உயர்ந்த மனிதர்கள் – வில்லியம் ஃபாக்னர்

by கார்குழலி
0 comment

இருளைப் பூசிக்கொண்டு நின்ற பஞ்சாலையைக் கடந்ததும் உள்ளே விளக்கு எரிந்துகொண்டிருந்த அந்த வீடும் அதன் வாயிலில் நிறுத்தப்பட்ட மருத்துவரின் காரும் தெரிந்தன. உரத்த குரலில் நாய் குலைத்தது. 

“இதோ வந்துவிட்டோம்!” என்றார் வயது முதிர்ந்த துணை காவல் அலுவலர்.

“அந்த இன்னொரு கார் யாருடையது?” இருவரில் இளையவர் கேட்டார். அவர் புதியவர், அந்த மாகாணத்தின் புலனாய்வாளர்.

“மருத்துவர் ஸ்கோஃபீல்டுடையது,” என்றார் காவல் அலுவலர். “நாம் வருகிறோம் என்பதை மேக்கெல்லமிடம் லீ தொலைபேசியில் சொன்னபோது அவரை அனுப்பிவைக்கச் சொன்னார்.”

“நாம் வருவது குறித்து அவர்களை எச்சரித்தீர்களா?” என்றார் ஆய்வாளர். “இந்த இரண்டு ஏய்ப்பாளர்களையும் கைது செய்வதற்காக நான் வருகிறேன் என்பதை முன்கூட்டியே தொலைபேசியில் சொன்னீர்களா? அமெரிக்க அரசின் ஆணையை இப்படித்தான் செயல்படுத்துவீர்களா?”

மெலிந்த தேகமும், நன்கு மழித்த முகமும் கொண்ட காவல் அலுவலர் எந்நேரமும் புகையிலையை மென்றபடியே இருந்தார். இந்த ஊரிலேயே பிறந்து இங்கேயே வாழ்க்கை முழுவதையும் வாழ்ந்தவர்.

“அந்த இரண்டு மேக்கெல்லம் பையன்களையும் கைதுசெய்து ஊருக்கு இட்டுச் செல்லப் போகிறீர்கள் என்றுதானே நினைத்தேன்?”

“திட்டம் அதுதான். முன்கூட்டியே எச்சரித்து அவர்கள் தப்பி ஓட வாய்ப்பளித்துவிட்டீர்கள். இனி அரசு தனிப்படை அமைத்து அவர்களைத் தேடவேண்டியிருக்கலாம். நீங்களும் பிணையில் இருப்பவர் என்பதை மறந்துவிட்டீர்களா?” என்றார் புலனாய்வாளர்.

“மறக்கவில்லை. ஜெஃபர்சனில் இருந்து கிளம்பியது முதல் நான் சொல்லிக்கொண்டு இருப்பதை நீங்கள் நினைவில் வைக்கவேண்டும். ஆனால் மேக்கெல்லம் சகோதரர்களை நேரில் பார்த்தால்தான் புரிந்துகொள்வீர்கள் போல. அந்தக் காருக்குப் பின்னால் நிறுத்துங்கள். யாருக்கு உடல்நிலை சரியில்லை என்ன ஆயிற்று என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.”

புலனாய்வாளர் வண்டியை நிறுத்தி விளக்கை அணைத்தார். “இந்த மனிதர்கள்,” என்றார்.

பிறகு இத்தனை வருடங்களில் வகிக்கும் பதவியின் மதிப்பும் பெருமையும் அவரை மாற்றி இருக்கவேண்டும். என்றாலும் புகையிலை மெல்லும் இந்த முதியவரும் அவர்களில் ஒருவர்தானே என்று நினைத்துக்கொண்டார். 

சாவியைக் கையிலெடுத்துக்கொண்டு காரிலிருந்து இறங்கி கண்ணாடியை ஏற்றி கதவைப் பூட்டியபடி யோசித்தார். 

நிவாரணமாகக் கிடைக்கும் வேலையைப் பெறுவதற்காக வீடு நிலம் போன்ற சொத்துகள் குறித்துப் பொய் சொல்கிறார்கள் இம்மக்கள். ஆனால் அந்த வேலையைச் செய்யும் எண்ணம் இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி வேலைசெய்யத் தேவையில்லை எனும் உரிமையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இலவசமாகக் கிடைக்கும் மெத்தைக்காகச் சிறுபிள்ளைத்தனமாக எல்லோருக்கும் தெரியக்கூடிய சூழ்ச்சியில் ஈடுபடுகிறார்கள், எப்படியும் அதை விலைக்கு விற்கப்போகிறார்கள். தூங்க எலிப்பொந்து போன்ற இடமும் இலவச உணவும் இருந்தால் கிடைத்த வேலையை விட்டுவிடவும் தயாராக இருக்கிறார்கள். விதை வாங்கத் தரப்படும் கடனைப் பெறுவதற்காகப் பொய்யான விவரத்தைக் கூறி அதைப் பெற்றுக்கொண்ட பின் வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். பிடிபட்டாலோ ஆத்திரம்கொண்டு கடுமையான சொற்களால் பேசுகிறார்கள். இறுதியில் நஷ்டத்தால் பாதிக்கப்பட்ட அரசாங்கம் ஓர் எளிய விஷயத்தை மாத்திரம் செய்யுங்கள், இராணுவத்தில் பணியாற்ற உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள் என்று கேட்டால் மறுத்துவிடுகிறார்கள். 

அந்த முதிய காவல் அலுவலர் முன்னால் நடந்தார். புலனாய்வாளர் அவரைப் பின்தொடர்ந்தார். மரத் துண்டுகளை ஒன்றோடொன்று இணைத்து அமைக்கப்பட்ட வேலிக்கு நடுவே இருந்த வண்ணம் பூசப்படாத பருமனான கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார்கள். செங்கல் பதித்த பாதையின் இரு புறமும் வெட்டிச் சீரமைக்கப்படாத செடார் மரங்கள் உயர்ந்து நின்றன. பரந்துவிரிந்த அந்த வீடு இரண்டு மாடிகளைக் கொண்டது. வண்ணம் பூசப்படவில்லை. முன்னறையில் மங்கலான விளக்கு எரிந்தது. அதைச் சுற்றிலும் அமைந்த தாழ்வாரம் மரத்தால் செய்யப்பட்டிருந்ததைக் கவனித்தார் புலனாய்வாளர். கீழே இருந்து பெரிய நாய் ஒன்று மீண்டும் குரைத்தபடி மேலே வந்து அவர்களுக்கு நேரெதிரே நின்றது. வீட்டுக்குள்ளே இருந்து ஓர் ஆண் குரல் நிறுத்து என்று கட்டளையிடும் வரை குரைத்தது.

காவல் ஆய்வாளரோடு படியேறி நீண்ட தாழ்வாரத்தை அடைந்ததும் வாயிற்கதவருகே காத்துக்கொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்தார். நாற்பத்தைந்து வயதிருக்கும், கட்டையாக இருந்தார். பழுப்பு நிற முகத்தில் சலனமே இல்லை. குதிரைகளைப் பராமரிப்பவரின் கைகளைக் கொண்டிருந்தார். புலனாய்வாளரை ஒரேயொரு முறை உற்றுப் பார்த்தார், பிறகு அந்தப் பக்கம் திரும்பவே இல்லை. காவல் ஆய்வாளரிடம் மட்டுமே பேசினார். “நலம்தானே, திரு கோம்பால்ட், உள்ளே வாருங்கள்” என்றார். 

“நீங்கள் நலமா, ரஃபே? யாருக்கு உடம்பு சரியில்லை?”

“பட்டிக்குத்தான். தரை வழுக்கியதில் இயந்திரத்தில் கால் சிக்கிக்கொண்டுவிட்டது.”

“மோசமாக அடிபட்டுவிட்டதா?”

“அப்படித்தான் தெரிகிறது. அதனால்தான் மருத்துவரை இங்கே வரச் சொன்னோம். இரத்தப்போக்கை நிறுத்த முடியவில்லை.”

