கதை உருவான கதை:
டிசி காமிக்சின் தலைமை நிர்வாகியான ஜிம் லீ, 2004ல் ஓர் இத்தாலியப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் ஐரோப்பாவின் 4 முக்கிய நகரங்களைக் குறியீடாக வைத்து, அந்த நான்கு நகரங்களிலும் கதை நடப்பதாகத் திட்டமிட்டு, இத்தாலியின் தலைசிறந்த நான்கு காமிக்ஸ் ஓவியர்கள் வரையும் ஒரு காமிக்ஸ் தொடரைக் கொண்டுவர முயன்றார். ஆனால், அது கைகூடவில்லை. பின்னர், 2011ல் இதே தொடர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், வெளியாகாமல் நின்றது. பின்னர் 2015 டிசம்பரில் 4 பாகத் தொடராக வெளிவரத் தொடங்கிய கதைதான் பேட்மேன் யூரோப்பா.
தலைப்பு: பேட்மேன் யூரோப்பா
கதாசிரியர்: பிரையன் அஸரெல்லோ & மாட்டேயோ கஸாலி
ஓவியர்: ஜிம் லீ + ஜூஸெப்பி கமென்கோலி, டியகோ லாட்டோர்ரே & ஜெரால்ட் பரேல்
வெளியீடு: டிசி காமிக்ஸ், 2016
விலை: 807 ரூபாய், 144 வண்ணப் பக்கங்கள்.
மையக் கரு: ஜென்ம விரோதிகளான பேட்மேனும் ஜோக்கரும் கூட்டணியாக இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம்!
*
கதையின் ஆரம்பத்திலேயே பேட்மேனும் அவரது ஜென்ம விரோதியான ஜோக்கரும் இரத்த வெள்ளத்தில் மரணத்தை எதிர்நோக்கி தரையில் விழுந்து கிடக்கிறார்கள். பின்னர், நான்-லீனியர் பாணியில், கதை ஏழு நாட்களுக்கு முன்பாகச் செல்கிறது. வழக்கம்போல பேட்மேன் ஒரு வில்லனைப் போட்டுப் புரட்டி எடுக்கிறார். ஆனால், வழக்கத்திற்கு மாறாக, அவரது உடலில் ஒரு சோர்வு ஏற்படுகிறது. களைப்புடன் வீடு திரும்பும் பேட்மேனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது கம்ப்யூட்டரை யாரோ “ஹாக்” செய்து, அதில் கலோஸ்சல் என்ற வைரசைப் புகுத்தி, அவருக்கு ஓர் எச்சரிக்கை அளிக்கிறார்கள்.
அதாவது, பேட்மேனின் உடலில் ஒரு கொடிய வைரஸ் செலுத்தப்பட்டிருக்கிறது. அதற்கான முறிவு ஏழு நாட்களுக்குள் செலுத்தப்படவில்லையென்றால், அவர் இறந்துவிடுவார். அந்தக் கம்ப்யூட்டர் வைரசைப் பின்பற்றி பேட்மேன் ஜெர்மனியிலுள்ள பெர்லின் நகருக்குப் போகிறார். அங்கே, இவரது கம்ப்யூட்டரை “ஹாக்” செய்த பெண்ணான நீனாவை ஜோக்கர் விசாரித்துக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். இருவருக்கும் இடையே மோதல் நடக்கிறது. அப்போதுதான் ஜோக்கரும் அதே வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது பேட்மேனுக்குத் தெரியவர, வேறு வழியில்லாமல் இருவரும் “இணைந்த கை”களாக அவர்களுக்கு வைரசை செலுத்திய எதிரியைத் தேடி செக் குடியரசின் தலைநகரான பிராக்-கிற்குப் போகிறார்கள்.
அங்கே நீனாவை பகடைக்காயாக வைத்து எதிரியைப் பிடிக்க இருவரும் திட்டமிட, எதிரியோ மர ரோபோட்டுகளை அனுப்பி இவர்களைத் தாக்கி, நீனாவைக் கடத்திவிடுகிறான். ஒரு ட்ரான்ஸ்மீட்டர் உதவியுடன், நீனா பிரான்சுக்குக் கடத்தப்பட்டதை அறிந்து, பேட்மேனும் ஜோக்கரும் பாரிஸ் செல்கிறார்கள். அங்கே, மர ரோபோட்டுகளை ஏவியவன் கொல்லப்பட்டிருப்பதைக் காண்கிறார்கள். அப்போது பேட்மேன் உடையுடன், ஜோக்கர் போன்ற முக ஒப்பனையுடன் ஒரு மர்ம எதிரி இவர்களை எதிர்கொள்கிறான். அவன் கொடுத்த ஒரு க்ளூவை வைத்து, இருவரும் ரோமுக்குப் போகிறார்கள். அங்கே என்ன நடந்தது, அந்த மர்ம எதிரி யார், மாற்று மருந்து என்ன என்பதைக் கடைசிப் பாகத்தில் சொல்லி இருக்கிறார்கள்.
