கள் நிரம்பிவிட்டன. ஆதலால்… இன்று தேவைக்கதிகமாகவே பீர் கிடைக்கும். நீங்கள் பட்டினி கிடக்கத் தேவையில்லை. 

அவர் பீரும், உணவும் காத்திருக்கும் திறந்த மதுக்கூடத்தைச் சுட்டிக்காட்டினார். மதுக்கூடத்திற்கு முன் நீளிருக்கைகள் போடப்பட்டிருந்தன.

சீமான்

உங்கள் உணவை மகிழ்ச்சியோடு உண்ணுங்கள். எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குடித்தும் உண்டும் மகிழ்ந்திருங்கள். அத்தனையும் உங்களுக்கே! நீங்கள் அதற்குத் தகுதியானவர்களே!

மீண்டும் மக்கள் கூச்சலிட்டு ஆர்ப்பரித்தனர். அதன் பிறகு இசைக்கருவிகள் ஒலித்தன. விருந்து தொடர்ந்தது. 

20. வெளியே / பகல்: மாளிகையின் காய்கறித் தோட்டம்.

மாளிகையின் பின்புறம் காய்கறித் தோட்டம் இருந்தது. தொலைவில் விருந்தின் இசையொலி நமக்குக் கேட்கிறது. தன் பணி உடையில் இருந்த ஃபிரான்ஸ் தடுப்புக் கதவைத் திறந்து உள்நுழைந்து பரந்திருந்த முட்டைக்கோஸ் விளைச்சல் நிலத்தில் இறங்கித் தன் அரிவாளால் வெட்டித் தள்ளினான். அந்த மொத்தக் காட்சியும் திரள்கொலையை ஒத்திருந்தது.

-தொடரும்.