“கேட்கவே வருத்தமாக இருக்கிறது. இவர் திருவாளர் பியர்சன்.” அந்த மனிதர் தன்னை இன்னொரு முறை பார்ப்பதை உணர்ந்தார் புலனாய்வாளர். அந்தப் பழுப்பு நிற முகத்தில் இருந்த பழுப்பு நிறக் கண்கள் உற்றுப்  பார்த்தாலும் நட்புணர்வோடு இருந்தன. கையைக் குலுக்கும் போது அவருடைய கை கடினமாகவும் தளர்வுற்றும் குளிர்ந்தும் இருப்பதை உணர்ந்தார். “ஜாக்சனில் இருந்து வருகிறார். இராணுவத்துக்கு ஆட்களைச் சேர்க்கும் துறையில் இருப்பவர்.” தகவல்களை அடுக்கினார் காவல் ஆய்வாளர். “பையன்களுக்கான பிடியாணையோடு வந்திருக்கிறார்,” என்று அவர் சொன்னபோது குரலில் எந்தவித உணர்ச்சி மாற்றமும் இல்லையென்பதைப் புலனாய்வாளர் கவனித்தார்.

வேறெங்கும்கூட எந்த மாற்றமும் தென்படவில்லை. தளர்வுற்ற கடினமான அந்தக் கை புலனாய்வாளரின் கையில் இருந்து விடுவித்துக்கொண்டது. சலனம் எதையும் வெளிக்காட்டாத அந்த முகம் காவல் ஆய்வாளரைப் பார்த்தது. “போர் அறிவிக்கப்பட்டுவிட்டதா என்ன?”

“இல்லை,” என்றார் காவல் ஆய்வாளர்.

“விஷயம் அதுவல்ல, திருவாளர் மேக்கெல்லம்,” என்றார் புலனாய்வாளர். “இப்போதைக்கு அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் பெயரைப் பதிவுசெய்வது மட்டுமே. இந்த முறை குலுக்கலில் அவர்களுடைய எண்கள் தேர்ந்தெடுக்கப்படாமலே இருக்கலாம். சராசரிகளின் விதியின்படி எப்போதுமே நடக்காமல் போகலாம். ஆனால் மறுத்துவிட்டார்கள். பதிவுசெய்யத் தவறிவிட்டார்கள்.”

“ஓ, அப்படியா?” புலனாய்வாளரின் பக்கம் பார்க்காமல் காவல் ஆய்வாளரிடம் பேசினாலும் அவரைத்தான் பார்க்கிறாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. “பட்டியைப் பார்க்கவேண்டுமா? உள்ளே மருத்துவர் இருக்கிறார்.”

“பொறுங்கள்,” என்றார் புலனாய்வாளர். “உங்கள் சகோதரருக்கு ஏற்பட்ட விபத்து குறித்து வருத்தப்படுகிறேன், ஆனால்…” காவல் ஆய்வாளர் அவரை ஒரு கணம் பார்த்தார். அவரின் கனத்த சாம்பல் நிறப் புருவங்கள் ஒன்றிணைந்து கம்பளிப் பூச்சியைப் போலத் தோற்றமளித்தன. பார்வையில் மரியாதை தொனித்தாலும் பொறுமையிழந்தது போல இருந்தது. அந்தக் கணத்தில் அந்த இன்னொருவரின் பார்வையில் தொனித்த அதே உணர்வு காவல் ஆய்வாளரின் பார்வையிலும் தெரிந்தது. 

புலனாய்வாளர் சராசரிக்கும் அதிகமான அறிவாற்றல் கொண்டவர். தான் நினைத்துக்கொண்டு வந்ததை விடவும் மாறுபட்ட ஏதோ ஒன்று அங்கே நடப்பதை உணர்ந்தார். இந்த மாகாணத்தின் நிவாரணப் பணியில் பல வருடமாக ஈடுபட்டிருக்கிறார், குறிப்பாக கிராமப்புற மக்களுடன் மட்டுமே பணியாற்றி இருப்பதால் அவர்களைப் பற்றி நன்கு தெரிந்துவைத்திருப்பதாக நம்பினார். சிந்தனை செய்தபடியே காவல் ஆய்வாளரைக் கவனித்தார். ஆமாம். அதே போன்ற மக்களுடன்தான் இவரும் பணியாற்றுகிறார். இத்தனை காலத்தில் பதவி, அதிகாரம், பொறுப்பு எல்லாம் அவரை மாற்றியிருக்கவேண்டும். மீண்டும் சிந்தித்தார். இந்த மக்கள். இந்த மக்கள். “இன்றிரவே ஜாக்சனுக்குத் திரும்புகிறேன்,” என்றார். “ஏற்கெனவே இரயிலில் முன்பதிவு செய்துவிட்டேன். இன்று நிச்சயமாகப் பிடியாணையைத் தந்துவிட வேண்டும், தருவோம்.”

“வாருங்கள்,” என்றார் காவல் ஆய்வாளர். “அதற்கெல்லாம் இன்னும் நிறைய நேரம் இருக்கிறது.”

வேறு வழியில்லாமல் அவரைப் பின்தொடர்ந்தார் புலனாய்வாளர். பொங்குவதையும் பொறுமுவதையும் தவிர வேறெதுவும் செய்வதற்கில்லை. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர சுயகட்டுப்பாடு அவசியம் என்பதால் முன்னறையில் நடக்கையில் அதை மீட்டெடுக்க முயன்றார். நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டியிருந்தால் அதைச் செய்யும் பொறுப்பு தன்மீதுதான் விழும் என்பதையும் உணர்ந்திருந்தார். கைதிகளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து விரைவாகக் கிளம்பவேண்டுமென்றால் அதைத் தன்னால் மட்டுமே செய்யமுடியும், காவல் ஆய்வாளர் ஒருபோதும் அதைச் செய்யமாட்டார் என்பது புரிந்தது. அவர் நினைத்தது சரிதான். 

முதுமையால் தள்ளாட்டமுற்றிருக்கும் காவல் ஆய்வாளர் அடிப்படையில் இந்த மனிதர்களுள் ஒருவர். இந்த வீட்டுக்குள் நுழைந்த மாத்திரத்தில் அவருடைய பழைய உள்ளார்ந்த குணங்களான சோம்பேறித்தனமும் பொறுப்பற்ற நம்பகமற்ற தன்மையும் அவரை மீண்டும் தொற்றிக்கொண்டுவிட்டன. 

அவர் பின்னாலேயே சென்றார் புலனாய்வாளர். முன்னறையின் கடைசியில் இருந்த படுக்கையறைக்குள் நுழைந்தார்கள். சுற்றுமுற்றும் வியப்போடும் கூடவே திகிலோடும் பார்த்தார் புலனாய்வாளர். அறை பெரிதாக இருந்தது, தரைக்கு வண்ணம் பூசவில்லை. கட்டிலைத் தவிர ஒன்றிரண்டு நாற்காலிகளும் இன்னுமொரு பழையபாணி பொருளும் மட்டுமே இருந்தன. இருந்தாலும் வீட்டுக்கு வந்தபோது சந்தித்த மனிதரைப் போன்ற சாடையுடன் இன்னும் பல ஆண்கள் அங்கே இருந்ததால் அறையின் சுவர்கள் வீங்கிப் புடைத்தது போலத் தோன்றியது.