*
குறியீடுகளும் குறிப்புகளும்:
இந்த கிராஃபிக் நாவலில் மறைந்திருக்கும் குறியீடுகள் ஏராளம். முதல் பாகத்தை ஏன் பெர்லினில் ஆரம்பித்தார்கள் என்பதே ஒரு வரலாற்றுக் குறியீடுதான். 14ஆம் நூற்றாண்டில் இரு தனி நகரங்களாக இருந்த கால்னும் பெர்லினும் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் இணைந்து ஒரே நகரமானது என்பதுதான் வரலாறு. இங்கேதான் தனிப்பட்ட இரு ஆளுமைகளான பேட்மேனும் ஜோக்கரும் ஒரு கூட்டணியாக உருவெடுக்கிறார்கள் என்பது கதைக்களனுக்கான காரணம்.
பிராக் நகரில் இருவரும் கார்ல்ஸ் பாலத்தினருகே ஜான் பலக்ஸ்-சின் நினைவிடத்தில் மரத்தால் ஆன ரோபோட்டுகளுடன் மோதுகிறார்கள். அந்த ரோபோட்டுகளை எப்படி அழிப்பதென்று தெரியாமல் இருக்கும்போது, மறுபடியும் வரலாறுதான் க்ளூ கொடுத்து உதவுகிறது. ஜான் பலக்ஸ் 1968ல் செக் குடியரசின் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்து தீக்குளித்த இடம் அது. பிறகென்ன? பேட்மேனும் ஜோக்கரும் அந்த ரோபோட்டுகளை எரித்து, அழிக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு பாகத்திலும் நகரம் சார்ந்த, வரலாறு சார்ந்த குறியீடுகள் பல மறைந்துள்ளன.
ஓவியமும் உருவகமும்:
நான்கு பாகங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தின் முதல் பாகம் முழுக்க வாட்டர் கலரால், இயற்கையாக வரையப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. டிஜிடலாக ஓவியங்கள் வரையப்படும் காலத்தில், இப்படி வரைந்ததும் ஒரு வகையான குறியீடுதான். இரண்டாம் பாகம் பெயிண்டிங் ஆகவும், மூன்றாம் பாகம் சைகடெலிக் பாணியில் 3டி ஓவியம் போலவும் வரையப்பட்டுள்ளது. ஏனென்றால், மூன்றாம் பாகத்தில், பேட்மேனுக்கும் ஜோக்கருக்கும் அந்த வைரஸ் காரணமாக எதுவும் தெளிவாகத் தெரியாமல், குழப்பத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் ஓவியங்களுமே குழப்பமாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.
பேட்மேனின் முகமூடியும், பாரிசின் மூலான் ரூஜ்ஜும் ஒரே தோற்றத்தில் வரையப்பட்டிருப்பது, ஏன் கதையின் இறுதி பாகம் ரோமில் வர வேண்டும், இவர்களுக்கான மாற்று மருந்துக்காக ஏன் இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பது போன்ற பல பதில்களுக்கும் குறியீடுகள்தான் நம்மை வழிகாட்டி அழைத்துச் செல்கின்றன.
ஐரோப்பா – குறியீடுகளின் தாயகம்.
*
கதாசிரியர் பிரையன் அஸரெல்லோ:
சிறுவயதில் சூப்பர் ஹீரோ காமிக்ஸ் என்றாலே பிடிக்காமல், பேய் மற்றும் யுத்தம் சார்ந்த காமிக்ஸ்களை மட்டுமே விரும்பிப் படித்த ஒரு சிறுவன்தான் இப்போது உலகின் தலைசிறந்த சூப்பர் ஹீரோ காமிக்ஸ்களுக்கான கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய நகைமுரண்? பேட்மேன், சூப்பர்மேன், வொண்டர் உமன் ஆகியோரது சூப்பர் ஹிட் கதைகளை எழுதும் 59 வயதான பிரையன் அஸரெல்லோ, காமிக்ஸ் உலகின் சிறந்த படைப்பாளிக்கான ஐஸ்னர் விருதைப் பெற்றுள்ளார்.
ஓவியர்:
தென்கொரியாவில் பிறந்து, அமெரிக்காவில் ஓர் அகதியைப் போல வளர்ந்தவர்தான் ஜிம் லீ. அதனாலோ என்னவோ, சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட எக்ஸ்-மென் காமிக்ஸ் தொடர் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. பள்ளியில் நாடகங்களுக்கு இவர் போஸ்டர் வரைந்ததைப் பார்த்த இவரது நண்பர்கள், பள்ளியிறுதியில் சிக்நேச்சர் நோட்புக்கில் “நீயே ஒரு காமிக்ஸ் புக்கை வெளியிடுவாய்” என்று எழுதியிருந்தார்கள்.
ஆனால், அப்பாவைப் போல, தானும் ஒரு டாக்டர் ஆக, சைக்காலஜியைப் பாடமாக எடுத்துப் படித்தார். அப்போதுதான் (1986) டார்க் நைட் ரிட்டர்ன்ஸ், வாட்ச்மென் போன்ற கிராஃபிக் நாவல்கள் காமிக்ஸ் உலகையே புரட்டிப் போட, அப்பாவின் ஆசியுடன் காமிக்ஸ் துறையில் வந்தார், ஜிம். உலகிலேயே மிக அதிகமாக விற்ற காமிக்ஸ் (81 லட்சம் பிரதிகள்) என்ற கின்னஸ் சாதனையைப் படைத்தவர்தான் ஜிம் லீ.
-தொடரும்.