அவர்களில் யாரும் உருவத்தில் பெரியதாகவோ உயரமாகவோ இல்லை. கதவருகே நின்ற புலனாய்வாளரை எதுவும் சொல்லாமல் பார்த்துக்கொண்டிருந்ததால் அவர்களின் உள்ளுயிர்த் துடிப்பினாலும் உணர்வெழுச்சியினாலும் ஏற்பட்ட தாக்கமுமல்ல. ஒரேபோன்ற முகச்சாயல் அவர்கள் ஒருவருக்கொருவர் உறவு என்பதைப் பறைசாற்றியது. மெலிந்த உடலோடு பலவீனமாக இருந்த எழுபது வயது மதிக்கத்தக்க மனிதர் மற்றவர்களை விடவும் கொஞ்சம் உயரமாக இருந்தார். இரண்டாமவரின் தலைமுடி நரைத்திருந்தது என்பதைத் தவிர அச்சுஅசலாக வாசலில் சந்தித்தவரைப் போலவே இருந்தார். அவர்களை வாசலில் சந்தித்தவரைப் போலவே இருந்த மூன்றாமவரின் முகம் கொஞ்சம் நோய்மையோடு இருந்தது, அதில் இருந்த கருமையான கண்கள் துயரத்தோடும் ஒளி குன்றியும் இருந்தன. அந்த நீலநிறக் கண்களையுடைய இரட்டையர்களுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை. நீலநிறக் கண்கள் கொண்ட இன்னொரு மனிதர் கட்டிலில் படுத்திருந்தார். அவரை மருத்துவர் பரிசோதித்துக்கொண்டிருந்தார். எந்த ஊரைச் சேர்ந்த மருத்துவராகவும் இருக்கலாம். நகரத்தில் இருப்பவர்கள் அணிந்துகொள்ளும் நறுவிசான சூட் அணிந்திருந்தார். 

அறைக்குள் நுழைந்த புலனாய்வாளரையும் காவல் ஆய்வாளரையும் எதுவுமே பேசாமல் எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். மருத்துவரைத் தாண்டி பார்வையைச் செலுத்தி கட்டிலின்மீது படுத்திருந்த மனிதரைப் பார்த்தார் புலனாய்வாளர். அவருடைய கால்சட்டை நீளவாக்கில் கத்தரிக்கப்பட்டிருந்தது, நசுங்கிப்போய் இரத்தக் களரியாக இருந்த காலைப் பார்த்ததும் வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வந்ததால் கதவருகே நின்றவரை ஏதும் சொல்லாமல் பார்த்தார்கள் மற்றவர்கள். காவல் ஆய்வாளர் கட்டிலில் படுத்திருந்தவரின் அருகே சென்றார். மக்காச்சோளத்தின் தடித்த நடுப்பகுதியாலான புகைப்பானை வாயில் வைத்திருந்தார் அந்த மனிதர். அருகில் இருந்த மேசையின் மேல் பெரிய விஸ்கி குடுவை இருந்ததைக் கவனித்தார் புலனாய்வாளர், அவருடைய பாட்டனாரிடமும் இதைப் போன்ற குடுவை இருந்தது.

“பட்டி, நிலைமை மோசமாக இருக்கிறதே,” என்றார் காவல் ஆய்வாளர். 

“ஆம், தவறு என்னுடையதுதான். நான் பயன்படுத்தும் சட்டகம் பற்றி ஸ்டூவர்ட் எச்சரிக்கை செய்துகொண்டே இருந்தான்.”

“ஆமாம், உண்மைதான்,” என்று முதியவர்களில் இரண்டாமவர் சொன்னார்.

அப்போதும் மற்றவர்கள் யாரும் வாயைத் திறக்கவில்லை. கண்ணிமைக்காமல் புலனாய்வாளரை அமைதியாகப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். காவல் ஆய்வாளர் அவர் பக்கம் சற்றே திரும்பி, “இவர்தான் திருவாளர் பியர்சன். ஜாக்சனில் இருந்து வருகிறார். பையன்களைக் கைதுசெய்வதற்கான பிடியாணையை வைத்திருக்கிறார்.”

“எதற்காகவாம்?” படுக்கையில் கிடந்தவர் கேட்டார்.

“பதிவுசெய்யும் விவகாரத்துக்காக, பட்டி,” என்றார் காவல் ஆய்வாளர். 

“போர் இன்னும் தொடங்கவில்லையே,” படுக்கையில் கிடந்த மனிதர் சொன்னார்.

“இன்னும் இல்லை. ஆனால் புதிய சட்டம் வந்திருக்கிறது. அவர்கள் பதிவுசெய்யவில்லை.”

“அவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்?”

“பிடியாணையோடு வந்திருக்கிறார், பட்டி. கைதுசெய்யும் அதிகாரத்தோடு.”

“அப்படியென்றால் சிறைதானா?”

“அது பிடியாணை மட்டும்தான்,” என்றார் அந்த முதிய காவல் ஆய்வாளர். படுக்கையில் கிடந்தவர் புகைபிடித்தபடியே புலனாய்வாளரைப் பார்த்தார் . 

“ஜாக்சன், கொஞ்சம் விஸ்கி கொடு,” என்றார். 

“வேண்டாம், ஏற்கெனவே நிறைய அருந்திவிட்டீர்கள்,” என்றார் மருத்துவர். 

“ஜாக்சன், கொஞ்சம் விஸ்கி கொடு,” என்றார் படுக்கையில் கிடந்தவர். நிறுத்தாமல் புகைபிடித்தபடியே புலனாய்வாளரைப் பார்த்தார். “நீங்கள் அரசாங்கத்திடமிருந்து வருகிறீர்களா?” என்றார்.

“ஆமாம், அவர்கள் பதிவுசெய்திருக்க வேண்டும். இப்போதைக்கு அதை மட்டும் செய்தால் போதும். ஆனால் செய்யவில்லை….” புலனாய்வாளர் பேசுவதை மெல்ல நிறுத்தினார். ஏழு ஜோடிக் கண்கள் அவரை ஆழ்ந்து கவனித்தன. படுக்கையில் கிடந்தவர் ஊதித் தள்ளியபடி இருந்தார். 

“எப்படியும் நாங்கள் இங்கேதான் இருப்போம். ஓடிப்போகும் எண்ணமெல்லாம் இல்லை,” என்றார் படுக்கையில் கிடந்தவர். தலையைத் திருப்பி காலருகே நின்றிருந்த இரண்டு இளைஞர்களையும் பார்த்தார்.

“அன்ஸே, லூசியஸ்,” என்று அழைத்தார். 

“அப்பா,” என்ற இருவரின் குரலும் புலனாய்வாளருக்கு ஒரே குரலாகத்தான் கேட்டது.

“அரசாங்கம் உங்களுக்காகக் காத்திருக்கிறது என்பதைச் சொல்வதற்காக ஜாக்சனில் இருந்து இத்தனை தூரம் பயணம் செய்திருக்கிறார் இந்தக் கனவான். நீங்கள் இப்போதே இராணுவத்தில் சேரவேண்டும். மெம்ஃபிஸ்-க்குச் செல்லுங்கள். அதுதான் அருகில் இருக்கிறது. மாடிக்குப் போய் உங்கள் பொருட்களை எடுத்துவையுங்கள்.”

புலனாய்வாளர் திடுக்கிட்டார். “பொறுங்கள்!” என்று கத்தியபடி முன்னால் நகர்ந்தார். 

எல்லோருக்கும் மூத்தவரான ஜாக்சன் அவரைத் தடுத்து நிறுத்தியபடி “பொறுங்கள்,” என்றார். இப்போது யாரும் புலனாய்வாளரைப் பார்க்கவில்லை. மருத்துவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

“அவன் காலின் நிலைமை என்ன?” என்றார் ஜாக்சன்.

“நீங்களே பாருங்கள்,” என்றார் மருத்துவர். “அவரே காலை கிட்டத்தட்ட வெட்டி முடித்துவிட்டார். காத்திருக்கும் பொறுமையில்லை. இப்போது இங்கிருந்து நகரவே முடியாது. உதவிக்கு மருத்துவ தாதியும் கொஞ்சம் மயக்க மருந்தும் வேண்டும். நிறைய விஸ்கி அருந்தியிருந்தால் மயக்க மருந்து வேலை செய்யாது. யாராவது ஒருவர் என்னுடைய காரில் நகரத்துக்குக் கிளம்புங்கள். விவரத்தைத் தொலைபேசியில் சொல்லிவிடுகிறேன்.”

“மயக்க மருந்தா?” படுக்கையில் கிடந்தவர் கேட்டார். “எதற்காக? எல்லாமே ஏறக்குறைய முடிந்துவிட்டது என்று இப்போது சொன்னீர்களே? ஜாக்சனின் இறைச்சி வெட்டும் கத்தியும் இன்னும் கொஞ்சம் விஸ்கியும் இருந்தால் நானே முடித்துவிடுவேன். உடனே ஆரம்பித்து செய்துமுடித்து விடுங்கள்.”

“இதற்கு மேல் எந்த அதிர்ச்சியையும் உங்களால் தாங்க முடியாது,” என்றார் மருத்துவர்.

“இப்போது பேசுவது விஸ்கிதான்.”

“அடச்சே,” என்றார் படுக்கையில் கிடந்தவர். “ஒருமுறை பிரான்சில் கோதுமை வயலினூடே ஓடிக்கொண்டிருந்தபோது பயிருக்கு மேலே உயர்த்திப் பிடித்த இயந்திரத் துப்பாக்கி என்னை நோக்கி நகர்ந்து வருவதைப் பார்த்தேன். வேலியைத் தாண்டுவது போல அதைத் தாண்டிக் குதிக்க முயன்றேன், ஆனால் முடியவில்லை. தரையில் விழுந்துவிட்டேன். பட்டறையில் இருக்கும் அடைகல்லில் அடிப்பது போல என் தலைக்கவசத்தின் பின்பக்கம் யாரோ ஓங்கி அடித்தார்கள். விழிப்பு வரும் வரையில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அடிபட்ட வீரர்கள் தங்கும் இடத்தில் நிறைய பேர் படுத்துக் கிடந்தோம். மருத்துவர் ஒவ்வொருவராகப் பார்த்துவிட்டு எங்களிடம் வருவதற்கு வெகு நேரமானது. அதற்குள் வலி உயிர் போய்விட்டது. இந்தக் குடுவை கையில் இருந்தால் போதும், இந்த வலியெல்லாம் ஒன்றுமில்லை. நீங்கள் செய்து முடித்துவிடுங்கள். உங்களுக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும் ஸ்டூவர்ட்டும் ரஃபேயும் செய்வார்கள்… இன்னும் கொஞ்சம் ஊற்று, ஜாக்சன்.”

மருத்துவர் குடுவையை உயர்த்தி உள்ளே இருக்கும் மதுவின் அளவைப் பார்த்தார். “ஒரு லிட்டருக்கும் அதிகமாகக் காலியாகிவிட்டது,” என்றார். “நான்கு மணி முதல் ஒரு லிட்டர் விஸ்கி குடித்திருக்கிறீர்கள் என்றால், மயக்க மருந்து வேலை செய்யுமா என்பது தெரியவில்லை. இப்போதே செய்தேன் என்றால் உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா?”

“ஆமாம், செய்து முடித்துவிடுங்கள். நானே கெடுத்துக்கொண்டேன். ஒருவழியாக இதைச் செய்துமுடித்தால் போதும்.”

கண் இமைக்காமல் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த ஒரே சாடையில் இருந்த அந்த முகங்களைப் பார்த்தார் மருத்துவர். “அவரை நகரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துப் போயிருந்தால், அவரைக் கவனித்துக்கொள்ள தாதி ஒருவர் இருந்தால், அவர் அதிர்ச்சியில் இருந்து மீளும் வரையிலும் விஸ்கியின் போதை தெளியும் வரையிலும் காத்திருப்பேன். ஆனால் இப்போது இவரை எங்கும் கூட்டிப்போக முடியாது. மயக்க மருந்தோ ஊசியோ இருந்தாலும் இந்த இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முடியாது..”

“அடச்சே,” என்றார் படுக்கையில் கிடந்தவர். “இந்தக் குடுவையில் இருப்பதை விடவும் சிறந்த வலி நிவாரணியையோ மயக்க மருந்தையோ கடவுள் இதுவரை படைக்கவில்லை. இது ஜாக்சனுடைய காலோ ஸ்டூவர்ட்டுடையதோ ரஃபேயினுடையதோ லீயினுடையதோ அல்ல. என்னுடையது. நான்தான் தொடங்கினேன். வெட்டி முடிக்கும் வேலையையும் எனக்குத் தெரிந்த வரையில் நானே செய்துமுடிக்கிறேன்.” 

மருத்துவரோ ஜாக்சனையே பார்த்துக்கொண்டு இருந்தார். “என்ன சொல்கிறீர்கள், திருவாளர் மேக்கெல்லம் அவர்களே, இங்கிருப்பவர்களில் நீங்கள்தான் வயதில் மூத்தவர்.”

ஸ்டூவர்ட்தான் பதில் சொன்னார். “ஆமாம், செய்துமுடித்துவிடுங்கள். என்னென்ன பொருட்கள் வேண்டும்? வெந்நீர் தேவை என்று நினைக்கிறேன்.”

“ஆமாம், கூடவே கொஞ்சம் சுத்தமான விரிப்புகள் தேவை. இந்த அறைக்குள் கொண்டு வரக்கூடிய பெரிய மேசை ஏதாவது இருக்கிறதா?”

“சமையலறை மேசை இருக்கிறது,” என்று வாசலில் சந்தித்த மனிதர் சொன்னார். “நானும் பையன்களும்…”

“பொறுங்கள்,” படுக்கையில் கிடந்தவர் சொன்னார். “உங்களுக்கு உதவி செய்ய பையன்களுக்கு நேரம் இருக்காது. மீண்டும் அவர்களைப் பார்த்தார். “அன்ஸே, லூசியஸ்,” என்று அழைத்தார். 

மீண்டும் இருவரும் ஒரே குரலில் பதில் சொல்வதைப்போல இருந்தது புலனாய்வாளருக்கு. “சொல்லுங்கள், அப்பா.”

“இந்தப் பெருமகனார் பொறுமை இழப்பது போலத் தெரிகிறது. நீங்கள் கிளம்புங்கள். சொல்லப்போனால், நீங்கள் பை எதுவும் எடுத்துச்செல்ல வேண்டி இருக்காது. ஓரிரு நாளில் சீருடை கிடைத்துவிடும். பெரிய வண்டியை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களை மெம்ஃபிஸுக்கு அழைத்துச் சென்றுவிட்டு ட்ரக்கைத் திருப்பி எடுத்துவர யாருமில்லை. அதை காயோஸோ தீவன நிறுவனத்தில் நிறுத்திவிடுங்கள். யாரையாவது அனுப்பி எடுத்துக்கொள்கிறோம். நான் இருந்த ஆறாவது பிரிவிலேயே நீங்களும் சேரவேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் அது சிரமம் எனத் தோன்றுகிறது. எங்கே அனுப்பிவைக்கிறார்களோ அங்கே போகவேண்டும் என்று நினைக்கிறேன். சேர்ந்துவிட்ட பிறகு அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. நான் பணியாற்றிய காலத்தில் அரசாங்கம் எனக்குத் தேவையானதை எல்லாம் சரியாகச் செய்தது. உங்களுக்கும் அதுபோலவே செய்யும். எங்கே அனுப்பிவைக்கிறார்களோ எங்கே உங்களுக்கான தேவை இருக்கிறதோ அங்கே செல்லுங்கள். வீரர்களாக இருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளும் வரை மேலதிகாரிகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளுங்கள். கீழ்ப்படிந்து நடந்தாலும் உங்கள் குடும்பத்துப் பெயரை நினைவில் கொள்ளுங்கள். யாரிடம் இருந்தும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். இப்போது நீங்கள் கிளம்பலாம்.”

“பொறுங்கள்!” உரத்த குரலில் மறுபடியும் சொன்னார் புலனாய்வாளர். மீண்டும் அறையின் நடுப்பகுதிக்கு வந்தார். “இந்த முடிவை நான் எதிர்க்கிறேன்! திருவாளர் மேக்கெல்லம் அவர்களின் விபத்து குறித்து வருத்தம் தெரிவிக்கிறேன். இப்போது நடந்துகொண்டிருக்கும் இந்த விஷயம் முழுமைக்கும் வருத்தப்படுகிறேன். ஆனால் எல்லாமே என் கையை மீறிவிட்டது, அவர் கையையும் மீறிவிட்டது. சட்டப்படி பதிவுசெய்யாமல் விட்டதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. நீங்கள் இப்படிச் செய்வதால் அதைத் தவிர்த்துவிட முடியாது. இந்த நடவடிக்கையை முடித்த பிறகுதான் அடுத்ததைத் தொடங்கவே முடியும். பையன்கள் இருவரும் பதிவுசெய்யத் தவறிய போதே இதை யோசித்திருக்கவேண்டும். திருவாளர் கோம்பால்ட் இந்தப் பிடியாணையை உங்களிடம் சேர்ப்பிக்கமாட்டேன் என்றால் அதை நானே செய்யத் தயாராக இருக்கிறேன். இந்தக் குற்றச்சாட்டுக்கான காரணத்தை விளக்குவதற்காக இவர்களை நானே ஜெஃபர்சனுக்கு அழைத்துச் செல்கிறேன். கூடவே நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நடந்திருக்கிறார் என்பதை திருவாளர் கோம்பால்ட்டின் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்!”  

அந்த முதிய காவல் ஆய்வாளரின் புருவங்கள் மீண்டும் ஒன்றிணைந்தன. ஒரு குழந்தையிடம் பேசுவது போலப் புலனாய்வாளரிடம் பேசினார். “இன்னும் கொஞ்ச நேரத்துக்கு நானோ நீங்களோ இங்கிருந்து நகரமுடியாது என்பது உங்களுக்குப் புரியவில்லையா?’

“என்னது?” அலறினார் புலனாய்வாளர். சிந்தனையோடும் கேள்வியோடும் தன்னையே கவனித்துக்கொண்டிருந்த துயரம் தோய்ந்த முகங்களை மீண்டும் பார்த்தார். “என்னை மிரட்டுகிறீர்களா?”

“உங்களைப் பற்றி யாரும் யோசிக்கக்கூட இல்லை. நீங்கள் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும். அதற்குப் பிறகு எல்லோரும் நகரத்துக்குத் திரும்பிப்போகலாம்.”

புலனாய்வாளர் அசையாமல் நின்றார். துயரத்தில் ஆழ்ந்த முகங்கள் நட்புணர்வற்ற பார்வையை விலக்கிக்கொண்டன. இளைஞர்கள் இருவரும் படுக்கையருகே வந்து கீழே குனிந்து தந்தையின் வாயில் முத்தமிட்டனர். பிறகு புலனாய்வாளரின் பக்கம் திரும்பாமல் ஒன்றாகத் திரும்பி ஒன்றாக அறையைவிட்டு வெளியேறினர். 

புலனாய்வாளர் விளக்கெரியும் முன்னறையில் முதிய காவல் ஆய்வாளரின் பக்கத்தில் அமர்ந்திருந்தார். படுக்கை அறையின் கதவு மூடியதும் ட்ரக் கிளம்பும் ஓசை கேட்டது. சாலையின் இறுதியை அடைந்ததும் அதன் ஓசை மெல்லத் தேய்ந்து குறைந்து அமைதி நிலவியது. நவம்பர் மாதத்தின் இடைப்பகுதியையும் தாண்டி நீடித்த மிஸ்ஸிஸிப்பியின் கோடைக்கால வெப்பத்தை இரவிலும் உணரமுடிந்தது. சில்வண்டுகளின் ரீங்காரம் காதைத் துளைத்தது. இந்தக் கோடைக்காலம் நீடிக்காது, குளிர்காலமும் அதைத் தொடர்ந்து மரணமும் வந்தே தீரும் என்பதை அவை தெரிந்துவைத்திருந்தது போல இருந்தது.

“முதியவர் அன்ஸே பற்றிய நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது,” வயதில் மூத்தவர்கள் அறிமுகமில்லாத புதிய குழந்தையிடம் பேசும்போது பயன்படுத்தும் இனிமையான தொனியில் பேசினார் காவல் ஆய்வாளர். 

“அவர் இறந்து பதினைந்து பதினாறு வருடங்களாகிறது. பழைய போர் தொடங்கிய போது அவருக்கு பதினாறு வயது இருக்கலாம். அதில் கலந்துகொள்வதற்காக இங்கிருந்து வர்ஜினியா வரைக்கும் நடந்தே போனார். பிறந்த இடத்திலேயே இராணுவத்தில் சேர்ந்து போரில் பங்கெடுத்து இருக்கலாம். ஆனால் அவருடைய அம்மா கார்ட்டர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் இங்கிருந்து வர்ஜினியா வரை போனார். அதுவரை வர்ஜினியாவைப் பார்த்ததுகூட இல்லை. தான் பார்த்திராத இடத்துக்கு நடந்து போய் ஸ்டோன்வால் ஜாக்சனின் படையில் சேர்ந்து வேலி, சான்சலர்ஸ்வில் போர் இரண்டிலும் பங்குகொண்டார். அங்கேதான் கரோலினாவைச் சேர்ந்தவர்கள் ஜாக்சனைத் தவறுதலாகச் சுட்டது நடந்தது. பிறகு 1865-இல் அப்போமட்டோக்சில் இருந்து வேலி வரையிலும் செல்லும் சாலையை ஷெரிடனின் காலாட்படை மறித்தபோது அந்தப் படையிலும் இருந்தார்.   

“அங்கிருந்து மிஸ்ஸிஸிப்பி மாகாணம் வரை நடந்தே வந்தார். இங்கிருந்து கிளம்பிச் சென்றபோது கொண்டு போனவற்றை மட்டுமே திரும்பும் போதும் எடுத்து வந்தார். பிறகு திருமணம் செய்துகொண்டு நாம் இப்போது உட்கார்ந்திருக்கும் இந்த மர வீட்டின் முதல் மாடி வரை கட்டினார். அப்புறம் அவரது மகன்கள் ஜாக்சன், ஸ்டூவர்ட், ரஃபேல், லீ, பட்டி எல்லோரும் பிறந்தார்கள். பட்டி கொஞ்சம் தாமதமாகப் பிறந்தவன். அதனால் பிரான்ஸோடு நடந்த இன்னொரு போரில் கலந்துகொண்டான். உள்ளே அவன் சொன்னதைக் கேட்டிருப்பாய். இரண்டு பதக்கங்களைப் பெற்றவன், ஒன்று அமெரிக்காவிடமிருந்து மற்றொன்று பிரான்ஸிடமிருந்து. அவை எப்படிக் கிடைத்தன, என்ன செய்தான் என்பது யாருக்கும் தெரியாது. ஜாக்சனிடமும் ஸ்டூவர்ட்டிடமும்கூட அது குறித்து சொல்லியிருக்க மாட்டான் என்று நினைக்கிறேன். சீருடையில் எண்களோடும் காயப்பட்டதால் உடலில் பதிந்த வரிகளோடும் இரண்டு பதக்கங்களோடும் இங்கு வந்து சேர்வதற்குள்ளாகவே தனக்கொரு மனைவியைத் தேடிக்கொண்டான். அடுத்த வருடமே இரட்டைக் குழந்தைகள் பிறந்தார்கள், முதியவர் அன்ஸே மேக்கெல்லம்மை உரித்து வைத்தது போல இருந்தார்கள்.

“முதியவர் அன்ஸே மாத்திரம் எழுபத்தைந்து வயது இளையவராக இருந்தால் மூன்று பேரும் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் என்றுதான் சொல்லவேண்டும். அந்த இரண்டு குட்டிக் குழந்தைகளும் ஒரே போல இருந்ததும் காட்டு மான்குட்டிகளைப் போலத் துள்ளித் திரிந்ததும் இரவும் பகலும் வேட்டை நாய்களோடு ஓடி ஆடியதும் நன்றாக நினைவிருக்கிறது. வளர்ந்து பெரியவர்களானதும் பட்டி, ஸ்டூவர்ட், லீ எல்லோரோடும் சேர்ந்து வயலிலும் பஞ்சாலையிலும் வேலை செய்தார்கள். ரஃபேயுடன் சேர்ந்து குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் இனப்பெருக்கம் செய்து வளர்த்து அவற்றுக்குப் பயிற்சியளித்து மெம்ஃபிஸூக்கு கொண்டுபோய் விற்க உதவினார்கள். பிறகு மூன்று நான்கு வருடத்துக்கு முன்னால் வெள்ளை முக மாடுகளைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்காக விவசாயக் கல்லூரிக்குப் போனார்கள்.  

“பட்டியும் மற்றவர்களும் பருத்தி விளைவிப்பதை நிறுத்திய போது அது நடந்தது. எனக்கும் நினைவிருக்கிறது. ஒரு மனிதன் தன்னுடைய நிலத்தில் எப்படி விவசாயம் செய்யவேண்டும், எப்படி பருத்தி விளைவிக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் தலையிட ஆரம்பித்த போதுதான் அது நடந்தது. விலையை நிலைப்படுத்துவதற்காகவும் உபரியாக விளைந்தவற்றைப் பயன்படுத்தவும் அப்படிச் செய்கிறோம் என்றார்கள். ஒரு மனிதனுக்கு அறிவுரையும் உதவியும் வேண்டுமென்றாலும் வேண்டாமென்றாலும் கட்டாயமாகத் தருவதில் முனைப்பாக இருந்தார்கள். உள்ளே அந்தச் சகோதரர்களைப் பார்த்திருப்பீர்கள். கொஞ்சம் வித்தியாசமானவர்கள் என்றுகூட நீங்கள் நினைக்கலாம். முதலாம் ஆண்டில் புதிய செயல்திட்டத்தை விவசாயிகளுக்கு விளக்கிச் சொல்வதற்காக நாடு முழுவதும் முகவர்கள் நியமிக்கப்பட்டனர். இங்கே வந்த முகவர்கள் பட்டியிடமும் லீயிடமும் ஸ்டூவர்ட்டிடமும் குறைவான அளவே பயிர்செய்ய வேண்டும், முழுவதுமாகப் பயிர்செய்தால் கிடைக்கும் பணத்தை அரசாங்கமே விவசாயிகளுக்குக் கொடுத்துவிடும், அதனால் விவசாயிகள் தங்களின் விருப்பப்படி பயிர்செய்வதை விடவும் இதுதான் இலாபகரமானது என்று விளக்கினார்கள்.”

“இதற்காக நிறையவே கடமைப்பட்டிருக்கிறோம்,” என்றார் பட்டி. “ஆனால் எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. எப்போதும் போலவே பருத்தி பயிர் செய்வோம். விற்க முடியவில்லை என்றால் அதையும் நாங்களே பார்த்துக்கொள்கிறோம். அது எங்கள் நஷ்டம். மீண்டும் முயல்வோம்.”

“ஆக, எந்தத் தாளிலும் அட்டையிலும் கையெழுத்திட அவர்கள் தயாராக இல்லை. முதியவர் அன்ஸே கற்றுத் தந்தது போலவே பருத்தியைப் பயிர் செய்தார்கள். ஒரு மனிதனுக்கு வேண்டுமென்றாலோ வேண்டாமென்றாலோ அவர்களுக்கு உதவிசெய்வதில் அரசாங்கம் முனைப்பாக இருக்கும் என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை. அவனுடைய நிலத்தில் கடினமாக உழைப்பதற்கும் பலன்கொள்வதற்கும் இடைஞ்சலாக இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. எப்போதும் போலவே விளைவித்து நூற்பாலையில் நூற்று ஜெஃபர்சன் சந்தைக்கு எடுத்துச் சென்ற பிறகுதான் அங்கே விற்கமுடியாது என்பது தெரியவந்தது. முதலாவதாக, கூடுதலாக உற்பத்தி செய்துவிட்டார்கள். இரண்டாவதாக அனுமதிக்கப்பட்ட அளவு விற்பதற்கான அனுமதி அட்டை இல்லை.”

“அதைத் திரும்ப வீட்டுக்குச் சுமந்து வந்தார்கள். நூற்பாலையில் வைப்பதற்குத் தேவையான இடமில்லை என்பதால் ரஃபேயின் கோவேறு கழுதை கொட்டகையில் கொஞ்சத்தை வைத்தார்கள். மீதியை நாம் உட்கார்ந்திருக்கும் இந்த முன்னறையில் இறக்கினார்கள். குளிர்காலம் முழுவதும் மூட்டையைச் சுற்றி சுற்றி நடக்க வேண்டியிருந்தது. அடுத்த முறை மறக்காமல் அனுமதி அட்டையில் தகவல்களை எழுதவேண்டும் என்பதை நினைவூட்டிக்கொண்டே இருந்தது.

“ஆனால் அடுத்த வருடமும் யாரும் படிவங்களை நிறைவு செய்யவில்லை. அவர்களால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னமும் தங்களின் விடுதலையிலும் தனியுரிமையிலும் நம்பிக்கை வைத்திருந்தனர். ஒரு மனிதனின் உடல்வலுவையும் உழைப்பதற்கான ஊக்கத்தையும் பொறுத்து தன்னைத்தானே உருவாக்கிக்கொள்ளவோ அழித்துக்கொள்ளவோ முடியும் என்ற அரசாங்கத்தின் உறுதிமொழியை நம்பினார்கள். ஏற்கனவே முதியவர் அன்ஸே அந்த அரசாங்கத்தை இரண்டாகக் கிழித்துப் போட முயன்று தோல்வி அடைந்திருந்தார். தோல்வியுற்றதைத் திறந்த மனதுடன் ஒப்புக்கொண்டு அதன் பின்விளைவுகளையும் ஏற்றுக்கொண்டார். அதே அரசாங்கம்தான் பட்டிக்குப் பதக்கத்தைத் தந்ததோடு அவன் வீட்டைவிட்டு வெகுதொலைவில் புதிய இடத்தில் அடிபட்டுக் கிடந்தபோது அவனைக் கவனித்துக்கொண்டது.

“இரண்டாவது விளைச்சலும் நன்றாக இருந்தது. ஆனால் அட்டை இல்லாததால் யாருக்கும் விற்கமுடியவில்லை. இந்த முறை அதைப் பாதுகாப்பதற்கு புதிய கொட்டகை ஒன்றைக் கட்டினார்கள். அந்த வருடம் குளிர்காலத்தின் போது கேவின் ஸ்டீவன்ஸ் என்ற வக்கீலைப் பார்ப்பதற்குப் பட்டி நகரத்துக்கு வந்தது நினைவிருக்கிறது. அரசாங்கத்தை எதிர்த்து வழக்கு தொடரவோ அனுமதி அட்டை இல்லையென்றாலும் பருத்தியை யாரிடமாவது விற்பனை செய்யவோ வரவில்லை. என்ன நடக்கிறது என்று தெரிந்துக்கொள்வதற்காக வந்தான். “அதுதான் புதிய விதிமுறை என்றால் ஒப்புக்கொண்டு கையெழுத்திடுவதாக இருந்தேன்,” என்றான் பட்டி. “ஆனால் எல்லோரும் கலந்து பேசினோம். ஜாக்சன் பெரிய விவசாயி இல்லையென்றாலும் எங்களை விடவும் அப்பாவோடு அதிக காலம் இருந்தவன். அப்பா இருந்திருந்தால் வேண்டாமென்று மறுத்திருப்பார் என்றான். அவன் சொன்னது சரிதான் என்று இப்போது தோன்றுகிறது.”

“அதனால் அதற்குப் பிறகு அவர்கள் பருத்தி விளைவிக்கவில்லை. கையிருப்பே பல வருடத்துக்கு தாங்கும். இருபத்திரண்டு பெரும்பொதிகள் இருந்தன என்று நினைக்கிறேன். அந்தச் சமயத்தில்தான் வெள்ளை முக மாடுகளை வாங்கினார்கள். முதியவர் அன்ஸேயின் விளைநிலத்தை மேய்ச்சல் நிலமாக மாற்றினார்கள். அரசாங்கத்தின் கட்டளைக்குட்பட்டு பருத்தி விளைவிப்பதோடு எத்தனை விளைவிக்கவேண்டும், எங்கே எப்போது என்ன விலைக்கு விற்கவேண்டும் என்பதோடு செய்யாத வேலைக்கு அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொள்வதை விடவும் இதைச் செய்வதைத்தான் பெரியவர் அன்ஸேயும் விரும்பியிருப்பார். பருத்தி விளைவிக்காத போதும் ஒவ்வொரு வருடமும் மாவட்ட முகவரின் பிரதிநிதி வந்து மேய்ச்சல் நிலத்தில் இருக்கும் பயிர்களை அளந்து அவற்றுக்கான பணத்தைக் கொடுப்பார். இந்த இடத்தில் மட்டும் அவர் எந்தப் பயிரையும் அளக்கவில்லை என்பது முக்கியமான தகவல். “நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நீங்கள் தாராளமாகப் பார்க்கலாம். ஆனால் அதை உங்களின் வரைபடத்தில் குறிக்காதீர்கள்,” என்கிறார் பட்டி. 

“ஆனால் இதற்குப் பணம் கிடைக்குமே,” என்றார் அந்த இளைஞர். “இதை விளைவிப்பதற்காக அரசாங்கம் உங்களுக்குப் பணம் கொடுக்க விரும்புகிறது.”

“இதற்கான பணத்தைப் பெறுவதுதான் எங்கள் நோக்கமும்,”என்றார் பட்டி. “அது கிடைக்காத போது வேறு ஒன்றைச் செய்ய முயல்வோம். ஆனால் அரசாங்கத்திடம் எதையும் பெற்றுக்கொள்ள மாட்டோம். யாருக்கு வேண்டுமோ அவர்களுக்குக் கொடுங்கள். நாங்கள் சமாளித்துக்கொள்வோம்.”

“அவ்வளவுதான். அந்த இருபத்தியிரண்டு பருத்தி பொதிகளும் நூற்பாலையில் அனாதையாகக் கிடக்கின்றன. நூற்பாலையைப் புழங்குவதே இல்லை என்பதால் அவற்றை அங்கே போட்டுவைத்திருக்க முடிகிறது. பையன்கள் வளர்ந்து வெள்ளை முக மாடுகள் குறித்து படிப்பதற்காக விவசாயக் கல்லூரிக்குச் சென்றுவிட்டார்கள். அவர்கள் திரும்பி வந்த போது இங்கே அவர்களின் குடும்பத்தினர் மட்டும் தங்களின் விருப்பப்படி வாழ்ந்து வந்தார்கள். மற்ற இடங்களில் எல்லாம் அழகான பளிச்சிடும் நியான் விளக்குகள் இரவும் பகலும் எரிந்தன. பணம் எளிதாகக் கிடைத்தது என்பதால் வாரி இறைக்கப்பட்டது, ஒவ்வொருவரும் கிடைத்ததைப் பிடுங்கிக்கொண்டார்கள். பளபளக்கும் புதிய கார் வைத்திருப்பவன் அது நன்றாக இருக்கும்போதே அதற்கான கடன் நிலுவையைக் கட்டி முடிப்பதற்கு முன்பே புதிய காரை வாங்கினான். யாரும் வேலை செய்யாமல் இருக்க எல்லா இடத்திலும் AAA என்ற விவசாய நிர்வாக அமைப்பும் WPA என்ற பணி மேம்பாட்டு நிர்வாக அமைப்பும் இன்னும் பல மூன்றெழுத்து காரணங்களும் இருந்தன. 

“அப்போதுதான் இராணுவத்தில் சேர்வதற்காகப் பதிவுசெய்யும் அறிவிப்பு வந்தது. இந்த வித்தியாசமான மக்கள் அதற்கும் கையெழுத்திடவில்லை. நீங்களோ கையெழுத்திட்டு சரியாக நிறைவு செய்யப்பட்ட ஆணையை எடுத்துக்கொண்டு ஜாக்சனில் இருந்து வந்தீர்கள். நாம் இப்போது இங்கே வந்திருக்கிறோம். கொஞ்ச நேரம் கழித்து நீங்கள் மீண்டும் நகரத்துக்குப் போகலாம். உங்களுக்கு இப்போது எல்லாம் புரிந்திருக்குமே?”

“ஆமாம்,” என்றார் புலனாய்வாளர். “இப்போது நகரத்துக்குத் திரும்பிப் போகலாமா?”

“இல்லை, இப்போது முடியாது” என்று அதே அன்பான தொனியில் சொன்னார் காவல் ஆய்வாளர். “இன்னும் கொஞ்ச நேரம் கழித்துக் கிளம்பலாம். நீங்கள் இன்றைய இரயிலைப் பிடிக்கமுடியாது. ஆனால் நாளைக்கும் இரயில் வரும்.”

காவல் ஆய்வாளர் எழுந்து படுக்கையறையை நோக்கி நடந்தார், ஆனால் புலனாய்வாளருக்கு எந்த ஓசையும் கேட்டிருக்கவில்லை. கதவைத் திறந்து உள்ளே நுழைந்து கதவை மூடுவதைப் பார்த்தார். மூடிய கதவைப் பார்த்தபடி இரவின் ஓசைகளைக் கேட்டபடி அமைதியாக உட்கார்ந்திருந்தார் புலனாய்வாளர். இறுதியாக கதவு திறந்தது. காவல் ஆய்வாளர் இரத்தம் தோய்ந்த விரிப்பில் எதையோ பத்திரமாக ஏந்திக்கொண்டு வந்தார்.

“இதைக் கொஞ்சம் பிடியுங்கள்,” என்றார்.

“இரத்தம் தோய்ந்திருக்கிறதே,” என்றார் புலனாய்வாளர்.

“பரவாயில்லை, வேலையை முடித்ததும் கழுவிக்கொள்ளலாம்.” புலனாய்வாளர் மூட்டையைக் கையில் வாங்கிக்கொண்டதும் காவல் ஆய்வாளர் திரும்பவும் முன்னறையின் கடைசி வரை நடந்து வேறெங்கோ செல்வதைப் பார்த்தார். கொஞ்ச நேரத்தில் இலாந்தர் விளக்கையும் மண்வெட்டியையும் எடுத்துக்கொண்டு வருவதையும் பார்த்தார்.

“வாருங்கள், வந்த வேலை முடியப் போகிறது.”

அவரின் பின்னாலேயே சென்றார் புலனாய்வாளர். வீட்டைவிட்டு வெளியே வந்து முற்றத்தைக் கடந்தனர். இரத்தம் தோய்ந்த கனமான பொதிக்குள் உயிரோட்டத்தின் கதகதப்பை உணரமுடிந்தது. முன்னால் நடந்த காவல் ஆய்வாளரின் காலருகே இலாந்தர் விளக்கு அசைந்தாடியது. கீழே விழுந்த அவரின் நீண்ட நிழல் நிலத்தைக் கத்தரிப்பது போலத் தோற்றம் அளித்தது. பின்னால் வந்துகொண்டிருந்தவரிடம் மகிழ்ச்சியான தொனியில் இடைவிடாது பேசிக்கொண்டே இருந்தார். “உண்மைதான், ஒரு மனிதன் வளர வளர எத்தனை எத்தனை விஷயங்களைப் பார்க்கிறான், எத்தனை எத்தனை மக்களை எத்தனை எத்தனை நிலைமைகளில் பார்க்கிறான்! பிரச்சினை என்னவென்றால் நாம் நிலைமைகளோடு மனிதர்களையும் சேர்த்துவைத்துப் பார்த்து குழம்பிப் போகிறோம்.” அதே அன்பான தொனியில் இயல்பாகப் பேசிக்கொண்டே இருந்தார். “இப்போது உங்களையே எடுத்துக்கொள்ளுங்களேன். நீங்கள் யாருக்கும் கெடுதல் செய்ய நினைக்கவில்லை. ஆனால் விதிகளும் சட்டதிட்டங்களும் உங்களைக் குழப்பிவிட்டன. நம் பிரச்சினையே அதுதான்.” 

“நமக்கு நாமே பல எழுத்துகளையும் விதிகளையும் செய்முறைகளையும் வகுத்துக்கொள்கிறோம். அவை நம் கண்ணை மறைத்துவிடுகின்றன. நாம் பார்க்கும் விஷயங்கள் அவற்றோடு ஒத்துப்போகவில்லை என்றால் என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறோம்.”

“ஆய்வுக்கூடங்களில் மருத்துவர்கள் உருவாக்கிய குழந்தைகள் போல எலும்பும் வயிறும் இல்லாமலேயே உயிர்வாழ்வது எப்படியென்று கற்றுக்கொண்டுவிட்டோம். எலும்பும் வயிறும் இல்லையென்பதை உணராமலேயே காலம் முழுவதும் வாழமுடியும் என்பதையும் தெரிந்துகொண்டுவிட்டோம். நம் முதுகெலும்பையும் கழற்றி வைத்துவிட்டோம். ஒரு மனிதனுக்கு இனி முதுகெலும்பு தேவைப்படாது என்று முடிவுசெய்துவிட்டோம். முதுகெலும்பு இருப்பவர்களைப் பழைய பஞ்சாங்கங்கள் என்கிறோம். ஆனால் முதுகெலும்பு இருக்கவேண்டிய குழிவான தடம் அப்படியேதான் இருக்கிறது. முதுகெலும்பும் உயிர்ப்போடுதான் இருக்கிறது. என்றாவது ஒரு நாள் அதை மீண்டும் எடுத்து அணிந்துகொள்வோம். அதை எப்போது செய்வோம் எப்படிப்பட்ட வலி அதற்கான பாடத்தைக் கற்றுத் தரும் என்பது தெரியவில்லை, ஆனால் என்றாவது ஒரு நாள் அது நடந்தே தீரும்.”

முற்றத்தைத் தாண்டி மேட்டில் ஏறி நடக்கும் போது முன்னால் சிறிது தொலைவில் செடார் மரங்கள் அடர்ந்து வளர்ந்த பகுதியொன்று இருந்ததைக் கவனித்தார் புலனாய்வாளர். சிறிய பகுதிதான் என்றாலும் நட்சத்திரங்கள் துலங்கும் வானத்தின் பின்னணியில் சம்பிரதாயமாக வளர்க்கப்பட்டவை போலத் தோன்றின. மரங்களுக்கு நடுவே நுழைந்த காவல் ஆய்வாளர் ஓரிடத்தில் நின்றார், இலாந்தர் விளக்கை கீழே வைத்தார். பின்னாடியே மூட்டையைத் தூக்கிக்கொண்டு வந்த புலனாய்வாளர் நீள்சதுர வடிவ நிலப்பகுதியொன்றைச் சுற்றிலும் செங்கல் சுவர் எழுப்பட்டிருந்ததையும் அதில்  இரண்டு கல்லறைக் கற்கள் பதிக்கப்பட்டிருந்ததையும் கவனித்தார். வெறுமையான இரண்டு கருங்கல் திண்டுகள் நிலத்தில் செங்குத்தாக நடப்பட்டிருந்தன.

“முதியவர் அன்ஸேயும் திருமதி அன்ஸேயும்,” என்றார் காவல் ஆய்வாளர். “பட்டியின் மனைவி தன்னை அவரது குடும்பத்தினரோடு புதைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இங்கே மேக்கெல்லம் குடும்பத்தினரோடு புதைத்திருந்தால் தனிமையாகத்தான் இருந்திருப்பார். இப்போது என்ன செய்யலாம்?” ஒரு நொடி நின்று தாடையைக் கையால் நீவினார். பார்ப்பதற்கு, செடியை எங்கே நடலாம் என்று யோசிக்கும் வயதான பெண்மணியைப் போல இருந்தார். 

“ஜாக்சனில் இருந்து தொடங்கி இடமிருந்து வலமாக குடும்பத்தின் உறுப்பினர்களைப் புதைக்க இடம் ஒதுக்கியிருக்கிறார்கள். பையன்கள் பிறந்ததும் ஜாக்சனையும் ஸ்டூவர்ட்டையும் அவர்களின் பெற்றோருக்கு அருகிலேயே புதைக்கத் திட்டமிடப்பட்டது. பட்டியையும் மேலே நகர்த்தினால் இன்னும் கொஞ்சம் இடமிருக்கும். இதுதான் பட்டியின் இடம்.” இலாந்தரை பக்கத்தில் நகர்த்திவைத்தார். மண்வெட்டியை எடுத்துக்கொண்டார். புலனாய்வாளர் இன்னமும் மூட்டையைக் கையிலேயே வைத்திருப்பதைக் கவனித்தார். 

“அதைக் கீழே வையுங்கள். முதலில் குழி தோண்டவேண்டும்,” என்றார்.

“கையிலேயே வைத்துக்கொள்கிறேன்,” என்றார் புலனாய்வாளர். 

“முட்டாள்தனமாகப் பேசாதீர்கள். கீழே வையுங்கள்,” என்றார் காவல் ஆய்வாளர். “பட்டி ஒன்றும் வருத்தப்பட மாட்டார்.”

மூட்டையைச் செங்கல் சுவரின்மீது வைத்தார் புலனாய்வாளர். மார்ஷல் பழக்கப்பட்டவரைப் போல மளமளவென்று குழியைத் தோண்டினார். அதே நேரம் நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார். “நாம் இந்த மக்களைப் பற்றி மறந்துவிட்டோம். வாழ்க்கையின் முடிவு சல்லிசானதாகிவிட்டது. ஆனால் வாழ்க்கை சல்லிசானது அல்ல. வாழ்க்கை விலைமதிப்பற்றது. ஒரு நிவாரணத்தைப் பெற்ற பிறகு மற்றொன்றைப் பெறுவது பற்றி மாத்திரம் நான் சொல்லவில்லை. நன்மதிப்பு, பெருமை, கட்டுப்பாடு ஆகியவை மட்டுமே ஒரு மனிதனை எல்லோரும் நினைவில் வைக்கவும் மதிக்கவும் காரணமாகின்றன. அதைத்தான் நாம் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டும். பிரச்சினை, கடுமையான பிரச்சினையை எதிர்கொள்ளும்போதுதான் அதை கற்றுக்கொள்வோமோ என்னவோ?” 

“தன்னுடைய தாய் பிறந்த ஊரான வர்ஜினியாவுக்கு நடந்து சென்றதும் அங்கே போரில் தோல்வியுற்றதும் இங்கே நடந்தே திரும்பி வந்ததும்கூட முதியவர் அன்ஸேவுக்கு அதைக் கற்றுத் தந்திருக்கலாம். எப்படியோ அவர் அதைக் கற்றுக்கொண்டுவிட்டார் என்பது போலத்தான் தெரிகிறது. சிறப்பாகவே கற்றுக்கொண்டார் என்பதால்தான் அதைத் தன்னுடைய மகன்களுக்கும் கற்றுத்தர முடிந்தது. அரசாங்கம் சொல்லிவிட்டது என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் கிளம்பிச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைத் தன் மகன்களிடம் எப்படித் தெரிவித்தார் என்பதைப் பார்த்தீர்கள் அல்லவா? அவர்கள் அவரிடம் இருந்து எப்படி விடைபெற்றார்கள் என்பதையும் பார்த்தீர்கள் அல்லவா? வளர்ந்த ஆண்மகன்கள் வெட்கப்படாமல் பாசத்தை மறைக்காமல் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக்கொண்டார்கள். அதைப் பற்றித்தான் சொல்ல முயல்கிறேனோ என்னவோ..” என்றார். “இந்த இடம் போதுமானதாக இருக்கும்.”

காவல் ஆய்வாளர் விரைவாகவும் இலகுவாகவும் செயல்பட்டார். புலனாய்வாளர் சுதாரிப்பதற்குள் மூட்டையைக் கையில் எடுத்து குழிக்குள் வைத்து வேகமாக மூடினார். மண்வெட்டியால் ஈரமண்ணைத் தட்டி நிரவினார். மேலே எழுந்து நின்று இலாந்தரைக் கையில் எடுத்துக்கொண்டார். மெலிந்த உடல் கொண்ட அந்த முதியவர் உயரமாக இருந்தார். இப்போது சிரமமின்றி இலகுவாக மூச்சுவிட்டார்.

“நாம் இப்போது நகரத்துக்குக் கிளம்பலாமென நினைக்கிறேன்,” என்றார்.

*

ஆங்கில மூலம்: The Tall Men by William Faulkner, Collected Stories of William Faulkner, Vintage Reissue Edition (31 October 1995)